சமுத்திரன்
‘இயற்கைமீது மனிதர் ஈட்டிய வெற்றிகளையிட்டு நாம் தற்புகழ்ச்சி அடையாமலிருப்போமாக. ஏனெனில் நமது ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. முதலில் ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த முடிவுகளைத் தருகிறது என்பது உண்மைதான் ஆனால் இரண்டாம் மூன்றாம் தடவைகளில் அது மிகவும் வித்தியாசமான நாம் எதிர்பார்க்காத – பல சந்தர்ப்பங்களில் முதல் கிடைத்த முடிவுகளை இரத்துச் செய்யும் – விளைவுகளைத் தருகிறது.’ Frederick Engels, 1876, The Part Played by Labour in the Transition from Ape to Man. https://www.marxists.org/archive/marx/works/1876/part-played-labour/
புரொமிதிய (Promethean) வாதம் தொடர்பாக
ஏற்கனவே கூறியதுபோல் மாக்சை விமர்சிக்கும் சூழல்வாதிகள் – இவர்களில் சில மாக்சீய ஆய்வாளர்களும் அடங்குவர் – அவரை ஒரு புரொமிதியவாதியாகக் காட்ட முயற்சிக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் புரொமிதியவாதம் என்பது மனிதர் இயற்கையை வெற்றி கொண்டு அதன்மீது ஆதிக்கம் செலுத்த வல்ல சக்தியைக் கொண்டிருப்பதை மெச்சி நியாயப் படுத்துவதைக் குறிக்கிறது. மாக்ஸ் பற்றிய இந்த விமர்சனம் தற்போது முன்பைவிட மிகவும் பலமிழந்து பொதுவாக நிராகரிக்கப் பட்டுள்ளது. இதற்கான காரணம் கடந்த இரு தசாப்தங்களில் வெளிவந்த, தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்வுகளே. விசேடமாக Paul Burkett மற்றும் John Bellamy Foster போன்றோரின் பல பங்களிப்புக்களைக் குறிப்பிடலாம். சென்ற வருடம் (2016) இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதி வெளியிட்டுள்ள Marx and the Earth – An anti-critique எனும் நூலில் இந்த விமர்சனத்திற்கு எதிராகத் தமது விமர்சனத்தை மேலும் விரிவாக முன்வைக்கின்றனர். மாக்சும் புரொமிதிய வாதமும் தொடர்பான சர்ச்சைபற்றி மேலும் சில அம்சங்களைத் தெளிவாக்குவது அவசியம்.
மானிட வரலாற்றின் நகர்ச்சியில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்புக்கும் அதற்கு முந்திய உற்பத்தி அமைப்புக்களுக்கு மிடையிலான வேறுபாடுகளை விளக்கும்போதும், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியலின் விருத்திக்கும் பிரயோகத்துக்கும் ஊடாக உற்பத்தி சக்திகளின் அபரிதமான விருத்தியை அடைவதில் மூலதனம் வகிக்கும் வரலாற்றுரீதியான பங்களிப்பை மதிப்பீடு செய்யும்போதும் மாக்ஸ் கையாளும் சொல்நடையில் பலர் புரொமிதியவாதத்தின் சாயலைக் காண்பதற்கான பின்னணி சுவராஸ்யமானது. மாணவப்பருவத்திய மாக்ஸ் கிரேக்க தத்துவஞானத்திலும் இலக்கியத்திலும் மிக்க ஆர்வமுள்ளவராயிருந்தார். கிரேக்க புராணக் கதைகளை இரசித்துப் படித்தார். கிரேக்கப் புராண மரபியலில் புரொமிதியஸ் அபரித ஆற்றல்களைக் கொண்ட மாவீரன். சொர்க்கத்தில் கடவுளிடமிருந்து நெருப்பைக் களவாடிப் பூலோகத்து மனித குலத்திற்கு வழங்கியமை அவனது பல வீரச்செயல்களில் ஒன்றாகும். மனித இனத்திற்காகக் கடவுள்களுடன் முரண்பட்ட புரொமிதியஸ் தண்டனைகளைப் பெற்றபோதும் தனது போக்கை மாற்றவில்லை. இந்தப் புரொமிதியஸ் இளம் மாக்சின் விருப்பத்திற்குரிய ஒரு பாத்திரம் என்பது ஒரு பிரபலமான விடயம். 