மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – II

சமுத்திரன்

இருபத்திஓராம் நூற்றாண்டில் தொடரும் மாக்சிச சூழலியல் ஆய்வுகளிலும் விவாதங்களிலும் மாக்சின்  வேதியியல்ரீதியான பிளவு பற்றிய கருத்துரு முக்கிய இடத்தை பெறுகிறது. இந்தக்கோட்பாடு இன்றைய உலகின் பிரச்சனைகளை அறிந்து ஆழப்பார்க்க உதவும் வகையில் மேலும் ஆழமாகவும் விரிவாகவும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. விசேடமாக அது இயற்கை விஞ்ஞானத்திற்கும் சமூக விஞ்ஞானத்திற்குமிடையிலான இணைப்பிற்கு உதவியுள்ளது. இன்று வேதியியல்ரீதியான பிளவு சூழலியல் ஆய்வாளர்களால் பல மட்டங்களில் ஆராயப்படுகிறது.  இயற்கையின் இயக்கவிதிகளையும் தன்மைகளையும் விஞ்ஞானரீதியில் அறிதல் மனித விடுதலையின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என மாக்ஸ் வலியுறுத்துகிறார். சந்தர்ப்பசூழ்நிலைகளும் அறியாமையும் மனிதரின் வாழ்வை நிர்ணயிப்பதற்கு மாறாக மனிதரே தமது சந்தர்ப்பசூழ்நிலைகளை நிர்ணயிக்கும் ஆற்றலைப்பெறும்போதே விடுதலையை நோக்கி நகரமுடியும் என்பதும் அவரின் கருத்தாகும். மனித இனம் இயற்கையின் ஒரு அங்கம். மனித இனத்தின் இயற்கை மீதான தங்கிநிற்பு அறுதியானது, நிரந்தரமானது என்பதால் அந்த உறவினை நன்கறிந்து அந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே மனித விடுதலையைத் தேடவேண்டும் என்பது மாக்ஸ் தரும் அறிவுரையாகும்.

ஆயினும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்த பல மாக்சிச சூழலியல் கருத்துக்களும் ஆய்வுகளும் மாக்சின் ‘சமூக வேதியியல்’ மற்றும் ‘வேதியியல்ரீதியான பிளவு’ போன்ற கருத்துருக்களைக் கணக்கிலெடுக்கத் தவறிவிட்டன. அது மட்டுமன்றி அவை சூழல் பிரச்சனை தொடர்பாக மாக்ஸ் எழுதியுள்ள வேறு பல முக்கியமான கருத்துக்களையும் கவனிக்கத் தவறிவிட்டன. இதற்கு ஒரு உதாரணமாக அமைகிறது 1980களில் மாக்சிச சமூக விஞ்ஞானியான  James O´Connor முன்வைத்த பிரபலமான மாக்சிச சூழலியல் அணுகுமறை. இவரது பங்களிப்பில் பயனுள்ள பலகருத்துக்கள் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் கோட்பாட்டுரீதியான அடிப்படைப் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. சமகால விவாதங்களைப் பொறுத்தவரை இவரின் பங்களிப்பு முக்கியமானது என்பதால் அதுபற்றிய சில குறிப்புகளைத்தர விரும்புகிறேன்.

முதலாளித்துவத்தின் ‘இரண்டாவது முரண்பாடு’ – சூழலியல் மாக்சிசத்தின் (ecological Marxism ன்) ஆரம்பப்புள்ளி

  • O´Connor ன் தொடுகோளும் அது தொடர்பான விமர்சனமும்                                

மாக்சிய கோட்பாட்டின்படி உற்பத்தி உறவுகளுக்கும் உற்பத்தி சக்திகளுக்கு மிடையிலான முரண்பாடே முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் அடிப்படை முரண்பாடு. ஆயினும் 1984ல், Capitalism, Nature, Socialism (CNS) எனும் ஆய்வுச் சஞ்சிகையின் நிறுவு ஆசிரியரான James O´Connor சூழலியல் மாக்சிசத்தின் ஆரம்பப்புள்ளி முதலாளித்துவத்தின் இன்னொரு அதாவது ‘இரண்டாவது முரண்பாடு’ தான் எனும் தொடுகோளைப் பின்வருமாறு முன்வைத்து வாதிட்டார்.

முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்தி சக்திகளுக்கும் முதலாளித்துவ உற்பத்திச் சூழ்நிலைகளுக்குமிடையிலான முரண்பாடே சூழலியல் மாக்சிசத்தின் ஆரம்பப்புள்ளியாகும்.

மாக்ஸ் குறிப்பிடும் உற்பத்திச் சூழ்நிலைகள் (conditions of production) பல மட்டங்களில் சூழலுடன் தொடர்புடையவை. O´Connorன் வாதத்தின்படி இந்த இரண்டாம் முரண்பாட்டின் அடிப்படையிலான அணுகுமுறையே பொருளாதார சிக்கல் மற்றும் சோஷலிசத்திற்கான மாற்றப்போக்கு ஆகியவற்றின் மாக்சிச சூழலியல் கோட்பாட்டை உருவாக்க வழிவகுக்கிறது. இது மரபுரீதியான மாக்சிச அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும் அவர் அழுத்திக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை ‘இரண்டாவது முரண்பாடே’ முதல் முக்கியத்துவம் பெறுகிறது. மாக்சியக் கோட்பாட்டின்படி உற்பத்தி சூழ்நிலைகள் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பினை வரைவிலக்கணப்படுத்தும் உற்பத்தி உறவுகளுக்கு வெளிவாரியான அந்தஸ்தினைக் கொண்டுள்ள போதும் மூலதனத்தின் மீளுற்பத்திக்கு அவசியமானவை. O´Connor மாக்ஸ் குறிப்பிடும் மூன்று வகையான உற்பத்திச் சூழ்நிலைகளை இன்றைய சூழலியல் நோக்கில் இனம் காணுகிறார்.

  • பௌதிகரீதியான வெளிவாரி உற்பத்திச் சூழ்நிலைகள்: இன்று இவைபற்றிய கருத்தாடல்கள் சூழல் பிரச்சனைகள் பற்றியன, உதாரணங்கள்: சூழலியல் அமைப்புக்கள் (ecosystems) அவற்றின் செயலாற்றலின் பாதிப்பு, மீவளி மண்டல ஓசோனின் குன்றல், காற்று, நீர், மண் போன்றவற்றின் மற்றும் கடலோர வளங்களின் பாதிப்பு, காலநிலை மாற்றம்
  • தொழிலாளர் பணிபுரியும் சூழ்நிலைகள்: தொழிலாளரின் மனித நன்நிலையை உடல்ரீதியாக, உளரீதியாகப் பாதிக்கும் காரணிகள்; தொழில் புரியும் சூழ்நிலைகள், வாழிடவசதிகளும் வாழ்வு நிலைமைகளும், சுகாதார மற்றும் கல்வி வசதிகள், ஒட்டு மொத்தமாக உழைப்பாளரினதும் அவர்களின் குடும்பத்தவர்களினதும் வாழ்வின் தரத்திற்கும் உற்பத்திச் சூழ்நிலைகளுக்குமிடையிலான தொடர்பு.
  • உற்பத்தி சூழ்நிலைகளின் சமூகக்கூட்டு (communal) ரீதியான அம்சங்கள் – இன்றைய கருத்தாடல்களில் இவை ‘சமூக மூலதனம்’ (social capital) மற்றும் நகர, கிராம உட்கட்டுமானங்களை அடக்கும்

உற்பத்திச் சூழ்நிலைகள் முதலாளித்துவ உறவுகளால் உற்பத்தி செய்யப்படுவதில்லை எனும் மாக்சியக் கருத்தினை வலியுறுத்துகிறார் O´Connor. சூழலைச் சீரழிப்பது, மனித மற்றும் மற்றைய உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பது போன்றவற்றின் செலவுகளை வெளிவாரிப்படுத்துவதன் மூலம் மூலதனம் தனது மீளுற்பத்திக்குத்தானே குந்தகம் விளைவிக்கிறது. இதற்கும் முதலாளித்துவ பொருளாதாரச் சிக்கலுக்கு மிடையிலான உறவினை அறிய ‘இரண்டாம் முரண்பாட்டு அணுகுமுறையே’ பயன் படவல்லது. வழமையான மாக்சிச அணுகுமுறையின்படி முதலாளித்துவ பொருளாதாரச் சிக்கலுக்கு மூலதனத்தின் மிதமிஞ்சியகுவியலால் அதாவது முதலீடு செய்யும் வாய்ப்புக்களின்மையால் வளரும் உபரி மூலதனமே காரணம். இத்தகைய சிக்கல் கேள்வியுடன் தொடர்புடையது. இதற்கு மாறாகத் தான் முன்வைக்கும் (இரண்டாம் முரண்பாட்டு அணுகுமுறை) விளக்கம் நிரம்பலுடன் தொடர்புடையது என்கிறார் O´Connor. இதன்படி மூலதனத்தின் குவியலின் போதாமையே பொருளாதாரச் சிக்கலுக்கு வழிவகுக்கிறது.

இதைப் பின்வருமாறு விளக்குகிறார். தமது தனிப்பட்ட இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டாளர் தாம் பொறுக்கவேண்டிய செலவுகளை இயற்கை, தொழிலாளர் மற்றும் உட்கட்டுமானங்களிடம் வெளிவாரிப் படுத்துகிறார்கள். இந்தத் தனியார் செயற்பாட்டின் கூட்டான பாதகமான விளைவுகள் (சூழலின் சீரழிவு, தொழிலாளரின் நலக்குறைவு, உட்கட்டுமானங்களின் பாதிப்பு) பின்னர் எல்லா முதலீடுகளின் இலாபங்களையும் வீழ்ச்சியடையச் செய்கிறது. இந்த ‘சூழலியல் மாக்சிசப்’ பார்வையில் பொருளாதாரச் சிக்கல் மூலதனத்தின் உற்பத்திக்கும் உற்பத்திச்சூழ்நிலைகளுக்குமிடையிலான முரண்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த முரண்பாட்டைக் கையாள்வது மூலதனத்திற்கு அவசியமாகிறது. இந்தச் சிக்கல் மூலதனத்தையும் அரசையும் இணைந்து செயற்பட நிர்ப்பந்திக்கிறது. பிரச்சனைகளின் முகாமைக்குத் சந்தையில் மாத்திரம் தங்கியிருக்க முடியாது. ஆனால் முடிவு உற்பத்தி சூழ்நிலைகளின் சீரழிவிற்கு எதிரான இயக்கங்களின் பலம் மற்றும் அரசியல் நிலைமகளில் தங்கியுள்ளது.

மிகை உற்பத்தியும் குறை உற்பத்தியும் பரஸ்பரம் பிரத்தியேகமான போக்குகள் அல்ல எனக் கூறும் O´Connor இவ்விரண்டினையும் இணைத்து ஆராய்ந்தால் மரபுரீதியான தொழிலாளர் அமைப்புக்களினதும் சோஷலிச இயக்கங்களினதும் வீழ்ச்சி மற்றும் ‘புதிய சமூக இயக்கங்களின்’ எழுச்சி பற்றி விளங்கிக்கொள்ள உதவும் எனவாதிடுகிறார். ஆயினும் இந்த விடயம் பற்றிய அவரது கோட்பாட்டுரீதியான விளக்கம் குழப்பமாக இருக்கிறது. இது பற்றிப் பின்னர் பார்ப்போம். அவர் ‘post-Marxism’ எனப்படும் ‘மாக்சிசத்திற்குப் பின்னைய வாதத்தை’ விமர்சித்து அந்தப் போக்கே உற்பத்திச்சூழ்நிலைகள் தொடர்பான கருத்தாடல்களின் ஏக தலைமையைக் கைப்பற்றி ‘தீவிர ஜனநாயகம்’ மற்றும் ‘பல்வர்க்க’ ‘புதிய சமூக இயக்கங்கள்’ போன்றவையே சமூகமாற்றத்தின் சக்திகள் எனும் சிந்தனைப் போக்கினைபரப்புகிறது எனும் வாதத்தை முன்வைக்கிறார். இந்த இயக்கங்கள் குறிப்பிட்ட போராட்டங்களின் தள வரையறுப்பு  (site specificity), மற்றும் உற்பத்திச்சூழ்நிலைகளின் வேறுபாடுகளால் அவற்றிற்கு இடையே காணப்படும் வேறுபாடுகள் போன்றவற்றிற்கு அளவுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதால் அவற்றால் பரந்துபட்ட ஐக்கியத்தைக் கட்டி எழுப்பவோ பொதுவான கோரிக்கைகளை முன்வைக்கவோ முடிவதில்லை. அரசை ஜனநாயகமயமாக்குவதுதான் நோக்கமென்றால் இந்த வழியால் அது கைகூடப்போவதில்லை. ஏனெனில் தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டமின்றி அதை அடையமுடியாது. சூழல் பிரச்சனைகளால் செல்வந்தரை விட வறியோரே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சனைகள் வர்க்கப் பிரச்சனையையும்விடப் பெரியனவாயிருக்கும்போதும் இவற்றிற்கு ஒரு வர்க்கப் பரிமாணமும் உண்டு. சூழல் பாதுகாப்பு, சுகாதார மற்றும் மனித விடுதலைக்கு உதவும் கல்வி வசதிகளைச் சமூகத்திற்குப் பொதுச்செலவில் வழங்கும் கொள்கைகளை மூலதன உடைமையாளர் எதிர்ப்பது வர்க்க முரண்பாட்டின் வெளிப்பாடே. இந்தக்கருத்துகளைக் கொண்டிருக்கும் O´Connor ன் அபிப்பிராயத்தில் ‘இரண்டாம் முரண்பாட்டு அணுகுமுறை’ புதிய சமூக இயக்கங்களின் அரசியல் திட்டத்தை மாக்சிச நோக்கில் வகுக்க உதவும்.

விமர்சனம் 

O´Connor ன் ஆரம்பப் பங்களிப்புக்குப் பின்வந்த மாக்சிச சூழலியல் ஆய்வுகள் அவரின் அணுகுமுறையை விமர்சித்துள்ளன (Foster et al 2010; Burkett, 2014).  உற்பத்திச்சூழ்நிலைகளின் முக்கியத்துவத்தை மாக்சின் கருத்துக்கள் மூலம் அவர் சுட்டிக் காட்டியது வரவேற்கப்பட்ட போதும் அவர் ‘இரண்டாம்’ முரண்பாட்டிற்கு கொடுக்கும் பிரத்தியேக இடமும், இரண்டு முரண்பாடுகளுக்குமிடையே உள்ள உறவு பற்றிய அவரது குழப்பமான விளக்கங்களும் விமர்சிக்கப்பட்டன. தனது அணுகுமுறை மரபுரீதியான மாக்சிச அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என அவர் கூறுவது மாக்ஸ் மூலதனத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவு பற்றி கூறியுள்ள பல முக்கியமான விடயங்களைப் புறந்தள்ளியிருப்பதையே காட்டுகிறது. Marx and Nature – A red and green perspective எனும் தலைப்பில் Paul Burkett (2014) எழுதியுள்ள விரிவான நூலில் O´Connor ன் அணுகுமுறை ஆழமாக விமர்சிக்கப்படுகிறது. இங்கு இந்த விமர்சனங்களில் சில முக்கியமானவற்றைச் சுருக்கிக் கூறுதல் தகும்.

O´Connor சொல்கிறார் முதலாவது முரண்பாடு – அதாவது உற்பத்தி உறவுகளுக்கும் உற்பத்திச் சக்திகளுக்குமிடையிலான முரண்பாடு – முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த முரண்பாடு என்பதால் அதற்கு உற்பத்திச் சூழ்நிலைகளுடன் எதுவிதத் தொடர்புமில்லை. இது கோட்பாட்டுரீதியில் தவறானது. இந்தத்தவறான கருத்து இரண்டு முரண்பாடுகளுக்குமிடையில் செயற்கையான ஒரு சுவரை எழுப்புகிறது. இரண்டு முரண்பாடுகளும் பின்னிப்பிணைந்துள்ளன. மாக்சின் பகுப்பாய்வில் மூலதனம் உழைப்பைச் சுரண்டுவது மற்றும் இயற்கையை அபகரிப்பது, வளங்களைத் தனியுடைமயாக்குவதும் பண்டமயமாக்குவதும், உற்பத்திக்கு ‘வெளியே’ இருக்கும் இயற்கையை, அதாவது சூழலை, இலவசமாகத் தனது தேவைக்குப் பயன்படுத்துவது எல்லாமே பின்னிப் பிணைந்துள்ளன. ஆகவே முதலாம் முரண்பாட்டை ஒதுக்கி இரண்டாம் முரண்பாட்டிற்கு  முக்கியத்துவமளிப்பதும் பின்னையதன் அடிப்படையில்  பொருளாதாரச் சிக்கலை விளக்க முனைவதும் அர்த்தமுள்ள அணுகுமுறையாகாது. இரண்டு முரண்பாடுகளுக்குமிடையிலான தொடர்பாடல்களை அறிதல் அவசியம். O´Connorன் நிலைப்பாட்டை ஆழ விமர்சிக்கும் Burkett தனது நூலில் மாக்சின் எழுத்துக்களின் உதவியுடன் சூழல் சிக்கலை ஆராய்கிறார்.

தொடரும் சிந்தனைப் போக்குகள்

1980களில் பரவ ஆரம்பித்த மாக்சிச சூழலியல் சிந்தனைகளும் ஆக்கங்களும் மாக்சிச சூழலியலின் விருத்தியின் முதலாவது கட்டமெனலாம். இவை மேலும் புதிய ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் வித்திட்டன. இயற்கை மற்றும் சூழல் பிரச்சனை தொடர்பாக மாக்ஸ் மற்றும் ஏங்கல்சின் எழுத்துக்கள் மீது பல ஆய்வாளர்களின் கவனம் திரும்பியது. முதலாவது கட்ட ஆய்வாளர்கள் தவறவிட்ட பல அம்சங்கள் தெளிவாக்கப்பட்டன. சமகால சூழல் பிரச்சனைகள் பற்றிய ஆய்வுகளும் அவை தொடர்பான விவாதங்களும் பல களங்களில் இடம்பெறுகின்றன. இங்கு ஒரு சில பங்களிப்புக்கள் பற்றி மட்டுமே குறிப்பிட முடியும்.

Marx and Nature (மாக்சும் இயற்கையும்) எனும் நூலில் Paul Burkett இயற்கை பற்றிய மாக்சின் கோட்பாட்டை மிகவும் தெளிவாகவும் நுணுக்கமாகவும் மீளுருவாக்குகிறார். இந்த நூல் முதலில் 1998ல் வெளிவந்தது. பின்னர் புதிய முன்னுரையுடன் 2014ல் பிரசுரிக்கப்பட்டது. இந்தப் பதிப்பிற்கு Foster முகவுரை எழுதியுள்ளார். நூல் பின்வரும் மூன்று பாகங்களைக் கொண்டுள்ளது: இயற்கையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும், இயற்கையும் முதலாளித்துவமும், இயற்கையும் கொம்யூனிசமும். இந்த நூலின் பிரதான நோக்கம் இயற்கை பற்றி மாக்ஸ் கொண்டிருந்த பார்வை தொடர்பாக மாக்சை விமர்சிப்போர் கொண்டிருக்கும் மூன்று பொதுவான தப்பான சிந்தனைப்போக்குகளை மறுதலித்து அவரின் உண்மையான நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாகும்.

  • முதலாவது தப்பான விமர்சனம்: மாக்ஸ் ‘உற்பத்திவாத’ ‘புறொமீதிய’ (Promethean) பார்வையைக் கொண்டிருந்ததால் மனிதர் இயற்கையை ஆட்கொண்டு அதன்மீது மேலாதிக்கம் செய்யும் முதலாளித்துவப் போக்கிற்கு சார்பாக இருந்தார். இந்தப்பார்வையில் கொம்யூனிசம் என்பது மனிதர் இயற்கைமீது முழுமையான மேலாதிக்கம் செலுத்துவதைக் குறிக்கும். ஆகவே முதலாளித்துவம் கொம்யூனிசம் இரண்டுமே மனிதருக்கும் இயற்கைக்குமிடையே பகைமை உறவு தவிர்க்கமுடியாதது என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.
  • இரண்டாவது தப்பான விமர்சனம்: முதலாளித்துவம் பற்றிய மாக்சின் ஆய்வு உற்பத்தியில் இயற்கையின் பங்கினைத் தவிர்க்கிறது அல்லது தரம் குறைக்கிறது – விசேடமாக மாக்சின் பெறுமதிக் கோட்பாடு (labour theory of value).
  • மூன்றாவது தப்பான விமர்சனம்: முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் பற்றிய மாக்சின் விமர்சனத்திற்கும் இயற்கைக்கும் அல்லது இயற்கைரீதியான உற்பத்தி சூழ்நிலைகளுக்கும் எதுவிதத் தொடர்புமில்லை.

இவற்றை நிராகரித்து அதற்கான விளக்கங்களை மாக்சின் எழுத்துகளுக்கூடாகவே தருகிறார் நூலாசிரியர். மாக்ஸ் இரண்டுவகையான சூழல் சிக்கல்களை இனங்காணுகிறார் என விளக்குகிறார். ஒன்று மூலதனத்தின் தொடர்ச்சியான குவியலுக்கு வேண்டிய மூலப் பொருட்களின் தேவைகளுக்கும் அவற்றின் இயற்கையான உற்பத்திச் சூழ்நிலைகளுக்குமிடையிலான சமநிலைஇன்மையால் ஏற்படும் சிக்கல்கள். மூலதனத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட அளவில் பல்வேறு தன்மைகொண்ட மூலப்பொருட்களின் தேவை பூர்த்தி செய்யப்படவேண்டும். இந்த மூலப்பொருட்களுக்காக மூலதனங்கள் போட்டி போடுகின்றன. மூலதனத்தின் ஓய்வற்ற விரிவாக்கப்பட்ட குவியல் போக்கு இயற்கையின் எல்லைகளை எதிர்நோக்குகிறது. இவற்றை மாற்ற மூலதனம் வழிகளைத்தேடுகிறது. ஆயினும் இயற்கையும் சந்தையும் இறுதியில் எல்லைகளை நிர்ணயிக்கின்றன. இதனால் மூலதனக் குவியல் சிக்கலுக்குள்ளாகிறது. இந்தப் போக்கு சூழல்ரீதியான சிக்கலையும் விளைவிக்கிறது.

இரண்டாவது வகை சூழல்ரீதியான சிக்கல் பொதுவான மனித மேம்பாட்டுடன் தொடர்புடையது. இயற்கைச் செல்வத்தின் நிலைமையும் தன்மையும் மனித வாழ்வின், சமூக முன்னேற்றத்தின் அடிப்படையான நிபந்தனை. அதன் சீரழிவு மனித மேம்பாட்டிற்குப் பாதகமானது. இது நகரம்-நாட்டுப்புறம் எனும் முரண்பாட்டுடன் தொடர்புடையது. இந்த முரண்பாடு முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூக அமைப்புக்களிலுமிருந்தது. ஆயினும் முதலாளித்துவத்தின் எழுச்சியும் பரவலும் இந்த முரண்பாட்டினைப் பன்மடங்காக்குகின்றன. இதன் சூழல்ரீதியான விளைவுகள் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளன. கிராமியப் பொருளாதார, சமூக அமைப்புகளில் மற்றும் ஜனத்தொகையியலில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுகின்றன. நகரம்-நாட்டுப்புறம் எனும் பிரிவினைக்கு ஆலைத்தொழில் (நகரம்)-விவசாயம் (நாட்டுப்புறம்) எனும் பிரிவினை அடிகோலுகிறது. நாட்டுப்புறத்தில் உற்பத்தியாளர்கள் உற்பத்தி சாதனங்களிலிருந்து பிரிக்கப்படுகிறார்கள். இது அவர்களின் பாட்டாளிவர்க்கமயமாக்கலின் ஆரம்பம். இவர்கள் வேலைதேடி நகரங்களை நோக்கி நகர்கிறார்கள். இந்தப் போக்கின் தன்மைகள் இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் வரலாற்று நிலைமைகளைப் பொறுத்து மாறுபடலாம். மாக்சும் ஏங்கெல்சும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இங்கிலாந்தில் இடம்பெற்ற மாற்றங்களை அவதானித்து ஆராய்ந்து இதை விளக்குகிறார்கள்.[1]

முதலாளித்துவ நகரமயமாக்கல் பல வழிகளுக்கூடாக சூழல் பிரச்சனைகளை விளைவிக்கிறது. இவை மனித மேம்பாட்டைப் பாதிக்கின்றன. உற்பத்திக்குவேண்டிய வளங்கள் நாட்டுப்புறங்களிலிருந்து எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதனால் ஏற்படும் விளைவுகள். ஆலைத்தொழில் உற்பத்தி கழிவுப்பொருட்களை வெளிவாரிப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள். நகரவாசிகளின் நுகர்வும் அதனால் வெளிவரும் கழிவுப்பொருட்களின் சூழல்ரீதியான விளைவுகள். வேலத்தளங்களின் உற்பத்திச் சூழ்நிலைகள் உற்பத்தியாளரின் உடல் மற்றும் உள நலத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள். இதேபோன்று நாட்டுப்புறத்திலும் அங்கு இடம்பெறும் இயற்கைவள அகழ்வு, உற்பத்தி மற்றும் நுகர்வின் விளைவுகள் சூழலையும் மனித நன்நிலையையும் பாதிக்கின்றன.

இந்தப் போக்குகள் எல்லாம் இயற்கையின் பண்டமயமாக்கலுடனும் மூலதனமயமாக்கலுடனும் தொடர்புடையவை. முதலாளித்துவம் உலகரீதியான வரலாற்றுப் போக்கினைக் கொண்டது என்பதை நாம் அனுபவரீதியாகக் காண்கிறோம். காலனித்துவமும் ஏகாதிபத்தியமும் அதன் வரலாற்றுக் கருவிகளாயின. ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று வேதியியல்ரீதியான பிளவு உலகமயமான போக்கு. சமீபகால ஆய்வுகள் இதற்குத் தொடர்ச்சியாகச் சான்றுகளைத் தந்த வண்ணமிருக்கின்றன. 2016 ல் வெளிவந்த  Andreas Malmன் Fossil Capital  எனும் நூல் புவியின் வெப்பமாக்கலின் வேர்களை இனங்கண்டு ஒரு வரலாற்றுரீதியான ஆய்வினைத்தருகிறது. மூலதனத்தின் எழுச்சியின் வரலாற்றின் சக்தி அடிப்படை புதைபடிவ எரிபொருட்கள் (fossil fuel) என்பதை அடிக்கோடிட்டு அழுத்திக் கூறவேண்டும். இந்த வளங்களுக்கான போட்டி உலக அமைதிக்கு ஒரு தொடர்ச்சியான சவாலாகிவிட்டது. மறுபுறம் புதைபடிவ எரிபொருள் பாவனைக்கும் உலகின் சூழல் சிக்கலுக்கும் நேரடித் தொடர்புண்டு.  நிலக்கரி, பெட்ரோலிய வளங்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவையே நவீன பொருளாதாரத்தின் இயக்கத்திற்கு வேண்டிய சக்தியை வழங்குகின்றன. இதன் விளைவாக வெளிப்படும் கரியமிலவாயு (carbon di oxide) வளிமண்டலத்தை தொடர்ச்சியாக அசுத்தப் படுத்தி வருகிறது. புவியின் வெப்பம் அதிகரிப்பதற்கு இது பிரதான காரணி. உலகப் பொருளாதாரம் ஒரு கரிமப் பொருளாதாரம் (carbon economy). ஆனால் இந்த வரலாற்றின் வர்க்கப் பரிமாணம் பற்றி ஒரு முக்கியமான விடயத்தை நினைவூட்டுகிறார் Andreas Malm (2016). உற்பத்திக்கு வேண்டிய சக்தியின் மூலப்பொருளை அதிகாரமுள்ள ஒரு சிலர் அதிகாரமற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் அல்லது அவர்களின் சம்மதத்தைப் பெறாமல் தேர்ந்தெடுக்கிறார்கள். அது முழு சமூகத்தினதும் சுயமான தெரிவு அல்ல. ஆனால் அதிலேயே முழு சமூகமும் தங்கிநிற்கிறது. அதிகார உறவுகளை மறந்து இந்த வரலாற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

ஆலைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து 19ம் நூற்றாண்டில் பிரித்தானியாவே கரிம வெளியீட்டால் (carbon emissions) வளிமண்டலத்தை மாசுபடுத்துவதில் முன்னணியில் இருந்தது. அதைத் தொடர்ந்து மற்றைய மேற்கத்திய செல்வந்த நாடுகள், ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கிழக்காசிய நாடுகள். இன்று சீனா, பிராசில், இந்தியா மற்றும் எழுந்துவரும் பொருளாதாரங்கள். வரலாற்றுரீதியில் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாக பழைய செல்வந்த முதலாளித்துவ நாடுகளே உலகின் இயற்கை வளங்களை அபகரிப்பதில், உயிரினப் பல்வகைமையினை அழிப்பதில், வளிமண்டலத்தை மாசுபடுத்துவதில் முன்னின்றன. இருபதாம்-இருபத்திஓராம் நூற்றாண்டுகளில் பல நாடுகள் இவற்றுடன் சேர்ந்த வண்ணமிருக்கின்றன. இந்தப்பூமியின் மனித இனத்தின் பொதுச் சொத்துக்களான வளிமண்டலத்தையும் சூழலின் மற்றைய அம்சங்களையும் தனியாரின் இலாப நோக்கத்திற்காகச் சீரழிக்கும் போக்குத் தொடர்கிறது.

இன்று உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எழுந்துவரும் தெற்கத்திய நாடுகளின் பொருளாதாரங்களிலேயே தங்கியுள்ளது. விசேடமாக சீனா, பிராசில், இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் முன்னணியில் நிற்கின்றன. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அது உலக வல்லரசு அந்தஸ்தை அடைந்துள்ளதும் உலகைப் பிரமிப்பில் ஆழ்த்தியிருப்பதில் ஆச்சர்யமில்லை. அதேவேளை சீனாவின் பிரமிப்பூட்டும் எழுச்சியின் மறுபக்கம் பல ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நூற்றாண்டில் புதைபடிவ எரிபொருள் பாவனையில் சீனா உலகிலேயெ முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது. 2000-2006 காலத்தில்  உலக மொத்தக் கரிம வெளியீட்டின் 55 வீதம் சீனாவிலிருந்தே பிறந்தது. 2006ல் அதுவரை இந்த மாசுபடுத்தலில் முதலிடம் வகித்துவந்த USAக்கும் அப்பால் சென்றுவிட்டது சீனா. சீனா ஆலைத்தொழில் உற்பத்தியில் உலகிலேயே முன்னணியில் நிற்கிறது. வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதிலும் அதுவே முன்னணியில் இருந்தது. வட அமெரிக்காவும் ஐரோப்பாவுமே சீனாவின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் பிரதான சந்தைகள். சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் நவீன வரலாற்றிலேயே மிகப்பிரமாண்டமான உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டம். சீனா மாவல்லரசாவதைத் தடுக்கமுடியாதென்பதே பொதுவான உலக அபிப்பிராயம். சீனாவின் பொருளாதார எழுச்சியின் முதுகெலும்பாக விளங்குவது அந்த நாட்டின் உற்பத்தித்திறன் மிக்க தொழிற்படை.  ஆனால் உலக மூலதனத்தைக் கவர்வதில் இந்தத் திறன்மிக்கத் தொழிலாளர் பெறும் குறைந்த ஊதியத்திற்குப் பிரதான இடமுண்டு. சீனாவின் மாபெரும் தொழிற்படையின் ஒருபகுதி உபரித் தொழிற்படை என்பதும் முக்கியம். இது ஊதியத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 2008ம் ஆண்டில், சீனாவின் தொழிலாளரின் ஒரு மணித்தியால சராசரி ஊதியம் ஜப்பானின் சராசரியின் ஐந்துவீதம், அமெரிக்காவின் சராசரியின் நான்கு வீதம், ஐரோப்பிய வலயத்தின் சராசரியின் மூன்று வீதம் (Malm, 2016). மலிந்த விலையில் சிறந்த உழைப்புச் சக்தி. இது மூலதனத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம். வெற்றிகரமாக  முன்னேறும் சீனாவின் மாவல்லரசுப் பயணம் அந்த நாட்டின் தொழிலாளா வர்க்கம் உருவாக்கும் உபரிப் பெறுமதியிலும் மூலதனம் தனது குவியலின் தேவைகளுக்கு இயற்கையைக் கருவியாக்குவதிலும் தங்கியுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் சீனக் ‘கொம்யூனிஸ்ட் கட்சியின்’ தலைமையில் சீன அரசின் தலையாய பங்குபற்றலுடன் அமுல்படுத்தப் படுகிறது!

கரிமப் பொருளாதாரம் தொடர்கிறது, பரவுகிறது. முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு அது சந்தைப்படுத்திவரும் நுகர்வுவாதக்கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைப் பாங்கு எல்லாம் தொடர்கின்றன. உலகப் பொருளாதாரம் ஒரு கரிமப் பொறிக்குள்ளேயே தொடர்கிறது  என்பதுதான் இன்றைய யதார்த்தம். ஆனால் முதாலளித்துவம் இதற்கு ஒரு விஞ்ஞான-தொழில்நுட்ப-முகாமைரீதியான மாற்று வழியைக் கண்டுபிடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனும் வாதம் பலமாகவே ஒலிக்கிறது. முதலாளித்துவத்தின் வரலாறு இதையே காட்டுகிறது என்பதும் இந்த வாதத்திற்கு ஆதரவாகச் சுட்டிக்காட்டபடுகிறது. இந்த வரலாற்றின் பாதை ஆக்கபூர்வமான அழிவுகளுக்கூடாகச் செல்லும் பாதை எனக் கூறலாம். ஆனால் இதன் விளைவுகளின் சர்வதேசரீதியான, நாடுகளுக்குள்ளே சமூகரீதியான, புவியியல்ரீதியான தாக்கங்கள் மிகவும் அசமத்துவமானவை. இதை மக்கள் எல்லா இடங்களிலும் சும்மா பார்த்துப் பொறுத்துக் கொண்டிருக்கவில்லை. எதிர்ப்புக்கள் பல இடங்களில் பல வடிவங்களில் எழுந்தவண்ணமிருக்கின்றன. மூலதனம்-இயற்கை முரண்பாடுகள் பலவிதமாக வெளிப்படுகின்றன. இவையெல்லாம் வேதியியல்ரீதியான பிளவின் உலகமயமாக்கலின் பல்விதமான வெளிப்பாடுகள்.

தொடரும்

[1] பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய நிலைமைகளை மாக்ஸ் ஆராய்ந்தார். 1845ல் ஏங்கெல்ஸ் ‘இங்கிலாந்தின் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள்’ (Conditions of the Working Class in England) எனும் தலைபிலான நூலை வெளியிட்டார். மாஞ்செஸ்டர் (Manchester) மற்றும் லிவெப்பூல் (Liverpool) ஆகிய பாரிய ஆலைத்தொழில் நகரங்களில் வாழ்ந்த தொழிலாளர்களினதும் அவர்கள் குடும்பத்தவர்களினதும் வாழ்க்கை நிலைமைகள் பற்றியும் அவர்களைப்பாதிக்கும் வியாதிகள் பற்றியும் ஆராய்கிறார். குறைந்த ஊதியம், அடிப்படை வசதிகளற்ற வதிவிடம், சுகாதார வசதிகளின்மை போன்றவற்றால் இந்த மக்கள் பல நோய்காளால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இந்த வர்க்கத்தினரின் மரணவீதம் நாட்டுப்புறத்து சமூகத்துடன் ஒப்பிடும்போது பன்மடங்கு அதிகம் என்பதையும் ஆவணப்படுத்தியுள்ளார். இந்த ஆய்வினைச் செய்தபோது ஏங்கெல்சுக்கு 24 வயது. மாக்சைச் சந்திக்க முன்னரே இந்த ஆய்வினை ஏங்கெல்ஸ் மேற்கொண்டார் என்பதைக் குறிப்பிட வேண்டும். இன்றைய இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு நிலைமைகள் போலில்லை. இன்று தொழிலாளர்கள் அனுபவிக்கும் உரிமைகள் நீண்ட போராட்டங்களின் விளைவுகள் என்பதை மறந்திடலாகாது. இன்று தொழிலாளர்களையும் மற்றைய நகர்ப்புறவாசிகளையும் பாதிக்கும் சூழல் பிரச்சனைகள் பல்வேறு தன்மையின என்பதும் பொது அறிவு. ஆயினும் இளம் ஏங்கெல்ஸ் அன்றைய நகர்ப்புற தொழிலாளர்களைத்தாக்கிய சூழல்பிரச்சனைகளை நன்கு ஆவணப்படுத்தி ஆராய்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *