தேசியக் கொடியும் தேசிய இனப்பிரச்சனையும் – குறியீடுகளும் யதார்த்தங்களும்

 

 

சமுத்திரன்

‘தேசியக்கொடிச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுடன் என்னால் ஒத்துப்போக முடியாது என்பதையிட்டு நான் வருத்தமடைகிறேன். எனது பார்வையில், ஒரு தேசியக்கொடி சகல குழுமங்களுக்கும் ஒரு கௌரவமான இடத்தைக் கொடுப்பதற்கும் அப்பால் தேசிய ஐக்கியத்தின் சின்னமாகவும் இருக்கவேண்டும். ….

… எனது பார்வையில், இந்த வடிவமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது ஒரு  தேசிய ஒற்றுமையின் சின்னமாக இருப்பதைவிட்டு நமது தேசிய ஒற்றுமையின்மையின் சின்னமாகவே இருக்கும்.’

– செனட்டர் S. நடேசன், தேசியக்கொடி செயற்குழுவின் அங்கத்தவர் (1948-1950)

இலங்கை அரசியலில் தேசியக்கொடி, தேசிய கீதம் பற்றிய விவாதங்கள் அடிக்கடி எழுகின்றன. பல தசாப்தங்களாகத் தொடரும் இந்த நிலைமை 1950ல் நடேசன் அவர்கள் முன்கணிப்புக் கூறியதுபோல் நாட்டில் நிலவும் தேசிய ஒருமைப்பாடின்மையையே காட்டுகிறது. தேசியக்கொடியை ஏற்க மறுப்பவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் சிங்களத் தேசியவாதிகளும் கூச்சலிடும் காலமிது. தேசியக்கொடியின் வடிமைப்பின் வரலாறுபற்றிச் சில தகவல்களை நினைவுகூருவது பயன்தரும்.[1] 1948 இரண்டாம் மாதம் இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது 1815ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவத்தால் கைப்பற்றப்பட்ட கண்டி இராஜ்யத்தின் கொடியாய் விளங்கிய சிங்கக்கொடியே முழு இலங்கையின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தப்பட்டது. 1948 மூன்றாம் மாதம் பின்வரும் அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு ‘தேசியக்கொடி செயற்குழு’ நியமிக்கப்பட்டது: S.W.R.D பண்டாரநாயக்க (தலைவர்), சேர் ஜோன் கொத்தலாவல, J.R. ஜயவர்த்தன, T.B. ஜயா, L.A. ராஜபக்ச, G.G. பொன்னம்பலம், S. நடேசன்.

ஒரு இலங்கைத் தேசியக்கொடியை வடிவமைப்பதில் இந்தச் செயற்குழுவிற்குள் முரண்பாடுகள் தோன்றின. நடேசனின் கருத்தில் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக செயற்குழு ஒருமித்த கருத்தை அடையக்கூடிய சாத்தியப்பாடுகள் அற்பமாகவே இருந்தபோதும் இறுதிநேரத்தில் G.G. பொன்னம்பலத்தின் சமரச ஆலோசனையைப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது D.S.சேனாநாயக்க அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பொன்னம்பலம் சிங்கக்கொடியின் ஒரு புறத்தில் தமிழர் மற்றும் முஸ்லிம்களைக் குறிக்கும் சின்னங்களாக முறையே ஒரு மஞ்சள் மற்றும் பச்சைக் கோட்டினை உள்ளடக்கும்படி ஆலோசனை வழங்கினார். இதை நடேசனைத் தவிர மற்றைய அங்கத்தவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். தனது முடிவுக்கான காரணங்களை விளக்கித் தனியான அறிக்கை ஒன்றினை நடேசன் கையளித்தார். அதில் அவர் வலியுறுத்திய முக்கிய கருத்து செயற்குழுவினால் வடிவமைக்கப்பட்ட கொடி நாட்டின் சகல இனங்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்காது பிரிவினையையே வெளிக்காட்டுகிறது என்பதாகும். தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் சின்னங்களாக வரையப்பட்ட இரு கோடுகளும் சிங்கக்கொடியைச் சுற்றியுள்ள தங்கநிற எல்லைக் கோட்டிற்கு வெளியே இருப்பது பிரிவினையையே குறிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த இரு கோடுகளும் தேசியக்கொடியின் பிற்சேர்க்கைகள் போலவே தெரிகின்றன எனவும் கூறினார்.  பிரிவினையைக் குறிப்பதுபோல் அமைந்துள்ள அந்த எல்லைக் கோட்டை நீக்குவதன்மூலம் மூன்று மக்களையும் தொடர்புபடுத்தும் குறியீடாகக் கொடியை மாற்றலாம் எனவும் ஆலோசனை வழங்கினார். ஆனால் அந்த நியாயமான ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  ஆரம்பத்தில் நடேசன் மஞ்சள், சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள், சிவப்பு, பச்சை மூவர்ணங்களைக் கொண்ட ஒரு கொடியை வடிவமைக்கும் ஆலோசனையை முன்வைத்தார். ஆனால் அது சிங்கச் சின்னத்தின் முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பைப் பாதிக்குமென பல அங்கத்தவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். அந்த ஆலோசனையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தேசியக்கொடி நாட்டின் சகல சமூகங்களையும் ஒருங்கிணைக்கும் பரந்த சிந்தனையின் சின்னமாக விளங்கவேண்டும் என்பதே நடேசனின் வாதம். ஆனால் சிங்கள-பௌத்தமெனும் ஒரு இன-மத இணைப்பிற்கே இலங்கைத் தேசியக் கொடியில் மேலாதிக்க அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கொடியில் மையமுக்கியத்துவம் பெறும் வாளேந்திய சிங்கம் சிங்கள சமூகத்தின் வீரத்தையும், நான்கு மூலைகளிலும் காணப்படும் அரச இலைகள் பௌத்தத்தின் நான்கு விழுமியங்களான அன்புடைமை (மைத்ரீ அல்லது மெத்த), கருணை (கருணா), பரிவிரக்கமுடைய ஆனந்தம் (முடித்த), சாந்தம் (உபேக்கா) ஆகியவற்றையும் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏழு தசாப்தங்களுக்கு முன்னிருந்ததையும் விட இன்றைய இலங்கையில் இன, மத ரீதியான பிரிவினைகள் மிகவும் ஆழப்பதிந்துவிட்டன. இந்தக் காலவெளியில் இலங்கையெனும் நாடு ‘பெரும்பான்மை-சிறுபான்மை’ எனப் பிரிந்துவிட்ட இனத்துவ அடையாள அரசியல் போக்குகளின் அசமத்துவம் மிக்க போட்டிக்களமாக உருமாற்றப்பட்டுவிட்டது.  ஆகவே இன்று தேசியக் கொடி தொடர்பான விவாதங்கள் இடம்பெறும் அரசியல் புலத்தின் யதார்த்தங்கள் 1948-1950 காலகட்டத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். 1948ல் பிரிட்டிஷ் காலனித்துவம் தனது ஏகாதிபத்தியத் தேவைக்கென உருவாக்கிய ஒரு அரசை விட்டுச்சென்றது. அந்த அரசை இலங்கை அரசென அழைக்கலாம். ஒரு இலங்கை அரசு இருந்தது ஆனால் ஒரு இலங்கைத் தேசியம் (a Lankan nation) இருந்ததா? இல்லை. அதைக் கற்பிதம் செய்து கண்டுபிடிக்கும் வரலாற்றுச் சவாலிருந்தது. இலங்கை பல்லின, பல்மத சமூகஅடையாளங்களை உள்ளடக்கிய ஒரு சமூக உருவாக்கமெனும் அடிப்படையில் சகல இலங்கையரையும் உள்வாங்கவல்ல ஒரு பரந்த  பொது அடையாளத்தைக் கட்டியெழுப்பும் வரலாற்றுத் தேவையிருந்தது. அந்தத் திட்டத்திற்கேற்ற ஒரு பல்லின, பல்தேசிய அரசை நிர்மாணிக்கும் தேவையிருந்தது. ஆனால் நடந்தது அதுவல்ல. காலனித்துவம் கையளித்த அரசு பல யாப்புரீதியான மாற்றங்களுக்கூடாக ஒரு சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்க அரசாக மீளமைக்கப்பட்டது. நடந்த வரலாறு பற்றி வேறு கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளேன். அவற்றை இதே இணையத்தளத்தில் (samuthran.net) பார்க்கலாம்.[2]

1948-1950ல் தேசியக்கொடி தொடர்பான செயற்குழுவின் கருத்தாடல் தேசிய இனப்பிரச்சனையைப் பெரும்பாலும் சின்னங்களின் மட்டத்திலேயே அணுகியது. அப்போது ஏற்கனவே மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுவிட்டது. அது தேசிய இனப்பிரச்சனையின் முரண்பாடுகளின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொணர்ந்தது. அது காலனித்துவத்திற்குப் பின்னான இலங்கையில் எழப்போகும் இனத்துவ தேசியவாத அரசியலின் ஆரம்பத்தை அறிவித்தது.  இன்று தேசிய இனப்பிரச்சனை மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ள நிலையில் தேசியக்கொடி பற்றிய சர்ச்சைகள் நம்மைச் சின்னங்களுக்கு அப்பால் நாட்டின் யதார்த்தங்களுக்கூடாகப் பிரச்சனையின் தீர்வுக்கு இழுத்துச் செல்கிறது. சின்னங்களுக்கு எதிரான செயற்பாடுகள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு வேண்டுமெனும் அடிப்படைக் கோரிக்கையின் எதிரொலிகளே. இந்தச் செயற்பாடுகள் தேசிய இனப்பிரச்சனையில் ஏற்பட்டுள்ள தன்மைரீதியான மாற்றங்களை நன்கறிந்து ஜனநாயகரீதியான அரசியல்தீர்வுக்கும் மனித மேம்பாட்டிற்கும்  உதவும் வகையிலான நடைமுறை சார்ந்ததாக இருந்தால் மட்டுமே கூடிய பயன்விளையும்.

2015 ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வகித்த பங்கு உலகறிந்ததே. அந்தத் தேர்தலின் வெற்றியின் பல்லினத்தன்மையை ஒரு ‘வானவில் புரட்சி’ என்றும் இலங்கை ஒரு ‘வானவில் தேசியமாக’ மாறும் என்றும் வெற்றிக் களிப்பிலிருந்த சில அரசியல்வாதிகளும் நல்ல நோக்கினால் உந்தப்பட்ட சில எழுத்தாளர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். ‘வானவில் தேசியம்’ (´rainbow nation´) எனும் உவமை 1994ல் தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சிதோற்கடிக்கப்பட்டு நெல்சன் மண்டேலா ஜனாதிபதியானபின் பேராயர் டெஸ்மொண்ட் டுட்டு (Archbishop Desmond Tutu)வினால் பிரபல்யப்படுத்தப்பட்டது. இந்தச் சுலோகத்திற்கேற்ப தென் ஆபிரிக்காவின் தேசியக்கொடி, தேசிய கீதம் மற்றும் யாப்பு உருவாக்கப்பட்டன. அதேகாலத்தில் ஒரு ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வும் நியமிக்கப்பட்டது. ஆறு நிறங்களைக் கொண்ட தேசியக் கொடி நாட்டின் சகல இனங்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவின் தேசிய கீதம் ஐந்து மொழிகளில் ஒரே பாடலாக இசைக்கப்படுகிறது. அந்த நாட்டின் ஜனநாயக யாப்பு 1996ம் ஆண்டு டிசெம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப்பின் இதுவரை பதினேழு தடவைகள் திருத்தங்களுக்குள்ளானது. நாட்டின் பல்வேறு இனங்களை ஒருங்கிணைத்து ஒரு ‘வானவில் தேசியத்தை’ உருவாக்கும் பயணத்தில் தென் ஆபிரிக்கா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளபோதும் அதன் குறைபாடுகள் பற்றிய விமர்சனங்களும் நிறைய உண்டு. உதாரணமாக அந்த நாட்டின் பிரபல கவிஞரும் அரசியல் சிந்தனையாளரும், கொம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் (African National Congress) அங்கத்தவருமான ஜெரெமி குறொனின் (Jeremy Cronin) அவர்களின் கருத்தில் தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் தலைமையிலான தேசிய நிர்மாணிப்பு உண்மையான நல்லிணக்கத்திற்கு உதவுவதற்குப் பதிலாக இனிப்புமுலாம் பூசப்பட்ட மேலிருந்து கீழாக வழிநடத்தப்படும் போக்காக மாறிவிட்டது. அத்துடன் தென் ஆபிரிக்காவின் நவதாராளப் பொருளாதாரக் கொள்கை ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிப்பதால் நல்லிணக்கமும் தேசியத்தின் நிர்மாணமும் பாதிக்கப்படுகின்றன எனும் விமர்சனத்தையும் அவர் போன்றோர் முன்வைத்துள்ளனர்.

தென் ஆபிரிக்காவுடன் இலங்கையை ஒப்பிடுவதில் பிரச்சனைகள் உண்டு. ஆயினும் அந்த நாட்டின் பன்முகரீதியான முன்னெடுப்புகளுடன் ஒப்பிடும் போது இலங்கை இன்னும் முதலாவது அடியைக் கூடத் திடமாக எடுக்க முடியாது தத்தளிக்கும் நிலையிலேயே உள்ளது. ‘வானவில் தேசியம்’ ஒரு அழகான உவமைபோல் படலாம் ஆனால் அதை ஒரு மாயத்தோற்றமாகச் சிருஷ்டிப்பதில் அர்த்தமில்லை. இயற்கையில் வானவில் ஒரு கணநேரக் காட்சியே! புதிய யாப்புத் தொடர்பான செயற்பாடுகளைத் துணிவுடன் முன்னெடுக்கும் ஆற்றல்குன்றிய நிலையிலிருக்கிறது அரசாங்கம். கூட்டு எதிர்க் கட்சி மற்றும் பொதுதுபலசேனா (BBS) போன்ற அமைப்புக்கள் தமது தீவிர சிங்கள-பௌத்த இனவாதப் பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளன. இதற்கு நேர்மையாக முகம் கொடுக்கப் பயப்படும் ஜனாதிபதியும் பிரதமரும் பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதிலேயே அக்கறையாயிருக்கின்றனர். மறுபக்கம் வடக்கு-கிழக்கிலே தீவிர தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைமைக்குத் துரோகப்பட்டம் சுமத்தும் அரசியலில் இறங்கியுள்ளனர். இந்தச் சூழலில் புதிய யாப்பு ஒன்று வருமா என்ற கேள்வி எழுகிறது. அப்படித்தான் வந்தாலும் அது தேசிய இனப்பிரச்சனைக்கு ஜனநாயகரீதியான தீர்வினை உள்ளடக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. பௌத்த மதத்திற்கு விசேட அந்தஸ்து என்பதில் மாற்றமில்லை என்பது தெளிவாகியுள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசை ஒரு மதச்சார்பற்ற அரசாகச் சீர்திருத்துவது சாத்தியமில்லை என்பதும் தெளிவு. தேசியக்கொடியில் மாற்றங்களும் சாத்தியமில்லை. நடேசன் முனெச்சரிக்கை செய்ததுபோல் இன்று அது தேசிய ஒற்றுமையின்மையின் சின்னம்போல் ஆகிவிட்டது. மாகாண மட்டத்திலான அதிகாரப் பகிர்வு பற்றிய முடிவுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது இப்போது ஒரு பிரதான கேள்வியாகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தலையொட்டி வழமையான இனத்துவ அரசியல் காரணங்களுக்காக அரசாங்கத்தின் யாப்புத் தொடர்பான முயற்சிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. யாப்புப் பற்றிய சர்ச்சைகள் நாட்டின் இனரீதியான துருவமயமாக்கலை மேலும் பலப்படுத்தியிருப்பதாகவே படுகிறது. இந்தப் பாதகமான போக்கிற்கு எதிரான சக்திகள் அதையும்விடப் பலமடையும்போதே தேசிய இனப்பிரச்சனைக்கு முழுமையான ஜனநாயகரீதியான தீர்வுக்கான அரசியல் சூழல் உருவாகும். அந்தச் சூழல் தன்னியல்பாகப் பிறக்கப்போவதில்லை. அதை உருவாக்க ஒத்துழைத்துப் போராடுவதே சகல இனங்களையும் சேர்ந்த ஜனநாயக சக்திகளினதும் கடமை. இன்று இப்படியான ஒரு ஆலோசனை நடைமுறைக்கு ஒவ்வாததெனப் பலர் கருதலாம். ஆனால் இன்றைய வரலாற்றுத் தேவை ஒரு மாற்று அரசியலாகும். அதை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய கருத்துப்பரிமாறல்களும் விவாதங்களும் தேவை.

 

[1] இது தொடர்பாக February 2, 2003, Sunday Timesல், C. V. Vivekanandan, How National is the National Flag? எனும் தலைப்பில் ஒரு பயனுள்ள கட்டுரையை எழுதியிருந்தார். நடேசனின் அறிக்கை மற்றும் அவர் செனட்சபையில் ஆற்றிய உரைகள் ஆகிவற்றை இணையத்தில் S. Nadesan எனும்பெயரில் தேடினால் காணலாம்.

[2] Samuthran.net ல் விசேடமாகப் பின்வரும் கட்டுரைகளைப் பார்க்கவும்: i. சிங்களப் பெருந்தேசிய வாதம் – அதன் அடிப்படைகளூம் மேலாதிக்கமும் ii. வடக்குக் கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *