நவமானிடயுகத்தில் சுற்றுச்சூழலியல்சார் மார்க்சிசம் – முடிவிலா மூலதனத் திரட்டலா அல்லது பேண்தகு மனித மேம்பாடா?

சமுத்திரன்

2017ஆம் ஆண்டு ´மூலதனமும் இயற்கையும்´எனும் தலைப்பில் ஐந்து பகுதிகளைக் கொண்ட ஒரு கட்டுரைத் தொடரை எனது இணையத் தளத்தில் பிரசுரித்தேன். அது 2023 இல் பிரசுரிக்கப்பட்ட ´சமுத்திரன் எழுத்துக்கள்´தொகுப்பின் இரண்டாவது தொகுதியான ´சர்வதேச அரசியல் பொருளாதாரம்´ நூலில் சேர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் அந்தக் கட்டுரை மிக நீண்டதாக (61 பக்கங்கள்)இருக்கும்போதும் இன்னும் முடிவு பெறாத ஒன்றாகும். நவமானிடயுகத்தில் சுற்றுச்சூழலியல்சார் மார்க்சிசம் எனும் தலைப்பிலான தற்போதைய கட்டுரையை அதன் தொடர்ச்சியாகவே எழுதியுள்ளேன். இதற்குரிய தரவுகளையும் குறிப்புகளையும் நீண்ட நாட்களுக்கு முன்பே எடுத்திருந்தபோதும் பல காரணங்களால் எழுத்து வேலையைத் தொடர்வதில் தாமதங்களைத் தவிர்க்கமுடியவில்லை.

மூலதனமும் இயற்கையும் பற்றிய எனது கட்டுரைத் தொடரில் சமீப காலங்களில் சுற்றுச்சூழலியல் தொடர்பான ஆய்வுகளிலும் விவாதங்களிலும் முக்கியத்துவம் பெறும் Anthropocene எனும் பதத்திற்கு தமிழில் நவமானிடயுகம் எனும் சொல்லினைப் பரிந்துரைத்திருந்தேன். நமது பூகோளத்தின் புவியமைப்பியல் (geological) வரலாற்றின்படி கடந்த 11,700 ஆண்டுகளான காலத்தை ஹொலொசீன் (Holocene) என புவியமைப்பியல் விஞ்ஞானிகள் பெயரிட்டனர். இந்தக் காலத்தின் கடந்த சில நூற்றாண்டுகளில், மனித நாகரீகம் பல மாற்றங்களைக்  கண்டுள்ளது.முதலாளித்துவத்தின் வருகையும் எழுச்சியும் உலக வரலாற்றின் போக்குகளில் பல்வேறுவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியது, ஏற்படுத்திவருகிறது. சுற்றுச்சூழலியல்ரீதியான மாற்றங்களைப் பொறுத்தவரை நவீன காலத்தில் இயற்கைக் காரணிகளைவிட மனித செயற்பாடுகளே பூகோளரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதில் பிரதான பங்கினை வகிக்கின்றன என  விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாகச் சுட்டிக் காட்டுகின்றனர். ஆகவே மனித செயற்பாடுகளின் விளைவாக உலகம் ஹொலொசீன் யுகத்திலிருந்து வேறொரு காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது எனும் கருத்தை 2000 ஆம் ஆண்டில் முன்வைத்த இரசாயனவியலில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Paul Crutzen (போல் க்ருட்சென்) இந்தப் புதிய காலகட்டத்தை Anthropocene என அழைக்கலாம் என முன்மொழிந்தார். இதற்குத் தமிழில் நவமானிடயுகம் எனும் சொல்லை நான் பயன்படுத்திவருகிறேன். Anthropocene எனும் சொல்லைத் தமிழில் மானிடயுகம் எனக் கூறலாம் என முதலில் கருதினேன். ஆயினும் அதன் உள்ளடக்கம் முற்றிலும் நவீன காலகட்டத்திற்குச் சொந்தமானதென்பதால் நவமானிடயுகம் எனும் சொல் தமிழில் அதன் அர்த்தத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது என நம்புகிறேன். மார்க்சிய வட்டங்களில் நவமானிடயுகம் தொடர்பாக இடம்பெற்ற விவாதங்கள் பற்றியும் சுற்றுச்சூழலியல் மார்க்சிசம் பற்றியும் எனது கட்டுரைத் தொடரில் அலசியுள்ளேன். Anthropocene உள்ளடக்கும் கருத்தினை க்ருட்சென்னுக்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் யூனியனின் விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர் என்பதை நினைவூட்டும் Foster (2016), Anthropocene எனும் சொல் ஆங்கிலத்தில் முதலாவது தடவை 1970களில் வெளிவந்த The Great Soviet Encyclopediaவில் (பேர் சோவியத் கலைக்கழஞ்சியம்) இடம்பெற்றுள்ளது எனும் தகவலைத் தருகிறார். நவமானிடயுகம் பற்றி விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களுடன் ஒரு விரிவான நூலை Ian Angus (2016) எழுதியுள்ளார்.

நவமானிடயுகம் எப்போது ஆரம்பித்தது எனும் கேள்விக்கு அறிவியலாளர் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. நவமானிடயுக செயற்குழுவின் (Anthropocene Working Group) முடிவின்படி அது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்,1950ஆம் ஆண்டில், தொடங்குகிறது. 1945 ஆண்டில் அமெரிக்காவில் (நியூ மெக்சிக்கோ பாலைவனத்தில்) நடத்தப்பட்ட முதலாவது அணுக்குண்டுப் பரீட்சையும் அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகர்கள் மீதான அணுக்குண்டுத் தாக்குதல்களுடனும் நவமானிடயுகம் ஆரம்பிக்கிறது எனக் கருதுகிறார் John Bellamy Foster (Foster, 2024). வேறு சிலர் ஆலைத்தொழில் புரட்சியின் காலகட்டத்திலேயே, விசேடமாக, புதைபடிவ எரிபொருட்களின் பரந்துபட்டபெருமளவிலான பாவிப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியுடன், நவமானிடயுகம் ஆரம்பிக்கிறது. ஆயினும் Anthropocene ஐ ஒரு புவியியல்ரீதியான யுகமாக அங்கீகரிக்கும்படி சர்வதேச புவியியல் விஞ்ஞானிகள் சங்கத்திற்கு நவமானிடயுக செயற்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிப்பட்டது.[i] இந்த முடிவு நவமானிடயுகத்திற்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்துள்ள ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  நவமானிடயுகம் தொடர்பான விவாதங்களை அவதானிக்கும்போது அதற்குச் சார்பானவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அவர்கள் சர்வதேச புவியியல் விஞானிகள் சங்கத்தின் முடிவை ஏற்கவில்லை. நமது பூகோளத்தின் இன்றைய சுற்றுச்சூழலியல்சார் மற்றும் இயற்கை – சமூகம் உறவுகள் பற்றிய ஆய்வுகள், விளக்கங்கள் மற்றும் கருத்தாடல்களில் ´நவமானிடயுகம்´ ஏற்கனவே உலக மட்டத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

மனித மற்றும் மற்றைய உயிரினங்களின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை நவமானிடயுகம் எந்த ஆண்டில் ஆரம்பித்தது என்பதையும் விட அது எப்படி மாறப்போகிறது அல்லது முடியப்போகிறது என்பதே முக்கியமான கேள்வி. முடிவிலா மூலதனத் திரட்டலையே தன் இயக்கவிதியாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பின் தொடர்ச்சி பேரழிவுகளுக்கே இட்டுச்செல்லும் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் அதிகரித்துவருகின்றன. ஆயினும் மனித இனத்தின் நலனுக்கு இந்த அமைப்பைவிட நல்ல மாற்று அமைப்புக் கிடையாது, இதற்குள்ளேயே உகந்த தொழில்னுட்பவியல் ரீதியான வழிவகைகளுக்கூடாக சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கையாண்டு பேண்தகு அபிவிருத்தியை நடைமுறைப்படுத்த முடியும் எனும் கொள்கையும் கருத்தியலுமே இன்றுவரை மேலாட்சி செலுத்துகின்றன. இதற்கு எதிராக பேண்தகு மனித மேம்பாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு மாற்று அமைப்பிற்காக வாதாடுகிறது சுற்றுச்சூழலியல் மார்க்சிசம். இந்தச் செயற்பாடு சோஷலிசம், கம்யூனிசம் பற்றிய மீள்கற்பிதத்தைப் பிரதான நோக்காக கொண்டுள்ளது.

ஒரு கோட்பாட்டுரீதியான செல்நெறியாக சுற்றுச்சூழலியல்சார் மார்க்சிசம் 1990களில் உருப்பெற்றது எனக் கொள்ளலாம். இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு செல்நெறியாக வளர்ந்துவரும் மார்க்சிச சுற்றுச்சூழலியல்சார் சோஷலிச சிந்தனைப் போக்கும் இத்துடன் இணைந்ததே. ஆயினும் இந்தச் செல்நெறிக்கு ஒரு காத்திரமான வரலாற்றுப் பின்னணியுண்டு. மார்க்ஸ் கொண்டிருந்த சுற்றுச்சூழலியல்சார் விமர்சனத்தின் மீள்கண்டுபிடிப்பு இதன் பிரதான அடிப்படைகளை வகுக்க உதவியது. ´மீள்கண்டுபிடிப்பு´ எனும் சொல் இங்கு மிக முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கிறது. இது தொடர்பாக 1980/1990களில் இடம்பெற்ற விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றி எனது கட்டுரைத் தொடரில் விளக்கியுள்ளேன். இன்று உலக மட்டத்தில் முதலாளித்துவம், காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றினை மேலும் முழுமையாகவும் ஆழமாகவும் ஆராய உதவும் ஒரு விமர்சனரீதியான ஆய்வு மரபாகவும் சோஷலிசத்தின் மற்றும் கம்யூனிசத்தின் மீள் கற்பிதங்களுக்கு உதவும் ஒரு சிந்தனைத் தளமாகவும் இந்தச் செல்நெறி வளர்ந்து வருவதைக் காணலாம். அதே போன்று இருபதாம் நூற்றாண்டின் சோஷலிசத்தையும் விமர்சித்து, மதிப்பிட்டு இன்றைய சோஷலிச இயக்கங்கள் கற்கவேண்டிய பாடங்களையும் அறிய உதவ வல்லது, உண்மையில் உதவுகிறது. இன்னொரு முக்கிய தகவலையும் இவ்விடத்தில் குறிப்பிடல் பொருந்தும். மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் சகல எழுத்துக்களையும் தேடிச் சேகரித்துத் தொகுத்து வெளியிடும் திட்டம் இன்னும் தொடர்கிறது. Marx-Engels Gesamtausgabe (MEGA) என ஜேர்மனிய மொழியில் அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் எல்லாமாக வெளிவர உள்ள 114 தொகுதிகளில் இதுவரை 65 வெளிவந்துள்ளன.  இந்த முயற்சியால் இதுவரை ஆய்வாளர்கள், இடதுசாரி செயற்பாட்டாளர்கள், சோஷலிச, கம்யூனிச இயக்கங்கள் மற்றும் எழுத்தாளர்கள் அறிந்திராத மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் எழுத்துக்களை அறியும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.[ii]

நவமானிடயுகத்தில் பூகோளரீதியில் பரவியுள்ள சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மூலதனத்தின் இயக்கப்பாட்டுடன் பின்னிப்பிணைந்துள்ளன. எனது முன்னைய கட்டுரைத்தொடரில் குறிபிட்டுள்ளது போல் இலாபநோக்கிற்காக இயற்கையின் தனியுடைமையாக்கல், பண்டமயமாக்கல், மூலதனமயமாக்கல் மற்றும் தனியுடைமையாக்கப்படாத இயற்கையை இலவசமான கொடையாகப் பயன்படுத்தல் மிகவும் தீவிரமடைந்துள்ள காலகட்டத்தில் வாழ்கிறோம். இயற்கையின் பகுதிகளைத் தனியுடைமையாக்கும் போக்கிற்கும் மானிடத்தின் பொதுச் சொத்தான பரந்துபட்ட சுற்றுச்சூழலாக விளங்கும் அதே இயற்கையின் பாதுகாப்பிற்குமிடையே நிரந்தரமான முரண்பாட்டை முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு உருவாக்குகிறது. இயற்கையின் தனியுடைமயாக்கல் அதிகரிக்கும்போது சமூகத்தின் பொதுச்சொத்துக்கள் குறைவடைவதைத் தவிர்க்க முடியாது. இவை இரண்டிற்கும் இடையிலான உறவு நேர்மாறுவிகித (inverse) உறவாகிறது. இந்த முரண்படு மெய்மையின் (paradox) விளைவுகள் பற்றி மார்க்சிற்கு முன்னர் 1804 ஆம் ஆண்டில் ஆங்கிலேய கோமான் Lauderdale (லோடடேல்) எழுதியுள்ளார். அவரின் கருத்தில், பொதுச் செல்வம் (public wealth) என்பது தமக்குப் பயன்படும் அல்லது மகிழ்வூட்டவல்லன என மனிதரால் விரும்பப்படுவனவை உள்ளடக்கும். இவை எல்லாமே பயன்பாட்டுப் பெறுமதி கொண்டவை என்பதால் அவை செல்வம் எனக் கருதப்படவேண்டும். மறுபுறம் தமக்குப் பயன்படும் அல்லது மகிழ்வூட்டவல்லன என மனிதரால் விரும்பப்படுவன தனிச் சொத்துக்களாயிருந்தால் அவற்றிற்கு குறிப்பிடக்கூடிய பற்றாக்குறை (scarcity) இருக்கும். ஆகவே இவற்றை எல்லோரும் பெறுவது சாத்தியமில்லை. அதாவது பற்றாக்குறையைத் தனியே அளவு ரீதியான போதாமையால் மட்டும் விளக்கிவிட முடியாது அதற்குப் பின்னால் இருக்கும் சமூக உறவுகளை இனங்காணல் அவசியம்.

பயன்பாட்டு பெறுமதிக்கும் (use value) பரிமாற்றப் பெறுமதிக்கும் (exchange value) இடையிலான முரண்பாட்டை விளக்கும்போது ´லோடடேல் முரண்படு மெய்மையை´ (Lauderdale paradox) மார்க்ஸ் நினைவூட்டுகிறார் (Foster et al, 2010; Saito, 2022). பயன்பாட்டுப் பெறுமதிகள் மனித தேவைகளை பூர்த்திசெய்வன. முதலாளித்துவ அமைப்பில் பயன்பாட்டு பெறுமதிகள் பரிமாற்றப் பெறுமதிகளாகப் பண்டமயமாக்கப்படுகின்றன. ´முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு மேலோங்கியிருக்கும் சமூகங்களின் செல்வம் பண்டங்களின் ஒரு அளப்பரிய திரட்டாகக் காட்சியளிக்கிறது´, எனும் வசனத்துடனேயே மார்க்சின் மூலதனம் முதலாம் பாகத்தின் முதலாவது அத்தியாயம் ஆரம்பிக்கிறது. முதலீட்டின் நோக்கம் இலாபம் தரக்கூடிய பயன்பாட்டுப் பெறுமதிகளை உற்பத்தி செய்து அவற்றை பரிமாற்றப் பெறுமதிகளாகச் சந்தைப்படுத்துவதே. சமூகத்தின் தேவைகள் இங்கு இலாப வீதத்திற்கும் மேலாக முன்னுரிமை பெறுவதில்லை. இந்தப் போக்கின் பெறுமதி உறவுகள் மற்றும் முரண்பாடுகளைப் புரிந்து கொள்ள முதலாளித்துவத்திற்கே உரிய உற்பத்தி உறவுகளை – அதாவது உற்பத்தி சாதனங்களின் சொத்துடைமை உறவுகளை – ஆராய்தல் அவசியமென மார்க்ஸ் வலியுறுத்துகிறார். உற்பத்தி சாதனங்களிலிருந்து பிரிக்கப்பட்டு பாட்டாளிவர்க்கமயமாக்கப்பட்டோரின் உழைப்புசக்தியின் பண்டமயமாக்கல் முதலாளித்துவத்தின் ஒரு அடிப்படைக் குணாதிசயமாகும். உற்பத்தி சாதனங்களிலிருந்து உழைப்பாளர் அந்நியமாக்கப்படுவது உழைப்புசக்தியின் சந்தைமயமாக்கலுக்கு, அதாவது மனித உழைப்பின் அந்நியமாக்கலுக்கு, வழிகோலுகிறது. இந்தச்சூழலில் மனிதரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சந்தையில் பரிமாற்றப் பெறுமதிகளாகப் பணத்திற்கு ஊடாக மனிதர் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. சமூக உறவுகள் மனிதரால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் உறவுகளாக உருவெடுக்கின்றன. யதர்த்தம் தலைகீழாகப் பிரதிபலிக்கப்படுகிறது. பண்டம் உள்ளடக்கும் பெறுமதிக்கும் அதை உற்பத்தி செய்த மனிதர்களுக்குமிடையிலான தொடர்பு அறுபட்டுப் போவதால் கண்ணுக்குத் தெரிவதில்லை. பண்டங்களுக்குக் கிடைக்கும் இந்த இந்தப் போலி வழிபாட்டுப் பெருமைநிலை (fetishism) முதலாளித்துவ சமூக அமைப்பின் ஒரு குணாதிசயம்.[iii]

முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ´மனிதர் – இயற்கை´ உறவை மார்க்ஸ் ஒரு ´சமூக அனுசேப´ (social metabolic) உறவாக விவரிக்கிறார்.[iv] முதலாளித்துவ அமைப்பில் இந்த சமூக அனுசேபம் (social metabolism) தன்மை ரீதியான மாற்றங்களைக் காண்கிறது. அவருடைய அவதானிப்பில் முன்னேறும் முதலாளித்துவம் ஒரு புறம் வரலாற்று ரீதியான இயக்க சக்தியைச் செறிவாக்குகிறது மறுபுறம் அது மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான அனுசேப இணைப்பைச் சீரறுக்கிறது. மார்க்ஸ் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற ஆலைத்தொழில் புரட்சியின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்ந்தார். வளரும் நகரம் – நாட்டுப்புறம் வேறுபடுத்தலின் சுற்றுச்சூழலியல் ரீதியான தாக்கங்கள், விசேடமாக மண்வளத்தின் பாதிப்பு, உற்பத்தியாளர்களின் சமூக வாழ்நிலை போன்றவை, மற்றும் உற்பத்திச் சாதனங்களில், உற்பத்திச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் நிலைமைகள் ஆகியனவும் இதன் அம்சங்களாயின. இது தொடர்பான விஞ்ஞான ஆய்வுகளை – முக்கியமாக பௌதிகவியல், விவசாய இரசாயனவியல், பயிரியல் மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகள் சார்ந்த ஆய்வுகளை – தேடி வாசித்தார். துறைசார் விஞ்ஞானிகளுடன் கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்டார். அவருடைய ஆய்வின் அடிப்படையில் முதலாளித்துவத்தின் கீழ் தீவிரமடையும் நகரம் – நாட்டுப்புறம் எனும் புவியியல்சார் வேறுபடுத்தல் சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையே நிலவும் அனுசேபவழிப் பரஸ்பர தங்கிநிற்றலில் (metabolic interdependence) சீர்படுத்தமுடியாத பிளவினை (irreparable rift) ஏற்படுத்துகிறது எனும் முடிவுக்கு வந்தார்.

மார்க்ஸ் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான சமூக அனுசேபவழி உறவில் ´பிளவு´ (rift) ஏற்பட்டுள்ளதென விளக்கினார். அவரின் இந்தக் கருத்துருவிற்கு ´metabolic rift´ – ´அனுசேபப் பிளவு´ – எனும் பதத்தை John Bellamy Foster 1999ஆம் ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையில் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டு அவர் எழுதிய ´Marx´s Ecology´ (மார்க்சின் சுற்றுச்சூழலியல்) எனும் தலைப்பிலான நூலில் அந்தக் கருத்துருவை மார்க்சின் எழுத்துக்களின் உதவியுடன் விரிவாக விளக்கியுள்ளார். மனித தொழிற்போக்கு இயற்கை தரும் பொருளை இயற்கையின் உதவியுடன் மனித பயன்பாட்டிற்கு உரிய ஒன்றாக மாற்றும் செயற்பாடென மார்க்ஸ் கொடுக்கும் விளக்கங்கள் மற்றும் உழைப்பு சக்தி பற்றிய மார்க்சின் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதிதாக அறியப்பட்ட வெப்பவேதியியல் (thermodynamics) விதிகளுக்கு இசைவானவை என Foster மற்றும் Burkettஇணைந்து 2016 ஆம் ஆண்டில் எழுதிய Marx and the Earth – An Anti-critique எனும் நூலில் ஆதாரங்களுடன் விளக்குகிறார்கள். சில சுற்றுச்சூழலியல்சார் சோஷலிசவாதிகளும் மார்க்சிச எதிர்ப்பாளர்களும் மார்க்சும் எங்கெல்சும் சுற்றுச்சூழலின் சீரழிவு பற்றி அக்கறைப் படவில்லை என முன்வைத்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் நோக்கிலேயே இந்த விரிவான நூலை அவர்கள் எழுதியுள்ளார்கள். மேலும் இந்த நூல் இயற்கை – சமூகம் உறவுகள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், மற்றும் சுற்றுச்சூழலியல்சார் பொருளியல் தொடர்பாக மார்க்சிசம் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பதில்களை வழங்குவதுடன் அனுசேபப் பிளவு பற்றியும் பேசுகிறது. (Foster and Burkett, 2016).

1977 ஆம் ஆண்டு இரசாயனவியல் நோபல் பரிசைப் பெற்றவரான Ilya Prigogine மற்றும் அவரின் சக ஆய்வாளாரான Isabelle Stengers இன் கருத்தில் இயங்கியல் பொருள்முதல்வாத அணுகுமுறையை கொண்டிருந்த மார்க்சும் எங்கெல்சும் இயற்கை பற்றிய யாந்திரீக ரீதியான கோட்பாட்டை நிராகரித்தனர். இயற்கையின் வரலாற்று ரீதியான மாற்றப்போக்கு பொருள்முதல்வாதத்தின் ஒரு அம்சம் எனும் கருத்தை மார்க்சும், மேலும் விபரமாக, எங்கெல்சும் வலியுறுத்தி வந்துள்ளனர். அத்துடன் மீள்திரும்பவியலாமை (irreversibility) வகிக்கும் ஆக்கபூர்வமான பங்கு பற்றிப் பௌதிகவியலின் சமகால ஆய்வுகளின் கண்டுபிடிப்புக்கள் பொருள்முதல்வாதிகள் நீண்டகாலமாக எழுப்பிவந்த ஒரு விடயம் பற்றியதெனவும் குறிப்பிடுகிறார்கள். இது தொடர்பாக எங்கெல்ஸ் தனது Dialectics of Nature (இயற்கையின் இயங்கியல்) நூலில் குறிப்பிடும் பின்வரும் மூன்று அடிப்படையான கண்டுபிடிப்புக்களை மேற்கோள் காட்டுகிறார்கள்: சக்தியும் அதன் தன்மைரீதியான மாற்றங்களை ஆளும் விதிகளும், கலம் (cell) உயிரின் அடிப்படையான தொகுதிக்கூறு, மற்றும் டார்வின்னின் உயிரினங்களின் பரிணாமக் கோட்பாடு. இந்தப் பின்னணியில் யாந்திரீக உலகப் பார்வை (mechanistic world view) மரணித்துவிட்டதெனும் முடிவுக்கு எங்கெல்ஸ் வந்தார். (Prigogine and Stengers, 1985). இந்தத் தகவல்கள் இயற்கை பற்றிய மார்க்சிசப் பொருள்முதல்வாதப் பார்வையை மேலும் தெளிவுபடுத்த உதவும் என நம்புகிறேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்ஸ் இனங்கண்ட அனுசேபப் பிளவு இன்று இருபத்தியோராம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் விருத்தி மற்றும் அதன் உலக ரீதியான பரவலுடன் பன்முக பரிமாணங்களைக் கொண்ட சுற்றுச்சூழல் பிரச்சனையாகி மனித மற்றும் உயிரினங்களின் இருப்பை மிகவும் மோசமான இடர்பாட்டிற்கு உள்ளாக்கியுள்ளது. அப்பொழுதே அவர் முதலாளித்துவ அமைப்பின்  அனுசேபப் பிளவு சீர்படுத்தமுடியாதது எனும் அவதானிப்பைப் பதிவிட்டார். இதன் அர்த்தம் முதலாளித்துவ அமைப்புக்குள் அந்தப் பிளவைச் சீரமைக்க முடியாது என்பதே (Foster, 2000; Foster et al 2010; சமுத்திரன், 2017, 2023: தொகுதி 2). 1860களிலிருந்து மார்க்ஸ் இயற்கை விஞ்ஞான ஆய்வுகளில் மட்டுமின்றி புராதன – அதாவது முதலாளித்துவத்திற்கு முந்தைய, விசேடமாக ஐரோப்பாவைச் சாராத நாடுகளின் சமூக அமைப்புகள் பற்றிய ஆய்வுகளைத் தேடி வாசித்தார். இதனால் மார்க்ஸ் பெற்ற அறிவு முதலாளித்துவ அமைப்புக்கு ஒரு மாற்று அமைப்பாக கம்யூனிசம் பற்றிய அவருடைய சிந்தனைமீது முக்கியமான செல்வாக்கை செலுத்தியுள்ளதென அந்தக் காலங்களில் அவர் எழுதிய குறிப்புப் புத்தகங்களை (தொடரும் MEGA திட்டத்தின் கீழ்) வாசித்து ஆய்வு செய்த ஒரு சிலரில் ஒருவரான கோஹெய் சைத்தொ எழுதியுள்ளார். 1860களில் மார்க்ஸ் முன்னர் கொண்டிருந்த ´தொழில்நுட்பவியல்சார் உற்பத்தித்திறன் வாதத்திலிருந்து´ விடுபட்டு அதன் பாதகமான விளைவுகள் பற்றிச் சிந்தித்தார் என சைத்தொ  தனது ´Marx in the Anthropocene´ (நவமானிடயுகத்தில் மார்க்ஸ்) எனும் தலைப்பிலான, சர்ச்சைக்குரிய கருதுக்களையும் உள்ளடக்கிய, நூலில் பதிவிட்டுள்ளார் (Saito, 2022).[v]

மனிதர் இயற்கையின் அம்சமாயிருக்கும்போதும், இந்த இருவழி உறவு ஒரு கூட்டுப் பரிணாமப் போக்கிலானதாயினும் இயற்கையின் விதிகள் (natural laws) புறநிலைபூர்வமானவை, அதாவது சமூகத்தினால் நிர்ணயிக்கப்பட்டவை அல்ல. மனிதர்களால் ஆக்கப்படும் சமூக விதிகள் காலத்திற்கூடாக மாற்றம் அடைவன. ஆனால் மனித வாழ்வின் இயற்கைமீதான தங்கிநிற்பு தவிர்க்கமுடியாதது, அறுதியானது அதாவது நித்தியமானது.[vi] சமூக அமைப்பைப் பொறுத்து இயற்கையுடனான சமூக அனுசேபம் வேறுபடலாம், இயற்கைமீதான தாக்கங்களின் எதிர்வினைகள் மனித வாழ்வைப் பாதிக்கலாம், ஆனால் மனிதரின் இயற்கைமீதான தங்கிநிற்பு சகல வரலாற்றுச் சூழல்களுக்கும் மாற்றங்களுக்கும் ஊடாக நிரந்தரமானது. சுற்றுச்சூழலியல் பிரச்சனை இயற்கையுடனான சமூக அனுசேப ஒழுங்கமைப்புக்கும் சமூகத்திடமிருந்து சுயமாக இயங்கும் இயற்கையின் விதிகளுக்குமிடையிலான முரண்பாட்டிலிருந்து பிறக்கிறது (Saito, 2022). உதாரணமாக, புதைபடிவ எரிபொருட்களில் தங்கியிருக்கும் சமூக அமைப்பில் கரிம வெளியீடு ஏறிச் செல்வது புவியின் வெப்பமாக்கலை அதிகரிக்கிறது. இதுபோன்ற வேறு பல உதாரணங்களை எனது முன்னைய கட்டுரைத் தொடரில் காணலாம். இவையெல்லாம் அனுசேபப் பிளவிற்கான காரணிகள். சுற்றுச்சூழலியல்சார் பேண்தகைமை (ecological sustainability) மேலே குறிப்பிட்ட முரண்பாட்டுடன் அடிப்படையான தொடர்பைக் கொண்டுள்ளது. இது சமூக அமைப்பிற்கும் இயற்கைக்கும் இடையிலான உறவுக்கு நம்மை மீண்டும் எடுத்துச் செல்கிறது.

வரலாற்று நோக்கில், முதலாளித்துவ அமைப்பில் இந்த முரண்பாடு மிகவும் ஆழமாகி அழிவு சக்திகள் தலைவிரித்தாடுகின்றன. விசேடமாக இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின் விஞ்ஞானத்தின் விருத்தியும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் தனியார்துறையின் இலாபத் திரட்டலுக்கு ஆற்றிய சேவையின் விளைவாக உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கிற்கும் இயற்கைசார் செல்வத்தின் மீளுற்பத்தியை இயக்கும் விதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவு அளவுரீதியிலும் தன்மைரீதியிலும் மிகவும் பாரதூரமானது. ஒரு புறம் முன்பைவிட அதிகளவிலான இயற்கை வளங்களின் பாவனையும் பண்ட உற்பத்தியும் மறுபுறம் உற்பத்தி மற்றும் நுகர்வின் விளைவாக உயிரியல்ரீதியாகச் சிதைக்கமுடியாத (non-biodegradable), நச்சுத்தன்மைமிகுந்த கழிவுகளின் வெளிவாரியாக்கலும் உலக முதலாளித்துவத்தை ஒரு புதிய பூகோள ரீதியான சிக்கலுக்குள் கொண்டுவந்துள்ளன. இதன் காரணமாக மனித பொருளாதார செயற்பாடுகள் பூமியில் உயிர்வாழ்தலுக்கு வேண்டிய அடிப்படை நிலைமைகளை முற்றிலும் புதிய வழிகளில் பாதிக்கத் தொடங்கியுள்ளன. மூலதனத் திரட்டலின் தேவைக்காக இயற்கை பயன்படுத்தப்படும் வழிமுறைகள் மனித மேம்பாட்டிற்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன (Burkett, 2014; Foster,1994; 2024). இது  அனுசேபப் பிளவின் ஒரு பரிமாணம்.

இது மேலும் மோசமாகும் ஆபத்துப் பற்றிச் சில சமீபகால ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. 1970களிலிருந்து பொருளாதார வளர்ச்சி வீதத்தில் தேக்கத்தை அல்லது வீழ்ச்சியை அனுபவித்துவரும் செல்வந்த நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான்) தமது பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படுகின்றன. இந்தப் பொருளாதாரங்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன. ஒரு மட்டத்தில் உற்பத்தித்திறன் வளர்ச்சியின் மந்தநிலை, எழுந்துவரும் பொருளாதாரங்களின் போட்டி, உற்பத்திக்குத் தேவையான புதைபடிவ எரிபொருள் மற்றும் இயற்கை வளங்களின் கேள்வி அதிகரிப்பும் அதன் விளைவாக அவற்றின் விலைகளின் வளர்ச்சியும் போன்ற பிரச்சனைகள். இவற்றின் விளைவாக இயற்கை வளங்களின் அபகரிப்பும்   சுற்றுச்சூழலின் சீரழிவும் அதிகரிக்கின்றன. (Schmelzer et al, 2022).

முதலாளித்துவமும் மனித மேம்பாடும்

முதலாளித்துவத்தின் வரலாறு பதினாறாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறதென்பது பல ஆய்வாளர்களின் கருத்து. ஆயினும் பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில், குறிப்பாக இங்கிலாந்தில், எழுச்சி பெற்ற ஆலைத்தொழில் புரட்சி இந்த வரலாற்றின் முக்கியமான நவீன திருப்புமுனை என்பதும் இன்று பொது அறிவாகிவிட்டது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக பல நெருக்கடிகளுக்கூடாக மீண்டு தனது ஆதிக்கத்தின் தொடர்ச்சியையும் விரிந்துசெல்லும் வளர்ச்சியையும் உறுதிசெய்யும் ஆற்றலை முதலாளித்துவம் வெளிப்படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இந்த வரலாற்றுக்கு முரண்பாடுகள் மிகுந்த பல பக்கங்கள் உண்டு. இந்த வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்த்தால் காலனித்துவ ஆக்கிரமிப்புக்களும் காலனி நாடுகளின் இயற்கை வளங்களின் அபகரிப்பும் அதன் முக்கிய அம்சமெனும் உண்மை தெளிவாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை அடிமை வணிகமும் இந்த ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாயிருந்தது. முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் இன்னும் உருப்பெறாத சமூகங்களின் செல்வங்களின் அபகரிப்புக்கள் மட்டுமின்றி அடிமை உழைப்பின் சுரண்டலும், நிறவாத ஒடுக்குமுறையும் மேற்கின் முதலாளித்துவ அபிவிருத்திக்கு உதவின. ஏகாதிபத்திய ஆதிக்கம் இன்றுவரை தொடர்கிறது. சுற்றுச்சூழலியல் ஏகாதிபத்தியம் (ecological imperialism) அதன் ஒரு பிரதான பரிமாணமாகும் (Foster et al, 2010; சமுத்திரன், 2023: தொகுதி 2).

இந்தக் கட்டுரையின் நோக்கத்தைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முரண்பாட்டை நினைவூட்ட விரும்புகிறேன். சுருக்கமாகச் சொல்வதாயின் இது மூலதனத் திரட்டலுக்கு வேண்டிய அல்லது சாதகமான இயற்கைசார் நிலைமைகளுக்கும் மனித மேம்பாட்டிற்கு அவசியமான இயற்கைசார் நிலைமைகளுக்கும் இடையிலான முரண்பாடு பற்றியது (Burkett, 2006). இதை விளக்கும் சில உதாரணங்களை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். இதைப் பற்றிய புரிந்துணர்வு சுற்றுசூழல்சார்ந்த நெருக்கடிகளை ஆராய்ந்து வகைப்படுத்த உதவுகிறது. அதாவது, முதலாளித்துவத்தைத் தக்கவைக்க உதவும் சுற்றுச்சூழல் பராமரிப்புக்கும் பேண்தகு மனித மேம்பாட்டிற்கு உதவும் சுற்றுச்சூழல் பராமரிப்புக்கும் இடையிலான வேறுபாடு அடிப்படையானது. முன்னையதன் முன்னுரிமைகள் பின்னையதனிடமிருந்து வேறுபடுகின்றன. ஆகவே இரண்டு வகையான சுற்றுச்சூழல் நெருக்கடிகளை இனங்காணலாம். ஒன்று, மூலதனத் திரட்டலின் சுற்றுச்சூழல் நெருக்கடிகள். இவை மூலதனத்தின் பொருள் ரீதியான தேவைகளை உரிய நேரத்தில் வேண்டிய அளவிலும் தரத்திலும் கிடைப்பதற்கும் அந்த மூலவளங்களின் உற்பத்தியின், கிடைக்கும்தன்மையின், இயற்கை ரீதியான நிலைமைகளுக்கும் இடையிலான உறுதியின்மை அல்லது சமநிலையின்மை தொடர்பானது. மற்றது மனித மேம்பாட்டின் தன்மைரீதியான பொதுவான நெருக்கடிக்குக் காரணமான முதலாளித்துவ ஆலைத்தொழில்விருத்தியின் தொழிற் பிரிவு தொடர்பான நகரம் – நாட்டுப்புறம் வேறுபடுத்தலின் மற்றும் பலவிதமான மாசுபடுத்தலின் விளைவான சுற்றுச்சூழல் சீரழிவு. இந்த இரண்டும் ஒன்றொடொன்று தொடர்புள்ளன. இவை இரண்டும் முதலாளித்துவ அமைப்பில் இயற்கை செல்வத்தின் அளவுரீதியான மற்றும் தன்மைரீதியான வீழ்ச்சியுடன் தொடர்புள்ளவை. இயற்கை வளங்களை தொழிலாளரின் உழைப்புச் சக்தியைப் பயன்படுத்தி உள்ளீடுகளாக எடுத்துக்கொள்வதுடன் மனித மற்றும் உயிரினங்களின் நலனைப் பாதிக்கும் கழிவுப் பொருட்களையும் மூலதனம் சுற்றுச்சூழலிடம் வெளிவாரிப்படுத்துகிறது. சுற்றுசூழல் நெருக்கடி பற்றிய பரந்த பார்வையில் இயற்கை செல்வத்தின் சீரழிவு எந்த வழிகளில் மனித மேம்பாட்டையும் பொதுவான சமூக நலனையும் பாதிக்கிறது எனும் கேள்வி மார்க்சிச அணுகுமுறையில் முக்கிய கவனத்தை பெறுகிறது. சுற்றுசூழலின் சீரழிவினால் முதற் கட்டத்திலிருந்தே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவோர் உழைக்கும் மற்றும் விளிம்புநிலையில் வாழும் மக்களே. அனுசேபப் பிளவின் தொடர்ச்சி பேண்தகு மனித மேம்பாட்டிற்கு அவசியமான இயற்கைசார் நிலைமைகளைச் சீரழிக்கிறது (Burkett, 2006, 2014).

சமீப தசாப்தங்களில் அபிவிருத்தி பற்றிய கதையாடல்களில் மனித மேம்பாடு (Human Development – HD) ஒருஇடத்தைப் பெற்றுள்ளது (சமுத்திரன், 2023: தொகுதி 1, அத்தியாயம் 8). மனித அபிவிருத்தி என்பதற்குப் பதிலாக நான் மனித மேம்பாடு எனும் பதத்தையே பயன்படுத்தி வந்துள்ளேன். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்ட நிறுவனத்தின் (UNDP) முதலாவது மனித அபிவிருத்தி ஆண்டறிக்கை 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது. எதிர்பார்ப்பு ஆயுட்காலம், கல்வி மட்டம் மற்றும் தலா வருமானம் (GNI/Capita) ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு சுட்டி மனித அபிவிருத்திச் சுட்டி (HDI) என அழைக்கப்படுகிறது. காலப் போக்கில் அசமத்துவம், பால்நிலை போன்ற அம்சங்களுக்கும் சுட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வருடம் தோறும் UNDP வெளியிடும் அறிக்கை ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் பயனுள்ள பல தகவல்களைத் தருகிறது. HDI வெறும் தலா வருமானத்தையும் விட அர்த்தமுள்ள புள்ளிவிபரமாகும். அது ஒரு நாட்டில் இருக்கும் சமூக முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பங்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் வருமானத்தின் பங்கீடு ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. ஆனால் மனித மேம்பாடு (மனித அபிவிருத்தி) என்பதற்கு  கொடுக்கப்படும் விளக்கம், மற்றும் ஒரு குறிப்பான சமூக அமைப்பில் அதை அடைவதற்கு சகலருக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றிற்கும் சுற்றுச்சூழலியல்சார் பேண்தகமைக்கும் உள்ள உறவு அடிப்படையானது.

மனித மேம்பாடு எனும் கருத்துரு மனித வாழ்வின் தொடர்ச்சியான தன்மைரீதியான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது வாழ்வின் அவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அப்பால் ஒவ்வொருவரும் தனது உள்ளார்ந்த ஆற்றல்களை மெய்மையாக்கக் கிடைக்கும் சுதந்திரம், சந்தர்ப்பம் பற்றியது. கட்டாயநிலைக் களத்திலிருந்து (realm of necessity) சுதந்திரத்தின் களத்தை (realm of freedom) நோக்கிய நகர்ச்சியாக இதைக் கண்ட மார்க்ஸ் இயற்கை இடுகின்ற கட்டுப்பாட்டிற்கு அமையவே அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார். பேண்தகு மனித மேம்பாடு இந்த இயற்கைசார் கட்டாயநிலையை ஒரு நிரந்தரமான அடிப்படையாகக் கொள்கிறது. இது மனித விடுதலையை இலக்காகக் கொண்ட சுற்றுச்சூழலியல் சோஷலிச – கம்யூனிச சமூக மாற்றம் பற்றிய பார்வையை நெறிப்படுத்தும் அடிகோள். மனிதருக்கிடையிலான உறவுகளைப் பண்டங்களுக்கிடையிலான உறவுகளாகக் காட்டும் முதலாளித்துவ அமைப்பின் வர்க்கரீதியான சுரண்டல், அந்நியமாக்கல் மற்றும் பால்,இனரீதியான பாகுபாடு மனிதரின் ஆற்றலுடைமைகளின் விருத்திக்கூடான தன்மெய்மையாக்கலுக்குத் (self-actualization) தடைகளாயிருக்கின்றன. இது பற்றி மேலும் பின்னர் பார்ப்போம். இங்கு இன்றைய உலக நிலைமைகளில்  மனித மேம்பாடு பெற்றுள்ள இடம் எத்தகையது என்பது பற்றி ஒரு சில வார்த்தைகள்.

மனித மேம்பாட்டைப் பிரதான இலக்காகக் கொண்ட சமூகத்தில் நாம் வாழவில்லை. ஆயினும் ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஒரு நாட்டின் அபிவிருத்தியை மதிப்பிடும்போது மனித மேம்பாடு பற்றிய சில குறிகாட்டிகள்முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு காலத்தில் வாழ்கிறோம். இத்தகைய மதிப்பீடுகளின் அடிப்படையில் மனித மேம்பாட்டு நிலைமைகளில் நாடுகளுக்கு இடையேயும் உள்ளேயும் வேறுபாடுகளைக் காண்கிறோம். முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான விருத்திக்கு மனித வினைத்திறனின் விருத்தி, அதாவது உற்பத்தி சக்திகளின் விருத்தி,இன்றியமையாததாகும். பொருளாதாரக் கொள்கை மட்டத்தில் இது மனித வள அபிவிருத்தி (human resource development), மனித மூலதன அபிவிருத்தி (human capital development) எனப் பரவலாக அறியப்படுகிறது. முதலாளித்துவ சமூகத்தில் ஒருவரின் மனித மேம்பாட்டிற்கான சந்தர்ப்பங்கள் பெருமளவில் இந்தக் கொள்கையுடன் தொடர்புள்ளன. இந்த அமைப்பில் மனித மேம்பாட்டிற்கான சந்தர்ப்பங்களின் முன்னேற்றத்திற்குப் பொருளாதார ஜனநாயகம் மற்றும் சுதந்திரங்களுக்கான போராட்டங்கள் பெரும் பங்களிப்பினைச் செய்துள்ளன. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்திலிருந்து தொழிலாளரின் வாழ்விற்கு ஊதியம் மாத்திரமன்றி வேலை நேரத்தின் நீளமும் (lenghth of the working day) ஒரு போராட்டத்திற்குரிய உரிமைப் பிரச்சனையாயிற்று. வேலை நேரத்தைக் குறைக்கக் கோரும் போராட்டத்தின் மிக நீண்ட வரலாறு மற்றும் சிறார்களின் உழைப்பின் சுரண்டல் பற்றி மார்க்ஸ் மூலதனம் முதலாம் பாகத்தில் (அத்தியாயம் 10) விரிவாகப் பதிவிடுகிறார். நியாயமான ஊதியம் மற்றும் அடிப்படைப் பாதுகாப்புள்ள தொழிற் சூழல் போன்ற கோரிக்கைகளும் இந்தப் போராட்டத்தின் அம்சங்களாயின.

தொழிலாளரின் உழைப்பு சக்தியின் அன்றாட மீளுற்பத்தியும் ஒரு வர்க்கமாக அவர்களின் சந்ததிகளுக்கூடான மீளுற்பத்தியும் முதலாளி வர்க்கத்தின் நலனுக்கு இன்றியமையாதன எனும் விடயத்தையும் மார்க்ஸ் விளக்குகிறார். தொழிலாளியின் பண்டமயமாக்கப்பட்ட உழைப்புச் சக்தி மற்றைய பண்டங்களையும் விட வேறுபட்டது. அந்த உழைப்பு சக்தி பெறுமதியை உற்பத்தி செய்கிறது அதுவும் அதை விற்கும் தொழிலாளி பெறும் ஊதியத்தையும் விட அதிகமான பெறுமதியை, அதாவது உபரிப் பெறுமதியை, உற்பத்தி செய்கிறது. ஆகவே தொழிலாளியின் உழைப்பு சக்தி தினமும் மீளுற்பத்தி செய்யப்படுவது மூலதனத்தின் ஒரு அடிப்படைத் தேவையாகிறது. தொழிலாளியைப் பொறுத்தவரை வேலை நேரத்திற்கு அப்பால் தனது அறிவுபூர்வமான சுயவிருத்தி, குடும்ப வாழ்வு மற்றும் பொழுது போக்கு ஆகியவற்றின் தேவைகளும் முக்கியமானவை. ஆயினும் சமூக மீளுற்பத்திக்கு பெண்கள் தாய்மார்களாக மற்றும் வீட்டுப் பொருளாதாரத்தின் பங்காளர்களாக வழங்கும் கூலியற்ற உழைப்பின் பங்கு பற்றி மார்க்ஸ் போதியளவு கவனம் எடுக்கவில்லை என அறியப்பட்ட குறைபாடு கடந்த நூற்றாண்டில் மார்க்சிச பெண்ணியவாதிகளால் விமர்சிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டது.

சமூக நலத் தேவைகளை முற்றாக ஒதுக்கிவிடும் கொள்கை முதலாளித்துவ அமைப்பின் மீளுற்பத்திக்கும் அரசியல் ரீதியான நியாயப்பாட்டிற்கும் உகந்ததல்ல என்பது தெளிவாகிறது. ஆனால் மூலதனம் – உழைப்பு வர்க்க முரண்பாட்டில் தொழிலாளர்கள் வென்றெடுக்கக்கூடிய உரிமைகள் அவர்களின் கூட்டான போராட்ட சக்தியிலும் முதலாளித்துவ அரசிற்குள்ளே நிலவும் அரசியல் சக்திகளின் சமன்பாட்டிலும், முக்கியமாக அரசின் ஒப்பீட்டுரீதியான சுயாதீனத்திலும் (relative autonomy) தங்கியுள்ளது. இந்த வகையில் இருபதாம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் சீர்திருத்தங்களுக்கூடாக உருவாக்கப்பட்ட சமூகநல அரசு முக்கியத்துவம் பெறுகிறது. மறுபுறம் ஊதியம் மற்றும் சமூகப்பாதுகாப்பு சார்ந்த முன்னேற்றங்களால் உழைக்கும் வர்க்கத்தவரும் பொது மக்களும் மட்டும் பயனடைவதில்லை. முதலாளி வர்க்கத்திற்கும் தரமான தொழிற்படை (அபிவிருத்திப் பொருளியலின் மொழியில் ´மனித மூலதனம்´) கிடைக்கிறது. தொழிலாளர்களின் மெய் ஊதியம் உயரும்போது அவர்களின் வாங்கும் சக்தியும் உயர்கிறது. இதனால் பண்டங்களின் கேள்வி அதிகரிக்கிறது. அத்துடன் சமூகப் பாதுகாப்புக் கொள்கையால் அந்த சமூக அமைப்பின் அரசியல் ரீதியான நியாயப்பாடும் பலமடைகிறது. ஆகவே பெற்ற உரிமைகளெல்லாம் தொழிலாள வர்க்கத்தின் வெற்றியென மட்டும் ஒருதலைப் பட்சமாகப் பார்ப்பது முழுமையான மதிப்பீடாகாது.

வேலை நேரத்தின் நீளத்தைக் குறைப்பதற்கான போராட்டம் தொழிலாளியின் ஓய்வு நேரத்திற்கான போராட்டமும்தான். உழைப்பிற்கு அப்பால் தொழிலாளர் தமக்குத் திருப்திதரும் இருப்புக்களையும், செயற்பாடுகளையும் அனுபவிப்பதற்கும் சுயவிருத்திக்கும் போதியளவு ஓய்வுநேரம் கிடைக்கவேண்டும். ஆனால் அத்துடன் வேறு சுதந்திரங்களும் வசதிகளும் தேவைப்படும். மெய் ஊதியம், வேலைநேரம், பெண்களின் உரிமைகள்,மற்றும் கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த உரித்துடைமைகள் போன்றன நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள முதலாளித்துவ நாடுகளில் மனித மேம்பாட்டு வாய்ப்புகள் ஒப்பீட்டுரீதியில் வளர்ந்திருப்பதைக் காணலாம். ஆனால் சர்வதேசரீதியாக நடைமுறையிலிருக்கும் நவதாராள சிக்கனவாத சந்தைமயமாக்கல் கொள்கையால் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரித்துடைமைகள் பெருமளவில் அகற்றப்பட்டுள்ளன. முன்னர் போராடிப் பெற்ற உரிமைகள் பலவற்றை மக்கள் இழந்துள்ளனர். பொது மக்களின் மனித நன்னிலை மூலதனத்தின் நலனுக்கு – இலாப வீதத்தின் வளர்ச்சிக்குக் – கீழ்ப்படுத்தப்படும் அமைப்பில் மனித மேம்பாட்டின் உறுதியான, முழுச் சமூகமும் சார்ந்த முன்னேற்றம் ஒரு யதார்த்தபூர்வமான இலட்சியமாகாது (சமுத்திரன், 2017, 2023: தொகுதிகள் 01, 02).

தன்னைத் தக்கவைக்கப் பேண்தகு அபிவிருத்திக் கதையாடல் மற்றும் பசுமை நிகழ்ச்சி நிரலைத் தன்வசமாக்குகிறது மூலதனம்

சமீப தசாப்தங்களில் பிரபலமடைந்துள்ள பேண்தகு அபிவிருத்தி (Sustainable Development), மற்றும் ´பசுமைப் பொருளாதாரம்´ (Green Economy ) பற்றிய அறிக்கைகள், கொள்கைகள் மற்றும் பிரச்சாரங்களை ஆராயும்போது மேலே குறிப்பிட்ட மூலதனக் குவியலுக்கு வேண்டிய இயற்கைசார் நிலைமைகளுக்கும் பேண்தகு மனித மேம்பாட்டிற்கு அவசியமான இயற்கைசார் நிலைமைகளுக்கும் இடையிலான முரண்பாட்டை, வேறுபாட்டை, மனங்கொள்ளல் அவசியம்.[vii] தான் உருவாக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தனது நலன்களைப் பேணும் வகையில் கையாளும் வழிவகைகளைக் கண்டுபிடிக்கிறது மூலதனம். முதலாளர் வர்க்கத்தின் பார்வையில், இந்தப் பிர்ச்சனைகள் மூலதனத்தின் வளர்ச்சியை எப்படிப் பாதிக்கின்றன, எத்தகைய தடைகளைப் போடுகின்றன,அவற்றிலிருந்து விடுபடும் வழிவகைகள் என்ன, அவற்றின் செலவு – வரவு கணக்கு என்ன போன்ற கேள்விகள் முன்னுரிமை பெறுகின்றன. மூலதனத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான உறவின் மீளுற்பத்தி மூலதனத்தின் மீளுற்பத்தியின் முன்நிபந்தனையாகும். சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தையும் அதற்குரிய தொழில்நுட்பவியலையும் இலாபம் தரவல்ல துறைகளாக்கி இயற்கைமீதான தனது மேலாதிக்கத்தை மூலதனம் நிலைநிறுத்துகிறது. எனது முன்னைய கட்டுரைத்தொடரில், மார்க்சின் மேற்கோளுடன், விளக்கியுள்ளது போல் மூலதனத்தின் விரிவாக்கப்பட்ட மீளுற்பத்தியை நோக்காகக் கொண்ட அமைப்பில் இயற்கையின் தடைகளுக்கும் அதன் எல்லைகளுக்குமிடையிலான வேறுபாடு அர்த்தமிழந்து போகிறது; அதாவது எல்லைகளும் மீறப்படக்கூடிய தடைகளே (சமுத்திரன், 2017, 2023: தொகுதி 2).

´பேண்தகு அபிவிருத்தி´ கருத்துருவுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. ஆயினும் 1987ஆம் ஆண்டு வெளிவந்த ஐ. நா பொதுச்சபையின் ´சூழல் மற்றும் அபிவிருத்தி பற்றிய உலக ஆணைக் குழு´ (World Commission on Environment and Development, WCED) வெளியிட்ட ´Our Common Future´ (நமது பொது எதிர்காலம்) எனும் தலைப்பிலான அறிக்கை பேண்தகு அபிவிருத்தியை ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைப் பொருளாக்கியது. `எதிர்காலச் சந்ததிகள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலைப் பாதிக்காத வகையில் தற்காலச் சந்ததிகள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அபிவிருத்தியே பேண்தகு அபிவிருத்தி´ எனும் வரைவிலக்கணத்தை இந்த அறிக்கை பிரபலமாக்கியது. இந்த வாக்கியத்தைத் தனியாகப் பார்க்கும்போது நியாயமானதாகப் படலாம். ஆனால் தற்கால சந்ததிகளின் தேவைகளின் உற்பத்தியும் பங்கீடும் இலாப நோக்கிலான பண்டமயமாக்கலுக்குக் கீழ்ப்படுத்தப்படும் அரசியல் பொருளாதார அமைப்பில் நடைமுறைப் படுத்தப்படும்போது அதன் அர்த்தம் வேறுபடுகிறது. இது பற்றிப் பார்க்குமுன் 1987 WCEDஇன் அரசியல் பின்னணி பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். ஆணைக்குழுவிற்குத் தலைமை வகித்த Gro Harlem Brundtland அப்பொழுது நோர்வேயின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார். நோர்வேய் தொழிற் கட்சியின் தலைவாரான அவர் பின்னர் நாட்டின் பிரதமரானார். அவர் சார்ந்திருந்த சமூகஜனநாயக அரசியல் மரபின் செல்வாக்கு WCED இன் அறிக்கையில் பல இடங்களில் தென்படுகின்றது. அறிக்கையின் முகவுரையில் அவர் தனது சமூக ஜனநாயகவாத அரசியல் பின்னணி பற்றி அழுத்திக் கூறுகிறார். அதே முகவுரையில் அபிவிருத்தி பற்றிய தனது கருத்தையும் பின்வருமாறு பதிவிடுகிறார்:

´ஆலைத்தொழில்மயப்படுத்தப்பட்ட நாடுகளின் பல அபிவிருத்திப் பாதைகள் தெளிவாகப் பேண்தகைமையற்றவை. அத்துடன் இந்த நாடுகள் கொண்டிருக்கும் பேரளவுப்பொருளாதார (macroeconomic) மற்றும் அரசியல் அதிகாரம் காரணமாக அவை எடுக்கும் அபிவிருத்தி முடிவுகள் சகல மக்களினதும் மனித முன்னேற்றத்தைச் சந்ததிகளுக்கு ஊடாகத் தக்கவைக்கும் ஆற்றல் மீதும் ஆழமான விளைவை ஏற்படுத்தும்.´ (WCED,1987).

Brundtland அறிக்கை எனப் பிரபலமான WCED அறிக்கை உலக சுற்றுச்சூழல் நெருக்கடியின் பல்வேறு அம்சங்கள் பற்றிப் பல முக்கியமான தகவல்களையும் விளக்கங்களையும் தருகிறது. உலக மட்டத்தில் ´வடக்கு – தெற்கு´ஏற்றத்தாழ்வுகள், வறுமை, உலக பொதுச் சொத்துக்களின் (global commons) பாதுகாப்பின் முக்கியத்துவம் போன்றவை பற்றி அக்கறையுடன் கருத்துக்களையும் புள்ளிவிபரங்களையும் முன்வைக்கிறது. WCED இன் பேண்தகு அபிவிருத்திக் கொள்கையைப் பின்வரும் ஏழு நோக்கங்களின் கீழ் விளக்குகிறது: பொருளாதார வளர்ச்சியின் மீட்சி;வளர்ச்சியின் தன்மையை மாற்றுதல்; தொழில், உணவு, சக்தி, நீர் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்; பேண்தகு மட்டத்திலான சனத்தொகையை உறுதிப் படுத்தல்; வள அடிப்படையைப் பாதுகாத்தலும் அதிகரித்தலும்; தொழில்நுட்பவியலையும் ஆபத்து முகாமையையும் மீள்நோக்குக்கு உள்ளாக்கல்; மற்றும் முடிவுகள் எடுப்பதில் சுற்றுச்சூழலையும் பொருளியலையும் இணைத்தல்.

இந்த நோக்கங்களை அடைவது தொடர்பாக அறிக்கை முன்வைக்கும் வழிமுறைகளிடையிலான முரண்பாடுகளை விமர்சனக் கண்ணோட்டமுள்ள வாசகர் காணத் தவறமாட்டார். ஆயினும் இந்த அறிக்கை சுற்றுச்சூழலுக்கும் அபிவிருத்திக்கும் இடையிலான உறவு பற்றிய ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் வழி திறந்துவிட்டது. அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தனித்தனியாகப் பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளன எனும் பார்வையை WCED இன் அறிக்கை வலியுறுத்துகிறது. இதைப் பல ஆய்வாளர்கள் வரவேற்றுள்ளார்கள். அதே வேளை பொருளாதாரத்தில் அரசின் பங்கைப் பரிந்துரைக்கும் கெய்னீசிய  (Keynesean) சாயல் கொண்ட அதன் சீர்திருத்தவாதம் மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் சனத்தொகையியல் பற்றிய மிருதுவான மல்தூசியவாதத்தையும் (Malthusianism)விமர்சன நோக்கில் சுட்டிக்காட்டியுள்ளார்கள். (Adams, 1990). வேறு சிலர் அறிக்கை சிபார்சு செய்யும் பொருளாதார வளர்ச்சி வீதம் உலக ரீதியான வடக்கு – தெற்கு ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகமாக்கும், மற்றும் அந்த வளர்ச்சி நடைமுறையில் சுற்றுச்சூழல் மீது பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும் போன்ற விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். இந்த விமர்சனங்களை முன்வைத்தவர்களில் ஒருவரான அமெரிக்க சுற்றுச்சூழலியல் பொருளியலாளர் ஹேமன் டேலி (Herman Daly) பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறியப்பட்ட அவருடையநிலைமாறாப் பொருளாதாரக் (steady-state economy) கோட்பாட்டின் அடிப்படையில் பேண்தகைமைக்குத் தனது விளக்கத்தைக் கொடுத்தார். இதன்படி: பொருளாதாரம், சனத்தொகை மற்றும் வளங்களின் பாவனை ஆகிய மூன்றின் வளர்ச்சி வீதங்களும் சுழியமாக (zero) இருக்க வேண்டும். இவற்றின் அளவு ரீதியான வளர்ச்சி சுழியமாகக் கட்டுப்படுத்தப்படும் நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் அதேவேளை சமூகத்தின் மனித நலனின் தன்மை ரீதியான வளர்ச்சியையும் அடையமுடியும் என Herman Daly வாதிட்டார். இயற்கை வளங்களைப் பொறுத்தவரை புதைபடிவ வளங்களில் தங்கிநிற்பதைத் தொடர்ச்சியாகக் குறைத்து முற்றாக நிற்பாட்டும் வகையில் புதிப்பிக்கவல்ல வளங்களின் விருத்தியும் பாவிப்பும் வளர வேண்டிய வழிமுறைகளையும் அவரும் வேறு ஆய்வாளர்களும் வலியுறித்தினர் (Turner,1993; Daly, 1980). ஆயினும் இவர்கள் ஒரு மாற்று அரசியல் அமைப்புப் பற்றிய தெளிவான பார்வையை முன்வைக்கவில்லை.[viii]

இவை தொடர்பான விவாதங்கள் கல்வியாளர் மற்றும் சுற்றுச்சூழல்சார் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இடம்பெற்ற அதே வேளை பேண்தகு அபிவிருத்தியின் கொள்கையாக்கல் துரிதமாக நவதாராளமயமாக்கப்பட்டது.[ix] Brundtlandஅறிக்கை வெளிவந்த காலம் நவதாராளவாதம் எழுச்சிபெற்றுக் கொண்டிருந்த காலம். நவதாராள சீர்திருத்தவாத அலைக்கு முன்னால் சமூக ஜனநாயக சீர்திருத்தவாதம் தொடர்ந்து பின்வாங்க ஆரம்பித்துவிட்ட காலம். இந்தச் சூழலில் WCED இன் அறிக்கை வெளிவந்ததும் உடனடியாக உலக வங்கி ´பேண்தகு அபிவிருத்தியை´சர்வதேசமயப்படுத்துவதில் தீவிரமாகச் செயற்பட்டது. வங்கியின் அபிவிருத்திக் கொள்கைக்கு அமைய சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குச் சந்தை மற்றும் தனியுடைமையாக்கல் சார்ந்த தீர்வுகள் வலியுறுத்தப்பட்டன. 1992 இல் பிராசில் நாட்டின் தலைநகர் றியோ டி ஜனெறோ (Rio de Janero)வில் இடம்பெற்ற Earth Summit (புவி உச்சி மாநாடு) இதை மேலும் உலகரீதியில் முன்னெடுக்க உதவியது. WCED இன் அறிக்கையைத் தொடர்ந்து பேண்தகு அபிவிருத்தி தொடர்ந்து நவதாரளவாதம்சார்ந்த கொள்கையாக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் 1980களில் றேகன் – தாட்ச்சர் (Reagan – Thatcher) தலைமையில் நவதாராள உலகமயமாக்கல் அலை உறுதியாக முன்னேறிக்கொண்டிருந்தது. 1960-70களில் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் பலமாக இயங்கிய சுற்றுச்சூழல் இயக்கங்கள்கூட 1980களில் இந்த அலையால் உள்வாங்கப்பட்டு அவற்றிடமிருந்த எதிர்ப்பாற்றலை இழந்துவிட்டன. பல சுற்றுச்சூழலிச (environmentalist) அமைப்புக்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டாகச் செயற்படும்வகையில் தமது கொள்கையை மாற்றிக் கொண்டன (Klein, 2014).

2008 இல் உலகை உலுக்கிய நிதி நெருக்கடிக்குப் பின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதில் கண்ணாயிருந்த சர்வதேச நிறுவனங்கள் ´பசுமை வளர்ச்சி, பசுமைப் பொருளாதாரம்´ (green growth, green economy) கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படத் தொடங்கின. புதிப்பிக்கவல்ல வளங்களின் பயன்பாட்டிற்கு இந்தக் கொள்கை முக்கியத்துவம் கொடுத்தது. ஆயினும் இயற்கை வளங்களின் பயன்படுத்தலைப் பொறுத்தவரை இந்த அணுகுமுறை சந்தைமயமாக்கல் மற்றும் தனியுடைமையாக்கலின் அதாவது நவதாராள முதலாளித்துவத்தின் தொடர்ச்சிக்கே உதவியது (Graham, 2019). இந்தக் கொள்கைப் போக்குகளின் விளைவுகளைச் சில ஆதாரங்களின் உதவியுடன் ஆராய்வோம்.

´பேண்தகு அபிவிருத்தி´ பிரதான கொள்கையாக்கப்பட்ட காலத்தில் Intergovernmental Panel on Climate Change (IPCC – காலநிலை மாற்றம் பற்றிய அரசாங்கங்களுக்கு இடையிலான குழு) புவியின் வெப்பமாக்கல் பற்றிய முதலாவது அறிக்கையை 1990 ஆம் ஆண்டு வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் 1992 ஆம் ஆண்டு Rio de Janero வில் புவி உச்சி மாநாட்டில் UN Framework Convention on Climate Change (UNFCC) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஐ.நா அங்கத்துவ நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் காலநிலை மாற்றம் தொடர்பாகப் பல நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கங்கள் வாக்குக் கொடுத்தன. விசேடமாக வளிமண்டலத்தை அசுத்தப்படுத்தும் பசுமைஇல்ல வாயுக்களின் – முக்கியமாக கரியமிலவாயு CO2 –  வெளிப்படுத்தலைக் குறைப்பது இந்த வாக்குறுதிகளில் அடங்கும். ஆனால் 2012ஆம் ஆண்டின் IPCC அறிக்கையின்படி பூகோளமட்ட CO2 வெளிப்பாடு 1990 ஆண்டையும்விட 2012இல் 58 வீதம் அதிகமாயிருந்தது. 2012இல் IPCC தனது ஐந்தாவது அறிக்கையை தயார் செய்து கொண்டிருந்தது. துரதிஷ்டவசமாக IPCCஇன் ஒவ்வொரு அறிக்கையும் அதற்கு முன்னையதையும் விடக் காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகள் பேரழிவுகளுக்கு இட்டுச் செல்லும் ஆபத்து அதிகரிக்கிறது எனும் ஏமாற்றம் தரும் செய்தியையே தருகிறது. 1990களில் உலகமட்ட கரியமிலவாயு  வெளியாக்கத்தின் வருடாந்த சராசரி வளர்ச்சி ஒரு வீதமாக இருந்தது. இது 2000 ஆம் ஆண்டிலிருந்து 3.1 வீதமாக வளர்ந்துள்ளது. இது CO2 வெளியாக்கம் தொடர்பாக நிபுணர்கள் முன்கூட்டியே கணித்த சாத்தியமான அதிமோசமான எதிர்கால விளைவையும் விட அதிகமாயிருந்தது. விளைவுகள் பற்றிய அறிவு வளர்ந்து செல்லும் அதேவேளை புதைபடிவ எரிபொருளின் பாவனையும் வளர்ந்த வண்ணமிருக்கிறது (Malm, 2016). அதேவேளை புவியின் வெப்பமாக்கலை மறுக்கும் பிரச்சாரத்தையும் பெருமூலதன வர்க்கத்தின் ஒருசாரார் முடுக்கி விட்டுள்ளனர்.

புதைபடிவ எரிபொருளின் மீதான தங்கிநிற்றலுக்கு மாற்றாக புதிப்பிக்கவல்ல வளங்களைப் பயன்படுத்தும் திட்டங்களை உள்ளடக்கிய பசுமைப் பொருளாதாரக் கொள்கையின் நடைமுறையாக்கல் எதிர்ப்புகளைச் சந்தித்தது. ஒருபுறம் பல பெருமூலதன நிறுவனங்கள் இந்தக் கொள்கையின் விருத்தியையும் நடைமுறையாக்கத்தையும் கவிழ்ப்பதில் ஈடுபட்டன. மறுபுறம் மக்கள் மட்டத்தில் செயற்படும் அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்தன. ஒரு எதிர்-மேலாட்சி (counter hegemonic) போக்கினைச் சார்ந்த சுற்றுச்சூழல் இயக்கத்தவர், சோஷலிசவாதிகள், பெண்ணியவாதிகள், மாற்று விவசாய இயக்கத்தினர் மற்றும் ஆதிவாசிகள் போன்றோரை உள்ளடக்கிய இந்த அமைப்புக்கள் பசுமைப் பொருளாதாரக் கொள்கை காட்டும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை ஏற்க மறுத்தன (Graham, 2019). WCED இன் அறிக்கையைத் தொடர்ந்து பேண்தகு அபிவிருத்தி – குறிப்பாகச் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு – பற்றி எழுந்த பரந்துபட்ட ஆய்வுகளிலும் விவாதங்களிலும் சந்ததிகளுக்கு இடையிலான நீதி (intergenerational justice) (அதாவது எதிர்கால சந்ததிகளுக்கும் தற்போது வாழும் சந்ததியினருக்கும் இடையிலான பங்கீட்டு நீதி)  ஒரு முக்கிய பேசுபொருளானது. தாராளவாத மெய்யியல் சார்ந்த பார்வையில் இந்த விடயத்தைச் சில ஆய்வாளர்கள் அணுகினர். விவாதங்கள் தொடர்ந்த அதே காலத்தில் நவதாராள உலகமயமாக்கலும் தொடர்ந்தது. சுற்றுச்சூழல்சார் நெருக்கடிகளும் மோசமாயின. ஒரு அடிப்படையான கேள்வி என்னவெனில் தற்போது இந்த உலகில் வாழும் சகல மக்களின் மனித மேம்பாட்டுக்கு உதவும் வகையிலான பங்கீட்டு நீதியை வழங்கமுடியாத அமைப்பினால் எதிர்கால சந்ததிகள் அதை அனுபவிப்பதற்குரிய உத்தரவாதத்தை உறுதிசெய்ய முடியுமா?

 காலநிலை முதலாளித்துவமும் கரிமச்சந்தைகளும்

 ஆயினும் பசுமைப் பொருளாதார நிகழ்ச்சிநிரல் பல திட்டங்களுக்கூடாகத் தொடர்கிறது. இவை எல்லாம் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குச் சந்தை அமைப்பிற்குள் தீர்வுகளைத் தேடுவதைப் பிரதான நோக்காகக் கொண்டுள்ளன. இவற்றுள் பெருமூலதன நிறுவனங்களின் ஒரு சாரார் பங்குபற்றும் திட்டம் ´காலநிலை முதலாளித்துவம்´ (Climate Capitalism) எனும் பொதுப்பெயரால் அறியப்படுகிறது. காலநிலைமாற்றம் முக்கியத்துவம் பெறும் காலகட்டத்தில் முதலீடுகளை புதைபடிவ எரிபொருள் சக்தித் துறையிலிருந்து புதிப்பிக்கவல்ல சக்தி உற்பத்தித் துறைகளுக்கு திருப்புவதன் மூலம் பசுமைஇல்ல வாயுக்களின் வெளியாக்கத்தைக் குறைப்பது இதன் குறிக்கோள். இது ஒரு ´சுற்றுச்சூழலியல்சார் நவீனமயமாக்கல்´ (ecological modernisation) திட்டமெனவும் அறிவிக்கப்படுகிறது (Newell and Paterson, 2010; Lohmann, 2010; Bohm et al, 2012; Sapinski, 2015). இரண்டு நூற்றாண்டுகளாக மூலதனம் உருவாக்கிய கரிம முதலாளித்துவத்திற்கு (carbon capitalism) மாற்றாகக் காலநிலை முதலாளித்துவத்தைத் தரப்போவதாக சில பெருமூலதன நிறுவனங்கள் விளம்பரப்படுத்தியுள்ளன. கரிமச் சந்தைகளை (carbon markets) உருவாக்குதல், கரிம வரிகளை அறிமுகம் செய்தல் மற்றும் முதலீடுகளை மாற்று சக்தி உற்பத்தித் துறைக்குச் செல்ல உதவும் நிதிசார் பொறிமுறைகளை அமைத்தல் இந்த முன்னெடுப்பின் கொள்கைசார் அம்சங்கள் (Sapinski, 2015).

´காலநிலை முதலாளித்துவ´ திட்டத்தில் பங்குபற்ற முன்வந்துள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை புதைபடிவ எரிபொருள் மற்றும் அணுசக்தி துறைகளில் பாரிய முதலீடுகளை கொண்டவை. இலாபம் தரவல்ல மாற்று சக்தி உற்பத்தித் துறைகளில் அவற்றிற்கு அக்கறை இருக்கலாம். ஆனால் அவற்றின் தற்போதைய பாரிய முதலீடுகளுக்குப் பாதகமற்ற நீண்டகாலப் பார்வையிலேயே மாற்று முதலீடுகள் செய்வது பற்றிப் பரிசீலித்து முடிவெடுக்கப்படும். இதில் ஈடுபாடுள்ள பல்தேசிய பெருமூலதன நிறுவனங்களின் முகாமையின் உயர்மட்ட வலைப்பின்னல்களின் செயற்பாடுகள் பற்றிய ஒரு ஆய்வின்படி இவற்றின் முடிவுகள் ஒரு சில செல்வாக்குமிக்க தனியார்களிலேயே தங்கியுள்ளன. இந்த ´காலநிலை முதலாளித்துவ´ திட்டம் வெற்றி பெறும் வாய்ப்பு மிகவும் அரிது எனக் கூறும் அந்த ஆய்வு இப்போது இருக்கும் பொருளாதார மற்றும் நிதி அமைப்பைத் தொடரவைப்பதுடன் புவியின் வெப்பமாக்கலை மறுக்கும் நிலைப்பாட்டிற்குத் துணையாயிருக்கும் போக்கையே இதுவரை கிட்டியுள்ள ஆதாரங்கள் காட்டுகின்றன எனும் முடிவுக்கு வருகிறது (Sapinski, 2015).

கரிமச் சந்தைகள் காலநிலை முதலாளித்துவத்துவத் திட்டத்தின் ஒரு பிரதான பகுதியாகும். பண்டமயமாக்கலும் சந்தைமயமாக்கலும் முழுமுதல் முன்னுரிமை பெறும் நவதாராள பொருளாதாரத்தில் சுற்றுச்சூழலின் மாசுபடுத்தலையும் (environmental pollution) பண்டமயமாக்கி வர்த்தகம் செய்யும் சந்தைகளை வடிவமைக்கும் கொள்கை 1980-1990களில் பிரபலமானது. சுற்றுச்சூழலின் மாசுபடுத்தல் சந்தைத் தோல்வியினால் (market failure)ஏற்படும் வெளிவாரிவிளைவென (externality) தாராளவாதப் போக்கு பொருளியலில் அறியப்படுகிறது. ´காலநிலை மாற்றம் உலகம் கண்ட மிகப்பெரிய சந்தைத் தோல்வியின் விளைவு´ என பிரபல பொருளியலாளரான Sir Nicholas Stern சொல்லியுள்ளார் (The Guardian, Nov. 29, 2007). ஒரு பொருளை அல்லது சேவையை விற்க, வாங்கக்கூடிய பண்டமாக்க அதற்குத் தெளிவாக வரையறுக்கப்பட்ட உடைமை உரிமைகள் இருக்கவேண்டும். பல்வேறு இயற்கைசார் சுழற்சிகளையும் போக்குகளையும் உள்ளடக்கும் பரந்த சுற்றுச்சூழலைப் பண்டமயமாக்க முடியாது. அதன் மாசுபடுத்தலும் சந்தைப்படுத்தகூடிய உடைமை உரிமைகளற்றது. மாசுபடுத்தலின் சில அம்சங்களை தொழில்நுட்பம்சார் உதவியுடன் சட்டபூர்வமாக வரையறுத்து அவற்றிற்கு சந்தைகளை வடிவமைப்பது ஒரு செயற்கையான, புனைவுசார்ந்த (fictitious) அப்பியாசம் எனும் விமர்சனம் முக்கியமானது (Lohmann, 2010). உண்மையில் சந்தைத் தோல்வி, வெளிவாரிவிளைவுகலெனப்படும் சுற்றுச்சூழல்மீதான பாதிப்புகள் உற்பத்திச் செலவை முடிந்தவரை குறைத்து இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் இயற்கை மீதும் சமூகம் மீதும் முதலாளரால் திணிக்கப்படும் சமூகரீதியான செலவாகும்.

ஆயினும் கரிமச் சந்தைகளின் உருவாக்கம் 1997 இல் UNFCC இன் கீழ் உருவாக்கப்பட்ட கியோத்தோ விதிமுறைத் தொகுதி (Kyoto Protocol) வந்தபின் பெருமளவில் முன்னெடுக்கப்படுகிறது. அப்போதைய அமெரிக்க உபஜனாதிபதியாயிருந்த Al Gore இன் தீவிரமான தலையீட்டால் கியொத்தோ விதிமுறைத் தொகுதி காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சந்தை அடிப்படையிலான தீர்வுகளை முன்வைத்தது. (சமுத்திரன், 2017, 2023:  தொகுதி 2). கரிமச் சந்தையில் கரிம உருமங்கள் (carbon credits) விற்கவும் வாங்கவும் படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கரிம வெளியீட்டு மட்டத்திற்கும் மேலாக கரிமத்தை வெளியாக்கும் ஒரு நிறுவனம் குறைந்த அளவில் கரிமத்தை வெளியாக்கும்  நிறுவனங்களிடமிருந்து கரும உருமங்களை வாங்குவதன் மூலம் தொடர்ந்தும் வழமைபோல் கரிமத்தை வெளியாக்கலாம். குறைவான கரிமத்தை வெளியாக்கும் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிலான  கரிம உருமங்களின் உரிமையாளராகிறது. அந்த நிறுவனத்தால் இவற்றை விற்றுப் பணமாக்க முடியும். கரிம உருமங்களின் இன்னொரு வகையான திட்டங்கள் கரிம ஈடுசெய்யும் (carbon offsetting) திட்டங்கள் எனப்படுகின்றன. கரிமத்தை வெளியேற்றாத, மாசற்ற அபிவிருத்திப் பொறிமுறைகள் (Clean Development Mechanisms) எனப்படுவனவில் அடங்கும் காடு வளர்த்தல், காடு பாதுகாப்பு, காற்று சக்தி திட்டங்கள் போன்ற இயற்கைசார் கரிம-அகற்றுக்கு (decarbonising) உதவும் செயற்பாடுகள் இவற்றின் உதாரணங்கள். செல்வந்த நாடுகளில் பெருமளவில் கரிமத்தை வெளியாக்கும் வியாபார நிறுவனங்கள் வளர்முக நாடுகளில் இத்தகைய கரிம ஈடுசெய்யும் (carbon offsetting) திட்டங்களில் முதலீடு செய்து கரிம உருமங்களை வாங்குகின்றன. இதைக் காட்டி தாம் கரிம நடுநிலைத் (carbon neutral) தகுதி பெற்றுவிட்டதாக விளம்பரம் செய்கின்றன பல பன்னாட்டு வியாபார நிறுவனங்கள். இவற்றுள் புதைபடிவ எரிபொருள் துறையின் பெருமூலதன நிறுவனங்களும் அடங்கும். ஆயினும் இவற்றின் கூற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது (Pearce, 2021).

கரிம உருமச் சந்தைகள் (carbon credit markets) இன்று உலகமயமாக்கப்பட்டு பல கோடிக்கணக்கான டொலர் வர்த்தகமாகிவிட்டது. கரிம உருமங்களின் உடைமையாளருக்கும் அவற்றை வாங்குவோருக்கும் இடையே தரகர்கள் தொடர்பாளர்களாக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். கரிம வெளியாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கரிம உருமச் சந்தைகளின் இதுவரையிலான பங்களிப்பு என்ன எனும் கேள்விக்குத் தெளிவான பதிலைக் காண்பது சுலபமில்லை. இந்தக் கொள்கை நடைமுறையில் அதன் நோக்கங்களை அடைவதில் தோல்விகளையே சந்தித்துள்ளதென ஆதாரங்களைக் காட்டி வாதிடுகிறார் நஓமி க்ளைன் (Naomi Klein, 2014). அரசாங்கங்களும் வியாபார நிறுவனங்களும் பெருமளவில் தன்னிச்சையான கரிம உரிமங்களில் (voluntary carbon credits) அதிகளவிலான ஈடுபாட்டைக் காட்டுகின்றன. ஆனால் பெருமளவிலான கரிம உருமங்கள் நம்பத்தகுந்தன என்பதற்கு எதுவிதமான உத்தரவாதமும் இல்லை. அத்துடன் அவை பசுமைஇல்ல வாயுக்களைக் குறைப்பதில் வெற்றியளிக்கும் சாத்தியப்பாட்டை அளவிடவும் முடியாது என்பதால் கரிம உருமங்களின் பெறுமதி மற்றும் அதை அளவிடும் முறையியல் (methodology) பற்றி முடிவிலா விவாதம் இடம்பெறுகிறது எனத் தெரிவிக்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு(LSE, 2023). இது போன்ற விமர்சனரீதியான மதிப்பீடுகள் கொள்கை மட்டத்தில் உருமச் சந்தைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை மேலும் பயனுள்ள வகையில் சீரமைப்பதை நோக்காகக் கொண்டுள்ளன. இது இயற்கையின் கரிம-சுழற்சி ஆற்றலை (carbon-cycling capacity) பண்டமயமாக்க தொழில்நுட்பவியல்சார் தீர்வுகளைத் தேடும் முயற்சி என்பது கண்கூடு (Lohmann, 2010). இது போன்ற நடைமுறைகள் இயற்கையின் நிதிமயமாக்கலை  துரிதப்படுத்துவதால் அனுசேபப் பிளவை மேலும் மோசமாக்கவே உதவுகின்றன.

சுற்றுச்சூழல் சிக்கல்கள் மூலதனத் திரட்டலின் தொடர்ச்சிக்குப் போடும் தடைகளை மூலதனத்திற்கு உதவும் வகையில் கையாளும் ஒரு வழிவகைதான் கரிமச் சந்தைகள். வளர்முக நாடுகளிடமிருந்து CDM திட்டங்களுக்கூடாகக் கரிம ஈடுசெய்யும் உருமங்களை வாங்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் Kyoto Protocol இன்படி தமக்கு விதிக்கப்பட்ட கரிம வெளியாக்க இலக்கை அடைந்துவிட்டதாகக் காட்டலாம். ஆனால் தமது கரிம வெளியாக்கத்தை நேரடியாகக் குறைப்பதைத் தவிர்க்க இந்த வழியைக் அவை பயன்படுத்துவது அடிப்படையில் தமது சட்டபூர்வமான பொறுப்பினை வறிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடைமுறையெனும் குற்றச்சாட்டிற்கு இடமளித்துள்ளது (Reyes, 2011 cited in Bohm et al, 2012). இந்தத் திட்டங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைத்தொழில் உடைமையாளருக்குக் கிடைக்கும் ஒருவகையான மானியம் என்றால் மிகையாகாது. BRICS (Brazil, Russia, India, China, South Africa) உட்பட வளர்முக நாடுகளில் இந்தத் திட்டங்கள் சமூகத்தின் மேனிலை வர்க்கத்தவருக்கே பெருமளவில் பயனளித்துள்ளன எனவும் பெருந்தொகையான மக்கள் தொடர்ந்தும் வறுமையில் சிக்கியுள்ள இந்த நாடுகளில் கரிமச் சந்தைகள் பச்சை நிற உடையில் காணப்பட்டாலும் நடைமுறையில் அவற்றிடம் பசுமையே இல்லை எனவும் ஆய்வுகள் கூறுகின்றன (Bohm et al, 2012).

புதைபடிவப் பொருளாதாரம் எனும் கரிமப்பொறி – எழுந்து வரும் எதிர்ப்பும் ஜனநாயக மறுப்பும்

Andreas Malm (2016) சொல்வது போல் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதில்லை என நாம் இன்று முடிவெடுத்தாலும் ஏற்கனவே திரண்டிருக்கும் கரியமிலவாயுவின் விளைவுகள் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்வதைத் தவிர்க்கமுடியாது. புதைபடிவ பொருளாதாரம் என்பது ஒரு குறிப்பான பொருளாதார போக்கும் சில குறிப்பான சக்தி வகைகளும் பிணைந்திருக்கும் ஒரு சமூக-சுற்றுச்சூழலியல்சார் அமைப்பாகும். இந்த அமைப்பின் முதலீடுகளும் உட்கட்டுமானங்களும் பல பரிமாணங்களை உள்ளடக்குவன. புதைபடிவ எரிபொருட் சுரங்கங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், எண்ணெய் வியாபார பன்னாட்டு நிறுவனங்கள், அந்தச் சக்தியில் தங்கியிருக்கும் உற்பத்தி ஆலைகள், போக்குவரத்துத் துறைகள், பொழுதுபோக்குத் துறை, புதைபடிவ தொழில்னுட்பவியல்சார் ஆராய்ச்சித்துறை, இப்படியே இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது. சிலர் சொல்வது போல் இது ஒரு கரிமப்பூட்டு (carbon lock-in) (Malm, 2016).

சுற்றுச்சூழலின் அழிவு தொடரும்போதும் முதலாளித்துவ அமைப்பால் தன்னை மீளுற்பத்தி செய்யமுடிகிறது எனும் யதார்த்தத்தை மனித இனம் தினமும் எதிர்கொள்கிறது. மனித மற்றும் மற்றைய உயிரினங்களின் பாதுகாப்புக்கு ஆபத்தான சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கு மத்தியிலும் முதலாளித்துவம் இலாபத்தைச் சுருட்டி முன்னேற வல்லது என்பதே அனுபவரீதியான உண்மை. ஆகவே நஓமி கிளைன் (Naomi Klein) சொல்வதுபோல் அசௌகரியமான உண்மை என்னவெனில் பிரச்சனை காலநிலை மாற்றம் என்பதையும்விட முதலாளித்துவம் பற்றியதே. ஏற்கனவே குறிப்பிட்டது போல் மூலதனத்தின் திரட்டலைப் பாதிக்கும் சுற்றுச்சூழல்சார் தடைகளைக் கையாள்வதே முதலாளித்துவ அமைப்பின் முன்னுரிமையாகும். பிரதானமாகத் திரட்டலின் தொடர்ச்சிக்கு தடையாயிருக்கும் பொருள்ரீதியான வளங்களின் நிரம்பலைப் பாதிக்கும் சுற்றுச்சூழல்சார் பிரச்சனைகள் உடனடியான முன்னுரிமை பெறுகின்றன. இது பொதுவாக மனித மேம்பாட்டின் தேவைகளின் முன்னுரிமைகளுடன் முரண்படுகிறது. சுற்றுச்சூழலின் சீரழிவின் சமூகரீதியான தாக்கங்களும் அவற்றிலிருந்து விடுபடும் ஆற்றலும் அடிப்படையில் வர்க்கரீதியாகவும் அதேவேளை சமூகத்தில் நிலவும் பால்நிலைசார் மற்றும் இனம்சார் பாகுபாடுகளாலும் வேறுபடுகின்றன. கடந்த பல தசாப்தங்களாக மேலாட்சி செலுத்தும் நவதாராள உலகமயமாக்கலின் கீழ் இந்த நிலைமை தொடர்ச்சியாக மோசமடைந்து வருவதுடன் அதற்கெதிரான போராட்டங்களும் நசுக்கப்படுகின்றன.

புதிதாகப் புதைபடிவ எரிபொருள் சுரங்கவேலைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பெருமூலதன நிறுவனங்கள் எடுக்கும் முயற்சிகளை சாத்வீக வழிகளில் தடுக்கும் போராட்டங்கள் உலகின் பல இடங்களில் நடைபெறுகின்றன. சர்வதேசமயமாகிவிட்ட இந்த இயக்கத்திற்கு Blockadia எனும் பெயரை நஓமி க்ளைன் சூட்டியுள்ளார் (Klein, 2014). இந்த உலகரீதியான இயக்கம் சுரங்கவேலைகள் ஆரம்பிக்கப்படும் இடங்களில் அவற்றைத் தடுப்பதற்காக மக்களை அணிதிரட்டி மறியல் போராட்டங்களைச் செய்து வருகிறது. இதில் பங்குபற்றுவோர் பொலீசாரால் கைது செய்யப்படுவதற்கும் மற்றும் தண்டனைகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்கிறார்கள். பொது நலனுக்காக தமது பாதுகாப்புக்கு ஆபத்து விளைக்கக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். 1990 ஆம் ஆண்டு நைஜீரியாவின் நைஜெர் கயவாயில் (Niger delta) ஷெல் (Shell) கம்பெனிக்குச் சொந்தமான எண்ணெய் சுரங்கங்களினால் பாதிக்கப்பட்ட ஒகொனி (Ogoni) இன மக்கள் ஆரம்பித்த போராட்டம் Blockadia வின் ஆரம்பம் எனக் கருதப்படுகிறது. இந்தப் போராட்டத்தை மிகப் பயங்கரமாக அரசாங்கம் நசுக்க முற்பட்டது. போராட்டத்தின் தலைவர்கள் உட்பட ஒன்பது பேர் மீது போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 1995ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.[x] அமெரிக்கா, கனடா, பல ஐரொப்பிய நாடுகள், சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ், எக்குஒடொர் உட்பட உலகின் பல இடங்களுக்கு இந்த இயக்கம் பரவி வருகிறது. இதுவரை போராட்டங்களால் இலக்குவைக்கப்பட்ட எழுபது திட்டங்களில் பதினாறு புதைபடிவ எரிபொருள் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன (Environmental Democracy, 4 Nov. 2017).

ஆனால் இவை போன்ற போராட்டங்களுக்கு எதிராக புதைபடிவ எரிபொருள் கம்பனிகள் தமது நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகின்றன. சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வழங்கும் முதலீட்டாளர் பாதுகாப்பு உத்தரவாதத்தைக் காட்டி அரசாங்கத்தின் தலையீட்டைக் கோருவது மற்றும் நிறுத்தப்பட்ட திட்டங்களால் முதலீட்டாளருக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு இழப்பீடு கோரும் வழக்குகள் போன்ற வழிகளை கம்பனிகள் பயன்படுத்துகின்றன (Klein, 2014). இந்தப் போராட்டங்களின் அனுபவம் பற்றி Klein சொல்வது உலகரீதியான பாடமாகும்:

`பேரழிவைத் தவிர்ப்பதற்கு உதவும் சந்தர்ப்பத்தையும் மிகப் பெரும்பான்மையினருக்குப் பயனளிக்கும் சாத்தியப்பாட்டையும் தரும் செயற்பாடுகள் ஒரு சிறுபான்மை மேனிலையாளர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாலேயே நாம் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளோம்.`

ஐ. நா செயலாளர் நாயகத்தின் ஆதங்கமும் உண்மையை மறைக்க முயலும் அரசாங்கங்களும்

´மனித இனத்திற்கு சிவப்புச் சைகை. எச்சரிக்கைமணிகளின்  செவிடாக்கும் ஒலி மற்றும் மறுக்கமுடியாத ஆதாரம்.´

   • ஐ. நா. செயலாளர் நாயகம் Antonio Gutteres, காலநிலைமாற்றம் பற்றிய ஒரு  செயற்குழுவின் அறிக்கை  சமர்ப்பிக்கப்பட்டபோது, (9 August 2021)

2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ. நா IPCC இன் செயற்குழு I (working Group I) காலநிலைமாற்றத்தின் பௌதிக விஞ்ஞான அடிப்படை பற்றிய மதிப்பீட்டு அறிக்கையின் முதலாவது பாகத்தைச் சமர்ப்பித்த வேளை ஐ. நா வின் செயலாளர் நாயகத்திடமிருந்து வந்த அந்தச் சில வார்த்தைகள் மனித இனமும் மற்றைய உயிரினங்களும் எதிர்கொள்ளும் ஆபத்தின் அவசரத்தன்மையை இயம்புகின்றன.[xi] காலநிலைமாற்றம் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்திவரும் தாக்கங்கள் பற்றிய இற்றைப்படுத்தல், அவற்றின் விளைவுகளின் ஆபத்து மட்டங்கள், மற்றும் வேறுபட்ட அனுமானங்களின் அடிப்படையில் காலநிலைமாற்றத்தின் தணிப்பு (mitigation) பற்றிய ஐந்து எதிர்கால நிகழ்வுக் கணிப்புகளையும் இவற்றுடன் தொடர்பான வேறு தகவல்களையும் அந்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை (Assessment Report 6 – AR6) உள்ளடக்குகிறது. இதன் எஞ்சிய பகுதிகள் 2022 ஆம் ஆண்டு வெளிவந்தன. வரும் தசாப்தங்களில் பூகோளத்தின் வெப்பமாக்கல் 1.50 C  ஐயும்விட அதிகரிக்கும்  சாத்தியப்பாடுகளை ஆராய்ந்த குழு, மிக வேகமான பேரளவில் பசுமையில்ல வாயுக்களின் வெளிப்படுத்தல் குறைக்கப்படாவிட்டால் வெப்பமாக்கலின் அதிகரிப்பை 1.50 அல்லது 2.00 C  அளவிற்குள் கட்டுப்படுத்துவது அடையமுடியாத இலக்கெனும் முடிவுக்கு வந்துள்ளது.

இது ஒரு பாரதூரமான எச்சரிக்கை என்பதைச் சொல்லத் தேவையில்லை. உலக ரீதியில் உற்பத்தியையும் நுகர்வையும் அமைப்பு ரீதியாக மிகத் துரிதமாக மாற்ற முடிந்தால் மட்டுமே வெப்பமாக்கலை 1.5 – 2.00 C அதிகரிப்புமட்டத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் எனும் சவால்மிக்க செய்தியையும் AR6 முன்வைக்கும் காலநிலைமாற்றத்தின் தணிப்புப் பற்றிய ´மிகச் சிறந்த´ எதிர்கால நிகழ்வுக் கணிப்புச் சொல்கிறது.  ஆயினும் இந்தக் கணிப்பின்படியும் 2040 இன் பின் 1.50 C ஐ விட சராசரி உலக வெப்பமாக்கல் அதிகரிப்பதுடன் இந்த நூற்றாண்டின் இறுதிவரை அதைவிடக் குறைய மாட்டாது.  IPCC  செயற்குழுவின் ´இரண்டாவது மிகச்சிறந்த´ எதிர்லகால நிகழ்வுக் கணிப்பின்படி இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பமாக்கல் அதிகரிப்பின் சராசரி 1.80 C ஆக இருக்கும்,அதாவது 2.00 C ஐயும் விடக் குறைவாக இருக்கும். மற்றைய மூன்று எதிர்காலக் கணிப்புகளின்படி உலக நிலைமைகள் மேற்குறிப்பிட்ட அமைப்புரீதியான மாற்றங்கள் இன்றி வழமைபோல் தொடர்ந்தால் மனித நாகரீகம் பேரிடர்களுக்குள்ளாகும். இவற்றுள் மிக மோசமான (ஐந்தாவது) கணிப்பின்படி உலக வெப்பமாக்கலின் சராசரி அதிகரிப்பு 4.40 C ஆகும் நிலைமைகளில் நாகரீகத்தின் மீட்கமுடியாத சீர்குலைவையும் மனித இனம் முழுப்பேரிடருக்குள்ளாவதையும் தடுக்கமுடியாது.

இந்த விளைவுகளைத் தடுப்பதற்கு இன்றையை உற்பத்தி அமைப்பையும் நுகர்வுக் கலாச்சாரத்தையும் மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. IPCC இன் விஞ்ஞானபூர்வமான தரவுகளும், எதிர்கால நிகழ்வுக் கணிப்புகளும் முடிவுகளும் இத்தைகைய மாற்றத்திற்குச் சாதகமாகவே இருக்கின்றன. ஆய்வுகளின் அடிப்படையில் AR6 செயற்குழு II சமர்ப்பித்த ´கொள்கை வகுப்பாளருக்கான சுருக்கம்´ (Summary for Policymakers) மாற்றுக் கொள்கை வகுப்புக்கான பரிந்துரைகளை உள்ளடக்கியது. இந்த அறிக்கை அரசாங்கங்களின் பிரதிநிதிகளால் தனியார் துறைத் தரகர்களின் உதவியுடன் பரிசீலிக்கப்பட்டுப்  மாற்றங்களும் நீக்கங்களும் செய்யப்பட்ட பின்னரே  பிரசுரிக்கப்பட்டது. உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் அதன் மூல அறிக்கையின் உள்ளடக்கங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டது மட்டுமன்றி அதில் இடம்பெற்ற பின்வரும் பரிந்துரை முற்றாக நீக்கப்பட்டுள்ளதை சில பிரபல செய்தி நிறுவனங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளன: ´தனிநபர், சமூகங்கள், வியாபாரம், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஆகிய சகல மட்டங்களிலும் போக்குகள் (processes) மற்றும் நடத்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவல்ல செயற்பாடு நமக்குத் தேவை. நமது வாழ்க்கை முறை மற்றும் நுகர்வை நாம் மீள்வரையறுக்கவேண்டும்.´ (Foster, 2024; Monthly Review, October 2021).[xii]

AR6 செயற்குழு II வின் கொள்கை வகுப்பாளருக்கான சுருக்க அறிக்கையின் மூலப் பிரதி ஏற்கனவே பிரான்சின் AFP செய்தி நிறுவனத்திற்குக் கசிந்துள்ளது. உடனே AFP அந்த அறிக்கையின் அடிப்படையில் ´காலநிலையின் நசுக்கும் தாக்கங்கள் எதிர்பார்த்ததையும் விட முன்னரே சாடப்போகின்றன´ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதேபோல் ஸ்பெயின் நாட்டில் இயங்கும் Scientists Rebellion and Extinction Rebellion Spain (CTXT)செயற்பாட்டாளருக்கும் அறிக்கையின் மூலப்பிரதி கிடைத்தது.  ´காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்குமறுதலிவளர்ச்சியே (degrowth) வழி எனக் காண்கிறது IPCC´ (IPCC Sees Degrowth as Key to Mitigating Climate Change) எனும் தலைப்பில் அந்த அமைப்பைச் சார்ந்த இருவர் ஒரு கட்டுரையைப் பிரசுரித்தனர். இதே காலத்தில் CTXT ஐச் சார்ந்தோர் ´முதலாளித்துவத்தின் வளர்ச்சி மாதிரி பேண்தகைமையற்றது என IPCC யிடமிருந்து கசிந்த அறிக்கை எச்சரிக்கிறது´ (Leaked Report of the IPCC Warns that the Growth Model of Capitalism is Unsustainable) எனத் தலைப்பிட்ட ஒரு கட்டுரையைப் பிரசுரித்தனர் (Monthly Review, Ocober 2021). அரசாங்கத் தலைவர்களால் கொள்கைவகுப்பாளர்களுக்கான சுருக்க அறிக்கையிலிருந்து அகற்றப்பட்ட வேறு சில தகவல்கள் பின்வருமாறு (Foster, 2004): உலக சனத்தொகையின் மிகப்பெரிய செல்வந்தர்களான பத்து வீதத்தினர் மிக வறிய பத்து வீதத்தினரையும் விடப் பத்து மடங்கு அதிகமான பசுமையில்ல வாயுக்களுக்குப் பொறுப்பாளிகள்; மொத்த விமானப் பயணிகளின் உயர்மட்ட ஒரு வீதத்தினர் மொத்த விமானப்போக்குவரத்தின் உமிழ்வுகளின் (emissions) 50 வீதத்திற்குப் பொறுப்பாளிகள்; வளர்முக நாடுகளின் உமிழ்வுகளில் ஏறக்குறைய 40 வீதம் மைய நாடுகளுக்கான ஏற்றுமதிகளின் உற்பத்தியின் விளைவாகும்.

AR6 செயற்குழு II கொள்கைவகுப்பாளருக்கென எழுதிய அறிக்கைக்குக் நடந்தது போலவே AR6  செயற்குழு IIIஇன் அறிக்கையும் அரசாங்கங்களின் பிரதிநிதிகளால் தனியார் துறையின் தரகர்களின் உதவியுடன் மாற்றப்பட்டபின்னரே 2022 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. இந்த அறிக்கை ´விஞ்ஞானத்திற்கும் மனிதத்துவத்திற்கும் துரோகமிழைக்கும் வகையில்´ மாற்றி எழுதப்பட்டது எனக் குமுறுகிறார் பேராசிரியர் Foster. செயற்குழு கூட்டாக முன்வைத்த பின்வரும் பரிந்துரைகள் முற்றாக அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டன:உலகெங்குமுள்ள உமிழ்வுகள் மட்டுப்படுத்தப்படாத நிலக்கரியால்-இயக்கப்படும் எல்லா சக்தி நிலையங்களையும் 2030 ஆம் ஆண்டு முடிவதற்குள் மூடுதல்; உற்பத்தி, நுகர்வு மற்றும் சக்திப் பாவனையைப் பாதிக்கும் அரசியல் பொருளாதார ஆட்சிமுறைமையை உடனடியாகவும் துரிதமாகவும் மாற்றியமைத்தல்; குறைந்தளவான சக்தியைப் பயன்படுத்தும் தீர்வுகளை மேற்கொள்ளல்; துரிதப்படுத்தப்பட்ட தணிப்புத் திட்டங்களை செயற்படுத்தல்; காலநிலைமாற்றத்திற்கு எதிரான அடிப்படையான நீதிசார்ந்த நிலைமாற்ற நோக்கைக் கொண்ட, சமூகத்தின் மிகவும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வேரூன்றியிருக்கும், வெகுசன சமூக இயக்கங்களை ஆதரித்தல். (Foster, 2024).

மூடிமறைக்கப்பட்ட உண்மைகள் அம்பலமாக்கப்பட்ட விடயம் அரசாங்கங்கள் பெருமூலதனக் கூட்டுக்கள் மற்றும் செல்வந்த வர்க்கத்தினருக்குக் கசப்பான செய்திகள்  என்பதற்கும் அப்பால் உலகம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் நெருக்கடியின் பின்னாலுள்ள அரசியல் அதிகார உறவுகள் பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது.

காலநிலை மாற்றம் மாத்திரமல்ல

2017 ஆம் ஆண்டு எழுதப்பட்ட எனது ´மூலதனமும் இயற்கையும்´ தலைப்பிலான கட்டுரையில் குறிப்பிட்டதுள்ளது போல் ஒன்பது பூகோளரீதியான பாதுகாப்பு எல்லைகளை சுவீடனின் Stockholm Resilience Centre (SRC)விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர். இவற்றுள் காலநிலை மாற்றம் ஒன்றாகும் (சமுத்திரன், 2023: தொகுதி 2). சமீப காலங்களில் உலக மட்டத்தில் காலநிலை மாற்றம் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது உண்மையே. அதற்கான விளக்கங்களை அறிய இந்தக் கட்டுரை உதவும் என நம்புகிறேன். ஆயினும் உலக சுற்றுச்சூழல் நெருக்கடியின் சவால்களை முழுமையாக அறிந்து கொள்ள மற்றைய பூகோளரீதியான எல்லைகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் இவை உள்ளடக்கும் போக்குகளுக்கிடையிலான தொடர்புகளை ஆராய்தல் முக்கியமென SRC இன் அறிக்கைகள் கூறுகின்றன. முதல் தடவையாக 2009 ஆம் ஆண்டு இனங்காணப்பட்ட பாதுகாப்பு எல்லைகள் தொடர்ந்து பல தடவைகள் துறைசார் நிபுணர்களால் மீள் பரிசீலிக்கப்பட்டு உரிய மாற்றங்களுடன் இற்றைப்படுத்தப் பட்டுள்ளன (SRC, 2023).

2017 ஆம் ஆண்டில் நான்கு பூகோளரீதியான எல்லைகள் தாண்டப்பட்டிருந்தன என அறியப்பட்டது. ஆயினும் அப்போது எல்லா ஒன்பது எல்லைகளும் அளவிடப்படவில்லை. 2023 ஆம் வருடத்தில் முதல் தடவையாக எல்லா எல்லைகளும் அளவிடப்பட்டன. இதன்படி ஆறு எல்லைகள் மீறப்பட்டுள்ளன. இவையாவன: காலநிலை மாற்றம் (Climate change), உயிர்க்கோளத்தின் சீர்மை நிலைமை (Biosphere integrity), நிலவள அமைப்பு மாற்றம் (Land-system change), தூயநீர் மாற்றம் (Freshwater change), ஃபொஸ்ஃபொறஸ் மற்றும் வெடியம் (Nitrogen) சுழற்சிகளை உள்ளடக்கும் உயிர்-புவி-இரசயானவியல் ரீதியான ஓட்டங்கள் (Biogeochemical flows), மற்றும் பிளாஸ்டிக் மாசுபடுத்திகளை உள்ளடக்கும் புதிய உருப்படிகள் (New entities). இதுவரை எல்லைகள் மீறப்படாதவை: வளிமண்டலத்தில் அழுத்தக் கொள்கலன்களால் வெளிப்படுத்தப்படும் மின்துகள்களின் சுமை (Atmospheric aerosol loading), சமுத்திரங்களின் அமிலமாக்கல் (Ocean acidification), மற்றும் மீவளிமண்டல ஓசோனின் குன்றல் (Stratospheric ozone depletion). இந்த மூன்றின் எல்லைகள் இதுவரை தாண்டப்படாத போதும் இவற்றின் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே தனியே உலக காலநிலை மாற்றம் மீதே பிரதான கவனத்தைச் செலுத்துவது பேண்தகைமையை அடையப் போதுமானதல்ல. இவற்றிடையான தொடர்புகள்,விசேடமாக காலநிலை மாற்றத்திற்கும் உயிரினங்களின் பல்வகைமைக்கும் இடையிலான தொடர்பு, விஞ்ஞானத்திலும் நடைமுறையிலும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. எல்லைகளின் மீறல் பேரளவிலான திடீரென அல்லது முன்பிருந்த நிலைக்கு மீளமுடியாத சுற்றுச்சூழல் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கிறது. கடுமையான மாற்றங்கள் கட்டாயமாக ஒருநாட்பொழுதில் இடம்பெறும் என்பதல்ல ஆனால் கூட்டாக இந்த எல்லைகள் நாம் மற்றும் நாம் அங்கமாக இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் எதிர்கொள்ளும் வளர்ந்துவரும் ஆபத்துக்கள் ஒரு பாரதூரமான கட்டத்தை அடையும்போது அதைக் குறிப்படுத்தும் பங்கை வகிக்கின்றன (SRC, 2023).

ஆகவே நீண்டகாலம் தக்கவைக்க முடியாத பாதையில் நகரும் உலக அமைப்பில் மனித மற்றும் உயிரினங்களைக் காப்பாற்ற நாம் செய்யவேண்டியதெல்லாம் கரியமிலவாயுவின் வெளியேற்றத்தை குறைப்பது மட்டுமே என நம்புவது தவறு. காலநிலை மாற்றம் உட்பட ஆறு பூகோளரீதியான எல்லைகள் மீறப்படவும் மற்றைய மூன்றின்மீதும் அழுத்தங்கள் அதிகரிக்கவும் காரணமாயிருக்கும் அமைப்பைச் சீர்திருத்துவதற்கும் அப்பால் சிந்தித்துச் செயல்படவேண்டிய வரலாற்றுவழி நிர்பந்தத்தை இன்று வாழும் சந்ததியினர் எதிர்கொள்கின்றனர்.

II

சோஷலிசம், கம்யூனிசம் பற்றிய மீள்கற்பிதம் – பேண்தகு மனித மேம்பாடும் மனித விடுதலையும்

பேண்தகு மனித மேம்பாடு, அனுசேபவழிப் புனரமைப்பு

ஒரு உயர்நிலையிலுள்ள பொருளாதார-சமூக உருவாக்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து நோக்கும் போது இந்தப் பூமி தனிமனிதர்களின் தனியுடைமையாயிருப்பது ஒரு மனிதன் மற்ற மனிதர்களைத் தனிச்சொத்தாக வைத்திருப்பதற்குச் சமமான அபத்தமாகும். ஒரு முழுச் சமூகத்தை, ஒரு தேசியத்தை அல்லது சமகாலத்தில் இருக்கும் எல்லா சமூகங்களையும் கூட்டாக எடுத்துக்கொண்டாலும் கூட அவை இந்தப் பூமியின் சொந்தக்காரர் அல்லர். அவர்கள் அதனைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள், பயனாளிகள், அதை அவர்கள் நல்ல குடும்பத்தந்தையர் (boni patres familias) போல் பின்வரும் சந்ததியினருக்கு முன்பிருந்ததைவிட மேம்படுத்திய நிலையில் விட்டுச் செல்லவேண்டும்.’ – Marx, 1894, Capital (Volume 3. மார்க்சின் மரணத்திற்குப்பின் எங்கல்சினால் தொகுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது).

மார்க்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1860களில் ) எழுதிய இந்த வார்த்தைகள் இருபதாம் நூற்றாண்டில் பிரபலமான பேண்தகு அபிவிருத்தி (sustainable development) கதையாடலின் முன்னறிவிப்புப்போல் படுகிறது. ஆனால் ஏற்கனவே கூறியதுபோல் மேலாட்சி பெற்றுவிட்ட அந்தக் கதையாடலின் நோக்கம் முதலாளித்துவ அமைப்பைத் தக்கவைப்பதே. மார்க்சின் கருத்து அந்த அமைப்புப் பற்றிய ஆழ்ந்த விமர்சனத்தின்  வெளிப்பாடாகும். அது மனித விடுதலைசார் அறிவீட்டவியல் (emancipatory epistemology) நிலைப்பாட்டிலிருந்து எழும் சிந்தனை. [xiii]

சுற்றுச்சூழலியல் சோஷலிசப் பார்வையில் மனித இனத்திற்கும் பூகோளத்திற்கும் இடையே ஒரு சமநிலைமிக்க உறவை மீளுருவாக்கும் போராட்டம் அனுசேபப் பிளவின் புனரமைப்பிற்கான போராட்டம். அனுசேபப் பிளவு மனித மேம்பாட்டிற்கு அவசியமான இயற்கைசார் நிலைமைகளைச் சீரழிக்கிறது. சுற்றுச்சூழல் நெருக்கடி பூமியில் வாழும் மனித மற்றும் மற்றைய உயிரினங்களின் நெருக்கடி; இது பூகோளத்தின் நெருக்கடி அல்ல. மனித செயற்பாடுகளின் தாக்கங்களின் எதிர்வினையாக பூகோளம் தனக்கே உரிய இயற்கையான வழிமுறைகளுக்கு ஊடாக ஒரு ´சமநிலையை´ மீளுருவாக்கும் போக்கு எதிர்பார்க்கப்படவேண்டியதே. ஆனால் அந்த  மீளுருவாக்கம் மனித உயிர்வாழ்வின் பாதுகாப்பு எல்லைகளைத் தாண்டும் ஆபத்து இடம்பெற முன்னர் இந்தப் போராட்டத்தில் வெற்றியடைவதன் அவசியம் கண்கூடு. இதை அடைவதற்கு ஒரு கூட்டான பேண்தகு சமத்துவம்சார் உற்பத்தி அமைப்பின் தேவையும் கண்கூடு. சுற்றுச்சூழல் நெருக்கடி இயற்கையின் நெருக்கடி அல்ல சமூகத்தின் நெருக்கடி (Forster and Burkett, 2017).

மாற்று அமைப்பில் உற்பத்தி சமூகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்வதையே நோக்காக கொண்டிருக்கும். உற்பத்தி சாதனங்கள் சமூகமயமாக்கப்பட்டுள்ள அந்த அமைப்பில் தனியார்துறை இலாபநோக்கிற்கு இடமில்லை. இலாபநோக்கு எனும்போது அது மூலதனம் இலவசமாகத் தன்வசமாக்கிக்கொள்ளும் உபரி உழைப்புப் பற்றியதே. ´எத்தகைய சுதந்திரமான ஒப்பந்தத்திற்கூடாகப் பெறப்பட்டுள்ளதாகப் பட்டாலும் சாராம்சத்தில் அது நிர்ப்பந்த உழைப்பே´ என மார்க்ஸ் மூலதனம் மூன்றாம் பாகத்தில் மீண்டும் நினைவூட்டுகிறார்.

தொடர்ந்து அதே அத்தியாயத்தில் மாற்று உற்பத்தி அமைப்பு மற்றும் சுதந்திரம் பற்றி அவர் கூறுவது மனித மேம்பாட்டை முன்னிலைப்படுத்தும் பேண்தகு சோஷலிச – கம்யூனிச எதிர்காலம் பற்றியதே. உண்மையில் மனிதர் தம்அவசிய தேவைகளைத் திருப்திப்படுத்த வேண்டிய, கட்டாயநிலையால் (necessity) உழைப்பு தீர்மானிக்கப்படுவது முடியும்போதே சுதந்திரத்தின் களம் (realm of freedom) ஆரம்பிக்கிறது. ஆகவே அது பொருட்சார் உற்பத்திக்கு அப்பாலே இருக்கிறது, எனக் கூறும் மார்க்ஸ்  உற்பத்தித் துறையில் சுதந்திரத்தை நடைமுறையில் அடைவது பற்றியும் குறிப்பிடுகிறார். சமூகமயப்படுத்தப்பட்ட கூட்டான உற்பத்தியாளர் இயற்கையின் பார்வையற்ற சக்திகளால் ஆளப்படுவதற்குப் பதிலாக அதைத் தமது பொதுவான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இயற்கையுடனான தமதுபரிவர்த்தனையை (interchange) பகுத்தறிவுபூர்வமாக ஒழுங்கமைத்து,  மிகக்குறைவான சக்தியைப் பயன்படுத்தித் தமது மனித இயல்புக்குச் சாதகமான, தகுதியான நிலைமைகளில் செயல்படுவற்கூடாக மட்டுமே சுதந்திரம் சாத்தியமாகிறது. ஆயினும்கூட அது ஒரு கட்டாயநிலைக் களமாகவே தொடர்ந்தும் இருக்கிறது. அதற்கு அப்பால் வேறெந்த நோக்குடனும் தொடர்பின்றி தன்னையே இலக்காகக் கொண்ட மனித சக்தியின் அபிவிருத்தி ஆரம்பிக்கிறது. இதுவே உண்மையான சுதந்திரத்தின் களம், ஆயினும் அது மேலே குறிப்பிட்ட கட்டாயநிலைக் களத்தின் அடிப்படையிலேயே மலர முடியும். வேலை நேரத்தின் (working-day) குறைப்பு இதற்கான ஒரு முன்நிபந்தனையாகும், என வலியுறுத்துகிறார். அதாவது மனித ஆளுமையின்  செழுமையாக்கத்திற்கு உதவக்கூடிய நேரத்தை அதிகரிக்க சமூகரீதியில் அவசியமான வேலை நேரம்  (socially necessary labour-time) குறைக்கப்படுவது புதிய சமூக அமைப்பில் முன்னுரிமை பெறுகிறது (Marx, 1894). மனித ஆளுமையின் செழுமையாக்கலெனும்போது அது அறிவு, கலைகள், அழகியல், மற்றும் பண்பாடு சார்ந்த ஈடுபாடுகளை உள்ளடக்குகிறது என்பதை மார்க்சின் பல்வேறு எழுத்துக்களில் தெளிவாகக் காணமுடிகிறது.

இந்த மிகவும் கனதியான  கருத்துக்கள்  தொடர்பாகச் சில குறிப்புகளைச் சேர்க்க விரும்புகிறேன். ´இயற்கையின்பார்வையற்ற சக்திகளால் ஆளப்படுவதற்குப் பதிலாக அதைத் தமது பொதுவான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து..´என மார்க்ஸ் கூறுவது இயற்கைமீது மனிதர் ஆதிக்கம் செலுத்துவதை நியாயப்படுத்துவதாகாதா எனும் கேள்விக்கு இடமளிக்கிறது. ஆனால் அதைத் தொடர்ந்து அதே பந்தியில் அவர் அழுத்திக்  கூறும் அறிவுரை,  ஏற்கனவே முன்வைத்த அனுசேபப் பிளவு பற்றிய விமர்சனம் மற்றும் பல எழுத்துக்களில் சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவு பற்றிய தனது பார்வையை அவர் தெளிவாக்கிய விளக்கங்கள் எல்லாவற்றையும் பார்க்குமிடத்து முதலாளித்துவம் இயற்கையைச் சூறையாடும் அதே வேளை தொழிலாளர்களையும் முழு சமூகத்தையும் அதனிடமிருந்து அந்நியப் படுத்தும் ஒரு அமைப்பு என்பதே மார்க்சின் நிலைப்பாடு என்பது தெளிவாகிறது.  அதேபோன்று பேண்தகு மனித மேம்பாட்டிற்கு அவசியமான இயற்கைசார் நிலைமைகளையும் அது சீரழிக்கிறது.

இயற்கையின் இயக்கவிதிகளின் அறிவியல்பூர்வமான புரிந்துணர்வு பேண்தகு பாதையில் மனித விடுதலையை முன்னெடுக்க இன்றியமையாததென்பது மார்க்ஸ் தரும் அறிவுரை என்றால் அது மிகையாகாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அறியாமையும் மனிதரின் வாழ்வைத் தீர்மானிப்பதற்குப் மாறாக மனிதரே தமது சந்தர்ப்ப சூழ்நிலைகளைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெறும்போதே விடுதலையை நோக்கி நகரமுடியும் எனும் கருத்தை மார்க்சும் எங்கெல்சும் 1845 ஆம் ஆண்டில் எழுதிய ´The German Ideology´ (ஜேர்மனிய கருத்தியல்) எனும் தலைப்பிலான நூலில் பதிவிடுகிறார்கள்.  சோஷலிசம், கம்யூனிசம் பற்றிய மார்க்சின் சிந்தனை மனித விடுதலையின் தொடர்ச்சியான தன்மைசார் முன்னேற்றம் பற்றியதே.  இந்த மாற்றப் போக்கில் சோஷலிசம் ஒரு இடைக்கால சமூக அமைப்பு. சுதந்திரத்தின் களத்தில் ஒவ்வொரு நபரும் தனது உள்ளாற்றல்களின் மெய்மையாக்கத்தைத் தனது மனித சக்தியின் அபிவிருத்திக்கூடாக அனுபவிக்கும் வாய்ப்பினைப் பெறுகிறார்.  இந்தச் சுதந்திரம் மனிதரின் இயற்கைமீதான நிரந்தர தங்கிநிற்பின் கட்டாயநிலைக்கு உட்பட்டதே.

1860களுக்குப் பின், 1875 ஆம்  ஆண்டு ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் `கோதா வேலைத் திட்டம்´ பற்றிய விமர்சனத்தில் (A Critique of the Gotha Programme) சோஷலிச, கம்யூனிச மாற்றம் பற்றிச் சில அடிப்படைக் கருத்துக்களைச் சுருக்கமாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.  ´உழைப்பே எல்லா செல்வத்தினதும் முழுக் கலாச்சாரத்தினதும் மூலமாகும்´ எனும் கோதா வேலைத்திட்டத்தின் ஆரம்ப வரியின் தவறை முதலில் சுட்டிக்காட்டுகிறார்: ´ உழைப்புத்தான் எல்லா செல்வத்தினதும் மூலம் அல்ல. இயற்கையும் அதே போன்று பயன்பாட்டுப் பெறுமதிகளின் மூலமாகும்.´    பொருட்செல்வம் இவற்றை உள்ளடக்குகிறது . மனித உழைப்புச் சக்தியும் ஒரு இயற்கை சக்தியின் வெளிப்பாடு மட்டுமே எனவும் சொல்கிறார். கம்யூனிச சமூகம் தனது சொந்த அத்திவாரத்தின் மேல் எழுவதில்லை. அது முதலாளித்துவ அமைப்பின் கர்ப்பப்பையிலிருந்து பிறப்பதால் அந்தப் பழைய சமூகத்தின் பொருளாதார, தார்மீக மற்றும் அறிவுரீதியான தாக்கங்களைப் பிறப்புக்குறிகளாகக் கொண்டிருக்கும்.  உற்பத்தி சாதனங்கள் கூட்டுறவின் அடிப்படையில் சமூகமயமாக்கப்பட்ட சோஷலிச அமைப்பில் நுகர்வு சாதனங்கள் மட்டுமே தனிமனிதர் உடைமைகளாக இருக்கும். ஆயினும் உற்பத்தி உறவுகள் மாற்றப்பட்ட போதும் இந்தக் கட்டத்தில் முன்னிருந்த பூர்ஷ்வா சமூகத்தில் நிலவிய சில உரிமைகள் தொடர்வதைத் தவிர்க்கமுடியாது. பூர்ஷ்வா அமைப்புப் போதிக்கும் சமத்துவம் உண்மையில் சமத்துவமற்றது என விளக்குகிறார். முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை மாற்றுவது பற்றிப் பேசாது  அந்த அமைப்பிற்குள் பங்கீட்டுச் சீர்திருத்தத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் ´ கொச்சை சோஷலிசவாதத்தையும் விமர்சிக்கிறார்.

சோஷலிச அரசின், அதாவது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தின் ஜனநாயகத்தன்மை பற்றிப் பின்வரும் கருத்தைத் தெரிவிக்கிறார்: சமூகத்தின் மீது மேலிருந்து  திணிக்கப்பட்டிருக்கும் ஒரு கருவியாக இருக்கும் அரசு சமூகத்திற்குக் கீழ்ப்படியும் ஒன்றாக மாற்றப்படுவதற்கூடாகவே சுதந்திரத்தைக் காணமுடியும்.   மார்க்சின் இந்தக் கருத்தின்படி சோஷலிச ஜனநாயகம் கீழிலிருந்து மேலாகக் கட்டியெழுப்பப்படும் ஒரு அமைப்பெனக் கருதுவதில் தவறில்லை எனலாம்.  ஆனால் அதே கட்டுரையில் முதலாளித்துவ சமூகத்திற்கும் கம்யூனிச சமூகத்திற்கும் இடையிலான புரட்சிகர நிலைமாறு காலத்தின் அரசு ´புரட்சிகர பாட்டாளி வர்க்க சர்வாதிகார´  அரசு எனவும்சுருக்கமாகக் கூறுகிறார். இது சோஷலிச கால அரசு பற்றிய மார்க்சின் கருத்தில் ஒரு முரண்பாட்டை வெளிப்படுத்தவில்லையா?  எனும் கேள்வி எழுகிறது. இது பற்றி ஆழமாகப் பார்ப்பது அவசியம். முதலாவது, மார்க்ஸ் தொழிலாள வர்க்கத்தின் – அதுவும் அவர் மாதிரியாகக் கொண்ட வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ சமூகத்தின் பெரும்பான்மையின் – சர்வாதிகாரம் பற்றியே பேசுகிறார். ஒரு கட்சியின் அல்லது ஒரு தனிநபரின் சர்வாதிகாரம் பற்றி அல்ல. இரண்டாவது, மிக முக்கியமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் சர்வாதிகாரம் (dictatorship) எனும் சொல்லுக்கு வழக்கிலிருந்த அர்த்தம் இருபதாம் நூற்றாண்டில் காணப்படும் அர்த்ததிலிருந்து வேறுபட்டிருந்தது.

 ´சர்வாதிகாரம்´ (dictatorship) எனும் சொல்லை மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் பயன்படுத்தியபோது வழக்கிலிருந்த அதன் அர்த்தம் பற்றிய ஆய்வொன்றினை ´Karl Marx´s Theory of Revolution´(புரட்சி பற்றிக் கார்ல் மார்க்சின் கோட்பாடு ) எனும் தலைப்பில்  Hal Draper எழுதிய  ஐந்து தொகுதிகளின் மூன்றாவது தொகுதியில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி ஆழ ஆராயப்படுகிறது. இந்த ஆய்வின்படி, மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் சொற்பதத்தை ஒரு சில  (எல்லாமாக ஏழு ) தடவைகள் மட்டுமே பயன்படுத்தியுள்ளார். அதையும் விட முக்கியமான தகவல் என்னவெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ´சர்வாதிகாரம்´ (dictatorship) எனும் சொல்லுக்கு ஐரோப்பாவில் வழக்கிலிருந்த அர்த்தம் தொடர்பானது. பண்டைய ரோமக் குடியரசின் காலத்தில் குடியரசின் வழமையான அந்தஸ்தை ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காகச் சர்வாதிகாரம் ஒரு தற்காலிக ஆட்சியாக நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில் இந்தச் சொல்லுக்கு இன்றைய காலத்தில் நிலவும் அர்த்தம் இருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும் அதே பழைய அர்த்ததிலேயே சர்வாதிகாரம் எனும் சொல் பயன்பாட்டிலிருந்தது. மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் பதத்தை எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை, அல்லது ஒரு சிறு குழுவிடம் முற்றாக மையப்படுத்தப்பட்ட அதிகாரம் எனும் அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை என்பது அவருடைய எழுத்துக்களிலிருந்து தெளிவாகிறது. இருபதாம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு கொடுக்கப்பட்ட விளக்கமும் ´சோஷலிசம்´ எனும் பெயரில் அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதமும் மார்க்சின் நிலைப்பாட்டுடன் முரண்படுகிறது (Draper, 1987).[xiv]

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்ஸ் அரசு பற்றிப் பல கருத்துக்களை பல சந்தர்ப்பங்களில் பதிவிட்டுள்ளபோதும் அது பற்றி அவர் திட்டமிட்டிருந்த ஒரு நூலை எழுதுவதற்கு முன்னரே மறைந்துவிட்டார். இதைக் குறிப்பிடும் அரசியல் விஞ்ஞானியான பேராசிரியர் Bob Jessop மூலதனத்தையும் அரசையும் சமூக உறவுகளாகப் பார்க்கும் மார்க்சின் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு அரச இயந்திரம் மற்றும் அரசின் அதிகாரம் ஆகியவை குறிப்பானசந்தர்ப்ப சூழ்நிலைகளில் எப்படிச் செயற்படுகின்றன பற்றி மேலும் ஆழமாக ஆராயவேண்டிய தேவை இருக்கிறது என வலியுறுத்துகிறார் (Jessop, 2020).

சோஷலிச – கம்யூனிச அமைப்புப் பற்றிய ஒரு விவரமான வரைவைக் கொடுப்பது மார்க்சின் நோக்கமாக இருக்கவில்லை. ஆயினும் 1875 இல் எழுதிய கோதா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்தில் கம்யூனிச சமூகம் பற்றி மேலும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். முன்னேறிய கம்யூனிச சமூகத்தில் உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையிலான முரண்நிலை மறைந்து விடும். அதே போல் நகரம் – நாட்டுப்புறம் வேறுபாடும் ஒழிக்கப்பட்டுவிடும். உற்பத்தி சக்திகளின் விருத்தி தனி நபரின் முழுமையான மேம்பாட்டிற்கு உதவுகிறது. கூட்டுறவுச் செல்வத்தின் அருவிகள் கூடுதலான நிறைவுடன் நகர்கின்றன. இந்தச் சமூகத்தில் ´ஒருவரின் ஆற்றலுக்கேற்ற பங்களிப்பிலிருந்து அவரின் தேவைக்கேற்ற பங்கீடு´ எனும் பிரகடனம் நடைமுறையாவது பூர்ஷ்வா உரிமையின் குறுகிய வெளி தாண்டப்பட்டதின் அறிவிப்பாகிறது.[xv] ஜேர்மன் தொழிலாளார் கட்சியின் வேலைத்திட்டத்தின் விமர்சனத்தில் இந்தக் கருத்துக்களைப் பதியும்போது மார்க்ஸ் நன்கு வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ சமூகத்தின் நிலைமைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தார்.

முதலாளித்துவ சமூகத்தின் கற்பப்பைக்குள்ளேயே அதன் மாற்று அமைப்பான சோஷலிச-கம்யூனிச சமூகம்கருத்தரிக்கிறது என மார்க்ஸ் எழுதினார். அந்த மாற்று அமைப்புப் பிறக்கும் கட்டத்தின் வருகை பற்றிய அவரின் கருத்துக்கள் விவாதப் பொருட்களாயின. புரட்சிகர சமூக மாற்றம் பற்றிய மார்க்சின் எழுத்துக்களில் இரண்டு போக்குகளை இனங்காணலாம். ஒன்று, சமூகப் புரட்சி ஒரு வரலாற்றுவழி நிர்ணயவாதத்தின் (determinist)  தவிர்க்கமுடியாத -குறிப்பாக உற்பத்தி சக்திகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உற்பத்தி உறவுகள் தடையாக மாறும்போது ஏற்படும் – விளைவெனும் கருத்தை முன்வைக்கிறது.[xvi]  மற்றது, ´தத்துவஞானிகள் உலகைப் பலவிதமாக விளக்கியுள்ளார்கள் ஆனால் முக்கியமான விடயம் என்னவெனில் அதை மாற்றுவதே´, என 1845 இல்இளைஞனாக அவர் பதிவிட்ட கருத்தைத் தொடர்ந்து மக்களே வரலாற்றைப் படைக்கும், மாற்றும் சக்தி எனும் சிந்தனையை எழுத்துக்களிலும் நடைமுறையிலும் காட்டும் போக்கு. இது வர்க்கப் போராட்டத்தில், உணர்வுபூர்வமான கூட்டு அரசியற் செயற்பாட்டில் நம்பிக்கை வைக்கிறது. சமூகப் புரட்சி மற்றும் விடுதலை பற்றிய மார்க்சின் சிந்தனையின் பரிணாமம், அவர் வாழ்ந்த காலத்தில் அரசியல் போராட்டங்களில் அவர் காட்டிய ஈடுபாடு மற்றும் இருபதாம்  நூற்றாண்டின் உலக மார்க்சிச செல்நெறிகள், புரட்சிகர இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் எல்லாம் இந்த நிலைப்பாட்டையே உறுதிப் படுத்துகின்றன.  இருபத்தியோராம் நூற்றாண்டு நிலைமைகளில் சோஷலிச -கம்யூனிச மாற்றம் பற்றிய கருத்தாடல்கள்  அனுசேபப் பிளவின் புனரமைப்பிற்கும் பேண்தகு மனித மேம்பாட்டிற்கும் இடையிலான உறவை மையப்படுத்தி  வேறு அடிப்படையான கேள்விகளுக்கும் இட்டுச் செல்கின்றன.

III

 சுற்றுச்சூழலியல் சோஷலிச – கம்யூனிச எதிர்காலம் பற்றித் தொடரும் கருத்தாடல்கள்

 ´காலநிலை மாற்றப் பிரச்சனையைப் புறக்கணிப்பது இடதுசாரி சோஷலிசவாதிகளின் பொதுவான போக்கு. ஆனால் இது ஒரு பெரும் தவறு. ..  எரிக்கப்பட்ட பூகோளத்தில் சோஷலிசம்  சாத்தியமில்லை.´

   • அலெக்சாண்டர் கொஸ்ரா (Alexandre Costa), மீவளிமண்டல விஞ்ஞானத்துறைப் பேராசிரியர், காலநிலை மாற்ற ஆய்வாளர், பிராஸில் (Brazil). சோஷலிச மற்றும் சுதந்திரக் கட்சியின் Insurgencia மார்க்சிசக் குழுவின் அங்கத்தவர்.(April 17, 2014)

´சுற்றுச்சூழலின் சவால் பிரிக்கமுடியாதபடி சோஷலிசத்தின் சவாலுடன் பிணைந்துள்ளது.´

   • Michael Lowy, பிரெஞ்ச்-பிராசிலிய மார்க்சிச சமூகவியலாளரும் தத்துவஞானியும். (December 2018)

பூகோளத்தில் இன்று – நவமானிடயுகத்தில் – நாம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் நெருக்கடியின் பரிமாணங்கள் மற்றும் ஆபத்துக்களுடன் ஒப்பிடும்போது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் மார்க்சின் கவனத்தை ஈர்த்த சுற்றுச்சூழல் சீரழிவுகள் சிறியளவினதாகப் படுவதில் ஆச்சர்யமில்லை.  இன்றைய சுற்றுச்சூழலின் எல்லைமீறிய சீரழிவின் பரிமாணங்களை அவரால் கற்பனை பண்ணியிருக்க முடிந்திருக்காது. ஆனால் இந்த நெருக்கடியின் வரலாற்றுவழிக் காரணியான அனுசேபப் பிளவை அன்றே இனங்கண்டு அதை அன்று கிடைக்கக்கூடிய விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களின் உதவியுடன் எதிர்கால நோக்கில் விளக்க முற்பட்டார் மார்க்ஸ். இருபத்தியோராம் நூற்றாண்டில் சுற்றுசூழலியல் சோஷலிச – கம்யூனிச கருத்தாடல்களில் சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான அனுசேபத்தின் மீளமைப்பு ஒரு முக்கிய பேசுபொருளாகியுள்ளது.  முடிவிலா மூலதனத் திரட்டலா அல்லது  பேண்தகு மனித மேம்பாடா எனும் கேள்வி அடிப்படையில் முரண்படும்  இரண்டு கோட்பாட்டுவழிச் சட்டகங்கள் (paradigms)பற்றியது என்பது இந்தக் கட்டுரையை இதுவரை வாசித்தவருக்குப் புரிந்திருக்கும். மிகச் சுருக்கமாக மீண்டும் கூறுவதாயின், சுற்றுச்சூழல் சீரழிந்து செல்லும்போதும் முதலாளித்துவம் தன்னை மீளுற்பத்தி செய்துகொள்ள வல்லது. ஆனால் இதன் விளைவுகள் பேண்தகு மனித மேம்பாட்டிற்குப் பாதகமானவை.  மூலதனத் திரட்டலின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் சுற்றுச்சூழல் பராமரிப்பு மனித மேம்பாட்டின் சுற்றுச்சூழல்ரீதியான தேவைகளைத் தனியுடைமையாக்கலுக்கும் சந்தைமயமாக்கலுக்கும் கீழ்ப்படுத்துகிறது.  ஆகவே மூலதனத் திரட்டலின் சுற்றுச்சூழல் நெருக்கடியும் பேண்தகு மனித மேம்பாட்டின் சுற்றுச்சூழல் நெருக்கடியும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவையாயினும் தன்மைரீதியிலான வேறுபாடுகளைக் கொண்டன.

´எரிக்கப்பட்ட பூகோளத்தில் சோஷலிசம்  சாத்தியமில்லை´ எனும் கருத்தை கொஸ்ரா 2014 ஆம் ஆண்டு IPCC இன் மேற்குறிப்பிட்ட செயற்குழுவின் ஐந்தாவது அறிக்கை (AR 5) வெளிவந்தபோது எழுதிய கட்டுரையில் தெரிவித்தார்.   அந்தக் கட்டுரையில் இரண்டு முக்கியமான விடயங்கள் பற்றித் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். முதலாவதாக, காலநிலைமாற்றம் பற்றி  ஏற்கனவே வெளிவந்துள்ள விஞ்ஞானபூர்வமான அறிவின் உதவியுடன் அதன் சமூக மற்றும் வர்க்கரீதியான தாக்கங்களின் மீது, முதலாளித்துவ அமைப்பிற்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையிலான உறவின் மீது ஒளி பாய்ச்சுகிறார். IPCC இன் முன்னைய அறிக்கைகளையும் விட புதிய அறிக்கைகள் காலநிலைமாற்றத்தின் சமூகரீதியான தாக்கங்களுக்குப் பரந்த, ஆழமான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றன எனக் குறிப்பிட்டுக் காலநிலை நெருக்கடியைச் ´சந்தைத் தீர்வுகள்´ கட்டமைப்புக்குள் தீர்க்கமுடியாது என வாதிடுகிறார்.

கொஸ்ராவின் கட்டுரையில் கையாளப்படும் இரண்டாவது அம்சம் இருபத்தியோராம் நூற்றாண்டில் சுற்றுச்சூழல் நெருக்கடியின் அவசரநிலையின் முக்கியத்துவத்தைப் புறந்தள்ளும் சோஷலிசவாதிகளை விமர்சிக்கிறது. இந்த விமர்சனம் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சுருக்கமாக உரக்கச் சொல்லப்படுகிறது. அத்துடன் வேறு விமர்சனங்களும் சேர்கின்றன: ´காலநிலை மாற்றப் பிரச்சனையைப் புறக்கணிப்பது இடதுசாரி சோஷலிசவாதிகளின் பொதுவான போக்கு. ஆனால் இது ஒரு பெரும் தவறு. இருபத்தியோராம் நூற்றாண்டில் பொதுவாகச் சுற்றுச்சூழலின் நெருக்கடியின் (மற்றும் குறிப்பாக காலநிலை நெருக்கடியின்) பிரதான கேள்விக்குப் பதில்களைத் தேடுவது  தொழிலாள வர்க்கங்களினதும் வறியோர்களினதும் போராட்டத்திற்கு மிக முக்கியமானதென நாம் வற்புறுத்துகிறோம். எல்லா வேறுபாடுகளுக்கும் அப்பால், முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட நெருக்கடியின் பேரிடர்மிகுந்த விளைவைத் தவிர்க்கும் போராட்டம் கண்ணியத்துடன் மனிதஇனம் உயிர்வாழ வேண்டிய பொருள்ரீதியான நிலைமகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமே. தனிப்படுத்தப்பட்ட ஒரு நாட்டில் சோஷலிசம் சாத்தியமில்லை. பால்வேறுபாடு தொடர்பான தப்பெண்ணம், நிறவாதம், ஓரினசேர்க்கைமீது வெறுப்பு,மாற்றுப்பாலினத்தவர்மீது வெறுப்பு, மற்றும் வெளிநாட்டவர்மீது வெறுப்பு ஆகியன இருக்கும்வரை சோஷலிசம் சாத்தியமில்லை. எரிக்கப்பட்ட பூகோளத்தில் சோஷலிசம்  சாத்தியமில்லை.´ (Costa, 2014).

சோஷலிசம் தொடர்பாகக் கொஸ்ராவின் விமர்சனப் பார்வை ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களை உள்ளடக்குகிறது. முக்கியமாக, உயிர்வாழ்தலுக்கு வேண்டிய சுற்றுசூழல் நிலைமைகள் மிகமோசமாகச் சீரழிக்கப்படுவதைத் தடுக்க முடியாத உலகில் சோஷலிசத்தைக் கட்டியெழுப்பமுடியாது எனும் பாடத்தைக் கற்கத் தவறிய சோஷலிசவாதிகளைக் கடிந்து கொள்கிறார். உற்பத்தி சாதனங்களின் தனியுடைமையை ஒழித்து உற்பத்தி உறவுகளை சமூகமயப்படுத்திவிட்டால் முதலாளித்துவம் விட்டுச்சென்ற உற்பத்தி சக்திகளின் தொடர்ச்சியான வளர்ச்சியின் உதவியுடன் பற்றாக்குறை இல்லாத சோஷலிச சமூகத்தை உருவாக்கிவிடலாம் எனும் ´உற்பத்திசக்திவாத  சோஷலிசம்´ (productivist socialism) இன்றைய உலகின் சுற்றுசூழல் நெருக்கடிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறுவதை சுற்றுச்சூழலியல் மார்க்சிசவாதிகள் கடந்த மூன்று தசாப்தங்களாகச் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார்கள். கொஸ்ரா குறிப்பிடும் மற்ற விடயங்களும் முக்கியமானவை. அவற்றைப் புறக்கணித்துச் சோஷலிச ஜனநாயகத்தைக் கற்பனை பண்ண முடியாது.

 உற்பத்திசக்திவாதத்தை நிராகரிப்பது சுற்றுச்சூழலியல் சோஷலிச சமூக அமைப்பில் உற்பத்திசக்திகளின் பங்கை மறுப்பது அல்லது குறைத்து மதிப்பிடுவதாகாது. உற்பத்தி சக்திகளின் விருத்தியும் முகாமையும் சுற்றுச்சூழலியல்சார் பேண்தகைமையின் விதிகளுக்கும் முழுச் சமூகமும் சார்ந்த பேண்தகு மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தின் தேவைகளுக்கும் ஏற்ற திட்டமிடலின் ஒரு அங்கமாகும். அரை நூற்றாண்டுக்கு முன் மன்டெல் சொல்லியதுபோல் உற்பத்தி சக்திகளின் அதி உச்ச அபிவிருத்தியை மனித ஆற்றல்களின் அதி உச்ச அபிவிருத்திக்குச் சமனாக்கும் மிதமிஞ்சிய எளிமைத்தனமான கருத்தை மார்க்ஸ் மனதில் கொண்டிருக்கவில்லை (Mandel, 1972).

ஆயினும், பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து செல்வாக்குமிக்க சிந்தனைப் போக்குகளான தாராளவாதம், மார்க்சிசம் மற்றும் மார்க்சிசம் சாராத சோஷலிசவாதம் எல்லாமே நவீன ஆலைத்தொழில் சமூகத்தின் எதிர்காலத்தை ´உற்பத்திச்சக்திவாதக்´   (productivist) கட்டமைப்புக்கூடாகவே அணுகியதால் சுற்றுச்சூழலியல் சார்ந்த மாற்றுச் சிந்தனைகள் ஓரங்கட்டப்பட்டன எனும் கருத்து சமகாலக் கருத்தாடல்களில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. அதே வேளை, உற்பத்திசக்திவாதத்தின் மேலாட்சி முடிவுக்கு வருகிறதா? எனும் கேள்வியையும் இந்தக் கருத்துநிலை சார்ந்தோர் எழுப்புகிறார்கள். (Berard, 2019). தாராளவாதத்தையும் மார்க்சிசத்தையும் ஒரு கூட்டுக்குள் ஒதுக்கும் இந்த முகாமினர் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முதன்மைப் படுத்தும் மார்க்சின் சில எழுத்துக்களைத் தமது விமர்சனத்துக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். [xvii]  மார்க்சின் சில எழுத்துக்களில் காணப்படும் ´புரொமீதியவாதம்´´ஹெகெலிய நிர்ணயவாதம்´ தொடர்பான விமர்சனங்கள் நீண்ட காலமாக மார்க்சிச ஆய்வாளர்கள் மத்தியில் கலந்துரையாடவும் விவாதிக்கவும் பட்ட ஒரு விடயம். மார்க்சின் சிந்தனைகளை முழுமையாக ஆராயும்போது இந்த விமர்சனங்கள் முக்கியத்துவம் இழக்கின்றன என்பதே இதன் முடிவாயிற்று.

சுற்றுச்சூழலியல்சார் மார்க்சிச ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு மேலும் பலம் சேர்க்கும் ஆதாரங்களை முன்வைத்தனர்.தாம் காணவிழையும் சோஷலிசம் சந்தைச் சுற்றுச்சூழல் சீர்திருத்தவாதத்திற்கும் உற்பத்திச்சக்திவாத சோஷலிசத்திற்கும் எதிரானது என அவர்கள் தமது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். இன்றைய சுற்றுச்சூழலியல்சார் சோஷலிச மாற்றம் பற்றிய கருத்தாடல்களில் சூழல்வாதிகளும் சோஷலிசவாதிகளும் இருதரப்பின் போராட்டங்களின் பொதுத்தன்மையின் அடிப்படையில் ஒரு ´சிவப்பு – பச்சை´ இணைப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் போக்கைக் காணமுடிகிறது. இந்த இணைப்பிற்கு ஊடாக ஒரு மாபெரும் நிலைமாற்ற வழிமுறையை இலக்காகக் கொண்ட ´இயக்கங்களின் இயக்கம்´ (´movement of movements´) பிறக்க முடியும் எனும் நம்பிக்கையும் வெளிப்படுத்தப்படுகிறது. (Lowy, 2018). ´இரு தரப்பின் போராட்டங்களின் பொதுத்தன்மை´ எனும்போது நடைமுறை மட்டுமல்லாது அதற்கும் கோட்பாட்டிற்கும் இடையிலான உறவு மற்றும் குறுகிய கால, நீண்ட கால நோக்கங்கள் முக்கியமடைகின்றன.

சுற்றுச்சூழல்சார் செயற்பாட்டு அமைப்புக்கள் பலவிதம். இவற்றுள் பல அரசாங்கத்துடன் அல்லது பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவன. இத்தகைய அமைப்புக்கள் மூலதனத்தின் நலனைப் பேணும் ´பசுமைப் பொருளாதார´ திட்டங்களை நடைமுறைப் படுத்தும் சிவில் சமூகப் பங்காளர்களாக்கப்பட்டுள்ளன. மறுபக்கத்தில்,மனித மற்றும் மற்றைய உயிரினங்களின் நீண்டகாலப் பாதுகாப்பையும் சமூக ரீதியான உரித்துடைமைகளையும் முன்னுரிமைப் படுத்தும் ஜனநாயகக் கோரிக்கைகளின் அடிப்படையிலான அரசியல் பார்வையுடன் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் போராடும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் உலகின் பல பாகங்களில் செயற்படுகின்றன. இவற்றுள் சுற்றுச்சூழலியல் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சோஷலிச மாற்ற அரசியலில் ஆர்வமுள்ள இயக்கங்கள் ´சிவப்பு – பச்சை´ கூட்டு முன்னணி முன்னெடுப்புக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன. சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்குமிடையிலான அனுசேபவழியான உறவை மீளமைக்கும் திட்டத்தின் பங்காளர்களாகத் தம்மை இந்த இயக்கங்கள் இனங்காணும்போது ´சிவப்பு – பச்சை´ இணைப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் ஒன்றுபட்ட இயக்கங்களாக மலர முடியும் என எதிர்பார்க்கலாம்.

இன்றைய உலக அமைப்பில் அதிகாரமும் செல்வாக்குமுள்ள சிறுபான்மையான செல்வந்த நாடுகளுக்கும் பெரும்பான்மையான மற்றைய நாடுகளுக்கும் இடையிலான அசமத்துவமிக்க உறவு பற்றிய கேள்விகள் ´சிவப்பு – பச்சை´ கூட்டு முன்னணி தொடர்பான கருத்தாடலில் இழையோடும் ஒரு முக்கியமான அம்சமாகும்.  பல பரிமாணங்களைக் கொண்ட இந்த உறவை ´குளோபல் வடக்கு – குளோபல் தெற்கு´ (´Global North – Global South´)  உறவெனும் பெயரில் பார்ப்பது ஒரு வழக்கமாகிவிட்டது.  இன்றைய உலக அதிகார உறவுகளையும் பூகோளத்தின் இயற்கை வளங்களின் கைப்பற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளின் சமூக ரீதியான விளைவுகளையும் விளங்கிக் கொள்வதற்கு இந்த ´வடக்கு – தெற்கு´ வேறுபடுத்தல் எதுவரை உதவுகிறது எனும் கேள்வி எழுகிறது. இன்றைய ´குளோபல் தெற்கில்´ சீனா, இந்தியா, பிராசில், தென் ஆபிரிக்கா போன்ற ´எழுந்துவரும்´பொருளாதாரங்கள் பல வறிய, வளர்ச்சி குன்றிய நாடுகளுடன் கூட்டாக இனங்காணப்படும் முரண்பாடு பற்றி விமர்சனம் எழுவது நியாயமானதே. இந்த எழுந்துவரும் பொருளாதாரங்களின் சுற்றுச்சூழல்சார் பிரச்சனைகளும் அவற்றின் சமூகரீதியான தாக்கங்களும் ஆய்வாளர்களாலும் செயற்பாட்டாளர்களாலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனைகள் குறித்து அந்த நாடுகளுக்கு உள்ளேயும் உலக மட்டத்திலும் இயங்கும் சுற்றுச்சூழல்சார் இயக்கங்களின் போராட்டங்களும் தொடர்கின்றன. ஆயினும், எனது பார்வையில் ´குளோபல் வடக்கு – குளோபல் தெற்கு´ வேறுபடுத்தல் அந்த உறவின் அசமத்துவத்தின் இரண்டு பிரதான அம்சங்களைப் பற்றி ஆழப் புரிந்துகொள்ள உதவுகிறது.

முதலாவதாக, உலக மட்டத்திலான சுற்றுச்சூழல் பிரச்சனைகளின் மற்றும் குளோபல் தெற்கின் நாடுகளின் இயற்கை வளங்களின் இழப்பு மற்றும் சீரழிவுகளின் காலனித்துவ – ஏகாதிபத்திய வரலாறுகளை அறிவதற்கு இந்த வேறுபடுத்தல் உதவுகிறது. சமீப காலங்களில் பிரபலமடைந்துவரும் சுற்றுசூழலியல் ஏகாதிபத்தியம் (ecological imperialism) குறித்த கோட்பாடு இந்த வரலாற்றையும் அதன் சமகாலத் தொடர்ச்சியையும் மேலும் தெளிவாக ஆராய உதவுகிறது. இது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். இரண்டாவதாக, இந்த வேறுபடுத்தல் இன்றைய உலக அமைப்பில் குளோபல் வடக்கின் அரசியல் பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியான அதிகார மேலாட்சி தொடரும் யதார்த்தத்தைத் தெளிவாக வரையறுக்க உதவுகிறது. தமது வர்க்க, ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கும் வழிகளில் ´பேண்தகு அபிவிருத்தி´, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் முகாமை, தொடர்பானகதையாடல்களையும்  பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகளையும் பெரும்பாலான தெற்கு நாடுகள்மீது திணிக்கும் அதிகாரத்தை அமெரிக்காவும் அதன் நெருங்கிய அணியும் கொண்டுள்ளன. இந்த வல்லரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஐ. நா, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வர்த்தக நிறுவனம் போன்ற சர்வதேச ஆட்சிமை நிறுவனங்கள் இதன் நடைமுறைப்படுத்தலில் பிரதான பங்கு வகிக்கின்றன.   உலக பாதுகாப்பைப் பொறுத்தவரை அமெரிக்கா தனது பாரிய இராணுவ நிறுவனத்தையும் உலகின் பல பாகங்களில்  நூற்றுக்கணக்கான இராணுவத் தளங்களையும் கொண்டுள்ள அதேவேளை NATO வின் மூப்பனாகவும் இருக்கிறது. ஐ. நா வின் பாதுகாப்புச் சபையிலும் அமெரிக்காவின் அதிகாரம் பொதுவாகக் கோலோச்சுகிறது.

உலக அதிகாரச் சூழல் பற்றிய இத்தகைய பார்வையில் ´சிவப்பு – பச்சை´ ஐக்கிய முன்னணியின் ´வடக்கு – தெற்கு´பரிமாணத்தின் அரசியல் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. இந்த விடயத்தைப் பொறுத்தவரை குளோபல் வடக்கில் சிவப்பு – பச்சை ஒருமைப்பாட்டை வளர்க்கச் செயற்படும் இயக்கங்கள் குளோபல் தெற்கில் இயங்கும் ஒத்த கருத்துடைய இயக்கங்களுடன் ஐக்கியப்பட வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி வருகின்றன. சுற்றுச்சூழலியல் மார்க்சிச முகாமைச் சார்ந்த ஜேசன் ஹிக்கெல்  நினைவூட்டுவதுபோல் குளோபல் தெற்கின் தொழிலாளர்களும் விவசாயிகளும் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தை இயக்கும் உழைப்பின் 90 வீதத்தை வழங்குகிறார்கள். உலகின் விளைநிலத்தின் மற்றும் அதிமுக்கியமான வளங்களின் பெரும்பகுதிகளும் அங்குதான் உள்ளன. இது ஒரு பலமான அனுகூலத்தை அவர்களின் கைகளுக்குக் கொடுக்கிறது. தெற்கின் தொழிலாளர்களும் அரசியல் இயக்கங்களும் புரட்சிகர மாற்றத்தின் தலையாய சக்திகள் என்பதை முன்னிலைப்படுத்தத் தவறும் அரசியல் தத்துவம் யதார்த்தத்தைக் காணத் தவறுகிறது (Hickel, September 2023). வடக்கில்  ´சிவப்பு – பச்சை´ ஐக்கியத்தை முன்னெடுக்கும் மார்க்சிசவாதிகள் வடக்கின் அதாவது செல்வந்த நாடுகளின் பொருளாதாரங்கள் தொடர்ந்தும் அளவு ரீதியில் வளர்வதற்கெதிராக ஏந்தியுள்ள போர்க்கொடியில் திட்டமிட்ட மறுதலிவளர்ச்சிக்கான (degrowth)கோரிக்கையைப் பதித்துள்ளார்கள். உலக சுற்றுச்சூழல்சார் நெருக்கடியின் பிரதான கூட்டுப் பொறுப்பாளியான குளோபல் வடக்கில் திட்டமிட்ட மறுதலிவளர்ச்சி நடைமுறைப்படுத்தப்படுவது குளோபல் தெற்கிற்குத் தேவையான பேண்தகு வளர்ச்சியின் மற்றும் உலகளவிலான சமூக நீதியின் முன்நிபந்தனையென அவர்கள் குரலெழுப்புகிறார்கள். அது நீண்டகாலமாகத் தெற்கின் இயற்கை வளங்களைக் கையகப்படுத்திவரும் காலனித்துவ, சுற்றுச்சூழலியல்சார் ஏகாதிபத்திய வரலாற்றை மாற்றுவதற்கு இன்றியமையாத ஒரு தேவை என வாதிடுகிறார்கள் (Hickel, January 2022; Schmelzer et al, 2022; Foster, 2024).

செல்வந்த நாடுகளிலிருந்து எழும் இந்தக் குரல் குளோபல் தெற்கில் ஒன்றிணைந்த மக்கள் இயக்கங்களின் கூட்டான கோரிக்கைகளின், போராட்டங்களின் தாக்கத்தின், அங்கீகாரத்தின், மக்கள் மட்ட அமைப்புக்களிடையிலான ஒருமைப்பாட்டின் குரல். இந்த வகையில் கடந்த இரு தசாப்தங்களில் வடக்கு – தெற்கு மக்கள் அமைப்புக்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் பல நிகழ்வுகள் உலகின் பல தலைநகரங்களில் இடம்பெற்றுள்ளன.[xviii]  ´காலநிலை மாற்றம் அல்ல உலக அமைப்பின் மாற்றமே வேண்டும்´ எனும் செய்தியே இந்த நிகழ்வுகளில் எழுப்பப்படும் மிக முக்கியமான சுலோகமாகும். மறுதலிவளர்ச்சியும் இதனுடன் இணைந்த ஒரு சுலோகமாக ஒலிக்கிறது.

சுற்றுச்சூழலியல் மார்க்சிசமும்  ´மறுதலிவளர்ச்சி´ கதையாடலும்

பின்னணி

இன்றைய உலக சுற்றுச்சூழல்சார் நெருக்கடிகளுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான உறவு பற்றிய கதையாடல்களில் மறுதலிவளர்ச்சி (degrowth) சமீப காலங்களில் கணிசமான முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது.ஆயினும் அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்து மறுதலிவளர்ச்சியின் விளக்கங்களும் கொள்கையாக்கலும் வேறுபடுகின்றன.  மேலும் இது உலகின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கும் அவற்றுடன் தொடர்புள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வுக்கும் பிரதான பொறுப்புதாரிகளான செல்வந்த நாடுகளில் உடனடியாக முன்னுரிமை பெறவேண்டிய ஒரு விடயம் எனும் அபிப்பிராயமும் பல மட்டங்களில் நிலவுகிறது. Degrowth (மறுதலிவளர்ச்சி ) எனும் சொல் முதல் முதலாக 1972 ஆம் ஆண்டு பிரான்சில் Andre Gorz இனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இருத்தலிய மார்க்சியராக (existentalist Marxist) அறியப்பட்ட சமூக தத்துவஞானியும் அரசியல் சுற்றுச்சூழலியல் (political ecology) ஈடுபாட்டாளருமான அவர் பூகோளத்துடன் ஒரு சமநிலையை மீளமைக்க அளவு ரீதியில் வளராத அல்லது சுருங்கும் பொருளாதார அமைப்பின் தேவை பற்றிக் கருத்துக் கூறியவேளை அத்தகைய ஒரு பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான பொருந்தாமை பற்றியும் கேள்வி எழுப்பினார்.

Gorz இன் வாதம் அதே ஆண்டில் வெளிவந்த பிரபலமான The Limits To Growth – வளர்ச்சிக்கு வரம்புகள் (Meadows et al, 1972)[xix] – அறிக்கையால் அதன் உள்ளடக்கங்கள் எழுப்பிய விவாதங்கள் மற்றும் அந்த அறிக்கையின் நவமல்தூசிய (Neo-Malthusian), தொழில்நுட்பவியல்வாதக் கருதுகோள்கள் மற்றும் ஆய்வு முறையியல் பற்றிய விமர்சனங்களால் உந்தப்பட்டது.  இது போன்ற அறிக்கை மூலம் முதலாளித்துவம் தனது முடிவை அறிவிக்கவில்லை.மாறாக அது தன் தொடர்ச்சிக்கான வேறு வழிகளைத் தேடத் தயாராகிறது எனச் சொல்கிறது என விளக்கிய Gorz  ´சோஷலிசமா அல்லது சுற்றுச்சூழலியல் பாசிசமா?´ எனும் கேள்வியை 1973 ஆம் ஆண்டில் எழுப்பினார். அவர் மார்க்சிசத்தையும் விமர்சித்தார். ஒரு ஆய்வுக்கருவியாக மார்க்சிசத்திற்கு வேறெந்தக் கோட்பாடும் ஈடாகாது ஆயினும் மார்க்சிசம் அதன் தீர்க்கதரிசனப் பெறுமதியை இழந்து விட்டது எனக் குறைப்பட்டார்.  மறுதலிவளர்ச்சிக்குச் சார்பான அவருடைய சுற்றுச்சூழலியல் பார்வையில் Nicholas Georgescu-Roegen  மாத்திரமே சுழிய (zero)வளர்ச்சியால் கூட இறுதியில் இயற்கை வளங்கள் தீர்ந்துபோவதைத் தவிர்க்கமுடியாது என்பதைச் சுட்டிக்காட்டும் பொது உணர்வைக் கொண்டிருந்த பொருளியலாளர் (Gorz,1980).

