சமுத்திரன்
‘நான் சாதாரணமான ஒருவன்’ எனும் வார்த்தைகளுடன் ஆரம்பிக்கும் வாமதேவனின் சுயசரிதையை வாசித்துமுடித்தபோது அதற்கு அவரை நன்கறிந்திருக்கும் பேராசிரியர் சந்திரசேகரன் வழங்கியுள்ளஅணிந்துரையில் வரும் பின்வரும் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன. ‘பல்கலைக் கழகத்தில் பயின்ற காலத்தில், குடும்பமட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலரை இழந்து சொல்லொணாத் துயருக்குள் சிக்கிய நிலையில் மனஉறுதியுடனும் ஒருதார்மீக ஆவேசத்துடனும் தனது கல்விசார் புலமைக்கற்கையைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர் வாமதேவன் அவர்கள்.’ உண்மைதான். குடும்பத்தில் ஒரேகணத்தில் ஏற்பட்ட பல இழப்புகளின் அதிர்ச்சியைத் தாங்கிப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இலங்கை, பிரித்தானியா மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்று இலங்கையில் அவர் சேர்ந்திருந்த அரசசேவையில் அதிஉயர்நிலையை அடைந்த மலையகத் தமிழர் ஒருவர் தனது வாழ்வின் கதையை ‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ என மகுடமிடப்பட்டுள்ள நூலில் முடிந்தவரை முழுமையாகப் பதிவிடுகிறார். அரசபணியில் அரைநூற்றாண்டுகால அனுபவம். அமைச்சின் செயலாளர் பதவியில் சிறுபான்மையினரைக் காண்பது அரிதாகிவிட்ட இந்தக் காலத்தில் அந்தப் பதவியை வகித்த மலையகத்தோட்டச் சமுதாயத்தைச் சார்ந்த முதலாவமவன் வாமதேவன். அரசசேவையில் அவரது நீண்ட பயணத்தில் அவர் பிறந்து வளர்ந்த மலையகத் தோட்டச்சமூகம் பற்றிய உணர்வும் அந்த மக்களின் சமூகநலன் மீதான அக்கறையும் கூடவே பயணித்தன எனும் செய்தியும் நூலில் இழையோடுகிறது. வாமதேவன் நிர்வாகி, ஆய்வாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு ஆளுமை. தன்னைச் ‘சாதாரணமான ஒருவன்’ என அடக்கமாக அழைத்துக்கொள்ளும் இவரின் ஆற்றல்கள் சாதாரணமானவையல்ல.
இந்த நூல் தனக்கு எழுபத்தைந்தாம் பிறந்தநாள் பரிசாக மகன்கள் பார்த்திபன், முகிலன், வசந்தன் ஆகிய மூவரிடமிருந்து கிடைத்ததென அறியத்தருகிறார். ஒரு சிறப்பான இந்தப் பரிசில் வாமதேவனின் துணைவி யோகேஸ்வரிக்கும் பங்கு உண்டெனலாம். மிகவும் சரளமான சுவையான மொழிநடையில் தனது சுயசரித்திரத்தை அது நகர்ந்துவந்த பரந்த சமூக, அரசியல் பின்னணியுடன் வரைந்துள்ளார் வாமதேவன்.
அவர் 1965 ஒக்டோபரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தின் கலைப்பீடத்தில் முதலாண்டு மாணவனாகும்போது நான் அதே பல்கலைக் கழகத்தின் பேராதனை வளாகத்தில் விவசாயப்பீடத்தில் இறுதியாண்டு மாணவனாயிருந்தேன். 1966 ஒக்டோபரில் அவர் பொருளியலில் விசேட பட்டப்படிப்புக்குத் தெரிவாகிப் பேராதனை வளாகத்திற்கு வருகிறார். நவம்பர் 22ஆம் திகதி அவரது தந்தையாரும் மூன்று சகோதரிகளும் மலையகத்தில் மண்சரிவுக்குப் பலியாகிய சோகநிகழ்வினால் தாக்கப்படுகிறார். குடும்பத்தில் அவருடைய தாயாரும் அவருமே எஞ்சினர். ‘இந்தச் சம்பவம் எனது வாழ்க்கையில் பலத்த மாறுதல்களுக்குக் காரணமாக அமைந்தது’ எனப் பதிவிடுகிறார். கல்வியில் தீவிரமாக ஈடுபடுகிறார். இந்த நாட்களிலேதான் அவருக்கும் எனக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறுகிறது. நூலில் அவர் குறிப்பிடுவதுபோல் பல்கலைக்கழக வளாகத்துக்கு அயலில் நானும் வேறுசில மாணவர்களும் வசித்துவந்த வீட்டில் அவரும் நம்முடன் சேர்ந்துகொள்கிறார். எனது இறுதி ஆண்டில் நான் பேராதனை வளாக மாணவர்சங்கத் தலைவராக இருந்தபோது இடம்பெற்ற மாணவர் போராட்டத்தில் வகித்த பங்கிற்காகப் பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டிருந்தேன். அந்தத் தண்டனைப்படி நான் பல்கலைக்கழக வளாகத்தின் ஐந்து மைல் ஆரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலைமைகளிலேயே எனக்கு வாமதேவனின் நட்புக் கிடைத்தது. இன்றுவரை அந்த நட்புத் தொடர்கிறது. பேராதனையில் எனக்கு ஏற்கனவே கிடைத்த நண்பர்கள் சண்முகமும் மறைந்த நவரட்ணவும்தான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.
‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ வாமதேவனின் வாழ்வின் பல்வேறு கட்டங்களுக்கூடாக வாசகரை எடுத்துச் செல்கிறது. ஹைலன்ட்ஸ் கல்லூரியில் அவருக்குக் கிடைத்த முற்போக்காளரான ஆசிரியர்களின் அறிவுரீதியான செல்வாக்கு மற்றும் மலையகத்தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர்கள் காட்டிய தீவிர ஈடுபாடு எல்லாம் வாமதேவன் போன்ற மாணவர்களின் உலகப்பார்வைக்கும் அறிவுரீதியான விருத்திப்போக்கிற்கும் எப்படி உதவியுள்ளன என்பதை அறியமுடிகிறது. பல்கலைக்கழகத்தில் நாம் சந்தித்த வாமதேவன் கல்வியில் தீவிரமாகக் கவனம் செலுத்திய அதேசமயம் பல்கலைக்கழகத்திலும் வெளியேயும் அரசியல் மற்றும் கலை இலக்கியக் கலந்துரையாடல்களிலும் பகிரங்க விவாதங்களிலும் பங்குபற்றவும் தவறவில்லை. கொழும்பில் சண்முகதாசனின் மாக்சிச அரசியல் வகுப்புகளில் பங்குபற்றியுள்ளார். பேராதனையிலும் மாக்சிசக் கல்வி வட்டத்துடன் நெருக்கமாக இருந்தார். கருத்தரங்குகளில் தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார். அத்தகைய நிகழ்வுகள் பற்றி இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
கொழும்பில் முதலாம் ஆண்டு மாணவனாக மலையக சகமாணவர்கள் மூவருடன் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தபோது அவர்கள் எல்லோருமே நிதிப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டநிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிடம் உதவிக்கு விடுத்த வேண்டுதல் நிராகரிக்கப்பட்டதால் ஒரு நண்பர் வாமதேவனையும் இரு சகமாணவர்களையும் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திடம் அழைத்துச் செல்கிறார். மலையகத்தமிழ் மாணவர்களின் நிலைமயைக் கேட்ட செல்வநாயகம் அந்த மூவருக்கும் ஒருவருக்கு 25ரூபா வீதம் மாதத்திற்கு 75ரூபா உதவியாக வழங்கக் கட்சியின் சார்பில் சம்மதிக்கிறார். இந்த உதவி ஆரம்பித்த சில மாதங்களில் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் தமிழ்விழாவில் உரையாற்ற வாமதேவன் அழைக்கப்படுகிறார். அந்த நிகழ்ச்சியில் அன்றைய யு. என். பி அரசாங்கத்தில் உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த தமிழரசுக்கட்சிப் பிரமுகர் செனட்டர் திருச்செல்வம் பிரதம விருந்தினராக உரையாற்றும்போது அங்கு கூடியிருந்த மலையகத்தமிழர்களுக்கு ‘மலையகம் உங்களுக்கான இடமில்லை நீங்கள் அனைவரும் வடக்கில் வந்து குடியேறவேண்டும்’ என அழைப்பு விடுத்தார். அமைச்சரைத் தொடர்ந்து உரையாற்றிய இளம் பட்டதாரி மாணவன் வாமதேவன் ‘இது எங்களது மண் நாங்கள் குடிபெயரமாட்டோம்’ என உணர்ச்சிபொங்க சபையோரின் கைதட்டலுக்கு மத்தியில் அவருக்குப் பதிலளித்தார். மலையக இளம் சந்ததியினர் மத்தியில் எழுந்துவரும் அடையாள உணர்வின் குரலாக ஒலித்தது வாமதேவனின் பதில். இதன் உடனடி விளைவாகத் தமிழரசுக் கட்சியின் பண உதவி நிற்பாட்டப்பட்டது! அந்தப் பதில் திருச்செல்வத்தையும் மற்றைய தமிழரசுக் கட்சித் தலைவர்களையும் சிந்திக்க வைத்திருக்கவேண்டும். ஆனால் அவர்களின் எதிர்வினை முற்றிலும் குறுகிய நோக்கின் பிரதிபலிப்பாகவே இருந்தது.பல்கலைக்கழக மாணவராயிருந்தபோது அநுபவித்த அரசியல் சுதந்திரத்தை நன்கு பயன்படுதியுள்ளார் என்பதற்கு அவர் பதிவுசெய்துள்ள சில விபரங்கள் ஆதாரங்களாகின்றன.
1970ஆம் ஆண்டிலிருந்து அரசசேவையிலிருந்த காலகட்டம் பற்றிய அத்தியாயங்களில் இலங்கை அரசின் திட்டமிடல் அமைச்சு, அது சார்ந்த நிறுவனங்களின் கொள்கைகள், செயற்பாடுகள் மற்றும் வாமதேவன் வகித்த பதவிகள் அவர் கையாண்ட பொறுப்புக்கள் பற்றிய தகவல்களும் விளக்கங்களும் பொதிந்துள்ளன. நாட்டின் அரசியல் மாற்றங்கள் அவர் கடமையாற்றிய நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஏற்படுத்திய மாற்றங்களையும் விபரமாகக் குறிப்பிடுகிறார். பல சந்தர்ப்பங்களில் சமூகரீதியான ஆதங்கங்கள், விமர்சனங்கள் மனிதாபிமான உணர்வுடன் வெளிப்படுகின்றன. வரிகளுக்கு இடையேயும் விமர்சனங்கள் தென்படுகின்றன. 1973ஆம் ஆண்டு உற்பத்தி ஆண்டாகப் பிரகடனப்படுத்தபட்டதைத் தொடர்ந்து நுவரேலியா கச்சேரிக்கு மாற்றம் பெற்றுப் போனபோதும் பிரிவு அபிவிருத்திச் சபைச் செயற்பாடுகளில் தோட்டங்கள் உள்வாங்கப்படாததால் ‘மனதிற்குள்ளிருந்த ஆசையான தோட்டப்புற அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்களிக்கமுடியும் என்பது நிராசையாகப் போய்விட்டது’ என மனம் வருந்துகிறார். அந்தக் காலகட்டத்தில் -1974இல் – நுவரேலியாவில் உணவின்மை காரணமாக தோட்டத்துறையினர் பட்ட அவலக்காட்சியின் துன்பியலையும் பின்வருமாறு பதிவிடுகிறார். ‘எனக்குத் தெரிந்தபலர், நகர்ப்புறங்களில் பிச்சை எடுத்த கோரங்களை நான் பார்த்ததுண்டு. தோட்டப்புற வயதுசென்றவர்கள், வரிசையாக நகரங்களில் கையேந்தி நின்றமை இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.’ அந்த மக்கள் இத்தகைய கொடிய இக்கட்டுக்குள்ளானமைக்கும் 1972இல் கொண்டுவரப்பட்ட காணிச்சீர்திருத்தச் சட்டத்தினதும் 1964இல் வந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தினதும் அமுலாக்கலுக்கும் உள்ள தொடர்பினையும் சுட்டிக்காட்டுகிறார்.
திட்டமிடல் அமைச்சில் வாமதேவனின் துறைசார் புலமைக்கு அங்கீகாரம் கிடைப்பதை அவருக்கு வழங்கப்படும் பதவி உயர்வு மற்றும் பாரிய பொறுப்புக்கள் எடுத்தியம்புகின்றன. ஆனால் 1983 ஜூலையில் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத வன்செயல்கள் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் பெரும் சோதனையாயிற்று. அன்று அவர் கடமையிலிருந்தவேளை வத்தளையிலிருந்த அவருடைய வீடு முற்றாக அழிக்கப்பட்டது. அந்த அழிவில் நூல்களும் முனைவர் பட்ட ஆய்வுக்கெனச் சேர்த்துவைத்திருந்த தரவுகளும் சாம்பலாயின. அங்கிருந்த அவரது மனைவியும் குழந்தைகளும் அயல்வீட்டில் தஞ்சமடைந்தனர். அவரும் குடும்பமும் இடம்பெயர்ந்து ஒரு அகதிகள் முகாமில் தங்கியிருந்தபோது சிங்கள நண்பர்கள் பலவகையில் உதவினர். ஆயினும் இந்த இடுக்கண்ணையும் தாங்கி மீண்டும் எழ வழிபிறக்கிறது. குடும்பத்துடன் இந்தியாவுக்குத் தற்காலிகமாகக் குடிபெயர முடிவெடுக்கிறார். நோராட் நிறுவனத்தின் உதவியுடன் தென் இந்தியாவில் ஒரு ஆய்வினை மேற்கொள்கிறார். சேவையிலிருந்து விடுப்புப் பெற்று சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவில்(தமிழ்நாட்டில்) குடியேற்றப்பட்ட மலையகக் குடும்பங்களின் நிலைமைகள் பற்றிய பயன்மிக்க ஆய்வுத் திட்டத்துடன் ஜவஹர்லால் பல்கலைக் கழகத்துடன் இணைந்த திருவனந்தபுரம் அபிவிருத்திக் கற்கைகள் மையத்தில் எம்.ஃபில் (M. Phil) பட்ட மாணவராகிறார். 1987இல் அந்தப் பட்டப்படிப்பை நிறைவு செய்து அபிவிருத்தித் துறையில் முன்பைவிட மேலும் புலமை மிக்கவராக இலங்கைக்குத் திரும்பி அரசசேவையில் இணைகிறார். அவர் செய்த ஆய்வு ´Sri Lankan Repatriates in Tamil Nadu´எனும் தலைப்பில் நூலாகப் பிரசுரிக்கப்பட்டது.
அரச சேவைக்குத் திரும்பியபின் இளைப்பாறும்வரை தோட்டத்துறையோடு நேரடியாக ஈடுபடும் பொறுப்புக்கள் மற்றும் தேசியரீதியில் முக்கியத்துவம்பெறும் பொறுப்புக்களை ஏற்றார். மேலும் புதிய சர்வதேச அநுபவங்களையும் பெறுகிறார். நாட்டின் உள்நாட்டுப்போர் மற்றும் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்ற சூழலில் அவற்றைக் கையாண்ட அநுபவங்கள் தொடர்பான பதிவுகளை வாசிக்கும்போது அரசசேவையின் அரசியல்மயமாக்கலின் தாக்கங்களையும் உணரமுடிகிறது. ஆயினும் நீண்டகாலமாகத் தோட்டமக்களுக்கு அரச சேவைகள் சென்றடைவதற்கு இருந்த தடைகள் சிலவற்றை அகற்றுவதற்கும் வேறுசில வசதிகளை அவர்கள் பெறுவதற்கும் உதவும் செயற்திட்டங்களில் முக்கிய பங்காற்ற வாமதேவன் வகித்த பதவிகள் உதவின. லயவாழ்க்கையிலிருந்து விடுபட்டுத் தனிவீட்டு உடைமையாளராக வேண்டும் என்பது தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலக் கனவாயிருந்தது. 2015இல் வந்த அரசாங்கமாற்றம் இந்தக்கனவு நனவாகும் நம்பிக்கையைக் கொடுத்தது. இதற்காக உருவாக்கப்பட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக ஒரு வருடம் வாமதேவன் கடமையாற்றினார். அரசபதவியிலிருந்து மலையகத்தமிழ் சமூகத்தின் ‘அபிவிருத்திக்கு ஓரளவிற்கு பங்களிக்க கூடியதாக இருந்தமை எனக்கு மன நிறைவைத்தந்தது. இது அரசபணியாக இருந்தமையினால் இதனால் ஒருவர் திருப்தியடைய முடியாது’ எனத் தனது உள்ளக்கிடக்கையை பகிர்ந்தவண்ணம் அரசசேவையிலிருந்து இளைப்பாறியதும் சமூக செயற்பாட்டாளராகிறார். ‘தன்னார்வ நிலையில் சமூகத்திற்கென மேற்கொண்ட சில செயற்பாடுகள் எனக்கு இரட்டிப்பு மனநிறைவைத் தந்தன’ எனத் தனது திருப்தியை வெளிப்படுத்துகிறார். சமூகம் பற்றிய அநுபவரீதியான அறிவு, அபிவிருத்திபற்றிக் கொண்டுள்ள துறைசார் அறிவு, மற்றும் அரசசேவையில் கிடைத்த பல தசாப்த அநுபவம் எல்லாமே ஒன்றாக சமூக நீதி மற்றும் மனித மேம்பாடு பற்றிய வாமதேவனின் சிந்தனை உருவாக்கத்திற்கு உதவியுள்ளன. 2014ஆம் ஆண்டு ‘மலையகம் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி’ எனும் தலைப்பிலான நூல் மூலம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். எழுத்துத்துறையிலும் சமூகத்தளத்திலும் அவருடைய செயற்பாடுகள் தொடர்கின்றன.
‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ நூலின் இறுதியில் ‘மகிழ்ச்சிக் குறியீடு’ பற்றி எழுதுகிறார். அது தனக்குச் சாதகமாக அமைந்துள்ளது என நம்பும் அதேவேளை ‘ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் குறிப்பாக குறைவான நிலையிலுள்ள நான் சார்ந்த சமூகமும் பொதுவாக இதே நிலையிலுள்ள ஏனைய சமூகப்பிரிவினரும் உயர்ந்த நிலையை அடையவேண்டுமென்பதே என்னைப் போன்றவர்களின் அவாவாக அமைகிறது.’ எனும் செய்தியுடன் நூலை நிறைவு செய்கிறார். இந்தச் செய்தியை அந்த மக்களின் எதிர்காலம் பற்றிய விசேடமாக அபிவிருத்தி பற்றிய ஒரு பரந்த கருத்துப்பரிமாறலுக்கான அழைப்பாக எடுத்துக்கொள்ளலாம் போல்படுகிறது.
வாமதேவனுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.