ஒக்டோபர் 1917  ஒரு மாபெரும் புரட்சியின் நினைவுகூரலும் விமர்சனமும்

 

 

சமுத்திரன்

‘ஏகாதிபத்திய உலகப் போரினால் விளைவிக்கப்பட்ட முதலாவது புரட்சி வெடித்துக் கிளம்பிவிட்டது. முதலாவது புரட்சி ஆனால் நிச்சயம் கடைசிப் புரட்சி அல்ல.’

– சுவிற்சலாந்தின் சூரிச்சில் தஞ்சமடைந்திருந்த லெனின் பெப்ரவரி 1917ல் ரஷ்யாவில் இடம்பெற்ற புரட்சி பற்றிய செய்தியை அறிந்தவுடன் எழுதிய கடிதத்தின் ஆரம்ப வரி (Zurich, March 7, 1917)[1]

‘எல்லா அதிகாரமும் தொழிலாளர்கள், போர்வீரர்கள், மற்றும் விவசாயிகளின் சோவியத்களுக்கே! அமைதி! ரொட்டி! நிலம்!’

– 1917 ஒக்டோபரில் போல்ஷெவிக்குகளின் சுலோகம். John Reed,1919[2]

‘1917 ரஷ்யப் புரட்சி தனக்குத்தானே விதித்த நோக்கங்களையும் அது எழுப்பிய எதிர்பார்ப்புக்களையும் அடைவதில் மிகவும் பின்னின்றது. அதன் சாதனைப் பதிவு குறைபாடும் தெளிவின்மையும் உடையது. ஆனால் நவீன காலத்து எந்த வரலாற்றுரீதியான நிகழ்வையும் விட அது உலகம் பூராகவும் எழுந்த ஆழ்ந்த நீடித்த எதிரொலிகளின் தோற்றுவாய் ஆகும்.’

– வரலாற்றாசிரியர் E. H. Carr, 1979[3]

‘சோவியத் யூனியனின் மறைவு வரலாற்றாசிரியர்கள் ரஷ்யப் புரட்சியை பார்க்கும் விதத்தை மாற்றியுள்ளது – ஏனெனில் இப்போது அவர்களால் அதை வேறு பார்வையில் அணுகமுடியும், அணுகும் கடப்பாடுண்டு, அதாவது உயிர்வாழும் ஒருவரினல்லாது இறந்துவிட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர் போல்.’

– வரலாற்றாசிரியர் Eric Hobsbawm, 1996, Isaac Deutscher  Lecture,  London.[4]

அது ஒரு மகத்தான யுகப் புரட்சியென உலகின் சோஷலிசவாதிகளாலும் மற்றைய முற்போக்காளராலும் வரவேற்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டு சோஷலிசத்தின் நூற்றாண்டெனத் தாம் கண்டகனவின் நனவாக்கலின் ஆரம்பமென அதை உலகெங்கும் சோஷலிசவாதிகள் பெருமையுடன் செங்கொடியை ஏந்தி சர்வதேச கீதத்தை இசைத்துக்  கொண்டாடினார்கள். புரட்சியின் தலைவர்கள் விரும்பி எதிர்பார்த்தது போல் அது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புரட்சித்தீயை வெற்றிகரமாகப் பரப்பவில்லை. அத்தகைய ஒரு மாற்றம் பின்தங்கிய ரஷ்யாவில் சோஷலிச நிர்மாணத்திற்கு அவசியம் என அவர்கள் கருதினார்கள். ரஷ்யா உலக ஏகாதிபத்தியச் சங்கிலியின் மிகப் பலவீனமான தொடராயிருந்ததால் அங்கு புரட்சி வெடிக்கும் சூழல் உருவானது எனக்கூறிய லெனின் ஜேர்மனியில் சோஷலிசப் புரட்சிக்கான சாத்தியப் பாடுகள் அதிகம் என நம்பினார். ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒக்டோபரின் தாக்கங்களின் விளைவாக ஜேர்மனியிலும் மற்றைய நாடுகளிலும் புரட்சிகர எழுச்சிகள் இடம்பெற்ற போதும் தொழிலாள வர்க்க இயக்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றும் புரட்சிகளாக அவை வெற்றிபெற முடியவில்லை. அந்த நாடுகளின் ஆட்சிகள் சோவியத் புரட்சியை அழிப்பதிலும் சோவியத் யூனியனைத் தனிமைப்படுத்துவதிலும் மேலும் மும்மரமாக ஈடுபட்டன. தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் தன் சுயபலத்தில் தங்கிநின்று பல தடைகளுக்கூடாகக் கரடுமுரடான பாதையில் நகர்ந்தது சோவியத் யூனியன். 1929-1931 காலகட்டத்தில் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவித்த போது சோவியத் பொருளாதாரம் நின்றுபிடித்தது. சமூக நலக்கொள்கைகளால் மக்களின் வாழ்க்கைத்தரம் மெதுவாக உயர்ந்தது.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் செஞ்சேனையின்றிப் பாசிசத்தைத் தோற்கடித்திருக்க முடியாது. கொம்யூனிசத்திற்கு முற்றிலும் எதிரான மேற்கத்திய முதலாளித்துவ வல்லரசுகளுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையிலான மிக விசித்திரமான ஒரு தற்காலிக பாசிச எதிர்ப்புக் கூட்டணிக்கூடாகவே இது சாத்தியமாயிற்று. தன்னைப் பாதுகாக்க மாத்திரமன்றித் தன்னை அழிப்பதில் கண்ணாயிருந்த முதலாளித்துவ நாடுகளையும் பாசிசத்திலிருந்து காப்பாற்ற சோவியத் யூனியன் போராடியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் உலக ஜனத்தொகையின் மூன்றில் ஒரு பகுதி சோஷலிச முகாமில் இணைந்து கொண்டது. போலந்து, செக்கோஸ்லவிக்கியா, ஹங்கரி, யூகோஸ்லவியா, றோமானியா, பல்கேரியா, அல்பேனியா, மற்றும் கிழக்கு ஜேர்மனி இந்த முகாமின் அங்கங்களாயின. அரசியல் ரீதியில் உலகம் மூன்று உலகங்களாகப் பிரிந்தது. நிழற்போர் (cold war) காலம் பிறந்தது. அது மட்டுமல்ல காலனித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்குமெதிராகத் தேசிய விடுதலைக்குப் போராடும் மூன்றாம் உலக நாடுகளின் இயக்கங்களுக்கு சோவியத் யூனியன் ஒரு பிரதான ஆதரவு சக்தியாயிற்று. மூன்றாம் உலகில் சீனாவின் மாபெரும் புரட்சி 1949ல் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கியூபாவில் (1959), இந்தோசீனாவில் (1975) ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சிகள் வெற்றி பெற்றன. அமெரிக்க மாவல்லரசுடன் போட்டிபோடும் மாவல்லரசாக வளர்ந்தது சோவியத் யூனியன். உலகப் படம் முற்றிலும் புதிதாக மீள்வரையப்பட்டது (Hobsbawm, 1995).[5]

ஆனால் பிரமிக்கவைக்கும் இந்த வரலாற்றுக்கும் ஒரு மறுபக்கம் இருந்தது. சமூக, பொருளாதாரரீதியில் பின்தங்கியிருந்த அன்றைய ரஷ்யாவில் மாக்சின் சிந்தனைவழியிலான சோஷலிச நிர்மாணத்திற்குச் சாதகமான நிலைமைகள் இருக்கவில்லை. இந்தக் கருத்தினைப் புரட்சிக்கு முன்னர் லெனின் உட்பட ரஷ்ய மாக்சிஸ்டுகள் கொண்டிருந்தனர். புரட்சிக்குப்பின் துரிதமாக ரஷ்யப் பொருளாதாரத்தை  நவீனமயமாக்கும் திட்டமிடல் கொள்கை பின்பற்றப்பட்டது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடலுக்கூடாக உற்பத்தி சக்திகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. நடைமுறையில் சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடம்பெற்ற சோஷலிச நிர்மாணம் பற்றி சோஷலிசவாதிகள் மத்தியில் கேள்விகளும் விமர்சனங்களும் விவாதங்களும் தோன்றின. கட்சியினதும் அரசினதும் அதிகாரவாதப் போக்கு, நிர்ப்பந்தமான விவசாயக் கூட்டுடமையாக்கலின் விளைவுகள், மனித சுதந்திரங்களின் மறுப்பு, உட்கட்சிக் கருத்து வேறுபாடுகளைத் தலைமை கையாண்டவிதம், பல சிறந்த மாக்சிச அறிவாளர்களுக்கு வழங்கப்பட்ட நியாயமற்ற தண்டனைகள், அரசியல் காரணங்களுக்காகப் பெருந்தொகையானோருக்கு வழங்கப்பட்ட நீண்டகாலச் சிறைவாசம்  போன்ற பலகாரணங்களால் சோவியத் சோஷலிசத்தின் தன்மை கேள்விக்குள்ளாகியது. பூர்ஷ்வா தாராளவாதம் கூறும் மனித விடுதலைக்கு மாற்றான மனித விடுதலை பற்றி மாக்ஸ் கூறியதற்கும் சோவியத் கட்சி நடைமுறைப்படுத்தும் கொள்கைக்குமிடையே பெரிய முரண்பாட்டைக் காணமுடிந்தது. சுருக்கமாகச் சொன்னால் பல காரணங்களால் புரட்சியின் நோக்கத்திலிருந்து ‘நடைமுறைச் சோஷலிசம்’ தடம்புரண்டது.

இன்றுவரை ரஷ்யப் புரட்சி பற்றிய சர்வதேச மட்டங்களிலான ஆய்வுகளும், விளக்கங்களும், விவாதங்களும் ஓய்ந்தபாடில்லை. Hobsbawm (1996) சொல்வதுபோல் பிரெஞ்சுப் புரட்சி போலவே ரஷ்யப் புரட்சியும் அது பற்றிய மதிப்பீடுகளை முரண்படும் கட்சிகளாகப் பிரித்து வைக்கிறது. நூறு வருடங்கள் கடந்தாலும் ஒக்டோபர் புரட்சிபற்றிய வியாக்கியானங்களும் கருத்து வேறுபாடுகளும் தவிர்க்க முடியாதபடி கருத்தியல்ரீதியான நிலைப்பாடுகளின் மற்றும் உணர்ச்சிகளின் தாக்கங்களின் செல்வாக்குகளுக் குள்ளாகின்றன. இன்று ரஷ்யப்புரட்சி பற்றி, அதன் தலைவர்கள் மற்றும் சோவியத் அமைப்புப் பற்றி முன்னர் தெரிந்திராத பல தகவல்களும் உண்மைகளும் தெரிய வந்துள்ளன. இது ஒக்டோபர் புரட்சி மற்றும் அதன் பின்னணி பற்றிய, சோவியத் வரலாறு பற்றிய புதிய ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் பெரும் உந்தல்களைக் கொடுத்துள்ளது.

1989 இறுதியில் பேர்லின் சுவரின் வீழ்ச்சி 1917ல் உதயமான சோஷலிச நூற்றாண்டின் துன்பகரமான, மிகக்குறுகிய முடிவினைப் பறைசாற்றும் நிகழ்வாகியது. அந்த நிகழ்வை நான் நேரில் கண்டேன். சோவியத் முகாமின் வீழ்ச்சிக்குப்பின் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில வரிகளை மீள்பதிவு செய்யவிரும்புகிறேன். ‘புரட்சியின் வெற்றிச் செய்தி காதிற்பட்டதும் தமிழ்ப் புதுமைக் கவிஞன் பாரதி ´´ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி´´ என ஆர்ப்பரித்து ´´இடிபட்ட சுவர்போலக் கலிவிழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ“ எனக் கீதமிசைத்தான். அது ஒரு யுகத்தின் பிறப்பே என்பதில் அப்போது பெருந்தொகையான சோஷலிசவாதிகளுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் இன்று அந்த யுகத்தின் தோல்விகரமான முடிவின் பார்வையாளர்களாய் நாம் நிற்கிறோம். அந்த யுகம் முடிந்துவிட்டது. ஆனால் அந்த வரலாற்றின் முதற்பாடங்களைப் படிக்க இப்போதுதான் தொடங்கியுள்ளோம். இந்தப் படிப்பிற்கு வேண்டிய துணிவினைத் தேடிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் இந்தத் தோல்வி யுகத்தின் வரலாற்றின் வெற்றிகளையும் அதன் செழுமையையும் மனித நினைவிலிருந்து அழித்துவிடும் பிரச்சாரங்களுக்கோ குறைவில்லை.’[6]

1917 புரட்சியை விமர்சன நோக்கில்நினைவுகூர்வதே இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கம். புரட்சியின் பின்னணி, லெனினின் பங்கு, மற்றும் 1917ன் முக்கியமான நிகழ்வுகள், பிரச்சனைகள், லெனினின் இறுதிநாட்கள் ஆகியவற்றைச் சுருக்கமாக மீள்நோக்கும் கட்டுரை சில முடிவுரைகளுடன் முற்றுப் பெறுகிறது.

பின்னணி

ரஷ்யாவில் புரட்சி இடம்பெறுவதைத் தவிர்க்கமுடியாது எனும் முன்கணிப்பினைப் பலர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே கூற ஆரம்பித்துவிட்டனர். அன்றைய ரஷ்யாவை அறிந்தவர்கள் இப்படியான முடிவுக்கு வருவதற்குப் பல காரணங்கள் இருந்தன. சாரிச ஆட்சி மக்கள்மீது நடத்திய கொடிய அடக்குமுறை, சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாட்டின் ஆட்சியாளரின் இராணுவவாத ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் பேராசை, விவசாயிகள் மீதான நிலப்பிரபுத்துவச் சுரண்டல், வெளிநாட்டு முதலீட்டாளருக்கும் சாரிச ஆளும் பிரபுத்துவ வர்க்கத்திற்குமிடையிலான கூட்டு, உரிமைகள் மறுக்கப்படும் நகர்ப்புறத் தொழிலாள வர்க்கம்,  ரஷ்ய பேரினவாதத்தினால் ஒடுக்கப்படும் பல தேசிய இனங்கள், மறுபுறம் விவசாயிகளின் எழுச்சிகள், புதிதாகப் பரவ ஆரம்பித்துள்ள புரட்சிகரச் சிந்தனைகளும் புரட்சிகர அமைப்புக்களும் மற்றும் தொழிலாளர்களின் கூட்டான போராட்டங்கள். ரஷ்யா புரட்சியின் விளைநிலமாக மாறிக்கொண்டிருந்தது.

1882ல் பிரசுரிக்கப்பட்ட ‘கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’யின் ரஷ்ய மொழிபெயர்ப்புக்கு எழுதிய முன்னுரையில் மாக்சும் ஏங்கல்சும் ரஷ்யாவில் புரட்சி இடம்பெறும் சாத்தியப்பாடு பற்றி குறிப்பிடுகின்றனர். 1848ல் முதல்முதலாக ‘அறிக்கை’ வெளிவந்தபோது அவர்கள் ரஷ்யாவை ஐரோப்பிய பிற்போக்குவாதத்தின் காப்பிடமாகவும் சார் (Tsar) அரசனை அதன் மூப்பனாகவும் கருதினர். ஆனால் 1882ல் ரஷ்யாவில் ஒருபுறம் அந்தப் பிற்போக்கு சூழலில் முதலாளித்துவம் வளர்வதையும் மறுபுறம் புரட்சிக்கான வாய்ப்புக்கள் இருப்பதையும் அவதானித்தனர். நிலப்பிரபுத்துவ ரஷ்யாவில் இருந்த ஒப்ஷினா (Obschina) என அழைக்கப்பட்ட மரபுரீதியான கூட்டுரிமை விவசாய உற்பத்தி முறை அதன் நிலப்பிரபுத்துவச் சுரண்டல் அடக்குமுறையிலிருந்து விடுபட்டு சோஷலிச மாற்றத்தின் அம்சமாகுமா அல்லது நீண்ட முதலாளித்துவ பாதைக்கு ஊடாக  தனியுடைமையாக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதில் ரஷ்யப் புரட்சி பாட்டாளிவர்க்கப் புரட்சியாக வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதிலேயே தங்கியுள்ளது எனும் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினார்கள்.  ரஷ்யாவின் புரட்சி தொடர்பாக obschina பற்றி மாக்சும் ஏங்கல்சும் 1882ல் குறிப்பிடுவதற்கு ஒரு பின்னணி உண்டு. 1881ல் அப்போது ரஷ்ய ‘சோஷலிசப் புரட்சிவாதிகளின்’ (நரோட்னிக்குகளின்) முக்கியஸ்தரான Vera Zasulich ரஷ்யப்புரட்சியில் obschina வகிக்கும் முக்கியத்துவம் பற்றிக் கடிதம் மூலம் மாக்சுடன் தொடர்பு கொண்டார். நரோட்னிக்குகளின் கொள்கைப்படி obschina ரஷ்ய சோஷலிச நிர்மாணத்தின் ஒரு முக்கிய அடிப்படை. இதை ரஷ்ய மாக்சிஸ்டுகள் ஏற்கவில்லை. இது பற்றி விளக்குமாறு Zasulich மாக்சைக் கேட்டார். இதற்கு மாக்ஸ் எழுதிய பதிலின் சாரம்சத்தையே மேலே குறிப்பிட்ட முன்னுரையில் மாக்சும் ஏங்கல்சும் கூறுகின்றனர்.

சாரிசம் (Tsarism) இருபதாம் நூற்றண்டுவரை நின்றுபிடிக்கமாட்டாது என்ற கருத்தினை ரஷ்யாவின் பல அவதானிகள் கொண்டிருந்தனர். 1860களிலிருந்து ரஷ்யாவில் அரசுக்கெதிரான பலாத்காரச் செயற்பாடுகள் இடம்பெற ஆரம்பித்தன. 1880களிலிருந்து நரோட்னிக் பொப்பியூலிசவாதிகள் விவசாயிகளைப் புரட்சியின் பிரதான சக்தியாக ஏற்று உயர்மட்ட அரச அதிகாரிகளைக் கொலைசெய்வது போன்ற தனிநபர் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இத்தகைய குழுக்கள் பல இடங்களில் தோன்றின. 1886ல் St. Petersberg பல்கலைக் கழகத்தில் இயற்கை விஞ்ஞான மாணவனாயிருந்த லெனினின் மூத்த சகோதரரான அலெக்ஸ்சாண்டர் இந்தக் கருத்தியலால் கவரப்பட்டார். சாரிச முடியாட்சி அழிக்கப்படவேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட அவர் சார் மன்னனைக் கொலைசெய்யும் திட்டமொன்றின் பங்குதாரியானார். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்னரே அந்தக் குழுவினர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர். அலெக்ஸ்சாண்டர் தூக்கிலிடப்பட்டார். தனது தோழர்களைக் காப்பாற்றும் நோக்கில் சாரைக் கொலைசெய்யும் சதித்திட்டத்திற்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். அலெக்ஸ்சாண்டர் தூக்கிலிடப்பட்டதால் லெனின் பாதிக்கப்பட்டபோதும் தனது தமையனின் கருத்தியலையும் அவர் பின்பற்றிய தனிநபர் பயங்கரவாதத்தையும் அவர் ஏற்கவில்லை என்பதைப் பின்னர் வந்த அவரது எழுத்துக்கள் காட்டுகின்ற போதும் ஆரம்பகாலத்தில் அவர் சாரிசத்திற்கு எதிரான புரட்சிகரப் பயங்கரவாதக் குழுக்கள்மீது வியப்பும் கரிசனையும் கொண்டிருந்தார் என 2000ல் வெளிவந்த லெனினின் வாழ்க்கைவரலாறு ஒன்று கூறுகிறது. [7]

1901ல் நரோட்னிக்குகள் சோஷலிசப் புரட்சிகரக் கட்சியை அமைத்தனர். இந்தக் கட்சி obschinaவை அடிப்படையாகக் கொண்டு ரஷ்யாவில் சோஷலிசத்தை உருவாக்கும் கொள்கையைக் கொண்டிருந்தது. இது பற்றிய மாக்ஸ் மற்றும் ஏங்கல்சின் கருத்தை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அப்போது ரஷ்யாவில் இந்தக் கட்சிக்குக் கணிசமான ஆதரவு இருந்தது. 1880களில் மாக்சும் ஏங்கல்சும் இந்த இயக்கத்தினரின் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டினர். நீண்ட முதலாளித்துவ கட்டத்தைத் தவிர்த்துப் புரட்சிக்கூடாகச் சோஷலிச சமூக அமைப்பினை நோக்கி நகர்வது பற்றி அவர்கள் சிந்திக்க முற்பட்ட காலமது. ஆயினும் மாக்சிச அறிஞரான பிளெக்கானோவின் (Plekhanovன்) தலைமையிலிருந்த ரஷ்ய மாக்சிஸ்டுகள் சோஷலிச புரட்சிகரக் கட்சியின் நிலைப்பாட்டை நிராகரித்தார்கள். பிளெக்கானோவின் நிலைப்பாட்டின்படி ரஷ்யாவில் முதலில் முதலாளித்துவம் விருத்தியடையவேண்டும். அதற்கூடாகப் பாட்டாளி வர்க்கம் வளரவேண்டும். அந்தக் கட்டத்திற்குப் பின்னரே சோஷலிசப் புரட்சி சாத்தியமாகும். இதையே மாக்சின் பிரதான நூலான ‘மூலதனம்’ சொல்கிறது என அவர் வாதிட்டார். இந்த அடிப்படையிலேயே நரோட்னிக்குகளின் புரட்சிகரக் கொள்கையை அவரும் மற்றைய மாக்சியவாதிகளும் நிராகரித்தனர். 1870ம் ஆண்டு பிறந்த லெனின் இளமைக் காலத்தில் பிளெக்கானோவின் மீது ஆழ்ந்த மதிப்புக் கொண்டிருந்தார். 1895ம் ஆண்டு ஐந்தாம் மாதம் பிளெக்கானோவை நேரில் சந்திக்க அவர் அப்போது வாழ்ந்துவந்த ஜெனீவாவிற்குச் சென்றார். அந்த சந்திப்பு அவர்களிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தியது. அப்போது பிளெக்கானோவ் ‘தொழிலாளர் விடுதலைக் குழு’ (Emancipation of Labour Group)  என்ற பெயரில் ஒரு அமைப்பை வேறுசில நாடுகடத்தப்பட்ட (அல்லது அடக்குமுறையிலிருந்து தப்பி வந்துள்ள) ரஷ்ய மாக்சிஸ்டுகளுடன் சேர்ந்து நடத்தி வந்தார். ரஷ்யா இன்னமும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் காலகட்டத்திலேயே இருக்கிறது எனும் பிளெக்கானோவின் நிலைப்பாட்டை அப்போது லெனின் ஏற்றுக் கொண்டார். லெனினைப் பற்றி பிளெக்கானோவும் அவரது குழுவினரும் உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் சில வருடங்களின்பின் புரட்சிகரக் கட்சியின் அமைப்புப் பற்றியும் புரட்சி பற்றியும் லெனின் கோட்பாட்டுரீதியில் தன்னுடன் தீவிரமான மோதலில் ஈடுபடுவார் எனப் பிளெக்கானோவ் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

1898ம் ஆண்டு ரஷ்ய மாக்சிஸ்டுகள் ஒன்றிணைந்து ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சியை (RSDLP) உருவாக்கினர். 1903 இறுதியில் லண்டனில் இடம்பெற்ற இந்தக் கட்சியின் இரண்டாவது காங்கிரசுக்குமுன்னர் இளம் லெனின் அதில் அங்கத்தவராக இணைந்தார். பிளெக்கானோவ் கட்சியின் தலைவரானார். இரண்டாவது காங்கிரசில் ஒரு பெரும் விவாதம் கட்சியின் பிரபலமான போல்ஷெவிக் (பெரும்பான்மை) – மென்ஷெவிக் (சிறுபான்மை) பிளவிற்குக் காரணமாகியது. பிளெக்கானோவின் கருத்திற்குச் சார்பான மாட்டோவின் தலைமையிலான சிறுபான்மை (மென்ஷெவிக்) மேற்கு ஐரோப்பாவிலிருப்பது போன்று ஒரு பரந்த சமூக ஜனநாயகக் கட்சியைக் கட்டியெழுப்பவேண்டும் எனும் நிலைப்பாட்டை ஆதரித்து வாதிட்டனர். லெனினின் தலைமையில் பெரும்பான்மைக் (போல்ஷெவிக்) குழுவினர் முழுநேரப் புரட்சிகரச் செயற்பாட்டாளர்களை மையமாகக் கொண்ட ஒரு கட்டுப்பாடுமிக்க இறுக்கமான கட்சியே ரஷ்யாவின் தேவை என வாதிட்டனர். லெனினின் முன்னெடுப்பினால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையான ‘இஸ்க்றா’வும் (‘தீப்பொறி’யும்) இந்தப் பிளவினால் பாதிக்கப்பட்டது. மென்ஷெவிக்குகள் ரஷ்யா பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக் கட்டத்திலேயே இருக்கிறது  முதலாளித்துவம் நன்கு விருத்தி பெற்ற பின்னரே சோஷலிசம் சாத்தியமாகும் எனும் கொள்கையைக் கொண்டிருந்தனர். அப்போது லெனினும் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் கட்டத்திலேயே ரஷ்யா இருப்பதை ஏற்றுக் கொண்டார். அத்துடன் ரஷ்ய சோஷலிசப் புரட்சி முதலாளித்துவம் வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடுகளின் சோஷலிசப் புரட்சியிலேயே தங்கியுள்ளது என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்த்தார். கட்சியின் அமைப்புப் பற்றியே அவருக்கும் மென்ஷெவிக்குகளுக்குமிடையே பாரிய வேறுபாடு இருந்தது. அவரின் தலைமையில் போல்ஷெவிக்குகள் RSLDPக்குள் தனியான குழுவாக இயங்கினர். அவர்கள் மென்ஷெவிக்குகளுக்கும் சோஷலிச புரட்சிகரக் கட்சிக்கும் (நரோடிசத்திற்கும்) எதிராகச் செயற்பட்டனர். 1917ல் ரஷ்யப் புரட்சியின் போக்கினை நிர்ணயிக்கும் அதிகாரத்தை லெனினின் தலைமையில் போல்ஷவிக்குகளே கைப்பற்றுவார்கள் என்பதை அன்றைய சூழலில் யாராலும் முன்கணிப்புக் கூறமுடியவில்லை.

1897 ஜனவரி மாதம் லெனின் ரஷ்யப் பொலிசால் கைதுசெய்யப்பட்டு சைபீரியாவில் மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அந்தச் சிறைவாசத்தைத் தனது முதலாவது முக்கிய ஆய்வுநூலை எழுதும் ஒரு சந்தர்ப்பமாக்கினார். ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் அபிவிருத்தி (The Development of Capitalism in Russia) எனும் தலைப்பில்  ரஷ்ய மொழியில் அவர் எழுதிய நூல் 1899ல் பிரசுரிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கு வேண்டிய தரவுகளை ஏற்கனவே சேகரிக்க ஆரம்பித்துவிட்டார். சாரிச சிறைவாசத்திலும் ஆய்வைத் தொடரும் வசதிகள் இருந்தன. இந்த நூலில் நரோட்னிக்குகள் (சோஷலிசப் புரட்சிகரக் கட்சி) ரஷ்ய சமூகம் பற்றி வைத்திருந்த தப்பான கருத்துக்களையும் வாதங்களையும் ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டினார். மாக்சின் அணுகுமுறையின் உதவியுடன் ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் விருத்திப்போக்கினை விளக்கி அங்கு தோன்றிவரும் வர்க்க உறவுகளையும் முரண்பாடுகளையும் தெளிவாக்கினார். நரோட்னிக்குகள் சொல்வதுக்குமாறாக ரஷ்ய நாட்டுப் புறத்தில் விவசாய சமூகம் வர்க்கரீதியான வேறுபடுத்தலுக்குள்ளாகிவரும் யதார்த்தப் போக்கினை எடுத்துக் காட்டினார். ரஷ்யப்புரட்சியின் பிரதான சக்தியான பாட்டாளிவர்க்கம் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் எனும் கருத்தை லெனின் கொண்டிருந்தார். ஆகவே RSLDPல் சேர்வதற்கு முன்னரே லெனின் தனது அரசியல் நிலைப்பாட்டின் அத்திவாரத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டார். ஆயினும் ரஷ்யப் புரட்சி எப்படி முன்னேறும் என்பது பற்றிய கேள்விக்கு திட்டவட்டமான பதிலை அவர் தேடிக்கொண்டிருந்தார். லெனின் போல்ஷெவிக் குழுவின் தலைவராயிருந்தபோதும் ரஷ்யப் புரட்சி தொடர்பான செயல்திட்டங்கள் உபாயங்கள் பற்றி அவருக்கும் மற்றைய தோழர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் பல தடவைகள் எழுந்தன. லெனின் நீண்டகாலம் வெளிநாட்டில் வாழ்ந்தபடி இயக்கத்தை வழிநடத்துவதையும் சில போல்ஷெவிக்குகள் விமர்சித்தனர்.

1900ல் லெனின் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டார். 1902ல் லண்டனில் ரஷ்யப் புரட்சியாளரான லியோன் ட்றொட்ஸ்கி (Leon Trotsky) யைச் சந்தித்தார். Trotsky அந்தச் சந்தர்ப்பத்தில் RSLDPல் இணையவில்லை ஆனால் 1917ல் போல்ஷெவிக் புரட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரானார். 1903 போல்ஷெவிக் – மென்ஷெவிக் பிளவுக்குப் பின் போல்ஷெவிக்குகள் ரஷ்யாவுக்குள் தமது தொடர்புகளை வளர்க்கச் செயற்பட்டனர். 1904ல் சுகவீனமுற்ற லெனின் சுவிற்சர்லாந்துக்கு சென்றார். 1878ம் ஆண்டு ஜியோர்ஜியாவில் பிறந்த ஸ்டாலின் 1899ல் புரட்சிகர அரசியலில் ஈடுபடத்தொடங்கினார். 1901ல் RSLDPல் சேர்ந்த ஸ்டாலின் பின்னர் போல்ஷெவிக்குழுவுடன் இணைந்தார். 1905 பிற்பகுதியில் பின்லாந்தில் இடம்பெற்ற RSLDP கூட்டத்தில் முதல் தடவையாக லெனினைச் சந்தித்தார். பல தடவைகள் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டபோதும் சிறையிலிருந்து பலதடவைகள் தப்பிக் கொண்ட ஸ்டாலின் 1913ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டு சைபீரியாவின் மிகத்தொலைவான பகுதிக்கு நாடுகடத்தப்பட்டார். 1917 பெப்ரவரிப் புரட்சி ஆரம்பித்தபோது முக்கியமான போல்ஷெவிக் தலைவர்கள் சைபீரியச் சிறைகளிலும் வெளிநாட்டிலுமிருந்தார்கள்.

1905 புரட்சி – 1917ன் முன்னோடி

1904-1905ல் ஜப்பானுடனான போரில் ரஷ்யா தோல்வியைத் தழுவிக் கொண்டது. போரின் தாக்கத்தினாலும் முன்பிருந்தே மோசமடைந்து வந்த பிரச்சனைகளாலும் சாரிசத்திற்கு எதிர்ப்பு வளர்ந்தது.  1905 ஜனவரி ஒன்பதாம் திகதி ஞாயிற்றுக் கிழமை சார் மன்னரின் குளிர்பருவகால மாளிகையை நோக்கி ஜியோர்ஜி கேப்பொன் (Georgi Gapon) பாதிரியாரின் தலைமையில் ஒரு அமைதியான ஊர்வலம் முன்னேறுகிறது. அதில் பெருந்தொகையான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பங்குபற்றுகிறார்கள். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகரீதியான பிரதிநிதித்துவம் போன்ற அடிப்படை உரிமைகளைப் பணிவாக வேண்டும் கோரிக்கையை சார் மன்னரிடம் கையளிப்பதே ஊர்வலத்தின் நோக்கம். அதில் யாரும் புரட்சிகரச் சுலோகங்களை எழுப்பவில்லை.  அதற்கு மாறாக அமைதியான மகிழ்ச்சிகர உணர்வுமிக்க மனநிலையே பங்குபற்றுவோர் மத்தியில் தென்படுகிறது. சில அடிப்படை உரிமைகளை மன்னரிடம் விசுவாசமாக, மன்றாட்டமாகக் கோருவதே அவர்களின் நோக்கம். ஊர்வலம் அரச மாளிகையை நெருங்குகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் எல்லோரையும் கலைந்து செல்லுமாறு உத்தரவிடுகிறார்கள். மக்கள் அதைச் சட்டைசெய்யாது அரச மாளிகையை நோக்கி முன்னேறுகிறார்கள். மாளிகையின் பாதுகாப்புப் படையின் தளபதிகள் ஊர்வலத்தை நோக்கித் தொடர்ச்சியாகச் சுடுகிறார்கள். பெருந்தொகையானோர் கொல்லப்படுகிறார்கள். அமைதியாக ஆரம்பித்த அந்த ஞாயிறு ‘இரத்தம் தோய்ந்த ஞாயிறு’ (Bloody Sunday) ஆக மாறுகிறது. அதுவும் அதன் உடனடி விளைவுகளும் ரஷ்ய புரட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

அரச இயந்திரம் குற்றமற்ற மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இரத்தக்களரி ஆட்சியாளர் எதிர்பார்த்ததுக்கு மாறான தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டின் பல பாகங்களில் எதிர்ப்பலைகள் தோன்றின. தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் குதித்தனர். விவசாயிகள் நிலக் கோரிக்கைகளுடன் கிளர்ந்தெழுந்தனர். தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் ஒரு பொது வேலை நிறுத்தமாகப் பரவியது. மறுபுறம் தாராளவாத ஜனநாயக வாதிகள்சட்டபூர்வமான பூர்ஷவா சீர்திருத்தங்களைக் கோரினர். சோவியத் யூனியன் பற்றிய பிரபல ஆங்கில வரலாற்றாசிரியரான E. H. Carrன் கருத்தில் 1905 புரட்சியில் இந்த மூன்று போக்குகளும் ஒருபோதும் இணைக்கப்படவில்லை (Carr, 1979).

தொழிலாளர்கள், விவசாயிகளின் எழுச்சிகளில் திட்டமிடப்படாத தன்னியல்புத் தன்மைகள் தென்பட்டன. அதேவேளை நாட்டிலிருந்த போல்ஷெவிக்குகளும் மென்ஷெவிக்குகளும் தொழிலாளர்களின் போராட்டங்களில் பங்கு வகித்தனர். Trotsky நாடு திரும்பிப் புரட்சியில் பங்குபற்றினார். ஸ்டாலின் அப்போது Azerbaijanன் Baku நகரில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். 1905 புரட்சியின்போது அங்கு ஆர்மீனியர்களுக்கும் டாட்டர்களுக்குமிடையே (Tatar) இனக்கலவரம் மூண்டது.  லெனினும் வேறுபல போல்ஷெவிக்குகளும் சுவிற்சலாந்தில் இருந்தனர். தகவல்களின்படி 1905 புரட்சியில் போல்ஷெவிக்குகளையும்விட மென்ஷெவிக்குகளுக்கே கூடுதலான செல்வாக்கிருந்தது. பத்தாம் மாதம் St. Petersbergல் முதலாவது தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் உருவாக்கப்பட்டது.[8]  இதன் முதலாவது தலைவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கட்சியையும் சாராத Trotsky தலைவரானார். மிகக்குறுகிய காலத்தில் அவரும் கைதுசெய்யப்பட்டார். முதலாவது சோவியத் பரிசோதனை அற்ப ஆயுளுடன் முடிவடைந்தது.

இந்தப் புரட்சியைப் பலாத்காரத்துக்கூடாகவும் மேலெழுந்தவாரியான சீர்திருத்தங்களுக்கூடாகவும் சாரிச அதிகாரவாத முடியாட்சி அடக்கியது. சாரிச சீர்திருத்தங்களில் முக்கியமான ஒன்று அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்புடைய Duma எனப்பட்ட பிரதிநிதிகள் சபையாகும். ஆனால் அந்த அடக்குமுறையும் அரைகுறை சீர்திருத்தங்களும் மக்களை அரசுக்கெதிரான செயற்பாடுகளை நோக்கி நகரத்தூண்டின. பூர்ஷ்வா ஜனநாயகவாதிகள் சீர்திருத்தங்களை வேண்டிநின்றனர். எதிர்காலப் புரட்சி பற்றி பொல்ஷெவிக்குகள், மென்ஷெவிக்குகள், சோஷலிச புரட்சிக் கட்சியினர், மற்றும் அனாக்கிச வாதிகள் (anarchists) தத்தமது நிலைப்பாடுகளுக்காக வாதிட்டு முரண்பட்டவண்ணமிருந்தனர். ஆட்சியாளர் இராணுவத்தைப் பலப்படுத்தவதற்கு முன்னுரிமை கொடுத்தனர். 1914ல் ஆரம்பித்த முதலாம் உலகப்போரின் தாக்கங்கள் 1917ல் புரட்சியின் தவிர்க்கமுடியாமையை நிதர்சனமாக்கின.

1905-1906 காலத்தில் Trotsky சுதந்திரமாக ரஷ்யப் புரட்சி பற்றிய தனது நிலைப்பாட்டை அவரது ‘நிரந்தரப் புரட்சி’ கோட்பாட்டுக்கமைய விளக்கினார். ரஷ்யாவின் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி நேரடியாகவே சோஷலிசப் புரட்சிக்கு இட்டுச்செல்லும். ஆனால் பின்தங்கிய நாடான ரஷ்யாவின் சோஷலிசப் புரட்சியின் வெற்றியும் சோஷலிச மாற்றமும் ஐரோப்பிய சோஷலிசப் புரட்சியின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. அப்போது லெனின் இந்த நிலைப்பாட்டுடன் நூறுவீதம் ஒத்துப் போகவில்லை. சோஷலிசப் புரட்சி உடனடியாகத் தொடரும் சாத்தியப்பாடு ரஷ்யாவில் இல்லை எனக் கருதினார். ஆயினும் ரஷ்யாவின் சோஷலிசப் புரட்சியின் வெற்றி ஐரோப்பிய சோஷலிசப் புரட்சியிலேயே தங்கியுள்ளது என்ற Trotskyன் கருத்துடன் ஒத்துப்போனார். 1914ல் முதலாம் உலகப்போர் ஆரம்பித்தபோது ‘போரும் ரஷ்ய சமூக ஜனநாயகமும்’ எனும் தலைப்பில் லெனின் ஒரு கட்டுரையை எழுதினார்.[9] ஐரோப்பாவின் சகல சமூக ஜனநாயகவாதிகளும் – அதாவது மாக்சியவாதிகளும் – இந்த ஏகாதிபத்தியப் போரை எதிர்க்கவேண்டும் எனும் கருத்தினை வலியுறுத்தினார். ‘தந்தைநாட்டின் பாதுகாப்பு’ ‘தேசபக்தி’ எனும் பெயரால் ஜேர்மனிய, பிரெஞ்சு சமூக ஜனநாயகவாதிகள் தமது நாட்டு ஆட்சியாளர் நடத்தும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆதரிப்பதைக் கண்டித்தார். அதே கட்டுரையில் புரட்சி பற்றிப் பின்வரும் கருத்தைத் தெரிவிக்கிறார். ரஷ்யா மிகவும் பின்னடைந்த நிலையில் இருப்பதால் அங்கு பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்தப் புரட்சியைப் பொறுத்தவரை ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள் மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதை நோக்காகக் கொள்ளவேண்டும்: சகல தேசிய இனங்களின் சமத்துவத்தையும் சுயநிர்ணய உரிமையையும் உறுதி செய்யும் ஒரு ஜனநாயகக் குடியாட்சி, பெரிய நிலச் சொத்துக்களின் பறிமுதல், எட்டு மணித்தியால வேலைநேரம். முதலாளித்துவம் முன்னேற்றமடைந்துள்ள எல்லா நாடுகளிலும் உலகப் போர் சோஷலிசப் புரட்சி எனும் சுலோகத்தை இன்றைய தேவையெனப் பதித்துள்ளது. நடைபெறும் உலகப்போரை உள்நாட்டுப் போராக மாற்றுவதே சரியான பாட்டாளிவர்க்க நிலைப்பாடு. 1914ல் இந்தக் கருத்தைக் கொண்டிருந்த லெனின் 1917ல் ரஷ்யாவின் பூர்ஷ்வா ஜனநாயகப்புரட்சி நேரடியாகச் சொஷலிசப் புரட்சியாக முன்னேறவேண்டும் எனும் தீர்க்கமான முடிவைப் பெப்ரவரிப் புரட்சிக்குப் பின் குழப்பமான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த பெரும்பான்மையான சக போல்ஷெவிக்குகளுக்கு விளக்க முற்பட்டார். 1917ல் லெனினும் Trotskyயும் புரட்சி பற்றி ஒத்த நிலைப்பாட்டிலிருந்தனர். 1912லிருந்து போல்ஷெவிக்குகள் தம்மை RSDLP (போல்ஷெவிக்) என மென்ஷெவிக்குகளிடமிருந்து தனியாக அடையாளப்படுத்திக் கொண்டனர்.

1917: இரண்டு புரட்சிகள்

‘அரச அதிகாரமே ஒவ்வொரு புரட்சியினதும் அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்வியைப் புரிந்து கொள்ளாமல் புத்திபூர்வமாகப் புரட்சியில் பங்குபற்ற முடியாது, அதற்கும் மேலாகப் புரட்சியை வழிநடத்துவது பற்றிப் பேசமுடியாது.’

– லெனின் April 1917[10]

1917ம் ஆண்டு ரஷ்யாவில் இரண்டு புரட்சிகள் இடம்பெற்றன. பெப்ரவரியில் இடம்பெற்ற புரட்சி பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி எனவும் அதைத் தொடர்ந்து ஒக்டோபரில் நடைபெற்றது சோஷலிசப் புரட்சி எனவும் அழைக்கப்படுகின்றன. பெப்ரவரி புரட்சியின் பின்னணியையும் தன்மையையும் அறியாமல் ஒக்டோபர் புரட்சியின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளமுடியாது. அதேபோன்று ஒரு ஏகாதிபத்தியப் போரான முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்குபற்றலையும் அதனால் ரஷ்ய போர்வீரர்களும் மக்களும் அனுபவித்த கொடிய அவலங்களையும் மறந்து அந்த இரு புரட்சிகளுக்கும் இருந்த பரந்து பட்ட வெகுஜனத்தன்மையையும், மக்களின் எதிர்பார்ப்புக்களையும், புரட்சியில் ஏற்பட்ட திருப்பங்களையும் மதிப்பிடவோ புரிந்து கொள்ளவோ முடியாது. இன்னுமொரு உண்மை என்னவெனில் லெனினின் தலைமையிலான போல்ஷவிக்குகளின்றி ஒக்டோபர் புரட்சி இன்றுவரை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும், விவாதிக்கப்படும், விமர்சிக்கப்படும், தூற்றப்படும் ஒக்டோபர் புரட்சியாக இருந்திருக்கமுடியாது. புரட்சியை லெனினும் போல்ஷெவிக்குகளும் வழிநடத்திய விதம் ரஷ்ய மக்களின் விமோசனத்திற்கும் சோஷலிசத்தின் வெற்றிக்கும் ஏற்றதா என்ற கேள்வி அப்போதே பலரால் எழுப்பப்பட்டது. இன்று அந்தக் கேள்விக்குப் பதில் காண்பது சுலபம் போல் தோற்றமளித்தாலும் அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் தெரிகின்றன. எனது கருத்தைச் சுருக்கமாக முன்னுரையில் கூறியுள்ளேன். மேலும் இது பற்றிக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்போம். முதலில் பெப்ரவரி-ஒக்டோபர் புரட்சிகளின் சில முக்கிய விபரங்களைச் சுருக்கமாகத்தர முயற்சிக்கிறேன்.

சாரிச முடியாட்சியின் முடிவின் ஆரம்பமான பெப்ரவரிப் புரட்சி தலைநகர் பெட்றோகிராட்டில் வெடித்தது. தொழிலாளர்களும் தலைநகரிலிருந்த படைவீரர்களுமே இந்தப் புரட்சியின் ஆரம்பகர்த்தாக்கள். தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் புரட்சியின் வருகையை அறிவித்தன. போருக்காக அரசாங்கம் ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைகளில் முதலீடு செய்திருந்தது. இதனால் தொழிலாளர்களின் தொகை முன்பைவிட அதிகரித்திருந்தது. ஆனால் தொழிலாளர்களின் ஊதியம் மிகக் குறைவாகவே இருந்தது, உற்பத்திச் சூழ்நிலைகள் மோசமாயிருந்தன. உணவுப் பற்றாக்குறையால் உணவுப் பொருட்களின் விலைகள் ஏறிக்கொண்டேயிருந்தன. கோதுமை மா மற்றும் ரொட்டி போன்ற உணவுவகைகளின் பங்கீடு கட்டுப்படுத்தப்பட்டது. தாமாகவே மக்கள் கூட்டாக அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பெப்ரவரி 23ம் திகதி (பழைய ரஷ்ய கலெண்டரின்படி) சர்வதேச மகளிர் தினம் ஒரு மாபெரும் ஊர்வலமாக மாறியது. போராட்டத்தில் குதித்த மக்கள் நகரத்திலிருந்த போர்வீரர்களை அரசுக் கெதிராகத் தம்முடன் இணையும்படி அழைத்தனர். இதுவே பெப்ரவரிப் புரட்சியின் ஆரம்பதினமாகக் கருதப்படுகிறது. முதலாம் உலகப் போர்க்களத்தில் ரஷ்ய போர்வீரர்கள் தினமும் பெருந்தொகையில் உயிரிழந்தவண்ணமிருந்தனர். ரஷ்ய இராணுவத்திற்குள் அதிருப்தி ஆழப் பரவியது. போர்வீரர்கள் மேலதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்க மறுத்துக் கிளர்ச்சி செய்தனர். ஆட்சியாளர்கள் போரின் தன்மை, தொடர்ச்சி பற்றித் தப்புக் கணக்கு போட்டிருந்தனர் என்பது தெளிவாயிற்று. ஆறு மாதங்களில் புதிய ஆள்பரப்புகளைக் கைப்பற்றிப் போரை முடிவுக்குக் கொண்டுவரமுடியும் என எண்ணியிருந்தனர். போரைத் தேசபக்திப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி நாட்டிற்குள் முடியாட்சியைப் பலப்படுத்த முடியும் என எதிர்பார்த்தனர். ஆனால் போர்வீரர்களே போருக்கெதிராகத் திரும்பும் போக்கு வலுப்பெற்றது. சாரிச இராணுவத்தின் மிகப்பெரும்பான்மையினர் நாட்டுப்புறத்தினர் என்பதால் அவர்கள் விவசாயக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். படைவீரரின் இந்தப் பின்னணி நாட்டுப்புறத்திற்கும் புரட்சியின் செய்தியைப் பரப்ப உதவியிருக்கலாம். ஆயினும் பெப்ரவரிப் புரட்சியின் மையம் தலைநகர் பெட்றோகிராட்டே.

பெப்ரவரி புரட்சி ஆரம்பித்த சில நாட்களில் தனது ஆட்சியின் முடிவு தவிர்க்கமுடியாதது என்பதை சார் நிக்கொலஸ் II உணர்ந்து கொண்டார். அந்த நாட்களில் அவர் போர்முனைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். முதலில் அரச பதவியை இரத்த ஒழுக்கு வியாதியால் (hemophilia) அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்த பன்னிரண்டு வயதினரானஅவரது மகன் அலெக்செய்யுக்கு வழங்க முயற்சித்தார், பின்னர் மனதை மாற்றி தனது இளைய சகோதரருக்குக் கொடுக்க முயன்ற போது அவர் அதை ஏற்க மறுத்தார். இறுதியில் மார்ச் இரண்டாம் திகதி (புதிய கலெண்டரின் படி மார்ச் 15) சார் பதவி துறந்தார். அந்த இடைப்பட்ட சில நாட்களில் தலைநகர் பெட்றொகிராட்டில் மக்களின் எழுச்சி அரசியல் கட்சிகளை முந்திக்கொண்டு நகரும் நிலை உருவாகிக் கொண்டிருந்தது. நீண்ட காலமாகச் சர்வாதிகார அடக்குமுறையால் ஆண்ட சாரிச ஆட்சியை வெறுத்த மக்கள் மத்தியிலிருந்து எழுந்த தன்னியல்பான எதிர்ப்புப் போக்கு ரஷ்யப்புரட்சியின் ஒரு முக்கிய அம்சமாயிருந்தது.

போல்ஷெவிக் தலைவர்கள் சைபீரியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்தனர். தலைமையிடமிருந்து வழிகாட்டல் கிடைக்காத நிலையில் பெட்றோகிராட்டில் இருந்த போல்ஷெவிக்குகள் மத்தியில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் குழப்பமான நிலையே காணப்பட்டது. அவர்கள் புரட்சியை ஆதரித்தார்கள் ஆனால் அவர்களின் சக்திகளுக்கப்பால் துரிதமாக மாறும் அரசியல் சூழலில் ஒரு புதிய அரசாங்கம் தோன்றும் நிலையில் தாம் யாருடன் இணைவது, அடுத்தபடியாகச் செய்யவேண்டியது என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தேடினர். தம்மால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை நிற்பாட்டுவது பற்றிக்கூட அவர்கள் சிந்தித்தனர். ஆனால் யாராலும் நிற்பாட்டமுடியாத வேகத்தில் நிலைமைகள் மாறிக் கொண்டிருந்தன. தலைநகரில் படைவீரர்களின் கிளர்ச்சி எழுந்தது. போல்ஷெவிக்குகள் மத்தியில் ரஷ்யா பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் கட்டத்திலேயே உள்ளது என்ற கருத்தின் செல்வாக்குப் பலமாயிருந்தது. இந்தச் சூழலில் மென்ஷெவிக்குகள் தெளிவாக பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக்காகச் செயற்பட்டனர். மறுபுறம் பூர்ஷ்வா தாராளவாதக் கட்சிகள் உடனடியாகத் தமது நிகழ்ச்சி நிரலை அமுலாக்க முற்பட்டனர்.

இத்தகைய சூழலிலேயே 1917 மார்ச் மாத ஆரம்பத்தில்  புதிய தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் தாராளவாதக் கட்சிகளின் பெரும்பான்மை அதிகாரத்தில் இருந்தது.  ரஷ்யாவை ஒரு தாராளவாத பாராளுமன்றக் குடியரசாக்குவதே இதன் தலைவர்களின் நோக்கமாக இருந்தது. அதே நேரம் போரைத் தொடர்வதும் இவர்களின் கொள்கையாயிருந்தது. இந்த அரசாங்கத்தில் சோஷலிசப் புரட்சி கட்சியினராயிருந்தவரும் சட்டவாளருமான அலெக்ஸ்சாண்டர் கெரென்ஸ்கி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் தற்காலிக அரசாங்கத்தின் பிரதமரானார். மறுபக்கத்தில் மென்ஷெவிக்குகளின் முன்னெடுப்பில் பெட்றோகிறாட் சோவியத் அமைக்கப்பட்டது. 1905ல் உருவாக்கிய சோவியத்தை மாதிரியாகக் கொண்டே இது தெரிவு செய்யப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். 1917 மார்ச்சில் மென்ஷெவிக்குகளைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த இந்த சோவியத்தில் சோஷலிசப் புரட்சிக் கட்சியினரும் இருந்தனர். ஆனால் ஆரம்பத்தில் போல்ஷெவிக்குகள் இல்லை. பெட்றோகிராட் சோவியத் தற்காலிக அரசாங்கத்திற்கு மாற்று அமைப்பாகப் போட்டி போட்டது. இது ‘இரட்டை அதிகாரம்’ (dual power) எனும் நிலைமையை உருவாக்கியது.

புரட்சியின் செய்தியை சுவிற்சலாந்திலிருந்த லெனினாலும் மற்றைய போல்ஷெவிக்குகளாலும் முதலில் நம்ப முடியவில்லை. சாரிசம் சரிந்ததெனும் செய்தி அவர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த ஒன்றாயிருந்தாலும் அதை உறுதிப்படுத்துவதற்கு பத்திரிகைகளைத் தேடி விரைந்தார்கள். உண்மையை அறிந்ததும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். ரஷ்யாவிற்குத் திரும்பும் ஆயத்தங்களில் ஈடுபட்டார்கள். தற்காலிக அரசாங்கம் உடனடியாக அரசியல் கைதிகளை விடுவித்தது. சைபீரியாவில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த போல்ஷெவிக் முக்கியஸ்தர்களான ஸ்டாலினும் கமனெவ்வும் பெட்றோகிராட் வந்தடைந்தார்கள். அங்கு வந்தபின் அவர்கள் தற்காலிக அரசாங்கத்திற்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்குவதற்குத் தயாராயிருந்தார்கள். இந்த நிலைப்பாட்டினால் பின்னர் இவர்களும் மத்திய செயற்குழுவினரும் லெனினுடைய கராரான விமர்சனத்துக்காளாவார்கள். லெனினும் சுவிற்சலாந்திலிருந்த மற்றைய போல்ஷெவிக்குகளும் அப்போதிருந்த போர்க்கால நிலைமைகளில் ரஷ்யா திரும்புவதற்கு ஜேர்மனிக்கூடாகப் பயணம் செய்வதற்கு ஜேர்மன் அரசாங்கத்தின் அநுமதியைப் பெறவேண்டியிருந்தது. அவர்களின் சார்பில் ஒரு சுவிஸ் சோஷலிசவாதி ஜேர்மனிய தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் ஜேர்மனிக்கூடாகப் புகையிரதம் மூலம் பாதுகாப்பாகப் பின்லாந்த்துக்குச் செல்லும் ஒழுங்குகளைச் செய்து கொடுத்தார். ஏகாதிபத்திய உலகப்போரின் பங்குதாரியான ஜேர்மனியின் உதவியைப் பெற்றதால் லெனினும் அவரது போல்ஷெவிக் தோழர்களும் மென்ஷெவிக்குகளினால் ‘ஜேர்மன் ஏஜண்டுகள்’ எனப்பட்டம் சூட்டப்பட்டனர். ஆயினும் இந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை. லெனின் தற்காலிக அரசு தூக்கி எறியப்பட்டுச் சோஷலிசப் புரட்சி தொடரவேண்டும் எனும் திடமான நிலைப்பாட்டுடன் ரஷ்யாவுக்குப் பயணமானார். அப்போது அவர் பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் ரஷ்யா செல்கிறார்.

ஏப்ரில் மாதம் மூன்றாம் திகதி நள்ளிரவு லெனின், ஸினொவியெவ் (Zinoviev) உட்படப் பல போல்ஷெவிக்குகள் ஹெல்சிங்கியிலிருந்து பெட்றோகிராட்டின் பின்லாந்து புகையிரத நிலையத்தை (Finland Stationஐ) வந்தடைந்தனர். அங்கே அவர்களை வரவேற்கப் போல்ஷெவிக்குகள் உட்படப் பெருந்திரளானோர் காத்திருந்தனர். அப்போது லெனின் ஆற்றிய சிற்றுரை பலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. தற்காலிக அரசாங்கம் கவிழ்க்கப்படவேண்டும் என அவர் கூறியது அந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையுடனான ஆதரவு எனும் நிலைப்பாட்டிலிருந்த சக போல்ஷெவிக்குகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பூர்ஷவா ஜனநாயகப் புரட்சி – சோஷலிசப் புரட்சி தொடர்புகள் பற்றிய லெனினின் பின்னைய கருத்து மாற்றங்கள் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

மறுநாள் லெனின் ஏற்கனவே பிரயாணத்தின்போது தயார் செய்து வைத்திருந்த தனது ‘ஏப்ரில் கட்டுரை’யை (April Thesesஐ) முதலில் போல்ஷெவிக்குகளுக்கும் அதைத் தொடர்ந்து போல்ஷெவிக்குகளும் மென்ஷெவிக்குகளும் அடங்கிய ஒரு கூட்டத்திலும் சமர்ப்பித்து விளக்கினார். பத்து அம்சங்களைக் கொண்ட இந்தக் கட்டுரையின் முக்கிய கருத்துக்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.[11]

  • ரஷ்யா பங்குபற்றும் போர் ஒரு சூறையாட்டத்தனம் மிக்க ஏகாதிபத்தியப் போர் என்பதால் அதை எதிர்க்கவேண்டும். ‘புரட்சிகரப் பாதுகாப்பு வாதம்’ (´revolutionary defencism´) எனும் பெயரில் போரைத் தொடரும் கொள்கையை கொண்ட புதிய அரசாங்கத்தின் முதலாளித்துவத் தன்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். போரின் தன்மையைத் தவறாகப் புரிந்து அதற்கு ஆதரவு வழங்கும் நேர்மையான வெகுஜனங்களுக்கும் படையினருக்கும் மூலதனத்திற்கும் ஏகாதிபத்தியப் போருக்குமிடையிலான உறவை விளக்கி அவர்களை வென்றெடுக்க வேண்டும்.
  • ரஷ்யாவில் தற்போது புரட்சி முதலாவது கட்டத்திற்கூடாகச் செல்கிறது. வர்க்க உணர்வு மற்றும் ஸ்தாபனரீதியான போதாமையால் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை பூர்ஷ்வா வர்க்கத்தின் கைகளில் வைத்துவிட்டது. இரண்டாவது கட்டத்தில் அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தினதும் மிக வறிய விவசாயிகளினதும் கைகளுக்கு மாறவேண்டும்.
  • தற்காலிக அரசுக்கு எதுவித ஆதரவும் கொடுக்கக்கூடாது.
  • சோவியத்களில் ‘RSDLP (போல்ஷெவிக்) மிகச் சிறுபான்மையாயுள்ளது எனும் உண்மையை ஏற்றுக் கொள்ளவேண்டும். அவற்றின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டும் அதேவேளை முழு அரச அதிகாரமும் சோவியத்களுக்கு மாற்றப்படவேண்டும் எனும் அவசியத்தை விளக்கவேண்டும்.
  • ஒரு பாராளுமன்றக் குடி அரசல்ல அதற்கு மாறாகச் சோவியத்களின் குடி அரசு.
  • சகல பெரிய நிலச் சொத்துக்களின் பறிமுதலும் நாட்டின் முழு நிலத்தினது தேசியமயமாக்கலும்.
  • நாட்டின் சகல வங்கிகளையும் ஒன்றிணைத்து சோவியத்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு தேசிய வங்கியை உருவாக்கல்.
  • சோஷலிசத்தைக் கொண்டுவருவதல்ல உடனடிப் பணி ஆனால் உற்பத்தியும் பங்கீடும் சோவியத்களின் கட்டுப்பாட்டின்கீழ் வரவேண்டும்.
  • கட்சியின் பொதுக் கூட்டத்தைக் கூட்டி வேலைத் திட்டத்தை திருத்தியமைத்தலும் கட்சியின் பெயரை மாற்றலும். உலகரீதியில் சமூக ஜனநாயகக் கட்சிகளின் தலைவர்கள் சோஷலிசத்திற்குத் துரோகமிழைத்து பூர்ஷ்வா வர்க்கத்துடன் சேர்ந்துவிட்டதால் RSDLP (போல்ஷெவிக்) என்பதற்குப் பதிலாகக் கொம்யூனிஸ்ட் கட்சியெனப் பெயர் மாற்றல்.
  • ஒரு புதிய அகிலம் (அதாவது மூன்றாம் அகிலம்) உருவாக்கப்பட வேண்டும்.

லெனின் மிகவும் சிரமத்துடன் முன்வைத்து வாதிட்ட இந்தக் கருத்துக்களுக்கு போல்ஷெவிக்குகள் மத்தியில்கூட முதலில் ஆதரவு மிகக்குறைவாகவே இருந்தது. மென்ஷெவிக்குகள் லெனினின் கருத்துக்களை முற்றாக நிராகரித்தார்கள். ஆனால் இரண்டுவாரங்களுக்குப் பின் இடம்பெற்ற போல்ஷெவிக்குகளின் கூட்டத்தில் மிகப் பெரும்பான்மையான பிரதிநிதிகள் லெனினின் ஏப்ரில் கட்டுரையின் உள்ளடக்கங்களை முற்றாக ஆதரித்து வாக்களித்தார்கள்.[12] இதைத்தொடர்ந்து சோவியத்களில் போல்ஷெவிக்குகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் கட்சிச் செயற்பாட்டாளர்கள் தீவிரமாக ஈடுபட்டார்கள். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் போல்ஷெவிக்குகளின் அரசியல் திட்டத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் லெனின் கண்ணாயிருந்தார். இரட்டை அதிகாரம் (dual power) நீடிக்கமுடியாது என வாதாடிய லெனின் முதலாளித்துவ தற்காலிக அரசாங்கம் தூக்கி எறியப்பட வேண்டும் எனவும் முழு அதிகாரமும் தொழிலாளர்கள், படைவீரர்கள், மற்றும் ஏழை விவசாயிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத்களின் கைகளுக்கு மாறவேண்டும் எனவும் கட்டுரைகளுக்கூடாகவும் உரைகளுக்கூடாகவும் பிரச்சாரம் செய்தார். சோவியத்கள் தம்மிடம் வைத்திருக்கவேண்டிய அதிகாரத்தை தற்காலிக அரசாங்கத்திடம் விட்டிருக்கும் நிலையை விமர்சித்தார். ரஷ்யத் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு வளர்ச்சிகுன்றிய நிலையிலிருப்பதால் அது மேலும் வளர்க்கப்படுதல் புரட்சியின் வெற்றிக்கு அவசியமெனக் கருதினார். 1902ம் ஆண்டில் எழுதிய ‘இனிச் செய்யவேண்டியது என்ன?’ என்ற நூலில் தொழிலாளர்களின் வர்க்க உணர்வைப் புரட்சிகர மட்டத்திற்கு வளர்த்தெடுக்கப் புரட்சிகரக் கட்சி ஒன்று அவசியமென வாதாடினார். தொழிலாளரின் சுயமான வர்க்க உணர்வு தொழிற்சங்கத்திற்கூடாக ஊதிய உயர்வு, வேலைநேரம் போன்ற உரிமைகளுக்காகப் போராடும் உணர்வுக்கு அப்பால் செல்லமுடியாது. இந்த மட்டத்திலிருந்து தொழிலாளர் கூட்டாக முதலாளித்துவ சுரண்டலிலிருந்து விடுதலைபெறப் போராடும் அரசியல்ரீதியான வர்க்க உணர்வு வெளியிலிருந்தே ஊட்டப்படவேண்டும் என்பதால் அந்தப் பணியைச் செய்யும் முன்னணி அமைப்பாகப் (vanguard ஆக) புரட்சிகரக் கட்சி இயங்கவேண்டும் என்பதே லெனினின் கொள்கை.

உடல்நிலை மிகவும் குன்றியநிலையில் ரஷ்யாவுக்குத் திரும்பிய பிளெக்கானொவ் தற்காலிக அரசாங்கத்தை ஆதரித்தார். லெனினின் ஏப்ரில் கட்டுரையின் கொள்கையை முற்றாக நிராகரித்தார். மென்ஷெவிக்குகள், நரோடிச சோஷலிச புரட்சிவாதிகள், அனாக்கிஸ்டுகள் போன்றோருடன் போல்ஷெவிக்குகள் சேர்ந்து செயற்படுவதை லெனினும் முற்றாக நிராகரித்தார். தனியான கட்சியாக போல்ஷெவிக்குகள் சோவியத்களுக்கூடாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதே புரட்சியைச் சோஷலிசப்பாதைக்கு எடுத்துச் செல்லும் என்பதே அவருடைய உறுதியான நிலைப்பாடாயிருந்தது. இதற்கு வெளிநாட்டுப் போரைத் தொடர்வதை நிராகரித்து அதை தற்காலிக அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் போல்ஷெவிக்குகளின் தலைமையிலான சோஷலிசப் புரட்சிக்கும் உதவும் உள்நாட்டுப் போராக, வர்க்கப் போராக மாற்றவேண்டும் எனும் திட்டத்தையும் வலியுறுத்தினார். ‘தந்தை நாடு’ ‘தேசபக்தி’ எனும் சுலோகங்களைவைத்து ரஷ்யா ஏகாதிபத்தியப் போரில் தொடர்ந்தும் பங்குபற்றுவதற்கு எதிராக பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதம் மற்றும் ஐரோப்பிய சோஷலிசப் புரட்சி எனும் சுலோகங்களை முன்வைத்தார். லெனின் சர்வதேசியவாதத்திற்கும் ஐரோப்பியப் புரட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். ரஷ்யப் புரட்சியை வரப்போகும் ஐரோப்பியப் புரட்சியின் அம்சமாகவே அப்போது நம்பினார். ஆயினும் அவரது கட்சிக்குள் தொடர்ந்தும் கருத்து முரண்பாடுகளும் நடைமுறைப் பிரச்சனைகளும் எழுந்தவண்ணமிருந்தன. தொழிலாளர்கள், படைவீரர்கள், மற்றும் வறிய விவசாயிகள் மத்தியில் போராட்ட உணர்வும் முன்னேறிச்செல்லும் துணிவும் வளர்ச்சியடைந்திருப்பதை அவர் உணர்ந்தார். இதைச் சோஷலிசப் புரட்சியின் பாதையில் வழிநடத்துவது கட்சியின் பொறுப்பு எனும் அடிப்படையில் உட்கட்சிப் பிரச்சனைகளைக் கையாண்டு போல்ஷெவிக்குகளின் பலத்தை அதிகரிப்பதில் லெனின் ஈடுபட்டார்.

இந்தச் சமயத்தில் நியூயோக்கில் தஞ்சமடைந்திருந்த Trotsky மார்ச் பிற்பகுதியில் ரஷ்யாவுக்குப் புறப்பட்டு பல தடைகளுக்கூடாக மேமாதம் ரஷ்யா வந்து சேர்ந்தார். இடைவழியில் சிலகாலம் பிரிட்டிஷ் ஆட்சியால் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார். ரஷ்யா வந்தடைந்ததும் போல்ஷெவிக்குகளுடன் இணைந்து புரட்சியில் முக்கிய பங்கினை வகித்தார். சோஷலிசப் புரட்சி பற்றித் தான் நீண்டகாலமாகக் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு லெனினும் வந்திருப்பதையிட்டு அவருக்குத் திருப்தி. Trotsky பலவருடங்களாக லெனினுடைய கருத்துக்களோடு ஒத்துப்போகவில்லை. ஏற்கனவே கூறியதைப் போன்று ரஷ்யப் புரட்சியின் கட்டங்கள் பற்றி அவர்களிடையே வேறுபாடுகள் இருந்தன. அதையும்விட முக்கியமாக ஒரு முன்னணி அமைப்பு (vanguard party) புரட்சியின் வழிகாட்டியாக கட்டியெழுப்பப்படவேண்டும் எனும் லெனினிச நிலைப்பாட்டை Trotsky நீண்டகாலமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் 1917 ஓகஸ்ட் மாதம் போல்ஷெவிக் கட்சியில் அங்கத்தவரான பின் கட்சியின் முக்கியத்துவம் பற்றித் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

தற்காலிக அரசாங்கம் ஏகாதிபத்தியப் போரைத் தொடரும் கொள்கையைத் தொடர்ந்தும் அமுல்படுத்திக்கொண்டிருந்தது. John Reed (1919) எழுதுவதுபோல் தற்காலிக அரசாங்கத்தின் கொள்கை பயனற்ற சீர்திருத்தங்களுக்கும் அடக்குமுறைச் செயற்பாடுகளுக்குமிடையே மாறி மாறி நகர்ந்தது. ஜூன் மாதம் போர்முனையில் ரஷ்யா பெரும் இழப்புக்களைச் சந்தித்தது. ரஷ்யா போரைத் தொடர்வதற்கு மக்கள் மற்றும் படைவீரர்கள் மத்தியில் எதிர்ப்பு மேலும் வலுத்தது. போரை எதிர்த்த  போல்ஷெவிக்குகளுக்கு ஆதரவு தொடர்ந்து வளர்ந்தது. அவர்கள் நாட்டில் இருக்கும் சோவியத்களில் தமது பங்குபற்றலை அதிகரிப்பதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டனர். படைவீரர்கள் தமது துப்பாக்கிகளைத் தற்காலிக அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பத் தயாராயிருந்தார்கள். ஆயுதப் போராட்டத்தை அவர்கள் வலியுறுத்தினார்கள். போல்ஷெவிக்குகள் அவசரப்பட விரும்பவில்லை. ஆயுதக் கிளர்ச்சிக்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதே அவர்களின் கருத்து. பொது வேலைநிறுத்தத்தைப் புரட்சியின் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதில் அவர்கள் ஆர்வமாயிருந்தனர்.  ஆனால் பெட்றோகிராட்டில்  படைவீரர்கள் ஆயுதம் ஏந்தியபடி பேரணியாகத் திரண்டு தொழிற்சாலைகளுக்குச் சென்று தொழிலாளர்களைத் தம்முடன் ஊர்வலத்தில் இணையும்படி வேண்டினர். ‘சகல அதிகாரங்களும் சோவியத்களுக்கே’ எனும் கோஷத்துடன் பெருந்தொகையானோர் பேரணியில் இணைகின்றனர். போல்ஷெவிக்குகள் பேரணியை ஆதரிக்க முடிவெடுக்கின்றனர். இந்த நாட்களில் தினமும் பேரணிகள் இடம்பெறுகின்றன. போல்ஷெவிக்குகள் இணைகிறார்கள். லெனின் மக்கள்முன் உரையாற்றுகிறார்.

ஆரம்பத்தில் கிராமப்புறத்தில் நிலஉரிமைக்காகப் போராடும் விவசாயிகள் மத்தியில் பொதுவாகப் புரட்சிகர சோஷலிசக் கட்சிக்கே கூடுதலான ஆதரவு இருந்தது. ஆனால் இராணுவத்திலிருந்து கிராமங்களுக்குத் திரும்பிய இளைஞர்கள் போல்ஷெவிக்குகளுக்குச் சார்பாக இருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் (மே-ஜூன் மாதங்களில்) போல்ஷெவிக்குகள் விவசாயிகள் நிலத்தைக் கைப்பற்றும் கொள்கையைப் பின்பற்றினர். இதனால் அவர்களுக்கு ஆதரவு வளர ஆரம்பித்தது. கிராமங்களில் மரபுரீதியான கூட்டுஅமைப்புக்களையும் விவசாயிகள் மீளுருவாக்கினர். இவற்றிற்கூடாக விவசாயக் குடும்பங்களின் தேவைக்கேற்பக் கைப்பற்றப்பட்ட நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்தகைய குட்டி முதலாளித்துவ நிலப்பகிர்வை லெனின் விரும்பாதபோதும் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு விவசாயிகளின் ஆதரவைப் பெற அது தவிர்க்க முடியாத ஒரு படி என ஏற்றுக்கொண்டார்.

‘ஜூலை நாட்களின்’ புரட்சிகர எழுச்சிகள் தற்காலிக அரசாங்கத்தைக் கலங்க வைக்கிறது. அரசாங்கம் தனக்கு விசுவாசமான படையினரைப் பயன்படுத்தி போல்ஷெவிக்குகளின் கட்சிக் காரியாலயம் மற்றும் கட்சிப் பத்திரிகையான ‘பிராவ்டா’ வின் அச்சகம் போன்றவற்றை தாக்குகிறது. லெனினையும் வேறுசில போல்ஷெவிக் தலைவர்களையும் கைது செய்ய அரசாங்கம் உத்தரவிடுகிறது. அவர்கள் தலைமறைவாக முயற்சிக்கிறார்கள். லெனின் மாறுவேடத்தில் தலைநகரை விட்டு வெளியேறுகிறார். பின்னர் பின்லாந்திற்கு செல்கிறார். சினொவியெவ்வும் வெளியேறுகிறார். Trotsky, கமனெவ் மற்றும் லுனாச்சாஸ்கி கைது செய்யப்படுகின்றனர். தற்காலிக அரசாங்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. கெரென்ஸ்கி பிரதமராகப் பதவி ஏற்கிறார். தலைமறைவாகிய லெனின் ‘அரசும் புரட்சியும்’ எனும் நூலை எழுதுகிறார். லெனின் தலைமறைவாக இருந்த நாட்களில் அவருக்கும் போல்ஷெவிக் மத்திய குழுவுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. பின்லாந்திலிருந்து லெனின் மத்திய செயற்குழுவுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் பின்வரும் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்: சாத்வீக வழிக்கூடாக ரஷ்யப் புரட்சி முன்னேறும் நம்பிக்கைகளெல்லாம் மறைந்துவிட்டன. கெரென்ஸ்கி ஒரு இராணுவச் சர்வாதிகாரத்தை உருவாக்கியுள்ளார். சோவியத்கள் எதிர்ப்புரட்சியின் மூடிமறைப்பாய் மாறிவிட்டன. இந்தச் சூழலில் ஆயுத எழுச்சிக் கூடாக ஒரு புரட்சிகர அரசாங்கத்தை உருவாக்குவதே போல்ஷெவிக்குகளின் கடமை. ‘இப்போது நாம் அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறினால் வரலாறு நம்மை மன்னிக்கமாட்டாது’ என எழுதினார்.  லெனினின் கருத்து மத்தியகுழுவைத் திகைக்க வைத்தது. ஏப்ரில் மாதத்திலிருந்து பொல்ஷெவிக்குகள் பின்பற்றிய ‘சகல அதிகாரமும் சோவியத்களுக்கே’ என்ற கொள்கையைக் கைவிடும்படி லெனின் கூறுவதை அவர்களால் ஏற்க முடியவில்லை.  ஜூலை 13ம் திகதி ஒரு நீண்டநேரக் கூட்டத்தின் பின் மத்திய செயற்குழு லெனினின் முன்மொழிவை நிராகரித்து ‘சகல அதிகாரமும் சோவியத்களுக்கே’ என்ற சுலோகத்தைத் தொடர்ந்தும் தக்கவைத்தது.  இதனால் ஆத்திரமடைந்த லெனின் ‘சுலோகங்கள் பற்றி’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையில் தன் நிலைப்பாட்டை விளக்கினார்.[13] ஆயினும் மத்திய செயற்குழு தன் முடிவை மாற்றவில்லை. செயற்குழுவின் முடிவை ஸ்டாலின் பின்வருமாறு சுருக்கிப் பதிவு செய்தார்: நாம் பெரும்பான்மையாயிருக்கும் சோவியத்களுக்கு எதுவித குழப்பமுமின்றி சார்பாக இருக்கிறோம். அத்தகைய சோவியத்களை நாம் மேலும் உருவாக்குவோம்.

அந்த நாட்களில் லெனினுக்கும் போல்ஷெவிக் மத்திய குழுவினருக்குமிடையே புரட்சியை முன்னெடுக்கும் வழிவகைகள் பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிலவியதை மேற்கூறிய சம்பவம் காட்டுகிறது. சோவியத்களில் மென்ஷெவிக்குகள் மற்றும் சோஷலிசப் புரட்சிக் கட்சியினரின் பங்குபற்றலையும் செல்வாக்கையும் லெனின் விரும்பவில்லை. அவர்கள் சோஷலிசத்தை நோக்கிப் புரட்சியை முன்னெடுப்பதற்கு எதிராயிருந்தனர். ஆனால் பல போல்ஷெவிக்குகளின் கருத்தில் சோவியத்களை போல்ஷெவிக்குகளால் கைப்பற்றமுடியும் எனும் நம்பிக்கை இருந்ததை மேற்குறிப்பிட்ட மத்திய குழுவின் முடிவு காட்டுகிறது. லெனினின் பார்வையில் சோவியத்கள் ஒரு குறிபிட்ட கட்டத்திற்கு உகந்தவையாயிருந்தன. ஆனால் அவற்றால் முழு அதிகாரத்தையும் கைப்பற்ற முடியவில்லை. அது உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் நடந்திருந்தால் புரட்சி சாத்வீகமாக வெற்றி பெற்றிருக்கும் ஆனால் (ஜூலை 1917ல்) எதிர்ப்புரட்சி பலமடைகிறது. பெப்ரவரி 27 – ஜூலை 4 காலத்தில் புரட்சியின் முதலாவது கட்டம் முற்றுபெற்று இரண்டாவது கட்டம் ஆரம்பமாகிறது. இந்தக் கட்டத்தில் ஆயுதப் போராட்டம் அவசியமாகிறது எனும் கருத்தை லெனின் கொண்டிருந்தார். மேற்குறிப்பிட்ட ‘சுலோகங்கள் பற்றி’ என்ற தலைப்பிலான கட்டுரையில் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்.

தற்காலிக அரசாங்கத்தின் பிரதமாரான கெரென்ஸ்கி ரஷ்யப் படைகளின் தளபதியாக கோர்னிலோவ் என்பவரை நியமித்தார். செப்ரெம்பர் மாதம் கோர்னிலோவ் ஒரு இராணுவ சதிக்கூடாக ஆட்சியைக் கைப்பற்றமுயன்றார். இது வெற்றி பெறவில்லையாயினும் தற்காலிக அரசாங்கத்தின் நிலைமை மிகவும் பலவீனமடைந்தது. அதற்கு ஆதரவு மேலும் வீழ்ச்சியடைந்தது. இந்தக் கட்டத்தில் பின்லாந்தில் தலைமறைவாக இருந்த லெனின் ‘எல்லா அதிகாரமும் சோவியத்களுக்கே’ எனும் சுலோகத்தை மீண்டும் ஏற்றுகொண்டார்.  ஆயினும் பெட்றோகிராட் சோவியத்தில் மென்ஷெவிக்குகள் இன்னமும் பலமாயிருந்தனர்.  மறுபுறம் ஓகஸ்ட் பிற்பகுதியில் பெட்றோகிராட்டில் போல்ஷெவிக்குகளுக்கு ஆதரவான பல்லாயிரகணக்கான தொழிலாளர்கள் ஆயுதம் தரித்த ‘செங்காவலர்களாக’ (Red Guards ஆக) அணிதிரண்டனர். கோர்னிலோவின் சதியை முறியடிப்பதில் பெட்றோகிராட்டின் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இந்தக் கட்டத்தில் பெட்றோகிராட் சோவியத்தில் போல்ஷெவிக்குகளுக்கு ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியது. செப்ரெம்பர் 25ம் திகதி சிலநாட்களுக்குமுன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  Trotsky பெட்றோகிராட் சோவியத்தின் தலைவராகத் தெரியப்பட்டார். மொஸ்கோ சோவியத்திலும் போல்ஷெவிக்குகள் பெரும்பான்மையாயினர். கெரென்ஸ்கியுடன் சமரசம் செய்யும் அரசியலைப் பின்பற்றிய மென்ஷெவிக்குகளினதும் சோஷலிச புரட்சிகரக் கட்சியினதும் ஆதரவு வீழ்ச்சியடைந்தது. நாட்டுப்புறங்களில் விவசாயிகள் நிலங்களை கைப்பற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள்.

ஒக்டோபர் – இறுதிக் கட்டமும் அதற்குப்பிறகும்

ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கும் அரசியல் புலத்திலிருந்து வரும் செய்திகளைத் தூரத்தில் பின்லாந்தில் இருந்த லெனின் அறிந்ததும் முன்னுக்குப்பின் முரணான அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தார். சில சந்தர்ப்பங்களில் அவர் அனுப்பிய முன்மொழிவுகளை போல்ஷெவிக் மத்திய குழு ஏற்கவில்லை. ஒக்டோபர் ஆரம்பத்தில் இரகசியமாக ரஷ்யாவுக்குள் நுழைய முடிவெடுத்தார். ஒக்டோபர் பத்தாம் திகதி நடக்கவிருக்கும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நேரடியாகப் பங்குபற்றி ஆயுதப் புரட்சிக்கூடாக ஆட்சியைக் கைப்பற்றும் பிரேரணையை மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பித்து ஏற்கவைக்கவேண்டும் எனும் நோக்கில் ஒரு லூதரிய கிறிஸ்த்துவ பாதிரி போல் வேடமிட்டு பெட்றோகிராட் சென்றார். மீசையையும் தாடியையும் சவரம் செய்து தலைக்குப் புனைமுடி வைத்துக்கொண்டார். இந்தக் கோலத்தில் மத்தியகுழுக் கூட்டத்தில் சமுகமளித்தார். அந்தக் கூட்டத்தில் லெனினின் பிரேரணையைப் பெரும்பான்மை அங்கத்தவர்கள் ஏற்று ஆயுதக் கிளர்ச்சிக்கூடாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஆயத்தங்களை மேற்கொள்வதென முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் திகதி பற்றி முடிவு எடுக்கப்படவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்ட  அங்கத்தவர்களில் லெனினுக்கு மிகவும் நெருங்கியவர்களான சினொவியெவ்வும் கமனெவ்வும் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.[14] இவர்கள் இருவரும் புரட்சியைத் தாமதிக்க வேண்டுமெனும் கருத்தினைக் கொண்டிருந்தனர். இவர்கள் மத்திய செயற்குழுவின் இரகசியமான முடிவை மக்சிம் கோர்க்கியின் Novaya Zhizn (புது வாழ்வு) பத்திரிகை மூலமாகப் பகிரங்கப்படுத்தியதால் லெனினின் கடும் கோபத்திற்காளானார்கள். இந்தக் கசிவின் விளைவாக போல்ஷெவிக்குகள் ஒரு ‘இராணுவச் சதியை’ நடத்தத் திட்டமிடுகிறார்கள் எனும் செய்தி பரவியது.

புரட்சியின் பிரபல வரலாற்றாய்வாளர்களில் ஒருவரான Beryl Williams (1987)ன் கருத்தில் ஒக்டோபரில் நடக்கப்போகும் புரட்சியைப் பற்றிப் போல்ஷெவிக்குகள் மத்தியில் மூன்று விதமான கருத்துருக்கள் நிலவின. லெனின் உடனடியாக, முழு ரஷ்ய சோவியத்களின் இரண்டாவது கொங்கிரஸ் கூடமுன், ஆயுதக் கிளர்ச்சிக்கூடாகப் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்தார். சினோவியெவ்வும் கமனெவ்வும் ஆயுதக் கிளச்சியைப் பின்போடவேண்டும் என்றனர். அவர்களின் அபிப்பிராயத்தில் போல்ஷெவிக்குகளுக்கு தொழிலாள வர்க்கத்தினதும்  இராணுவத்தின் கணிசமான பகுதியினதும் ஆதரவு இருந்தபோதும் பிரதான நகரங்களுக்கு வெளியே பொது மக்கள் மத்தியில் ஆதரவு அற்பமாயிருப்பதால் அவசரப்பட்டு ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கக்கூடாது. அப்படிச் செய்வது ரஷ்யப் புரட்சியின் எதிர்காலத்தை மட்டுமன்றி ஐரோப்பியப் புரட்சியின் எதிர்காலத்தையும் ஆபத்திற்குள்ளாக்கும். சோவியத்களில் போல்ஷெவிக்குகள் பெரும்பான்மையாயிருந்தாலும் அதிகாரத்தைக் கைப்பற்றினால் மென்ஷெவிக்குகளுடன் கூட்டமைப்புக்குப் போகவேண்டிய நிலை ஏற்படும். இத்தகைய ஒரு விளைவை லெனின் விரும்பமாட்டார் எனும் அர்த்தத்தை சினோவியெவ் – கமனெவ் நிலைப்பாடு புலப்படுத்தியது. Trotsky வித்தியாசமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவர் ஓகஸ்டில் தான் கட்சியில் சேர்ந்தார். அவருடைய நிலைப்பாட்டைத் தெளிவாக இனம் காண்பது சுலபமல்ல. ஆயினும் அவரது கருத்தில் ஆயுதக் கிளர்ச்சியை முழு ரஷ்ய சோவியத்களின் கொங்கிரஸ் நிகழ்வின் ஆரம்பத்துடன் இணைத்து நடத்துவதன் மூலம் ஏற்படும் சோவியத்களின் தொடர்பு புரட்சியின் நியாயப்பாட்டிற்கு உதவும். இது அவர் முன்வைத்த உத்தி. இதை மிகவும் அறிவுத்திறன் மிக்க கொள்கை என அவரே தன் கருத்தைப்பற்றிப் பின்னர் அபிப்பிராயம் தெரிவித்தார்.

Trotskyயுடன் கடந்த காலத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் லெனின் அவரின் திறமைகளையும் பயன்பாட்டையும் நன்கு அறிந்திருந்தார். அவருடைய ஒழுங்கமைப்பு ஆற்றலும் கவர்ச்சிகரமான பேச்சுத் திறனும் புரட்சிக்குத் தேவையானவை என்பதை உணர்ந்தார். ஏற்கனவே ஒக்டோபர் முற்பகுதியில் பெட்றொகிராட் சோவியத்தால் உருவாக்கப்பட்ட இராணுவப் புரட்சி செயற்குழுவின் (Military Revolutionary Committee – MRCன்) தலைவராக Trotsky நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பதவி ஆயுதக் கிளர்ச்சியை நடத்துவதில் அவருக்கு ஒரு விசேட தலைமைத்துவ இடத்தைக் கொடுத்தது.

ஆயுதக் கிளர்ச்சிக்கு பரந்து பட்ட மக்களின் ஆதரவு கிட்டுமா என்ற கேள்வி பற்றிக் கட்சி செயற்பாட்டாளர்கள் அக்கறையாயிருந்தனர்.  கட்சியின் பெயரால் ஆயுதக் கிளர்ச்சியைச் செய்வதைவிட ‘சகல அதிகாரமும் சோவியத்களுக்கே’ எனும் சுலோகம் கூடிய ஆதரவைப் பெறும் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஆதரவு வீழ்ச்சியடைந்த நிலையில் தள்ளாடிய தற்காலிக அரசின் பிரதமர் கெரென்ஸ்கி சோவியத்களை நசுக்க எடுத்த முடிவு கிளர்ச்சிக்குச் சாதகமான சூழலை பலப்படுத்தியது. பெட்றொகிராட்டிலிருப்போர் வெளியேற்றப்பட்டு நகரம் ஜேர்மனியிடம் சரணடையப்போகிறது எனும் வதந்தியும் பரவியது. இந்தச்சூழலைப் பயன்படுத்தி Trotsky தலைமை தாங்கிய MRC பெட்றொகிராட்டின் இராணுவ முகாமை அதன் தளபதியிடமிருந்து பொறுப்பேற்றது. இது நடந்த ஒரு வாரத்தில் ஒக்டோபர் 24 இரவில் MRC தலைநகர் பெட்றொகிராட்டின் முக்கிய கேந்திரங்களைக் கைப்பற்றியது. புரட்சிக்கு ஆதரவான கடற்படையினர் மறுநாள் காலை MRC ஆரம்பித்த திட்டத்தை முழுமையாக்கினர். தற்காலிக அரசாங்கம் வீழ்ந்தது. 25ம் திகதி காலை 10 மணிக்கு தற்காலிக அரசாங்கத்திடமிருந்து அதிகாரம் MRCன் கைகளுக்கு மாறிவிட்ட செய்தி பிரகடனப்படுத்தப் பட்டது. பெட்றொகிராட்டை இரத்தம் சிந்தாது போல்ஷெவிக்குகள் கைப்பற்றிவிட்டனர். மொஸ்கோவிலும் வேறு சில நகரங்களிலும் இரத்தம் சிந்தப்பட்டது. 26ம் திகதி சோவியத்களின் கொங்கிரஸ் கூடியபொழுது குளிர்பருவக்கால மாளிகை மாத்திரமே புரட்சியாளர்களால் கைப்பற்றப்படவில்லை. அதுவும் பின்னர் கைப்பற்றப்பட்டது. போல்ஷெவிக்குகளின் பலம் அதிகரித்த கொங்கிரசின் அமர்விலிருந்து வலது சாரி சோஷலிச புரட்சியாளர்களும் மென்ஷெவிக்குகளும் தமது எதிர்ப்பைக் காட்ட வெளிநடப்புச் செய்தனர். அவர்கள் அவர்களாகவே தேடிகொண்ட வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் சென்றடைந்தனர் என Trotsky கூறினார். கூட்டத்திற்கு வந்திருந்த இடதுசாரி சோஷலிசப் புரட்சியாளர்களும் வேறுசில சிறிய புரட்சிகரக் குழுக்களும் போல்ஷெவிக்குகளுடன் சேர்ந்து லெனினின் உரையைக் கேட்டனர்.[15]

சோவியத்களின் கொங்கிரஸ் மூன்று முக்கிய ஆணைகளைப் பிரகடனம் செய்தது. இவற்றில் இரண்டு புதிதாக அமைக்கப்பட்ட தொழிலாளர்கள் – விவசாயிகளின் அரசாங்கத்தின் சார்பில் லெனினால் பிரகடனப்படுத்தப்பட்டன. முதலாவது பிரகடனம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய உலகப்போர் தொடர்பானது: போரில் ஈடுபட்டிருக்கும் தேசங்களும் அரசாங்கங்களும் எவ்வித ஆள்பரப்பு இணைப்புக்கள் மற்றும் இழப்பீடுகள் இல்லாத நீதியுடனான ஜனநாயகரீதியான அமைதியை அடைவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும். விசேடமாக மனித இனத்தின் மிக முன்னேற்றமடைந்த தேசங்களான பிரித்தானியா, ஜேர்மனி, மற்றும் பிரான்சின் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவேண்டுமெனும் வேண்டுகோள். போரில் சாரிச ரஷ்யா பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது. புரட்சிக்குப்பின் ரஷ்யா அந்தக் கூட்டிலிருந்து விலகியது.

இரண்டாவது பிரகடனம் நிலம் பற்றியது: நிலப்பிரபுக்களின் நிலங்கள் இழப்பீடு இன்றிப் பறிமுதல் செய்யப்படும். எல்லா நிலமும் தேசியமயமாக்கப்படும். ஆண், பெண் பேதமின்றி தமது சொந்த உழைப்பில் விவசாயம் செய்ய விரும்பும் ரஷ்யப் பிரஜைகளுக்கு நிலம் பாவிக்கும் உரிமை. நிலத்தை விற்றல், வாங்குதல் மற்றும் குத்தகைக்கு விடுதலுக்கும் கூலிக்கு உழைப்பைப் பாவிப்பதற்கும் தடை. போல்ஷெவிக்குகளின் நிலம் பற்றிய பிரகடனத்திற்கும் அவர்களின் எதிர்க் கட்சியான சோஷலிசப் புரட்சிகரக் கட்சியின் நிலம் பற்றிய கொள்கைக்கும் வேறுபாடு இல்லை என்பதை லெனின் மறுக்கவில்லை. மூன்றாவது பிரகடனம் கமனெவால் அறிவிக்கப்பட்டது: ஒரு மக்கள் ஆணையர்கள் சபை  (Council of People´s Commissars – Sovnarkom)  நிறுவப்படும்.

இந்த மூன்று பிரகடனங்களிலும் சோஷலிசம் எனும் பதம் இடம்பெறவில்லை. தனது உரைகளிலும் கட்டுரைகளிலும் லெனின் தொழிலாள வர்க்கத்தின் வெற்றி சமாதானத்திற்கும் சோஷலிசத்துக்கும் இட்டுச்செல்லும் எனக் குறிப்பிட்டார். ஒக்டோபர் 1917ல் இடம்பெற்ற ரஷ்ய சோவியத்கள் கொங்கிரசில் தெரிவு செய்யப்பட்ட Sovnarkomல் ஒரு பெண் (Alexandra Kollontai) உட்படப் பதினாறு அங்கத்தவர்கள் இருந்தார்கள். தலைவராக லெனின் தெரிவு செய்யப்பட்டார். ஒரு அமைச்சரவைக்குச் சமமான இந்தச் சபையில் பதினாறு அங்கத்தவர்களும் குறிப்பிட்ட துறைகளுக்குப் பொறுப்பானவர்கள். உதாரணமாக Trotsky வெளிநாட்டு விவகாரங்களுக்கும் ஸ்டாலின் தேசிய இனங்கள் விவகாரங்களுக்கும் பொறுப்பாக இருந்தார்கள். மக்கள் ஆணையர் சபை சோவியத் அரசாங்கத்தின் நிறுவன உருவாக்கத்தின் ஆரம்பப்புள்ளி. புதிய சோவியத் அரசின் உருவாக்கம் எப்படி அமையப்போகிறது என்ற கேள்வி எழுந்த காலம் அது. ஒரு சோஷலிச அரசின் தெளிவான மாக்சிச மாதிரியும் அதை ரஷ்யா போன்ற பல தேசிய இனங்களையும் சமூக, பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலைமைகளையும் கொண்ட நாட்டில் எப்படி கட்டியெழுப்புவது என்பது பற்றிய முன்னுதாரணமும் அனுபவமும் 1917ல் இருக்கவில்லை. புவியியல்ரீதியில் போல்ஷெவிக்குகளின் அதிகாரம் முழு ரஷ்யாவையும் இன்னும் உள்ளடக்கவில்லை. ஒரு கட்சி ஆட்சி முறைதான் மனித விடுதலையை இலட்சியமாகக் கொண்ட சோஷலிச நிர்மாணத்துக்கு உகந்த அமைப்பா எனும் கேள்வியும் எழுகிறது.

புரட்சியின்பின் மற்றைய சோஷலிச அமைப்புக்களுடன் கூட்டு அரசாங்கம் அமைப்பது அவசியம் எனும் கருத்தைச் சில போல்ஷெவிக்குகள் முன்வைத்தனர். சினொவியெவும் கமனெவும் இது தொடர்பாக இடதுசாரிச் சோஷலிசப் புரட்சிவாதிகளுடனும் மென்ஷெவிக்குகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். கூட்டுச் சோஷலிச அரசாங்கம் அமைப்பதற்குச் சார்பான கருத்தினைப் பல போல்ஷெவிக்குகள் கொண்டிருந்தனர். ஆனால் லெனினும் Trotskyயும் போல்ஷெவிக்குகளின் தனியான ஒரு கட்சி ஆட்சியை அமைக்க விரும்பினர். கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்தன. சினொவியெவ், கமனெவ் உட்படப் பல முக்கிய உறுப்பினர் இராஜினாமாச் செய்தனர். மீண்டும் பேச்சு வார்த்தைகளுக்கூடாக அவர்கள் தமது இராஜினாமாக்களை மீளப்பெற்றுக் கொண்டனர். இறுதியில் இடதுசாரிச் சோஷலிச புரட்சிவாதிகள் இருவர் Sovnarkomல் சேர்க்கப்பட்டனர். விவசாய மற்றும் நீதித் துறைகளை அவர்கள் பொறுப்பேற்றனர். சோவியத்களின் கொங்கிரசும் விவசாயிகளின் சோவியத்களையும் இராணுவம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் உள்வாங்கும் வகையில் விரிவாக்கப்பட்டது.

1918ல் சோவியத் அரசின் யாப்பு உருவாக்கம் ஆரம்பித்தது. இந்த முயற்சியின் முதலாவது செயலாக ஜனவரி மாதம் சோவியத்களின் கொங்கிரஸ் ‘கடும் உழைப்பாளர்கள் மற்றும் சுரண்டப்படும் மக்களின் உரிமைகளின்’ பிரகடனத்தை வெளியிட்டது. இது பிரெஞ்சுப் புரட்சி வெளியிட்ட ‘மனிதனின் மற்றும் குடிமகனின்/குடிமகளின் உரிமைகள்’ பிரகடனத்தின் போல்ஷெவிக் பதிப்பு எனலாம். போல்ஷெவிக் பிரகடனத்தில் ரஷ்யா தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளின் குடியரசு எனவும் சுதந்திரமான தேசியங்களின் சுதந்திரமான இணைவின் அடிப்படையிலான சோவியத் தேசிய குடியரசுகளின் சமஷ்டிக் கூட்டமைப்பு எனவும் எழுதப்பட்டிருந்தது.[16] சாரிச ரஷ்யா தேசிய இனங்களின் சிறைச்சாலை என எழுதிய லெனின் கோட்பாட்டுரீதியில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தார்.

1918 பெப்ரவரியில் செஞ்சேனை நிறுவப்பட்டது. Trotsky போருக்குப் பொறுப்பான மக்கள் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் முன்னாள் சாரிஸ்ட் இராணுவத்தின் அதிகாரிகளை செஞ்சேனையின் வீரர்களுக்குப் பயிற்சி வழங்க நியமித்தார். பேச்சுவார்த்தைகளுக்கூடாகப் போரை நீதியான முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் எனச் சோவியத் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை மற்ற நாட்டு ஆட்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை. ஜேர்மனி ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. பலமான நிலையிலிருந்த ஜேர்மனி எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. Brest-Litovskல் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவின் சார்பில் கலந்து கொண்ட Trotsky புரட்சிகர நிலைப்பாட்டிலிருந்து பேசி ஏமாற்றமடைந்தார். ரஷ்யாவின் பலவீனத்தை உணர்ந்த லெனின் ஒரு ‘வெட்கத்துக்குரிய சமாதானத்தை’ ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார். இதை Trotskyயும் ஏற்றுக் கொண்டார். இறுதியில் 1918 மார்ச் மாதம் மூன்றாம் திகதி போல்ஷெவிக்குகள் விரும்பாத அந்த ‘வெட்கத்துக்குரிய சமாதான’ உடன்படிக்கையை சோவியத் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இதை எதிர்த்த இடதுசாரிச் சோஷலிச புரட்சிவாதிகள் Sovnarkom ல்லிருந்து வெளியேறினர். சோவியத் ஆட்சி மீண்டும் ஒரு கட்சி ஆட்சியாயிற்று.

ஆனால் மறுபுறம் 1918 நவம்பர் மாதம் ஜேர்மனியில் புரட்சிகர எழுச்சிகள் ஆரம்பித்தன. கடற்படை வீரர்களும் தொழிலாளர்களும் போருக்கும் முடியாட்சிக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். போருக்கு ஆதரவாகச் செயற்பட்ட ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் அதை எதிர்த்த இடதுசாரிகள் கட்சியிலிருந்து வெளியேறிப் புரட்சிகரப் போராட்டங்களில் ஈடுபட்டனர். போல்ஷெவிக் புரட்சியால் ஆகர்சிக்கப்பட்ட இடதுசாரிகள் ஜேர்மனியில் புரட்சிகர மாற்றம் சாத்தியமாகும் என நம்பினர். ரஷ்யாவில் லெனினும் மற்றைய போல்ஷெவிக்குகளும் இதையே விரும்பினர். பேர்லினில் சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து வெளியேறிய பிரபல மாக்சிச புரட்சிவாதியான Karl Liebeknecht போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இன்னொரு மாக்சிச சிந்தனையாளரும் புரட்சிவாதியுமான றோசா லக்சம்பேர்க்கும் (Rosa Luxemburg) போரட்டங்களில் பங்குபற்றினார். 1918 ஜனவரியில் Liebknechtம் Luxemburgம் கைது செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். ஜேர்மனியின் பலநகரங்களிலும் ஜேர்மனி ஆக்கிரமித்துள்ள நாடுகளிலும் எழுச்சிகள் பரவின. 1918 நவம்பரில் போரின் பலம் மிக்க கூட்டாளிகளான பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கும் அவர்களின் எதிரியான ஜேர்மனிக்குமிடையே போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உறவில் ஜேர்மனிதான் தோல்வியடைந்த கட்சி. 1919 ஓகஸ்ட் வரை தொடர்ந்த போராட்டங்கள் ஜேர்மனிக்குள் முடியாட்சியின் முடிவு போன்ற சில பூர்ஷ்வா ஜனநாயக மாற்றங்களுக்கு வழிவகுத்தது. ஆனால் புரட்சி நசுக்கப்பட்டது. அதே காலத்தில் பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் இத்தாலியிலும் பரவலான எழுச்சிகள் இடம் பெற்றன. ஆயினும் போல்ஷெவிக்குகள் எதிர்பார்த்த வெற்றிகரமான புரட்சிகர மாற்றங்கள் ஐரோப்பாவில் இடம்பெறத் தவறிவிட்டன.

போல்ஷெவிக் புரட்சியைத் தொடர்ந்து ஐரோப்பாவில் இடம்பெற்ற புரட்சிகர எழுச்சிகள் அந்த நாடுகளின் அரசாங்கங்களின் சோவியத் ரஷ்ய எதிர்ப்பு நிலைப்பாட்டை மேலும் பலப்படுத்தின. சோவியத் யூனியனையத் தனிமைப்படுத்தி அழிக்கும் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தின. ரஷ்யாவுக்குள்ளே எதிர்ப்புரட்சி, மற்றும் போல்ஷெவிசத்திற்கு எதிரான அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கின. கிழக்கில் ஜப்பானும் சோவியத் எதிர்ப்புத் தலையீடுகளில் ஈடுபடத் தொடங்கியது. போல்ஷெவிக் ஆட்சி உள்நாட்டுப் போருக்கு (1918-1920) முகம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. புரட்சிக்குப்பின் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. போருக்கு ஆயுத உற்பத்தி செய்த ஆலைகள் மூடப்பட்டதால் பலர் வேலையிழந்தனர். விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி. வேலையின்மை அதிகரித்தது. பஞ்ச நிலைமைகள் உருவாகின. இதனால் அரசாங்கத்தின்மீது மக்களின் அதிருப்தி வளர்ந்தது. சோஷலிசப் புரட்சி வாதிகள், மென்ஷெவிக்குகள், அனாக்கிஸ்டுகள் போல்ஷெவிசத்திற்கு எதிராகச் செயற்பட்டனர். கொம்யூனிச எதிர்ப்பு, பிற்போக்கு, எதிர்ப்புரட்சி அமைப்பான ‘வெள்ளை இராணுவம்’ அல்லது ‘வெள்ளைக் காவலர்கள்’ செஞ்சேனைக்கு எதிராகப் போர்தொடுத்தனர். ஜேர்மனி தான் ஆக்கிரமித்திருந்த உக்கிரேய்னில் ரஷ்யாவிற்கு எதிரான பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தது. போல்ஷெவிக் ஆட்சி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்தது. மேற்கு ஐரோப்பிய ஆளும் வர்க்கம் சோவியத் அரசாங்கம் ஒரு சில நாட்களுக்கும் நின்றுபிடிக்காது என நம்பினர். இந்தச் சூழலில் உள்நாட்டுப் போரை எதிர்நோக்கிய போல்ஷெவிக்குகள் எதிர்ப் புரட்சியை முறியடிப்பதில் தம்மால் அணிதிரட்டக்கூடிய முழு சக்திகளையும் பயன்படுத்தினர். உள்நாட்டுபோரில் எப்படியும் வெற்றிபெறும் நோக்கில் Trotsky செஞ்சேனையை ஒரு மரபுரீதியான இராணுவமாக மாற்றினார். இதில் ஏறக்குறைய 80 வீதமான அதிகாரிகள் முன்னாள் சாரிச இராணுவ அதிகாரிகள். இதற்குக் கட்சிக்குள் எதிர்ப்பிருந்தபோதும் லெனின் Trotskyயை ஆதரித்தார்.

இந்தக் காலத்தில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் பெயரால் அதிகாரத்தின் மத்தியமயமாக்கல் பலமடைந்தது மட்டுமன்றி Trotsky உற்பத்தித் துறையிலும் இராணுவமயமாக்கல் கொள்கையை அமுல்படுத்த முற்பட்டார். தொழிற் சங்கங்கள் இதை எதிர்த்தன. உள்நாட்டுப் போரில் எதிரிகளைத் தோற்கடித்தபோதும் போல்ஷெவிக் கட்சிக்குள் வேறுபாடுகள் ஆழமடைந்தன. உள்நாட்டுப்போருக்குப்பின் போர்க்காலக் கட்டுபாடுகள் தொடர்வதற்கு எதிர்ப்புக்கு கிளம்பியது. தொழிற்சங்கங்கள் சுதந்திரமாக இயங்க விரும்பின. Trotsky விமர்சனங்களுக்குள்ளானார். ஆரம்பத்தில் லெனின் அவரை ஆதரித்தார். ஆனால் பின்னர் Trotsky பொருளாதார நிர்மாணத்தை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் நிலைப்பாட்டை எடுத்த போது லெனின் அவருடன் ஒத்துப் போகவில்லை.[17]

லெனினின் இறுதி நாட்கள்

போருக்குப்பின் ‘புதிய பொருளாதாரக் கொள்கை’யை லெனின் அறிமுகம் செய்தார். 1922ல் ஸ்டாலின் கட்சியின் பொதுக் காரியதரிசியானார். கட்சியின் ஒழுங்கமைப்பில் அதிக கவனம் செலுத்திய ஸ்டாலின் அதன் மிக முக்கியமான பதவிக்கு உயர்த்தப்பட்டார். ஆயினும் கட்சிக்கு வெளியே Trotsky, சினொவியெவ், கமனெவ், Bukharin போன்றோருக்கு இருந்த மதிப்பும் செல்வாக்கும் அவருக்கு இருக்கவில்லை. இவர்களில் Trotsky யைத் தவிர மற்றைய மூவரும் அப்போது ஸ்டாலினின் ஆதரவாளர்களாக இருந்தனர். அதே ஆண்டில் சோவியத் சோஷலிச குடியரசுகளின் ஒன்றியம் – அதாவது சோவியத் யூனியன் – சட்டபூர்வமாக நிறுவப்பட்டது. அதே ஆண்டு மேமாதத்தில் லெனின் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார். இதன்பின் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. சில மாதங்களின்பின் யாரும் அவரைப் பார்க்க அநுமதிக்கப்படவில்லை. அவர் சொல்ல எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் கட்சிக்குத் தன் கருத்துக்களைத் தெரியப்படுத்தினார். டிசெம்பரில் இரண்டாவது தடவையாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இந்த நாட்களில்தான் கட்சியின் எதிர்காலம் மற்றும் ஸ்டாலின், Trotsky பற்றிய அவரது இறுதி ஆவணமும் அவர் சொல்ல எழுதப்பட்டது. கட்சியின் பொதுக் காரியதரிசியான ஸ்டாலின் மிகவும் பொறுமையாக அதிகாரங்களை தன் கைவசமாக்கியுள்ளதுடன் கட்சியில் தனது தனிப்பட்ட செல்வாக்கையும் வளர்த்துள்ளார் என்பதைக் முதல் தடவை நோய்வாய்ப்பட்டபின் கட்சி அலுவல்களுக்குத் திரும்பிய லெனின் கண்டபோது அதிர்ச்சியடைந்தார். ஸ்டாலின் கட்சியில் ஒரு அதிகாரம் மிக்க புள்ளியாகிவிட்டார். அவரின் போக்கை விரும்பாத லெனின் அவரது ஆளுமைபற்றிச் சந்தேகம் கொண்டார் என E. H. Carr எழுதுகிறார்.

லெனினின் இறுதிச் சாசனம்

ஸ்டாலின் – Trotsky முரண்பாடு கட்சியில் பிளவை ஏற்படுத்தலாம் என லெனின் அஞ்சினார். லெனினின் இறுதி நாட்களில் அவரின் மனைவியும் சக போல்ஷெவிக்குமான குருப்ஸ்காயாவை ஸ்டாலின் புண்படுத்தும் வார்தைகளால் ஏசி அவமதித்ததும் மரணப்படுக்கையிலிருந்த லெனினுக்கு ஆத்திரமூட்டியது. மீண்டும் பக்கவாதத்தால் தாக்கப்பட்ட லெனின் 1924 ஜனவரி 21ம் திகதி மரணமானார். அவரின் மரணத்திற்குப்பின் குருப்ஸ்காயா அவரது இறுதிக் கடிதத்தை கட்சித் தலைமையிடம் கையளித்தார். லெனின் அந்த சாசனம் ஏப்ரில் 1924ல் இடம் பெறும் கட்சியின் கொங்கிரசில் வாசிக்கப்படவேண்டும் எனக் கேட்டிருந்தார்.[18] அப்பொழுது கட்சியின் தலைமைப் பொறுப்பு ஸ்டாலின், சினொவியெவ், கமனெவ் ஆகிய முக்கூட்டிடம் இருந்தது. இவர்களில் ஸ்டாலினைவிட மற்ற இருவரும் மூத்தவர்கள். 1922 டிசெம்பர் 23-24ம் திகதிகளில் பதியப்பட்டுக் கட்சிக் கொங்கிரசுக்கு விலாசமிடப்பட்ட அந்த ஆவணத்தில் லெனின் பல விடயங்கள் பற்றித் தனது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தார். பின்வருவன முக்கியமானவை:

  • கட்சியின் மத்திய செயற்குழுவை பெரிதாக்கல்: மேலும் சில டசின்கள் அல்லது நூறு அங்கத்தவர்கள் சேர்க்கப்படவேண்டும்
  • திட்டமிடல் ஆணையத்தைச் சட்டரீதியாகப் பலப்படுத்தல்
  • ஸ்டாலின் மற்றும் Trotsky பற்றி:

கட்சிப் பொதுக் காரியதரிசியாக வந்தபின் ஸ்டாலின் அளவு கடந்த அதிகாரத்தை தன் கைகளில் திரட்டியுள்ளார். அந்த அதிகாரத்தை அவரால் போதியளவு கவனமாகப் பாவிக்க முடியுமா என்பதைத் திடமாகக் கூறமுடியாது. Trotsky மத்திய செயற்குழுவில் மிகவும் ஆற்றல் மிக்கவர் அதேவேளை அவர் மிதமிஞ்சிய சுயஉறுதியும் அளவுக்கதிகமாக நிர்வாக அம்சங்களில் ஈடுபாடும் கொண்டவர். மத்திய செயற்குழுவின் மிகவும் திறமைமிக்க இவ்விருவரின் குறைபாடுகள் கட்சியின் பிளவுக்கு இட்டுச் செல்லக்கூடும். ஸ்டாலின் முரட்டுச் சுபாவமுடையவர். ஸ்டாலினைப் பதவியிலிருந்து விலக்கி அவரையும்விடச் சகிப்புத் தன்மை,விசுவாசம், பண்பட்ட நடத்தை, பரிவு, நிதானம் போன்ற குணங்கள் படைத்த ஒருவரை பொதுக் காரியதரிசியாக தெரிவது நல்லது.

மற்றைய மத்திய செயற்குழு அங்கத்தவர்கள் பற்றியும் தனது விமர்சனங்களை லெனின் தெரிவித்திருந்தார்.

1924 மேமாதம் 22ம் திகதி இடம்பெற்ற கட்சி கொங்கிரசின்போது கட்சியின் குறிபிட்ட முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கமனெவ் லெனினின் கடிதத்தை வாசித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய சினொவியெவ் மறைந்த தலைவரை மிகவும் புகழ்ந்த பின் கடிதம் பற்றிப் பேசினார். ‘ஒரு விடயத்தில்’ லெனினின் அச்சம் அடிப்படையற்றது அதாவது ஸ்டாலினை அவரது பதவியிலிருந்து அகற்றத் தேவையில்லை எனக் கூறினார். கமனெவ் சினொவியெவ்வை ஆதரித்துப் பேசினார். Trotsky உட்பட யாரும் எதுவும் சொல்லவில்லை. லெனினின் மனைவி குருப்ஸ்காயா லெனினின் கடிதம் முழுக் கொங்கிரஸ் முன்னிலையில் வாசிக்கப்படவேண்டும் என கோரினார். ஆனால் அங்கு சமூகமளித்தவர்களில் பெரும்பான்மையினர் (30 – 10) முக்கிய பிரதிநிதிகளுக்கு மட்டும் லெனினின் கடிதத்தைப்பற்றி இரகசியமாகத் தெரியப்படுத்தினால் போதும் என முடிவெடுத்தனர்.[19] பொதுக் காரியதரிசியாயிருந்த ஸ்டாலின் தனக்கு விசுவானமானவர்களுக்கே முக்கிய இடங்களைக் கொடுத்துக் கட்சிக்குள் தனது தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொண்டார் என்பதையே இந்த முடிவு காட்டியது.  ஏப்ரில் 1922ல் கட்சியின் பொதுக் காரியதரிசியாகப் பதவி ஏற்ற ஸ்டாலின் ஒக்டோபர் 1952 வரை அதிகாரம்மிக்க அந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். மார்ச் 1953ல் மரணமடைந்தார்.

Trotsky ஸ்டாலினின் இடத்தில் இருந்திருந்தால் எப்படி நடந்திருப்பார் என்ற கேள்வி எழலாம். அவரிடம் அதிகாரம் இருந்தபோது அவர் நடந்து கொண்ட விதத்தை லெனின் தனது இறுதிக் கடிதத்தில் விமர்சித்துள்ளார். உண்மை என்னவெனில் நடந்துவிட்ட வரலாற்றையே நாம் பார்க்கிறோம். நடந்ததை மாற்றமுடியாது. ஆனால் அதிலிருந்து பாடங்கள் படிப்பது மனித முன்னேற்றத்துக்கு அவசியம். இந்த வகையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு மாற்றானவற்றைக் கற்பனை செய்து (counterfactual ஆக) கேள்வி கேட்டுக் கலந்துரையாடுவதும் விவாதிப்பதும் பயனற்றதென்று கருதுவது தவறு. உதாரணமாக லெனின் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்திருந்தால் புரட்சி எந்தப் பாதையில் நகர்ந்திருக்கும் அல்லது 1917க்குப் பின் ஐரோப்பாவில் புரட்சி பரவி வெற்றி பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் போன்ற கேள்விகள் ஒரு கற்பனார்த்த வரலாற்று உலகிற்கே நம்மை எடுத்துச் செல்லும். அதனால் பயனில்லை எனும் கருத்தில் நியாயமிருக்கலாம். ஆயினும் அத்தகைய கேள்விகள் விவாதங்களில் எழுவதுண்டு. அவை வரலாற்றை விமர்சனரீதியில் அணுகுவதற்கு உதவலாம். அத்தகைய ஒரு அப்பியாசத்தில் ஈடுபடுவது இந்தக் கட்டுரையில் சாத்தியமில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டு சோஷலிசப் பரிசோதனையின் பாடங்களைத் தேடும்போது அத்தகைய கேள்விகள் சோஷலிசத்தின், கொம்யூனிசத்தின் எதிர்காலம் பற்றிய கற்பிதங்களுக்கு உதவலாம்.

சில முடிவுரைகள்

‘சோவியத் யூனியனின் இறுதி வருடங்கள் ஒரு மெல்ல நகரும் பேரழிவு.’

-Eric Hobsbawm (1995)

ஒக்டோபர் புரட்சி நடைபெற்று நூறுவருடங்கள் கழிந்துவிட்டன. சோவியத் அமைப்பு மறைந்து இருபத்தி ஆறு வருடங்கள் கழிந்துவிட்டன. ரஷ்யா பல சிக்கல்களுகூடாக ஒரு முதலாளித்துவ வல்லரசாக மறுபிறவி எடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சீனா கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பி வீறுநடையில் வல்லரசாக எழுகிறது. இன்று சோஷலிச முகாம் என ஒன்று இல்லை. ஆனால் சோஷலிசம், கொம்யூனிசம் எனும் கருத்துருக்கள் மறையவில்லை. அவை பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. முதலாளித்துவமே வரலாற்றின் இறுதி நிலையம் எனும் வாதம் எடுபடவில்லை.  அதனால்தான் எதிர்கால நோக்கில் இருபதாம் நூற்றாண்டின் தோல்வியடைந்த சோஷலிச வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறோம், மீளாய்வு செய்து விவாதிக்கிறோம், நமது முன்னைய நிலைப்பாடுகளையும் நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறோம், சுயவிமர்சனம் செய்கிறோம். ஒக்டோபர் 1917ஐ 2017ல் நினைவு கூருவது இதற்கொரு விசேட சந்தர்ப்பத்தை கொடுக்கிறது.

மித மிஞ்சிய வன்முறையும் அழிவுகளும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றின் வரைவிலக்கணமெனப் பல அறிஞர்கள் கூறியுள்ளனர். இரண்டு ஏகாதிபத்திய உலகப் போர்கள், அரசுகளுக்கிடையிலான போர்கள், பல உள்நாட்டுப் போர்கள், புரட்சிகள், தேசிய விடுதலைப் போராட்டங்கள், எதிர்ப் புரட்சிகள், நிழற்போர்…. இதன் மறுபுறத்தில் நவீனமயமாக்கலின் எழுச்சி, விஞ்ஞான – தொழில்நுட்பவியலின் நிரந்தப்புரட்சி, சோஷலிச சிந்தனைகளின் பரவலும் வளர்ச்சியும், மனித சுதந்திரம், மனித உரிமைகள் தொடர்பான கதையாடல்களின் எழுச்சி, உலகளாவிய கொம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம், நவீனத்துவத்துவத்துக்குப் பின்னைய வாதங்களின் வருகை…. இவையெல்லாம் கடந்த நூற்றாண்டை தீவிர எதிர்நிலைப் போக்குகளின் சகாப்தமென வரைவிலக்கணப் படுத்தக் காரணங்களாகின்றன. மாக்சிச வரலாற்றாசிரியர் Eric Hobsbawm எழுதிய நூலான ´Age of Extremes – The short twentieth century 1914-1991´ இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும்.

போல்ஷெவிக் புரட்சியைப் பின்நோக்கிப் பார்க்கும்போது இந்தப் பின்னணியையும் நினைவுகூருவது பயன்தரும். புரட்சி ஒரு மதியபோசனவிருந்தோ அல்லது தையல்பூவேலையோ அல்ல என மாஓ சொன்னார். இருபதாம் நூற்றாண்டின் யதார்த்ததை இது வெளிப்படுதுகிறது. போல்ஷெவிக் புரட்சியின் ஆரம்பத்தில் புரட்சிகர வன்முறை பெருமளவில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் புரட்சிக்குப்பின் உள்நாட்டுபோர் வடிவில் வந்த எதிர்ப்புரட்சியிலிருந்து புரட்சியை வன்முறையின்றிக் காப்பாற்ற முடிந்திருக்காது. லெனின் எதிர்பார்த்த ஐரோப்பிய சோஷலிசப் புரட்சிக்கு மாறாக சோவியத் யூனியனுக்குள் எதிர்ப்புரட்சியின் சக்திகளுக்கு வலுவூட்டும் ஐரோப்பிய ஆட்சிகள்தானிருந்தன. வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்நோக்கவும் உள்நாட்டு எதிர்ப்புரட்சிகரச் சக்திகளை அடக்குவதற்கும் போல்ஷெவிக் கட்சி (சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சி) அரச இயந்திரத்தின் வன்முறை அலகுகளைப் பலப்படுத்தியது. இராணுவம், பொலிஸ், இரகசியப் பொலிஸ், உளவுத்துறை போன்றவை மிகவும் பாரிய நிறுவனங்களாயின. நாட்டிற்குள்ளேயும், கட்சிகுள்ளேயும் அரசின் இந்தக் கருவிகளைப் பாவிப்பதில் கட்சியின் தலைமை தவறிழைத்தது. புரட்சியின் நண்பர்கள் யார், எதிரிகள் யார், வென்றெடுக்கப்பட வேண்டியவர்கள் யார் எனும் கேள்விகளுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. கட்சிக்குள்ளே எழுந்த முரண்பாடுகள் எதிர் முரண்பாடுகளாக்கப்பட்டதன் விளைவாகப் பல சிறந்த கொம்யூனிஸ்டுகள் துரோகிகளாகப் பட்டம் சூட்டப்பட்டு கட்சியிலிருந்து விலக்கப்பட்டு, போலி விசாரணைகளுக்குப்பின் மரணதண்டனை விதிக்கப்பட்டனர்.

1917ல் முதலாவது சபைக்குத் தெரிவான பதினாறு பேரில் எட்டுப் பேர் 1937-38 காலத்தில் அரசியல் குற்றங்கள் சாட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளானார்கள். அப்போது ஸ்டாலின் கட்சிப் பொதுக் காரியதரிசியாகவும் சோவியத் யூனியனின் தலைவராகவும் இருந்தார். அவரது நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த சினொவியெவ், கமனெவ், Bukharin, மற்றும் பலர் 1937-39 காலத்தில் துரோகிகளாக் குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனைக்குள்ளானார்கள். Trotsky கட்சியிலிருந்து விலக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டார். அவர் 1940ல் மெக்சிக்கோவில் கொலை செய்யப்பட்டார். ஸ்டாலின் அதிகாரத்திலிருந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டனர் அல்லது சிறையிலடைக்கப்பட்டனர். இந்தத் தண்டனைகள் அரச பயங்கரவாதம் என்பதில் சந்தேகமில்லை. அரசு வெகுஜனங்களிடமிருந்து தன்னைத் தொடர்ச்சியாக அந்நியப்படுத்திக் கொண்டது. இந்தப் பயங்கரவாதம் புரட்சிகர வன்முறையல்ல, ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற இந்த பயங்கரவாதம் போல்ஷெவிக் புரட்சிக்கு அபகீர்த்தியையும் கொம்யூனிசத்திற்கு எதிர்ப்பையும் வளர்க்கத்தான் உதவியது என மாக்சிச தத்துவஞானி Alain Badiou (2013) சொல்வது நியாயமானதே.[20]

Hobsbawm (1995) சொல்வதுபோல் பரந்த, பல நாடுகளை உள்ளடக்கிய கொம்யூனிச முகாமின் வளர்ச்சி அந்த நாடுகளின் பொதுமக்களின் சிந்தனை மாற்றத்தினைக் குறிக்கவில்லை என்பது அந்த முகாமின் திகைக்க வைக்கும் வீழ்ச்சியிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்த நாடுகளின் கொம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் லெனின் வகுத்த கட்சி மாதிரியைப் பின்பற்றி ஒரு தத்துவார்த்தரீதியான மேனிலையாளரின் (elites) தலைமையில் இயங்கின. பாட்டாளிவர்க்கமும் மற்றைய சமூகப்பிரிவுகளும் கொம்யூனிசக் கோட்பாட்டை ஆழமாக உள்வாங்கும் சூழல் உருவாக்கப்படவில்லை. நடைமுறையில் கட்சி எதிர்கால இலட்சியமென அது கருதிய ‘கொம்யூனிச’ சமூகத்தை அடைவதற்காக மக்களைக் கருவிகளாகப் பயன்படுத்தியது. அந்தப் பயணத்தின் இடைக்காலம் சோஷலிசமெனப் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் அது ஒரு மேலிருந்து கீழான ‘கட்டளைச் சோஷலிசம்’ (command socialism).[21]

1917ல் போல்ஷெவிக் புரட்சியை ஆதரித்து அதில் பங்குபற்றிய தொழிலாளர்கள், போர்வீரர்கள், ஏழை விவசாயிகள், சமூகத்தின் மற்றைய அங்கத்தினர் எல்லோரும் போல்ஷெவிக்குகள் அல்ல. அப்போது போல்ஷெவிக்குகள் ஒரு கட்டுப்பாடுமிக்கக் கட்சியிலிருந்த ஒரு சிறுகுழுவினர் மட்டுமே. மக்களுக்கு அரசியல் அறிவூட்டுவதன் அவசியத்தை லெனின் வலியுறுத்தினார். ஆனால் அவர் உருவாக்கிய முன்னணி அமைப்பான (vanguard  ஆன) கட்சிக்கும் மக்களுக்குமிடையே கருத்தியல்ரீதியில் இணைத்து வைக்க முடியாத பெரும் இடைவெளி இருந்ததையே இறுதி முடிவு காட்டிநிற்கிறது. முன்னணி அமைப்புத் தேவையில்லை என்பதல்ல எனது வாதம். அதற்கும் மக்களுக்குமிடையே உள்ள இடைவெளி வளர்வதற்குப் பதிலாக மறையும் போக்கு இல்லாத நிலைமைகளில் சோஷலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்பமுடியாது என்பதையே வரலாற்று அனுபவம் காட்டுகிறது. லெனினின் மறைவுக்குப்பின் ஸ்டாலின் உருவாக்கிய ‘மாக்சிசம்-லெனினிசிம்’ விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கருத்தியலாகப் புனிதமயப்படுத்தப்பட்டது. அது சோவியத் தொழிலாளர்களால் மற்றும் பரந்த வெகுஜனங்களினால் ஏற்கப்படவில்லை என்பதை வரலாறு உணர்த்துகிறது.

புரட்சிகரப் போராளிகளுக்கும் மக்களுக்குமிடையிலான உறவை மாஒ மீனுக்கும் நீருக்குமிடையிலான உறவுக்கு ஒப்பிட்டார். இந்த ஒப்புமை கெரில்லா ஆயுதப் போருக்குப் பொருத்தமாயிருக்கலாம். ஆனால் முழுமையான போராட்டத்திலும் சோஷலிச – கொம்யூனிச சமூக உருவாக்கத்திலும் மக்கள் உணர்வுபூர்வமான செயல்முனைப்புக்கூடாக வரலாறு படைக்கும் கலாச்சாரத்தை அவர்களே உருவாக்குவதற்கு உதவும் அரசியல் இயக்கங்கள் தேவை. இந்தப் பார்வையில் மக்களை நீராகவும் கொம்யூனிஸ்டுகளை அதைப் பயன்படுத்தி இயங்கும் மீன்களாகவும் கருதமுடியாது. அத்தகைய அணுகுமுறை மக்களை முனைப்பற்ற ஒரு கூட்டமாக மாற்றுகிறது. இருபதாம் நூற்றாண்டின் அனுபவங்களிலிருந்து பிறக்கும் பாடங்களில் இதுவும் ஒன்று.

‘சோஷலிச’ முகாமின் வீழ்ச்சிக்குப்பின் நவதாராளவாதிகள் சுயபோட்டிச் சந்தை முதலாளித்துவத்திற்கு மாற்று வழியோ அமைப்போ இல்லை எனப் பிரச்சாரம் செய்தனர். இதன் அர்த்தம் முதலாளித்துவத்திற்கு அப்பால் வரலாறு இல்லை என்பதே. ஆனால் யதார்த்தம் அவர்களின் பிரச்சாரத்தை அர்த்தமற்றதாக்கிவிட்டது. மூலதனத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவகையில் பொருளாதாரச் சிக்கல்கள் அடிக்கடி எழுகின்றன. இதன் சமூக, பொருளாதார விளைவுகள் பாரதூரமானவை. இருபத்தியோராம் நூற்றாண்டில் மேலும் உலகமயப்படுத்தப்பட்ட நிதிமயமாக்கப்பட்ட முதலாளித்துவம் உலகரீதியில் ஏற்றத்தாழ்வுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. மனித உழைப்பின் சுரண்டலும் இயற்கையின் சூறையாடலும் அதிகரித்த வேகத்தில் தொடர்கின்றன. இன்று முன்னெப்போதையும் விட முதலாளித்துவத்திற்கு அப்பால், அதற்கு மாற்று அமைப்புப்பற்றிச் சிந்திக்கும் தேவை எழுந்துள்ளது. சோஷலிசம், கொம்யூனிசிம் பற்றிய மீள்கற்பிதங்களும் விவாதங்களும் எழுவதைத் தவிர்க்கமுடியாது. இந்தச் சூழலில் இருபதாம் நூற்றாண்டின் சோஷலிசப் பரிசோதனைகள் தரும் பாடங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து எடைபோடமுடியாது.

[1] V. I. Lenin, March 7, 1917, Letters from Afar, First Letter, The First Stage of the First Revolution, in Lenin, Between the Two  Revolutions, 1971, Progress Publishers, Moscow.

[2] John Reed, 1919, Ten Days That Shook the World, 1967, Mentor Book. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், அமெரிக்கர் ஜோன் ரீட் ஒக்டோபர் புரட்சியை நேரில் கண்டபின் எழுதிய பிரபலமான நூல்.

[3] E. H. Carr, 1979, The Russian Revolution From Lenin to Stalin 1917-1929, Macmillan Press, London.

[4] Eric Hobsbawm, 1996, Can We Write the History of the Russian Revolution?, in Eric Hobsbawm, 1997, On History, Abacus, London

[5] Eric Hobsbawm, 1995, The Age of Extremes The short twentieth century 1914-1991, Abacus

[6] 1993ல் ‘ஒக்ரோபர் 1917 மறதிக்கு எதிராக நினைவுகளின் போராட்டமும் ஒரு சுய விமர்சனமும்’ எனும் தலைப்பில் ஒஸ்லோவிலிருந்து வெளிவந்த ‘சுவடுகள்’ சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரை.

[7] Robert Service, 2000, Lenin A Biography, Macmillan. இந்த நூலாசிரியர் லெனினையும் ரஷ்யப் புரட்சியையும் எதிர்ப்புணர்ச்சியுடனே இந்த நூலில் அணுகியுள்ளார் என்பதைக் குறிப்பிடவேண்டும்.

[8] சோவியத் எனபது தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் சபையைக் குறிக்கிறது.

[9] Lenin, November 1914, War and Russian Social Democracy, Selected Works Volume 1, Progress Publishers, Moscow, 1977

[10] Lenin, April 1917, Dual Power, Selected Works Volume 2, Progress Publishers, Moscow, 1977

[11] Lenin, April 1917, The Tasks of the Proletariat in the Present Revolution, Selected Works, Volume 2, Progress Publishers Moscow, 1977

[12] Beryl Williams, 1987, The Russian Revolution 1917-1921, Basil Blackwell

[13] லெனின் எழுதிய கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பின்வரும் இணையத்தில் பார்க்கலாம். Lenin, On Slogans, https://www.marxists.org/archive/lenin/works/1917/jul/15.htm

[14] லெனினின் பிரேரணை – Lenin, October 10 1917, Meeting of the Central Committee of the RSDLP (B) October 10 (23) 1917. https://www.marxists.org/archive/lenin/works/1917/oct/10a.htm

[15] லெனினுடைய உரையை இங்கு பார்க்கலாம்: Lenin, Second All Russia Congress of Soviets of Workers´and Soldiers´Deputies, https://www.marxists.org/archive/lenin/works/1917/oct/25-26/index.htm

[16]  E. H. Carr, 1979.

[17] Beryl Williams, 1987; E. H. Carr, 1979

[18]  லெனினின் சாசனம் Letter to the Congress: https://www.marxists.org/archive/lenin/works/1922/dec/testamnt/congress.htm

[19] E. H. Carr, 1979

[20] Alain Badiou, 2013, The Communist Idea and the Question of Terror, in Slavoj Zizek (ed.) 2013, The Idea of Communism 2, The New York Conference, Verso Books.

[21] Eric Hobsbawn, 1995 op. cit.

2 thoughts on “ஒக்டோபர் 1917  ஒரு மாபெரும் புரட்சியின் நினைவுகூரலும் விமர்சனமும்”

  1. ஒக்டோபர் வெற்றிகண்டு, உணர்ச்சிவசப்பட்டு போற்றிப் புகழவும் இல்லை. ஒக்டோபரின் தொல்வியால் துவண்டுபோய் அழுது புலம்பவுமில்லை, மீசையில் மண்படவில்லையென போலியாக வீரம் பேசவுமில்லை. அறிவு பூர்வமான நம்பிக்கையூட்டக்கூடிய காரணகாரிய ஆய்வுமுறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *