1983 யூலை வன்செயல்கள் இலங்கைத்தீவை உலுக்கிய போது நான் ஜப்பானில் வாழ்ந்து வந்தேன். அந்த நாட்களில் ஒரு ஜப்பானியக் கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். தாய் நாட்டிலிருந்து வந்த செய்திகளினால் மிகவும் தாக்கப்பட்டிருந்தேன். என் கள ஆய்வினைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு இலங்கையின் அரசியல் நிலை மற்றும் தேசிய இனப்பிரச்சனை பற்றி சிந்திக்க முற்பட்டேன். ஒரு நீண்ட கட்டுரை அதன் விளைவாகியது. அது சிங்களப் பெருந்தேசியவாதம் பற்றியது. கட்டுரையை எழுதிய பின்னர் சென்னைக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அங்கே இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர் ஒருவரை சந்தித்தபோது அன்று அவரது கட்சியின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டிக்கும் பேரணி ஒன்று இடம் பெறுவதாக கூறி என்னையும் அதில் பங்குபற்றும் படி அழைத்தார். அதனை ஏற்றுக் கொண்டு நான் அவருடன் அந்த பேரணியில் பங்குபற்றினேன். கட்சியின் செங்கொடிகளுடனும் பதாகைகளுடனும் பேரணி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளானோர் பங்கு பற்றினர்.
பேரணி முடிந்த பின்னர் பலர் சமீபத்தில் உள்ள பூந்தோட்டத்தில் ஓய்வெடுக்கச் சென்றனர். நானும் எனது இந்திய தோழருடன் அங்கு சென்றேன். அங்கே தான் நீண்ட காலத்திற்கு பின் விசுவாவுடன் எனது எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. நீண்டு வளர்ந்து விட்ட தலைமுடியும் தாடியுமாக அவர் காட்சி தந்தார். அந்தச் சந்திப்பு நம்மிருவருக்குமிடையிலான உறவைப் புதுப்பிக்கும் நிகழ்வாகியது.
நான் சென்னையில் தங்கியிருந்த நாட்களில் நம்மிடையே நீண்ட உரையாடல்கள் இடம் பெற்றன. நான் எழுதிய கட்டுரையை வாசித்து அதுபற்றி அவரது அபிப்பிராயத்தைக் கூறும்படி கேட்டேன். அவர் சம்மதித்தார். மறுநாள் அவரை சந்தித்தபோது கட்டுரையை தான் வாசித்ததாகவும் அது கூடியவிரைவில் பிரசுரிக்கப்படவேண்டும் எனவும் கூறினார். பிரசுரிப்பதற்கு வேண்டிய உதவிகளையும் செய்வதாகக் கூறினார். கட்டுரையைக் காவ்யா பதிப்பகத்தினர் நூல் வடிவில் வெளியிட்டனர். எனது நூல் பற்றி கிரிதர் எனும் புனைபெயரில் விசுவா ‘புதுசு’ எனும் சஞ்சிகையில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
ஆனால் விசுவாவுடன் ஏற்பட்ட தொடர்பு முக்கியமாக அவர் தலைமையில் உருவாகிக் கொண்டிருந்த N.L.F.T இயக்கம் பற்றியது என்பதைக் குறிப்பிட வேண்டும். இதுபற்றி நிறைய கலந்துரையாடினோம். அவர் இலங்கையின் அரசியல் போக்குகள், தேசிய இனப்பிரச்சனையின் தன்மைகள் மற்றும் பிராந்திய அரசியல் நிலைமை, இந்தியாவில் அப்போது இடம்பெற்ற போராட்டங்கள் போன்ற விடயங்களை ஆழ ஆராய்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். நமது சம்பாசனைகளில் இந்த விடயங்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் இலங்கைப் புரட்சிக்குமிடையிலான உறவு சிங்கள முற்போக்கு சக்திகளுடன் தொடர்புகளை வளர்ப்பது பற்றி, மற்றும் இந்திய அரசின் நேரடியான மறைமுகமான உதவிகளுடன் தமிழ்நாட்டில் முகாமிட்டிருக்கும் தமிழீழ விடுதலை இயக்கங்களின் அரசியல் பற்றி நிறைய பேசினோம். அன்றைய சூழலில் ‘ஒரு மாக்சிச-லெனினிச’ அமைப்பினை இந்திய அரசும், ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டு ஆளும் மற்றும் பிரதான திராவிடக் கட்சிகளும் எப்படிப் பார்ப்பார்கள்? அத்தகைய ஒரு வெளிநாட்டு அமைப்பு இந்தியாவில் இயங்க முடியுமா? இந்தக் கேள்விகள் எழுந்தன. இவைபற்றி கொள்கை ரீதியில் விசுவா தெளிவாகவே இருந்தார். ஆனால் நடைமுறை ரீதியான பிரச்சனைகளைக் கையாளுவது பற்றி அவருக்கும் சந்தேகங்கள் குழப்பங்கள் இருந்திருக்கலாம்.
இந்தவிடயங்கள் பற்றி வேறுபல இடதுசாரிக் குழுக்களுடனும் தனிநபர்களுடனும் அவர் கலந்துரையாடியிருப்பார் என்று நம்புகிறேன். அந்த சந்திப்பினைத் தொடர்ந்து நம்மிருவருக்குமிடையே கடிதப் போக்குவரத்து இருந்தது.
மேற்குறிப்பிட்ட கேள்விகளும் அவற்றுடன் தொடர்புடைய வேறு பல கேள்விகளும் அந்தக் காலகட்டத்தில் முக்கியத்துவம் மிக்கவையாக விளங்கின. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஒரு வரலாற்று ரீதியான சந்தியில் நின்றது. அது எந்தத் திசையில் நகரும்? இந்திய வல்லரசின் கொள்கைகளும் உபாயங்களும் இயக்கங்களையும் போராட்டத்தின் அரசியல் போக்கையும் எப்படி பாதிக்கும்? இப்படிப் பல கேள்விகள்.
ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை அதுவரை மேலாட்சி நிலைபெற்றுள்ள குறுகிய தேசியவாதத்திலிருந்து விடுவித்து மக்கள் ஜனநாயகப்புரட்சியின் பாதையில் முழு இலங்கையின் சமூக மாற்றத்திற்கு உதவக் கூடிய வகையில் முன்னெடுக்க கூடிய அரசியல் கொள்கையுடைய இயக்கம் ஒன்று தேவைப்பட்டது. இந்த தேவையை விசுவா நன்கு கிரகித்திருந்தார் என நான் நம்பினேன் நம்புகிறேன்.
ஆயினும் பின்நோக்கிப் பார்க்கும் போது ஆரம்பக் கட்டத்திலிருக்கும் N.L.F.T போன்ற ஓர் இயக்கம் ஏற்கனவே மேலும் பலம் பெற்று வருகின்ற குறுந்தேசியவாத அலைக்கும் அதைத் தன்னாட்சிக்குக் கீழ்ப்படுத்திக் கருத்தியல் கருவியாக்கிக் கொண்ட சுத்த இராணுவ வாதத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் இந்த எதிர்நீச்சலில் N.L.F.T தன் உள்ளார்ந்த முரண்பாடுகளால் துன்பகரமாக உடைந்து போயிற்று. இயக்கத்தின் இலட்சியத்தைப் பாதுகாத்து முன்னெடுக்கும் நோக்கில் விசுவா P.L.F.Tஐ உருவாக்கினார். N.L.F.T விரைவில் செயலிழந்து தன்னைத்தானே அழித்துக் கொண்டது. P.L.F.T அளவுரீதியல் ஒரு சிறிய அமைப்பாகவே இருந்தது. ஆனால் விசுவாவையும் அவருடன் பயணித்த தோழர்களையும் அழிக்க வேண்டுமென முடிவெடுத்து திட்டமிட்டு செயற்பட்ட சக்திகள் அவர் கொண்டிருந்த அரசியல் பார்வையையும் அதன் அடிப்படையில் அவர் கட்டியெழுப்ப எடுத்த செயற்பாடுகளையும் கண்டு பயந்தனர் என்பது தெளிவு. விசுவாவின் அறிவாற்றலும் திட சித்தமும் அவர்களை கலங்க வைத்தன.
விசுவாவின் நிலைப்பாட்டினால் நானும் ஆகர்சிக்கப்பட்டேன். அவர் கேட்டுக்கொண்டபடி N.L.F.T இன் (பிளவிற்குமுன்) வேலைத்திட்டம் பற்றி ஒரு ஆக்கபூர்வமான விமர்சனத்தை முன்வைத்தேன். இதுபற்றி ‘புரட்சிகர அரசியல் முதன்மை பெற’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து புதிய ஜனநாயகப் புரட்சி பற்றியும் எழுதினேன். இந்தக் கட்டுரைகள் ஏற்கனவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆட்கொண்டிருந்த குறுந்தேசியவாதம் மற்றும் இராணுவ வாதம் ஆகியவற்றை எதிர்க்கும் அறிவுரீதியான பங்களிப்புகளாக வரையப்பட்டன. இவற்றில் நான் கூறிய கருத்துக்களையும் வாதங்களையும் விசுவா ஏற்றுக் கொண்டார்.
அப்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய எனது பார்வையும் அது பின்னர் மாற்றம் அடைந்தது பற்றியும் ஒரு சிறு குறிப்பு அவசியமாகிறது. நீண்டகாலமாக நான் வடக்கு கிழக்கின் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற கருத்தினை நிராகரித்து வந்தேன். முழு இலங்கையும் சார்ந்த அடிப்படையான சமூக, அரசியல் மாற்றத்திலேயே அந்நாட்டில் வாழும் சகல இனங்களின் விமோசனமும் தங்கியுள்ளது என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தேன். 1977க்கு பின்னர் தேசிய இனப்பிரச்சனை பற்றிய வாதங்கள் இடதுசாரிகள் மத்தியில் வலுப் பெற்றன. அதற்கு முக்கிய காரணமாக இருந்த வடக்கில் எழுந்து வரும் இளைஞர் குழுக்களின் போக்குகளை அவதானிக்க தொடங்கினேன். சில இளைஞர் குழுக்கள் இடதுசாரிக் கருத்துக்கள் பற்றியும் மற்றய நாடுகளில் இடம் பெற்ற அல்லது இடம்பெற்று வரும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் ஆர்வம் காட்டின. மாக்சியத் தத்துவம் பற்றியும் தேசிய இனப்பிரச்சனை பற்றி மாக்சின், லெனினின் கருத்துக்களையும் அறிய விரும்பின. இந்தக் குழுக்கள் பழைய தேசியவாதத் தலைமையை விமர்சித்தன நிராகரித்தன. இந்தப் போக்குகள் பற்றி அப்போது ஆங்கிலத்தில் சில கட்டுரைகளை எழுதியிருந்தேன். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய எனது நிலைப்பாட்டினை மீள் பரிசீலனைக்குள்ளாக்கினேன். அவர்கள் ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்பட்டுள்ள ஓர் இனம் என்பதை முன்பிருந்தே ஏற்றிருந்தேன். ஆனால் தமிழ் தேசியவாதிகளின் தேசிய இனக் கோட்பாட்டை நான் ஏற்கவில்லை. அவர்களின் ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன குறை’ என்ற கோசம் மிகவும் பிற்போக்குத் தனமானது என்பதே அன்றும் இன்றும் எனது நிலைப்பாடு.
ஆனால் வடக்குக் கிழக்கில் தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு லெனினிசப் பார்வையில் நியாயம் உண்டு என்ற நிலைப்பாட்டிற்கு படிப்படியாக வந்தேன். ஜரிஷ் பிரச்சனை பற்றி மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளும் எனது சிந்தனைக்கு உதவின. 1983 ல் வெளிவந்த Benedict Anderson எழுதிய Imagined Communities என்ற நூலும் என்னைக் கவர்ந்தது.
அன்றைய காலகட்டத்தில் தேசிய இனப்பிரச்சனை பற்றி நான் விசுவாவின் கருத்துகளுடன் பெருமளவில் ஒத்துப் போனதைப் புரிந்து கொள்ள இந்தப் பின்னணி உதவியாயிருக்கும் என நம்புகிறேன். ஆனால் இந்தக் கருத்து ரீதியான நிலைப்பாட்டிற்கும் மேலாதிக்க நிலை பெற்றுவரும் போராட்ட போக்கிற்குமிடையே ஒரு வெளி தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது எனும் யதார்த்தத்தை மறந்துவிடலாகாது.
ஆரம்ப கட்டத்திலேயே பிளவுபட்ட ஒரு சிறிய அமைப்பின் ஒரு பகுதியை அதாவது P..L.F.T ஐ வளர்த்தெடுக்க விசுவா தீவிரமாக செயற்பட்டார். மற்ற அமைப்புகளுக்கு பெருமளவில் பொருளாதார ரீதியான மற்றும் இராணுவ ரீதியான உதவிகள் கிடைத்தன. அளவு ரீதியிலும் இராணுவ பலத்திலும் அவை பெரிய நிறுவனங்களாகி விட்டன. அவை இந்திய அரசுடனும் தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளுடனும் தமது உறவுகளை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. விசுவாவின் அணுகுமுறையோ முற்றிலும் வேறானது. அவர் இந்தியாவிலுள்ள புரட்சிகர அமைப்புகள் மற்றும் விடுதலை இயக்கங்கள் மீது அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தார். அவற்றுடன் உறவுகளைத் தேடுவது அவருடைய அரசியல் கொள்கைக்கு உகந்ததாக இருந்தது. இந்த வேறுபாடு மிகவும் அடிப்படையானது. இதே போன்று தென்னிலங்கையின் அரசியல் போக்குகள் பற்றியும் அவர் ஆழமாக அறிந்திருந்தது மட்டுமன்றி அங்குள்ள முற்போக்கு சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது பற்றியும் ஆவலாயிருந்தார். மேலாட்சிச் செல்வாக்கு பெற்றிருந்த தமிழ் தேசியவாதத்திற்கும் விசுவாவின் அரசியல் நிலைப்பாட்டிற்குமிடையே இணைத்து வைக்க முடியாத முரண்பாடு இருந்தது. இதுவே தேசியவிடுதலை பற்றிய அவருடைய நிலைப்பாட்டினை நெறிப்படுத்தியது என்பதே எனது கணிப்பு.
ஆகவே இலங்கை அரசு, இந்திய அரசு மட்டுமல்லாது விடுதலைப்புலிகள் மற்றும் மற்றைய அமைப்புகளாலும் அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார் என்பதைப் புரிந்து கொள்வதில் பிரச்சனை எழ இடமில்லை. அவருக்கும் அவர் தலைமை தாங்கிய ஆரம்பகட்டத்திலிருந்த அமைப்புக்கும் பாரதூரமான தீங்கினை விளைவிப்பதில் பல்வேறு சக்திகள் ஈடுபட்டிருந்தன என நம்பலாம். 1986 ல் விசுவா கொலை செய்யப்பட்டதுடன் அவர் முன்னெடுத்த முயற்சிகள் எல்லாம் ஸ்தம்பிதமாயின. பின்நோக்கிப் பார்க்கும் போது விசுவாவின், அவருடைய P.L.F.T ன், சகல முயற்சிகளும் ஆரம்பக் கட்டங்களுக்கப்பால் தொடரமுடியாத ஒரு முடிவைப் பெற்றன எனலாம். விசுவாவின் அரசியல் வாழ்க்கை நீளமானது. அவர் மாணவப் பராயத்திலிருந்தே இயக்க அரசியலில் ஈடுபட்டவர். ஆனால் அவரது கொலை ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்ப அவர் எடுத்த முயற்சிக்கு ஒரு சில வருடங்களுக்கு அப்பால் தொடரமுடியாது முற்றுப்புள்ளி வைத்தது. அவர் பயங்கர பிற்போக்கு அலைகளுக்கெதிராக நீச்சல் செய்யத் துணிந்தார். அவரின் முடிவு ஈழத்தமிழரின் போராட்டம் மீளமுடியாதபடி திசைமாறி விட்டது எனும் பயங்கரமான உண்மையின் குறியீடு போல் அமைந்தது.
இந்தக் குறுகிய வரலாற்றினைப் பலர் மறந்திருக்கலாம். இன்னும் பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம் ஆனால் தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தின் வரலாறு ஒரு திசைமாறிய போராட்டத்தின் வரலாறாகியதன் விளைவுகளை இலங்கைத் தமிழ் மக்கள் இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளைவுகளின் தாக்கங்கள் பற்றி ஆழப்பார்த்தல் அவசியம். ஆயினும் அதை இந்தக் கட்டுரையில் செய்ய முடியாது. அதன் சில முக்கிய அம்சங்கள் பற்றி குறிப்பாக நிலப்பிரச்சனை, அரசியல் குடியேற்றத்திட்டங்கள், சர்வதேச மட்டும் உள்நாட்டு புலம்பெயர்வு, காசாதாரப் பொருளாதாரத்தின் விளைவுகள் இவையெல்லாம் ‘தாயகம்’ என வடக்குக் கிழக்கு தமிழர்கள் கோரிய ஆள்பரப்பில் ஏற்படுத்தியுள்ள புவியியல் ரீதியலான மாற்றங்கள் போன்றவை பற்றி நான் வேறு விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளேன். இங்கே சில விடயங்களை மட்டும் சுருக்கிக் கூற விரும்புகிறேன்
இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக ஆட்சி செலுத்திய அரசாங்கங்களின் கொள்கைகளினால் மற்றும் நீண்ட காலப் போரினதும் விடுதலைப்புலிகளின் இராணுவ மயமாக்கப்பட்ட கொள்கைகளின், நடைமுறைகளின் விளைவுகளாலும் தேசிய இனப்பிரச்சனை தன்மை ரீதியான மாற்றங்களை கண்டுள்ளது. ‘தேசம்’ ‘அடையாளம்’ எனும் போர்வைகள் வடக்குக் கிழக்கு தமிழர்களை குறுந்தேசியவாத சிந்தனைக்குள் சிறை வைத்தன. இதனால் இலங்கையிலுள்ள மற்றைய இனங்களான முஸ்லீம்களை மற்றும் மலையகத் தமிழர்களை இந்த ‘விடுதலைப் போராட்டத்தினால்’ ஆகர்சிக்க முடியவில்லை. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கான சக்திகளுடன் ஆக்கபூர்வமான உறவுகளை வளர்க்க முடியவில்லை. ஆரம்பக் கட்டங்களில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் நியாயப்பாட்டினை ஏற்றுக் கொண்ட இடதுசாரி சிங்களவர்களைக்கூட வென்றெடுக்க முடியாத அந்த ஆயுதப் போராட்டம் மறுபுறம் ‘தேசிய அடையாளம்’ எனும் கருத்தியல் போர்வையினால் தமிழர் சமூகத்திற்குள்ளே இருக்கும் வர்க்க, சாதி, பால் ரீதியான வேறுபாடுகளை மறைப்பதில் அதிகார நிலை பெற்றுவிட்ட சக்திகள் கண்ணாயிருந்தன. சர்வதேசரீதியிலும் போராட்டம் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டது.
ஆகவே மாற்றமடைந்து விட்ட உள்நாட்டு நிலைமைகளையும் சர்வதேச நிலைமைகளையும் நன்கு கிரகித்து இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையையும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும் மீள் சட்டகப்படுத்தும் (reframe செய்யும்) தேவை உள்ளது என வாதிட்டு வந்துள்ளேன். இன்றைய நிலைமைகளில் விசுவா 1986 ல் கொண்டிருந்த கருத்துக்களும் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்பது கண்கூடு. அவர் கொலை செய்யப்படாதிருந்தால் தொடர்ந்து உயிர் வாழ்ந்திருந்தால் தனது பணியை தொடர்ந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த எதிர்நீச்சலில் அவரும் அவரது இயக்கமும் எவ்வளவு தூரம் முன்னேறியிருப்பார்கள் என்ற கேள்வி நியாயமானதே. எனது அபிப்பிராயத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே இருந்தன. ஆனால் தனது நீண்டகாலப் பார்வையில் அவர் நம்பிக்கை வைத்திருந்த மக்கள் ஜனநாயகமும் சோசலிசமும் இன்னும் முக்கியமானவை என்பது உண்மை. அவையும் மீள்சட்டகமாக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ‘மாக்சிசம்-லெனினிசம்’ எனும் பெயரில் சர்வதேச ரீதியில் உருவாக்கப்பட்ட கருத்தியலின் உள்ளடக்கங்கள் பற்றி ஆழ விமர்சிக்கும் தேவையை வலியுறுத்த வேண்டும். மாக்சிசத்தின் மற்றும் சோசலிச சிந்தனைகளின் சமகால செல்நெறிகள் மற்றும் அவை பற்றிய விவாதங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு. இத்தகைய விடயங்களில் விசுவா ஆர்வம் காட்டியிருப்பார் எனவும் நம்புகிறேன். எனது இந்தக் கருத்துக்களையும் இலங்கை தேசிய இனப்பிரச்சனையின் இன்றைய நிலை பற்றிய எனது பார்வையையும் விசுவா ஏற்றுக் கொண்டிருப்பார் என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினமாயிருக்கலாம். ஆனால் இவை பற்றி விவாதிக்க முன்வந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
07-05-2016
Dear Shan,
It will be useful if you could re-publish these two articles ‘புரட்சிகர அரசியல் முதன்மை பெற’, புதிய ஜனநாயகப் புரட்சி. These may help the comming generation to understand the trend of tamils struggle in 1980`s. It will also help the tamil intellectuals who were unfortunately adopted tamil nationalist ideology and justified the pure armed struggle.
Thanks Limal for your suggestion, which will be considered.
Samuthran