1980களில் மறுதலிவளர்ச்சி பல ஐரோப்பிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சில வட்டங்களில் மறுதலிவளர்ச்சி பற்றிய கருத்தாடல் செல்வந்த நாடுகளில் அளவு ரீதியான பொருளாதார வளர்ச்சி தொடர்வதை நிராகரித்து மனித நலனின் தன்மைசார்  முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் மாற்றம் பற்றிய சிந்தனைப் போக்காக உருவெடுத்தது. சக்தி மற்றும் பொருள் ரீதியான வளங்களின் பாவனையை குறைப்பது, கழிவுகளைக் குறைப்பது பற்றிய விடயங்கள் முக்கியத்துவம் பெற்றன. நாடுகளுக்கு உள்ளேயும் உலக ரீதியிலும் சமூக உபரியின் மீள்பங்கீடு இடதுசாரிகள் மத்தியில் ஒரு பிரதான இடத்தைப் பிடித்தது. 2000 ஆம் ஆண்டிற்குப்பின் மறுதலிவளர்ச்சி ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் ஒரு ஆய்வுக்குரிய விடயமாக மேலும் முக்கியத்துவம் பெற்றது. 2008 ஆம் ஆண்டிற்குப்பின் மறுதலிவளர்ச்சி பற்றி ஆயிரக் கணக்கிலான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஒரு ஐரோப்பிய இடதுசாரி ஆய்வுக் குழுவின் கருத்தில், ´மறுதலிவளர்ச்சி பற்றிய உரையாடலின் சில பகுதியினர் வர்க்கப்பார்வையின்றி நுகர்வோரை மையப்படுத்தி சுற்றுச்சூழலியல்சார் அம்சங்களுக்கே பிரதான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். சமூகப் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை கீழிறக்கி மறுதலிவளர்ச்சியை அரசியலற்றதாக்குகிறார்கள். மறுதலிவளர்ச்சியில் ஈடுபாடுள்ளோரில் பெரும்பான்மையினர் வெள்ளை இனத்தவர்களாகவும் குளோபல் வடக்கில் விசேட வசதிகள் உடைய சமூகச் சூழல்களில் வாழ்பவர்களாகவும் கல்வியாளப் பின்னணியைக் கொண்டவர்களாகவும் இருப்பது இதற்கான காரணமாயிருக்கலாம். … இனம் (race) தொடர்பான விடயங்களும் ஆழ ஆராயப்படுவதில்லை. இன ரீதியான முதலாளித்துவம் எப்படி நாடுகளுக்கு உள்ளேயும் இடையேயும் வர்க்க உறவுகளை இயக்குகிறது என்பது பற்றிய புரிதலும் மறுதலிவளர்ச்சியின் உள்ளார்ந்த அம்சமாக்கப்படவேண்டும்.´(Schmelzer, et al. 2022).

இன்று மறுதலிவளர்ச்சி சுற்றுச்சூழல்சார் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு முக்கிய பேசுபொருளாகியுள்ளது. சுற்றுச்சூழலியல்சார் மார்க்சிசப் பார்வையில் சோஷலிச – கம்யூனிச சமூக மாற்றத்தில் மறுதலிவளர்ச்சியின் பங்குஎன்ன, அதன் முக்கியத்துவம் எத்தகையது?  பொதுவாகச் சுற்றுசூழலியல் மார்க்சிச வாதிகள் இன்றைய உயர் செல்வந்த நாடுகளின் பொருளாதாரங்களை இலக்குவைத்துப் பேண்தகு மனிதமேம்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கும் திட்டமிட்ட மறுதலிவளர்ச்சியும் உலக சமூக உபரியின் மீள்பங்கீடும் சோஷலிச மாற்றத்தின் பிரதான அம்சங்களெனும் கொள்கைக்கு ஆதரவாகச் சிந்தித்துச் செயற்படுகிறார்கள். ஆயினும் மறுதலிவளர்ச்சி பற்றிய எதிர்மறையான கருத்துக்களும் பல மட்டங்களில் நிலவுவதும் உண்மை. அதை IMF போன்ற நவதாராள நிறுவனங்களின் கொள்கையான சிக்கனத்துடன் (austerity) ஒப்பிடுவோரும், அது பொருளாதாரத்தின் பின்னடைவை உண்டாக்கி தொழிலாளர், மற்றும் உழைக்கும் மக்களின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் வீழ்ச்சியடையச் செய்யும் என அஞ்சுவோரும் உள்ளனர். திட்டமிட்ட மறுதலிவளர்ச்சியின் நோக்கம் இவை போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதற்கு மாறாகத் திட்டமிட்ட வழிகளில் சக்தி மற்றும் பொருள் ரீதியான வளங்களின் பாவனையைக் குறைத்து பேண்தகு வழிகளில் மனித நன்னிலையை முன்னெடுப்பதே என்பதைப் பலரின் எழுத்துக்கள் தெளிவாக்குகின்றன. ஜேஸன் ஹிக்கெலின் கருத்தில்: ´மறுதலிவளர்ச்சி எல்லா வகையான உற்பத்தியையும் குறைக்கும்படி கோரவில்லை. மாறாக,  அது சுற்றுச்சூழலியல் ரீதியில் அழிவுகரமான மற்றும் சமூக ரீதியில் அவசியக் குறைவானவற்றின் உற்பத்தியைக் குறைக்கும்படி கேட்கிறது……. அது பெரும்பாலும் மூலதனத் திரட்சியை மற்றும் மேனிலை மட்ட நுகர்வைச்  சூழ அமையப்பட்டிருக்கும் உற்பத்தி வகைகளையே இலக்கு வைக்கிறது.´ (Hickel, 2023). மேலும், 2019 ஆம் ஆண்டில் வாங்கும் திறன் சமத்துவ (Purchasing Power Parity) அடிப்படையில் உலக சராசரி தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி (World average GDP/capita) 18,381 அமெரிக்க டொலர்கள் எனும் உலக வங்கியின் புள்ளி விபரத்தைப் பார்க்கும்போது உலக   அசமத்துவங்களும் வறுமையும் வளர்ச்சியைவிட பங்கீடு பற்றிய ஒரு பிரச்சனை என்ற முடிவுக்கே வரவேண்டும். சராசரி GDP/capita பங்கீட்டின் குறிகாட்டி அல்ல என்பதைச் சொல்லத்தேவையில்லை. மேலும் பொருளாதார உற்பத்தியின் அளவிடலைப் பொறுத்தவரை அது குறைபாடுகள் உள்ள ஒரு வழிமுறை என மறுதலிவளர்ச்சி ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டில் மறுதலிவளர்ச்சி சுற்றுச்சூழலியல்சார் சோஷலிசம் – கம்யூனிசம் பற்றிய மார்க்சிசக் கருத்தாடல்களின் ஒரு முக்கிய அம்சமாக உள்வாங்கப்பட்டுள்ளது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்தப் போக்கினைச் சார்ந்தவர்களில் ஆங்கிலமொழி மூலம் உலக மட்டத்தில் அறியப்பட்டவர்களில் ஒரு குழுவினர் அமெரிக்க சோஷலிச சஞ்சிகையான Monthly Review (MR) உடன் இனங்காணப்படுகிறார்கள். பங்களிப்புகளைப் பொறுத்தவரை சஞ்சிகையின் ஆசிரியரான John Bellamy Foster,  (2024 ஆம் ஆண்டு காலம் சென்ற) Paul Burkett, Brett Clark மற்றும் Richard York  ஆகியோர் இந்தக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் எனலாம். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் இளம் சந்ததி மார்க்சிச தத்துவஞானியான கோஹெய் சைத்தோவும் (Kohei Saito) இந்தக்குழுவுடன் நெருங்கிய தொடர்புடையவர். MR இன் சர்வதேச சுற்றுச்சூழலியல் சோஷலிச வலையமைப்புப் பரந்தது. இந்த வலையமைப்பினரிடையே சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் ´குளோபல் வடக்கின்´ அதாவது உயர் செல்வந்த நாடுகளின் பொருளாதாரங்களில் திட்டமிட்ட மறுதலிவளர்ச்சி, வளர்முக நாடுகளில் திட்டமிட்ட பேண்தகு வளர்ச்சி, உலக ரீதியில் மீள்பங்கீடு மற்றும் பேண்தகு மனித மேம்பாடு ஆகியவற்றில் பொதுவான பார்வையைக் கொண்டுள்ளனர். உற்பத்திசக்திகளின் வரலாற்றுவழிப் பங்கு பற்றிய மார்க்சின் சிந்தனை தொடர்பாகச் சிலரிடையே முரண்படும் கருத்துக்கள் தொடர்ந்தும் நிலவுகின்றன.

ஆயினும் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த சைத்தோவின் Marx in the Anthropocene Towards the Idea of Degrowth Communism (நவமானிடயுகத்தில் மார்க்ஸ் – மறுதலிவளர்ச்சிக் கம்யூனிசம் பற்றிய கருத்தினை நோக்கி) எனும் தலைப்பிலான பிரசித்தி பெற்ற நூல் மார்க்சிச முகாமில் பொதுவாக வரவேற்கப்பட்டபோதும் சில சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. முக்கியமாக 1860களுக்குப்பின் மார்க்சின் சிந்தனைப் போக்கின் மாற்றங்கள் தொடர்பாக சைத்தோ கூறியுள்ள சில கருத்துக்கள் விவாதத்திற்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகின.  சமீப வருடங்களில் MEGA தொகுதிகளிலுள்ள மார்க்சின் இறுதிக்கால எழுத்துக்களின் அடிப்படையில் அவருடைய சிந்தனைப் போக்கை மீளுருவாக்கும் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் Kevin Andersen, Michael Heinrich, Carl-Erich Vollgraff  போன்ற ஆய்வாளர்களில் சைத்தோவும் ஒருவர். 1870களில் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றி முன்னர் கொண்டிருந்த கோட்பாட்டு ரீதியான கட்டமைப்பைக் கைவிட்டு முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் வரலாறு பற்றிய தனது பொருள்முதல்வாத அணுகுமுறையை மீள்கோட்பாட்டுமயப்படுத்த முயற்சித்தார் என்றும் மாற்று சமூகம் பற்றி அடிப்படையில் வித்தியாசமான ஒரு கருத்துருவாக்கம் இதன் விளைவாயிற்று என்றும் வாதிடும் சைத்தோ,  இறுதியில் மார்க்ஸ் ஒரு ´மறுதலி வளர்ச்சிக் கம்யூனிஸ்ட்´  ஆனார் எனும் முடிவுக்கு வருகிறார். சைத்தொவின் நூலில் காணப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்களில் இந்த வாதமும் முடிவும் பல மார்க்சிச ஆய்வாளர்களின் கூரிய விமர்சனத்தையும் மறுப்பையும் பெற்றன. மார்க்சின் எழுத்துகளில் சைத்தோவின் புதிய விளக்கத்திற்கு அல்லது மாற்று விளக்கத்திற்கு ஆதாரங்கள் இல்லை என அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையிலிருந்து  வழுவவில்லை. அவர் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் நிலைமைகளில் மறுதலிவளர்ச்சி பற்றிக் குறிப்பிடவில்லை ஆனால் மார்க்சிச அணுகுமுறையின்படி இன்றைய கால நெருக்கடிகளை ஆராயும்போது செல்வந்த சமூகங்களில் திட்டமிட்ட மறுதலிவளர்ச்சியின் நியாயப்பாடு தெளிவாகிறது. இந்தப் புரிதலுக்கு மார்க்சின் அனுசேபப் பிளவுக் கோட்பாடு மற்றும் பேண்தகு மனித மேம்பாடு பற்றிய சிந்தனை அடிப்படையானவை.[xx] (Foster, 2024; Napoletano, 2024; Bernabe, 2023). இந்தச் சர்ச்சைக்கு அப்பால் சுற்றுச்சூழலியல் சோஷலிசம் பற்றி மார்க்சியவாதிகள் மத்தியில் காணப்படும் பொதுவான கருத்துக்கள் பற்றி மேலும் சில அவதானிப்புகள்.

குளோபல் வடக்கில் மறுதலிவளர்ச்சி உலகளவிலான நீதியின் தேவை

`குளோபல் வடக்கின் பொருள் ரீதியான அதிஅபிவிருத்திக்கும் குளோபல் தெற்கின் அதீத சுரண்டலுக்குமிடையிலான முரண்பாட்டை காணுமிடத்து பின்னையது முடியவேண்டுமாயின் முன்னையது முதலில் முடியவேண்டும்.´

   • Jamie Tyberg and Erica Jung, 2021, Degrowth and Revolutionary Organizing (மறுதலிவளர்ச்சியும் புரட்சிகர அமைப்பாக்கமும்) Rosa Luxemburg Foundation, New York, 2021

குளோபல் வடக்கிற்குத்தான் மறுதலிவளர்ச்சி அவசியம் ஆனால் அதை முதலாளித்துவ அமைப்பிற்குள் நடைமுறைப்படுத்த முடியாது. தொடர்ச்சியான வளர்ச்சியே முதலாளித்துவத்தின் அடிப்படைத் தன்மை. ஆகவே மறுதலிவளர்ச்சியை நடைமுறையாக்க அந்த அமைப்பின் சொத்துடைமை உறவுகளும் அவற்றைப் பாதுகாக்கும் நிறுவனங்களும் ஒழிக்கப்படவேண்டும் என்பதே Jamie Tyberg மற்றும் Erica Jung   இன் பிரதான வாதம்.  இது குளோபல் வடக்கில் புரட்சிக்கான அறைகூவலாகக் கேட்கிறது. இந்த நோக்கில் அமைப்புக்கள் கட்டியெழுப்பப்படவேண்டும் என வலியுறுத்துகிறார்கள். பல்தேசிய நிறுவனங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன ஆனால் அவற்றினால் சுரண்டப்படும் உலகத் தொழிலாளர்கள் செயலூக்கமுள்ள வழியில் ஒன்றுபட்டுத் தமது உரிமைகளுக்காகப் போராடமுடியாத நிலையிலுள்ளார்கள் எனச் சுட்டிக்காட்டுகிறார்கள். கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையிலான பாலமான ஒழுங்கமைப்பு இன்றி மற்றைய இரண்டும் பயனிழக்கின்றன,  எனும் விஜய் பிரஷாட்டின் (Vijay Prashad) அறிவுரையை நினைவூட்டுகிறார்கள். அதன்படி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒரு மறுதலிவளர்ச்சி அமைப்பைக் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ளார்கள் (Tyberg and Jung, 2021).

முதலாளித்துவத்திற்கும் திட்டமிட்ட மறுதலிவளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாடு இணைத்துவைக்கமுடியாதது என்பதில் மார்க்சிசவாதிகள் மத்தியில் கருத்துவேடுபாட்டிற்கு இடமில்லை. அதேபோல் உலக முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய அதிகார மையமான குளோபல் வடக்கில் புரட்சிகரமான மாற்றங்கள் இடம்பெறுவது குளோபல் தெற்கின் தேசங்களின், மக்களின் உரிமைப் போராட்டங்களின் வெற்றிக்கு மிகச் சாதகமான நிலைமைகளை உருவாக்கும் எனும் கருத்திற்கும் மறுப்பு எழாது என நம்பலாம். இந்த அனைத்தளாவிய  பொதுக் கொள்கை நிலைப்பாட்டின் பின்னணியில் மறுதலிவளர்ச்சியின் உள்ளடக்கங்கள்,  குறுகிய கால – நீண்டகால முன்னுரிமைகள்,கொள்கையாக்கல் மற்றும்  குளோபல் வடக்கு – தெற்கு உறவுகள் தொடர்பான கருத்துப் பரிமாறல்களும் விவாதங்களும் தொடர்கின்றன. ஒரு மாற்று அணுகுமுறையாக மறுதலிவளர்ச்சி முற்போக்கு சக்திகளின் பரந்த அங்கீகாரத்தைத் தேடும் ஒரு தொடரும் திட்டமாக உருவெடுத்துள்ளது.

சமகாலத்தில் ஐ. நா வின் IPCC விஞ்ஞானிகள், பல ஆய்வாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீண்டும் மீண்டும்  வலியுறுத்தும் உலக சுற்றுச்சூழல்சார் நெருக்கடியின் அவசரநிலையை (emergency) எப்படி எதிர்கொள்வது எனும் கேள்விக்குச் செல்வந்த நாடுகளில் மறுதலிவளர்ச்சியைப் பதிலாக முன்வைக்கும் மார்க்சிசவாதிகளில் நன்கறியப்பட்ட ஒருவரான John Bellamy Foster இன் கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம். செல்வந்த நாடுகளில் திட்டமிட்ட மறுதலிவளர்ச்சி பூகோள ரீதியான அனுசேபப் பிளவின் புனரமைப்பையும் பேண்தகு மனிதமேம்பாட்டையும் முன்னிலைப்படுத்த வல்ல சோஷலிச மாற்றத்திற்கு அடிப்படையானதெனும் கருத்தைப் பல வருடங்களாகத் தனது எழுத்துக்களாலும் மற்றைய செயற்பாடுகளாலும் வலியுறுத்தி வரும் Foster தனது சிந்தனைகளை 2024 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட The Dialectics of Ecology  (சுற்றுச்சூழலியலின் இயங்கியல்)எனும் தலைப்பிலான நூலில் தருகிறார். இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கட்டுரையில் சுற்றுச்சூழலியல்சார் சமூகப்  புரட்சி பற்றிய அவருடைய இரண்டு கட்ட வியூகத்தை மிகச் சுருக்கமாக முன்மொழிகிறார். இதன் முதலாவது கட்டத்தை சுற்றுச்சூழலியல்சார் ஜனநாயகக் கட்டமெனவும் (eco-democratic phase) அதைத் தொடர்ந்து இடம்பெறுவது சுற்றுச்சூழலியல்சார் சோஷலிசத்தின் (eco-socialist phase) கட்டமெனவும் வரையறுக்கிறார்.

முதலாவது கட்டம் குறுகிய கால நோக்கிலானதெனவும் சோஷலிச கட்டம் நீண்டகாலத் திட்டம் பற்றியதெனவும் சுருக்கமாகக் கூறுகிறார். சுற்றுச்சூழலியல்சார் ஜனநாயகக் கட்டத்தின் பிரதான திட்டங்கள்:  கரிமக் கட்டணம் மற்றும் இலாபப் பங்கீட்டு முறைமை; நிலக்கரி மற்றும் தார் போன்றவற்றின் பயன்படுத்தல்மீது தடை; சூரியஒளி மற்றும் வாயு சக்தியைப் பெருமளவில் பாவிக்கும் மாற்றம், வேறு மாற்று சக்தி மூலங்களின் பயன்பாடு, சக்தி வினைத்திறனுக்கு முக்கியத்துவம்; இராணுவச் செலவின் குறைப்பு; செல்வந்தப் பொருளாதாரங்களின் வளர்ச்சிக்குத் தடை; அடிப்படையான மீள்பங்கீடு. ஒரு நீண்ட சமுகப்புரட்சியின் ஆரம்பக்கட்டத்திற்குரிய ஒரு வேலத்திட்டமாகவே இதை அவர் கருதுகிறார். சோஷலிசக் கட்டம் உடனடியாகச் சாத்தியமில்லை எனும் கருத்தையும் வெளிப்படுத்துகிறார். சுற்றுச்சூழல்சார் நெருக்கடியின் விளைவாக ஒரு சுற்றுச்சூழல்சார் பாட்டாளி வர்க்கம் (environmental proletariat) உருவாகும் எனவும் அந்த வர்க்கம் புரட்சிகர சக்தியாகும் எனவும், நடுத்தர வர்க்கமும் போராட்டத்தில் இணையும் எனவும் எதிர்பார்க்கிறார். துரதிஷ்டவசமாக Foster இன் (2015) கட்டுரையின் இந்தப் பகுதி தெளிவின்மை மிக்கதாகவும் அரைகுறையான ஆரம்பக் குறிப்பாகவும் இருக்கிறது.

2024 இல் வெளிவந்துள்ள நூலில் உலகை மாற்றுவது பற்றிய அவருடைய பரந்த பார்வையை முன்வைக்கிறார். பூகோளத்துடனான நமது உறவு மிகவும் அடிப்படையானது. அந்த உறவிலிருந்தே நமது உற்பத்தி, வரலாறு, சமூக உறவுகள் எல்லாமே தோன்றுகின்றன. முதலாளித்துவ அமைப்பினால் இந்த உறவில் மிகவும் மோசமாக அந்நியமாக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, சீரழிக்கப்பட்டவர்களே 21ஆம் நூற்றாண்டில் புரட்சிகர மாற்றத்தின்  சக்தியாவார்கள் எனும் சிந்தனை இந்த நூலின் ஒரு பிரகடனமெனலாம். சுற்றுசூழலியல்சார் மார்க்சிசத்திற்கும் சுற்றுச்சூழலியல்சார் நாகரீகம் (ecological civilization) பற்றிய சிந்தனைக்குமிடையிலான உறவுபற்றி அலசுகிறார். சுற்றுச்சூழலியல்சார் நாகரீகம் 1980 களில் சோவியத் யூனியனில் பேசப்பட்டது பற்றியும் தற்போதைய சீனாவில்  ஒரு முக்கிய கொள்கைப் பொருளாக இருப்பது பற்றியும் பதிவிடுகிறார். அவருடைய கருத்துக்களை வாசிக்கும்போது சீனாவில் சுற்றுச்சூழலியல்சார் நாகரீகம் பற்றி நடைபெறும் ஆய்வுகள் விவாதங்கள் பற்றி மேலும் அறியவேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது. இந்த விடயம் பற்றி விவரமாக இந்தக் கட்டுரையில் ஆராய்வது சாத்தியமில்லை. ஆனால் நிச்சயம் ஆராயப்பட வேண்டிய ஒரு விடயம்.

Foster இன் நூல் சுற்றுச்சூழல்சார் நெருக்கடியின் உலக ரீதியான அவசரநிலையை (global emergency) எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதுடன் மறுதலிவளர்ச்சியின் கொள்கையாக்கல் பற்றி விளக்கமான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நாகரீகம் தப்பவேண்டுமாயின், பூகோள மட்டத்தில் தக்கவைக்க முடியாத அளவிலான தலா சுற்றுச்சூழல்சார் சுவடுளை விட்டுள்ள உயர் செல்வந்த நாடுகளில் திட்டமிட்ட மறுதலிவளர்ச்சி அல்லது எதிர்மறைத்திரட்டல் (deaccumulation) மற்றும் பேண்தகு மனித மேம்பாட்டுக் கொள்கை இன்றைய தவிர்க்கமுடியாத தேவைகள்  என நம்பும் அவருடைய பார்வையில் சுற்றுச்சூழலியல் ரீதியான பாதுகாப்பைப் பொறுத்தவரை மனித இனம் இரண்டு மட்டங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது:

  • இன்னமும் முந்தைய நிலைக்குத் திரும்பக்கூடிய சாத்தியப்பாடுடைய, ஆனால் துரிதமாக மோசமடையும் பூகோள அமைப்பின் நெருக்கடி. இது நாகரீகத்திற்கு முழுமையாக குழிபறித்துப் பூகோளத்தை மனித இனம் வாழமுடியாத ஒன்றாக ஆக்கும் அச்சுறுத்தலை விடுக்கிறது.
  • இனி வரும் தசாப்தங்களில் தவிர்க்கமுடியாத, முன்பைவிட மேலும் துரிதமான தீவிர வானிலை மாற்றங்களும் காலநிலை மாற்றத்துடன் இணைந்துள்ள மற்றைய சுற்றுச்சூழலியல்சார் பேரழிவுகளும் உலகம்பூராவும் வட்டாரங்களையும் (localities) பிரதேசங்களையும் பாதிக்கவல்லன.

இவை இரண்டும் சமகால நெருக்கடியின் ஒன்றோடொன்று தொடர்புள்ள அவசரநிலையின் பரிமாணங்கள். பூகோளத்தில் மனித நாகரீகத்தின் அழிவைத் தவிர்க்கக்கூடிய சாத்தியப்பாடு இருப்பது ஒரு மாற்று அமைப்பைத் கட்டியெழுப்பும் சந்தர்ப்பத்தை மனித இனத்திற்குக் கொடுக்கிறது. இது பாரிய உலகரீதியான சவால்களைக் கொண்டது எனக் கருதுவது மிகையாகாது. அதே வேளை அடுத்த மட்டத்தின் பிரச்சனைகள் குறுகியகாலத்தில் தீர்வுகளைக் கேட்கின்றன. இவற்றின் குறுகிய கால பாரதூரமான தாக்கங்களிலிருந்து மக்களை, முக்கியமாகச் சுலபமாக இடர்பாட்டிற்கு ஆளாகும் ஏற்கனவே  விளிம்புநிலைப்படுத்தப்பட்ட சமூகங்களைப், பாதுகாக்கும் நோக்கிலான சமூக அணிதிரட்டலும் அடிப்படை சமூக மாற்றமும் அவசியமென எழுதுகிறார்.  இது தொடர்பான இதுவரையிலான அணுகுமுறையின் சீர்திருத்தவாத அரசியல் அடிப்படையை விமர்சித்து நிராகரிக்கிறார். செல்வந்தநாடுகளின் சோஷலிசவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தச் சீர்திருத்தவாதக் கொள்கை ஏறக்குறைய முற்றுமுழுதாகத் தணிப்பில் (mitigation) கவனம் செலுத்தி, பசுமையில்ல வாயுக்களின் வெளியேற்றங்களைக், குறிப்பாகக் கரிம வெளியேற்றங்களை, மிகத் தாமதமாக முன் தடுப்பதை நோக்காகக் கொண்டிருந்தது. ஆயினும், இந்தப் பொதுவான அணுகுமுறை இன்றைய அமைப்பின் அடிப்படைகளை சவாலுக்குட்படுத்தாது சீர்திருத்தவாத சுற்றுச்சூழல்வாதத்தில் வேரூன்றியுள்ளதால் சுற்றுச்சூழல்சார் நெருக்கடி மேலும் ஆழமாகியும் பரவியுமுள்ளது. இன்றைய நிலைமைகளிலும் தணித்தல் அவசியம் என்பதை மறுக்கமுடியாது ஆனால் அதைச் சீர்திருத்தவாதக் கருத்தியலின் பிடியிலிருந்து விடுவித்து ஒரு புரட்சிகர அரசியல் அணுகுமுறையின் வழியிலே கொள்கையாக்கி நடைமுறைப் படுத்தவேண்டும். உயிர்களை, சமூகங்களைப் பாதுகாக்கும் நோக்கில் மக்களின் சுயஅணிதிரட்டலின் வழியான இயக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். அவருடைய அடிப்படையான கருத்துக்களின் சாரம்சம் பின்வருமாறு (Foster, 2024):

  • செல்வந்தப் பொருளாதாரங்களின் திட்டமிட்ட மறுதலிவளர்ச்சி பெருமளவில் சூரிய மற்றும் வாயு சக்தி சார்ந்த பேண்தகு தொழில்நுட்பவியல்களுக்கு மாறுவதை அவசியமாக்குகிறது.  ஆனால் தற்போதைய பொருளாதார அமைப்பிற்குள் தொழில்நுட்பவியல்களால் மட்டும் காலநிலைப் பிரச்சனைக்கு உரிய காலவரைக்குள் தீர்வைக் காணமுடியாது.  அதே போலவே முதலாளித்துவத்திற்குத் தேவையான எல்லையற்ற அடுக்குவீதத் திரட்சியும்,நியாயமற்ற பங்கீடும் தொடர்வதை அனுமதிக்கும் நிலைமைகளில் தொழில்நுட்பவியல்களால் பூகோளம்சார்ந்த அவசரநிலையையும் முழுமையாகக் கையாள முடியாது. ஆகவே உற்பத்தி, நுகர்வு, பங்கீடு ஆகியவற்றை ஆளும் சமூக உறவுகளின் புரட்சிகரமான அடிப்படை மாற்றமே  மனித வரலாற்றின் தற்போதைய கட்டத்தின் புறநிலைபூர்வமான தேவை. ஏகபோக மூலதன அமைப்பு, சுரண்டல், அபகரிப்பு, கழிவு, மற்றும் முடிவிலா மூலதனத் திரட்டல் ஆகியவற்றிலிருந்து தீவிரமாக விலக வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.
  • தக்கவைக்க முடியாத தலா சுற்றுச்சூழல்சார் சுவடுகளுக்குப் பொறுப்பான செல்வந்த சமூகங்களில் மறுதலிவளர்ச்சியை நடைமுறைப் படுத்த அவற்றின் நிகர மூலதன உருவாக்கம் (net capital formation)சுழியமாக்கப்படவேண்டும். இந்த சமூகங்களில் சோஷலிச நோக்கில் மறுதலிவளர்ச்சி ஜனநாயக அடிப்படையில் பேண்தகு மனிதமேம்பாட்டை முன்னெடுக்க உதவும் வகையில் திட்டமிட்டு வழிநடத்தப்பட வேண்டும்.
  • முதிர்ச்சியடைந்த ஆலைத்தொழில்சார் சமூகங்களில் தொடர்ச்சியான தொழில்நுட்பவியல் ரீதியான விருத்தியின் உதவியுடன் ஈடுசெய்யும் முதலீடு (replacement investment) உழைப்பைச் சுரண்டும் நிலைமைகளை அகற்றி, வேலைநேரத்தைக் குறைக்கும் அதேவேளை உற்பத்தியில் உறுதியான தன்மைசார் முன்னேற்றங்களையும்  ஊக்கிவிக்க வல்லது.
  • சமூக உபரியின் உலக ரீதியான மீள்பங்கீடும் கழிவுகளின் குறைப்பும் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை பெருமளவில் மேம்படுத்தும். உலக சனத்தொகையின் செல்வமிக்க பகுதிகளைக் குறிப்பாக இலக்கு வைக்கும் திட்டமிட்ட மறுதலிவளர்ச்சி உயிர்வாழ்தலுக்கான நிலைமைகளைத் தக்கவைத்துப் பேண்தகு மனிதமேம்பாட்டை ஊக்குவிக்கும் அதேவேளை பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலைமைளை வளப்படுத்தும் திசையில் வழிநடத்தவும் உதவும்.
  • செல்வந்த நாடுகளில் மறுதலிவளர்ச்சி நடைமுறையிலிருக்கும் அதேவேளை குறைவான தலா சுற்றுசூழல்சார் சுவடுகளை விட்டிருக்கும் வறிய நாடுகள் சக்தி மற்றும் வளங்களைக் குறைந்த அளவில் பயன்படுத்தி சமூக முன்னேற்றத்தை அடையச் சந்தர்ப்பமளிக்கப்படவேண்டும்.
  • சக்தி மற்றும் வளங்களின் தலா நுகர்வில் தெற்குடன் வடக்கு சமமாவதை இலக்காகக் கொண்டு திட்டமிடல் இடம்பெறவேண்டும்.

அடிப்படை மாற்றத்தின் சக்திகளை அவர் சர்வதேசமட்டத்தில் இனங்காணுகிறார். குளோபல் வடக்கு –  குளோபல் தெற்கு இரண்டையும் இணைக்கும் வர்க்கங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் பங்கு பற்றி எழுதுகிறார்.அனுசேபப் பிளவின் பாரிய தாக்கங்கள் உலக ரீதியானதாயினும் குளோபல் தெற்கிலேயே பூகோளத்தின் நிதிமயமாக்கல் மிகவும் பெரிய அளவில் நடந்துகொண்டிருக்கிறது. அங்குதான் பேரளவில் சொத்துகளற்ற சுற்றுச்சூழல்சார் பாட்டாளிகள் உருவாக்கப்படுகிறார்கள். எல்லா இடங்களிலும் உற்பத்தி சார்ந்த வர்க்கப் போராட்டத்தோடு வர்க்க அடிப்படையிலான உணவு, காற்று, நீர் மற்றும் சமூக, சுற்றுச்சூழல் ரீதியான மீளுற்பத்தியின் தேவைகளுக்கான சுற்றுச்சூழல்சார் நீதிக்கான போராட்டங்கள் இணைகின்றன. இந்தப் போரட்டங்கள் குளோபல் தெற்கின் மூன்று கண்டங்களிலும் (ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா) அதே வேளை குளோபல் வடக்கிலும் இடம்பெறுகின்றன. உலக மட்டத்தில் ஆதிவாசிகளின் மற்றும் விவசாயிகளின் நிலங்களின் அபகரிப்புக்கு, இயற்கையின் மூலதனமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்கள் இன்றைய காலத்தின் ஒரு முக்கிய மாற்றப் போக்கு. பூகோளத்தின் முதலாளித்துவ, ஏகாதிபத்திய கைப்பற்றலும் நிதிமயமாக்கலும் குறிப்பாக குளோபல் தெற்கில் சுற்றுச்சூழல்சார் பாட்டாளிகளின் தொகையைக் கோடிக்கணக்கில் அதிகரிக்கும். இந்த வர்க்கம் மற்றைய சுரண்டப்படும் வர்க்கங்களுடன் இணைக்கப்படும் அணிதிரட்டலை அவர் வலியுறுத்துகிறார், எதிர்பார்க்கிறார். அந்த அணிதிரட்டல் புரட்சிகர மாற்றத்திற்கு இன்றியமையாதது என்பதை மறுக்க முடியாது. அதே போல அது ஒரு பாரிய சவால் என்பதையும் மறுக்கமுடியாது.

மறுதலிவளர்ச்சியின் திட்டமிடலில் எதிர்மறை வளர்ச்சிக்கும் பேண்தகு மனித மேம்பாட்டின் தன்மைரீதியான முன்னேற்றத்திற்கு உதவும் முதலீட்டுக்கும் இலக்குவைக்கப்படவேண்டிய துறைகளை இனங்காண்பது தொடர்பாக Foster உட்படப் பல ஆய்வாளர்களும் செயற்பாட்டாளர்களும் தமது கருத்துக்களைத் பகிர்ந்துள்ளனர்.

மறுதலிவளர்ச்சி பொருளாதார வளர்ச்சி பற்றிப் பொதுவாக மேலாட்சி செலுத்தும் சிந்தனைப் போக்கிற்கு முற்றிலும் எதிரான சிந்தனைப் போக்குச் சார்ந்தது. ஹிக்கெல் சொல்வது போல் ஒரு பொருளாதாரத்தின் சகல துறைகளும் ஒவ்வொரு வருடமும் வளரவேண்டும் எனும் அனுமானத்தின் அடிப்படையில் செயற்படுவதே பொதுவான பழக்கமாகிவிட்டது. அத்தகைய வளர்ச்சி சமூகத்திற்குத் தேவையா எனச் சிந்திக்காமலே செயற்படுவதுதான் வழக்கம். இந்த ´வளர்ச்சிவாதத்திற்கு´ (´growthism´) மாறாக மனித மேம்பாட்டின் மற்றும் சுற்றுச்சூழலின் பேண்தகைமையின் தேவைகளுக்கு ஏற்ப பொருளாதார முன்னுரிமைகளை வரையறுப்பதை மறுதலிவளர்ச்சிக் கொள்கை வலியுறுத்துகிறது. (Hickel, 2017).

சில உதாரணங்கள்:

  • புதிப்பிக்கவல்ல சக்தித் துறையின், விசேடமாக சூரியஒளி, வாயு சக்தி போன்றனவற்றின், அவிருத்தி முன்னுரிமை பெறும் அதேவேளை நிலத்தடியில் மிஞ்சியிருக்கும் புதைபடிவ எரிமங்களைப் பிரித்தெடுப்பதன்மீது நிரந்தரத்தடை; குறைந்தளவிலான சக்தி மற்றும் பொருள் ரீதியான வளங்களின் பயன்படுத்தலுக்கு உதவும் தொழில்நுட்பங்களின் அபிவிருத்தி; தனியார் பாவிப்புக்கான மோட்டார் வாகன உற்பத்தியின் கட்டுப்படுத்தலும் பொதுமக்களுக்கான போக்குவரத்து அமைப்பின் விரிவாக்கமும் பொதுவுடைமையாக்கலும்; பாதுகாப்பான வதிவிடம், கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் விருத்தி, அவற்றைச் சகலரின் அடிப்படை உரித்துடைமைகளாக்கல்; எஞ்சியிருக்கும் இயற்கைக் காடுகளின் பாதுகாப்பு; தனியார் தம் தனிப்பட்ட பாவிப்புக்கு விமானங்கள், வான ஊர்திகள் வைத்திருப்பதற்குத் தடை; குளோபல் தெற்கின் வளங்களை மலிவாக அபகரிக்கும் வரலாற்றுக்கு நிரந்தர முடிவு;
  • சமத்துவமும் அமைதியும் முன்னுரிமை பெறும் உலகில் இப்போதிருக்கும் பிரமாண்டமான ஏகாதிபத்திய இராணுவ அமைப்புக்கள் மற்றும் உலகெங்கும் நிறுவப்பட்டிருக்கும் தளங்களும் ஆயுத உற்பத்தி முதலீடுகளும் தேவையற்றவை.

இந்தப் பட்டியலை நீட்டலாம் ஆனால் அதற்குமுன் இவற்றை அடைவது பற்றிச் சிந்திக்கும்போது மேலே குறிப்பிட்ட சவால்களுக்குத் திரும்புகிறோம். இன்றைய உலக அரசியல் சூழலின் ஒரு முரண்பாட்டை எதிர்கொள்வதைத் தவிர்க்கமுடியாது. உற்பத்தி, நுகர்வு, பங்கீடு ஆகியவற்றை ஆளும் சமூக உறவுகளின் புரட்சிகரமான அடிப்படை மாற்றமே  தற்போதைய வரலாற்றுக் கட்டத்தின் புறநிலைபூர்வமான தேவை. அத்தகைய ஒரு மாற்றம் சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையிலான அன்னியமாக்கலை முடிவுக்குக் கொண்டுவரவும் அனுசேபப் பிளவின் புனரைப்பிற்கும் அவசியமான ஒரு அடிப்படை நிபந்தனையைப் பூர்த்திசெய்யும். ஆனால் புரட்சிகர மாற்றத்திற்கான போராட்டம் இன்னும் நம்பிக்கைதரும் ஒரு எதிர்காலக் கனவாகவே இருக்கிறது. இது புறநிலைபூர்வமான தேவைக்கும் அதை அடைவதற்கான நடைமுறைக்குரிய அகநிலைபூர்வமான யதார்த்தத்திற்குமிடையிலான ஒரு முரண்பாடாகத் தெரிகிறது. Foster இன் நூலையும் அவர் முன்னர் எழுதிய கட்டுரைகளையும் வாசிக்கும்போதும் இந்த முரண்பாடு, இந்த இடைவெளி, என் மனதில் எழுந்த வண்ணமிருந்தது.

புரட்சிகர மாற்றத்திற்குச் சாதகமான அகநிலைபூர்வமான நிலைமைகளின் உருவாக்கம் முதலாளித்துவ அமைப்பின் பலம்வாய்ந்த, திட்டமிட்ட அரசியல் கருத்தியல் மற்றும் கலாச்சார மேலாட்சிக்கு எதிரான திட்டமிட்ட அணிதிரட்டலில் தங்கியுள்ளது. இது ஒரு புரட்சிகர ஜனநாயக எதிர்-மேலாட்சி (counter-hegemonic) வேலைத்திட்டம் பற்றியது,சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களை சீர்திருத்தவாதக் கருத்தியலுக்குள் சிக்காத வழிகளில் முன்னெடுப்பது பற்றியது. சிகப்பு – பச்சை ஐக்கிய முன்னணியின் சக்திகளான தொழிலாளர், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஆதிவாசிகள், விவசாயிகள் மற்றும் நிரந்தர வாழ்வாதாரப் பாதுகாப்பற்றோர், சுற்றுச்சூழல்சார், பெண்ணிய, இனவாத-எதிர்ப்பு, மற்றும் சோஷலிசத்திற்கு ஆதரவான மற்றைய சக்திகளின் அணிதிரட்டல் ஒரு புரட்சிகர எதிர்-மேலாட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமையும் எனும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. இயற்கையின் இந்த நிலைமைகளில் திட்டமிட்ட மறுதலிவளர்ச்சிக்கும் அனுசேபப் பிளவின் புனரமைப்பிற்கும் இடையிலான உறவு, பேண்தகு மனித மேம்பாட்டின் முன்னுரிமை, உற்பத்தி உறவுகளின் மாற்றம், எதிர்மறைப் பண்டமயமாக்கலும்(decommodification) பயன்பாட்டுப் பெறுமதிகளின் உற்பத்தியும் அவற்றுடன் இணைந்த மீள்பங்கீடு மற்றும் சுற்றுச்சூழலியல்சார் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியன எதிர்-மேலாட்சி அரசியலின் உள்ளடக்கத்தின் அம்சங்களாக்கப்படுவது முக்கியம்.

சமீப காலங்களில் ஐரோப்பாவில் பல பசுமை அரசியல் கட்சிகள் அரசாங்கங்களில் அங்கம் வகிக்கும் போக்கைக் காணலாம். இந்தக் கட்சிகளின் கொள்கை அறிக்கைகள் முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பாகப் பல கோரிக்கைகளை உள்ளடக்குகின்றன. இவற்றிற்கும் மேலே குறிப்பிட்டுள்ள உதாரணங்களுக்கும் நிறையத் தொடர்புண்டு. ஆயினும் இந்த ஐரோப்பிய பசுமைக் கட்சிகள் ஒரு சீர்திருத்தவாதக் அரசியல் கட்டமைப்புக்குள்ளே ´பசுமை வளர்ச்சி´ ஆதரவாளர்களாக இயங்குகின்றன. பாராளுமன்ற அரசியலில் அவை சமூக ஜனநாயகக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது எதிர்பார்க்கப் படவேண்டியதே. இந்தச் சூழலில் குளோபல் வடக்கில் சிவப்பு – பச்சை இணைந்த சுற்றுச்சூழலியல்சார் சோஷலிச அணிதிரட்டலை சீர்திருத்தவாதம் சார்ந்த சமரசத்திற்கு இடமில்லாத வகையில் வளர்த்தெடுப்பது ஒரு நிரந்தரமான சவால்.

ஒரு தற்காலிக முடிவுரை

 பசுமை வளர்ச்சியா அல்லது மறுதலிவளர்ச்சியா? எனும் கேள்வி சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவமா அல்லது பேண்தகு மனித மேம்பாட்டை நோக்காகக் கொண்ட சுற்றுச்சூழலியல்சார் சோஷலிசமா எனும் விவாதமாக உருவெடுத்துள்ளது. சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளும் போராட்டங்களும் முதலாளித்துவத்திற்குப் புதிதல்ல. பொதுவாக வர்க்க, பால்நிலை, சுற்றுச்சூழல் மற்றும் இனவேறுபாடு தொடர்பான இயக்கங்களின் கோரிக்கைகள் ஜனநாயக மற்றும் சமூகப் பாதுகாப்பு உரிமைகளுக்கான சீர்திருத்தங்கள் பற்றியவையே. மக்கள் நலன்களை முன்னெடுக்கும் சீர்திருத்தங்களுக்கு மற்றைய இடதுசாரிகளுடன் மார்க்சிஸ்டுகளும் சேர்ந்து போராடுகிறார்கள். ஆனால் சீர்திருத்தவாதத்தை நிராகரிக்கிறார்கள். முதலாளித்துவத்தைவிடச் சிறந்த ஒரு மாற்று அமைப்புச் சாத்தியமில்லை எனும் செல்வந்த வர்க்கத்தின் கருத்தியலுக்கு சீர்திருத்தவாதம் துணைபோகிறது. முதலாளித்துவ அமைப்பில் போராடிப் பெற்ற உரிமைகளின் முழுமையான நடைமுறையாக்கம் மூலதனத்தின் பிரதான வர்க்க நலன்களுக்குக் கீழ்ப்பட்டது என்பது வரலாறு தரும் பாடம்.

இந்தத் தற்காலிக முடிவுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது ´Tax the Rich´ `செல்வந்தர்மீது வரி விதிக்கவும்´ எனும் தலைப்பிலான ஒரு செய்தி அறிக்கை எனது மின்னஞ்சல் பெட்டிக்குள் புகுந்தது. அதைத் திறக்கிறேன். அது ஐரோப்பிய ஒன்றியத்தில் மோசமாக வளர்ந்துவிட்ட அசமத்துவம் மற்றும் வறுமையைக் குறைப்பதற்காகச் செல்வந்தர்களின் சொத்துக்களுக்கு வரி விதிக்கும்படி கோரும் ஒரு கையொப்ப இயக்கத்தின் பிரசுரம். ´ஐரோப்பிய குடிமக்களின் முன்னெடுப்பு´ (European Citizens´Initiative – ECI) எனப்படும் அமைப்பு OXFAM உட்பட வேறு அமைப்புகள் மற்றும் தோமஸ் பிக்கெட்டி (Thomas Piketty) போன்ற பிரபல ஆய்வாளர்களின் ஆதரவுடன் வெளியிட்டுள்ள அந்தப் பிரசுரத்தின் உள்ளடக்கத்தின் பிரதான பகுதி இதோ: ´ஐரோப்பாவின் மிகப் பெரிய செல்வந்தர்களான ஒரு வீதத்தினர் ஐரோப்பிய செல்வத்தின் அரைவாசியின் உரிமையாளர்கள். தொழிலாளர்கள் செலுத்தும் வரிவீதம் கோடீஸ்வரர்கள் செலுத்தும் வரிவீதத்தையும் விட அதிகமானது. 2020 ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவின் ஐந்து மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் தமது செல்வத்தை 76 வீதத்தால் வளர்த்துள்ளார்கள். அதே காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 99 வீதத்தினரான குடிமக்கள் முன்னர் இருந்ததைவிட மேலும் வறுமைக்கு ஆளாகியுள்ளனர். ஐரோப்பாவின் செல்வந்தர்கள் மீது 5 வீதம் செல்வந்த வரி (wealth tax)  மட்டும் விதித்தால் வருடந்தோறும் 286.5 பில்லியன் யூரோக்கள் சேரும்.´

இது ECI இன் ´சுற்றுச்சூழலியல்சார் மற்றும் சமூக நிலைமாற்றத்திற்காகப் பெரும் செல்வத்தின்மீது வரிவிதிப்பு´(Taxing great wealth to finance the ecological and social transition) இயக்கத்தின் ஒரு செயற்பாடு. இதிலிருந்து மீண்டும் நாம் அறியக்கூடியது என்ன? சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வறுமை, சுற்றுச்சூழல்சார் நெருக்கடியின் விளைவுகள் எல்லாமே முதலாளித்துவம் மிகவும் வளர்ச்சி பெற்ற நாடுகளிலும் மறைய மறுக்கின்றன. இவற்றுள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் இருநூறு வருடகால வரலாற்றைக் கொண்டுள்ளது. சீர்திருத்தங்கள் பிரச்சனைகளின் தாக்கங்களைக் குறைக்க உதவலாம் ஆனால் முதலாளித்துவ அமைப்பில் அவைகூட நிரந்தரமானவை அல்ல.  இன்று, நவீன வரலாற்றில் முதலாளித்துவம் வகித்த முற்போக்கான பங்கின் நீண்ட அழிவுகரமான மறுபக்கத்தின் பூதாகரமான அவசரநிலை அடிப்படை மாற்றங்களைக் கோருகிறது.

நன்றி

இந்தக் கட்டுரையின் வரைவை வாசித்துக் கருத்துரைகள் வழங்கிய ரூபன் சிவராஜாவிற்கும் Degrowth எனும் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ப் பதத்தைத் தேடியபோது அதற்கு ´மறுதலித்த வளர்ச்சி´ எனும் பதத்தைச்  சிபார்சு செய்த  முனைவர் பொன்னம்பலம் இரகுபதிக்கும் என் நன்றிகள்.  மறுதலித்த வளர்ச்சியை ´மறுதலிவளர்ச்சி´ எனச் சுருக்கிப் பயன்படுத்தியுள்ளேன்

Notes
[i] உப-ஆணைக்குழுவின் முடிவு மற்றும் அது பற்றிய விமர்சனத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்:
The Anthropocene’s critics are missing the point. Climate & Capitalism, March 13, 2024    https://climateandcapitalism.com/2024/03/13/why-the-anthropocenes-critics-are-wrong/

[ii] இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திச் சில ஆய்வாளர்கள் ஏற்கனவே பல நூல்களையும் கட்டுரைகளையும் பிரசுரித்துள்ளனர். இவை பெரும்பாலும் சுற்றுச்சூழலியல், கம்யூனிசம், காலனித்துவ நாடுகளின் விடுதலை, பால்நிலை போன்றவை தொடர்பாக மார்க்ஸ் கொண்டிருந்த ஆனால் இதுவரை அறியப்படாத கருத்துக்கள் பற்றியவை. MEGA பற்றிய விபரங்களுக்கு: https://en.wikipedia.org/wiki/Marx-Engels-Gesamtausgabe

[iii] யதார்த்தத்தை தலைகீழாகப் பிரதிபலிக்கும் இந்த மயக்கத்தை நவீன பொருளியலும் கோட்பாட்டுமயமாக்கியுள்ளது. உற்பத்தி சாதனங்களிலிருந்து பிரிக்கப்பட்ட தொழிலாளர்கள் தமது உழைப்பு சக்தியை முதலாளிகளுக்கு ஒரு பண்டமாக விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் ஒரு சேதன அங்கமான உழைப்பு சக்தி அவர்களிடமிருந்து (வேலை நேர அடிப்படையில்) பிரிக்கப்பட்ட ஒரு உற்பத்தி காரணியாக, நிலம் மற்றும் மூலதனம் எனப்படும் மற்ற இரு பண்டமயமாக்கப்பட்ட உற்பத்தி சாதனங்களுடன் இணைக்கப் படுகிறது. நிலம், உழைப்பு, மூலதனம் ஆகிய மூன்றின் உடைமையாளர்களுக்கு இடையிலான உறவுகள் வருமானங்கள் தரும் மூன்றுபொருட்களுக்கு இடையிலான உறவுகளாக முன்வைக்கப்படுகின்றன: நிலம்–வாடகை; உழைப்பு–ஊதியம்; மூலதனம்–வட்டி. இந்த வகுத்தலில் (formulation) மூலதனம் பெறும் இலாபம் அகற்றப்பட்டுள்ளது, உற்பத்தி உறவுகள், தொழிலாளரின் சுரண்டலுக்கூடாக முதலாளி தன் கைவசமாக்கும் உபரிப் பெறுமதி, மற்றும் இலாபம், வட்டி, வாடகை எல்லாம் உபரியின் பங்குகள் ஆகிய யதார்த்தங்கள் மறைக்கப்படுகின்றன. யதார்த்தத்தின் தலைகீழாக்கப்பட்ட இந்த விளக்கத்தை மார்க்ஸ் திருமூர்த்தி சூத்திரம் (Trinity Formula) என வர்ணித்தார் (மேலும் விபரங்களுக்கு: Marx, Capital Vol.

III, Chapter 48). பண்டம் மற்றும் பரிமாற்றப் பெறுமதி பற்றி மார்க்ஸ் தெளிவாகவும் சுவையாகவும் சொல்வதைப் பார்ப்போம்: ´பண்டங்களால் பேசமுடியுமென்றால், அவை சொல்லும்: எங்களுடைய பயன்பாட்டுப் பெறுமதி மனிதரின் அக்கறையை ஈர்க்கலாம், ஆனால் பொருட்கள் என்ற வகையில் அது எங்களின் ஒரு பண்பல்ல. பொருட்களெனும்போது நமது பெறுமதியே நமது பண்பாகிறது. பண்டங்களாக நமக்கிடையே இருக்கும் உறவுகள் அதை நிரூபிக்கின்றன. பரிமாற்றப் பெறுமதிகளாக மட்டுமே ஒன்றுக்கும் மற்றதிற்குமிடையிலான நமது உறவு அமைந்துள்ளது.´ (Marx, Capital. Vol. I, Chapter 1)

[iv] மூலதனமும் இயற்கையும் எனும் தலைப்பிலான எனது கட்டுரைத் தொடரில் metabolism எனும் பதத்திற்கு தமிழில் வேதியியல் எனும் சொல்லைப் பயன்படுத்தியிருந்தேன். இந்தக் கட்டுரையில் அதற்குப் பதிலாக இலங்கையில் வழக்கிலிருக்கும் அனுசேபம் எனும் சொல்லை பயன்படுத்துகிறேன். இது வேதியியல் எனும் பதத்தைவிடப் பொருத்தமானதெனக் கருதுகிறேன்.

[v] மார்க்சியவாதிகள் மற்றும் இடதுசாரி வட்டங்களில் வரவேற்பைப் பெற்றுள்ள சைத்தோவின் நூல் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களையும் முன்வைத்துள்ளது. அந்தக் கருத்துக்கள் பற்றி விவரமாக வேறொரு கட்டுரையில் அலசுவோம்.

[vi] ´மனிதர் இயற்கையாலாயே உயிர்வாழ்கிறார்கள், அதாவது, இயற்கைதான் நமது உடம்பு, நாம் உயிர்வாழவேண்டுமாயின் இயற்கையுடனான நமது தொடர்பாடலைத் தொடரவேண்டும்´ (Marx, 1844).

[viii] Daly இன் அணுகுமுறை பொருளாதாரம் பற்றி Nicholas Georgescu-Roegen இன் வெப்பவேதியியல் (Thermodynamics) அடிப்படையிலான கோட்பாடு சார்ந்தது. Georgescu-Roegen இன் பிரபலமான நூலான The Entropy Law and the Economic Process (1971) வெப்பவேதியியலின் இரண்டாவது விதிக்கும் பொருளாதாரத்திற்குமிடையிலான உறவு பற்றியது. ஆயினும் Georgescu-Roegen அவருடைய பிரபலமான மாணவரான Daly இன் கோட்பாட்டையும் விமர்சித்தார்.

[ix] Brundtland அறிக்கை வெளிவந்தபோது நான் நோர்வீஜிய விவசாயப் பல்கலைக்கழகத்தில் (தற்போது நோர்வீஜிய உயிர் அறிவியல்கள் பல்கலைக் கழக ம் – Norwegian University of Life Sciences) இயற்கை வளங்களின் முகாமையும் பேண்தகு விவசாயமும் (Management of Natural Resources and Sustainable Agriculture) எனும் பெயரிலான புதிய சர்வதேச முதுமாணிப் பட்டத் திட்டத்தின் கல்விசார் ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றினேன். அந்தக் காலகட்டத்தில் எனது விரிவுரைகளிலும் மாணவர்களின் கருத்தரங்குகளிலும் Brundtland அறிக்கை ஒரு பேசுபொருளாக இருந்தது.

[x] ஒகொனி மக்களின் உயிர்வாழ்வுக்கான இயக்கம் (Movement for the Survival of the Ogoni People – MOSOP) எனப்படும் அமைப்பை நைஜீரியாவின் பிரபல நாடகாசிரியரும் மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான Ken Saro-Wiwa அவர்களால் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு அவரும் அவருடன் இயங்கிய எட்டு தோழர்களும் கைது செய்யப்பட்டு அரசினால் குற்றம் சாட்டப்பட்டு 1995 ஆம் தூக்கிலிடப்பட்டனர். அவருக்கும் மற்றவர்களுக்கும் எதிராகப் பொய் சாட்சி சொல்ல இருவருக்கு Shell கம்பெனி கைக்கூலி வழங்கியதாக நம்பப்படுகிறது. தூக்கிலிடப்படமுன் அவர் கூறிய இறுதி வார்த்தைகள்: தேவனே என் ஆத்மாவை எடுத்துக்கொள். போராட்டம் தொடர்கிறது´. (Ken Saro-Wiwa, Wikipedia)

[xi]  IPCC, Working Group I இன் அறிக்கை: Climate Change 2021: The Physical Science Basis https://www.ipcc.ch/report/ar6/wg1/

[xii] இது பற்றி மேலும் அறிவதற்கு: Monthly Review October 2021 (Vol. 73, No. 5) https://monthlyreview.org/2021/10/01/mr-073-05-2021-09_0/

[xiii]மூலதனம் மூன்றாம் பாகத்தில் மார்க்ஸ் முன்வைக்கும் இந்தக் கருத்தின் பின்னணி பற்றிக் குறிப்பிடுதல் அவசியம். இலாபம் தரும் முதலீடுகளுக்கு பயன்படக்கூடிய இயற்கை வளங்களைத் தமது ஏகபோகச் சொத்தாக்கிகொண்டவர்கள் அவற்றை ஆலைத்தொழில் முதலீட்டாளர் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் வாடகை பெறுகிறார்கள். இந்த வாடகை முதலீட்டாளர்  தொழிலார்களைச் சுரண்டிப் பெறும் உபரியின் ஒரு பகுதி. ஆனால் இந்த உறவில் எதுவித பங்கும் வகிக்காமலே – அந்த முதலீட்டாளரின்தொழில்முனைவு, அவர் எதிர்கொள்ளும் ஆபத்து (risk) போன்றவற்றுடன் எதுவித தொடர்புமின்றி ஒரு இயற்கை வளத்தின், அதாவது பூகோளத்தின் ஒரு பகுதியின்,தனிச்சொத்துடைமையாளர் என்பதால் மட்டுமே ஒருவர் வாடகை பெறுவதை ஆராயும் சந்தர்ப்பத்திலேயே மார்க்ஸ் மேற்கண்ட கருத்தைப் பதிவிடுகிறார்.சொத்துடைமையாளரைப் பொறுத்தவரை அவர் பெறும் வாடகை அந்த இயற்கை சக்தியை வாங்குவதற்கு செய்த முதலீட்டின் வட்டி. இது போன்ற ஒரு நியாப்பாட்டையே அடிமைகளைப் பண்டங்கள்போல் பயன்படுத்துவோரும் தெரிவிக்கிறார்கள்.

[xiv] இருபதாம் நூற்றாண்டின் முதலாவது சோஷலிசப் புரட்சி மற்றும் புரட்சிக்குப்பின் வந்த அமைப்பு பற்றிய ´.´ஒக்டோபர் 1917  ஒரு மாபெரும் புரட்சியின் நினைவுகூரலும் விமர்சனமும்.´ எனும் தலைப்பிலான எனது கட்டுரையை இந்த இணையத் தளத்திலும்: Samuthran.net, இந்த நூலிலும்  பார்க்கலாம்: சமுத்திரன் எழுத்துக்கள், 2023: தொகுதி 2.

[xv] 1845 ஆம் ஆண்டு மார்க்ஸ் எழுதிய German Ideology எனும் தலைப்பிலான நூலில் தனது கம்யூனிச சமூகக் கனவைக் கவித்துவமாகப் பின்வரும் வார்த்தைகளில் வடிக்கிறார்–  ´எவருக்குமே ஒரு பிரத்தியேகமான செயற்பாட்டு வெளி இல்லாத கம்யூனிச சமூகத்தில் ஒவ்வொருவரும் தான் விரும்பிய துறையில் நிறைதிறன் பெற்றவராகலாம். பொதுவான உற்பத்தியை சமூகமே ஒழுங்குபடுத்துவதால் நான் இன்று ஒன்றையும் நாளை வேறொன்றையும் செய்வதை சாத்தியமாக்குகிறது, காலையில் வேட்டையாட, பிற்பகலில் மீன்பிடிக்க, மாலையில் மாடு வளர்க்க, மாலை உணவுக்குப் பின் விமர்சிக்க, எனக்கு ஒரு மனது இருப்பது போல், ஒருபோதும் ஒரு வேட்டைக்காரனாக, மீன்பிடியாளனாக, மந்தையாளனாக, அல்லது விமர்சகனாக ஆகிவிடாமல்´.

 [xvi] இந்தக் கருத்து, 1859 ஆம் ஆண்டு மார்க்ஸ் எழுதிய A Contribution to the Critique of Political Economy ( அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு) கட்டுரையின் முகவுரையில்  காணப்படும் பின்வரும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது:  ஒரு உற்பத்தி அமைப்பின் அபிவிருத்தியின் ஒரு கட்டத்தில் உற்பத்தி சக்திகள் அதன் உற்பத்தி உறவுகளுடன் – சட்டரீதியில் சொல்வதானால் இதுவரை செயற்பட்டு வந்த கட்டமைப்புக்குள்ளிருந்த சொத்துடைமை உறவுகளுடன் – முரண்பாட்டுக்கு உள்ளாகின்றன. உற்பத்தி உறவுகளின் அபிவிருத்திக்கு ஏற்றவையாயிருந்த இந்த உறவுகள் அவற்றின் தடைகளாக மாறுகின்றன. அப்போது ஒரு சமூகப் புரட்சியின் காலகட்டம் ஆரம்பிக்கிறது. பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறுகிய காலத்தில் அல்லது பின்னர் முழுப் பாரிய மேல்கட்டுமானத்தின் மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் (Marx, 1859). சமூகப் புரட்சியை வரலாற்றின் போக்கின் தவிர்க்கமுடியாத விளைவாகக் காணும் இந்த நிலைப்பாட்டில் ஹெகெலியச் (Hegelian) செல்வாக்கு இருப்பதாகச் சிலர் விமர்சித்துள்ளனர். மூலதனம் முதலாம் பாகத்தில் வரும் ´So-called Primitive Accumulation´ எனும் தலைப்பினைக் கொண்ட அத்தியாயத்தின் பிற்பகுதியில் முதலாளித்துவத்தின் முடிவு பற்றி மார்க்ஸ் கூறும் கருத்துக்களிலும் இந்தப் பார்வையின் செல்வாக்குத் தென்படுகிறது: ´முதலாளித்துவம் வளர்ச்சி பெற்று மூலதனத்தின் ஏகபோகம் இதுவரை முன்னேறி வந்த உற்பத்தி அமைப்பின்மீது ஒரு தடையாக மாறும் கட்டத்தில், உற்பத்திச் சாதனங்ளின் மையப்படுத்தலும் உழைப்பின் சமூகமயமாக்கலும் அவற்றின் முதலாளித்துவ வெளியுறையுடன் ஒத்துப்போக முடியாத நிலையை அடைகின்றன. இந்த வெளியுறை வெடித்துத் துண்டுகளாகிறது. முதலாளித்துவ தனியுடைமையின்சாவுமணி ஒலிக்கிறது.´ (Marx, 1990, Capital Vol. I: 929).

[xvii]ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மார்க்சின் சில எழுத்துக்களில் உற்பத்தி சக்திகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உற்பத்தி உறவுகள் தடைகளாக மாறும்போது சமூகப் புரட்சியின் காலம் பிறக்கிறது எனும் நிர்ணயவாதக் (determinist) கருத்தைக் காணமுடிகிறது. இது பற்றி மேலும் அறிய xvi ஆம் அடிக்குறிப்பைப் பார்க்கவும்.

[xviii] ஐ. நா காலநிலை மாற்றம் தொடர்பான சட்டக ஒப்பந்தத்தில் (UNFCC) கைச்சாத்திட்டுள்ள அரசாங்கங்கள் ஒன்றுகூடும் வருடாந்த மாநாடு (Conference of Parties – COP) இடம்பெறும்போது அதன் தீர்மானங்களின் போதாமை மற்றும் பெருமூலதனத்தின் நலனுக்குச் சார்பான செல்வந்த நாடுகளின் அரசாங்கங்களின் போக்கு மீதான உலக மக்களின் எதிர்ப்பைக் காட்டும் பேரளவிலான நிகழ்வுகள் இவற்றின் பிரபலமான உதாரணங்கள். அதே போன்று, 2010 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் பொலிவியாவின் (Bolivia)  கொச்சம்பா (Cochamba) நகரில் இடம்பெற்ற ´காலநிலை மாற்றம் மற்றும் பூமித்தாயின் உரிமைகள் பற்றிய உலக மக்களின் மாநாடு´ நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து முப்பதாயிரத்திற்கும் மேலான பிரதிநிதிகளின் கூட்டான கோரிக்கைகளை உள்ளடக்கும் அறிக்கை வடக்கு – தெற்கு மக்கள் அமைப்புகளுக்கு இடையிலான ஒருமைப்பாட்டிற்கு உரமூட்டியுள்ளது.

[xix] Donella H Meadows et al, 1972, The Limits to Growth, A Report for the Club of Rome´s Project  on The Predicament of Mankind,       https://collections.dartmouth.edu/content/deliver/inline/meadows/pdf/meadows_ltg-001.pdf

[xx] சைத்தோவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக ஒரு தனியான கட்டுரையை எழுதவுள்ளேன்.

உசாத்துணை

Adams, W. M. 1990, Green Development Environment and Sustainability in the Third World, Routledge, London.

Angus, Ian 2016, Facing the Anthropocene –  Fossil Capital and the Crisis of the Earth System, Monthly Review Press, New York.

Bernabe, Rafael July 2023, Saito, Marx and the Anthropocene: A Critique, Climate and Capitalism. https://climateandcapitalism.com/2023/07/05/saito-marx-and-the-anthropocene-a-critique/

Bohm, Steffen, Maria Ceci Misoczky and Sandra Moog 2012, Greening Capitalism? A Marxist Critique of Carbon Markets, Organization Studies, 0(0) 1-22 https://core.ac.uk/download/pdf/16387374.pdf

Burkett, Paul 2013, Marxism and Ecological Economics, Aakar Books, Delhi.

Burkett, Paul 2014, Marx and Nature A Red Green Perspective, Haymarket Books, Chicago.

Foster, John Bellamy 2000, Marx´s Ecology: Materialism and Nature, Monthly Review Press, New York

Foster, John Bellamy, Brett Clark and Richard York, 2010 The Ecological Rift, Monthly Review Press, New York.

Foster, John Bellamy 2015, Marxism and Ecology: Common Fonts of a Great Transition, Great Transition Initiative, https://greattransition.org/publication/marxism-and-ecology

Foster, John Bellamy 2016, Marxism in the Anthropocene: Dialectical Rifts on the Left, International Critical Thought, Vol. 6, No. 3: 393-421     https://johnbellamyfoster.org/wpcontent/uploads/2016/08/2016_Marxism_in_the_Anthropocene.pdf

Foster, John Bellamy and Paul Burkett 2017, Marx and the Earth An Anti-critique, Haymarket Books, Chicago IL.

Foster, John Bellamy, 2024, The Dialectics of Ecology, Monthly Review Press, New York.

Gorz, Andre 1980, Ecology as Politics, South End Press, Boston.

Graham, Stephen 2019, Green Capitalism: a critical review of the literature, Revolutionary Socialism in the 21stCentury, RS21,  https://www.rs21.org.uk/2019/03/16/revolutionary-reflections-green-capitalism-a-critical-review-of-the-literature-part-iii/

Hickel, Jason 2017, Degrowth: A Response to Branko Milanaovic, Jason Hickel Blog, https://www.jasonhickel.org/blog/2017/11/19/why-branko-milanovic-is-wrong-about-de-growth

Hickel, Jason January 2022, Degrowth is about Global Justice, Green European Journal, https://www.greeneuropeanjournal.eu/degrowth-is-about-global-justice/

Hickel, Jason September 2023, The Double Objective of Democratic Socialism, Monthly Review, https://monthlyreview.org/2023/09/01/the-double-objective-of-democratic-ecosocialism/

Hickel, Jason July 2023, On Technology and  Degrowth, Monthly Review, https://monthlyreview.org/2023/07/01/on-technology-and-degrowth/

Jessop, Bob 2020, State, in  Marcello Musto (ed), The Marx Revival Key Concepts and New Interpretations, Cambridge University Press

Klein, Naomi 2014, This Changes Everything – Capitalism VS Climate, Simon & Schuster, New York, London, Toronto, Sydney, New Delhi

Lohmann, Larry 2010, Uncertainty Markets and Carbon Markets: Variations on Polanyian Themes, New Political Economy, 15: 2, 225-254 https://www.tandfonline.com/doi/abs/10.1080/13563460903290946

LSE 2023, The Voluntary Carbon Market and Sustainable Development, Summary,  London School of Economics and Political Science, https://www.lse.ac.uk/granthaminstitute/wp-content/uploads/2023/03/The-voluntary-carbon-market-and-sustainable-development-policy-brief.pdf

Mandel, Ernest 1972, The Dialectic of Growth, https://www.marxists.org/archive/mandel/1972/11/growth.html

Marx, Karl (1867) 1990,  Capital, Volume 1, Penguin Books

Marx, Karl (1894) 1991,   Capital, Volume 3, Penguin Classics

Marx, Karl  1859, A Contribution to the Critique of Political Economy, https://www.marxists.org/archive/marx/works/1859/critique-pol-economy/

Marx, Karl, 1875, Critique of the Gotha Program       https://www.marxists.org/archive/marx/works/1875/gotha/

Napoletano, Brian M June 2024, Was Karl Marx a Degrowth Communist, Monthly Review, https://monthlyreview.org/2024/06/01/was-karl-marx-a-degrowth-communist/

Newell, P. and Paterson, M 2010, Climate capitalism: global warming and the transformation of the global economy. Cambridge, UK: Cambridge University Press.

Pearce, Fred  March 2021, Is the ‘Legacy’ Carbon Credit Market a Climate Plus or Just Hype? Yale Environment 360, https://e360.yale.edu/features/is-the-legacy-carbon-credit-market-a-climate-plus-or-just-hype

Prigogine, Ilya and Isabelle Stengers 1985, Order Out of Chaos Man´s New Dialogue with Nature, Flamingo, Fontana Paperbacks.

Saito, Kohei 2017, Karl Marx´s Ecosocialism, Monthly Review Press, New York

Saito, Kohei 2022, Marx in the Anthropocene Towards the Idea of Degrowth Communism, Cambridge University Press.

Sapinski, Jeane Philippe 2015, Climate Capitalism and the Global Corporate Elite network, Environmental Sociology 1(4): 268-27 https://cssn.org/wp-content/uploads/2020/12/SapinskiJP_2015_ClimatePolicyGroupsAndNetworksOfCorporatePower_EnvSoc_Final_2015-12.pdf

சமுத்திரன் 2023, மூலதனமும் இயற்கையும் – மார்க்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் (2017), அத்தியாயம் 7, சமுத்திரன் எழுத்துக்கள் தொகுதி 02, சர்வதேச அரசியல் பொருளாதாரம் கட்டுரைத்தொகுப்பு, சமூகம் இயல் பதிப்பகம், லண்டன்.

சமுத்திரன்  2023,  அபிவிருத்தி – மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா?  சமுத்திரன் எழுத்துக்கள் தொகுதி 01, இலங்கை – மீள்சிந்திப்பிற்கான சில முன்மொழிவுகள், கட்டுரைத்தொகுப்பு, சமூகம் இயல் பதிப்பகம், லண்டன்

Stockholm Resilience Centre (SRC) 2023, Planetary Boundaries, https://www.stockholmresilience.org/research/planetary-boundaries.html

Tyberg, Jamie and Erica Jung 2021, Degrowth and Revolutionary Organizing, Rosa Luxembourg Foundation, New York 2021, https://rosalux.nyc/degrowth-and-revolutionary-organizing/

Turner, R. K. 1993, Sustainability Principles and Practice, in R. K. Turner (ed), 1993, Sustainable Environmental Economics and Management, Principløes and Practice, Belhaven Press, London & New York.

WCED World Commission on Environment and Development, 1987, Our Common Future, Oxford University Press, Oxford, New York.

 

நடிகர் ஒன்றியம் அளித்த வித்தியாசம் கலந்த விருந்து

இந்த விமர்சனம் தினகரன் வாரமஞ்சரியில் 14-11-1976  பிரசுரிக்கப்பட்டது.

சமுத்திரன்

 

கடந்த ஒரு வருடமாக கொழும்பு நடிகர் ஒன்றியம் இரசிகர் அவைக்கெனத் தொடர்ச்சியாக அளித்து வந்த நாடகக் கலை விருந்து கடந்த 27ம் திகதி ஒருவித சுவை மாற்றத்துடன் இடம் பெற்றதென்று கூறுவதில் தவறில்லை என நம்புகிறேன். நடிகர் ஒன்றியத்தினரின் சமூக உணர்வை, இலட்சிய வேட்கையைப் பிரதிபலிக்கும் சிறிய நாடகமாக ( 40 நிமிடங்கள்) ‘வழிகாட்டி’ அமைந்தது. நேரடியான சமூகப் பிரச்சினைகளின் வர்க்க அரசியல் வேர்களையும், அவற்றின் தீர்வுக்கான வெகுஜன எழுச்சி மார்க்கத்தையும் காட்டியது வழிகாட்டி. இத்தகைய உள்ளடக்கத்தைக் கொண்ட முன்னைய நாடகங்களைப் போலவே இதிலும் சில சிக்கலான உத்திகள், கருத்து ரீதியான, மறைமுகமான கூற்றுகள் இடம்பெற்றன.

வித்தியோதய வளாக மாணவர்கள் மேடையேற்றிய இந்நாடகம், தாசீசியஸின் நெறியாள்கையில் தரப்பட்டது. நாடகாசிரியர் நா. சுந்தரலிங்கம் அவருக்கே உரித்தான பாணியில் கதை வசன அமைப்பில் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். ஆனால் ‘வழிகாட்டி’யில் (Abstraction) அளவுக்கதிகமாகிவிட்டதாகப் பலர் அபிப்பிராயப்பட்டிருப்பார்கள். ஆரம்பக் காட்சிகள் பலருக்குப் புரிந்து கொள்ளக் கஷ்டமாயிருந்திருக்கும். ஆயினும் இறுதிக் காட்சி இரசிகர்களின் மனங்களிலேற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க உதவியிருக்கும் என நம்புகிறேன். அதிகாரத்தில் தொடர்ந்துமிருப்பதையே நோக்கமாகக் கொண்ட சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்கள் மக்களின் சுலோகங்களை, மக்கள் வேண்டி நிற்பதையே தாமும் ஏற்றுக் கொள்கிறோம் என்று வேஷம் போட்டு மக்களைத் தொடர்ந்தும் தம் சுரண்டல் ஆதிக்கத்துக்குள் அடக்கி விடப் பகீரதப் பிரயத்தனம் எடுப்பதையும், விழிப்படைந்த மக்கள் சரியான பாதையில் எழுந்து செல்வதையும் காட்ட முற்பட்டிருக்கிறார்கள். இந்த உள்ளடக்கத்திற்கு அபத்தப்பாங்கு உத்திகள் மூலமும் சில இடங்களில் மறைமுகமான, நேரடியான கூற்றுக்கள் மூலமும் உருக்கொடுத்திருக்கிறார்கள்.

நாடகத்தரம் உயர்வு

சில மாதங்களுக்கு முன், வித்தியோதய வளாகத் தமிழ்க் கலை விழாவில் ‘ஓலங்கள்’ என்ற பெயரில் ஒரு நாடகத்தை மேடையேற்றினார்கள். இந்தத் தடவை நாடகத்தின் தரம் பல மடங்கு அதிகரித்திருக்கிறதைக் காண முடிந்தது. குறிப்பாக நடிப்பில் கணிசமான முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக இருந்தது. வித்தியோதய தமிழ்ச் சங்கத்தினர்; பாராட்டப்பட வேண்டியவர்கள். தாசீசியஸ், சுந்தரலிங்கம் போன்ற பன்முகத் திறமை கொண்ட கலா விற்பன்னர்களின் வழிகாட்டைலைப் பெற்றிருக்கும் வித்தியோதய தமிழ் மாணவர்களிடம், கட்டுப்பெத்தை வளாகத் தமிழ் மாணவர்கள் போன்று நாடகத்துறையில் சிறந்த ஒரு மரபினை, பயன்தரு பங்களிப்பை ஆற்றக் கூடிய தகைமைகளைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால்  ஒன்றை மறந்துவிடக் கூடாது. உத்திகள், புதுமையான கலை நுட்பங்கள் அவசியம்தான். ஆனால் அவற்றை இரசிகர்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளவும் வேண்டும். அல்லாவிட்டால் விஷேச இரசனை வளர்ச்சி கொண்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு சிலரால் தான் நாடகத்தைப் புரிந்து இரசிக்க முடியும்.

 கொழும்பு இரசிகர் அவை பொதுவாக நடுத்தர வர்க்கத் தமிழர்களைக் கொண்டது. இவர்களே இன்று நடிகர் ஒன்றியத்தின் நாடகத்தைப் பெருமளவில் விரும்பிப் பார்க்கிறார்கள். சென்ற வருடம் ‘விழிப்பு’ நாடக இரசிகர்கள் மத்தியில் பல்வகைப்பட்ட அபிப்பிராயங்களை ஏற்படுத்திய அதேவேளையில் தமிழ் நாடகத் துறையின் பக்குவப் பராயம் முடிந்து மலர்ச்சியான வளர்ச்சிக் கட்டம் ஆரம்பித்து விட்டதென்பதை அறிவித்தது. ஆனால் வெற்றி தந்த நம்பிக்கையில் நடிகர் ஒன்றியம் உருவ அமைப்பைப் புதுமைப்படுத்துவதில் அதிக வேகத்துடன் செல்கிறதோ என்ற பயம் என் மனதில் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக இரசிகர் அவையும் தனது அப்பியாசக் காலத்தைக் கடந்து வருவது உண்மை என்ற போதிலும் அவர்களை விட்டு அதிகம் தூரம் பாயாதிருத்தல் ஒன்றியத்தினருக்கு அவசியம்.

சுவை மாற்றம் 

 சுவை மாற்றத்துடன் தரப்பட்ட “மழை” (1-15 மணி) இரண்டாவது நாடகமாகும். இந்திரா பார்த்தசாரதியின் “மழை” இலங்கையின் ஊர் பேர்களுடன் தரப்பட்டது. இதுவரையில் நேரடியான சமூகப் பிரச்சனைகளைப் பலதரப்பட்ட பாங்கிலமைந்த உத்திகளைப் பயன்படுத்திக் கலைத்துவத்துடன் நாடகங்களாகத் தந்த ஒன்றியத்தினர் இங்கே சிக்கல் கொண்ட மனித உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு கதையை யதார்த்தப் பாங்கில் இலகுவான முறையில் உருக்கொடுத்திருக்கிறார்கள். “மழை” கதையின் அணுகு முறை சிக்மன்ட் பிராயிட் (Sigmond Freud) டின் கருத்துக்களைச் சார்ந்த மனோதத்துவ அணுகு முறையேயாகும். உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைப் பற்றிய கதை மழை. இதில் வரும் பாத்திரங்கள் நாலே நாலு பேர் தான். உயர்வு தாழ்வுச் சிக்கல், குற்ற உணர்வுகள், நரம்புத் தளர்ச்சியின் விளைவான திடீர் மாற்ற நடத்தைகள் இவையெல்லாம் நிறைந்ததே இந்நாடகம். நாடகத்தின் பாத்திரங்களே தங்களின் நடத்தைக்குத் தாங்களே மனோதத்துவ விளக்கங்கள் கொடுக்க முற்படும் பொழுது அமெச்சூர் மனோதத்துவ ஞானிகளாகக் (Amateur Psychologist) காணப்படுகின்றார்கள். (எனது அபிப்பிராயத்தில் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதியும் ஒரு Amateur Psychologist தான்).

இந்த நாடகத்தின் மையமான பாத்திரம் நிர்மலா என்ற முப்பது வயது மணமாகாத பெண். அவளுடைய தந்தை ஓர் இளைப்பாறிய பேராசிரியர். அவள் சிறுவயதில் தாயை இழந்தவள். அவளது அண்ணன் பத்து வருடங்களுக்கு முன்னர் தகப்பனோடு சண்டை போட்டுக் கொண்டு வெளியேறிவிட்டான். பேராசிரியரும் மகளும் ஒரு கிராமத்தில் வாழ்கிறார்கள். தகப்பன் மகளின் திருமணத்தைப் பற்றி அக்கறை காட்டாது அவளைத் தன்னோடு வைத்திருக்கிறார். அவளிடம் அவர் அன்றாட வாழ்வில் மனோதத்துவ ரீதியில் தங்கியிருக்கிறார். வயது வந்த நிர்மலா மனப்பிரச்சினைக்குப் பலியாகி நரம்புத் தளர்ச்சியால் தாக்கப்பட்டவள் போல் அடிக்கடி நடந்து கொள்கிறாள். இருதய நோயாளியாகிவிட்ட பேராசிரியருக்கு மருத்துவம் செய்ய வரும் டாக்டர் ஜேம்ஸிடம் (அவர் விவாகரத்துப் பெற்றுச் சமூக சேவையில் ஈடுபட்டிருப்பவர்) நிர்மலா தகப்பன் மீது தான் கொண்டிருக்கும் வெறுப்புணர்ச்சியை எல்லாம் கக்கித் தள்ளுகிறாள். தகப்பன் தூங்குவது போலிருக்கையில் அவள் அவர் மீது தனக்குள்ள ஆத்திரத்தையெல்லாம் ஜேம்ஸிடம் சொல்லிவிட்டு எனக்கு ஓர் ஆண் வேணும் (I need a man) அது நீங்களாகவே இருக்கலாம் என்கிறாள். மழையும் காற்றும் அடிக்கின்றன. மின்சாரம் நிற்கிறது. ஜேம்ஸ் பேராசிரியரைப் பரிசோதிக்கிறார். அவர் இறந்து கிடக்கிறார். நிர்மலா எதுவித பதற்றமும் அடையவில்லை. அவளின் அண்ணன் ரகு வந்து சேருகிறான். அவன் தகப்பன் மீது வெறுப்புள்ளவன். தகப்பன் நிர்மலா மீது அளவு கடந்த பாசத்தைக் காட்டியதைக் கண்டு எரிச்சலடைந்து வெளியேறியவன். ரகு-நிர்மலா-ஜேம்ஸ் இந்த மூவருக்குமிடையே நாடகம் நகர்கிறது. நிர்மலா ஜேம்சை மணந்து அந்தக் கிராமத்தை விட்டு வெளியேற விரும்புகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் கிராம மக்கள் தன் சேவையை மறந்து விட்டதைக் கண்ட ஜேம்ஸ் நிர்மலாவின் விருப்பத்திற்கு இணங்குகிறார். ஆனால் கிராம மக்கள் அவரை மீண்டும் ஏற்றுக் கொண்ட போது அங்கே அவருடைய சேவை தேவைப்படும் அவசியமும் ஏற்படும் போது ஜேம்ஸ் மனதை மாற்றி விடுகிறார். ஆத்திரமடைந்த நிர்மலா சொல்கிறாள் எனக்கு முன்பே தெரியும் நீங்கள் வரமாட்டீர்கள் என்று.

கடினமான பாத்திரம்

இந்த நாடகத்தில் நிர்மலாவின் பாத்திரம் மிகவும் கடினமான ஒன்று. அந்தப் பாத்திரத்தைத் தத்ரூபமாகச் செய்திருக்கிறார் ஆனந்தராணி ராஜரத்தினம். தகப்பன் மீது பாசத்தையும், வெறுப்பையும் கொண்டிருக்கும் நிலையை, தன் இளமை தனிமைக்குப் பலியாகும் கொடிய அனுபவத்தில் அதற்குக் காரணமாக இருக்கும் தகப்பன் மீது வெறுப்பையெல்லாம் அள்ளி வீசும் ஹிஸ்ரிறியா (Hysteria) வசப்பட்ட குழப்ப நடத்தையை, தகப்பனின் சாவுக்குத் தானே காரணம் எனும் குற்ற உணர்வில் சிக்கித் தத்தளிக்கும் மனப் புழுங்கலை, ஆனந்தராணி குறிப்பாகச் சித்திரிக்கிறார். நடிகைகளுக்குப் பஞ்சமேற்பட்டுள்ள இந்தக் காலத்தில் இத்தகைய ஒரு நடிகை தமிழ் நாடக உலகுக்குக் கிடைத்திருப்பது மிகவும் பெருமைப்பட வேண்டியதாகும்.

ரகுவின் பாத்திரமும் புதுமையானதுதான். ரகுவும் நிர்மலாவும் தோன்றும் காட்சிகள் அவர்களின் சம்பாஷனைகள் மனோதத்துவ ரீதியில் பேராசிரியரை, அவர்களிருவரை, ஜேம்சை விளக்குபவையாகவும் மிகவும் சுவையானவையாகவும் அமைந்துள்ளன. நிர்மலா ஜன்னலருகில் போய் நிற்பதும், அதைச் சாத்திவிட்டுப் பயந்து வருவதும், ரகு போய் ஜன்னலைத் திறப்பதும் அப்போது அவர்கள் பேசும் வார்த்கைகளும் மனோதத்துவத்துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்குச் சிந்தனையைத் தூண்டக்கூடியவை. இந்திரா பார்த்தசாரதியின் மனோதத்துவக் கோட்பாடுகள் விவாதத்திற்குரியவை. அவை பற்றிய ஆய்வில் இங்கு ஈடுபடுவது உசிதமல்ல.

பக்குவமுற்ற கலைஞர்கள்

இந்த நாடகத்தின் நடிகர்கள் அனைவரும் பக்குவமடைந்த கலைஞர்கள் என்பதை இரசிகர் அவை ஏற்றுக்கொள்ளும். ஆயினும் மழையின் நெறியாளரான  இளைஞர் பாலேந்திரா பாராட்டுக்குரியவர். பல்கலைக்கழக மாணவனாயிருந்த போது அவர் ஒரு நாடகத்தை நெறிப்படுத்தியிருக்கிறார். இதுதான் அவர் நெறியாண்ட இரண்டாவது நாடகம். சுந்தரலிங்கம், தாசீசியஸ், சிவானந்தன், பத்மநாதன் என்ற நடிகர் ஒன்றியத்தின் நெறியாளர் வரிசையில் சேர்ந்து கொள்கிறார் இளைஞர் பாலேந்திரா. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே அரங்க அமைப்பில் நாடகம் நகர்கிறது. மழை, காற்று, இடி, மின்னல் ஆகியவை மிகவும் இயற்கையான ஒலி, ஒளி மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பாத்திரங்கள் பிரதிபலிக்கும் மனநிலைமைகளுக்கு அமைய இசை அமைக்கப்பட்டுள்ள போதும் அதி கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம். இந்த நாடகம் காட்டமுனையும் மனோ நிலைமைகளை நன்குபுலப்படுத்தக்கூடிய இசை, நரம்பு வாத்திய இசைதான். அத்தகைய இசை உபயோகிக்கப்பட்டிருப்பது பொருத்தமானதே. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பின் வரிசையிலிருந்தவர்களுக்குக் கேட்கவில்லை. அத்துடன் இசையமைப்பில் ஏதோ போதாமை தென்பட்டது.

வழிகாட்டியும் மழையும் பலவிதமான விவாதங்களை மீண்டும் புதுப்பிக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய விவாதங்களை நாம் வரவேற்க வேண்டும். நடிகர் ஒன்றியத்தின் மற்றைய நாடகங்கள் ஏற்படுத்திய அழகியல்  விவாதங்களைப் போன்று இந்த நாடகங்களும் பல விவாதங்களை வருவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாடகங்களைத் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்வது அவசியம். அப்போதுதான் இரசிகர்களுக்கு மத்தியில் இரசனை வேறுபாடுகள், விருப்பு வெறுப்புக்களை நேரடியாக அறிய முடியும்.

துருவச்சுவடுகள்

1989இல் பிரசுரிக்கப்பட்ட ‘துருவச்சுவடுகள்’ கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை. இந்தத் தொகுப்பில்  நோர்வேயில் வாழும் ஏழு கவிஞர்களின் கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அணிந்துரை

சமுத்திரன்

இன்று நவீன தமிழ் இலக்கியம் ஒரு புதிய கலாச்சார முனைப்பைச் சந்திக்கிறது. ஐரோப்பாவில் வாழும் ஈழத்தமிழர் மத்தியிலிருந்து தற்போது முப்பதுக்கும் மேலான சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இவை கலை, இலக்கிய, அரசியல் சமூகவியல் அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்தக் கலாச்சார முனைப்பு தமிழ் இலக்கியம் இதுவரை கண்டிராத ஒரு புதிய  பரிமாணத்தின் முகிழ்ப்பு என்று கூறலாம்.*1[i] இந்தப் பரிமாணத்தின் இன்றைய கட்டத்தைப் பிரதிபலிப்பதுபோல அமைந்தது. இந்த மாதம் மேற்கு பேர்லினில் இடம் பெற்ற «ஆறாவது  இலக்கியச் சந்திப்பு» டிசம்பர் 22,23, 24 ம் திகதிகளில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஐரோப்பாவின் பலபாகங்களிலிருந்தும் ஏறக்குறைய அறுபது ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.  மாநாட்டின் நிகழ்ச்சிகளில் கலை, இலக்கிய விடயங்கள் மட்டுமின்றி அரசியல் சமூகவியல் போன்ற துறைகளும் இடம்பெற்றன. இலங்கை நிலைமைகள் மட்டுமின்றி சர்வதேச நிலைமைகளும் குறிப்பாக இன்று கிழக்கு ஐரோப்பாவில் இடம் பெறும் வெகுஜன எழுச்சிகளும் அலசி விவாதிக்கப்பட்டன.

மூன்று நாட்களும் அங்கே வருகை தந்த ஆண்களும், பெண்களும் கலந்துரையாடலில் ஆர்வத்துடன் பங்குபற்றினர். பலர் தமது கருத்துகளையும் விமர்சனங்களையும் ஆழ்ந்த உணர்ச்சியுடன் வெளிப்படுத்தினர். கருத்தரங்குகள் உத்தியோகபூர்வமாக முடிந்த பின்னரும் மண்டபத்துக்குள்ளேயும், வெளியேயும் விவாதங்கள் தொடர்ந்தன. அந்த மூன்று நாட்களும் இரவு ஒரு மணிவரை நான் கலந்துரையாடல்களில் பங்கு பற்றினேன். கருத்துப்பரிமாற்றங்கள் வரலாறு, கலை இலக்கியம், நடைமுறைச் சோசலிசம், பெண்ணிலைவாதம், சூழலியக்கங்கள், தமிழரின் புலப்பெயர்வுகள், ஐரோப்பாவின் நிறவாதம் போன்றவற்றைச் சுற்றி அமைந்தன. புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் அறிவுரீதியான ஒரு புதிய அலை எழுந்து வருகின்றது என்பதில் சந்தேகமில்லை.  அத்துடன்  இன்றைய பல சமூகவியக்கங்களின் புதிய கருத்துக்களையும் அனுபவங்களையும் உள்வாங்க முயற்சிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த அலையின் விசேடப் பண்புகளில் ஒன்று அதன் பன்முகத்தன்மையாகும்.

இந்த அறிவுரீதியான செயற்பாடுகளின் பகைப்புலமோ பெரியது. செழுமை மிக்கது. ஆக்கங்கள் படைப்போர் கடந்த பத்தாண்டுகளுக்குள்- பெரும்பாலாக 1983 யூலைக்குப்பின்- ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்தோராவர். இவர்கள் கொடூர யதார்த்தங்களைக் கண்டவர்கள், அனுபவித்தவர்கள். இவர்களின்  ஒரு கால் இன்னும் தாய்நாட்டிலேதான். இவர்களின் ஆளுமை, நினைவுகள், அனுபவங்கள் எல்லாமே « தாய்நாடு- புகல்நாடு» என்னும் தொடர்பினால் ஆட்டிப்படைக்கப்படுகின்றன. ஐரோப்பாவில் வாழும் தமிழிரின் வாழ்நிலைப் பிரச்சனைகளை பல கலாச்சாரங்களின் -ஆகக்குறைந்தது இரு கலாச்சாரங்களின்- சிக்கலான மோதல்களாய், இணைவாய், அனுபவரீதியான தொகுப்பாய் பார்க்கலாம். இந்தச் சிக்கல்கள் இங்குள்ள அரசியல் யதார்த்தங்களின் பரிமாணங்களையும் உள்ளடக்குகின்றன.

ஐரோப்பாவில் தமிழர்கள் மூன்றாம் உலகத்தவர்கள், கறுப்பர்கள் என்ற வட்டத்தில் அங்கமாகின்றனர். இங்கு வந்த பின்தான் பலர் தம் நிறம் கறுப்பு என்று கண்டுபிடிக்கிறார்கள். பலருக்கு இதனை ஏற்பது கடினமாகவிருந்தாலும்  கறுப்பு என்பது ஒரு அரசியல் கோட்பாடு என்பதைப் படிப்படியாகப் புரிந்து கொள்ள அனுபவம் நிர்ப்பந்திக்கிறது. தாய்நாட்டில் கிடையாத சுதந்திரம், பாதுகாப்பு, பொருளாதார உறுதிப்பாடு இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்த பலரின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக ஈடேறுவதில்லை. அடிக்கடி ஏற்படும் கசப்பான அனுபவங்கள் தமிழர்கள் இங்கே அழைக்கப்படாத விருந்தாளிகள் என்பதை ஊசிபோல் குத்தி நினைவூட்டுகின்றன. கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சமத்துவமில்லை எனும் யதார்த்தத்தைக் காண்கிறார்கள். இந்தப் பாகுபாடு எப்போதுமே வெளிப்படையாக இடம்பெறுவதில்லை.  இதன் மறைமுகச் செயற்பாடுகளே அதிகம்.  இந்தப்பாகுபாட்டின் அனுபவங்கள் தரும் வேதனையும்  கலாச்சார ரீதியான அந்நியமாக்கலும் மூன்றாம் உலகத்திலிருந்து வந்தோருக்குச் சில புதிய பாடங்களைத் தருகின்றன.(எல்லாத் தமிழர்களும் இந்தப்பாடங்களைப் படிக்க விரும்புவதில்லை. பலர் தமது இருப்பு பற்றிய கேள்விகளைத் தம்மிடமே கேட்கப்பயப்படுகிறார்கள். ஆனால் இது மாறும் என்பது எனது நம்பிக்கை.) கறுப்பர்களின் உழைப்புச்சக்திக்கு கிடைக்கும் பெறுமதிகூட அவர்களின் மனிதத்துவத்திற்குக் கிடைப்பதில்லை. ஐரோப்பிய நாகரீகத்தின் இரட்டை நியமங்களும் கபடங்களும் நிறவாதத்திற்கூடாக பயங்கரமாய் வெளிப்படுகின்றன.

மேற்கு பேர்லினில் நான் இருந்த போது பேர்லின் சுவரின் முடிவு பற்றி நிறையப் பேசினோம். ஒரு மேற்கு ஜேர்மனிய பெண்ணிடம் ஒரு தமிழ் நண்பர் ஒருவர் கூறிய வார்த்தைகள் மேற்கின் இரட்டை நியமங்களின் வெளிப்பாட்டைப் படம் பிடிக்கின்றன.  மேற்கையும் கிழக்கையும் பிரித்து உங்களதும் அவர்களதும் நடமாட்டத்தைத் தடைசெய்த  அந்தச் சுவர் சாய்வதை நாமும் வரவேற்கிறோம். ஆனால் உங்கள் நாட்டிற்கு அரசியல் தஞ்சம்கோரி வந்திருக்கும் தமிழர்களையும் மற்றைய கறுப்பர்களையும் அவர்கள் வதியும் உள்ளூர் எல்லைகளுக்கு அப்பால் நகரக்கூட உங்கள் ஜனநாயக அரசின் சட்டம் அனுமதிக்கவில்லை. மேற்கு ஜேர்மனியில் நம்மைச் சுற்றி எழுப்பியிருக்கும் இந்தச் சுவர்களை எப்போது அகற்றப்போகிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா இந்தத் தடையினால் இந்த நாட்டில் வாழும் பல தமிழர்கள் நமது இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது?

ஐரோப்பிய நாகரீகங்கள் தந்துள்ள உயர்ந்த விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முழுமனித குலத்திற்கும் பொதுவானதென ஐரோப்பா பெருமைப்படலாம். ஆனால் இந்த விழுமியங்கள் இங்கே இன்னும் முழுமை பெறவில்லை. இவற்றுக்கு வர்க்கம் மட்டுமல்ல நிறமும் பாலும் உண்டெனும் உண்மையை நாம் அனுபவரீதியாக காண்கிறோம். நாம் பிறந்த குறைவிருத்தி சமூகத்தில்  பின்னடைந்த கலாச்சாரத்தில் மறுக்கப்படும் உரிமைகள் இங்கே இருப்பதையும், மதிக்கப்படுவதையும் காண்கிறோம். இதையெல்லாம் அறிவித்து தனது உயர்ச்சியைப் பறைசாற்றும் முதலாளித்துவ ஜனநாயகம் கறுப்புக்குடியானவர்கள் இவற்றை முற்றாக அனுபவகிக்க முடியாதபடியும் பார்த்துக் கொள்கின்றன.

ஐரோப்பாவில் நமது தனிப்பட்ட அடிப்படைத் தேவைகளும் அவற்றைப் பூர்த்தி செய்ய நாம் தேடும் வழிவகைகளும் இந்தச் சமூகம்பற்றிய பல தகவல்களை அனுபவரீதியாக நமக்குத் தருகின்றன. இந்த அனுபவங்களை நாம் அலசி ஆராய முற்படும் போது நமது கலாச்சார விழுமியங்களும், நமது  எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் தலையிடுகின்றன.  உண்மையில் இவை நமது இருப்பு பற்றிய சுயமதிப்பீடுகளை  பலவகையில் நிர்ணயிக்கின்றன. இதற்கூடாக நாம் ஒவ்வொரு கணமும் நமது தாய்நாட்டிற்குத் திரும்புகிறோம்.  இந்த அகவுலகப் பிரயாணங்கள் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தாய்நாட்டு நிலைமைகளை நாம் நினைவு கூருகின்றோம். அங்கு மனித உரிமைகள் இங்கிலும் பார்க்க மோசமாக மீறப்படுகின்றன. அங்கு நடைபெறும்  இனவாத ஒடுக்குமுறையின் துன்பியல் இந்நாட்டின் பூர்சுவா ஜனநாயக நியமங்களின்படி கொடியது.  தமிழ்சமுகத்தின் சாதிவாதமும் ஆணாதிக்கவாதமும் நம்மைத் தலைகுனிய வைக்கின்றன. அங்கு மானிடம் தோற்றுவிட்டது. ஆனால் அழிந்து விடவில்லை. இங்கும் மானிடம் அழிந்து விடவில்லை என்பதை நினைவூட்டும் சம்பவங்களுக்குக் குறைவில்லை.  இன்றைய புதிய கலாச்சார முனைப்பின் செழுமை மிகு  பகைப்புலத்தின் சில அம்சங்களை இங்கு தொட்டுக் காட்டினேன்.  புலம்பெயர்ந்தோரின் இருப்பின்  புதிய அம்சங்களின் சமூகவியல்  ஆழ ஆராயப்பட வேண்டியது.  இத்தகைய செழுமைமிகு பின்னணியில் காலூன்றி நிற்கும் சில தமிழ்க் கவிஞர்களின் படைப்புக்களை இந்நூலில் சுவடுகள் பதிப்பகம் நமக்குத் தருகிறது.

இந்தத் தொகுப்பில் நோர்வேயில் வாழும் ஏழு தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன. இவர்களில் வ.ஐ.ச ஜெயபாலனும், இளவாலை விஜயேந்திரனும் தமிழ் இலக்கிய உலகில் ஏற்கனவே பிரபல்யமானவர்கள். தமயந்தியும் மைத்ரேயியும் ஓரளவு அறிமுகமானவர்கள். தம்பா, வயவைக்குமாரன் கலிஸ்ரா ஆகியோர் புதியவர்கள். இந்தக் கவிதைத்தொகுப்பு இன்று ஐரோப்பாவில் எழுந்து வரும்(தமிழ்) புலம்பெயர்ந்தோர் இலக்கிய அலையின் ஒரு காத்திரமான வெளிப்பாடாகும். கவிஞர்களின் களம் தாய்நாடு, புகல்நாடு என்று பரந்து விட்டது. அவர்கள் படைத்துள்ள கவிதைகள் புதிய கலாச்சார முகிழ்ப்பின் புத்தம்புதிய மலர்கள். ‘யாதும் ஊரை யாவரும் கேளீர்’ என்னும் தமிழ்ப் பழமொழியை நடைமுறையில் சோதித்துப் பார்த்த அனுபங்களின் பிரதிபலிப்புக்கள், நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழர் தர ஆரம்பித்துள்ள புதிய கலைத்துவப் பரிமாணத்தின் முதற்படிகளை ஸ்திரப்படுத்தும் ஒரு பங்களிப்பு இதுவாகும்.

கவிஞர்களின் களம் புவியியல் ரீதியில், கலாச்சார ரீதியில் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பு இலங்கையிலிருந்து வடதுருவத்திற்கு அருகே அமைந்துள்ள எழில்மிகு நோர்வேக்கு மாறியுள்ளது. புதிய சூழலில் எல்லாமே வித்தியாசம். காற்று, காலங்களின் நகர்ச்சி, மரங்கள், பறவைகள் எல்லாமே புதிதாய்த் தென்படுகின்றன. இக்கவிஞர்களின் களத்தின் விரிவும், இருப்பின் மாற்றங்களும் தமிழ்க் கவிதையுலகிற்கு புதிய அனுபவங்களை மட்டுமல்ல, புதிய உவமைகைகளையும் அறிமுகம் செய்கின்றன.

ஜெயபாலன் ஈழத்து மண்ணுடனும் மக்களுடனும் இறுக்கமான பிணைப்பைக் கொண்டவர். ஜெயபாலனின் சமூகவியல் அறிவு அவரின் கவித்துவத்திற்கு ஒரு விசேட காத்திரத்தைக் கொடுப்பதை அவரின் கவிதைகளைப் படித்தோர் அறிவர். இந்தத் தொகுப்பில்  வரும் அவரது «இலையுதிர்கால நினைவுகள்- 89» ஈழத்து மண்ணுடனும், மக்களுடனும் அவருக்கு இருக்கும் சேதனரீதியான உறவின் வேதனைமிகு வெளிப்பாடுகள். வேற்று நாட்டில் வேரிழந்த மனிதனின் கலாச்சார அந்நியமாக்கலையும் தனிமையையும்

‘நானோ

வழிதவறி அலஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்

ஒஸ்லோவில்’

என்ற வரிகள் கைப்பற்றுகின்றன. இந்தக் கவிதை ஈழத்தமிழரின் ஒடுக்குமுறைக்கெதிரான புலப்பெயர்வுகளின் அவலங்களைத் தனிமனிதனின் உணர்ச்சிகளின் உதவியுடன் வெளிப்படுத்துகின்றது. வெளியேறியோரின் இருப்பின் அவலங்களை நோர்வேயின் இயங்கையின் அம்சங்களைக் குறியீடுகளாக்கிப் பிரதிபலிக்கிறார் ஜெயபாலன்

‘இது இயற்கையே விரக்தியுறும்

இலையுதிர் காலம்

நீர் கூடக்கல்லாகும்  நீண்ட குளிர்காலம்’

இதற்கு  முன்னர் மக்பை பறவை கூறுகிறது

‘நாமறிவோம்

இலங்கைத் தமிழருங்கள் நாகரீகம்

பிறருடைய பேச்சுச் சுதந்திரத்தை

என்றேனும்

ரசித்ததுண்டா நீங்கள்’

விஜயேந்திரனின் ‘காணாது போன சிறுவர்கள்’,  ‘காணி நிலம் வேண்டும்’ எனும் கவிதைகள் தமிழரின் புலப்பெயர்வின் பொருளாதார அபிலாசைகளைக் காட்டுகின்றன. முன்னைய கவிதையில் வழமையான ஒரு யாழ்ப்பாண நிலத்தோற்றத்தில்.

‘கட்டைப்பனைமரத்தைக் கப்பலாக்கி

காற்துடுப்பில்  நீர்கடக்கும்

சிறார்களை மட்டும்

காணேன்’

அவர்கள் ‘காசு வயல் கதிரறுக்க கனடா போய்விட்டார்களாம். ஆனால் இந்தக் தமிழ் அரசியல் அகதிகள் பலரின் கனவுதான் என்ன?  அங்கே ‘விடுதலை’ மலரவேண்டுமென நாம் விரும்பலாம். ஆனால் இங்கே நமக்கெல்லாம் ‘காணி நிலம் வேண்டும்’. அது மட்டுமல்ல நாம் விட்டுவந்த யாழ்ப்பாணத்தை மீண்டும் உருவாக்க சீதன மரபு அங்கே மாறிவிடக்கூடாது

‘ஊரில் காணியோடும்

வீடு கிணற்றோடும்

இன்னொரு ஜெயப்ரதா

அமைய வேண்டும்’

இந்தக் கவிதைகள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்  ஒருபுறம் விடுதலைபற்றி ஏதோவெல்லாம் பேசும் அதேவேளை மறுபுறம் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்கும் ஜனநாயக முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் பழைய உறவுகள் புகுந்த நாட்டிலும் மீள் உற்பத்தி செய்வதைக் காட்டவில்லையா? புகுந்த நாட்டில் தமிழர்களென நாம் பேணிப் பாதுகாக்கும் தனித்துவம் இதுதானா என்று கேட்கத் தோன்றுகிறது.

விஜயேந்திரனின் ‘பதினொராவது கட்டளை’ தனிமனிதர்களின்  இயலாமையைக் கவித்துவமாக வெளிப்படுத்துவதுபோல்  அமைந்துள்ளது.  விடுதலையையும் மனிதத்துவத்தையும் இன்றைய நிலையில் கற்பனையிலேயே அனுபவிக்கலாம். ‘சற்று நிதானமாக் கனவுகாணப் பழகிக் கொள்’ நனவு கொடூரமாகும் போது கனவுகளில் தான் தற்காலிக ஆறுதல் இந்தக் கற்பனையும் இல்லாவிடில் இன்று ஈழத்தில் தமிழர்களைப் போராட வைக்கும் உந்துதலை அழிந்துவிடும் என்பது என் கருத்த. ஆம்ஒ நாம் கனவு காணப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கூடாக விடுதலையின் உள்ளடக்கத்தைத் தேடி யதார்த்தத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும்.

தம்பாவின் கவிதைகளில் மானிடத்தை, மனிதத்துவத்தைத் தேடும் பண்பு வெளிப்படையாகின்றது. நோர்வேயில் நாம் சந்திக்கும் நிறவாதம், அதே நேரத்தில் பல கறுப்புத் தனிமனிதர்களுக்கு ஏற்படும் மனித நேயம் நிறைந்த அனுபவங்கள்  தம்பாவின் உள்ளத்தைத் தாக்கியுள்ளன.

‘இங்கு எல்லாமே மாறுபட்டதாக இருக்கின்றது

ஆனால் எங்ஙனந்தான் அவர்களின்

புன்னகை மட்டும் என்றும்போல்

அச்சாய்ப் பூக்கிறது

புகல் நாட்டில் நிறவாதத்திற்கு முகம் கொடுக்க முற்படும் தம்பா தாய்நாட்டின் இனவாத த்திலிருந்து தப்பி வந்தவர்.

‘இனவாத த்திற்குத் தப்பி பல்லாயிரம் மைல்கள்

கடந்தபோதும் வலிமாறாத தழும்புகள்

இதற்குமேல் நிறவாதம் எங்கே என்னைப்

பாதிக்கும்?’

தம்பாவின் எங்கும் மானிடம் அவருக்கு ஏற்பட்ட ஒரு இனிய அனுபவத்தின் வெளிப்பாடு. அவர் இந்தக் கவிதையில் நிறவாதத்திற்கு முகம் கொடுக்கவில்லை. ஆனால் அந்த முகம் கொடுக்கும் பிரச்சனையிலிருந்து விடுபட இந்த மனிதநேயம் மிக்க அனுபவம் உதவுகின்றது. எண்பது வயதைத் தாண்டிய ஒரு நோர்வேஜியப் பெண்மணி அவளும் முதுமையின் தனிமை தனை அனுபவிப்பவள்- இந்தத் தொழிலாளிக்குச் சொல்கிறாள்

–  ‘இன்று உனக்காக கர்த்தரை வேண்டினேன்’

தம்பா நோர்வேயில் காணும் மனிதநேயத்தை என்றாவது ஒருநாள் தனது தாய்நாட்டிலும் காண ஏங்குகிறார். நோர்வேயின் தேசிய தினக்காட்சி பற்றிய ‘துளிர்க்கும் கனவு’ எனும் கவிதையின் செய்தி இதுதான்.

‘மானிடம் புதைந்த வீதிகளை உழும்

இராணுவ வண்டிகள் மறைய

எமது மண்ணில் சிறார்கள் மனித நேயத்த

எமது வீதிகளில் பதிக்கும் நாட்களை எண்ணி

அங்கே ஓரமாய் நின்று கனவு கண்டேன்’

இளம் கவிஞரான தம்பாவின் மனிதாபிமானம் கூரிய விமர்சனப் பார்வையுடன் எதிர்காலத்தில் இணைய வேண்டும்  என்பது எனது விருப்பம்.

மைத்ரேயி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் கவிதை எழுத ஆரம்பித்துள்ளார். இந்தத் தொகுப்பிலுள்ள  இவரின் ‘ஊரிலிருந்து ஒரு கடிதம்’ இயக்கங்களின் சில தவறான போக்குகளை அம்பலப்படுத்துவதுடன் யாழ்ப்பாணத்துக் கிராமத்தில் சில யதார்த்தங்களைச் சித்தரிக்க முற்படுகின்றது. இந்தக் கவிதையில் நோர்வே வாழ் தமிழ் அகதிகள் பற்றிய ஒரு சிறப்பான அம்சம் வெளிப்படுகின்றது.

‘சங்கர் உண்மையிலேயே படிக்கப்போனானாம்

பரவாயில்லை

ஆனால்

நீ படிப்பதாகச் சொல்லிக்கொண்டு

அகதியாக…’

தமிழ் அகதிகள் வாழும் மற்றைய நாடுகளைப் போலல்லாது நோர்வேயில் தமிழ் அகதிகள் மாணவர்கள் என்னும் உருவத்திலும் வாழ்கிறார்கள். துரதிர்ஸ்டவசமாக இந்த உருவில் வாழும் அகதிகள்  சிலர் சட்டபூர்வமாக அகதி அந்தஸ்துக்கோரி வந்துள்ளோரைவிட தாம் விசேடமானவர்கள் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றார்கள். உண்மை என்னவெனில்  எந்த வடிவில் வந்தாலும் நாம் எல்லோருமே- நான் உட்பட  – அகதிகள் தான்.  இதை ஏற்றுக்கொள்வது ஒரு அடிப்படை உண்மையை ஏற்றுக் கொள்வதாகும் – ஒரு கபடம் நிறைந்த பொய்மையிலிருந்து விடுபடுவதாகும்.  ஐரோப்பாவுக்கு குடிபெயர்ந்த சில தமிழர்களின்  கீழ்தரமான செயல்கள் பற்றி இந்தக் கிராமத்துக் கடிதம் குறிப்பிடுகின்றது

‘வசந்தத்தை எதிர்பார்த்து

வெளிநாட்டு வாழ்வில் அள்ளுண்டு

சீட்டாட்டம், ஏமாற்று

போதைப் பொருள் கடத்தல்

பல்வேறாய்ப் பிளவுண்ட

குழுமோதல், குடி

மேற்கின் யாந்திரீக விசுவரூபம்

இவை தவிர

நோர்வேயில் புதிதாய் உணர்ந்தவற்றை எழுது’

மைத்ரேயின் ‘பிரகடனம்’ பெண்ணுரிமை பற்றியது. ஒரு பெண் தான் வாழப்போகிறேன் எனச்செப்பும் பிரகடனம்

‘இங்கு நாலு சுவரையும்

கிடுகுவேலியையும்  தாண்டி

நான் வாழப்போகிறேன்’

என ஈழத்துப் பெண்ணொருத்தி கோருகிறாள் இந்தக் கவிதையோடு மைத்ரேயி நின்றுவிடமாட்டார் என்று நம்புகிறேன்.

கலிஸ்ராவின் கவிதைகளும் பெண்ணுரிமையைக் கருவாகக் கொண்டன. ஆண் ஆதிக்கம் மிகுந்த இன்றைய தமிழ்ச்சமுதாயத்தின் பெண்நிலைவாத விமர்சனங்களாய் அமைகின்றன இவரின் கவிதைகள்

‘உதயத்தின்போதே எம்

உணர்வுகளுக்குச் சாவுமணி

சமைத்துவிட்டனரே’

எனக் கூர்மையாக ஒரு வரலாற்று உண்மையைச் சொல்லும் கலிஸ்ரா, பெண்களை நோக்கி,

‘போதும் கண்ணே

இதுவரை தொலைத்த

நம் சிந்தனைகள் போதும்

பூமியில் நாமும்

மனிதர்களாய் வலம்வர வேண்டும்’

அடுத்த கவிதையில்  (சிந்திப்பாயா?) தமிழ்ப் பெண் சொந்தச் சமூகத்திலிருந்து வெளியேறினாலும் அந்தச் சமூகம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேறப் போராடாதிருப்பதைக் குறிப்பிடுகிறார்.

‘நான்கு சுவர்

நாலு திசையான பின்னும்

நாலு குணத்தைக் கட்டியழும்

நாயகியே’

இந்த நாற்குணங்களும் ஆண்களால் பெண்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கணங்கள். இந்த ஆண் ஆதிக்கமும் நம்மோடு ஐரோப்பாவிற்கு வந்துவிட்டது. கலிஸ்ராவின் கவிதைகளில் அரசியல் செய்திகளும் இருக்கின்றன. ஆனால் கவித்துவம் மேலும் வளர வேண்டும். இவரின் ஆரம்ப முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. குறிப்பாக பெண்நிலைவாதக் கவிஞர்கள் நம்மிடையே பெருக வேண்டும்.

தமயந்தியின் கவிதைகள் ஆழத்து நிலைமைகளின் துன்பியலைக் காட்டுவன. யுத்த த்தால் அவதியுறும் மக்களின் பொருளாதாரம் வரட்சியாலும் தாக்கப்படும் அவலத்தை ‘மழையைத் தொலைத்த மேகம்’  புலப்படுத்துகிறது. அவர் காணும் துன்பியலின் இன்னொரு அம்சம் மிகவும் பயங்கரமாய் வெளிவருகின்றது. புதிய ஏற்பாடுகள் என்ற கவிதையில்

ஜெருசேலம் மக்களைப் போல்

கனவுகளுடன் மல்லுக்கட்டும் மக்கள்

பிணங்களை விலத்தி

நடந்து செல்லப் பழக்கப்பட்டுவிட்டனர்’

இதே துன்பியலை இவரின் மற்றக் கவிதையொன்றிலும் காண்கிறோம்.

‘இப்போ

மெலிந்த தென்றல் கூட

ரோமக்கால்களுக்குள்

நெருப்பைத் திணிக்கும்’

வயவைக்குமரின் கவிதை ஒன்று இதன் தொடர்ச்சிபோல் அமைகின்றது

‘தீயை அணைத்திட

நீரற்ற தேசம்

கந்தகத்துடனே

கடலைக்கடந்து

…….

……..

அமைதி என்று

ஒரு முழத்துண்டு

சிலுவையில் அறைய

ஒப்பந்தம் ஆனது’

வயவைக்குமரன் நம்மில் பலர் கண்டுபிடித்துள்ள தனிமனிதத் தீர்வையும் அகதி என்னும் கவிதையாகத் தருகிறார்.

‘நில்லாதே ஓடு

கடல்களைக் கடந்து

மலைக்களைத் தாண்டி

பூமியின் எல்லைவரை ஓடு

……..

……….

ஆசையாய் எல்லோருக்கும் எழுது

நான் ஒரு அகதியென்று’

இந்தக் கவிதைகளை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஒரு பொதுவான துன்பியல் தன்னை ஓங்கியிருப்பதை உணரலாம். இது இன்றைய தாய் நாட்டு நிலைமையின் பிரதிபலிப்பு. துன்பியல்  பல கவிதைகளில் பலமாகப் படர்ந்திருப்பது இவற்றைப் படைத்த கவிஞர்கள் தாய்நாட்டின் கொடிய யதார்த்தங்களிலிருந்து தப்பியோடியவர்கள் என்பதாலா? இவர்கள் இன்று உதிரிகளாய் வேரறுபட்ட நிலையில் இருக்கும் இருப்பினாலா? இந்தக் கேள்விகளை வாசகர்களிடம் விட்டுவிடுவோம். என்னைப் பொறுத்தவரை இந்தத் துன்பியல்தன்மை புலம்பெயர்ந்த பலரின் அகநிலையைப் பிரதிபலிக்கின்றது.

கவிதைகளிடையே அழகியல் வேறுபாடு இருப்பதை மறுக்க முடியாது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இத்தொகுப்பில் மூவர் புதிய கவிஞர்கள். தம்பா, கலிஸ்ரா, வயவைக்குமரன் ஆகியோர்  தமது கன்னிக்கவிதைகளைப்  பிரசுரித்துள்ளார்கள்.  இவர்களின் கவித்துவ ஆற்றல் மேலும் வளர வேண்டும். புகழ்பெற்ற கவிஞர்களுடன் அவர்களும் இந்தக் கவிதைத்தொகுப்பில் சேர்ந்திருப்பது அவர்கள் மேலும் வளர நிறைய இடமுண்டென வாசகர்களுக்கு உணர்த்துவதுபோல் அவர்களுக்கும் உணர்த்துமென நம்பலாம்.  சுவடுகள் பதிப்பகத்தின் இந்த முயற்சி தொடர வேண்டும். ஐரோப்பாவின் மற்றைய இடங்களிலும்  இத்தகைய பதிப்பகங்கள் தோன்ற வேண்டும். நவீன இலக்கியத்தின் புதிய பரிமாணமான இச்சர்வதேச முனைப்பு எமது கலாச்சாரத்தின் முன்னேற்றத்திற்கு  உதவ இது அவசியம்.

ஓஸ், நோர்வே

30.12.1989

[i] இத்தகைய ஒரு புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் தோற்றத்திற்கும்  பரிணமிப்புக்கும் பின்னணியாக அமையும் சில அரசியல், சமூகவியல் நிலைமைகளை நான் சமீபத்தில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க: சமுத்திரன் – ஈழத்தமிழர் போராட்டத்தில் புலம்பெயர்ந்தோரின் பங்கு.

( ஆறாவது இலக்கியச்சந்திப்பு அறிமுகத் தொகுப்பு- West Berlin 1989).

மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும்

 சமுத்திரன்

இந்த நூல் ஈழத்துக் கூத்துக் கலை உலகில்  தன் சிறு பிராயத்தில் ஒரு ஆர்வமிகு பார்வையாளானாக, உதவியாளாக, பின்னர் பயிற்சி பெறுபவனாக, கூத்தாடுபவனாக, படைப்பாளியாக, பயிற்சியாளனாக, நெறியாளனாக, விமர்சகனாக, ஆய்வாளனாக, நுண்கலைத்துறைப் பேராசிரியராக மௌனகுரு மேற்கொண்ட நீண்ட பயணத்தின் ஒரு செறிவான ஆவணம். அவரைப் பொறுத்தவரை ஒரு யாத்திரையின் பதிவுகள். எளிய நடையில் எழுதப்பட்ட இந்த நூலை வாசிக்கவும், அதைப்பற்றிக் கருத்துரை வழங்கவும் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

இந்த நூல் ஒருவகையான சுயவரலாறென்பதை அதன் தலைப்புச் சொல்கிறது. அதேவேளை ஈழத் தமிழ்க் கூத்துக் கலையின் மீளுருவாக்கம் ஒரு தொடர்ச்சியான கூட்டுமுயற்சி எனும் செய்தியும் பலமாகச் சொல்லப்படுகிறது. இங்கே கூத்தில் மௌனகுருவுக்கு ஆர்வத்தை, அறிவை, கூத்தாடும் ஆற்றலை ஊட்டிய மட்டக்களப்பு அண்ணாவிமாரையும் கூத்தின் மறுமலர்ச்சிக்கும் மீளுருவாக்கத்திற்கும் நூலாசிரியரின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களித்த பேராசிரியர்களையும் வேறு பல கலைஞர்களையும் சந்திக்கிறோம். இவ்வாறு கூத்துக் கலையைப் பயின்று அதில் திறமை மிக்கவராக வளர்ந்த மௌனகுரு அந்தக் கலையின் முற்போக்குரீதியான மீளுருவாக்க விருத்திக்கும் பரவலுக்கும் தான் ஆற்றிய பங்கினை விவரமாகப் பதிவிடுகிறார். நிலப்பிரபுத்துவ, சாதிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கூத்து மரபினைக் கேள்விக்குள்ளாக்கி  முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வகையில் புதிய உள்ளடக்கங்களைக் கொண்ட கூத்து நாடக மரபின் மீளுருவாக்கத்தின் முன்னணிப் பங்காளிகளில் ஒருவர். மட்டக்களப்பில் ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கும் மௌனகுருவின் கூறுரை (narrative) கிழக்கு, வடக்கு, மலையகம் என விரிந்து, கூத்துக்கூடாக இலங்கைக்குள் கிடைத்த பல்லின உறவுகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் கலைஞர்களுக்கூடாக அவர் ஈழத்தமிழரின் கூத்துக்கலைக்குத் தேடிய சர்வதேசத் தொடர்புகள் பற்றியும் இந்தத் அநுபவத்தொடருக்கூடாக அவருடைய தொடர்ச்சியான கலைத்துவ மற்றும் சமூக அறிவியல்ரீதியான சுயவிருத்தி பற்றியும் கூறுகிறது.

‘மாற்றமே நிரந்தரமானது’ எனும் தலைப்பிட்ட  முன்னுரையில் பாரம்பரியத்தைப் பேணும் நோக்கில் அதன் பழமையைப் பேணிக் காப்பதும் மாற்றத்தை நிராகரிப்பதும் அந்தப் பாரம்பரியத்துக்குச் சமாதி கட்டும் வழியாகும் எனும் செய்தியை உரக்கச் சொல்வதன் காரணத்தை நூலை வாசிக்கும்போது தெரியவருகிறது. ஈழத்து தமிழ் சமூகத்தின் கூத்துக் கலையில் விசேடமாக 1960களிலிருந்து ஏற்பட்டு வரும் மாற்றப் போக்குகள் பற்றிய தகவல்கள், விளக்கங்கள், கருத்து வேறுபாடுகளை நூலாசிரியர் வாயிலாக அறியக் கிடைக்கிறது. மாற்றத்திற்கூடாகவே கூத்து மரபு வாழ்கிறது, வாழமுடியும் அல்லாவிடில் அதற்கு எதிர்காலம் இல்லை எனும் செய்தி பலமாக இந்த நூலில் இழையோடுகிறது.

ஆயினும் மாற்றம் எப்போதும் எல்லோருக்கும் நன்மைபயப்பதெனக் கருதமுடியாது. அது எப்போதும் விமர்சனப் பார்வைக்குள்ளாகவேண்டும். வரலாறு நேர்கோட்டில் நகர்வதில்லை, அது நெழிவு, சுழிவுகளுக்கூடாகப் பயணிக்கிறது. பின்னடைவுகளை சந்திக்கிறது. மாற்றம் சமூகத்தில் யாரின் (வர்க்கம், சாதி, பால் மற்றும் இனம், மதம்)  நலன்களை முன்னிலைப் படுத்துகிறது? அதன் பின்னாலுள்ள அதிகார உறவுகள் எத்தகையவை? அது ஜனநாயகம் மற்றும் சமூகநீதிக்குச் சாதகமானதா இல்லையா?  இந்தப் பொதுவான கேள்விகள் கலைகளுக்கும் பொருந்தும். அதேவேளை கலைகள் தொடர்பாக வேறு சில கேள்விகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.  இந்த விடயம் பற்றி இந்த நூலில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் இது பற்றிய கருத்துப் பகிர்வுக்கும், விவாதத்திற்குமான சந்தர்ப்பத்தையும் திறந்து விடுகிறது.

முதலில் கால ஓட்டத்தில்  இலங்கைத் தமிழ் சமூகத்தில் கூத்துக்கலையின் மாற்றப் போக்குகளுக்கும் மௌனகுருவுக்குமிடையிலான உறவின் சில கட்டங்கள் பற்றிப் பார்ப்போம்.

 1959 ஆம் ஆண்டு 16 வயதில் மௌனகுரு வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் மாணவனாயிருந்தபோது கல்லூரி அதிபரின் பணிப்பில் ‘பாசுபதம்’ கூத்தை அரைமணி நேரக் கூத்தாகச் சுருக்கி எழுதி மேடையேற்றும் பொறுப்பை ஏற்கிறார்.  உள்ளூர் அண்ணாவி ஒருவரை கூத்தாடும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்கிறார். அதுவரை கூத்தாட அநுமதி மறுத்த அவரின் தந்தையார் கல்லூரியில் கூத்தாட அநுமதி கொடுக்கிறார். மௌனகுரு எழுதுகிறார். ‘என் உடலுக்குள் இவ்வளவு காலமாக உறங்கிக் கிடந்த கூத்தாட்டங்கள் உருப்பெற்றன. என் ஆட்டத்தை அண்ணாவியார் வெகுவாக இரசித்தார்.’(33)

கூத்து வெற்றிகரமாக மூன்று தடவைகள் மேடையேறுகிறது.  இந்தக் கூத்துப் பற்றிய விபரத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தில் ஈடுபாடுமிக்க பேராசிரியர்கள் கணபதிபிள்ளை மற்றும் வித்தியானந்தனுக்கு மட்டக்களப்பைச்சார்ந்த இரு கல்வியாளர்கள் தெரியப்படுத்துகிறார்கள். வித்தியானந்தனும் அப்பொழுது இலங்கைப் பாரளுமன்றில் சமகால மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தவரும் நாடகத்துறையில் தீவிர ஈடுபாடுள்ளவருமான சிவத்தம்பியும் பாசுபதம் கூத்தைப் பார்க்க மட்டக்களப்புக்குச் செல்கிறார்கள். கூத்தையும் மௌனகுருவையும் பாராட்டுகிறார்கள். அரைமணிக்குச் சுருக்கப்பட்டு  ஒரு பாடசாலை  மேடையில் இளம் மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட வடமோடிக் கூத்தில் அவர்களின் கலைத்துவத் தேடலுக்கு ஒரு பயனுள்ள நடைமுறை உதாரணத்தைக்  கண்டனர் என நம்புகிறேன். அதுமட்டுமல்ல வித்தியானந்தனும் சிவத்தம்பியும் வந்தாறுமூலையில் மௌனகுருவையும் கண்டுபிடித்தனர். ஆகவே பாசுபதம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி அரங்கில் மேடையேற அழைக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை.

பேராதனையில் இலங்கையின்  கூத்துக்கலைகளின் மறுமலர்ச்சிச் செயற்பாடுகளின் எழுச்சி காலகட்டம் அது.  பேராசிரியர் சரச்சந்திராவின் தலைமையில் சிங்கள கூத்து மரபில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறுகின்றன. இதன் விளைவாக 1950-60 களில் ‘மனமே’, ‘சின்ஹபாஹு’ போன்ற கூத்து நாடகங்கள் மேடையேறுகின்றன. சிங்களக் கூத்து மரபை மீளக்கண்டுபிடித்து அதனோடு ஈழத்துத் தமிழ்க் கூத்து மரபு உட்பட வேறு மரபுகளின் சில அம்சங்களையும் உள்வாங்கி சரச்சந்திரா தனது பங்களிப்பிற்கூடாகச் சிங்கள மக்களின் தேசிய நாடக வடிவமொன்றின் தோற்றத்திற்கு உதவினார். அதே பல்கலைக் கழகத்தில் தமிழ் நாடகக்கலைகளில் விசேடமாகக் கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தில் ஈடுபாடுகொண்ட கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் போன்றோருக்கு இது ஆகர்ஷமாய் விளங்கியது.

அவர் பேராதனையில் மாணவரானபோது வடமோடிக் கூத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவராக, மட்டக்களப்பு கூத்து மரபை அறிந்தவராக மட்டுமன்றி ஒரு கூத்தைச் சமகாலத்தேவைக்கேற்ப சுருக்கி எழுதிய அநுபவமும் உள்ளவராக இருந்தார். உரிய காலத்தில் உரிய இடத்தில் அவர் உரிய ஆசான்களின் மாணவராகிறார். கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் முன்னணி மாணவர்களில் ஒருவராகிறார். அன்றைய பேராதனை வளாகத்தில் செல்வாக்குப்பெற்றிருந்த மாக்சிச அரசியலால் கவரப்பட்டு மாக்சிசச் சிந்தனை வட்டங்களுடன் தொடர்பு கொள்கிறார். அவருடைய உலகப் பார்வை விரிகிறது, விமர்சன நோக்கில் ஆழமாகிறது.  அவருக்குப் பரிச்சயமான கூத்து மரபு மற்றும் அது தொடர்பான இலக்கியம் பற்றி விமர்சனரீதியில் பார்க்க முற்படுகிறார்.

வித்தியானந்தனின் தயாரிப்பில் பேராதனையில் மேடையேறிய நான்கு பிரபல கூத்துக்களில் எழுத்தாளராகவும் நடிகனாகவும் மௌனகுரு முக்கிய பங்கு வகிக்கிறார்.  கர்ணன்போர் (1962), நொண்டி நாடகம் (1963), இராவணேசன் (1964),  வாலிவதை (1966) ஆகிய இந்த நாலில் கர்ணன்போரும் நொண்டி நாடகமும் பழையவை. இவற்றை ஒரு மணித்தியாலத்துக்குள் சுருக்கிப் பிரதியாக்கும் பொறுப்பு மௌனகுருவிடம் விடப்படுகிறது. புதியவையான மற்றைய இரண்டின் பிரதிகளையும் எழுதும் பொறுப்பும் அவருடையதே. இது பற்றிய அவரது கருத்தைப் பின்வருமாறு பதிவிடுகிறார்.  ‘மட்டக்களப்புக் கூத்துகளில் பாத்திர உருவாக்கம் பாத்திர குணாம்ச வளர்ச்சி என்பன இல்லை. கதை கூறும் பண்பே அதில் மிகுதி.பாரம்பரிய கூத்துமுறையில் பாத்திர குணாம்சத்தை கொணருதல் என்பது புதிய முயற்சி. கூத்து நாடகமாகிய விதம் அது.’ (76).

இந்த கூத்து நாடகங்களின் நெறிப்படுத்தலில் வித்தியானந்தனுடன்  சிவத்தம்பி வகித்த முக்கிய பங்கினையும் பதிவிடுகிறார். ‘ஆட்டத்தை நடிப்பாக்கவேண்டும் என்று சிவத்தம்பி அடிக்கடி கூறுவார். ஒவ்வொரு நாடகத்திலும் சிவத்தம்பியின் கற்பனை செயல் புரிந்திருக்கிறது. நாட்டிய சாஸ்திரம் கூறும் நடிப்புமுறைகளை எமக்கு உணர்த்தி கீழைத்தேய நடிப்புமுறை என்ற கருத்துருவை அவர் 1960 களில் கொணர்ந்தார்.’ (78). இராவணேசனை ‘வடமோடி நாடகம்’ எனப் பெயரிட்டவர் சிவத்தம்பிதான் என்பதையும் குறிப்பிடுகிறார். 1960களில் பேராதனையில் நடந்த கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தில் கூத்து ‘கூத்து நாடகமாக’ பரிணமித்தது ஒரு முக்கிய மாற்றமாகும். பல ஆண்டுகளுக்குப்பின் மௌனகுருவின் புதியவார்ப்பில் இராவணேசன்  மறுபிறவிகள் எடுத்துப் பரந்த இரசிகர் கூட்டத்தைக் கண்டதுடன் விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

பேராசிரியர் வித்தியானந்தனின் பிரதான பங்களிப்பை விவரமாகப் பதிவிடுகிறார். சகல சாதி மாணவர்களையும், பல்பிரதேச மாணவர்களையும் கூத்தில் இணைத்தமை; முதல் முதலில் பெண்களைக் கூத்தில் ஆடவைத்தமை;ஐரோப்பிய பண்பாட்டினடியாக எழுந்த பல்கலைக்கழகத்தில் கிராமிய மத்தள ஓசையையும் சலங்கை ஓசையையும் கேட்க வைத்தமை. இந்தப் பின்னணியில் வித்தியானந்தன் கொண்டுவந்த மாற்றங்களின் ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறார். முக்கியமாக நேரச்சுருக்கத்திற்கும் நவீன மேடையமைப்பிற்கும் ஏற்ப கூத்தின் பல்வேறு அம்சங்களையும் சுருக்கிச் சீரமைத்ததையும், கூத்திற்கு வடமோடி, தென்மோடி எனப்பெயர் வைத்ததையும் குறிப்பிடலாம். அவர் கற்றதை அவருடையே வார்த்தைகளிலேயே கேட்போம்.

‘கூத்தைப் படச்சட்டமேடையில் ஆடலாம், சுருக்கிப்போடலாம், செம்மைப்படுத்தலாம், அழகுபடுத்தலாம் , மத்தளம் தவிர்ந்த பிற வாத்தியங்களையும் சேர்க்கலாம், ஒப்பனை உடைகளை மாற்றலாம், ஒளியமைப்பை நிகழ்த்தலாம் போன்ற விடயங்களை நான் அங்கு கற்றுக்கொண்டேன்.’ (173).

பிரித்தானியாவில் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்துப் பேராதனைக்குத் திரும்பிய கைலாசபதியுடன் மௌனகுருவுக்கு நெருக்கமான உறவு கிடைத்தது. ‘எத்தனை நாட்களுக்குப் பழைய கூத்துக்களுக்குள் நிற்கப்போகிறீர், மக்கள் பிரச்சனைகளை கூத்துக்களாக்க இயலாதா?’ எனக் கேட்ட கைலாசபதி, ‘ வங்காளத்தின் மரபுவழி நாடக அரங்கான யாத்ராவை, மக்கள் பிரச்சனை கூறும் நாடகமாக்கிய உத்பால்தத்தையும், மரபுமுறையிலமைந்த சீன ஒப்ராவை சீனக் கம்யூனிச அரங்கும் கலைஞர்களும் மக்கள் போராட்ட நாடக வடிவமாக்கிய செய்திகளையும் கற்பித்தார். கூத்து வேறு திசையில் செல்லவேண்டும் என்பது புலனானது’ (175-176).

பேராதனையில் கிடைத்த அறிவுடனும் செறிவான அநுபவத்துடனும் ‘கூத்து வேறுதிசையில் செல்லவேண்டும்’என்ற சிந்தனையுடனும் பட்டதாரியாக வெளியேறிய மௌனகுருவுக்குத் தனது கூத்துக்கலைப் பயணத்தைத் தொடரும் பாதையைத் தெரிவுசெய்வதில் குழப்பமிருக்கவில்லை என நம்பலாம்.

கிழக்கிலே கல்முனை சாஹிரா கல்லூரியில் ஆசிரியராகவிருந்த காலத்தில் கூத்துப் பழக்குவதிலும் கூத்துகளைத் எழுதித் தயாரித்து மேடையேற்றுவதிலும் ஈடுபடுகிறார். அந்தக் காலத்தில்  (1968 -) யாழ்ப்பாணத்தில் தீண்டாமையை ஒழிக்கும் வெகுஜன இயக்கத்தின் பெரும் போராட்டம் இடம்பெறுகிறது. 1969இல்  கொழும்பில் லும்பினி அரங்கில் இடம்பெற்ற தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மாநாட்டில் மௌனகுரு எழுதி மட்டக்களப்பின் பலசாதிகளையும் சார்ந்த கலஞர்களை வைத்துத் தயாரித்த சாதி எதிர்ப்புக் கூத்தான ‘சங்காரம்’ மேடையேறியது.  ‘சங்காரம்’  மண்டபத்தில் நிரம்பிவழிந்திருந்த பார்வையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.

1960களுக்குப்பின் இடம்பெற்ற கூத்தின் பரிணாமப் போக்கினை விளக்கும் நோக்குடன் 1991இல் மௌனகுரு எழுதிய ‘பழையதும் புதியதும்’  நூலில் ‘பின்னோக்கிய தேடலும் முன்னோக்கிய பாய்ச்சலும்’ எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரையில் கூத்தை எப்படிப் பாதுகாக்கலாம், அதை எப்படி வளர்க்கலாம் என்பன பற்றிக்கூறுகிறார். இந்த வகையில் ‘சங்காரம்’ அவருடைய ‘முன்னோக்கிய பாய்ச்சலின்’ ஒரு ஆரம்பப் பரிசோதனை முயற்சி எனக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன். புரட்சிகர அரசியல் செய்திகளையும் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான வெகுஜன எழுச்சியையும் உள்ளடக்கமாய்க் கொண்டிருந்த அந்த வடமோடிக் கூத்து நாடகம் சில ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டுமன்றி பாரம்பரியத்தின்பேரில் பழமைபேணும் நிலைப்பாட்டிலிருந்தோரின் விமர்சனங்களையும் சந்தித்தது என் நினைவுக்கு வருகிறது. விமர்சனங்களையும் கவனத்தில் எடுத்து சங்காரத்தில் சில மாற்றங்கள் பின்னர் செய்யப்பட்டன. 1970இல் யாழ்ப்பாணத்தில் அம்பலத்தாடிகள் தீண்டாமைக்கு எதிராக காத்தான் கூத்து வடிவத்தில் ‘கந்தன் கருணை’யை மேடையேற்றினர். இதில் மௌனகுரு பிரதான வேடத்தில் நடித்தார். அன்றைய சாதி எதிர்ப்புப் போராட்டச் சூழலில் இந்தக் கூத்தும் வரவேற்பைப் பெற்றது.

இந்த முயற்சிகள் கூத்துக்கலையின் மாற்றங்கள் ஒரு செயல்முறைப் போக்காக உருவெடுப்பதன் அறிகுறிகள் போலமைந்தன. வேறு மரபுகளைச் சார்ந்த நாடகக் கலைஞர்களையும் இது கவர்கிறது. உதாரணமாக 1970களில் கொழும்பில் பிரபல நாடகக் கலஞர்களான சுந்தரலிங்கம் (விழிப்பு, அபசுரம்), தாசீசியஸ் (புதியதொரு வீடு), சுஹைர் ஹமீட் (வேதாளம் சொன்ன கதை) ஆகியோர் தமது தயாரிப்புகளில் கூத்திலிருந்து ஆட்டங்களை பயன்படுத்த முன்வந்தபோது மௌனகுரு உரிய ஆட்டங்களை நடிகர்களுக்குப் பழக்கி உதவினார். கூத்தின் ஆட்டவடிவங்களின் பயன்பாடு பன்முகரீதியில் விரிவடையும் போக்கிற்கு இவை சில உதாரணங்கள். 1960களுக்குப்பின்னான கூத்துக்கலையின் மாற்றப்போக்கு தனியே ஒரு குறிப்பிட்ட மரபிற்குள் மாத்திரம் அடங்கிப்போய்விடவில்லை. அதன் தாக்கம்  பரவுவது காலத்தின் தேவையைக் காட்டியது.

மட்டக்களப்பில், கொழும்பில், யாழ்ப்பாணத்தில் பலருக்குக் கூத்துக் கற்பிப்பதிலும் கூத்துகளை மேடையேற்றுவதிலும்  ஈடுபட்டிருந்த மௌனகுருவின் கூத்த யாத்திரையில் 1978இல் அவர் யாழ் பல்லகலைக்கழகத்தில் பேராசிரியர் கைலாசபதியின் வழிகாட்டலில் ஆரம்பித்த கலாநிதிப்பட்ட ஆய்வு ஒரு முக்கிய கட்டமாகும். மட்டக்களப்பு கூத்துக்களின் சமூக அடித்தளம் பற்றி 1976இல் அவர் சமர்ப்பித்த ஒரு கட்டுரையில் அந்தப் பிரதேசத்தின் கூத்துக்களின் உள்ளடக்கங்கள் அங்கு நிலவும் சாதி அமைப்பையும் அதை நியாயப்படுத்தும் கருத்தியலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது பற்றியும் அவை மாற்றப்படவேண்டியதன் தேவை பற்றியும் வாதிட்டார். இந்த வாதமே அவருடைய கலாநிதிப் பட்ட ஆய்வின் கருதுகோளின் பிரதான அம்சமாயிற்று. கைலாசபதி, ‘விடை கூறமுடியாத பல வினாக்களை எழுப்பினார். திக்குமுக்காடவைத்தார். என் கூத்தாய்வுப் பயணம் இப்படித்தான் ஆரம்பித்தது’ என எழுதுகிறார்.(101). ஆறு வருடங்களாக நடந்த இந்த ஆய்வுத் திட்டம் 1982இல் பேராசிரியர் கைலாசபதியின் மறைவிற்குப்பின் பேராசிரியர் சிவத்தம்பியின் மேற்பார்வையில் தொடர்ந்து முடிவுற்றது. மாக்சிச தத்துவார்த்த அணுகுமுறையில் செய்யப்பட்ட இந்த ஆய்வு 1998இல் ‘மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்’ எனும் தலைப்பில் விரிவான நூலாகவும் வெளியிடப்பட்டது.  ‘சமூக இயக்கப்பாட்டிற்கும் சமூகப் பின்னணிக்கும் நாடகங்களுக்குமிடையே அறாத் தொடர்பு உள்ளது என்பதும், சமயச் சடங்குகளிலில் இருந்து சமூகமாற்றம் காரணமாக நாடகம் பிறந்தது என்பதுமான கோட்பாடுகளை பொது விதிகளாக வைத்து இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது’ என முன்னுரை சொல்கிறது (மௌனகுரு, 1998: 14). மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை ஆழ ஆராய்வதுடன் சிங்கள மற்றும் இந்திய, சர்வதேச மரபுவழி நாடக மரபுகளின் மாற்றப் போக்குகள், உலக மட்டத்தில் அறியப்பட்ட நாடகக் கலைஞர்கள் மற்றும் விமர்சகர்களின் சிந்தனைகள் பற்றியும் முக்கியமான விடயங்களை உள்ளடக்குகிறது.

மட்டக்களப்பின் சடங்குகளும், வரலாறும் சமூக அமைப்பும், முக்கியமாக நிலமானிய அமைப்பும், எப்படி தென்மோடி, வடமோடி நாடகங்களை உருவாக்கின என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.  அவரது ஆய்வின் முடிவுகள் வேறு கூத்து ஆய்வாளர்களின் முடிவுகளிலிருந்து பெரிதும் மாறி இருந்தன என்பதை அறியத்தருகிறார்.  ‘கூத்து நிலமானிய சமூக அமைப்பின் ஓர் கலைவடிவம். அது மக்களை இன்றைக்கும் மகிழ்விக்கும் அதே நேரம் அது மக்களுக்கு இந்த சமூக அமைப்பையும் அதன் விழுமியங்களையும் ஏற்க வைக்கும் ஓர் போதை மருந்துபோலவும் காட்சிதருகிறது… கூத்து தமிழரின் சிறந்த நாடக வடிவம் ஒன்றின் சீணித்த (நலிந்த) வடிவம் என்பதும் புலனாயிற்று’ எனும் முடிவுக்கு வருகிறார் (183-184). இதுவும் இந்த ஆய்வின் மற்றைய முடிவுகளும் ‘கூத்தை இன்னொரு வகையில் மீளுருவாக்கம் செய்யவேண்டும்’ எனும் கருத்தை மேலும் வலுப்படுத்த உதவின. ‘கூத்து ஒரு கொண்டாட்டம்தான் இந்தக் கொண்டாட்டத்துக்குள் இருக்கும் சுரண்டலை நாம் கண்டு கொள்ளவில்லை’ என மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறார். கூத்தை மேலும் வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்லும் மௌனகுருவின் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கு இந்த ஆய்வும் அதனால் கிடைத்த அநுபவமும் ஒரு ஆக்கபூர்வமான உந்தலையும் துணிவையும் கொடுத்துள்ளன எனக் கருதலாம்.

சில சந்தர்ப்பங்களில் ஒரு சில கூத்துகளில் விளிம்புநிலை மக்களின் சார்பில் குரல்கள் ஒலித்தாலும் ஒரு எதிர்ப்பரங்கு மரபு வளரமுடியாதிருந்த நிலையை மாற்றும் காலம் கனிகிறது. 1991இல் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட நுண்கலைத்துறையின் தலைவராக மௌனகுரு நியமனம் பெற்றது ஈழத்துக் கூத்துக்கலையின் விருத்திக்கு  கிழக்கில் பல்கலைக் கழக மட்டத்திலான அங்கீகாரத்தையும் ஆதரவையும் கொடுத்தது.  உள்நாட்டுபோர்ச்சூழலின் பல தடைகளுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் மௌனகுருவும் அவருடன் கடமையாற்ற நியமனம் பெற்ற இளம் விரிவுரையாளர்களும் கூத்துக்கலையில் ஆர்வமுள்ள இளம் சந்ததியை உருவாக்குவதில் ஈடுபட்டார்கள். ஆனால் ‘ஊரூராய்க் கூத்தாடிய மட்டக்களப்பில் கூத்துப் பார்க்காத மாணவர் பரம்பரையே பல்கலைக்கழகத்தில் இருந்தது’ எனும் கசப்பான யதார்த்தை எதிர்கொள்கிறார்கள்.  கூத்துப் பற்றிப் பல மாணவர்களிடம் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. இதனால் சோர்வடையாது முயற்சியைத் தொடர்கிறார்கள். மௌனகுரு குழுவின் கூட்டு முயற்சி பலனளிக்கிறது. மாணவர்களைக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று கலைஞர்களுடன் சந்திப்புகளை ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டார்கள். ஆசிரியர்கள் மற்றும்  கூத்தாட விரும்பும் மாணவர்களுடன் மட்டக்களப்பு அண்ணாவியார்களும் இணைந்து செயற்படுவதைச் சாத்தியமாக்குகிறார்கள். கூத்தைப் பழைய மரபு முறையிலும் புதிய முறையிலும் மாணவர்களுக்குப் பயிற்றுகிறார்கள்.

‘பின்னோக்கிய தேடல், முன்னோக்கிய பாய்ச்சல்’ எனும் வழியில் யாழில் இருந்த காலத்தில் கூத்தின் மீளுருவாக்கம் பற்றிக் கண்ட கனவை நனவாக்க மட்டக்களப்பில் ஒரு நிறுவனத்துடன் துறைசார் விரிவுரையாளர்களும் கிடைக்கிறார்கள். பல சவால்களுக்கு மத்தியில் ‘இராவணேசனை’ மீளுருவாக்கி மேடையேற்றத் தீர்மானிக்கிறார்கள். 2001இல் புதிய முறையில் ‘இராவணேசன்’ வடமோடிக் கூத்து நாடகமாக வெற்றிகரமாக மேடையேறுகிறது. 2005வரை பல மேடைகளை பல்வேறு இடங்களில் காண்கிறது.  இராவணேசன் பல மீளுருவாக்கங்களைக் காண்கிறது. 2009இல் பேராசிரியர் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் அதற்கு வெளியே அரங்க ஆய்வு கூடத்திலும், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திலும்  தொடர்ந்து செயற்படுகிறார்.

2001-2019 காலத்தில் ஐந்து வேறு முறைகளில் ‘இராவணேசன்’ மீளுருவாக்கம் பெற்று மேடையிடப்படுகிறது. இலங்கையின் பல்லின ரசிகர்களின் பாராட்டையும் பெறுகிறது. இவையெல்லாம் இலங்கையின் சமகால அரசியல் நிலைமைளின் போக்கினைக் கூறுகின்றன.  இராவணேசனின் பல்வேறு மீளுருவாக்கங்ளைச் செய்துகாட்டிய அநுபவம் பற்றி அவர் யாவருடனும் விசேடமாக விமர்சகர்களுடனும் நாடகக் கலைஞர்களுடன் ஒரு முக்கிய பாடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ‘ஒரு பிரதி காலம் தோறும் மாறலாம் ஆற்றுகையும் காலம் தோறும் மாறலாம் என்பதற்கு 2001-2019 காலத்தில் மேடையிட்ட இராவணேசனின் வேறுபட்ட கூத்து நாடகங்கள் உதாரணங்களாகின்றன.’ (195). இராவணேசனை மட்டுமன்றி வேறு பல கூத்துக்களையும் புதியமுறையில் மீளுருவாக்கினார்.

2011இல் நோர்வேயில்  ‘இமயத்தை நோக்கி’ எனும்  வடமோடிக்கூத்துக் கலந்த நாடகத்தை பிரளயன் மற்றும் மோகனதாசுடன் இணைந்து வாசுகி ஜெயபாலனின் உதவியுடன் ஒரு பல்லின நடிகர்குழுவுக்குப் பழக்கி ஒஸ்லோ ஒப்ரா மண்டபத்தில் மேடையேற்றிச் சாதனை படைத்தார். பூமி வெப்பமடைவதையும் அதனால் வரும் விளைவுகளையும் பிரதிபலிக்கும் இந்தக் கூத்து நாடகத்தில் நோர்வேயில் வாழும் தமிழ் நடிகர்களுடன் லெபனொன், பாகிஸ்தான், எரிட்டிரியா, அமெரிக்கா, ஸ்கொட்லாண்ட் போன்ற நாடுகளிலிருந்து வந்து நோர்வேயில் வாழும் நடிகர்களும் சேர்ந்து தமிழில் பாடி ஆடினர்.

மௌனகுருவின் கூத்துக்கலை மீளுருவாக்க நடைமுறையை நோக்குமிடத்து அவர் ஒரு திறந்த மனப்பாங்குடன் ஒரு இயங்கியல்ரீதியான கோட்பாட்டின் ஒளியில் செயல்படுவதைக் காணுகிறோம். சமீப காலங்களில் நவீனத்துவத்திற்கு பின்னைய பொதுவாக postmodernist, deconstruction (கட்டுடைப்பு), postcolonial (காலனித்துவத்திற்குப் பின்னைய)  சிந்தனைப் போக்குகளையும் கலைத்துறையில் அவற்றின் செல்வாக்கையும் விமர்சன நோக்கில் ஆராய்ந்து தனது அணுகுமுறையைச் செறிவாக்கியுள்ளார்.

இளைப்பாறிய பின் பல்கலைக்கழகம் அவரைத் தொடர்ந்தும் பயன்படுத்தத் தவறியதும், 2015இன் பின் விபுலானந்த நிலையம் அவருடன் தொடர்பில்லாது போனதும் அவருக்கு மட்டுமன்றி இலங்கையில் நுண்கலைத்துறையின் விருத்தியில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட பலருக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்தபோதும் தனது பணியைத் தொடர்கிறார். அவர் சார்ந்திருக்கும் கூத்துக்கலையின் மீளுருவாக்க வரலாற்றுப் போக்குத் தொடரும்வகையில் இளம் சந்ததிக் கலைஞர்களை உருவாக்குவதில் அவரின் ஈடுபாடு போற்றத்தக்கது.

ஈழத்துத் தமிழ்க் கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தை ஒரு பன்முகத்தன்மை கொண்ட  வரலாற்றுப் போக்காகப் பார்ப்பதே நியாயமானது. கூத்துக்கலையின் மீளுருவாக்கம் எனும்போது அது சமூகத்தேவைகளுக்கேற்ப உள்ளடக்க மற்றும் அழகியல்ரீதியில் சமகாலமயப்படுத்தலைக் குறிக்கிறது. இங்கே இலாபநோக்கில் பொழுதுபோக்குச் சந்தைக்காக நாடகத்தை பண்டமயமாக்கும் போக்கிற்கும் சமூகப் பிரச்சனைகளையும் மனித வாழ்நிலையின் முரண்பாடுகளையும் ஆழ அறிந்து எதிர்காலப்பார்வையில் கலைத்துவச் செயற்பாடுகளில் ஈடுபடும் போக்குகளுக்குமிடையிலான வேறுபாடு முக்கியமானதாகும். பேராசிரியர் மௌனகுருவும் அவருடன் இயங்குவோரும் பின்னைய அணியினர் என்பதை சொல்லத் தேவையில்லை ஆயினும் இந்தவகையில் வேறு கலைஞர்கள் குழுக்களும் தத்தமது நிலைப்பாடுகளிலிருந்து செயற்படுகிறார்கள் என்பதை ‘நந்தவனத்திற்கு அழகு பல்வகைப் பூக்களே’ என நூலின் இறுதி அத்தியாயத்தில் அவர் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது.

இந்த இறுதி அத்தியாயம் கனதியானது. கூத்துப்பற்றிய அவருடைய கருத்துக்கள் மாறிவந்த விதத்தை விவரமாக விளக்குகிறார். இதில் சில முக்கிய அம்சங்களை நான் ஏற்கனவே தொட்டுள்ளேன். வேறொரு முக்கிய அம்சம் கூத்தின் மீளுருவாக்கம் தொடர்பாக 2000 ஆம் ஆண்டிற்குப்பின், விசேடமாகக் கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து எழுந்துள்ள, கோட்பாட்டுரீதியான  எதிர்கருத்தாகும். ‘பின்நவீனத்துவ’, ‘பின்காலனித்துவவாத’,சிந்தனைகளைச் சார்ந்திருக்கும் ஒரு குழுவினர் இதுவரை மௌனகுரு போன்றோர் செய்தது கூத்தின் மீளுருவாக்கம் அல்ல எனும் விமர்சனத்தை முன்வைத்ததுடன் அவர்களின் அணுகுமுறையில் சில மீளுருவாக்கக் கூத்துக்களையும் மேடையேற்றியுள்ளார்கள்.  கோட்பாட்டுரீதியில் இங்கு நாம் காண்பது மாக்சிசத்திற்கும் பின்நவீனத்துவ, பின்காலனித்துவ செல்நெறிகளால் ஆகர்சிக்கப்பட்ட கலாச்சார அடையாள அரசியல் போக்கிற்குமிடையிலான முரண்பாடாகும். விசேடமாகப் பின்காலனித்துவ (postcolonial) வாதம் சார்ந்த ‘விளிம்புநிலை மக்கள் கற்கைகள்’ (subaltern studies) செல்நெறிக்கும் மாக்சிசத்திற்கும் இடையிலான உறவின் பல்வேறு கட்டங்களையும் முரண்பாடுகளையும் ஆராய்வது பயன்தரும்.  இங்கு கோட்பாட்டுரீதியில் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. மாக்சிசமெனும் பொது மரபில்  ஒன்றுக்கு மேற்பட்ட செல்நெறிகள் இயங்குவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பொதுவாகக் கலாச்சார அடையாள அரசியலில் மேலாட்சி செலுத்தும் இனத்துவமையக் கருத்தியல் சமூக அமைப்புப் பற்றிய விமர்சனப் பார்வையைக் குறுக்குகிறது. இதனால் கூத்து மீளுருவாக்கத்தைப் பொறுத்தவரை அடையாளத்தின் பெயரில் பின்னோக்கிய பழமைபேணும் போக்கின் பிடிக்குள்ளாவது சுலபம். இது ஒரு பொதுவான விமர்சனம். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பிரிவினால் மேடையேற்றப்பட்ட மீளுருவாக்கக் கூத்துகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. அவற்றின் பிரதிகளையும் நான் பார்த்ததில்லை. ஆயினும் ஈழத் தமிழரின் கூத்துக்கலையின் மீளுருவாக்கம் பற்றிக் கருத்துவேறுபாடுகள் தோன்றியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. இது கூத்துக்கலையின் மீளுருவாக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் உதவும்வகையில் கேள்விகளை எழுப்புகிறது. மீளுருவாக்கம் என்றால் என்ன, அதற்கு ஒரு பொதுவான வரைவிலக்கணம் உண்டா? 1960களிலிருந்து தொடரும் மீளுருவாக்க வரலாற்றின் பிரதான போக்குகளை எப்படி இனங்காண்பது, எந்த விதிகளின்படி? அவற்றின் கோட்பாட்டுரீதியான, கருத்தியல்ரீதியான செல்நெறிகள் எத்தகையவை?  உலகரீதியான கலாச்சார மாற்றப் போக்குகள் மற்றும் அவை பற்றிய விவாதங்கள்  தமிழ் அரங்கியலின் மாற்றப் போக்குகளில் எந்தவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன? இப்படிப் பல கேள்விகள்.

மௌனகுருவின் கருத்தில் எதிர்மறைகளில் ஒற்றுமையை காண்பது பயன்தரும். மறுபுறம் எதிர்மறைகளின் மோதலில் ஒரு புதியது தோன்றலாம் எனவும் அவர் கருதுகிறார். இவை நல்ல எண்ணங்கள். எனது அபிப்பிராயத்தில் அந்த மோதல் ஒரு திறந்த ஆக்கபூர்வமான விவாதமாக உருவெடுக்கவேண்டும். அதற்கு இந்த நூல் வழி திறக்கிறது.

August 2021

நூல் விபரம்:

சி. மௌனகுரு, கூத்த யாத்திரை நான் கொண்டதும் கொடுத்ததும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, சென்னை 2021.

இந்த நூலின் இறுதி அத்தியாயம் பின்வரும் தலைப்பில் குமரன் புத்தக இல்லத்தால் தனி நூலாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது: சி. மௌனகுரு, கூத்தே உன் பன்மை அழகு, 2021

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ எம். வாமதேவனின் பயணம்

சமுத்திரன்

‘நான் சாதாரணமான ஒருவன்’ எனும் வார்த்தைகளுடன் ஆரம்பிக்கும் வாமதேவனின் சுயசரிதையை வாசித்துமுடித்தபோது அதற்கு அவரை நன்கறிந்திருக்கும் பேராசிரியர் சந்திரசேகரன் வழங்கியுள்ளஅணிந்துரையில் வரும் பின்வரும் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன. ‘பல்கலைக் கழகத்தில் பயின்ற காலத்தில், குடும்பமட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலரை இழந்து சொல்லொணாத் துயருக்குள் சிக்கிய நிலையில் மனஉறுதியுடனும் ஒருதார்மீக ஆவேசத்துடனும் தனது கல்விசார் புலமைக்கற்கையைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர் வாமதேவன் அவர்கள்.’ உண்மைதான். குடும்பத்தில் ஒரேகணத்தில் ஏற்பட்ட பல இழப்புகளின் அதிர்ச்சியைத் தாங்கிப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இலங்கை, பிரித்தானியா மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்று இலங்கையில் அவர் சேர்ந்திருந்த அரசசேவையில் அதிஉயர்நிலையை அடைந்த மலையகத் தமிழர் ஒருவர் தனது வாழ்வின் கதையை  ‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ என மகுடமிடப்பட்டுள்ள நூலில் முடிந்தவரை முழுமையாகப் பதிவிடுகிறார். அரசபணியில் அரைநூற்றாண்டுகால அனுபவம். அமைச்சின் செயலாளர் பதவியில் சிறுபான்மையினரைக் காண்பது அரிதாகிவிட்ட இந்தக் காலத்தில் அந்தப் பதவியை வகித்த மலையகத்தோட்டச் சமுதாயத்தைச் சார்ந்த முதலாவமவன் வாமதேவன். அரசசேவையில் அவரது நீண்ட பயணத்தில் அவர் பிறந்து வளர்ந்த மலையகத் தோட்டச்சமூகம் பற்றிய உணர்வும் அந்த மக்களின் சமூகநலன் மீதான அக்கறையும் கூடவே பயணித்தன எனும் செய்தியும் நூலில் இழையோடுகிறது. வாமதேவன் நிர்வாகி, ஆய்வாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு ஆளுமை. தன்னைச் ‘சாதாரணமான ஒருவன்’ என அடக்கமாக அழைத்துக்கொள்ளும் இவரின் ஆற்றல்கள் சாதாரணமானவையல்ல.

இந்த நூல் தனக்கு எழுபத்தைந்தாம் பிறந்தநாள் பரிசாக மகன்கள் பார்த்திபன், முகிலன், வசந்தன் ஆகிய மூவரிடமிருந்து கிடைத்ததென அறியத்தருகிறார். ஒரு சிறப்பான இந்தப் பரிசில் வாமதேவனின் துணைவி யோகேஸ்வரிக்கும் பங்கு உண்டெனலாம்.  மிகவும் சரளமான சுவையான மொழிநடையில் தனது சுயசரித்திரத்தை அது நகர்ந்துவந்த பரந்த சமூக, அரசியல் பின்னணியுடன் வரைந்துள்ளார் வாமதேவன். 

அவர் 1965 ஒக்டோபரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தின் கலைப்பீடத்தில் முதலாண்டு மாணவனாகும்போது நான் அதே பல்கலைக் கழகத்தின் பேராதனை வளாகத்தில் விவசாயப்பீடத்தில் இறுதியாண்டு மாணவனாயிருந்தேன். 1966 ஒக்டோபரில் அவர் பொருளியலில் விசேட பட்டப்படிப்புக்குத் தெரிவாகிப் பேராதனை வளாகத்திற்கு வருகிறார். நவம்பர் 22ஆம் திகதி அவரது தந்தையாரும் மூன்று சகோதரிகளும் மலையகத்தில் மண்சரிவுக்குப் பலியாகிய சோகநிகழ்வினால் தாக்கப்படுகிறார். குடும்பத்தில் அவருடைய தாயாரும் அவருமே எஞ்சினர். ‘இந்தச் சம்பவம் எனது வாழ்க்கையில் பலத்த மாறுதல்களுக்குக் காரணமாக அமைந்தது’ எனப் பதிவிடுகிறார். கல்வியில் தீவிரமாக ஈடுபடுகிறார். இந்த நாட்களிலேதான் அவருக்கும் எனக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறுகிறது. நூலில் அவர் குறிப்பிடுவதுபோல் பல்கலைக்கழக வளாகத்துக்கு அயலில் நானும் வேறுசில மாணவர்களும் வசித்துவந்த வீட்டில் அவரும் நம்முடன் சேர்ந்துகொள்கிறார்.  எனது இறுதி ஆண்டில் நான் பேராதனை வளாக மாணவர்சங்கத் தலைவராக இருந்தபோது இடம்பெற்ற மாணவர் போராட்டத்தில் வகித்த பங்கிற்காகப் பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டிருந்தேன். அந்தத் தண்டனைப்படி நான் பல்கலைக்கழக வளாகத்தின் ஐந்து மைல் ஆரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலைமைகளிலேயே எனக்கு வாமதேவனின் நட்புக் கிடைத்தது. இன்றுவரை அந்த நட்புத் தொடர்கிறது. பேராதனையில் எனக்கு ஏற்கனவே கிடைத்த நண்பர்கள் சண்முகமும் மறைந்த நவரட்ணவும்தான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ வாமதேவனின் வாழ்வின் பல்வேறு கட்டங்களுக்கூடாக வாசகரை எடுத்துச் செல்கிறது. ஹைலன்ட்ஸ் கல்லூரியில் அவருக்குக் கிடைத்த  முற்போக்காளரான ஆசிரியர்களின் அறிவுரீதியான செல்வாக்கு மற்றும்  மலையகத்தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர்கள்  காட்டிய தீவிர ஈடுபாடு எல்லாம் வாமதேவன் போன்ற மாணவர்களின் உலகப்பார்வைக்கும் அறிவுரீதியான விருத்திப்போக்கிற்கும் எப்படி உதவியுள்ளன என்பதை அறியமுடிகிறது.  பல்கலைக்கழகத்தில் நாம் சந்தித்த வாமதேவன் கல்வியில் தீவிரமாகக் கவனம் செலுத்திய அதேசமயம் பல்கலைக்கழகத்திலும் வெளியேயும் அரசியல் மற்றும் கலை இலக்கியக் கலந்துரையாடல்களிலும் பகிரங்க விவாதங்களிலும் பங்குபற்றவும் தவறவில்லை. கொழும்பில் சண்முகதாசனின் மாக்சிச அரசியல் வகுப்புகளில் பங்குபற்றியுள்ளார். பேராதனையிலும் மாக்சிசக் கல்வி வட்டத்துடன் நெருக்கமாக இருந்தார். கருத்தரங்குகளில்  தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார். அத்தகைய நிகழ்வுகள் பற்றி இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.  

கொழும்பில் முதலாம் ஆண்டு மாணவனாக மலையக சகமாணவர்கள் மூவருடன் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தபோது அவர்கள் எல்லோருமே நிதிப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டநிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிடம் உதவிக்கு விடுத்த வேண்டுதல் நிராகரிக்கப்பட்டதால் ஒரு நண்பர் வாமதேவனையும் இரு சகமாணவர்களையும் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திடம் அழைத்துச் செல்கிறார். மலையகத்தமிழ் மாணவர்களின் நிலைமயைக் கேட்ட செல்வநாயகம் அந்த மூவருக்கும் ஒருவருக்கு 25ரூபா வீதம் மாதத்திற்கு 75ரூபா உதவியாக வழங்கக் கட்சியின் சார்பில் சம்மதிக்கிறார். இந்த உதவி ஆரம்பித்த சில மாதங்களில் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் தமிழ்விழாவில் உரையாற்ற வாமதேவன் அழைக்கப்படுகிறார். அந்த நிகழ்ச்சியில் அன்றைய யு. என். பி அரசாங்கத்தில் உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த தமிழரசுக்கட்சிப் பிரமுகர் செனட்டர் திருச்செல்வம் பிரதம விருந்தினராக உரையாற்றும்போது அங்கு கூடியிருந்த மலையகத்தமிழர்களுக்கு ‘மலையகம் உங்களுக்கான இடமில்லை நீங்கள் அனைவரும் வடக்கில் வந்து குடியேறவேண்டும்’ என அழைப்பு விடுத்தார். அமைச்சரைத் தொடர்ந்து உரையாற்றிய இளம் பட்டதாரி மாணவன் வாமதேவன் ‘இது எங்களது மண் நாங்கள் குடிபெயரமாட்டோம்’ என உணர்ச்சிபொங்க சபையோரின் கைதட்டலுக்கு மத்தியில் அவருக்குப் பதிலளித்தார். மலையக இளம் சந்ததியினர் மத்தியில் எழுந்துவரும் அடையாள உணர்வின் குரலாக ஒலித்தது வாமதேவனின் பதில். இதன் உடனடி விளைவாகத் தமிழரசுக் கட்சியின் பண உதவி நிற்பாட்டப்பட்டது! அந்தப் பதில் திருச்செல்வத்தையும் மற்றைய தமிழரசுக் கட்சித் தலைவர்களையும் சிந்திக்க வைத்திருக்கவேண்டும். ஆனால் அவர்களின் எதிர்வினை முற்றிலும் குறுகிய நோக்கின் பிரதிபலிப்பாகவே இருந்தது.பல்கலைக்கழக மாணவராயிருந்தபோது அநுபவித்த அரசியல் சுதந்திரத்தை நன்கு பயன்படுதியுள்ளார் என்பதற்கு அவர் பதிவுசெய்துள்ள சில விபரங்கள் ஆதாரங்களாகின்றன.  

1970ஆம் ஆண்டிலிருந்து அரசசேவையிலிருந்த காலகட்டம் பற்றிய அத்தியாயங்களில் இலங்கை அரசின் திட்டமிடல் அமைச்சு, அது சார்ந்த நிறுவனங்களின் கொள்கைகள், செயற்பாடுகள் மற்றும் வாமதேவன் வகித்த பதவிகள் அவர் கையாண்ட பொறுப்புக்கள் பற்றிய தகவல்களும் விளக்கங்களும் பொதிந்துள்ளன. நாட்டின் அரசியல் மாற்றங்கள் அவர் கடமையாற்றிய நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஏற்படுத்திய மாற்றங்களையும் விபரமாகக் குறிப்பிடுகிறார். பல சந்தர்ப்பங்களில் சமூகரீதியான ஆதங்கங்கள், விமர்சனங்கள் மனிதாபிமான உணர்வுடன் வெளிப்படுகின்றன.  வரிகளுக்கு இடையேயும் விமர்சனங்கள் தென்படுகின்றன.  1973ஆம் ஆண்டு உற்பத்தி ஆண்டாகப் பிரகடனப்படுத்தபட்டதைத் தொடர்ந்து நுவரேலியா கச்சேரிக்கு மாற்றம் பெற்றுப் போனபோதும் பிரிவு அபிவிருத்திச் சபைச் செயற்பாடுகளில் தோட்டங்கள் உள்வாங்கப்படாததால் ‘மனதிற்குள்ளிருந்த ஆசையான தோட்டப்புற அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்களிக்கமுடியும் என்பது நிராசையாகப் போய்விட்டது’ என மனம் வருந்துகிறார். அந்தக் காலகட்டத்தில் -1974இல் – நுவரேலியாவில் உணவின்மை காரணமாக தோட்டத்துறையினர் பட்ட அவலக்காட்சியின் துன்பியலையும் பின்வருமாறு பதிவிடுகிறார். ‘எனக்குத் தெரிந்தபலர், நகர்ப்புறங்களில் பிச்சை எடுத்த கோரங்களை நான் பார்த்ததுண்டு. தோட்டப்புற வயதுசென்றவர்கள், வரிசையாக நகரங்களில் கையேந்தி நின்றமை இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.’ அந்த மக்கள் இத்தகைய கொடிய  இக்கட்டுக்குள்ளானமைக்கும் 1972இல் கொண்டுவரப்பட்ட காணிச்சீர்திருத்தச் சட்டத்தினதும் 1964இல் வந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தினதும் அமுலாக்கலுக்கும் உள்ள தொடர்பினையும் சுட்டிக்காட்டுகிறார். 

திட்டமிடல் அமைச்சில் வாமதேவனின் துறைசார் புலமைக்கு அங்கீகாரம் கிடைப்பதை அவருக்கு வழங்கப்படும் பதவி உயர்வு மற்றும் பாரிய பொறுப்புக்கள் எடுத்தியம்புகின்றன. ஆனால் 1983 ஜூலையில் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத வன்செயல்கள் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் பெரும் சோதனையாயிற்று. அன்று அவர் கடமையிலிருந்தவேளை வத்தளையிலிருந்த அவருடைய வீடு முற்றாக அழிக்கப்பட்டது. அந்த அழிவில்  நூல்களும் முனைவர் பட்ட ஆய்வுக்கெனச் சேர்த்துவைத்திருந்த தரவுகளும் சாம்பலாயின.  அங்கிருந்த அவரது மனைவியும் குழந்தைகளும் அயல்வீட்டில் தஞ்சமடைந்தனர். அவரும் குடும்பமும் இடம்பெயர்ந்து ஒரு அகதிகள் முகாமில் தங்கியிருந்தபோது சிங்கள நண்பர்கள் பலவகையில் உதவினர். ஆயினும் இந்த இடுக்கண்ணையும் தாங்கி மீண்டும் எழ வழிபிறக்கிறது.  குடும்பத்துடன் இந்தியாவுக்குத் தற்காலிகமாகக் குடிபெயர முடிவெடுக்கிறார். நோராட் நிறுவனத்தின் உதவியுடன் தென் இந்தியாவில் ஒரு ஆய்வினை மேற்கொள்கிறார். சேவையிலிருந்து விடுப்புப் பெற்று சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவில்(தமிழ்நாட்டில்) குடியேற்றப்பட்ட மலையகக் குடும்பங்களின் நிலைமைகள் பற்றிய பயன்மிக்க ஆய்வுத் திட்டத்துடன் ஜவஹர்லால் பல்கலைக் கழகத்துடன் இணைந்த திருவனந்தபுரம் அபிவிருத்திக் கற்கைகள் மையத்தில் எம்.ஃபில் (M. Phil) பட்ட மாணவராகிறார். 1987இல் அந்தப் பட்டப்படிப்பை நிறைவு செய்து அபிவிருத்தித் துறையில் முன்பைவிட மேலும் புலமை மிக்கவராக இலங்கைக்குத் திரும்பி அரசசேவையில் இணைகிறார். அவர் செய்த ஆய்வு ´Sri Lankan Repatriates in Tamil Nadu´எனும் தலைப்பில் நூலாகப் பிரசுரிக்கப்பட்டது. 

அரச சேவைக்குத் திரும்பியபின் இளைப்பாறும்வரை தோட்டத்துறையோடு நேரடியாக ஈடுபடும் பொறுப்புக்கள் மற்றும் தேசியரீதியில் முக்கியத்துவம்பெறும் பொறுப்புக்களை ஏற்றார். மேலும் புதிய சர்வதேச அநுபவங்களையும் பெறுகிறார். நாட்டின் உள்நாட்டுப்போர் மற்றும் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்ற சூழலில் அவற்றைக் கையாண்ட அநுபவங்கள் தொடர்பான பதிவுகளை வாசிக்கும்போது அரசசேவையின் அரசியல்மயமாக்கலின் தாக்கங்களையும் உணரமுடிகிறது. ஆயினும் நீண்டகாலமாகத்  தோட்டமக்களுக்கு அரச சேவைகள் சென்றடைவதற்கு இருந்த தடைகள் சிலவற்றை அகற்றுவதற்கும் வேறுசில வசதிகளை அவர்கள் பெறுவதற்கும் உதவும் செயற்திட்டங்களில் முக்கிய பங்காற்ற வாமதேவன் வகித்த பதவிகள் உதவின. லயவாழ்க்கையிலிருந்து விடுபட்டுத் தனிவீட்டு உடைமையாளராக  வேண்டும் என்பது  தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலக் கனவாயிருந்தது. 2015இல் வந்த அரசாங்கமாற்றம் இந்தக்கனவு நனவாகும் நம்பிக்கையைக் கொடுத்தது. இதற்காக உருவாக்கப்பட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக ஒரு வருடம் வாமதேவன் கடமையாற்றினார்.  அரசபதவியிலிருந்து மலையகத்தமிழ் சமூகத்தின் ‘அபிவிருத்திக்கு ஓரளவிற்கு பங்களிக்க கூடியதாக இருந்தமை எனக்கு மன நிறைவைத்தந்தது. இது அரசபணியாக இருந்தமையினால் இதனால் ஒருவர் திருப்தியடைய முடியாது’ எனத் தனது உள்ளக்கிடக்கையை பகிர்ந்தவண்ணம் அரசசேவையிலிருந்து இளைப்பாறியதும் சமூக செயற்பாட்டாளராகிறார். ‘தன்னார்வ நிலையில் சமூகத்திற்கென மேற்கொண்ட சில செயற்பாடுகள் எனக்கு இரட்டிப்பு மனநிறைவைத் தந்தன’ எனத் தனது திருப்தியை வெளிப்படுத்துகிறார்.  சமூகம் பற்றிய அநுபவரீதியான அறிவு, அபிவிருத்திபற்றிக் கொண்டுள்ள துறைசார் அறிவு, மற்றும் அரசசேவையில் கிடைத்த பல தசாப்த அநுபவம் எல்லாமே ஒன்றாக சமூக நீதி மற்றும் மனித மேம்பாடு பற்றிய வாமதேவனின் சிந்தனை உருவாக்கத்திற்கு உதவியுள்ளன. 2014ஆம் ஆண்டு ‘மலையகம் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி’ எனும் தலைப்பிலான நூல் மூலம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். எழுத்துத்துறையிலும் சமூகத்தளத்திலும் அவருடைய செயற்பாடுகள் தொடர்கின்றன. 

‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ நூலின் இறுதியில் ‘மகிழ்ச்சிக் குறியீடு’ பற்றி எழுதுகிறார். அது தனக்குச் சாதகமாக அமைந்துள்ளது என நம்பும் அதேவேளை ‘ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் குறிப்பாக குறைவான நிலையிலுள்ள நான் சார்ந்த சமூகமும் பொதுவாக இதே நிலையிலுள்ள ஏனைய சமூகப்பிரிவினரும் உயர்ந்த நிலையை அடையவேண்டுமென்பதே என்னைப் போன்றவர்களின் அவாவாக அமைகிறது.’ எனும் செய்தியுடன் நூலை நிறைவு செய்கிறார். இந்தச் செய்தியை அந்த மக்களின் எதிர்காலம் பற்றிய விசேடமாக அபிவிருத்தி பற்றிய ஒரு பரந்த கருத்துப்பரிமாறலுக்கான அழைப்பாக எடுத்துக்கொள்ளலாம் போல்படுகிறது.

வாமதேவனுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இலங்கை தேசிய இனப் பிரச்சனை ஏதிர்காலம் பற்றிய மீள்சிந்திப்பு – சில குறிப்புகள்

சமுத்திரன்

12 09 2020 Zoom கலந்துரையாடல் – Notes

 கடந்த பல தசாப்தங்களாகப் பல காரணங்களால் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதால் அதை ஆழ ஆராய்ந்து எதிர்கால நோக்கில் மீள்சட்டகமாக்குவது பற்றிய கருத்தாடல்களின் தேவையை நாம் உணர்கிறோம். தற்போது விசேடமாக கடந்த பொதுத்தேர்தலின் முடிவுகளின் பின் தாயக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகங்களில் இலங்கை வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் நிலவரம் பற்றிய உரையாடல்களும் விவாதங்களும் உத்வேகம் பெற்றுள்ளன போல் தெரிகிறது. வடக்கு கிழக்கில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதற்கு மாற்றாகத் தம்மைத் தீவிர தமிழ்த்தேசியவாதிகளாகக் காட்டிக்கொண்டோரின் கட்சிகள் சில ஆசனங்களைப் பெற்றுள்ள போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய இழப்பின் எதிர்ப்பக்கத்தில் இலாபம் பெற்றவர்கள் கடும் பேரினவாதக் கொள்கையின் அடிப்படையில் தெற்கிலே பெரு வெற்றியைப் பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜனப் பெரமுனவிற்குச் சார்பான தமிழ் வேட்பாளர்களே.  

தேர்தலில் தமிழ் வாக்காளரின் கணிசமான பகுதியினரின் தேர்வுகள் தமிழ்த் தேசியவாதிகளுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளன. வடக்கிலும் கிழக்கிலும்  ஒரு பகுதித் தமிழர்கள் ‘அபிவிருத்தி வாக்குறுதிகளையும்’ ‘சலுகை அரசியலையும்’ நம்பித் ‘தமிழ்த் தேசியத்திற்கு’ முன்னுரிமைக் கொடுக்கத் தவறிவிட்டார்கள் எனத் தமிழ்த் தேசியவாதிகள் ஆதங்கப்படுகிறார்கள் போல் தெரிகிறது. இது ஒரு எதிர்காலப் போக்கின் ஆரம்பத்தின் குறிகாட்டியா எனும் ஏக்கமும் இந்த ஆதங்கத்திற்கு உரமூட்டலாம். இதனால் உந்தப்படும் உரையாடல்கள் நீண்டகாலமாக தமிழ் சமூகத்தில் மேலாட்சி செலுத்திவரும் தமிழ்த் தேசியவாதக் கதையாடல் கட்டமைப்பின் குறுகிய அரசியல் தளத்தில் உணர்ச்சிகள் மிகுந்த மேலோட்டமான பார்வைகளுக்கப்பால் செல்வதாகத் தெரியவில்லை. 

ஆயினும் இன்றைய தாயகத்தின் அரசியல் நிலைமை தேசிய இனப் பிரச்சனை பற்றியும் நீண்டகாலமாகத் தமிழ் சமூகத்தில் மேலாட்சி செலுத்தும் தமிழ் தேசியவாதம் பற்றியும் ஆழமான கலந்துரையாடல்களுக்கும் விவாதங்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தவகையில் இன்றைய கருத்தமர்வு ஒரு ஆரம்பமே. ஒரு அமர்வில் அலசி ஆராய்ந்து முடிவுக்கு வரக்கூடிய விடயமல்ல இது.

இலங்கை தேசிய இனப்பிரச்சனை / ஏதிர்காலம் பற்றிய மீள்சிந்திப்பு எனும் தலைப்பில் சில முக்கியமான ஒன்றோடொன்று தொடர்புள்ள விடயங்கள் பற்றிய ஒரு முதற்கட்டக் கலந்துரையாடலைச் செய்வதே இந்த அமர்வின் பிரதான நோக்கம். இங்கு தரப்பட்டுள்ள எல்லா விடயங்களையும் இந்த ஒரு அமர்வில் ஆழ ஆராயமுடியாது.

 • உள்நாட்டுப் போரும் போருக்குப்பிந்திய தசாப்தமும்
 • உலகமயமாக்கலின் தாக்கம்
 • பிராந்திய அரசியல்
 • சிறுபான்மை இனங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
 • அரசியல் தீர்வின் சாத்தியக்கூறுகள்

இன்றைய அமர்வில் உள்நாட்டுப்போரும் போருக்குப்பிந்திய தசாப்தமும் பற்றிக் கலந்துரையாடுவது ஒரு ஆரம்பமாக இருக்கும். இதை நாம் செய்யும்போது மற்றைய விடயங்களுடன் தொடர்புடைய கருத்துக்களும் வெளிவரலாம். போருக்குப் பிந்திய காலத்தின் அரசியல் மற்றும் சமூக, பொருளாதார போக்குகள் பற்றிப் பார்ப்பது அவசியம். தேசிய இனப்பிரச்சனையின் மீள்சிந்திப்புக்கும் அதற்கூடாக அதன் மீள்சட்டகமாக்கலுக்கு உதவக்கூடிய வகையிலும் நமது கருத்துப் பரிமாறல் அமையும் என எதிர்பார்க்கிறோம்.

சில சிறு குறிப்புகளுடன் இன்றைய கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்க விரும்புகிறேன்.

சில முக்கியமான தகவல்கள்:

 • கடந்த நான்கு தசாப்தங்களில் – குறிப்பாக உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் – இலங்கை அரசின் பேரினமயமாக்கல், அதாவது ethnocratisation, இனத்துவ மேலாதிக்கமயமாக்கல், தீவிரமாக ஆழமாக்கப்பட்டுள்ளது.
  • அரசின் இராணுவமயமாக்கல் நிரந்தரமாகியுள்ளது. இதன் நேரடித் தாக்கத்தை வடக்கு, கிழக்கில் காணலாம்.
  • அதிகாரவாதத்தின் பலமூட்டல்
  • 20ஆவது யாப்புத் திருத்தம் / ஜனாதிபதியைச் சர்வ அதிகாரமுடையவராக்குகிறது
  • புதிய யாப்புக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன
 • வடக்கு, கிழக்கின் சனத்தொகையியல் மாற்றங்கள் தொடர்கின்றன 
 • போருக்குப்பின் வடக்கு-கிழக்கு தமிழ் சமூகம் போருக்கு முன்னர் இருந்ததைவிட அரசியல்ரீதியில் பலவீனமாக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்தப் போக்குத் தொடரும் அறிகுறிகள் பலமாகத் தெரிகின்றன.
 • இன்றைய இலங்கையின் அரசியல் அமைப்பில் இனரீதியில் பாதிக்கப்படும் சமூகங்களாக வடக்கு கிழக்கில் தமிழர் மற்றும் முஸ்லிம்கள், மலையகத் தமிழர் மற்றும் தெற்கிலே வாழும் தமிழ் பேசும் மக்களை இனங்காணலாம்.  இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை அணுகும்போது இந்த யதார்த்தத்தைத் தவிர்க்கமுடியாது. 

இவற்றை மனதில் கொண்டு –

வடக்கு, கிழக்கு நிலைமைகளைச் சற்று ஆழமாகப் பார்ப்போம் (இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை, போருக்குபின்னான நிலமைகள் தொடர்பான எனது கட்டுரைகளை இந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்samuthran.net)

 • தேசிய இனப்பிரச்சனை உள்நாட்டுப் போராக மாறியதற்குக் காரணிகள் இருந்தன. அதே போன்று 30 வருடப் போரினால் பல விளைவுகள் ஏற்பட்டன. இந்த விளைவுகள் போரின் காரணிச் சங்கிலியுடன் (causal chain உடன்) பின்னூட்டப் போக்கினால் (feedback process) இணைந்தன. விளைவுகளும் காரணிகளாகும் போக்குத் தொடர்ந்தது, இன்றும் தொடர்கிறது. இந்த காரணி -விளைவு இருவழித் தொடர்பும் பின்னூட்டமும்  (cause-consequence interaction and feedback) பல கட்டங்களுக்கூடாக தேசிய இனப்பிரச்சனைக்குப் புதிய அம்சங்களைச் சேர்க்கிறது. இப்படியாக தேசியப் இனப் பிரச்சனை போர்க்காலத்தின் பல்வேறு போக்குகளின் முரண்பாடுகளினால் அரசியல் பொருளாதார, இனத்துவப்புவியியல்ரீதியில், கலாச்சார மற்றும் இவற்றுடன் தொடர்புள்ள பல்வேறு அம்சங்களில்  மாற்றங்களுக்குள்ளாகிறது. இதனால் தேசிய இனப்பிரச்சனை தன்மைரீதியான மாற்றங்களைக் கண்டுள்ளது எனக் கருதலாமா?  (எனது அபிப்பிராயத்தில் தேசிய இனப்பிரச்சனை தன்மைரீதியான மாற்றங்களைக் கண்டுள்ளது.)
 • விளைவுகளை நான் பட்டியலிடத் தேவையில்லை ஆயினும் சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறேன்:வாழ்வாதார அழிவுகள்,  இடப்பெயர்வுகள் (not always unintended, often deliberately, carried out by both the state´s military and the LTTE) நிரந்தரமான புலப்பெயர்வுகள் (internal and international ), வடக்குக் கிழக்கின் போர்பொருளாதாரம், புலப்பெயர்வுடன் வந்த காசாதாரப் பொருளாதாரமும் அதன் விளைவுகளும், நீண்டகாலமாக முகாம்களில் / மனிதாபிமான உதவியில் தங்கியிருத்தல் / சந்ததிகளையும் ஊடறுக்கும் இடப்பெயர்வு வாழ்க்கையும் சமூக விளிம்புமயமாக்கல் /
 • போர்க்காலத்துக்கு முன்பிருந்தே  தொடரும்  குடியேற்றத் திட்டங்கள்
 • ´காரணிச் சங்கிலி – விளைவுகளின்´ இயங்கியல் பற்றி மேலும் தொடரமுன் இன்று தாயகத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் ஒரு விடயம் பற்றி ஒரு அவதானிப்பு.

கடந்த நான்கு தசாப்தங்களாகப் போரின் சமூக, பொருளாதார, மனிதப் பாதுகாப்புரீதியான விளைவுகள் எப்போதும் முக்கியத்துவம் பெற்றபோதும் இவற்றைத் தற்காலிக மனிதாபிமான அவசரகாலப் பிரச்சனைகளாகப் பார்க்கும் போக்கும் நடைமுறையுமே மேலோங்கிய நிலையில் தொடர்ந்துள்ளது. இதில் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் பிரதான பங்கினை வகித்து வந்துள்ளன. இங்கு ஒரு முக்கியமான யதார்த்ததைப் புரிந்து கொள்ளவேண்டும். கடந்த நான்கு தசாப்தங்களாக அதாவது போர்க்காலத்திற்கும் அதற்குப் பின்னரும் வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தில் ஒரு பகுதியினர் பல்வேறு அவலங்களால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரப் பாதுகாப்பின்மை (livelihood insecurity), மற்றும் மனித மேம்பாட்டுச் சந்தர்ப்பங்களின்மை ஆகியவற்றினால் தொடர்ச்சியாக இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இந்த மக்களில் விளிம்புநிலையில் வாழ்பவர்கள் மட்டுமன்றி கீழ்நடுத்தர மட்டத்தினர் எனக் கருதப்படுவோரும் சமூக நகர்ச்சிச் சந்தர்ப்பங்களற்ற நிலையிலுள்ள மற்றயோரும் அடங்குவர். போருக்குப் பின்னர் இந்த மக்களின் நிலைமைகள் பற்றி விசேடமாக பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் பிரச்சனைகள் பற்றிச் சில ஆய்வறிக்கைகள் வெளிவந்துள்ளன.

போருக்குப்பின் வடக்கில் மக்கள் நலனுக்குப் பாதகமான நிதிமயமாக்கல் துரிதமாக இடம்பெற்றது என்பதை மறுக்கமுடியாது. இன்றைய நவதாராள உலகில் வறியவர்களைப் பொறுத்தவரையில் நுண்கடன் என்பது சமூகப் பாதுகாப்புவலையின் ஆபத்துமிக்க பிரதியீடாகும் (அதாவது நவதாராளப் பொருளாதாரக் கொள்கையின் விளைவான சமூகப்பாதுகாப்பற்ற நிலைமைகளில்). ஏனெனில் அது வறியோரை மேலும் நலிவுக்குள்ளாக்கும் நுண்கடன் எனப் பெயரிடப்பட்ட கடன்பொறிக்குள் இட்டுச் செல்கிறது,  இந்த ஆபத்துப் பலரைத் தற்கொலைக்குத் தள்ளுமளவிற்குப் பயங்கரமானது என்பதையும் கண்டுள்ளோம்.

 (For discussion: 1977 – Militarisation of the NQ; Neoliberalisation of the economy)

ஆயினும் போருக்குப்பின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நிரந்தரமாக விளிம்புமயப்படுத்தபட்ட நிலையில் வாழும் மக்களின் சமூக முன்னேற்றம் பற்றியோ அல்லது போருக்குப்பின்னான வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி பற்றியோ எதுவிதமான கொள்கையும் இருக்கவில்லை. அரசியல் தீர்வுக்கு முதல் முன்னுரிமையென்ற பெயரில் அபிவிருத்தியை, குறிப்பாக பாதிக்கப்பட்டோரின் சமூக முன்னேற்றத் தேவைகளை, முற்றாகக் கைவிட்டனர். இந்த வகையில் வடமாகாணத்தின் முதலாவது மாகாண சபையின் கொள்கையற்ற போக்கும் செயல்திறன் குறைபாடும் அவலத்தில் வாழும் மக்களுக்கும், மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காககொண்ட ஒரு மாகாண அபிவிருத்திக் கொள்கையையும் செயற் திட்டத்தையும் எதிர்பார்த்திருந்தோருக்கும் பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்திருந்தால் ஆச்சரியமில்லை. கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயல்திறன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. 

உண்மையில் இது தமிழ்த் தேசியத் தலைமையின் வர்க்கத்தன்மையையும், நமது சமூகத்தின் அதிகார உறவுகளில் வர்க்கம் – சாதி – பால் ஆகியவற்றின் ஊடறுப்பினையும் தோலுரித்துக் காட்டுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக நிற்கும் தமிழ்த் தேசியவாதத் தலைமைக்கும் இது முற்றிலும் பொருந்தும்.  இந்தச் சூழலில் கடந்த தேர்தலில் தமிழ் வாக்காளர்களில் ஒரு கணிசமான பகுதியினர் பிரதான தமிழ்த் தேசியவாத அமைப்புக்களை நிராகரித்து ‘வேலைவாய்ப்பு, சமூக நலன்’ போன்ற வாக்குறுதிகளைப் பிரச்சாரப் பொருளாக்கிய, அரசாங்கத்திற்குச் சார்பான கட்சிகளுக்கு ஆதரவு வழங்கியிருப்பது அதிர்ச்சிதரும் விடயமல்ல. 

இதெல்லாம் தரும் பாடமென்னவெனில் அரசியல் தீர்வுக்கும் மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட அபிவிருத்திக்குமிடையே ஒரு சீனச் சுவர் கிடையாது. இரண்டிற்குமிடையிலான உறவை எப்படிப் புரிந்து கொள்வது? இது கலந்துரையாடலுக்கான ஒரு முக்கிய கேள்வி.

அபிவிருத்தியை அரசியல் தீர்வைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக அரசாங்கம் பயன்படுத்துவதை எதிர்ப்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றலுடைமைகளை வளர்க்கவல்ல அபிவிருத்திக்கான கோரிக்கையை நிராகரிப்பதாகாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகள் போரின் விளைவுகள், தொடரும் இராணுவமயமாக்கல், மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடையவை.  ஆகவே போருக்குப் பின்னான வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதார விருத்திக்கும் மனிதமேம்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுக்கும் அபிவிருத்திக் கொள்கையொன்றினை மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்படுவது அரசியல் தீர்வுக்கான போராட்டத்துடன் இணைந்த ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படவேண்டிய ஒரு காலகட்டத்திலேயே நாம் இருக்கிறோம். (see, samuthran.net)

தேசிய இனப் பிரச்சனையின் தன்மைரீதியான மாற்றம் தொடர்பாக / முக்கியத்துவமிக்க சில அம்சங்கள்

 • அடையாளம் – ஆள்புலம் இணைப்பின் (identity-territory nexus ன்) உடைப்பு அல்லது பலவீனமாக்கல்

வடக்கு கிழக்குத் தமிழரின் தாயகம் எனக் கோரப்பட்ட பிரதேசத்தின் தொடர்ச்சி மீட்க முடியாதவாறு (irreversibly) உடைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தின் இன்றைய புவியியல் 1970களில் இருந்ததைவிடப் பலவகையில் பாரதூரமாக மாறிவிட்டது. ஆள்புலத்துக்காக இரண்டு இனத்துவ தேசியவாதங்களுக்கு இடையிலான மிகவும் அசமத்துவமான போட்டியின் முடிவு அந்த ஆள்புலத்தின் பேரினமயமாக்கலே.

அரச காணிகளில் குடியேற்றத் திட்டங்கள், நில அபகரிப்பு, இராணுவ வலயங்கள், பொருளாதார மாற்றங்கள், மற்றும் தமிழரின் பெருமளவிலான நிரந்தரப் புலப்பெயர்வு போன்றவற்றால் அந்தப் பிரதேசத்தின் இனக்கூறுகளின் விகிதாசாரம், நிலச் சொத்துரிமைகள், நிர்வாகக் கட்டுமானம், பௌதிக உட்கட்டுமானம், நிலத்தோற்றங்கள் அடிப்படையான மாற்றங்களைக் கண்டுள்ளன. போர்க்காலத்தில் அரச குடியேற்றத் திட்டங்களும் இராணுவமயப்படுத்தப் பட்டன. இன்று வடக்கு கிழக்கு முன்பைவிட பல்லினமயமாகியுள்ளது, அரச காணிகளில் சிங்கள மக்களின் குடியேற்றம் தொடர்கிறது. அதேவேளை இனங்களுக்கிடையே முரண்பாடுகளும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன.

அதிகாரப் பகிர்வு பற்றிப் பார்க்கும்போது வடக்கு-கிழக்கு மீள் இணைப்பின் சாத்தியப்பாடு பற்றிய மீள் சிந்திப்பு அவசியமாகவே படுகிறது. இன்றைய அரசியல் புவியியல் நிலைமைகளில் மீள் இணைப்பின் சாத்தியப்பாடு கேள்விக்குறியாகிறது.  

 • புலப்பெயர்வின் விளைவுகள்

உள்நாட்டு மற்றும் சர்வதேசப் புலப்பெயர்வு வடக்கு கிழக்கின் அரசியல் பொருளாதாரத்தில், இனப்புவியியலில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. போரினால் ஏற்படும் இடப்பெயர்வுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் போர்ப்பிரதேசங்களில் அவற்றின் நீண்டகாலத் தாக்கங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியம்.

போரின் விளைவாக வடக்கு கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் மேற்கத்திய நாடுகளிலேயே குடியேறியுள்ளார்கள்.  புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கும் தாயகத் தமிழ் சமூகத்திற்கு மிடையேயான உறவு பல அம்சங்களைக் கொண்டது. இத்தகைய உறவை டயஸ்போறா (diaspora) ஆய்வாளர்கள் நாடுகடந்த சமூகங்களின் (transnational communities ன்) உருவாக்கமாகக் கோட்பாட்டு மயப்படுத்தி உள்ளார்கள். இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே ஒரு காசாதாரப் பொருளாதாரத்தின் (remittance economy ன்) வளர்ச்சி இந்த உறவின் ஒரு முக்கிய அம்சமாயிருந்தது. இதைத் தொடர்ந்து சமூக, கலாச்சாரரீதியான சிந்தனைகளின் வருகையும், செயல் திட்டங்களும் அதிகரித்தன. இவற்றின் நன்மை, தீமை பற்றிய ஆழமான ஆய்வுகள் இல்லையாயினும் பல போக்குகளை அவதானிக்க முடிகிறது.

 • காசாதாரப் பொருளாதாரம் போர்க் காலத்தில் பல குடும்பங்களைக் காப்பாற்றியது. அதேவேளை அது புலப்பெயர்வையும் மேலும் ஊக்கிவித்தது. வடக்கிலிருந்து தெற்கிற்கும் வெளிநாட்டிற்கும் நிரந்தரமாகப் புலம்பெயரும் போக்குத் தொடர்ந்தது. தெற்கில் குறிப்பாக மேல்மாகாணத்தில் குடியேறியுள்ள வடக்கு கிழக்கு தமிழரின் தொகை அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து உதவி பெறாதோரும் கல்வி, தொழில் காரணமாகத் தெற்கிற்குக் குடியகலும் போக்கும் தொடர்கிறது. தெற்கிலே குடியேறியுள்ள தமிழரின் எதிர்காலம் தெற்குடனேயே பிணைந்துள்ளது. அவர்கள் தமது மொழியுரிமையை அனுபவிக்க, இன அடையாளங்களைப் பேணி வளர்க்கும் உரிமையைப் பெற அங்குள்ள சிங்கள மக்களின் புரிந்துணர்வையும் ஆதரவையும் பெறுதல் அவசியம். 
 • வெளிநாட்டில் குடியேறவேண்டும் எனும் ஆவல் தமிழ் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதற்கு உதவக்கூடிய கதவுகள் இப்போ மூடப்பட்டுவிட்ட போதும் வெளிநாடு செல்லப் பல இளைஞர்கள் முயற்சித்தவண்ணம் இருப்பதை காணலாம். இருக்கும் வெளி நாட்டுத் தொடர்புகள் மட்டுமன்றி வடக்கு கிழக்கு நிலைமைகளும் இளம் சந்ததியினரின் புலப்பெயர்வை ஊக்கிவிக்கின்றன.
  • காசாதாரப் பொருளாதாரம் வடக்கு கிழக்கில் குறிப்பிடத்தகுந்த சமூக-பொருளாதார வேறுபடுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பணம் பெருமளவில் வடக்கிற்குச் செல்வதால் இந்தப் போக்கு அங்கேயே பலமாகியுள்ளது. இது சொத்துடைமை மற்றும் அதிகார உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளுக்குமிடையிலான தொடர்பு ஆராயப்படவேண்டியது. இதன் புவியியல் – அதாவது பிரதேசரீதியான தாக்கங்கள் – ஆய்வுகளின் அம்சமாகவேண்டும்.
 • நுகர்வின் மட்டுமன்றி நுகர்வுவாதத்தின் அவற்றுடன் தொடர்புள்ள வாணிபத்தின் வளர்ச்சியே காசாதாரப் பொருளாதாரத்தின் தலையாய போக்காகவுள்ளது. வெளிநாட்டு பணத்தின் வருகையால் உருவான சேமிப்பு உபரி வடக்கு கிழக்கில் உற்பத்தி மூலதனமாகப் பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை. அத்தகைய முதலீட்டை ஊக்கிவிக்கும் சூழலை அரசாங்கம் உருவாக்கவில்லை.  (Studies have shown that the local institutional environment is the key for foreign remittances to contribute to development.)

For discussion

 • வடக்குக் கிழக்கு – தமிழர்களின் வெளியேற்றம், சிங்களமயமாக்கல், தமிழ் – முஸ்லிம் – சிங்கள உறவுகள்
 • தெற்கிலே நிரந்தரமாகக் குடியேறியுள்ள தமிழர்களின் மொழி உரிமை, அடையாளம்
 • மலையகத் தமிழரின் உரிமைப் போராட்டம்

வடக்கு கிழக்குக்கு வெளியே, மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வதிவிட நில உரிமைக்கான போராட்டம் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. பெருந்தோட்ட அமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அவர்களின் எதிர்காலம் பற்றிக் கேள்விகளை எழுப்புகின்றன. மலையகத்தில் சிங்கள மக்களுடன் சம உரிமை பெற்றுப் பாதுகாப்புடன் வாழ்வதே அவர்களின் போராட்டத்தின் நோக்கம்.

 • மேலே இனங்காணப்பட்ட பிரச்சனைகளின் தீர்வுகள் பற்றிப் பார்க்கும்போது அவை தவிர்க்கமுடியாதபடி வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கும் நம்மை எடுத்துச் செல்கின்றன. அது மாத்திரமன்று இவை எல்லாமே பல்லினத் தொடர்புள்ள பிரச்சனைகள். அத்துடன் இவற்றில் எந்தப் பிரச்சனையும் சிங்கள மக்களின் புரிந்துணர்வும் ஆதரவுமின்றித் தீரப்போவதில்லை. 

முற்போக்கு சக்திகளின் இன்றைய கடமைகளில் ஒன்று இந்தப் பிரச்சனைகளை ஆழ ஆராய்ந்து அவற்றை மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளாக உள்ளடக்கிய ஒரு திட்டத்தைத் தயாரிப்பதாகும். இப்படிச் சொல்வது எல்லா மக்களுக்கும் ஒரே அரசியல் திட்டமோ தீர்வோ என்பதாகாது. எல்லாக் குழுக்களுக்கும் பொதுவான ஜன்நாயகக் கோரிக்கைகளை இனம் காணவேண்டும். அத்துடன் ஒவ்வொரு மக்களின் கோரிக்கைகளுக்கான போராட்டம் மற்றைய மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு உதவ வல்லது என்பதை உறுதிபடுத்தவேண்டும்.  

இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகள் பல்லின நாடுகளே. ஒரு நவீன ஜனநாயக அரசில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசியங்களும்/ தேசிய இனங்களும் கூடி வாழ முடியும் என்பது பொதுமக்கள் மத்தியில் கலந்துரையாடப்படும் பொருளாகவேண்டும். 

சிங்கள மக்கள்

இனப்பிரச்சனை என்று ஒன்றில்லை. இருந்தது பயங்கரவாதப் பிரச்சனையே. அது தீர்க்கப்பட்டுவிட்டது என நம்பவைக்கப்பட்டுள்ள பெருபான்மையான சிங்கள மக்களின் மனதை எப்படி மாற்றுவது?

அத்தகைய ஒரு மாற்றம் இல்லாதவரை, சிங்கள மக்களின் சம்மதம், ஆதரவு, பங்குபற்றல் இல்லாதவரை தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் போவதில்லை. இது ஒன்றும் புதிதாகப் பிறந்த ஞானமல்ல. பழைய செய்திதான். ஆனால் இன்று வடக்கு கிழக்குத் தமிழ்த் தரப்பிலிருந்து மீள்சட்டகமாக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சனையின் அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைப்பது சிங்கள மக்களுடன் ஒரு புதிய அரசியல் சம்பாஷணையை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. அதே போன்று முஸ்லிம் மக்களையும் மலையகத் தமிழ் மக்களையும் அணுகும் சந்தர்ப்பம் பிறக்கிறது. 

12.09.2020 

தேசிய இனப் பிரச்சனையும் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கமும்

எல். சாந்திக்குமாரின் கருத்துக்கள் பற்றி ஒரு பார்வை

சமுத்திரன்

தோழர் சாந்திக்குமாரின் மரணச்செய்தியைக் கொழும்பில் வாழும் ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் தெரியத் தந்தார். நான் நீண்டகாலமாக சாந்திக்குமாருடன் தொடர்பில்லாது இருந்ததனால் எழுந்த மனவருத்தம் அந்த மரணச்செய்தி தந்த துக்கத்தை அதிகரித்தது. அத்தகைய நேரத்தில் கடந்தகால நினைவுகள் பல எழுவது இயற்கையே. அவரை முதலில் சந்தித்தது 1970களின் நடுப்பகுதியில் என நம்புகிறேன். கூர்மையான சமூகப்பார்வையும் அரசியல் ஆர்வமும் மிக்க ஒரு இளைஞனாகவிருந்தார். அப்போது நான்  கொழும்பில் வாழ்ந்துவந்தேன். அன்று ஏற்பட்ட தொடர்பு சில பொதுவான ஈடுபாடுகளால் தொடர்ந்தது. வளர்ந்தது. ஒரு மாக்சிசக் கல்வி வட்டத்தை உருவாக்குவதில் எனக்கு இருந்த ஆர்வத்தை அவரும் பகிர்ந்து கொண்டார். சாந்தியுடனும் வேறு சிலருடனும் சேர்ந்து ஒரு கல்வி வட்டத்தை ஆரம்பித்தோம். அதில் பலர் இணைந்தனர். மற்றையோர் எல்லோரும் என்னை விட வயதில் இளையவர்களாகவும் அவர்களில் சிலர் பல்கலைக்கழக மாணவர்களாகவும் இருந்தனர். கல்வி வட்டம் சில ஆண்டுகள் மிகவும் நன்றாக இயங்கியது. மாக்சிசக் கோட்பாட்டுடன் இலங்கை மற்றும் உலக அரசியல், கலை இலக்கியம் போன்றவை உரையாடல்களின் முக்கிய விடயங்களாயின. 1970கள் இலங்கை அரசியலில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய கோட்பாட்டுரீதியான விவாதங்கள் தீவிரமடையத் தொடங்கிய காலம். வடக்கு கிழக்கு தமிழர்களின்  தேசிய சுயநிர்ணய உரிமை மாக்சியவாதிகள் மத்தியில் ஒரு விவாதப் பொருளாகியது. இந்த விவாதங்களும் கருத்துப் பரிமாறல்களும் மலையகத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பான கேள்விகளையும் உள்ளடக்கும் வகையில் விரிந்தன. மலையகத் தமிழரின் சமூக உருவாக்கம் நான் பங்குபற்றிய கலந்துரையாடல்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. இவற்றில் சாந்திக்குமாரின் பங்களிப்பும் ஈடுபாடும் மிக முக்கியமானது. சாந்திக்குமாரை நினைவுகூரும் இவ்வேளை அவருடைய இதயத்திற்கு நெருக்கமானதாகவும் அறிவுரீதியான தேடலின் பிரதான விடயங்களில் ஒன்றானதுமான மலையகத் தமிழரின் சமூக உருவாக்கம் பற்றிய அவரது பதிவுகள் பற்றி உரையாடுவது பயன்தருமென நம்புகிறேன். விசேடமாகச் சாந்திக்குமாரின் ஆக்கங்கள் இன்றைய இளம் சந்ததி அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என விரும்புவர்களில் நானும் ஒருவன்.

மலையகத் தமிழ் சமூகம் பற்றியும் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாகவும் 1979-82 காலத்தில் சாந்திக்குமார் எழுதிய ஆறு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. 1979இல் யாழ் பல்கலைக் கழகத்தின் வெளியீடான ‘மானுடம்’ சஞ்சிகையில்  பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையைத் தவிர மற்றைய ஐந்து கட்டுரைகளும் 1980-82 காலத்தில் ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டன.[1]             

அவர் ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகையை ஆரம்பிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவராகவும் அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்தவர். அந்தச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட அவருடைய ஆக்கங்கள் பன்முகரீதியானவை. ஆயினும் அப்போது சூடுபிடித்திருந்த தேசிய இனப் பிரச்சனை தொடர்பான விவாதங்களில் தனது கோட்பாடுரீதியான நிலைப்பாட்டையும் மலையகத் தமிழரின் தேசிய இனத்தன்மையின் பரிணாமம் பற்றிய தனது கருத்துக்களையும் முன்வைப்பதில் ஆர்வமாயிருந்தார். இலங்கையில் ஏற்கனவே எழுச்சி பெற்றுவிட்ட இனத்துவமைய அரசியல் கலாச்சாரச் சூழலிலேயே இந்த விவாதங்கள் இடம்பெற்றன. பல்லின நாடான இலங்கையின் அரசை சிங்கள பௌத்த ஒற்றை இனத்தேசத்தின் அரசாக நிர்ணயிக்கும் பேரினவாதத் திட்டம் நடைமுறையிலிருந்தது. இன ஒடுக்குமுறை இதன் ஒரு அம்சமாகியது. 1970களில் வடக்கு கிழக்குத் தமிழ் சமூகத்தில் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை வலுப்பெற்றது. கருத்தியல் மட்டத்தில் சிங்கள பெருந்தேசியவாதத்திற்கும் தமிழீழத் தேசியவாதத்திற்கும் இடையிலான முரண்பாடு இந்த நாட்டில் இரு இனங்களினதும் தொன்மையையும் தனித்துவத்தையும் நிரூபிக்கும் போட்டியாக உருவெடுத்தது.  இந்தக் கருத்தியல்ரீதியான விவாதம் நவீனகால அதாவது கொலொனியத்திற்கும், சுதந்திரத்திற்குப் பின்னைய காலத்தினதும் பிரச்சனையான தேசிய இனப்பிரச்சனையையும் தேசியத்திற்கான விளக்கத்தையும் புராதனத்தன்மை மிகுந்த ‘வரலாற்று’ முலாம் பூசப்பட்ட கட்டமைப்புக்குள் கொண்டு சென்றது. தேசிய இனப்பிரச்சனைக்கும் வரலாற்றுக்குமிடையிலான உறவு முக்கியமானது.  ஆனால் அதை இலங்கைத் தீவின் தொன்மை மிகு இரு இனங்களில் எது மூத்த குடி எனும் அடிமூல (primordial) கருத்தியல் போட்டித் தளமாக மாற்றுவது தேசிய இனப்பிரச்சனையின் உருவாக்கத்தில் கொலோனிய மற்றும் நவீனகாலக் காரணிகள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவம் பற்றிய வரலாற்றுரீதியான புரிதலைக் குழப்பத்திற்குள்ளாக்குகிறது. 

நவீன காலகட்டத்தில், அதாவது முதலாளித்துவத்தின் காலகட்டத்தில், தேசியம் அல்லது தேசம் பிறக்கமுன் தேசியவாதம் பிறக்கிறது என்பதையே ஆய்வுகள் காட்டுகின்றன. நவீன தேசம் தோன்றுவதற்கான புறநிலைபூர்வமான வரலாற்று மாற்றச் சூழல்களில் தேசியவாதமே தேசியத்தை வடிவமைக்கிறது. தேசியவாதம்  தேசியத்தின் வெகுஜனக் கற்பிதத்தைப் படைத்துப் பலப்படுத்தவும் கோரிக்கைகளை நியாயப்படுத்தவும் வரலாற்றுரீதியான ஆதாரங்களைத் தேடுகிறது. இந்த முயற்சி வரலாற்று நிகழ்வுகளுடன் சில திரிபுகளையும் கர்ணபரம்பரைக் கதைகளையும் புதிய கற்பனைகளையும் கருத்தியல் தேவைகளுக்கேற்பக் கலந்து பரிமாறுகிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான கதையாடல்களிலும் இந்தப் போக்கே செல்வாக்குச் செலுத்தியது. நாட்டின் சில வரலாற்றாய்வாளர்கள் சிங்கள – தமிழ் இனங்களுக்கிடையிலான பண்டைய உறவுகளை இன்று மேலாட்சி பெற்றுவிட்ட  குரோத இனத்துவமையப் பட்டகத்திற்கூடாக நோக்குவதின் தவறையும் ஆபத்தையும் விளக்க முற்பட்டனர். கருத்தரங்குகளில் கர்ணபரம்பரைக் கதைகளின் ஆதாரமற்றதன்மைகளைப் புட்டுக்காட்டிச் சிரமப்பட்டு விளக்கினர்.[2] ஆனால் துன்பகரமாக இந்த முயற்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  பாராளுமன்ற அரசியலில் முற்றாக இறங்கிவிட்ட இடதுசாரிக் கட்சிகள் சிங்களப் பெருந்தேசியவாதத்திடம் சரணடைந்துவிட்டன. சில மாக்சிய இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சனையையும் சுயநிர்ணய உரிமையையும் ஜனநாயகப் புரட்சியின் அம்சமாக விளக்க முற்பட்டார்கள்.  ஆயினும் இனத்துவமைய அரசியலின் எழுச்சியால் இவர்கள் இரு இனங்கள் மத்தியிலும் ஒரங்கட்டப்பட்டனர்.1977இல் வந்த ஆட்சி மாற்றத்துடன் நாட்டின் பொருளாதாரத்தின் நவதாராளமயமாக்கல் ஒரு புறமும் தேசிய இனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல் மறுபுறமும் அமுலுக்கு வந்தன. இதுவே அரசாங்கத்தின் இரட்டைக் கொள்கையாயிற்று.  உள்நாட்டுப் போரின் வருகை தவிர்க்கமுடியாத ஒரு விதிபோலாகிவிட்டது.

இத்தகைய சூழலிலேயே சாந்திக்குமார் தேசிய இனப்பிரச்சனை பற்றியும் பிரித்தானிய கொலொனிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரச் சுரண்டல் தேவைகளுக்காகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களை மையமாகக் கொண்ட மலையகத் தமிழ் சமூகத்தின் உருவாக்கம்,  உரிமைகள் மற்றும் கூட்டு அடையாளம் பற்றியும் தனது கருத்துக்களைப் பதிவிடுகிறார். மலையகத் தமிழ் சமூகம் பற்றி அவர் முன்வைக்கும் தகவல்களும் வாதங்களும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையின் உருவாக்கத்தில் கொலோனிய-ஏகாதிபத்தியத்தின் பங்கினைச் சுட்டிக்காட்டுவதுடன் மலையகத் தமிழரின் உரிமைப் போராட்டத்தின் குறிப்பான தன்மைகளையும் தெளிவாக்க உதவுகின்றன. தேசிய இனப் பிரச்சனையைப் பொறுத்தவரை அவர் லெனினிசம் சார்ந்த தனது கோட்பாட்டுரீதியான நிலைப்பாட்டை ஆணித்தரமாக முன்வைத்தார். இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் தேசிய இனப் பிரச்சனை பற்றி மாக்சிசவாதிகள் மத்தியில் கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் இருந்ததை நன்கறிந்திருந்தார். 1979இல் எழுதிய ஒரு கட்டுரையில் மூன்றாம் உலக இடதுசாரி இயக்கங்கள் தொழிற்சங்க வாதத்திற்கும் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கும் பலியாவதைச் சுட்டிக்காட்டியபடி இவற்றின் விளைவான இரண்டு குறைபாடுகளைத் துல்லியமாக்குகிறார். ஒன்று, இந்த நாடுகளில் சிறுபான்மையாயிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் நேச சக்திகளான சிறுபண்ணை விவசாயிகள் மற்றும் ‘பூதாகரமாக உருவெடுத்துவரும் வேலையில்லாப் பட்டாளம்’ ஆகிய சமூகப் பிரிவுகளை அணிதிரட்டுவதன் முக்கியத்துவத்தை உணராதிருப்பது. மற்றது, இதைப் போலவே தேசிய இனப்பிரச்சனையைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதிருப்பது. அவருடைய வார்த்தைகளில்:

‘இலங்கையில் தேசிய இனப் பிரச்சனை, ஏகாதிபத்தியத்தால் ஏற்கனவே சுதந்திரமாக இருந்த இனங்கள் ஒரு அமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டதாலும், காலனித்துவப் பொருளாதார நோக்கிற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பெருந்தோட்டப்பகுதி காலனித்துவ சிறுபான்மை மக்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய அடக்குமுறைகளுக்கெதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் இவற்றைக் கவனத்திற்கு எடுக்காமல் வெற்றிபெற முடியாது. இலங்கையின் கடந்தகால இடதுசாரி தொழிற்சங்க அரசியல் தலைமைகள் பெரும்பாலும் இப்பிரச்சனைக்கு உரிய இடத்தைக் கொடுக்காததன் காரணமாகவும் அல்லது மௌனம் சாதிப்பதன் காரணமாகவும் சந்தர்ப்பவாதப் போக்கையே அனுஷ்டித்து வந்துள்ளன.’ (1979)

 பல விடயங்கள் பற்றி மிகவும் சுருக்கமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை வாசகர் மனதில் பல கேள்விகளை எழுப்பி இருக்கலாம். உதாரணமாக ‘ஏற்கனவே சுதந்திரமாக இருந்த இனங்கள்’ என்பதற்கு விளக்கம் தேவைப்பட்டது.  இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து 1980இல் ‘தேசியங்களும் தேசிய இனங்களும் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் ‘தீர்த்தக்கரை’யில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை தேசிய இனப் பிரச்சனை தொடர்பான சில விடயங்களை மேலும் தெளிவாக்க முயல்கிறது. ‘மார்க்சியமும் தேசியங்கள் குறித்த பிரச்சனையும்’ என்ற தலைப்பில் ஸ்டாலின் 1913ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் தேசியம் பற்றி முன்வைக்கப்படும் வரைவிலக்கணத்தை  கொலோனிய-ஏகாதிபத்திய வரலாற்றுக்குட்பட்ட ஒரு மூன்றாம் உலக நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கு யாந்திரீகரீதியில் பிரயோகித்து ஒரு குறிப்பிட்ட மக்கள் தேசமாகத் தகுதியற்றவர்கள் என முடிவெடுப்பது  தவறெனச் சுட்டிக் காட்டுகிறார் சாந்திக்குமார். ஒரு இனம் ஒரு தேசமெனும் தகைமையைப் பெறப் பின்வரும் நிபந்தனைகள் அனைத்தையும் திருப்திப்படுத்த வேண்டுமென ஸ்டாலின் கூறுகிறார்: வரலாற்றுரீதியில் நிலையாக இருக்கும் சமூகம்,  பொதுவான மொழி, பிரதேசம்,பொருளாதாரம் மற்றும் உளவியல்ரீதியான உணர்வு. ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஒடுக்கப்படும்  இனங்களுக்குப் பொதுவான பொருளாதாரம் இருப்பது சாத்தியமில்லை. இதனால் மற்ற நிபந்தனைகளைத் திருப்திப்படுத்தினாலும் ஒரு இனம் தேசிய இனமாகக் கருதப்படமுடியாதா எனும் கேள்வி எழுகிறது. 

ஆகவே ஏகாதிபத்தியம் பற்றியும் அதன் காலகட்டத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் லெனின் தெரிவிக்கும் கருத்துக்களே நமதுகால வரலாற்று நிலைமைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன என வாதிடுகிறார் சாந்திக்குமார். இந்தப் பார்வையில் தேசியங்களின் பிரச்சனைகளை பின்வருமாறு மூன்றாக வகைப்படுத்துகிறார். 

´முதலாவதாக ஏகாதிபத்தியத்தால் அடிமைப்படுத்தப்பட்ட தேசங்களின் விடுதலையும் சுயாட்சியும். இரண்டாவதாக காலனித்துவ பரிபாலன அமைப்பின் விளைவாக ஒருமயப்படுத்தப்பட்ட உள்நாட்டு தேசிய இனங்களின் பிரச்சினை. முன்பு சுயாதீனமாக இருந்த குழுக்கள், ஒரு தேசிய பரிபாலன அமைப்பிற்குக் கீழ் கொண்டுவரப்பட்டது சம்பந்தப்பட்ட பிரச்சினை இது. மூன்றாவதாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு மக்கள் பெரும்பான்மையாக குடியேற்றப்பட்டதின் விளைவாக உருவான தேசிய இனப்பிரச்சனைகள்.

இரண்டாவதிற்கும், மூன்றாவதிற்கும் முறையே இலங்கையின் வட- கீழ் பிரதேச தமிழின மக்களையும் இந்திய வம்சாவழி தோட்டப்புற (மலையக) மக்களையும் உதாரணமாக கூறலாம். (சாந்திக்குமார், 1980)

இந்தச் சமூக அமைப்புக்களின் பிரச்சனைகளுக்கு ஸ்டாலின் முன்வைக்கும் நிபந்தனைகளில் ஒன்றான பொதுப் பொருளாதாரம் செல்லுபடியாகாது எனச் சுட்டிக்காட்டுகிறார். கொலோனிய – ஏகாதிபத்திய வல்லரசுகள் உலகின் படத்தை தொடர்ச்சியாக மீள்வரைந்து புதிய புவியியல்களை உருவாக்கின, மீளுருவாக்கின. பல்லின சமூகங்களை ஒற்றையாட்சிக்குள்ளாக்கிய அதேவேளை அவற்றைப் பிரித்தாளும் தந்திரத்தையும் இந்த வல்லரசுகள் கையாண்டன. ‘முன்பு சுயாதீனமாக இருந்த குழுக்கள்’ எனும் சாந்திக்குமாரின் கூற்றுக்கு விளக்கம் தேவைப் படலாம்.  அந்தக் கேள்வியை இங்கு ஆராய்வது சாத்தியமில்லை.  

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை அடிமைக் கூலி முறைமை சர்வதேசக் கொலோனிய தொழிற்பிரிவின் முக்கிய குணாதிசயமாயிற்று.  1833இல் பிரிட்டிஷ் கொலொனிகளில் அடிமைக் கூலிமுறைமை  சட்டவிரோதமாக்கப்பட்டபின்  பெருந்தோட்ட உற்பத்தி மற்றும் தேவைகளுக்கு  இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் மற்றைய  கொலொனிகளுக்கு அரைஅடிமைக் கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்யப்பட்டனர். இந்த நடைமுறை 1920கள் வரை தொடர்ந்தது. நவீன காலத்தில் பல்வேறு நாடுகளினதும் அவற்றின் தேசிய இனப் பிரச்சனைகளினதும் உருவாக்கத்தில் இந்த வரலாற்றுப் போக்கின் பங்கு தீர்க்கமானது. இந்த வரலாற்றுப் பின்னணி பற்றிய புரிதலுடன் சாந்திக்குமார் மலையகத் தமிழ் சமூகத்தின் தோற்றத்தையும் அதன் உருவாக்கத்தில் காலத்திற்கூடாக இடம்பெற்ற மாற்றங்களையும் அணுகுகிறார். அவருடைய அவதானிப்புகளும் கருத்துக்களும் இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னைய வரலாற்றுப் போக்கு பற்றியன என்பதையும் குறிப்பிடவேண்டும். வரலாற்றுரீதியான தகவல்களைப் பொறுத்தவரை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளை சாந்திக்குமார் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. துரதிஷ்டவசமாக இந்த உசாத்துணை விபரங்கள் அவரது கட்டுரைகளில் சேர்க்கப்படவில்லை.

மலையகத் தமிழ் சமூக உருவாக்கத்தின் வரலாற்றுப் புள்ளிகள்

‘.. கடந்த நூற்றாண்டிற்கு மேற்பட்ட இவர்கள் வெறும் தொழிலாளர் கூட்டமாக மாத்திரம் தான் உருவெடுத்திருந்தார்களா? இவர்கள் இங்கு வாழ்ந்து தீர்த்திருப்பது ஒரு வாழ்க்கை இல்லையா? அந்தச் சுவடுகளை, ஒரு சமூகத்தின் உயிர்ப்பை கிராமங்களில் காணுவதைப் போல தோட்டங்களிலும் நாம் காணக்கூடுவதில்லையா? இம்மக்கள் தங்கள் போராட்டங்களில், நடவடிக்கைகளில் கலைக் கலாச்சார பிரதிபலிப்புக்களில் தங்களை ஒரு சமூகமாக இனங்கண்டுள்ளார்கள். மிகப் பெரும்பான்மையாக தொழிலாளர்களை மையமாகக் கொண்டு பல சமூக தட்டுக்களை தன்னுடன் உருவாக்கி வளரும் ஒரு சமூகமாக இவர்கள் உருவெடுத்துள்ளார்கள்.’  (சாந்திக்குமார், 1980).

நாலு தசாப்தங்களுக்கு முன்னர் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கம் பற்றி சாந்திக்குமார் பேசவும் எழுதவும் முற்பட்டபோது அந்த விடயம் இலங்கையின் சமூக விஞ்ஞான வட்டங்களில் ஒரு  மிகப்புதிய பேசுபொருளாகவிருந்ததை நான் நினைவுகூருகிறேன்.  அதேவேளை அவரின் இந்த முன்னெடுப்புடன்   சமகாலத்தில் வேறு சிலரின் பங்களிப்புக்களும் இடம்பெற்றன.  அன்றைய சூழலில்   சாந்திக்குமார் எழுதிய கட்டுரைகள்  மலையக மக்களின் இன உருவாக்கத்தையும் அதன் முரண்பாடுகளையும் இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையின் ஒரு அம்சமாக முன்வைத்து விளக்க முற்பட்டன. முக்கியமாக அவருடைய கட்டுரைகள் ஒரு கோட்பாட்டுரீதியான பார்வையால் ஒளியூட்டப்பட்ட முன்னெடுப்பினைக் குறித்தன. துரதிஷ்டவசமாக கடந்த தசாப்தங்களுக்கூடாக இதை அவரால் தொடரமுடியாது போனமை வருந்தத்தக்கது. அவருடைய  முயற்சி ஒரு நிறைவு பெறாத் திட்டமான போதும் அவர் விட்டுச்சென்ற கட்டுரைகள் இன்றும் பெறுமதி மிக்கவை என்பதை இந்தக் கட்டுரை புலப்படுத்தும் என நம்புகிறேன்.

இலங்கையின் மலையகத்தின் காடுகளை வெட்டி இலாபம் தரும் பணப்பயிர் தோட்டங்களாக மாற்றுவதற்காக    இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சிக்கலும் துன்பமும் மிகுந்த வரலாற்றின் பல்வேறு கட்டங்களை இனங்கண்டு பதிவிடுகிறார்.   கோப்பிப் பயிர்ச்செய்கைக்காக முதன்முதலாகத் தென்னிந்தியாவிலிருந்து 1828ஆம் ஆண்டு தொழிலாளர்கள் குடும்பங்கள் கொண்டுவரப்பட்டு சிங்ஹப்பிட்டியாவில் (இன்று பேராதெனியப் பூங்கா இருக்குமிடத்தில்) குடியமர்த்தப்பட்டனர் எனும் தகவலை நினைவூட்டுவதுடன் இதைத் தொடர்ந்து 30-40 வருடங்கள் மலைநாட்டுப் பகுதியில் கோப்பிப் பயிரிடுகையின் பகுதியில் பரவலான வளர்ச்சி பற்றியும் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களின் வருகை தொடர்பாகவும் பல விடயங்களைப் பதிவிடுகிறார்.  கோப்பிப் பயிரின் அறுவடை காலத்திலேயே பெருந்தொகையான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதனால் பல தொழிலாளர்கள் இலங்கையில் நிரந்தரமாக அல்லது நீண்டகாலத்திற்கு தங்கவில்லை. மறுபுறம் இலங்கையில் தொழிலாளர் பற்றாக்குறை கொலோனிய ஆட்சியாளருக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நிரந்தரப் பிரச்சனையாயிருந்தது.  கோப்பிப் பயிர் வியாதிக்குள்ளாகி அழிவடைந்ததைத் தொடர்ந்து 1860களில் பெருந்தோட்ட முறையில் தேயிலை உற்பத்தி ஆரம்பித்தபோது நிரந்தரமான தொழிற்படையின் தேவை மேலும் பெரிதாகியது. இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யத் தொழிலாளக் குடும்பங்களை இந்தியாவிலிருந்து பெருமளவில் கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆயினும் எதிர்பார்த்து வந்த வாழ்க்கை இலங்கையில் கிடையாததாலும் கடுமையான வேலை நிபந்தனைகளாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பினர். உதாரணமாக 1893ஆம் ஆண்டு 91,676 பேர் தோட்டப்பகுதிக்குப் புதிதாக வந்தபோதும் அதே ஆண்டில் 73,181 பேர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றனர். தென்னிந்தியக் கிராமங்களிலிருந்து மலையகம் வரையிலான பயணம் பல இன்னல்களையும் உயிராபத்துக்களையும் கொண்டிருந்தது. ஆயினும் இந்தியக் கிராமங்களின்  ஒடுக்கப்பட்ட மக்களின் வறுமையும் பஞ்சமும் மறுபுறம் இலங்கைக்குத் தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஏஜண்டுகள் கொடுத்த  கவர்ச்சிகரமான ஆனால் போலியான வாக்குறுதிகளும் பலரின் புலப்பெயர்வுக்குக்கான காரணிகளாயின.  இந்த ஏஜண்டுமுறையே பெரிய கங்காணி முறைக்கு முன்னோடியாக இருந்தது. பெரும் பிரயத்தனங்களுக்கூடாகச் சேர்த்துக் கொண்டுவரப் பட்ட தொழிலாளர்களை நிரந்தரமாகக் கட்டுப்படுத்திச் சுரண்டும்    மூடப்பட்ட   முகாமை அமைப்பாகவே தேயிலைப் பெருந்தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. ஒவ்வொரு தோட்டமும் அதற்கேயுரிய தொழிலாளக் குடும்பங்களின் நிரந்தரக் குடியிருப்புக்களாக அமைக்கப்பட்டு ஒரு பெரிய கங்காணியின் பொறுப்பில் விடப்பட்டது. இந்தத் தோட்ட அமைப்பில் கங்காணிகள் சாதிமுறைக் கட்டுப்பாடுகளையும் நடைமுறைப் படுத்தினர். சுரண்டலும் ஒடுக்குமுறையும் இணைந்த இந்த அமைப்பில் வர்க்கமும் பாலும் சாதியும் ஒன்றை மற்றது ஊடறுக்கும் உறவினைப் பெறுகின்றன. மறுபுறம் இத்தகைய நிர்ப்பந்த நிலைமைகளில் குடியேற்றப்பட்ட இந்தச் சமூகத்தில் 1920களை அடுத்து  அதுவொரு நிரந்தர சமுதாய அமைப்பின் தன்மைகளைப் பெறுவதைக் காணலாம் எனக் கூறுகிறார் (1982). 

ஆயினும் ‘இந்தக் காலப்பகுதிகளில் மலையகத்தோட்டங்கள் இருண்ட கோட்டைகளாகவே இருந்துள்ளது’ எனக் கூறும் சாந்திக்குமார் தொழிலாளர் மத்தியில் ஸ்தாபன முயற்சிகள் அவர்கள் வந்து ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் 1931ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கிறது எனும் முக்கிய தகவலை நினைவூட்டுகிறார். அவருடைய கருத்தில் ‘இந்தக் கட்டத்தின் ஆரம்பத்தோடு மலையக மக்களின் வரலாற்றோடும், சமூக உருவாக்கத்தோடும் தொடர்புடைய பல முக்கிய அம்சங்கள் நோக்கப்படவேண்டிய – வெளிப்படுத்தப்படவேண்டிய அவசியத்தை நாடி நிற்கின்றன’ (1981). ‘வெளி உலகின் நடவடிக்கைகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இறுக்கமான கோட்டைகளாகவிருந்த தோட்ட அமைப்புக்களில் முதல் நுழைவாயிலாக 1931ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை அமைந்தது. முதன் முதலாக தோட்டப்புறங்களில் வெளியார் நுழையவும், பிரச்சாரங்கள் நடத்தவும் இது இடமளித்தது’ (1982).

 1931இல் வந்த சர்வசன வாக்குரிமை மலையக மக்களையும் உள்ளடக்கியபோதும் அதன் அமுலாக்கலில்  இருந்த  குறைபாடுகளால் சிலபகுதியினருக்கு அந்த உரிமை கிட்டவில்லை.  அந்த வருடம் இடம்பெற்ற அரச சபைத்தேர்தலில் மலையகத் தமிழரின் வாக்குகளால் தோட்ட உரிமையாளர் பின்னணியைக் கொண்ட பெரி. சுந்தரம் மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய இரு தமிழர்களும் கோடன் (Gordon) எனும்  ஒரு தோட்டத்துரையும் வெற்றிபெற்றனர். இவர்கள் ‘மலையக மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளின் நின்றும் விலகியே இருந்தனர்’ எனச் சுட்டிக்காட்டும் சாந்திக்குமார் (1982) தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு நலன்களை மையப்படுத்திய பரந்த நோக்கிலான ‘அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சம்மேளனம்’ எனும் அமைப்பினை நிறுவிய நடேச ஐயரின் பங்களிப்பிற்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார். இந்தியாவிலிருந்து வந்த முற்போக்கு அறிவாளரும் கொலோனிய எதிர்ப்புச் செயற்பாட்டாளாருமான  நடேச ஐயரின் முயற்சிக்குத் தோட்டத் துரைமாரினதும் அவர்களது ஏவலாளர்களுமான பெரிய கங்காணிகள் மற்றும் பொலிசாரினதும் எதிர்ப்புப் பலமாயிருந்தது. தோட்டங்களுக்குள் பிரவேசிக்க முடியாத நிலையில் நடேச ஐயரின் பிரச்சாரத்திற்கு வேறு வழிகளைக் கையாளவேண்டியிருந்தது. தோட்டப் பகுதிகளின் பிரதான வீதிகளில் திறந்த காரிலிருந்து ஐயர் தனது பிரச்சாரத்தைச் செய்தார். ஆயினும் தோட்ட அமைப்பின் அதிகாரமும் அரசாங்கமும் போட்ட தடைகளாலும் 1933இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியாலும் நடேச ஐயரின் முயற்சியைத் தொடர்வது மேலும் கடினமாயிற்று. இறுதியாக எல்லா தோட்டத் தொழிலாளர்களையும் இந்தியாவுக்குக் கூட்டிச் செல்ல அவர் எடுத்த முயற்சியும் தோல்வியடைந்தது. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை இடதுசாரிகள் நிரப்ப முன்வந்தனர்.[3]

இன்னல்கள் பெருகியபோதும் மலையகத் தமிழ்ச் சமூகம் ஒரு தொடர்ச்சியான நிரந்தர இருப்பைச் சந்ததிகளுக்கூடாகப் பெற்றவண்ணமிருந்த நிலையில் 1948இல் வந்த குடியுரிமைச் சட்டம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. «சுதந்திரம்» கொலோனிய ஒடுக்குமுறையின் முடிவாக அல்லாது ‘உள்நாட்டுக் காலனித்துவம், அல்லது இனக்காலனித்துவமாகத் தொடர்வதைக் காண்கிறோம்’ என்றபடி ‘இனக்காலனித்துவம்’ என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்.

‘உண்மையில், காலனித்துவம் உள்நாட்டுக் காலனித்துவம், அல்லது இனக்காலனித்துவமாக தொடர்வதைக் காண்கிறோம். சுதந்திரமடைந்த காலகட்டத்தில்  இருந்து இலங்கையின் நிர்வாகம்,சட்டதிட்டங்கள், அரசியல் யந்திரம் என்பனவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் இனக்காலனித்துவ ஆதிக்கத்திற்கு செய்த தயாரிப்புகளாக தென்படுகின்றன. இந்த தயாரிப்புக்களின் முன்னோடிகளில் ஒன்றாக 1948-ம் ஆண்டு மலையகத் தமிழர்களின் வாக்கு பறிக்கப்பட்டமை இருந்தது. வாக்குரிமை பறிக்கப்பட்டதின் மூலமாகத் தொடர்ந்தும் அதீத லாபம் தரக்கூடிய அரை அடிமைத் தொழிலாளர்களாக அவர்களின் நிலைமையை நீடிப்பது சாத்தியமாயிற்று. ஏனைய துறைகளில் இவர்களின் மேல்நோக்கிய நகர்வு தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து வந்த இலங்கை – இந்திய குடியுரிமை ஒப்பந்தங்கள் உள்நோக்கில் மலையக மக்கள் மீதான அரசின்  செலவைக் குறைப்பதையே கொண்டிருந்தன.’(1980).

1980இல் அவர் எழுதிய அதே கட்டுரையின் பின்வரும் வாசகங்கள் அவருடைய நிலைப்பாட்டைச் சுருக்கமாகப் பிரதிபலிக்கின்றன. 

´சமூக உருவாக்கம் ஒரு புறமும் இனக் காலனித்துவத்தின் செயற்பாடு மறுபுறமுமாக தாம் ஒரு தனித்துவமான இனம் என்ற உணர்வை பலப்படுத்தி வந்திருக்கின்றது. இந்த சமூக உணர்வின், பிரக்ஞையின் பிரதிபலிப்பாகவே மலையகம் என்ற பதம் அண்மைக்காலங்களில் ஆதிக்கம் பெற்று வருகின்றது. மலையகம் என்பதில் தொனிக்கின்ற புவியியல் அர்த்தத்தை மாத்திரம் நோக்கும்போது அது பிராந்தியவாதமாகப் படலாம். ஆனால் மலையகம் என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் எல்லையை அன்றி குறிப்பிட்ட உற்பத்தி முறையை (பெருந்தோட்டத்துறையைச்) சார்ந்து வாழ்கின்ற ஒரு சமூகத்தின் இருத்தலை, ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் எழுச்சியை குறிக்கின்றது.

நாம் இப்படிக் கூறுவது இதுவரை இருந்துவந்திருக்கின்ற பல ஸ்தாபனங்களிற்கு, கோட்பாடுகளிற்கு ரொம்பவும் அசௌகரியத்தை ஏற்படுத்தியே தீரும். மலையக மக்களை ஒரு தொழிலாள கூட்டமாகவே மாத்திரம் கருதுவது பலருக்கு வசதியாகவிருக்கிறது.´ 

மலையகத் தமிழர் தொடர்பாக ‘இனக் காலனித்துவம் அல்லது உள்நாட்டுக் காலனித்துவம்’ பற்றிச் சாந்திக்குமார் முன்வைக்கும் கருத்து இலங்கையின் பேரினவாத ஆட்சியாளரும் அரசும் தேசிய இனப்பிரச்சனையை கையாண்ட பொதுவான கொள்கையை விளக்கவும் உதவும் எனலாம். இனப்புவியியலை மாற்றும் நோக்கிலான திட்டமிட்ட குடியேற்றங்களுடன் தேசிய இனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல், அரசியல் தீர்வை மறுத்தல் மற்றும் முடிந்தவரை மற்றைய இனங்களின் கூட்டு அடையாளங்களையும் நினைவுச்சின்னங்களையும் அழித்தல் போன்ற திட்டங்கள் எல்லாம் அதையே உணர்த்துகின்றன. சாந்திக்குமார் ஏற்கனவே குறிபிட்டதுபோல் பெருந்தோட்ட உற்பத்தி  முறையே இந்த மக்களின் கூட்டு இருப்பிற்கு வரலாற்றுரீதியான அடிப்படையாயிற்று. மலையகத் தமிழரின் தேசிய இன உருவாக்கத்தின் பரிணாமப் போக்கானது இந்தத் தொழிலாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அதேவேளை சமூகரீதியான, வர்க்கரீதியான வேறுபடுத்தலையும் உள்ளடக்கியதெனும் அவருடைய அவதானிப்பும் முக்கியமானது. இலங்கையின் மலையகத்தில் ஒரு சிறுபான்மைத் தமிழ் தேசிய இனத்தை உருவாக்கும் நோக்கம் பிரித்தானிய கொலோனிய ஏகாதிபத்தியத்திற்கு இருக்கவேயில்லை. ஆனால்  பொருளாதாரரீதியான சுரண்டலுக்காகக் கொலோனியம் உருவாக்கிய பெருந்தோட்ட அமைப்பு அத்தகைய ஒரு பரிணாமப் போக்கிற்கு வழிவகுத்தது. கொலோனிய ஏகாதிபத்தியம் இலங்கைத்தீவில் மலையகத் தமிழர் எனும் ஒரு இனத்தின் உருவாக்கத்தில் வரலாற்றின் உணர்வுபூர்வமற்ற (unconscious) கருவியாயிற்று.

ஆனால் பல தசாப்தங்களாக இலங்கையில் ஏற்பட்டுவரும் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களின் தாக்கங்களினால் மலையகத் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. இது தொடர்பாக சமீபத்திய ஆய்வுகள் முக்கியமான தகவல்களைத் தருவதுடன் பயன்மிக்க கேள்விகளையும் எழுப்பத் தூண்டுகின்றன.  உதாரணமாக 2018ஆம் ஆண்டு முனைவர்கள் சந்திரபோஸ் மற்றும் ரமேஷ் தொகுத்து வெளியிட்ட ‘இலங்கையில் பெருந்தோட்ட சமூகம் 150 வருடங்கள் (1857-2017)’ எனும் தலைப்பிலான நூல் பல பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்குகிறது.[4] இந்த நூல் தரும் தரவுகளின் உதவியுடன் முக்கியமான ஒரு சில மாற்றப் போக்குகளைக் குறிப்பிட விரும்புகிறேன். காலப்போக்கில் பல காரணங்களால் மலையகத் தமிழர்களின் மொத்த சனத்தொகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாயிருப்போரின் விகிதாசாரம்  தொடர்ச்சியாகக் குறைந்துவந்துள்ளது. ஆயினும் தோட்டத் தொழிலாளர்கள் மலையகத் தமிழ் சமூகத்தின் அரசியல் புவியியலில் வகிக்கும் பங்கு முக்கியமானது. அவர்களின் போராட்ட மரபும் இன்றும் தொடரும் போராட்டங்களும் அந்த சமூகத்தின் உருவாக்க வரலாற்றின் தொடர்ச்சியைக் காட்டுகின்றன. இன்றைய மலையகத் தமிழரில் பெரும்பான்மையினர் தொழிலாளர்களே. அவர்களில் பெரும்பான்மையினர் முறைசாராத் துறைகளில் தொழிலாற்றுகிறார்கள். அதேவேளை மாற்றங்களைப் பொறுத்தவரை, ஒரு புறம் கல்விக்கூடாக ஒரு சாராரின் மேல்நோக்கிய சமூக நகர்ச்சி, நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி, மற்றும் தோட்டத் தொழிலாளரின் சில பகுதியினருக்கு சொந்த வாழிட உரிமை போன்றன இடம்பெறும் அதேவேளை மறுபுறம் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக 480,000 மலையகத் தமிழரை இந்தியாவிற்குப் புலம்பெயர்க்கப்பட்ட பின்னர் மலையகத்தில் எஞ்சியிருக்கும் மக்களின் சனத்தொகை தொடர்சியாகக் குறைந்துவரும் போக்கையும் காண்கிறோம். இன வன்முறைகளால் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேலான தொகையினர் வடக்கு கிழக்குக்கு இடம்பெயர்ந்து அங்கேயே நிரந்தரமாகக் குடியேறியுள்ளனர். இன்னொரு புறம் தொழில் காரணமாக இளம் சந்ததியினரின் நகர்நோக்கிய, வேறு பிரதேசங்கள் நோக்கிய நகர்ச்சியும் தொடர்கிறது. மலையகத் தமிழ் சமூகத்தின் புவியியல் இலங்கைக்குள்ளே மலையகத்திற்கும் அப்பால் பரந்துவிரிகிறது. அவர்களின் சமூக, அரசியல், பொருளாதாரக் கோரிக்கைகளும் போராட்டமுனைகளும் முன்பைவிடப் பன்முகமயமாகியுள்ளன.   

அவர் வாழ்ந்த காலத்தில் இடம்பெற்ற மாற்றப் போக்குகள் மலையகத் தமிழரின் தேசிய இன உருவாக்கத்திலும் அதன் மீளுற்பத்தியிலும், அவர்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பு, வர்க்க உறவுகள் ஆகியவற்றிலும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றித் தனது விமர்சனப் பார்வையிலான கருத்துக்களைச் சாந்திக்குமார் கொண்டிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதேபோன்று நீண்டகால உள்நாட்டுப் போரும் அதன் விளைவுகளும், தொடரும் இராணுவமயாக்கலும் நாட்டின் தேசிய இனப்பிரச்சனையையும் இனங்களுக்கிடையிலான உறவுகளையும் எப்படிப் பாதித்துள்ளன என்பது பற்றியும் அவர் தனது கருத்துக்களைக் கொண்டிருப்பார் என நம்பலாம்.  மலையகத் தமிழரின் தேசியஇன உரிமைப் பிரச்சனையை அவர் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனையின் ஒரு அம்சமாகவே பார்த்தார். இன்றைய இலங்கையில் தொடர்ந்தும் இனரீதியில் ஒடுக்கப்படும் வடக்கு கிழக்குத் தமிழர், முஸ்லிம்கள், மற்றும் மலையகத்தமிழர் ஆகிய மூன்று இனத்தவருக்கும் கொள்கைரீதியான பொது ஜனநாயகத் திட்டமொன்று தேவை என்பது கண்கூடு. அத்தகைய திட்டமொன்றின் அடிப்படையில் சிங்கள முற்போக்காளரின் ஒத்துழைப்புடன் சிங்கள மக்களின் புரிந்துணர்வையும் ஆதரவையும் தேடவேண்டும் என்பதும் கண்கூடு. தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு நாட்டின் ஜனநாயகப் புரட்சியின் மீட்சியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஆனால் இன்றைய இலங்கையில் இவை பாரிய சவால்கள் என்பதையும் மறுக்க முடியாது. இந்தப் பார்வைபற்றிச் சாந்திக்குமாரின் சிந்தனையை அறியும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. ஆயினும் நாம் அறிந்த சாந்திக்குமார் இது போன்ற விடயத்தில் ஈடுபாட்டைக் கொண்டிருப்பார் என நம்பலாம்.  அவர் தனது கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்யாமை வருந்தத்தக்கது. ஆனால் நான்கு தசாப்தங்களுக்கு முன் அவர் முன்வைத்த விமர்சனப் பார்வையும் அணுகுமுறையும் மலையகத் தமிழ் சமூகத்தின் உருவாக்கம் மற்றும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனையின் சிக்கல்மிகுந்த உள்ளடக்கங்கள் ஆகியவற்றின் சமீபகாலப் போக்குகளின் அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் என நம்புகிறேன். 

26.01.2021  


[1] இந்தக் கட்டுரைகள் பின்வருமாறு

 எல். சாந்திக்குமார், 1979, மூன்றாம் உலக நாடுகளில் இடதுசாரி இயக்கங்களும் இலங்கையும், மானுடம், யாழ் பல்கலைக்கழக மானுடவியல் துறை வெளியீடு

எல். சாந்திக்குமார், 1980, மலையகம் சில குறிப்புகள், தீர்த்தக்கரை 06-08 1980

————————-,1980, தேசியங்களும் தேசிய இனங்களும் குறித்த மாக்சிய கண்ணோட்டம், தீர்த்தக்கரை 10-12 1980

————————, 1981, மலையகத்தின் வரலாறும் சமூக உருவாக்கமும், தீர்த்தக்கரை 02-05 1981.

————————, 1982, மலையகத்தின் வரலாறும் சமூக உருவாக்கமும் II, தீர்த்தக்கரை 01-03 1982

————————, 1982, இனவெறியாட்டம்…மலையக மக்கள்…எதிர்காலம், தீர்த்தக்கரை 01-03 1982

[2] உதாரணமாக 1979ஆம் ஆண்டு மார்கழி மாதம் கொழும்பில் சமூகவிஞ்ஞானிகள் சங்கம் இலங்கையின் இனங்கள் பற்றிய ஒரு முக்கியமான ஆய்வுக் கருத்தரங்கத்தை நடத்தியது.  இந்த விடயம் தொடர்பாக சிங்கள மற்றும் தமிழ் இனங்களைச் சார்ந்த சமூக, அரசியல், வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றுகூடித் தத்தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துக் கருத்துக்களைப் பரிமாறிய முதலாவது பகிரங்கக் கருத்தரங்கம் இதுவே. ஆய்வாளர்கள் இலங்கையின் இனங்களின் விசேடமாகச் சிங்கள மற்றும் தமிழ் இனங்களின் வரலாறுகள் பற்றிய பல கட்டுக்கதைகளை ஆதாரபூர்வமாகக் கட்டுடைத்து அவற்றின் பொய்மையை அம்பலப்படுத்தினர். சமர்ப்பிக்கப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் 1984ஆம் ஆண்டு Ethnicity and Social Change in Sri Lanka எனும் தலைப்பில் ஒரு தொகுப்பாகச் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் வெளியிடப்பட்டது.

 [3] பெருந்தோட்டத்துறைத் தொழிலாளார் பிரச்சனைகள், தொழிற்சங்க வரலாறு ஆகியவை பற்றிய இது தொடர்பான மற்றும் பல விபரங்களை குமாரி ஜயவர்த்தனவின் ´The Rise of the Labour Movement in Ceylon´ (1972) எனும் தலைப்பிலான நூலில் அறியலாம்.

[4] ஏ. எஸ். சந்திரபோஸ், இரா. ரமேஷ் (பதிப்பாசிரியர்கள் ), 2018, இலங்கையில் தேயிலைப் பெருந்தோட்டச் சமூகம் 150 வருடங்கள்,எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட்.

கொவிட்-19 பேரிடரின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள்: சில அவதானிப்புக்களும் பாடங்களும்

சமுத்திரன்

Covid-19 பெருந்தொற்று இன்றைய உலக முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை அம்பலப்படுத்தியுள்ளது.  விசேடமாக இந்தப் பெருந்தொற்றுக் கடந்த 40 வருடகால நவதாராள உலகமயமாக்கலின் போக்குகளையும் தாக்கங்களையும் மேலும் கண்கூடாக்கி அவைபற்றி நம்மை ஆழச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. கொவிட்-19இன் உலகமயமாக்கலுடன் உலக அதிகாரப் போட்டியின் முரண்பாடுகளும் அரங்கிற்கு வந்தன. குறிப்பாக, உலகரீதியில் பலவீனமடைந்துவரும் அமெரிக்க வல்லரசும் எழுந்துவரும் சீன வல்லரசும் இந்தப் பெருந்தொற்று நோயின் ஆரம்பம், பரவல், சர்வதேசப் பொறுப்புத் தொடர்பாக முரண்பட்டன. துரதிஷ்டவசமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த வல்லரசு அரசியலில் மாட்டிக் கொண்டது. மிக முக்கியமாக இந்த நெருக்கடி பூதாகரமாக வளர்ந்துவிட்ட சமூகப்-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் தன்மைகளையும் சுற்றுச்சூழலின் சீரழிப்பினையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அதே போன்று பல நாடுகளும், உலக அமைப்புக்களும் இத்தகைய ஒரு அவலத்தின் பன்முகங்கொண்ட சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குப் போதியளவு தயார்நிலையை அல்லது ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் புட்டுக்காட்டியுள்ளது. 

இந்தச் சவாலைக் கையாள்வதில் போட்டி, தேசியவாதம், நிறவாதம், இனவாதம், மதவாதம் மற்றும் அதிகாரவாத நிர்வாகமுறைமை போன்றன தலைதூக்கியுள்ள இந்தச் சூழலில் மக்கள் மட்டங்களில் தேவைகளின் அடிப்படையிலான பகிர்வை, கூட்டுறவை, மற்றும் சுற்றுச்சூழலை முன்னிறுத்தும் விழுமியங்கள் மதிக்கப்படும் அறிகுறிகள் தென்படுவது ஒரு நல்ல சகுனம். ஆயினும் இலாபத்திற்கூடாக மூலதனக் குவியலின் முடிவுறா வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பின் விதிகள் நிலைபெறும் மனித மேம்பாட்டின் முன்னுரிமைகளுடன் முரண்படுகின்றன. உலகளவிலான சவாலாகிவிட்ட இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ள தேசிய எல்லைகளைத் தற்காலிகமாக மூடுவது அல்லது கட்டுப்படுத்துவது அவசியமான ஒரு வழிமுறை. ஆனால் இந்தச் சிக்கலைக் கையாள்வதில் நாடுகளுக்கிடையே மனிதத்துவ ஒருமைப்பாட்டிற்கும் கூட்டுறவுக்கும் பதிலாக  போட்டியும், முரண்பாடுகளும் வலுப்பெற்றால் இந்தத் தற்காலிக நடைமுறையை முடிவுக்கு கொண்டுவருவது புதிய சவாலாக உருவெடுக்கும். ஒரு சில நாடுகள் மாத்திரம் வெற்றிபெறுவது போதாது. பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளும் வெற்றி பெறுவது அவசியம் என்பதை அழுத்திக் கூறவேண்டுமா?  

ஏன் நாடுகளும் உலக நிறுவனங்களும் தயார்நிலையில் இருக்கவில்லை?

‘கொரோனாவைரஸ் நமக்கு நன்கு பழக்கமான ஒரு பூதமாக முன்கதவிற்கூடாக நுழைகிறது.’ (Mike Davis, March 14, 2020)

 தற்போதைய சூழலில் கொவிட்-19 எனும் வியாதி 2019ஆம் வருட இறுதியில் வுஹானில் வெடித்து உலகரீதியில் பரவும் எனக் குறிப்பாக எவராலும் முன்கணிப்புக் கூறியிருக்கமுடியாது எனும் கருத்தில் நியாயமுண்டு. ஆனால் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒரு பெருந்தொற்று எந்த நேரத்திலும் இடம்பெறலாம் என்பதுபற்றியும் அதை எதிர்கொள்ளக்கூடிய தயார்நிலையில் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் இருக்கவேண்டிய தேவை பற்றியும் போதியளவு நேரடி அநுபவம் சார்ந்த மற்றும் நம்பகமான நிபுணத்துவ முன்னெச்சரிக்கைகள் இருந்தன என்பதை மறுக்கமுடியாது (Rodrik, 2020; Davis, 2005, 2020; Wallace, 2016; Wallace et al, 2020). இது பற்றி ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

 • அநுபவம் சார்ந்த முன்னெச்சரிக்கைகளாகப் பல இருப்பினும் பின்வருவனவற்றைச் சுலபமாக இனம் காணலாம்: SARS (2003), MERS (2012), Ebola (2014-2016). இவை சந்தேகமின்றி போதியளவு முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளன. இவற்றின் அநுபவங்களின் அடிப்படையில் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும். 
 • Mike Davisஇன் 2005ஆம் ஆண்டு நூல்  ´The Monster at Our Door´ – The global threat of Avian Flu. பிரபலம் வாய்ந்த இந்த நூல் 2003இல் சீனாவில் எழுந்த பறவைக் காய்ச்சல் பற்றியும் வைரசினால் ஏற்படும் அதுபோன்ற நோய் எதிர்காலத்தில் மீண்டும் தோன்றி உலகரீதியிற்ப் பெருந்தொற்றாகப் பரவக்கூடிய ஆபத்துப் பற்றியும் சொல்கிறது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் இத்தகைய ஆபத்தான வைரஸ் தோன்றுவதற்கான காரணப் பின்னணியாக நவீன ஆலைத்தொழில்மயப்படுத்தப்பட்ட விவசாய விசேடமாக மிருக உற்பத்தி, மற்றும் துரித உணவுச் சங்கிலிகள்  விளங்குவதைக் காட்டுவதுடன் நகரமயமாக்கல், சேரிகளின் வளர்ச்சி ஆகியன வியாதி பெருந்தொற்றாகப் பரவ உதவுவதையும் விளக்குகிறார் நூலாசிரியர். இது போன்ற பெருந்தொற்று மனித ஒருமைப்பாட்டிற்கு ஒரு சோதனை என்றும் அப்படியான காலத்தில் நாம் நம்மை மாத்திரமன்றி மற்றவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பினைக் கொண்டுள்ளோம் எனவும் சுட்டிக் காட்டுகிறார்.

தற்போதைய கொவிட்-19 பற்றி அவர் மார்ச் 14ஆம் திகதி எழுதிய கட்டுரையில் போதியளவு முன்னெச்சரிக்கைகள் இருந்தும் உலகின் தயாரற்ற நிலையைக் காரசாரமாக விமர்சிக்கிறார். இதுவரையில் ஆபத்தான நோய்களின் திடீர் வெடிப்பை எதிர்கொள்ளத் தயாரற்ற மோசமான நிலைபற்றிப் பல சினிமாப் படங்கள், கணக்கிலடங்கா நாவல்கள், நூற்றுக்கணக்கான நூல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் தெளிவாகக் கூறியுள்ள பின்னணியில் ‘கொரோனாவைரஸ் நமக்கு நன்கு பழக்கமான ஒரு பூதமாக முன்கதவிற்கூடாக நுழைகிறது’ என நியாயமான ஆத்திரத்தொனியில் எழுதுகிறார் (Davis, 2020).

 • 2016ஆம் ஆண்டு உலக வங்கி வறிய நாடுகளுக்கென ஒரு பெருந்தொற்று அவசரகால நிதியுதவித் திட்டத்தை (Pandemic Emergency Financing Facility) அறிவித்தது. எல்லைகளைக் கடந்து பரவும் சுகாதார நெருக்கடிகளைக் கையாள உதவும் ஒரு திட்டமாக இது அறிவிக்கப்பட்டது பெருந்தொற்று ஆபத்தின் சாத்தியப்பாட்டினை உலக வங்கியும் அங்கீகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
 • அமெரிக்காவின் CIA நிறுவனம் 2009ஆம் வெளியிட்ட ´State of the World 2025´ அறிக்கையில் பெருந்தொற்று பற்றி எதிர்வு கூறியுள்ளதை நான் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரை தெரியப்படுத்துகிறது. CIAஇன் அறிக்கையின்படி ஒரு பெருந்தொற்று நோய் வெடிக்குமாயின், அது ஜனத்தொகை செறிவுமிக்க, மனிதரும் கால்நடைகளும் நெருக்கமாயிருக்கும் சந்தைகளைக் கொண்ட சீனா அல்லது தென்கிழக்காசியாவின் ஒரு பிரதேசத்திலே இடம்பெறும் என அந்தக் கட்டுரை தரும் மேற்கோள் சொல்கிறது (Duclos, 2020).[1] CIA அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக இயங்கும் ஒரு அமைப்பு. அந்த நோக்கிலேயே இந்த முன்கணிப்பை அது வெளியிட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது. ஆகவே இந்தத் தகவல் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருந்தபோதும் அந்த நாடு எதுவிதத்திலும் தயார் நிலையில் இருக்கவில்லை என்பது தற்போது கண்கூடு.

இவைபோன்ற முன்னெச்சரிக்கைகள் அதிகரித்துவரும்போது அவற்றை மதிக்கும் ஒரு அரசாங்கம் தனது நாட்டின் தேசிய சுகாதார சேவை உட்கட்டுமானத்தை உரிய வழிகளில் கட்டியமைத்துப் பலப்படுத்தியிருக்க வேண்டும். அதேபோன்று சர்வதேச மட்டத்தில் இதற்கு உதவும் வகையில் ஒரு சுகாதார சேவை உட்கட்டுமானமும் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? கொவிட்-19 இன் உலகரீதியான தாக்கமும் அதைப் பல நாடுகள் கையாண்ட விதமும், சர்வதேச அமைப்புக்களின் இயலாமையும் மிகவும் துன்பகரமாகவே இருந்தன. இந்த நிலைமை கடந்த 40 வருடங்களாகத் தொடர்ந்த நவதாராள உலகமயமாக்கலின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. சுயபோட்டிச் சந்தை, தனியுடைமையாக்கல், சுதந்திர வர்த்தகம், மூலதனத்தின் தாராளமயமாக்கல், சமூகபாதுகாப்புக்கான அரசின் செலவினத்தின் தொடர்ச்சியான வெட்டும் சுகாதார மற்றும் கல்வி சேவைகளின் தனியுடைமையாக்கல் ஆகியன நவதாராளப் பொருளாதாரக் கொள்கையின் அம்சங்களில் அடங்கும். 

பல நாடுகளில் முன்னர் இருந்த தேசிய சுகாதார சேவைகளின் உட்கட்டுமானத்தின் தொடர்ச்சியான பலவீனமாக்கலும் செயலாற்றல் இழப்பும் இந்த கொள்கையின் பல்வேறுபட்ட பாதகமான விளைவுகளில் ஒன்றாகும். கொவிட்-19 இந்தக் குறைபாட்டினைப் பல நாடுகளில் அதிர்ச்சிதரும் வகையில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்காது காலம் தாழ்த்தியமைக்கும் அரசியல் தலைமையின் அலட்சியப் போக்கிற்கும் இந்தக்குறைபாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.  பல செல்வந்த நாடுகள் கொவிட்-19 இன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தக் காலம் தாழ்த்தியபின் அவசரகால நடவடிக்கையாகக் கணிசமான தொகை பணத்தை ஒதுக்கிச் செயற்பட்டப்போதும் அந்த முயற்சியால் தேசிய சுகாதார சேவை உட்கட்டுமானத்தின் நீண்டகாலப் பலவீனமாக்கலின் அல்லது போதாமையின் விளைவுகளை வெற்றிகரமாகத் தடுக்கமுடியவில்லை என்பதை அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளின் நிலைமைகள் காட்டுகின்றன. நெருக்கடி கட்டுக்கடங்காது போகும் அறிகுறிகளைக் கண்ட போது ஸ்பெயின் நாட்டின் சமூக ஜனநாயக அரசாங்கம் தனியார் மருத்துவமனைகளைத் தேசியமயமாக்கியது வரவேற்கப்படவேண்டியதே. அதற்கு முன்னைய அரசாங்கம் பின்பற்றிய நவதாராள அரச செலவினச் சிக்கனக் கொள்கையின் விளைவுகள் ஸ்பெயினின் தேசிய சுகாதார உட்கட்டுமானத்தை பலவீனமாக்கியிருந்தது.   

கொவிட்-19 ஐரோப்பிய ஒன்றியத்தின் முரண்பாடுகளை, ஏற்றத்தாழ்வுகளை மற்றும் அதன் மையப்படுத்தப்பட்ட தலைமையினதும் நிர்வாக இயந்திரத்தினதும் ஜனநாயகமற்ற தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது. நவதாராள உலகமயமாக்கல் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பைப் பலப்படுத்தவில்லை, பெருந்தொற்று எனும் பொது எதிரி அங்கத்துவ நாடுகளுக்கிடையே ஒரு ஒருமைப்பாட்டு அலையை ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கனவே இருந்த அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகள் மேலும் கூர்மையடைந்து பிரிவினையும் தேசியவாதங்களும் எழுச்சி பெறவே அது வழி சமைத்துள்ளது. இது நவதாராள  ஐரோப்பியப் பொதுச் சந்தையின் அருவச் சக்தியில் அதீத நம்பிக்கை வைத்திருந்த ஒன்றியவாதிகளுக்கு ஒரு கசப்பான செய்திதான். கொரோனாவின் வருகையுடன் அங்கத்துவ நாடுகளின் தேசியவாதங்களும் தேசிய எல்லைக்கட்டுப்பாடுகளும் புத்துயிர்பெற்றன. ஒன்றியத்துக்குள்ளே ஜேர்மனியின் தலைமையிலான குழுவின் மேலாதிக்கத்தால் ஓரங்கட்டப்பட்ட தெற்கு ஐரோப்பிய நாடுகள் போர்க்கொடி தூக்குவதில் ஆச்சர்யமில்லை. 27 அங்கத்துவ நாடுகளையும் 440 மில்லியன் மக்களையும் உள்ளடக்கும் ஒன்றியத்திடம் ஒரு செயற்பாட்டுத்திறன்மிக்க ஒருங்கிணைந்த சுகாதார உட்கட்டுமானம் இருக்கவில்லை எனும் செய்தி பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம்.  இதுபோன்ற அவசரகால நெருக்கடியின்போது எல்லைகளை மூடுவது மற்றும் வளங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி நடைமுறைக்குகந்த கொள்கையும் புரிந்துணர்வும் ஒன்றியமட்டத்தில் இருக்கவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

இந்தியா ஒரு ஒழுங்கான சுகாதார சேவை உட்கட்டுமானத்தைக் கட்டியமைக்கத் தவறியுள்ளதென அமர்த்தியா சென் அவர்கள் கோவிட்-19 தொடர்பாக சமீபத்தில் NDTV இல் இடம்பெற்ற ஒரு உரையாடலில் கூறியுள்ளார். அத்துடன் இந்திய அரசாங்கத்தின் முழு முடக்க அணுகுமுறையால் பெருந்தொகையான மக்கள் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயத்தையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.  

முழுநாடு தழுவிய முடக்கத்தை இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்திய விதத்தில் மனிதாபிமானத்தைக் காணமுடியவில்லை.  உட்கட்டுமானம் மற்றும் திட்டமிட்ட அணுகுமுறையைப் பொறுத்தவரை இந்தியாவில் கேரள மாநிலம் விதிவிலக்கானதெனச் செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இலங்கை அரசாங்கம்  கொவிட்-19 இன் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இதுவரை கணிசமான வெற்றி பெற்றுள்ளபோதும் அதன் இராணுவமயமாக்கலும் பேரினவாத அரசியல்மயமாக்கலும் வரவேற்கப்படவேண்டியதல்ல.  இந்தக் கட்டுரையை எழுதும்போது வைரசின் பரவல்வீதம் முன்பைவிட அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையின் நிலைமை எப்படி மாறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பொது மக்களின் வாழ்வை  முடக்கியுள்ள அவசரகாலத்தை அகற்றுமாறு பலர் கோரியுள்ளார்கள். 

நவதாராள உலகமயமாக்கலின் மேலாட்சியின்கீழும் தேசிய சுகாதார சேவை உட்கட்டுமானத்தைத் தொடர்ந்தும் ஓரளவு திருப்திகரமாக வைத்திருந்த நாடுகள் கொவிட்-19 தாக்கத்தை மற்ற நாடுகளையும்விட ஒப்பீட்டுரீதியில் சில வழிகளில் நன்றாகக் கையாண்டுள்ளன. இந்த நாடுகளின் அரசாங்கங்கள் காலம் தாழ்த்தாது முடிந்தவரை துரிதமாகச் செயற்படவல்ல நிறுவனரீதியான வசதிகளைக் கொண்டிருந்தன. தொற்றுத் தவிர்ப்பு நடைமுறைகள், பரிசோதனையின் தரமும் வீதமும், மருத்துவ வசதிகள், குணமடைந்தோர் வீதம், மரணவீதம், etc.  போன்றவையின் அடிப்படையில் இந்த நாடுகளின் ஒரு முழுமையான தரவரிசைப்படுத்தப்பட்ட பட்டியலைத் தயாரிப்பது தற்போது சாத்தியமில்லை.  அப்படி ஒரு சர்வதேச ஒப்பீட்டுரீதியான மதிப்பீட்டைச் செய்யக்கூடிய கட்டத்தை இந்தப் பெருந்தொற்று இன்னும் அடையவில்லை. இன்னும் அது முடிவுக்கு வரவில்லை. அப்படி வந்தாலும் இரண்டாவது அலை, மூன்றாவாது அலை என அது திரும்பும் சாத்தியப்பாடுகள் உண்டெனச் சில நிபுணர்கள் சொல்கிறார்கள். தற்காலிகமாகச் சில உதாரணங்களை மட்டுமே தற்போதைக்குக் குறிப்பிடலாம். இவற்றைப் பின்னர் மீள்பரிசீலனை செய்ய வேண்டிவரலாம். தென்கொரியா, தைவான், கியூபா, சீனா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஃபின்லாந்து, நோர்வே ஆகியன அத்தகைய ஒரு தற்காலிக பட்டியலில் அடங்கும் என எதிர்பார்க்கலாம்.  சீனா பற்றி உலக அரங்கில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீனாவில் முதலில் கொவிட்-19 பற்றி வெளிப்படையாக அறிவித்த மருத்துவர் லீ தண்டனைக்குள்ளானதும் பின்னர் அவர் அதே வியாதிக்குப் பலியானதும் உலகறிந்ததே. சீனாவின் அதிகாரவாத அணுகுமுறையும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த விமர்சனமும் நியாயமானதே. ஆனால் சீனா பாரிய தொற்றுநோயைப் பிரதேசரீதியில் கட்டுப்படுத்தி நாட்டின் பெரும்பகுதிக்கு அது பரவாமல் தடுப்பதில் வெற்றியடைந்துள்ளது என்பதை மறுப்பதற்கு ஆதாரமில்லை. சீனா முக்கிய தகவல்களை உரிய நேரத்தில் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவில்லை போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. இவைபற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு சுதந்திரமான விசாரணை தேவைப்படலாம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் ஒரு சில நாடுகள் மட்டும் உலகச் சிக்கலாகிவிட்ட பெருந்தொற்றான கொவிட்-19 ஐ தமது தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள எல்லைகளுக்குள் வெற்றி கொள்வது போதாது. 

ஐரோப்பாவில் சில நாடுகள் கொவிட்-19 பெருந்தொற்றுக்கெதிராகக் கூட்ட நோயெதிர்ப்பாற்றல் (herd immunity) அணுகுமுறையை வெளிப்படையாகப் பின்பற்றுகின்றன, உதாரணங்களாக சுவீடன், நெதெர்லாந்து. பிரித்தானியாவும் ஆரம்பத்தில் இந்தக் கொள்கையைப் பின்பற்ற முயன்று பின்னர் மற்ற நாடுகள் போல் தொற்றைக் கட்டுப்படுத்தும் வழிக்கு வந்தது.  கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பூசி இல்லாத இன்றைய நிலையில் கூட்ட நோயெதிர்ப்பாற்றல் இலக்கை அடைவதற்கான அடுத்த வழி வைரசின் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைத் தவிர்த்து அதன் தொற்றினால் சமூகத்தின் பெரும்பான்மையோர் நோயெதிர்ப்பாற்றலைப் பெற வைப்பதாகும். இந்த அணுகுமுறையால் வயோதிபர்கள் மற்றும் சுகாதாரரீதியில் பலவீனமானவர்கள் பெரும் ஆபத்துக்குள்ளாகிறார்கள்.  கொவிட்-19 பொதுவான வைரஸ்  (flu)காய்ச்சலையும்விட உயிருக்குப் பல மடங்கு அதிகமான ஆபத்தானதென்பதால் இந்தக் குழுக்களின் மரணவீதம் மிகவும் அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுவீடனும் நெதெர்லாந்தும் தொடர்ச்சியாக நூறுவீதம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்தன எனச் சொல்ல முடியாத போதும் இந்த நாடுகளின் இதுவரையிலான மரண வீதங்கள் மேற்கூறிய முடிவுக்கு ஆதாரமாக இருக்கின்றன. ஆயினும் ஏற்கனவே எடுத்துக் கூறப்பட்ட பல காரணங்களால் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பலவீனமாயிருந்த நாடுகளிலும் மரணவீதம் மிக அதிகமாகவே உள்ளது. உதாரணமாக 2020 மே மாதம் இரண்டாம் திகதிவரை ஸ்பெயினில் ஜனத்தொகையின் 100,000 நபர்களில் 53.7 நபர்கள் கொவிட்-19ஆல் மரணித்துள்ளார்கள். இத்துடன் ஒப்பிடும்போது 26.4 ஆக இருக்கும் சுவீடனின் மரணவீதம் ஏறக்குறைய அரைவாசியாகவே உள்ளது. ஆனால் தொற்றுக் கட்டுப்பாட்டுக் கொள்கையை ஸ்பெயினைவிட நன்கு நடைமுறைப்படுத்திவரும் நோர்வேயில் கொரோனா மரணவீதம் 3.9 ஆகவும் நோர்வேயையும்விடத் திறமையாக செயற்பட்ட தென் கொரியாவில் 0.5 ஆகவும் இருக்கின்றன (2020,  மே மாதம் இரண்டாம் திகதி நோர்வேயின் VG பத்திரிகையில் வெளிவந்த புள்ளி விபரங்களின்படி). சுவீடனுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட அதன் அயல்நாடுகள் (நோர்வே, டென்மார்க், ஃபின்லாந்து) முடக்கல் கொள்கையை நன்கு நடைமுறைப்படுத்தியதால் சுவீடனும் பயனடைந்திருக்கலாம்.

 சமூக, அரசியல், தார்மீக நோக்கில் கொவிட்-19ஐ எதிர்க்க கூட்ட நோயெதிர்ப்பாற்றல் ஏற்புடைய கொள்கையா என்பது பற்றி விவாதங்கள் தொடர்கின்றன. இது ஒரு மல்தூசிய மற்றும் சமூக டாவினிச  (Malthusian and social Darwinist) அணுகுமுறை எனும் விமர்சனம் பலமானது.  உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகள் இந்த அணுகுமுறையைக் கொள்கையளவில் நிராகரித்துள்ளன. இன்றைய நிலைமைகளில் கிடைக்கும் தகவல்களின்படி வைரசின் பரவலைக் கட்டுப்படுத்தும் கொள்கையைத் திறமையாகச் செயற்படுத்திய நாடுகளில் தொற்று மற்றும் மரணவீதங்கள் மிகக் குறைவு.  ஆனால் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட ஒரு தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் சுலபமாகக் கிடைக்கமுன் பொருளாதார மீளுயிர்ப்புக்கு முன்னுரிமை கொடுத்து முடக்கம், சமூக இடைவெளி பேணல், தேசிய எல்லைக் கட்டுப்பாடுகள் போன்றன தளர்த்தப்பட்டபின் ஒரு புதிய பரவல் அலை எழுந்தால் என்ன செய்வது எனும் கேள்வியை தட்டிக்கழிக்க முடியாது. அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும் எனும் கேள்வி எழுகிறது. 

கொவிட்-19 இன் அரசியல் பொருளாதாரமும் சமூகத் தாக்கங்களும்

இந்தப் பெருந்தொற்றின் விளைவான உலகப் பொருளாதார நெருக்கடியைப் 2007-2008 இல் வந்த நிதி நெருக்கடியுடன் ஒப்பிடுவது ஒரு பொதுப் போக்காகியுள்ளது. அதேவேளை இன்றைய நெருக்கடி முன்னையதை விடவும் பலமடங்கு பாரியது மட்டுமல்லாது இது வெளிக்கொணர்ந்த அதிர்ச்சிகள் பன்முகமானவை என்பதும் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் பொதுவான கருத்தாகும். இந்தப் பொருளாதார நெருக்கடி முன்னையதைவிடவும் வேறுபட்டது என்பதை

பொதுமக்கள் அநுபவபூர்வமாகப் புரிந்து கொள்கிறார்கள்.  2007-2008 நெருக்கடி அமெரிக்காவில் நிதித்துறையில் ஆரம்பித்து வேறு பல, விசேடமாக ஐரோப்பிய, நாடுகளுக்குப் பரவியது. தமது வீடுகளை வங்கிகளிடம் அடமானம் வைத்துக் கடன் பெற்ற பெருந்தொகையினரால் கடனைத் திருப்பிக் கட்டமுடியாத நிலையினால் ஆரம்பித்த அந்த நெருக்கடியால் பெரும் நிதி நிறுவனங்கள் கணநேரத்தில் வீழ்ந்தன. இது நிதி மூலதனம் உருவாக்கிய பிரச்சனை (Harvey, 2010). 

கொவிட்-19 சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்துப் பெருந்தொற்றாக உலகமயமாகியது. இருநூறுக்கு மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கங்கள் இதைக் கையாள எடுத்த வழிவகைகளின் தவிர்க்கமுடியாத  உடனடியான பொருளாதார விளைவு உற்பத்தித் துறைகளின் மற்றும் பல சேவைகளின் வீழ்ச்சியாகும். பல்வேறு ஆலைத்தொழில்கள், விவசாயம், சர்வதேசப் போக்குவரவு, உல்லாசத்துறை, உணவகங்கள், பொழுதுபோக்குச் சேவைகள், பாவனைப் பொருட்களின் விற்பனை நிலையங்கள் எனப் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டன. ´நிஜப் பொருளாதாரம்´ (´real economy´) எனப்படும் இந்தத் துறைகளிலேயே நெருக்கடி ஆரம்பித்து நிதி மூலதனத் துறைக்குப் பரவியது. ஆகவே இந்த நெருக்கடி கேள்வி, நிரம்பல் இரண்டினதும் வீழ்ச்சியுடன் ஆரம்பித்து நிதித்துறைக்குப் பரவி அங்கு பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி தீவிரமடைந்தது. தொழில் இழப்பு, வருமானமின்மை தனிநபர்களையும் குடும்பங்களையும் படுமோசமாகப் பாதிக்கின்றன.  பெற்ற கடனைத் திருப்பிக் கட்டமுடியாத நிலையில் தனிநபர்கள் மட்டுமன்றி சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்களும் திண்டாடும் நிலையில் பல நாடுகளும் – குறிப்பாக இலங்கை போன்ற வளர்முக நாடுகளும் – கடன் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. இதனால் வங்கிகளும் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வளர்முக நாடுகளிலிருந்து வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில் அவர்களில் தங்கியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரங்கள்பாதிக்கப்பட்டதுடன்  தாய் நாட்டின் அந்நிய செலாவணி வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு நாட்டின் காசாதாரப் பொருளாதாரத்தின் அளவைப் பொறுத்து அதன் முக்கியத்துவம் வேறுபடலாம். உதாரணமாக இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தில் வெளிநாட்டுக் காசாதாரம் முக்கிய பங்கினை வகிக்கிறது.

சீனாவின் முக்கிய நகரமொன்றில் ஆரம்பித்த நோயின் உலகமயமாக்கலுடன் பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும் உலகமயமானது உலகப் பொருளாதாரத்தில் சீனா வகிக்கும் பாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. பெருமளவிலான நிரம்பல் சங்கிலிகள் (supply chains) சீனாவிலிருப்பதையும் இந்த நெருக்கடி உலகுக்கு நினைவூட்டுகிறது. வுஹான் விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் பல உயர் கல்வி நிறுவனங்களையும் கொண்ட நகரமாதலால் அதன் சர்வதேசத் தொடர்புகளும் பன்முகரீதியானது. 

ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடி கொவிட்-19 வந்ததால் மட்டும் வெடித்த ஒன்றல்ல. உண்மை என்னவெனில் உலகப் பொருளாதாரம் ஏற்கனவே மந்தநிலையிலேயே இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் தொடரும் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தினால் ஊகத்திற்கூடாகத் துரித இலாபம் பெறும் போக்கு, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் வளர்ச்சி, ஒரு புறம் நுகர்வுவாதக் கலாச்சாரத்தின் வளர்ச்சி மறுபுறம் நீண்டகாலமாகத் தொழிலாளர்களின் வளராத அல்லது வீழ்ச்சியடையும் மெய் ஊதியம், உழைப்பின் முறைசாரா மயமாக்கலின் (informalization), தற்காலிகமயமாக்கலின் உலகரீதியான பரவல், கடன்பளுவால் பாதிக்கப்படும் குடும்பங்களின் தொகை அதிகரிப்பு, நில அபகரிப்பு மற்றும் இயற்கையின் பண்டமயமாக்கலின் தீவிரமயமாக்கலும் சுற்றுச் சூழலின் சீரழிவும்  –  இந்தச் சூழ்நிலையிலேயே கொவிட்-19 பெருந்தொற்றாக மாறுகிறது. ஏற்கனவே மந்தநிலையிலிருந்த உலகப் பொருளாதாரம் ஒரு பாரிய சிக்கலினால் விழுங்கப்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் பிரச்சனைகளுக்குள்ளான போதும் பல்லாண்டுகளாக உலகரீதியில்  உயர் வளர்ச்சி வீதங்களைக் கண்ட சீனாவின் பொருளாதாரம் இந்தச் சிக்கலால் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றுத் தொடர்பான முடக்கல் கட்டுப்பாடுகள் தொடரும்வரை உலகப் பொருளாதாரம் பின்னடைவிலிருந்து மீளெழுவது சாத்தியமில்லை. அதேவேளை கொரோனா நெருக்கடிக்குப் பின்னான பொருளாதாரக் கொள்கைகள் என்னவாயிருக்கும் எனும் கேள்வியும் எழுகிறது. 

சமூகப்-பொருளாதார தாக்கங்கள்மேலும் சில குறிப்புகள்

கொரொனாவைரஸ் எதுவிதப் பாகுபாடுமின்றி யாரையும் தாக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் சிறிதளவு உண்மை உண்டு. ஆனால் பெரிய உண்மை என்னவெனில் இந்தப் பெருந்தொற்றினைக் கையாள அரசாங்கங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளின் சமூகப்-பொருளாதார விளைவுகள் அமைப்புரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப வேறுபடுகின்றன. கொரோனா தொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து மேற்கு நாடுகளின் சில செல்வந்தர்கள் தமது சொந்த ஜெட்விமானங்களில் மலைப்பிரதேச விடுமுறை இல்லங்களை நோக்கிப் பறந்தார்கள் எனும் செய்தியைப் படித்தேன். இவர்கள் உலகின் செல்வந்தர் வர்க்கத்திற்குள்ளேயும் ஒரு சிறுபான்மையினரே. இதற்கு மறு துருவத்தில்  வேலையிழந்து, வருமானமிழந்து, சேமிப்புமற்ற நிலையில் பெருந்தொகையானோர் பல்வேறு நாடுகளில் அல்லல் படுகிறார்கள். இவர்களைப் பட்டினியிலும் பஞ்சத்திலுமிருந்தும் அதனால் வரும் விளைவுகளிலுமிருந்தும் காப்பாற்றுவது ஒரு உலகமயச் சவாலாகிவிட்டது.  

ஐ. நாவின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு  (International Labour Organization – ILO)இன் இயக்குனர் நாயகத்தின் சொற்களில் கொவிட்-19 இன் விளைவாக, ‘அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடையும் நாடுகள் இரண்டிலுமே தொழிலாளர்களும், தொழிலாற்றும் நிறுவனங்களும் பேரவலத்தை எதிர்நோக்குகிறார்கள்…கடந்த 75 வருடங்களுக்கும் மேலாகச் சர்வதேச ஒற்றுமைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சோதனை இதுதான். ஒரு நாடு தோல்வியடைந்தால் நாம் எல்லோருமே தோல்வியடைவோம். நமது உலக சமூகத்தின் சகல பகுதிகளுக்கும், குறிப்பாக இடர்பாட்டுக்குள்ளாகும் நிலையில் அல்லது தமக்குத்தாமே உதவமுடியாத நிலையிலுள்ளோருக்கு, உதவும் தீர்வுகளை நாம் காணவேண்டும்’ (Rios, April 8, 2020). ILOவெளியிட்டுள்ள அறிக்கை தரும் புள்ளி விபரங்களின்படி(ILO, April 7, 2020): 

 • உலகின் மொத்தத் தொழிற்படை 3.3 பில்லியன் (billion)
 • இதில் 81 வீதத்தினர் – அதாவது ஏறக்குறைய 2.67 billion தொழிலாளர்கள் – தொழிற்றலங்கள் முற்றாக அல்லது பகுதியாக மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர்
 • உலகம்பூராவும் 2 billion தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அபிவிருத்தியடையும் நாடுகளிலேயே உள்ளார்கள்.

பல நாடுகள் பாதிக்கப்பட்ட மக்களில் சில பகுதியினருக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் தற்காலிக நிவாரணம் வழங்கப் பணம் ஒதுக்கியுள்ளதுடன் தொழில் நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட காலம்வரை வரி விலக்கும் வழங்கியுள்ளன. இதற்காகவும் வேறு அரசாங்க செலவுகளுக்காகவும் மத்திய வங்கிகள் மேலதிகமாக பணம் அச்சிட்டு உதவியுள்ளன. இது ஒரு குறுகிய கால நடவடிக்கையே. நிவாரணப் பொதிகளின் உள்ளடக்கங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.  செல்வந்த நாடுகள் தமது தேசிய வருமானத்தின் 10-15 வீதத்தை ஒதுக்கியுள்ளன. நிவாரணப் பணத்தின் பங்கீட்டைப் பொறுத்தவரை இறுதியில் அது செல்வந்தர்களுக்கே சாதகமாயிருக்கிறது என்பதே யதார்த்தம் (Stevenson, 2020). சில வறிய நாடுகள்  செல்வந்த நாடுகளிடமிருந்தும் உதவிகள் பெற்றுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களில் இதுவரை உதவி கிடையாதோர் மற்றும் உதவியின் போதாமையால் பாதிக்கப்பட்டோர் பலர்.  இந்தியாவின் நிலைமை பற்றி அந்த நாட்டின் மூத்த அபிவிருத்திப் பொருளியலாளரும், முன்னை நாள் இந்திய திட்டமிடல் ஆணைக்குழு அங்கத்தவரும், திருவனந்தபுரம் அபிவிருத்திக் கற்கைகள் மையத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியருமான K. P. கண்ணன் சமீபத்தில் (April 13) எழுதிய கட்டுரையின் சில பகுதிகளைச் சுருக்கிக் கூறுவது பொருத்தமாயிருக்கும். 1.34 பில்லியன் ஜனத்தொகையின் மூன்றிலிரண்டு பகுதியினர் அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கும் இந்தியாவில் கொவிட்-19 நெருக்கடி இந்தப் பெரும் மக்களைப் பொறுத்தவரை சுலபமாக ஒரு பட்டினி நெருக்கடியாக மாறக்கூடியது. தொழிற்படையின் 90 வீதத்தினர் வேலையின்றி அல்லது சமூகப் பாதுகாப்பின்றி இருக்கும் நிலையில் உரிய அரச உதவி வழங்கப்படாவிடில் ஆபத்தான திருப்பம் ஏற்படலாம். இதை ஏற்கனவே காணக்கூடியதாக இருக்கிறது. பெருந்தொகையான மரணங்களையும் பட்டினியின் மற்றும் கொவிட்-19 ஆல் வரும் மரண பயத்தின் விளைவாக எழக்கூடிய சமூகக் கொந்தளிப்பை எப்படித் தவிர்ப்பது என்பதே இன்று இந்தியாவை எதிர் நோக்கும் மிகப் பெரிய நெருக்கடியாகும். இத்தகைய ஒரு பாரிய நெருக்கடியைக் கையாள இந்திய அரசாங்கம் நாட்டின் தேசிய வருமானத்தின் ஒரு வீதத்திற்கும் குறைந்த அற்ப தொகையையே ஒதுக்கியுள்ளது பெரும் அரசியல் துன்பியலாகும் எனக் கூறும் கண்ணன் தேசிய வருமானத்தின் 10 வீதம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக ஒதுக்கப்படவேண்டும் என்றும் அதைச் சாத்தியமாக்கும் வழிவகையையும் சுட்டிக் காட்டுகிறார் (Kannan, 2020).

பெருந்தொற்றுத் தொடர்பான இந்திய நிலைமைகள் இலங்கை உட்பட மற்றைய அயல் நாடுகள்மீதும் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கொரோனா வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அவசரகால அதிகாரங்களுடன் இராணுவமயமாக்கப்பட்ட அணுகுமுறையின் உதவியுடன் பெற்ற வெற்றியின் மறுபக்கத்தில் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுடன், வேலையிழந்து, வருமானமிழந்து துன்புறுவோரின் விசேடமாக உதவிகள் கிட்டாத அன்றாடம் காய்ச்சிகளின் அவலங்கள்  தொடரும் நிலையில் ஒரு அரசியல் நெருக்கடி வெடித்துள்ளது. கொவிட்-19 நெருக்கடியைத் தமது அரசியல் நோக்கத்தை அடையும் திட்டத்திற்குப் பயன்படுத்தும் நோக்கில் காய்நகர்த்துகின்றனர் ஜனாதிபதியும் அவரது கட்சியினரும்.  நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஜனாதிபதிக்கு சர்வ அதிகாரத்தையும் வழங்கும் வகையில் யாப்பை மாற்றும் நோக்கில் பொதுத்தேர்தலை நடத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தேர்தல் ஆணைக்குழு ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறுமென அறிவித்துள்ளது. இன்றைய பெருந்தொற்றுச் சூழலில் தேர்தலை நடத்துவது மக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தானதென்பதுடன், ஒரு நியாயமான, சுதந்திரமான தேர்தல் இடம்பெறக்கூடிய நிலைமைகளும் இல்லை எனும் யதார்த்தத்தை எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகக் குழுக்களும் சுட்டிக்காட்டியுள்ளன. யாப்புரீதியான நெருக்கடி ஒன்று தோன்றியுள்ளது. தற்போதைய சட்டரீதியான தேவைகளுக்காகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் யாப்புரீதியான அனுமதி இருந்தும் ஜனாதிபதி அதைச் செய்யத் தயாரில்லை.  தற்போது இலங்கையில் நாடாளுமன்றம் இல்லை, நீதித்துறையும் தற்காலிகமாக முழுமையாக இயங்கமுடியாத நிலையில், ஆகவே நடப்பது ஜனாதிபதியின் ஆட்சிதான். அவர் இராணுவத்தின் மற்றும் தனக்கும் தனது கட்சிக்கும் விசுவாசமானவர்களின் உதவியுடன் நாட்டை ஆளுகிறார். இது ஆட்சிமுறைமையில் அதிகாரவாதத்தை மேலும் ஆழமாக்கவே உதவும். கொரோனா நெருக்கடி தொடங்கியபின்  இலங்கையின் மத்திய வங்கி இதுவரை 170 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணத்தை வெளியிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. அரச சேவையாளரின் ஊதியங்கள், பாதிக்கப்பட்டோருக்குப் பண உதவி போன்றவற்றிற்கு இந்தப் பணம் செலவிடப்படுகிறதெனெ அரசாங்கம் சொல்கிறது. ஆயினும் வாழ்வாதாரங்களை இழந்த பலருக்கு உதவிகள் போய்ச்சேரவில்லை எனச் செய்திகள் சொல்கின்றன. இந்தப் பணத்தின் பங்கீடு அரசியல் தலையீடுகள், கட்டுப்பாடுகள் மற்றும் ஊழல் ஆகியவற்றிலிருந்து தப்பமுடியுமா?

 உலகின் மிகத் துப்புரவான நகரங்களில் ஒன்றெனக் கொண்டாடப்படும் சிங்கப்பூரில்  கொவிட்-19ஐக் கட்டுப்படுத்துவத்தில் ஆரம்பத்தில் வெற்றி பெற்றபோதும் பின்னர் நோயின் பரவல் அங்குவாழும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்தது. கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் அரசாங்கம் பல இலட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்குள் தனிமைப் படுத்தி முடக்கியது. வசதிகள் குறைந்த மற்றும் மனிதநெருக்கடிமிக்க விடுதிகளில் அடைபட்டிருந்ததால்  அவர்களிடையே கொரோனா தொற்றுவது சுலபமாயிற்று. இது செல்வந்த நகர அரசான சிங்கப்பூர் பெருமைப்படக்கூடிய விடயமல்ல. சிங்கப்பூரை செல்வபுரியாக்குவதில் வெளிநாட்டுத் தொழிலாளரின் பங்கு உலகறிந்தது. தனி நபர்களுக்கிடையே சமூக விலகல் அல்லது சமூக இடைவெளியைப் பேணுதல் வைரசின் தொற்றைத் தவிர்ப்பதற்கு அவசியமென்பது இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் பெருந்தொகையான தென்னாசியத் தொழிலாளர்கள் வாழும் இந்த விடுதிகளில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. வேறு பல நாடுகளில் சேரிகளில் குடியிருக்கும் சமூகங்களிலும் இது சாத்தியமில்லை. வைரஸ் தொற்றைத் தவிர்க்கச் சவற்காரம் பயன்படுத்தி நாளுக்குப் பல தடவைகள் கைகளை நன்கு கழுவ வேண்டுமென்பதும் ஒரு முக்கிய அறிவுரையாகும். இது குடிநீருக்கே தட்டுப்பாடுள்ள சூழல்களில் விசேடமாக நீர் விநியோகக் கட்டுப்பாடுகளுள்ள நகரங்களில், நீர் சந்தைமயப்படுத்துள்ள இடங்களில், வரண்ட பிரதேசங்களில், பொதுவாக வறியவர்களின் குடியிருப்புக்களில் சாத்தியமில்லை. 

உலகப் பொருளாதாரமும் சீனாவும்

ஏற்கனவே குறிப்பிட்டபடி கொரோனா நெருக்கடி உலகப் பொருளாதரத்தில் சீனாவின் முக்கியத்துவத்தை நன்கு புலப்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் சீனா இன்று உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர். 2019 ஆம் ஆண்டு சீனா மொத்தமாக 2.499 ட்ரில்லியன் (trillion)  அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது. இதில் 49% மற்றைய ஆசிய நாடுகளுக்கு, 20.1% வட அமெரிக்காவிற்கு, 19.9% ஐரோப்பாவிற்கு, மற்றும் 4.5% ஆபிரிக்காவிற்கும் சென்றுள்ளது. ஆலைத் தொழில் உற்பத்தியில் சீனா முன்னணியிலுள்ளது. சீனாவின் ஏற்றுமதிகளில் உயர் தொழில்நுட்பவியல் துறைகள் சார்ந்த பொருட்கள் ஒரு முக்கியமான இடத்தைப்பிடித்துள்ளன. வட அமெரிக்காவும் ஐரொப்பாவும் அதன் உயர் பெறுமதிப் பொருட்களின் பிரதான சந்தைகள்.  சீனாவின் உள்நாட்டுச் சந்தையும் மிகப் பெரியது. கடந்த 15 வருடங்களில் உள்நாட்டு நுகர்வுச் சந்தை துரிதமாக வளர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரம் இன்றைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் சீனப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மறுபுறம் அமெரிக்காவும் அதன் அணியைச் சார்ந்த நாடுகளும் சீனாவின் பொருளாதார மேலாதிக்கத்திற்கெதிராக மாற்று வழிகளைத் தேடுகின்றன. இந்தச் சூழலில் சீனாவிலிருக்கும் வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவிற்குக் கவரும் முயற்சியில் அந்த நாட்டின் அரசாங்கமும் தனியார் துறைக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.

2003இல் இடம்பெற்ற  SARS தொற்றினால் வந்த நெருக்கடியிலிருந்து சீனப் பொருளாதாரம் மிகத் துரிதமாக மீண்டது.  2007-2008 நிதி நெருக்கடியைத் தீர்க்கச் சீனா அமுல் படுத்திய உள்நாட்டு முதலீட்டு மற்றும் சர்வதேச நிதி உதவித் திட்டம் மற்றைய ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதுடன் கடன் பளுவினால் பாரிய பொருளாதாரச் சிக்கலுக்குள்ளான கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் நேரடியாகப் பயனளித்தது. அன்று சீனா உலக முதலாளித்துவ அமைப்பை நெருக்கடியிலிருந்து விடுவிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இது சீனாவின் தேசிய பொருளாதாரத்தின் மீள்வலிமையாக்கலுக்கு உதவியது. இன்றைய நெருக்கடி சீனாவையும் பெருமளவில் பாதித்திருப்பதுடன் ஏற்கனவே சீனாவின் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் கடன்பளுக்களும் அரசாங்கத்தின் கடனும் வளர்ந்துள்ளன. இந்த நிலையில் சீனா எத்தகைய சர்வதேசப் பங்கினை வகிக்கப்போகிறது என்பதைச் சற்றுப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  உள்நாட்டுச் சந்தையை மீண்டும் உயிரூட்டுவது சீனாவின் முன்னுரிமையாயிருக்கலாம். அதேவேளை அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளும் மீள் எழுதல் சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு அவசியம். முதலாம் மாதம் 23ஆம் திகதி வுகானில் வாழும் அனைவரையும் அவர்களின் வீடுகளிலிருந்து வெளிவராது முடக்கும் விதியை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்த சீன அரசாங்கம் நாலாம் மாதம் எட்டாம் திகதி அதைத் தளர்த்தும் முடிவை அறிவித்த போது வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அரசாங்கங்கள் கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. தன்னம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில்  சீனா பொருளாதார மீட்டெடுப்புச் செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தொடங்கியது. ஆயினும் இந்தத் தடவை சீனாவின் பொருளாதார மீட்சிப் போக்கு முன்னைய சந்தர்ப்பங்களைவிட மெதுவாகவே நகரும் எனப் பொருளியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (Hedrick-Wong, March 25, 2020). 

பொருளாதாரத்தை மீண்டும் இயங்கவைக்க வைரசின் பரவலைத் தடுக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். மறுபுறம் அத்தகைய தளர்த்தல் வைரசின் பரவலை ஊக்குவிக்கும் ஆபத்து வளரலாம். கொவிட்-19 ஐ தடுப்பதற்கு ஊசி மற்றும் அந்த நோய்க்கு மருந்து எதுவும் இல்லாத நிலையில் எல்லா நாடுகளும் எதிர்கொள்ளும் முரண்பாடு இது தான். மறுபுறம் உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது பற்றி ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது. இந்த மாபெரும் நெருக்கடியின் சமூகப்-பொருளாதார, சுற்றுச்சூழலியல் பாடங்களை ஆழப்படித்து மாற்று அணுகுமுறைகளைத் தேடாது மீண்டும் அதே உலகப் பொருளாதார அமைப்பைச் சில ‘சரிப்படுத்தல்களுடன்’ மீள்நிர்மாணம் செய்வதுதான் உடனடி நோக்கமாயிருக்க வேண்டுமா

இயற்கையின் பழிவாங்கல்

‘இயற்கைமீது மனிதர் ஈட்டிய வெற்றிகளையிட்டு நாம் தற்புகழ்ச்சி அடையாமலிருப்போமாக. ஏனெனில் நமது ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. முதலில் ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த முடிவுகளைத் தருகிறது என்பது உண்மைதான் ஆனால் இரண்டாம் மூன்றாம் தடவைகளில் அது மிகவும் வித்தியாசமான நாம் எதிர்பார்க்காத – பல சந்தர்ப்பங்களில் முதல் கிடைத்த முடிவுகளை இரத்துச் செய்யும் – விளைவுகளைத் தருகிறது.’

Frederick Engels, 1876, The Part Played by Labour in the Transition from Ape to Man.(https://www.marxists.org/archive/marx/works/1876/part-played-labour/ ) (சமுத்திரன், 2017, Samuthran.net)

டேவிட் ஹாவிய் (David Harvey, 2020) சொல்வதுபோல் கொவிட்-19  நாற்பது வருடங்களாக இயற்கையைப் பெரிதும் துஷ்பிரயோகம் செய்த நவதாராள உலகமயமாக்கலுக்கு எதிராக ‘இயற்கையின் பழிவாங்கல்’. இயற்கை தன் சீற்றத்தைக் காட்டியது இதுதான் முதற் தடவையல்ல. கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக நாடுகள் எடுத்த நடவடிக்கைகளால் ஒரு குறுகிய காலத்தில் நமது வளிமண்டலத்தின் மாசுபடுத்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியின் நற்பயனை பெய்ஜிங், நியூயோக், டில்லி போன்ற பெருநகர வாசிகள் மட்டுமன்றி உலகின் மற்றையோரும் மற்ற சீவராசிகளும் அநுபவித்தனர். புதைபடிவ எரிபொருளின் சக்தியில் தங்கிநிற்கும் உலகின்  கரிமப் பொருளாதாரம் ஒரு உலகரீதியான மனித அவலத்தின் காரணமாக தற்காலிகமாக இயக்கமிழக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாதானலேயே நமக்கு இந்தப் புதிய அநுபவம் கிடைத்தது. இது உலக அமைப்பின் சுற்றுச்சூழல்பற்றி ஒரு அடிப்படையான தகவலை நினைவூட்டியுள்ளது. கரிமப் பொருளாதாராமே புவிக்கோளின் வெப்பமயமாக்கலுக்குப் பிரதான காரணம். பதினெட்டாம் நூற்றாண்டு ஆரம்பித்த ஆலைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியாவே கரிம வெளியீட்டில் முன்னின்றது. பின்னர் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஆலைத்தொழில் மயமாக்கல் கரிம வெளியீட்டை மேலும் அதிகரித்தன. இருபதாம் நூற்றாண்டில் வட அமெரிக்காவே இதில் முன்னணியிலிருந்தது. இதைத் தொடர்ந்து சீனா, இந்தியா, பிராசில் போன்ற வளர்முக நாடுகளில் கரிமப் பொருளாதாரம் வளர ஆரம்பித்தது. இந்த நூற்றாண்டில் புதைபடிவ எரிபொருள் பாவனையில் சீனாவே முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் கரிம வெளியீட்டிலும் அது அமெரிக்காவையும் மிஞ்சி விட்டது (Malm, 2016; சமுத்திரன், 2017). 

மூலதனத்தின் தாக்கங்களுக்கு எதிராக இயற்கையின் சீற்றம் பலவிதமான தோற்றங்களில் வெளிவருகிறது. ஒரு சுற்றுச்சூழலியல்ரீதியான பிரச்சனை அதனுடன் அமைப்புரீதியில் தொடர்புள்ள வேறு பிரச்சனைகள் மீதும் நமது கவனத்தைத் திருப்புகின்றது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னாலுள்ள காரணிகளின் அரசியல் சுற்றுச்சூழலியலைப் பார்த்தல் அவசியம். நன்கறியப்பட்ட பரிணாம உயிரியலாளரும் (evolutionary biologist)முற்போக்கு சமூக ஆர்வலருமான  Rob Wallace சமீபத்தில் ஒரு நேர்காணலில் சொன்னது போல் இந்த நெருக்கடிக்கான அமைப்புரீதியான காரணிகளைத் தேடாது ஒரு கொரோனா வைரஸில் பழியைப் போடுவதுடன் விட்டுவிடுவது உண்மையை மறைக்கவே உதவும்.  

சமீப தசாப்தங்களில் வைரஸ்களினால் கால்நடைகளையும் மனிதர்களையும் பாதிக்கும் வியாதிகள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்பைவிட அடிக்கடி வருகின்றன. இந்த வைரஸ்களில் சில மனித உயிருக்கு மிகவும் ஆபத்தானவையாகவும்  இன்றைய உலகமயமாக்கல் யுகத்தில் துரிதமாக உலகெங்கும் பரவ வல்லனவாகவும் இருப்பதும் அநுபவரீதியான உண்மையாகும். விஞ்ஞானரீதியான தகவல்களின்படி கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த SARS-CoV-2 வைரசினால் வந்த நோய்தான் கொவிட்-19. இது போன்ற வைரசுகளின் பரிணாமத்திற்கும் இலாபநோக்கில் ஆலைத்தொழில்மயப்படுத்தப்பட்ட விவசாயத்திற்கும் (factory farming), விசேடமாக கால்நடை உற்பத்தி ஆலைத் தோட்டங்கள் மற்றும் பல காரணங்களால் தொடரும் காடழிப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதை இயற்கை மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுகள் காட்டுகின்றன (Wallace et al, 2020; Wallace, 2016). வளரும் இறைச்சிச் சந்தைக்காக கோழி, வான்கோழி, பன்றி, மாடு ஆகியவற்றின் உற்பத்தித் தொழிற்சாலைகள் பெருமூலதனத்தால் உலகமயமாக்கப்பட்டுள்ளன. 1990களிலிருந்து சீனாவிலும் இந்தத்துறை பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த ஆலைத் தோட்டங்கள் வைரஸ்களின் தோற்றத்திற்கும் பரிணாமத்திற்கும் உகந்த சூழல்களைக் கொண்டுள்ளன. இவற்றிடமிருந்து பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைக் கொடுக்கும் வைரசுகள் தோன்றியுள்ளன, மீண்டும் தோன்றும் ஆபத்துக்கள் தொடர்கின்றன. மறுபுறம் காடழிப்பினால் வனவிலங்குகளின் வதிவிடங்கள் சுருங்கி அவற்றிற்கும் மனிதருக்குமிடையிலான வெளியில் (இடைமுகத்தில்) மாற்றமேற்படுகிறது.  இது வன விலங்கிலிருந்து வைரஸ் நுண்ணுயிரிகள் நேரடியாக அல்லது ஒரு இடைத்தரப்பிற்கூடாக மனிதருக்குச் சென்றடையும் ஆபத்தை அதிகரிக்கிறது. மனித உணவாகப் பயன்படும் வனவிலங்குகளிடமிருந்து  வைரஸ் மனிதருக்குத் தொற்றும் ஆபத்தும் அதிகமென ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இத்தகைய வழிகளில் ஒன்றுக்கூடாகத்தான் கொவிட்-19 நோய்க்குக் காரணமான கொரோனா வைரஸ் மனிதரிடம் முதலில் சென்றடைந்திருக்கலாமெனும் கருதுகோள் விஞ்ஞானிகளால் ஆராயப்படுகிறது. வனவிலங்கு மாமிசத்திற்குச் சீனாவில் மட்டுமல்ல உலகரீதியான சந்தை வளர்ந்துள்ளது.

சீனாவில் கால்நடை உற்பத்தி ஆலைத்தொழில்மயமாக்கப்பட்டதன் விளைவாகப் பல சிறுபண்ணை விவசாயிகள் கால்நடை உற்பத்தியைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களில் பலர் வாழ்வாதாரத்திற்காகச் சந்தைக் கேள்வியுள்ள ‘வன’ விலங்குகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டார்கள். இதற்காக இவர்கள் எஞ்சியுள்ள காடுகளுக்கு நெருக்கமாகத் தொழிலில் ஈடுபட்டார்கள். இந்தப் பகுதிகளில்தான் வைரஸ் தொற்றியுள்ள வௌவால்களும் உள்ளன எனும் தகவலை இரு மானிடவியலாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர் என ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது (Spinney, 2020). வுஹானின் உணவுச் சந்தையில் தான் வைரஸ் முதலில் மனிதரைப் பற்றிக்கொண்டது என்றால் அந்த வைரசின் மூலம் எந்த உணவு அல்லது மிருகம் எனும் கேள்விக்கான இறுதியான பதில் இன்னும் வரவில்லை. ஆனால் இந்த வைரஸ் வுஹானின் ஆய்வுகூடமொன்றிலிருந்து வெளியேறவில்லை, இது மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் அல்ல என்பதில் விஞ்ஞானிகள் மிகத் தெளிவாயிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் மட்டுமல்ல அமெரிக்காவின் புலனாய்வுத்துறையும் இதையே சொல்கிறது. 

முன்னைய வைரஸ் தொற்றுகளையும்விட கொவிட்-19 உலகமயமாக்கப்பட்டதன் விளைவாக வைரஸ் மற்றும் வேறு நுண்ணுயிரிகளால் வரும் நோய்களின் அரசியல் பொருளாதார அமைப்புரீதியான மூலக்காரணிகள் பற்றிய விழிப்புணர்வு வளர ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இலாபத்தையே முழுமுதல் நோக்காகக் கொண்டியங்கும் அமைப்பு மனித மேம்பாட்டையும் இயற்கையையும் அந்த நோக்கத்திற்குக் கீழ்ப்படுத்துகிறது. கொவிட்-19இன் ஆட்டம் ஓய்ந்துவிடலாம். ஆனால் அடுத்த தடவை அதையும்விட ஆபத்தான ஒரு பெருந்தொற்றுத் தோன்றக்கூடிய அமைப்புரீதியான காரணிகள் தொடர்கின்றன. தற்போதைய விவசாய  உற்பத்தி அமைப்புக்கள் தொடரும்வரை இது போன்ற ஆபத்துக்களும் தொடரும் என்பதே கசப்பான பாடமாகும். இந்த நெருக்கடி உலக கரிம முதலாளித்துவ அமைப்பின் தன்மைகள் பற்றி விழிப்புணர்வூட்டவும் ஓரளவு உதவியுள்ளது என நம்பலாம்.  ஆனால் இந்த அமைப்புத் தானாக மாறப்போவதில்லை. 

இனி?..?..?

மனித உயிர்களைக் காப்பதற்காக பெருந்தொற்றை உடனடியாகக் கட்டுப்படுத்துவதும் அதைத் தவிர்ப்பதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதும் முன்னுரிமை பெற்றுள்ளது நியாயமானதே. கடந்த நாற்பது வருடங்களாக நடைமுறையிலிருந்த நவதாராள உலகமயமாக்கலின் விளைவாகப்  பல நாடுகளின் தேசிய பொதுச் சுகாதார சேவையின் பலவீனமாக்கலையும் உலக நிறுவனங்களின்  இயலாமையையும் இந்த நெருக்கடி அம்பலப்படுத்தியுள்ளது. சகல மக்களுக்கும் தரமான சுகாதார, கல்வி சேவைகளை வழங்கும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் அவசியத்தை இந்த நெருக்கடி மீண்டும் வலியுறுத்துகிறது.  ஆனால் வல்லரசுகளின் அதிகாரப் போட்டிகள் மத்தியிலும் பெருந்தொற்றின் விளைவுகளைக் கையாண்டு அமைப்பைத் தொடர்ந்தும் சில ‘சரிப்படுத்தல்களுடன்’ தக்கவைக்கும் அரசியல் திட்டத்திற்கே ஆளும் வர்க்கக்கூட்டுகள் முன்னுரிமை கொடுக்கும் என்பதை மறந்துவிடலாகாது. முதலாளித்துவம்  பிரச்சனைகளைத் தீர்க்கும் பெயரில் பொதுவாக அவற்றை வேறு பக்கங்களுக்கு மிகவும் திறமையாக மாற்றிவிடுகிறது. இது வரலாறு தரும் பாடம். போராட்டமின்றித் தரமான சமூகப்பாதுகாப்பு உரிமைகளைப் பெறுவது சாத்தியமில்லை. நிலைபெறு மனித மேம்பாடே சமூக முன்னேற்றத்தின், அபிவிருத்தியின் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் இலாபத்திற்கூடாக மூலதனக் குவியலின் முடிவுறா வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பின் விதிகள் நிலைபெறும் மனித மேம்பாட்டின் முன்னுரிமைகளுடன் முரண்படுகின்றன.

கொவிட்-19 நெருக்கடியின் அமைப்புரீதியான காரணிகளைத் தேடவேண்டியதன் அவசியத்தை இந்தக் கட்டுரை வலியுறுத்தியுள்ளது. இந்த நோக்கில் சில விளக்கங்களையும் சுருக்கமாகக் கொடுத்துள்ளது. இவை பற்றி மேலும் விரிவாக பின்னர் எழுதும் ஆர்வமுடன் உள்ளேன். இன்று கொவிட்-19 தொடர்பான உலக மட்டத்திலான கதையாடலை உலக அமைப்பைத் தக்கவைக்கும் உடனடித் தற்காலிக ‘தீர்வுகளின்’ தேடலுக்குள் மட்டுப்படுத்துவதை நிராகரித்து விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களுடன் ஒரு பரந்த முற்போக்கு அரங்கிற்கு எடுத்துச் செல்வதில் பல இடதுசாரி அறிவியலாளர்களும் செயற்பாட்டு ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளது உற்சாகமளிக்கிறது. 

References

Davies, Mike. 2005, The monster at our door – The global threat of avian flu, Owl Books New York

Davies, Mike. 2020, In a plague year, Jacobin 14 March 2020

Duclos, Michel. Is coronavirus a game changer? 23 April 2020,  https://www.institutmontaigne.org/en/blog/covid-19-game-changer-middle-east-and-maghreb

Harvey, David, Anti-capitalist politics in the time of covid-19, Jacobin, 20 March 2020

Harvey, David, 2010, The enigma of capital, Oxford University Press

Hedrick-Wong, China´s economic recovery will be slower than it was for SARS, China Development Institute, 25 March 2020, http://en.cdi.org.cn/component/k2/item/660-china-s-economic-recovery-from-covid-19-will-be-slower-than-it-was-for-sars

ILO Monitor: Covid 19 and the world of work, updated estimates and analysis, 7 April 2020, https://www.ilo.org/wcmsp5/groups/public/@dgreports/@dcomm/documents/briefingnote/wcms_740877.pdf

Kannan, K. P. No excuse for a niggardly Covid+19 package, The Hindu 

Businessline, 13 April, 2020, https://www.thehindubusinessline.com/opinion/india-needs-a-better-covid-19-relief-package/article31297141.ece

Malm, Andreas. 2016, Fossil Capital The rise of steam power and global warming, Verso

Rios, Beatriz. ILO warns of devastating consequences of covid+19 on labour markets, April 8, 2020 https://www.euractiv.com/section/economy-jobs/news/ilo-warns-of-devastating-consequences-of-covid-19-on-labour-markets/

Rodrik, Dani. Will covid-19 remake the world?  https://www.project-syndicate.org/commentary/will-covid19-remake-the-world-by-dani-rodrik-2020-04

Spinney, Laura. Is factory farming to blame for coronavirus? The Guardian, 28 March 2020,https://www.theguardian.com/world/2020/mar/28/is-factory-farming-to-blame-for-coronavirus  

Stevenson, G. Following the coronavirus money trail, Open Democracy, 27 March 2020, https://www.opendemocracy.net/en/oureconomy/following-coronavirus-money-trail/

Wallace, Rob. 2016, Big farms make big flu, Monthly Review Press

சமுத்திரன், 2017, மூலதனமும் இயற்கையும் – மாக்சிச செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள்,I, II, III, IV, V. Samuthran.net 

 Wallace, Rob.,Liebman, Alex., Chaves, Luis. F., Wallace, Rodrik. 2020, Covid+19 and the circuits of capital, Review of the month, Monthly Review, May 2020.


[1] நான் குறிப்பிடும் கட்டுரையில் தரப்படும் முழுமையான மேற்கோள்: ´If a pandemic disease breaks out, it will be in a densely populated area, with close proximity between humans and animals, such as exists in some markets in China or Southeast Asia where people live close to livestock.´ (CIA, 2009, The State of the World 2025, cited in Duclos, 2020)

பலமிக்க தலைவரின் வருகையும் ஜனநாயகத்தின் தடம்புரளலும்

சமுத்திரன்

‘எக்காலத்திலும் ஜனநாயகம் பற்றிய மிகச்சிறந்த பகிடி என்னவெனில் அது தன்னை அழிக்கும் வழிவகையைத் தனது கொடிய எதிரிகளுக்குக் கொடுப்பதுதான்.’ Joseph Goebbels, ஹிட்லரின் பிரச்சார அமைச்சர் (1933-1945)

ஜனநாயகம் பற்றி ஹிட்லரின் பிரச்சாரப் பீரங்கியின் ‘பகிடி’ சமீபகாலங்களில் பல அரசியல் விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் நினைவுகூரப்படுவதைக் காணலாம். தன்னை அழிக்கவல்ல அல்லது சீர்குலைக்கவல்ல விதைகளை ஜனநாயகம் தனக்குள்ளேயே கொண்டுள்ளது எனும் கருத்து மீண்டும் பலமாகவே கேட்கிறது. விசேடமாக டொனால்ட் ட்ரம்ப்  (Donald Trump) அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த மேற்கோள் மேலும் பரவலானது. ட்ரம்ப்பை ஹிட்லருடன் ஒப்பிடுவது பொருந்துமா என்பதல்ல முக்கியம். பலமிக்க அதிகாரவாத ஆளுமை கொண்ட ஒரு தலைவனாலேயே இன்றைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை விடுவிக்க முடியும் எனும் செய்தியை வலியுறுத்தும் வலதுசாரிக் கருத்தியல் பலநாடுகளில் மக்களின் ஆதரவுடன் எழுச்சி பெறுவதே அரசியல் விவாதங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது ஒருவகையான சீசரிசம் Caesarism எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் – அதாவது அரசியல் சிக்கல்மிகுந்த சமயத்தில் ஜூலியஸ் சீசர் போன்ற ஒரு இரும்பு மனிதன் பலரின் ஆதரவுடன் தலைவனாவது. Caesarism எனும் கருத்துருவை கிராம்சி உட்பட பல்வேறு சமூக விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர். ட்ரம்ப்பை சரிவடையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எழுந்துநிற்க வைக்கும் வல்லமை உள்ள ஒரு சீசராக அந்த நாட்டின் மேனிலை வர்க்கத்தின் ஒரு சாரார் நம்புகின்றனர் போலும். இன்னொருபுறம் சமூக-பொருளாதாரரீதியில் பலவீனமாக்கப்பட்டோரின் ஒரு சாராரும் தமது பிரச்சனைகளைத் தீர்க்க வல்ல தலைவர் அவரென நம்புகிறார்கள்.  

அதிகாரவாதம் பிரதிநிதித்துவ மற்றும் நேரடி ஜனநாயகத்துடன் முரண்படுகிறது. ஆனால் அத்தகைய ஜனநாயக விரோத தலைமைக்குச் சாதகமான ஒரு கருத்தியல் பல நாடுகளின் தேர்தல் அரசியலில் மிதமிஞ்சிய செல்வாக்குப் பெற்றுள்ளதைக் காண்கிறோம். இன்றைய நடைமுறை ஜனநாயகத்தில் நம்பிக்கை இழப்போர் தொகை அதிகரித்தவண்ணமுள்ளது போலவே தெரிகிறது. தேர்தல்களுக்கூடாகவே வாக்காளர்கள் இந்தச் செய்தியைத் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவில் ட்ரம்ப் என்றால் பிலிப்பைன்ஸ்சில் Duterte, துருக்கியில் எர்டோகான் (Erdogan), ரஷ்யாவில் புட்டின்  (Putin), பிராசிலில் பொல்சனாறோ (Bolsonaro), நமக்கு மிகவும் நெருங்கிய இந்தியாவில் மோடி. இவரைப் பிரபல ஆங்கில எழுத்தாளரான போல் மேசன் சமீபத்தில் எழுதிய நூலில்  (Paul Mason, 2019) ´Modi the Hindu Trump´ ‘மோடி இந்து ட்ரம்ப்’ என வர்ணித்துள்ளார். இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம் ஆனால் அதையும் விட முக்கியமாக நமது இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களில் 51 வீதத்திற்கும் மேலானேர் ஒரு ‘பலமிக்க தலைவனே’ இன்றைய தேவை எனும் முடிவில் கோட்டாபய ராஜபக்சவைத் தெரிவு செய்துள்ளார்கள். அவரை ஒரு பௌத்த பீடாதிபதி பெருமையுடன் ஹிட்லருடன் ஒப்பிட்டதை மறக்கமுடியுமா? ஜனாதிபதித் தேர்தலில் அவருக்குக் கிடைத்த சிங்கள பௌத்த வாக்காளரின் மிகப்பெரும் ஆதரவுக்கு இந்த ஒப்பீடும் உதவியிருக்கலாமோ எனப் பலர் எண்ணவும் கூடும். ஆனால் இலங்கையில் ‘பலமிக்க தலைவன்’ ‘தோன்றியது’ இதுதான் முதல் தடவையல்ல. 

சமகாலத்தில் பல நாடுகளில் இந்தப் போக்கினை அவதானிப்போர் இதற்கு ஒரு உலகரீதியான காரணப் பின்னணியை, இதன் சர்வதேச, பிராந்திய அரசியல் தொடர்புகளை அறிய முற்படுவது நியாயமானதே. அது அவசியமும் கூட.   இன்றைய உலக அமைப்பில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் இது ஏன் அல்லது எப்படி இடம்பெறுகிறது என்பதை அறிந்துகொள்ள அந்த நாட்டின் உள்ளார்ந்த முரண்பாடுகள், வரலாற்று நிலைமைகள் அடிப்படை முக்கியத்துவம் பெறுகின்றன.   இந்தக் குறிப்பில் உலகரீதியான  பின்புலத்தைப் பற்றிச் சில முக்கிய விடயங்களை மிகச் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன். அடுத்துவரும் கட்டுரைகளில் இவை பற்றி விரிவாக ஆராயப்படும்.  இந்த வகையில் நீண்ட உலகரீதியில் மேலாட்சி செலுத்திவந்த நவதாராள உலகமயமாக்கலின்நெருக்கடிகளும் அவற்றினால் வந்த சமூக, பொருளாதார மற்றும் சூழல் சார்ந்த விளைவுகளும் பிரதான முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் 2001ஆம் ஆண்டு ´9/11’ தாக்குதல்களுக்குப்பின் அமெரிக்க வல்லரசின் முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ கொள்கை,  தொடர்ந்து பல்வேறு நாடுகள் நடைமுறைப்படுத்திவரும்  ‘பாதுகாப்புமயமாக்கல்’ (securitization), மற்றும் விசேடமாக சமீப தசாப்தங்களில் புதிதாக எழுந்துவரும் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் உலக மற்றும் பிராந்திய அதிகார உறவுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் முக்கியத்துவம் மிக்கவை. 

இந்தப் புதிய வல்லரசுகளில் சீனா ஏற்கனவே உலக மட்டத்தில் கணிசமான பலமும் செல்வாக்கும் பெற்றுவருவது அமெரிக்க வல்லரசுக்குத் தலையிடியைக் கொடுக்கிறது.  ஆனால் இன்றைய உலக மாற்றப் போக்கில் சீனாவை எப்படி வகைப்படுத்துவதென்பது பெரிய கேள்வியாகும். சீனாவின் மாற்றங்களில் பலமிக்க தனிநபரின் தலைமைபற்றி நீண்டகாலமாக உலகரீதியில் பேசப்படுவதையும் எழுதப்படுவதையும் காண்கிறோம். ஆனால் அங்கே தனிநபர் வழங்கும் தலைமைக்குப்பின் ஒரு மிகப்பலமிக்க கட்சி  ‘நிரந்தரமாக’ அதிகாரத்தில் இருப்பதை மறந்துவிடலாகாது. சீனா நவதாராளக் கொள்கையை பின்பற்றுகிறதா இல்லையா என்பது ஒரு முடிவுறா விவாதமாகத் தொடர்கிறது. பலரின் அபிப்பிராயத்தில் சீனா நவதாராளக் கொள்கையின் சில அம்சங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. தனது நோக்கிலான முதலாளித்துவ விருத்திப் பாதையையே அது தேர்ந்தெடுத்தது. இது ‘கிழக்காசியப் பாதை’ எனச் சில ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. அதாவது சீனாவின் பழைய எதிரியான ஜப்பான் தேசிய அரசின் தலைமைத்துவ பங்குடன் முதலாளித்துவ அபிவிருத்திக்கு வகுத்த வழியால் நவீன சீனா ஆகர்சிக்கப்பட்டது எனலாம். இந்தப் பாதையையே சீனாவுக்கு முன்னர் தைவானும், தென் கொரியாவும் பின்பற்றி முதலாளித்துவ விருத்தி பெற்ற நாடுகளாயின. 1990களிலிருந்து தனது பொருளாதார வளர்ச்சியின் முன்னுரிமைகளுக்கேற்ப வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவரும் நாடாகவும் சீனா விளங்குகிறது.  அரச அதிகாரத்தை முழுமையாகத் தன் கையில் வைத்திருக்கும் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் சோஷலிசத்தை நிர்மாணித்துத் தக்கவைப்பதில் தோல்வியடைந்தபோதும் அங்கே முதலாளித்துவத்தை விருத்தி செய்வதிலும் அந்த நாட்டை ஒரு உலக வல்லரசாக வளர்தெடுப்பதிலும் வெற்றியடைந்து வருவதை மறுக்கமுடியுமா?இன்றைய சீனாவின் முதலாளித்துவம் ஒரு கலப்புப் பொருளாதாரம் (mixed economy) என்பதே பலரின் கருத்து.  மறுபுறம் செல்வந்த நாடுகள் உட்படப் பெருவாரி நாடுகள் நவதாராளக் கொள்கையை அமுல்படுத்தியது சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் உதவியது.  சீனாவில் இருப்பது ஒரு ஒற்றைக் கட்சி அதிகாரவாத அமைப்பு. அங்கே எதிர்க் கட்சிக்கு இடமில்லை. முதலாளித்துவ ஜனநாயக நிறுவனங்களுமில்லை. கட்சியின் விதிமுறைகளுக்கமையத் தலைவர் தேர்வு இடம்பெறுகிறது. இது ஒரு உட்கட்சி விவகாரமே. இங்கு நான் குறிப்பிட்டுள்ள மற்றைய நாடுகளையும் விடச் சீனா வேறுபட்டதென்பதால் பின்வரும் கருத்துரைகள் பெரும்பாலும் சீனாவுக்குப் பொருந்தாது. சீனாவின் எழுச்சியும் அது ஒரு புதிய ஏகாதிபத்திய வல்லரசா இல்லையா என்பதும் வேறாக ஆராயப்படவேண்டும்.  

நவதாராள உலகமயமாக்கலின் பாதகமான சமூக-பொருளாதார விளைவுகளுக்கு எதிராகப் பல நாடுகளில் ஒருபுறம் வலதுசாரித் தேசியவாத, அதிகாரவாதப் பொப்பியூலிசப் போக்கும் மறுபுறம் சமூக ஜனநாயக அரச சீர்திருத்தங்களைக் கோரும் மற்றும் ஜனநாயகத்தை மக்கள் ஜனநாயகமாக மீட்டெடுக்கும் உலகளாவிய நோக்கிலான இடதுசாரிப் போக்குகளும் தோன்றியுள்ளன. இவற்றில் வலதுசாரிப்போக்கே தற்சமயம் பொதுவாகப் பலம்பெற்றுவருவதை அவதானிக்கலாம். சுயபோட்டிச் சந்தை, தனியுடைமையாக்கல், சுதந்திர வர்த்தகம், மூலதனச் சந்தையின் தாராளமயமாக்கல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு  கடந்த நான்கு தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த நவதாராளக் கொள்கையின் விளைவுகள் பெருவாரியான பொதுமக்கள் மத்தியில் நவதாராள உலகமயமாக்கலில் மட்டுமன்றி ஜனநாயகத்திலும் நம்பிக்கை இழக்க வைத்துள்ளன என்பதைப் பல சர்வதேசரீதியான ஆய்வுகள் காட்டுகின்றன.  ‘நடுத்தர வர்க்கங்கள்’ என ஆய்வறிக்கைகள் குறிப்பிடும் உழைப்பாளர்களின் மெய் ஊதியம் வளராமை அல்லது வீழ்ச்சியடைதல், வேலையில்லாமை, சமூகப் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் மக்கள் தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கிறார்கள். சமூகத்தின் செல்வமும் வருமானமும் ஒரு அற்ப சிறுபான்மையினரிடம் குவிவது இதன் மறுபக்கம் என்பதையும் காண்கிறார்கள். தமது வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ் தமது வாழ்க்கைத் தரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் அநுபவம் அந்த ஆட்சிமுறையின் ‘ஜனநாயகத்தில்’ நம்பிக்கை இழக்க வைக்கிறது.  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி கடந்த 25 வருட காலத்தில் 2019 ஆண்டில் பல செல்வந்த நாடுகளில், விசேடமாக பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும், பெருமளவிலானோர் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்துள்ளனர். பல நாடுகளில் முன்னர் ஜனநாயகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் மத்தியில் கடந்த பத்து வருட காலத்தில் பொதுவாக ஏமாற்றமே அதிகரித்துள்ளது என்பதை 154 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. இந்தப் பொதுவான போக்கிற்கு விலக்காகத் தொடர்ந்தும் ஜனநாயகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருக்கும் நாடுகளாக சுவிற்சலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் விளங்குவதாக அதே ஆய்வு காட்டுகிறது. 

சமூகத்தில் பரவலாயிருக்கும் அதிருப்தியை வலதுசாரி சக்திகளின் ஒரு சாரார் தமது அரசியல் மூலதனமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலைமைகளில் அகதிகளின் மற்றும் தொழிலாளர்களின் வருகையையும் மேற்கத்திய நாடுகளில் தேசியவாத, இன மற்றும் நிறவாத சக்திகள் தமது அரசியலுக்குப் பயன்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் நவதாராள உலக மயமாக்கலால் இலாபமடைந்த முதலாளி வர்க்கத்தினர் (இவர்களில் பெரும் பயனாளிகள் நிதிமூலதனத்தால் இலாபமடைந்தோர், மற்றும் உற்பத்தி முதலீடுகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறைந்த ஊதியத்தில் தரமான தொழிலாளர்களை வழங்கும் சீனா, வியட்நாம் மற்றும் ஆசிய தென் அமெரிக்க நாடுகளுக்கு மாற்றிப் பெரும் இலாபமடைந்தோர்), உயர்மட்ட துறைசார் நிபுணர்கள், மற்றும் அரசியல் மேனிலையாளர்கள் இருப்பதுபோல் தோல்வியடைந்த அல்லது எதிர்பார்த்த பயனைப்பெறாது ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள், மேனிலையாளர்கள் மற்றும் தேசியவாதத்தை, இனவாதத்தை, மதவாதத்தைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றமுயலும் சந்தர்ப்பவாதிகளும் இருக்கின்றனர். இவ்வாறு தோல்வியடைந்த முதலாளித்துவ, மேனிலையாள, மற்றும் குட்டி பூர்ஷ்வாக் குழுக்களிடமிருந்தே வலதுசாரிப் பொப்பியூலிசத்தின் தலைமைச் சக்தியும் கருத்தியலும் உருவாகின்றன. இந்தக் கூட்டம் ஏந்தி நிற்கும் ‘தேசிய நலன்’ எனும் கவர்ச்சிகரமான கருத்தியல் பதாகையால் பொதுமக்கள், குறிப்பாக நவதாரக் கொள்கையால் பாதிக்கப்பட்டோரில் பலர், கவரப்படுகின்றனர்.  ஆழ நோக்கின் முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்குமிடையிலான உறவு முரண்பாடுகள் மிக்கது மட்டுமன்றி அதிகார வர்க்கக் கூட்டுகள் தமது நலன்களுக்காகத் ‘தேசியத்தின்’ பெயரால் அதிகாரவாத மற்றும் பாசிச அடக்குமுறையையும் நியாயப்படுத்தத் தயங்கமாட்டா என்பது புலனாகும்.  இது நவீனகால வரலாறு தரும் பாடமாகும். இன்றைய அரசியல் போக்குகளைப் பார்க்கும்போது இந்தப் பாடத்தைப் பலரும் மறந்துவிட்டனரா என எண்ணத் தோன்றுகிறது. 

இதுவரையிலான உலகமயமாக்கலின் சில விளைவுகளுக்கு எதிராக வலதுசாரி எதிர்வினைப் போக்குகள் பல நாடுகளில் எழுந்துள்ளமை இவற்றிற்கு ஒரு உலகரீதியான தோற்றத்தைக் கொடுக்கின்றது. ஆயினும் குறிப்பிட்ட தேசியமட்டங்களிலிருந்து பலமான தேசியவாதக் கருத்தியல்களின் உதவியுடன் எழும் இந்த எதிர்வினைகளுக்கு நவதாராளத் திட்டத்திற்கு இருந்தது போன்ற உலகரீதியான அதிகாரத்துடன் இணைந்த அரசியல், பொருளாதாரப் பொறிமுறைகள், மேலாட்சியைத் தக்கவைக்கும் கருத்தியல் பொறிமுறைகள் ஆகியன சர்வதேச மட்டத்தில் இல்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். அதேவேளை நவதாராளவாதத்தின் வீழ்ச்சி உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிகளின் வெளிப்பாடு என்பதோடு சர்வதேச அதிகார உறவுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் ஒரு குறிகாட்டியும்கூட.  தெற்கத்திய நாடுகளில் இந்த அதிகாரவாதப் போக்கிற்கு ஆகர்சமூட்டும் சக்திகளாகச் சீனா, இந்துத்துவ ஆட்சியின் கீழுள்ள இந்தியா, மற்றும் ரஷ்யா போன்ற எழுந்துவரும் வல்லரசுகள் விளங்குகின்றன. மறுபக்கத்தில் தேசிய மட்டங்களில் இன்னும் ஆதரவு குன்றிய நிலையிலிருக்கும் சமூக ஜனநாயக அல்லது மக்கள் ஜனநாயக எதிர்வினைப் போக்கிற்கு முற்போக்கு சக்திகளின் உலகரீதியான ஒருமைப்பாடு இருப்பதையும் சுட்டிக் காட்டவேண்டும். முதலாளித்துவத்தின் இதுவரையிலான வரலாற்றில் சமூக ஜனநாயகச் சீர்திருத்தங்கள் நீடித்த நாடுகளிலேயே மக்கள் நலன் மிகப் பரந்தளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது எனும் முடிவு ஆதாரபூர்வமானது. சமூக ஜனநாயகச் சீர்திருத்தம் முதலாளித்துவ அமைப்பிற்குள் பல அடிப்படையான சமூக நல உரிமைகளை மக்களின் உரித்துடைமைகளாக (entitlements ஆக)நிறுவனமயப்படுத்துகிறது. இது தொழிலாளர் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் போராட்டங்களின் விளைவாகும். ஆனால் முதலாளித்துவ அமைப்பில் சமூக ஜனநாயக சீர்திருத்தங்களை நீண்டகாலத்திற்குத் தக்கவைப்பது சுலபமில்லை என்பதும் வரலாறு தரும் அநுபவமாகும். மக்களைப் பொறுத்தவரை  பொதுவாக சமூக நலனை முன்னெடுக்க உதவும் சீர்திருத்தத்திற்கே குறுகிய காலத்தில் முன்னுரிமை கொடுப்பார்கள்.  இதற்கும் அப்பால் சிந்தித்துச் செயற்படும் சோஷலிச ஜனநாயகவாதிகள் சமூக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களை குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவை என்பதை அங்கீகரித்து நீண்டகால நோக்கில் ஆதரிக்கிறார்கள். 

செல்வந்த நாடுகளில் மட்டுமன்றி வளர்முக நாடுகளிலும் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பெருமளவில் ‘பலவான்’ எனப் ‘பெயர்பெற்ற’ தலைவனைக் கொண்ட வலதுசாரித் தேசியவாதக் கட்சிகளையே ஆதரிக்கும் போக்கு இடதுசாரிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. இந்த நாடுகளில் செல்வந்த நாடுகளையும்விட அதிகாரவாதப்போக்குப் பலமாக இருப்பதைக் காணலாம். செல்வந்த நாடுகளில்  ஜனநாயக மரபைப் பேணப் போராடும் சக்திகள் இயங்கிய வண்ணமிருப்பதைக் காண்கிறோம். அதேவேளை பல்வேறு நாடுகளில் நவதாராள உலகமயமாக்கலால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினரில் பலர் பொருளாதாரத் தேசியவாத, இனவாத, நிறவாத, அடிப்படைவாதப் பிரச்சாரங்களாலும் வாக்குறுதிகளாலும் ஈர்க்கப்படுவதும் கண்கூடு.  அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இருந்து சமீபத்தில் நடந்தேறிய பிரித்தானிய பொதுத் தேர்தல்வரை இதைக் காண்கிறோம். தன்மைரீதியான வேறுபாடுகள் இருப்பினும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவும் இந்தப் போக்கின் ஒருவகை உதாரணமாகிறது.  இந்த வலதுசாரிப் போக்கினால் மக்களின் மனித மேம்பாட்டிற்கு உதவமுடியுமா, உண்மையில் உள்நாட்டில் நடைமுறையிலிருக்கும் தனியுடைமையாக்கல் மற்றும் சந்தைமயமாக்கல், இவற்றின் விளைவுகளான ஏற்றத் தாழ்வுகள், தொழிலாளரின் மெய் ஊதியத்தின் வீழ்ச்சி, வாழ்வாதாரப் போதாமை, வேலையில்லாமை, சமூகப் பாதுகாப்பின்மை, சூழலின் சீரழிவு போன்றவற்றினை மாற்றமுடியுமா எனும் கேள்விகள் எழுகின்றன. அதாவது உள்நாட்டில் சமூக முன்னேற்றத்தைப் பொறுத்தவரை, பலரின் தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கு உதவத்தவறிய நவதாராளக் கொள்கையைக் கைவிட்டு மாற்றுக் கொள்கையைப் பின்பற்றமுடியுமா? இந்தக் கேள்விகள் வலதுசாரித் தேசியவாதத்தின் மேலாதிக்க அடையாள அரசியலால் மறைக்கப்படும் வர்க்க, மற்றும் பால்ரீதியான முரண்பாடுகள்மீதும், ‘தேசிய அடையாளம்’ ‘தேசிய பாதுகாப்பு’ எனும் சாக்கில் ‘சிறுபான்மையர்’ ‘புறத்தியார்’ எனும் பெயர்களால் வெளிவாரிப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுவோரின் நிலைமைகள் மீதும் நமது கவனத்தைத் திருப்புகின்றன. 

டொனால்ட் ட்ரம்ப்பின் பொருளாதாரத் தேசியவாத நிலைப்பாட்டிற்கு ‘தேசியவாத நவதாராள வாதம்’ (´nationalist neoliberalism´) எனப் பெயரிட்டுள்ளார் ஒரு ஆய்வாளர் – அதாவது ஒருபுறம் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேசப் போட்டியைப் பொறுத்தவரை தேசியப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை மறுபுறம் உள்நாட்டில் நவதாராளப் பெருமப் பொருளாதாரக் (macroeconomic) கொள்கை. இந்த ஆட்சியில் நிறவாதமும் வெளிநாட்டவரின் அடிப்படை மனித உரிமை மீறல்களும் மோசமாக வளர்ந்துள்ளன. பாதுகாப்புமயமாக்கலும் தொடர்கிறது. ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு பரந்த எதிர்ப்புக்கள் எழுந்தவண்ணமிருக்கின்றன.  இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியைக் காணவில்லை. வேலையில்லாமை, சமூகப்பாதுகாப்பின்மை, மற்றும் சூழலின் சீரழிவு பெரும் பிரச்சனைகளாகத் தொடர்கின்றன. இவற்றை மறைப்பதற்கு இந்துத்துவ தேசியவாதத்தைப் பயன்படுத்தி அதிகாரவாதப் போக்கினை நியாயப்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசாங்கம். இந்துத்துவக் கருத்தியல் நேற்றுத் தோன்றியதல்ல. அதற்கு தொண்ணூறு வருடங்களுக்கு மேலான வரலாறுண்டு.  ஆயினும்  இந்திய அரசாங்கம் சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடளாவிய எதிர்ப்புக்கள் தோன்றியுள்ளன. அங்கே ஜனநாயக உரிமைகளுக்கான அணிதிரட்டல் இன, மத பிரிவுகளைத் தாண்டி முன்னேறுவதைக் காண்கிறோம். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வலதுசாரிப் பொப்பியூலிசம் ஏற்கனவே நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.    

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபயவின் கொள்கை சிங்கள பௌத்த பேரின தேசியம், அதன் பாதுகாப்பு மற்றும் ‘அபிவிருத்தி’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது நீண்டகாலமாக பிரதிநிதித்துவ ஜனநாயகம் பேரினத்துவ மேலாதிக்கத்துவத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட்டநிலையில் அதிகாரவாதத்தையும் இராணுவமயமாக்கலையும்  இன்றைய உள்நாட்டு மற்றும் பிராந்திய அரசியல் சூழலில் தக்கவைக்கும் திட்டத்திற்குக் கிடைத்த வெற்றியைக் குறிக்கிறது.   ஜனாதிபதியின் அதிகாரத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் இலங்கை யாப்பின் 19ஆம் திருத்தத்திற்கு எதிராக மீண்டும் சர்வ அதிகாரத்தையும் ஜனாதிபதிக்குக் கையளிக்கும்வகையில் யாப்பிற்குத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என அறிவித்துள்ளார் கோட்டாபய. 

J. R. ஜயவர்த்தன போன்று முழு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாவதே அவருடைய அவா. அதை அவர் அடைய நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வரப்போகும் பொதுத் தேர்தலில் வழங்குமாறு கோரியுள்ளார். ஆனால் அவரின் விருப்பைத் திருப்திப் படுத்துவதாயின் பிரதம அமைச்சரின் அதிகாரம் 19ஆம் திருத்தத்திற்கு முன்பிருந்த நிலைக்குக் குறைக்கப்படவேண்டும். தற்போது பிரதமராக இருக்கும் அவருடைய அண்ணன் இதை ஏற்றுக் கொள்வாரா? ராஜபக்ச வம்சத்திற்குள் அதிகாரப் பகிர்வு தொடர்பான சுவராஸ்யமான கேள்வி!

2015இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தோல்வியடைந்தபின் கோட்டாபய தனக்கென ஒரு அரசியல் பாத்திரத்தை வகுக்கும் முயற்சியை மேற்கொண்டார். புதிய அரசாங்கம்  திசைதெரியாது தடுமாறியபடி உள்ளார்ந்த பூசல்களில் மூழ்கித் தவித்த நிலையில் அதன்மீது மக்களின் அதிருப்தி வளர்ந்து  கொண்டிருந்த சூழலில் ராஜபக்ச குழுவினர் 2016இல் சிறீலங்கா பொது ஜன பெரமுன (SLPP) எனும் அமைப்பினைக் கூட்டிப் பலப்படுத்தினர். அதுவரை அவர்கள் தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UPFA) படிப்படியாக SLPP உடன் சங்கமித்தது. அதே காலத்தில் இதற்குச் சமாந்திரமாக, எதிராக அல்ல, கோட்டாபய தனது அரசியல் எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு சில புதிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டார்.  அவருடைய திட்டத்திற்கு ஒரு தொழில்நுட்பவல்லுன (technocratic) தோற்றத்தைக் கொண்ட ‘வியத்மக’ (viyathmaga) எனும் அமைப்பினை அவருக்கு விசுவாசமான இளைப்பாறிய இராணுவ அதிகாரிகள் உட்படப் பல்வேறு துறைகள் சார்ந்தோரின் உதவியுடன் உருவாக்கினார். நாட்டை நேசிப்பதுடன் அதை சுபீட்சமும் அமைதியும் மிக்க ஒன்றாக அபிவிருத்தி செய்வதற்குப் பங்களிக்க விரும்பும் துறைசார் வல்லுனர்கள், ஆய்வாளர்கள் மற்றும் முயற்சியாளர்களை ஒன்று கூட்டும் வலைப்பின்னலான வியத்மக ஒரு அரசியல் அமைப்பல்ல என அதன் நோக்கு, குறிக்கோள் பற்றிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுடன் ஒழுக்கவியல் மற்றும் ஆத்மீகரீதியான விழுமியங்கள் போன்ற வார்த்தைகளையும் காணக்கிடைக்கிறது. 2019ஆம் ஆண்டில் இலங்கையில் 5000த்திற்கும் அதிகமானோருடன் வெளிநாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களும் வியத்கமவில் இணைந்துள்ளனர் என அறியக்கிடைக்கிறது. ‘நம்மால் முடியும், சிறீலங்காவால் முடியும்’ (´We can and Sri Lanka can´) எனும் கோஷத்துடன் தொழிற்றுறை, கல்வி, தகவல் தொழில்நுட்பம், இளைஞரின் பங்கு, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கும் பிரச்சாரத்தை வியத்மக முன்னெடுத்தது. இதன் முன்னணியில் இயங்கும் துறைசார் வல்லுனர்கள்  கோட்டாபயவின் தலைமைத்துவத்தை புகழ்ந்து அவருக்குத் தமது விசுவாசத்தைக் காட்டியுள்ளனர்.

‘அரசியல் சார்பற்ற’ அமைப்பென அறிமுகப்படுத்தப்பட்ட வியத்மக உண்மையில் ஆரம்பத்திலிருந்தே ஒரு அரசியல் சார்ந்த அமைப்பென்பதில் சந்தேகமில்லை.  சிங்கள மக்கள் மத்தியில் பரந்த ஆதரவைப் பெற்றுள்ள மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செல்வாக்கும் பேரினவாதப் பொப்பியூலிசமுமின்றி கோட்டாபயவின் அமோக வெற்றியை விளங்கிக்கொள்ள முடியாது. அதேவேளை சிங்கள-பௌத்த தேசியத்தின் பாதுகாப்புடன் ‘அபிவிருத்தி’யைப் பிரதான இலக்குகளாக முன்னுரிமைப் படுத்தும் வல்லுனர்களின் விசேட அமைப்பாக அறியப்பட்ட வியத்மக கோட்டாபயவிற்கு ஏற்கனவே இருந்த ‘இரும்பு மனிதன்’ விம்பத்தை மெருகூட்டி மேலும் பலப்படுத்தி ஆளுமைரீதியில் அவரை அண்ணன் மகிந்தவிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும் உதவியுள்ளது. நடைமுறையில் உயர் பதவி நியமனங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பாக கோட்டாவிற்கு நெருக்கமான வியத்மக குழுவிற்கும் SLPPயில் செல்வாக்குள்ள அரசியல்வாதிகளுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றலாம். ஆனால் மகிந்தவின் தலைமையில் இயங்கும் SLPPதான் ஜனாதிபதி கோட்டாவின் வெகுஜன அரசியல் தளமென்பதையும் அவர் ராஜபக்ச வம்சத்தின் பிரதிநிதி என்பதையும் மறந்துவிடலாகாது.

2005 ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் செயற்படுத்திய பகிஷ்கரிப்பின் உதவியுடன் சிறியளவிலான (180786) வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச 2009 போர் முடிவில் முடிசூடா மன்னனாகச் சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டார். ஆயினும் போரின் இராணுவ வெற்றியின் நாயகன் யார் எனும் போட்டியில் கோட்டாபயவுக்கே முதலிடம் கிடைத்தது. நீண்ட காலம் தொடர்ச்சியாக இராணுவத்தில் கடமையாற்றியவரும் இறுதிப்போரின்போது தளபதியாக இருந்தவருமான சரத் பொன்சேகா ராஜபக்சக்களினால் ஒரம் கட்டப்பட்டுச் சிறையிலிடப்பட்டார். போர்முடிவில் மிகச்சிறந்த தளபதி என ராஜபக்சக்களால் புகழ்மாலை சூட்டப்பட்ட பொன்சேகா தானும் ஜனாதிபதியாகத் தகுதியானவரெனும் அபிலாஷையை வெளிப்படுத்தியதே அவர் விட்ட பெருந்தவறானது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ‘கோட்டாவின் போர்’ (´Gota´s war´) எனச் சித்தரிக்கப்பட்டது.        

 வெற்றிக் கொண்டாட்டதின்போதே ஜனாதிபதி மகிந்த தமிழ் மக்களின் பிரச்சனை இனப் பிரச்சனையல்ல அவர்கள் வேண்டுவது அபிவிருத்தியே எனப் பிரகடனப்படுத்தினார். இன்று கோட்டாபயவும் அதையே மேலும் அழுத்தி சொல்கிறார். அதிகாரப் பகிர்வுக்குப் பெரும்பான்மை இனத்திடமிருந்து ஆதரவில்லை ஆகவே அதைச் செய்யமுடியாது என்பதே அவருடைய முடிவு. போருக்குப் பின்னான இலங்கையில் இராணுவம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட விசேட அந்தஸ்துக்குரிய நிறுவனமாக உயர்த்தப்பட்டுவிட்டது. ஏற்கனவே நீண்ட காலமாக புனிதமயப்படுத்தப்பட்டு வணக்கத்துக்குரிய நிறுவனமாகத் திகழ்ந்த பௌத்த மதபீடத்தின் அரசியல் செல்வாக்கும் மேலும் வளர்ந்துள்ளது.  பெரும்பான்மை இனத்தைச் சார்ந்திருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் இராணுவத்தை விமர்சனங்களிலிருந்தும் குற்றச்சாட்டுகளிலிருந்தும் பாதுகாப்பதற்கும், பௌத்தமதபீடத்திற்குத் தமது விசுவாசத்தைக் காட்டி ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் போட்டிபோடுகின்றன. இன்றைய இலங்கையின் தேர்தல் அரசியலின் போக்கின்மீது இந்த நிறுவனங்கள் பெரும் செல்வாக்கினைக் கொண்டுள்ளன. கோட்டாபய அதிகாரத்துக்கு வந்ததும் இராணுவத்தின் அந்தஸ்து மேலும் உயர்ந்துவிட்டது. ‘தேசிய பாதுகாப்பு’ எனும் பெயரில் இராணுவமயமாக்கல் உத்வேகத்துடன் முன்னேறுகிறது. 2020 சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி இராணுவப் பதக்கத்தை அணிந்தபடி தலைமைதாங்கி உரையாற்றினார்.  ஒரு ஜனநாயகக் குடியரசெனப்படும் இந்த நாட்டில் இது முதற் தடவையாக இடம்பெற்றது வெறும் குறியீட்டுக்கும் மேலான முக்கியத்துவமிக்கது. 

அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதியின் கொள்கை இன்னும் விரிவாகத் தெளிவாக்கப்படவில்லை. தற்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு சில பொப்பியூலிச முடிவுகள் செயற்படுத்தப்படுகின்றன. 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் நடைமுறைக்குவந்த நவதாராளப் பொருளாதாரக் கொள்கையை இதுவரையிலான அரசாங்கங்கள் தமது அரசியல் மற்றும் போர்க்காலத் தேவைகளுக்கேற்ப மாற்றங்களுடன் பின்பற்றி வந்துள்ளன.  போருடன் சேர்ந்து ஒரு போர்ப் பொருளாதாரமும் உருவாகியது. இராணுவம் நேரடியாகப் பொருளாதாரத் துறைகளில் முதலீட்டாளரானது. இலங்கையில் நவதாராளக் கொள்கை, போர்ப்பொருளாதாரம், அரச கூட்டுத்தாபனங்கள் பற்றி முன்னர் கட்டுரைகள் எழுதியுள்ளேன்.[1]

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இன்று நவதாராளக் கொள்கை உலகரீதியில் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. இலங்கையிலும் அதற்கு எதிர்ப்பு வளர்ந்துள்ளது. மாற்றுப் பொருளாதாரக் கொள்கைக்குச் சார்பான சூழல் இருப்பதை மறுக்க முடியாது. இலங்கையைப் பொறுத்தவரை ஒரு மாற்றுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் சாத்தியப்பாடுகள் உண்டு. தேசிய அபிவிருத்திக் கொள்கையின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான உறவுகளை மீளமைப்பது பற்றிப் பேசப்படுகிறது.  ஆனால் அது எத்தகைய கொள்கையாயிருக்கும் என்பதைச் சற்றுப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மாற்றுக் கொள்கை பெரும்பாலும் சீனா மீதான பொருளாதாரரீதியான தங்கிநிற்றலை அதிகரிக்கலாம் என்றே தோன்றுகிறது. இது தவிர்க்கமுடியாதபடி வல்லரசுகளின் இந்து சமுத்திரப் பிராந்திய மேலாதிக்கப் போட்டியுடன் தொடர்புபடுகிறது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு மேலும் அதிகரிப்பதை விரும்பாத இந்தியாவும் தனது உதவியை அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்.  சீனாவும் இந்தியாவும் மாத்திரமல்ல, அமெரிக்கா மற்றும் அதன் அணியைச் சார்ந்த மேற்கத்திய நாடுகளும் ஜப்பானும் சும்மா இருக்கப்போவதில்லை. தற்போது இந்த அணிக்கும் இந்தியாவுக்குமிடையே சீனாவுக்கு எதிரான பொதுப் புரிந்துணர்வுண்டு. உள்நாட்டு அரசியல் நிலைமை சீனாவுக்குச் சார்பாக இருப்பது தெளிவு. ஆயினும் வல்லரசுப் போட்டிமிகுந்த பிராந்திய சூழல் புதிய அரசாங்கத்திற்கு  அனுகூலங்களை மட்டுமன்றி கட்டுப்பாடுகளையும் கொடுக்கிறது. தற்சமயம் ஜனாதிபதியின் உடனடியான முன்னுரிமை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தன் விருப்பிற்கேற்ப யாப்பில் திருத்தங்களை கொண்டுவருவதே.  பொதுத் தேர்தல் முடியும்வரை நாமும் பொறுத்திருப்போம்.


[1]பின்வரும் கட்டுரைகளைப்பார்க்கவும்: அபிவிருத்தி மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா?//samuthran.net/2017/04/24/அபிவிருத்தி-மனித-மேம்ப/ 

இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும்:https://samuthran.net/2017/06/22/இலங்கையின்-வடக்கு-கிழக்க/

காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ பற்றி ஒரு பார்வை: II

சமுத்திரன்

மலையகத் தமிழ் சமூகம்

பல்வேறு நகர்ப்புறங்களில் வாழும் அருந்ததியர் சமூகமே பிரதான பேசுபொருளாகவிருக்கும் இந்தத் தொகுப்பில் மலையகத் தமிழர் என அடையாளப்படுத்தப்படும் ‘இந்திய வம்சாவழியினர்’ பற்றி ‘மலையகத் தலித்துக்கள்  சில புரிதல்கள்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழ்த் தேசம் பற்றிச் சில முக்கியமான விடயங்களைச் சொல்வதுடன் விவாதத்திற்குரிய அரசியல் கேள்விகளையும் எழுப்புகிறது. மலையகத் தமிழ்த் தேசியத்திற்கு இந்தக் கட்டுரை பிரதான முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆயினும் அந்த விடயத்தை அரைகுறையில் விட்டுள்ளதாகவே படுகிறது. முதலில் ஒரு புள்ளிவிபரம் பற்றிய திருத்தம். 136ஆம் பக்கத்தில் பின்வருமாறு சொல்லப்படுகிறது,‘இத்தேசத்தின் அதிக பெரும்பான்மை மக்கள் பிரிவினர் பெருந்தோட்டத்துறை எனும் குறிப்பிட்ட உற்பத்தி நடவடிக்கையுடன் தம்மை பிணைத்துக்கொண்ட கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.’ பல காலமாக மலையகத் தமிழரில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிக பெரும்பான்மையினராக இருந்தனர் என்பது உண்மையாயினும் கிடைக்கும் புள்ளிவிபரங்களின்படி தற்போது மலையகத் தமிழ்ச் சனத்தொகையில் ஒரு சிறுபான்மையினரே பெருந்தோட்டத் தொழிலாளர்கள். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தினதும் உள்நாட்டு இடம்பெயர்வுகளினதும் விளைவுகளால் மலையகத் தமிழரின் சனத்தொகைப் புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மை பற்றிப் பிரச்சனைகள் உண்டு. ஆயினும் ‘இலங்கையில் மொத்தமாக 15 இலட்சம் மலையகத் தமிழர்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு லட்சத்திற்குக் குறைவானவர்களே தோட்டத் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர்’(சந்திரபோஸ் & ரமேஷ், 2018: xxxv).இதன்படி மலையகத் தமிழர்களில் 13 வீதத்திற்கும் குறைவானோரே இன்று தோட்டத் தொழிலாளர்களாயிருக்கிறார்கள். இந்த இலக்கத்திற்குப் பின்னால் மலையகத் தமிழ்ச் சமூகத்தில் பலமுக்கியமான மாற்றப் போக்குகள் இருக்கின்றன என்பதைச் சமீபகால ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த வகையில் 2018 ஆண்டு ஏ. எஸ். சந்திரபோஸ் மற்றும் இரா. ரமேஷ் தொகுத்து வெளியிட்டுள்ள ‘இலங்கையில் தேயிலைப் பெருந்தோட்டச் சமூகம் 150 வருடங்கள் (1867/2017)’ எனும் தலைப்பிலான நூல் பல பயன்மிக்க ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. ஆயினும் சாதியத்தின்மீது இந்த மாற்றப் போக்குகளின் தாக்கங்கள் பற்றி விரிவான, ஆழமான ஆய்வுகள் இனிமேல்தான் வெளிவரவேண்டும். 

மலையகத் தமிழ் சமூகத்தில் தலித்துக்கள் பெரும்பான்மையினராகவும் ஆதிக்க சாதியினர் சிறுபான்மையினராகவும் இருக்கையில் சிங்கள மற்றும் வடக்குக் கிழக்குத் தமிழ் சமூகங்களில் ஆதிக்க சாதியினரே அளவுரீதியிலும் பெரும்பான்மையினர் எனும் ஒப்பீட்டுரீதியானத் தகவலைத் தருகிறது சரவணனின் கட்டுரை. அத்துடன் அளவுரீதியில் சிறுபான்மையாயிருக்கும் ஆதிக்க சாதியினர் தலித்துக்கள்மீது தீண்டாமையைத் தவிர வேறு பல கொடுமைகளைப் புரிவது பற்றிக் கூறுகிறது. சமீபத்தில் வெளிவந்த வேறு ஆய்வுகளின்படி இந்த ‘உயர்சாதியினரில்’ ஒரு தொகையினர் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது (ஜெயசீலன் & சந்திரபோஸ், 2018). இதுவும் ஆதிக்கசாதியினரின் தொகையைக் குறைக்க உதவியுள்ளது. மலையகத் தமிழர்களில் மிகப்பெரும்பான்மையினர் – 81 வீதத்தினர் – தலித்துக்கள் எனும் முக்கியமான தகவலைச் சுட்டிக்காட்டியபடி ‘இது மலையகத் தேசத்தை தலித் தேசமாக அடையாளப்படுத்துகிறது’ எனக் கூறும் சரவணன் மேலும் ‘மலையகத் தேசத்தின் அடையாளமானது உழைக்கும், வர்க்க தலித்திய மற்றும் பெண்களின் நேரடி பங்கேற்பின் உருவாக்கத்திலானதாகவுள்ளது. மலையகத் தேசத்தின் இப்பண்பானது, தேச உருவாக்கங்களில் மிகவும் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றே எனக் கூறலாம்’ எனக் கூறுகிறார் (ப136). மலையகத் தமிழ்த் தேசியத்தின் உருவாக்கம் பற்றிய இந்தக் கருத்தைச் சமகால நிலைமைகளுடன் இணைத்துப் பார்த்தல் பயன் தருமென நம்புகிறேன்.  மலையகத் தமிழ் சமூகத்தின் மாற்றப் போக்குகளை மனதிற்கொண்டு சமகாலத்தில் மலையகத் தமிழரின் தேசிய உருவாக்கத்தின் பண்புகளை இனங்காணல் அவசியம். இனத்துவ அரசியலின் மேல்நிர்ணய ஆற்றலுக்குட்பட்ட இலங்கையின் அரசியல் பொருளாதார, கலாச்சார சூழலில் மலையகத் தமிழ் தேசியத்தின் உருவாக்கத்தின் பரிணாமப் போக்கினை அவதானித்தல் அவசியம். இது ஒரு ஆய்வுக்குரிய விடயம். 

நான் மேலே குறிப்பிட்டுள்ள 2018ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வுத் தொகுப்பில் இது தொடர்பான பல கட்டுரைகள் உள்ளன. இங்கு ஒரு சில தகவல்களை மட்டும் குறிப்பிடலாம். மலையகத் தமிழ் சமூகத்தில் அறிவாளர்களை உள்ளடக்கிய ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகும் போக்குத் தொடர்கிறது. சமீப தசாப்தங்களில் ஒரு கணிசமான மலையகத் தமிழர்கள் நிரந்தரமாக வடக்கு கிழக்குக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இன்னொரு புறம் இளம் மலையகத் தமிழரின் கொழும்பு, மற்றைய நகர்களை நோக்கிய நகர்ச்சி தொடர்கிறது. மலையகமே தாயகமெனும் அடையாளம் தொடரும்போதும், ஒரு புறம் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள வடக்குக் கிழக்கில் நிரந்தரமாகக் குடியமரும் போக்கு, மறுபுறம் தெற்கிலே பெரும்பான்மை சிங்கள இன மக்கள் மத்தியில் வாழ்க்கையை அமைக்கும் போக்கு. எனவே பல்வேறு காரணங்களால் மலையகத் தமிழ் சமூகத்தின் புவியியல் நாட்டிற்குள் மலையகத்திற்கும் அப்பால் பரந்து விரியும் போக்குகள் அந்தச் சமூகத்தவரின் கூட்டு அடையாளத்தை எப்படி மீள்வரையறுக்கின்றன, இந்த நிலைமைகளில் அந்த மக்களின் சுயநிர்ணய உரிமையை அரசியல்ரீதியில் எப்படிக் கையாள்வது போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்த மாற்றப் போக்குகளுக்கு மத்தியில் மலையகத் தமிழர்களில் பெரும்பான்மையினர் தொழிலாள வர்க்கத்தினர், தலித்துக்கள், வருமானம் மற்றும் மனிதமேம்பாட்டைப் பொறுத்தவரை வறியவர்கள் எனும் யதார்த்தமும் கண்கூடு. இதில் பெண்கள் பால்ரீதியான ஊதிய வேறுபாட்டிற்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர் என்பதும் இந்த யதார்த்தில் அடங்கும். 

மலையகத் தமிழரின் கோரிக்கைகளும் போராட்டங்களும் வர்க்கம், பால், சாதி, இனம், பிரதேசம் என ஒன்றுடன் மற்றவை தொடர்புள்ள பல பரிமாணங்களைக் கொண்டவை. இவற்றின் ஊடறுப்பைக் (intersection)கிரகிக்க உதவும் நடைமுறை சார்ந்த அணுகுமுறை தேவை.  

மலையகத் தமிழர் எனும் அடையாளத்திற்கு மாறாக இந்த மக்களைத் தொடர்ந்தும் இந்திய வம்சாவழித் தமிழர்களென்றே அடையாளப்படுத்த வேண்டுமெனெ அந்தச் சமூகத்தில் அரசியல் செல்வாக்குமிக்க ஒருசாரார் வலியுறுத்தி வருகின்றனர். மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் திலகராஜா, அருணாசலம் அரவிந்தகுமார், மற்றும் சுரேஷ் வடிவேலு போன்ற அரசியல் தலைவர்கள் இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் மலையகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மூக்கையாவின் கருத்தில்:

‘கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாகவே இலங்கைவாழ் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களை மலையகத் தமிழர்கள் என்றழைக்கவேண்டும் என்ற கருத்து கணிசமாக இச்சமூகத்து மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. .. சமூகத்தின் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எம்மை இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று அடையாளம் செய்து கொள்வதிலேயே பல நன்மைகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்று நியாயமான வாதங்களை முன்வைத்தனர். மறுபுறத்தில் தம்மை இந்தியாவுடன் அடையாளப்படுத்திக்கொள்வது அரசியலில் பின்னடைவுகளுக்கு ஆளாக்கும் என்ற கருத்தில் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் சிலரும் அரசியலில் இந்திய எதிர்ப்பு சிந்தனையுடனான ஒரு சிலரும் தம்மை மலையகத் தமிழர் என்று கூறிக் கொள்வதே சிறந்தது என வாதிட்டு வந்துள்ளனர்.’ (மூக்கையா, 2018:212-213).[1]

இந்தக் கருத்து இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் மத்தியில் மலையகத்தமிழர் எனும் கூட்டு அடையாளம் ஒரு பரிணாமப் போக்கில் தொடர்ச்சியாக உருவாக்கம் பெறுகிறது எனும் கருதுகோளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மலையகத் தமிழர் எனும் கூட்டு உணர்வும் தேசிய அடையாளமும்  எந்த அளவிற்கு அந்த மக்களிடம் பதிந்துள்ளன எனும் கேள்வி எழுகிறது. இதுவரை இந்த மக்களின் அடையாளம் பற்றிய சர்ச்சையும் விவாதங்களும் சில குறிப்பிட்ட குழுக்களுக்கப்பால் செல்லவில்லையா?  இலங்கைக்குப் புலம்பெயர்ந்து 150-200 வருடங்களுக்குப் பிறகு ‘இந்திய வம்சாவழித் தமிழர்’ அல்லது ‘மலையகத்தமிழர்’ என்ற இரண்டில் எது மக்களின் கூட்டு அடையாள உணர்வில் மேலோங்கியுள்ளது?இந்தச் சமூகத்தின் புவியியல்ரீதியான மற்றும் அதனுடன் இணைந்த அரசியல் பொருளாதார மாற்றங்களின் தாக்கங்கள் எத்தகையன?காலப்போக்கில் நாட்டின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் தம்மை இலங்கைத் தமிழராக இனங்காணும் போக்கே இந்தச் சமூகத்தில் பலம் பெறும் எனக் கருதுவது தவறா?மறுபுறம் இன அடையாள மாற்றப் போக்கினை வலுவூட்டும் பேரினவாதத் திட்டத்தின் தாக்கம் எத்தகையது? அறிவாளர்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் வகிக்கும் பங்குகள் எத்தகையன?   இவை விவாதத்திற்குரிய கேள்விகள். இந்தக் கேள்விகள் விவாதத்தின் கட்டமைப்பைத் தன்மைரீதியில் மீள்வரையறுக்கின்றன.

புகலிடத்தில் சாதியம்

பொதுவாக வெளிநாடுகளில் குடியேறியிருக்கும் சமூகங்கள் தமது மரபுகளையும் பல பழக்கவழக்கங்களையும் பலவழிகளால் பல்வேறு வடிவங்களில் மீளுற்பத்தி செய்வதை காண்கிறோம். மொழி, மதம் மற்றும் கலாச்சார செயற்பாடுகள் போன்றன புலம் பெயர்ந்து வாழும் ஒரு சமூகத்தவரை இணைக்கும் அடையாள உருவாக்கத்தின் அம்சங்களாகக் கருதப்படுகின்றன. ஆயினும் இந்தப் போக்கு அதே சமூகத்திற்குள் வேறுபடுத்தலுக்கு, ஏன் பாகுபாட்டுக்குக்கூட, உதவும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் மீளுருவாக்குவதையும் காணலாம். ஆபிரிக்கர்களும் ஆசியர்களும் எதிர்கொள்ளும் நிறவாதப் பிரச்சனைகள் நிலவும் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சமூகங்களிற்குள் சாதியம் மற்றும் ஆணாதிக்கத்துடன் பிரதேசவாதச் சிந்தனையும் தொடர்வது உண்மையே. நோர்வேயில் வாழும் ஈழத்தமிழ் சமூகத்தில் தொடரும் சாதியம், ஆணாதிக்கம், மதவாதம், பிரதேசவாதம் பற்றிய தனது அவதானிப்புகளையும் சிலதனிப்பட்ட அநுபவங்களையும் ‘வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார். 

சரவணன் தொலைபேசியில் பேசிய தமிழைக் கொச்சைத் தமிழெனக் கேலிசெய்யும் யாழ்ப்பாணத் தமிழர். அவருக்கு ‘ஏன் நீங்கள் எங்களைப் போல கதையுங்களேன். இல்லையெண்டா இப்பிடித்தான் எல்லாரும் கேலி செய்வாங்க’ எனப் புத்திமதி கூறும் நண்பி. இந்தவகையான யாழ்மையப் பிரதேசவாதம் ஒருபுறம் மறுபுறம் தமிழ் சமூகத்திற்குள்ளே தொடரும் சாதியப் பாகுபாடுகள். ஆனால் இங்கு ஒரு விடயத்தை நினைவூட்டுது நல்லது. இங்கு வாழும் தமிழ் சமூகத்திற்குள் நிலவும் சாதியம் இந்த நாட்டின் சமூக அமைப்பிற்கும், அதன் அதிகார உறவுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் வெளிவாரியானது மட்டுமன்றி இந்த சமூகத்தின் செல்வாக்குமிக்க ஜனநாயக விழுமியங்களுக்கும் முரணானது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இங்கு வாழும் ஆசிய, ஆபிரிக்க நாட்டவர்கள் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனை நிறவாதம் தொடர்பானது. இதற்கு ஒரு வெளிப்படையான ‘வர்ணத் தோற்றம்’ இருந்தாலும் இது இந்துமதத்தின் வர்ணாசிர முறையுடன் தொடர்புடையதல்ல!

புலம்பெயர்ந்த தமிழ் சமூகங்களில் ஈழத்தில் சாதியம் பற்றிய உரையாடல்களில் ‘அங்கே சாதியம் இப்போ இல்லை என்றும், அது இப்போ ஒரு சமூகப் பிரச்சனையல்ல’ போன்ற கருத்துக்களை கேட்கிறோம். இங்கேயே இன்னும் சாதியத்தின் செல்வாக்குத் தொடரும்போது அங்கே அதன் இன்றைய நிலை என்ன எனும் கேள்வி எழுகிறது. அங்கே சாதியச் சிந்தனையும் அதன் நடைமுறைகளும் உள்ளூர் நிகழ்வுகளில், கோவில் சடங்குகளில், அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்வதைக் காண்கிறோம்.

சில முடிவுரைகள்

‘தலித்தியம்’ இலங்கைத் தமிழ் சமூகத்தில், குறிப்பாக இந்திய வம்சாவழி/மலையக தமிழ்ச் சமூகத்தில் இதுவரை எத்தகைய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?  

இந்தியாவில் தலித்தியமெனும் கருத்துருவின் வருகை அந்த நாட்டின் சமூக, பண்பாட்டு, அரசியல் கதையாடல்களிலும் செயற்பாடுகளிலும் குறிப்பிடத்தகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.வர்ணாசிரமத்தை பேணுவதை நோக்காகக் கொண்ட காந்தியினால் ‘ஹரிஜனர்’, அதாவது கடவுளின் பிள்ளைகள், என்றும் இந்திய யாப்பின்படி சட்டபூர்வமாக ‘பட்டியல் சாதிகள்’ அல்லது ‘அட்டவணைச் சாதிகள்’ (Scheduled castes) என்றும் அழைக்கப்பட்டவர்கள், மற்றும் இவர்களைப் போன்று நசுக்கப்பட்டவர்களான பட்டியல் ஆதிவாசிகள் (Scheduled tribes)தம்மைத் தலித்துக்கள் எனப் பெருமையுடன் அடையாளப்படுத்தியது அவர்களின் வரலாற்றில் ஒரு சமூக, பண்பாட்டு, அரசியல் முக்கியத்துவம் மிக்க திருப்பத்தின் அறிவிப்பானது. இந்தியாவின் வடமொழிகளில் ‘நசுக்கப்பட்டோர்’, ‘சிதறுண்டவர்கள்’ எனும் அர்த்தங்களைக் கொண்ட சொல்லான ‘தலித்’ அந்த நிலைக்காளான மக்கள் தமது தாழ்த்தப்பட்ட நிலைமையை உணர்ந்து அதற்கு எதிராக அணிதிரளும் கூட்டு அடையாளத்தையும் பலத்தையும் குறிக்கும் மாற்றுக் கோட்பாடாகப் பரிணமித்தது. இந்தியாவில் தலித்திய இயக்கம் பல மட்டங்களில் தாக்கமுள்ள பங்குகளை வகிக்கிறது. ஆயினும் அங்கு தலித்துக்களிடையே காணப்படும் படிநிலைச் சாதியமைப்பினதும் வர்க்க மற்றும் சமூக அந்தஸ்து வேறுபடுத்தல் போக்குகளினதும் விளைவுகளான பல்வகைமை தலித்தியத்தின் அடையாள அரசியலின் ஒருமைப்பாட்டு நோக்கத்திற்கு நிரந்தர சவாலாகியுள்ளது. தலித்துக்களை உள்ளடக்கும் சாதியமைப்பின் அடிமட்டத்திலுள்ளோர் உயர்மட்ட தலித்துக்களால் ஓரங்கட்டப்படுவதையும் காண்கிறோம். 

இலங்கையில் மலையகத்தமிழர் மத்தியில் வர்க்கரீதியான தொழிற் சங்கங்களும் இன அடிப்படையிலான அரசியல் அமைப்புக்களுமே முக்கிய இடங்களைப் பெற்றுள்ளன.  சாதி அடிப்படையில் அருந்ததியர் தலித்துக்கள் மத்தியிலும் ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே உள்ளனர். இலங்கையில் தலித்தியம் செயற்பாடுமிக்க ஒரு இயக்கபூர்வமான வளர்ச்சியைக் காணவில்லை. இதற்கான காரணங்களைத் தெளிவாக அறியவேண்டும். அருந்ததியர் சமூகத்தில் பல வழிகளுக்கூடாக இடம்பெறும் சாதி அடையாள மறுப்பு அல்லது அடையாளத் தற்கொலை பற்றி சரவணன் ஆவணப்படுத்தியுள்ளார். அவர் தன்னை அருந்ததியன் என அடையாளப்படுத்தியதை, அருந்ததியர் சமூகத்தின் பிரச்சனைகள் பற்றி எழுதுவதை அவரின் உறவினர்கள் விரும்பவில்லை. இவை ‘தலித்தியம்’ பிரதிநிதித்துவப்படுத்தும் உணர்வுபூர்வமான எதிர்ப்பு அடையாள அரசியலுக்கு மாறான உதாரணங்கள். 

தலித்தியக் கதையாடல் இலங்கைக்குவருமுன் ஒரு காலகட்டத்தில் நாட்டின் வடபகுதியில் சாதியத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் செயற்பட்டன. 1960களில் யாழ்ப்பாணத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி (மாஓயிச) சாதியத்திற்கு, குறிப்பாகத் தீண்டாமைக்கு, எதிராக வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்பிப் போராடியது. மற்றைய இடதுசாரிக் கட்சிகளும் அங்கே சாதியத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டன. ஆனால் இந்தப் போக்கு 1970 களுக்குப்பின் தொடரவில்லை. இது குடாநாட்டிற்கு அப்பால் செல்லவில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். 

சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றிய கணிப்புக்கள் என்ன? இலங்கையில் மனித மேம்பாட்டுச் சந்தர்ப்பங்களுக்கும் ஜனநாயக உரிமைகளுக்குமான பரந்த வெகுஜன அரசியலின் தேவை பலமட்டங்களில் உணரப்படுகிறது. அத்தகைய ஒரு அரசியலுக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுடன் தொடர்புகளை வளர்ப்பது சாதிய எதிர்ப்பு சக்திகளின் இன்றைய தேவை இல்லையா?

சாதிய எதிர்ப்பு அரசியலின் நோக்கம் சாதிய படிநிலையை, அடக்குமுறையை, அதாவது மனிதரைச் சாதி அடிப்படையில் அடையாளப் படுத்தும் வழக்கத்தை, அதை தொடர உதவும் அதிகார உறவுகளை, இல்லாதொழிப்பதாகும்.  ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான அணிதிரட்டல் சாதிய அடையாளங்களை,விசேடமாக எதிர்ப்பைப் பிரதிபலிக்கும் நோக்கிலே மீள்வரையறுக்கப்பட்ட அடையாளங்களை,மையப்படுத்தும் அரசியலை அறிமுகம் செய்கிறது. சாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முக்கிய தேவையாயிருக்கும் இந்த அரசியல் சாதி அடையாளத்தை நிரந்தரமாகத் தக்கவைக்க உதவும் அரசியலாக மாறுவது அதன் ஆரம்ப நோக்கத்திற்கு எதிரானது என்பதைச் சொல்லத் தேவையில்லை.  இந்த முரணான மாற்றப்போக்கினைத் தவிர்ப்பதற்கு சாதிய எதிர்ப்புப் போராட்டம் பரந்த ஆழமான ஜனநாயக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களுடன் நெருக்கமான பங்காளியாக இருத்தல் அவசியம்.   கடந்த பல தசாப்தங்களாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையிலிருக்கும் நவதாராள முதலாளித்துவக் கொள்கைள் பாரிய ஏற்றத் தாழ்வுகளை வளர்த்து வறிய தலித்துக்கள் உட்படப் பெருந்தொகையானோரை விளிம்பு நிலைக்கு தள்ளியவண்ணமிருக்கின்றன. நவதாராள உலகமயமாக்கலில் மனித சுதந்திரம், சமசந்தர்ப்பம் என்பன மக்களை ஏமாற்றும் அர்த்தமற்ற சுலோகங்களாகிவிட்டன. இந்தப் போக்கிற்கு எதிராக ஜனநாயகத்திற்கும் தக்கவைக்கவல்ல தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கும் போராடும் சக்திகளுடன் சாதியத்திற்கு எதிரான சக்திகள் தமது கோரிக்கைகளுடன் இணைவது இன்றைய காலகட்டத்தின் தேவை.   

(2019 August 18ஆம் திகதி ஒஸ்லோவில் இடம்பெற்ற சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ நூலின் வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)


[1]மூக்கையா, மா.செ. (2018), இலங்கையில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களின் மக்கள் தொகையும் அதன் பிரதான பண்புகளும், ஏ. எஸ். சந்திரபோஸ் மற்றும் இரா. ரமேஷ் (பதிப்பாசிரியர்கள்), இலங்கையில் தேயிலைப் பெருந்தோட்டச் சமூகம் 150 வருடங்கள் (1867 – 2017).எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 2018.

காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ பற்றி ஒரு பார்வை:I

சமுத்திரன்

‘தலித்தின் குறிப்புகள்’ பிரதி ஒன்றினை எனக்குத் தரும்போது சரவணன் ‘இது இலேசான வாசிப்புக் கட்டுரைகளைக் கொண்டது’ எனக் கூறியது நினைவுக்கு வருகிறது. ஆயினும் இந்தக் கட்டுரைகளை வாசித்தபோது எனக்குப் பல கனதியான விடயங்கள் நினைவுக்கு வந்தன. இங்கு அவை எல்லாவற்றையும் பற்றிச் சொல்வது சாத்தியமில்லை. ஆனால் ‘தலித்தின் குறிப்புகள்’ என் சிந்தனையைப் பலமாகத்தூண்டி வரலாறு மற்றும் கோட்பாடு தொடர்பான கேள்விகளுக்கு இழுத்துச் சென்றன என்பது உண்மை. இந்த அனுபவத்தின் உதவியுடன் சரவணனின் நூல் பற்றியும் அதன் பேசுபொருளுடன் தொடர்புள்ள சில பொதுவான அரசியல் விடயங்கள் பற்றியும் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

1990களிலிருந்து 2017 வரையிலான காலகட்டத்தில் எழுதிப் பிரசுரிக்கப் பட்ட 30 கட்டுரைகளுடன் ஆதவன் தீட்சண்யாவின் அணிந்துரை மற்றும் ஆசிரியரின் ‘என்னுரை’ யையும் உள்ளடக்குகிறது இந்தத் தொகுப்பு. கட்டுரைகளின் ஒரு பகுதி சரவணன் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் ‘சரிநிகர்’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. அப்போது அவர் ‘அருந்ததியன்’ எனும் புனைபெயரில் எழுதினார். தன்னை அடையாளப்படுத்த இந்தப் புனைபெயரை அவர் தேர்ந்தது குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது.  மற்றைய கட்டுரைகள் அவர் நோர்வேக்குப் புலம்பெயர்ந்த பின்னர் எழுதப்பட்டு வெவ்வேறு வெளியீடுகளில் பிரசுரிக்கப்பட்டன. ஏறக்குறைய மூன்று தசாப்த காலம் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரைகளின் பிரதான பேசுபொருள் சாதியம், தலித்தியம் எனலாம், அதிலும் அருந்ததியர் சமூகம் மையமுக்கியத்துவம் பெறுகிறது. அதேவேளை இந்தப் பேசுபொருளுக்கும் இலங்கையில் மேலோங்கி நிற்கும் இனத்துவ அடையாள அரசியலுக்குமிடையிலான உறவும் இந்தத் தொகுப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இலங்கையின் ‘இந்திய வம்சாவழித்’ தமிழ் சமூகத்தின் மிகப் பெரும்பான்மையினர் தலித்துக்கள் என்பதால் அவர்களின் சமூக, கலாச்சார, அரசியல் பிரச்சனைகள் பெரும்பாலான கட்டுரைகளின் கருப்பொருட்களாகின்றன. மற்றைய கட்டுரைகளில் போரின் விளைவாக நோர்வே போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த வடக்குக் கிழக்குத் தமிழ் சமூகத்தில் தொடரும் சாதியம் மற்றும் அதன் நடைமுறை வடிவங்கள்பற்றிய அவருடைய அவதானிப்புக்களையும் விளக்கங்களையும் சரவணன் பகிர்ந்து கொள்கிறார். பல இடங்களில் தனது வாழ்க்கை அனுபவங்களையும் நேரில் கண்டவற்றையும் உயிர்ப்புடன் எழுதுகிறார். கட்டுரைகளில் இழையோடும் சுயவரலாறு சொல்லும் நடை இந்தத் தொகுப்பின் சிறப்பம்சம். 

சரவணன் எழுதுகிறார்:‘தலித்தியம் பேசுவது என்பது அவ்வளவு இலகுவானதுமில்லை, இன்பமானதுமில்லை. உயர்த்தப்பட்டவர்கள் பேசும்போது அவர்களுக்கு ஒரு மதிப்பும் கிடைத்துவிடுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பேசும்போது அவர்களின் அடையாளம் வெளிப்பட்டு அவமானப் பார்வைக்கு உள்ளாக்கப்பட்டு விடுகிறார்கள். தலித் மக்களின் உரிமை குறித்து பேச சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து குரல்கள் உரியவகையில் பதியப்படாததன் அரசியல் இதுதான்.’ சரவணன் தலித்தியம் பற்றிப் பேசுவதையோ எழுதுவதையோ அவருடைய உறவினர்கள், நண்பர்கள் பலர் விரும்பவில்லை. அவர் தனது தலித் அடையாளத்தைப் பெருமிதமாக வெளிப்படுத்தித் தலித்துக்களின் பிரச்சனைகள் பற்றி எழுதத் துணிந்ததால் அவரை விட்டு விலகிய உறவினர்களுமுண்டு என்பதையும் பதிவு செய்கிறார். பலகாலமாக இந்தியாவில் பரவிய தலித்தியப் போக்குகளினால் அவர் 1990களில் ஆகர்சிக்கப்பட்டார் என்பதையும் அறியமுடிகிறது. இந்தக் கட்டுரைகளுக்கூடாகத் தலித்தியம் எனும் பதத்தையும் அது சொல்லும் கோட்பாட்டையும்  இலங்கையில் சாதியம் பற்றிய கதையாடலுக்கு அறிமுகம் செய்துள்ளார். இலங்கையில், விசேடமாக இந்த நூலில் பிரதான முக்கியத்துவம் பெறும் சமூகங்களில், சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் இதுவரை  கருத்தியல்ரீதியிலும், அரசியல்ரீதியிலான அணிதிரட்டலைப் பொறுத்தவரையிலும் தலித்தியத்தின் பங்கு என்ன என்ற கேள்வி வாசகர் மனதில் எழலாம். இது ஒரு முக்கியமான கேள்வி. ஆயினும் இது பற்றி ஆழ, முழுமையாக ஆராய்வது இங்கு சாத்தியமில்லை. இந்தத் தொகுப்பின் உள்ளடக்கங்களை விமர்சனரீதியில் அணுகும்போது தலித்தியம் வரையறுக்கும் அடையாள அரசியல் பற்றிச் சில கேள்விகள் எழுகின்றன. அவைபற்றி இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். 

‘தலித்திய குறிப்புகள்’ பேசும் விடயங்களும் அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுப்பும் கேள்விகளும்   வாசகரை ஒரு நீண்ட வரலாற்றுக் காலத்துக்குள், அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரித்தானிய கொலோனிய ஏகாதிபத்திய காலத்திலிருந்து நவதாராள உலகமயமாக்கல் தொடரும் இருபத்தியோராம் நூற்றாண்டின் சமகாலம்வரை, அழைத்துச் செல்கிறது. இந்தக் காலகட்டத்தில் இலங்கையின் ‘இந்திய வம்சாவழி’ மக்களின் வரலாறு தனியே மாற்றமின்றி முழுக்க முழுக்க அசைவற்று உறைந்து போய் நின்றுவிடவில்லை. அது ஒரு புறம் மாற்றத்தையும் மறுபுறம் மாற்றத்தைத் தடுக்கும் நிறுவனங்களின், விழுமியங்களின் தொடர்ச்சியையும் உள்ளடக்கிய போக்குகளைக் கொண்டுள்ளது என்பதே உண்மை. இந்தப் போக்கினைப் புரிந்து கொள்ள இந்தத் தொகுப்பின் கட்டுரைகளும் உதவுகின்றன. 

ஆயினும் இந்த நூலை வாசிக்கும்போது நிரப்பப்படவேண்டிய இடைவெளிகள் சிலவற்றையும் சந்திக்கிறோம்.  இந்தத் தொகுப்பின் பயன்பாட்டினை நன்கு புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் இதில் உள்ளடக்கப்பட்ட கட்டுரைகள் பேசும் விடயங்களின் வரலாற்றுக் காலகட்டப் பின்னணிபற்றிய ஒரு விரிவான குறிப்பு உதவியாயிருந்திருக்குமென நம்புகிறேன்.அத்தகைய ஒரு அறிமுகம் இந்தத் தொகுப்பினைச் மேலும் சிறப்பித்திருக்கும். அந்தக் குறையை நிரப்புவது எனது நோக்கமில்லை. ஆயினும்  எனது உரையை வரலாற்றுப் பின்னணி பற்றிய சில குறிப்புகளுடன் ஆரம்பிக்க வுரும்புகிறேன். அதைத் தொடர்ந்து அருந்ததியர் சமூகம், மலையகத் தமிழர், புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகம், மற்றும் இனத்துவ அரசியல் பற்றி இந்த நூல் கூறும் விடயங்கள் பற்றிப் பார்ப்போம். இறுதியில் ஒரு கலந்துரையாடலை நோக்கிச் சில முடிவுரைகள். 

வரலாற்றுப் பின்னணி

 நீண்ட வரலாற்று நோக்கில் இலங்கையின் தமிழர்கள், சிங்களவர்கள் அனைவரும், அல்லது இவர்களில் மிகப் பெரும்பான்மையினர், இந்திய வம்சாவழியினர்தான். ஆனால் ‘இந்திய வம்சாவழித் தமிழர்’ எனும் பதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில்  தமிழகத்திலிருந்து பிரித்தானிய கொலோனிய ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்காகப் புலம் பெயர்க்கப்பட்டு இலங்கைக்கு வருவிக்கப்பட்ட மக்களையே குறிக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராச்சியம் கொடிகட்டிப் பறந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் அந்தக் கொலோனிய கிரீடத்தின் அதி உயர்ந்த மணிக்கல்லென விளங்கிய இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மற்றைய கொலொனிகளுக்கு தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர். இதற்கு முன்பிருந்தே ஒரு சர்வதேச கொலோனிய தொழிற்பிரிவு உருவாகிக்கொண்டிருந்தது. இது கொலோனியத்தின் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைத் தன்மைகளில் முக்கியமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை பிரிட்டிஷ், பிரெஞ்ச், ஒல்லாந்த கொலொனிகளில் அடிமைகளே தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர். 1833இல் பிரிட்டிஷ் கொலொனிகளில் அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. இதற்குப்  பின்னர் வேறுவழிகளால் கட்டுப்படுத்தப்பட்ட, அதாவது சுதந்திரமற்ற நிலைமைகளில், தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து கொலொனிகளுக்கு ஏற்றுமதி செய்யும் போக்கு ஆரம்பமாகி 1920கள் வரை தொடர்ந்தது.[1] இப்படியாக ஏற்றுமதி செய்யப்பட்ட தொழிலாளர்கள் தமது தாயகத்தின் சாதியமைப்பினால் ஒடுக்கப்பட்டு கொலோனிய அரசாங்கத்தினால் கவனிக்கப்படாது பஞ்சத்தில் அல்லது அதன் விளிம்புகளில் வாழ்ந்து வந்தார்கள். காலாதி காலமாக இந்திய சாதியமைப்பினால் நிலமற்றவர்களாக்கப்பட்ட மக்கள், அதாவது தலித்துக்கள், விரிந்து செல்லும் பிரித்தானிய கொலோனிய சாம்ராச்சியத்தின் பல இடங்களில் தோன்றிய உழைப்பாளர் பற்றாக்குறையை நிரப்பும் மலிவான மனிதவள இருப்பாகப் (reserve) பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் பல்வேறு கொலொனிகளில் முற்றிலும் பரிச்சயமற்ற, இலாபத்தை நோக்காகக் கொண்ட உற்பத்தி அமைப்புக்குள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இணைக்கப்பட்டனர்.

இலங்கையில் 1815இல் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியபின் 1860களிலேயே பிரிட்டிஷ் பெருந்தோட்ட முதலீட்டாளர்கள் தேயிலைத் தோட்டங்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர். ஆயினும் அதற்கு மூன்று நான்கு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் இலங்கைக்குப் புலம்பெயரும் போக்கு ஆரம்பித்துவிட்டது. அப்படி வருவிக்கப்பட்டவர்கள்தேயிலைக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட கோப்பித் தோட்டங்களில் வேலைசெய்தார்கள். ஆனால் கோப்பிப் பயிரை அழிக்கும் வியாதியின் பரவலால் அந்த உற்பத்தி கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தேயிலை உற்பத்தி பெருமளவில் ஊக்கிவிக்கப்பட்டது.மலைநாட்டில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு உகந்த செழிப்பான நிலங்கள் காடுகளாயிருந்தன. காடுகளை அழித்துத் தேயிலைத் தோட்டங்களாக மாற்றுவதற்கும் மற்றைய தேவைகளுக்கும் வேண்டிய தொழிலாளர்களை இலங்கையில் பெற முடியவில்லையெனக் கொலோனிய நிர்வாகிகளும் வெள்ளை முதலீட்டாளர்களும் குறைபட்டபடி இருந்தனர். கண்டிய விவசாயிகளை அவர்களின் உற்பத்தி சாதனங்களிலிருந்தும் கிராமிய சமூக அமைப்பிலிருந்தும் பெருமளவில் பலவந்தமாகப் பிரித்து வெளியேற்றித் தோட்டத் தொழிலாளர்களாக மாற்றுவது சாத்தியமில்லை என்பதை ஆட்சியாளர்கள் அநுபவரீதியாக உணர்ந்திருந்தனர். கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் அங்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் இழந்த பிரபுக்களின் தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சிகளில் விவசாயிகள் முக்கிய பங்கு வகித்தனர். இந்த வகையில் விசேடமாக 1848இல் இடம்பெற்ற கிளர்ச்சி ஆங்கிலேயருக்குச் சில பாடங்களைப் புகட்டியது. பிரபுக்கள் வர்க்கத்தை அந்நியப்படுத்திய தவறினை உணர்ந்த ஆட்சியாளர் அவர்களுக்கு மேனிலை அந்தஸ்தையும் சலுகைகளையும் வழங்கித் தமக்குச் சார்பானவர்களாக்கினர். இது மேலும் கிளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக உதவியது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கண்டிய விவசாயிகளைத் தோட்டத் தொழிலாளர்களாக மாற்றுவதற்குச் சாதகமற்ற இன்னுமொரு காரணத்தையும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. கண்டிய சிங்கள விவசாயிகள் தமது கிராமங்களில் நெற்செய்கையிலும் சுற்றுமுறை (‘சேனா’) விவசாயத்திலும் (shifting cultivation) ஈடுபட்டிருந்தனர். நெற்காணிகள் பள்ளத்தாக்கின் கீழ்மட்டத்தில் இருப்பதால் தேயிலைப்பயிர்ச் செய்கைக்கு உகந்தவையல்ல. ஆகவே கொலொனிய அரசு அவற்றைச் சுவீகரிக்க முயற்சிக்கவில்லை. விவசாயிகளின் பிரதான உற்பத்தி சாதனமான நெற்காணிகளிலிருந்தும் கிராமியப் பொருளாதாரத்திலிருந்தும் அவர்கள் பிரிக்கப்படவில்லை. அதாவது அவர்கள் உற்பத்திச் சொத்துக்களற்றவர்களாக்கப்பட்டு உழைப்பு சக்தியை விற்பதில் மட்டுமே தங்கியிருக்கும் பாட்டாளிவர்க்கமயப் படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் அவர்கள் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய முன்வரவில்லை.[2]

 ஆகவே பெருந்தோட்டத் துறையை விருத்தி செய்யத் தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். புலம்பெயர்ந்தநிலையில் பெருந்தோட்டங்களில் சுதந்திரங்கள் மறுக்கப்பட்ட சூழலில் குடியமர்த்தப்பட்டனர். அதேகொலோனிய காலத்தில் தோன்றிய நகரங்களுக்கு நகரசுத்தித் தொழிலாளர்கள் தேவைப் பட்டனர். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழகத்திலிருந்து அருந்ததியர் கொண்டுவரப்பட்டனர். 

 நீண்டகாலமாக இலங்கைக் கொலொனியைப் பொறுத்தவரை  தமிழகத்திலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவரும் சேவை கங்காணிகளின் பொறுப்பிலேயே இருந்தது. Kangani என்பது கண்காணிப்பவர் (மேற்பார்வையாளர்)எனும் சொல்லின் ஆங்கிலமயமாக்கலே. இவர்கள் தம்மையும்விடக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு ஒடுக்கப்பட்டு அடிக்கடி பஞ்சத்துக்காளாக்கப்படும் விளிம்புநிலையில் வாழும் தலித் கிராமிய மக்களை அவர்களுக்குத் தொழில்பெற்றுத்தருவதாகக் கூறி இலங்கைக்குக் கொண்டுவரும் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். சரவணன் உட்படப் பல ஆய்வாளர்கள் சொல்வதுபோல் இந்த முறைமை நடைமுறையில் தமிழகத்திலிருந்த சாதியமைப்பையும் இறக்குமதி செய்தது. ஆயினும் புலம்பெயர்க்கப்பட்டுக் கொலோனிய சுரண்டல், அடக்குமுறை அதிகார உறவுகளைக் கொண்ட அமைப்புக்குள் குடியமர்த்தப்பட்டனர் என்பது முக்கியமான மாற்றம் என்பதைக் குறிப்பிடவேண்டும்.  பெருந்தோட்டங்களில் ‘லயினறைகளில்’ குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்களைக் கட்டுப் படுத்தவும் வேலைநேரத்தில் மேற்பார்வை செய்யவும் அவர்களுக்கு மேலே கங்காணிகளிருந்தனர். நீண்டகாலமாக அவர்கள் வாழ்ந்த தோட்டமே அவர்களின் முழு உலகமாயிருந்தது. நகரசுத்தித் தொழிலாளர்களான அருந்ததியர் ஒரு சிதறுண்ட விளிம்புநிலைச் சமூகமாக நகர்ப்புறங்களில் வசதிகளற்ற சூழலில் குடியமர்த்தப்பட்டனர். தொழிற்புலங்களில், குடியிருப்புகளில் சாதிய அடக்குமுறைகள் தொடர்ந்தன. 

பெருந்தோட்ட முகாமை அமைப்பில் வர்க்கரீதியான சுரண்டலுக்குச் சாதிய மற்றும் பால்ரீதியான அடக்குமுறை துணைபோனது.  இந்திய சாதியமைப்புடன் இணைக்கப்பட்டிருந்த உற்பத்தி அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு மூலதனக் குவியலை நோக்காகக் கொண்ட கொலோனிய சுரண்டல் உற்பத்தி அமைப்பின் அங்கமானபோதும் அவர்கள் சாதியத் தளையிலிருந்து முற்றாக விடுபடவில்லை. தலித் சமுகங்களிடமிருந்து எதிர்வினைகள் தோன்றாமலில்லை.  இவைபற்றி நூலில் பேசப்படுவனபற்றி விரிவாகப் பின்னர் பார்ப்போம்.

இரண்டாம் உலகப்போரின் முடிவு பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் சூரியன் மறைந்து செல்லும் செய்தியையும் அறிவித்தது. ஆயினும் 1948 இல் வந்த இலங்கையின் சுதந்திரத்துடன் இந்திய வம்சாவழி மக்களின் குடியுரிமையின் இழப்பும் கூடவே வந்தது. இதைத் தொடர்ந்து சுதந்திர இலங்கையில் இனத்துவ அரசியல் வர்க்க அரசியலுக்குப் பெரும் சவாலாக எழுந்தது. பல்லின நாட்டில் சிங்கள பௌத்த தேசத்தினதும் அரசினதும் உருவாக்கம் தொடர்ச்சியான போக்காகியது. பேரினவாதமும் அதற்கெதிரான தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்துவ தேசியவாதங்களும் அரசியல் வெளியை இனத்துவ அடையாள அரசியலின் களமாக மாற்றிவிட்டன. இனரீதியான பெரும்பான்மையே ஜனநாயகம் சொல்லும் பெரும்பான்மை எனும் அரசியல் ஜனநாயகத்தையே தலைகீழாக நிறுத்தியது. வர்க்கம், சாதி, பால் ரீதியான சுரண்டலும் ஒடுக்குமுறைகளும் இனத்துவ அடையாளக் கருத்தியலின் மேலாட்சிக்குக் கீழ் முக்கியத்துவம் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 1964ஆம் ஆண்டு குடியுரிமை இழந்த மக்களின் பங்குபற்றலின்றி வந்த சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் 525,000 இந்திய வம்சாவழியினரை இந்தியாவுக்கு அனுப்புவது, 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை இன்னொரு 150,000 பேரின் நிலைபற்றிப் பின்னர் ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்த ஜனநாயக விரோத ஒப்பந்தத்தின் அமுலாக்கல் பல தடைகளுக்குள்ளானது. எல்லாமாக 400,000 பேர்வரை இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் கணிசமானோர் உயர்சாதியினரென்பதும் தோட்டங்களில் தொழிலாளர்களையும்விட உயர்நிலையிலிருந்தவர்களென்பதும் குறிப்பிடத்தக்கது (ஜெயசீலன் & சந்திரபோஸ், 2018). இறுதியில் 2003இல் ஒருவித தீர்வு எட்டப்பட்டது. ஒரு பகுதியினரின் குடியிரிமை மீட்கப்பட்டது மலையகப் பாராளுமன்ற அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது என்பதை மறுக்கமுடியாது.   

உள்நாட்டுப்போரும் புலப்பெயர்வுகளும் முழு நாட்டிலும் விசேடமாக தமிழ் சமூகத்திலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. மறுபுறம் சமூகரீதியில், பிரதேசரீதியில் அசமத்துவமான முதலாளித்துவ விருத்தியுடன் இணைந்த  குறைவிருத்திப் போக்குகளின் முரண்பாடுகள் ஆழமடைகின்றன. இவையெல்லாம் தலித் சமூகங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் அதேவேளை பழைய நிறுவனங்களின் தொடர்ச்சியையும் சாதியத்தின் புதிய வடிவங்களையும் காண்கிறோம். இந்த ‘மாற்றம்-தொடர்ச்சி’ பரிமாணத்தின் சில அம்சங்கள் சரவணனின் கட்டுரைகளின் பொருட்களாகின்றன.

இலங்கையில் இந்திய வம்சாவழியினர் பற்றிப் பெருந்தொகையான நூல்கள் வெளிவந்துள்ள போதும் சாதியச் சாடலுக்கு அதிகம் பலியான அருந்ததியர் சமூகம் பற்றிய முதலாவது நூல் இது எனும் தகவலைத் தருகிறார் நூலாசிரியர். அவர்களின் நிலைமைகள் பற்றி பலரும் அறிந்திராத விடயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றது இந்த நூல். 

 அருந்ததியர் – ‘தலித்துக்களிலும் தலித்துக்கள்’

‘அருந்ததியர்களைப் பொறுத்தளவில் அவர்கள் தலித்துக்களிலும் தலித்துக்களாகவே எங்கெங்கிலும் உள்ளார்கள்.’ (ப42)

‘ஒரு வளமற்ற, பலமற்ற, ஆதரவற்ற சமூகம் என்றளவில் தமக்காகத் தாமே போராடும் சமூகத்தவர்கள் அவர்கள். அதற்கான திறனற்ற ஒரு சமூகமாகவும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. தமது வரலாற்றுப் பின்னணி குறித்து எந்த போதிய பதிவுமில்லாத சமூகமும்கூட. வாய்மொழி மூலம் கடத்தப்பட்ட சில தகவல்கள் மற்றும் சில எஞ்சிய ஆவணங்களும் மாத்திரமே அருந்ததியர் சமூகம் குறித்த ஓரளவு உண்மைகளை வெளித்தெரிய வைத்திருக்கிறது.’ (ப14)

 வரலாற்றுப் பின்னணி குறித்துப் போதிய பதிவில்லாத சமூகம் பற்றிப் பல முக்கியமான தகவல்களை அந்தச் சமூகத்துக்குள்ளிருந்து ஒரு பங்குபற்றுபவனின் அவதானிப்புகளுக்கும் உரையாடல்களுக்குமூடாக ஆவணப்படுத்துகின்றது இந்தத் தொகுப்பு. எனது அபிப்பிராயத்தில், இந்தத் தொகுப்பில் அருந்ததியர் சமூகம் பற்றிய கட்டுரைகள் மற்றவையையும்விட ஒப்பீட்டுரீதியில் மிகவும் செறிவானவை.  இவை அருந்ததியர்களின் மனித மேம்பாட்டிற்கு, சமூக முன்னேற்றத்திற்கு எதிரான அமைப்புரீதியான தடைகளை அம்பலப்படுத்துகின்றன. தலித்துக்குள்ளே இருக்கும் சாதியப் படிநிலை யதார்த்தத்தின் மிகக்கசப்பான தாக்கங்களை அருந்தியர்கள் அநுபவிக்கிறார்கள். இந்தப் படிநிலையில் அடிமட்டத்திலிருக்கும் அவர்கள் இந்தியவம்சாவழிச் சமூகதிற்குள்ளேயே அந்நியப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் பலர் இன்றும் நகரசுத்தியுடன் தொடர்புடைய தொழிலில் தங்கியிருப்பது மற்றும் அவர்கள் வாழும் மோசமான குடியிருப்பு நிலைமைகள் அவர்களின் சாதி அடையாளத்தைச் சுலபமாக வெளிப்படையாக்குகின்றன. அவர்கள் மத்தியில் உருவான சில சமூக இயக்கங்கள் அரசியல் இயக்கங்களாகப் பரிணமிக்கவில்லை. உதிரிச் சமூகங்களாக பல நகர்ப் புறங்களில் சிதறுண்டிருப்பதால் அரசியல்ரீதியிலும் ஆட்சியாளரின் கவனத்தை ஈர்க்கவல்ல குரலற்ற விளிம்புநிலையிலிருக்கின்றனர். இந்தச் சிதறுண்டிருக்கும் குழுக்களுக்கிடையே சமூகரீதியான வலைப்பின்னல்கள் இருந்தபோதும் அவை உரிமைகளுக்குக் குரல்கொடுக்கும் இறுக்கமான அமைப்புக்களாக மாறவில்லை. மலையகத்தில் செறிவான சமூகமாயிருக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு இருக்கும் கூட்டான அரசியல் பலம் இந்தச் சிதறுண்ட சமூகத்திற்கு இல்லை. இதற்கு ஆதாரம்போல் அமைகிறது ஒரு சமீபகால அநுபவம்.

2015ஆம் ஆண்டு வந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுடனான வீடமைப்புத் திட்டமொன்றை அமுல்படுத்தத் தொடங்கியது. இதற்குப் பொறுப்பாக மலையகத் தமிழர் ஒருவர் தோட்ட வீடமைப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பல தலைமுறைகளாக லைன்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வு. பல தலைமுறைகளாக நாட்டின் பல்வேறு நகர்ப்புறச் சேரிகளில் சொந்தமற்ற குடிசைகளில்  வாழ்ந்துவரும் அருந்ததியர்களுக்கும் அதுபோன்ற ஒரு வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கவேண்டுமெனும் கோரிக்கையுடன் சரவணன் அந்த அமைச்சரைச் சந்திக்கிறார். அமைச்சர் அருந்ததியர் சமூகம்பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்களின் நிலைமையை விளக்கிய பின்னரும் அவரிடமிருந்து நம்பிக்கைதரும் பதில் கிடைக்கவில்லை. அருந்ததியர் சமூகம் அவருடைய அரசியல் தொகுதிக்கு வெளிவாரியான தென்பதும் அவரின் அக்கறையின்மைக்குக் காரணமாயிருந்த்திருக்கலாம்.  தொழில் காரணமாக அரசநிலங்களில் வழங்கப்பட்ட சொந்தமற்ற குடிசைகளில் வாழும் அருந்ததியர் அந்த வாழிடத்தை இழக்காமலிருப்பதற்காகவே தலைமுறை தலைமுறையாக நகரசுத்தித் தொழிலாளர்களாகத் தொடரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்களின் இளம் சந்ததியினர் இந்தக் குறைவிருத்திப் பொறியிலிருந்து வெளியேறுவது ஒரு பெரிய சவாலாகிறது. அருந்ததியர் சமூகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக அகமணமுறை, சாதிய வசவு, சமூகநகர்ச்சி, ‘அடையாளத் தற்கொலை’ போன்றவை பற்றிப் பலவிடயங்களை ஆவணப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு. 

சாதியமைப்பின் நிறுவனரீதியான மீளுற்பத்திக்கு அகமணமுறை ஒரு அடிப்படை விதியாகிறது. ‘உயர்சாதிகளின்’ சொத்துக்களையும் அதிகார அந்தஸ்தையும்  பேண இது அவசியமாகிறது. கலப்புத் திருமணங்கள் பரவலாகும் போதும் எல்லா சாதிகளிலும் அகமணமுறை இன்றும் தொடர்வதைக் காண்கிறோம். இலங்கையின் அருந்ததியர் சமூகத்தில் அகமணமுறையினால் சில மரபுரீதியான நோய்களும் சந்ததிகளுக்கூடாகக் கடத்தப்படுவதன் விளைவுகளை ஆதாரபூர்வமாக விளக்குகிறது ஒரு கட்டுரை (ப39-44). உதாரணங்களாக சொரியாசிஸ் (psoriasis), நீரிழிவு, மனநோய் போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அளவுரீதியில் சிறிதான இலங்கை அருந்ததியர் சமூகத்தில் அகமணத்தின் பாதகமான விளைவுகள் பெரிதாகின்றன.  

அருந்ததியர் சமூகத்தவர் சாதிமாறிக் கலப்புத் திருமணம் செய்யாமாலில்லை. இந்தக் கலப்புத் திருமணங்கள் பொதுவாக தலித் சாதிகளுக்குள்ளேதான் நடந்தன. வேறுசாதிகளை சேர்ந்தவர்களுடன் திருமணங்கள் விதிவிலக்காக நடந்தன வென்றும் அவற்றுள் கணிசமானவை சாதிமறுப்புத் திருமணங்களெனவும் பதிவிடும் நூலாசிரியர் அவற்றிற்குச் சில உதாரணங்களையும் தருகிறார். ‘தனது இளம் வயதில் 30 வருடங்களுக்குமுன் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணோடு மாயமான எனது பெரியப்பாவை என் அப்பா உள்ளிட்ட அவரின் சகோதரர்கள் அவரை இறந்தபோது சவப்பெட்டியில்தான் பார்த்தார்கள். அவர் மாளிகாவத்தை பகுதியில் எங்கள் குடியிருப்பில் இருந்து அருகாமையில் தான் அத்தனை காலமும் வாழ்ந்திருக்கிறார். ஆனால் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை’ (p42-43). மறுபுறம் சமூக முன்னேற்றத்திற்கு அமைப்புரீதியான தடைகளைத் தொடரவைக்கும் குறைவிருத்திச் சூழல் மாறாதவரை  இத்தகைய அநுபவங்கள் அருந்ததியர் சமூகத்திற்குள் அகமணமுறையை மேலும் வலுவூட்டும் போக்கிற்கு உதவுகிறது.  

சாதியம் நிலவும் சமூகத்தில் ஒருவரை மற்றவர் சொல்லால் புண்படுத்துவதற்கு  சாதிய வசவு ஒரு ஆயுதமாகிறது என்பதை நினைவூட்டுவதுடன் இத்தகைய சாதியச் சாடலுக்கு அதிகம் பலியாகிய இலங்கைச் சமூகம் அருந்ததியர்களே என்பதற்குப் பல ஆதாரங்களையும் தருகிறது இந்த நூல். உதாரணமாக அருந்ததியருக்குப் பிராமணியம் கொடுத்த பெயரான ‘சக்கிலி’ எனும் சொல் தமிழிலும் சிங்களத்திலும் ஒருவரை அல்லது ஒரு குழுவை, நிறுவனத்தை மிகவும் கீழ்த்தரமாக அவமதிப்பதற்கும் புண்படுத்துவதற்கும்  பயன்படுத்தப்படுகிறது. இதற்குச் சிங்களத்திலும் தமிழிலும் பல உதாரணங்களை இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கட்டுரை தருகிறது. அவற்றில் ஒரு சில: ‘சக்கிலி சந்தேசய’ – இது சிங்கள BBC  சேவை தமிழருக்குச் சார்பாக நடந்துகொள்கிறது எனக் குற்றம் சாட்டும் சொல்லாடல். ‘சக்கிலி மாலிங்கய’ – கிரிக்கெட் வீரர் மாலிங்க திறமாக ஆடவில்லை என்பதால் ஆத்திரமடைந்தவரின் சொல்லாடல். ‘சக்கிலி மகாராஜா’ – இது மகராஜா நிறுவனத்தின் ஊடகத்திற்கு எதிராக. ‘சக்கிலி பௌத்தயன்’ – இது முஸ்லிம்களுக்குச் சார்பாகப் பேசும் பௌத்தர்கள்மீதான வசவு. ‘சக்கிலி நாயே மேடையை விட்டு வெளியே வா’ – இது தந்தை செல்வா நினைவு தினத்தில் ராஜதுரைமீது சிவாஜிலிங்கம் வீசிய வசவு. ‘சக்கிலி இந்தியா கடந்த முப்பது ஆண்டு காலமாகத் தனது அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களைப் பாவித்திருக்கிறது’ – இது முகநூலில் முன்னாள் ஈரோஸ் தலைவர் அருளரின் பதிவு. இத்தகைய வசவுகள் நாட்டின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்திப் புண்படுத்துமென்பதைக்கூட உணரமுடியாதளவுக்குச் சாதியச் சொல்லாடல் பலரின் அன்றாட வழக்கில் உள்வாங்கப்பட்டுள்ளது. 

அருந்ததியர் சமூகத்தில் இடம்பெற்றுவரும் பலவிதமான மாற்றங்கள் பற்றியும் விமர்சன நோக்கில் இந்தத் தொகுப்புப் பேசுகிறது. காலப்போக்கில் துப்புரவுத் தொழிலிருந்து ஒரு பகுதியினர் வெளியேறியுள்ளனர். கல்விக்கூடாகச் சிலரால் நடுத்தர வர்க்கத்தை நோக்கி நகரவும் முடிகிறது. ஆனால் இந்த நகர்ச்சி அவர்களைத் தம் பிறப்போடு வந்த சாதிய அடையாளத்திலிருந்து விடுவிக்கவில்லை. இவர்களில் பலர் சாதியை மூடிமறைக்க முயற்சிப்பதுண்டு. இந்தப் போக்கினை ‘அடையாளத் தற்கொலை’ எனக்கூறும் சரவணன் அதற்குப் பல உதாரணங்களையும் தருகிறார். அருந்ததியர் செறிந்து வாழும் குடியிருப்புக்களிலிருந்து வெளியேறுவது, ‘சாதி மறுப்புத் திருமணம்’, காலாகாலமாகப் பேசிவந்த தெலுங்கு மொழியைக் கைவிடுவது, மத மாற்றம், உயர்சாதியினரின் பேச்சு மொழியைப் பேசுவது மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது, இன அடையாள மாற்றம் போன்ற வழிகளுக்கூடாக இது நடைபெறுகிறது.  

கல்விக்கூடாக ஆங்கிலப் புலமை பெற்றவரும் அருந்ததியர் சங்கத்தின் தலைவருமாக இருந்த ஒருவர் ‘நான் ஒரு சக்கிலியன்’ எனத் தன்னைப் பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொண்டபோதும் அவருடைய பிள்ளைகள் இந்த விடயத்தில் தமது தகப்பனைப் பெருங்குற்றவாளியாகவே கருதினர். அவர்கள் தங்கள் சாதிய அடையாளங்களை மறைக்கும் நோக்கில் உறவினர்களுடனான தொடர்புகளைத் தவிர்த்து கொண்டது மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களை மணந்து அந்தச் சமூகங்களின் அடையாளங்களைப் பெற்றுக்கொண்டனர்.  இத்தகைய அடையாள மாற்றத்தைப் பலர் தேர்ந்தெடுக்கிறார்கள்.  சுயமுயற்சியால் அமைப்புரீதியான தடைகளையும் தாண்டி முன்னேறியவர்மீது தொடர்ந்தும் சாதிய லேபலைச் சுமத்துவது சமூகத்தின் ‘உயர்’ சாதியினரே. சாதிமறைப்பு இதன் உணர்வுபூர்வமான எதிர்வினை என்பதை மறந்துவிடலாகாது. 

தலித்துக்களை கிறிஸ்துவர்களாக மதம் மாற்றும் முயற்சியில் ‘பைபிள் சபைகள்’ ஈடுபடுகின்றன. இந்த மதமாற்ற அணுகுமுறையில் விளிம்புநிலையில் அல்லல்படும் தலித்துக்கள் தாம் சமூகத்தில் அநுபவித்திராத மரியாதையை, மனிதாபிமானத்தைக் காண்கிறார்கள். ‘எங்களை மனிசர்களாகவாவது மதிக்கிறார்களே’ என்று அவர்களில் சிலர் சொல்கிறார்கள். இப்படியாக வரும் மதமாற்றம் சாதிக்கு வெளியே கிறிஸ்துவரை மணமுடிப்பதுவரை செல்வதுண்டு. இந்த நிலைமயைப் பதிவிடும் கட்டுரை இப்படி விளிம்புநிலையில்  அல்லலுறும் மக்களை முற்போக்கு அல்லது புரட்சிகர அரசியல் சக்திகள் கவனிக்கவில்லை எனும் விமர்சனத்தையும் முன்வைக்கிறது. இன்றைய இலங்கையில் அந்த சக்திகள் உண்டா அப்படியென்றால் அவற்றின் அடையாளங்கள் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த விடயத்தை இந்த நூல் தொடவில்லை. இலங்கையில் தமிழ் சமூகத்தில் சாதியத்திற்கு எதிரான ஒரு இடதுசாரிப் போராட்ட மரபு  தோன்றி வளர்ந்து பின்னர் வலுவிழந்து போனது பற்றி, மற்றும் அது வட இலங்கைக்கு, குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு, அப்பால் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்காது போனதை நினைவூட்டுதல் தகும். 

வேறு மதத்திற்கு மாறும் போக்கு ஒருபுறமிருக்க அருந்ததியரும் வேறு தலித் சமூகத்தவரும்  இதுவரை பின்பற்றிய சிறுதெய்வ வழிபாட்டுக் கலாச்சாரத்திலிருந்து உயர்சாதியினரின் கடவுள்களை வழிபடும் வழக்கத்திற்கு மாறும் போக்குப் பற்றிப் பல தகவல்களைத் தருகிறது இந்தத் தொகுப்பு.  அருந்ததியரின் அடையாளங்களைப் பறைசாற்றும் முனியாண்டிசாமி, மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற சிறு தெய்வங்களுக்கு மத்தியில் சைவக் கடவுள்களின் விக்கிரகங்களை வைப்பது, சைவ இந்துச் சடங்குகளையும் பழக்கங்களையும் பின்பற்றுவது போன்ற நடைமுறைகள் பரவுகின்றன. சிறு தெய்வங்கள் முக்கியத்துவமிழந்து சைவ-இந்து தெய்வங்கள் பிரதான இடத்தைப் பெறுகின்றன. மனித மேம்பாடு மற்றும் சமூக நகர்ச்சிச் சந்தர்ப்பங்கள் குன்றிய சூழலில் அருந்ததியரைச் சைவமயமாக்க முயலும் இந்த மாற்றம் அவர்களைச் சாதியடக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்கு மாறாக இந்து சாதிப் படிநிலையமைப்பிற்குள் மேலும் இறுக்கமாக உள்வாங்கும் ஒரு வழியாகிறது. 

அருந்ததியரின் இனத்துவ அடையாள மாற்றத்தைப் பொறுத்தவரை சிங்கள மயமாக்கல் அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தறை, காலி, ஹம்பந்தோட்டை போன்ற பகுதிகளில் நிகழ்வதுபற்றி அறிகிறோம். வீட்டில் சிங்கள மொழியில் பேசுவது, பிள்ளைகளைச் சிங்களப் பாடசாலையில் சேர்ப்பது பொன்ற நடைமுறைகளைப் பெற்றோர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்கள் வாழுமிடங்களில் தமிழ்ப் பாடசாலைகள் இல்லாமையால் பிள்ளைகளைச் சிங்களப் பாடசாலையில் சேர்ப்பது ஒரு காரணமாயிருக்கலாம். ஆயினும் இன அடையாளத்தை மாற்றுவது சாதி அடையாளத்தை இழப்பதற்கு உகந்தவழி என்பதும் ஒரு அநுபவபூர்வமான உண்மை போலவே படுகிறது. இதற்கு ஆதாரம் போல் அமைகிறது சரவணன் காதில் பட்ட  ‘தமிழர்களே எங்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளாதபோது…..’ எனும் வார்த்தைகள். 

சாதிய அடையாளங்களை மூடிமறைக்கும் செயற்பாடுகள் அடிமட்ட சாதிகளில் காணப்பட்டுவந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைகளின் மறைவுக்கு இட்டுச்செல்வது பற்றிக் குறிப்பிடும் அதேவேளை சாதிய அடையாளங்களைத் தற்கொலை செய்வதால் சாதியத்திலிருந்து மீள முடிகிறது என்றும் சொல்கிறார் நூலாசிரியர். மறுபுறம் ‘இந்த அடையாளத் தற்கொலைகளானது தப்பித்தலாகவும், ஒளிவதாகவும், மறைத்து வைப்பதாகவும் தொடருவது நிலவுகின்ற கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்பபடுத்தப்போவதில்லை’ என வாதிடுகிறார் (ப85). இந்த வாதத்தில் நியாயமிருப்பதுபோல் படலாம். ஆனால் அது குறைபாடுள்ளது என்பதே எனது கருத்து. அடையாளத் தற்கொலை கட்டமைப்பு மாற்றத்துக்கூடாக வரும்போதுதான் அர்த்தமிக்கதாகிறது. ஆனால் இலங்கையில் இயக்கரீதியான அரசியல் பலமின்றி சமூக நகர்ச்சிச் சந்தர்ப்பங்கள் அற்பமாயுள்ள சூழலில் சாதியத்தினால் அவலத்திற்குள்ளாகும் அருந்ததியர் தனிமனித அல்லது சிறுகுழு மட்டத்தில் தமது மனிதத்துவத்தை முடிந்தவரை உறுதிசெய்ய சாதி மறைப்பை ஒரு எதிர்வினை உபாயமாகப் பயன்படுத்துகிறார்கள். சமூகரீதியில் பலவீனர்களாக ஆக்கப்பட்டவர்களுக்கு தமது அதிருப்தியை, எதிர்ப்பைக் காட்டக் கிடைத்த ஆயுதம் அதுதான். இது ஜேம்ஸ் ஸ்கொட்(James Scott) அறிமுகம் செய்த ´weapons of the weak´ – ‘பலவீனரின் ஆயுதங்கள்’ – எனும் கருத்துருவை நினைவூட்டுகிறது.  தனிமனித மட்டத்தில் சாதி அடக்குமுறையிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பலரும் பயன்படுத்தும் வழிமுறைகளைக் குறை சொல்வதில் நியாயமில்லை என்பதே எனது கருத்து. அவற்றை அவர்களின் உணர்வுபூர்வமான முனைப்பாற்றலின் வெளிப்பாடாகப் பார்ப்பதே நியாயமானது.  

சாதியத்திற்கெதிராக அடக்கப்பட்ட சாதி மக்களை அணிதிரட்டும் அரசியல் ஒரு அடையாள அரசியலாகவே கருத்தியல்மயப்படுத்தப்படுகிறது. இத்துடன் வரும் முரண்பாடுகளுக்கு முகம் கொடுக்கும் தேவை பற்றி இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்போம்.

..தொடரும்..


[1]கொலொனிய அடிமைமுறை மற்றும் அதில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான சர்வதேசரீதியானதகவல்கள் Wikipedia மற்றும் அவை தொடர்பாக இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டன.   

[2]இந்த விடயங்கள் தொடர்பான ஆய்வுகள் பற்றியும் எனது விளக்கம் பற்றியும் மேலும் அறிய பின்வரும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை உதவியாயிருக்கும்: N. Shanmugaratnam, 1985, Colonial Agrarian Changes and Underdevelopment, in Charles Abeysekera (ed), Capital and Peasant Production Studies in continuity and discontinuity of agrarian structures in Sri Lanka, Social Scientists´ Association of Sri Lanka,1985: 1-20.  

மேதின வாழ்த்துக்கள்!

மேதின வாழ்த்துக்கள்!

மேதினத்தின் வரலாறு மற்றும் தொழிலாளர் அமைப்புக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சனைகள் பற்றி 2017 May 1 பிரசுரிக்கப்பட்ட கட்டுரை மீள்பிரசுரிக்கப்படுகிறது

‘வடமாகாண முதன்மைத் திட்டமொன்றிற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு’ ஆய்வறிக்கை பற்றிய விமர்சனக் கருத்துரை

சமுத்திரன்

மேலேகுறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் பொறுப்புரிமையளிக்கப்பட்டு துறைசார் அறிதிறமும் போருக்குப் பின்னைய வடமாகாண நிலைமைகள் பற்றிய பரிச்சயமும் கொண்ட ஏழுபேர்களைக் கொண்ட குழுவினால் வரையப்பட்டது. போருக்குப் பின்னைய வடமாகாணத்தின் அபிவிருத்தி பற்றிய ஒரு திறந்த கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை இந்த ஆய்வறிக்கை கொடுக்கிறது. போர் முடிவுக்குவந்தபின்னர் அதனால் பாதிக்கப்பட்ட சமூகத்தினால் மிகப்பெரிய ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புக்களுடனும் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது மாகாண சபை (ஒக்டோபர் 2103 – செப்டெம்பர் 2018)அந்த மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம் எதிர்நோக்கும் சவால்களுக்குக் கூட்டுச் செயற்பாட்டுக்கூடாக முகம்கொடுக்க உதவும் ஒரு அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குவது பயனற்றது எனக் கருதியதுபோல் தெரிகிறது. இப்போது போர் முடிவுக்கு வந்து பத்துவருடங்களின்பின், மாகாண சபையின் ஐந்தாண்டுக் கால எல்லை முடிவுற்ற சிறுகாலத்தில், மத்திய அரச நிறுவனமொன்றின் பொறுப்புரிமையளிப்பில் கிடைத்த ஒரு ஆய்வறிக்கை மாகாணத்தின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலுக்கும் விவாதத்திற்கும் வழிதிறந்துள்ளது.

போருக்கு முன்பும் அதற்குப் பின்னரும் வடமாகாணத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் பற்றிய பொதுப்படையான பார்வையுடன் ஆரம்பிக்கும் இந்த ஆய்வு மாகாண அபிவிருத்தித் திட்டவரைவொன்றின் உருவாக்கத்திற்கு உதவும் நோக்குடன் ஒரு கட்டமைப்பினை முன்வைக்கிறது. நீண்டகாலப் போர் ஏற்படுத்திய அழிவு, இடம்பெயர்வு மற்றும் சனத்தொகை குறைப்பு ஆகியவற்றையும் அவற்றின் விளைவுகளையும் அழுத்திக் கூறுவதுடன் மாகாணத்தின் அபிவிருத்தி எதிர்நோக்கும் சமூக, பொருளாதார சவால்கள் சிலவற்றையும் இனங்காண்கிறது. அரசாங்கம் இந்தச் சவால்களை கணக்கிலெடுக்கத் தவறியதனால் உத்தியோகபூர்வமான கொள்கை திருப்திகரமான விளைபயன்களைத் தரவில்லை எனும் கருத்தினை முன்வைக்கிறது. பெருமப்பொருளாதாரப் (macroeconomic)பார்வையற்றநிலையில் அரசாங்கத்தின் அணுகுமுறை மாற்றுவினை (reactive) சார்ந்ததாக, தொடர்பறுந்த செயற்திட்டங்கள் அடிப்படையிலானதாகவே இருந்ததெனக் கூறுகிறது. போர் முடிந்தவுடன் விருத்திசெய்யப்பட்ட பாதைத்தொடர்பின் விளைவாக முன்னேற்றமடைந்த உற்பத்தியைக் கொண்ட  பரந்த சந்தையுடன் இணைக்கப்பட்டதால் உள்ளூர் உற்பத்தி ஒரு சந்தை அதிர்ச்சிக்குள்ளாகியது. போரின் தாக்கங்களுக்கு ஆளான குடும்பங்களின் பாதிப்புக்களைக் கணக்கிலெடுக்காது நாட்டின் சந்தையுடன் ஏற்படுத்தப்பட்ட திடீர் ஒருங்கிணைப்பும் கடன்கொடுப்பனவின் வளர்ச்சியும் பரந்தளவில் கடன்பிரச்சனையின் ஆழமாக்கலுக்கும் கிராமிய பொருளாதாரச் சிக்கலுக்கும் வழிகோலின என எடுத்துக்கூறுகிறது.

போருக்குப்பின் வடக்கில் மக்கள் நலனுக்குப் பாதகமான நிதிமயமாக்கல் துரிதமாக இடம்பெற்றது என்பதை மறுக்கமுடியாது. இன்றைய நவதாராள உலகில் வறியவர்களைப் பொறுத்தவரையில் கடன் என்பது சமூகப் பாதுகாப்புவலையின் ஆபத்துமிக்க பிரதியீடாகும் (அதாவது நவதாராளப் பொருளாதாரக் கொள்கையின் விளைவான சமூகப்பாதுகாப்பற்ற நிலைமைகளில்). ஏனெனில் அது வறியோரை மேலும் நலிவுக்குள்ளாக்கும் கடன்பொறிக்குள் இட்டுச் செல்கிறது,  இந்த ஆபத்துப் பலரைத் தற்கொலைக்குத் தள்ளுமளவிற்குப் பயங்கரமானது என்பதையும் கண்டுள்ளோம்.

புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட முதலீடுகள் வரவில்லை. அரசாங்கம் அறிவித்த வரிவிலக்கல் ஊக்கியால் மட்டும் போரால் நிர்மூலமாக்கப்பட்ட ஒரு பிரதேசத்திற்கு முதலீடுகளைக் கவரமுடியாது என்பது தெளிவாகியது. நிறுவனரீதியான மற்றும் மனிதவளரீதியான ஆற்றல்களின் குறைபாடுகள் பற்றிய புரிந்துணர்வில்லாமையுடன் போருக்குப்பின்னான வடக்கின் அரசியல் நிலைமைகள் பற்றிய சரியான கிரகிப்பும் அரசாங்கத்திடமிருக்கவில்லை.

உண்மையில் அரசாங்கத்தின் அணுகுமுறை மேலிருந்து கீழான, இராணுவமயமாக்கப்பட்ட, நிர்வாகரீதியில் மத்தியமயப்படுத்தப்பட்டதாகவிருந்தது. பாதுகாப்புமயமாக்கலும் பாதைத்தொடர்பும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்குடியமர்வு மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றின் முன்னுரிமைகளைப் பின்தள்ளிவிட்டன.  பாதைத்தொடர்புக்கான ஏறக்குறைய முழு முதலீடும்  A9 மற்றும் சில பிரதான வீதிகளின் மீள்விருத்திக்கே சென்றடைந்தது. உள்ளூர் உட்கட்டுமான அபிவிருத்தி கவனிக்கப்படவில்லை. சில விமர்சகர்கள் குறிப்பிட்டதுபோல் அரசாங்கம் மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத்தொடர்ந்தது. இந்தச் சூழலில் அரசாங்கம் தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் தீர்வினைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக ‘அபிவிருத்தி’யைப் பயன்படுத்த முயற்சித்தது. ஆதாரபூர்வமான உண்மையென்னவெனில் வட மாகாணத்தில் மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை இயலுமைப்படுத்தும் சூழல் இருக்கவில்லை. 

மேலும் இந்த ஆய்வறிக்கையின் பேசுபொருட்களை நோக்குமிடத்து நாட்டின் பெருமப் பொருளாதாரம் (macroeconomy)பற்றிய ஒரு விமர்சனரீதியான பார்வையை அது முன்வைத்திருக்கவேண்டும் ஆனால் அதைச்செய்யத் தவறிவிட்டது. இது ஒரு முக்கியமான குறைபாடு. இதனால் அறிக்கையின் போருக்குப்பின்னைய அபிவிருத்தி பற்றிய விமர்சனம் முழுமையற்றதாக இருக்கிறது. இலங்கையின் கீழ்நடுத்தர வருமான தகுநிலைக்கான எழுச்சி பொருள்ரீதியான ஏற்றத்தாழ்வின் வளர்ச்சியுடனும் சமூகபாதுகாப்பு உரித்துடைமைகளின் இழப்புடனும் மட்டுமன்றி சனநாயக சுதந்திரங்களை நசுக்கும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுடனும் இணைந்ததென்பது பொதுவாக அறியப்பட்டதே. போரின் முடிவுக்குப்பின்னைய ஆரம்ப வருடங்களில் இடம்பெற்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உயர்ந்த வளர்ச்சி வீதம் உட்கட்டுமான முதலீட்டினால் முன்னெடுக்கப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டிற்குபின் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அப்போதிருந்தே நாட்டின் பொருளாதாரம் பிரச்சனைக்குள்ளாகிவருகிறது. இன்றைய அரசாங்கம் ஒரு நவதாராள நிகழ்ச்சிநிரலைப் பற்றியவண்ணம் திசையறியாது தடுமாறிக் கொண்டிருப்பதாகவே படுகிறது. நாட்டின் இன்றைய பெருமப்பொருளாதார நிலைமை பற்றி இந்த ஆய்வறிக்கையின் மௌனம் சற்றுப் புதிரூட்டுவதாகவிருக்கிறது.

போருக்குப் பின்னைய அபிவிருத்திப் பாதை பற்றிய முற்றுபெறாத ஒரு விமர்சனத்தினது அடிப்படையிலும் ‘நிலைபெறு அபிவிருத்தி’ (‘sustainable development’) பற்றிய ஒரு தொலைநோக்கின் ஆகர்சிப்பிலும் வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒன்றோடொன்று தொடர்புள்ள ‘உற்பத்தி’, ‘அபிவிருத்திக்கான சமூக அடிப்படைகள்’, ‘இயலுமைப் படுத்தும் சூழல்’ எனப்படும் மூன்று தூண்களைக் கொண்ட ஒரு எண்ணக்கருரீதியான கட்டமைப்பினை ஆய்வறிக்கை முன்வைக்கிறது. ‘உற்பத்தி’ தூணுடன் தொடர்பட்டிருக்கும் மற்றைய இரு தூண்கள் பலமுக்கிய சமூகரீதியான, நிறுவனரீதியான, தொழில்நுட்பவியல் தொடர்பான அம்சங்களை உள்ளடக்குகின்றன. சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு ஆலைத்தொழில்கள் ஆகியவற்றினை அடித்தளமாகக் கொண்ட பங்கீடு மற்றும் தாக்குப்பிடிக்கவல்ல நிலையான வளர்ச்சி ஆகிய நோக்கங்களை அடைய உதவும் மூலோபாயத்தின் தேவையை ஆய்வறிக்கை முன்னிலைப்படுத்துகிறது. இது அபிவிருத்திக்கு ஒரு நியமரீதியான (normative)அணுகுமுறைக்கான முன்மொழிவுரை எனலாம்.

பொருளாதார வளர்ச்சி ஒரு இறுதி இலக்கல்ல அது நிலைபெறும் மனித மேம்பாட்டிற்கும் செழிப்புக்கும் வேண்டிய அபிவிருத்திப் போக்கிற்கான ஒரு வழிமுறையே. அபிவிருத்தியின் வேகம் மிதமானதாக இருக்கலாம் ஆனால் அதையும்விட முக்கியமானதென்னவெனில் அது நகரும் பாதை நலிவடைந்தோரை உள்வாங்குவதாகவும் அவர்களின் ஆற்றலுடைமைகளைத் தொடர்ச்சியாக விரிவாக்கவல்ல இயக்கப்பாடுள்ளதாகவும் இருக்கவேண்டும். 

ஆய்வறிக்கையின் கட்டமைப்பை இத்தகைய ஒரு விமர்சன ஒளியில் நோக்குமிடத்து அதன் மூன்று தூண்களின் ஒருங்கிணைப்பின் உண்மையான சோதனை கொள்கை வகுப்பில், திட்டமிடலில், அமுலாக்கலில் அது பயன்படுத்தபபடுவதிலேயே தங்கியுள்ளது. சுதந்திரமும் தகைமையும் (அதாவது தொலைநோக்கும் ஆற்றலும்)  படைத்த தலைமை மற்றும் அர்த்தமுள்ள மக்கள் பங்குபற்றல் ஆகியன இல்லாதவிடத்து இந்தக் கட்டமைப்பு சுலபமாக ஒரு பூரணமான தொழில்நுட்பவல்லுன (technocratic) முறைமைக்குள் நழுவிப்போய்விடும்.இதுநடக்கும் பட்சத்தில் சமூக, அரசியல் பிரச்சனைகள் பொருளாதார வினைத்திறனின் பெயரால் வல்லுனர்களால் – விசேடமாக நவதாராள அறிவீட்டவியல் சார்ந்தோரால் –   தொழில்நுட்பரீதியான பிரச்சனைகளாகத் தரம்குறைக்கப்படும். உண்மையில் என்ன நடக்கும் என்பது தேசிய மட்டத்திலான மாற்றங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து நல்விளைவுகளைத் தரவல்ல பங்கினை வகிக்கக்கூடிய ஆற்றல்மிகுந்த மாகாணசபை போன்றவற்றில் தங்கியுள்ளது. 

வட மாகாணத்தில் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் தன்மைபற்றியும் வங்கிகளின் வகிபாகம் பற்றியும் நமது கவனத்தை ஈர்க்கும் கருத்துக்களை ஆய்வறிக்கையில் காணக்கிடக்கிறது. இவற்றைப் பார்க்கும்போது வடமாகாண வங்கிகளிலிருக்கும் ‘சேமிப்பு உபரி’ உற்பத்திபூர்வமான முதலீட்டுக்கு பயன்படுவதற்கான வழிவகைகள் பற்றி ஆராயவேண்டிய தேவை எழுகிறது. இத்தகைய பயன்பாட்டிற்கான தடைகள் என்ன அவற்றை எப்படி அகற்றலாம் போன்ற கேள்விகள் எழுகின்றன. மாகாண அபிவிருத்தியில் அரசவுடைமைகளான வங்கிகளின் பங்கு என்ன?இது கொள்கை தொடர்பான ஒரு கேள்வி என்பதில் சந்தேகமில்லை. நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் மாகாண அபிவிருத்தி நிதியம் ஒன்றினை நிறுவுவது பற்றிய யோசனையை நடைமுறைப்படுத்துவது பயன்மிக்கது. ஆயினும் இதற்கு இன்னுமொரு கொள்கை மற்றும் நிறுவனரீதியான தேவை ஒன்றும் பூர்த்திசெய்யப்படவேண்டும். அதாவது உற்பத்தியாளர்கள் தொழில் நிறுவனங்களை விருத்திசெய்வதற்குத் தேவையான வளங்களையும், சந்தர்ப்பங்களையும் பெற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு மேல்நோக்கிய சமூக நகர்ச்சிக்கான வாய்ப்புக்கள் கிடைக்கவும் உதவும் சூழல் உருவாக்கப்படவேண்டும். 

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வழக்கமாக கொள்வனவு செய்வோரினால் உந்தப்படும் பண்டச் சங்கிலியில் மிகவும் அசமத்துவமான உறவின் அடிப்படையில் இணைக்கப்படுகின்றன. இதனால் அந்த நிறுவனங்களின் உற்பத்தியின் பெறுமதியின் பெரும்பங்கினைப் பொருட்களைக் கொள்வனவு செய்து சந்தைப் படுத்துவோரே இலாபமாக கைப்பற்றிக்கொள்கிறார்கள். இந்தத் தொழில்நிறுவனங்கள் கூட்டுறவு அமைப்புக்களுக்கூடாகத் தமது பேரம்பேசும் பலத்தை அணிதிரட்டித் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலைகளைப் பெறக்கூடிய கொள்கைரீதியான ஆதரவை அரசாங்கம் வழங்கவேண்டும். சந்தைப்படுத்தலுக்குச் சமத்துவமான அடிப்படையை உருவாக்குவது இந்த நிறுவனங்களின் பொருளாதார செயல்நிறைவாற்றலுக்கும் எதிர்கால விருத்திக்கும் அவசியம். வடக்கில் விவசாயம், கடற்றொழில், கைத்தொழில், ஆலை உற்பத்தி போன்றவை பற்றியே இங்கு சிந்திக்கிறோம். நலிவுற்றோரின் வாழ்வாதார மீள்விருத்திக்கும் மனித மேம்பாட்டுக்கும் உதவும் நன்கொடை, மானியம், கடன் போன்றவைபற்றி ஆய்வுக்குழு ஆராயத்தவறிவிட்டது. இந்த யோசனை போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டுமெனும் நிலைமாற்று நீதியின் ஒரு அம்சமென்பதை நினைவுகொள்ளல்தகும்.

ஆய்வறிக்கையில் தொழிலாளர் தொடர்பாக இனங்காணப்பட்டுள்ள பிரச்சனைகள் முக்கியமானவை. இளைஞர், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னைநாள் போராளிகள், வலுவிழந்தோர் போன்ற பிரிவினர்களின் பிரச்சனைகள்மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேலைபெறக்கூடிய தகைமை பெறுதல் மற்றும் சுயசார்பினைப் பலமூட்டல் போன்றவற்றிற்கான உதவிவழங்கலைப் பொறுத்தவரை இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய விசேடமான தேவைகள் உண்டு. இது மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் இணைந்து சிவில் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களின் வளங்களையும் அணிதிரட்டிச் செயற்படவேண்டிய ஒரு விடயமாகப் படுகிறது.

தொழிலாளர்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு தொழிற்சங்கங்களும் மற்றைய தொழிலாளர் நிறுவனங்களும் மீள்கட்டியெழுப்பப்படவேண்டுமென ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் இதுசுலபமான காரியமல்ல. நாட்டின் மற்றைய பகுதிகள்போல் வடமாகாணத்திலும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் முறைசாராத் துறைகளிலேயே தற்காலிகமாக வேலைசெய்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் சமூக, பொருளாதார பாதுகாப்பற்ற மிகமோசமான நிலைமைகளிலேயே தொழிலாற்றுகிறார்கள், வாழுகிறார்கள். இந்த நிலைமைகளில் அவதியுறும் தொழிலாள வர்க்கத்தினரைச் சில எழுத்தாளர்கள் ´Precariat´ – அதாவது ‘இடர்பாட்டுநிலைத் தொழிலாள வர்க்கம்’ – என வகைப்படுத்தியுள்ளார்கள். இந்த விவரணம் இலங்கையின் முறைசாராத் துறைகளில் தொழிலுக்குத் தங்கியிருக்கும் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலைமைகளுக்கும் பொருந்தும். இன்னுமொரு முக்கியமான உண்மை என்னவெனில் இலங்கையில் தொழிற்சங்கமயமாக்கப்பட்ட தொழிலாளரின் வீதாசாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்கிறது. இந்த விடயங்கள் கொள்கைமட்டத்தில் அணுகப்படவேண்டியவை.

தொடரும் புலம்பெயர்வு, தொழிலுக்காக வெளிநாடு செல்லும் போக்குகள் பற்றி ஆழமாக அறிந்து கொள்வது அவசியம். பல காரணங்களால் வடக்கின் தமிழ் சமூகத்தவர் புலம்பெயரும் நடத்தைப்போக்கினை அதிகமாகவே வெளிக்காட்டுகின்றனர். அதுமட்டுமன்றி மனித செயல்திறன் விருத்திக்கு அற்பமாகவே முதலீடுசெய்யும் அரசாங்கம் இலங்கையர் தொழிலுக்காக வெளிநாடு செல்வதை பல வருடங்களாகத் தீவிரமாக ஊக்கிவித்தவண்ணமிருக்கிறது. மறுபக்கம் வேலை வாய்ப்புக்களைத் தோற்றுவிக்காது செயல்திறன் மட்டுமே விருத்திசெய்யப்படுவது தொழிலாளரின் புலம்பெயர்வை மேலும் ஊக்கிவிக்கும். இலங்கையின் கடந்தகாலப் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தகுந்தளவில் வேலைவாய்புக்களைத் தரத் தவறிவிட்டது. பல்வேறு ஆய்வுகளின்படி வேலையில்லாமை, குறைமட்டவேலை (underemployment), கடன்பளு, வளங்கள் கிடையாமை ஆகியனவே தொழில்தேடும் புலம்பெயர்வுக்கான பிரதான காரணிகள். சமீப காலங்களில் வேலைபெறக்கூடிய திறனுள்ள ஆனால் வேலையில்லாதிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். இந்தச் சூழலும் வடமாகாணத்திலும் முழு நாட்டிலும் மாற்றமடைந்து செல்லும் சனத்தொகையியல் நிலைமைகளும் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஒரு ஊழியச்செறிவுரீதியான (labour intensive)அணுகுமுறையைப் பின்பற்றுவதற்குச் சவாலாகின்றன. இதுவும் தேசியக் கொள்கைமட்டத்தில் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

நிலம் மற்றும் இயற்கை வளங்களைப் பொறுத்தவரை வடமாகாணத்தின் விவசாய மற்றும் கடற்றொழில் சமூகங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புக்கும் மனிதமேம்பாட்டுக்கும் முக்கியமான விளைவுகளைக் கொண்ட சில விடயங்களை ஆய்வறிக்கை கவனிக்கத் தவறிவிட்டது. வன்னியிலும் யாழ் குடாநாட்டிலும் நிலம் மற்றும் நீர் வளங்களின் பங்கீடு மற்றும் நிலைபெறு பயன்பாடு தொடர்பான பிரச்சனைகளுண்டு. நில அபகரிப்பு (சிறியளவிலும் பெரியளவிலும்), நிலமின்மை, நிலவுரிமை தொடர்பாகத் தீர்க்கப்படாத தகராறுகள், ஊரிலே குடியிராதோரின் (பெரும்பாலும் வெளிநாட்டில் வாழ்வோரின்) நிலச்சொத்துக்கள், அரசநிலங்களைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அல்லது புனித பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தி மூடுவதன் மூலம் காடுகளுக்கும், மேய்ச்சல்நிலங்களுக்கும் மக்களுக்கு மரபுரீதியாக இருந்த தொடர்புகளையும் உரிமைகளையும் மறுத்தல், இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள  தனியாருக்குச் சொந்தமான கணிசமான நிலப்பரப்புக்கள் போன்றன நன்கறியப்பட்ட பிரச்சனைகள். யாழ்ப்பாணத்தில் வளமான விவசாய நிலங்கள் வீட்டுநிலச் சொத்துக்களாக மாற்றப்படும் போக்குத் தொடர்கிறது. இதுவரை இடம்பெற்றதை மீட்க முடியாமலிருக்கலாம் ஆயினும் எஞ்சியிருக்கும் வளமான விவசாய நிலங்களைக் காக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம். குடாநாட்டின் நிலத்தடி நீரின் குறைதலும் தரச்சிதைவும் இன்னுமொரு பாரிய பிரச்சனையாகும்.

பாக்குநீரிணையில் சிறிய அளவில் கீழ்மட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் வடக்கு மீனவர்கள் இந்தியாவிலிருந்து பெருந்தொகையில் உட்புகும் உயர்சக்திவாய்ந்த பெரும்படகு மீன்பிடியாளரின் செயற்பாடுகளினால் ஒரு சர்வதேச எல்லைத் தகாராறில் மாட்டப்படுகின்றனர். இந்தப் பாரிய அசமத்துவமான போட்டியில் வடக்கு மீனவர்கள் நிரந்தர இழப்பாளர்களாகிவிட்டனர். ஒரு அறிக்கையின்படி 2500க்கு மேற்பட்ட இந்தியப் பெரும்படகுகள் இலங்கை நீர்ப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக்கப்பட்ட மீன்பிடிக் கருவிகளையும் வழிமுறைகளையும் பயன்படுத்துகிறார்கள் என்பதும் அறியப்பட்டதே. இதனால் மீன்வளங்களின் இழப்பு மற்றும் தரச்சிதைவு இடம்பெறும் ஆபத்து மிகவும் அதிகமென்பதை மறுக்கமுடியாது. இந்தப் பிரச்சனை நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளபோதும் நடைமுறைப் படுத்தக்கூடிய ஒரு தீர்வு இதுவரை காணப்படவில்லை. முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இலங்கையின் தெற்கிலிருந்துவரும் மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையே தகராறுகள் தோன்றியுள்ளன. 

பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்வாதாரங்களை நிலைபெறுவகையில் மீள்கட்டியெழுப்ப உதவும் விதத்தில் இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும். இவை அதிகாரப்பகிர்வில் அரசநிலத்தின்மீதான (மற்றைய இயற்கை வளங்கள் உட்பட) அந்தஸ்துப் பற்றிய சர்ச்சையுடனும் தொடர்புள்ள பிரச்சனைகள். ஆய்வறிக்கை மாகாணத்தின் விவசாய அபிவிருத்தி தொடர்பாக வீட்டுக்குடும்பத்தின் தாக்குப்பிடிக்கும் ஆற்றல், உணவுப் பாதுகாப்பு (food security),நிலைபெறுசக்தி போன்ற அம்சங்களைச் சிலவகையில் விரிவாகக் கையாண்டுள்ளது. இவை வேண்டியவையே அத்துடன் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களும் பயனுள்ளவை. ஆயினும் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளைத் தவிர்க்கமுடியாது. மேலும் கடற்றொழிலுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறியுள்ளது ஆய்வறிக்கை. 

நிலம் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி மேலும் வெளிப்படையான ஒரு விமர்சன நிலைப்பாட்டை எடுப்பது அவசியம். நிலத்தை (அத்துடன் மற்றைய இயற்கை வளங்களையும்)வெறுமனே ஒரு உற்பத்திச் சாதனமாக மட்டுமே கணிப்பது நிலைபெறு அபிவிருத்தி பற்றிய ஒரு ஆழமான பார்வையுடன் ஒத்திசையக் கூடியதல்ல. ஒரு உற்பத்திச் சாதனமென்றவகையில் நிலத்தைத் துண்டாடவும், தனியுடைமையாக்கவும், ஒரு சந்தைப் பொருளாதாரத்தில், பண்டமயமாக்கவும் முடியும். மறுபுறம், பரந்த அர்த்தத்தில் நிலமெனும்போது பரந்துபட்ட முழுச் சூழலையும் அது குறிக்கிறது. அந்த, அதாவது பரந்துபட்ட சூழலெனும், அர்த்தத்தில் நிலம் துண்டாடப்படமுடியாத, பண்டமயமாக்கப்படமுடியாத ஒரு பொதுப் பொருளாகிறது. இந்த முரண்பாடு ‘தனியார்-சமூக’(private-social)  ‘செலவு-பயன்’ (cost-benefit) பகுப்பாய்வின் நுண்கணிதத்தின் மையத்திலுள்ளது. நடைமுறையில் தனியாரின் செயற்பாடுகளின் விளைவாகவரும் சகல சமூகரீதியான செலவுகளும் சமூகரீதியான பயன்களும் அளக்கப்படக் கூடியவையல்ல, ஆயினும் இந்த முரண்பாடு பற்றிய ஆழமான புரிந்துணர்வு வளங்களின் மற்றும் சூழலின் நிலைபெறு ஆட்சிமைக்கு அடிப்படையானது. உள்ளூர் சமூகங்களை அந்நியப்படுத்தி அரச நிலங்களை ‘காப்பு’ அல்லது ‘புனித’ இடப்பரப்புக்களாக மூடுவது நிலைபெறு அணுகுமுறைக்கு உகந்த வழிமுறையல்ல. அது வளங்கள் தொடர்பான நிரந்தர முரண்பாடுகளுக்கே வழிவகுக்கும். உல்லாசத்துறை விருத்தி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற இடம்பெறும் கடற்கரையோர வளங்களின் தனியுடைமையாக்கலினதும் மூடலினதும் சமூக மற்றும் சூழல்ரீதியான செலவுகள் பற்றிய முழுமையான மதிப்பீடுகளும் இனிமேல்தான் மேற்கொள்ளப்படவேண்டும். நிலைபெறு அபிவிருத்திக்காக வாதிடுவோர் இணை-பரிணாமப்போக்குச் (co-evolutionary) சிந்தனையால் ஒளியூட்டப்படும் ஒரு அணுகுமுறையைப் பயன்படுத்துவது பற்றிச் சிந்திப்பது பொருத்தமானது. சமூகம்-இயற்கை உறவுகளை அறியவும் வெப்பநிலை மாற்றம் மற்றும் இயற்கை அழிவுகள் பொன்ற சூழ்நிலைகளில் தாக்குப்பிடிக்கும் ஆற்றலைக் கட்டியெழுப்பும் மற்றும் மாறும் நிலைமைகளுக்கேற்பத்  தகவமைக்கும் போக்குகளைப் புரிந்து கொள்ளவும் அத்தகைய அணுகுமுறை ஒரு வழியாகிறது. அதிகாரப் பகிர்வு மாகாணத்தின் வள மற்றும் சூழலின் ஆட்சிமையில் மக்கள் அமைப்புக்கள் பங்குபற்றும் உரிமையை உள்ளடக்கவேண்டும்.

கவனிக்கப்படவேண்டிய சில விடயங்களையும் பிரச்சனைகளையும் இந்தக் கட்டுரையில் எழுப்பியுள்ளேன். வேறு பல பிரச்சனைகளும் உண்டென்பதில் சந்தேகமில்லை. மக்களுக்கு நெருக்கமாக எடுத்துச் செல்லும்வகையில் கட்டமைப்புப் பற்றி மேலும் விமர்சனரீதியிலான மறுசீராய்வு தேவைபடலாம். மாகாண அபிவிருத்தித் திட்டமொன்றை நோக்கிய செயற்பாட்டில் மக்களின் பங்குபற்றல் முழுமையான முன்தேவை. இந்தச் செயற்பாட்டுப் போக்கினை மாகாணசபை நியாயபூர்வமாக எப்போது பொறுப்பேற்கப்போகிறது எனும் கேள்வி மிகவும் பொருத்தமானதே. அடுத்துவரும் மாகாணசபையிடம் இதைச்செய்யவல்ல தூரநோக்கும் திடசித்தமும் இருக்குமென நம்புவதை மட்டுமே இன்றைய காலகட்டத்தில் ஒருவரால் செய்யமுடியும். இயலுமைப் படுத்தும் சூழலை உருவாக்கி அதற்கும் அப்பால் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வினை நோக்கி நகரும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டா எனும் கேள்வியும் மிகவும் பொருத்தமானதே.

சமுத்திரனின் குறிப்பு: இந்தக் கட்டுரையை 2019 மார்ச் 22 ஆம் திகதி இலங்கைப் பத்திரிகை தினகரன் எனது பெயருடன் பிரசுரித்தது. ஆனால் அதில் (தமிழில் சேந்தன்) எனும் முற்றிலும் தவறான தகவலும் அடைப்புக் குறிக்குள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரை நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை மூலமாகக் கொண்டு என்னாலேயே முற்றிலும் எழுதப்பட்டது என்பதைத் தெரியத்தருகிறேன்.

அழகும் அர்த்தங்களும் ததும்பிய அசையும் கவிதைகளும் ஞானரதம் நடன நாடகமும் – நோர்வே கலாசாதனா கலைக்கூடம் வழங்கிய அரங்கம் 2018

 

சமுத்திரன்

இந்த வருடம் பத்தாம் மாதம் பதின்நான்காம் திகதி நோர்வேயின் பாரும் (Bærum)கலாச்சார மையத்தில் கவிதா லட்சுமியின் நடன அமைப்பிலும் நெறியாள்கையிலும் கலாசாதனா கலைக்கூடம் வழங்கிய ‘அரங்கம் 2018’ ஆக்கத்திறனுடன் அழகாக உருவாக்கப்பட்ட ஒரு மாலை நிகழ்ச்சி என்பதே இந்த இரசிகனின் அபிப்பிராயம். நான் முன்னர் விரும்பி வாசித்த புதுக்கவிதைகள் பாடல்களாக இசையமைக்கப்பட்டு பரதநாட்டியத்தினூடாக உயிர்ப்புடன் அசைவதைக் காண்பதும் கேட்பதும் எனக்கு ஒரு புதிய அனுபவமே. உரைநடையில் பாரதி வடித்த கற்பனார்த்தப் பயணங்களைச் சொல்லும் ‘ஞானரதம்’ கவிதைமயமாக்கப்பட்டு அதில் அவரின் கவிதைகள் பலவற்றின் பகுதிகளையும் உள்ளடக்கிய கலைத்துவமான நடனநாடகமாக மேடையில் பார்த்ததும் புதிய அனுபவமே. நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பும் மண்டபத்தின் ஒலி, ஒளி தொழில்நுட்பமும் அதன் கையாள்கையும் சிறப்பாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கவை. முழு நிகழ்வும் ‘அசையும் கவிதைகள்’, ‘ஞானரதம்’ என இரண்டு பாகங்களாக மேடையேற்றப்பட்டது. கோமதிநாயகம், அஸ்வமித்ரா, கணேசன் சுந்தரமூர்த்தி ஆகியோர் செவிக்கினிய அதேவேளை கவிதைகளின் செய்திகளுக்கேற்றவகையில் இசையமைத்துள்ளார்கள். இந்தியாவிலேயே பாடல்கள் பதிவுசெய்யப்பட்டன என அறிகிறேன்.

முதலாவது பகுதி (தில்லானா உட்பட)பதினெட்டுக் கவிதைகளை உள்ளடக்கியது. ஈழ, புலம்பெயர், தமிழகப் புதுக்கவிதைகளுடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நோர்வீஜிய, பாலஸ்தீன மற்றும் பாரசீகக் கவிதைகளும் இவற்றுள் இருந்தன. மகாகவியின் ‘ஊரெல்லாம் கூடி’ (‘தேரும் திங்களும்’), வில்வரத்தினத்தின் ‘புதுயுகச் சங்கொலி’, இளவாலை விஜயேந்திரனின் ‘அப்பா பிள்ளை பேசிக்கொண்டது’, கவிதாலட்சுமியின் ‘உள்ளத்தணல்’ மற்றும் ‘பெண்’, மேத்தாவின் ‘தந்தைக்கு ஒரு தாலாட்டு’, புதுவை இரத்தினதுரையின் ‘யாரோடு பேச’, பிரமிளின் ‘செவ்வானம்’, பாரதியின் ‘ஓடி விளையாடு பாப்பா’, ஊர்வசியின் காத்திருப்பு எதற்கு’, வெண்ணிலாவின் ‘யார் தேவர் யார் அசுரர்’, ஆத்மநாமின் ‘என்னை அழித்தாலும்’, இன்குலாப்பின் ‘மனிதம் என்றொரு பாடல்’, இவற்றுடன் ஹென்றிக் இப்சனின் ‘எனது நட்சத்திரத்திற்கு’, பாலஸ்தீனக் கவிஞர் தாவ்ஃபிக் சையத்தின் கவிதை (M. A. நுஃமானின் மொழிபெயர்ப்பு), பாரசீகக் கவிஞர் ரூமியின் கவிதைகள் (ரூபன் சிவராஜாவின் மொழிபெயர்ப்பு)எல்லாமே இசையுடன் இணைந்த கலாசாதனா கலைக்கூடத்தின் மாணவிகளின் நடனத்தால் புதுமெருகு பெற்றன.

இந்தக் கவிதைகள் பல்வேறு உணர்வுகளையும் செய்திகளையும் தருவன. இவற்றின் உள்ளடக்கங்கள் இயற்கை, சமூக ஒடுக்குமுறை, சாதிய எதிர்ப்பு, விடுதலை, போராட்டம், பெண்ணுரிமை, காதல், மனித நேயம், துணிவு, தனிமை,  எனப் பல அம்சங்களைக் கொண்டன. இத்தகைய கருப்பொருட்களைக் கொண்ட புதுக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருப்பது வரவேற்கப்படவேண்டியது. இவைதரும் செய்திகளை அழகியல்பூர்வமாக வடிவமைக்க பரதநாட்டிய அசைவுகளைப் பயன்படுத்த முடியுமமென்பதையும் செய்து காட்டியிருக்கின்றனர் கவிதா லட்சுமியும் அவரது குழுவினரும். எனக்குத் தெரிந்தவரை புதுக்கவிதையை நடனமாக வடிவமைப்பது ஒரு புதிய பரிசோதனை. கலைவடிவத்திற்கும் அது உள்ளடக்கும் பேசுபொருளுக்குமிடையிலான உறவு பற்றிக் கலாசாதனா கலைக்கூடம் சொல்வது நமது கவனத்தை ஈர்க்கிறது:

‘ஒரு கலைவடிவத்தினூடாக நாம் கொண்டுவரும் பேசுபொருள் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. காலத்துக்குக் காலம் வெவ்வேறுவகையில் அவை வெளிப்படலாம்….பரதக்கலையின் பேசுபொருளை அகலப்படுத்தி, மனித மனத்தின் ஆத்மார்த்தமான எல்லாத் தேடல்களுமே உயர்ந்த தன்மை கொண்டவையெனும் பரிமாணத்திற்கு நாட்டியக்கலையில் பேசுபொருளை எடுத்துச் செல்லவேண்டுமென்ற நோக்குடனேயே இந்த நிகழ்வை வடிவமைத்துள்ளோம்.’ (நிகழ்வின் அறிவிப்புத் தாளிலிருந்து)

முன்னோக்கிய பார்வை. துணிகரமான பரிசோதனை. இது ஒரு விவாதத்திற்கான அழைப்புபோலும் ஒலிக்கிறது. தொன்மை மிக்கது மாற்றமுடியாதது எனக்கருதப்படும் கலைவடிவங்கள் காலப்போக்கில் மாற்றத்திற்குள்ளாவதன் மூலமே முற்றாக மறையாமல் தொடர்கின்றன என்பதே வரலாறு தரும் பாடம். இந்த விவாதத்திற்குரிய விடயத்தைத் தொடர்வது இந்தக் குறிப்பின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது.

அந்த மாலையின் மகுடம்போலான நிகழ்ச்சியான ‘ஞானரதம்’ பற்றிச் சிலவார்த்தைகள். இது கனதியான பொறுப்புக்களைக் கொண்ட ஒரு திட்டத்தின் நிறைவேற்றம் எனக் கூறலாம். பாரதியின் ஞானரதத்தை நடன நாடகமாகப் பிரதியாக்குவதிலிருந்து அதற்குரிய இசையமைப்பு, நடனங்களின் தேர்வு, நடிகர்களின் பயிற்சி, மேடையமைப்பு எல்லாவற்றையுமே சிறப்பாக ஒருங்கிணைத்து அரங்கேற்றியிருப்பது ஒரு பெருமுயற்சியின் வெற்றி என்பது தெளிவு. இந்த நடன நாடகத்தில் ஐம்பது பேர் மேடையில் தோன்றினர். இவர்களில் நாற்பத்தியேழுபேர் கலாசாதனா கலைக்கூடத்தின் மாணவிகள். மற்ற மூவரில் இருவர் பாரதியாகவும் ஒருவர் மன்மதனாகவும் நடித்தனர்.

நடன நாடகப் பிரதியாக்கத்தில் பாரதியின்  இருபத்தைந்து கவிதைகளிலிருந்து பொருத்தமான பலவரிகளை உரிய இடங்களில் இணைத்து ஞானரதத்தைச் செழுமையாக மீளுருவாக்கியுள்ளார்கள். இதனால் இந்த நடன நாடகம் பாரதியின்சமூக விமர்சனப் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை அவரின் பல்பரிமாண ஆளுமையையும் அதன் முரண்பாடுகளையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. பலவகையில் தனது காலத்திற்கும் அப்பால் முன்னேறிய அறிவையும் புரட்சிகர சமூகப் பார்வையையும் கொண்டிருந்த பாரதி மறுபுறம் ஒரு ஆழ்ந்த தெய்வபக்தனாக வேதத்தில் ஈடுபாடுள்ள ஆத்மீகவாதியாகவுமிருந்தான். இந்த முரண்பாட்டினை ஆராய்ந்த சிலர் பாரதியின் பார்ப்பனிய எதிர்ப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். முன்னைய காலத்தில் பார்ப்பனர் வேதவிதிப்படி ஒழுகியதை வியந்தும் பின்னாளில் அவர்களின் சீரழிவை வன்மையாகத் தாக்கியும் எழுதியுள்ளான். இதை ஞானரதத்திலும் சந்திக்கிறோம். அத்துடன் இன்னொரு முரண்பாட்டையும் காண்கிறோம். அதுதான் தர்மத்தை அறிந்தபின்னும் போகத்திலிருந்து விடுபடமுடியாத மனநிலை. நீண்ட புனைகதையான ஞானரதத்தை அறிந்திராத வாசகருக்காக மிகக்குறுகிய சுருக்கமொன்றைக் கீழே தருகிறேன்.

மிகுந்த செல்வமில்லாமை உலகின் இழிவான இன்பங்களை மட்டுமல்ல உயர்ந்த இன்பங்களைக் கூடப் பெறுவதற்குத் தடையாயிருக்கிறதே என வருந்தும் பாரதியின் மனம் அவனுக்கு ‘ஈசன் ஞானம் என்பதோர் தெய்வீகரதத்தைக் கொடுத்திருக்கின்றார் அது விரும்பிய திசைக்கெல்லாம் போய்விரும்பிய காட்சிகளையெல்லாம் பார்த்துவரக்கூடிய வல்லமை உடையது’ என ஆலோசனை வழங்குகிறது. கனவு மெய்ப்படவேண்டும், வானகம் இங்கு தென்படவேண்டுமென மண்ணுலகில் மாற்றத்தை வேண்டிய பாரதி ஞானரதத்தில் உபசாந்திலோகம், கந்தர்வலோகம், சத்தியலோகம், தர்மலோகம் என்ற நான்கு கற்பனை உலகங்களுக்குப் பயணத்தை மேற்கொள்கிறான். கதையில் வரும் மண்ணுலகத்துடன் ஐந்து உலகங்கள். அவனுக்கு ‘மனம் என்ற மோகினியிடத்தில் காதல் அதிகம்’ என்பதால் உபசாந்தி லோகத்திற்கு அநுமதி கிடைக்கவில்லை. ‘மனம் எனும் பொய்ப்பொருளை’ விட்டுவிட்டால் மட்டுமே அந்த லோகத்திற்குள் பிரவேசிக்க முடியும். உள்ளே சென்றால் வெளியேவரமுடியாது. பாரதி அதற்குத் தயாரில்லை.

மறுநாள் ‘துன்பக்கலப்பற்ற இன்பங்கள் நிறைந்திருக்கும் உலகத்திற்குப் போய்வருவோமே’ என அவன் மனம் சொல்வதற்கிணங்க ஞானரதத்தில் கந்தர்வலோகம் செல்கிறான். அங்கே பர்வதகுமாரி என்ற கந்தர்வ அழகியைச் சந்திக்கிறான். அவனது மண்ணுலக சமூகத்தினரால் மதிக்கப்பெறும் ஆசாரதர்மங்களுக்கு விரோதமானதெனக் கருதப்படும் காட்சிகளைக் காண்கிறான் போகங்களை அனுபவிக்கிறான். அவளுடன் வானத்தில் பறக்கிறான். மது அருந்துகிறான். அங்கு எல்லாமே அழகென லயிக்கிறான். எல்லாம் இன்பமயம். ஆனால் ஒருநாள் தனியேஇருந்தபடி இன்பக் களஞ்சியமாகிய கந்தர்வலோகம்கூடத் தன்மனதிற்குத் திருப்திதரவில்லையே என உணர்கிறான். அனுதினமும் ஒன்றையே திரும்பச் செய்வதில் திருப்தியற்ற நிலையில் மறுநாள் சத்தியலோகத்திற்கு ஞனரதத்தில் பயணிக்கிறான். மாசற்ற ஒளிமிகுந்த அங்கே வித்தியாசமான அநுபவம். உண்மையை தேடத் தனியே துணையின்றிப்போகவேண்டுமென உணர்கிறான். சத்திய சொரூபமான பிரமனை ஒரு கிரணத்தைப் பற்றியபடி அணுஅணுவாக நகர்ந்தே நெருங்கமுடியும் எனும் தொனியைக் கேட்டவன் அதில் நாட்டமின்றிச் சத்தியலோகத்தைச் சுற்றிப் பார்க்கிறான். உண்மைக்குப்பல வர்ணங்களுண்டென அறிகிறான். சத்தியலோகத்து அநுபவம் அவனுக்குக் கந்தர்வலோகத்தின் சுகங்களை நினைவூட்டுகிறது. அங்கு போகவேண்டும் போலிருக்கிறது. அப்போது மனத்தின்மீது ஆத்திரமடைந்து அதை கொல்ல முயற்சிக்கிறான்.  மீண்டும் ஒரு தொனி சொல்கிறது. ‘மனதைக் கொல்லமுடியாது….வேடிக்கை பார்க்கவந்தவனுக்கு சத்தியம் புலப்படாது. கந்தர்வ நாட்டிலே போய் இன்பம் கண்டது போல் இங்கும் உண்மையைக் கண்டுவிடாலமென்ற பேதமையெண்ணத்தை விட்டுவிடு.’ எனக்கூறிய தொனி அவனை ஒருமுறை தர்மலோகத்திற்குப் போய் அங்குள்ள அநுபவங்களை அறிந்துவரச் சொல்கிறது.

இந்தக் கட்டத்தில் கனவு கலைகிறது. மண்ணுலக நிசவாழ்வின் ஏழ்மையை, குடும்பப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். மனைவியுடன் வாக்குவாதம். மண்ணுலகத்தின்மீது ஆத்திரமடைகிறான். இதில் மனிதர் வசிக்கலாமா? இது துன்பகளம், சிறுமைக் களஞ்சியம், இது நரகம் என்று திட்டித்தீர்க்கிறான். சில நாட்களின்பின் மீண்டும் ஞானரதமேறி தர்மலோகம் செல்கிறான். அங்கே வழிகாட்டியாக வந்த தபோமுனியிடம் தான் பிராமண தர்மத்தையும் சத்திரிய தர்மத்தையும் அறிய விரும்புவதாகக் கூறுகிறான். வழிகாட்டி பாரதியை யமசன்னிதானத்திற்கும் பின்னர் கண்வமுனியிடமும் அழைத்துச்செல்கிறார். கண்வமுனி வர்ணாச்சிர தர்மம் பற்றிய பாரதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார். பிறக்கும்போது மனிதர்களெல்லாம் மிருகங்களாகவே பிறக்கிறார்கள். வர்ணம் பிறப்பால் வருவதில்லை. பயிற்சியினாலும் குணகர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகின்றார்கள். சகல தேசங்களிலும் வர்ணாச்சிரம தர்மம் உண்டு ஆனால் பாரதத்தில் அது சீர