இந்த விமர்சனம் தினகரன் வாரமஞ்சரியில் 14-11-1976 பிரசுரிக்கப்பட்டது.
சமுத்திரன்
கடந்த ஒரு வருடமாக கொழும்பு நடிகர் ஒன்றியம் இரசிகர் அவைக்கெனத் தொடர்ச்சியாக அளித்து வந்த நாடகக் கலை விருந்து கடந்த 27ம் திகதி ஒருவித சுவை மாற்றத்துடன் இடம் பெற்றதென்று கூறுவதில் தவறில்லை என நம்புகிறேன். நடிகர் ஒன்றியத்தினரின் சமூக உணர்வை, இலட்சிய வேட்கையைப் பிரதிபலிக்கும் சிறிய நாடகமாக ( 40 நிமிடங்கள்) ‘வழிகாட்டி’ அமைந்தது. நேரடியான சமூகப் பிரச்சினைகளின் வர்க்க அரசியல் வேர்களையும், அவற்றின் தீர்வுக்கான வெகுஜன எழுச்சி மார்க்கத்தையும் காட்டியது வழிகாட்டி. இத்தகைய உள்ளடக்கத்தைக் கொண்ட முன்னைய நாடகங்களைப் போலவே இதிலும் சில சிக்கலான உத்திகள், கருத்து ரீதியான, மறைமுகமான கூற்றுகள் இடம்பெற்றன.
வித்தியோதய வளாக மாணவர்கள் மேடையேற்றிய இந்நாடகம், தாசீசியஸின் நெறியாள்கையில் தரப்பட்டது. நாடகாசிரியர் நா. சுந்தரலிங்கம் அவருக்கே உரித்தான பாணியில் கதை வசன அமைப்பில் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். ஆனால் ‘வழிகாட்டி’யில் (Abstraction) அளவுக்கதிகமாகிவிட்டதாகப் பலர் அபிப்பிராயப்பட்டிருப்பார்கள். ஆரம்பக் காட்சிகள் பலருக்குப் புரிந்து கொள்ளக் கஷ்டமாயிருந்திருக்கும். ஆயினும் இறுதிக் காட்சி இரசிகர்களின் மனங்களிலேற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க உதவியிருக்கும் என நம்புகிறேன். அதிகாரத்தில் தொடர்ந்துமிருப்பதையே நோக்கமாகக் கொண்ட சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்கள் மக்களின் சுலோகங்களை, மக்கள் வேண்டி நிற்பதையே தாமும் ஏற்றுக் கொள்கிறோம் என்று வேஷம் போட்டு மக்களைத் தொடர்ந்தும் தம் சுரண்டல் ஆதிக்கத்துக்குள் அடக்கி விடப் பகீரதப் பிரயத்தனம் எடுப்பதையும், விழிப்படைந்த மக்கள் சரியான பாதையில் எழுந்து செல்வதையும் காட்ட முற்பட்டிருக்கிறார்கள். இந்த உள்ளடக்கத்திற்கு அபத்தப்பாங்கு உத்திகள் மூலமும் சில இடங்களில் மறைமுகமான, நேரடியான கூற்றுக்கள் மூலமும் உருக்கொடுத்திருக்கிறார்கள்.
நாடகத்தரம் உயர்வு
சில மாதங்களுக்கு முன், வித்தியோதய வளாகத் தமிழ்க் கலை விழாவில் ‘ஓலங்கள்’ என்ற பெயரில் ஒரு நாடகத்தை மேடையேற்றினார்கள். இந்தத் தடவை நாடகத்தின் தரம் பல மடங்கு அதிகரித்திருக்கிறதைக் காண முடிந்தது. குறிப்பாக நடிப்பில் கணிசமான முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக இருந்தது. வித்தியோதய தமிழ்ச் சங்கத்தினர்; பாராட்டப்பட வேண்டியவர்கள். தாசீசியஸ், சுந்தரலிங்கம் போன்ற பன்முகத் திறமை கொண்ட கலா விற்பன்னர்களின் வழிகாட்டைலைப் பெற்றிருக்கும் வித்தியோதய தமிழ் மாணவர்களிடம், கட்டுப்பெத்தை வளாகத் தமிழ் மாணவர்கள் போன்று நாடகத்துறையில் சிறந்த ஒரு மரபினை, பயன்தரு பங்களிப்பை ஆற்றக் கூடிய தகைமைகளைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மறந்துவிடக் கூடாது. உத்திகள், புதுமையான கலை நுட்பங்கள் அவசியம்தான். ஆனால் அவற்றை இரசிகர்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளவும் வேண்டும். அல்லாவிட்டால் விஷேச இரசனை வளர்ச்சி கொண்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு சிலரால் தான் நாடகத்தைப் புரிந்து இரசிக்க முடியும்.
கொழும்பு இரசிகர் அவை பொதுவாக நடுத்தர வர்க்கத் தமிழர்களைக் கொண்டது. இவர்களே இன்று நடிகர் ஒன்றியத்தின் நாடகத்தைப் பெருமளவில் விரும்பிப் பார்க்கிறார்கள். சென்ற வருடம் ‘விழிப்பு’ நாடக இரசிகர்கள் மத்தியில் பல்வகைப்பட்ட அபிப்பிராயங்களை ஏற்படுத்திய அதேவேளையில் தமிழ் நாடகத் துறையின் பக்குவப் பராயம் முடிந்து மலர்ச்சியான வளர்ச்சிக் கட்டம் ஆரம்பித்து விட்டதென்பதை அறிவித்தது. ஆனால் வெற்றி தந்த நம்பிக்கையில் நடிகர் ஒன்றியம் உருவ அமைப்பைப் புதுமைப்படுத்துவதில் அதிக வேகத்துடன் செல்கிறதோ என்ற பயம் என் மனதில் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக இரசிகர் அவையும் தனது அப்பியாசக் காலத்தைக் கடந்து வருவது உண்மை என்ற போதிலும் அவர்களை விட்டு அதிகம் தூரம் பாயாதிருத்தல் ஒன்றியத்தினருக்கு அவசியம்.
சுவை மாற்றம்
சுவை மாற்றத்துடன் தரப்பட்ட “மழை” (1-15 மணி) இரண்டாவது நாடகமாகும். இந்திரா பார்த்தசாரதியின் “மழை” இலங்கையின் ஊர் பேர்களுடன் தரப்பட்டது. இதுவரையில் நேரடியான சமூகப் பிரச்சனைகளைப் பலதரப்பட்ட பாங்கிலமைந்த உத்திகளைப் பயன்படுத்திக் கலைத்துவத்துடன் நாடகங்களாகத் தந்த ஒன்றியத்தினர் இங்கே சிக்கல் கொண்ட மனித உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு கதையை யதார்த்தப் பாங்கில் இலகுவான முறையில் உருக்கொடுத்திருக்கிறார்கள். “மழை” கதையின் அணுகு முறை சிக்மன்ட் பிராயிட் (Sigmond Freud) டின் கருத்துக்களைச் சார்ந்த மனோதத்துவ அணுகு முறையேயாகும். உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைப் பற்றிய கதை மழை. இதில் வரும் பாத்திரங்கள் நாலே நாலு பேர் தான். உயர்வு தாழ்வுச் சிக்கல், குற்ற உணர்வுகள், நரம்புத் தளர்ச்சியின் விளைவான திடீர் மாற்ற நடத்தைகள் இவையெல்லாம் நிறைந்ததே இந்நாடகம். நாடகத்தின் பாத்திரங்களே தங்களின் நடத்தைக்குத் தாங்களே மனோதத்துவ விளக்கங்கள் கொடுக்க முற்படும் பொழுது அமெச்சூர் மனோதத்துவ ஞானிகளாகக் (Amateur Psychologist) காணப்படுகின்றார்கள். (எனது அபிப்பிராயத்தில் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதியும் ஒரு Amateur Psychologist தான்).
இந்த நாடகத்தின் மையமான பாத்திரம் நிர்மலா என்ற முப்பது வயது மணமாகாத பெண். அவளுடைய தந்தை ஓர் இளைப்பாறிய பேராசிரியர். அவள் சிறுவயதில் தாயை இழந்தவள். அவளது அண்ணன் பத்து வருடங்களுக்கு முன்னர் தகப்பனோடு சண்டை போட்டுக் கொண்டு வெளியேறிவிட்டான். பேராசிரியரும் மகளும் ஒரு கிராமத்தில் வாழ்கிறார்கள். தகப்பன் மகளின் திருமணத்தைப் பற்றி அக்கறை காட்டாது அவளைத் தன்னோடு வைத்திருக்கிறார். அவளிடம் அவர் அன்றாட வாழ்வில் மனோதத்துவ ரீதியில் தங்கியிருக்கிறார். வயது வந்த நிர்மலா மனப்பிரச்சினைக்குப் பலியாகி நரம்புத் தளர்ச்சியால் தாக்கப்பட்டவள் போல் அடிக்கடி நடந்து கொள்கிறாள். இருதய நோயாளியாகிவிட்ட பேராசிரியருக்கு மருத்துவம் செய்ய வரும் டாக்டர் ஜேம்ஸிடம் (அவர் விவாகரத்துப் பெற்றுச் சமூக சேவையில் ஈடுபட்டிருப்பவர்) நிர்மலா தகப்பன் மீது தான் கொண்டிருக்கும் வெறுப்புணர்ச்சியை எல்லாம் கக்கித் தள்ளுகிறாள். தகப்பன் தூங்குவது போலிருக்கையில் அவள் அவர் மீது தனக்குள்ள ஆத்திரத்தையெல்லாம் ஜேம்ஸிடம் சொல்லிவிட்டு எனக்கு ஓர் ஆண் வேணும் (I need a man) அது நீங்களாகவே இருக்கலாம் என்கிறாள். மழையும் காற்றும் அடிக்கின்றன. மின்சாரம் நிற்கிறது. ஜேம்ஸ் பேராசிரியரைப் பரிசோதிக்கிறார். அவர் இறந்து கிடக்கிறார். நிர்மலா எதுவித பதற்றமும் அடையவில்லை. அவளின் அண்ணன் ரகு வந்து சேருகிறான். அவன் தகப்பன் மீது வெறுப்புள்ளவன். தகப்பன் நிர்மலா மீது அளவு கடந்த பாசத்தைக் காட்டியதைக் கண்டு எரிச்சலடைந்து வெளியேறியவன். ரகு-நிர்மலா-ஜேம்ஸ் இந்த மூவருக்குமிடையே நாடகம் நகர்கிறது. நிர்மலா ஜேம்சை மணந்து அந்தக் கிராமத்தை விட்டு வெளியேற விரும்புகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் கிராம மக்கள் தன் சேவையை மறந்து விட்டதைக் கண்ட ஜேம்ஸ் நிர்மலாவின் விருப்பத்திற்கு இணங்குகிறார். ஆனால் கிராம மக்கள் அவரை மீண்டும் ஏற்றுக் கொண்ட போது அங்கே அவருடைய சேவை தேவைப்படும் அவசியமும் ஏற்படும் போது ஜேம்ஸ் மனதை மாற்றி விடுகிறார். ஆத்திரமடைந்த நிர்மலா சொல்கிறாள் எனக்கு முன்பே தெரியும் நீங்கள் வரமாட்டீர்கள் என்று.
கடினமான பாத்திரம்
இந்த நாடகத்தில் நிர்மலாவின் பாத்திரம் மிகவும் கடினமான ஒன்று. அந்தப் பாத்திரத்தைத் தத்ரூபமாகச் செய்திருக்கிறார் ஆனந்தராணி ராஜரத்தினம். தகப்பன் மீது பாசத்தையும், வெறுப்பையும் கொண்டிருக்கும் நிலையை, தன் இளமை தனிமைக்குப் பலியாகும் கொடிய அனுபவத்தில் அதற்குக் காரணமாக இருக்கும் தகப்பன் மீது வெறுப்பையெல்லாம் அள்ளி வீசும் ஹிஸ்ரிறியா (Hysteria) வசப்பட்ட குழப்ப நடத்தையை, தகப்பனின் சாவுக்குத் தானே காரணம் எனும் குற்ற உணர்வில் சிக்கித் தத்தளிக்கும் மனப் புழுங்கலை, ஆனந்தராணி குறிப்பாகச் சித்திரிக்கிறார். நடிகைகளுக்குப் பஞ்சமேற்பட்டுள்ள இந்தக் காலத்தில் இத்தகைய ஒரு நடிகை தமிழ் நாடக உலகுக்குக் கிடைத்திருப்பது மிகவும் பெருமைப்பட வேண்டியதாகும்.
ரகுவின் பாத்திரமும் புதுமையானதுதான். ரகுவும் நிர்மலாவும் தோன்றும் காட்சிகள் அவர்களின் சம்பாஷனைகள் மனோதத்துவ ரீதியில் பேராசிரியரை, அவர்களிருவரை, ஜேம்சை விளக்குபவையாகவும் மிகவும் சுவையானவையாகவும் அமைந்துள்ளன. நிர்மலா ஜன்னலருகில் போய் நிற்பதும், அதைச் சாத்திவிட்டுப் பயந்து வருவதும், ரகு போய் ஜன்னலைத் திறப்பதும் அப்போது அவர்கள் பேசும் வார்த்கைகளும் மனோதத்துவத்துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்குச் சிந்தனையைத் தூண்டக்கூடியவை. இந்திரா பார்த்தசாரதியின் மனோதத்துவக் கோட்பாடுகள் விவாதத்திற்குரியவை. அவை பற்றிய ஆய்வில் இங்கு ஈடுபடுவது உசிதமல்ல.
பக்குவமுற்ற கலைஞர்கள்
இந்த நாடகத்தின் நடிகர்கள் அனைவரும் பக்குவமடைந்த கலைஞர்கள் என்பதை இரசிகர் அவை ஏற்றுக்கொள்ளும். ஆயினும் மழையின் நெறியாளரான இளைஞர் பாலேந்திரா பாராட்டுக்குரியவர். பல்கலைக்கழக மாணவனாயிருந்த போது அவர் ஒரு நாடகத்தை நெறிப்படுத்தியிருக்கிறார். இதுதான் அவர் நெறியாண்ட இரண்டாவது நாடகம். சுந்தரலிங்கம், தாசீசியஸ், சிவானந்தன், பத்மநாதன் என்ற நடிகர் ஒன்றியத்தின் நெறியாளர் வரிசையில் சேர்ந்து கொள்கிறார் இளைஞர் பாலேந்திரா. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே அரங்க அமைப்பில் நாடகம் நகர்கிறது. மழை, காற்று, இடி, மின்னல் ஆகியவை மிகவும் இயற்கையான ஒலி, ஒளி மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பாத்திரங்கள் பிரதிபலிக்கும் மனநிலைமைகளுக்கு அமைய இசை அமைக்கப்பட்டுள்ள போதும் அதி கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம். இந்த நாடகம் காட்டமுனையும் மனோ நிலைமைகளை நன்குபுலப்படுத்தக்கூடிய இசை, நரம்பு வாத்திய இசைதான். அத்தகைய இசை உபயோகிக்கப்பட்டிருப்பது பொருத்தமானதே. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பின் வரிசையிலிருந்தவர்களுக்குக் கேட்கவில்லை. அத்துடன் இசையமைப்பில் ஏதோ போதாமை தென்பட்டது.
வழிகாட்டியும் மழையும் பலவிதமான விவாதங்களை மீண்டும் புதுப்பிக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய விவாதங்களை நாம் வரவேற்க வேண்டும். நடிகர் ஒன்றியத்தின் மற்றைய நாடகங்கள் ஏற்படுத்திய அழகியல் விவாதங்களைப் போன்று இந்த நாடகங்களும் பல விவாதங்களை வருவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாடகங்களைத் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்வது அவசியம். அப்போதுதான் இரசிகர்களுக்கு மத்தியில் இரசனை வேறுபாடுகள், விருப்பு வெறுப்புக்களை நேரடியாக அறிய முடியும்.