1843ல் இளம் பத்திரிகை ஆசிரியராக இருந்தகாலத்தில் பிரஷ்ய அரச தணிக்கையாளரின் தடைக்குள்ளானபோது ஒரு கேலிச்சித்திரத்தில் மாக்சும் தண்டனை பெறும் புரொமிதியசாக ஒரு பெயரைச் சொல்லவிரும்பாத சித்திரக்கலைஞரால் சித்தரிக்கப்பட்டார். ஒரு புராணக் கதையின் பாத்திரமான புரொமிதியசை அதிகாரத்திற்குச் சவால்விடும் போராளியாக மனித விடுதலையின் கருவியாக உருவகிப்பதில் நியாயம் உண்டு. ஆரம்ப காலத்தில் எழுதிய சில கட்டுரைகளில் மாக்ஸ் புரொமிதியசை உருவகப்பாணியில் பயன்படுத்தி உள்ளார். அவரது முனைவர் பட்டக் கட்டுரை எப்பிக்குரஸ் (Epicurus) பற்றியது ஆயினும் அதன் முகவுரையில் புரொமிதியசின் மேற்கோள் ஒன்றைச் சேர்த்திருந்தார். இன்னொரு ஆரம்பகாலக் கட்டுரையான The German Ideologyல் எப்பிக்குரசைப் புரொமிதியசுக்கு ஒப்பிடுகிறார். ஆனால் பின்னைய ஆக்கங்களில் புரொமிதியசை அவர் உருவகப் பாணியில் குறிபிட்டதற்கான ஆதாரம் இல்லை.[1] புரொமிதியஸ் மனித இனத்திற்கு நெருப்பைக் கொடுத்தது அன்று ஒளியைக் கொடுத்ததாகக் கருதப்பட்டது. மனிதர் ஏறக்குறைய ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்குமுன் கண்டுபிடித்த நெருப்பு நவீனகாலத்தில் ஆலைத்தொழிற்புரட்சியின் சக்தியைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுவதால் புரொமிதியஸ் பற்றிய புராணக் கதையின் உருவகப்பாணி வியாக்கியானமும் மாறுபடுகிறது.
ஆயினும் மூலதனத்தின் சக்தியைப் பற்றி மாக்ஸ் எழுதியிருப்பது அதை புரொமிதியசின் அபரித ஆற்றல்களுடன் ஒப்பிடுவதாகப் படலாம். 1848ல் மாக்சும் ஏங்கல்சும் எழுதிய ‘கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ யில் முதலாளித்துவம் உலகை அடிப்படையாக மாற்றும் வல்லமை கொண்டதெனும் செய்தியை உயிரூட்டம்மிக்க வார்த்தைகளில் வடிக்கிறார்கள். 1848ல் முதலாளித்துவம் பற்றி இத்தகைய தர்க்கரீதியான தெளிவான நீண்ட காலப் பார்வையை வேறுயாருமே கொண்டிருக்கவில்லை. 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ யின் புதிய ஆங்கிலப் பதிப்பிற்கு பிரபல மாக்சிய வரலாற்றாசிரியரான Eric Hobsbawm எழுதியுள்ள முன்னுரையில் ஒரு முக்கிய விடயத்தை நினைவூட்டுகிறார். ‘1848ல் மாக்சும் ஏங்கல்சும் ஏற்கனவே முதலாளித்துவத்தினால் மாற்றியமைக்கப்பட்ட உலகை விபரிக்கவில்லை. அது எப்படி தர்க்கரீதியான விதிப்படி மாற்றியமைக்கப்படப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவிக்கிறார்கள்.’
உற்பத்திக் கருவிகளின் தொடர்ச்சியான புரட்சிகரமயமாக்கலின்றி முதலாளி வர்க்கத்தால் தன் இருப்பைப் பேணமுடியாது என்பதை ‘அறிக்கை’ யில் தெளிவாக்குகிறார்கள் மாக்சும் ஏங்கல்சும். மாக்சின் ‘மூலதனம்’ இதை மேலும் ஆழமாக ஆராய்கிறது. உற்பத்தியில் நிரந்தரமான புரட்சி முதலாளித்துவத்தின் பண்பு. இந்த வரலாற்றுப் போக்கில் விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் பெரும் பங்கினை வகிக்கின்றன. முதலாளித்துவம் இயற்கை விஞ்ஞானத்தின் துரித வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அது விஞ்ஞானத்தை உழைப்பிலிருந்து வேறுபடுத்தி ஒரு உற்பத்தி சக்தியாக்குகிறது என ‘மூலதனம்’ முதலாம் பாகத்தில் ‘தொழிற் பிரிவும் ஆலை உற்பத்தியும்’ பற்றிய பாடத்தில் கூறுகிறார். ‘மூலதனம்’ மூன்றாம் பாகத்தில் மாக்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: சமூக உழைப்பின் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியே மூலதனத்தின் வரலாற்றுப் பணியும் நியாயப்பாடுமாகும். இந்த வழிக்கூடாகவே அது உணர்வுபூர்வமின்றி (unconsciously) ஒரு உயரிய உற்பத்தி அமைப்புக்கு அவசியமான பொருள்ரீதியான தேவைகளை உருவாக்குகிறது.
உயரிய உற்பத்தி அமைப்பென மாக்ஸ் கூறுவது கொம்யூனிச அமைப்பையே. மாக்ஸ் மூலதனத்தின் வரலாற்றுப்பணியை, முன்னைய உற்பத்தி அமைப்புக்களுடன் ஒப்பிடும் போது, அதன் முற்போக்கு அம்சங்களை விவரிக்கும் விதம் அதை ஒரு புரொமிதிய தன்மையுடையதாகக் காட்டுகிறது எனும் வாசிப்பில் நியாயமிருக்கலாம். ஆனால் அது மூலதனத்தின் தன்மைபற்றிய ஒரு விவரணமாகவே கருதப்படவேண்டும். இந்தக் கருத்தையே Burkett (2014)ம் முன்வைக்கிறார். இயற்கையை வெற்றி கொண்டு அதை மனித தேவைக்குக் கீழ்ப்படுத்துவது மனித விடுதலைக்கு இன்றி அமையாதது எனும் ஒரு சிந்தனைப் போக்கு ஐரோப்பிய அறிவொளிக் காலத்துடன் (The Enlightenment) பிறந்தது. முதலாளித்துவத்தின் வரலாறு இயற்கையைத் தன்நலனுக்கேற்ற கருவியாக்கும் வரலாறு என்பது உண்மை. ஆனால் மாக்சும் ஏங்கல்சும் அதற்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்களது மூலதனம்-சமூகம்-இயற்கை உறவுகள் பற்றிய எழுத்துக்கள் தெளிவாக்குகின்றன. விசேடமாக உழைப்பாளர் உற்பத்திச்சூழ்நிலைகளிலிருந்து அந்நியமாக்கப்படுவது மற்றும் வேதியியல்ரீதியான பிளவு பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். வேதியியல்ரீதியான மீட்சி நகரம்-நாட்டுப்புறம் எனும் முரண்பாட்டின் நிராகரணத்திலே தங்கியுள்ளது. இது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை, கொம்யூனிச அமைப்பில்தான் இது சாத்தியம் என்பது மாக்சின் நிலைப்பாடு. ‘உழைப்பு பொருட்செல்வத்தின் தந்தை, இயற்கை அதன் தாய்’ எனும் William Pettyன் வார்த்தைகைளை மாக்ஸ் தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவாக மேற்கோள் காட்டியுள்ளார்.
முதலாளித்துவ காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி இயற்கையின் இயக்க விதிகளை அறிய உதவியுள்ளது. இந்த அறிவு தொடர்ந்தும் வளர்கிறது. ஆனால் மூலதனம் அந்த அறிவு உற்பத்தியையும் அதன் பயன்பாட்டையும் தனது இலாப நோக்கத்திற்குப் பயன்படுத்துவதிலேயே கண்ணாயிருக்கிறது. விஞ்ஞான மற்றும் தொழி நுட்ப உற்பத்தி மூலதனத்தின் அதிகார உறவுகளினால் கட்டுப்படுத்தப் படுகிறது. இன்று விஞ்ஞான ஆராய்ச்சியின் பெரும்பகுதி பல்தேசியக் கொம்பனிகளின் கட்டுப்பாட்டிலேயே நடைபெறுகிறது. இயற்கை பற்றிய விஞ்ஞான அறிவை மூலதனம் இயற்கையை முடிந்தவரை தனியுடைமையாக்க, பண்டமயமாக்க, மூலதனமயமாக்க, தனியார் செலவுகளை வெளிவாரிப்படுத்தப் பயன்படுத்துகிறது. இதை எதிர்க்கும் இயக்கங்கள் விஞ்ஞான அறிவை மூலதனத்தின் அழிவுசக்திகளை அம்பலப்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றன.
இயற்கையின் தனியுடைமையாக்கல், பண்டமயமாக்கல் மற்றும் மூலதனமயமாக்கலுக்கு இயற்கைரீதியான எல்லைகளும் தடைகளுமுண்டு. பகுதி பகுதியாகத் துண்டாடப்பட்ட இயற்கையைத் தனியுடைமயாக்கவோ பண்டமயமாக்கவோ முடியலாம். ஆனால் பரந்த சூழலை, வளிமண்டலத்தை, இயற்கையின் சுழற்சிகளைத் தனியுடைமையாக்கவோ பண்டமயமாக்கவோ முடியாது. இயற்கையின் துண்டாடப்பட்ட பண்டமயமாக்கலுக்கும் அதற்கு இடங்கொடுக்காத இயற்கையின் முழுமையான அமைப்புக்களுக்குமிடையிலான முரண்பாடு நவீன யுகத்தில், விசேடமாகச் சமீப தசாப்தங்களில் மிகவும் ஆழமாகிவருகிறது. இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கோளரீதியான அபாய அறிவுப்புக்களை ஆழ ஆராய்ந்த விஞ்ஞானிகளின் முடிவுகளின்படி நவீன கால மனித செயற்பாடுகளின் விளைவாக நமது பூகோளம் புவிஅமைப்பியல்ரீதியான (geological) காலகட்டமயமாக்கலில் ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. புதைபடிவ எரிபொருள் முதலாளித்துவம் இதன் வரைவிலக்கணம். இந்தப் புதிய கட்டம் பற்றியும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சை பற்றியும் ஒரு குறிப்பு தொடர்கிறது.
நவ மானிட யுகம் (Anthropocene) – புதைபடிவ முதலாளித்துவமும் பூகோளம் எதிர்கொள்ளும் சிக்கலும்
பூகோளத்தின் புவிஅமைப்பியல் வரலாற்றின்படி கடந்த 11,700 ஆண்டுகளான காலம் ஹோலொசீன் (Holocene) என புவிஅமைப்பியல் விஞ்ஞானிகளால் பெயரிடப்பட்டது. இந்தக் காலத்தில் மனித நாகரீகம் பல கட்டங்களுக்கூடாக மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டுள்ளது. முதலாளித்துவத்தின் வருகை மனித நாகரீகத்தின் வரலாற்றுரீதியான நகர்ச்சியில் அடிப்படையான உலகளாவிய மாற்றப்போக்குகளின் வருகையை அறிவித்தது. நவீன காலத்தில் இயற்கைக் காரணிகளைவிட மனித செயற்பாடுகளே பூகோளரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதில் பிரதான பங்கினை வகிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் விஞ்ஞானிகள். மிகவும் குறிப்பாக பூகோளத்தின் வெப்பமாக்கலுக்கான முழுக்காரணியும் மனித செயற்பாடுகளே. நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்பும் அதை இயக்குவதற்கு நிலக்கரியின் பயன்பாடும்நவீன ஆலைத்தொழில் புரட்சியின் பிறப்பின் இலக்கணம் போலாயின. 1784ம் ஆண்டில் James Watt நிலக்கரியின் சூட்டால் நீராவி ஆலையை இயங்கவைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். இது புதைபடிவப் பொருளாதாரத்தின் எழுச்சிக்கு அத்திவாரமிட்டது (Malm, 2016). இங்கிலாந்தில் ஆரம்பித்த இந்தப் புரட்சி காலப் போக்கில் மற்ற நாடுகளுக்கும் பரவியது. பெட்றோலிய வளங்களின் கண்டுபிடிப்பும் தொடர்ச்சியான விஞ்ஞான, தொழில்நுட்பவியல் புரட்சியும் மூலதனத்தின் உலகமயமாக்கலுக்கு உதவின.
நவீன காலத்தில் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகம் ஹொலோசீன் யுகத்திலிருந்து வேறொரு காலகட்டத்தில் நுழைந்துள்ளது எனும் கருத்தை இரசயானத்துறையில் நோபல் பரிசு பெற்ற Paul Crutzen 2000ம் ஆண்டில் முன்வைத்தார். இந்த புதிய காலகட்டத்தை Anthropocene என அவர் அழைத்தார். இதைத் தமிழில் நவமானிடயுகம் என அழைக்கலாம் என நான் கருதுகிறேன். Crutzenனைத் தொடர்ந்து பல புவிஅமைப்பியலாளர்கள், வேறு துறைகள் சார்ந்த விஞ்ஞானிகள், சூழல் வரலாற்றாளர்கள் Anthropocene எனும் கருத்துருவுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்தனர். பூகோளம் தொடர்ச்சியாக வெப்பமடைவதே மனித செயற்பாடுகள் ஏற்படுத்திய மிகவும் பாதகமான தாக்கமெனக் கூறினர். பூகோளம் உயிரினப் பல்வகைமை குறைந்து செல்லும், காடுகள் மறையும், வெப்பம் அதிகரிக்கும், காலநிலை மாற்றமடையும் நிலைக்கே தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது எனப் பல விஞ்ஞானிகள் கூட்டாக ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டனர்.[2] இந்தப் புதிய காலகட்டம் எப்போது ஆரம்பித்தது எனும் கேள்விக்கு விஞ்ஞானிகளிடமிருந்து வேறுபட்ட பதில்கள் வந்தன. முதலில் இது பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆலைத்தொழிற்புரட்சியுடன் ஆரம்பிக்கிறது எனும் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் (2016) ஒரு நிபுணர்குழு Anthropocene கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் (1950ல்) ஆரம்பிக்கிறது எனச் சர்வதேச புவிஅமைப்பியல் காங்கிரசுக்குச் சிபார்சு செய்துள்ளது. தரவுகளின்படி 1950ன் பின்னர் பூகோள அமைப்பின் சீரழிவின் குறிகாட்டிகள் முன்பைவிடத் துரிதமாக ஏறிச் செல்கின்றன. இந்தக் குழு ஏற்கனவே இருந்த பட்டியலில் அணுக்குண்டுப் பரீட்சைகளின் விளைவான கதிரியக்கம், பிளாஸ்டிக் பாவனையிலால் வரும் சூழல் அசுத்தம் போன்றவற்றையும் சேர்த்துள்ளது. Anthropocene கோட்பாடு இயற்கை விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆய்வுகளின் அடிப்படையில் அவர்களால் உருவாக்கப்பட்டது. 1750-2000 காலத்தில் பூகோள அமைப்பில் மனித தலையீடுகளின் விளைவுகளை அவர்கள் ஆவணப்படுத்தி ஆராய்ந்தறிந்த முடிவுகளை வேறு விஞ்ஞானிகள் இதுவரை ஆதாரபூர்வமாக நிராகரிக்கவில்லை. Anthropoceneன் சம்பிரதாயபூர்வமான அங்கீகாரத்திற்குச் சில காலம் எடுக்கலாம். ஆயினும் அது ஏற்கனவே மிகவும் பிரபலமான கதையாடலாகிவிட்டது. விவாதங்கள் தொடர்கின்றன.
மாக்சிச சூழலியல் முகாமில் Anthropocene எனும் கருத்தை ஏற்று அதற்கு மாக்சிச விளக்கத்தைக் கொடுப்போரும் அதை நிராகாரித்து மாற்றுக் கருத்தை வைப்போரும் உண்டு. Anthropoceneஐ விமர்சனப்பார்வையில் ஏற்பவர்கள் பூகோளத்தின் நிலைமை பற்றிய இயற்கை விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகளை மதிக்கிறார்கள். மறுபுறம் Anthropoceneன் வர்க்கப் பரிமாணங்களை, நாடுகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளை, மற்றும் வரலாற்றுரீதியான, புவியியல்ரீதியான, சமூகரீதியான அம்சங்களை வலியுறுத்துகிறார்கள். மனிதரின் செயற்பாடுகளினால் பூகோளம் சீரழிகிறது எனும்போது மனிதர் வாழும் சமூக அமைப்பிலிருந்து அவர்களைத் தனிமைப் படுத்திப் பார்க்கமுடியாது. நடைமுறையில் உலக சூழல் சிக்கல் பற்றி இயற்கை விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானமும் இணைந்த அறிவு உற்பத்தியின் அவசியத்தை இந்தப் போக்கு வலியுறுத்துகிறது எனலாம்.
Anthropceneஐ முற்றாக நிராகரிக்கும் மாக்சியசார்பு ஆய்வாளார்களின் குரலாக இருக்கிறார் Jason Moore. இன்றைய காலகட்டத்திற்கு உகந்த பெயர் Capitalocene என வாதிடும் Moore, Anthropocene கோட்பாட்டை நிராகரித்து கட்டுரைகள் எழுதியது மட்டுமன்றி ஒத்த கருத்துடைய பல மாக்சிய சார்பு ஆய்வாளர்கள் பங்களித்துள்ள ஒரு நூலையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.[3] Moore குழுவினரின் பார்வையில் நவீன காலம் மூலதனத்தின் காலம் ஆகவே Capitalocene எனும் பெயரே பொருத்தமானது. Anthropocene ஒரு மேலெழுந்தவாரியான கோட்பாடு. அது முதலாளித்துவத்தின் நீண்ட வரலாற்றை, அதன் இலாபநோக்கினால் உந்தப்படும் அதிகார உறவுகளை, அதன் மீளுற்பத்தியை ஆழப்பார்க்காது மனிதரையும் இயற்கையையும் இரு கூறுகளாக நோக்கும் மரபுரீதியான அணுகுமுறையின் விளைவான கோட்பாடு. இந்த விமர்சனத்தை முன்வைக்கும் Moore முதலாளித்துவம் என்பது ஒரு உலக சூழலியல் அமைப்பு அது இயற்கை, மூலதனம், அதிகாரம் ஆகிய மூன்றையும் இணைத்து வரலாற்றுரீதியான பரிணாமத்துக்கூடாக இயங்கும் ஒரு முழுமையான அமைப்பு எனும் விளக்கத்தை முன்வைக்கிறார். அவருடைய அணுகுமுறை மாக்சிய வட்டாரங்களில் சர்ச்சைக்குரிய உலக அமைப்புக் கோட்பாடு (world system theory) சார்ந்தது என்பதையும் குறிப்பிடவேண்டும்.
Mooreன் கருத்துக்களையும் அவர் தொகுப்பாசிரியராக வெளியிட்ட நூலையும் சர்வதேச மட்டத்தில் அறியப்பட்ட மாக்சிச சூழலியலாளரான Ian Angus மிகவும் காரசாரமாக விமர்சித்துள்ளார்.[4] Mooreம் மற்றையோரும் Anthrpoceneன் பற்றி விஞ்ஞானிகள் முன்வைத்துள்ள விஞ்ஞானரீதியான முடிவுகளை ஆதாரபூர்வமாக மறுதலிக்கவோ விமர்சிக்கவோவில்லை. அவர்கள் மாற்று விஞ்ஞானரீதியான முடிவுகளையும் தரவில்லை. அவர்கள் சொல்வதென்னவென்றால் பூகோளத்தின் சிக்கலுக்குக் காரணம் முதலாளித்துவமே. இதுவல்லப் பிரச்சனைக்குரிய விடயம். ஆனால் Anthropocene பற்றி ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள முடிவுகளுக்கு எதிராக அவர்கள் ஆதாரபூர்வமான சவாலை முன்வைக்காது அந்தக் கோட்பாட்டை நிராகரிக்கிறார்கள். Mooreன் பிரசுரத்தின் உள்ளடக்கங்கள் அதன் தலைப்புச் சொல்வதைச் செய்யவில்லை. இதுவே Angusன் பிரதான விமர்சனம்.
Angus எழுதிய ‘Facing the Anthropocene: Fossil capitalism and the crisis of the earth system´ (நவமானிட யுகத்தை எதிர்கொள்ளல்: புதைபடிவ முதலாளித்துவமும் பூகோள அமைப்பின் சிக்கலும்) எனும் நூல் 2016ல் வெளியிடப்பட்டது. இந்த நூலில் Anthropocene கோட்பாட்டிற்குச் சார்பான விஞ்ஞானரீதியான தரவுகளையும் ஆய்வுகளின் முடிவுகளையும் தொகுத்து அவற்றின் உதவியுடன் உலக முதலாளித்துவத்தின் சூழல் அழிப்புப் போக்கினை ஆராய்கிறார். இரண்டாம் உலகப் போர் நவீன வரலாற்றுப் போக்கில் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கிறார். மனித வரலாற்றில் மிகவும் மனிதாபிமானமற்ற அந்த உலகப்போரும் அதைத்தொடர்ந்து உருவாக்கப்பட்ட நிலைமைகளும் முதலாளித்துவத்திற்குச் சூழலை மோசமாக அழிக்கும் பாதையை வகுத்துக் கொடுத்தன என ஆதாரபூர்வமாக வாதிடுகிறார். மூலதனத்திற்கு உலகப் போரினால் கிடைத்த இலாபம், தனிஆதிக்க மூலதனத்தின் எழுச்சி, இராணுவவாத கெய்னீசினியனிசம் (Keynesianism) ஆகியன இந்தக் காலகட்டத்தின் சில குணாம்சங்கள். 1950க்குப் பின் இடம்பெற்ற பெரும் பொருளாதார ஏற்றத்தை முன்தள்ளிய நான்கு காரணிகளைக் குறிப்பிடுகிறார். அவையாவன: USAல் சில நூறு பாரிய கூட்டுத்தாபனங்களின் கைகளிலிருந்த பலம்மிக்க ஆலைத்தொழில் அடித்தளம்; தொடர்ந்து வளர்ந்து செல்லும் இராணுவ வரவு செலவுத்திட்டம்; ஒழுக்க விதிகளுக்கமையப் பயிற்சிப்படுத்தப்பட்ட வருமானரீதியில் பாதுகாப்புள்ள, போராளிகளும் போராட்ட உணர்வும் இல்லாதொழிக்கப்பட்ட, தொழிற்படை; அளப்பரிய நிரம்பல் போல் தோன்றிய மலிவான புதைபடிவ எரிபொருள். இந்தச் சூழ்நிலைகள் முதலாளித்துவம் உலகரீதியில் பூகோள அமைப்பைச் சீரழித்து இலாபம் பெற உதவின. நூலின் இறுதிப்பகுதி சோஷலிச சூழலியல் பற்றி அதை நோக்கிச் செய்யவேண்டியது என்ன என்பது பற்றிய பொதுப்படையான அரசியல் கருத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த நூலிலும் அதுபற்றிய உரையாடல்களிலும் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் விவாதிக்கப் படவேண்டியவை. இன்றைய கோளரீதியான சிக்கலுக்கு மனிதத்துவம்மிக்க ஒரு நிரந்தரத் தீர்வு முதலாளித்துவ அமைப்புக்குள் ஒருபோதும் சாத்தியமில்லை எனும் கருத்தை அழுத்திக் கூறும் அதேவேளை, உடனடியாக முதலாளித்துவ அமைப்பின் சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார். அத்தகைய போராட்டங்களுக்கு பரந்த அணிதிரட்டல் தேவை. இதற்கூடாகவே சோஷலிச சூழலியலுக்கான போராட்டக் கட்டத்தை அடையமுடியும் என்பதுதான் அவர் தரும் செய்தி. கருகிப்போன பூமியில் சோஷலிசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. இன்று புரட்சி சாத்தியமில்லை ஆனால் சூழலின் அழிவைக் குறைக்கும், மனித, மற்றைய உயிரினங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் போராட்டங்கள் சாத்தியம். கடந்த காலத்தில் இத்தகைய போராட்டங்களுக்கூடாகச் சில சீர்திருத்தங்கள் சாத்தியமாகின. Angusன் கருத்தில் Anthropoceneன் தற்போதைய சூழல் சீரழிவுப் போக்குத் தொடர்ந்தால் அதுவே பூகோளத்தின் வரலாற்றின் புவிஅமைப்பியல் காலகட்டங்களின் மிகச்சிறிய காலகட்டமாகலாம், அதாவது மனித நாகரீகத்தினதும் மற்றைய உயிரினங்களினதும் பெருமளவிலான அழிவைத் தடுக்க முடியாது போகலாம். ஆகவே உடனடியான தேவை பரந்த அணிதிரட்டலுக்கூடாகச் சீர்திருத்தங்களுக்கான போராட்டம். இது போன்ற கருத்தினை ஏற்கனவே பலரிடமிருந்து பல தடவைகள் கேட்டிருக்கிறோம். ஆயினும் அது ஒரு உலகரீதியான அரசியல் தேவையின் அவசரத்தன்மையை, நெருக்கிடையை வெளிப்படுத்துகிற நோக்கில் எழும் கோரிக்கையெனக் கருதலாம்.
Anthropocene கோட்பாடும் அதைச் சுற்றி எழுந்துள்ள கதையாடல்களும் உலக சூழல் சிக்கல் பற்றிய அறிவின் ஆழமாக்கலுக்கு உதவியுள்ளன. மூலதனம்-இயற்கை உறவுகளை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள இயற்கை விஞ்ஞான ஆய்வுகள் உதவியுள்ளன. முதலாளித்துவ அமைப்பின் சிக்கல்கள் பலவிதமான முரண்பாடுகளாக பல மட்டங்களில் வெளிப்படுகின்றன. இதன் விளைவாகப் பலவிதமான தளங்களில் போராட்டங்கள், பலவிதமான உடனடிக் கோரிக்கைகள், பலவிதமான போராட்ட வடிவங்கள், சில தற்காலிக வெற்றிகள், பின்னடைவுகள். இவையெல்லாம் இன்றைய யதார்த்தத்தின் அம்சங்கள்.
தொடரும்
[1] இது தொடர்பாக Foster தரும் விளக்கத்தைப் பின்வரும் நேர்காணலில் பார்க்கலாம்: John Bellamy Foster Answers Three Questions on Marxism and Ecology, http://climateandcapitalism.com/2016/03/21/marxism-and-ecology-three-questions-for-john-bellamy-foster/
[2] உதாரணமாக Will Steffen, Paul J Crutzen, John R McNeill,2007, The Anthropocene: Are humans now overwhelming the great forces of nature, Ambio, 36 (8);
http://www.bioone.org/doi/abs/10.1579/0044-7447%282007%2936%5B614%3ATAAHNO%5D2.0.CO%3B2#
[3] Jason Moore (Ed.), 2016, Anthropocene or Capitalocene? Nature, History and the Crisis of Capitalism, PM Press
[4]Ian Angus, 2016, ‘Anthropocene or Capitalocene?’ misses the point, http://climateandcapitalism.com/2016/09/26/anthropocene-or-capitalocene-misses-the-point/