சமுத்திரன்
2017 May
1989 ஆறாம் மாதம். ஒரு ஐரோப்பிய நிறுவனத்தின் அபிவிருத்தித் திட்டம் ஒன்றினை மதிப்பீடு செய்யும் ஆலோசகராக நோர்வேயிலிருந்து எனது பிறந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு செல்கிறேன். 1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) வடக்கு-கிழக்கில் இருந்த காலம். ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி (EPRLF) மாகாண சபை ஆட்சியிலிருந்த காலம். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இலங்கை வான்படை ஒரு விமான சேவையை நடத்திக் கொண்டிருந்த காலம். நான் அதைப் பயன்படுத்தி யாழ் சென்றேன். அந்த விமானப் பயணம் ஒரு மறக்கமுடியாத அனுபவம். விமானத்திலிருந்த ஆசனங்களையும் விட அதிகமான பயணிகள். மூவருக்குரிய ஆசனங்களில் நால்வர் அமர்ந்திருந்தோம். இந்த நிலையில் ஆசனப் பட்டியை யாரும் கட்டமுடியவில்லை. கட்டும் படி பணிக்கப்படவும் இல்லை. அது மட்டுமல்ல. சிலர் நின்றபடி பயணம் செய்தனர். அப்படித்தான் ஏழு வருடங்களின் பின் யாழ் சென்றேன். அங்கு நான் வாழ்ந்த ஏழு நாட்களில் எத்தனையோ அனுபவங்கள்.[i]
கந்தர்மடத்தில் எனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்தேன். பகல் பொழுது முழுவதும் பெரும்பாலும் எனது தொழில் தொடர்பான பிரயாணங்கள், நேர்காணல்கள், கலந்துரையாடல்கள். மாலையில் சந்தர்ப்பம் கிடைத்த போது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சந்திப்புகள். ஆனால் மாலை ஆறுமணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. பொதுவாக இந்தச் சந்திப்புகளை மாலை ஆறு மணிக்கு முன்னரே முடித்து விடுவேன். ஆனால் அன்று மாலை ஒரு வித்தியாசமான ஒழுங்கு. எனது நண்பர்கள் மௌனகுருவும் சித்திராவும் மாலை உணவுக்கு அழைத்திருந்தார்கள். இளம் கவிஞர் சேரனையும் அழைத்திருப்பதாகக் கூறினார்கள். அன்றிரவு அவர்கள் வீட்டில் தங்கி மறுநாள் காலை ஊரடங்குச் சட்டம் முடிந்தபின் நான் சித்தப்பாவீட்டிற்குத் திரும்பலாம் எனும் மௌனகுருவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டேன். நான் சேரனின் கவிதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன் ஆனால் நேரில் சந்தித்துப் பேசியதில்லை. அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதையிட்டு மகிழ்வுற்றேன்.
அன்று மௌனகுரு வீட்டிற்குப் போகுமுன் யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்துறை விரிவுரையாளரான நண்பர் சிறீதரனைச் சந்தித்தேன். அவர் அப்போது மனித உரிமைகளுக்கான யாழ் பலகலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர் என்னை மௌனகுரு வீடுவரை ஆறு மணிக்குமுன் கூட்டிச்சென்று விடைபெற்றார். அங்கே மௌனகுரு, சித்திரா அவர்களின் மகன் சித்தார்த்தன், சேரன் என்னை வரவேற்றனர். சித்தார்த்தன் அப்பொது யாழ் இந்துக் கல்லூரி மாணவன் என நம்புகிறேன். எனது இன்னொரு நெருங்கிய நண்பன் நுஃமானும் அப்போது யாழ் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவர் மௌனகுரு வீட்டில்தான் குடியிருந்தார். ஆனால் அன்று அவர் தனது சொந்த ஊரான கல்முனைக்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன்.
ஆரம்பத்தில் நமது சம்பாசனைகள் பல விடயங்களைத் தொட்டன. ஆயினும் மாலை உணவருந்தும் போதும் அதற்குப் பின்பும் இலங்கையின் அன்றைய அரசியல் நிலைமை, விடுதலைப் போராட்டத்தின் போக்குகள், இந்திய இராணுவத்தின் நடைமுறைகள், மற்றும் வடக்கு – கிழக்கு மாகாண சபையை ஆளும் EPRLFன் நடைமுறைகள் ஆகியவற்றைச் சுற்றியே கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. ஒரு கட்டத்திற்குப்பின் எல்லோரும் பங்குபற்றிக் கொண்டிருந்த கலந்துரையாடல் பிரதானமாக எனக்கும் சேரனுக்குமிடையிலான விவாதமாக உருமாறத் தொடங்கியது. அதேவேளை அது மிகவும் பண்புடனும் நட்புணர்வுடனும் தொடர்ந்தது. இளம் சித்தார்த்தனும் தன் கருத்துக்களை முன்வைத்தார். முழு இரவுக்கூடாகத் தொடர்ந்த அந்த விவாதத்தில் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் அதி முக்கிய இடத்தைப் பெற்றன. விவாதம் சற்றுச் சூடுபிடித்து நமது குரல்கள் உயரும்போது சித்தார்த்தன் எழுந்து நின்று ‘கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ. அடக்கி வாசியுங்கோ.’ எனக்கூறி வெளியே இந்திய இராணுவத்தினர் அல்லது EPRLFன் படையினர் நடமாடிக் கொண்டிருக்கலாம் என்பதை நினைவூட்டிக் கொள்வார்.
வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பது பற்றி நமக்கிடையே பெரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. ஆனால் விவாதம் இலங்கை நிலைமைகளில் அந்த உரிமையை அரசியல்ரீதியில் எப்படிப் பயன் படுத்துவது எத்தகைய தீர்வு நியாயமானது போன்ற கேள்விகளிலேயே நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. சேரன் பிரிந்து போகும் உரிமைக்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். நான் ஒரு நாட்டிற்குள் சமஷ்டி, பிரதேச சுயாட்சி போன்ற தீர்வுக்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தேன். சேரனின் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றை ஏற்கனவே வாசித்திருந்ததால் தேசிய இனப்பிரச்சனை பற்றிய அவருடைய பார்வையை அறிந்திருந்தேன். அவர் தமிழ் குறுந்தேசிய வாதத்தை ஏற்காதவர் என்பதையும் நான் வாசித்த அவருடைய எழுத்துகளிலிருந்து அறிந்திருந்தேன். ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஈழத்துக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புக்குச் சேரன் எழுதிய முன்னுரை பற்றி நான் நோர்வேயில் சில நண்பர்களுடன் உரையாடியுள்ளேன். அதில் அவர் ‘போராட்டத்துள் ஒரு போராட்டம்’ பற்றிக் கூறியது மற்றும் தமிழ் ஈழப் போராட்டம் தென் ஆசியாவிற்கே ஒரு விடுதலைப் பொறியை ஏற்றும் என்ற அவரின் எதிர்பார்ப்பு எல்லாம் நினைவுக்கு வந்தன.
விவாதம் தொடர்கிறது. வடக்கு – கிழக்கில் தமிழ் ஈழத்தின் சாத்தியப்பாடு பற்றி ஆராயும்போது அங்குவாழும் முஸ்லிம் மக்களின் அந்தஸ்து ஒரு பொருளாகியது. அவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. அவர்களின் ஆதரவைப் பெறமுடியும் எனச் சேரன் நம்பியிருக்கலாம். இந்த விடையம்பற்றிப் பேசும் போது நான் சேரனைப் பார்த்து ‘உங்கள் நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டும் தானா?’ எனக் கேட்டேன். நுஃமான் சேரன் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவர். அவரைச் சேரன் மாமா என அழைப்பார். சித்தார்த்தனும் நுஹ்மானை மாமா என்றே அழைப்பார். ஒரு அரசியல் மட்டத்தில் இடம்பெற்ற விவாதத்தில் என்னிடமிருந்து அத்தகைய ஒரு கேள்வியைச் சேரன் எதிர்பார்த்திருக்க மாட்டார் என நம்புகிறேன். அவரின் முகத்தில் ஒரு மாற்றம். ஒரு கண நேரம் பேச்சிழந்த நிலை. அந்த அமைதிக்குப்பின் ‘இப்படி ஒரு பெரிய ஆயுதத்தை பயன்படுத்தி விட்டீர்கள்’ என்றார். சித்தார்த்தனும் எனது கேள்வியால் அதிர்ந்துபோனதுபோல் பட்டது. காலை நாலு மணியாகிவிட்டபோதும் நமது விவாதம் முடிவு பெறாத நிலையில் கொஞ்ச நேரமாயினும் தூங்குவோம் என முடிவெடுத்தோம். இந்த உரையாடலை பதிவு செய்திருக்க வேண்டுமெனச் சித்தார்த்தன் சொன்னார். மறக்கமுடியாத அனுபவம். மறுநாட்காலை எனக்கு வேறு வேலைகளிருந்ததால் காலை உணவை முடித்துக் கொண்டு விடை பெற்றேன். அந்த சந்திப்புக்குப்பின் சேரனுடன் நல்ல தொடர்பிருந்தது. அவர் ‘இனங்களுக்கிடையே நீதி மற்றும் சமத்துவத்துக்கான இயக்கம்’ பிரசுரித்த ‘சரிநிகர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகையை ஒழுங்காக எனக்குக் கிடைக்கும்படி செய்தார்.
1990 பத்தாம் மாதம் 22ம் திகதி விடுதலைப் புலிகள் பாரம்பரியமாக வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை நிர்ப்பந்தமாக வெளியேற்றினர். தமது தாயகத்திலிருந்து அவர்கள் விரட்டப்பட்ட அந்தப் பயங்கர சம்பவத்திற்குப் பின் வான்தபாலில் வந்த ‘சரிநிகர்’ பத்திரிகையை ஆவலுடன் திறக்கிறேன். அதிலிருந்து மடிக்கப்பட்ட ஒரு சிறு கடதாசித் துண்டு கீழே விழுகிறது. அதை எடுத்து விரிக்கிறேன். சேரனிடமிருந்து இரு வரிகள். அந்தச் சிறு கடிதத்தை நான் பலதடவை வாசிக்கிறேன். ‘நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டுமா என அன்று கேட்டீர்கள். இப்போது சொல்கிறேன் அது ஒரு போதும் வேண்டாம்.’ அந்தச் செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. ஆயினும் என் கண்கள் கலங்கின.
[i] அந்த அனுபவங்களின் சில அம்சங்கள் பற்றி அப்போதே பின்வரும் கட்டுரையை வரைந்துள்ளேன். N. Shanmugaratnam, Seven Days in Jaffna – Life under Indian occupation, Race & Class, 31(2),1989