வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்

வாழ்வாதாரத்துக்கும் அப்பால்:
வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்[1]

சமுத்திரன் (2012)

சமீபகாலங்களில் வடக்கு- கிழக்கில் நில அபகரிப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக எழுந்துள்ளது. அதற்கு எதிராக மக்களுடன் சில அரசியல் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் காண்கிறோம். போருக்குப்பின் வேறு வழிகளுக்கூடாகப் போர் தொடர்கிறது என வடக்கு கிழக்கு நிலமைகளைப் பற்றி அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். அங்கு நிலஅபகரிப்புக்கு எதிராக எழும் குரல்கள் நிலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான உற்பத்திச்சாதனம் மட்டுமல்ல அதற்கும் அப்பால் அது அவர்களின் கூட்டு அடையாளத்தின் பொருள் ரீதியான அடித்தளமாய் அத்துடன் இணைந்த சுலபமாக அளவிடமுடியாத அகரீதியான குறியீட்டு விழுமியங்களின் உறைவிடமாய் விளங்குகிறது எனும் உணர்வையும் எதிரொலிக்கின்றன. அத்துடன் நிலஅபகரிப்பு ஒரு வித மனிதபாதுகாப்புப் பிரச்சனையுமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மனித பாதுகாப்பே மக்களின் சீவனோபாயச் செயற்பாடுகளின் முன்நிபந்தனையாகிறது. இந்த நிலை பல குடும்பங்களின் வாழ்வாதார மற்றும் நீண்டகால தனிமனித விருத்திக்கு உதவும் சந்தர்ப்பங்களைக் கட்டுப்படுத்துகிறது அல்லது மறுக்கிறது. இதுவும் புலப்பெயர்வுக்கு ஒரு காரணமாகலாம்.

உற்பத்திச்சாதனம் என்ற வகையில் நிலம் குறிப்பிட்ட உடைமை உறவுகளுக்குள்ளாகிறது. நிலத்தின் உடைமை உறவுகள் பொதுவாக வர்க்க ரீதியானவை. அதேவேளை இந்த உறவுகள் பால்வேறுபாடு, சாதிவேறுபாடு மற்றும் குறிப்பிட்ட சமூகங்களின் மரபுகள், நிலவளங்களின் பயன்பாடு தொடர்பான சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய உடைமை உறவுகள் அதிகார உறவுகளே. நவீன உலகில் உற்பத்திச்சாதனமாக நிலம் துண்டாடப்பட்டோ அல்லது பெரிய அளவிலோ பண்டமயமாக்கப்படுகிறது, அதாவது குறிப்பிட்ட காணிகளின் உடைமை உரிமைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. தனியுடைமையாக்கல் நிலத்தின் பங்கீட்டில் அசமத்துவங்களை உருவாக்குகிறது.

இலங்கையில் நிலமற்றோரைச் சகல இனங்களிலும் காணலாம். யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பில் சந்ததி சந்ததியாக நிலஉரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளனர். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உலகரீதியில் நடைமுறையிலிருக்கும் நவதாராளவாதக் கொள்கையின் விளைவாக பெருமளவிலான நிலஅபகரிப்புக்களில் தனியார்துறை மற்றும் சீனா, இந்தியா, சில அரபுநாடுகள் போன்றவற்றின் அரசதுறை முதலீட்டு நிறுவனங்கள் மும்முரமாகப் பல ஆபிரிக்க ஆசிய நாடுகளில் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் வடக்கு – கிழக்கு உட்பட பல பகுதிகளில் பெருமுதலீட்டாளர்களினால் நிலஅபகரிப்புக்கள் இலங்கை அரசின் பூரண ஒத்துழைப்புடன் இடம் பெறுகின்றன.

ஆனால் மறுபுறம் குறிப்பிட்ட பிரதேசத்தை வாழிடமாகக் கொண்ட ஒரு மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சாரப் பரிணாமப் போக்குகள் அந்தப்புலத்திடம் தமக்கே உரிய விழுமியங்களைப் பதிக்கின்றன. நிலம் வெறும் சடப்பொருளல்ல. அது உற்பத்திச்சாதனமாக, வாழ்புலமாக, சூழலாகப், பன்முகரீதியான பல சமூகத் தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த வகையில் அது சமூகரீதியாக உருவாக்கப்படுகிறது. காலத்திற்கூடாக மீள்உருவாக்கப்படுகிறது, மாற்றமடைகிறது. சமூகத்தின் வர்க்க, பால், சாதி முரண்பாடுகளை பிரதிபலிக்கும் அதேவேளை அதே சமூகத்தின் இன, மத அடையாளங்களையும் நினைவுகளையும் அந்தப்புலம் உள்ளடக்குகிறது. ஒரு பிரதேசத்தின் கலாச்சார உருவாக்கத்தில் வரலாற்று ரீதியான நினைவுகளுடன் கட்டுக்கதைகளும், நம்பிக்கைகளும் பங்கு வகிக்கின்றன. கலாச்சார ரீதியான, கருத்தியல்ரீதியான வழிகளுக்கூடாகவே யதார்த்தத்தின் அசமத்துவங்களையும் ஊடறுத்துச் செல்லும் இலம்பனரீதியான (மேலிருந்து கீழாக) ஒருமைப்பாடு கட்டமைக்கப்படுகிறது. இதன் வழியே குறிப்பிட்ட குழுக்களின் புலப்பற்று மற்றும் புலம்மீதான உரிமை கொண்டாடல் போன்றவை பரிணமிக்கின்றன. ஆகவே “நிலம்” என்பது கோட்பாடு ரீதியில் ஒரு சிக்கலான விடயமாகும்.

புலப்பற்றும் உரிமை கொண்டாடலும் சிறுகுழுவைக் கொண்ட உள்ளூர் மட்டத்திலிருந்து தொடர்ச்சியான ஒரு பரந்த பிரதேசம் வரை சில பொதுத்தன்மைகளின் அடிப்படையில் பரவலாம். இந்த பொதுத்தன்மைகள் மொழி, மதம், சாதி, பொதுநலன்கள் சார்ந்தவையாக இருக்கலாம். மறுபுறம் மொழி மத வேறுபாடு இருப்பினும் பொதுநலன்கள் காரணமான சமூகப்பொருளாதார உறவுகளுக்கூடாகப் பரஸ்பரப் புரிந்துணர்வு, அங்கீகாரம், மரியாதை போன்ற விழுமியங்களின் அடிப்படையில் ஒரு பல்லினக்குழுவும் கூட்டாக ஒரு பொதுப்புலத்தை உண்டாக்கும் சாத்தியப்பாடுகள் உண்டென்பதை மறுக்க முடியாது. இத்தகைய குழுக்கள் காலப்போக்கில் தமது பன்முகத்தன்மைகளைப் பிரதிபலிக்கும் பொதுக் கலாச்சார செயற்பாடுகளில் ஈடுபடுவதும் சாத்தியமே. அங்கு கலப்புத்திருமணங்கள் இடம் பெறுவது மட்டுமல்ல கலப்பு மொழிவழக்குகள் தோன்றுவதும் இயற்கையே. இவையெல்லாம் புலத்தோற்றத்தின் மாற்றப்போக்கின் உள்ளீடுகளாகின்றன.

இன்னொருபுறம் பல்லின குழுக்கள் வாழும் பிரதேசத்தில் அரசியல் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவிற்குச் சாதகமாகவும் மற்றவற்றிற்குப் பாதகமாகவும் இருக்குமேயானால் அந்தபுலத்தின் அதிகார உறவுகளில் இனத்துவமும் இணைந்து விடுகிறது. இது குழுக்களுக்கிடையிலான அதிகார அசமத்துவத்தை ஆழமாக்கி முரண்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் இனத்துவ, மதத்துவ அடையாளங்கள் பலமடைந்து போட்டியிடும் நிலை உருவாகிறது, ஒரு குழுவின் இனரீதியான அடையாளம் அது பிறிதொரு இனக்குழுவினை நேருக்கு நேர் சந்திக்கும் போதே உருவாக்கம் பெறுகிறது அல்லது ஆழமடைகிறது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

வாழ்புலங்களின் அரசியல் பொருளாதாரத்தையும் புவியியலையும் குறிப்பிட்ட உள்ளூர் மட்டத்தில் மட்டுமே வைத்துப் பூரணமாகப் புரிந்து கொள்ள முடியாது. எந்தவொரு புலமும் ஆட்சிப்பரப்பின் அங்கமாக இருக்கும் அதேவேளை நவீன காலத்தின் உலகமயமாக்கலை உந்தித் தள்ளும் சக்திகளின் செல்வாக்குக்கு உட்படுகிறது. மூலதனம் லாபம் தரக்கூடிய நிலவளங்களைத் தேடி நகர்ந்த வண்ணம் இருக்கிறது. நிலம் மற்றும் இயற்கை வளங்களின் உடைமைகள் கைமாறுவது ஒரு பொதுப்போக்கு. இது நிலத்தோற்றத்தையும் மற்றைய புவியியல் அம்சங்களையும் மாற்றுகிறது. உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார காரணிகளால் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் குழுக்களுக்கும் அவர்கள் விட்டுச் சென்ற உறவினர்களுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கருத்துரீதியான தொடர்புகள் உள்ளூரின் அதிகார உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.இம்மாற்றங்கள் சொத்துடைமை உறவுகளிலும் நிலவளங்களின் உபயோகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்றைய உலகமயமாக்கல் யுகத்தில் இத்தகைய உள்ளூர் வெளிநாட்டுத் தொடர்புகள் முன்பை விட மேலும் வலுவடைகின்றன. ஆகவே புலத்தின் உருவாக்கமும் மீள் உருவாக்கமும் பல மட்டங்களில் இயங்கும் அதிகார மற்றும் சமூகஉறவுகளின் தொடர்பாடலின் தாக்கங்களின் பதிவுகளைக் கொண்டுள்ளன. இங்கு அரசின் சார்பாக மேலாட்சி செலுத்தும் கருத்தியலுக்கும் அதை எதிர்த்து நிற்கும் கருத்தியல்களுக்குமிடையிலான முரண்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலே குறிப்பிட்ட பொதுப்படையான கோட்பாட்டு ரீதியான கருத்துக்கள் இலங்கையின் வடக்கு- கிழக்குக்குப் பொருத்தமாயிருக்கும் அதேவேளை நிலத்திற்கும் தேசிய இனப்பிரச்சனைக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவை நோக்கும் போது இப்பிரதேசத்தின் நிலப்பிரச்சனையில் சில பரிமாணங்கள் விசேட முக்கியத்துவம் பெறுகின்றன. “நிலம் – தேசிய இனப்பிரச்சனை”  யின் சிக்கலான உறவின் அரசியல் பொருளாதாரமும் அதை உள்ளடக்கும் அரசியல் புவியியலும் பிரதான முக்கியத்துவம் உடையன எனக் கருதுகிறேன்.

இலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும் பின்னிப்பிணைந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே. இந்தப்பிணைப்பு அரசினால் தொடர்ச்சியாகப் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இனரீதியான குடியேற்றத்திட்டங்களுடன் தொடர்புடையது என்பதும் பொது அறிவு ஆயினும் இந்த திட்டங்களின் செயல்முறைப் போக்குப் பற்றியும் இவற்றின் விளைவாக கிழக்கிலும் வடக்கிலும் ஏற்பட்டுள்ள இனப்புவியியல் ரீதியான சமூக மாற்றங்கள் மற்றும் தமிழ், முஸ்ஸீம், சிங்கள இனங்களுக்கிடையிலான உறவுகள் பற்றியும் வேறுபட்ட ஒன்றுக்கொன்று முரண்படும் எடுத்துரைப்புக்கள் நிலவுகின்றன. இவை எல்லாவற்றையும் அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதற்குப் பதிலாக நிலம்- தேசிய இனப்பிரச்சனை உறவு பற்றிய ஒரு விமர்சனப் பார்வையை முன்வைக்க விரும்புகிறேன்.

இலங்கையின் முழுநிலமும் 6.56 மில்லியன் ஹெக்டயர்கள் (Ha )ஆகும். இதில் 5.38 மில்லியன் ஹெ (அதாவது 82 சதவீதம் ) அரசுடைமை நிலங்களாகும். இந்த அரச நிலத்தின் 37 வீதம் பலவிதமான மட்டுப்படுத்தப்பட்ட உரிமை ஆவணங்களுக்கூடாக சிறு விவசாயிகளுக்கு கிராமவிஸ்தரிப்பு மற்றும் குடியேற்றத்திட்டங்களில் பங்கிடப்பட்டுள்ளது. மிகுதி அரசகாணிகள் காடுகளாகவும் இயற்கைக்காப்பு வனங்களாகவும், புனிதபிரதேசங்களாகவும், உள்நாட்டு நீர்நிலைகளாகவும் உள்ளன. முழுநிலத்தின் 17 வீதம் தனியார் உடைமையாகக் காணப்படுகிறது.

ஒரு முக்கியமான தகவலை நினைவில் கொள்வது அவசியம். அதாவது இலங்கையின் பெரும்பகுதிநிலம் அரசுடைமையாக இருப்பது மட்டுமின்றி அதன் மீதான அதிகாரம் முழுதாக மத்திய அரசிடம் மையப்படுத்தப்பட்டுள்ளது. 1987ல் இலங்கையின் யாப்பில் ஏற்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்திற்குப் பின்பும் இன்றுவரை மத்திய அரசே அரசிற்குச் சொந்தமான சகல காணிகள் மீதும் பூரணமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. பதின்மூன்றாம் திருத்தம் சொல்லும் அரசகாணிகள் பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப்பகிர்வு கூட இதுவரை (கால் நூற்றாண்டு ) மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை. இதுவரை குடியேற்றம் இடம்பெறாத அரசகாணிகள் பெரும்பாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே இருக்கின்றன. சமீபகாலங்களில் வடக்குகிழக்கில் இடம் பெறும் நிலஅபகரிப்புப் பெருமளவில் தனியாரின் சொத்துக்களான காணிகளையும் அரசினால் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளையும் பாதித்துள்ளது. அதேவேளை எஞ்சியிருக்கும் அரசகாணிகளின் எதிர்காலப் பயன்பாடுகள் பற்றிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசு விட்டுக் கொடுக்கும் அறிகுறிகள் இல்லை.கிழக்குக் கரையோரங்களில் உல்லாசத்துறை விருத்திக்கென நிலங்கள் ஒதுக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மட்டக்களப்பில் பாசிக்குடாவில் மாத்திரம் 14 புதிய உல்லாசவிடுதிகள் உருவாகின்றன. அதே போன்று திருகோணமலையின் உப்புவெளியிலும், அம்பாறையின் அறுகம்குடாவிலும் பல உல்லாசவிடுதிகள் உருவாகின்றன. இந்த திட்டங்கள் தொடர்பாக உள்ளூர் மக்களுக்குப் போதியளவு தகவல்கள் கிடைக்கவில்லை. இவை பற்றிய முடிவுகளில் அவர்களின் பங்குபற்றல்கள் இடம்பெறவுமில்லை. இராணுவ ஆட்சிக்கு கீழேயே இந்த “அபிவிருத்தி” த்திட்டங்கள் இடம் பெறுகின்றன.

இன்றைய நிலைமையைப் புரிந்துகொள்ளப் பின்னோக்கிப் பார்த்தல் அவசியம். சிங்கள பெருந்தேசிய இனமேலாதிக்க அரசஉருவாக்கத்தில் நிலத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதை எதிர்த்த தமிழ்தேசியவாதத்தின் போக்குப்பற்றியும் விமர்சனரீதியில் பார்த்தல் அவசியம். வடக்கு கிழக்கில் அரசகாணிகள் அரசின் இனத்துவ மேலாதிக்கப் புலமயமாக்கலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இது வடகிழக்குத்தமிழர் தாயகம் எனும் கோரிக்கையைப் பலப்படுத்த தூண்டியது. அந்தக் கோரிக்கைக்குப் பதிலடியாக அடுத்தடுத்த வந்த அரசாங்கங்கள் குடியேற்றத்திட்டங்களின் அமுலாக்கலைத் துரிதப்படுத்தின. இது தமிழர் தாயகக்கோரிக்கையின் அடித்தளமான  “அடையாளம்- பிரதேசம்”  எனும் இணைப்பை உடைப்பதற்கு மிகவும் ஏற்ற கருவியாக அரசின் கையிலிருந்தது. தாயகக்கோரிக்கை அரசின் காணிக்கொள்கைக்கு எதிர்விளைவென்றால், அந்த எதிர்விளைவின் எதிர்விளைவுகள் மேலும் மோசமாயின. இது ஒரு சுருள்வட்டம் போல் அதேவேளை அமைப்புரீதியில் அதிகாரரீதியில் அசமத்துவமான போட்டியாகத் தொடர்ந்தது. மறுபுறம் இரண்டு இனத்துவ தேசியவாதங்களுக்குமிடையே ஒப்பிடக்கூடிய அல்லது ஒத்த தன்மைகளும் இருந்தன.

 இனத்துவ மேலாதிக்க அரச உருவாக்கமும் நிலப்பிரச்சனையும்

வடக்கு கிழக்கில் நிலம் தேசியஇனப்பிரச்சனையுடன் பின்னிப்பிணைந்த கதை இலங்கையின் காலனித்துவத்துக்குப் பின்னான அரசஉருவாக்கத்தின் கதையுடனும் அதற்கு அப்பிரதேசத்து தமிழ்பேசும் மக்கள் மத்தியிலிருந்து எழுந்து வந்த எதிர்ப்புக்களின் கதையுடனும் தொடர்புடையது என்றால் மிகையாகாது. அரசியல் மட்டத்தில் இது இரண்டு இனத்துவ தேசியவாதங்களின் நீண்ட அசமத்துவம் மிக்க போட்டியின் கதை என்பதும் உண்மை. இலங்கையின் தேசியஇனப்பிரச்சனையின் நவீனகால பரிணாமத்தின் ஆரம்பங்களை காலனித்துவ ஆட்சிக்காலத்திலேயே தேட வேண்டும். இது பற்றி ஆழமாகப் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

1948ல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் கிடைத்தபோது காலனித்துவம் விட்டுச் சென்ற ஒரு அரசுக்கு இந்த நாட்டவர் வாரிசுகளானார்கள். இலங்கைக்கு ஒரு அரசு இருந்தது. அது சர்வதேச மட்டத்தில் இலங்கைஅரசு என அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் எனது அபிப்பிராயத்தில் மிக முக்கியமான விடயம் என்னவெனில்  “இலங்கைஅரசு”  என ஒன்று இருந்த போதும்  “இலங்கையர்” எனும் தேசியம் இருக்கவில்லை.இந்தத் தீவு கொண்டிருந்த பல்லின, பல்மத சமூகங்களை ஒன்றிணைக்கவல்ல  “இலங்கையர்”  எனும் கூட்டு அடையாளம் ஒன்றினைக் கற்பிதம் செய்து உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் அந்தத் தேவை இருப்பது பற்றியோ அதை எப்படி அடைவது என்பது பற்றியோ விவாதங்கள் பரந்த அளவில் எழவில்லை. அதற்கும் மாறாக நடைபெற்றது என்னவென்றால் பிரித்தானியா விட்டுச் சென்ற குறைபாடுகளைக் கொண்ட தாராள ஜனநாயகக்காலனித்துவ ஒற்றைஆட்சி அரசினைப் படிப்படியாக ஒரு சிங்கள பெளத்த அரசாக மாற்றும் திட்டமேயாகும். ஒரு பல்லின நாட்டின் அரசஉருவாக்கம் ஓரின அதாவது சிங்களதேசியத்தின் உருவாக்கத்துடன் இணைந்தது.1956ல் ஏற்பட்ட  “பண்டாரநாயக்க புரட்சி” இந்த மாற்றப்போக்கின் முக்கியமான திருப்புமுனை எனக் கருதப்படுகிறது. இது உண்மைதான். 1956லிருந்தே அரசின் இனத்துவமயமாக்கல் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்கு முன்பே இலங்கையின் அரசியல் சமூகத்தின் சிங்கள- தமிழ்- முஸ்லீம் என இனரீதியான வகுப்புவாதமயமாக்கல் ஆரம்பித்து விட்டதெனலாம். ஆயினும் வரப்போகும் சிங்களப் பேரினவாதத்தின் தன்மையை அறிவிப்பது போல் அமைந்திருந்தது சுதந்திர இலங்கையின் உதயத்தோடு வந்த பிரசாஉரிமைச்சட்டம். இதன் விளைவாக மலையகத்தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள்.

காலனித்துவத்துக்குப்பின்னான இனத்துவ மேலாதிக்க அரசின் உருவாக்கம் யாப்பு ரீதியாக சட்டபூர்வமாக  “ஜனநாயக ரீதியாக”  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளின் ஆதரவுடன் நடைபெற்றது. சுதந்திரத்துக்கு முன்னர் 1931ல் காலனித்துவ பிரித்தானியா வழங்கியிருந்த சர்வஜனவாக்குரிமையின் சர்வஜனத்தன்மையை இன ரீதியில் குறைக்கும் ஒரு சட்டத்தின் அமுலாக்கலுடன் சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாறு ஆரம்பிக்கிறது. இந்த சட்டத்தையும் 1956ல் வந்த சிங்களமொழியை மட்டும் அரச கரும மொழியாக்கும் சட்டத்தையும் தீவிரமாக எதிர்த்த கட்சிகளில் இலங்கையின் இடதுசாரிக்கட்சிகளான சமசமாஜக்கட்சியும் கம்யூனிஸ்ட்கட்சியும் முக்கிய பங்கினை வகித்தன. ஆனால்  “1956” இலங்கையில் வர்க்க அரசியலினதும் இடதுசாரி இயக்கத்தினதும் வீழ்ச்சியின் ஆரம்பத்தின் அறிவிப்பாகியது. இலங்கை அரசாங்கங்களால் கிழக்கிலும், வடக்கிலும் முன்னெடுக்கப்பட்ட அரச உதவியுடனான குடியேற்றத்திட்டங்கள் இனத்துவ மேலாதிக்கஅரச நிர்மாணத்திற்கு உதவும் செயற்பாடாக இருந்த அதேவேளை அது குறிப்பான சில வர்க்க நலன்களையும் சார்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியம்.அரச உதவியுடனான குடியேற்றத் திட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.இவை காலனித்துவ ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டன.கிராமப்புறங்களில் வளர்ந்துவரும் நிலமின்மையும் வறுமையும் நீண்டகாலத்தில் அரசியல் ரீதியான பிரச்சனையாக உருவெடுக்கலாம் என்பதால் மரபு ரீதியான சிறுபண்ணை விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை 1929ல் காலனித்துவ அரசாங்கம் வெளியிட்டது. இதைச் செயற்படுத்த அப்போதிருந்த நிலச்சொத்து உரிமைகளைப் பாதிக்காத (அதாவது பெருமளவிலான நிலச் சொத்துக்களைக் கொண்ட வர்க்கத்தினரைப் பாதிக்காத) ஒரு வழியைத் தேடினர் ஆட்சியாளர். நிலமற்றோரை இலங்கையின் உலர்ந்த பிரதேசத்திலிருக்கும் அரசநிலத்தில் குடியேற்றும் கொள்கை இதற்கூடாகப் பிறந்தது.இந்தக் கொள்கைக்கு இறுதி வடிவத்தைக் கொடுத்தவர் 1930ல் அரசசபையில் விவசாய மந்திரியாக இருந்த டி.எஸ் .சேனநாயக்க ஆகும். இவரே சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரானார். இவர் தலைமை தாங்கிய ஐக்கியதேசிய கட்சி (UNP) தரகு முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாக்கும் கட்சியாகவே இருந்தது. அதேவேளை டி.எஸ் .சேனநாயக்க தன்னை ஒரு தேசியவாதியாகவும் கருதினார் காட்டிக்கொண்டார். 1935ல் விவசாயமும் தேசபக்தியும் (Agriculture and patriotism) எனும் நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலை நான் 1970 களில் வாசித்தேன். அதில் மரபு ரீதியான சிறிய பண்ணை விவசாயத்திற்கு நவீன முறையில் புத்துயிரளிப்பது பற்றிக் குறிப்பிட்டார். அவரே 1938ல் அரச உதவியுடனான குடியேற்றத்திட்டம் எனும் மசோதாவை அரசசபையில் சமர்ப்பித்தார். அதேசபையில் அங்கத்தவர்களாக இருந்த இடதுசாரிகளான கலாநிதி என்.எம் பெரேராவும், பிலிப் குணவர்த்தனாவும் அந்த மசோதாவை எதிர்த்து வாதாடினர். அவர்களின் கருத்துக்களுக்கு டி.எஸ் சேனநாயக்கவின் மகனும் அரசசபை அங்கத்துவருமான டட்லி சேனநாயக்க கொடுத்த பதில் அந்த மசோதாவின் பின்னிருந்த வர்க்க நலனை வெளிக்காட்டியது. இந்த நாட்டில் வறுமையும் தொழில்வாய்ப்பின்மையும் நிலவுவது  “வர்க்க வெறுப்புணர்வு” வளர்வதற்குச் சாதகமான நிலையை உருவாக்கும். அத்தகைய நிலை உருவாகாது தடுப்பதை றுவான் வெல அங்கத்தவர் (என்.எம். பெரேரா ) விரும்ப மாட்டார் என்பதில் சந்தேகமில்லை எனக் கூறினார் டட்லி (இந்த விவாதத்தில் இடம் பெற்ற உரைகளின் அறிக்கையை ஒரு ஆய்வுக்காக நான் 1980ல் வாசித்தேன் ). அப்போது குடியேற்றத்திட்டங்களுக்கும் இனப்பிரச்சனைக்கும் உள்ள உறவு அங்கு ஒரு விவாதப்பொருளாகவில்லை.

ஆயினும் குடியேற்றத்திட்டங்கள் கிழக்கில் – வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலிருந்தே அங்கிருந்து தமிழ், முஸ்லீம் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களும் எதிர்ப்பும் பிறக்கத் தொடங்கியிருந்தன. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே டி.எஸ் சேனநாயக்கவின் குடியேற்றக் கொள்கைக்கு வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் 1949ல் பிரதமர் சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.(கல்லோயா தமிழில் பட்டிப்பளை ஆறு) இத்திட்டத்தின் நீர்தேக்கத்திற்கு  “சேனநாயக்க சமுத்திரம்”  எனப் பெயர் சூட்டப்பட்டமை வரலாற்றுப் புகழ்மிக்க பராக்கிரமபாகு மன்னரின் பெயரில் பொலனறுவையில் உள்ள அழகுமிக்க பாரக்கிரம சமுத்திரத்தை நினைவூட்டுவது போல அமைந்தது. கல்லோயாத்திட்டம் பற்றியும் அதன் அபிவிருத்திரீதியான இனத்துவரீதியான விளைவுகள் பற்றியும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சில உதாரணங்களாக பின்வருவோரின் ஆய்வுகளைக் குறிப்பிடலாம். B.H. Farmer (1957); M. Moore (1985); P. Peeble (1990); Manogaran (1994). கல்லோயாத்திட்டம் போன்ற ஒன்றின் சாத்தியப்பாடு பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னரே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காரியப்பர் என்பவர் கருத்து வெளியிட்டுள்ளார். இது பற்றியும் கல்லோயாத்திட்டத்தின் இனரீதியான தாக்கங்கள் பற்றியும் எஸ்.எச். எம் ஜெமில் 2008 முதலாம் மாதத்தில் நவமணி பத்திரிகையில் பல தகவல்களைத் தருகிறார்.

விவசாயத்தையும் தேசபக்தியையும் இணைத்த டி.எஸ்.சேனநாயக்க அரச உதவியுடன் உலர்ந்த பிரதேசத்தில் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதற்கு சிங்கள இனத்துவ தேசியவாத கருத்தியல் சார்ந்த நியாயப்பாட்டினையும் விளக்கத்தையும் கொடுத்தார். நாட்டின் வடமத்திய, வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள உலர்ந்த பிரதேசமே புராதன சிங்கள நாகரீகத்தின் தொட்டில் என்றும் அங்கே சிங்கள அரசர்கள் கட்டியெழுப்பிய அந்த நாகரீகம் நீர்ப்பாசனப் பொறியியல் நாகரீகம் என்றும் இந்தச் சிறப்பான சிங்கள பெளத்தநாகரீகம் தென் இந்தியாவிலிருந்து வந்த படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டதென்றும் அந்தத் தாயகத்தில் மீண்டும் நீர்ப்பாசன திட்டங்களை அமைத்து இழந்த நாகரீகத்தையும் அடையாளத்தையும் மீட்டெடுப்பது வரலாற்றுத் தேவையென்றும் சொல்லும் கருத்தியலே குடியேற்றத்திட்டங்களுக்கு அரசியல் ரீதியான முக்கியத்துவத்தைக் கொடுத்தது. டி.எஸ்.சேனநாயக்கவின்  “நீண்டகால நோக்குப்” பற்றியும் குடியேற்றத்திட்டங்களின் இனத்துவ மேலாதிக்க அரசியல் நோக்கம் பற்றியும் பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளார்கள். உலர்வலையக் குடியேற்றத்திட்டங்களை ” மீளக் கைப்பற்றலின் புராணக்கதை” ( Myth of Reconquest) என சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். (உதாரணமாக Donald E. Smith 1979; Mick Moore 1985). அதாவது இழந்த ஒரு ஆள்புலத்தினை மீட்பது போன்ற ஒரு மாயை அதேவேளை இது ஒரு நவீன தேசியத்தின் உருவாக்கலின் யதார்த்தமாகிறது.

1987ல் கலாநிதி செறீனா தென்னக்கூன் அவர்கள் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தில் இடம் பெறும் ”அபிவிருத்திச்சடங்குகள் ” பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரையை அமெரிக்க சஞ்சிகையொன்றில் வெளியிட்டார். இதில் அவர் மகாவலித்திட்டத்தின் அபிவிருத்திக் கதையாடலைக் கட்டுடைக்கிறார். திட்டத்தின் அங்குரார்ப்பணத்தின் சடங்குகள் சிங்கள பெளத்த மரபுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதையும் நவீனமயமாக்கல் திட்டம் ஒன்றில் இந்த கலாச்சார ரீதியான சடங்குகளின் இனத்துவ அரசியல் பணியையும் விளக்கி விமர்சிக்கிறார். இவையெல்லாம் உலர்ந்த பிரதேசத்தின்  “மீள்கைப்பற்றலைக்” குறிக்கின்றன.

மகாவலித்திட்டம் பற்றியும் வடக்கு கிழக்கு குடியேற்றத்திட்டங்களின் அரசியல் நோக்கம் பற்றியும் விடயங்களை அறிய விரும்புவோருக்கு 1988ல் மாலிங்க எச். குணரத்ன எழுதிய  For a Sovereign State (ஒரு இறைமையுடைய அரசுக்காக ) என்ற நூலைச் சிபாரிசு செய்கிறேன். குணரத்ன உணர்ச்சியும் உத்வேகமும் கொண்ட ஒரு தேசியவாதி. மகாவலித்திட்டத்தின் குடியேற்றங்களின் திட்டமிடலில், அமுலாக்கலில், இராணுவமயமாக்கலில் தீவிரமான பங்கினை வகித்தவர். தமிழ்ஈழவாதிகளின் தனி நாட்டுத்திட்டத்தை உடைத்துத் தேசத்தின் இறைமையைக் கட்டிக்காக்க வடக்கு கிழக்கின் அரச நிலங்களில் குடியேற்றங்களை அமைப்பதை விட வேறு வழியில்லை என வெளிப்படையாகவும் எழுதியுள்ளார் குணரத்ன. இதற்கூடாக இந்தப் பிரதேசங்களைப் பல்லினமயமாக்கித் தமிழரின் சனத்தொகைச் செறிவைக் குறைத்து அவர்களின் அரசியல் பலத்தை குறைந்த பட்சமாக்க முடியும் எனும் செயற்கையான திட்டத்திற்கு சார்பான வாதமே இது.

இன்று வடகிழக்கில் இராணுவத்தின் ஆதிக்கத்தின் கீழ் பெளத்த கோவில்கள் கட்டப்படுவது,”சிங்கள பெளத்த” வரலாற்று ஆதாரங்களைத் தேடும் “அகழ்வாராய்ச்சி”, புனித பெளத்த பிரதேசப்பிரகடனங்கள் எல்லாம் “மீளக்கைப்பற்றலைப்” புதிய உத்வேகத்துடன் வலியப்படுத்தியிருப்பதன் வெளிப்பாடுகள் போல் படுகின்றன. இவையெல்லாம் புத்தபிரானின் பெயரால் செய்யப்படுவதுதான் பெருந்துன்பியல்.

சுருங்கக்கூறின் வடக்கு கிழக்கின் குடியேற்றத்திட்டங்கள் நிலமற்ற விவசாயிகளை அரசசெலவில் அரசகாணிகளில் குடியேற்றும் திட்டமானது இனமேலாதிக்க அரசின் ஆள் புலத்தின் இனத்துவமயமாக்கல் கொள்கையின் அமுலாக்கலுக்கு உதவுகிறது. நிலமற்ற விவசாயிகளுக்கு நாட்டின் எந்தப்பகுதியிலும் அரச நிலத்தை வழங்குவது நிலமின்மைக்கு ஒரு தற்காலிகத் தீர்வாகலாம். அந்த வகையில் அது நியாயமானதாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் குடியேற்றத்திட்டங்கள் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இனச்செறிவை மாற்றும் நோக்குடன் பெரும்பான்மை இனத்துவ மேலாதிக்கத்தை உறுதியாக்கும் கருவியாகப் பயன்படுத்தபடுவதே பிரச்சனைக்குரியதாகும்.

ஒவ்வொரு அரசாங்கமும் குடியேற்றத்திட்டங்களை தமது கட்சி அரசியல் நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அதேவேளை குடியேற்றக் கொள்கையின் தொடர்ச்சியான அமுலாக்கல் செயற்திறன் மிக்க நிர்வாக இயந்திரத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. குடியேற்றக்கொள்கையின் அரசியல், கருத்தியல் மற்றும் கலாச்சார நோக்கங்களெல்லாம் இந்த நிர்வாக யந்திரத்தினால் உள்வாங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அரசாங்கம் வடக்கு- கிழக்கின் பிரதேசங்களில் புவியியல் ரீதியான மாற்றங்களையோ பெயர் மாற்றங்களையோ அல்லது நிர்வாக ரீதியான மாற்றங்களையோ ஏற்படுத்த முனையும் போது அதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கும் உரிய தகவல்களையும் ஆற்றல்களையும் இந்த நிர்வாக இயந்திரம் கொண்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த பின்னர் இந்த இயந்திரத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. இவை இரண்டும் ஒத்துழைப்பது அவசியமாயிற்று. ஏற்கனவே குறிப்பிட்டது போல் அரசின் நோக்கம் தமிழ்தேசியவாதத்தின் தாயக கோரிக்கையின் அடிப்படையான “அடையாளம்- பிரதேசம் ” எனும் இணைப்பை உடைப்பதே. இந்த வகையில் மணல்ஆறு வெலிஒயாவாக மாறியது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. வட-கிழக்கு இணைப்பின் இனரீதியான, பிரதேசரீதியான தொடர்ச்சியை மீட்க முடியாதவாறு உடைப்பதில் இந்த நிகழ்ச்சி அரசியல், புவியியல் மற்றும் குறியீட்டுக்காரணங்களால் விசேட முக்கியத்துவம் பெறுகிறது.

ஆள்புலத்தின் இனத்துவமயமாக்கல் என்பது மனித குடியேற்றத்தினதும் நிலப்பாவனையினதும் அரசியல்ரீதியான பொறியியல் (Political engineering ) என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. இந்தப் போக்கானது இனத்துவ மேலாத்திக்க ஆட்சியின் உருவாக்கத்தின் ஒரு முக்கிய கருவி என்பதை இஸ்ரேலிய ஆய்வாளரான Oren Yiftachel (2006) இனத்துவ மேலாதிக்க ஆட்சி (Ethnocracy ) பற்றிய தனது நூலில் குறிப்பிடுகிறார். இஸ்ரேலியஅரசு பாலஸ்தீன பிரதேசங்களை யூத மயப்படுத்தி வரும் கொள்கைகள் நடைமுறைகள் பற்றிய அவரது ஆய்வில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் (West Bank) 1976 ல் 3.7 வீதமாக மட்டுமே இருந்த யூதர்கள் 2002 ல் 23.3 வீதமாகப் பெருகிய கதையை விளக்குவதற்கு Ethnocracy எனும் கோட்பாட்டைப் பயன்படுத்துகிறார். Oren Yiftachel யூத இனத்தைச் சார்ந்த முற்போக்கு ஆய்வாளர் என்பதைக் குறிப்பிட வேண்டும். அவருடைய கருத்தில் இஸ்ரேலுடன் ஒப்பிடும் போது வரலாற்றுரீதியில் பலவிதமான வேறுபாடுகள் இருப்பினும் இலங்கை, மலேசியா, எஸ்டோனியா, லத்வியா, சேர்பியா போன்ற நாடுகளும் 19ம் நூற்றாண்டின் அவுஸ்திரேலியாவும் இனத்துவ மேலாத்திக்க ஆட்சிகளைக் கொண்ட நாடுகளாகும்.

இங்கு குறிப்பிட்ட பல்லின நாடுகளில் குறிப்பிட்ட ஒரு இனத்தின் அந்தஸ்தை இன ரீதியில் மற்றைய இனங்களுக்கு மேலாக உயர்த்தி நிறுவனமயமாக்கல் அந்தந்த நாட்டின் சட்டங்களின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளில் தோற்றப்பாட்டில் நவீன முதலாளித்துவ ஜனநாயகப் பொறிமுறைகள் இயங்குவதைக் காணலாம். ஏன் சம்பிரதாயபூர்வமாக மனித உரிமைகளுக்குப் பொறுப்பான நிறுவனங்களைக்கூடக் காணலாம். பத்திரிகைச்சுதந்திரம், பல்அரசியல் கட்சிகளைக் கொண்ட பாராளுமன்றம் போன்றன இருக்கலாம். ஆனால் அதேவேளை பாராளுமன்றத்துக்கூடாக மேலாதிக்கஆட்சி நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிச் சொல்வது வர்க்கஉறவுகள், வர்க்கநலன்கள் முக்கியமற்றுப் போய்விட்டன என்பதாகாது. யதார்த்தத்தில் வர்க்க உறவுகள் இனத்துவமயமாக்கலின் ஆதிக்கத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை. இனத்துவமயமாக்கலை உயர் வர்க்கங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன.

ஒரு இனத்தின் நடுத்தர சமூக மட்டங்களை உள்ளடக்கும் குட்டிபூர்ஷ்வா கூட்டத்தின் ஆதரவைப் பெற இனத்துவமயமாக்கல் ஒரு குறுக்கு வழியாகிறது. சமூக பொருளாதார அசமத்துவங்களுக்கான காரணிகளை இனத்துவமயப்படுத்துவது அந்த இனத்தின் உயர்வர்க்கத்தின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் அதேவேளை அதை இனவாதக் கருத்தியலில் தங்கி நிற்க வைக்கிறது. அரசியலின் இனத்துவமயமாக்கல் ஒரு தொற்று நோய் போல் ஒரு இனத்திடம் இருந்து அதேநாட்டில் வாழும் மற்ற இனங்களையும் பீடிக்கிறது. இந்த வியாதி எந்த இனத்தில் ஆரம்பித்தது என்பது முக்கியமாயிருக்கலாம். ஆனால் அதையும் விட முக்கியமானது அரசஅதிகாரம் எந்த இனத்தைச் சார்ந்தோரிடம் என்பதேயாகும். இத்தகைய சமூகங்களில் இனத்துவத்தின் மேலாட்சித்தன்மைகளை ஒதுக்கி வர்க்க உறவுகளை மட்டும் வைத்து யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாது – குறிப்பாக அரசியல் அதிகாரத்தின் தன்மைகளை, அரச மற்றும் தனியார் முதலீடுகளின் போக்குகளை விளங்கிக் கொள்ள முடியாது.

1990களில் நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளில் இலங்கை அரசின் இனத்துவ மயமாக்கல் (ethnicisation, communalisation) மதச்சார்பின்மையை அழித்தல் (Desecularisation) போன்ற கோட்பாடுகளைப் பயன்படுத்தினேன், Yiftachel இன் சமீபத்திய ஆய்வுகளைப் பார்த்த பின் அவர் பயன்படுத்தும் Ethnocracy எனும் கோட்பாடு எனது கருத்துக்களுக்கும் ஏற்புடையதெனக் கருதுகிறேன். அத்துடன் அந்தக் கோட்பாடு இலங்கை அரசு போன்ற அரசுகளின் உருவாக்கத்தை ஆய்ந்தறியவும் பயன்பட வல்லது.

தமிழ்தேசியவாதமும் தாயகக்கோரிக்கையும்

தமிழர்களும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம்களும் செறிந்து வாழும் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மை இனத்துவ மேலாதிக்கப்புலமயமாக்கலை நோக்காகக் கொண்ட குடியேற்றத்திட்டங்கள் இடம்பெறுவதை அப்பிரதேச மக்கள் எதிர்ப்பது நியாயமானதே. ஆரம்பத்தில் இந்த எதிர்ப்பு தமிழ், முஸ்லீம் மக்களின் அடையாளங்கள் அவர்களின் அரசியல்ரீதியான பிரதிநிதித்துவம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. தெற்கிலே நிலமற்ற விவசாயிகள் தொகை அதிகரித்த வண்ணமாக இருந்ததும் அங்குள்ள நிலமற்றோர் அரச உதவியுடன் உலர்ந்த பிரதேசத்தில் குடியேற பெருமளவில் முன்வரக் காரணமாயிருந்தது. இது ஆளும் கட்சியினால் அரசியல் மயப்படுத்தப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் குடியேற்றத்தின் பின்னால் இருந்த அரசியல் கருத்தியல் குடியேறும் சிங்கள மக்களுக்கும் உள்ளூர் தமிழ் முஸ்லீம் மக்களுக்குமிடையே நல்லுறவை வளர்ப்பதற்கு உதவவில்லை. அத்துடன் கல்லோயா போன்ற குடியேற்றத்திட்டங்களில் தமிழ் முஸ்லீம் விவசாயிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களும் நிரப்பப்படவில்லை எனும் விமர்சனங்களும் எழுந்தன. இதற்குக் காரணம் தமிழரும் முஸ்லீம்களும் எதிர்பார்த்த அளவுக்கு குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்காமையே என அரசாங்க அதிகாரிகள் கூறினர்.

காலப்போக்கில் தமிழ் – முஸ்லிம் அரசியல் வேறுபாடுகள் தலைமை மட்டத்தில் விரிசலை ஏற்படுத்தி இரு இனங்களின் அரசியல் தலைமைகள் வெவ்வேறு திசைகளில் நகர்ந்தன. தமிழ்த்தேசியவாதிகளின் தாயகக்கோரிக்கை தமிழ்மக்களை இனத்துவரீதியில் மையப்படுத்தியே உருவானது. இறுதியில் தனிநாட்டுக்கோரிக்கை பிறந்த பொழுது குறுகிய இனத்துவ தேசியவாதமே அதன் அடிப்படையாயிற்று. இந்த அடிப்படையில் எழுந்த சுயநிர்ணயஉரிமைக் கோரிக்கைக்கு இலங்கைக்குள்ளேயே மற்றைய தமிழ் பேசும் சமூகங்களின் மற்றும் முற்போக்கான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அத்தகைய ஆதரவின் அவசியத்தையும் தமிழ்த்தலைமைகள் உணரவில்லை.

உலர்ந்த பிரதேசத்தில் அரச உதவியுடனான குடியேற்றத்திட்டங்கள் ஒரு சிங்கள பெளத்த இராச்சியத்தின் “மீளக்கைப்பற்றல்” எனும் புராணக்கதையின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றிக் கண்டோம். இதனை எதிர்த்து எழுந்த தமிழ் இனத்துவ தேசியவாதமும் தனக்கேயுரிய புராணக்கதைகளைக் கண்டுபிடித்தது.தமது கருத்தியலை உற்பத்தி செய்வதில் தமிழ்த்தேசியவாதிகள் சிங்களத் தேசியவாதிகளின் அணுகுமுறையைப் பின்பற்றினார்கள் எனத் தோன்றுகிறது.ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியல், சமூக அபிலாஷைகளுக்குத் தமிழ்த்தேசியவாதம் கொடுத்த கருத்தியல்ரீதியான வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது அதன் பிரபல்யமான சுலோகம் “ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன குறை”.

தென்னிந்தியத் தமிழ் படையெடுப்பாளர்களே வடக்குக் கிழக்கில் செழித்தோங்கிய சிங்கள பெளத்த நாகரீகத்தை அழித்தவர்கள் என்றார்கள் சிங்களத்தேசியவாதிகள். தமிழ்த்தேசியவாதிகளின் சுலோகமோ “ஆம் அந்த ஆண்டோரின் பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு” என்பது போல் அமைந்தது. அந்த சுலோகத்திற் கூடாகத் தமிழ்த்தேசியவாதம் சொல்ல முற்பட்ட சேதி வேறு என வாதிடலாம். ஆனால் நடைமுறையில் அதன் அர்த்தம் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்கோஷம் போல் படவில்லை. இந்த சுலோகத்தை அப்போதே தமிழ் இடதுசாரிகள் விமர்சித்தனர் என்பதையும் நினைவுகூர்தல் தகும்.

“ஆண்டபரம்பரை”ச் சுலோகத்தைச் சிங்களத் தேசியவாதிகள் சோழப்பேரரசின் காலகட்டத்துடன் தொடர்பு படுத்தினர். இந்த தொடர்பை வெளிப்படையாக்குவது போல் அமைந்தது விடுதலைப்புலிகள் சோழப்பேரரசின் சின்னத்தையே தாம் நடத்தும் ஈழத்தமிழரின் விடுதலைப்போரின் சின்னமாக்கியமை. வடக்கு கிழக்குத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையின் வரலாற்றுரீதியான நியாப்பாட்டிற்கான அடிப்படையைத் தமிழ்த்தேசியவாதம் விளக்க முற்பட்ட விதம் அதைச் சிங்களத் தேசியவாதத்தின் ஒரு மாற்று வடிவம் போல் காட்டியது. சிங்களத்தேசியவாதம் முன்வைத்த வரலாற்றுக்கதையாடலை மறுதலிக்கத் தமிழ்த்தேசியவாதம் தனது வரலாற்றுக்கதையாடலை மீள் உருவாக்கியது. இந்தப் போட்டி இருசாராரையும் தொடர்ச்சியான பின்னோக்கிய கற்பனார்த்தம் கலந்த வரலாற்றுப்பயணங்களுக்கு இட்டுச் சென்றது. இதில் ஒரு முக்கியமான பொதுத்தன்மை என்னவெனில் வரலாற்று கதையாடலின் உருவாக்கலுக்கு பேரினவாதம் வகுத்த வழிமுறையையே தமிழ்த்தேசியவாதமும் கையாண்டது. ஒன்றின் வரலாற்றுரீதியான உரிமை கொண்டாடலை மறுப்பதற்கு மற்றது தனக்குச் சாதகமான ஆதாரத்தைத் தேடியது. இந்த விவாதத்திற்கு இருசாராரும் வரலாற்றியலாளர்களையும், அகழ்வாராய்ச்சியாளர்களையும் உதவிக்கழைத்தனர். சுயநிர்ணயக் கோரிக்கைக்கான நவீன காரணங்களை மூடிமறைக்கப் பேரினவாதம் கையாண்ட பொறிக்குள் தமிழ்த்தேசியவாதம் மாட்டிக் கொண்டது போலத்தென்படுகிறது. ஆனால் இந்தப் போட்டியோ யதார்த்தத்தில் அமைப்புரீதியான அசமத்துவத்தைக் கொண்டிருந்தது. சிங்களத்தேசியவாதிகளிடம் அரசஅதிகாரம் மட்டுமல்ல அந்த அரசுக்கு சர்வதேச ரீதியான அங்கீகாரமும், ஆதரவும் இருந்தது. உள்நாட்டில் இந்த அசமத்துவமான போட்டிகளின் விளைவுகளை அரசகுடியேற்றத்திட்டங்களிலும் நில அபகரிப்புக்களிலும் காண்கிறோம். தாயகக்கோரிக்கையின் பிரதேசரீதியான அடிப்படை மிகப் பெருமளவில் அரசஉடைமையான நிலமாக இருப்பது பற்றி ஏற்கனவே அறிந்துள்ளோம். அரசாங்கம் இதை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. இது அதிகாரப்பிரிவின் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.

1970 களில் சில தமிழ்அமைப்புகள் வடக்குக் கிழக்கில் அரசின் சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக தமிழ்க்குடியேற்றங்களை உருவாக்கின. இனக்கலவரங்களால் இடம்பெயர்ந்து தவித்த மலையகத்தமிழ்க் குடும்பங்களை இந்த அமைப்புக்கள் குடியேற்றின. இதற்கு ஏற்கனவே சிலரால் 99 வருட குத்தகையில் எடுக்கப்பட்ட அரச காணிகளைப் பயன்படுத்தினர். வடக்கிலும் கிழக்கிலும் இப்படியாகவும் வேறு வழிகளுக்கூடாகவும் குடியேறி இடம்பெயர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் கிராமியக் கூலி உழைப்பாளர்களாகவும், சிறு விவசாயிகளாகவும் தமது வாழ்வாதாரத்தைத் தேடினர்.

இடம்பெயர்ந்த மலையகத்தமிழர்களை வடக்கில் கிழக்கில் குடியேற்றுவதில் தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பங்கு உண்டென உயர்மட்ட சிங்கள நிர்வாக மற்றும் இராணுவஅதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சந்தேகித்தனர். நடைபெறுவது ஒரு “தமிழ் ஈழவாத ஆக்கிரமிப்பு” எனக் கருதினர். இது குணரத்னவின் நூலில் வெளிப்படுகிறது. 1980களில் போரின் வருகையுடனும் மகாவலித்திட்டத்தின் அமுலாக்கலுடனும் 99 வருட குத்தகைக்குப் பெற்ற அரசகாணிகளில் அமைக்கப்பட்ட குடியேற்றங்கள் இராணுவத்தால் அகற்றப்பட்டன. அந்தக் காணிகளுக்கு வழங்கப்பட்ட குத்தகைஉரிமைகளும் இரத்துச் செய்யப்பட்டன.குத்தகைக்கு வழங்கப்பட்ட காரணத்திற்கு மாறாகப் பயன்படுத்தியது சட்டவிரோதம் எனும் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

போரின் விளைவாக வடக்கில் கிழக்கில் பாரிய இடப்பெயர்வுகள் தொடர்ந்தன. இடம்பெயர்ந்தோரில் பெரும்பான்மையினர் தமிழர், அடுத்து முஸ்லீம்களும், சிங்களவர்களும். போர்க்கால இடப்பெயர்வுகளெல்லாம் போரின் எதிர்பாராத விளைவுகள் அல்ல. அரசஇராணுவமும், விடுதலைப்புலிகளும் தமது நோக்கங்களுக்காக வேண்டுமென்றே பொதுமக்களின் இடப்பெயர்வுகளையும் உண்டாக்கினர். இருசாராரும் நடத்திய இடப்பெயர்வுகள் பலரும் அறிந்ததே எனினும் ஒருசில விடயங்களைக் குறிப்பிடுதல் பயன்தரும். வடக்கிலும் கிழக்கிலும் அரசு பொதுமக்களை வெளியேற்றிப் பல உயர்பாதுகாப்பு வலையங்களை உருவாக்கியது. இந்த வலையங்கள் பெருமளவில் இன்னும் தொடர்கின்றன. 1984ல் விடுதலைப்புலிகள் மகாவலித்திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களவர்களைத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலாக அரசாங்கம் குடியேற்றவாசிகளுக்கு ஆயுதங்களும், ஆயுதப்பயிற்சியும் வழங்கியது. 1990 பத்தாம் மாதம் விடுதலைப்புலிகள் வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லீம்மக்களை வெளியேற்றியதும் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் காத்தான்குடியில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களைச் சுட்டுக் கொன்றதும் தமிழ் தேசியவாதத்தின் குறுகிய இனவாதத்தையும் இராணுவவாதத்தையும் காட்டும் சம்பவங்களாயின.

உள்நாட்டுப்போரின் விளைவால் வடகிழக்கின் சனத்தொகையில் பெரும்மாற்றங்கள் ஏற்பட்டன. தமிழர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் இனரீதியில் முக்கியமான புவியியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குடியேற்றத்திட்டங்களினாலும் நிரந்தர இடம்பெயர்வுகளினாலும் தமிழர்தாயகம் எனப்படும் பிரதேசம் மீள முடியாத மாற்றங்களைக் கண்டுள்ளது. வெளிநாடுகளை நோக்கிய நகர்ச்சி ஒரு பெரிய புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்தை உருவாக்கியுள்ளது. Tamil Diaspora என அழைக்கப்படும் இச்சமூகத்தை தமிழ் சிதறுகைச்சமூகம் எனத் தமிழில் குறிப்பிடலாம் என்பது பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தாகும். இந்த சர்வதேசப்புலப்பெயர்வின் உள்ளூர்தாக்கங்கள் எல்லாமே நல்லவை எனக்கொள்ள முடியாது. நன்மைகள் தீமைகள் இரண்டையும் கொண்ட ஒரு கலப்பு எனலாம். இவை பற்றி ஆழப்பார்ப்பது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. சர்வதேச புலப்பெயர்வினால் வந்த “காசாதாரப் பொருளாதாரம்” ( Remittance economy) போர்க்காலத்திலும் அதற்குப்பின்னரும் பலருக்கு பயனளித்துள்ளது. கணிசமான தொகையினர் வடக்கிலிருந்து நிரந்தரமாக தெற்கில் குடியேறவும் இது உதவியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் தங்கியிருக்கும் குடும்பங்கள் பலவற்றில் நுகர்வுவாதம் தலைதூக்கியுள்ளதையும் உழைப்பின் பெறுமதி பற்றிய போதிய உணர்வின்மையின் அறிகுறிகளையும் காணலாம். மறுபுறம் போருக்குப் பின்பும் மாற்றுவழிகளால் போர் தொடரும் நிலையும் வெளிநாட்டுத் தொடர்புகளும் சர்வதேச நகர்ச்சியில் ஆழமான விருப்பினையும் நம்பிக்கையையும் தமிழர் மத்தியில் பதித்துள்ளன. இந்தப் போக்கிற்கும் தாயக்கோரிக்கைக்கும் முரண்பாடு இல்லையா?

இன்றைய வடக்கும் கிழக்கும் முன்பைவிட பல்லினமயமாகி வருகிறது. இலங்கையின் தெற்கும் – குறிப்பாக மேல் மாகாணம் – முன்பைவிடப் பல்லினமயமாகியுள்ளது. வடக்கு கிழக்கு இப்போதும் தமிழ் பேசுவோர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாக இருப்பினும் அங்கு ஏற்பட்டுள்ள புவியியல் ரீதியான மாற்றங்களையும் அவற்றின் எதிர்காலப்போக்குகளையும் கருத்தில் எடுத்தல் அவசியம். தமிழர் ஆரம்பத்தில் கோரிய தாயகத்தின் இன்றைய நிலை என்ன? நிலத்திற்கும் தேசிய இனப்பிரச்சனைக்குமிடையிலான உறவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையே வடக்குக்கிழக்கின் அரசியல் புவியியலும் அங்கு இராணுவ அதிகாரத்தின் கீழ் இடம்பெறும் நிலஅபகரிப்புக்களும் அபிவிருத்தி, தேசியபாதுகாப்பு எனும் காரணங்களால் ஏற்படும் இடப்பெயர்வுகளும் காட்டுகின்றன.

போருக்குப் பின்னரும் முன்புபோல் வடக்குக்கிழக்கில் இராணுவம் தனக்குத்தேவையான நிலத்தைச் சுவீகரித்துத் தன் விருப்பப்படி பயன்படுத்தி வருகிறது. அரசகாணிகளைப் பொறுத்தவரை அரசாங்கம் அவற்றை வழமைபோல் குடியேற்றத்திட்டங்களுக்கு ஒதுக்க முடியும். அதைவிட இப்போது நடைமுறையிலிருக்கும் நவதாராள பொருளாதாரக் கொள்கைப்படி பயன்பாடுமிக்க நிலவளங்களை தனியார்துறைக்குக் கையளிக்க முடியும். இவை இரண்டுமே நடைமுறையிலிருக்கும் கொள்கைகள். இன்னொருபுறம் அரசாங்கம் சில காணிகளை பெளத்த புனிதபிரதேசங்களாகப் பிரகடனமப்படுத்தியுள்ளது. இந்தப் போக்குகள் வடக்கு கிழக்கின் இனப்புவியியலில் நிலத்தின் உடைமை உறவுகளில், நிலத்தின்பாவனையில், நிலத்தோற்றத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றன. இவை மக்களின் பாதுகாப்பில், வாழ்வாதாரங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன? அவற்றின் நன்மை தீமைகள் என்ன? எனும் கேள்விகள் முக்கியத்துவம் பெறும் அதேவேளை இன்னொருமட்டத்தில் இந்தப் போக்குகள் தேசியஇனப்பிரச்சனையின் உள்ளடக்கங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன எனும் கேள்விக்கும் அரசியல்ரீதியில் முகம்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. வடக்கு கிழக்கு முன்பை விடப் பல்லினமயமாகியுள்ளதன் மறுபக்கம் அங்கு இனங்களுக்கிடையிலான உறவுகள் மேலும் விரிசலடைந்துள்ளமையாகும். நிலம் மற்றும் கரையோர வளங்கள் கடற்றொழில் தொடர்பான பிரச்சனைகள் மூன்று இனங்களுக்குமிடையிலான சிக்கலான முரண்பாடாகிவிட்டது. இது கிழக்கில் மிகவும் ஆழமடைந்துள்ளது. நிலவளங்கள் தொடர்பான பிரச்சனைகளை இனத்துவமயமாக்கிய அதே அரசு இனங்களுக்கிடையிலான நிலப்பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகவும் செயற்படுகிறது. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பரஸ்பர மரியாதை போன்றவை அருகிக் கொண்டு போவதற்கு நிலம் மற்றும் கரையோரக் கடல்வளங்கள் தொடர்பான உரிமைப் பிரச்சனைகள் ஒரு பிரதான காரணமாகும். தேசியஇனப்பிரச்சனையும், வடக்குக் கிழக்கு மக்களின் சீவனோபாயப் பிரச்சனையும் மேலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து விட்டன.

ஏற்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார, இனப்புவியியல் மாற்றங்களை நோக்குமிடத்து தேசிய இனப்பிரச்சனையின் இன்றைய நிலை பற்றிய மீள் சிந்திப்பு அவசியமாகிறது. நியாயமான அரசியல் தீர்வை நோக்கிய வகையில் தேசிய இனப்பிரச்சனையின் மீள்சட்டகமயமாக்கல் அவசியம் என்பதும் எனது கருத்தாகும். இது பற்றிய திறந்த கருத்துப்பரிமாற்றங்கள், விவாதங்கள் தேவை. இதை மனதில் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய சில பொதுவான கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

ஒரு திறந்த விவாதத்தை நோக்கி

இலங்கையின் தேசியஇனப்பிரச்சனையின் இன்றைய வடிவமும் உள்ளார்ந்த தன்மைகளும் என்ன? வடக்குக்கிழக்கு மக்களின் சுயநிர்ணயஉரிமையை ஒரு கோரிக்கையாக முன்வைத்த காலத்தின் நிலைமைகளுடன் ஒப்பிடும் போது இன்றைய நிலைமைகளை எப்படி விளங்கிக் கொள்ளலாம்? இலங்கையில் தேசியஇனப்பிரச்சனை வடக்குக்கிழக்குத் தமிழ்மக்களின், முஸ்லீம்மக்களின் உரிமைகளைப் பற்றிய பிரச்சனை மட்டுமின்றி அதற்கும் அப்பால் மலையகத் தமிழ்மக்களினதும், தெற்கிலே பரந்து வாழும் தமிழ்பேசும் மக்களினதும், உரிமைகளையும் பற்றியது என்பதை மறந்து வடக்குக்கிழக்கில் வாழும் மக்களின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசமுடியுமா? இனரீதியில் இனத்துவ மேலாதிக்க அரசினால் இரண்டாம்தர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சமூகங்களின் கோரிக்கைகளை இணைத்து அரசியல்ரீதியில் சிந்திப்பது இன்றைய தேவை இல்லையா? இலங்கையில் தேசியஇனப்பிரச்சனை என ஒன்றில்லை இருந்தது பயங்கரவாதப்பிரச்சனையே, அது தீர்க்கப்பட்டு விட்டது எனும் கருத்தும், உணர்வும் ஆழப்பதிந்திருக்கும் சிங்களமக்களுக்கு வடக்கு கிழக்கின் உண்மையான நிலவரங்களையும், இனரீதியில் தமிழ்பேசும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் எடுத்து விளக்குவது அவசியமில்லையா? இது ஒரு பெரும் சவால் மிக்கது. அதேவேளை அவசியமானது என்பதே எனது கருத்து.

வடக்குக்கிழக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் குறிப்பாக இனப்புவியியல் ரீதியான மாற்றங்களைப் பார்க்கும் போது முன்னைய நிலமைகளுக்கு ஒருபோதும் திரும்பிப் போக முடியாது எனும் உண்மை தெளிவாகிறது. இன்றைய உடனடித் தேவைகளில் ஒன்று தொடர்ந்தும் இனத்துவ மேலாதிக்க நோக்கில் அரச உதவியுடனான குடியேற்றத்திட்டங்களும் அரசநிலத்தின் உபயோகம், உரிமை பற்றிய ஒருதலைபட்சமான பிரகடனங்களும், மக்களின் சம்மதமின்றி நில வளங்களைப் பெருமூலதனத்திடம் கையளிக்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். இதை ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மற்றைய தமிழ்பேசும் இனங்களின் சிங்களமக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு அரசியல் சக்திகளின் ஆதரவைப் பெறும் வகையில் முன்வைப்பது உடனடித் தேவையாகும். இராணுவமயமாக்கல் அத்துடன் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதும் இத்தகைய ஒரு ஜனநாயக உரிமைக் கோரிக்கையே.

இன்றைய இலங்கைஅரசு ஒரு ஒற்றைஆட்சிஅரசு மட்டுமல்ல அது ஒரு இனத்துவ மேலாதிக்க மயப்படுத்தப்பட்ட, இராணுவமயப்படுத்தப்பட்ட, சகல மக்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்கும் அரசாக மாற்றம் கண்டுள்ளது. ஜனநாயகத் தோற்றங்களை வெளிஉலகிற்கு காட்டிக் கொண்டு அதிகாரவாத அரசாக மாறியுள்ளது. இன்றைய ஆட்சியில் நீதித்துறை, நிர்வாகத்துறை, உயர்கல்வித்துறை நிறுவனங்களின் முகாமை அனைத்துமே மோசமாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.அரசாங்கத்தின் பொருளாதாரக்கொள்கை பெருமூலதனத்திற்கும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கும் நாட்டின் வளங்களை அபகரிக்கும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கும் அதேவேளை உழைக்கும் வர்க்கங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பெரும் சுமைகளைப் போட்டுள்ளது.

இனமேலாதிக்க மயப்படுத்தப்பட்ட ஒற்றைஆட்சி அரசின் மீள்அமைப்பின்றி தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணமுடியாது. இது ஜனநாயகத்தை அர்த்தமுள்ள வகையில் நிலைநாட்டுவதற்கும் இனங்களிடையே சமத்துவத்தின் அடிப்படையில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் அமைதியைக் கட்டி எழுப்பவும் இன்றி அமையாததாகும்.அதேவேளை மேற்குறிப்பிட்ட நிலைமைகளின் விளைவுகள் இன,மத எல்லைகளையும் தாண்டி சகல இன மக்களையும் பாதித்துள்ளன. இவையெல்லாம் இன்று ஒரு பரந்த ஜனநாயக அணியை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தைத் தந்துள்ளன. இத்தகைய ஒரு அணியின் உருவாக்கத்துடனேயே தேசியஇனப்பிரச்சனையின் அரசியல் தீர்வுக்கான போராட்டமும் இணைய வேண்டும்.இத்தகைய ஒரு அணுகுமுறை சாத்தியமில்லை எனச் சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் அதை எப்படிச் சாத்தியமாக்குவது என்பதே ஆக்கபூர்வமான கேள்வியாகும். மரபுரீதியான எதிர்க்கட்சிகளால் மாற்றத்திற்கான போராட்டங்களை எடுத்துச் செல்ல முடியாது என்பது தெளிவான உண்மை. இன்று ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் மாற்று அமைப்புகளுக்கூடாக வளர்க்ககூடிய சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன. இப்போது நடைபெறும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களின் வேலைநிறுத்தமும் மாணவர்களின் போராட்டமும் பரந்துபட்ட முறையில் பொதுமக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளன. நீண்ட காலத்திற்குப் பின் இது ஒரு நல்ல அறிகுறி. நிலஅபகரிப்புக்கெதிரான போராட்டங்கள், காணாமல்போனோர் பற்றிய தகவல்களைத் தேடும் இயக்கங்கள், வெள்ளைவான் கடத்தல்களை எதிர்க்கும் போக்குகள் போன்றவை பல்லினங்களையும் சார்ந்தவை. இந்தச் சூழ்நிலை தமிழ்பேசும்மக்களின் உரிமைகள் பற்றி நியாயமான அரசியல்தீர்வு பற்றிய கருத்துப்பரிமாறல்களுக்குச் சாதகமானதெனும் நம்பிக்கை பிறக்கிறது. இதற்கான அறிகுறிகள் இருக்கவே செய்கின்றன. ஒரு அரசியல் திட்டத்தை முன்வைப்பது எனது நோக்கமல்ல. அது எனது ஆற்றலுக்கு அப்பாற்பட்டதென்பதை நான் அறிவேன். கடந்த காலத்தையும், இன்றைய நிலமைகளையும் விமர்சன ரீதியில் – சுய விமர்சன ரீதியில் – ஆராய்ந்து அரசியல் ரீதியில் முன்னே செல்லும் வழிகளுக்கான தேடலைப் பற்றிய ஒரு திறந்த விவாதத்தின் தேவையை எடுத்துக் கூறுவதே எனது நோக்கம். 

[1] இந்தக்கட்டுரை சமகாலம் 2012 October 01-15 இதழில் பிரசுரிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *