புலம்பெயர்ந்தோர் இலக்கியம் இன்றைய உலகில் ஒரு சாதாரண சர்வதேச நிகழ்வாகிவிட்டது. அரசியல் அடக்குமுறை, இன ஒதுக்கl காரணிகளால் பல தேசத்தவர்கள் பெருந்தொகையில் வேற்று நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மத்தியிலுள்ள அறிவாளர்களில் சிலர் தாய்நாட்டின் நிலைமைகள் தொடர்பான தமது ஈடுபாட்டையும் தற்போதைய வாழ்நிலை அனுபவங்களையும் கலைப்படைப்புக்களாய், கட்டுரைகளாய் வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் ஆளுமைகள், நினைவுகள், அனுபவங்கள் எல்லாமே தாய்நாடு புகல் நாடு எனும் தொடர்பினால் பாதிக்கப்படுவதால் இவர்களின் ஆக்கங்களுக்கு ஒரு விசேட கலாச்சார பரிமாணமுண்டு.
புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் புதிய கலாச்சாரச் செழுமையுடன் மிளிரும் சாத்தியப்பாடுகள் அதிகம் உண்டு. இச்சாத்தியப்பாடுகள் எவ்வளவு தூரம் வளர்ச்சியாகப் பரிணமிக்கின்றன என்பது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் தன்மைகளிலும் அவர்களுக்கு கிடைக்கும் ஸ்தாபனரீதியான உதவிகள், ஆகர்சங்கள் ஆகியவற்றிலும் தங்கியுள்ளது. இத்தகைய அறிவுரீதியான செயற்பாடுகள் தாய்நாட்டின் சமூக மாற்ற சக்திகளுக்கும் மக்களின் பொதுவான கலாச்சார வளர்ச்சிக்கும் பயன்படலாம்.
கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பாவில் வாழும் ஈழத்தமிழர் மத்தியிலிருந்து பல சஞ்சிகைகள் சில சிறிய குழுக்களின் விடா முயற்சியாலும் அவர்கள் வதியும் நாடுகளின் சில நட்புறவு ஸ்தாபனங்களின் உதவியாலும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. சில சஞ்சிகைகள் (எனக்குத் தெரிந்த உதாரணங்களாக நோர்வேயில் இருந்து வெளி வரும் சுவடுகள் மேற்கு ஜெர்மனியில் இருந்து வெளி வரும் தூண்டில்) தொடர்ச்சியாக வெளிவருவது மட்டுமின்றித் தரத்தாலும் வளர்ச்சி பெற்று வருவதைத் தெளிவாகக் காணலாம்.
இத்தகைய கலாச்சாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் குழுக்கள் தம்மிடையே தொடர்புகளை ஏற்படுத்தி கருத்துப்பரிமாறல்களில் ஈடுபடவும் தொடங்கியுள்ளன. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் மற்றைய புலம்பெயர்ந்த எழுத்தாளரின் ஆக்கங்கள் போன்று தாய்நாட்டு நிலைமைகள் பற்றிய விடயங்களையும் புகல் நாட்டில் தமது வாழ்நிலை அனுபவங்களையும் ஒட்டியே உருப்பெறுகின்றன. ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் இந்தக் கலாச்சாரப்ப போக்கானது பன்முக ரீதியாக வளர்ச்சி பெறக்கூடிய உள்ளாற்றலைக் கொண்டுள்ளதுபோற் தெரிகிறது.
வெளிவந்து கொண்டிருக்கும் சில சஞ்சிகைகளை மேலோட்டமாகப் பார்க்குமிடத்து இது தெளிவாகிறது. பொதுவாகப் பின்வரும் அம்சங்களைப் இனங்கண்டு கொள்ளலாம்.
- இலங்கையில் குறிப்பாகத் தமிழ் மக்களின் அரசியல் சமூக நிலைமைகள் பற்றிய தகவல்கள், அப்பிப்பிராயங்கள்
- தமிழீழப் போராட்டப்போக்குகள் பற்றிய விமர்சனங்கள்
- இன்றைய தமிழ்க் கலை இலக்கியப் போக்குடன் இணைந்த புதிய படைப்புகள் – கவிதைகள் சிறுகதைகள் குறுநாவல்கள் சித்திரங்கள்
- தாய்நாடு- புகல்நாடு கலாச்சார முரண்பாடுகளைக் கருவாகக் கொண்ட கலைத்துவ ஆக்கங்கள் பிரதானமாக சிறுகதைகள், கேலிச்சித்திரங்கள் வேறு நகைச்சுவை கலந்த ஆக்கங்கள்
- பெண்நிலைவாதக் கருத்துக்கள்
- புகல் நாட்டு அரசியல் நிலைமைகள் பற்றிய தகவல்கள், கருத்துக்கள்
- மூன்றாம் உலக மக்களின் போராட்டங்கள் பற்றிய செய்திகள்
- வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் கலை, இலக்கியக் குழுக்கள் பற்றிய செய்திகள்
இந்தப் பல்வேறு அம்சங்களின் போக்குகள், தன்மைகள் பல அசமத்துவங்களை கொண்டிருக்கலாம். இவை எல்லாமே ஒரு குறிப்பிட்ட இதழில் இடம்பெறாமல் போகலாம். இவற்றின் கருத்தமைவு நிலைப்பாடுகள் அல்லது ஆக்கவியல் அழகியல் மட்டங்கள் விவாதத்திற்குரியனவாக இருக்கலாம். ஆனால் முக்கியமான உண்மை என்னவெனில் இந்த அம்சங்களையெல்லாம் புலம் பெயர்ந்தோர் சஞ்சிகைகள் உணர்வு பூர்வமாக உள்வாங்க முயற்சித்து வருகின்றன.
இன்று ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒரு புதிய கலாச்சார முனைப்புக்கும், அதன் பன்முக ரீதியான விருத்திக்கும் உதவக்கூடிய அலகுகளாக இவ்வம்சங்களைக் கணிக்கலாம். இவற்றின் வீரியம் மிக்க சுதந்திரமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வழிவகைகள் என்ன என்ற கேள்வியின் முக்கியத்துவதைக் குறைத்து எடை போட முடியாது. இத்தகையதொரு கலாச்சார தலையீட்டிற்கு ஊடாக ஐரோப்பாவில் வாழும் தமிழரும், ஈழத்தில் வாழும் தமிழரும் பயனடைய முடியும் என்றே கருதுகிறேன்.
புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியப் போக்குகளின் தன்மைகளைப் புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல். சமூகவியல் நிலைமைகளுடன் இணைத்துப் பார்த்தல் அவசியம். இங்கு தேசிய (இலங்கை) நிலமைகளும் குடிபுகுந்த நாட்டில் தமிழர் எதிர்கொள்ளும் நிலைமைகளும் அவரவர் அனுபவங்களுக்கூடாகப் பின்னி உறவாடுவதைக் காணலாம். ஐரோப்பாவில் வாழும் தமிழரின் வாழ்நிலைப் பிரச்சனைகள் பலவற்றைக் கலாச்சாரங்களின் – ஆகக் குறைந்தது இருவிதக் கலாச்சாரங்களின் – சிக்கலான மோதல்களாக, இணைவாக, அனுபவ ரீதியான தொகுப்பாகப் பார்க்கலாம். இந்தச் சிக்கல்கள் இங்குள்ள அரசியல் யதார்த்தங்களின் பரிமாணங்களை உள்ளடக்குகின்றன. ஒவ்வொருவரினதும் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் பல கலாச்சாரங்களை ஊடுருவிப் போகின்றன.
நமது தனிப்பட்ட அடிப்படைத் தேவைகளும், அவற்றைப் பூர்த்தி செய்ய நாம் தேடும் வழிவகைகளும், நாம் வாழும் சமூகம் பற்றிய பல தகவல்களை அனுபவ ரீதியாக நமக்குத் தருகின்றன. இந்த அனுபவங்களை நாம் அலசி ஆராய முற்படும் போது நமது கலாச்சார விழுமியங்களும் நமது எதிர்பார்ப்புக்களும் ஏக்கங்களும் தலையிடுகின்றன. உண்மையில் இவை நமது இருப்பு பற்றிய நமது சுய மதிப்பீடுகளையும் பல வகையில் நிர்ணயிக்கின்றன. இதற்கூடாக நாம் ஒவ்வொரு கணமும் நமது தாய் நாட்டிற்குத் திரும்புகிறோம். இந்த அக உலகப் பிரயாணங்கள் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்த அக-புற முரண்பாடுகளின் கணிப்புக்கள் அவரவர் சமூகப்பார்வை, சமூக அந்தஸ்து ஆகியவற்றில் தங்கியிருக்கின்றன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் எல்லோருக்கும் சில பொதுப் பண்புகள் இருக்கின்றன. இவை நாம் ஒரு சமூகத்திலிருந்து குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சில பொதுவான காரணிகளால் ஐரோப்பியநாடுகளில் குடி புகுந்துள்ளோம் என்ற அடிப்படையிலிருந்து எழுகின்றன. அதே நேரத்தில் இங்குள்ள தமிழர்களிடையே பல வேறுபாடுகளும் முரண்பாடுகளும் இருக்கின்றன. இந்த வேற்றுமைகளின் ஒரு பங்கு – தற்போதைய நிலையில் பெரும் பங்கு, நமது நாட்டில் இருந்து நம்மோடு கூடவே வந்தது. மீதிப் பங்கு நாமிங்கு வந்தபின்பு ஏற்பட்ட மாற்றங்களோடு சம்பந்தப்பட்டது,
இந்தச் சமூகவியல் அம்சங்களை மேலும் பரந்தவொரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தோடு இணைத்துப் பார்த்தலும் அவசியம். இன்று புதிய கலாச்சார செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எல்லோரும் ச்மீபகாலங்களில் – கடந்த பத்து வருடங்களுக்குள் – ஐரோப்பாவுக்கு குடிவந்த தமிழ் சமூகங்களைச் சார்ந்தவர்கள். 1960 களில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இவர்களுக்குமிடையே தன்மைரீதியான வேறுபாடுகள் உண்டு.
முன்னர் வெளியேறியவரில் பெரும்பாலானோர் ஆங்கிலம் மூலம் கல்வி கற்றோராகவும் குறிப்பிட்ட துறைகளில் விசேட பயிற்சி பெற்றோராகவும் இருந்தனர் அல்லது அவர்கள் குடிபுகுந்த நாடுகளில் தொழில் வாய்ப்புள்ள துறைகளில் கல்வி பெறும் சந்தர்ப்பங்களைச் சுலபமாகப் பெறக்கூடிய நிலையில் இருந்தனர். அத்துடன் அவர்கள் குடியேறிய நாடுகள் ஆங்கிலம் பேசும் நாடுகள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இதனால் இவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே மொழித் தடைகள் இருக்கவில்லை. அதுமட்டுமன்றி 1960 களில் மேற்கத்திய நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதார எழுச்சியின் விளைவாக பல துறைகளில் வேலையாளர் போதாமை இந்நாடுகளின் குடிவரவுக் கொள்கைகளில் சாதகமான மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இலங்கை இங்கிலாந்தின் முன்னை நாள் காலனியாயிருந்ததாலும் Commonwealthல் அங்கத்துவ நாடாக இருந்ததாலும் 1960களில் இலங்கையர் இங்கிலாந்திலோ மற்றய commonwealth நாடுகளிலோ குடியேறுவது சுலபமாயிருந்தது. இந்தச் சாதக நிலைமைகளால் முன்னைய சந்ததியினர் குறுகிய காலத்தில் ஸ்திரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்தது. இவர்களின் குழந்தைகள் அவர்கள் வாழ்ந்த சமூகத்துடன் கலாச்சாரரீதியில் இணைவதிலும் பெரும் பிரச்சனைகள் இருக்கவில்லை எனலாம்.
புலம் பெயர்ந்த முன்னைய சந்ததியினர் பலர் 1956ல் வந்த சிங்களம் மட்டும் சட்டத்தினதும் அதைத்தொடர்ந்து வந்த ஆட்சிகளின் ஆரம்பகால இனப்பாகுபாட்டுப் போக்குகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பது உண்மை. இந்தப் பாதிப்புப் பொதுவாக பதவி உயர்வு புலமைப் பரிசில் போன்ற உரிமை மறுப்புக்களையும் உள்ளடக்கியது.
சமீப காலங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிவந்துள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் தமிழ் மூலம் கல்வி கற்ற இளைஞர்கள். இலங்கை அரசின் தொடர்ச்சியான இனப்பாகுப்பாட்டுக் கொள்கைகளால் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டவர்கள். புலம்பெயர்ந்த முன்னைய சந்ததியனருக்கு இலங்கையில் கிடைத்த உரிமைகள், கல்வி, வேலை வாய்ப்புக்கள் இவர்களுக்கு கிடைக்கவில்லை. இவர்களின் புலப்பெயர்வு மிகவும் அடிப்படையான அரசியல் பொருளாதார தனிமனித பாதுகாப்புக்காரணிகளால் ஏற்பட்டது. இவர்களில் பலர் 1970 களில் இலிருந்து பூதாகாரமாக வளர்ந்த பலாத்காரமான இன ஒதுக்கலைப் பல வகைகளில் அனுபவித்தவர்கள். அரச பயங்கரவாதத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குடும்ப அங்கத்தவரை இழந்தவர்கள். இப்படிப் புலப்பெயந்தோரில் ஒருபகுதியினர் , விடுதலை இயக்கங்களில் ஈடுபட்டிருந்தோர். இயக்கங்களுக்கு இடையிலான குரோதங்களாலும் இயக்கங்களின் மிரட்டல்களினாலும் வெளியேறிய பலரையும் ஐரோப்பாவில் காணலாம். ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் மட்டுமின்றி சகல ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் அகதிகளைக் காணலாம்.
ஆகவே புலம்பெயர்ந்த இந்த இளம் சந்ததியினர் பலர் தமது தாய் நாட்டின் அரசியல் நிலமைகளுடனும் பிரச்சனைகளுடனும் நெருக்கமான பரிச்சயத்தை அனுபவரீதியாக கொண்டுள்ளனர். புலம் பெயர்ந்து குறுகிய காலமாகையால் நாட்டில் உறவினர், நண்பர்களுடன் இன்னமும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் அகதி அந்தஸ்துக் கோரிய பெரும்பான்மையினருக்கு இதுவரை இந்த அந்தஸ்து கிடையாமையும் ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார மந்தத்தின் விளைவான வேலை வசதியின்மையும் இங்கு இப்போது முன்பையும் விட மோசமாகிவிட்ட நிறவாதமும் பலருக்கு இங்கு தமக்கு எத்தகைய எதிர்காலம் உண்டு என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்கால ஸ்திரமின்மை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனம், புதிய வாய்ப்புக்களைத் தேட உதவும் கல்வி பயில முடியாமை போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஐரோப்பிய ஜனநாயகம் தரும் மனித சுதந்திரங்களும் சில அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தும் நம்பிக்கைகளையும் மகிழ்வையும் அதே அமைப்பிடம் இருந்து வெளிவரும் நிறவாதமும், இரட்டை நியமங்களும் குழப்பியடிக்கின்றன. இங்கும் வாழ்க்கை ஒரு போராட்டம் தான் – குறைந்தது முதலாவது சந்ததிக்கு இது ஒரு சவால்தான்.
1983 க்குப் பின் பெருந்திரளாகத் தமிழர் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்ததுடன் ஈழத்தமிழர் போராட்டத்தின் சர்வதேச மயமாக்கல் ஒரு புதிய கட்டத்தையடைந்தது. இலங்கை அரசுக்கு எதிரான பிரச்சாரம் மட்டுமின்றி இயக்கங்களுக்கிடையேயான முரண்பாடுகளும் தமிழர் மத்தியில் பிரதிபலிக்கத்தொடங்கின. முக்கிய இயக்கங்களின் பிரச்சார வேலைகள் ஆரம்பித்தன. இதற்கூடாக பிரச்சார இலக்கியங்கள் பரவின. விருத்தியடைந்த நாடுகளில் கிடைக்க கூடிய தொடர்பு சாதன வசதிகள் இந்த செயற்பாடுகளை நன்கு ஒழுங்கு செய்வதற்கு உதவுகின்றன. இந்த செயற்பாடுகளுக்கூடாக ஒரு புறம் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கிடையே ஸ்தாபனரீதியான தொடர்புகளும் ஒருங்கிணைப்பும் மறுபுறம் இயக்க ரீதியான பிரிவினைகளும் தோன்றின.
இது தாய்நாட்டின் யதார்த்தத்தின் ஒரு பிரதிபலிப்பு. அங்கு இயக்கங்களிடையே குரோதங்கள் இருக்கும்வரை இங்கும் அவற்றின் பிரதிபலிப்புக்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆயினும் வெளிநாடுகளில் வாழும் தமிழரில் ஆழ்ந்த அரசியல் ஈடுபாடுள்ளோர் ஒரு சிறுபான்மையினரே. இயக்கங்களை அடிப்படையாகக் கொண்ட வேறுபாடுகள் மாத்திரமின்றி சாதிப்பிரச்சனைகள், தமிழ் பெண்கள் மீது தமிழ் ஆண்கள் காட்டும் ஆதிக்கம் போன்றவையும் மீள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இத்தகைய விசேட சமூகவியல் நிலமைகளுக்குள் இருந்துதான் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பிறக்கிறது. இந்தச் செழுமை மிகுந்த யதார்த்தங்கள் கலை இலக்கியப்படைப்புக்களும் ஆகர்ஸமாய் அமைகின்றன. ஆயினும் இந்த யதார்த்தங்களின் சிக்கல்களை நியாய- அநியாயங்களை, அழகு- அசிங்கங்களை, வெற்றி- தோல்விகளை, இன்ப- துன்பங்களை எல்லாம் தத்தமது நேரடி அனுபவங்களின் மதிப்பீடுகளுக்கூடாக வெளிப்படுத்த எல்லோராலும் சுலபமாக முடிவதில்லை. முதலில் இந்த யதார்த்தங்களின் இருப்பை அவற்றின் முழுமையை ஏற்கும், எதிர்நோக்கும் துணிவு நமக்கு வேண்டும். இந்த துணிவு நம்மில் பலருக்கு இல்லை. அவ்வாறு இருப்போரில் சிலரே கலை இலக்கியம் படைப்போர். இவர்களின் செயற்பாடுகளே இன்று நாம் காணும் புதிய கலாச்சார முனைப்பான புலம்பெயர்ந்தோர் இலக்கியம். ஐரோப்பாவில் வாழும் இவர்கள் தாய்நாட்டிலுள்ள சகோதர எழுத்தாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள சுதந்திரங்களையும், வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். இது இவர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு உந்து சக்தியாகவுள்ளது. ஆயினும் இங்கும் கூட ஐரோப்பா வழங்கும் எழுத்து, சிந்தனை சுதந்திரங்களையும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் சில இடங்களில் முற்றாகப் பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். இதற்கு காரணம் சில இயக்கங்களின் மிரட்டல்களே.
நாட்டில் நமது மக்களுக்கிடையே கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சில முக்கியமான கேள்விகள் பிறந்துள்ளன. விடுதலை என்றால் என்ன? புரட்சிகர பலாத்காரம் என்றால் என்ன? மனிதத்துவம் மனித நேயம் என்பன என்ன? இப்படி பல முக்கிய கேள்விகள். இவற்றை பகிரங்கமாக விவாதிக்க முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கேள்விகள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்துள்ளன. இவை வெளிநாடுகளில் வசிக்கும் அனைவரும் முகம் கொடுக்க வேண்டிய கேள்விகள் ஆகும். எழுத்தாளர் இந்தக் கேள்விகளுக்கூடாக தமது சமூகம் பற்றிய ஆழ்ந்த விமர்சனங்களை நோக்கித் தமது ஆற்றல்களைத் திருப்ப வேண்டும்.
இன்று இலங்கை முழுவதையும் இறுகப்பற்றியுள்ள கொலைவெறி மிகுந்த நிறுவன ரீதியாக்கப்பட்ட பலாத்காரமானது அரசியல், பொருளாதாரம், மனிதாபிமானம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய மிகவும் பயங்கரமான ஒரு முழுமையைக் கொண்டுள்ளது. இலங்கை அரசும் அதை எதிர்க்கும் சக்திகளும் ஒரே விதமான எதேச்சார வன்செயல்களைக் கட்டவிழ்த்து விடுகின்றன. மக்கள் (சிங்கள, தமிழ், முஸ்லிம் ) மரணபயத்தின் பிடியில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் இன்றைய பிரச்சனை இதுவரை நமது வரலாறு சந்திக்காதவொரு நாகரீகப் பிரச்சனை.
இந்த நிலைமைகளை எதிர்கொண்டு அறிவு ரீதியில் செயலாற்ற முற்படும் போது ஐரோப்பியச் சமூகத்திடமிருந்து நாம் பெறும் அனுபவங்களும் நமக்குத் துணையாக இருக்கலாம். குறிப்பாக வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ சமூகத்தின் நாகரீகம் பற்றிய கணிப்பீடுகளும் இன்று நாம் காணும் நடைமுறை சோசலிசம் பற்றிய விமர்சனங்களும் நமது சமுதாய அமைப்பை பற்றிய, அதன் எதிர்காலம் பற்றிய நமது பார்வைகளுக்கு மிகவும் உறுதுணையாயிருக்கும். முதலாளித்துவத்தையும் சோசலிசத்தையும் ஆழ விமர்சிக்கும் சிந்தனைப் போக்குகளில் நாம் கூடிய அக்கறை காட்டவேண்டும். நமது சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் விமர்சிக்க இந்த அறிவு பயன்படும் என்பதிற் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் வரலாற்று ரீதியான வேறுபாடுகள் பற்றிய தெளிவும் பிறக்கும்.
ஆகவே புதிய கலாச்சாரச் செயற்பாடுகளுக்கூடாக புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தாய்நாட்டின் சமூக மாற்றத்திற்கு உதவ முடியும் என்பதிற் சந்தேகமில்லை. இந்தப் பணியை எழுத்தாளர்கள் தமது சமூகப் பொறுப்பாகக் கொண்டு இயக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.
இறுதியாகப் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் நமது தாய்நாட்டைப் போய்ச் சேர வேண்டும் அல்லாவிடில் அதனால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.
மார்கழி 1989
Thanks…First generation diaspora Tamils tried their best to focus our struggle for justice & equality in Srilanka towards IC & among us!
We hope that 2.generation tamils shd continue strongly to take our case to IC & win harmony, equality ,autonomy, dignity,freedom & Progress in Srilanka!