Marx200 கார்ல் மாக்ஸ் 200 முதலாளித்துவம் தொடரும்வரை மாக்சியத்தின் பயன்பாடும் தொடரும்

  சமுத்திரன்

I

ஒரு மேலோட்டமான வரலாற்றுப் பார்வை

1818 ஆம் ஆண்டு மேமாதம் ஐந்தாம் திகதி பிறந்த மாக்சின் இருநூறாவது பிறந்ததினத்தை நினைவுகூரும் செயற்பாடுகள் உலகின் பல இடங்களில் இடம்பெறுகின்றன. நவீன காலத்தில் உலகரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளனாக மாக்ஸ் கருதப்படுகிறார். ஆயினும் அவர் வாழ்ந்த காலத்திலிருந்து இன்றுவரை அவரின் கோட்பாடுகளை நிராகரித்து மாக்சியம் முற்றாகக் காலாவதியாகிவிட்டது எனும் பிரச்சாரப்போக்கும் ஓய்ந்தபாடில்லை. மாக்சியம் அந்தமற்ற, குறைகளற்ற ஒரு கோட்பாடல்ல. மாக்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதியவற்றின் சில பகுதிகள் இன்றைய நிலைமைகளைப் பொறுத்தவரை காலாவதியாகிவிட்டன என்பது உண்மை. அவருடைய நீண்டகால ஆய்வின் பிரதான விளைவான ‘மூலதனம்’ நூலின் முதலாவது பாகத்தையே இறப்பதற்குமுன் அவரால் பூர்த்தி செய்து பிரசுரிக்க முடிந்தது. மாக்சியம் என்பது மாக்சுக்குப் பின்னும் தொடரும் ஒரு வேலைத்திட்டம். மாக்சின் கோட்பாடு உண்மையில் காலாவதியாகிவிட்டதா எனும் கேள்வி தோன்றுவதற்கு, ஆகக்குறைந்தது ஒரு பிரதான முன்நிபந்தனை பூர்த்தி செய்யப்படவேண்டும். அதுதான் முதலாளித்துவத்தின் அஸ்தமனம். ஏனென்றால் மாக்சின் பங்களிப்புக்களில் பிரதானமானது முதலாளித்துவம் பற்றி அவர் விட்டுச் சென்றுள்ள மிக ஆழமான ஆய்வும் விமர்சனமும் ஆகும். ஆகவே முதலாளித்துவம் இருக்கும்வரை அது பற்றிய மாக்சின் கோட்பாட்டின் பயன்பாடுபற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் தொடரும். மறுபுறம் மாக்ஸ் முதலாளித்துவத்திற்கு அப்பாற்பட்ட சமூகம்பற்றியும் – அதாவது சோஷலிசம், கொம்யூனிசம் பற்றி – எழுதியுள்ளதால் அதுபற்றிய அவரின் சிந்தனைகளின் பயன்பாடும் தொடரும் என நம்பலாம். மேலும் மாக்சின் எழுத்துக்கள் தத்துவம், அரசியல் பொருளாதாரம், வரலாறு, கலை இலக்கியம் போன்ற பல துறைகளைச் சார்ந்ததால் அவரின் பங்களிப்புக்கள் எல்லாமே சுலபமாக ஒரேயடியாகக் காலாவதியாகிப் போய்விடமாட்டா.  மாக்சியத்தின் பயன்பாடு பற்றிய இந்த நியாயமான கருத்து ஒன்றும் புதிதல்ல. ஆயினும் இது மீண்டும் பலரால் புதுப்பிக்கப்பட்டு சமகால நிலைமைகளுக்கேற்ப விளக்கப்படுகிறது.[1]   

சமீபகாலங்களின் ஒரு சுவராஸ்யமான புதினமென்னவெனில் முதலாளித்துவம் பற்றிய மாக்சின் ஆய்வின் பயன்பாட்டை உலகின் பாரிய முதலாளித்துவ நிறுவனங்களின் பொருளியல் ஆலோசகர்கள் சிலர் வலியுறுத்தி வருவதுதான். உதாரணமாக, UBS (Union Bank of Switzerland)இன் பொருளாதார ஆலோசகரான George Magnus 2011ஆம் ஆண்டு எட்டாம் மாதம் Bloomberg இல் ‘உலகப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற கார்ல் மாக்சுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவும்.  (´Give Karl Marx a Chance to Save the World Economy´) எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.[2] இன்றைய உலகப் பொருளாதாரச் சிக்கல்களையும் அவற்றினால் வரும் பீதி மற்றும் எதிர்ப்புக்களையும் புரிந்துகொள்ளப் போராடும் கொள்கை வகுப்பாளர்கள் கார்ல் மாக்சைப் படிப்பதன் மூலம் பயன்பெறுவார்கள் என அந்தக் கட்டுரையில் அறிவுரை கூறுகிறார். இத்தகைய கருத்துக்களை வேறுபல பூர்ஷ்வா பொருளியலாளர்களும் தெரிவிக்கிறார்கள். அவர்கள் தரும் ஆலோசனை என்னவெனில் முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சிக்கல் பற்றி மாக்ஸ் தரும் விளக்கம் சரியானது, பயனுள்ளது ஆனால் அவர் முன்வைக்கும் மாற்றுப் பாதை ஏற்புடையதல்ல, அவரின் விளக்கத்தின் உதவியுடன் இந்த அமைப்பைப் பாதுகாக்க உதவும் கொள்கையை வகுப்போம்! எதிரி முகாமின் ஆலோசகர்களின் அங்கீகாரம் மாக்சிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால் அதை அவர் விரும்பியிருக்க மாட்டார்.  தனது ஆய்வு தொழிலாள வர்க்கத்தின் நலனுக்கு உதவவேண்டும் என்பதே அவரின் நோக்காயிருந்தது. அதற்கு எதிரான நோக்கிற்கு அவரின் அறிவு பாவிக்கப்படுவது அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். ஆனால் இருபத்தி ஓராம் நூற்றாண்டில் நவீன பொருளியலாளர்கள் மாக்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முன்வைத்த பொருளியல் கோட்பாட்டை அறிய முயற்சிப்பது ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது: முதலாளித்துவம் காலத்துக்குக்காலம் அநுபவிக்கும் பொருளாதார சிக்கல்களை ஆழப் புரிந்து கொள்ள உதவும் அணுகுமுறையை இன்றுவரை அவர்கள் பின்பற்றும் பொருளியல் கோட்பாட்டின் வழியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவுறாத நிலையில் மாக்ஸ் விட்டுச் சென்ற ‘மூலதனம்’ நூலில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்கவிதிகளை இனங்கண்டு பிரதானமாக இங்கிலாந்தின் முதலாளித்துவ அபிவிருத்திபற்றிய ஆய்வின் உதவியுடன் கோட்பாட்டுரீதியில் விளக்குகிறார். இந்த நூலில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்புப்பற்றி மாக்ஸ் உருவாக்கியுள்ள மாதிரி முதலாளித்துவத்தின் இயக்கப்பாட்டை, மூலதனக் குவியலை, அது சிக்கல்களுக்குள்ளாகும் காரணங்களை புரிந்துகொள்ள உதவுகிறது. மாக்சுக்குப்பின் பல மாக்சிய ஆய்வாளர்கள் மாக்சின் மாதிரியை விமர்சனரீதியில் ஆராய்ந்து அதன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இன்றைய காலத்திற்கேற்ப விருத்தி செய்துள்ளார்கள். ஏற்கனவே கூறியதுபோல் மாக்சியம் ஒரு தொடரும் வேலைத்திட்டம்.

இன்றைய ஜேர்மனியின் றைன்லாந்தில் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறிய, வசதி படைத்த யூத குடும்பத்தில் பிறந்து, இருபத்திமூன்று வயதில் தத்துவஞானத்துறையில் முனைவர் பட்டம் பெற்று, பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த தன் நீண்டகாலக் காதலியான ஜென்னியை இருபத்தி ஐந்தாம் வயதில் வாழ்க்கைத் துணைவியாய் பெற்ற மாக்ஸ் தனது அறுபத்தைந்தாவது வயதில் ஒரு நாடற்ற அகதியாக, கடவுள் நம்பிக்கையற்ற, அடிக்கடி கடன் தொல்லைகளுக்காளான, நீண்டகால நோய் வாய்ப்பட்டவராக, ஆனால் தன் இலட்சியப் புரட்சிகரப் பணியில் தவறாத மனிதராக  லண்டனில் மரணமடைந்தார். ஒரு இளம் பத்திரிகையாளராக, ஆய்வாளராக அவர் அன்றைய சமூகத்தின் அநியாயங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி அதிகாரத்தை விமர்சித்ததன் விளைவாகப் பிறந்த நாட்டிலிருந்து புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டு, தஞ்சமடைந்த பிரான்சிலும் அதைத் தொடர்ந்து பெல்ஜியத்திலும் இருந்து நாடு கடத்தப்பட்டு இறுதியில் 1849ஆம் ஆண்டு லண்டன் மாநகரத்திற்கு அகதியாகக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். முழுநேர ஆய்வாளனாக, எழுத்தாளனாக, அரசியல் செயற்பாட்டாளனாகத் தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்ட மாக்சிற்கு ஒழுங்கான, போதுமான வருமானம் இருக்கவில்லை. ஒழுங்கான ஊதியம் தரும் ஒரு தொழிலை அவர் செய்யவில்லை. லண்டனில் வாழ்ந்த காலத்தில் பொருளாதார நிர்ப்பந்தத்தினால் ஒரே ஒரு தடவை ஒரு எழுதுவினைஞர் வேலைக்கு மனுச்செய்தார். அவருடைய கையெழுத்துப் படுமோசமெனும் காரணத்தினால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. அவருடைய மிக நெருங்கிய தோழனும் நண்பனுமான ஏங்கெல்சின் பொருளாதார உதவியின்றி மாக்சினால் அந்த வாழ்க்கையைத் தொடர்ந்து அவருடைய பெறுமதிமிக்க பாரிய பங்களிப்பினைச் செய்திருக்க முடியாது.  இருவரும் முதல் முதலாக 1842ஆம் ஆண்டு பதினோராம் மாதம் மாக்ஸ் ஆசிரியராயிருந்த ஜேர்மன் பத்திரிகையான Rheinische Zeitung இன் அலுவலகத்தில் சந்தித்தபோது அவர்களிடையே நட்பு ஏற்படக்கூடிய பரஸ்பர உணர்வுகள் பிறக்கவில்லை. பின்னர் 1844ஆம் ஆண்டு அந்தப் பத்திரிகை ஆட்சியாளரால் தடைசெய்யப்பட்டதால் மாக்ஸ் புலம்பெயர்ந்து பாரிசுக்குச் சென்று அங்கே  ஆசிரியராக இருந்த சஞ்சிகைக்கு இளம் ஏங்கல்ஸ் அரசியல் பொருளாதாரம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையால் மிகவும் கவரப்பட்டார். அதை எழுதிய ஏங்கெல்சின் அறிவாற்றலை உயர்வாக மதித்து அவரை மீண்டும் சந்திக்க விரும்பினார்.  இங்கிலாந்தின் மாஞ்செஸ்டரில் தந்தைக்குச் சொந்தமான துணி ஆலைத் தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஏங்கெல்சை ஜேர்மனிக்குத் திரும்பும் வழியில் பாரிசுக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி மாக்ஸ் அழைத்தார். ஏங்கெல்ஸ் அந்த அழைப்பினை ஏற்று பாரிஸ் சென்றார்.

பாரிசில் இருவரும் பத்து நாட்கள் கலந்துரையாடல்களிலும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்வதிலும் செலவிட்டார்கள். இருபத்திநான்கு வயதினரான ஏங்கெல்ஸ் அப்போது ஜேர்மன் மொழியில் எழுதி முடித்த ‘இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமை’ (The Condition of the Working Class in England) எனும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை வாசித்த மாக்ஸ் பிரமிப்படைந்தார். இருவரும் மிக நெருங்கிய தோழர்களானார்கள். வெவ்வேறு வழிகளுக்கூடாக இருவரும் அரசியல்ரீதியில் ஒத்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதை அறிந்து கொண்டனர். அந்த நாட்களில் மாக்சைப் பற்றித் தான் கொண்டிருந்த உயர்வான மதிப்பினை ஏங்கெல்ஸ் தன் இறுதி மூச்சுவரை மாற்றவில்லை. தம்மிருவரில் மாக்சே உயர்ந்த அறிவாற்றலும் சிந்தனைக் கூர்மையும் மிக்கவர் எனும் முடிவுக்கு வந்த ஏங்கெல்ஸ் அவருக்கு உதவியாக ஒத்துழைப்பதென முடிவு செய்தார். தனியாகவும், மாக்சுடன் இணைந்தும் கட்டுரைகள் எழுதினார். மாக்ஸ் முழுநேரமும் தன் ஆய்விலும் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கு பொருளாதாரரீதியில் உதவும் நோக்கில் ஏங்கெல்ஸ் தனது தந்தையின் மாஞ்செஸ்டர் ஆலைத் தொழிற்சாலையைப் பொறுப்பேற்றார். மாக்ஸ் மறைந்தபின் அவர் அரைகுறையாக விட்டுச்சென்ற ‘மூலதனம்’ இரண்டாம், மூன்றாம் பாகங்களை முடிந்தவரை நன்கு தொகுத்துப் பிரசுரித்தார். அதேபோன்று மாக்ஸ் விட்டுச்சென்ற பிரசுரிக்கப்படாத எழுத்துக்களைப் பாதுகாத்தார். மாக்ஸ் மறைந்தபின் மாக்சிற்குச் சேரவேண்டிய பாராட்டுக்களைத் தனக்கு வழங்கியவர்களுக்கு அந்தப் பாராட்டுகளெல்லாம் மாக்சிற்கே உரியவை எனக்கூறி விளக்கினார்.[3] மாக்ஸ் – ஏங்கெல்ஸ் தோழமையும் நட்பும் அற்புதமானது.

சட்டவாளராக இருந்த கார்ல் மாக்சின் தந்தை தன் மகனும் சட்டத்துறையையே தேர்ந்தெடுக்கவேண்டுமென விரும்பினார். ஆனால் பல்கலைக்கழகம் சென்ற இளைய மாக்ஸ் தத்துவஞானத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் முனைவர் பட்டம் பெற்றபின் அரசியல் பொருளாதாரத்தைத் தானாகக் கற்றார். தத்துவஞானிகள் உலகை விளக்கியுள்ளார்கள் ஆனால் உலகை மாற்றுவதே முக்கியமானது என நம்பிய மாக்ஸ் முதலாளித்துவத்தின் இயக்கப்போக்கினை ஆழ ஆராய்ந்தறிவது உலகை மாற்றுவதற்கான முதற்படி எனக்கருதினார்.  பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் அரசியல் பொருளியல் கோட்பாடுகளை விமர்சித்து, முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்கவிதிகளை இனங்காண்பதிலும், அதை வரலாற்றுரீதியில்  விளக்குவதிலும் தன் ஆய்வினைத் தொடர்ந்தார். ‘மூலதனம்’ எனும் தலைப்பிலான அவருடைய பிரதான ஆய்வுநூலுக்கு ‘அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம்’ எனும் உபதலைப்பினையும் கொடுத்தார். அவருடைய வாழ்நாள் பங்களிப்புக்கள் பல சமூக விஞ்ஞானத்துறைகளை ஊடறுத்துச் செல்பவை. இன்றைய சமூகவிஞ்ஞானப் பிரிவுகளைப் பொறுத்தவரை தத்துவம், அரசியல், பொருளியல், சமூகவியல், மானிடவியல், புவியியல், வரலாறு, சூழலியல், கலை இலக்கிய விமர்சனவியல், போன்ற பல துறைகளில் மாக்சின் செல்வாக்கினைக் காணலாம். மிகவும் முக்கியமாக, மாக்சின் சிந்தனைகள் மனித இனத்தின், விசேடமாக ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின், விடுதலையை நோக்காகக் கொண்டுள்ளன என்பதால் அவை மனித இனத்தின் பொதுச்சொத்தெனக்  கருதுவதில் தவறில்லை. இது உலகை மாற்றியமைக்க வேண்டுமெனும் அவரின் இலட்சியத்திற்கு ஏற்புடையதே. ‘பொருள்ரீதியான சக்தியைப் பொருள்ரீதியான சக்தியாலேயே தோற்கடிக்க முடியும். ஆனால் கோட்பாடு  மக்களை இறுகப் பற்றிக்கொண்டதும் பொருள்ரீதியான சக்தியாகிறது’ என 1844ல் எழுதினார்.[4]  தனது கோட்பாடு சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்களின் ஆயுதமாகவேண்டுமென அவர் விரும்பினார். இதை நடைமுறைப்படுத்தத் தன்னாலியன்றதைச் செய்தார். தொழிலாளர் அமைப்புக்களை உருவாக்குவதிலும் அவற்றினைக் கூட்டி விரிவுரைகள் வழங்குவதிலும் ஈடுபட்டார். 1864 செப்டெம்பர் மாதத்தில் முதலாவது அகிலத்தை (First International) – அதாவது முதலாவது சர்வதேச தொழிலாளர் சங்கத்தை – ஸ்தாபிப்பதில் முக்கிய பங்கினை வகித்தார். அந்த அமைப்பின் ஜேர்மன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அவரே அதன் கொள்கைப் பிரகடனத்தையும் எழுதினார்.

ஆயினும் மாக்சின் இறுதி நாட்களில் அவர் 34 வருடங்கள் வாழ்ந்த இங்கிலாந்தில் அவருக்குப் பெருமளவில் அரசியல் ஆதரவாளர்களோ தனிப்பட்ட நண்பர்களோ இருக்கவில்லை. 1883, மார்ச் 14ஆம் திகதி மரணமடைந்த மாக்சின் உடல் 17ஆம் திகதி லண்டன் ஹைகேட் மயானத்தில் (Highgate Cemetry) அடக்கம் செய்யப்பட்டபோது பதினொரு பேர் மட்டுமே காணப்பட்டனர். அப்போது அவரின் மிகநெருங்கிய தோழனும் நண்பனுமாகிய ஏங்கெல்ஸ் தனது உரையை ‘நமது காலத்து மாபெரும் சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்’ என ஆரம்பித்து அவருடைய பெயரும் ஆக்கங்களும் காலங்களுக்கூடாக நிலைபெறும் எனும் வார்த்தைகளுடன் முடித்தார். ஏங்கெல்சின் வாக்கின் தீர்க்கதரிசனத்தை வரலாறு நிரூபித்துள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் இடம்பெற்ற நிகழ்வுகள் மாக்சின், மாக்சிசத்தின் காலத்தின் வருகையையும் தொடர்ச்சியியையும் அறிவிப்பவையாயிருந்தன. ஆயினும்  அப்போது முதலாளித்துவம் மிகவும் விருத்தியடைந்த இங்கிலாந்திலோ அல்லது மேற்கு ஐரோப்பிய நாடுகளிலோ சோஷலிசப் புரட்சி வெற்றி பெறவில்லை. தனது வரலாற்றுரீதியான பங்கு பற்றிய அகநிலைபூர்வமான உணர்வினைக் கொண்ட பாட்டாளி வர்க்கமே சோஷலிச, கொம்யூனிச சமூகமாற்றத்தின் தலைமைச் சக்தி எனக்கருதிய மாக்ஸ் அந்த மாற்றத்திற்கு உகந்த பொருள்ரீதியான, புறநிலைபூர்வமான நிலைமைகளை முதலாளித்துவம் உருவாக்குகிறது எனவும் கருதினார். இந்தப் பார்வையிலே முதலாளித்துவமே வரலாற்றின் இறுதியான வர்க்க சமூக அமைப்பு என வாதிட்டார்.  இந்த நாடுகளில் இடதுசாரி இயக்கங்கள் இருந்தன, மாக்சிய மரபிருந்தது, சோஷலிசப் புரட்சி பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன, தொழிலாளர் போராட்டங்கள் இடம்பெற்றன, இந்தப் போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்கள் ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்தனர், முதலாளித்துவம் சீர்திருத்தங்களுக்கூடாக மக்களின் சம்மதத்துடன் தொடர்ந்தது. ஆனால் மாக்ஸ் எதிர்பார்த்த சோஷலிச மாற்றம் இடம்பெறவில்லை. அங்குள்ள சோஷலிசக் கட்சிகளுக்குள் (சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குள்) பாராளுமன்ற ஜனநாயகத்திற்கூடாக, தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கூடாக முதலாளித்துவத்தைப் படிப்படியாகச் சீர்திருத்திச் சோஷலிசத்தை நோக்கி நகரமுடியும் எனும் கொள்கை பலம்பெற்றது. இந்தக் காலத்தில் – இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் –  ‘சீர்திருத்தவாதமா, புரட்சியா?’ எனும் விவாதம் ஐரோப்பிய மாக்சிய முகாமில் எழுந்தது.

இந்தக் கேள்வியைப் பொறுத்தவரை மாக்ஸ் ஒரே மாற்றமற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பது அவருடைய மற்றும் ஏங்கெல்சுடைய எழுத்துக்களிலிருந்து அறியக் கிடைக்கிறது. ஏறக்குறைய 1870கள் வரை புரட்சிகரப்பாதையூடாகவே பாட்டாளிவர்க்கம் கொம்யூனிச மாற்றத்தை (சமூகப் புரட்சியை) ஏற்படுத்த முடியுமெனும் நிலைப்பாட்டிலிருந்தார். 1848 ஆம் ஆண்டு பிரான்சில் ஆரம்பித்து ஐரோப்பாவெங்கும் பரவிய புரட்சிகர எழுச்சிகளும் அவற்றை ஆளும் வர்க்கம் நசுக்கியவிதமும் சாத்வீக வழிகளில் மாக்சிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தாததில் ஆச்சரியமில்லை. இந்த எழுச்சிகளின்போது தொழிலாளார்கள் காட்டிய துணிவுமிக்க புரட்சிகர உணர்வும் தியாகங்களும் மாக்சுக்கும் ஏங்கெல்சுக்கும் நம்பிக்கையூட்டும் ஆகர்சமாயின. 1848ல் மாக்சும் ஏங்கெல்சும் எழுதிய கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையும் வெளிவந்தது. உத்வேகமூட்டும் கூர்மைமிக்கப் புரட்சிகர மொழிநடையில் வரையப்பட்ட இந்த அறிக்கையின் இறுதிப் படிவம் மாக்சினாலேயே எழுதப்பட்டது. இதன் சில பகுதிகள் பிரசுரிக்கப்பட்ட சிலநாட்களிலேயே காலாவதியாகிவிட்டபோதிலும் அதன் பிரதான அம்சங்களான முதலாளித்துவத்தின் வரலாற்றுப்பணி, வர்க்க உருவாக்கமும் மூலதனம்-உழைப்பு முரண்பாடும், முதலாளித்துவ உலகமயமாக்கலின் தவிர்க்கமுடியாமை, நிரந்தரமான விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பப்புரட்சி, சுழற்சிப்போக்கில் வரும் முதலாளித்துவ சிக்கல்கள், போன்றனபற்றிய கருத்துக்கள் மிகவும் தீர்க்கதரிசனமானவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ‘இன்றும்கூட, கொம்யூனிஸ்ட் அறிக்கை வெடிப்பதற்குத்தயாராக உங்கள் கையில் இருக்கும் ஒரு குண்டு போன்றது’ என 2016 ஒக்டோபர் மாதம் The New Yorker பத்திரிகையில் ஒரு கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.[5]   ஆயினும், இதுவரையிலான மனித சமூகத்தின் வரலாறு வர்க்கப்போராட்டங்களின் வரலாறே எனக்கூறும் அறிக்கை இந்தப் போராட்டங்களின் முடிவு பற்றிக் கூறும் கருத்தும் முக்கியமானது. வர்க்கப்போராட்டங்களின் முடிவு ஒன்றில் சமூகத்தின் புரட்சிகர மாற்றமாயிருக்கும் அல்லது முரண்படும் வர்க்கங்களின்  பொதுவான அழிவாயிருக்கும் (common ruin) எனக் கூறுகிறது அறிக்கை. ஆகவே புரட்சி எப்போதும் சுரண்டப்படும் வர்க்கத்தின் வெற்றிக்கே இட்டுச்செல்லும் எனும் உத்தரவாதமில்லை என்பதை மாக்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

1871ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் இடம்பெற்ற புரட்சிகர எழுச்சியின் விளைவான பாரிஸ் கொம்யூனின் வெற்றியும் தோல்வியும் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றி மேலும் சில பாடங்களைக் கொடுத்தன. இராணுவ பலத்தால் முற்றாக நசுக்கப்படமுன் இரண்டு மாதங்கள் தொடர்ந்த பாரிஸ் கொம்யூனை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் முன்னோடியாகப் பார்த்தார் மாக்ஸ்.[6] ஆனால் புரட்சிக்குப்பின் பாட்டாளிவர்க்கம் பூர்ஷ்வா அரச யந்திரத்தை அப்படியே எடுத்து அதற்கூடாகச் சோஷலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முயல்வது பிழை என்பது கொம்யூனின் தோல்வி தந்த ஒரு பாடமெனக்கருதிய மாக்ஸ் அந்த அரச யந்திரம் உடைத்தெறியப்படவேண்டுமெனக் கூறினார். ஆயினும் கொம்யூன் பற்றி மாக்ஸ் கொண்டிருந்த கருத்துக்களுக்கு மாக்சியவாதிகள் மத்தியில் முரண்படும் வியாக்கியானங்கள் பிறந்தன. அவசரத்தில் நடத்தும் ஆயுதக் கிளர்ச்சியால் வரும் வெற்றியைத் தக்கவைக்கமுடியாது போகலாம் என்பது ஒரு வியாக்கியானம். அரச யந்திரத்தை உடைத்தெறிந்து மாற்று அரசை அமைக்கும்வரை புரட்சி தொடரவேண்டுமென்பது இன்னொரு நிலைப்பாடு.

பிற்காலத்தில், சர்வஜன வாக்குரிமையும் வர்க்க உணர்வுமிக்க தொழிலாளர் கட்சியும் இங்கிலாந்து, ஒல்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சாத்வீகமான வழியில் சமூகப் புரட்சியைச் செய்ய உதவுமெனும் கருத்தினை மாக்ஸ் வெளிப்படுத்தினார்.[7]  விசேடமாக, ஐரோப்பா முழுவதிலும் சாத்வீகமான, சட்டபூர்வமான வழிகளால் சமூகப் புரட்சி இடம்பெறக்கூடிய ஒரே ஒரு நாடாக இங்கிலாந்து இருக்கலாம் எனும் சாத்தியப்பாட்டினைத் தெரிவித்த மாக்ஸ் இப்படியாகச் சமூகப்புரட்சி நடந்தாலும் ஆங்கிலேய ஆளும் வர்க்கம் அதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாது என எதிர்பார்க்கவில்லை எனவும் கூறத் தவறவில்லை என ஏங்கெல்ஸ் 1886 ஆம் ஆண்டு (November 5)  மாக்சின் ‘மூலதனம்’ முதலாம் பாகத்தின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதியுள்ள முகவுரையின் இறுதியில் குறிப்பிடுகிறார். ஆகவே சமூகப் புரட்சியின் பாதையை குறிப்பான வரலாற்றுச் சூழல்களே நிர்ணயிக்கின்றன. புரட்சி ஒரு சிறுகுழுவின் அல்லது அமைப்பின் சதித்திட்டமல்ல என மாக்ஸ் வலியுறுத்தினார். எந்த ஒரு சமூக ஒழுங்கும் அதன் எல்லா உற்பத்தி சக்திகளும் விருத்தியடையும் சந்தர்ப்பம் இருக்கும்வரை மறையப்போவதில்லை. பழைய சமூகத்தின் கர்ப்பப்பைக்குள் உரிய பொருள்ரீதியான நிலைமைகள் முதிர்வடையும்வரை புதிய உயர்நிலையான உற்பத்தி உறவுகள் தோன்றப்போவதில்லை என 1859ல் கூறுகிறார் மாக்ஸ்.[8]  கோட்பாடு மக்களைப் பற்றிக் கொண்டால் பொருள்ரீதியான சக்தியாகிறது என 1844ல் எழுதிய மாக்ஸ் பதினைந்து வருடங்களின்பின் இப்படி எழுதுவது கவனிக்கத்தக்கது. கோட்பாடு தரும் சக்தி முக்கியமானது ஆனால் குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழலில் வரலாறு தந்துள்ள புறநிலை யதார்த்ததை மனித விமோசனத்துக்கு உதவும் வகையில் எப்படி மாற்றுவது என்பது நடைமுறையோடிணைந்த கோட்பாட்டுரீதியான சவாலாகிறது.

முதலாம் உலகப் போரின் முரண்பாடுகள் 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சிக்கு உதவின. முதலாளித்துவம் விருத்தி பெறாத ரஷ்யாவில் தோன்றிவரும் புரட்சிகர நிலைமையைத் தனது கடைசி நாட்களில் மாக்ஸ் அக்கறையுடன் அவதானித்துவந்தார். சாரிசம் தொடரமுடியாத நிலைமைகள் வளர்ந்துவிட்டன. ரஷ்ய சமூக அமைப்பில் மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. ஆனால் அந்த மாற்றம் எத்தகையது? முதலாளித்துவத்தின் நீண்டகால விருத்தியா, சோஷலிச மாற்றுவழியா அல்லது சோஷலிசத்தை நோக்கிய வேறொரு இடைக்காலப் பாதையா? துரதிஷ்டவசமாக இது பற்றி மேலும் ஆழமாக ஆராயமுன் 1883ஆம் ஆண்டு மாக்ஸ் மரணித்தார்.[9]  ஒக்டோபர் புரட்சியை அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டாடியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பின்னர், குறிப்பாக லெனினின் மரணத்துக்குப் பின் அது நகர்ந்த பாதையை தீவிரமாக விமர்சித்திருப்பார், அது சோஷலிசமென ஏற்றிருக்கமாட்டார். முதலாளித்துவம் அபிவிருத்தியடையாத நிலமைகளில் குறிப்பான அரசியல் பொருளாதார சூழல்களில் புரட்சி சாத்தியமாகலாம் ஆனால் அதற்குப்பின் மனித விடுதலையை நோக்காகக் கொண்ட சோஷலிச ஜனநாயக அமைப்பின் நிர்மாணம் கோட்பாட்டுரீதியிலும் நடைமுறையிலும் பெரும் சவாலாகிறது. இதை தப்பான வழியில் எதிர்கொண்டால் சோஷலிசத்தின் பெயரில் ஒரு புதிய சர்வாதிகாரம் உருவாகலாம். இதுதான் சோவியத் பரிசோதனை தந்த பாடம். ஆயினும் இரண்டாம் உலகப்போரின்பின் இரண்டாம் உலகமென அழைக்கப்பட்ட ஒரு பரந்த ‘சோஷலிச முகாம்’ உருவாயிற்று. இது சர்வதேச அதிகார உறவுகளின் சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த மாற்றம் மூன்றாம் உலக நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய விடுதலை போராட்டங்களுக்கும் இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சிக்கும் சாதகமான சூழலை உருவாக்கியது. இருபதாம் நூற்றாண்டு ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் பல மாக்சிய சிந்தனையாளர்களையும் தலைவர்களையும் தந்தது. சீன, கியூப, வியட்நாமிய விடுதலைப் புரட்சிகளின் வெற்றி வரலாற்றை மாற்றும் நிகழ்வுகாளாயின.

மறுபுறம் நடைமுறை ‘சோஷலிசம்’ சிக்கல்களுக்கும் விமர்சனங்களுக்குமுள்ளானது.   கட்சியின் தலமையின் சர்வாதிகாரம், அதிகாரவாதம், மனித சுதந்திரங்களின்மீது கட்டுப்பாடுகள், மனித தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்களின் போதாமை போன்றவை நடைமுறைச் சோஷலிசத்தின் தன்மைகளாயின. சோஷலிச ஜனநாயகம் என்பது கனவாயிற்று.  ‘சோஷலிச’ முகாமில் ஒரு ‘சட்டபூர்வமான’ மாக்சிசம் உருவாக்கப்பட்டது. இந்த மாக்சிசத்தைக் கேள்விக் குள்ளாக்கும் மாக்சிசவாதிகளுக்குப் பல்வேறு பட்டங்கள் சூட்டப்பட்டன. பலர் தண்டனைகளையும் அநுபவித்தனர். சோவியத்-சீன கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையிலான பிளவு சர்வதேசரீதியில் இடதுசாரி இயக்கங்ககளைப் பாதித்தது.

ஆயினும் மாக்சிச முகாமிற்குள்ளேயும் வெளியேயும் இருபதாம் நூற்றாண்டின் நடைமுறை சோஷலிசம் பெரிய விவாதப் பொருளாகியது. அதே காலத்தில் மாக்சிசம் பிரபல பல்கலைக் கழகங்களின் சமூக விஞ்ஞான, தத்துவஞானத் துறைகளின் ஆய்வாளர்களர் பலரின் ஆய்வுப்பொருளாகியது. மேற்கிலும், மூன்றாம் உலகிலும் புதிய சந்ததி மாக்சிச சிந்தனையாளர்கள் உருவானார்கள்.  இது ஒன்றுக்கு மேற்பட்ட போக்குகளைக் கொண்ட ஒரு பரந்த மாக்சிச சமூக விஞ்ஞான மரபின் எழுச்சிக்கு வழிவகுத்தது. 1970களிலிருந்து நவீனத்துக்குப் பின்னைய வாதம் (post-modernism), மாக்சிசத்திற்குப் பின்னைய வாதம் (post-Marxism), அமைப்பியலுக்குப் பின்னைய வாதம்   (post-structuralism) ஆகியவற்றின் வருகை புதிய விவாதங்களுக்கு வழிவகுத்தது. இந்தக் காலகட்டத்தில் மார்க்சிசம் அரசியல்ரீதியில் வலுவிழந்துபோகும் போக்கினை காணக் கூடியதாகவிருந்தது. நவதாராளவாதத்தின் வருகை இந்தப் போக்கினை மேலும் பலப்படுத்தியது.

1989 பதினோராம் மாதம் பேர்லின் சுவரின் வீழ்ச்சி சோவியத் முகாமின் அஸ்தமிப்பையும் இரண்டாம் உலகப் போரின்பின் ஆரம்பித்த நிழற்போரின் முடிவையும் அறிவித்தது. உலகரீதியில் கொம்யூனிசம் முதலாளித்துவத்திடம் இறுதியாக, மீட்சியின்றித் தோற்றுவிட்டது என ஏகாதிபத்தியமுகாம் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடியது. முதலாளித்துவ தாராள ஜனநாயகமே வரலாற்றின் இறுதி நிலையம் என அமெரிக்க அரசியல் விஞ்ஞானி Francis Fukuyama அவரது பிரபல நூலான  The End of History (வரலாற்றின் முடிவு)ல் அறிவித்தார். மாக்சிசத்திற்கு எதிர்காலமில்லையென மீண்டும் பலகுரல்கள். ஆனால் 2000 ஆண்டு செப்டெம்பர் மாதம் BBC கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மாபெரும் சிந்தனையாளர் யாரென நடத்திய கருத்துக் கணிப்பில் கார்ல் மாக்ஸ் முதலாம் இடத்தைப் பெற்றார். ஐன்ஸ்டைன் இரண்டாம் இடத்தைப் பெற்றார். மாக்சின் செல்வாக்கிற்கு இது ஒரு பலமான ஆதாரம். இருபத்தியோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் வந்த பொருளாதாரச் சிக்கலும் அதன் சமூகரீதியான விளைவுகளும் முதலாளித்துவத்தின் அமைப்புரீதியான தன்மைகளை மீண்டும் நினைவூட்டின. உலகரீதியில் வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகளும், சமூக, பொருளாதார, சூழல் பிரச்சனைகளும் பலரை மாக்சின் எழுத்துக்களுக்கும் நமது சமகால மாக்சிய ஆய்வுகளுக்கும் திரும்பவைத்துள்ளன. முதலாளித்துவத்தை ஆழ விமர்சித்து அதற்கும் அப்பால் ஒரு சமூக அமைப்பினைக் கற்பிதம் செய்யவேண்டிய தேவையை முற்போக்கு உலகம் உணர்கிறது. இந்தத் தேவை நம்மை விமர்சன நோக்குடன் மாக்சிடம் திரும்ப வைப்பதில் ஆச்சரியமில்லை.

[1]இந்த வகையில் எனது அபிப்பிராயத்தில் Terry Eagleton (2011) எழுதியுள்ள ´Why Marx was right´, (Yale University Press), மிகவும் சுவையான, பயனுள்ள நூல்.

[2] George Magnus, ´Give Karl Marx a Chance to Save the World Economy, Bloomberg, 29.08.2011

[3] மாக்ஸ் – ஏங்கெல்ஸ் நட்புப் பற்றிய மேலும்பல தகவல்களைப் பின்வரும் ஆக்கங்களில் அறியலாம்: T. A. Jackson, 1935, A Great Socialist – Fredrick Engels, https://www.marxists.org/archive/jackson-ta/pamphlets/engels.htm;

Francis Wheen, 1999, Karl Marx, Fourth Estate, London

[4] Karl Marx, 1844, Introduction to Contribution to The Critique of Hegel´s Philosophy of Right, https://www.marxists.org/archive/marx/works/1844/df-jahrbucher/law-abs.htm

[5] Lewis Menand, 10 October 2016, Karl Marx Yesterday and Today, The New Yorker

[6] Karl Marx, 1871, The Civil War in France, Karl Marx and Frederick Engels Selected Works, Progress Publishers, Moscow 1970

[7] Shloma Avineri, 1968, The Social & Political Thought of Karl Marx, Cambridge University Press.

[8] Karl Marx, 1859, Preface to the Contribution to the Critique of Political Economy, Progress Publishers, Moscow 1977

[9] ரஷ்யாவில் எழுந்துவரும் புரட்சிகரச் சூழல்பற்றி மாக்சும் ஏங்கெல்சும் கொண்டிருந்த கருத்துக்கள் பற்றிச் சுருக்கமாகப் பின்வரும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். சமுத்திரன், ஒக்டோபர் 2017 ஒரு மாபெரும் புரட்சியின் நினைவுகூரலும் விமர்சனமும்,https://samuthran.net/2017/11/05/ஒக்டோபர்-1917-ஒரு-மாபெரும்-ப/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *