இலங்கையில் மேதினத்தை இடம்பெயர்த்த வெசாக்

 

சமுத்திரன்

சென்ற வருடம் இலங்கையில் மேதினம் பற்றி நான் எழுதிய கட்டுரையைப் பின்வருமாறு ஆரம்பித்தேன்:  ´இலங்கையில் மேதினத்தின் வரலாற்றை தொழிலாள வர்க்க அமைப்புக்களின் மற்றும் இடதுசாரி இயக்கத்தின் எழுச்சியினதும் வீழ்ச்சியினதும் வரலாறாகவும், மறுபுறம் தொழிலாளரின் வர்க்க நலனுக்கு எதிரான கட்சிகள் உலகத் தொழிலாளர் தினத்தை தமது அரசியல் நோக்கங்களுக்கு உதவும் வகையில் நடத்திப் பெரும் பணச்செலவில் ஒரு விழாவாகக் கொண்டாடும் மரபின் வரலாறாகவும் பார்ப்பதில் தவறில்லை.´ இந்த வருட மேதினத்தை அரசாங்கம் ஏழாம் திகதிக்குப் பின்போட்டுள்ளதற்கான காரணம் அந்த வரலாற்றுக்குப் பின்னுள்ள கருத்தியல் யந்திரத்தின் அரசியல் செல்வாக்கைப் பறைசாற்றுகிறது. வெசாக் வாரம் மே மாதம் இரண்டாம் திகதிவரை நடைபெறுவதால் மேதினத்தை அரசாங்கம்  ஏழாம் திகதிக்குப் பின்போட்டுள்ளது. மஹாசங்கத்தின் பீடாதிபதிகளின் கோரிக்கைக்கேற்ப ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட  இந்த முடிவு அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வெசாக் வாரத்தில் உலகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவது நாட்டின் யாப்பில் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் விசேட அந்தஸ்தினை மீறுவதாகாதா எனும் கேள்வியை எழவிடக்கூடாது என்பதில் ஜனாதிபதியும் அவரைச் சுற்றியுள்ளோரும் கண்ணாயிருந்தனர் போலும். ஆனால் உண்மையில் போயா ஏப்றில் 29ஆம் திகதியாகும், அதாவது மேதினத்திற்கு இரண்டுநாட்களுக்கு முன். அப்படி இருந்தும் மே முதலாம் திகதியன்று உலகத் தொழிலாளர்களுடன் இலங்கையின் தொழிலாளர்களும் இந்த வருடம் மேதினத்தைக் கொண்டாடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. போயா மே மாதத்திற்கு முன்னரே வந்துவிட்டதால் அது வெசாக் போயா ஆகாது எனப் பீடாதிபதிகள் சொல்கிறார்கள். ஆயினும் வெசாக் மே மாதத்திலேயே கொண்டாடப்படவேண்டுமென்பதே அவர்களின் கருத்து. அது பிரச்சனைக்குரிய விடயமில்லை. ஆனால் அதற்காக ஏன் உலகத் தொழிலாளர் தினம் பின்போடப் படவேண்டும்?

மேதினத்தைக்  தொழிலாள வர்க்கநலன்களுக்கு விரோதமான தமது அரசியலுக்குப் பயன்படுத்தும் விழாவாகக் கொண்டாடும்  பெரிய கட்சிகளையும் அவற்றுடன் தொங்கிக்கொண்டிருக்கும் சிறிய கட்சிகளையும் பொறுத்தவரை இந்தப் பின்போடல் பிரச்சனையல்ல. மேதினம் பிரதிபலிக்கும்  வர்க்க, சர்வதேசியவாத விழுமியங்களுக்கு விரோதமான கொள்கைகளைக் கொண்ட இந்தக் கட்சிகளுக்கிடையே வேறுவிதமான ஒரு போட்டி இடம்பெறுகிறது. ஒவ்வொரு கட்சியையும் பொறுத்தவரை, தனது சிங்கள-பௌத்த தேசபக்தியானது மற்றக் கட்சியினதையும்விடக் குறைவானதல்ல, மாறாக உயர்வானது, எனக் காட்டிக் கொள்வது மேதினத்தை எப்போது கொண்டாடுவது என்பதையும்விட முக்கியமானது. ஆகவே UNP, SLFP, SLPP ஆகியன பின்போடலை எதிர்க்கமுடியாத நிலையிலிருப்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

2015ஆம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் பல்லினப் பெரும்பான்மையின் வாக்குகளால் ஜனாதிபதியான சிறிசேன, அதுவும் பெரும்பான்மையான சிங்கள வாக்காளார்களினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளினாலேயே வெற்றி பெற்ற அவர், இப்படி ஒரு முடிவை எடுத்தது நியாயமா எனும் கேள்வி எழலாம். ஆனால் சமீப காலங்களில் ஜனாதிபதி நடத்திவரும் அரசியலை அவதானிப்பவர்களுக்கு இது ஒரு பெரிய கேள்வியாக இருக்கமுடியாது. இந்த முடிவு பௌத்த மதத்தின் பிரத்தியேக அந்தஸ்தைப் பாதுகாப்பதுபோல் இருந்தாலும் உண்மையில் பௌத்த தொழிலாளர்களின் உரிமையை உதாசீனம் செய்கிறது. அத்துடன் மற்றைய மத, மற்றும் எதுவித மதநம்பிக்கையுமற்ற, தொழிலாளர்களின் உரிமையையும் மறுக்கிறது. நாட்டில் ஏற்கனவே ஆழப்பதிந்துவிட்ட இன, மத பிரிவினைகளை மேலும் ஆழமாக்குகிறது. இலங்கையில் பலதசாப்தங்களாக  உழைக்கும் வர்க்கங்களின் உரிமைகளை, மற்றும் பல்லின சமத்துவத்தை, மனித சுதந்திரங்களை, முன்னெடுக்கும் ஜனநாயக அரசியல் இனவாத அரசியலினால் தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் இதற்கான விளக்கத்தின் சில அடிப்படைகளை நினைவுகூருதல் பயன்தரும். கொலோனியம் விட்டுச்சென்ற அரசு சுதந்திரத்திற்குப் பின் இனத்துவ மேலாதிக்க அரசாக (ethnocratic state ஆக) மாற்றப்பட்டது பற்றி, சிங்கள-பௌத்த பேரினவாதக் கருத்தியலின் மேலாட்சி கல்வி, மத மற்றும் கலாச்சார நிறுவனங்கள், பொதுமக்கள் தொடர்பு சாதனங்களுக்கூடாகத் தொடர்ச்சியாக மீளுற்பத்தி செய்யப்படுவது பற்றி, முன்னைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன். சந்ததிகளுக்கூடாக இடம்பெறும் இந்தக் மேலாட்சியின் மீளுற்பத்திக்குப் பெரும்பான்மை சமூகத்திற்குள்ளிருந்து எழும் எதிர்ப்பு மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. அரச அதிகாரத்திற்கூடாக அடக்குமுறையை அவிழ்த்துவிடும் பேரினவாதத்திற்கு எதிராகத் தோன்றிய தமிழ் தேசியவாதமும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை குறுகிய இனவாதத்திற்குள் கட்டுப்படுத்தியது. இனத்துவ அடையாளங்களின் அரசியலின் மேலாதிக்கம் ஒரு தொடரும் சரித்திரம்.

இந்த நிலைமைகளில் நாட்டின் சில இடதுசாரி அமைப்புக்களும் பதின்நான்கு தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் தடையை எதிர்த்து மேதினத்தை முதலாம் திகதி கொண்டாடுவதென முடிவெடுத்திருப்பது வரவேற்கப்படவேண்டியது, நம்பிக்கை தருகிறது. இலங்கையில் நீண்ட காலமாகத் தொழிலளார்கள் உரிமைமீறல்களினால் பாதிக்கப்படுகிறார்கள். மெய் ஊதியத்தின் வளர்ச்சியின்மை அல்லது வீழ்ச்சி, தொழிலாற்றுமிடத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கெதிராகப் போதிய பாதுகாப்பின்மை, தொழிற்சங்க உரிமை மறுப்பு, பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பின்மை, தொழிலின் தற்காலிகமயமாக்கல், தொழிலாளரின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டங்களின் பூரண அமுலாக்குலுக்குத் தடைகள்  போன்ற பல பிரச்சனைகள். 1977ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஜயவர்த்தன தலைமையிலான யு. என். பி ‘திறந்த பொருளாதாரக் கொள்கை’ எனும் பெயரில் நவதாராள பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்த ஆரம்பித்தது. இத்துடன் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான, தொழிலாளர்களுக்குப் பாதகமான சட்டங்களும், நடைமுறைகளும் வந்தன. அப்போது ஜே. ஆர். ஜயவர்த்தன பெருமையுடன் ´Let the robber barons come´ – ‘கொள்ளைக்காரக் கோமான்கள் வரட்டும்’ – என வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விட்டார். ‘robber barons´எனும் பதம் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்காவில் விதிமுறைகளுக்கு மதிப்புக் கொடுக்காது, ஏகபோக வழியில் பெருலாபம் தேடும் முதலீட்டாளர்களைக் குறிக்கும். ஜயவர்த்தனவின் அழைப்பு ஒரு வெற்றிக்களிப்பின் புளகாங்கிதக்கணத்தில் எழுந்த வெறும் வார்த்தைகளில்லை என்பதை நிரூபிப்பதுபோல் 1978ஆம் ஆண்டு முதலீட்டாளர்களுக்கு பல்வேறு விசேட சலுகைகளை வழங்கும் ‘சுதந்திர வர்த்தக வலையங்கள்’ தோன்றின. இன்றும் அவை பரந்து தொடர்கின்றன. இந்த வலையங்களின் தொழிலாளர்களில் எழுபது வீதமானோர் பெண்கள். அங்கு முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் உட்கட்டுமானங்கள் வருடந்தோறும் பராமரிக்கப்பட்டு மேலும் முன்னேற்றப்படும்போதும் தொழிலாளர் நலனில் முன்னேற்றம் இல்லை என இவ்வலையங்கள் பற்றிய ஆய்வுகளும் அறிக்கைகளும் சொல்கின்றன. முழு நாடுமே இப்போ ஒரு சுதந்திர வர்த்தக வலையம்போலாகிவிட்டது என ஒரு தொழிலாள அமைப்பச் சேர்ந்த செயற்பாட்டாளர் குறிப்பிட்டார். 1977க்குப்பின் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல் துரிதமாக்கப்பட்டு உள்நாட்டுப் போர் தொடங்கியது.  இது அரசின் இனத்துவ மேலாதிக்கமயமாக்கலை (ethnocratization ஐ) மேலும் ஆழமாக்கியதுடன்  ‘பயங்கரவாத எதிர்ப்பு’ எனும் காரணத்தைக் காட்டி அதிகாரவாத அடக்குமுறையை நியாயப்படுத்தவும் உதவியது. இந்த காலகட்டத்தில் ‘தேசிய பாதுகாப்பு’ எனும் பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளும், போராட்டங்களும் மேலும் நசுக்கப்பட்டன. அதேவேளை இன உணர்வும் இனவாதமும் முன்பையும்விடப் பெருமளவில் தொழிலாளர்களையும் பல தொழிலாளர் அமைப்புக்களையும் பற்றிகொண்டன. இது தொழிலாளர்களின் நலன்களுக்குப் பாதகமானதென்பதே இதுவரையிலான நடைமுறை அநுபவம்.

இன்றைய உலகமயமாக்கல் காலத்தில் மூலதனம் புதிய தொழில் நுட்பங்களின் மற்றும் முகாமை முறைகளின் உதவியுடன் உலகின் உழைக்கும் மக்களின் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்திச் சுரண்டலை அதிகரிக்க முயல்கிறது.  இன்றைய தகவல் யுகத்தில், அறிவுப் பொருளாதார யுகத்தில், மூளை உழைப்பாளர்களின் தொகை வளர்கிறது. ஆனால் இந்தத் துறைகளில் பெரும் ஊதிய வேறுபாடுகளும் தொழிலின் தற்காலிகமயமாக்கலும் பெரும் பிரச்சனைகளாகும். உதாரணமாக அமெரிக்காவின் சிலிக்கொன் பள்ளத்தாக்கில் வேலை செய்வோருக்கும் அதேநாட்டில் சாதாரண சேவைத் துறைகளில் கடமையாற்றுவோருக்குமிடையே மலைக்கும் மடுவுக்கும்போல் வருமான வேறுபாடுண்டு. செல்வந்த நாடுகளின் ஆலைத்தொழில் உற்பத்தி முதலீடுகளின் கணிசமான பகுதி தெற்கத்திய நாடுகளுக்கு மாற்றப்படுவதால் முன்னைய நாடுகளில் பலர் வேலை இழக்கிறார்கள். தரமான, கட்டுப்படுத்தச் சுலபமான அதேநேரம் குறைந்த ஊதிய உழைப்பாளர்கள் கிடைக்கும் தெற்கத்திய நாடுகளுக்குப் பலவிதமான தொழிற்போக்குகள் மாற்றப்படுவதால் தெற்கிலே பாட்டாளி வர்க்கம் வளர்ச்சி பெறுகிறது. அத்துடன் சீனா, இந்தியா, ரஷ்யா, பிராசில் போன்ற நாடுகள் உலக பொருளாதார வளர்ச்சியின் மையங்களாகியுள்ளன. இந்த நாடுகளின் அரசாங்கங்கள் மூலதனத்தின் நலன்களைத் தீவிரமாகப் பாதுகாக்கின்றன. இந்த நாடுகளின் கொம்பனிகள் பல நாடுகளில் முதலீடுகள் செய்கின்றன. பல நாடுகள் சீனாவிடம் பெருமளவில் கடன் பெற்றுள்ளன. இவற்றில் சில ஏற்கனவே கடன் பொறிக்குள் மாட்டிக் கொண்டன. இலங்கையும் இதற்கொரு உதாரணம். மாறிவரும் உலகத் தொழிற்பிரிவில் உழைப்பாளர்களின் வாழ்க்கைத்தரமும் பாதுகாப்பும் முக்கிய பிரச்சனைகளாகியுள்ளன. உலகமயமாக்கல் மிகவும் முன்னேறியுள்ள இருபத்திஓராம் நூற்றாண்டில் தெற்கத்திய நாடுகளில் பலதுறைகளில் மூலதனம் தொழிலாளர்கள்மீது பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சுரண்டல்முறைகளைப் பயன்படுத்துகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.  இலங்கையின் தொழிலாளர்களில் பெரும்பாலோரின் நிலையும் இதுவே.

இலங்கையில் தொழிலாளர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியலைப் பலப்படுத்துவதன் அவசியம் வெளிப்படை. இதை ஒரு பரந்த நோக்குள்ள இடதுசாரி இயக்கத்தாலேயே செய்யமுடியும் என்பதும் வெளிப்படை.  அத்தகைய இயக்கம் எதிர்கொள்ளும் சவால்களில்  இனவாதத்தின் செல்வாக்கிலிருந்து தொழிலாளர்களை விடுவிப்பதும் இனங்களின் சமத்துவத்தின் ஆதரவாளர்களாக அவர்களை மாற்றுவதும்  அதிமுக்கியம் பெறுகின்றன. சிங்கள-பௌத்த அரசின் சீர்திருத்தமின்றி இனங்களின் சமத்துவம் சாத்தியமில்லை. சிங்கள மக்களின் சம்மதமின்றி அரசின் சீர்திருத்தம் சாத்தியமாகாது. இனவாதக் கருத்தியலின் மேலாட்சி தொழிலாளர்களின் நலன்களுக்கு விரோதமானது என்பது அப்பட்டமான உண்மையாயினும் ஒரு மாற்று மேலாட்சியைக் கட்டி எழுப்புவது சுலபமான காரியமல்ல என்பது இதுவரையிலான அநுபவம். இதற்கு ஒரு தெளிவான, ஆழமான அரசியல் கல்வித்திட்டமும் அதனுடன் இணைந்த செயல்திட்டமும் வேண்டும். இது பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் தேவை. இதுவே இந்த வருட மேதினத்தைச் சூழ்ந்துள்ள அரசியல் மீண்டும் நமக்கு நினைவூட்டும் பாடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *