வணக்கம் நண்பர்களே!

நான் நீண்டகாலமாக இடைக்கிடையே சமூக, அரசியல் பொருளாதார, கலை இலக்கிய விடயங்கள் தொடர்பாக தமிழ் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் எனது இடதுசாரி நிலைப்பாட்டிலிருந்து எழுதி வந்துள்ளேன். அப்படி எழுதப்பட்ட எல்லா ஆக்கங்களும் என் கைவசம் இல்லை. அவற்றில் சமகால அறிவுரீதியான தேடல்களுக்கும் விவாதங்களுக்கும் பயன்படக்கூடிய சிலவற்றையாயினும் தேர்ந்தெடுத்து மீள்பிரசுரிக்க வேண்டும் எனப் பல தோழர்களும் நண்பர்களும் கடந்த சில வருடங்களாக எனக்குப் பல தடைவைகள் அன்புடன் ஆலோசனை வழங்கி வந்தனர். சிலர் ஆலோசனைக்கும் அப்பால் சென்று உதவவும் முன்வந்தனர். ஏறிச்செல்லும் என் வயதையும் அது தரும் உடல்நலப் பிரச்சனைகளையும் நினைவூட்டியபடி ‘இதைக் கெதியாய்ச் செய்யவேணும்’ எனச் சற்றே அழுத்திக் கூறிய வண்ணமிருந்தனர் சில அன்பர்கள். அது மட்டுமல்லாமல் சமகால விடயங்கள் பற்றி அங்குமிங்கும் உரைகள் நிகழ்த்துவதோடு நின்றுவிடாமல் அவற்றை எழுத்திலும் போடவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

இவற்றின் ஒரு விளைவாகப் பிறந்தது தான் இந்த இணையத் தளம். பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்போது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் விவாதங்கள் பற்றி எழுதிய சில ஆக்கங்கள் சேர்க்கபபட்டுள்ளன, மேலும் சில சேர்க்கப்படும். சமகால விடயங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதுவேன். ஆக்கங்கள் பற்றி கருத்துரீதியான அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் எப்போதும் வரவேற்கப்படும்.

நட்புடன்
சமுத்திரன்
nsh3006@gmail.com