சமுத்திரன்
அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘வடக்கின் வசந்தம்’ அரசாங்கத்தின் காட்சித் திட்டங்களாயின. அன்றைய அரசாங்கத்தின் கொள்கை பற்றி 2003 ஆம் ஆண்டு ‘அபிவிருத்தி மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா’? எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையிலிருந்து சில வார்த்தைகளை இங்கே நினைவுகூருவது பொருத்தமாயிருக்குமென நம்புகிறேன்.
‘ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரங்களை மீள்நிர்மாணித்தல் ஒரு அவசிய தேவை என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதேபோன்று அழிவுக்குள்ளான அவர்களின் உட்கட்டுமானங்களின் புனரமைப்பும் விருத்தியும் அவசியம் என்பதையும் மறுப்பதற்கில்லை. வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் போரினால் மட்டுமன்றி சுனாமியினாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் எண்ணிலடங்கா.
ஆனால் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமாக இருந்த தேசியப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வின் அவசியத்தை ஒதுக்கிவிட்டு “அபிவிருத்தியை” முன்வைப்பதும் அதையே அரசியல் தீர்விற்கு பிரதியீடாக காட்ட முயற்சிப்பதுமாகும். அபிவிருத்திக்கும் அரசியல் தீர்வுக்கும் இடையே நெருக்கமான உறவுண்டு ஆனால் முன்னையது பின்னையதின் பிரதியீடாக இருக்கமுடியாது. அரசியல் தீர்வின் தவிர்க்க முடியாத அவசியத்தினையும் அவசரத்தினையும் ஏற்க மறுக்கும் ஒரு அரசாங்கத்தினால் மக்களின் தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கு உதவும் ஒரு அபிவிருத்திப் போக்கினை ஏற்படுத்த முடியுமா எனும் கேள்வி நியாயமானதே. இது இரண்டாவது விடயத்திற்கு இட்டுச் செல்கிறது. அரசாங்கமும் அதன் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிவாளர்களும் பிரச்சாரகர்களும் மிகைப்படக் கூறும் “அபிவிருத்தி” என்பதன் உள்ளடக்கம் தான் என்ன?’(மேலும் அறிய: https://samuthran.net/2017/04/24/அபிவிருத்தி-மனித-மேம்ப/ )
இன்றைய அரசியல் சூழல் வித்தியாசமானது. ஆயினும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கேள்விகளும் காலாவதியாகிவிடவில்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில்களின் தேடல் நம்மை தமிழ் அரசியலுக்கு அப்பால், வடக்கு கிழக்குக்கு அப்பால் அழைத்துச் செல்கின்றன. ஜனாதிபதி சிரிசேனா அமைத்த வடக்குக் கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவது அந்த அமைப்பின் அரசியல் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வெளிவந்த ஒரு அறிக்கையின்படிகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் பின்வரும் கருத்தை செயற்குழுவின் முதலாவது கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ‘அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழருக்கான தீர்வு விடயத்தை அரசு மூடிமறைக்க முடியாது. … அபிவிருத்திக்குக் கூட்டமைப்பு வழங்கும் ஆதரவு தீர்வுக்கான வாசலைத் திறப்பதற்கானதேயன்றி அதில் வேறெந்த நிகழ்ச்சி நிரலும் கிடையாது.’ சமீப காலம்வரை அரசியல் தீர்வின்றி அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கத்துடன் பேசவோ ஒத்துழைக்கவோ தயாராக இல்லை எனும் நிலைப்பாட்டையே கூட்டமைப்புக் கொண்டிருந்தது. அது மட்டுமன்றி வடக்கு கிழக்கு தமிழ் மக்களினால் தெரியப்பட்ட பிரதிநிதி என்றவகையில் அம்மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட, போருக்குப் பின்னான, அபிவிருத்தி பற்றி இன்றுவரை கூட்டமைப்பிடம் ஒரு தெளிவான, சுதந்திரமான கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை.தீர்வுக்கான வாசலைத் திறக்கும் ஒரு உபாயமாக அபிவிருத்திச் செயலணியில் பங்குபற்றும் முடிவில் நியாயமிருக்கலாம் ஆயினும் இதை எப்படித் தாம் செயற்படுத்தப்போகிறோமென்பது பற்றிக் கூட்டணி சொல்லவில்லை. பாராளுமன்றத்தில் மற்றும் இதுவரையிலான பேச்சுவார்த்தைகளுக்கூடாக அடையமுடியாத எவற்றையோ இந்தச் செயலணியில் பங்குபற்றுவதற்கூடாக அடையமுடியலாம் அல்லது அந்த முயற்சிகளுக்கு இந்தப் பங்குபற்றல் உதவக்கூடும், அதாவது தமது அரசியல் நம்பகத்தன்மையையும் பேரம்பேசும் பலத்தையும் அதிகரிக்க இது பயன்படும், எனும் நம்பிக்கை கூட்டமைப்பின் தலைமைக்கு இருப்பது போல் தெரிகிறது. உதாரணமாக, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் இனவாதநோக்கில் திட்டமிட்ட குடியேற்றத்தைத் தடுக்க மற்றும் இராணுவம் தொடர்ந்தும் கைப்பற்றியிருக்கும் மக்களின் நிலங்களை விடுவிக்க இந்தப் பங்குபற்றல் உதவலாமெனக் கூட்டமைப்பு நம்பக்கூடும். இதில் நியாயமிருக்கலாம்.
இங்கு ஒரு அரசியல் யதார்த்தத்தை மனங்கொள்ளல் தகும். போருக்குப்பின்னர் தமிழ்த் தரப்பின் அரசியல் பேரம்பேசும் பலம் ஒப்பீட்டுரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையிலே உள்ளது. இப்படிச் சொல்வது அதற்கு முன்னர் எப்போதும் அந்தப்பலம் உயர்வாக இருந்தது என்பதல்ல. போர்க்காலத்தில் சிலசந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளால் இராணுவரீதியில் எதிர்த்தரப்புடன் ஒருவித தற்காலிக சமநிலையை அல்லது நகரமுடியாநிலையை (stalemateஐ)ஏற்படுத்தமுடிந்ததால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குச் சார்பான நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டது. ஆனால் இராணுவரீதியான வெற்றி தற்காலிகமாகக் கொடுத்த பேரம்பேசும் அனுகூலத்தை நியாயமான யதார்த்தபூர்வமான அரசியல் இலாபமாக மாற்றவல்ல அணுகுமுறை புலிகளின் தலைமையிடம் இருக்கவில்லை. இது பேரினவாத ஆட்சியாளரின் மூலோபாயத்திற்குச் சாதகமாயிருந்தது.போருக்குப்பின்னான சூழலில் கூட்டமைப்பின் தலைவர்கள்தனிநாட்டுக் கோரிக்கையைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வையே தாம் கோருவதாக அறிவித்தனர். மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் கூட்டமைப்புக்குக் கிடைத்த அமோக ஆதரவும் வெற்றிகளும் பெரும்பான்மையான வடக்கு கிழக்குத் தமிழ்மக்கள் அதன் கொள்கைமாற்றத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பதைக் காட்டியது.
தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் தீர்வுபற்றிக் கூட்டமைப்புக்கு ஒரு நிலைப்பாடுண்டு. ஆனால் இங்கு விவாதத்திற்குரிய கேள்வி என்னவெனில் கூட்டமைப்பு அபிவிருத்தியை எப்படி அந்த அல்லது அதற்குக் கிட்டியஅரசியல் தீர்வுக்கான வாசலைத் திறக்கும் கருவியாகப் பயன்படுத்தப்போகிறது?இந்தக் கேள்வி இன்றைய இலங்கையையும் 30 வருட உள்நாட்டுப் போருக்குப்பின்னான வடக்கு கிழக்கையும் பொறுத்தவரை அபிவிருத்தி என்பதற்குக் கூட்டமைப்புக் கொடுக்கும் அர்த்தம் என்ன, விளக்கம் என்ன போன்ற கேள்விகளுக்கு இட்டுச்செல்கிறது. எனக்குத் தெரிந்தவரை இந்தக் கேள்விகளுக்கு இதுவரை கூட்டமைப்பு நேரடியாக முகம் கொடுத்ததாகத் தெரியவில்லை. இனிமேலாயினும் இதை அவர்கள் செய்யவேண்டிய அவசியத்தை அவர்களே ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஆனால் இங்கே ஒரு பிரச்சனை எழுகிறது. அபிவிருத்தியைப் பொறுத்தவரை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதெனும் நிலைப்பாட்டையே கூட்டமைப்புக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதற்கூடாக அரசாங்கத்துடனான நல்லுறவைப் பலப்படுத்தி அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழலை உருவாக்கலாமென நம்புவதுபோல் படுகிறது. இந்த அணுகுமுறையின்படி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்வது ஒரு முன்நிபந்தனைபோலாகிறது. ஆனால் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை இன்று நாட்டில் ஒரு பாரிய சிக்கலுக்குக் காரணமாகியுள்ளது. 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP)கொண்டுவந்த நவதாராளத் திறந்த பொருளாதாரக் கொள்கையையே இன்றுவரையிலான அரசாங்கங்கள் பின்பற்றி வந்துள்ளன. உள்நாட்டுப்போர் காரணமாகவும் சந்தர்ப்பவாத அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்தக் கொள்கையில் காலத்துக்குக் காலம் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆயினும் உள்நாட்டின் விவசாய, ஆலைத்தொழில் உற்பத்தித்துறைகளின் விருத்தி,உற்பத்தித் திறனின் வளர்ச்சி, மற்றும் இவற்றுடன் நெருக்கமான உறவுள்ள தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் உட்கட்டுமானத்தின் விருத்தி மந்தநிலையிலேயே இருந்தன, இருக்கின்றன. இதனால் நாட்டின் தேசியப் பொருளாதாரம் சுலபமாக இடர்பாட்டுக்குள்ளாகக்கூடிய தன்மைகளைக் கொண்டிருந்தது. இன்றைய அரசாங்கம் மேலும் தீவிரமாக நவதாராளக் கொள்கையை அமுல்நடத்த முனைகிறது. இதனால் ஏற்கனவே பலவீனமடைந்த, ஊறுபடத்தக்க நிலையிலிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வெளிவாரிப் பொருளாதார சக்திகளின் பாதகமான தாக்கங்களுக்குள்ளாகிறது. ஆட்சியாளரும் அதன் ஆதரவாளர்களான நவதாராளவாத அறிவாளர்களும் இன்றைய உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிக்கும் அதன் சமூகரீதியான விளைவுகளுக்கும் முழுக்க முழுக்க நாட்டின் சக்திக்கு அப்பாற்பட்ட சர்வதேசமட்ட மாற்றங்களே காரணம் எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். இது பாதி உண்மை மட்டுமே. இதன் மறுபாதியை அவர்கள் மறைக்க முயன்றாலும் அது சுலபமல்ல. கடந்த பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நிலைபெறும் வழிகளில் விருத்திபெற வல்ல தேசிய பொருளாதார அடித்தளத்தைக் கட்டியெழுப்பும் கொள்கைகளைப் பின்பற்றவில்லை. இது தொடர்பான சில தகவல்களையும் விளக்கத்தையும் அபிவிருத்தி பற்றி மேலேகுறிப்பிட்டுள்ள எனது கட்டுரையில் காணலாம். பொருளாதாரம் வளரும்போது அதற்கான முழுப் புகழையும் தமக்குத்தாமே கொடுப்பதும், அது வீழ்ச்சியடையும்போது முழுப் பொறுப்பையும் வெளிவாரிப் படுத்துவதும் எல்லா அரசாங்கங்களும் கையாளும் தந்திரமாகும். இது பொது மக்களெல்லோருமே மூடர்களெனும் கணிப்பிலே செய்யப்படும் பிரச்சாரம்.
பொருளாதாரக் கொள்கையை விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத அரசாங்கம் மக்கள்மீது மேலும் சுமைகளைப் போடுகிறது. ஏறிச்செல்லும் வாழ்க்கைச் செலவினால் சகல இன மக்களும் – குறிப்பாகத் தொழிலாளர்கள், சிறு பண்ணை விவசாயிகள், நிலமற்றோர், கடற்றொழிலாளர், வேலைவாய்ப்பற்றோர் மற்றும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோர் – பாதிக்கப்பட்டுள்ளனர்.சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. அரசு வரிகளுக்கூடாகப் பெறும் வருமானத்தின் 80 வீதத்திற்கும் மேலானது பொதுமக்கள் வாங்கும் நுகர்பண்டங்கள்மீதான வரிகளுக்கூடாகவே திரட்டப்படுகிறது. செல்வந்தர்கள் வரிசெலுத்தாமல் அல்லது அற்பவரியுடன் மேலும் செல்வந்தர்களாகவே இந்தத் திட்டம் உதவுகிறது. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் அதன் விளைவுகள் பற்றி மக்கள் நலன்சார்ந்த ஒரு கொள்கைரீதியான விமர்சனத்தை, ஒருமாற்றுப் பார்வையை வெளிப்படுத்தும் நிலையில் கூட்டமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டின் இன, மத பிரிவுகளை ஊடறுத்துச் செல்லும் பொதுவான சமூக-பொருளாதார-சூழல் பிரச்சனைகள் பற்றி மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்குமிடையே புரிந்துணர்வை வளர்க்கும் ஒரு சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு மீண்டும் காணத்தவறியுள்ளது. அத்தகைய புரிந்துணர்வு விசேடமாக சிங்கள மக்கள் மத்தியில்அரசியல் தீர்வுக்குச் சாதகமான உணர்வை வளர்க்க உதவும் வாசலின் திறவுகோலாகலாம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டுமா? தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரு நிலைபெறும் நியாயமான அரசியல் தீர்வினைக் காண்பதற்கு சிங்கள மக்களின் கணிசமான ஆதரவு அவசியமென்பதை இப்போதாயினும் பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பலாம். ஆயினும் அதை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்குத் தமிழர் தரப்பிலிருந்து எவ்வகையான அரசியல் முன்னெடுப்பும் செயற்பாடுகளும் தேவை என்பது இதுவரைதமிழ்த் தேசியவாதிகளால் கவனிக்கப்படாத ஒரு முக்கிய கேள்வியாகும். இது ஒன்றும் ஏதோஅவர்களின் அறியாமையின் விளைவல்ல. உண்மையில் இது அவர்களின் குறுகிய தேசியவாதத்துடன் இணைந்த மேனிலை வர்க்கச்சார்பினையே காட்டுகிறது. இதுவே கூட்டமைப்பின் தலைமையின் அரசியல் நடைமுறையை நிர்ணயிக்கிறது.
அபிவிருத்தியை அரசியல் தீர்வைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக அரசாங்கம் பயன்படுத்துவதை எதிர்ப்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றலுடைமைகளை வளர்க்கவல்ல அபிவிருத்திக்கான கோரிக்கையை நிராகரிப்பதாகாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகள் போரின் விளைவுகள், தொடரும் இராணுவமயமாக்கல், மற்றும் அரசாங்கத்தின் நவதாராளப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடையவை. உதாரணமாக இடப்பெயர்வு, மனித இழப்புக்கள், போர்விதவைகளின் மற்றும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோரின் பிரச்சனைகள், நில மற்றும் கரையோர வளங்களின், கடல் வளங்களின் அபகரிப்பு. இவைபோன்ற விளைவுகள் அபிவிருத்தியுடனும் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வுடனும் தொடர்புடையவை. ஆகவே போருக்குப் பின்னான வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதார விருத்திக்கும் மனிதமேம்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுக்கும் அபிவிருத்திக் கொள்கையொன்றினை மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்படுவது அரசியல் தீர்வுக்கான போராட்டத்துடன் இணைந்த ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படவேண்டிய ஒரு காலகட்டத்திலேயே நாம் இருக்கிறோம். வடமாகாண சபையைக் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியுடன் கைப்பற்றியபோது இந்தத் தேவை வெள்ளிடை மலைபோல் தெளிவாக மேலோங்கி நின்றது. அதை முறையாக அணுகும் சந்தர்ப்பமும் வந்தது. ஆனால் நடந்தது என்ன?வடமாகாண சபை பெருந்தொகையான தீர்மானங்களை நிறைவேற்றியது. இவற்றின் பலாபலன்கள் தனியாக ஆராயப்படவேண்டியவை. ஆனால் மாகாண மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட ஒரு அபிவிருத்தி பற்றிய கொள்கைப் பிரகடனம் கூட வெளிவரவில்லை. இந்த முதற் படியைக்கூட எடுக்காத மாகாண சபையிடமிருந்து மக்களைப் பங்காளர்களாகக் கொண்ட ஒரு மாகாண அபிவிருத்தித் திட்டத்தை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.ஆனால் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை அத்தகைய ஒரு அணுகுமுறையின் தேவை தொடர்கிறது. இதைக் காண மறுப்பது அரசாங்கம் அமுல்படுத்தும் மக்களின் நலன்களைப் புறக்கணிக்கும் நவதாராளக் கொள்கையின் மேலாட்சிக்குச் சரணடைவதற்கே இட்டுச் செல்லும் என்பதையே யதார்த்தத்தில் காண்கிறோம்.
My opinion is at least provincial councils should get the leagally power to plan,estimate and , do the essential development out of their o wn people`s need. And the state and local authorities should cooperate in these projects. Not paralell as they do now.
Only one body should controll the developments. My dream is from provincial to grama sevakar a
pyramid modell which should be governt by the people elected provincial council and other bodies..
I agree with that development is essential now. At he same time the central government should give some more power to the local authorities by the majority of parliament officially.