சிங்களப் பெருந்தேசிய வாதம் – அதன் அடிப்படைகளும் மேலாதிக்கமும் (புதிய முன்னுரையுடன்)

சமுத்திரன் (April 2017)

´சிங்களப் பெருந்தேசிய வாதம் – அதன் அடிப்படைகளும் மேலாதிக்கமும்´ எனும் தலைப்பிலான கட்டுரையை 1983 ஏழாம் மாதத்தில் எழுதினேன். இதனை நூல்வடிவில் பங்களூரில் உள்ள காவியா பதிப்பகம் படிகள் குழுவுடன் சேர்ந்து வெளியிட்டது. நான் அப்பொழுது ஜப்பானில் வாழ்ந்து வந்தேன். 1982ல் டோக்கியோவில் அமைந்துள்ள அபிவிருத்தி ஆய்வு நிறுவனமொன்றிலிருந்து வந்த அழைப்பை ஏற்று கொழும்பில் நான் கடமையாற்றிக் கொண்டிருந்த அரச நிறுவனத்திடமிருந்து விடுப்புப் பெற்றுச் சென்றிருந்தேன். கட்டுரையின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல் 1983 ஜுலை மாதம் தாய்நாட்டில் இடம்பெற்ற இரத்தக் களரியே அதை எழுதத் தூண்டுகோலாகியது.

இலங்கையில் அந்த வன்செயல் சம்பவங்கள் நடந்தபோது நான் ஒரு ஜப்பானியக் கிராமத்தில் களஆய்வில் ஈடுபட்டிருந்தேன். வந்துகொண்டிருந்த  செய்திகளின் தாக்கத்தினால்  எனது  ஆய்வில் ஆர்வமிழந்தேன். அந்த நாட்களில்      டோக்கியோவிலிருந்து எனது  நீண்டகால நண்பர் நாக்காமுறா அடிக்கடி தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்புகொண்டு இலங்கை நிலைமைகள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் ஜப்பானின் பிரபலமான தென் ஆசிய ஆய்வாளர்.  1960களில் நான் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் மாணவனாயிருந்த போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுமாணிப் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்தார். சிங்களமொழியில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். அவருக்கூடாக வந்த செய்திகளும் நான் ஜப்பானிய தொலைக்காட்சியில் கண்ட காட்சிகளும் என்னை அதிரவைத்தன என்பது உண்மை.

அந்தச் செழிப்பான கிராமத்தில் நான் சில நாட்கள் எனது குடும்பத்துடன் தங்கியிருந்தேன். அங்கு வாழ்ந்த மக்கள் நம்முடன் மிகவும் அன்பாகவும் நெருக்கமாகவும் நடந்துகொண்டார்கள். அவர்களின் விருந்தோம்பலில் மூழ்கியிருந்தோம். எனது தாய்நாட்டு அரசியல் பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆயினும் தொலைக்காட்சியில் வந்த செய்திகளைப் பார்த்தபின் மிகவும் அக்கறையுடன் இலங்கையிலுள்ள எனது உறவினர் மற்றும் நண்பர்கள் பற்றிக் கேட்டார்கள். அப்போதுதான் அவர்களுக்கு இலங்கையில் பல்வேறு இனங்கள், மதங்கள் இருப்பது பற்றித் தெரியவந்தது. ´நீங்கள் சிங்களவரா தமிழரா?` எனக்கேட்டார்கள். நான் தமிழ் இனத்தவன் எனக்கூறியதும் எனக்காக வருத்தப்பட்ட அதே வேளை தொலைக்காட்சியில் இலங்கையர்களைப் பார்க்கும்போது எல்லோரும் ஒரு இனத்தவர்கள் போல்தெரிகிறார்களே எப்படி சிங்களவர், தமிழரென அடையாளம் காண்பதென வினவினார்கள். இப்படிப் பல கேள்விகள். நானும் எனது துணைவியும் எங்களால் இயன்ற விளக்கங்களைக் கொடுத்தோம்.

எனது ஆய்வினைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டுக் குடும்பத்துடன் நாம் அப்போது வாழ்ந்துவந்த டோக்கியோவிற்குத் திரும்பினேன். அங்கு திரும்பியதும் ஏற்கனவே எடுத்த முடிவின்படி கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். அப்போது நாம் நண்பர் நாக்காமுறாவின் வீட்டிற்குச் சமீபத்தில் ஒரு வாடகைவீட்டில் தங்கியிருந்தோம். அவரிடமிருந்த சில நூல்கள் எனது கட்டுரையை எழுதுவதற்குத் துணையாயிருந்தன. ஆயினும் கட்டுரைக்கு உதவக்கூடிய ஆதார நூல்கள் போதியன இல்லாத நிலையிலேயே அதனை அவசரமாக எழுதி முடித்தேன்.

இன்று ஏறக்குறைய 34 வருடங்களுக்குப்பின் அந்தக்கட்டுரையைப் பார்க்கும் போது அது எழுதப்பட்ட காலகட்ட அரசியல் பின்னணி பற்றிய ஒரு குறிப்பின் அவசியத்தை உணர்கிறேன். அத்துடன், இனிச்செய்ய வேண்டியது என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. அன்றைய அரசியல் சூழல் மற்றும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையின் மாற்றப் போக்குகள் பற்றிய எனது பார்வை தொடர்பான கேள்விகளும் வாசகர் மனதில் எழலாம். பின்னர் நான் எழுதிய கட்டுரைகளில் இலங்கை அரசின் இனத்துவ மேலாதிக்கத் தன்மைகள், விடுதலைப் போராட்டத்தின் போக்குகள் மற்றும் தமிழ் குறுந்தேசியவாதம் பற்றிய எனது விமர்சனங்களை முன்வைத்துள்ளேன். பல மாற்றங்களின் விளைவான இன்றைய நிலைமைகளுக் கேற்ப தேசிய இனப்பிரச்சனை மீள் சட்டகப்படுத்தப்பட (reframe பண்ணப்பட) வேண்டும் என்றும் வாதிட்டு வந்துள்ளேன். கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை அரசும் நாட்டின் தேசிய இனப்பிர்ச்சனையும் பல தன்மைரீதியான மாற்றங்களைக் கண்டுள்ளன. தேசிய இனப்பிரச்சனையின் இன்றைய வடிவமும் உள்ளடக்கங்களும் என்ன? ஒன்றுபட்ட இலங்கையைக் கட்டி எழுப்பும் வகையிலான அதன் ஜனநாயகரீதியான தீர்வு என்ன? எனும் கேள்விகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றைப் பார்க்க முன் சில விடையங்களைத் தெளிவாக்கவேண்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இராணுவவாதத்திற்குப் பலியாகியது. குறுந்தேசியவாதம் இராணுவவாதத்தின் கருவியாகியது. தமிழ்த் தேசியவாதம் அதன் எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் பிரதிபிம்பம் போலானது. இந்தப் பிற்போக்கான ஆபத்துப்பற்றி 1983லேயே குறிப்பிட்டுள்ளேன் என்பதைக் கட்டுரையை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.

அதேவேளை அன்று ஈழத்தமிழ் அரசியல் சூழலில் நம்பிக்கைதரும் முற்போக்குச் சிந்தனையுடைய சில குழுக்களையும் காணக்கூடியதாக இருந்தது.  இந்தப்போக்கு பற்றிய எனது அன்றைய மதிப்பீடு அதீதமானதென்பதைப் பின்னர் உணர்ந்தேன். கட்டுரையின் பின்னுரையில் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் போராட்டம் சிங்கள மக்களை எதிர்க்காத ஒன்றாய் உருவெடுத்துள்ளது என நான் குறிப்பிட்டது தவறென்பதைப் பின்னர் வந்த பல சம்பவங்களும் விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான நடைமுறைகளும் காட்டின. புலிகளின் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக் கெதிரான வன்செயல்களை நான் பல தடவைகள் கண்டித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளேன். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் தென்பட்ட முற்போக்கு ஒளிக் கீறல்கள் விரைவில் மறைந்து போயின. அன்றைய சில முனைப்புகளைக் கண்டபோது மாற்று சிந்தனையுள்ள இயக்கம் ஒன்று வளரும் அது தமிழ் குறுந்தேசியவாதத்தை நிராகரித்துப் புதிய பாதையில் போராட்டத்தை வழி நடத்தும் சாத்தியப்பாடுகள் உண்டு என எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.[1] ஆனால் அது மிகையான கணிப்பு என்பது குறுகிய காலத்தில் நிரூபணமானது. 1983ல் நான் எழுதிய கட்டுரையை இன்று வாசிப்பவர்கள் இதை மனதிற் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் எழும்போது அல்லது அது ஒரு புதிய கட்டத்தை அடையும்போது பலவிதமான கருத்தியல் போக்குகள் வெளிவருவது பொதுவான வரலாற்று அனுபவம். தமிழரின் உரிமைப் போராட்டத்திலும் இத்தகைய ஒரு கட்டம் 1970/80களில் இருந்தது. ஒரு புதிய போராட்டப் பாதையின் தேடலுக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் ஏற்கனவே பலம் பெற்றுவிட்ட கருத்தியல் போக்குகளும் வர்க்க நலன்களும் மற்றும் பிராந்திய அரசியலின் தாக்கங்களும் இந்தத் தேடலை நசுக்குவதில் அல்லது திசைமாற்றுவதில் வெற்றி பெற்றன. மக்கள்தான் வரலாற்றைப் படைக்கிறார்கள் ஆனால் அவர்கள் தாமே தேர்ந்தெடுத்த சூழலில் அல்லாது (அதற்கு மாறாக) வரலாறு ஏற்கனவே கையளித்த நிலைமைகளிலேதான் அதைச் செய்கிறார்கள். இந்த மாக்சிய அறிவுரை மீண்டும் நினைவுக்கு வருகிறது. இது பற்றிப் பின்னர்.

முழுமையாகப் பார்க்குமிடத்து 1983ல் சிங்களப் பெருந்தேசியவாதம் பற்றி நான் முன்வைத்த வரலாற்றுரீதியான விளக்கங்களும் வாதமும் நியாயமானவை என்பதைப் பின்னைய வரலாறும் ஆய்வுகளும் காட்டியுள்ளன. அதேபோன்று காலனித்துவத்துக்குப் பின்னர் இடம்பெற்ற இலங்கை அரசின் நிர்மாணம் பற்றி நான் கூறிய கருத்துக்களும் நியாயமானவை என்பதைப் பின்னர் வந்த ஆய்வுகள் காட்டுகின்றன. ஆயினும் சிங்கள மக்கள்மீது பெருந்தேசிய இனவாதக் கருத்தியலின் மேலாட்சி (hegemony) பற்றிய கோட்பாட்டுரீதியான விளக்கம் மேலும் சற்று விரிவுபடுத்தப்படவேண்டும். கிராம்சியின் hegemony எனும் பதத்திற்கு தமிழில் மேலாட்சி எனும் சொல்லே ´மேலாதிக்கம்´ என்பதைவிடப் பொருத்தமானது எனக்கருதுகிறேன். கட்டுரையில் மேலாட்சி எனும் அர்த்தத்திலேயே மேலாதிக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன்.

மேலாட்சியின் புலம் சிவில் சமூகமாகும். அது சிந்தனை மற்றும் கலாச்சாரரீதியில் மக்களின் மனங்களைக் கைப்பற்றி ஆட்சிமுறைக்கு அவர்களின் உடன்பாட்டைப் பெற பல வழிகளைப் பயன்படுத்துகிறது. மேலாட்சியைக் கட்டமைக்கும் திட்டத்தில் புத்திஜீவிகளுக்குப் பிரதான பங்குண்டு. பல்வேறு மட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள், தொடர்பு சாதனங்கள், தொழிற் சங்கங்கள், அரசியல் கட்சிகள், மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் போன்றவைக்கூடாக மேலாட்சி செயற்படுகிறது. இந்த வழிகளுக்கூடாக மேலாட்சியைத் தொடர்ச்சியாக மீள் உற்பத்தி செய்ய ஆளும் வர்க்கம் அல்லது ஆளும் வர்க்கக் கூட்டு தன்னிடமுள்ள வளங்களைப் பயன்படுத்துகிறது. ஆட்சியின் சமூகரீதியான ஏற்பினைப் பலப்படுத்தும் நோக்கில் பொருளாதார மற்றும் சமூக நலன் சார்ந்த சில உரிமைகளை வழங்க ஆட்சியாளர் சம்மதிப்பர். இது அரச அதிகாரத்தின் மென்மையான பரிமாணமாகும். இதற்குப் பின்னால் அரசின் பலாத்கார இயந்திரம் இயங்குகிறது. மக்களின் அணிதிரண்ட எதிர்ப்பினால் மென்மையான அதிகார இயந்திரம் தோல்வியடையும் போது பலாத்கார இயந்திரம் தன் பணியைச் செய்கிறது.

கருத்தியலின் மேலாட்சி எனும்போது அது எப்போதும் நூற்றுக்கு நூறு வீ தம் என்பதாகாது. சிங்கள மக்கள் அனைவரும் ஒரே அளவிற்கு எப்போழுதும் பேரின தேசிய வாதத்தின் மேலாட்சிக்கு உட்படுகிறார்கள் என்பதல்ல. ஆயினும் இந்த நாடு சிங்கள பௌத்தர்களாகிய நமது நாடு. நாமே இந்தத் தீவின் சொந்தக்காரர்கள். மற்றவர்கள் வெளியார் போன்ற கருத்துக்கள் பெரும்பாலாரிடம் ஆழப் பதிந்திருப்பதைக் காணலாம். (நவீ ன சிங்கள பௌத்த கூட்டு அடையாளத்தின் உருவாக்கத்தின் வரலாற்று கட்டங்களை கட்டுரையில் சுருக்கமாக விளக்கியியுள்ளேன்.) இந்தக் கூட்டு உணர்வு தமது பாதுகாப்பிற்காக ´மற்றவர்களை´ அரசு நசுக்குவது நியாயமானதே என நம்பவைக்கிறது. ஆனால் அந்த சமூகத்திற் குள்ளிருந்து எதிர்ப்பு, அதாவது எதிர்மேலாட்சி (counter-hegemony), இயக்கம் அறவே இல்லையெனக் கருதுவது தவறு. சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான முற்போக்கு சக்திகள் அந்தச் சமூகத்திற்குள் இருந்தன, இருகின்றன. அவை நம்பிக்கை தருவனவாயிருப்பினும் இதுவரை பலவீ னமான நிலையிலே உள்ளன. ஆயினும் ஒரு மெல்லிய counter-hegemonic போக்கு இன்றைய சிங்கள சமூகத்தில் சிலமட்டங்களில் இருப்பதை மறுக்கமுடியாது.

மேலாட்சியின் தொடர்ச்சியான மீளுற்பத்திக்கு மோசமடைந்து செல்லும் சமூக, பொருளாதார பிரச்சனைகள் தற்காலிக அல்லது நீண்டகாலத் தடைகளைப் போடலாம். உதாரணமாக, தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் அடிப்படை உரிமைக் கோரிக்கைகள், ஏறும் வாழ்க்கைச் செலவுக்கெதிராக பொது மக்களின் கோரிக்கைகள், இவை தொடர்பான போராட்டங்கள், குடும்ப ஆட்சி மற்றும் ஊழலுக்கெதிரான பிரச்சாரங்கள் போன்றவை. இத்தகைய எதிர்ப்புக்கள் எதிர்மேலாட்சி இயக்கத்திற்கு உதவுமா இல்லையா என்பது அவற்றின் அரசியல் தலைமையிலேயே தங்கியுள்ளது. குறிப்பிட்ட பொருளாதார அல்லது சமூகப் பிரச்சனைக்குத் தீர்வு கோரும் தனிமைப்பட்ட போராட்டங்களால் பலமிக்க மேலாட்சிக் கருத்தியலை கீழிறக்க முடியாது. அத்தகைய போராட்டங்களை ஒரு எதிர்மேலாட்சிச் சிந்நதனையால் உணர்வுபூர்வமாக இணைக்க வேண்டும். இதைச் செய்யும் ஆற்றல் உள்ள ஒரு அரசியல் இயக்கம் வேண்டும்.

ஒரு தனிமனிதரின் அன்றாட வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் அவரின் இனத்துவ அடையாளத்தையும் விட மற்றைய கூட்டு அல்லது தனி அடையாளங்கள் முக்கியத்துவம் பெறுவது இயல்பு. உதாரணமாக, அவரின் வர்க்கமும் அது சார்ந்த கூட்டு அடையாளமும், தொழிலால் வரும் அடையாளம், வயது, பால், சாதி, பிரதேசம் போன்றவை. ஆயினும் இனத்துவ வாதம் மேலாட்சி நிலையில் இருக்கும் சமூகத்தில், அரசியலும் அரசும் இனத்துவமயப்படுத்தப்பட்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினர் சந்தேகத்துக்குரிய ‘மற்றையவர்’களாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், சோதனைச் சாவடிகளில் தனி மனிதரின் இனத்துவ அடையாளமே கவனிக்கப் படும் காலத்தில், இனத்துவ உணர்வின் பிடியிலிருந்து மனித உறவுகள் தப்பிக் கொள்வது சுலபமல்ல.

இன்று உள்நாட்டுப்போர் இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு எட்டு வருடங்களாகின்றன. இப்பொழுது பின்நோக்கிப் பார்க்கும்போது பல விடயங்கள் மேலும் தெளிவாகத் தெரியலாம். முதல், 1983ல் எழுதப்பட்ட கட்டுரையுடன் தொடர்புடைய சில விடயங்களைப் பார்ப்போம். அதற்குப் பின்னர் எதிர்கால நோக்கில் தேசிய இனப்பிரச்சனை பற்றிப் பார்ப்போம்.

அன்றைய அரசியல் சூழல் பற்றி

 1977ல் ஆட்சிக்குவந்த UNP அரசாங்கம் நவதாராளப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தது. மறுபுறம் இதே காலகட்டத்தில் தேசிய இனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல் கொள்கையையும் அதே அரசாங்கம் முன்னெடுத்தது. முன்னையது இலங்கையில் அதுவரை பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கையிலிருந்து விடுபட்டு ஒரு புதிய கொள்கைப் போக்கிற்கு வழிவகுத்தது. அதாவது 1970களில் உலகரீதியில் சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தாராளமயமாக்கல் (economic liberalisation) கொள்கையை இலங்கையின் UNP அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. பின்னையது ஏற்கனவே சிக்கலாக்கப்பட்ட ஒரு நீண்டகால அரசியல் பிரச்சனையை இராணுவமயமாக்கலுக்கூடாகத் தொடரும் அத்தியாயத்தின் ஆரம்பமாகியது.

கொள்கைரீதியிலும் நடைமுறையிலும் இவ்விரு போக்குகளுக்கிடையே முரண்பாடுகள் எழுந்தன. ஓன்று சுயபோட்டிச்சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி அரசு பொருளாதாரத்தில் தலையிடாது சந்தையின் சுதந்திரத்தைப் பேணிப் பலப்படுத்தும் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். மற்றது இராணுவமயமாக்கலுக்கு உதவும்வகையில் அரசு பொருளாதார வளங்களை ஒதுக்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. இது அரசைப் பொருளாதாரத்தில் தலையிட நிர்ப்பந்திக்கிறது. இந்த முரண்பாட்டுப் போக்கினை நாம் நேரிலேயே கண்டு அனுபவித்துள்ளோம். இவ்விரண்டு போக்குகளும் பின்னிப்பிணைந்தன. ஒரு பாரிய போர் பொருளாதாரம் உருவாகி வளர்ந்தது. பின்னர் 1990களில் அமெரிக்காவின் தலைமையில்  கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ இலங்கை ஆட்சியாளர்களின் போர்க் கொள்கைக்கும் சாதகமாயிருந்தது. நவதாராள பொருளாதார உலகமயமாக்கலும் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகரீதியான போரும் சகவாசிகளாயின.

1979ல் ஜயவர்த்தன தனது உறவினரான இராணுவ அதிகாரி ´Bull´ வீ ரதுங்கவை ஒரு கட்டளையுடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். அதுதான்: பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துவிட்டபின் திரும்பவும் என்பதாகும். அதன் விளைவு ஒரு நீண்ட உள்நாட்டுப் போரானது. அந்தப்போரில் இரு சாராரும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். இலங்கை அரசின் இராணுவமயமாக்கலுடன் பொருளாதாரத்தின் இராணுவமயமாக்கலும் தொடர்ந்தது. நவதாராளக் கொள்கைக்கும் உள் நாட்டுப்போருக்கு மிடையிலான உறவு பற்றிப் பிறிதொரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.[2] இங்கு தேசிய இனப்பிரச்சனையை நேரடியாகப் பாதித்த வேறு சில விடயங்கள் பற்றிக் குறிப்பிடுதல் அவசியம்.

1970களில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் தலைமைக்கும் தீவிரவாதப் போக்கு இளம் சந்ததியினருக்குமிடையே முரண்பாடுகள் வலுத்தன. இந்த முரண்பாடுகள் ஏற்கனவே தமிழ் சமூகத்தில் மேலாட்சி நிலை பெற்றுவிட்ட குறுந்தேசியவாதத்தின் கருத்தியல் எல்லைகளுக்குள்ளேயே இடம்பெற்றன. இந்தக் கருத்தியல் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் தனித்துவம் மற்றும் அவர்களின் அபிலாஷைகள் போன்றவற்றை மதிக்கவில்லை. அதேவேளை சில தமிழ் இளைஞர் குழுக்கள் பரந்த சிந்தனைகளைத் தேடின. இந்தக் குழுக்களைச் சார்ந்த பலர் இடதுசாரியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டனர். இவர்கள் மாக்சிசம் பற்றி, புரட்சி மற்றும் தேசியவிடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிய ஆர்வம் காட்டினர். இவை பற்றி மற்றும் சர்வதேச அரசியல் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் இடதுசாரிகளுடன் கலந்துரையாட விழைந்தனர். இந்தப் போக்கு என்போன்றவரின் கவனத்தை ஈர்த்தது. இத்தகைய ஆர்வம் மிகுந்த போக்குத் தமிழ் அரசியலில் ஒரு முற்போக்கான திருப்பத்திற்கு இட்டுச்செல்லக்கூடும் என அப்போது தோன்றியது. இப்போது பார்க்கும் போது அது ஒரு தப்புக் கணக்கென்பது தெளிவாகிறது. ஆனால் அன்றைய சூழலில் அது ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.

துரதிஷ்டவசமாக தேசிய இனப்பிரச்சனையின் ஜனநாயகரீதியான தீர்வுக்கான கொள்கை ஒன்றினைத் தெளிவாக வரையறுத்து அதன் அடிப்படையிலான ஒரு போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் நிலையில் ஒரு இடதுசாரி அமைப்பும் இருக்கவில்லை. ஆனால் முன்னொருகாலத்தில் இலங்கையின் இடதுசாரி இயக்கம் இனங்களின் சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்தது என்பதை மறந்துவிடலாகாது. 1935ல் தோன்றிய சமசமாஜக் கட்சி (LSSP)யும் அதில் 1939ல் ஏற்பட்ட பிளவின்விளைவாக 1943ல் உருவாக்கப்பட்ட இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியும் 1960 வரை இனவாதத்தை எதிர்த்து நின்றன. 1944ல் கொம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர இலங்கையை ஒரு பல்தேசிய அரசாகக் (mullti-national state ஆக ) கட்டியெழுப்ப வேண்டுமெனும் கொள்கையைக் கொண்டிருந்தது.

1944ம் ஆண்டு தேசிய இனப்பிரச்சனை பற்றி இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்த செயல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:[3] இலங்கையில் எளிதில் காணவல்ல இரண்டு தேசியங்கள் (nations) உள்ளன. அவையாவன சிங்களவர் மற்றும் தமிழர். இவ்விரு இனங்களும் தமக்கே உரிய தொடர்ச்சியான தாயகப் பிர்தேசங்களையும், தமது மொழி, பொருளாதார வாழ்வு, கலாச்சாரம், மற்றும் உளவியல்ரீதியான குணாதிசயத்தினைக் கொண்டுள்ளன. இக்காரனங்களால் இவ்விரு இனங்களும்ம், தாம் விரும்பும் பட்சத்தில் தனியான சுதந்திர அரசுகளை அமைக்கும் உரிமை உட்பட்ட, சுயநிர்ணய உரிமையைக் கொண்டுள்ளன. இங்கு தமிழர் என்பது வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழரைக் குறிக்கிறது. இலங்கையில் வாழும் இந்தியர்கள் இலங்கையைத் தமது நிரந்தர வதிவிடமாகக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு மற்றைய சமூகத்தவருக்குச் சமமான பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என அதே முன்மொழிவு கூறுகிறது. அதே ஆண்டில் கட்சியின் பொதுக் காரியதரிசியாயிருந்த பீட்டர் கெனெமனும் அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான வைத்தியலிங்கமும் பூரண சுதந்திரமடைந்த இலங்கையில் சமஷ்டியின் அடிப்படையில் ஒரு பல்தேசிய அரசை உருவாக்கவேண்டும் எனும் செயல் திட்டத்தையும் முன் மொழிந்தனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. அன்றைய கட்சியின் பார்வையில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அடைந்துள்ள பகுதிகள் சிங்கள மக்களின் பாரம்பரிய தாயகத்திலேயே உள்ள போதிலும் அந்த அபிவிருத்திக்குத் தமிழர்களும் மற்றய சிறுபான்மையினரும் பங்களித்துள்ளார்கள். ஒரு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப இதுவும் ஒரு காரணம் எனக் கட்சி கருதியது. தேசிய இனப்பிரச்சனை பற்றிக் கட்சி அப்போது கொண்டிருந்த கொள்கை சுயநிர்ணய உரிமை பற்றி லெனின் முன்வைத்து விளக்கிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது. லெனினின் கோட்பாட்டின்படி ஸ்டாலின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைபற்றி எழுதிய கட்டுரையில் அவர் தேசியத்திற்குக் கொடுத்த வரைவிலக்கணத்தை ஒரு வழிகாட்டியாக உலகின் கொம்யூனிஸ்ட் கட்சிகள் கருதின. இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி 1944ல் வடக்கு கிழக்கு தமிழரின் சுயநிர்ணய உரிமை பற்றி கோட்பாட்டுரீதியில் விளக்கியபோது அங்கு வாழும் முஸ்லிம் மக்களின் அந்தஸ்துப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆயினும் நாட்டின் சகல இனங்களின் உரிமைகளையும் ஆதரிக்கும் கொள்கையைக் கட்சி கொண்டிருந்தது.

1950களில் கொம்யூனிஸ்ட் கட்சி வடக்குக் கிழக்கிற்கு பிரதேச சுயாட்சி எனும் தீர்வை முன்வைத்தது. LSSP நாடு பூராவும் சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம உரிமை எனும் தீர்வை முன்வைத்தது. 1948ல் மலையகத் தமிழரின் பிரஜாவுரிமையை சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் பறித்தபோது அதைத் தீவிரமாக இவ்விரு கட்சிகளும் எதிர்த்தன. அதேபோல் 1956ல் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கப்படுவதை இவ்விரு கட்சிகளும் தீவிரமாக எதிர்த்தன. பாராளுமன்றத்தில் அரசகரும மொழிச்சட்டத்திற்கு எதிராக இக்கட்சிகளின் அங்கத்தவர்கள் சிறந்த ஆழமான உரைகளை ஆற்றினர்.

ஆனால் பின்னர் இவ்விரு கட்சிகளும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி (SLFP) யுடன் கூட்டணியில் சேர்ந்து பெரும்பான்மை வாதத்திற்கு அடிபணிந்து விட்டன. இந்தக் கட்சிகளைப் பொறுத்தவரை SLFP ஒரு முற்போக்கான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்சி. அவை அந்தக் கட்சியின் ‘தேசிய’ மற்றும் அரச முதலாளித்துவம் சார்பான கொள்கையை ஆதரித்த அதே வேளை அதன் பேரினவாதத் தன்மையை காணாதவர் போல் நடந்துகொண்டன. அரசின் இனத்துவ மயமாக்கலை, அதன் பெரும்பான்மை இனமேலாதிக்கத் தன்மையை அந்தக் கட்சிகள் எதிர்க்கவில்லை.

பழைய இடதுசாரிக் கட்சிகளிலிருந்து பிரிந்து சென்ற புரட்சிகர இடதுசாரிக் கட்சிகளுக்குள் அல்லது குழுக்களுக்குள் தேசிய இனப்பிரச்சனை பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. அவை பேரினவாதத்தைத் தெளிவாக நிராகரித்தன. இந்த அமைப்புகளுக்குள் கொள்கை முடிவுகள் கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு அப்பால் என்ன செய்வது எனும் நடைமுறைப் பிரச்சனை எழுந்தவண்ணம் இருந்தது. நடைமுறையில் குறிப்பிடத்தகுந்த எதையும் ஒரு அமைப்பாலும் செய்யமுடியவில்லை என்பதுதான் வருத்தம்மிகு உண்மை. இந்த நிலைமை இடதுசாரி அமைப்புகளுக்குள் விமர்சனரீதியில் சிந்தித்து இயங்கி வந்தவர்களுக்கு அரசியல் செயற்பாட்டுப் பிரச்சனைகளைக் கொடுத்திருக்கலாம்.

இத்தகைய ஒரு பின்னணியிலேதான் தோழர் விசுவானந்ததேவன் அதுவரை தான் இயங்கிவந்த ஒரு ´மாக்சிச லெனினிச´ கட்சியிலிருந்து வெளியேறி NLFT எனும் தமிழ் ஈழ விடுதலை அமைப்பினைக் கட்டியெழுப்ப முயன்றார். அது பிளவடைந்த பின்னர் அதே நோக்கில் PLFT எனும் அமைப்பினை உருவாக்க முயன்றார். மிகக்குறுகிய துன்பியல் வரலாற்றினைக் கொண்டிருந்த NLFT/PLFTன் தோற்றத்தின் அரசியல் பின்புலமும் அவை தேசிய இனப்பிரச்சனைக்குக் கொடுத்த விளக்கமும் திறந்த விவாதத்திற்குரிய முக்கிய விடையங்களாகும். சமீபத்தில் விசுவாவை நினைவுகூரும் நோக்கில் வெளியிடப்பட்ட ஒரு நூலில் அவரின் அரசியல் முன்னெடுப்புப் பற்றி விமர்சனரீதியான மதிப்பீடுகளைச் சிலர் செய்துள்ளார்கள். நானும் அதேநூலில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன். இந்த நூல் தொடக்கி வைத்துள்ள விமர்சனரீதியான ஆய்வும் விவாதமும் தொடரவேண்டும்.[4]

பெரும்பான்மை இனத்துவக் கருத்தியல் படிப்படியாக வர்க்க அரசியலை ஆழமாக மழுங்கடித்து ஸ்தாபனரீதியில் மேல்நிர்ணய (overdetermining) பலத்தைப் பெற்றுக்கொண்டது. மறுபுறம் அதற்கெதிரான தமிழ் குறுந்தேசிய வாதம் தமிழ் மக்கள் மீது தன் மேலாட்சியை உறுதிப்படுத்திக்கொண்டது. இந்தச் சூழலில் பல்வேறு குழுக்களாகச் சிதறுண்டு போன புரட்சிகரச் சிந்தனை கொண்ட இடதுசாரிக் குழுக்கள் தனித்தனியாகத் தமது நிலைப்பாடுகளைப் பிரகடனப்படுத்துவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாத நிலையில் இருந்தன. ஒரு குறைந்தபட்ச அரசியல் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுபட்ட ஒரு முன்னணியை அமைக்க இவை முயற்சிக்கவில்லை. புரட்சி பற்றிய கருத்தியல் வேறுபாடுகளினால் இவை ஒருமுனைவாதப் போக்கில் விடாப்பிடியாக நின்றன. இத்தகைய காலகட்டத்தில் விசுவாவின் முன்னெடுப்பு ஒரு தோல்வியடைந்த எதிர் நீச்சல் என்ற முடிவுக்குவர நிர்ப்பந்திக்கப் படுகிறோம். NLFT போன்ற ஒரு இயக்கம் தோன்றுவதற்கு இலங்கையின் ´மாக்சிச – லெனினிச´ இயக்கத்தின் அரசியல் குறைபாடுகளும் ஒரு காரணம் என்பதைக் குறிப்பிடவேண்டும்.

வேறுசில தமிழீழ அமைப்புகள் தம்மை இடதுசாரிகளாக சோஷலிச ஆதரவாளர்களாகக் கூறிக்கொண்டன. இந்த அமைப்புகளில் சில இடதுசாரிகள் முக்கிய பங்குகளை வகித்தனர். ஆயினும் இவை இந்திய வல்லரசின் செல்வாக்குக்குள்ளாயின. மறுபுறம் இவையும் விடுதலைப் புலிகளின் கோர இராணுவவாதத்திற்குப் பலியாகின. இந்த இயக்கங்களின் தலைவர்களும் பெருந்தொகையான போராளிகளும் புலிகளினால் கொலை செய்யப்பட்டனர்.

பின்நோக்கிப் பார்க்கும்போது சுதந்திரமாக இயங்கவல்ல மாற்றுக் கொள்கையுடைய ஒரு இயக்கம் வளரக்கூடிய இடைவெளி 1983க்குப்பின் துரிதமாகச் சுருங்கி மறைந்தது என்பது நன்கு தெரிகிறது. தமிழரின் போராட்டம் தடுக்க முடியாதபடி ஒரு அழிவுப்பாதையில் நகர்ந்த வண்ணமிருந்தது. இடைக்கிடை இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள் தற்காலிக இடைவேளைகளாகவே இருந்தன. போராட்டமோ தொடர்ச்சியாக சர்வதேசரீதியிலும் நாட்டிற்குள்ளேயும் தன்னைத் தனிமைப் படுத்தியவாறு அதே  பாதையில் பயணித்தது.

அரச நிர்மாணம், பிரஜாவுரிமை, தேசியம்

1948ல் பிரித்தானிய காலனித்துவம் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய போது நாட்டை ஆள அது உருவாக்கிய காலனித்துவ அரசை விட்டுச் சென்றது. முழு இலங்கைத் தீவையும் ஒன்றிணைத்து தனது தேவைகளுக்கேற்ப மத்தியமயப்படுத்திய ஒரு ஆட்சியமைப்பை காலனித்துவம் கட்டமைத்தது. 1948ல் ஒரு இலங்கை அரசு இருந்தது ஆனால் நாட்டின் சகல மக்களையும் உள்ளடக்கிய ஒரு ´இலங்கைத் தேசியம்´ அல்லது நாட்டின் பல இனங்களையும் இணைக்கும் ‘இலங்கையர்’ எனும் பொது அடையாளம் இருக்கவில்லை. சுதந்திர இலங்கையில் அத்தகைய ஒரு பல்லின அல்லது பல்தேசிய ஒருமைப்பாட்டையும் பொது அடையாளத்தையும் கற்பிதம் செய்து கட்டி வளர்க்கும் வரலாற்றுத் தேவை இருந்தது. அது அப்போதைய அரசியல் வர்க்கத்தினதும் நாட்டின் முற்போக்கு சிந்தனையாளர்களினதும் பிரதான கடமையாயிருந்தது. அது நடைபெறவில்லை. அன்றைய இடதுசாரிக் கட்சிகளுக்கும் இந்தக் கடமை இருந்தது. அப்போது அவர்களிடம் நியாயமான கொள்கைகள் இருந்தன ஆனால் இயக்கபூர்வமான நடைமுறை இருக்கவில்லை.

சுதந்திரத்துக்குப்பின் தொடர்ந்து நடைபெற்றது என்னவெனில் ஒரு நவீ ன சிங்கள பௌத்த தேசியத்தின் உருவாக்கமே. இதையே ‘இலங்கைத் தேசியம்’ என சிங்களத் தேசியவாதிகளும் அரசும் பிரகடனப்படுத்துகின்றன. ஆட்சியாளர் அரசை இந்தத் திட்டத்திற்கேற்ப மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தாராள ஜனநாயகப் பாரளுமன்ற அமைப்பிற்ககூடாக அரசின் இனத்துவ மேலாதிக்கமயமாக்கலின் (ethnocratisation ன்) வரலாறாயிற்று. இந்தத் திட்டத்திற்கு உதவிய 19ம் நூற்றாண்டுக் கருத்தியல் பின்னணி மற்றும் 1956க்குப் பின் அது எப்படி நகர்ந்தது என்பது பற்றி எனது 1983 கட்டுரையில் ஓரளவு விளக்கியுள்ளேன். இங்கு மேலும் சில விடயங்களை சேர்ப்பது தகும்.

சிங்கள பௌத்த தேசிய அடையாள உருவாக்கச் செயல்முறை நாட்டின் மற்றைய இனங்களை வெளிவாரிப் படுத்தும் அதேவேளை அதுதான் இலங்கைத் தேசியம் என எல்லா இனங்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் பெரும்பான்மைவாதிகளின் கொள்கை. இது மற்றைய இனங்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் கொள்கை. அவர்கள் இதை ஏற்றுக் கொண்டால் நீண்ட காலத்தில் தமது மொழி, மத, இன அடையாளங்களை இழக்க நேரிடும். இத்தகைய நிர்ப்பந்த மாற்றத்தை – அதாவது தமது விருப்பிற்கு மாறாக பெரும்பான்மை இனத்தின் அங்கமாவதை (assimilation ஐ) – ஏற்காத இனத்தவர்கள் தமது கூட்டு அடையாளங்களுக்காகப் போராட முற்படுவார்கள். இலங்கைத்தீவில் தனிமனித அல்லது சிறு குழு மட்டத்தில் இன, மொழி, மத அடையாளங்களின் மாற்றம் ஒன்றும் புதிதானதல்ல. இது பண்டைக் காலம் தொட்டு நடைபெறுகிறது. இந்தப் போக்குத் தொடரும் என எதிர்பார்க்கலாம். அதுவல்ல பிரச்சனைக்குரிய விடயம். நடைபெறுவது என்னவெனில் பெரும்பான்மைவாத அரச மற்றும் தேசியத்தின் உருவாக்கத்தால் இனரீதியில் வெளிவாரிப் படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் இன அடையாளங்களுக்காக, கூட்டு உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்.

தாராளவாத ஜனநாயகத்தின் மறுபக்கம்

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் 1931 ஒரு முக்கிய ஆண்டெனலாம். அந்த ஆண்டு நியமிக்கப்பட்ட டொனொமோர் ஆணைக்குழு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் எனச் சிபார்சு செய்தது. அதுவரை இலங்கையின் ஜனத்தொகையின் நான்கு வீதத்தினருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. இந்த உரிமை கல்வித் தராதரம் மற்றும் சொத்துடைமை அடிப்படையிலேயே வழங்கப்பட்டது. அப்போதைய உயர்வர்க்க சிங்கள, தமிழ் தலைவர்கள் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்து நின்ற போதும் டொனொமோர் ஆணைக்குழு தனது சிபார்சைப் பலமாக முன்மொழிந்தது. அதுவரை இருந்து வந்த இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தையும் அகற்ற வேண்டுமெனவும் பல்கட்சி அரசியல் வரவேற்கப்பட வேண்டும் எனவும் தாராளவாத நோக்கில் ஆணைக்குழு சிபார்சு செய்தது. ஆயினும் ஏற்கனவே காலனித்துவத்தின் ஆட்சிமுறை இனப் பிரிவுகளை ஆழமாக்கிவிட்டது. எதுவித போராட்டமும் இன்றி (அதற்குமாறாக நாட்டின் உயர்வர்க்கத்தினரின் எதிர்ப்புக்கிடையே) வயதுவந்த இலங்கையருக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கபட்டது. டொனொமோர் யாப்பு அமுலுக்கு வந்தது.

நவீ ன முதலாளித்துவ சமூகத்தில் சர்வஜன வாக்குரிமை ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை. அது பிரஜாவுரிமைக்கு அர்த்தம் கொடுக்கும் உரிமைகளில் ஒன்று. இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இந்த உரிமை நீண்ட போராட்டங்களுக் கூடாகவே வென்றெடுக்கப்பட்டது. அதுவும் பெண்களின் வாக்குரிமைக்கான போராட்டங்கள் மிக நீண்டவை. இலங்கைக்கு அது காலனித்துவத்தின் தாராளவாதக் கருணையால் சுலபமாகவே கிடைத்துவிட்டது. அப்படிக் கிடைத்த சர்வஜன வாக்குரிமை பல்லின இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்பிற்குள் இனத்துவ அரசியலின் கருவியாக்கப்பட்டது. தேர்தல் அரசியலில் வாக்குகள்பெற இனத்துவ மற்றும் அதற்குக் கீழ்ப்பட்ட சாதி அடையாளங்கள் மற்றைய அடையாளங்களையும் – வர்க்கம், பால் போன்றவற்றையும் – விட முக்கியத்துவம் பெற்றன. ஜனத்தொகைரீதியில் ‘பெரும்பான்மை இனம் – சிறுபான்மை இனங்கள்’ எனும் வேறுபாடு நாட்டின் அரசியல் அரங்கை ஆக்கிரமித்துக் கொண்டது. பாராளுமன்ற அரசியலில் இனத்துவப் பெரும்பான்மைவாதம் சிங்களத் தேசியவாதிகளின் பலமான கருத்தியல் ஆயுதமாகியது. அளவுரீதியில் சிறுபான்மையாயுள்ள இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் பொறிமுறைகள் இல்லாத அமைப்பில் பாராளுமன்ற அரசியல் அதிகாரம் இனத்துவ மயப்படுத்தப்பட்ட எண்களின் விளையாட்டாகியது. இந்த விளையாட்டின் விதிகளை மாற்றத் தேவையான எண்களை ‘ஜனநாயக வழியில்’ பெறுவதில் பெரும்பான்மை வாதிகளுக்குப் பிரச்சனையில்லை. இது தாராளவாத ஜனநாயகத்தின் (liberal democracy ன் ) ஒரு இருள் மிகுந்த பக்கம் என்பதில் சந்தேகமில்லை.

அன்றைய காலகட்டத்தில் தாராளவாத விழுமியங்களால் ஆகர்ஷிக்கப்பட்ட பிரஜாவுரிமை, சர்வஜன வாக்குரிமை ஆகியன முற்போக்கு அம்சங்கள் கொண்டவை என்பதை மறுப்பதற்கில்லை. தனிமனித உரிமைகளைப் பொறுத்தவரையில் முன்னர் இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது இது தெளிவாகிறது. ஆயினும் தாராளவாதம் பேசும் தனிமனித சமத்துவம் மேலெழுந்த வாரியானது. அது அதிகார உறவுகளுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை. இந்த உறவுகளின் பரிமாணங்களான வர்க்கம், இனம், ஆணாதிக்கம், சாதி போன்றவற்றின் தாக்கங்களைக் கணக்கில் எடுக்காத ‘சமத்துவம்’ என்பதைக் கூறியாகவேண்டும்.

1947ல் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் அகில இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு மலையகத் தமிழரினதும் மலையகப் பகுதிகளில் பல இடதுசாரிகளினதும் வெற்றிக்கு உதவின. 95 ஆசனங்களில் D. S. சேனாநாயக்கவின் தலைமையிலான UNP 42 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியது. 10 ஆசனங்களைப் பெற்று சமசமாஜக் கட்சி இரண்டாம் இடத்தைப் பெற்றது. கொம்யூனிஸ்ட் கட்சி மூன்று மற்றும் போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சி ஐந்து ஆசனங்களையும் பெற்றன. ஏழு ஆசனங்களைப் பெற்ற G.G. பொன்னம்பலத்தின் இலங்கை தமிழ் காங்கிரசினதும் சில சுயேட்சை அங்கத்திரனரின் ஆதரவுடன் சேனாநாயக்கா சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்தார். ஆட்சி அமைத்ததும் அவர் மலையகத் தமிழரின் பிரஜாவுரிமையைப் பறிக்கும் சட்டத்தை நிறைவேற்றினார்.[5] நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் நாடற்ற கூலி அடிமைகள் ஆக்கப்பட்டனர். நாட்டின் பிரஜைகள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் கல்வி, சுகாதாரம் தொடர்பான உரித்துடைமைகள் (entitlements) எல்லாம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்ந்தும் குறைந்த கூலிபெறும் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக இலங்கையின் பொருளாதார விருத்திக்குத் தம் உழைப்பைக் கொடுத்தார்கள். இந்தச் சட்டத்தின் வருகை பாராளுமன்ற ஜனநாயகத்திற்கூடாக அடிப்படை தாராளவாத நியமங்களைக் கூட மதிக்காத ஒரு இனத்துவ மேலாதிக்கம் (Ethnocracy) உருவாகப்போவதன் அறிவிப்பு என்பதைப் பின்னைய வரலாறு காட்டியது.

மலையக மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சனைக்கு 1964ல் வந்த சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஒரு குறைபாடுமிக்க தீர்வானது. இந்த ஒப்பந்தம் பாதிக்கப்பட்ட மக்களின் பங்குபற்றலின்றி உருவாக்கப்பட்டது. அதன்படி ஏறக்குறைய 10 இலட்சம் மலையகத் தமிழரில் அரைவாசிக்கு மேற்பட்டோரை (525,000) இந்தியா ஏற்றுகொள்ளும், 300,000 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கும், 150,000 பேரின் நிலைமை பற்றிப் பின்னர் முடிவெடுக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் அமுலாக்க காலம் 15 வருடங்கள். ஆயினும் இந்தியா தனது பொறுப்பை முழுமையாக அமுலாக்கத் தவறியது. இதனால் இலங்கை அரசும் தன் பொறுப்பைப் பின்போட்டது. நீண்ட கால இழுபறிக்குப் பின் இலங்கையில் மிஞ்சியிருந்த மலையகத் தமிழருக்கு 2003ல் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. 2003 அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமாதானம் கிட்டவில்லை. போர் தொடர்ந்தது. அரசின் இனத்துவ மேலாதிக்க மயமாக்கலும் தொடர்ந்தது. 2005ல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார். விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்குத் தமிழரைத் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி நிர்ப்பந்தித்தது ராஜபக்சவின் வெற்றிக்கு உதவியது. இதைச் செய்வதற்குப் புலிகள் ராஜபக்சவிடமிருந்து பெருந்தொகையான பணத்தைப் பெற்றார்கள் எனும் செய்தி பின்னர் பகிரங்கமானது.

2009ல் ராஜபக்சவின் தலைமையில் போர் முடிவுக்கு வந்தது. புலிகளை இராணுரீதியில் முற்றாகத் தோற்கடித்த பின்னரும் ராஜபக்ச அரசாங்கம் வடக்கு கிழக்கில் பொது மக்களைக் கட்டியாள்வதற்குப் போரை மாற்று வழிகளுக்கூடாகத் தொடர்ந்தது. இராணுவ மயமாக்கல் மேலும் பலப்படுத்தப்பட்டு பொருளாதாரத் துறைகளுக்குள்ளும் பலமாக ஊடுருவியது. சிவில் நிர்வாகம் தொடர்ந்தும் இராணுவத்தின் அதிகாரத்துக்கு கீழ்ப்படுத்தப் பட்டது. புலிகளைத் தோற்கடித்த தலைவன் என ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தார். ஆனால் ராஜபக்சவின் ஆட்சி அதிகாரவாத ஆட்சியாக, ஒரு குடும்ப ஆட்சியாக, ஊழல் மிகுந்த ஆட்சியாக மாறியது. அந்த ஆட்சியில் முஸ்லிம் மக்களுக்கெதிரான வன்முறைகளும் அதிகரித்தன. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் ஆதரவு இருந்தது. மூன்றாம் முறையும் ஜனாதிபதியாகும் ஆசையில் யாப்பிலும் மாற்றத்தைக் கொண்டுவந்தார். ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்கள் முன்போட்டு 2015 ஜனவரியில் மீண்டும் வெற்றிபெறும் நம்பிக்கையில் தேர்தலில் நின்றார். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான அவரது முன்னைய சுகாதார மந்திரி சிறிசேனாவால் தோற்கடிக்கப்பட்டார். சிங்கள வாக்குகளின் பெரும்பான்மை ராஜபக்சவிற்குக் கிடைத்த போதும் தமிழரும் முஸ்லிம்களும் பெருந்தொகையில் அவருக்கு எதிராக வாக்களித்ததே அவரின் தோல்விக்குக் காரணம்.

பல்லினப் பெரும்பான்மையால் பொது வேட்பாளரான சிறிசேனா பெற்ற வெற்றியும் அதைத் தொடர்ந்து வந்த பாராளுமன்ற ஆட்சி மாற்றமும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கின. சோதனைச் சாவடிகளின் நீக்கம் மற்றும் பேச்சு, எழுத்துச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் போன்றவற்றை மக்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் கொடுத்த பல வாக்குறிதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் தடுமாறுகிறது. புதிய யாப்பினை உருவாக்கும் முயற்சி ஸ்தம்பித்துள்ளது. ராஜபக்ச தலைமையில் இயங்கும் சிங்களத் தேசியவாத சக்திகளின் எதிர்ப்பைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது. அரசின் இனத்துவ மேலாதிக்கத் தன்மையை மாற்றுவது சுலபமல்ல.

ETHNOCRACY[6] எனப்படுவது நீண்ட காலமாகச் சில நாடுகளில் இருந்து வரும் ஆட்சிமுறை (regime) பற்றி, அது எப்படி அரசைக் கையாளுகிறது என்பது பற்றி, சமீபகாலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடாகும்.[7] ஆட்சிமுறை அரசுக்கூடாகவே செயற்படுகிறது. அது தன் நோக்கங்களை அடைய அரசின் பல்வேறு நிறுவனங்களைப் பயன்படுத்துகிறது மாற்றியமைக்கிறது. இனத்துவ மேலாதிக்க ஆட்சியமைப்புப் பலவிதமானது. ஒருவகை, இனத்துவ சர்வாதிகார ஆட்சிமுறைக் கூடாக அரசைக் கையாளுகிறது. இது பலாத்கார வழிகளைப் பயன்படுத்தி இனச்சுத்திகரிப்பு, இனரீதியில் வெளிவாரிப்படுத்தல் போன்றவற்றைச் செய்கிறது. இதற்கு உதாரணங்கள் – முன்னைய Ruwanda, Serbia, 1994க்கு முன்னைய தென் ஆபிரிக்கா.

இன்னொருவகை, இனத்துவ மேலாதிக்கம் முறைசார்ந்த (formal) ஜனநாயக அமைப்புகள் உள்ள பல்லின நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்தின் செல்வாக்குள்ள வர்க்கக் கூட்டு பாராளுமன்ற வழிக்கூடாகச் சட்டங்களை இயற்றி இனத்துவ மேலாதிக்கத்தை நிலைநாட்டுகிறது. அது ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் சட்டபூர்வமான பொறிமுறைகளுக்கூடாகவே அதிகாரத்தை பெற்றுத் தன் திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறது. அரசின் இனத்துவ மயமாக்கல் பல வழிகளுக்கூடாக நடைபெறுகிறது. இந்த நடைமுறையில் பல ஜனநாயக விரோத வழிகளையும் அது பாவிக்கத் தயங்காது. ஆனால் தன் செயற்பாடுகளுக்குப் பராளுமன்ற ஜனநாயக விதிகளின்படி பெரும்பான்மையின் சம்மதத்தைப்பெற்று சட்டபூர்வமான முடிவுகளை எடுக்கும் வல்லமையுடையது. அரசின் தேசிய இறைமை, பயங்கரவாதத்தை இராணுவரீதியில் தோற்கடிக்க வேண்டிய அவசியம், ஆள்புலத்தின் பாதுகாப்பு போன்ற காரணங்களைக் காட்டி பலாத்கார அரச இயந்திரத்தைப் பலப்படுத்திப் பயன்படுத்தும் அதிகாரத்திற்கான அங்கீகாரத்தை அது பராளுமன்றில் பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பெறுவதற்குப் பெரும் தடைகள் இல்லை. இலங்கையின் இனத்துவ மேலாதிக்கம் இந்த வகை சார்ந்தது. இது பற்றி வேறொரு கட்டுரையில் (2012) மேலும் விளக்கியுள்ளேன்.[8]

ஆகவே இலங்கை அரசு ஒரு ஒற்றை ஆட்சி அரசு மட்டுமல்ல அது இனத்துவ மயமாக்கப்பட்ட, மதச்சார்புடைய, இனங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்குப் பதிலாகப் முரண்பாடுகளை கூர்மைப் படுத்தும் பெரும்பான்மை இனத்துவ அரசு. இந்த அரசின் அமைப்புரீதியான (structural) சீர்திருத்தமின்றி தேசிய இனப் பிரச்சனைக்கு ஜனநாயகரீதியான தீர்வைக் காணமுடியாது. இது, இனிச் செய்யவேண்டியது என்ன? எனும் கேள்வி எழுப்பும் சவால்களில் முக்கியமான ஒன்று. இது இலங்கையின் பல்வேறு இனங்களின் விசேடமாகச் சிங்கள மக்களின் வெகுஜன ஆதரவின்றி நடக்குமென எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. அதே போன்று தமிழர் தரப்பில் இதற்கு உதவும் வகையில் இன்றைய யதார்த்தங்களை நன்கறிந்து தேசிய இனப்பிரச்சனையை மீள் சட்டகப்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது.

தேசிய இனப்பிரச்சனையின் மீள் சட்டகமாக்கலை நோக்கிய ஒரு கலந்துரையாடலுக்கான குறிப்புக்கள்

கடந்த பல தசாப்தங்களாகத் தேசிய இனப்பிரச்சனை தன்மைரீதியான மாற்றங்களைக் கண்டுள்ளது. அரசாங்கங்களின் கொள்கைகள், இராணுவ மயமாக்கலின், நீண்ட உள்நாட்டுப்போரின் விளைவுகள், போரின் இராணுவரீதியான முடிவு, போருக்குப்பின் ராஜபக்ச அரசாங்கம் பின்பற்றிய மாற்று வழிக்கூடாகப் போரைத் தொடரும் கொள்கை போன்றவற்றின் தாக்கங்களால் தேசிய இனப்பிரச்சனையின் உள்ளடக்கங்களும் உருவமும் மாற்றமடைந்துள்ளன. இந்த யதார்த்தத்தை எதிர்கொண்டு அதை ஆழப்புரிந்து மாற்று அரசியலைத் தேடவேண்டும். வடக்கு கிழக்குத் தமிழரின் கோரிக்கைகள் அதே பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களின் கோரிக்கைகளுடனும் தொடர்புடையவை. இனரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மலையகத் தமிழரின் மற்றும் நாட்டின் தென்பகுதியில் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் ( இதில் தமிழர்கள் மற்றும் தமிழைத் தாய் மொழியாகக்கொண்ட முஸ்லிம்கள் அடங்குவர்) உரிமைகளுக்கான போராட்டமும் தேசியப்பிரச்சனையின் உள்ளார்ந்த அம்சங்கள் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். இந்தப் பல்வேறு சமூகங்களின் பிரச்சனைகளில் வேறுபாடுகள் உண்டு ஆனால் அவர்களின் உரிமைப் போராட்டங்கள் எல்லாம் இலங்கையின் முழுமையான ஜனநாயகமயமாக்கலின் அங்கங்கள்.

தேசிய இனப்பிரச்சனை உள்நாட்டுப் போராக மாறியதற்குக் காரணிகள் இருந்தன. அதே போன்று 30 வருடப் போரினால் பல விளைவுகள் ஏற்பட்டன. இந்த விளைவுகள் போரின் காரணிச் சங்கிலியுடன் (causal chain உடன்) பின்னூட்டப் போக்கினால் (feedback process) இணைந்தன. விளைவுகளும் காரணிகளாகும் போக்குத் தொடர்ந்தது, இன்றும் தொடர்கிறது. இது தேசிய இனப்பிரச்சனையை அடிப்படையாக மாற்றியுள்ளது. இந்த வகையில் சில மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

  • அடையாளம் – ஆள்புலம் இணைப்பின் (identity-territory nexus ன்) உடைப்பு அல்லது பலவீனமாக்கல்

வடக்கு கிழக்குத் தமிழரின் தாயகம் எனக் கோரப்பட்ட பிரதேசத்தின் தொடர்ச்சி மீட்க முடியாதவாறு (irreversibly) உடைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தின் இன்றைய புவியியல் 1970களில் இருந்ததைவிடப் பலவகையில் பாரதூரமாக மாறிவிட்டது. ஆள்புலத்துக்காக இரண்டு இனத்துவ தேசியவாதங்களுக்கு இடையிலான மிகவும் அசமத்துவமான போட்டியின் முடிவு அந்த ஆள்புலத்தின் பேரினமயமாக்கலே. அரச காணிகளில் குடியேற்றத் திட்டங்கள், நில அபகரிப்பு, இராணுவ வலயங்கள், பொருளாதார மாற்றங்கள், மற்றும் தமிழரின் பெருமளவிலான நிரந்தரப் புலப்பெயர்வு போன்றவற்றால் அந்தப் பிரதேசத்தின் இனக்கூறுகளின் விகிதாசாரம், நிலச் சொத்துரிமைகள், நிர்வாகக் கட்டுமானம், பௌதிக உட்கட்டுமானம், நிலத்தோற்றங்கள் அடிப்படையான மாற்றங்களைக் கண்டுள்ளன. போர்க்காலத்தில் அரச குடியேற்றத் திட்டங்களும் இராணுவமயப்படுத்தப் பட்டன. இன்று வடக்கு கிழக்கு முன்பைவிட பல்லினமயமாகியுள்ளது, பல்லினமயமாகி வருகிறது. அதேவேளை இனங்களுக்கிடையே முரண்பாடுகளும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதிகாரப் பகிர்வு பற்றிப் பார்க்கும்போது வடக்கு-கிழக்கு மீள் இணைப்பின் சாத்தியப்பாடு பற்றி மீள் சிந்திக்க வேண்டும். எனது அபிப்பிராயத்தில் இன்றைய அரசியல் புவியியல் நிலைமைகளில் மீள் இணைப்புச் சாத்தியமெனப் படவில்லை. கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் மீள் இணைப்பை ஆதரிக்கவில்லை. அங்கு வாழும் சிஙகள மக்கள் முற்றாக எதிர்க்கிறார்கள். இதுதான் இன்றைய யதார்த்தம். இதை நன்கு தெரிந்து மதிப்பது ஒரு நியாயமான அரசியல் தீர்வின் தேடலுக்கு ஆக்கபூர்வமாக உதவும் என நம்புகிறேன். அதுவே இதுவரையிலான பேரின ஆதிக்கக் குடியேற்ற மற்றும் அபிவிருத்திக் கொள்கைகள் தொடர்வதைத் தடுப்பதற்கான வழியைத் தேட உதவும்.

  • புலப்பெயர்வின் விளைவுகள்உள்நாட்டு மற்றும் சர்வதேசப் புலப்பெயர்வு வடக்கு கிழக்கின் அரசியல் பொருளாதாரத்தில், இனப்புவியியலில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. போரினால் ஏற்படும் இடப்பெயர்வுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் போர்ப்பிரதேசங்களில் அவற்றின் நீண்டகாலத் தாக்கங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியம். போரின் விளைவாக வடக்கு கிழக்கிலிருந்து தமிழரின் சர்வதேசப் புலப்பெயர்வு பெருமளவில் இடம்பெற்றுள்ளது பலரும் அறிந்ததே. அப்படிப் புலம்பெயர்ந்தவ்ர்களில் மிகப் பெரும்பான்மையினர் மேற்கத்திய நாடுகளிலேயே குடியேறியுள்ளார்கள். புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கும் தாயகத் தமிழ் சமூகத்திற்கு மிடையேயான உறவு பல அம்சங்களைக் கொண்டது. இத்தகைய உறவை டயஸ்போறா (diaspora) ஆய்வாளர்கள் நாடுகடந்த சமூகங்களின் (transnational communities ன்) உருவாக்கமாகக் கோட்பாட்டு மயப்படுத்தி உள்ளார்கள். இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே ஒரு காசாதாரப் பொருளாதாரத்தின் (remittance economy ன்) வளர்ச்சி இந்த உறவின் ஒரு முக்கிய அம்சமாயிருந்தது. இதைத் தொடர்ந்து சமூக, கலாச்சாரரீதியான சிந்தனைகளின் வருகையும், செயல் திட்டங்களும் அதிகரித்தன. இவற்றின் நன்மை, தீமை பற்றிய ஆழமான ஆய்வுகள் இல்லையாயினும் பல போக்குகளை அவதானிக்க முடிகிறது.
  • காசாதாரப் பொருளாதாரம் போர்க் காலத்தில் பல குடும்பங்களைக் காப்பாற்றியது. அதேவேளை அது புலப்பெயர்வையும் மேலும் ஊக்கிவித்தது. வடக்கிலிருந்து தெற்கிற்கும் வெளிநாட்டிற்கும் நிரந்தரமாகப் புலம்பெயரும் போக்குத் தொடர்ந்தது. தெற்கில் குறிப்பாக மேல்மாகாணத்தில் குடியேறியுள்ள வடக்கு கிழக்கு தமிழரின் தொகை அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து உதவி பெறாதோரும் கல்வி, தொழில் காரணமாகத் தெற்கிற்குக் குடியகலும் போக்கும் தொடர்கிறது. தெற்கிலே குடியேறியுள்ள தமிழரின் எதிர்காலம் தெற்குடனேயே பிணைந்துள்ளது. அவர்கள் தமது மொழியுரிமையை அனுபவிக்க, இன அடையாளங்களைப் பேணி வளர்க்கும் உரிமையைப் பெற அங்குள்ள சிங்கள மக்களின் புரிந்துணர்வையும் ஆதரவையும் பெறுதல் அவசியம்.
  • வெளிநாட்டில் குடியேறவேண்டும் எனும் ஆவல் தமிழ் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதற்கு உதவக்கூடிய கதவுகள் இப்போ மூடப்பட்டுவிட்ட போதும் வெளிநாடு செல்லப் பல இளைஞர்கள் முயற்சித்தவண்ணம் இருப்பதை காணலாம். இருக்கும் வெளி நாட்டுத் தொடர்புகள் மட்டுமன்றி வடக்கு கிழக்கு நிலைமைகளும் இளம் சந்ததியினரின் புலப்பெயர்வை ஊக்கிவிக்கின்றன.
  • காசாதாரப் பொருளாதாரம் வடக்கு கிழக்கில் குறிப்பிடத்தகுந்த சமூக-பொருளாதார வேறுபடுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பணம் பெருமளவில் வடக்கிற்குச் செல்வதால் இந்தப் போக்கு அங்கேயே பலமாகியுள்ளது. இது சொத்துடைமை மற்றும் அதிகார உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளுக்குமிடையிலான தொடர்பு ஆராயப்படவேண்டியது. இதன் புவியியல் – அதாவது பிரதேசரீதியான தாக்கங்கள் – ஆய்வுகளின் அம்சமாகவேண்டும்.
  • நுகர்வின் மட்டுமன்றி நுகர்வுவாதத்தின் அவற்றுடன் தொடர்புள்ள வாணிபத்தின் வளர்ச்சியே காசாதாரப் பொருளாதாரத்தின் தலையாய போக்காகவுள்ளது. வெளிநாட்டு பணத்தின் வருகையால் உருவான சேமிப்பு உபரி வடக்கு கிழக்கில் உற்பத்தி மூலதனமாகப் பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை. அத்தகைய முதலீட்டை ஊக்கிவிக்கும் சூழலை அரசாங்கம் உருவாக்கவில்லை.

போரினால் ஏற்பட்ட அழிவும் அரசியல் தீர்வின் தேடலும்

‘விடுதலைப் போராட்டத்திற்கு’ முன்னர் அனுபவித்த வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளைக்கூட இழந்த அவல நிலையில் பெருந்தொகையான மக்கள் சீவனோபாய உரிமைப் போராட்டங்களை நாளுக்கு நாள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று வடக்கு கிழக்கில் பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது நிலங்களுக்காக, கடல் தொழில் செய்யும் உரிமைக்காகச் செய்யும் போராட்டங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அவர்களின் உறவுகளின் போராட்டங்கள், போர் விதவைகள் சார்பில் எழும் கோரிக்கைகள், இராணுவமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் எல்லாமே போரின் விளைவுகளால் வந்தவை. இவை எல்லாம் அடிப்படை உரிமைப் போராட்டங்களே. போரின் விளைவுகள் காரணிச் சங்கிலியுடன் இணைந்து புறநிலை யதார்த்தத்தை மாற்றுவது பற்றி ஏற்கனவே கூறியிருந்தேன். இவையெல்லாம் அதன் உதாரணங்கள்.

பல இடங்களில் விசேடமாகக் கிழக்கில் நிலம், நீர் மற்றும் கடற்தொழில் தொடர்பான பிரச்சனைகள் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையிலான முரண்பாடுகளாக உருவெடுத்துள்ளன. இவற்றின் நியாயமான தீர்வுகள் நிலம், மற்றைய வளங்களின், அபகரிப்புக்கு எதிராக இருக்கவேண்டிய அதேவேளை அவற்றின் வெற்றி முன்பிருந்தே அயலவர்களாய் வாழ்ந்துவரும் இனங்களுக் கிடையிலான நல்லுறவையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதிலேயே தங்கியுள்ளது.

வடக்கு கிழக்குக்கு வெளியே, மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வதிவிட நில உரிமைக்கான போராட்டம் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. பெருந்தோட்ட அமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அவர்களின் எதிர்காலம் பற்றிக் கேள்விகளை எழுப்புகின்றன. மலையகத்தில் சிங்கள மக்களுடன் சம உரிமை பெற்றுப் பாதுகாப்புடன் வாழ்வதே அவர்களின் போராட்டத்தின் நோக்கம்.

இந்தப் பிரச்சனைகளின் நியாயமான தீர்வுகள் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வுக்கு நேரடியாக உதவும். ஏனெனில் அரசியல் தீர்வுக்கு வெளியே இந்தப் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வுகளைக் காணமுடியாது. மறுபுறம் இந்தப் பிரச்சனைகள் தனியே தமிழ் மக்களின் பிரச்சனைகள் அல்ல அவற்றின் நியாயமான தீர்வுகள் மற்ற இனத்தவர்களுடனும் தொடர்புடையன. அவை அடிப்படையில் இலங்கை அரசின் மறுசீரமைப்புடன் தொடர்புள்ள ஜனநாயக உரிமைப் பிரச்சனைகள்.

மேலே இனங்காணப்பட்ட பிரச்சனைகளின் தீர்வுகள் பற்றிப் பார்க்கும்போது அவை தவிர்க்கமுடியாதபடி வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கும் நம்மை எடுத்துச் செல்கின்றன. அது மாத்திரமன்று இவை எல்லாமே பல்லினத் தொடர்புள்ள பிரச்சனைகள். அத்துடன் இவற்றில் எந்தப் பிரச்சனையும் சிங்கள மக்களின் புரிந்துணர்வும் ஆதரவுமின்றித் தீரப்போவதில்லை.

முற்போக்கு சக்திகளின் இன்றைய கடமைகளில் ஒன்று இந்தப் பிரச்சனைகளை ஆழ ஆராய்ந்து அவற்றை மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளாக உள்ளடக்கிய ஒரு திட்டத்தைத் தயாரிப்பதாகும். இப்படிச் சொல்வது எல்லா மக்களுக்கும் ஒரே அரசியல் திட்டமோ தீர்வோ என்பதாகாது. ஒவ்வொரு மக்களின் கோரிக்கைகளுக்கான போராட்டம் மற்றைய மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு உதவ வல்லது என்பதை உறுதிபடுத்தவேண்டும். இந்தக் கோரிக்கைகள் இலங்கை அரசின் ஜனநாயகரீதியான சீர்திருத்தத்திற்கான முதற்படி. அதேவேளை இந்தக் கோரிக்கைகள் சிங்கள மக்களின் நலன்களுக்குப் பாதகமானவையல்ல, மாறாக அவர்களின் ஜனநாயகப் போராட்டத்துக்கு உதவுவன என்பதை, இலங்கை அரசின் இனத்துவ மேலாதிக்கத் தன்மையை மாற்றி அதை நாட்டின் எல்லா இனங்களையும் உள்ளடக்கிய ஒரு அரசாக்குவதன் மூலமே இலங்கையின் ஜனநாயகரீதியான மீள் ஒருங்கிணைப்பை முன்னெடுக்க முடியும் என்பதை எடுத்துக்கூறவேண்டும். இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகள் பல்லின நாடுகளே. ஒரு நவீன ஜனநாயக அரசில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசியங்களும்/ தேசிய இனங்களும் கூடி வாழ முடியும் என்பது பொதுமக்கள் மத்தியில் கலந்துரையாடப்படும் பொருளாகவேண்டும். எதிர்மேலாட்சிப் போக்கினைப் பலப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.

இதை எப்படிச் செய்வது?

இனப்பிரச்சனை என்று ஒன்றில்லை. இருந்தது பயங்கரவாதப் பிரச்சனையே. அது தீர்க்கப்பட்டுவிட்டது என நம்பவைக்கப்பட்டுள்ள பெருபான்மையான சிங்கள மக்களின் மனதை எப்படி மாற்றுவது?

அத்தகைய ஒரு மாற்றம் இல்லாதவரை, சிங்கள மக்களின் சம்மதம், ஆதரவு, பங்குபற்றல் இல்லாதவரை தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் போவதில்லை. இது ஒன்றும் புதிதாகப் பிறந்த ஞானமல்ல. பழைய செய்திதான். ஆனால் இன்று வடக்கு கிழக்குத் தமிழ்த் தரப்பிலிருந்து மீள்சட்டகமாக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சனையின் அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைப்பது சிங்கள மக்களுடன் ஒரு புதிய அரசியல் சம்பாஷணையை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. அதே போன்று முஸ்லிம் மக்களையும் மலையகத் தமிழ் மக்களையும் அணுகும் சந்தர்ப்பம் பிறக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைத் தவற விடக்கூடாது.

இதற்கு அப்பால் செல்வதற்குப் பல திறந்த விவாதங்கள், கலந்துரையாடல்கள் தேவை. அந்த நோக்கிலேயே 1983ல் வெளிவந்த கட்டுரைக்கு இந்தப் புதிய முன்னுரை எழுதப்பட்டது.

சமுத்திரன்
ஓஸ், நோர்வே
April 2017

நூலை வாசிக்க  அல்லது தரவிறக்கம்  செய்ய கீழூள்ள இணைப்பை அழுத்துக!

[1] 1977-1982 காலகட்டத்தில் வடக்கில் சில இளைஞர் குழுக்களில் முகிழ்த்த முற்போக்குத் தன்மை கொண்ட அரசியல் ஆர்வத்தை அவதானித்து வந்தேன். அந்தக் காலத்தில் அது பற்றி சிங்கள இடதுசாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் கட்டுரைகள் எழுதினேன். உதாரணமாக – Samudran, Growing Radicalism and Sri Lanka´s Left, Lanka Guradian, Vol.2, No.7. August 1. 1982;

Samudran, Tamil Radicalism 2 – Land Colonization: A military Strategy, Lanka Guradian, Vol. 5, No.9, September 1. 1982. பின்னர் குறுந்தேசிய வாதம் இராணுவாதம், போராட்டத்தின் திசைதிருப்பல் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். இவை Tamil Times (London) , Lanka Guardian (Colombo), Pravada (Social Scientists´Association, Colombo) போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்தன. உதாரணமாக: N. Shanmugaratnam, Tamil People´s Struggle in Crisis – The challenge of transcending narrow nationalism and militarism, Tamil Times, 15 January 1993. இந்தக் கட்டுரை அதே காலத்தில் Lanka Guardian இலும் பிரசுரமாகியது.

[2] இது பற்றி 1983 கட்டுரையின் முன்னுரையில் எழுதியுள்ளேன். சமீப கால நிலைமை பற்றி 2013ல் விரிவாகப் பின்வரும் கட்டுரையில் எழுதியுள்ளேன்: என். சண்முகரத்தினம், 2013, அபிவிருத்தி மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா? இது மூன்று பகுதிகளாக சமகாலம் ஜூலை 01-15, ஜூலை16-30, ஆகஸ்ட் 01-15 இதழ்களில் பிரசுரிக்கப் பட்டது.

[3] இது தொடர்பான ஆவணங்கள், மேலும் தகவல்களுக்கு: Rohan Edrisinha, Mario Gomez, V. T. Thamilmaran & Asanga Welikala (eds), 2008, Power Sharing in Sri Lanka – Constitutional and Political Documents 1926-2008, Centre for Policy Alternatives, Berghof Foundation for Conflict studies.

[4] 1952-1986 தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல், ஆய்வகம் வெளியீடு

[5] சேனாநாயக்க அரசாங்கம் கொண்டுவந்த பிரஜாவுரிமைச் சட்டங்கள் (1948, 1949) தொடர்பாக அப்போதைய வடக்கு தமிழ் தலைவர்களின் சந்தர்ப்ப வாதம், துரோகம் பற்றி கட்டுரையில் விளக்கியுள்ளேன்.

[6] Ethnocracy க்கு தமிழில் இனநாயகம் எனும் சொல்லைச் சிலர் பயன்படுத்துகிறார்கள். நான் முன்பிருந்தே இனத்துவ மேலாதிக்க ஆட்சி எனும் பதத்தையே பயன்படுத்தி வந்துள்ளேன். எனது அபிப்பிராயத்தில் இந்தப் பதம் ஆங்கிலப் பதத்தின் கோட்பாட்டுரீதியான அர்த்தத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

[7] 2006ல் இஸ்ரேலிய ஆய்வாளரான Oren Yiftachel வெளியிட்ட Ethnocracy – Land and Identity Politics in Israel/Palestine (Pennsylvania University Press) எனும் நூலுக்கூடாக இனநாயகம் எனும் கோட்பாடு ஆய்வாளர் மத்தியில் பிரபல்யமானது.

[8] N. சண்முகரத்தினம், 2012, சீவனோபாயத் தேவைக்கும் அப்பால் வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும், சமகாலம், ஒக்டோபர் 01/15 / பக்கங்கள் 11/19. இந்தக் கட்டுரை புதினப்பலகை இணையத்தளத்திலும் தமிழ்நாட்டு சஞ்சிகை ‘மணற்கேணி’யிலும் மீள் பிரசுரம் செய்யப்பட்டது.

 

நூலை வாசிக்க  அல்லது தரவிறக்கம்  செய்ய கீழூள்ள இணைப்பை அழுத்துக!

One thought on “சிங்களப் பெருந்தேசிய வாதம் – அதன் அடிப்படைகளும் மேலாதிக்கமும் (புதிய முன்னுரையுடன்)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *