செல்வந்த நாடுகளின் ஏறிச்செல்லும் ஏற்றத்தாழ்வுகளும் ஜனநாயகத்தின் சிதைவும்- முதலாளித்துவம் மீட்சியின்றி சீரழிகிறதா ?

நவீனத்துவத்தின் வரலாறு ஆக்கத்தையும் அழிவையும் பற்றியதென்றால் மிகையாகாது. அடிப்படையில் இந்த வரலாறு முதலாளித்துவத்தின் வரலாறே. ஆனால் இதைத் தனியே முதலாளித்துவத்தின் வெற்றியின் வரலாறெனப் பார்ப்பது தவறு. இது முதலாளித்துவ அமைப்பிற்கும் அதற்குள்ளேயே இருந்து பிறக்கும் முரண்பாடுகளினதும் அந்த அமைப்புக்கு எதிரான சக்திகளினதும் வரலாறும் தான் என்பதையும் மறந்துவிடலாகாது. ஆனால் இந்த அமைப்பிற்கு குறிப்பாக தனிமனித பொருளாதார சுதந்திரத்தை வலியுபறுத்தும் கொள்கைக்கு மாற்றுவழியில்லை எனும் கருத்தியல் 1970 களின் பிற்பகுதியிலிருந்து மேலாட்சி பெற்று தன் செல்வாக்கைக்காட்டி வருகிறது. மறுபுறும் இந்தப்போக்கில் பாதகமான விளைவுகள் மனித வாழ்வின் அர்த்தம் பற்றி மற்றும் மனித இனத்தின் அது வாழும் இந்தப் பூகோளத்தின் எதிர்காலம் பற்றிப் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இன்றைய உலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செல்வம் பெருகியுள்ளது போல் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக-பொருளாதார அசமத்துவங்களும் வளர்ந்துள்ளன. அதேபோன்று முன்னெப்போதும் இல்லாதவகையில் இயற்கையின் அழிப்பும் சூழலின் சீரழிவும் மோசமடைந்துள்ளன. இந்த விடயங்கள் பற்றி பல ஆய்வுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அதேவேளை உலக ரீதியில் ஜனநாயகம் பல வழிகளால் நசுக்கப்படுவதையும் காண்கிறோம். முதலாளித்துவமும் ஜனநாயகமும் பிரிக்கப்பட முடியாத இரட்டைக் குழந்தைகளெனும் பிரச்சாரத்தின் பொய்மையை மறைப்பதற்கு முதலாளித்துவ உலகின் ஆளும் வர்க்கங்களும் கூட்டுக்களும் பெரும்பாடுபடுகின்றன.

வறியோர்களின் நிலையை அறிய விரும்பினால் செல்வந்தர்கள் பற்றி ஆய்வு செய் என யாரோ ஒரு அறிஞர் கூறியது நினைவுக்கு வருகிறது. இந்தக் கட்டுரை இன்றைய முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஜனநாயகத்தின் நிலை பற்றியது. இந்த விடயங்களை முதலாளித்துவத்தின் மைய நாடுகளின் போக்குகள் பற்றிய ஆய்வுகளின் உதவியுடன் அணுக விரும்புகிறேன். முதலாளித்துவம் நீண்ட காலமாக நிலைபெற்று ஏகாதிபத்தியமாக வளர்ந்தது இந்த நாடுகளில் தான். நவீனத்துவத்தின் எழுச்சியையும் பரவலாக்கலையும் ஆழமாக்கலையும் இந்த நாடுகளிலேதான் முழுமையாகக் காண்கிறோம். நவீனத்துவத்தின் வரலாறு நவீனத்துவத்துக்குப் பின்னான (post- modern) கால கட்டத்தை அடைந்து விட்டது எனும் சிந்தனைப்போக்குகளும் இங்குதான் தோன்றிவளர்ந்துள்ளன. ஆகவே நவீனயுகத்தின் பிரதான விவாதப் பொருளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களின் நிலைமைகள் பற்றிப் பார்க்க இந்த நாடுகள் மிகவும் உகந்தவை என்பதில் சந்தேகமில்லை. இந்தவகையில் மேற்கு ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அசமத்துவத்தின் விலை – பிரதான நீரோட்டத்திலிருந்து எழும் விமர்சனங்கள்

நோபல் பரிசு பெற்ற பிரபல அமெரிக்க பொருளியலாளர் Joseph Stiglitz 2012 ல் எழுதிய ‘The Price of Inequality’ ( அசமத்துவத்தின்விலை ) என மகுடமிடப்பட்ட நூலில் அமெரிக்க சமூகத்தின் ‘பெரும்புதிர்’ என்பது பற்றி எழுப்பும் கேள்வியை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் அடிப்படையில் அமைந்த ஒரு ஜனநாயத்தில் எப்படி ஒரு வீதத்தினர் மட்டுமே தமது நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கைகளை வகுக்குமளவிற்கு வெற்றி பெறுகிறார்கள்? இந்த புதிர் அமெரிக்காவிற்கு மாத்திரம் சொந்தமானதல்ல. ஆனால் அங்குதான் சமீபகாலங்களில் ‘ஒரு வீதம்- 99 வீதம்’ எனும் சமூகப்பிரிவினை அதாவது 99 வீதத்தினரின் நலன்களை ஒதுக்கி அவர்களின் செலவில் ஒருவீதத்தினர் அபரித செல்வந்தர்களாகியுள்ளனர் எனும் விமர்சனமும் அதையொட்டிய அரசியல் எதிர்ப்பலைகளும் எழுந்துள்ளன. செல்வந்த நாடுகளில் அமெரிக்காவிலேயே மிகவும் ஆழமான சமூக பொருளாதார அசமத்துவத்தைக் காண்கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டும் பேராசியர் Stiglitz அமெரிக்கா கடந்த நான்கு தசாப்தங்களாப் பின்பற்றிய நவதாராளக்கொள்கை ஒரு செயல்பிறழ்ந்த முதலாளித்துவத்திற்கே (Dysfunctional Capitlalism) இட்டுச்சென்றுள்ளது என வருத்தப்படுகிறார். இதையே நவதாராள உலகமயமாக்கல் உலக ரீதியில் செய்து வருகிறது என்பதும் அவரின் விவாதமாகும்.

Stiglitz தரும் தகவல்களும் எழுப்பும் கேள்விகளும் முற்றிலும் புதியவையல்ல. ஏற்கனவே பல இடதுசாரிகள் குறிப்பாக David Harvey போன்ற மாக்சிய ஆய்வாளர்கள் இதைப்பற்றி எழுதியுள்ளார்கள் ஆழ விமர்சித்துள்ளார்கள். (இத்தகைய ஆய்வுகள் பற்றி சமகாலம் 2012 July 06-19 இதழில் ‘தொடர்ச்சியான நெருக்கடிக்குள் மூலதனம்’ எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்) ஆனால் Stiglitz ன் விமர்சனங்களுக்குப் பலர் முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. முன்னாள் உலக வங்கியின் பிரதம பொருளியலாளராகவும் ஜனாதிபதி கிளின்டனின் ஆலோசகராகவும் இருந்த அவர் சமீபகாலங்களில் நவதாராளவாதத்தையும் அது சார்ந்த பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளையும் வன்மையாக விமர்சிக்கும் நூல்களையும் கட்டுரைகளையும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவர் முன்வைக்கும் விமர்சனம் முதலாளித்துவ அமைப்பிற்குச் சார்பான அறிவியல் முகாமிற்குள்ளிலிருந்து வரும் ஒரு முரண்படு குரலாகக் கருதப்படுகிறது. அவரது விமர்சனத்தின் நோக்கம் அவரே குறிப்பிடும் செயல்பிறழ்ந்த முதலாளித்துவத்தை எப்படி மக்களின் மனித நன்னிலைக்கு உதவும் முதலாளித்துவமாகச் சீர்திருத்துவது என்பதாகும்.

அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடாயிருந்த போதும் அந்த ஜனநாயகம் சமூகத்தின் பெரும்பான்மையினரின் நலன்களைப் பிரதிபலிப்பதாக இல்லை.அமெரிக்க வாக்காளர்களில் 50 வீதத்திற்கும் மேலானோர் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை. இளம் சந்ததியினரின் வாக்களிப்பு வீதம் இதை விடக்குறைவு. இந்த நிலைமைக்கு அமெரிக்காவின் ஒரு வீதத்தினரே காரணம் என்றும் அவர்களின் பேராசைத்தனம் பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்க வைத்துவிட்டது என வருந்தும் Stiglitz இந்த நிலை தொடர்ந்தால் அது உயர் மட்ட ஒரு வீதத்தினரின் சுயநலன்களுக்கு நீண்ட காலத்தில் ஆபத்தானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என அங்கலாய்க்கிறார். முதலாளித்துவம் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறதா? அது ஒரு சுய அழிவுப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறதா? போன்ற கேள்விகள் எழுகின்றன. அதேநேரம் முதலாளித்துவத்தை மீண்டும் சீர்திருத்தி சமூக நலன்களைப் பாதுகாக்க முடியும் என்னும் கருத்துக்குச் சார்பான வாதங்கள் நவதாராளவாதத்தின் மேலாட்சியுடன் போட்டி போடுகின்றன.

தோமஸ் பிக்கெட்டியின் ஆய்வு

இந்த விவாதத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாக அமைகிறது பிரெஞ்சுப் பொருளியலாளரான தோமஸ் பிக்கெட்டி (Thomas Piketty) எழுதியுள்ள ‘Capital in the Twenty First Century’ (இருபத்தி ஓராம் நூற்றாண்டில் மூலதனம் ) எனும் நூல். 2013 ல் பிரெஞ்சு மொழியிலும் 2014 ல் ஆங்கிலத்திலும் வெளிவந்த இந்த நூல் உலக ரீதியில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Piketty ஐ ‘பொருளியலின் றொக் தாரகை’ (Rock Star) எனச் சில பத்திரிகையாளர்கள் வர்ணித்தனர். Stiglitz இன் ஆய்வு அமெரிக்கா பற்றி எழுப்பிய பிரச்சனையை Piketty மேலும் பரந்த ஆழ்ந்த வரலாற்று ரீதியான அணுகுமுறையைப் பயன்படுத்தி ஆராய்ந்துள்ளார். ஏறக்குறைய 700 பக்கங்களைக் கொண்ட நூலில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் போக்குகளை இருக்க கூடிய தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து தனது விளக்கங்களைக் கொடுத்துள்ளார். தனது நூல் 18ம் நூற்றாண்டிலிருந்து இருபத்தி ஓராம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைப் பற்றிய தென்பதால் இது பொருளாதார வரலாறு பற்றியதென Piketty யே கூறுகிறார். அவரின் ஆய்வின் பிரதான கேள்வியை பின்வருமாறு கூறலாம். தனியார் மூலதனக்குவியலின் இயக்கப்போக்கானது 19 ம் நூற்றாண்டில் மாக்ஸ் கருதியது போல் தவிர்க்க முடியாதபடி ஒரு சிலரின் கைகளில் மூலதனம் திரளும் நிலைக்கு இட்டுச் செல்கிறதா அல்லது பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டி, தொழில் நுட்ப விருத்தி, அபிவிருத்திக் கொள்கைகள் போன்றவற்றின் விளைவாக அசமத்துவம் குறைக்கப்பட்டு வர்க்கங்களுக்கிடையே இணக்கநிலை உருவாகிறதா?

செல்வந்த நாடுகளில் (மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா ) மாக்சியவாதம் எதிர்பார்த்த முடிவு – அதாவது முதலாளித்துவத்தின் மரணம் – தவிர்க்கப்பட்ட போதும் அசமத்துவத்தை தோற்றுவிக்கும் ஆழ்ந்த அமைப்பு ரீதியான தன்மைகளில் போதியளவு சீர்திருத்தங்கள் இடம்பெறவில்லை என்பது Piketty ன் முடிவுகளில் ஒன்றாகும். அத்துடன் செல்வம் மற்றும் வருமானம் ஆகியவற்றின் ஏற்றத்தாழ்வுகளைத் தனியே பொருளாதாரக் கராணிகளால் விளக்கி விடமுடியாது – இவற்றின் பங்கீடு பற்றிய வரலாறு அரசியல் காரணிகளின் போக்குடன் ஆழமான தொடர்புடையது என்பதும் அவரது முடிவுகளில் ஒன்றாகும். மேலும் Piketty ன் ஆய்வின் படி 19 ம் நூற்றாண்டுடன் ஒப்பிடும் போது 20ம் நூற்றாண்டில் குறிப்பாக 1980 களுக்கு முந்திய தசாப்தங்களில் மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பியநாடுகளிலும் வட அமெரிக்காவிலும் ஏற்றத்தாழ்வுகள் குறைவடையும் போக்குகள் நிலவின. 1900-1950 கால கட்டத்தில் இந்த நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் குறைவடையக்காரணம் அங்கு காணப்பட்ட ஜனநாயகம் மட்டும்தான் எனக்கருதுவது தவறு. உண்மையில் இரண்டு உலக யுத்தங்களும் இதற்கு உதவியுள்ளன. போர்ச் செலவின் தேவைகளும் போரின் நிர்ப்பந்தங்களும் முன்னேறிச் செல்லும் வரி அமைப்பின் – அதாவது ஒருவரின் செல்வம் மற்றும் வருமானத்திற்கேற்ப ஏறிச்செல்லும் வரி அமைப்பின்- அமுலாக்கலுக்கு வழிகோலின. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பற்றி Piketty தரும் புள்ளிவிபரங்கள் இதைத் தெளிவாக காட்டுகின்றன. முன்னேறிச் செல்லும் வரி அமைப்பின் முக்கியத்துவம் பற்றி கூறும் Piketty 20 ம் நூற்றாண்டின் குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கம் பெற்ற ‘சமூக அரசு ‘ பற்றியும் கூறுகிறார். 1920-1980 காலகட்டத்தில் செல்வந்த நாடுகள் தமது தேசியவருமானத்தின் கணிசமான பகுதியை சமூக மேம்பாட்டிற்கு ஒதுக்கும் கொள்கைகளைக் கையாண்டன. அரசவருமானம் 1980 கள் வரை அதிகரித்த வண்ணம் இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் சமூக ஜனநாயக சீர்திருத்தங்கள் இடம்பெற்றன. இந்தவகையில் சுவீடன் தனது தேசியவருமானத்தின் 55 வீதத்தை வரியாகப் பெற்றுக் கொண்டது. இதே போன்று பிரான்ஸ் 45-50 வீதத்தையும் பிரித்தானியா 40 வீதத்தையும் வரிகளாக வசூலித்தன. இந்த அரச வருமானத்தின் கணிசமான பகுதி கல்வி, சுகாதாரம் மற்றும் ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு தேவைகளுக்குப் பயன்பட்டது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதன் வரி தேசியவருமானத்தின் 30 வீதத்திற்கும் அப்பால் செல்லவில்லை. ஐரோப்பிய முதலாளித்துவ சமூகநல அரசுகளுக்கும் அமெரிக்க முதலாளித்துவ அரசுக்குமிடையிலான வேறுபாட்டை இது வெளிப்படுத்துகிறது. வரியைப் பொறுத்தவரை ஜப்பானும் 30 வீதத்திற்கு அப்பால் செல்லவில்லை.

ஆயினும் 1980 களிலிருந்து செல்வந்த நாடுகளில் அசமத்துவம் அதிகரிக்கும் போக்கையே காணமுடிகிறது. இது நவதாராளவாதத்தின் வருகையுடன் தொடர்புடையது. தொடரும் ஏற்றத்தாழ்வுகளின் வளர்ச்சி அரசாங்கங்கள் பின்பற்றிய தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாகும். வரிக்கொள்கையில் அடிப்படை மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. சொத்து மற்றும் வருமானம் மீதான வரிகள் செல்வந்தர்களின் நலனைப் பேணும் வகையில் அகற்றப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரின் மீது வரிப்பளுக்கள் அதிகரித்துள்ளன. இந்த வரிகள் பெரும்பாலும் நுகர்பொருட்கள் மீதான வரிகளாகவே அறவிடப்படுகின்றன. மூலதனம் மீதான அதனால் கிடைக்கும் வருமானத்தின் மீதான வரிகள் அகற்றப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின் விளைவாக ஐரோப்பிய சமூகநல அரசுகள் படிப்படியாகப் பலவீனம் அடைந்து வருகின்றன. இந்த வரிக்கொள்கைகளுடன் சமூக சேவைகளின் தனியுடமையாக்கலும் இணையும் போது உழைக்கும் மக்கள் பெரிதாகப் பாதிக்கப்படுவதையும் சமூக ஏற்றதாழ்வுகள் வளர்வதையும் தடுக்க முடியாது. Piketty ன் ஆய்வின்படி செல்வந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ள அதேவேளை மூலதன உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளும் வருமானத்தின் வீதம் அதைவிட விகிதாசாரப்படி அதிகரித்துள்ளது. வளரும் அசமத்துவத்தின் போக்கு அமெரிக்காவில் மிகவும் தீவிரமடைந்துள்ள போதும் மற்றய நாடுகளிலும் அதே போக்குத் தொடர்வதையே Piketty ன் ஆய்வும் மற்றய ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்றன. Credit Suisse எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள 2014ம் ஆண்டு உலகச்செல்வம் பற்றிய அறிக்கையின் படி உலகின் அதியுயர் செல்வந்தர்களான ஒரு வீதத்தினர் ஏறக்குறைய 50 வீதமான சொத்துக்களின் உரிமையாளர்களாகவுள்ளனர்.

இந்தப்போக்கின் விளைவுகள் பலதரப்பட்டவை. இவற்றில் ஒன்று தனிமனிதரின் திறனை விட அவர்களின் செல்வந்தநிலையே சமூக நகர்ச்சியின் உந்துகோலாகிறது. தாராளவாதம் முன்வைக்கும் சமசந்தர்ப்பம், சமஉரிமை போன்ற சமத்துவ விழுமியங்களை அது முன்னுரிமை கொடுக்கும் பொருளாதார சுதந்திரத்தின் விளைவான போக்குகள் நடைமுறையில் அர்த்தமற்றவையாக்குகின்றன. ஒருவரின் திறனை விட அவரின் செல்வந்த அந்தஸ்தே பலரைப் பொறுத்தவரை சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த உதவுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை Piketty தருகிறார். அமெரிக்காவின் முதல்தரப் பல்கலைகழகங்கள் எனக் கருதப்படுபவைகளுக்கு அனுமதி பெறுவோரின் சமூக-பொருளாதார பின்னணியைப் பார்க்குமிடத்து பெற்றோரின் வருமானமே ஒரு பிள்ளை ஹாவாட் (Harvard) போன்ற பல்கலைக்கழகத்திற்குச் செல்வதை நிர்ணயிக்கிறது. இத்தகைய பிரபல்யம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகத்தில் தமது பிள்ளைகள் அனுமதி பெறுவதற்காகப் பெற்றோரும் அப்பல்கலைக்கழகத்திற்கு பெருந்தொகையான நன்கொடையை வழங்குகிறார்கள். அத்துடன் இத்தகைய பல்கலைகழகங்கள் அறவிடும் கட்டணங்களும் பெருந்தொகையாகும். இந்தப் பெற்றோர் அமெரிக்க சமூகத்தின் அதியுயர் வருமானம் பெறும் இரண்டு வீதத்தினரில் அடங்குவர். ஆகவே திறனுக்கு முதலிடம் எனும் முதலாளித்துவ ஜனநாயகக் கோட்பாடு நடைமுறையில் பல மட்டங்களில் மீறப்படுகிறது. திறன் எனப்படும் தகைமையைப் பெறுவதற்குப் பலவளங்களும் வசதிகளும் வேண்டும். அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

உயர்கல்வியைப் பொறுத்தவரை பிரித்தானியாவிலும் இந்த நிலையே. மற்றய ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்விக்கட்டணங்கள் குறைவாக உள்ளன அல்லது முற்றாக இலவசக்கல்வி வசதிகள் இன்னும் தொடர்கின்றன. உதாரணத்திற்கு ஸ்கண்டிநேவிய நாடுகளில் பல்கலைகழகம் வரை இலவசக்கல்வி நிலவுகிறது. ஆயினும் இந்த நாடுகளில் செல்வப் பங்கீட்டின் ஏற்றத்தாழ்வு தொடர்ந்து வளர்கிறது. வரிஅமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. செல்வந்தநாடுகளின் சிக்கலை தரவுகளுடன் வெளிக்காட்டும் Piketty முன் வைக்கும் தீர்வுதான் என்ன? 1930 களிலிருந்து 1970கள் வரை இந்த நாடுகளில் நிலவிய சமத்துவத்திற்கு சார்பான சிந்தனை, ஆர்வம் மற்றும் கொள்கை வகுப்புமுறை போன்றவற்றிலிருந்து விலகியதன் விளைவே இன்றைய அதீத அசமத்துவத்திற்கான காரணம். மீண்டும் அசமத்துவத்தைக் குறைக்கும் வரித்திட்டத்தின் அவசியத்தை முன்வைக்கிறார். அதியுயர் வருமானம் பெறும் 0.5-1 வீதத்தினருக்கு 80 வீத வருமானவரியை விதிப்பது பல வழிகளில் நியாயமானது அது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காது அதேவேளை ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கும் உதவும் எனக் கருதுகிறார் Piketty. அதியுயர் வருடாந்த வருமானம் எனும் போது அமெரிக்காவில் அது USD 500,000-1,000,000 க்கு மேற்பட்டதைக் குறிக்கும். இத்தகைய கொள்கை மாற்றம் ஏற்பட ஒரு அதிர்ச்சி அனுபவம் இடம் பெறவேண்டும் என அவர் கூறுகிறார். அவர் முன்மொழியும் இன்னுமொரு முக்கிய ஆலோசனை உலக ரீதியில் மூலதனத்தின் மீது 0.1 வீத வரிவிதிக்கப்பட வேண்டும் என்பதாகும். இதன் நடைமுறைச் சாத்தியப்பாடு பற்றிய சவால்களையும் அவர் குறிப்பிடுகிறார்.

சுருங்க கூறின் Piketty தரும் தீர்வு சமூக ஜனநாயகத்தின் (social democracy ன்) மீள் கண்டுபிடிப்பு எனலாம் – இதுவே உலக முதலாளித்துவத்தை மனிதநலனுக்கு உதவும் வகையில் சீரமைக்க உதவும் என்பது அவரது தீர்க்கமான முடிவு. இந்தப்பாதையை இப்போது வளர்ச்சி பெற்று வரும் தெற்கத்திய முதலாளித்துவ நாடுகள் தேர்ந்தெடுக்குமா என்ற கேள்வியும் அவரது நூலில் அடங்குகிறது. Piketty ன் நூல் பற்றிப் பல விமர்சனங்கள் உண்டு. விசேடமாக மாக்சிய ஆய்வாளர்கள் அவரின் ஆய்வின் பயன்பாட்டை வரவேற்கும் அதேவேளை மூலதனம் பற்றி அவர் கையாண்டுள்ள அணுகுமுறையையும் மாக்ஸ் தனது நூலில் (மூலதனம்) முன்வைத்து விளக்கியுள்ள இலாப வீதத்தின் வீழ்ச்சிப் போக்கு எனும் கோட்பாடு பற்றி Piketty கொண்டுள்ள தப்பான விளக்கம் பற்றியும் விமர்சித்துள்ளனர். அத்துடன் Piketty ன் ஆய்வில் முதலாளித்துவம் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் சிக்கல்கள் பற்றி எதுவும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். Stiglitz ம் Piketty யும் அவர்கள் ஆராய்ந்துள்ள சமூகங்களின் அதிகார உறவுகள் பற்றி ஆழமாகப் பார்க்கவில்லை என்பதையும் குறிப்பிடலாம். இவையெல்லாம் வேறாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.

முதலாளித்துவம் சுயஅழிவுப் பாதையில் செல்கிறதா? ஒரு குறிப்பு

இந்தக் கேள்வி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் இன்று உலக ரீதியில் பரந்து ஆழப்பதிந்து இயங்கும் ஒரே ஒரு அமைப்பாக இருக்கிறது முதலாளித்துவம். முன்னர் முதலாளித்துவத்தை நிராகரித்த சீனா இன்று முதலாளித்துவப் பாதையில் தீவிர வளர்ச்சியைக் கண்டுள்ளது மட்டுமன்றி பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் மேற்கத்தைய பொருளாதாரங்களை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்று அமைப்பு எனக்கருதக் கூடிய ஒரு நாடு கூட இல்லாத இன்றைய காலகட்டத்தில் இப்படியும் ஒரு கேள்வியா? இது நியாயமாகப் படலாம். ஆனால் கேள்வி மாற்று அமைப்போ புரட்சியின் சாத்தியப்பாடோ பற்றியதல்ல. இருக்கும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான சிக்கல்கள் பற்றியது. மாற்று அமைப்புத் தோன்றாநிலையில் முதலாளித்துவம் ஒரு மீளமுடியாத நீண்ட கால வியாதிக்குள்ளான ஒரு நோயாளியின் நிலையில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதற்கு ஆதாரங்கள் உண்டு. ஒருபுறம் இந்த ஆதாரங்கள் இயற்கையின் மிதமிஞ்சிய பண்டமயமாக்கலின் விளைவான இயற்கையின் அழிப்புடனும் அத்துடன் இணைந்த சூழலின் சீரழிவுடனும் தொடர்புள்ளன. இந்தப் பார்வையில் உலகின் எதிர்காலத்தை நோக்குமிடத்து துரித கதியில் வளர்ச்சி பெற்று செல்வத்தைக் குவித்து வரும் புதிய வல்லரசுகள் முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான வெற்றியின் சாத்தியப்பாட்டின் ஆதாரங்களா அல்லது முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் கட்டவிழ்த்து விடும் அழிப்பு சக்திகளின் துரிதமயமாக்கலின் உதாரணங்களா என்ற கேள்வி எழுகிறது. மாக்சியப்பார்வையில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஒரு ஆக்கரீதியான பரிமாணம் இருக்கும் அதேவேளை ஒரு அழிப்பு ரீதியான பரிமாணமும் உண்டு. இந்த இரண்டில் பின்னையதின் விளைவுகள் உலக ரீதியில் பல நூற்றாண்டுகளாகக் குவிந்துள்ளன. எழுந்து வரும் முதலாளித்துவ நாடுகள் பின்பற்றும் கொள்கைகள் இவற்றை மேலும் மோசமாக்கக் கூடும். இது ஒரு நியாயமான கணிப்பு.

மறுபுறம் செல்வந்தநாடுகளின் நிலைமைகள் முதலாளித்துவத்தின் மையமாகத்திகழ்ந்த பகுதியில் இடம் பெறும் தொடர்ச்சியான பொருளாதார சிக்கல்களுக்கு விடிவே இல்லைப்போலும் எனும் முடிவுக்கு இட்டுச்செல்கின்றன. இந்த வகையில் இந்தக் கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள விடயங்களுடன் தொடர்புடைய மூன்று பிரச்சனைகள் பற்றிய விமர்சன ரீதியான மாற்றுப் பார்வையைக் கணக்கிலெடுத்தல் அவசியம். செல்வந்த நாடுகளின் பொருளாதாரங்களின் தொடர்ச்சியான மந்தநிலை, இந்த நாடுகளின் அரசுகளின் முடிவின்றி ஏறிச் செல்லும் கடன்பளு மற்றும் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமிருக்கும் செல்வம் மற்றும் வருமானத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஆகிய மூன்றும் முதலாளித்துவத்தின் ஆழமான வியாதியின் வெளிப்பாடுகள். இந்தக் கருத்தை முன்வைப்பவர்களின் ஒருவரான Wolfgang Streek சமீபத்தில் New Left Review எனும் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இன்று முதலாளித்துவம் எதிர்கொள்ளும் சீர்கேடுகளுக்கு அந்த அமைப்பிடம் மாற்று மருந்துகள் இல்லை எனும் கருத்துப்பட வாதாடுகிறார். இந்த நோக்கில் Stigliz மற்றும் Piketty போன்றோர் முன்வைக்கும் சீர்திருத்தங்கள் நீண்ட காலப் பயன்தரவல்லவை அல்ல என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்.

அப்படியானால் சமூகமாற்றத்திற்கான தீர்க்கமான அரசியல் ரீதியான அறிகுறிகள் இல்லாத நிலையில் முதலாளித்துவத்திற்கு என்ன நடக்கும் ? இந்தக் கேள்வி 1848 ல் மாக்ஸ்- ஏங்கல்ஸ் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் வரும் ஒரு வசனத்தை நினைவூட்டுகிறது. இதுவரையிலான மனித சமூகத்தின் வரலாறு வர்க்கப்போராட்டங்களின் வரலாறே எனக்கூறும் அவர்கள் இந்தப் போராட்டங்களின் முடிவு பற்றிக் கூறும் கருத்தின் ஒரு பகுதியையே நம்மில் பலர் நினைவு வைத்திருக்கிறார்கள். அதன் மறுபகுதி இங்கு பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். வர்க்கப்போராட்டங்களின் முடிவு ஒன்றில் சமூகத்தின் புரட்சிகர மாற்றமாயிருக்கும் அல்லது முரண்படும் வர்க்கங்களின் பொதுவான அழிவாயிருக்கும் என மாக்ஸ்- ஏங்கல்ஸ் கூறுகிறார்கள். போராட்டங்கள் தனியே வர்க்கப்போராட்டங்கள் இல்லை எனும் கருத்தைக் கொண்டவன் நான். ஆயினும் இங்கு மாக்சும் ஏங்கல்சும் குறிப்பிடும் பொதுவான அழிவு (Common ruin) எனும் கருத்து இன்றைய உலக நிலைக்குப் பொருத்தமாக இருக்கலாம்- இந்தக் கூட்டான- சகல மக்களின்- அழிவு என்பதை அவர்களின் நலன்களின் தோல்வி எனும் அர்த்தத்தில் பார்ப்பது பயன்தரும். இதை தவிர்ப்பதற்கான வழி பற்றிய தேடல்களும் மாற்று அமைப்பு பற்றிய மீள்கற்பிதங்களும் பல மட்டங்களில் இடம் பெறுகின்றன. இவை புதிய பாதைகளைத் திறக்க உதவும் எனும் நம்பிக்கையை இழக்காதிருத்தல் வரலாற்றின் நிர்பந்தமெனலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *