மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – IV

சமுத்திரன்

பல முரண்பாடுகள் பல போராட்டத் தளங்கள்

மனிதர்களின் செயற்பாடுகள் இயற்கையை மாற்றுகிற அதேவேளை மனிதரும் சமூகரீதியில் மாற்றத்துக்குள்ளாகிறார்கள் எனும் பொதுவான கருத்தின் விளக்கத்தை  குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தின் அரசியல் பொருளாதார கலாச்சார அமைப்புக்களின் தன்மைகளிலேயே தேடவேண்டும். முதலாளித்துவ அமைப்பில் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான உறவுகள் மூலதனத்தின் நேரடியான மற்றும் மறைமுகமான மேலாதிக்கத்திற்குள்ளாகின்றன. மூலதனம் ஒரு சமூக உறவு. இந்த உறவிற்குப் பல பரிமாணங்களுண்டு. மூலதனம்-உழைப்பு முரண்பாடு இதற்கு வரைவிலக்கணமாக விளங்குகிறது. ஆனால் இதனுடன் தொடர்புடைய வேறு முரண்பாடுகளுண்டு.

பல்வேறு முரண்பாடுகள் குறிப்பான அரசியல் நிலைமைகளைப் பொறுத்து பல்வேறு தளங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களாக வெளிப்படுகின்றன. முரண்பாடுகள் எப்போதும் சுயமாகப் போராட்டங்களாக வெடிப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் பரவலான அதிருப்தியும் எதிர்ப்புணர்வும் போராட்டமாக மாறுவதற்கு அவர்களின் அரசியல் உணர்வு, தலைமை, அணிதிரட்டல்  போன்றவை இன்றியமையாதவை. இத்தகைய போராட்டங்களின் உதாரணங்கள் சில: தொழிலாளர்களின் மெய்ஊதிய உயர்வுக்கான மற்றும் அவர்களின் வேலைத்தள சூழ்நிலைகள், பாதுகாப்புத் தொடர்பான போராட்டங்கள், இன, மத, பால், நிற, சாதிரீதியான அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள், பாதிக்கப்பட்ட சமூகக்குழுக்கள் சூழல் சீரழிவுக்கெதிராக நடத்தும் போராட்டங்கள், அணு ஆயுதங்களுக்கெதிரான போராட்டங்கள், நில அபகரிப்புக்கெதிரான போராட்டங்கள், நீர்வளங்களின் தனியுடைமையாக்கலுக்கு எதிரான போராட்டங்கள், பாரிய நீர்தேக்க அணைக்கட்டுத் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், காடழிப்புகெதிரான போராட்டங்கள்….. இப்படிப் பலவகையான தளங்களில் முரண்பாடுகள் மக்களின் கூட்டுச் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கின்றன. இவை குறிப்பிட்ட தளங்களில் இடம்பெறும் அதேவேளை சர்வதேசரீதியில் இயங்கும் மூலதனத்துடனும் அறிவியல் மற்றும் கருத்தியல்ரீதியான மேலாட்சியுடனும் தொடர்புடையன.

பொதுவாக இத்தகைய போராட்டங்கள் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை நோக்காகக் கொண்டவை. இவை பெரும்பாலும் தனித் தனியாக ஒன்றுடன் மற்றது தொடர்பின்றி அல்லது இணைய முடியாத நிலையில் இடம்பெறுவதைக்காணலாம். சில சந்தர்ப்பங்களில் ஒரே பிரதேசத்தில் ஒரு பிரச்சனை தொடர்பாக முரண்படும் இரு போராட்டங்கள் இடம் பெறலாம். இதற்கு ஒரு நன்கறியப்பட்ட உதாரணத்தைக் கூறலாம். ஒரு ஆலைத் தொழிற்சாலையின் கழிவுப் பொருட்களால் சூழல் அசுத்தப்படுவதால் பாதிக்கப்படும் சமூகத்தினர் அந்தத் தொழிற்சாலையை மூடும்படி போராடுகிறார்கள். போராட்டத்தின் விளைவாக தொழிற்சாலை உரிமையாளர் அதை மூட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மறுபுறம் அது மூடப்படுவதால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் அதற்கு எதிராகப் போராடுகிறார்கள். இத்தகைய சூழல் தொடர்பான முரண்பாடுகளைச் சமீபகாலங்களில் பல இடங்களில் காணலாம். போராட்டங்கள் சமூகங்களை ஒன்றிணைப்பதும் பிரித்து எதிரிகளாக்குவதும் முதலாளித்துவ அமைப்பின் தன்மையைக் காட்டுகின்றது.

மறுபுறம் இத்தகையபோராட்டங்கள் எல்லாமே வெற்றியடைவதில்லை ஆயினும் அவற்றின் அனுபவங்கள் பல பாடங்களை விசேடமாக அதிகார உறவுகள்பற்றிய படிப்பினைகளைத் தருகின்றன. ஒரு பொதுவிதி போல் போராட்டங்கள் சீர்திருத்த நோக்கிலேயே ஆரம்பிக்கின்றன, தொடர்கின்றன. இதற்கு விலக்குகள் இல்லாமலில்லை. ஆயினும் சீர்திருத்தப் போராட்டங்கள் சீர்திருத்தவாதச் சிந்தனைக் கட்டமைப்பினால் வழிநடத்தப்படும்போது இருக்கின்ற அமைப்பின் நியாயப்படுத்தலுக்கே உதவுகின்றன. பன்முக முரண்பாடுகள், பலதளங்களில் அவற்றின் வெளிப்பாடுகள், போராட்டங்களை வழிநடத்தும் அரசியல் சிந்தனைகளும் கொள்கைகளும், மற்றும் அரச அமைப்பின் தன்மை எல்லாமே முதலாளித்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதை மேலும் கடினமாக்குகின்றன.  தான் உருவாக்கும் பிரச்சனைகளுக்கும் அழிவுகளுக்கும் தனது நலனுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் விளக்கங்கள் கொடுத்து அவற்றை பொதுமக்களிடம் ‘சந்தைப்படுத்தும்’ கலையில் முதலாளித்துவம் மிகவும் கைதேர்ந்தது. இதற்கு விஞ்ஞானத்தையும் கருத்தியலையும் இணைத்துக் கலாச்சார தொடர்பு சாதனங்களுக்கூடாகப் பிரச்சாரம் செய்வது அதன் அன்றாட செயல் திட்டம். விருத்தியடைந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் முதலாளித்துவம் சிவில் சமூகத்திற்கூடாகத் தனது ‘மென் அதிகாரத்தை’ (soft powerஐ) பிரயோகிக்கிறது.

முதலாளித்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை அவற்றிற்காகப் போராடிய மக்கள் அமைப்புக்கள் தமக்குக் கிடைத்த வெற்றிகளாகக் கருதுவதில் நியாயமுண்டு. ஆனால் மறுபுறம் அவை முதலாளித்துவத்தின் நிறுவனரீதியான நெகிழ்வுத்தன்மையையும் அதற்கூடாக அது மேலும் பலத்துடன் தொடரவல்லது என்பதையும் காட்டுகின்றன. காலத்துக்குக்காலம் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களும் அவற்றின் சமூகரீதியான பாதிப்புக்களும் முதலாளித்துவத்தின் முடிவைப் பறைசாற்றவில்லை அதற்குமாறாகச் சிக்கல்களுக்குப்பின் மூலதனம் முன்பைவிட வீரியத்துடன் எழுவதையே இதுவரை வரலாறு ஒரு பெரும் பாடமாகத் தந்துள்ளது. ஆயினும் சமீப தசாப்த்தங்களில், அதாவது நவதாராளமயமாக்கலின் வருகைக்குப்பின், பொருளாதாரச் சிக்கல்கள் அடிக்கடி தோன்றுவதும் அவற்றைக் கையாள்வதில் முதலாளி வர்க்கம் தடைகளைச் சந்திப்பதும் யதார்த்தமாகிவிட்டது. மூலதனத்தின் விரிவாக்கப்பட்ட மீளுற்பத்தி முன்பைவிடப் பாரிய சவால்களைச் சந்திக்கிறது. மக்கள் நலன் சார்ந்த சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களைப் பலவழிகளைப் பயன்படுத்தி நசுக்குவது அல்லது திசைதிருப்புவது ஒரு பொதுக் கொள்கையாகிவிட்டது.

இந்தப் பொதுவான கருத்துக்கள் மூலதனம்-இயற்கை உறவுகளைப் புரிந்து கொள்வதற்கு உதவும். இது பற்றிப் பார்க்கமுன் மூலதனத்தின் பன்முக முரண்பாடுகள் பற்றி 2014ல்  David Harvey எழுதிய ´Seventeen Contradictions and the End of Capitalism´ எனும் நூல்பற்றிய ஒரு அறிமுகக் குறிப்புப் பயன்தரும் என நம்புகிறேன். இந்த நூலின் முக்கிய அம்சங்களில் மூலதனம்-இயற்கை உறவுகளும் உள்ளடங்கும். ஏன் பதினேழு முரண்பாடுகள்? Harveyன் இந்த விவரணம் அறுதியானதா, மாக்சிசக் கோட்பாட்டுடன் ஒத்துப்போகிறதா? போன்ற கேள்விகள் எழலாம். ஏன் பதினேழு முரண்பாடுகள் என அவரிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு Harvey தனக்குப் பகா எண்களைப் (prime numbersஐ) பிடிக்கும் எனச் சற்று பகிடியாகப் பதிலளித்தார். இந்த நூல் மூலதனமெனும் பொருளாதார இயந்திரத்தின் முரண்பாடுகள் பற்றியது. இதை எழுதுவதில் மாக்சின் ‘மருந்துக் குறிப்பை’ விட்டு அவரின் அணுகுமுறையையே தான் பின்பற்றியதாகக் கூறுகிறார் நூலாசிரியர். இன்றைய முதலாளித்துவ உலகின் நிலைமைகள் மற்றும் மரபுரீதியான இடதுசாரி அமைப்புக்களின் பின்னடைவுகள், தேக்கநிலை போன்றவற்றை ஆழஆராயும் நோக்கினால் இந்த நூலின் ஆக்கம் உந்தப்பட்டுள்ளது. Harveyன் கருத்தில் இன்றைய முதலாளி வர்க்கத்தின் மேனிலையாளர்களும் மற்றும் அறிவாளர்களும் மட்டுமல்ல முதலாளித்துவம் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் சிக்கல்களிலிருந்து அதை மீட்க வழிதெரியாது நிற்கிறார்கள். அதேபோல் மரபுரீதியான இடதுசாரிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிராகத் திடமான எதிர்ப்பினை முன்னெடுக்கமுடியாத நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள தீவிர இடதுசாரி அமைப்புக்கள் தனித்தனியான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. இந்தச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் ஒரு பரந்த இயக்கத்திற்கு வழிவகுக்கும் என அவை எதிர்பார்க்கின்றன. ஆனால் அவை பின்பற்றும் நவீனத்துவத்திற்குப் பின்னான சிந்தனைகள் இதற்கு உதவப் போவதில்லை. இத்தகைய சூழலிலேயே மாக்சிசப் பார்வையில் இந்த நூலை எழுத முடிவு செய்ததாகக் கூறுகிறார்.

Harveyன் பதினேழு முரண்பாடுகள் அறுதியானவை அல்ல ஆனால் மூலதனத்தின் இன்றைய போக்குகளை விளங்கிக்கொள்ள அவரின் அணுகுமுறை உதவுகிறது. அவர் இனங்கண்டுள்ள பதினேழு முரண்பாடுகளையும் மூன்று குழுக்களாக வகைப்படுத்துகிறார். அவையாவன: அடித்தள முரண்பாடுகள் (7), அசையும் (அல்லது மாற்றவல்லமை கொண்ட) முரண்பாடுகள் (7), ஆபத்தான முரண்பாடுகள் (3). அடித்தள முரண்பாடுகள்: பயன்பாட்டு பெறுமதி – பரிமாற்றப் பெறுமதி, உழைப்பின் சமூகப்பெறுமதியும் அதன் பணரீதியான பிரதிநிதித்துவமும், தனி உடைமையும் முதலாளித்துவ அரசும், தனிஉரிமையாக்கலும் பொதுச்செல்வமும், மூலதனம் – உழைப்பு, மூலதனம் ஒரு படிமுறைப்போக்காக அல்லது பொருளாக, உற்பத்தியும் (பரிமாற்றத்திற்கூடாக/ சந்தைக்கூடாக) அதன் பெறுமதியைப் பெறுதலும்.

அசையும் முரண்பாடுகள்: தொழில் நுட்பவியல், தொழில், மற்றும் மனிதரை தேவையற்றோராக்கல், தொழிற்பிரிவு, ஏகபோகத்தனியுரிமையும் போட்டியும், மையப்படுத்தலும் பரவலாக்கலும், சமச்சீரற்ற புவியியல்ரீதியான அபிவிருத்தியும் பரப்பின் உற்பத்தியும், வருமானம் மற்றும் செல்வத்தின் ஏற்றத்தாழ்வுகள், சமூக மீளுற்பத்தி, சுதந்திரமும் மேலாதிக்கமும். ஆபத்தான முரண்பாடுகள்: பொருளாதாரத்தின் முடிவிலாத் தொடர் வளர்ச்சி, மூலதனம் – இயற்கை உறவுகள், மனித இயற்கையின் கிளர்ச்சியும் உலகளாவிய அந்நியமாக்கலும்.

தனது நூல் மூலதனத்தின் முரண்பாடுகளின் ஒரு ஊடுகதிர்ப் படம் (X-ray) எனக்கூறும் Harvey இறுதியில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்ட அரசியல் நடைமுறைக்கு உதவும் பதினேழு சிபார்சுகளை முன்வைத்துள்ளார். இவை அவரது பதினேழு முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டவை. ஹாவீயின் நூலின் பிரதான அம்சங்களைச் சுருக்கிக் கூறுவது இந்தக் கட்டுரையில் சாத்தியமில்லை. அதைத் தொடர்ந்து 2016ல் ´The Ways of the World´ எனும் தலைப்பில் ஒரு புதிய நூலை வெளியிட்டுள்ளார். மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றிய அவரது சில கருத்துக்கள்பற்றி அடுத்து வரும் பகுதியில் உரையாடப்படும்.[1]

மூலதனம், சமூகம் மற்றும் இயற்கையின் மீளுற்பத்தி

மாக்சிசக் கோட்பாட்டில் உற்பத்தி அமைப்பினதும் முழு சமூகத்தினதும் மீளுற்பத்தி ஒரு முக்கியமான கருத்துருவாகும். இயற்கையுடனான உறவுகள் இதன் ஒரு அம்சம்.  சமூகம் – இயற்கை உறவுகள் இருவழியாகத் தொடரும் உறவுகள். மூலதனத்தின் மீளுற்பத்தி அதன் சமூக உறவுகளின் மீளுற்பத்தியை மையமாகக் கொண்டுள்ளது. இதற்கு தேசிய, சர்வதேச மற்றும் உலகளாவிய பரிமாணங்கள் உண்டு. உபரிப் பெறுமதியின் அபகரிப்புக்கூடாக மூலதனக் குவியலை உந்தும் உள்ளார்ந்த தர்க்கவியல் (immanent logic) தேசிய எல்லைகளையோ இயற்கைரீதியான எல்லைகளையோ மதிப்பதில்லை என மாக்ஸ் விளக்கியது பற்றி இந்தக் கட்டுரைத் தொடரின் முதலாவது பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆகவே மூலதனத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவுகளின் மீளுற்பத்தி பல மட்டங்களுக்கூடாக இடம்பெறும் ஒரு சிக்கலான போக்கு. முன்பிருந்த அளவைவிடப் பெருமளவிலான விரிவாக்கப்பட்ட மீளுற்பத்தியே (extended reproduction) மூலதனத்தின்  உள்ளார்ந்த இயக்கரீதியான விதி. இந்த முடிவிலாக் குவியலுக்கான தேடல் மூலதனம் – இயற்கை உறவுகளை நிர்ணயிக்கின்றது. இதனால் எழும் மூலதனங்களுக்கிடையிலான போட்டியில் வெற்றியும் தோல்வியும் சகஜம். நட்டத்திற்குள்ளாகும் நிறுவனங்கள் மறைவதும், இலாபத்திற்காக நிறுவனங்கள் இணைவதும் ஒரு பொதுப் போக்கு. நிலம், மற்றும் இயற்கைவளங்களின் தனியுடைமையாக்கல், பண்டமயமாக்கல், மூலதனமயமாக்கல் மட்டுமன்றி மனித மற்றும் உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கு அவசியமான பொதுச்சொத்துக்களான (அதாவது பண்டமயமாக்கப்படாத அல்லது பண்டமயமாக்கப்பட முடியாத) வளிமண்டலம், சமுத்திரங்கள், ஆறுகள், இயற்கைக்காடுகள், மற்றும் பரந்த சூழல் போன்றவற்றை இயற்கையின் ‘இலவச நன்கொடை’ யாகத் தனியாரின் இலாபத்திற்காக அபகரிப்பது, அசுத்தப்படுத்துவது மூலதனத்தின் தொடரும் வரலாறாகும். மறுபுறம் இயற்கையின் பாதுகாப்பெனும் கொள்கையில் பரந்த பிரதேசங்களை அடைத்து அவற்றில் காலாதி காலமாகத் தங்கியிருந்த சமூகங்களை அகற்றுவதும் உலகரீதியான நடைமுறையாகிவிட்டது. கடந்த பல வருடங்களாக வளர்முக நாடுகளில் (விசேடமாக ஆபிரிக்க, ஆசிய நாடுகளில்) உலக நிதி மூலதனம் பெருமளவிலான நில அபகரிப்புக்களைச் (land grabs ஐ) செய்துவருகிறது. இதில் மேற்கத்திய, சீன, இந்திய, தென் கொரிய, அரபிய கூட்டுத்தாபனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் பெருந்தொகையானோர் தமது வாழ்வாதாரங்களுக்கு நீண்டகாலமாகப் பயன்படுத்திவந்த நிலவளங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இத்தகைய சொத்து அபகரிப்புக்களை ‘பறித்தலுக்கூடான சொத்துக்குவியல்’ (accumulation by dispossession) என David Harvey (2005) வர்ணிக்கிறார்.[2] இந்த நிலங்களை ஏற்றுமதி உற்பத்திகளுக்குப் பயன்படுத்துவதே பொதுவான நோக்கமாகும். இயற்கையின் தனியுடைமையாக்கல், அரசுடைமையாக்கல், மற்றும் பண்டமயமாக்கல் மனிதரை இயற்கையிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. சூழல் சீரழிவை ஏற்படுத்தியபின் அதைக் கட்டுபடுத்தும் தொழில்நுட்பவியலை உருவாக்கி அதற்கூடாக இலாபம் பெறுவதும் அறிவுசார் சொத்துக்களைத் தனியுடைமையாக்குவதும் மூலதனத்தின் தொடர்ச்சியான திட்டமாகும். இந்த வழிகளுக்கூடாக மூலதனம் இயற்கையை மீளமைக்கிறது. Harveyன் (2014) கருத்தில் மூலதனம் ஒரு செயற்படும், பரிணாமப்போக்குடைய சூழலியல் அமைப்பு. இயற்கையில் டார்வீனிய பரிணாமப் போக்குகள் இடம்பெறும் அதேவேளை மூலதனத்தின் மற்றும் மற்றைய மனித தலையீடுகளினால் பல மாற்றங்கள் இடம்பெற்ற வண்ணமிருக்கின்றன. Harveyன் கருத்து சமூகமும் இயற்கையும் கூட்டுப்பரிணாம(coevolution) உறவைக் கொண்டுள்ளன எனும் மாக்சிச நிலைப்பாட்டுடன் தொடர்புடையது. இந்ததக் கூட்டுப்பரிணாமப் போக்குப்பற்றி வேறு ஆய்வாளர்கள் நிறைய எழுதியுள்ளார்கள் (Foster, 2000; Foster and Burkett, 2016).[3]

காலத்திற்கூடாக இடம்பெறும் இந்த மீளுற்பத்திப் போக்குப் பல முரண்பாடுகளைக் கொண்டது. பொருளாதாரரீதியில் வளர்ச்சி பெறும் புதிய நிலத்தோற்றங்கள் உருவாகின்றன, சேரிகள் அழிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் அகற்றப்பட்டு அங்கே புதிய நகரங்களும் வசதிபடைத்தோருக்கான வாழிடங்களும் தோன்றுகின்றன,  முன்னர் இலாபம் தந்து பின்னர் வீழ்ச்சியடைந்த பகுதிகள் கைவிடப்படுகின்றன, இதனால் அந்தப்பிரதேசவாசிகள் வேலையிழந்து வறுமைக்குள்ளாகிறார்கள், சூழல் சீரழிவினால் தொடர்ந்தும் மூலதனத்திற்குப் பயன்தராத இடங்களைக் கைவிட்டுப்புதிய இடங்களைத் தேடுகிறது மூலதனம், சமூகரீதியில் வெளிவாரிப் படுத்தப் பட்டோர் புதிய சேரிகளை உருவாக்கும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகிறார்கள், நீர்வளங்கள் தனியுடைமையாக்கப்படுகின்றன, சூழல் பாதுகாப்பு இயக்கங்களின் எதிர்ப்பை மற்றும் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்க அரசாங்கம் புதிய சூழல் முகாமை சட்டங்களையும் நிறுவனங்களையும் உருவாக்கலாம். இவை சில உதாரணங்கள் மட்டுமே. இந்த மீளுற்பத்திப் போக்கில்அரசுக்கும் முக்கிய பங்குண்டு. அரசியல் அமைப்பின் ஜனநாயக/ஜனநாயகமற்ற தன்மையைப் பொறுத்து இந்தப்போக்கின் தன்மைகளும் வேறுபடலாம். உதாரணமாக பூர்ஷ்வா ஜனநாயக சுதந்திரங்கள் உள்ள நாட்டில் பலம்மிக்க தொழிலாளர் மற்றும் மக்கள் அமைப்புக்களின் சில கோரிக்கைகள் அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சூழல் கொள்கைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த உதவலாம். மறுபுறம் மீளுற்பத்திப் போக்குத் தனியே தேசிய எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தப் பட்டதல்ல. மூலதனத்தின் சர்வதேசத் தொடர்புகளும் அதன் மீளுற்பத்தியின் முக்கிய அம்சங்களாகும். இயற்கையைப் பொறுத்தவரை பலவிதமான வளங்களின் இடமாற்றம் (ஏற்றுமதி, இறக்குமதி), பாவனை ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய எல்லைகளுடன் தொடர்புள்ளனவாயிருப்பதும், பல சூழல் பிரச்சனைகள் தேசிய எல்லைகளைத்தாண்டியவை என்பதும் யதார்த்தங்கள். அரசாங்கங்களின் கொள்கைகளை வகுப்பதிலும் சர்வதேச அதிகார உறவுகளும் தொடர்புகளும், பல்தேசிய கூட்டுத்தாபனங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் முக்கிய பங்குகளை வகிக்கின்றன. கடந்த நான்கு தசாப்தங்களாக சூழல் பிரச்சனைகளுக்கு சந்தைத் தீர்வுகளை முன்வத்து அவற்றின் அமுல்படுத்தலுக்கான சட்டங்களையும் பொறிமுறைகளும் உருவாக்குவதில் செல்வந்த நாடுகளின் ஆட்சியாளரும் உலக மூலதன கூட்டுத்தாபனங்களும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதைக் காணலாம். இதில் ஐ. நா. மற்றும் உலக வணிக நிறுவனம் (World Trade Organization) போன்ற பல்பக்க நிறுவனங்கள் (multilateral organizations) சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை ஆக்குவதிலும் அமுல்படுத்துவதிலும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. சந்தைத் தீர்வெனும்போது தனியுடைமையாக்கலும் பண்டமயமாக்கலும் அதன் தவிர்க்கமுடியாத முன்நிபந்தனைகளாகின்றன.[4] இந்த வழி இதுவரை மூலதனத்தின் மீளுற்பத்திப்போக்கிற்கு வெளிவாரியாக இருந்த இயற்கையின் அம்சங்களை உள்வாரிப்படுத்த உதவும் அதே சமயம் சூழல் பிரச்சனைகளையும் மூலதனத்திற்கு உதவும் வகையில் கையாள உதவுகிறது.

நவீன விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியலின் உதவியுடன் இயற்கையில் உயிரியல்ரீதியான, விசேடமாக மரபணுவியல்ரீதியான, பாரதூரமான மாற்றங்கள் இடம்பெற்ற வண்ணமிருக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்புக்களின் காப்புரிமைகளை மூலதனத்தின் நலனுக்கேற்ப தனியுரிமைகளாக்கும் சட்டங்கள் அமுல் படுத்தப்படுகின்றன. இந்தச் சூழலியல் அமைப்பில் மூலதனமும் இயற்கையும் தொடர்ச்சியாக உற்பத்தியும் மீளுற்பத்தியும் செய்யப்படுகின்றன. ஏற்கனவே குறிபிட்டது போல் இந்த மீளுற்பத்திப் போக்கு பல முரண்பாடுகளைக் கொண்டது. இந்த முரண்பாடுகள் மேலே குறிப்பிடப்பட்ட மூலதனம் – இயற்கை உறவுகளுடன் தொடர்புடையவை. சுருக்கமாகக் கூறின், உபரிப் பெறுமதிக்காக மனித உழைப்பின் சுரண்டலும்  பல வழிகளுக்கூடாக இயற்கையைக் கைப்பற்றி இலாபநோக்கிற்குப் பயன்படுத்தலுமே மூலதனக் குவியலின் காரணிகள். இதற்கூடாக மூலதனத்தின் மீளுற்பத்தியை விரிவாக்கப்பட்ட மீளுற்பத்தியாக்குவதே முதலீட்டாளரின் நோக்கமாகும். இங்கு வர்க்க உறவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மூலதனத்தின் மீளுற்பத்தியும் சமூக மீளுற்பத்தியும் ஒன்றல்ல. முதலாளித்துவ சமூகத்தில் இவை இரண்டிற்குமிடையே நெருக்கமான உறவுண்டு ஆனால் சமூக மீளுற்பத்தியைத் தனியே வர்க்க உறவுகளை மட்டும் வைத்துப் புரிந்து கொள்ளமுடியாது. சமூக மீளுற்பத்தி முழு சமூகத்தின் பல்வேறு உறவுகளின் அன்றாட மற்றும் சந்ததிகளுக்கூடான மீளுற்பத்தியை உள்ளடக்குகிறது. இதற்கு வர்க்கம், பால், நிறம், இனம், மதம், சாதி, புவியியல், சூழல் போன்று பல பரிமாணங்கள் உண்டு. சமூகரீதியில் ஓரங்கட்டப்பட்டோர் மற்றும் உள்நாட்டுப்போர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் சந்தர்ப்பங்களையும் பாதுகாப்பையும் தேடி வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வது ஒரு உலகளாவிய போக்கு. சமூகத்தின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இவற்றுடன் தொடர்புடையன. சமூக மீளுற்பத்திப் போக்கு இந்த அம்சங்களையெல்லாம் உள்ளடக்குகிறது.

தொழிலாளர்களின் உழைப்பு சக்தியின் அன்றாட மீளுற்பத்தியிலும் சந்ததிகளின் மீளுற்பத்தியிலும் பெண்களின் பங்களிப்பை மாக்ஸ் கவனிக்கவில்லை எனும் விமர்சனத்தை முன்வைத்துப் பெண்ணிய வாதிகள் மாக்சிசத்தின் குறைபாட்டை நிவர்த்தி செய்துள்ளார்கள். உணவு சமைத்தல், குழந்தைகளைப் பெற்றுப் பராமரித்தல்,  மற்றும் வீட்டு வேலைகள் போன்ற பெண்களின் செயற்பாடுகள் இலவசமாக மூலதனத்தினதும் சமூகத்தினதும் மீளுற்பத்திக்கு உதவுகின்றன. உழைப்பு சக்தியின் அன்றாட மீளுற்பத்தியில் பெண்களின் ஊதியமற்ற உழைப்பின் பங்களிப்பினால் தொழிலாளரின் ஊதியத்தை முதலாளிகளால் குறைக்க முடிகிறது. இது நடக்கும்போது பெண்களின் ‘வீட்டு வேலையால்’ மூலதனம் நன்மை பெறுகிறது. உண்மையில் மாக்ஸ் பெண்களின் மற்றும் குழந்தைகளின் உழைப்புச் சுரண்டல் பற்றி எழுதியுள்ளார். ஆயினும் இருபதாம் நூற்றாண்டின் பெண்ணிய ஆய்வாளர்கள் முதலாளித்துவ அமைப்பில் ஆணாதிக்கத்தின் தொடர்ச்சி மற்றும் பெண்களின் அந்தஸ்து பற்றிப் புதிய சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

Harveyன் மூலதனம் ஒரு சூழலியல் அமைப்பெனும் கருத்தினை ஆழமாகப்பார்த்தல் அவசியம். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மாக்சிசப் பார்வையில் சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவு ஒரு கூட்டுப் பரிணாம உறவு. முதலாளித்துவ அமைப்பில் இந்த உறவு மூலதனத்தின் மேலாதிக்கத்திற்குள்ளாகிறது. மூலதனத்தின் மீளுற்பத்தியிலும் சமூக மீளுற்பத்தியிலும் இயற்கையுடனான தொடர்புகளை விளங்கிக்கொள்வதற்கு மாக்சின் சமூக வேதியியல் மற்றும் அந்நியமாக்கல் கோட்பாடுகள் மிகவும் பயனுள்ளவை. மாக்சிச தத்துவஞானி Istvan Meszaros (1970) சொல்வதுபோல் மாக்சின் அந்நியமாக்கல் கோட்பாடு மூன்று அம்சங்களின் முக்கோண உறவுகளை அடிப்படையாகக் கொண்டது:[5] மனித இனம் – உழைப்பு/உற்பத்தி – இயற்கை. முதலாளித்துவ அமைப்பில் இந்த முக்கோண உறவுகள் அந்நியமாக்கலுக்காளாகின்றன: அந்நியப்படுத்தப்பட்ட மனித இனம் – அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பு/உற்பத்தி – அந்நியப்படுத்தப்பட்ட இயற்கை.

முதலாளித்துவ சமூகத்தில் மனிதர்கள் முன்பிருந்த சமூக உறவுகளிலிருந்து பிரிக்கப் பட்டு தனியன்களாக்கப்பட்டு புதிய உற்பத்தி உறவுகளில் இணைக்கப்படுகிறார்கள். மனிதர் மனிதரிடமிருந்து அந்நியப்படுகிறார்கள். தொழிலளர்கள் உற்பத்தி சாதனங்களிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறார்கள், அவர்களின் உழைப்பு அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு ஒரு ஊதிய உறவாக மாறுகிறது. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் பண்டங்களாக அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தப் படுகின்றன. மனித உறவுகள் சந்தை உறவுகளாக (பரிமாற்ற உறவுகளாக) மாறுகின்றன, அல்லது சந்தை உறவுகளின் மேலாதிக்கத்துக்குள்ளாகின்றன. பணத்தின் ஆட்சிக்கு மனிதர் சுயமாகவே கீழ்ப்படிகிறார்கள். இயற்கையின் பெறுமதி பணமயமாக்கப்பட்ட அளவுரீதியான பெறுமதியாகக் கணிக்கப்படுகிறது. சமூக உறவுகள் பொருட்களுக்கிடையிலான உறவுகளாக உருவெடுக்கின்றன. ஊதிய உழைப்பு, தனிச்சொத்து, பரிமாற்றம், பணம், வாடகை, இலாபம், பரிமாற்றப் பெறுமதி போன்றவை எல்லாம் உழைப்பின் அந்நியமாக்கலின் வெளிப்பாடுகள், சின்னங்கள். மனித ஆளுமை துண்டாடப்படுகிறது. மனிதர் மனிதரிடமிருந்து அந்நியப்படுவதுபோல் இயற்கையிடமிருந்தும் அந்நியப்படுகிறார்கள். மூலதனம் இயற்கையைத்தன் கருவியாக்குவதுபற்றி எற்கனவே விபரமாகக் குறிப்பிட்டுள்ளேன். ஆகவே முதலாளித்துவ அமைப்பின் சமூக மீளுற்பத்தி இந்த அந்நியப்படுத்தப்பட்ட உறவுகளின் மீளுற்பத்தியே.

Foster மற்றும் Clark (2016) கூறுவதுபோல் அந்நியமாக்கல் பற்றிய மாக்சின் கோட்பாட்டிற்கு Meszaros தரும் விளக்கத்தை மேலும் தெளிவாக்க மாக்சின் சமூக வேதியியல் (social metabolism) மற்றும் வேதியியல்ரீதியான பிளவு (metabolic rift) ஆகியன பற்றிய கோட்பாடு உதவுகிறது.[6] இந்தக் கோட்பாட்டை இந்தக் கட்டுரைத் தொடரில் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளேன். இங்கு அதற்கும் அந்நியமாக்கலுக்குமிடையிலான தொடர்பு பற்றிய ஒரு குறிப்பு அவசியமாகிறது. Foster மற்றும் Clark சொல்வதுபோல் மாக்சின் பார்வையில் உழைப்பும் உற்பத்திப்போக்கும் இயற்கையினதும் சமூகத்தினதும் வேதியியல் வினைமாற்றம் ஆகும். இது முக்கோண உறவுகளைக் கொண்டது: மனித இனம் – சமூக வேதியியல் வினைமாற்றம் – இயற்கையின் உலகளாவிய வேதியியல் வினைமாற்றம். முதலாளித்துவ பண்ட உற்பத்திச் சமூகத்தில் இந்த முக்கோண உறவுகள் அந்நியமாக்கப்பட்ட உறவுகளாக மாற்றமடைகின்றன. வேதியியல்ரீதியான பிளவு இந்த அந்நியமாக்கலின் பிரதான பரிமாணமாகிறது: அந்நியப்படுத்தப்பட்ட மனித இனம் – அந்நியப்படுத்தப்பட்ட சமூக வேதியியல் வினை மாற்றம்  (வேதியியல்ரீதியான பிளவு) – அந்நியப்படுத்தப்பட்ட இயற்கையின் உலகளாவிய வேதியியல் வினைமாற்றம். உலக மூலதனம் இயற்கை விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பவியலையும் இந்த வேதியியல்ரீதியான பிளவின் சூழல்ரீதியான வெளிப்பாடுகளைக் கையாள்வதற்கே பயன்படுத்துகிறது. அடிப்படைக் காரணங்களை மறைத்து வெளிப்பாடுகளின் தொழில்நுட்பவியல்ரீதியான, ஒழுங்கமைப்புரீதியான முகாமையை ஒரு இலாபம் தரும் வியாபாரமாக்கியுள்ளது உலக மூலதனம். இந்த அணுகுமுறையை மூலதனம் தனது விரிவாக்கப்பட்ட மீளுற்பத்திக்குப் பயன்படுத்துகிறது. ஆயினும் இந்தப் போக்குப் பல சந்தர்ப்பங்களில் மூலதனகுவியலை மட்டுமன்றி முழு சமூகத்தையும் பாதிக்கும் இயற்கைரீதியான தடைகளையும் நீண்டகால விளைவுகளையும் சந்திக்கிறது. காலத்துக்குக்காலம் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்கள் இந்தத் தடைகளின் வெளிப்பாடுகளே.

உண்மையில் மூலதனத்தின் சுயமீளுற்பத்திப் போக்கிலிருந்தே அதைப் பாதிக்கும் தடைகள் பிறக்கின்றன. ‘மூலதனம்’ மூன்றாம் பாகத்தில் மாக்ஸ் சொல்வதுபோல், முதலாளித்துவ உற்பத்தி இந்த உள்ளார்ந்த தடைகளைத் தாண்டுவதற்குத் தொடர்ச்சியாக முயற்சிக்கிறது, ஆனால் மேலும் பலம் மிக்க அளவிலான தடைகளைப் புதிதாக உருவாக்குவதன் மூலமே அது இவற்றைத் தாண்டுகிறது. மூலதனமே முதலாளித்துவ உற்பத்தியின் உண்மையான தடை. மூலதனத்தினதும் அதன் சுயபெறுமதியாக்கலுமே உற்பத்தியின் ஆரம்பப் புள்ளியும் இறுதிப் புள்ளியுமாகும், இதுவே அதன்  உள்நோக்கமும் குறிக்கோளும். உற்பத்தி என்பது மூலதனத்திற்கு மட்டுமான உற்பத்தியே, இதன் எதிர்வழியானதல்ல. அதாவது உற்பத்தி மூலதனத்திற்காகவே, மூலதனம் உற்பத்திக்காகவல்ல. முதலாளித்துவ உற்பத்திச் சாதனங்கள் உற்பத்தியாளரின் சமூகத்தின் வாழ்க்கைமுறையை ஸ்த்திரமாக விருத்தி செய்யும் சாதனங்களல்ல.[7]

முதலாளித்துவ சிக்கல் (capitalist crisis) உண்மையில் மூலதனத்தின் விரிவாக்கப்பட்ட மீளுற்பத்தியின் சிக்கலே. மூலதனத்தின் சுயபெறுமதியாக்கற்போக்குச் செயலிழந்துவிட்டது என்பதே இதன் அர்த்தம். முதலாளித்துவ சிக்கலுக்கு மாக்சிசக் கோட்பாட்டு மரபில் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்களும் அவை தொடர்பான நீண்ட விவாதங்களும் உண்டு. இவற்றில் பின்வரும் கருத்துருக்கள் முக்கியமான இடங்களைப் பெறுகின்றன: மூலதனத்தின் மிதமிஞ்சிய குவியல் (முதலீட்டுச் சந்தர்ப்பங்களின்றி இருக்கும் உபரி மூலதனம்), நிதிமூலதனத்தின் எழுச்சியும் உற்பத்தி மூலதனம் அதற்குகீழ்ப்படுத்தப்படலும் (ஊகத்துறை உற்பத்தித் துறையையும் விட பன்மடங்கு பெரிதாகிச்செல்கிறது), முதலீட்டுப்  பொருட்களின் உற்பத்திக்கும் நுகர் பொருட்களின் உற்பத்திக்குமிடையிலான சரிவிகித சமனின்மை, மற்றும் இலாபவீதம் வீழ்ச்சியடையும் நடைப்பாங்கு விதி. முதலாளித்துவ சிக்கல் பற்றிய விளக்கங்கள், விவாதங்கள் பற்றி ஆய்வது இந்தக் கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பால்பட்டது. ஆயினும் கட்டுரையின் நோக்கத்துடன் தொடர்புடைய சில கருத்துக்களைக் குறிப்பிடவேண்டும்.

முதலாளித்துவப் பொருளாதாரசிக்கலுக்கும் இயற்கைக்குமிடையிலான உறவுகளைப் பொறுத்தவரை O´Connor முன்வைத்த ‘இரண்டாவது முரண்பாடு’ பற்றிய தொடுகோளை நினைவுகூருதல் தகும். இதுபற்றி இந்தக் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பாகத்தில் விவரித்துள்ளேன். உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்திச் சூழ்நிலைகளுக்குமிடையிலான முரண்பாட்டையே O´Connor முதலாளித்துவத்தின் இரண்டாவது முரண்பாடெனக் குறிப்பிடுகிறார். இதுவே மாக்சிச சூழலியல் பார்வையில் பொருளாதாரச்சிக்கலை விளக்குவதற்கான அணுகுமுறையின் ஆரம்பப்புள்ளி என்பதே அவரின் வாதம். O´Connorன் விளக்கத்தின் பயன்பாடு மற்றும் அதன் குறைபாடுகள் பற்றி ஏற்கனவே விவரித்துள்ளேன். இங்கு அழுத்திக் கூறவேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. அதாவது இயற்கைரீதியான தடைகள் பொருளாதாரச்சிக்கல்களின் காரணிகளாயிருப்பதுக்கும் அப்பால் நிலைபறும் மனித மேம்பாட்டினைச் சாத்தியமற்றதாக்குகின்றன. மனித மற்றும் உயிரினங்களின் வாழிடமான பூகோளத்தின் சீரழிவு உயிர்வாழ்வைப் பலவிதமாகப் பாதிக்கிறது.  மூலதனக் குவியலுக்கு இயற்கை போடும் தடைகளை மூலதனம் தொழில் நுட்பவியல், புதிய சட்டங்கள், பொருளாதாரக் கொள்கை மாற்றம், மற்றும் முகாமைச் சீர்திருத்தம் போன்றவற்றின் உதவியுடன் தற்காலிகமாகத் தள்ளி வைக்கும் செயல்திட்டங்களை பின்பற்றித் தனது உடனடிப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்கிறது. காரணிகளைத் தவிர்த்து விளைவுகளைக் கையாள்வதே பிரதான கொள்கை. இதைப்போன்றே மற்றவிதமான தடைகளையும் கையாளுகிறது. ஆனால் மாக்ஸ் கூறியதைப்போல் இந்தக் குறுக்கு வழிகள் முன்பைவிட மேலும் சிக்கலான புதிய தடைகளைத் தோற்றுவிக்கின்றன. ஆதாரங்களின்படி குறிப்பிட்ட பிரதேச மட்டங்களில் சில பிரச்சனைகள் கட்டுப்படுத்தப்பட்டு அல்லது தீர்க்கப்பட்டுள்ளபோதும் பூகோளத்தின் சீரழிவு தொடர்கிறது. இதனால் மனித வாழ்வு தன்மைரீதியாகப் பாதிக்கப்படுகிறது. இதன் நீண்டகால விளைவுகள் பாரதூரமானவை. வாழிடம் மாசுபடல், புதுவிதமான உடல்நல மற்றும் மனநலப் பிரச்சனைகள், மருத்துவம் உட்பட அடிப்படைச் சேவைகளின் தனியுடைமையாக்கலால் வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் போன்ற பல பிரச்சனைகளைச் சமூகம் ஏற்கனவே எதிர்நோக்குகிறது. பணபலம் உள்ளோர் தம்மைப் பாதுகாத்துக்கொள்கின்றனர். மற்றையோர் சூழல்சீரழிவின் விளைவுகளால் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். மூலதனம் உலகரீதியில் நடத்தும் இயற்கை அபகரிப்பினால் வெளிவாரிப்படுத்தப்பட்டோர் வேறு வழியின்றி வானிலை மாற்றம் மற்றும் சூழல் சீரழிவுகளால் சுலபமாக அவலங்களுக்குள்ளாகும் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து அல்லல்படுகிறர்கள். பூகோளத்தின் சீரழிவு தொடரும் போதும் மூலதனம் தற்காலிக வழிகளுக்கூடாகப் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து விடுபட்டு முன்னே நகரும் போக்கினை விடப்போவதில்லை. இப்பொழுது ‘பசுமை வளர்ச்சி’ (Green growth) எனும் ‘புதிய’ பதாகையை ஏந்தியவண்ணம் மூலதனம் உலகை வலம் வருகிறது.  ஆகவே சமூகம் – இயற்கை உறவுகளைப் பார்க்கும்போது மூலதனம் எப்படிப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து விடுபட்டு எழுகிறது என்ற கேள்விக்கும் அப்பால் செல்லவேண்டும்.

மாக்சின் சிந்தனையில் மனித விடுதலையின் மார்க்கமான நிலைபெறும் தொடர்ச்சியான மனிதமேம்பாட்டுப் போக்கு முதலாளித்துவ அமைப்பில் சாத்தியமில்லை. சமகால மாக்சிச ஆய்வுகள் பல இந்தக் கருத்தினால் ஆகர்சிக்கப்படுகின்றன.

தொடரும்

[1] David Harvey, 2014, Seventeen Contradictions and the End of Capitalism, Oxford University Press.

David Harvey, 2016, The Ways of the World, Profile Books

[2] David Harvey, 2005, The New Imperialism, Oxford University Press

[3] John Bellamy Foster, 2000, Marx´s Ecology – Materialism and Nature, Monthly Review Press, New York. சமூகம் – இயற்கை உறவுகள் பற்றி மாக்சும் ஏங்கல்சும் கொண்டிருந்த கூட்டுப் பரிணாமகரக் (co-evolutionary) கருத்துக்களை இந்த நூல் மிக ஆழமாகவும் ஆதாரபூர்வமாகவும் ஆராய்ந்து விளக்குகிறது. இந்த வகையில் பின்வரும் நூலும் பயனுள்ளது: John Bellamy Foster and Paul Burkett, 2016, Marx and the Earth An anti-critique, Haymarket Books, Chicago.

[4] உதாரணமாக 1997ல் வானிலை மாற்றம் தொடர்பான ஐ. நா. சட்டக ஒப்பந்தத்தின் (UN Framework Convention on Climate Changeன்) கீழ் உருவாக்கப்பட்ட கியோத்தோ விதிமுறைத் தொகுதி (Kyoto Protocol) அப்போது அமெரிக்க உப ஜனாதிபதியாகவிருந்த Al Goreன் தீவிரமான தலையீட்டால் வானிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சந்தையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை முன்வத்தது. இதன்படி சூழல் பாதுகாப்பின் பண்டமயமாக்கல், கரிமச் சந்தைகளின் (carbon marketsன்) உருவாக்கம், மற்றும் சூழலியல் அமைப்புக்களின் சேவைகளின் பணமயமாக்கல் (monetisation of ecosystem services) போன்ற திட்டங்கள் அமுலுக்கு வந்துள்ளன.

[5] Istvan Meszaros,1970, Marx´s Theory of Alienation, https://www.marxists.org/archive/meszaros/works/alien/index.htm

[6] John Bellamy Foster and Brett Clark, 2016, Marxism and the Dialectics of Ecology, Monthly Review, Vol.68, Issue 05 October 2016

[7] Karl Marx (1894), Capital Volume III, English Edition, Penguin Classics, 1991: 358

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *