சமுத்திரன்
மேலேகுறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் பொறுப்புரிமையளிக்கப்பட்டு துறைசார் அறிதிறமும் போருக்குப் பின்னைய வடமாகாண நிலைமைகள் பற்றிய பரிச்சயமும் கொண்ட ஏழுபேர்களைக் கொண்ட குழுவினால் வரையப்பட்டது. போருக்குப் பின்னைய வடமாகாணத்தின் அபிவிருத்தி பற்றிய ஒரு திறந்த கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை இந்த ஆய்வறிக்கை கொடுக்கிறது. போர் முடிவுக்குவந்தபின்னர் அதனால் பாதிக்கப்பட்ட சமூகத்தினால் மிகப்பெரிய ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புக்களுடனும் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது மாகாண சபை (ஒக்டோபர் 2103 – செப்டெம்பர் 2018)அந்த மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம் எதிர்நோக்கும் சவால்களுக்குக் கூட்டுச் செயற்பாட்டுக்கூடாக முகம்கொடுக்க உதவும் ஒரு அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குவது பயனற்றது எனக் கருதியதுபோல் தெரிகிறது. இப்போது போர் முடிவுக்கு வந்து பத்துவருடங்களின்பின், மாகாண சபையின் ஐந்தாண்டுக் கால எல்லை முடிவுற்ற சிறுகாலத்தில், மத்திய அரச நிறுவனமொன்றின் பொறுப்புரிமையளிப்பில் கிடைத்த ஒரு ஆய்வறிக்கை மாகாணத்தின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலுக்கும் விவாதத்திற்கும் வழிதிறந்துள்ளது.
போருக்கு முன்பும் அதற்குப் பின்னரும் வடமாகாணத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் பற்றிய பொதுப்படையான பார்வையுடன் ஆரம்பிக்கும் இந்த ஆய்வு மாகாண அபிவிருத்தித் திட்டவரைவொன்றின் உருவாக்கத்திற்கு உதவும் நோக்குடன் ஒரு கட்டமைப்பினை முன்வைக்கிறது. நீண்டகாலப் போர் ஏற்படுத்திய அழிவு, இடம்பெயர்வு மற்றும் சனத்தொகை குறைப்பு ஆகியவற்றையும் அவற்றின் விளைவுகளையும் அழுத்திக் கூறுவதுடன் மாகாணத்தின் அபிவிருத்தி எதிர்நோக்கும் சமூக, பொருளாதார சவால்கள் சிலவற்றையும் இனங்காண்கிறது. அரசாங்கம் இந்தச் சவால்களை கணக்கிலெடுக்கத் தவறியதனால் உத்தியோகபூர்வமான கொள்கை திருப்திகரமான விளைபயன்களைத் தரவில்லை எனும் கருத்தினை முன்வைக்கிறது. பெருமப்பொருளாதாரப் (macroeconomic)பார்வையற்றநிலையில் அரசாங்கத்தின் அணுகுமுறை மாற்றுவினை (reactive) சார்ந்ததாக, தொடர்பறுந்த செயற்திட்டங்கள் அடிப்படையிலானதாகவே இருந்ததெனக் கூறுகிறது. போர் முடிந்தவுடன் விருத்திசெய்யப்பட்ட பாதைத்தொடர்பின் விளைவாக முன்னேற்றமடைந்த உற்பத்தியைக் கொண்ட பரந்த சந்தையுடன் இணைக்கப்பட்டதால் உள்ளூர் உற்பத்தி ஒரு சந்தை அதிர்ச்சிக்குள்ளாகியது. போரின் தாக்கங்களுக்கு ஆளான குடும்பங்களின் பாதிப்புக்களைக் கணக்கிலெடுக்காது நாட்டின் சந்தையுடன் ஏற்படுத்தப்பட்ட திடீர் ஒருங்கிணைப்பும் கடன்கொடுப்பனவின் வளர்ச்சியும் பரந்தளவில் கடன்பிரச்சனையின் ஆழமாக்கலுக்கும் கிராமிய பொருளாதாரச் சிக்கலுக்கும் வழிகோலின என எடுத்துக்கூறுகிறது.
போருக்குப்பின் வடக்கில் மக்கள் நலனுக்குப் பாதகமான நிதிமயமாக்கல் துரிதமாக இடம்பெற்றது என்பதை மறுக்கமுடியாது. இன்றைய நவதாராள உலகில் வறியவர்களைப் பொறுத்தவரையில் கடன் என்பது சமூகப் பாதுகாப்புவலையின் ஆபத்துமிக்க பிரதியீடாகும் (அதாவது நவதாராளப் பொருளாதாரக் கொள்கையின் விளைவான சமூகப்பாதுகாப்பற்ற நிலைமைகளில்). ஏனெனில் அது வறியோரை மேலும் நலிவுக்குள்ளாக்கும் கடன்பொறிக்குள் இட்டுச் செல்கிறது, இந்த ஆபத்துப் பலரைத் தற்கொலைக்குத் தள்ளுமளவிற்குப் பயங்கரமானது என்பதையும் கண்டுள்ளோம்.
புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட முதலீடுகள் வரவில்லை. அரசாங்கம் அறிவித்த வரிவிலக்கல் ஊக்கியால் மட்டும் போரால் நிர்மூலமாக்கப்பட்ட ஒரு பிரதேசத்திற்கு முதலீடுகளைக் கவரமுடியாது என்பது தெளிவாகியது. நிறுவனரீதியான மற்றும் மனிதவளரீதியான ஆற்றல்களின் குறைபாடுகள் பற்றிய புரிந்துணர்வில்லாமையுடன் போருக்குப்பின்னான வடக்கின் அரசியல் நிலைமைகள் பற்றிய சரியான கிரகிப்பும் அரசாங்கத்திடமிருக்கவில்லை.
உண்மையில் அரசாங்கத்தின் அணுகுமுறை மேலிருந்து கீழான, இராணுவமயமாக்கப்பட்ட, நிர்வாகரீதியில் மத்தியமயப்படுத்தப்பட்டதாகவிருந்தது. பாதுகாப்புமயமாக்கலும் பாதைத்தொடர்பும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்குடியமர்வு மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றின் முன்னுரிமைகளைப் பின்தள்ளிவிட்டன. பாதைத்தொடர்புக்கான ஏறக்குறைய முழு முதலீடும் A9 மற்றும் சில பிரதான வீதிகளின் மீள்விருத்திக்கே சென்றடைந்தது. உள்ளூர் உட்கட்டுமான அபிவிருத்தி கவனிக்கப்படவில்லை. சில விமர்சகர்கள் குறிப்பிட்டதுபோல் அரசாங்கம் மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத்தொடர்ந்தது. இந்தச் சூழலில் அரசாங்கம் தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் தீர்வினைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக ‘அபிவிருத்தி’யைப் பயன்படுத்த முயற்சித்தது. ஆதாரபூர்வமான உண்மையென்னவெனில் வட மாகாணத்தில் மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை இயலுமைப்படுத்தும் சூழல் இருக்கவில்லை.
மேலும் இந்த ஆய்வறிக்கையின் பேசுபொருட்களை நோக்குமிடத்து நாட்டின் பெருமப் பொருளாதாரம் (macroeconomy)பற்றிய ஒரு விமர்சனரீதியான பார்வையை அது முன்வைத்திருக்கவேண்டும் ஆனால் அதைச்செய்யத் தவறிவிட்டது. இது ஒரு முக்கியமான குறைபாடு. இதனால் அறிக்கையின் போருக்குப்பின்னைய அபிவிருத்தி பற்றிய விமர்சனம் முழுமையற்றதாக இருக்கிறது. இலங்கையின் கீழ்நடுத்தர வருமான தகுநிலைக்கான எழுச்சி பொருள்ரீதியான ஏற்றத்தாழ்வின் வளர்ச்சியுடனும் சமூகபாதுகாப்பு உரித்துடைமைகளின் இழப்புடனும் மட்டுமன்றி சனநாயக சுதந்திரங்களை நசுக்கும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுடனும் இணைந்ததென்பது பொதுவாக அறியப்பட்டதே. போரின் முடிவுக்குப்பின்னைய ஆரம்ப வருடங்களில் இடம்பெற்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உயர்ந்த வளர்ச்சி வீதம் உட்கட்டுமான முதலீட்டினால் முன்னெடுக்கப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டிற்குபின் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அப்போதிருந்தே நாட்டின் பொருளாதாரம் பிரச்சனைக்குள்ளாகிவருகிறது. இன்றைய அரசாங்கம் ஒரு நவதாராள நிகழ்ச்சிநிரலைப் பற்றியவண்ணம் திசையறியாது தடுமாறிக் கொண்டிருப்பதாகவே படுகிறது. நாட்டின் இன்றைய பெருமப்பொருளாதார நிலைமை பற்றி இந்த ஆய்வறிக்கையின் மௌனம் சற்றுப் புதிரூட்டுவதாகவிருக்கிறது.
போருக்குப் பின்னைய அபிவிருத்திப் பாதை பற்றிய முற்றுபெறாத ஒரு விமர்சனத்தினது அடிப்படையிலும் ‘நிலைபெறு அபிவிருத்தி’ (‘sustainable development’) பற்றிய ஒரு தொலைநோக்கின் ஆகர்சிப்பிலும் வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒன்றோடொன்று தொடர்புள்ள ‘உற்பத்தி’, ‘அபிவிருத்திக்கான சமூக அடிப்படைகள்’, ‘இயலுமைப் படுத்தும் சூழல்’ எனப்படும் மூன்று தூண்களைக் கொண்ட ஒரு எண்ணக்கருரீதியான கட்டமைப்பினை ஆய்வறிக்கை முன்வைக்கிறது. ‘உற்பத்தி’ தூணுடன் தொடர்பட்டிருக்கும் மற்றைய இரு தூண்கள் பலமுக்கிய சமூகரீதியான, நிறுவனரீதியான, தொழில்நுட்பவியல் தொடர்பான அம்சங்களை உள்ளடக்குகின்றன. சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு ஆலைத்தொழில்கள் ஆகியவற்றினை அடித்தளமாகக் கொண்ட பங்கீடு மற்றும் தாக்குப்பிடிக்கவல்ல நிலையான வளர்ச்சி ஆகிய நோக்கங்களை அடைய உதவும் மூலோபாயத்தின் தேவையை ஆய்வறிக்கை முன்னிலைப்படுத்துகிறது. இது அபிவிருத்திக்கு ஒரு நியமரீதியான (normative)அணுகுமுறைக்கான முன்மொழிவுரை எனலாம்.
பொருளாதார வளர்ச்சி ஒரு இறுதி இலக்கல்ல அது நிலைபெறும் மனித மேம்பாட்டிற்கும் செழிப்புக்கும் வேண்டிய அபிவிருத்திப் போக்கிற்கான ஒரு வழிமுறையே. அபிவிருத்தியின் வேகம் மிதமானதாக இருக்கலாம் ஆனால் அதையும்விட முக்கியமானதென்னவெனில் அது நகரும் பாதை நலிவடைந்தோரை உள்வாங்குவதாகவும் அவர்களின் ஆற்றலுடைமைகளைத் தொடர்ச்சியாக விரிவாக்கவல்ல இயக்கப்பாடுள்ளதாகவும் இருக்கவேண்டும்.
ஆய்வறிக்கையின் கட்டமைப்பை இத்தகைய ஒரு விமர்சன ஒளியில் நோக்குமிடத்து அதன் மூன்று தூண்களின் ஒருங்கிணைப்பின் உண்மையான சோதனை கொள்கை வகுப்பில், திட்டமிடலில், அமுலாக்கலில் அது பயன்படுத்தபபடுவதிலேயே தங்கியுள்ளது. சுதந்திரமும் தகைமையும் (அதாவது தொலைநோக்கும் ஆற்றலும்) படைத்த தலைமை மற்றும் அர்த்தமுள்ள மக்கள் பங்குபற்றல் ஆகியன இல்லாதவிடத்து இந்தக் கட்டமைப்பு சுலபமாக ஒரு பூரணமான தொழில்நுட்பவல்லுன (technocratic) முறைமைக்குள் நழுவிப்போய்விடும்.இதுநடக்கும் பட்சத்தில் சமூக, அரசியல் பிரச்சனைகள் பொருளாதார வினைத்திறனின் பெயரால் வல்லுனர்களால் – விசேடமாக நவதாராள அறிவீட்டவியல் சார்ந்தோரால் – தொழில்நுட்பரீதியான பிரச்சனைகளாகத் தரம்குறைக்கப்படும். உண்மையில் என்ன நடக்கும் என்பது தேசிய மட்டத்திலான மாற்றங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து நல்விளைவுகளைத் தரவல்ல பங்கினை வகிக்கக்கூடிய ஆற்றல்மிகுந்த மாகாணசபை போன்றவற்றில் தங்கியுள்ளது.
வட மாகாணத்தில் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் தன்மைபற்றியும் வங்கிகளின் வகிபாகம் பற்றியும் நமது கவனத்தை ஈர்க்கும் கருத்துக்களை ஆய்வறிக்கையில் காணக்கிடக்கிறது. இவற்றைப் பார்க்கும்போது வடமாகாண வங்கிகளிலிருக்கும் ‘சேமிப்பு உபரி’ உற்பத்திபூர்வமான முதலீட்டுக்கு பயன்படுவதற்கான வழிவகைகள் பற்றி ஆராயவேண்டிய தேவை எழுகிறது. இத்தகைய பயன்பாட்டிற்கான தடைகள் என்ன அவற்றை எப்படி அகற்றலாம் போன்ற கேள்விகள் எழுகின்றன. மாகாண அபிவிருத்தியில் அரசவுடைமைகளான வங்கிகளின் பங்கு என்ன?இது கொள்கை தொடர்பான ஒரு கேள்வி என்பதில் சந்தேகமில்லை. நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் மாகாண அபிவிருத்தி நிதியம் ஒன்றினை நிறுவுவது பற்றிய யோசனையை நடைமுறைப்படுத்துவது பயன்மிக்கது. ஆயினும் இதற்கு இன்னுமொரு கொள்கை மற்றும் நிறுவனரீதியான தேவை ஒன்றும் பூர்த்திசெய்யப்படவேண்டும். அதாவது உற்பத்தியாளர்கள் தொழில் நிறுவனங்களை விருத்திசெய்வதற்குத் தேவையான வளங்களையும், சந்தர்ப்பங்களையும் பெற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு மேல்நோக்கிய சமூக நகர்ச்சிக்கான வாய்ப்புக்கள் கிடைக்கவும் உதவும் சூழல் உருவாக்கப்படவேண்டும்.
நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வழக்கமாக கொள்வனவு செய்வோரினால் உந்தப்படும் பண்டச் சங்கிலியில் மிகவும் அசமத்துவமான உறவின் அடிப்படையில் இணைக்கப்படுகின்றன. இதனால் அந்த நிறுவனங்களின் உற்பத்தியின் பெறுமதியின் பெரும்பங்கினைப் பொருட்களைக் கொள்வனவு செய்து சந்தைப் படுத்துவோரே இலாபமாக கைப்பற்றிக்கொள்கிறார்கள். இந்தத் தொழில்நிறுவனங்கள் கூட்டுறவு அமைப்புக்களுக்கூடாகத் தமது பேரம்பேசும் பலத்தை அணிதிரட்டித் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலைகளைப் பெறக்கூடிய கொள்கைரீதியான ஆதரவை அரசாங்கம் வழங்கவேண்டும். சந்தைப்படுத்தலுக்குச் சமத்துவமான அடிப்படையை உருவாக்குவது இந்த நிறுவனங்களின் பொருளாதார செயல்நிறைவாற்றலுக்கும் எதிர்கால விருத்திக்கும் அவசியம். வடக்கில் விவசாயம், கடற்றொழில், கைத்தொழில், ஆலை உற்பத்தி போன்றவை பற்றியே இங்கு சிந்திக்கிறோம். நலிவுற்றோரின் வாழ்வாதார மீள்விருத்திக்கும் மனித மேம்பாட்டுக்கும் உதவும் நன்கொடை, மானியம், கடன் போன்றவைபற்றி ஆய்வுக்குழு ஆராயத்தவறிவிட்டது. இந்த யோசனை போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டுமெனும் நிலைமாற்று நீதியின் ஒரு அம்சமென்பதை நினைவுகொள்ளல்தகும்.
ஆய்வறிக்கையில் தொழிலாளர் தொடர்பாக இனங்காணப்பட்டுள்ள பிரச்சனைகள் முக்கியமானவை. இளைஞர், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னைநாள் போராளிகள், வலுவிழந்தோர் போன்ற பிரிவினர்களின் பிரச்சனைகள்மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேலைபெறக்கூடிய தகைமை பெறுதல் மற்றும் சுயசார்பினைப் பலமூட்டல் போன்றவற்றிற்கான உதவிவழங்கலைப் பொறுத்தவரை இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய விசேடமான தேவைகள் உண்டு. இது மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் இணைந்து சிவில் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களின் வளங்களையும் அணிதிரட்டிச் செயற்படவேண்டிய ஒரு விடயமாகப் படுகிறது.
தொழிலாளர்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு தொழிற்சங்கங்களும் மற்றைய தொழிலாளர் நிறுவனங்களும் மீள்கட்டியெழுப்பப்படவேண்டுமென ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் இதுசுலபமான காரியமல்ல. நாட்டின் மற்றைய பகுதிகள்போல் வடமாகாணத்திலும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் முறைசாராத் துறைகளிலேயே தற்காலிகமாக வேலைசெய்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் சமூக, பொருளாதார பாதுகாப்பற்ற மிகமோசமான நிலைமைகளிலேயே தொழிலாற்றுகிறார்கள், வாழுகிறார்கள். இந்த நிலைமைகளில் அவதியுறும் தொழிலாள வர்க்கத்தினரைச் சில எழுத்தாளர்கள் ´Precariat´ – அதாவது ‘இடர்பாட்டுநிலைத் தொழிலாள வர்க்கம்’ – என வகைப்படுத்தியுள்ளார்கள். இந்த விவரணம் இலங்கையின் முறைசாராத் துறைகளில் தொழிலுக்குத் தங்கியிருக்கும் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலைமைகளுக்கும் பொருந்தும். இன்னுமொரு முக்கியமான உண்மை என்னவெனில் இலங்கையில் தொழிற்சங்கமயமாக்கப்பட்ட தொழிலாளரின் வீதாசாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்கிறது. இந்த விடயங்கள் கொள்கைமட்டத்தில் அணுகப்படவேண்டியவை.
தொடரும் புலம்பெயர்வு, தொழிலுக்காக வெளிநாடு செல்லும் போக்குகள் பற்றி ஆழமாக அறிந்து கொள்வது அவசியம். பல காரணங்களால் வடக்கின் தமிழ் சமூகத்தவர் புலம்பெயரும் நடத்தைப்போக்கினை அதிகமாகவே வெளிக்காட்டுகின்றனர். அதுமட்டுமன்றி மனித செயல்திறன் விருத்திக்கு அற்பமாகவே முதலீடுசெய்யும் அரசாங்கம் இலங்கையர் தொழிலுக்காக வெளிநாடு செல்வதை பல வருடங்களாகத் தீவிரமாக ஊக்கிவித்தவண்ணமிருக்கிறது. மறுபக்கம் வேலை வாய்ப்புக்களைத் தோற்றுவிக்காது செயல்திறன் மட்டுமே விருத்திசெய்யப்படுவது தொழிலாளரின் புலம்பெயர்வை மேலும் ஊக்கிவிக்கும். இலங்கையின் கடந்தகாலப் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தகுந்தளவில் வேலைவாய்புக்களைத் தரத் தவறிவிட்டது. பல்வேறு ஆய்வுகளின்படி வேலையில்லாமை, குறைமட்டவேலை (underemployment), கடன்பளு, வளங்கள் கிடையாமை ஆகியனவே தொழில்தேடும் புலம்பெயர்வுக்கான பிரதான காரணிகள். சமீப காலங்களில் வேலைபெறக்கூடிய திறனுள்ள ஆனால் வேலையில்லாதிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். இந்தச் சூழலும் வடமாகாணத்திலும் முழு நாட்டிலும் மாற்றமடைந்து செல்லும் சனத்தொகையியல் நிலைமைகளும் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஒரு ஊழியச்செறிவுரீதியான (labour intensive)அணுகுமுறையைப் பின்பற்றுவதற்குச் சவாலாகின்றன. இதுவும் தேசியக் கொள்கைமட்டத்தில் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.
நிலம் மற்றும் இயற்கை வளங்களைப் பொறுத்தவரை வடமாகாணத்தின் விவசாய மற்றும் கடற்றொழில் சமூகங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புக்கும் மனிதமேம்பாட்டுக்கும் முக்கியமான விளைவுகளைக் கொண்ட சில விடயங்களை ஆய்வறிக்கை கவனிக்கத் தவறிவிட்டது. வன்னியிலும் யாழ் குடாநாட்டிலும் நிலம் மற்றும் நீர் வளங்களின் பங்கீடு மற்றும் நிலைபெறு பயன்பாடு தொடர்பான பிரச்சனைகளுண்டு. நில அபகரிப்பு (சிறியளவிலும் பெரியளவிலும்), நிலமின்மை, நிலவுரிமை தொடர்பாகத் தீர்க்கப்படாத தகராறுகள், ஊரிலே குடியிராதோரின் (பெரும்பாலும் வெளிநாட்டில் வாழ்வோரின்) நிலச்சொத்துக்கள், அரசநிலங்களைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அல்லது புனித பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தி மூடுவதன் மூலம் காடுகளுக்கும், மேய்ச்சல்நிலங்களுக்கும் மக்களுக்கு மரபுரீதியாக இருந்த தொடர்புகளையும் உரிமைகளையும் மறுத்தல், இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள தனியாருக்குச் சொந்தமான கணிசமான நிலப்பரப்புக்கள் போன்றன நன்கறியப்பட்ட பிரச்சனைகள். யாழ்ப்பாணத்தில் வளமான விவசாய நிலங்கள் வீட்டுநிலச் சொத்துக்களாக மாற்றப்படும் போக்குத் தொடர்கிறது. இதுவரை இடம்பெற்றதை மீட்க முடியாமலிருக்கலாம் ஆயினும் எஞ்சியிருக்கும் வளமான விவசாய நிலங்களைக் காக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம். குடாநாட்டின் நிலத்தடி நீரின் குறைதலும் தரச்சிதைவும் இன்னுமொரு பாரிய பிரச்சனையாகும்.
பாக்குநீரிணையில் சிறிய அளவில் கீழ்மட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் வடக்கு மீனவர்கள் இந்தியாவிலிருந்து பெருந்தொகையில் உட்புகும் உயர்சக்திவாய்ந்த பெரும்படகு மீன்பிடியாளரின் செயற்பாடுகளினால் ஒரு சர்வதேச எல்லைத் தகாராறில் மாட்டப்படுகின்றனர். இந்தப் பாரிய அசமத்துவமான போட்டியில் வடக்கு மீனவர்கள் நிரந்தர இழப்பாளர்களாகிவிட்டனர். ஒரு அறிக்கையின்படி 2500க்கு மேற்பட்ட இந்தியப் பெரும்படகுகள் இலங்கை நீர்ப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக்கப்பட்ட மீன்பிடிக் கருவிகளையும் வழிமுறைகளையும் பயன்படுத்துகிறார்கள் என்பதும் அறியப்பட்டதே. இதனால் மீன்வளங்களின் இழப்பு மற்றும் தரச்சிதைவு இடம்பெறும் ஆபத்து மிகவும் அதிகமென்பதை மறுக்கமுடியாது. இந்தப் பிரச்சனை நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளபோதும் நடைமுறைப் படுத்தக்கூடிய ஒரு தீர்வு இதுவரை காணப்படவில்லை. முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இலங்கையின் தெற்கிலிருந்துவரும் மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையே தகராறுகள் தோன்றியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்வாதாரங்களை நிலைபெறுவகையில் மீள்கட்டியெழுப்ப உதவும் விதத்தில் இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும். இவை அதிகாரப்பகிர்வில் அரசநிலத்தின்மீதான (மற்றைய இயற்கை வளங்கள் உட்பட) அந்தஸ்துப் பற்றிய சர்ச்சையுடனும் தொடர்புள்ள பிரச்சனைகள். ஆய்வறிக்கை மாகாணத்தின் விவசாய அபிவிருத்தி தொடர்பாக வீட்டுக்குடும்பத்தின் தாக்குப்பிடிக்கும் ஆற்றல், உணவுப் பாதுகாப்பு (food security),நிலைபெறுசக்தி போன்ற அம்சங்களைச் சிலவகையில் விரிவாகக் கையாண்டுள்ளது. இவை வேண்டியவையே அத்துடன் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களும் பயனுள்ளவை. ஆயினும் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளைத் தவிர்க்கமுடியாது. மேலும் கடற்றொழிலுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறியுள்ளது ஆய்வறிக்கை.
நிலம் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி மேலும் வெளிப்படையான ஒரு விமர்சன நிலைப்பாட்டை எடுப்பது அவசியம். நிலத்தை (அத்துடன் மற்றைய இயற்கை வளங்களையும்)வெறுமனே ஒரு உற்பத்திச் சாதனமாக மட்டுமே கணிப்பது நிலைபெறு அபிவிருத்தி பற்றிய ஒரு ஆழமான பார்வையுடன் ஒத்திசையக் கூடியதல்ல. ஒரு உற்பத்திச் சாதனமென்றவகையில் நிலத்தைத் துண்டாடவும், தனியுடைமையாக்கவும், ஒரு சந்தைப் பொருளாதாரத்தில், பண்டமயமாக்கவும் முடியும். மறுபுறம், பரந்த அர்த்தத்தில் நிலமெனும்போது பரந்துபட்ட முழுச் சூழலையும் அது குறிக்கிறது. அந்த, அதாவது பரந்துபட்ட சூழலெனும், அர்த்தத்தில் நிலம் துண்டாடப்படமுடியாத, பண்டமயமாக்கப்படமுடியாத ஒரு பொதுப் பொருளாகிறது. இந்த முரண்பாடு ‘தனியார்-சமூக’(private-social) ‘செலவு-பயன்’ (cost-benefit) பகுப்பாய்வின் நுண்கணிதத்தின் மையத்திலுள்ளது. நடைமுறையில் தனியாரின் செயற்பாடுகளின் விளைவாகவரும் சகல சமூகரீதியான செலவுகளும் சமூகரீதியான பயன்களும் அளக்கப்படக் கூடியவையல்ல, ஆயினும் இந்த முரண்பாடு பற்றிய ஆழமான புரிந்துணர்வு வளங்களின் மற்றும் சூழலின் நிலைபெறு ஆட்சிமைக்கு அடிப்படையானது. உள்ளூர் சமூகங்களை அந்நியப்படுத்தி அரச நிலங்களை ‘காப்பு’ அல்லது ‘புனித’ இடப்பரப்புக்களாக மூடுவது நிலைபெறு அணுகுமுறைக்கு உகந்த வழிமுறையல்ல. அது வளங்கள் தொடர்பான நிரந்தர முரண்பாடுகளுக்கே வழிவகுக்கும். உல்லாசத்துறை விருத்தி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற இடம்பெறும் கடற்கரையோர வளங்களின் தனியுடைமையாக்கலினதும் மூடலினதும் சமூக மற்றும் சூழல்ரீதியான செலவுகள் பற்றிய முழுமையான மதிப்பீடுகளும் இனிமேல்தான் மேற்கொள்ளப்படவேண்டும். நிலைபெறு அபிவிருத்திக்காக வாதிடுவோர் இணை-பரிணாமப்போக்குச் (co-evolutionary) சிந்தனையால் ஒளியூட்டப்படும் ஒரு அணுகுமுறையைப் பயன்படுத்துவது பற்றிச் சிந்திப்பது பொருத்தமானது. சமூகம்-இயற்கை உறவுகளை அறியவும் வெப்பநிலை மாற்றம் மற்றும் இயற்கை அழிவுகள் பொன்ற சூழ்நிலைகளில் தாக்குப்பிடிக்கும் ஆற்றலைக் கட்டியெழுப்பும் மற்றும் மாறும் நிலைமைகளுக்கேற்பத் தகவமைக்கும் போக்குகளைப் புரிந்து கொள்ளவும் அத்தகைய அணுகுமுறை ஒரு வழியாகிறது. அதிகாரப் பகிர்வு மாகாணத்தின் வள மற்றும் சூழலின் ஆட்சிமையில் மக்கள் அமைப்புக்கள் பங்குபற்றும் உரிமையை உள்ளடக்கவேண்டும்.
கவனிக்கப்படவேண்டிய சில விடயங்களையும் பிரச்சனைகளையும் இந்தக் கட்டுரையில் எழுப்பியுள்ளேன். வேறு பல பிரச்சனைகளும் உண்டென்பதில் சந்தேகமில்லை. மக்களுக்கு நெருக்கமாக எடுத்துச் செல்லும்வகையில் கட்டமைப்புப் பற்றி மேலும் விமர்சனரீதியிலான மறுசீராய்வு தேவைபடலாம். மாகாண அபிவிருத்தித் திட்டமொன்றை நோக்கிய செயற்பாட்டில் மக்களின் பங்குபற்றல் முழுமையான முன்தேவை. இந்தச் செயற்பாட்டுப் போக்கினை மாகாணசபை நியாயபூர்வமாக எப்போது பொறுப்பேற்கப்போகிறது எனும் கேள்வி மிகவும் பொருத்தமானதே. அடுத்துவரும் மாகாணசபையிடம் இதைச்செய்யவல்ல தூரநோக்கும் திடசித்தமும் இருக்குமென நம்புவதை மட்டுமே இன்றைய காலகட்டத்தில் ஒருவரால் செய்யமுடியும். இயலுமைப் படுத்தும் சூழலை உருவாக்கி அதற்கும் அப்பால் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வினை நோக்கி நகரும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டா எனும் கேள்வியும் மிகவும் பொருத்தமானதே.
சமுத்திரனின் குறிப்பு: இந்தக் கட்டுரையை 2019 மார்ச் 22 ஆம் திகதி இலங்கைப் பத்திரிகை தினகரன் எனது பெயருடன் பிரசுரித்தது. ஆனால் அதில் (தமிழில் சேந்தன்) எனும் முற்றிலும் தவறான தகவலும் அடைப்புக் குறிக்குள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரை நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை மூலமாகக் கொண்டு என்னாலேயே முற்றிலும் எழுதப்பட்டது என்பதைத் தெரியத்தருகிறேன்.