சமுத்திரன் (May 2017)
இலங்கையில் மேதினத்தின் வரலாற்றை தொழிலாள வர்க்க அமைப்புகளின் மற்றும் இடதுசாரி இயக்கத்தின் எழுச்சியினதும் வீழ்ச்சியினதும் வரலாறாகவும் மறுபுறம் தொழிலாளரின் வர்க்க நலனுக்கு எதிரான கட்சிகள் உலகத் தொழிலாளர் தினத்தை தமது அரசியல் நோக்கங்களுக்கு உதவும் வகையில் நடத்திப் பெரும் பணச்செலவில் ஒரு விழாவாகக் கொண்டாடும் மரபின் வரலாறாகவும் பார்ப்பதில் தவறில்லை. இலங்கையில் முதலாவது மேதினம் 1933ல் நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை எனக் கருதப்படும் A. E. குணசிங்கவின் தலைமையில் அவர் 1922ல் உருவாக்கிய இலங்கை தொழிலாளர் யூனியனால் கொண்டாடப்பட்டது. 1935ல் லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) பிறந்தது. 1936ல் LSSP தனது தொழிலாளர் அமைப்புக்களுடன் முதலாவது மேதினத்தைக் கொண்டாடியது. இதைத் தொடர்ந்து மேதினம் தொழிற் சங்கங்களினதும் இடதுசாரி இயக்கத்தினதும் நாளெனும் மரபு இலங்கையிலும் உருவானது. 1939ல் LSSPல் ஏற்பட்ட பிளவின் விளைவாக 1943ல் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (CP) உருவாயிற்று. CPன் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம் கட்சியுடன் இணைந்து மேதினத்தை வருடந்தோறும் கொண்டாடியது. 1950கள் 1960கள்வரை மேதினம் LSSP, CP சார்ந்த தொழிற்சங்கங்களின் தினமாகவே விளங்கியது. மேதின ஊர்வலங்களும் கூட்டங்களும் இந்தக் கட்சிகளின் தொழிற்சங்க பலத்தைக் காட்டுபவையாகின. இந்த வகையில் இது ஒரு போட்டியாகவும் கருதப்பட்டது.[1]
1960களில் இந்த நிலை மாறத் தொடங்கியது. முதலில் இடதுசாரி கட்சிகள் ஒரு பொது முன்னணிக்குவரும் சைகைகள் வெளிப்பட்டன. 1963ல் லங்கா சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் பிலிப் குணவர்த்தன தலைமையிலான புரட்சிகர சமசமாஜக்கட்சி மூன்றும் இணைந்து ஐக்கிய இடதுசாரி முன்னணி (United Left Front – ULF) எனும் அமைப்பினை உருவாக்க முடிவெடுத்தன. மூன்று கட்சிகளும் தமது தொழிற்சங்கங்களுக்கு ஒரு பொது இணைப்புக்குழுவையும் உருவாக்கின. மூன்று கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்கங்களும் 1963 மேதினத்தை கொழும்பில் ஒன்றாக மிக விமரிசையாகக் கொண்டாடின. இது இணைந்த இடதுசாரி இயக்கத்தின் பலத்தின் ஒரு மாபெரும் வெளிப்பாடாகப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ம் திகதி முறைப்படி பத்திரங்களில் மூன்று கட்சித் தலைவர்களின் (Dr. N.M. பெரேரா, Dr. S.A. விக்கிரமசிங்க, பிலிப் குணவர்த்தன) கையொப்பங்களிடுவதுடன் ULFஆரம்பிக்கப்பட்டது. ஆகஸ்டு 12 இலங்கை இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய திகதியாகும். 1953 ஆகஸ்ட் 12ம் திகதி ஒரு மாபெரும் ஹர்த்தாலை சமசமாஜ, கொம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தின. அந்தப் போராட்டத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அது வரலாறு.
ஆனால் புதிய ஐக்கியம் நிலை பெறவில்லை. 1964ல் இடதுசாரித் தலைவர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) சமரசம் செய்து அந்தக்கட்சியுடன் ஐக்கிய முன்னணி அமைக்க ஆரம்பித்தனர். SLFP-LSSP-CP ஐக்கிய முன்னணி உருவாயிற்று. ULFன் குறுகிய வாழ்வு முடிந்தது. அதே காலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் சமசமாஜக் கட்சிக்குள்ளும் கருத்தியல்ரீதியான பிளவுகள் ஏற்பட்டன. இது சர்வதேசரீதியில் சோவியத் யூனியனின் கொம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சிக்குமிடையிலான பிளவின் விளைவாகும். இடது சாரிக் கட்சிகள் தொடர்ந்தும் பிளவுகளுக்குள்ளாயின. எல்லா இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியாகப் பலவீனமடைந்தன. காலப்போக்கில் SLFPயும் UNPயும்தொழிலாளர்களைத் தங்களின் தொழிற்சங்கங்களில் இணைப்பதில் பெருமளவு வெற்றி கண்டன. இதன்மூலம் இவ்விரு கட்சிகளும் இரண்டு வகையில் பயன்பெறுகின்றன. ஒன்று, அவர்களின் வாக்கு வங்கி பலமடைகிறது. மற்றது, தொழிற்சங்கங்களைப் பல வழிகளில் கட்டுப்படுத்தித் தொழிலாளர் போராட்டங்களை நசுக்கமுடிகிறது. மற்றய தொழிலாளர் அமைப்புகள் உரிமைகளுக்காகப் போராட முற்படும்போது தமது கட்டுப்பாட்டில் உள்ள சங்கங்களை அதற்கெதிராகப் பயன்படுத்தலாம். இதை நாம் நடைமுறையில் கண்டுள்ளொம்.
1980 யூலை மாதம் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆட்சியின்கீழ் ஏறிக்கொண்டிருந்த வாழ்க்கைச் செலவிற்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் கூட்டாக மாத ஊதியம் 300 ரூபாவால் அதிகரிக்கப்படவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துப் பொது வேலைநிறுத்தத்தில் இறங்கின. இதன்போது 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஜனாதிபதி J. R. ஜயவர்த்தன வேலை நீக்கம் செய்தார். இந்தப் போராட்டத்தின் போது UNPன் கட்டுபாட்டில் இருந்த தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை எதிர்த்து அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டன.
இன்று இலங்கையில் மிகப்பெரிய மேதினப் பேரணிப்போட்டியில் மூன்று கட்சிகள் பங்கு பற்றுகின்றன: ஜனாதிபதி சிறிசேனா தலைமையில் உள்ள SLFP, அதற்கெதிரான மகிந்தவின் முன்னணி, மற்றும் ஆளும் கட்சியான UNP. இந்த முக்கோணப் போட்டிக்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒருமைப் பாட்டிற்கும், உரிமைகளுக்கும் எதுவிதமான தொடர்புமில்லை. போட்டியின் நோக்கம் எந்தக் கட்சியின் பேரணி அளவுரீதியில் மிகப் பெரியது எனும் சோதனை மட்டுமே. இதில் வெற்றிபெறச் செலவாகும் பணம் கொஞ்சநஞ்சமல்ல. உலகத் தொழிலாளர் தினத்திற்கு இதைவிட மோசமான அவமதிப்பு இருக்கமுடியுமா?
இடதுசாரிப் பக்கத்தைப் பொறுத்தவரை ஜனதா விமுக்தி பெரமுன (JVP) வழமைபோல் மிகவும் கவர்ச்சிகரமான பதாகைகளுடன் தனது பேரணியை நடத்துமென எதிர்பார்க்கலாம். மற்றய இடதுசாரி அமைப்புகளும், தொழிற்சங்க்ங்களும் தமது சக்திக்கேற்ப உலகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவார்கள். தொழிலாளர்களின் பிரச்சனைகள், உரிமைகள் பற்றி முக்கியமான கருத்துக்களைக் கூறுவார்கள். ஆனால் மேற்கூறிய முக்கோணப் போட்டியே இலங்கையின் தொலைக்காட்சி சேவைகளிலும், பத்திரிகைகளிலும் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கும்.
[1] 1956ல் பண்டாரநாயக்க அரசாங்கம் மேதினத்தை தெசிய விடுமுறைநாளாக்கியது. அப்போது தொழில் அமைச்சராக முன்னைநாள் இடதுசாரியான T.B. இலங்கரத்ன இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.