அழகும் அர்த்தங்களும் ததும்பிய அசையும் கவிதைகளும் ஞானரதம் நடன நாடகமும் – நோர்வே கலாசாதனா கலைக்கூடம் வழங்கிய அரங்கம் 2018

 

சமுத்திரன்

இந்த வருடம் பத்தாம் மாதம் பதின்நான்காம் திகதி நோர்வேயின் பாரும் (Bærum)கலாச்சார மையத்தில் கவிதா லட்சுமியின் நடன அமைப்பிலும் நெறியாள்கையிலும் கலாசாதனா கலைக்கூடம் வழங்கிய ‘அரங்கம் 2018’ ஆக்கத்திறனுடன் அழகாக உருவாக்கப்பட்ட ஒரு மாலை நிகழ்ச்சி என்பதே இந்த இரசிகனின் அபிப்பிராயம். நான் முன்னர் விரும்பி வாசித்த புதுக்கவிதைகள் பாடல்களாக இசையமைக்கப்பட்டு பரதநாட்டியத்தினூடாக உயிர்ப்புடன் அசைவதைக் காண்பதும் கேட்பதும் எனக்கு ஒரு புதிய அனுபவமே. உரைநடையில் பாரதி வடித்த கற்பனார்த்தப் பயணங்களைச் சொல்லும் ‘ஞானரதம்’ கவிதைமயமாக்கப்பட்டு அதில் அவரின் கவிதைகள் பலவற்றின் பகுதிகளையும் உள்ளடக்கிய கலைத்துவமான நடனநாடகமாக மேடையில் பார்த்ததும் புதிய அனுபவமே. நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பும் மண்டபத்தின் ஒலி, ஒளி தொழில்நுட்பமும் அதன் கையாள்கையும் சிறப்பாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கவை. முழு நிகழ்வும் ‘அசையும் கவிதைகள்’, ‘ஞானரதம்’ என இரண்டு பாகங்களாக மேடையேற்றப்பட்டது. கோமதிநாயகம், அஸ்வமித்ரா, கணேசன் சுந்தரமூர்த்தி ஆகியோர் செவிக்கினிய அதேவேளை கவிதைகளின் செய்திகளுக்கேற்றவகையில் இசையமைத்துள்ளார்கள். இந்தியாவிலேயே பாடல்கள் பதிவுசெய்யப்பட்டன என அறிகிறேன்.

முதலாவது பகுதி (தில்லானா உட்பட)பதினெட்டுக் கவிதைகளை உள்ளடக்கியது. ஈழ, புலம்பெயர், தமிழகப் புதுக்கவிதைகளுடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நோர்வீஜிய, பாலஸ்தீன மற்றும் பாரசீகக் கவிதைகளும் இவற்றுள் இருந்தன. மகாகவியின் ‘ஊரெல்லாம் கூடி’ (‘தேரும் திங்களும்’), வில்வரத்தினத்தின் ‘புதுயுகச் சங்கொலி’, இளவாலை விஜயேந்திரனின் ‘அப்பா பிள்ளை பேசிக்கொண்டது’, கவிதாலட்சுமியின் ‘உள்ளத்தணல்’ மற்றும் ‘பெண்’, மேத்தாவின் ‘தந்தைக்கு ஒரு தாலாட்டு’, புதுவை இரத்தினதுரையின் ‘யாரோடு பேச’, பிரமிளின் ‘செவ்வானம்’, பாரதியின் ‘ஓடி விளையாடு பாப்பா’, ஊர்வசியின் காத்திருப்பு எதற்கு’, வெண்ணிலாவின் ‘யார் தேவர் யார் அசுரர்’, ஆத்மநாமின் ‘என்னை அழித்தாலும்’, இன்குலாப்பின் ‘மனிதம் என்றொரு பாடல்’, இவற்றுடன் ஹென்றிக் இப்சனின் ‘எனது நட்சத்திரத்திற்கு’, பாலஸ்தீனக் கவிஞர் தாவ்ஃபிக் சையத்தின் கவிதை (M. A. நுஃமானின் மொழிபெயர்ப்பு), பாரசீகக் கவிஞர் ரூமியின் கவிதைகள் (ரூபன் சிவராஜாவின் மொழிபெயர்ப்பு)எல்லாமே இசையுடன் இணைந்த கலாசாதனா கலைக்கூடத்தின் மாணவிகளின் நடனத்தால் புதுமெருகு பெற்றன.

இந்தக் கவிதைகள் பல்வேறு உணர்வுகளையும் செய்திகளையும் தருவன. இவற்றின் உள்ளடக்கங்கள் இயற்கை, சமூக ஒடுக்குமுறை, சாதிய எதிர்ப்பு, விடுதலை, போராட்டம், பெண்ணுரிமை, காதல், மனித நேயம், துணிவு, தனிமை,  எனப் பல அம்சங்களைக் கொண்டன. இத்தகைய கருப்பொருட்களைக் கொண்ட புதுக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருப்பது வரவேற்கப்படவேண்டியது. இவைதரும் செய்திகளை அழகியல்பூர்வமாக வடிவமைக்க பரதநாட்டிய அசைவுகளைப் பயன்படுத்த முடியுமமென்பதையும் செய்து காட்டியிருக்கின்றனர் கவிதா லட்சுமியும் அவரது குழுவினரும். எனக்குத் தெரிந்தவரை புதுக்கவிதையை நடனமாக வடிவமைப்பது ஒரு புதிய பரிசோதனை. கலைவடிவத்திற்கும் அது உள்ளடக்கும் பேசுபொருளுக்குமிடையிலான உறவு பற்றிக் கலாசாதனா கலைக்கூடம் சொல்வது நமது கவனத்தை ஈர்க்கிறது:

‘ஒரு கலைவடிவத்தினூடாக நாம் கொண்டுவரும் பேசுபொருள் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. காலத்துக்குக் காலம் வெவ்வேறுவகையில் அவை வெளிப்படலாம்….பரதக்கலையின் பேசுபொருளை அகலப்படுத்தி, மனித மனத்தின் ஆத்மார்த்தமான எல்லாத் தேடல்களுமே உயர்ந்த தன்மை கொண்டவையெனும் பரிமாணத்திற்கு நாட்டியக்கலையில் பேசுபொருளை எடுத்துச் செல்லவேண்டுமென்ற நோக்குடனேயே இந்த நிகழ்வை வடிவமைத்துள்ளோம்.’ (நிகழ்வின் அறிவிப்புத் தாளிலிருந்து)

முன்னோக்கிய பார்வை. துணிகரமான பரிசோதனை. இது ஒரு விவாதத்திற்கான அழைப்புபோலும் ஒலிக்கிறது. தொன்மை மிக்கது மாற்றமுடியாதது எனக்கருதப்படும் கலைவடிவங்கள் காலப்போக்கில் மாற்றத்திற்குள்ளாவதன் மூலமே முற்றாக மறையாமல் தொடர்கின்றன என்பதே வரலாறு தரும் பாடம். இந்த விவாதத்திற்குரிய விடயத்தைத் தொடர்வது இந்தக் குறிப்பின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது.

அந்த மாலையின் மகுடம்போலான நிகழ்ச்சியான ‘ஞானரதம்’ பற்றிச் சிலவார்த்தைகள். இது கனதியான பொறுப்புக்களைக் கொண்ட ஒரு திட்டத்தின் நிறைவேற்றம் எனக் கூறலாம். பாரதியின் ஞானரதத்தை நடன நாடகமாகப் பிரதியாக்குவதிலிருந்து அதற்குரிய இசையமைப்பு, நடனங்களின் தேர்வு, நடிகர்களின் பயிற்சி, மேடையமைப்பு எல்லாவற்றையுமே சிறப்பாக ஒருங்கிணைத்து அரங்கேற்றியிருப்பது ஒரு பெருமுயற்சியின் வெற்றி என்பது தெளிவு. இந்த நடன நாடகத்தில் ஐம்பது பேர் மேடையில் தோன்றினர். இவர்களில் நாற்பத்தியேழுபேர் கலாசாதனா கலைக்கூடத்தின் மாணவிகள். மற்ற மூவரில் இருவர் பாரதியாகவும் ஒருவர் மன்மதனாகவும் நடித்தனர்.

நடன நாடகப் பிரதியாக்கத்தில் பாரதியின்  இருபத்தைந்து கவிதைகளிலிருந்து பொருத்தமான பலவரிகளை உரிய இடங்களில் இணைத்து ஞானரதத்தைச் செழுமையாக மீளுருவாக்கியுள்ளார்கள். இதனால் இந்த நடன நாடகம் பாரதியின்சமூக விமர்சனப் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை அவரின் பல்பரிமாண ஆளுமையையும் அதன் முரண்பாடுகளையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. பலவகையில் தனது காலத்திற்கும் அப்பால் முன்னேறிய அறிவையும் புரட்சிகர சமூகப் பார்வையையும் கொண்டிருந்த பாரதி மறுபுறம் ஒரு ஆழ்ந்த தெய்வபக்தனாக வேதத்தில் ஈடுபாடுள்ள ஆத்மீகவாதியாகவுமிருந்தான். இந்த முரண்பாட்டினை ஆராய்ந்த சிலர் பாரதியின் பார்ப்பனிய எதிர்ப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். முன்னைய காலத்தில் பார்ப்பனர் வேதவிதிப்படி ஒழுகியதை வியந்தும் பின்னாளில் அவர்களின் சீரழிவை வன்மையாகத் தாக்கியும் எழுதியுள்ளான். இதை ஞானரதத்திலும் சந்திக்கிறோம். அத்துடன் இன்னொரு முரண்பாட்டையும் காண்கிறோம். அதுதான் தர்மத்தை அறிந்தபின்னும் போகத்திலிருந்து விடுபடமுடியாத மனநிலை. நீண்ட புனைகதையான ஞானரதத்தை அறிந்திராத வாசகருக்காக மிகக்குறுகிய சுருக்கமொன்றைக் கீழே தருகிறேன்.

மிகுந்த செல்வமில்லாமை உலகின் இழிவான இன்பங்களை மட்டுமல்ல உயர்ந்த இன்பங்களைக் கூடப் பெறுவதற்குத் தடையாயிருக்கிறதே என வருந்தும் பாரதியின் மனம் அவனுக்கு ‘ஈசன் ஞானம் என்பதோர் தெய்வீகரதத்தைக் கொடுத்திருக்கின்றார் அது விரும்பிய திசைக்கெல்லாம் போய்விரும்பிய காட்சிகளையெல்லாம் பார்த்துவரக்கூடிய வல்லமை உடையது’ என ஆலோசனை வழங்குகிறது. கனவு மெய்ப்படவேண்டும், வானகம் இங்கு தென்படவேண்டுமென மண்ணுலகில் மாற்றத்தை வேண்டிய பாரதி ஞானரதத்தில் உபசாந்திலோகம், கந்தர்வலோகம், சத்தியலோகம், தர்மலோகம் என்ற நான்கு கற்பனை உலகங்களுக்குப் பயணத்தை மேற்கொள்கிறான். கதையில் வரும் மண்ணுலகத்துடன் ஐந்து உலகங்கள். அவனுக்கு ‘மனம் என்ற மோகினியிடத்தில் காதல் அதிகம்’ என்பதால் உபசாந்தி லோகத்திற்கு அநுமதி கிடைக்கவில்லை. ‘மனம் எனும் பொய்ப்பொருளை’ விட்டுவிட்டால் மட்டுமே அந்த லோகத்திற்குள் பிரவேசிக்க முடியும். உள்ளே சென்றால் வெளியேவரமுடியாது. பாரதி அதற்குத் தயாரில்லை.

மறுநாள் ‘துன்பக்கலப்பற்ற இன்பங்கள் நிறைந்திருக்கும் உலகத்திற்குப் போய்வருவோமே’ என அவன் மனம் சொல்வதற்கிணங்க ஞானரதத்தில் கந்தர்வலோகம் செல்கிறான். அங்கே பர்வதகுமாரி என்ற கந்தர்வ அழகியைச் சந்திக்கிறான். அவனது மண்ணுலக சமூகத்தினரால் மதிக்கப்பெறும் ஆசாரதர்மங்களுக்கு விரோதமானதெனக் கருதப்படும் காட்சிகளைக் காண்கிறான் போகங்களை அனுபவிக்கிறான். அவளுடன் வானத்தில் பறக்கிறான். மது அருந்துகிறான். அங்கு எல்லாமே அழகென லயிக்கிறான். எல்லாம் இன்பமயம். ஆனால் ஒருநாள் தனியேஇருந்தபடி இன்பக் களஞ்சியமாகிய கந்தர்வலோகம்கூடத் தன்மனதிற்குத் திருப்திதரவில்லையே என உணர்கிறான். அனுதினமும் ஒன்றையே திரும்பச் செய்வதில் திருப்தியற்ற நிலையில் மறுநாள் சத்தியலோகத்திற்கு ஞனரதத்தில் பயணிக்கிறான். மாசற்ற ஒளிமிகுந்த அங்கே வித்தியாசமான அநுபவம். உண்மையை தேடத் தனியே துணையின்றிப்போகவேண்டுமென உணர்கிறான். சத்திய சொரூபமான பிரமனை ஒரு கிரணத்தைப் பற்றியபடி அணுஅணுவாக நகர்ந்தே நெருங்கமுடியும் எனும் தொனியைக் கேட்டவன் அதில் நாட்டமின்றிச் சத்தியலோகத்தைச் சுற்றிப் பார்க்கிறான். உண்மைக்குப்பல வர்ணங்களுண்டென அறிகிறான். சத்தியலோகத்து அநுபவம் அவனுக்குக் கந்தர்வலோகத்தின் சுகங்களை நினைவூட்டுகிறது. அங்கு போகவேண்டும் போலிருக்கிறது. அப்போது மனத்தின்மீது ஆத்திரமடைந்து அதை கொல்ல முயற்சிக்கிறான்.  மீண்டும் ஒரு தொனி சொல்கிறது. ‘மனதைக் கொல்லமுடியாது….வேடிக்கை பார்க்கவந்தவனுக்கு சத்தியம் புலப்படாது. கந்தர்வ நாட்டிலே போய் இன்பம் கண்டது போல் இங்கும் உண்மையைக் கண்டுவிடாலமென்ற பேதமையெண்ணத்தை விட்டுவிடு.’ எனக்கூறிய தொனி அவனை ஒருமுறை தர்மலோகத்திற்குப் போய் அங்குள்ள அநுபவங்களை அறிந்துவரச் சொல்கிறது.

இந்தக் கட்டத்தில் கனவு கலைகிறது. மண்ணுலக நிசவாழ்வின் ஏழ்மையை, குடும்பப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். மனைவியுடன் வாக்குவாதம். மண்ணுலகத்தின்மீது ஆத்திரமடைகிறான். இதில் மனிதர் வசிக்கலாமா? இது துன்பகளம், சிறுமைக் களஞ்சியம், இது நரகம் என்று திட்டித்தீர்க்கிறான். சில நாட்களின்பின் மீண்டும் ஞானரதமேறி தர்மலோகம் செல்கிறான். அங்கே வழிகாட்டியாக வந்த தபோமுனியிடம் தான் பிராமண தர்மத்தையும் சத்திரிய தர்மத்தையும் அறிய விரும்புவதாகக் கூறுகிறான். வழிகாட்டி பாரதியை யமசன்னிதானத்திற்கும் பின்னர் கண்வமுனியிடமும் அழைத்துச்செல்கிறார். கண்வமுனி வர்ணாச்சிர தர்மம் பற்றிய பாரதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார். பிறக்கும்போது மனிதர்களெல்லாம் மிருகங்களாகவே பிறக்கிறார்கள். வர்ணம் பிறப்பால் வருவதில்லை. பயிற்சியினாலும் குணகர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகின்றார்கள். சகல தேசங்களிலும் வர்ணாச்சிரம தர்மம் உண்டு ஆனால் பாரதத்தில் அது சீர்கெட்டுப்போயிருக்கிறதால் அங்கு வறுமை, நோய், அடிமைத்தனம் போன்ற இழிவுகளில் மனிதர் விழுந்துள்ளனர். பிராமண வர்ணத்தினதும் சத்திரிய வர்ணங்களின் தர்மங்கள் பற்றியும் மற்றைய வர்ணங்களான வைசிய, சூத்திர வர்ணங்களின் தர்மங்கள் பற்றியும் கண்வமுனி போதிக்கிறார். அந்தப் போதனையை ‘அடங்காத தாகத்துடன்’ கேட்டுப் பரவசமடைகிறான் பாரதி. ஆனால் பர்வதகுமாரியின் நினைவு மீண்டும் வருகிறது. அவள் வருகிறாள். அவளுடன் போகப் பரவசத்தில் இருக்கும் கணத்தில் ‘படேர்’ என்ற ஒரு சத்தத்தினால் மூர்ச்சை போட்டு விழுந்தவன் கண்விழித்தபோது மீண்டும் பழையபடி தன் வீட்டில் இருப்பதை உணர்ந்தவன் ‘தர்மத்தை விட்டேனே’ எனக்கண்ணீர் சிந்துகிறான். கந்தர்வலோகத்தில் அநுபவித்த போகத்தை மனதால் விட்டுவிடமுடியவில்லை. வர்ணாச்சிரம தர்மத்தில் பாரதி காட்டிய ஈடுபாடு நான் ஏற்கனவே குறிப்பிட்ட முரண்பாட்டையும் அது தொடர்பான சர்ச்சையையும் நினைவூட்டுகிறது. (இந்த விவாதத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் தொடர்வோம்.)

பல கற்பனார்த்தக் காட்சிகளை, நிகழ்வுகளை, பலவித உணர்வுகளின் வெளிப்படுத்தல்களை, முரண்பாடுகளை,வர்ணணைகளை, கதையாடல்களைக் கொண்ட இந்தப் புனைகதையை ஒரு நடனநாடகமாகச் சமகாலத்துடனும் தொடர்புபடுத்தும் வகையில் மீளுருவாக்குவது ஒரு கனதியான பொறுப்புக்களைத் கொண்ட திட்டமெனெ நான் ஏற்கனவே கூறியது இப்போ மேலும் தெளிவாகியிருக்குமெனெ நம்புகிறேன்.நடன நாடகத்தில் சேர்க்கப்பட்ட பாரதியின் பலவகையான கவிதைத் துண்டுகளில் ஒரு சிலவற்றின் வரிகளை இங்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். பாரதியின் கவித்துவமிக்க பகற்கனவுகாணும் பழக்கத்தை காட்டும் ஒரு கவிதையிலிருந்து:

‘மாலைப் பொழுதில் ஒரு மேடைமிசையே

வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்

……;

நேரங்கழிவதிலும் நினைப்பின்றியே

சாலப்பல நற்பகற்கனவில்

தன்னை மறந்தலயந்தனில் இருந்தேன்’.

கந்தர்வலோகத்தில் பாரதி பர்வதகுமாரியைக் கண்டு மயங்கியபோது:

‘சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா!

சூரிய சந்திரரோ?

வட்டக் கரியவிழி கண்ணம்மா!

வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்;

நட்டநடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி!…’

சமூகநீதி பற்றி:

‘சூத்திரனுக்கொரு நீதி – தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

சாத்திரம் சொல்லிடுமாயின் – அது

சாத்திரம் அன்று சரியென்று கண்டோம்’

இப்படியாகப் பாரதியின் பல கவிதைகளை நினைவூட்டும் வரிகள்  நடனநாடகத்திற்குப் பொலிவைக் கொடுக்கின்றன. ஐம்பது நடிகர்கள் சிறப்பாகப் பங்களித்த இந்த நிகழ்ச்சியில் ஒரு சிலரைப் பற்றி மட்டும் குறிப்பிடுவது சரியா என்ற கேள்வி எழுகிறது. ஆயினும் ஞானரதத்தின் சில பாத்திரங்கள் பற்றிச் சொல்லாமல் இருக்கமுடியாது. பாரதியாக நடித்த இருவர், உபசாந்திலோகத்தின் வாயிற்காவலனாக நடித்தவர், பர்வதகுமாரியாக நடித்தவர் மற்றும் முனிவர்களாக நடித்தவர்கள் தமது பாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்தனர். பாரதியாக நடித்தவர்களில் ஒருவர் நோர்வேயில் வாழும் சிவதாஸ் மாஸ்டர் மற்றவர் இலங்கையின் பொல்ககாவெலவைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் ரஷான் சம்சூல் எனும் இளைஞர். பர்வதகுமாரியாக வந்தவரின் நடனமும் முகபாவங்களும், அவரும் பாரதியாக நடித்த சம்சூலும் இணைந்து நடனமாடிய காட்சியும் மிக நேர்த்தியானவை என நிகழ்ச்சி முடிவில் பலர் சொல்லக்கேட்டேன். எனது அபிப்பிராயமும் அதுவே. அரங்க  அமைப்பு, ஆடை வடிவமைப்பு, மற்றும் ஒலி, ஒளி தொழில்நுட்பமும் அவற்றைக் கலைத்துவமாகக் கையாண்டவிதமும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு இன்றியமையாத பங்கினை வகித்துள்ளன.

கலாசாதனா கலைக்கூடத்தின் அரங்கம் 2018 நிகழ்வில் நாம் மேடையில் கண்டவர்களின் உழைப்புக்கும் பங்காற்றலுக்கும் பின்னுள்ள பலரின் பங்களிப்பை மறந்துவிடலாகாது. இந்த வகையில் கவிதா லட்சுமியின் செயற்பாட்டிற்கு உதவிய கலைஞர்களின் பங்களிப்பு மற்றும் மாணவிகளின் பெற்றோர்களின் ஒத்துழைப்பு முக்கியமானவை. மண்டபத்தை நிறைத்திருந்தோரின் உற்சாகமான வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்விற்காகக் கவிதா இரண்டு வருடங்கள் உழைத்ததாக அறிகிறேன். இவ்வாறான பிரயாசம் ஒரேயொரு மேடையேற்றத்துடன் நின்றுவிடக்கூடாது என்பதே எனதும் நிகழ்வைப் பார்த்து இரசித்த பலரினதும் ஆதங்கம்.

 

 

One thought on “அழகும் அர்த்தங்களும் ததும்பிய அசையும் கவிதைகளும் ஞானரதம் நடன நாடகமும் – நோர்வே கலாசாதனா கலைக்கூடம் வழங்கிய அரங்கம் 2018”

  1. நிகழ்வினை நேரில் பார்ப்பது போன்றமைந்த தங்கள் ஆக்கங்கண்டு அகமகிழ்ந்தேன்.
    அன்றையநாள் அரங்குக்கு வராதவர்களுக்கும் நிகழ்வின் ஒளிப்பதிவை அல்லது வேறோர் மேடையில்
    பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிடும்வகை அமைந்திருக்கிறது தங்கள் எழுத்து. தொடர்ந்து எழுதுங்கள்.. .. நிகழ்வுகளைப்பற்றி மட்டுமல்ல, புதிய ஆக்கங்களையும் ஆக்கிடும் வல்லமை தங்களுக்குமுண்டு என்பதையும் மறந்துவிடாதீர்கள்!
    அன்பன்
    சி.உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *