சபாலிங்கம் – காலந்தாழ்த்திய ஒரு அஞ்சலி

சமுத்திரன் (1999)

1994 ம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு நாள். இரவு பத்துமணிக்குப்பின் பின்னர் என நம்புகிறேன். எனது தொலைபேசி மணி ஒலித்தது. பாரிஸிருந்து ஒரு நண்பர் பேசினார், தான் சபாலிங்கம் அவர்களின் இல்லத்திலிருந்து பேசுவதாகவும், சபாலிங்கம் என்னுடன் பேச விரும்புவதாகவும் கூறினார். அன்றுதான் முதல்தடவை சபாலிங்கத்துடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரைப் பற்றி நிறைய அறிந்திருந்ததால் அறிமுகம் வேண்டியிருக்கவில்லை. என்னுடன் பேசுகையில் இலக்கியம், அரசியல், சமூகம் பற்றிய ஆக்கங்களை விமர்சனக்கட்டுரைகளை வெளியிடும் திட்டமொன்று பற்றி ஆர்வத்துடன் பேசினார். வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ்எழுத்தாளர்களின் பங்குபற்றியும் சமூகப் பொறுப்புக்கள் பற்றியும் கூறினார். என்னை எழுதும்படி கூறினார். அது ஒரு இனிமையான உரையாடலாயிற்று. அந்த மனிதனைக் காணும் சந்தர்ப்பமொன்றினை விரைவில் ஏற்படுத்த வேண்டுமென விரும்பினேன். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. அதற்கு முன்னர் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தச் செய்தி என்னை மட்டுமல்ல, எனக்குத் தெரிந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நமது சமூகத்தில் நிராயுதபாணிகள் கொல்லப்படுவது புதிய துப்பாக்கிக் கலாச்சாரத்தின் ஒரு நடைமுறை அம்சம் போலாகிவிட்டது. ஆயினும் அத்தகைய ஒவ்வொரு கொலையும் கொலைசெய்யப்பட்டவரைச் சுற்றியுள்ள வட்டத்தினருக்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது. அதுவும் ஒரு ரஜனி திராணகமவோ, சபாலிங்கமோ கொலை செய்யப்படும் போது அது அதிர்ச்சியூட்டுவதாகவே இருக்கிறது. தமிழ்சமூகத்தின் அறிவுரீதியான மேம்பாட்டிற்கும் கலாச்சாரச் செழுமையாக்கலுக்கும் உதவக் கூடிய ஒரு நீண்டகாலப் பணியின் ஆரம்பக் கட்டத்தில் இலட்சியவாத உணர்வுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார் சபாலிங்கம். சிதறடிக்கப்படும் விடுதலை விழுமியங்களினதும் மனிதத்துவத்தினதும் மீட்சிக்காக எழுந்துநின்று குரல்கொடுக்க முற்பட்டார் அவர். இவற்றிற்கான தண்டனை மரணம் போலும்.

ஈழத்தமிழர் போராட்டத்தின் முழுமையான வரலாறு என்றோ எழுதப்படத்தான் போகிறது. அங்கு தமிழ்ப்போராளிகள் தியாகங்கள் பற்றி மட்டுமல்ல இயக்கங்களுக்குள்ளே இடம்பெற்ற கொடூரங்கள், இயக்கங்களுக்கிடையே இடம்பெற்ற அழிவுப்போராட்டங்கள் பற்றியும் அத்தியாயங்கள் எழுதப்படும். இந்த வரலாற்றில் சபாலிங்கம் போன்ற தனிமனிதருக்கும் ஒரு இடம் இருக்கத்தான் போகிறது. விடுதலையின் பேரால் நசுக்கப்பட்ட விடுதலை விழுமியங்களுக்காகவும், மண்ணின் பெயரால் மறுக்கப்பட்ட மனிதநேயத்திற்காகவும், போராட்டத்தின் பெயரால் மறுக்கப்பட்ட சிந்தனைச்சுதந்திரத்திற்காகவும் ஒலித்த குரலாக சபாலிங்கம் நினைவில் நிற்பார். அவரது விமர்சனநிலைப்பாடு தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியத்தின் வழிவந்தது என்பதே வரலாற்றின் தீர்வாக இருக்கும் என நம்பலாம்.

 

தோற்றுத்தான் போவாமா..

01 மே 1999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *