அ. சிவானந்தன் (1923-2018) அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றே எனும் தனது வாக்கிற்கமைய முடிந்தவரை வாழ்ந்த ஒரு ஆளுமையின் மறைவு

 

சமுத்திரன்

சிவானந்தனின் மரணம் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களுடன் தன்னை அடையாளப்படுத்திய ஒரு பேரறிஞரின் மறைவென அவரை நன்கறிந்தோர் சர்வதேச ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர். ‘நாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறோமோ அந்த மக்களுக்காகவே எழுதுகிறோம்’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த சிவா ஜனவரி மூன்றாம் திகதி தொண்ணூற்றுநாலு வயதில் அவர் ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக வாழ்ந்து வந்த லண்டனில் மறைந்தபோது விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது சுலபமல்ல. அந்த ஆளுமைக்குள் ஆற்றல்மிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் இருந்தன      என அவரைப் பற்றி நண்பர்கள் வியந்துரைப்பதில் ஆச்சர்யமில்லை.

கொழும்பில் இலங்கை வங்கியில் பதவி வகித்து வசதியுடன் குடும்பத்துடன் வாழ்ந்த சிவானந்தன் 1958ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் விளைவாக லண்டனுக்குப் புலம்பெயர்ந்தார். அவர் அங்கு சென்றடைந்தபோது நொட்டிங்ஹில் எனும் பகுதியில் வாழ்ந்து வந்த கரீபிய கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் கலவரத்தின் நேரடிச் சாட்சியானார். ஒரு இனக்கலவரத்திலிருந்து தப்பி இன்னொன்றுக்குள் சென்றடைந்த தனது அநுபவத்தை ‘இரட்டை ஞானஸ்நானம்’ (´double baptism´) என அவர் வர்ணித்துள்ளார். இந்த அநுபவமும் அவர் புகுந்த நாட்டில் வாழப்போகும் வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுக்க ஒரு உந்துதலாயிற்றுப் போலும்.

ஆங்கிலமொழி ஆற்றல், பல்கலைக்கழகப் பட்டம், வங்கியாளர் தொழில் அநுபவம் போன்ற தகைமைகளைக் கொண்டிருந்த அவர் போன்ற ஒருவரால் பிரித்தானியாவில் – நமது காலனித்துவக்காலத் ‘தாய் நாட்டில்’ –  ஒரு ‘நல்ல’ வேலையைப் பெறுவது சுலபம் போல் பட்டிருக்கலாம். ஆனால் வேலை தேடுதலே அவருக்கு ஒரு அரசியல் அநுபவமாயிற்று. முன்பிருந்தே இடதுசாரிப் போக்குடையவராய் இருந்த தனது முழுமையான புரட்சிகர மாற்றம் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னரே ஏற்பட்டதென அவர் பலதடவை கூறியதை நான் கேட்டுள்ளேன். ஒரு நூலகராகப் பயிற்சி பெற்றபின்  அரசாங்கத்தின் கொள்கைவகுப்புக்கு உதவும் அரச கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிறுவனமாயிருந்த இனங்களிடையிலான உறவுகள் நிறுவனத்தில் (Institute of Race Relations – IRR ல்) நூலகராகப் பதவி ஏற்றார். இனப்பிரச்சனை பற்றிய அந்த நிறுவனத்தின் ஆய்வுகளையும் கொள்கை நிலைப்பாடுகளையும் அங்கு பணியாற்றிய ஒரு குழுவினர் ஆழமாக விமர்சித்தனர். சிவானந்தனே இந்தக் குழுவின் பிரதான சிந்தனையாளர். இடதுசாரிகளான இந்தக் குழுவினரின் கருத்தில் அரசாங்க உதவியில் தங்கியிருக்கும்வரை அந்த நிறுவனத்தால் சுதந்திரமாக இயங்கமுடியாது. தனது இடதுசாரிச் சகாக்களின் ஒத்துழைப்புடனான போராட்டத்திற்கூடாகச் சிவானந்தன்  IRRஐ அரசாங்கத்தின் பிடியிலிருந்து முற்றாக விடுவித்து அதை நிறவாதத்திற்கு எதிரான மற்றும் மூன்றாம் உலகின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவான நிலையமாக மாற்றியமைத்தார். புதிய IRRன் இயக்குனாராகப் பதவி ஏற்றபின்னர், ‘இனமும் வர்க்கமும்’ (Race and Class) எனும் சர்வதேச சஞ்சிகையையும் வேறு சில முற்போக்குச் சிந்தனையாளர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். அதன் கொள்கையையும் சுதந்திரத்தையும் மதித்து ஏற்றுக்கொள்ளும் அமைப்புக்களின், தனிமனிதரின் உதவியுடன் IRR இன்றுவரை வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

‘சிந்திப்பதற்காகச் சிந்திப்பதில் அர்த்தமில்லை, செயற்படுவதற்காகச் சிந்திக்கவேண்டும்’ எனத் தன் அறிவுரீதியான நடைமுறையை வகுத்துக் கொண்டார். மெய்யியலாளர்கள் உலகைப் பலவிதமாக விளக்கியுள்ளார்கள் ஆனால் உலகை மாற்றுவதே முக்கியமானதெனும் மாக்சின் பிரபலமான வார்த்தைகளை நினைவூட்டுகிறது சிவானந்தனின் செயற்பாட்டை நோக்காகக் கொண்ட எழுத்துப்பணி. பிரித்தானியாவில் இன (நிற) அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வர்க்கரீதியில் மோசமாகச் சுரண்டப்பட்ட கறுப்பினத் தொழிலாளர்களின் – இவர்கள் ஆபிரிக்க, ஆசிய, மற்றும் கரீபிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் – உரிமைப் போராட்டங்களின் பேச்சாளனாக, எழுத்தாளனாக விளங்கினார் சிவா. அதே காலத்தில் இனமும் வர்க்கமும் ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் புறநிலை யதார்த்ததைக் கூர்மையாக இயங்கியல்ரீதியில் அவதானித்துக்  கோட்பாட்டுமயமாக்கிப் புதிய விவாதங்களுக்கு மேடை அமைத்தார். இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப்பின் பிரித்தானியாவின் பொருளாதார மீள்நிர்மாணத்திற்கும் அபிவிருத்திக்கும் மேலதிக தொழிலாளர் பெருமளவில் தேவைப்பட்டனர். இந்தப் பற்றாக்குறையை நிரப்புவதற்கு பிரித்தானியா தனது முன்னைய காலனி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்தது. இது அந்த நாட்டிற்கு மிகவும் மலிவான ஊதியத்திற்கு வேலைசெய்யும் உழைபாளர்களைக் கொடுத்தது. இது பிரித்தானியாவின் போருக்குப்பின்னான அபிவிருத்திக்குப் பெரிதும் உதவியது. முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குகந்த தொழிற்படையின் போதாமையை நிரப்புவதற்கேற்ற வகையில் நாட்டின் குடிவரவுக் கொள்கை அமுல்படுத்தப்பட்டது. இந்த மக்களின் தொழிலாற்றும் சூழல் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் அதே நாட்டின் வெள்ளைத் தொழிலாளர்களின் நிலைமைகளைவிட மோசமாக இருந்தன. இவர்களின் குடியேற்றமும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது.

வெள்ளையர்கள் செய்ய விரும்பாத தொழில்களே பெரும்பாலும் கறுப்பர்களுக்குக் கிடைத்தன. காலனித்துவ காலத்தில் ஆரம்பித்த இனரீதியான தொழிற்பிரிவு (racial division of labour) போருக்குப்பின் பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்ததென விளக்கிய சிவா இந்தக் கறுப்பு மக்களின் உரிமைப் போராட்டம் தனியே வர்க்கப் போராட்டம் மட்டுமல்ல, இருக்கும் சமூக அமைப்பில் அதற்கு ஒரு இனப்பரிமாணமும் உண்டெனக் கூறினார். கறுப்பர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களையும் நிறவாதக் கலவரங்களையும் அவர் தலைமைதாங்கிய IRR ஆவணப்படுத்தியது. பிரித்தானியாவில் கறுப்பினத்தவர்கள் நிறுவனமயமாக்கப்பட்ட நிறவாதத்திற்காளாகிறார்கள் என வாதாடிய அவர் இனமும் வர்க்கமும் (race and class) ஒன்றை ஒன்று ஊடறுத்த வண்ணமிருக்கும் யதார்த்தமே அந்த மக்களின் போராட்டத்தை வரையறுக்கும் புலமாகிறது என ஆதாரபூர்வமாகச் சுட்டிக் காட்டினார்.  சிவானந்தனின் வாதம் சகல சமூக முரண்பாடுகளையும் ஒற்றைப் பரிமாணப் பார்வையில் வர்க்க அடிப்படைவாதத்திற்குள் குறுக்கிவிடுவோருக்குப் பிரச்சனையாயிருந்தது. ஆனால் அவர் பயன்படுத்திய ‘ஊடறுத்தல்’ (intersection) கோட்பாடு யதார்த்தத்தின் சிக்கல் மிகுந்த இயக்கப் போக்குகளை முழுமையாக அறிய உதவியது.

முதலாளித்துவ உலக மயமாக்கலின் அரசியல் பொருளாதாரப் போக்குகள் மற்றும் கலாச்சாரத் தாக்கங்கள் பற்றியும் அவை ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் போராட்டங்களுக்கு எழுப்பியுள்ள சவால்கள் பற்றியும் பல ஆய்வுக் கட்டுரைகளை வரைந்தும் பகிரங்க உரைகளை நிகழ்த்தியும் உள்ளார். நவதாராளவாதத்தின் எழுச்சியின் விளைவான சந்தை அரசு (market state) பற்றியும் சமகால ஏகாதிபத்தியத்தின் புதிய போக்குகள் பற்றியும் ஆழ ஆராய்ந்துள்ளார்.  நிறவாதம் என்பது சமூக-பொருளாதார அமைப்பு மற்றும் அரசியல் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு வெளியே தனியாக இயங்கும் ஒன்றல்ல. அது அவற்றுக்குள்ளே கவிந்திருப்பதால் அவை மாற்றமடையும்போது நிறவாதத்தின் நடைமுறைப் போக்கும் மாற்றமடைகிறது. இன்றைய தகவல்யுக மூலதனத்தின் ஏகாதிபத்தியம் முன்னைய ஆலைத்தொழில்யுக ஏகாதிபத்தியத்திலிருந்து வேறுபட்டது. நிறவாதத்தின் அமைப்புரீதியான வெளிப்பாடுகளும் இதற்கேற்ப மாற்றமடைகின்றன. உலகமயவாதமே (globalism) இன்றைய ஏகாதிபத்தியத்தின் வரைவிலக்கணமாகிறது. ஆகவே இருபத்தியோராம் நூற்றாண்டின் நிறவாதம் பற்றிய ஆய்வினை உலகமயமாக்கலின் அமைப்புக்களின் ஆய்விலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் எனும் கருத்தை முன்வைக்கிறார். அவரது எழுத்துக்களும் பேச்சுக்களும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பத் தவறவில்லை. நானும் சில தடவைகள் அவருடன் முரண்பட்டு விவாதித்துப் பயனடைந்திருக்கிறேன். 1980களுக்குப்பின் எழுந்த மாக்சிய செல்நெறிகள் தொடர்பாக அவருக்கும் அவரது நீண்டகால மாக்சிய நண்பர்கள் சிலருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

சிவாவின் படைப்பிலக்கியப் பங்களிப்பும் அவருடைய அரசியலுடன் நெருங்கிய தொடர்புடையது. பல சிறுகதைகளை எழுதிய அவர் 1997ல் பிரசுரிக்கப்பட்ட ´When Memory Dies´ எனும் ஒரு நாவலை மட்டுமே எழுதினார். சர்வதேசப் பரிசு பெற்ற பிரபலமான இந்த நாவல் இலங்கையின் மூன்று சந்ததிகளின் வாழ்க்கையை அந்த நாட்டின் அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து தரும் ஒரு கலைத்துவமான படைப்பு. அவருக்கே உரிய கவித்துவம் மிக்க உரைநடையில் எழுதப்பட்டது. அவரதும் அவர் அவதானித்து உள்வாங்கிய வேறுபலரதும் வாழ்க்கை அநுபவங்கள் அவரின் படைப்பின் மூலவளங்களாயின. இந்த நாவலுக்கான ஆய்வினை அவர் நீண்ட காலமாகச் செய்துவந்தார் என்பதை நான் அறிவேன். பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரையிலான இலங்கையின் அரசியல், சமூக வரலாற்றாய்வுகளை, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் போராட்டங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டினார். இனப்பிரச்சனை மற்றும் இனங்களுக்கிடையிலான உறவுகள் பற்றி ஆராய்ந்தார். இலங்கைக்குப் பல பயணங்களை மேற்கொண்டார்.

1970களில் பலதடவைகள் இலங்கை வந்த போது தவறாது யாழ்ப்பாணம் செல்வார். அங்கே அவருடைய சொந்த ஊரான சண்டிலிப்பாயில் வாழ்ந்த உறவினர்களைப் பார்க்கச் செல்வார். 1976ல் அவரை முதல் முதலாகக் கொழும்பில் சந்தித்தேன். அந்தச் சந்திப்புக்கு முன்னர் கொழும்பில் வாழ்ந்து வந்த அவருடைய இளைய சகோதரர் இரகுநாதனின் நட்புக் கிடைத்தது. அவரே என்னைச் சிவாவுக்கு அறிமுகம் செய்தார். தன்னுடன் யாழ்ப்பாணம் செல்ல அழைத்தார். நான் சம்மதித்தேன். அந்தப் பிரயாணத்தின்போது அவரது வாழ்க்கை வரலாறு, லண்டனில் அவரின் அரசியல் செயற்பாடுகள் பற்றிப் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். தனது வேர்களை இழக்க விரும்பவில்லை அவற்றை உயிருடன் தொடரவைக்கும் தண்ணீருக்காகவே தனது பயணங்கள் என்றார்.  1977ல் மீண்டும் இலங்கை வந்தார். அந்தத் தடவை நானும் நண்பர் சுசில் சிறிவர்த்தனாவும் அவருடன் யாழ் சென்றோம். நாட்டுக்கு வந்த போதெல்லாம் அவர் வடக்கிலும் தெற்கிலும் எழுத்தாளர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் சந்திப்பதில் மிகவும் ஆர்வமாயிருந்தார். இந்த வகையில் 1977 ஜூலை மாதம் யாழ் சென்றபோது ஏற்பட்ட அநுபவங்கள் மறக்கமுடியாதவை. வடக்கிலே தமிழ் இளைஞர்கள் மத்தியில் தேசிய விடுதலை அலை எழுந்துவந்த காலம் அது. சிவாவும் சுசிலும் அதைப்பற்றி நேரடியாக அறிய விரும்பினர். சில தனிநபர்களையும் குழுக்களையும் சந்தித்து மாறிவரும் வடக்கு அரசியல் நிலைமைகள் பற்றி உரையாடினோம்.

அந்த யாழ்ப்பாணப் பயணம் சிவாவிற்கு இலங்கைத் தேசிய இனப் பிரச்சனையில் கூடுதலான அக்கறையை ஏற்படுத்தியது என நம்புகிறேன். நாம் கொழும்புக்குத் திரும்பியபின் நடந்த சம்பவங்கள் அந்த அக்கறையை மேலும் ஆழமாக்கியது எனவும் நம்புகிறேன். 1977 ஆவணியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜே. ஆர். ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து வந்த  தமிழர்மீதான வன்செயல்களை நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. கொழும்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். அப்பொது சிவா வெள்ளவத்தையில் இரகுநாதன் வீட்டில் தங்கியிருந்தார். அவர் இடம்பெயரவில்லையாயினும் அந்த நாட்களின் காட்சிகள் அவருக்கு 1958ஐ நினைவூட்டின. தமிழ் மக்கள்மீதான அடக்குமுறைபற்றி அவரும் நானும் நமது சிங்கள நண்பர்களுடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டோம். 1983க்குப் பின் அவர் இலங்கை அரசின் இனவாதத்தன்மை பற்றியும் தமிழ் மக்கள் இனரீதியில் ஒடுக்கப்படுவது பற்றியும் எழுதினார்.

2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டனிலிருந்து வெளிவரும் சஞ்சிகையான New Left Review இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை பற்றிச் சிவா வளங்கிய ஒரு நீண்ட செவ்வியைப் பிரசுரித்தது. அதில் அவர் இலங்கையின் இனப்பிரச்சனையின் வரலாற்றைத் தனது பார்வையில் ஆதாரங்களுடன் விளக்குகிறார். தமிழர்மீதான இன ஒடுக்கல், இனச்சுத்திகரிப்பு மற்றும் பிரச்சனையின் தீர்வுக்கான முயற்சிகளின் தோல்விகள், இடதுசாரிக் கட்சிகளின் சீரழிவு மற்றும் JVP 1971ல் தெற்கிலே நடத்திய ஆயுதக் கிளர்ச்சி ஆகியவை பற்றித் தன் கருத்துக்களைத் தருகிறார். தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றிக் கூறும்போது விடுதலைப் புலிகளினதும் மற்றைய இயக்கங்களினதும் சீரழிவு பற்றி விபரிக்கிறார். அதிகாரத்திலுள்ள சிங்கள மேனிலையாளர் இலங்கை அரசைக் கொலம்பிய அரசுபோன்று ஆயுதக்கிளர்ச்சிக்கெதிரான அரசாக (counter-insurgency state ஆக) மாற்றியுள்ளார்கள். இதனால் தமிழர் மட்டுமன்றி சிங்களவர்களும் அவலத்துள்ளாகப் போகிறார்களென அஞ்சுகிறார். நாட்டின் எதிர்காலம் இருள்மயமாயுள்ளது என அபிப்பிராயப்படும் சிவா சில நம்பிக்கைக் கீற்றுகளையும் காண்கிறார். விடுதலைப்புலிகளின் முன்னை நாள் ஆதரவாளர்கள் சிலர் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் பற்றி அரசியல்ரீதியில் சிந்திக்க முற்படுவது நம்பிக்கை தரும் சில சிறிய முளைவிடும்விதைகளின் ஒரு உதாரணமெனக் கருதுகிறார்.

இந்தக் கட்டுரையை முடிக்க முன் ஒரு நினைவுகூரல். When Memory Dies நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது அதன் சில பகுதிகளை IRRல் அவரது சகாக்களுக்கும் நண்பர்களுக்கும் சிவா வாசித்துக் காட்டுவார். அந்த நிகழ்வுகள் ஒரு சிலவற்றில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அவரின் கவித்துவமிக்க வரிகளை அவர் உணர்ச்சி பொங்க வாசிப்பதைக் கேட்பது ஒரு மறக்கமுடியாத அநுபவம். சில சந்தர்ப்பங்களில் நானுட்படக் கேட்டுக் கொண்டிருந்தோரில் பலர் கண்கலங்கினோம். அந்த நாவல் நினைவு மரணிப்பது பற்றியது. வரலாறென்பதே மறதிக்கெதிராக நினைவின் போராட்டமெனும் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன். சிவானந்தனின் எழுத்துக்கள் மறதிக்கெதிராக நினைவுகளையும் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்குமெதிராகக் கிளர்ச்சியையும் தூண்டுவன. வாசகர் அவற்றால் ஆகர்சிக்கப்படுவர், அவற்றின் சமகாலப் பயன்பாடுபற்றி, குறைபாடுகள் பற்றி விமர்சிப்பர், விவாதிப்பர். இதற்கூடாக அவரின் பங்களிப்பு புதியதோர் உலகினைத் தேடும் போராட்ட இலக்கியங்களின் ஒரு அங்கமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

 

பின் இணைப்பு

சிவானந்தன் எழுதிய நூல்கள்

Race and Resistance: The IRR Story, London Race Today Publications, 1975

A Different Hunger: Writings on Black Resistance, London, Pluto Press, 1982

Communities of Resistance: Writings on Black Struggles for Socialism,  London,Verso

Catching History on the Wing – Race, Culture and Globalisation, Pluto Press, 2008

When Memory Dies, Arcadia Books, 1997; Penguin 1998 (Novel)

Where the Dance Is, Arcadia Books, 2000 (Short stories)