1980 களில் தமிழ் இலக்கியம் ஒரு புதிய முனைப்பை சந்தித்தது. மேற்கத்திய நாடுகளில் புகலிடம் கோரிக்குவிந்த தமிழர்களிடமிருந்து பிறந்தது அந்த முனைப்பு. அது ஒரு புதிய மரபின் வருகையை அறிவித்தது. அந்த மரபை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம் என அழைத்தோம். பின்னோக்கிப் பார்க்கும் போது அதன் ஆரம்ப கால வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. 1989 ல் ஐரோப்பாவில் வாழ்ந்த தமிழ் அரசியல் இலக்கிய ஆர்வலர்களின் உழைப்பின் விளைவாக முப்பதுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. அதே ஆண்டில் ஒஸ்லோவில் சுவடுகள் குழுவினர் “துருவச்சுவடுகள்” எனும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டனர். “சுவடுகள்” அப்போது ஒரு மாத சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. அதே ஆண்டு மார்கழி மாதத்தில் மேற்கு பேர்லின் நகரில் ஆறாவது இலக்கியச் சந்திப்பு கோலாகலமாக இடம்பெற்றது. அந்த இலக்கியச்சந்திப்பில் பங்குபற்றி உரையாற்றும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அந்த மேற்கு பேர்லின் நிகழ்ச்சியை நினைவு கூரும் போதெல்லாம் அங்கு இடம் பெற்ற கலந்துரையாடல்களும் விவாதங்களும் என மனதிற்கு மட்டுமின்றி ….
சர்வதேச நிலைமைகளும் பலவிதமான அரசியல் சமூக இயக்கங்களும் விவாதிக்கப்பட்டன. மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மண்டபத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல விதமான கருத்துப்பரிமாறல்கள், அந்த மூன்று நாட்களும் நான் இரவு ஒரு மணிவரை நண்பர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களைப் பெற்றேன். கிழக்கையும் மேற்கையும் பிரித்து வைத்த பேரிலின் சுவர் வீழ்ந்த சில நாட்கள். இந்த நிகழ்ச்சியும் எமது கலந்துரையாடலுக்கு உந்துதலாக அமைந்தது. தமிழரின் விடுதலை, தமிழ் சமூகத்தின் எதிர்காலம் இவையெல்லாம் இலக்கியச்சந்திப்பின் விவாதப்பொருட்களாயின. புலம்பெயர்ந்த தமிழரின் இலக்கியச் செயற்பாடுகளின் புலப்பரப்பின் பாரிய பரிமாணங்கள் பற்றி பேசி வியந்தோம்.
இலக்கியச்சந்திப்புக்கள் ஐரோப்பாவில் தொடர்கின்றன. 2001 யூலையில் 28 வது சந்திப்பு நோர்வேயின் பேர்கன் நகரில் இடம்பெற்றிருந்தது. நான் அப்போது இலங்கை சென்றிருந்ததால் இச்சந்திப்பில் பங்குபற்ற முடியவில்லை. பேரிலினுக்குப் பிறகு நான் பங்கு பற்றிய இரண்டாவது இலக்கியசந்திப்பு பாரிசில் இடம்பெற்ற 27 ஆவது இலக்கியச்சந்திப்பாகும். இதில் கூட துர்அதிஸ்டவசமாக முதல் நாள் மட்டுமே கலந்து கொள்ள கூடியதாக இருந்தது. பாரிஸ் சந்திப்பு நன்றாக இருந்தது.
1989 ல் கண்டு அனுபவித்த உத்வேகத்தையும் அரசியல் விவாதங்களையும் பாரிசில் காணவும் அனுபவிக்கவும் முடியவில்லை, ஆயினும் சிலவிடயங்கள் அலசி ஆராயப்பட்டது நல்ல அறிகுறியாக இருந்தது. இலக்கிய அரசியல் தத்துவார்த்த வட்டங்களில் இன்று முக்கியத்துவம் பெறும் விடயங்கள் அங்கு கிளப்பப் பட்டன. ஐரோப்பாவில் இன்று முனைப்பு பெற்றுள்ள பின் நவீனத்துவம் சார்ந்த சில அம்சங்கள் மேலெழுந்தவாரியாக அலசப்பட்டன. அதேவேளை உலகமயமாக்கல் பற்றி நான் முன்வைத்த விடயங்கள் பற்றி இடதுசாரி நண்பர்கள் பல கேள்விகளை எழுப்பினர். புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் இன்றைய ஐரோப்பிய விவாதங்களில் ஈடுபாடுள்ள அறிவாளர்கள் உருவாகியுள்ளார்கள் என்பதை அறிந்தேன்.
இரண்டு இலக்கியச்சந்திப்புக்களில் மட்டுமே பங்குபற்றிய என்னால் இதுவரை இடம்பெற்ற 28 சந்திப்புக்கள் பற்றிய ஒரு பொதுப்பார்வையை அல்லது தொகுப்பைத் தர முடியாது. இந்த சந்திப்புகள் தொடர்ந்தது நல்ல அறிகுறி என்பதை மறுக்க முடியாது. புலம்பெயர் தமிழரின் இலக்கிய மரபின் போக்குகள் உள்ளடக்கங்களின் தன்மைகள் பற்றி ஆழ அறிந்து கொள்வதற்கு இதுவரை இடம்பெற்ற சந்திப்புக்கள் பற்றிய வரலாற்று ரீதியான ஆய்வு தேவை, இது இடம்பெறும் காலம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன்.
அதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றிய சில கேள்விகள் என் மனதில் எழுகின்றன. 1990 களின் முற்பகுதியில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் வெளியிடும் சஞ்சிகைகள் அளவு ரீதியில் அருகி வருகின்றன. நீண்ட காலமாக வெளிவந்த ‘சுவடுகள்’ போன்ற சஞ்சிகைகள் நின்றுவிட்டன. இந்த அளவு ரீதியான வீழ்ச்சி தொடர்கிறது. இதன் தன்மை ரீதியான விளைவுகள் எத்தகையவை? இந்தக் கேள்விக்கு ஒரு பொதுப்படையான பதிலைக் கொடுக்க விரும்புகிறேன். முதலாவதாக இந்த அளவு ரீதியான குறைபாடு புலம்பெயர்ந்த இலக்கியத்திற்கு இருந்து வந்த பன்முகத்தன்மைகளைக் குறுக்கியுள்ளது எனலாம். ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளியீடுகள் வந்த காலத்தில் இருந்த புவியியல் சமூகவியல் ரீதியாக பரவிய பன்முகத்தன்மையை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம் இழந்து வருகிறது போல் படுகிறது. அடுத்ததாக இந்த பன்முகப் போக்கிற்கு செழுமையையும் அடையாளங்களையும் கொடுத்த அரசியல் தத்துவார்த்த புலங்களும் இப்போது குறுகிவிட்டது எனலாம்.
மறுபுறம் இப்போது இயங்கிவரும் சஞ்சிகைகள் புலம்பெயர்ந்த சந்ததியினரின் பிரச்சனைகளைப் பற்றி ஆழப்பார்க்கும் போக்கினைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. 1980களில் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இப்போது இரு சந்ததிகளுக்கிடையிலான உறவுகள் ஒரு முக்கிய அம்சமாகிவிட்டன. இந்த உறவுகளின் அன்றாட நடைமுறைகளில், வெளிப்பாடுகளில் முரண்பாடுகள் பல. குடும்பங்களுக்குள்ளே சந்ததிகளுக்கிடையிலான முரண்பாடுகள் கலாச்சாரங்களுக்கிடையிலான முரண்பாடுகளாகி பலவிதமான உளவியல் தாக்கங்களை பிள்ளைகளின் மீதும் பெற்றோர் மீதும் ஏற்படுத்தி வருகின்றன. இது பற்றி வெளிப்படையாகப் பேசும் நிலையில் பலர் இல்லை. ஒரு சில சிறுகதைகளில் நாவல்களில் இந்தப் பிரச்சனையின் சில பரிமாணங்கள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.அது போதுமா? இலக்கியச்சந்திப்புக்கள் இத்தகைய பிரச்சனைகளுக்கு எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன?
சமூக, கலாச்சார உளவியல் பிரச்சனைகளால் அவதிப்படும் பல பெற்றோர் மதத்தின் உதவியை நாடும் போக்கினை காணமுடிகிறது. இது புரிந்து கொள்ளக் கூடியதாயினும் இந்தப் போக்கின் விளைவுகள் என்ன? எனும் கேள்வி பிறக்கிறது. பெற்றோரின் அதீத மத நம்பிக்கை பிள்ளைகளின் சமூகப்பிரச்சனைகளை தனிமனித ஆளுமையை எப்படிப் பாதிக்கின்றது? இத்தகைய கேள்விகள் சமூக ஆய்வுக்கான கேள்விகள்தான். அதேவேளை இவை புலம்பெயர்ந்த தமிழரின் வாழ்நிலையிலிருந்து பிறக்கின்றன என்பதால் ஆக்க இலக்கியத்தில் இவற்றின் பிரதிபலிப்புக்களை நாம் தேட வேண்டும்
புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் பாரிய எழுச்சிக்காலம் போய்விட்டது. அது வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்த ஒரு சந்ததியின் முதலாவது பத்துவருடங்களின் ஏக்கங்களின், தேடல்களின் ஆக்கத்திறன்களின் வெளிப்பாடு எனலாம். அதை நாம் ஒரு பொற்காலமெனக் கருதத் தேவையில்லை. அதன் அரசியல் சமூக சந்தர்ப்பத்தின் தன்மைகளை நாம் மறந்துவிடலாகாது. இப்போது அந்தக் காலகட்டம் இன்னொன்றிற்கு வழிவிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கிய மரபு பரிமாணங்களைத் தேடவேண்டும். இந்தப் பரிமாணங்களின் சில அம்சங்கள் மேலே தொட்டுள்ளேன். நமது ஆக்கத்திறனையும் விமர்சனத்தையும் மேலும் ஆழமாக நமது சமூகத்தின் முன்னே பாய்ச்ச வேண்டும். நமது சமூகத்திற்குள்ளே இருக்கும் சமூகப்போக்குகளை பிரிவாக்கங்களை நன்கு கிரகிக்க வேண்டும். சஞ்சிகைகளின் நூல்களின் வெளியீட்டு வைபவங்கள் அரங்கேற்றங்களாக அமையாது நமது சமூகத்தினை கலாச்சார ரீதியில் மறுமலர்ச்சி பெற உதவும் கற்களாக அமைய வேண்டும்.
இந்தப்பார்வையில் “பறை” எனும் புதிய சஞ்சிகையை நாம் எதிர்காலத்தில் மதிப்பீடு செய்யும் போது அது ஒரு சமூகத் தேவையை பூர்த்தி செய்ய முன்னிற்கும் வெளியீடு என்ற முடிவிற்கு வரவேண்டும் இதுவே பறையிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது. நோர்வேயில் நீண்டகாலமாக ஒரு தரமான சஞ்சிகை இல்லை அந்த வெற்றிடத்தை “பறை” நிரப்பும் என எதிர்பார்க்கிறேன்.
நவம்பர் 2001