சமுத்திரன்
பண்டமயமாக்கலின் முடிவும் தக்கவைக்கவல்ல மனித மேம்பாடும்: சோஷலிசக் கற்பிதத்தின் மீள்தூண்டல்
நவீன சமூகங்களில் பண்டமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இந்தப் போராட்டங்கள் பல வெளிகளிலும் பல மட்டங்களிலும் நடைபெறுகின்றன. நிலம், நீர், மரபணு வளங்கள், கல்வி, சுகாதாரசேவை போன்றவற்றின் பண்டமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களை உலகின் பல பாகங்களில் காணலாம். இவை பலவிதமான வரலாற்று மற்றும் அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளில் இடம்பெறுகின்றன. இத்தகைய போராட்டங்களின் குறிபிட்ட நோக்கங்கள் மற்றும் விளைவுகள் பற்றி இந்தக்கட்டுரைத்தொடரில் ஏற்கனவே எழுதியுள்ளேன். இங்கு சில மேலதிகமான குறிப்புகளைத் தருவது பயனளிக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் சந்தை சக்திகளின் எழுச்சிக்கும் சமூகத்திடமிருந்து எழுந்த எதிர்ப்புக்குமிடையிலான உறவை ‘வரலாற்றின் இரட்டை இயக்கம்’ (´the double movement of history´) என Karl Polanyi (1957) வர்ணித்தார்.[1] அதாவது ஒரு புறம் அரசின் உதவியுடன் சுயபோட்டிச் சந்தைச் சக்திகள் வளர்கின்றன, பரவுகின்றன. இதனால் சமூக உறவுகளில் மற்றும் மனித வாழிடங்களில், சூழலில் பல தாக்கங்கள் ஏற்படுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் விசேடமாக அப்போது முதலாளித்துவம் விருத்தியடைந்து கொண்டிருந்த இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முதலாளித்துவ சந்தைப் பொருளாதரத்தின் எழுச்சி ஒருபுறம் செல்வத்தை குவித்தது மறுபுறம் சமூகச் சீர்குலைவையும் வளர்த்தது. இந்தச் சீர்குலைவு எதிர்ப்புச் சக்திகளுக்குக் காரணமாகியது. இதைக் கையாள அரசு சுயபோட்டிச் சந்தையைக் கட்டுப்படுத்தும் கொள்கையை அமுல்ப் படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறது. சுயபோட்டிச் சந்தைசக்திகளின் விளைவான சமூகரீதியான இடர்பாடுகளையும் வறுமையையும் கட்டுப்படுத்தமட்டுமன்றி அந்தச் சக்திகளின் சுலபாக மாற்றமடையும் தன்மையால் பாதிப்புக்குள்ளாகும் மூலதனத்தையும் அவற்றிடமிருந்து பாதுகாக்கவும் அரசு தலையிடுகிறது. ஆகவே முதலாளித்துவ அரசுக்கும் சந்தைக்குமிடையிலான உறவு முரண்படும் பரிமாணங்களை உள்ளடக்குகிறது. உதாரணமாக சமூகத்தின் எதிர்ப்பினால் இயற்கையின் தனியுடைமையாக்கலையும் பண்டமயமாக்கலையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்படலாம். மறுபுறம் மூலதனத்தின் குவியலின் தேவைக்காக இவற்றிற்குச் சார்பான கொள்கையை அரசு அமுல்ப்படுத்துவதே பிரதான போக்காகும்.
வரலாற்றின் முரண்பாடுமிக்க ‘இரட்டை இயக்கம்’ மேற்கில் நவீன முதலாளித்துவ சமூகநல அரசின் பரிணாமத்திற்கு வழிகோலியது. இத்தகைய இரட்டை இயக்கப்போக்கினை முதலாளித்துவம் வளர்ச்சி பெறும் நாடுகளில் காணலாம். ஆனால் எல்லா நாடுகளிலும் சமூகநல அரசுகள் பரிணமிப்பதில்லை. அவை தோன்றினாலும் நிரந்தரமானவை அல்ல என்பதும் வரலாற்று அனுபவம். சமூகநல அரசின் தோற்றம் போட்டியிடும் அரசியல் சக்திகளின் ஒப்பீட்டுரீதியான பலங்களிலேயே தங்கியுள்ளது. உதாரணமாக மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிற் சங்கங்களின், மற்றும் வெகுஜன அமைப்புக்களின் போராட்டங்களின் விளைவாகவும் அந்நாடுகளின் தொழிற் கட்சிகள் (சமூக ஜனநாயகக் கட்சிகள்) பாரளுமன்றத்திற்கூடாக ஆளும் கட்சிகளாக வரமுடிந்ததாலும் சமூக ஜனநாயக சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. செல்வத்திற்கும் வருமானத்திற்கும் ஏற்ப முன்னேறிசெல்லும் வரிகளுக்கூடாக அரசு பெறும் வருமானத்தின் கணிசமான ஒரு பகுதி சமூகநல சேவைகளுக்கென ஒதுக்கப்படுகிறது. கல்வி, சுகாதார சேவைகள், மற்றும் சில சமூக பாதுகாப்புச் சேவைகள் நாட்டின் சகல மக்களினதும் உரித்துடமைகளாக்கப்பட்டன. இவை பண்டமயமாக்கலிலிருந்து, அதாவது சந்தைமயமாக்கலிலிருந்து, விடுவிக்கப்பட்டன. ஆயினும் 1970களின் பின் நவதாராளக் கொள்கைகளின் வருகையுடன் இந்தத் துறைகளிலும் படிப்படியாகத் தனியுடைமையாக்கலும் சந்தை மயமாக்கலும் இடம் பெறுகின்றன. அதே போன்று சூழல் இயக்கங்களின் போராட்டங்களின் விளைவாக நடைமுறைக்கு வந்த கொள்கைகளுக்குப் பதிலாகத் தனியுடைமயாக்கலுக்கும் சந்தைமயமாக்கலுக்கும் சார்பான கொள்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. சுயபோட்டிச் சந்தைமயமாக்கல் வளங்களின் பயன்பாட்டின் வினைத்திறனை உச்சப்படுத்தும் எனும் வாதத்தை முன்வைத்து அரசாங்கங்கள் நவதாராள பொருளாதாரக் கொள்கையை நியாயப்படுத்துகின்றன. சமூகத்தின் அடிப்படை உரிமைகள் என அங்கீகரிக்கப்பட்ட சேவைகளைக்கூட ஒவ்வொருவரும் சந்தையில் விலைகொடுத்து வாங்கும் பண்டங்களாக மாற்றுவதே இதன் விளைவாகிறது. முன்னர் குடியுரிமையாகப்பெற்ற ஒன்றை இப்போ பெறுவது விலை கொடுத்து வாங்கும் சக்தியிலேயே தங்கியுள்ளது.
தனது தொடர்ச்சியின் செலவுகளை சமூகத்திடமும் இயற்கையிடமும் வெளிவாரிப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும். கடந்த நாலு தசாப்தங்களாக நவதாராளக் கொள்கையின் மேலாட்சியில் இந்தப் போக்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது. புதைபடிவ எரிபொருளின் பாவனை தொடர்ந்து ஏறிச்செல்வது மற்றும் அதன் விளைவுகள் பற்றி இந்தக் கட்டுரைத்தொடரின் இரண்டாவது பகுதியில் விளக்கியுள்ளேன். இன்று உலக ஜனத்தொகையின் ஏழுசத வீதத்தினரே உலகின் 50 வீதமான பசுமையில்ல வாயுக்களின் (greenhouse gases) வெளியீட்டிற்குப் பொறுப்பாளிகள். இந்தச் சிறுபான்மை ஒரு குறிப்பிட்ட நாட்டினர் அல்லர், உலகின் பலநாடுகளிலும் வாழும் செல்வந்தர்கள். உலக ஜனத்தொகையின் கீழ்மட்ட 50 வீதத்தினர் கரிமவெளியீட்டைக் குறிபிடத்தகுந்த அளவுக்குச் செய்யுமளவிற்கு வருமானம் பெறுபவர்கள் அல்ல.[2] உலகின் செல்வத்தின் 48 வீதம் உலக ஜனத்தொகையின் ஒரு வீதத்தினரின் சொத்தாக உள்ளது (Oxfam, 2015). உலகரீதியில் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சூழல் சிக்கல்களும்பயங்கரமாக வளர்ந்துள்ள நிலைமைகளில்கூட உலக முதலாளி வர்க்கம் முன்னெப்போதுமில்லாத மாதிரி மிதமிஞ்சிய சுயநம்பிக்கையை அகங்காரத்துடன் வெளிப்படுத்துகிறது. இதைப் பிரகடனப்படுத்துவதுபோல் ஒலிக்கிறது பிரபல செல்வந்தர் Warren Buffet 2006ம் ஆண்டு உச்சரித்த வார்த்தைகள்.
‘வர்க்கப்போர் இடம்பெறுகிறது, உண்மைதான். ஆனால் எனது வர்க்கம், செல்வந்த வர்க்கம், தான் அந்தப் போரை நிகழ்த்துகிறது. அதில் நாம் வெற்றியீட்டிய வண்ணமிருக்கிறோம்.’ – Warren Buffet, Chairman and CEO of Berkshire Hathaway, (New York Times, 26 November 2006)
வர்க்கப்போரையும் வர்க்க உணர்வையும் முதலாளி வர்க்கம் ஒருபோதும் மறப்பதில்லை. மேலும் முக்கியமான செய்தி என்னவென்றால் தாம் வெல்லும் வர்க்கப்போரைத் தமது வர்க்கமே ஆரம்பித்ததாகவும் கூறுகிறார் Buffet. ஆனால் முதலாளி வர்க்கத்தினர் ஏதோ மிகவும் நெருக்கமான நேசம்மிக்க சகோதரர்கள் எனக்கருதுவது தவறு. அவர்களிடையே போட்டிக்கும் பூசலுக்கும் முடிவில்லை. அவர்கள் ‘விரோத உணர்வுகொண்ட சகோதரர்கள்’ என மாக்ஸ் கூறினார்.
பொதுவாக வர்க்கப்போர் எனும் பதம் மாக்சிஸ்டுகளின் அரசியல் சுலோகம் என்றே ஆளும் வர்க்கத்தினரும் அவர்களின் பிரச்சார சாதனங்களும் சொல்வதுண்டு. வர்க்கப்போரெண்டு ஒன்றுமில்லை அது கொம்யூனிஸ்டுகளின் கண்டுபிடிப்பு என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்வதுண்டு. இத்தகைய பிரச்சாரங்கள் சுரண்டப்படும் வர்க்கங்களின் வர்க்க உணர்வை மழுங்கடிப்பதற்குப் பயன்படுகின்றன. அரசியல் மற்றும் கலாச்சார சாதனங்களுக்கூடாக நவதாராளக்கருத்தியல் சமூகத்தில் ஆழப்பதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில் மனிதரின் தனியனாக்கலும் தனிமனிதவாதமும் தொழிலாளர்களின் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் கூட்டு எதிர்ப்புச் செயற்பாடுகளுக்குத் தடைகளாகின்றன. இன்று மேலாட்சி செய்யும் நவதாராளக் கருத்தியலின்படி ஒருவரின் மனிதநன்நிலைக்கு அவரே பொறுப்பு. அதை அவர் தன் பகுத்தறிவைப் பயன்படுத்திச் சந்தையிலேயே தேடவேண்டும். சுயபோட்டிச்சந்தை எல்லோருக்கும் சமசந்தர்ப்பத்தை உத்தரவாதம் செய்கிறது. அதில் ஒருவர் தோல்வியடைந்தால் அது அவர் தேர்ந்தெடுத்த பிழையான முடிவின் விளைவு. அமைப்பின் குறைபாடல்ல. வேலையின்றி இருப்பதும் அரசிடம் சமூகபாதுகாப்பு உதவிகளை எதிர்பார்ப்பதும் அவமானத்திற்குரிய தனிமனிதக் குறைபாடு. இந்தச் சந்தை அடிப்படைவாதத்தின்டி சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இயற்கையின் நியதிபோன்றவை. அவற்றை அரச தலையீட்டால் மாற்ற முயற்சிப்பது தவறு. அது தமது சுயமுயற்சியால் செல்வந்தரானவர்களுக்கு அநீதியானது. இந்த அதிவலதுசாரிவாத நிலைப்பாட்டை முதலாளித்துவ அமைப்பில் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் சமூக ஜனநாயகவாதிகள் எதிர்க்கிறார்கள். அவர்களின் நோக்கில் சமூகநல அரசை மீட்டெடுப்பது இன்றைய தேவை. சூழல் சிக்கலை சூழல் வரிகளுக்கூடாகவும் புதிய தொழில்நுட்பவியலின் உதவியுடனும் கையாளவேண்டும் என்பதும் அவர்களின் கொள்கை.[3] அடிப்படை உரித்துடமைகளை ஆதரிக்கும் தாராள ஜனநாயகவாதிகளும் நவதாராளவாதிகளின் சந்தை அடிப்படை வாதத்தை முற்றாக ஏற்கவில்லை. மாக்சிஸ்டுகள் சமூக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான போராட்டங்களை விமர்சனரீதியில் ஆதரிக்கும் அதேவேளை சோஷலிச மாற்றத்திற்கு உதவும் மக்களின் பங்குபற்றலுடனான ஆய்வுகளின், கருத்துப் பரிமாறல்களின் மற்றும் அறிவூட்டலின் தேவையை வலியுறுத்துகிறார்கள்.
மாற்று சமூக அமைப்புப் பற்றிய கற்பிதங்கள் இன்றைய சமூக அமைப்பின் அதிகார உறவுகளின் விமர்சனத்திலிருந்து ஆரம்பித்து அவற்றை அடிப்படையாக மாற்றுவது பற்றிய ஒரு கூட்டு அப்பியாசமாகத் தொடரவேண்டும். இதில் சமூகம் – இயற்கை உறவுகளின் மாற்றம் என்பது மூலதனம் – இயற்கை உறவுகளுக்கு மாற்று உறவுகளை இனங்காண்பது பற்றியதாகும். தனியுடமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிற்கும் அப்பால் தக்கவைக்கவல்ல மனித மேம்பாடு பற்றிச் சிந்திப்பதற்கு உதவும் கருத்துருவை மாக்ஸ் பின்வருமாறு விளக்குகிறார்.
‘ஒரு உயர் நிலையிலுள்ள பொருளாதார-சமூக உருவாக்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து நோக்கும் போது இந்தப் பூமியில் குறிப்பிட்ட தனிமனிதர்களின் தனியுடைமை ஒரு மனிதன் மற்ற மனிதர்களைத் தனிச்சொத்தாக வைத்திருப்பதற்குச் சமமான அபத்தமாகும். ஒரு முழுச் சமூகத்தை, ஒரு தேசியத்தை அல்லது சமகாலத்தில் இருக்கும் எல்லா சமூகங்களையும் கூட்டாக எடுத்துக்கொண்டாலும் கூட அவை இந்தப் பூமியின் சொந்தக்காரர் அல்லர். அவர்கள் அதனைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள், பயனாளிகள், அதை அவர்கள் நல்ல குடும்பத்தந்தையர் (boni patres familias) போல் பின்வரும் சந்ததியினருக்கு முன்பிருந்ததைவிட மேம்படுத்திய நிலையில் விட்டுச் செல்லவேண்டும்.’ – Marx, 1894, Capital (Volume 3).[4]
சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவு பற்றிய தனது சிந்தனையை மாக்ஸ் இந்தச் சில வசனங்களில் சுருக்கமாகத் தருகிறார். இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொரு சந்ததியும் அதைத் தாம் பெற்றபோது இருந்ததையும்விட மேலும் நல்ல நிலையிலேயே அடுத்த சந்ததிக்குக் கையளிக்கும் தார்மீகப்பொறுப்பினைக் கொண்டுள்ளனர் எனும் அர்த்தம் பலமாகத்தொனிக்கிறது. விஞ்ஞானத்தின் உதவியுடன் இயற்கையின் இயக்கவிதிகளை அறிந்து அவற்றிற்கேற்ப மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான இருவழி உறவுகளை வகுத்துக்கொள்ளும் நிறுவனரீதியான ஒழுங்குகளைக் கொண்ட சமூக-பொருளாதார அமைப்பே தக்கவைக்கவல்ல (sustainable) அமைப்பு என்பது மாக்சின் கருத்திலிருந்து தெளிவாகிறது.
சமூகம் – இயற்கை உறவுகள் பற்றிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாக்ஸ் எழுதியதைப் படிக்கும்போது இருபதாம் நூற்றாண்டில், 1980 களில், பிரபல்யப்படுத்தப்பட்ட தக்கவைக்க வல்ல அபிவிருத்திக் (sustainable development) கதையாடல் மனக்கண் முன் எழுகிறது. 1987ல் வெளிவந்த ஐ. நா. பொதுச்சபையின் ‘சூழல் மற்றும் அபிவிருத்தி பற்றிய உலக ஆணைக் குழு’ (World Commission on Environment & Development – WCED) எதிர்காலச் சந்ததிகள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலைப் பாதிக்காதவகையில் தற்காலச் சந்ததிகள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அபிவிருத்தியே தக்கவைக்கவல்ல அபிவிருத்தி என வரைவிலக்கணம் வகுத்தது.[5] இந்த வரைவிலக்கணத்திற்கும் மேலேதரப்பட்டுள்ள மாக்சின் மேற்கோளுக்கும் நெருங்கிய உறவு இருப்பதுபோல் படலாம். ஆனால் WCEDன் வரைவிலக்கணமும் அறிக்கையும் தற்போது இருக்கும் உலக அமைப்பினைத் தக்கவைக்கும் கருத்தியலினால் வழிநடத்தப்படுகின்றன. இந்த அறிக்கையைத் தொடர்ந்து உலக வங்கி தனது ‘தக்கவைக்கவல்ல அபிவிருத்திக் கொள்கையை’ வகுத்துப் பிரபல்யமாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தக் கொள்கையும் செல்வந்த நாடுகளின் கொள்கைகளும் முதலாளித்துவத்தைத் தக்கவைக்கவல்ல கொள்கைகளாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சமூகத்தின் தேவைகளையும் இயற்கையையும் மூலதனத்தின் இலாபத்தை அதிகரிக்கும் தேவைகளுக்குக் கீழ்ப்படுத்தும் இந்த அணுகுமுறைக்குச் சேவை செய்யவல்ல விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் உற்பத்திக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஆகவே மேலாட்சி செலுத்தும் ‘தக்கவைக்கவல்ல அபிவிருத்திக்’ கொள்கை மனித விடுதலைக்கு உதவும் அறிவீட்டவியலின் (emancipatory epistemologyன்) விளைவானதல்ல.
மனித உழைப்பும் இயற்கையுமே செல்வத்தின் மூலங்கள். மூலதனம் ஒன்றை மற்றதிலிருந்து அந்நியப்படுத்துகிறது. இந்தப் பிரிவினை இவை இரண்டையும் இலாப நோக்கினால் உந்தப்படும் பொருளாதாரத்தில் உற்பத்தி அலகுகளாக இணைப்பதற்கு அவசியமான நிபந்தனை. உற்பத்தி சக்தியையும் இயற்கையையும் முடிந்தவரை பண்டமயமாக்குவது மூலதனத்தின் இயக்கவிதியின் கடமை. இதில் அரசு தலையிடுவதைச் சுயபோட்டிச் சந்தைப் பொருளாதாரக் கொள்கை அனுமதிக்காது. நவதாராள உலகமயமாக்கல் கொள்கையின் மேலாட்சியில் பண்டமயமாக்கல் முன்னெப்போதையும்விடத் துரிதமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பண்டமயமாக்கல் தொடரும் வரை அந்நியமாக்கலை அகற்றி உழைப்பையும் இயற்கையையும் புதிய உறவுகளாக மீளிணைக்கமுடியாது. இத்தகைய மீளிணைப்பு சமூக, பொருளாதார, அரசியல்ரீதியான அந்நியமயமாக்கலின் முடிவுக்கான அடிப்படைத் தேவையாகும். இந்தக் கருத்துரு இன்று மேலாட்சி செலுத்தும் முதலாளித்துவத்தைத் தக்கவைக்கவல்ல அபிவிருத்திக் கதையாடலை கட்டுடைக்கும் கோட்பாட்டுரீதியான அணுகுமுறையிலும் தக்கவைக்கவல்ல எதிர்காலம் பற்றிய கற்பிதங்களைச் செய்வதிலும் மையத்துவ முக்கியத்துவத்தைப் பெறவேண்டும். அத்தகைய கோட்பாட்டுரீதியான அணுகுமுறை தற்போது நடைபெறும் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நீதிக்கான போராட்டங்களைப் புரிந்து கொள்ளவும் அவற்றின் உள்ளார்ந்த ஆற்றல்களைக், குறைபாடுகளை, மற்றும் எல்லைத்தடைகளை இனங்கண்டு அவற்றிற்கும் அப்பால் நோக்கும் வழியைத்திறக்கும் என நம்புகிறேன்.
[1] Karl Polanyi, (1944),1957, The Great Transformation, Beacon Press, Boston. இடதுசாரியான பொலன்யி தன்னை மாக்சிஸ்டாக அடையாளப்படுத்தவில்லை. மாக்சிசத்தை விமர்சித்தும் உள்ளார். ஆயினும் ‘வரலாற்றின் இரட்டை இயக்கம்’ பற்றிய அவரது பார்வை மாக்சிய அணுகுமுறைக்கும் பயனுள்ளது.
[2] Stephen Pacala cited in Andrew Sayer, 2016, Why We Can´t Afford the Rich, Policy Press, UK
[3] Thomas Piketty போன்ற ஆய்வாளர்கள் இந்தச் சிந்தனைப்போக்கின் இன்றைய பிரதிநிதிகள்.
[4] Karl Marx, 1894, Capital, Volume 3, English Edition, Penguin Classics, 1991.
[5] The World Commission on Environment and Development, 1987, Our Common Future, Oxford University Press.