இந்தியத் தேசியத்தை கேள்விக்குள்ளாக்கும் எஸ்.வி. இராஜதுரையின் இந்து இந்தி இந்தியா

இந்தியத் தேசியத்தை கேள்விக்குள்ளாக்கும் எஸ்.வி. இராஜதுரையின் இந்து இந்தி இந்தியா

நூல் விமர்சனம்[1]

S.V இராஜதுரையின் இந்து – இந்தி – இந்தியா

( மணிவாசகர் பதிப்பகம் சென்னை 1993 )

சமுத்திரன்

1995

I

S.V .இராஜதுரையின் இந்து – இந்தி – இந்தியா ( இஇஇ) பல காரணங்களால் முக்கியத்துவம் பெறும் நூலாகும். எனது அபிப்பிராயத்தில் இரண்டு காரணங்கள் அதி முக்கியம் பெறுகின்றன. ஒன்று, எனக்குத் தெரிந்த வரையில் சமகாலத்து இந்திய அரசியலைப் பலமாகப் பற்றியுள்ள இந்து அடிப்படைவாதம் (இந்துத்துவம்), அத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் இந்திய தேசியவாதம், இவற்றின் ஆதிக்கத்தாலும் இவை நியாயப்பாடு வழங்கும் இந்திய அரசின் அதிகார மையப்படுத்தலாலும் பாதிக்கப்படும் அந்நாட்டில் வாழும் தேசிய இனங்களின், ஆதிவாசிகளின், தலித்துக்களின் உரிமைப்பிரச்சனைகள் போன்றவை பற்றி வரலாற்றுப்பார்வையில் விரிவாக ஆராய்ந்துள்ள முதல் தமிழ் நூல் இதுவே.

இரண்டு, S V R ன் இந்த நூல் தேசிய இனப்பிரச்சனை பற்றி தேசியவாதம் எனும் கருத்தமைவு (Ideology) பற்றி சமீபகாலங்களில் மார்க்சிய வட்டாரங்களில் இடம்பெற்றுவரும் புதியவிவாதங்கள் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ள ஒரளவு உதவலாம். தேசியவாதம் பற்றிய புரிந்துணர்வின் போதாமை, அதை தெளிவாக வரலாற்று ரீதியில் கோட்பாட்டு ரீதியில் எதிர்கொள்ளாமை மார்க்சியத்தின் பெரும் குறைபாடு எனக் கூறலாம். இந்தக் குறைபாடு மார்க்சியத்தின் மாபெரும் வரலாற்று ரீதியான தோல்வி என டொம் நாய்ன் (Tom Nairn) பதிநான்கு வருடங்களுக்கு முன் தனது நூலில் குறிப்பிட்டார். ஆயினும், இதற்கு முன்பும் இதைத் தொடர்ந்தும் தேசிய இனப்பிரச்சனை, தேசியவாதம்., சுயநிர்ணயம் பற்றிய விவாதங்கள் மார்க்சிய சமூக விஞ்ஞான வட்டாரங்களிலும் அரசியல் இயக்கங்கள் மத்தியிலும் இடம் பெற்று வந்துள்ளன. இவற்றின் விளைவாக மார்கஸ்- எங்கல்ஸ் கொண்டிருந்த கருத்துக்கள் முதல் லெனின், கெளட்ஸ்கி (Kautsky) லக்சம்பேர்க் (Luxemburg) போன்றோரின் கருத்துக்கள் வரை ஆழமான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இது மட்டுமன்றி இன்றைய விவாதங்கள் இதுவரை இடதுசாரிகள் மத்தியில் பிரபல்யம் பெற்றிராத ஆஸ்திரிய (Austrian) மார்க்சிஸ்டான ஒட்டோ பெளர் ( Otto Baur) போன்றோரின் அணுகுமுறை பற்றியும், பிரபல்யம் வாய்ந்த இத்தாலிய மார்க்சிய சிந்தனையாளரான கிராம்ஷி (Gramsci)யின் மேலாட்சி (Hegemony) கோட்பாட்டின் பயன்பாடுகள் பற்றியும் அறியத் தருகின்றன.

நடைமுறையில் சோவியத்யூனியன், கிழக்கு ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய இனப்பிரச்சனைகளைக் கையாண்ட விதங்கள் பற்றியும் இன்று நமக்கு முன்னர் மறைக்கப்பட்ட பல உண்மைகள் தெரிய வந்துள்ளன. மொத்தத்தில் சர்வதேசரீதியில் கொள்கை (Theory) நடைமுறை ஆகிய இருமட்டங்களின் குறைபாடுகளிலும் தோல்விகளிலும் இருந்து மார்க்சியவாதிகள் படித்துப்பயன் பெற பல பாடங்கள் உள்ளன. இந்தப் பின்னணியில் நமது சமூகங்களை இன்று ஆட்டிப்படைக்கும் தேசிய இனப்பிரச்சனைகளைப் பற்றிய நமது அனுபவங்களையும் அவசியத்தையும் நாம் உணர்கிறோம்.

இஇஇ இந்தியாவின் சிக்கல் மிகு தேசிய இனப்பிரச்சனை பற்றிய ஒரு ஆய்வுக் கூடாக நம்மை உபகண்டத்தின் தேசியவாதங்கள் பற்றிய ஒரு விவாதத்தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. தேசம் (தேசியஇனம்) தேசியவாதம் என்பவற்றை கோட்பாட்டு ரீதியில் கிரகிக்க SVR பயன்படுத்தும் அணுகுமுறைக்கு பெனடிக்ட் அண்டர்சன்( Benedict Anderson) என்பவர் ‘Imagined Communities’ எனும் நூலில் முன்வைத்த கருத்துக்கள் பயன்பட்டுள்ளன. நவீன தேசிய உருவாக்கத்தையும் பரவலாக்கலையும் பற்றிய அண்டர்சன் முன்வைத்திருந்த விளக்கம் தேசியஉணர்வு, தேச-அரசு (Nation State) ஆகியன பற்றி குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள உதவுகிறது. மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வரலாற்றுடன் இணைந்த தேசிய உருவாக்கத்திடமிருந்து வேறுபட்ட நிலைமைகளைக் கொண்ட காலனித்துவ நாடுகளின் தேசியவாதம் பற்றி ஆராயும் போது அங்குள்ள இரு மொழி அறிவாளிகளின் (Bilingual intellectuals) கருத்தமைவு ரீதியான பங்குபற்றி அண்டர்சன் விளக்குகிறார். மேற்கத்திய காலனித்துவ ஆட்சியாளர்களின் மொழியுடன் தமது தாய்மொழியிலும் பாண்டித்தியம் பெற்ற உயர்வர்க்க அறிவாளிகளே தேசியத்தின் கருத்துருவாக்கத்திற்கும் அதைத் தேசிய உணர்வாகப் பரவலாக்குவதற்கும் வேண்டிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவினர்தாம் மற்றய குழுவினரிடமிருந்து வேறுபட்டவர்களாய் தம்மை ஒரு விசேட கூட்டுணர்வின் அடிப்படையில் ஒரு இனமாக அடையாளப்படுத்தும் கற்பிதத்திற்கு (Imagining) ஊடாகவே தேசம் பிறக்கிறது. இந்தக் கற்பிதத்திற்கு அடிப்படையாக அமைவன அவர்களின் பிரதேசம், மொழி அம்மக்களுக்குரிய வரலாற்று ரீதியான நினைவுகள், அவர்களின் பாரம்பரிய இணைப்புப் பற்றிய கர்ண பரம்பரைக்கதைகள், பண்பாட்டு ஒருங்கிணைவும் அதன் அடையாளங்களும், ஒரு பொது எதிரிக்கு எதிராக வளரும் இனஉணர்வு போன்றவையாகும். வர்க்கங்களையும் வேறு சில வேறுபாடுகளையும் ஊடறுத்துச் செல்லும் இந்த தேசிய உணர்வு பரவவும் வளரவும் நவீன கல்வித் தொடர்புசாதனங்கள் உதவுகின்றன. இந்த ஊடகங்களின்றி நவீன தேசம் உருவாக முடியாது. தேசிய அறிவாளிகளும் அச்சு முதலாளித்துவமும் (print capitalism) தேசங்களின் உருவாக்கத்திற்கு இன்றியமையாதவை என்பதை அண்டர்சனின் நூல் தெளிவாக்குகிறது. தொலைக்காட்சி, சினிமா, மற்றய கலை இலக்கிய ஊடகங்கள், தேசியவிழாக்கள் போன்றவை ஒரு தேசமக்களைத் தாம் எல்லோரும் ஒரு தேசத்தின் அங்கத்தினர் என கற்பனை செய்யவும் அதே கற்பிதத்தைத் தொடர்ச்சியாக மீள்உற்பத்தி செய்யவும் உதவுகின்றன.

சகல காலனித்துவ நாடுகளின் தேசியவாதங்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிப் போக்குகளுக்கும் உள்ள ஒரு பொதுத்தன்மை என்னவெனில் அவை எல்லாமே காலனித்துவம் எனும் வெளிவாரி அதாவது விதேசிய பொது எதிரியை எதிர்க்கும் நோக்குடன் எழுந்தவை. இந்தப் பொது எதிரியின் இருப்பு அதனால் நசுக்கப்படும் மக்களிடையே இருக்கும் இனரீதியான வேறுபாடுகளையும் தாண்டிய ஒரு ஒருங்கிணைப்பிற்கு உதவலாம். அதுமட்டுமின்றி காலனித்துவ எதிர்ப்பு பொதுவாக காலனித்துவம் வரையறுத்த புவியியல் சட்டகத்தின் அடிப்படையிலேயே எழுகிறது. ஆனால் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் தலையாய சக்திகளின் வர்க்க, இனத்துவ ( இந்தியாவைப் பொறுத்தவரை சாதித்துவ) முரண்பாடுகளைப் பொறுத்தும் காலனித்துவம் தனது நலன்களைப் பாதுகாக்க கையாளும் வழிமுறைகளைப் பொறுத்தும் இந்த ஆரம்ப அடிப்படை மாற்றமடையலாம்.

வரலாற்று ரீதியில் நவீன இந்தியாவின் ஆரம்பம் ஒரு பிரிட்டிஷ் காலனித்துவத்திட்டமே. காலனித்துவமின்றி நவீன இந்தியாவைக் கற்பனை பண்ண முடியுமென நான் கருதவில்லை. ‘இந்தியா’ எனும் மையப்படுத்தப்பட்ட காலனித்துவ அரசே ‘சுதந்திர இந்தியா’ எனும் கோஷத்திற்கு உருவத்தைக் கொடுத்தது. அதுவே இந்தியா எனும் தேசத்தைக் கற்பனை செய்து இந்தியர்கள் எனும் பிரஜைகளை உருவாக்க உதவியது. ஆனால் ‘சுதந்திர இந்தியா’ எனும் போது காலனித்துவம் வெளியேறிய இந்தியா என்பது பொருள். இந்தச் சுதந்திர இந்தியாவின் தனித்துவம் என்ன ? இந்தக் கேள்வியை இந்திய தேசியவாதிகளும் அவர்களுக்குப் பின்னிருந்த வர்க்க, இனத்துவ சக்திகளும் எப்படிக் கையாண்டன, இதற்கு எத்தகைய கருத்தமைவுத் திட்டத்தைப் பயன்படுத்தின ? இதுவே SVR ன் இந்து- இந்தி- இந்தியாவின் பிரதான ஆய்வு நோக்காகும்.

II

SVR ஆராய்ந்து நிரூபிக்க முற்படும் கருதுகோளைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம் என நம்புகிறேன்: ‘இந்திய தேசம்’ ( The Indian Nation) ஆங்கிலமொழி மூலம் கல்வி கற்ற பார்ப்பனிய மற்றய உயர்சாதிகளைச் சேர்ந்த அறிவாளிகளால் கற்பிதம் செய்யப்பட்டு பார்ப்பனிய- பனியா கூட்டின் ஆதிக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கருத்தமைவு- கலாச்சார ரீதியான மேலாட்சித் திட்டம் பிரிட்டிஷ் காலனித்துவம் தந்த அரசியல்- புவியியல் சட்டகத்திற்குள் அமுலாக்கப்பட்டது. இந்திய தேசத்தைக் கற்பிதம் செய்வதில் பிராமணியம் முக்கிய பங்கினை வகித்தது. உப கண்டம் பூராவும் பல கூறுகளாக – இன, பிரதேச ரீதியில் – பிளவுண்டிருந்த இந்து மதம் சார்ந்த சகல சமூகங்கள் மீதும் மரபு ரீதியான மேலாட்சியைக் கொண்டிருந்த ஒரே ஒரு சாதி பார்ப்பனர்தான். இந்த மரபு ரீதியான செல்வாக்கு பார்ப்பனிய கருத்தமைவிற்கு இந்திய தேசியவாதத்தின் உருவாக்கத்தில் ஒரு விசேட அந்தஸ்தைக் கொடுத்தது. பார்ப்பனியம் அகில இந்திய ரீதியிலான ஒரு ஒருங்கிணைவிற்கு உதவியது. ஆனால் இது பரந்துபட்டிருந்த இந்து சமூகங்களை மட்டுமே உள்ளடக்கியது. இந்தத் தேசியவாதக் கருத்தமைவின் மைய சக்தியான ‘இந்து- இந்தி’ இணைவும் அதற்கு உந்து சக்தியாக விளங்கிய ( அதே நேரம் தனித்துவமான இயக்கப்பாட்டினையும் கொண்டிருந்த) இந்து அடிப்படைவாதமும் இந்து – முஸ்லீம் பிரிவினைக்கு வித்திட்டது. இந்தக் கருதுகோளை ஆராய்ந்து விளக்க முற்படும் போது இராஜதுரை இன்றைய ஆளும் கட்சியான காங்கிரசின் ‘மதச்சார்பின்மை’ போன்ற சுயவர்ணனைகளுக்குச் சவால் விடும் அதேவேளை காந்தி, நேரு, திலகர் போன்ற இந்திய தேசியத் தலைவர்களின் வர்க்க- இனத்துவ சார்புகளையும் வெளிப்படுத்துகிறார். இந்திய தலித்துக்களின் ஆபிரகாம் லிங்கன் எனப்படும் அம்பேத்கர் பற்றிய ஒரு மதிப்பீட்டினை முன்வைப்பதன் மூலம் SVR இதுவரை காந்தியத்திற்கு வழங்கப்பட்டு வந்த புனித அந்தஸ்தையும் ஆழ்ந்த விமர்சனத்திற்குள்ளாக்குகிறார். நூலாசிரியரின் பிரச்சனை இந்தியாவிற்கு காலனித்துவம் வகுத்த புவியியல் சட்டகத்தை ஏற்பதா நிராகரிப்பதா என்பதல்ல. பிரதான பிரச்சனை அந்தச் சட்டகத்தின் வழிவந்த இந்திய அமைப்பின அரசியல், பொருளாதார, கருத்தமைவு உள்ளடக்கங்கள் என்ன என்பதே. கடந்த நாற்பத்தாறு ஆண்டுகளாக இந்திய அமைப்பை ஆண்டுவரும் சக்திகள் எத்தகைய ஒரு இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பது அடிப்படைக் கேள்வியாகும். எனது அபிப்பிராயத்தில் இஇஇ ன் அணுகுமுறை இந்திய உபகண்டத்து யதார்த்தங்களை மனங்கொண்டு பார்க்கும் போது ஆரோக்கியமானதாகும். 1992ல் பாபர் மசூதியை இந்துத்துவவாதிகள் அழித்தனர். இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை இந்திய பொலிசார் பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்ல அதற்கு உதவியாகவும் இருந்தனர். இந்த வன்செயலின் விளைவாக பாகிஸ்தானிலும் பங்களாதேசத்திலும் இந்துக் குடும்பங்களும் இந்துக் கோயில்களும் தாக்கப்பட்டன. இவையெல்லாம் நமக்குப் போதிக்கும் அடிப்படைப் பாடமென்னவெனில் இந்திய – பாகிஸ்தான் பிரிவினை, பாகிஸ்தான் – பங்களாதேசப்பிரிவினை போன்றவை உபகண்டத்தின் இந்து – முஸ்லீம் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவில்லை. இந்திய – பாகிஸ்தான் பிரிவினை இந்தியாவின் இந்துத்துவ தேசியவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை அதற்கு மாறாக ஆட்சிசெய்யும் இந்திய தேசியவாதத்தில் இந்துத்துவ தன்மைகள் மேலும் வலுப்பெறவே உதவியுள்ளது எனலாம். இஇஇ வை வாசித்துக் கொண்டிருந்த போது இந்தச் சிந்தனைகள் என் மனதில் தோன்றின.

உப கண்டத்தின் ஆளும் தேசியவாதங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரிவினைவாதங்களாக அல்லது புதிய பிரிவினை வாதங்களுக்கு வித்திடுபவையாக மாறிப்போகும் பரிணாமப் போக்கினை கண்டு வந்துள்ளோம். ஆனால் அதே உப கண்டத்தில் ஒரு மொழி-ஒரு மதம் எனும் அடிப்படையில் ஒரு தேச – அரசு உருவாக்கம் பெறக்கூடிய பரிபூரணமான நிலைமைகள் இல்லை என்பதையும் காண்கிறோம். பாகிஸ்தானில் இந்துக்களும் பலமொழிகளைப் பேசுவோரும் உள்ளார்கள். அதேபோல் மொழி- கலாச்சார அடிப்படையில் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்த பங்களா தேசத்திலும் இந்துக்கள் உள்ளனர். இந்தியாவிலோ பலநூற்றுக்கணக்கான மொழிகளைப் பேசுவோரும் பல மதத்தவர்களும் வாழ்கின்றனர்.

ஆனால் நவீன இந்திய தேசியவாதத்தின் இந்திய தேசிய ஒருங்கிணைப்பிற்குப் பயன்பட்ட கருத்தமைவின் இந்துத்தன்மையும் அத்துடன் இணைந்த சாதியம் அது தழுவிக் கொண்ட இந்தி மொழி வாதமும் அந்த நாட்டின் பல இனங்களை, சமூகப் பிரிவுகளை (உதாரணமாக தலித்துக்கள்) பாதகமான வழிகளில் பாதித்தன.

SVR ன் பார்வையில் ‘இந்து- இந்தி’ எனும் இணைப்பு வெறும் மதம்- மொழி இணைப்பு மட்டுமல்ல. இவை இரண்டும் ஒன்றை மற்றையது பலப்படுத்தும் வகையில் இரண்டும் இந்தியாவின் தனித்துவ ஆளுமையின் பரிணாமத்தை நிர்ணயிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. இந்துஸ்தானியே இந்தியாவின் அரசமொழியாக இருக்க வேண்டும் எனக் காந்தி விரும்பினார். இந்துஸ்தானி இந்தியும் உருதுவும் கலந்த மொழியாக இருப்பதால் வட இந்தியாவில் வாழும் இந்து- முஸ்லீம் மக்களின் ஒருமைப்பாட்டின் சின்னமாக, ஊடகமாக விளங்க முடியும் என காந்தி கருதினார். ஆனால் இந்திய காங்கிரசிற்குள்ளிருந்த இந்து மதத் தேசியவாதிகள் உருது போன்ற வேற்றுமொழிக் கலப்பற்ற இந்தியே ஆட்சிமொழியாக வேண்டுமென விரும்பினர். அதுவும் ஆட்சிமொழியாகும் இந்தி சமஸ்கிருத மயப்படுத்தப்பட வேண்டுமெனவும் விரும்பினர். இவர்களின் கை ஓங்கியது. காந்தியின் கோரிக்கை படிப்படியாக ஒதுக்கப்பட்டது. இந்தியின் சமஸ்கிருத மயமாக்கல் என்பது அதன் பிராமணிய மயமாக்கல்தான். வேதங்களின் மொழியான சமஸ்கிருதமே இந்து மதத்தின் தேவமொழி. அந்த மொழியிலேயே பார்ப்பனர் ‘மக்கள் சார்பில்’ கடவுளிடம் பேசினர். சமஸ்கிருதம் வழக்கிழந்த மொழியாகிவிட்ட போதும் ‘இந்து- இந்தி’ திட்டத்திற்கூடாக அது முக்கியத்துவம் பெற்றது. இந்த இணைப்பிற்கு மேலும் புனிதத்துவத்தைக் கொடுக்க சமஸ்கிருத மயமாக்கல் கொள்கை உதவியது போலும்.

‘இந்து- இந்தி’ திட்டம் ஒரு புறம் பல இன மக்களை ஒரு அனைத்து இந்திய ஒருங்கிணைப்புக்குள் கொண்டு வந்தது. மறுபுறம் அது மத, சாதி, மொழி அடிப்படையில் பல சமூகங்களை வெளிவாரிப்படுத்தியது. ஆனால் அந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு பரந்துபட்ட அகில இந்திய ஒருங்கிணைப்பே. இந்தியாவின் பல்லினத்தன்மைகள் இந்த நோக்கத்திற்கு பல எதிர்ப்புகளை உருவாக்கியது. முஸ்லீம்கள் சீக்கியர்கள் மத அடிப்படையில் தமது தனித்துவத்திற்காகப் போராட முற்பட்டனர். அசாம், நாகலாந்து போன்ற பிரதேசத்தவர்கள் தமது பாரம்பரியங்களின் அடிப்படையில் இந்து-இந்தி- இந்தியாவை எதிர்க்க முற்பட்டனர். தமிழர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தனர். அதேநேரம் வட இந்தியாவிலும் தமிழ்நாடு தவிர்ந்த தென்னிந்திய மாநிலங்களிலும் இந்தி மயமாக்கலுக்கு எதிர்ப்பு எழவில்லை. வடக்கில் இந்து – இந்தி இணைவு இந்துக்களின் ஆதரவைப் பரவலாகப் பெற்றது. SVR எழுதுகிறார்:

‘இந்தியா பல்தேசிய இனநாடு, இங்கு ஆதிக்க தேசியஇனம் ஒடுக்கும் தேசியஇனம் என்பது இல்லைத்தான். அதேபோல ஆளும் வர்க்கங்களும் ஆதிக்க சக்திகளும் குறிப்பிட்டதொரு தேசிய இனத்தை மட்டும் சார்ந்தவை அல்ல என்பதும் உண்மைதான். வட இந்திய-பார்ப்பன-இந்தி- இந்து அடையாளத்தை ஆளும் வர்க்கங்களும் ஆதிக்க சக்திகளும் உருவாக்கிக் கொண்டுள்ளன. இந்தி பேசும் பகுதிகளிலுள்ள பரந்துபட்ட மக்களிடையே கூட வட்டார மொழித்தேசிய உணர்வு வளர்வதற்குப் பதிலாக அனைத்திந்திய இந்து- இந்திய தேசிய உணர்வே வளர்ந்திருப்பதைக் காணலாம்.’ ( பக்கம் 232 )

இந்து-இந்தி-இந்தியா எனும் கருத்தமைவு மேலாட்சித் திட்டம் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளதை இது காட்டுகிறது. சுதந்திர இந்திய ஒன்றியத்தின் மையப்படுத்தலுக்கு இந்தக் கருத்தமைவு மேலாட்சி இன்றியமையாத பங்கினை வகித்து வருகிறது. அரசின் அதிகார மையப்படுத்தலும் நாட்டின் ஒருங்கிணைப்பும் இந்திய பெருமுதலாளி வர்க்கத்தின் நலன்களுக்குச் சாதகமாய் இருக்கின்றன. இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பெருமுதலாளிகளும் இந்தி ஆட்சிமொழியாவதைத் தம்வர்க்க நலன் கருதி ஆதரித்தனர். இந்திய அமைப்பின் மையப்படுத்தலுக்கும் உள்நாட்டு சந்தையின் ஒருங்கிணைப்பிற்கும் அது உதவும் என்பதைக் கருத்தில் கொண்டே காந்தியின் சாதியான பனியா சாதியைச் சார்ந்த குஜராத்திய பெருமுதலாளிகள் இந்தி ஆட்சி மொழியாவதை ஆதரித்தனர் ( இது ஒரு உதாரணம்.) ஆகவே ‘இந்து சமய வண்ணம் பூசப்பட்ட இந்திய தேசியமும் இந்தி மொழியும்’ இந்திய பெருமுதலாளி வர்க்கத்தின் அனைத்திந்திய சந்தை ஒருங்கிணைப்பின் கருவியானதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அதேநேரம் இந்த இந்து முதலாளிகள் பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க முடியாதது என வாதிட்டதிலும் ஆச்சர்யமில்லை. அந்தப்பிரிவினை அவர்களின் இந்து- இந்திய ஒருங்கிணைப்புத்திட்டத்தின் விளைவாக இருந்த போதும் அது அத்திட்டத்தின் பலப்பாட்டிற்கு உதவியது என அவர்கள் கணித்தனர். இத்தகைய கருத்துக்களைக் கொண்ட இந்து பெருமுதலாளிகளின் பிரதிநிதியே பிர்லா.

III

வடஇந்திய பெருமுதலாளிகளுக்கும் காங்கிரசுக்குமிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார் காந்தி. அதேநேரம் இந்திய தேசியப்போராட்டத்தை வெகுஜனப்படுத்துவதிலும் அவர் வெற்றி கண்டார். சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய பெருமுதலாளிகள், நிலவுடைமையாளர் ஆகிய இரு வர்க்கங்களின் நலன்களைக் காக்கவும் பலப்படுத்தவும் உதவிய காந்திய தேசியவாதம் அதே நேரம் நடுத்தர கீழ்மட்ட வர்க்கங்களையும் சாதிகளையும் அணிதிரட்ட உதவியது. சுதந்திரத்திற்கு முன் முரண்பட்ட நலன்களைக் கொண்ட வர்க்கங்களை சாதிகளை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைக்கும் கருத்தமைவின் பிரதான பிரதிநிதியாக கவர்ச்சியும் மதிப்பும் கொண்ட அடையாளமாக விளங்கிய காந்தியை சுதந்திரம் உறுதியாக்கப்பட்ட நிலை வந்த போது இந்திய பெருமுதலாளிகள் புறக்கணிக்கத் தொடங்கி விட்டனர். சுதந்திர இந்தியாவில் காந்தியின் செல்வாக்கு தொடர்வது தமது வர்க்க நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை அவர்கள் காணத்தவறவில்லை. உதாரணமாக காந்தியின் அரசியல் கருத்துக்கள் அரச அதிகாரத்தின் மையப்படுத்தலுக்குச் சாதகமானவையல்ல. அவரது பொருளாதாரக் கருத்துக்கள் முதலாளித்துவ நவீனமயமாக்கலுடன் முரண்பட்டன. அவரது இந்து-முஸ்லீம் ஒற்றுமை நிலைப்பாடு, பிரிவினைக்கு எதிரான போக்கு இந்துப் பெருமுதலாளிகளின் நலன்களுக்கும் இந்து அடிப்படைவாதிகளுக்கும் ஏற்றதாக இருக்கவில்லை. காந்தியின் கைத்தறி இராட்டினம் இந்திய பெருந்தொழில் உற்பத்தி முதலாளிகளின் நலன்களின் அவர்களின் எதிர்காலக் கனவுகளின் நிராகரணத்தின் அடையாளம் போன்றிருந்தது. ஆகவே 1946 க்குப் பின் காந்தியை ஓரப்படுத்துவதில் பெருமுதலாளிகள் ஈடுபட்டது ஆச்சர்யம் தரும் ஒன்றல்ல.

இந்து- இந்தி- இந்தியா எனும் வரலாற்றுத்திட்டத்தில் காந்தியின் ஆத்மீகவாதம் என்ன பங்கை வகித்தது என்பது ஆழ ஆராயப்பட வேண்டிய ஒன்றெனக் கருதுகிறேன். இடதுசாரிகள் விரும்பத்தகாத தாயினும் வியக்கத்தகு முரண்பாடுகள் மிகுந்த பரிணாமப் போக்குகளைக் கொண்ட பார்ப்பனியமெனும் கருத்தமைவின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஆத்மீகப் பேச்சாளராக காந்தியைக் கருதலாமா? பிராமணர் மட்டுமன்றி மற்றய உயர்சாதியினரதும் இசைவுடன் இயங்கி வந்த பார்ப்பனியத்தை (வெளியே இருந்து வந்த ) காலனித்துவ ஆட்சிக்கெதிரான வெகுஜனப்போராட்டத்திற்கு உதவும் வகையில் வளப்படுத்தியதில், நெறிப்படுத்தியதில் காந்தியின் பங்கு என்ன? இந்தக் கேள்விகள் மேலும் ஆய்வுக்குரியவை. காந்தியின் ஆத்மீக வாதத்துடன் இணைந்த அரசியல் பொருளாதாரக் கருத்துக்களை காங்கிரஸ் தலைமை நடைமுறையில் நிராகரித்தது. அதேநேரம் காந்தி சுதந்திர இந்தியாவின் இந்திய தேசத்தின் தந்தையாக புனிதமயப்படுத்தப்பட்டுள்ளார். இந்தியப் பெருமுதலாளிகளாலும் காங்கிரஸ் தலைமையினாலும் பயன்படுத்தப்பட்ட பின் ஒதுக்கப்பட்ட காந்தி இந்துமத அடிப்படைவாதி ஒருவனால் கொலை செய்யப்பட்ட பின் ஒரு புனித கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்திய மக்களை இந்தியர்களாக ஒன்றிணைக்க இன்றும் காந்தி பயன்படுகிறார். இன்று அரசோச்சும் இந்து- இந்தி- இந்தியாவில் காந்தீயம் தென்படவில்லை. ஆனால் அதே இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பிற்கு காந்தி எனும் இந்து ஆத்மீகவாதியும் இந்திய தேசிய போராளியும் அவசியம். அப்படியாயின் இன்றைய ‘இந்து – இந்தி- இந்தியா’   கருத்தமைவில் காந்தியத்தின் பங்கு என்ன? அம்பேத்கார் ஒரு தடவை காந்தி பற்றிக் கூறியதை இங்கு மனங்கொள்ளல் தகும்

‘ஒரு மகாத்மாவாக அவர் அரசியலை ஆத்மீகப்படுத்த முயற்சிக்கலாம். இதில் அவர் வெற்றி கண்டுள்ளாரோ என்னவோ நிச்சயமாக அரசியல் அவரை வர்த்தக மயப்படுத்திவிட்டது (Commercialised). … சாதியையும் வண்ணத்தையும் எப்போதுமே மகாத்மா ஆதரிப்பதற்கான காரணம் என்னவெனில், அவற்றை எதிர்த்தால் அரசியலில் தனக்கிருக்கும் இடத்தை இழந்து விடலாம் என அவர் பயப்படுவதே.’ (Ambedkar: Writings and speeches Vol I, 1979)

காந்தியின் வைதீகப்போக்கையும் ஆத்மீகவாதக் காரணங்களையும் குதர்க்கத்தையும் பயன்படுத்தி அவர் சாதி அமைப்பை வண்ணத்துக்கூடாக மறைமுகமாகவும் நேரடியாகவும் நியாயப்படுத்தியதையும் சமகாலத்திலேயே ஆழ விமர்சித்தவர் அம்பேத்கார். இஇஇ ல் காந்தி பற்றிய விமர்சனத்திற்கு அம்பேத்காரின் சிந்தனைகளைப் பயன்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.இந்து- இந்தி- இந்தியா வின் விமர்சனத்துக் கூடாக SVR முன்வைக்கும் மாற்றுவழி விவாதங்களுக்கு உதவலாம்

‘எனவே அதிகாரப் பரவலும், சோசலிசமும் மக்களின் பல்வேறு தேசிய, மொழி சமய பண்பாட்டு பிரதேச அடையாளங்களுக்கான பாதுகாப்பும் தன்னுரிமையும் சேர்ந்து நிலவுகிற ஒரு புதுவகையான இந்திய சமூகத்தையும் கற்பிதம் செய்து பார்ப்பது இன்றியமையாததாகிறது. இத்தகையதொரு இந்திய சமூதாயமே ஏகாதிபத்தியத்தையும் உலக பிற்போக்கு சக்திகளையும் எதிர்த்து நிற்கவல்லது;   இன்றைய ‘ஒன்றுபட்ட’ ‘ ஒருமைப்பாடு‘ உடைய இந்து – இந்தி- இந்தியா அத்தகையதன்று. இது ஏகாதிபத்தியத்தையும் பார்ப்பன- பனியா நலன்களையும் பாதுகாக்கவென எழுப்பப்பட்ட ஒரு கோட்டை.’   ( பக்கம் 239)

ஒரு மாற்று இந்தியாவைக் கற்பிதம் செய்தல் சுலபமானதல்ல. இந்தப் புதிய இந்தியாவை ஒன்றிணைக்கவல்ல அம்சங்கள் எவை ? ‘இந்து- இந்தி- இந்தியா’ வை விமர்சித்து அதன் உள்ளியக்கப்பாடுகளை விளக்குவதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுள்ள நூலூசிரியர் ‘மாற்று இந்தியா’   வின் சாத்தியப்பாடுகள் பற்றிக் குறிப்பிடவில்லை. ஒருங்கிணைப்பு சக்திகளும் பிரிவினை சக்திகளும் பலமட்டங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்து- இந்தி- இந்தியாவில் ஒரு புதிய ஒன்றிணைந்த இந்தியா பற்றிய கற்பிதத்திற்கு உதவக் கூடிய அம்சங்கள் எவை ? SVR ன் கட்டுரை இந்தக் கேள்வியை எழுப்புகிறது. ஒரு பல்தேசிய இன மக்கள்ஜனநாயக இந்தியாவைக் கற்பிதம் செய்தல் அத்தகைய இந்தியாவில் சோஷலிசத்திற்கான பரிணாமபோக்குகளின் சாத்தியப்பாடுகள் எத்தகையவை போன்ற விவாதங்கள் தோன்றி வளருதல் இந்திய மக்களுக்கு மாத்திரமன்றி உபகண்டத்தின் மற்றய மக்களுக்கும் பயன்தரமுடியும். இன்றைய இந்தியா மேலும் பிளவு படலாம் அல்லது அது தவிர்க்கப்படலாம். இன்றைய உலகின் பெருந்தொகையான நாடுகள் பல்லின நாடுகளே. ஒற்றை இனத்தேச அரசு என்பது ஒரு சர்வலோக விதி அல்ல என்ற உண்மையை மறுக்க முடியாது. தென் ஆசியாவில் பல் தேசிய இன அமைப்புகளின் சாத்தியப்பாடுகள் பற்றிய விவாதங்களே முதன்மை பெற வேண்டும்.

சரிநிகர்

யூன் 29 – யூலை 12 – 1995

யூலை 13- யூலை 26 – 1995

[1] சரிநிகர் யூன் 29 – யூலை 12 – 1995 யூலை 13- யூலை 26 – 1995

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *