சமுத்திரன்
(உயிர்மெய் சித்திரை- ஆனி 2006)
இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பின்னர் அரசுகளுக்கிடையிலான யுத்தங்களை விட உள்நாட்டு யுத்தங்களே அதிகரித்துள்ளன. இந்த உள்நாட்டு யுத்தங்கள் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நிழல்யுத்தத்தின்( Cold war) முடிவுக்குப்பின் அதாவது சோவியத்முகாமின் மறைவுக்குப்பின் கிழக்கு ஐரோப்பாவிலும் இடம்பெற்றுவந்துள்ளன அல்லது இடம்பெறுகின்றன. பல ஆய்வுகளின்படி அரசுகளுக்கிடையே ஏற்படும் யுத்தங்களைவிட உள்நாட்டு யுத்தங்கள் பொதுவாக நீண்டகாலம் தொடர்வனவாகவும் சுமூகமான தீர்வைப் பெறுவதில் மிகவும் கடினமானவையாகவும் இருக்கின்றன. உள்நாட்டுயுத்தம் எனும்போது அது ஒருவித வெளிநாட்டுத் தொடர்புமற்ற தனியான நிகழ்வெனக் கொள்ள முடியாது. ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்திற்கும் சர்வதேச தொடர்புகளுண்டு. அதன் தொடர்ச்சிக்கும் சிக்கல்களுக்கும் தீர்வின் தடைகளுக்கும் வெளிவாரிச் சக்திகளின் பொறுப்புகளும் தாக்கங்களும் உண்டு.
உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளும் யுத்தங்களும்
சர்வதேசமயமாக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் யுத்தங்களை அரசியல் ரீதியில் தீர்த்து வைப்பதிலும், சமாதானத்தை உருவாக்குவதிலும் சமூக பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளை வகுப்பதிலும் பல்பக்க நிறுவனங்களும் முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்கியுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் கட்டத்தில் இந்தப் போக்கானது சமீபத்திய காலங்களில் மிகவும் பலம் பெற்றுள்ளது. ஆகவே ஒருபுறம் உள்நாட்டு முரண்பாடுகளும், யுத்தங்களும் சர்வதேசமயமாக்கப்படுகின்றன. மறுபுறம் அவற்றின் தீர்வுகளுக்கான வழிமுறைகளும் செயற்பாடுகளும் சர்வதேச மயமாகின்றன. இந்தக் கட்டுரையில் இந்தப் போக்குகள் பற்றிய சில பொதுப்படையான கருத்துக்களைக் குறிப்பிட்டு உரையாட விரும்புகிறேன்.
- உள்நாட்டு யுத்தங்களும் ‘சர்வதேச சமூகமும்’
இன்றைய உலகில் மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயக நாடுகள் அமைதியின் உறைவிடமாகவும் அதே உலகின் மற்றைய பகுதி உள்நாட்டுக் கொந்தளிப்புக்கள் மிகுந்ததாகவும் இருப்பதாகச் சில வலதுசாரி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி Bush ன் தத்துவத்தின்படி ஜனநாயகங்களிடையே போர்கள் இடம்பெறுவதில்லை ஏனெனில் அவை நாகரீகமான வழிகளில் தமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்கின்றன. வரலாறு பற்றி Bushன் அறியாமை உலகறிந்தது. ஆனால் ‘ஜனநாயகங்கள் போர் செய்வதில்லை’ என்ற சுலோகம் அறியாமையின்பால் வந்ததல்ல. அது இன்றைய உலகமயமாக்கலின் நடத்துனர்களின் மேலாட்சித்திட்டத்தின் கவர்ச்சிகரமான கொள்கைப் பிரகடனம் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் இன்றைய உலகில் அமைதியின் உறைவிடமெனப்படும் வளர்ச்சிபெற்ற முதலாளித்துவ நாடுகளின் முகாமின் வரலாறு பல தொடர்ச்சியான உள்நாட்டு யுத்தங்களுக்கூடாகவும், இரண்டு உலக யுத்தங்களுக்கூடாகவும் பிறந்தது. இன்றைய ‘அமைதி நாகரீகத்தின்’ வரலாறு வன்செயல்களும் யுத்தங்களும் மிகுந்தது. ஒருவகையில் பார்த்தால் இந்த வரலாறுதான் வேறு வடிவங்களில், போக்குகளில் தொடர்கிறது எனக் கூறலாம். அதுமட்டுமல்ல ‘ அமைதி நாடுகளுக்கும்‘ யுத்தங்கள் இடம்பெறும் மற்றைய பகுதிகளுக்குமிடையிலான உறவுகள் முக்கியமானவை.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்திற்கும் அதற்கேயுரிய சர்வதேச தன்மைகள், தொடர்புகள் உண்டு. 1945-1989 காலகட்டத்தில் மூன்றாம் உலகநாடுகளின் விடுதலைப்போராட்டங்கள், புரட்சிகள் பகிரங்கமான சர்வதேச உறவுகளைக் கொண்டிருந்தன. ஒருபுறம் சோவியத்தயூனியன், புரட்சிக்குபின்னான சீனா, கியூபா போன்ற நாடுகள் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தன. மறுபுறம் அமெரிக்க உளவு ஸ்தாபனமாகிய CIA இந்தப் போராட்டங்களுக்கு எதிராக சர்வாதிகார பாசிச அரசுகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. அதுமட்டுமல்ல சோவியத்யூனியன், கியூபா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக சீர்குலைவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. வியட்நாமில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு, நிக்கரகுவாவின் புரட்சிகர அரசுக்கெதிராக உருவாக்கி உதவிய எதிர்ப்புரட்சி இயங்கங்கள், சிலியில் ஜனநாயகரீதியில் ஆட்சிக்குவந்த இடதுசாரி அரசாங்கத்தைப் பாசிச ராணுவச் சதிக்கூடாக கவிழ்த்தது போன்ற அமெரிக்க ஏகாதிபத்தியச் செயற்பாடுகளை மறக்க முடியுமா ?
சரி, நிழற்போருக்குப் பின் நடப்பது என்ன? சோவியத்முகாமின் மறைவிற்குப் பின் ‘யுத்தங்கள் வரலாறாகிவிட்டன நிரந்தர அமைதிக்கான காலம் தோன்றிவிட்டது’ போன்ற பிரச்சாரங்கள் வெளிவந்தன. ஆனால் உலக யதார்த்தங்களோ வேறாக இருந்தன. கடந்த இருபது வருடங்களாக செல்வந்தநாடுகள் பலவற்றின் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதியும் முன்பை விட அதிகரித்துள்ளன. ஐநாவின் பாதுகாப்புச்சபையின் (Security Council) அங்கத்துவ நாடுகளான USA , ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய மூன்றும் உலக ஆயுத ஏற்றுமதியின் 80 வீதத்திற்குப் பொறுப்பாயுள்ளன. USA உலக ஆயுத ஏற்றுமதியின் 50 வீதத்தைக் கொண்டுள்ளது. ரஷ்யா அதற்குப் போட்டியாகவுள்ளது. உலக ஆயுதவிற்பனையின் 60 வீதம் வளர்முக (மூன்றாம் உலக) நாடுகளுக்குச் செல்கிறது. இது சட்டபூர்வமான வர்த்தகம். கறுப்புச்சந்தைக்கூடாக இடம்பெறும் ஆயுதக்கொள்வனவுகளும் பெருமளவில் வளர்முக நாடுகளுக்குத்தான் சென்றடைகின்றது.
சட்டபூர்வமாக வளர்முக நாடுகளுக்குச் செல்லும் ஆயுதங்களின் ஒருபகுதி பல வழிகளினூடாக வேறு நாடுகளுக்கும், ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இயக்கங்களுக்கும், பாதாள உலக குழுக்களுக்கும் விற்கப்படுகிறது. பல ஆயுத விற்பனைத் தரகர்கள் அரசாங்கங்களுக்கும், அவற்றை எதிர்த்துப் போராடும் இயக்கங்களுக்கும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய உதவுகிறார்கள். ஜனநாயகங்கள் போருக்குப் போவதில்லை என்றும் யுத்தம் தேவையற்றது என்றும் கூறும் நாடுகள் ஆயுத உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் ஈடுபட்டிருப்பது அவற்றின் இரட்டை நியமங்களைக் காட்டுகிறது. இதில் ஆச்சரியம் தரும் விடயமென்னவெனில் உலக சமாதானத்தூதுவராக, நடுவராக, அனுசரனையாளராகச் செயற்படும் நோர்வேயும் ஆயுதஉற்பத்தியில் ஈடுபட்டுள்ளதென்பதாகும். நோர்வேயின் ஆயுதஉற்பத்திச்சாலையின் அரைவாசிப் பங்குதாரராக நோர்வே அரசு விளங்குகிறது. இந்தத்துறையில் 5000 பேர் வரை வேலைவாய்ப்புப் பெற்றுள்ளார்கள். நோர்வேயின் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அதாவது தலா ஆயுத ஏற்றுமதியைப் பொறுத்தவரை நோர்வே உலகின் பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாகிறதென அறிக்கைகள் கூறுகின்றன. இது நோர்வேயின் தொழிற்கட்சிக்கோ அல்லது தேசிய தொழிலாளர் அமைப்பிற்கோ ஒரு பிரச்சனையாகப்படவில்லை. இத்தகைய இரட்டை நியமப்போக்கு நோர்வேயின் தனிச்சொத்தல்ல. தனது யாப்பு சமாதானயாப்பு அதன்படி ஆயுதம் விற்பது சட்டவிரோதமானது எனச் சொல்லிக் கொள்ளும் ஜப்பான் பிலிப்பைன்சுக்கும் வேறு சில நாடுகளுக்கும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்துள்ளதென்பதற்கும் ஆதராங்களுண்டு. ஜப்பான் இரகசியமாகச் செய்வதை நோர்வே சட்டபூர்வமாகச் செய்கிறது. ஆனால் இரு நாடுகளும் சமாதானம் பற்றிப் பேசுவதைக் கேட்போருக்கு அவை ஆயுதவிற்பனையில் ஈடுபட்டிருப்பது நல்ல செய்தியாக இருக்க மாட்டாது. ஏனெனில் அவை விற்கும் ஆயுதங்கள் எப்படியோ யுத்த தேவைகளுக்கு உதவக்கூடும்.
ஆயுதம் சமாதானத்தை அடைய உதவமாட்டாது என்பது எனது விவாதமல்ல. ஆயுதப்போராட்டங்கள் எல்லாமே தவறானவை என்பதும் எனது நிலைப்பாடல்ல. நான் இங்கு விமர்சிப்பது யுத்தம் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது எனும் நாடுகளின் நடைமுறையைத்தான். இந்த வகையில் நோர்வேயின் நடைமுறை விசித்திரமானது.
இரட்டை நியமங்களாகத் தெரியும் இந்த சர்வதேசப்போக்கின் உண்மையான அரசியல் என்ன?
எனது அபிப்பிராயத்தில் சமாதானம் நாகரீகமானது, ஜனநாயகம் சார்ந்தது, யுத்தம் அநாகரீகமானது, ஜனநாயகத்திற்கு மாறானது எனும் பிரச்சாரம் ஒரு கருத்தியில் ரீதியான பொய்ப்பிரச்சாரம். இங்கு அடிப்படையான விடயம் என்னவெனில் பலாத்கார இயந்திரமும், கருவிகளும் தேசிய மட்டத்திலும் சர்வதேசமட்டத்திலும் தமக்குச் சார்பான, தமது அணியிலுள்ள அரசுகளின் தனியாதிக்கத்தில் இருக்க வேண்டும் என்பதே USA ன் தலைமையிலுள்ள உலக அதிகாரக் கூட்டணியின் நோக்கமும் திட்டமுமாகும். அத்தகைய அரசுகளைப் பலப்படுத்துவதே இந்தக் கூட்டணியின் கொள்கை நிலைப்பாடு. ஆயினும் இதற்குப் பல சவால்கள் கிளம்பியுள்ளன. உள்நாட்டு யுத்தங்களைப் இந்த நோக்கிலேயே உலக அதிகார சக்திகள் அணுகுகின்றன. இதனால்தான் ‘பயங்கரவாதத்திற்கு எதிராக ‘ யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படிச் சொல்வது வல்லரசு முகமாமின் முழுத்திட்டமும் ராணுவ ரீதியானது என்பதல்ல. முதலாளித்துவ அரசின் பலாத்காரத் தனியாதிக்கம் உறுதி செய்யப்படுவது ஒரு முக்கிய தேவையாக இருக்கும் அதேவேளை அரசினதும் ஆள்பரப்பின் அரசியற் பொருளாதார அமைப்புகளினதும் நியாயப்பாட்டை உறுதிசெய்யும் மேலாட்சித்திட்டமும் (Hegemony) முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மேலாட்சி சிந்தனைரீதியானது, கலாச்சார ரீதியானது. தனியுடமை, தனிமனிதசுதந்திரம் போன்ற விழுமியங்களை உள்ளடக்கிய ஒரு மேலாட்சித்திட்டம் இது. இது சமாதானம் – ஜனநாயகம் அபிவிருத்தி என்னும் இணைப்பாக முன்வைக்கப்படுகிறது. இதன் தோற்றம் நியாயமானதாகவே படுகிறது. இந்த நோக்கங்களை யார் எதிர்ப்பார்கள்? இவை உலக மயமாக்கலின் நல்ல விளைவுகளாகுமென்றால் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும்? இவை நியாயமான கேள்விகளே.
பிரச்சனை இந்த திட்டத்தின் அடிப்படைகளிலும் நடைமுறைகளிலும்தான்.
- சந்தை ஜனநாயகத்தின் அடிப்படையில் சமாதானமும் அபிவிருத்தியும்
உள்நாட்டு யுத்தங்களின் தீர்வும் அதைத் தொடர்ந்து சமாதானத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதையும் சர்வதேசமயமாக்கும் திட்டம் கடந்த பத்தாண்டுகளின்போதே முழுமையான ஒரு பொதியாக உருவாக்கம் பெற்றது. தற்போது பாதுகாப்பும் அபிவிருத்தியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு செப். 11 க்குப்பின் (9/11) மிகவும் முன்னுரிமை பெற்று சர்வதேசக் கொள்கையாகிவிட்டது. USA ன் தலைமையிலான OECD நாடுகள் இந்தக் கொள்கையைப் பல வழிகளில் அமுல் நடத்துகின்றன. இதற்கு அவை ஐ. நா, உலகவங்கி போன்ற பல்பக்க நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றன. உலக வல்லரசு முகாமின் நலன்களுக்கமைய உருவாக்கப்பட்ட இந்தப் பொதியின்படி சமாதானம் என்பது ‘பயங்கரவாதம்‘ முற்றாக அகற்றப்பட்டு சுய போட்டிச்சந்தைப் பொருளாதாரத்துக்கு வேண்டிய நிறுவனரீதியான சீர்திருத்தங்களின் அடிப்படையில் ‘ஜனநாயக’ ரீதியில் கட்டியெழுப்பப்பட வேண்டியதாகும். தூய சந்தைப் போட்டி உறவுகளுக்கு அடிப்படை முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த அணுகுமுறையை ‘சந்தை ஜனநாயகம்’ என ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர். நீண்ட காலமாக உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் சமாதானத்தையும், மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு இது உகந்த ஒரு கொள்கையா என்ற கேள்வி எழுவது இயற்கையே. வரலாற்று அனுபவங்களை நோக்கும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் புனர்நிர்மாணத்தில் அரசு முக்கிய பங்கினை வகித்திருப்பதைக் காணலாம். குறிப்பாக சமூக பொருளாதார சந்தர்ப்பங்கள் வருமானம் போன்றவற்றின் அசமத்துவங்கள் மோசமாகத வகையில் நிர்வகிக்கும் பொறுப்பினை அரசு கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இத்தகைய ஒரு சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்திப்போக்கு உள்நாட்டில் நிலைபெறும் அமைதியைக் கட்டியெழுப்ப உதவும் என்பது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கத்தைய நாடுகளினதும், ஜப்பானினதும் அனுபவம். சந்தை ஜனநாயக அணுகுமுறை இதற்கு உதவமாட்டாது என்பதை சமீபத்திய அனுபவங்கள் காட்டுகின்றன. இந்த வழியைப் பின்பற்றி சமாதானத்தையும், சமூகத்தையும் கட்டியெழுப்ப முற்பட்ட கம்போடியா, எல்சல்வடோர், நிக்கராகுவா, மொசாம்பிக், அங்கோலா, ருவாண்டா, பொஸ்னியா போன்ற நாடுகள் பல பிரச்சனைகளுக்குள்ளாகி இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஆய்வுகளின்படி இந்நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி மந்தமாகவும், ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகமாகவும் உள்ளன. அத்துடன் இவையும் வேறு காரணிகளும் ஜனநாயக மயமாக்கலைப் பாதித்துள்ளன. இந்தப் போக்குகள் தொடர்ந்தால் சமூக அமைதி பாழடையும் சமானதானத்துக்கும், மக்கள் நலன்களுக்கும் உதவக்கூடிய முதலாளித்துவ அமைப்பு, சந்தை ஜனநாயகமா சமூக ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறது. இவை இரண்டும் முதலாளித்துவத்துக்குள்ளான மாற்று வழிகள். ஆயினும் இன்றைய உலகமயமாக்கலை வழிநடத்தும் வல்லரசு முகாம் சந்தை ஜனநாயகப் பொதியையே யுத்தத்தாலும் வேறு காரணிகளாலும் பலவீனமடைந்துள்ள நாடுகள் மீது திணிக்கிறது.
உயிர்மெய் சித்திரை- ஆனி 2006