மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும்

 சமுத்திரன்

இந்த நூல் ஈழத்துக் கூத்துக் கலை உலகில்  தன் சிறு பிராயத்தில் ஒரு ஆர்வமிகு பார்வையாளானாக, உதவியாளாக, பின்னர் பயிற்சி பெறுபவனாக, கூத்தாடுபவனாக, படைப்பாளியாக, பயிற்சியாளனாக, நெறியாளனாக, விமர்சகனாக, ஆய்வாளனாக, நுண்கலைத்துறைப் பேராசிரியராக மௌனகுரு மேற்கொண்ட நீண்ட பயணத்தின் ஒரு செறிவான ஆவணம். அவரைப் பொறுத்தவரை ஒரு யாத்திரையின் பதிவுகள். எளிய நடையில் எழுதப்பட்ட இந்த நூலை வாசிக்கவும், அதைப்பற்றிக் கருத்துரை வழங்கவும் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

இந்த நூல் ஒருவகையான சுயவரலாறென்பதை அதன் தலைப்புச் சொல்கிறது. அதேவேளை ஈழத் தமிழ்க் கூத்துக் கலையின் மீளுருவாக்கம் ஒரு தொடர்ச்சியான கூட்டுமுயற்சி எனும் செய்தியும் பலமாகச் சொல்லப்படுகிறது. இங்கே கூத்தில் மௌனகுருவுக்கு ஆர்வத்தை, அறிவை, கூத்தாடும் ஆற்றலை ஊட்டிய மட்டக்களப்பு அண்ணாவிமாரையும் கூத்தின் மறுமலர்ச்சிக்கும் மீளுருவாக்கத்திற்கும் நூலாசிரியரின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களித்த பேராசிரியர்களையும் வேறு பல கலைஞர்களையும் சந்திக்கிறோம். இவ்வாறு கூத்துக் கலையைப் பயின்று அதில் திறமை மிக்கவராக வளர்ந்த மௌனகுரு அந்தக் கலையின் முற்போக்குரீதியான மீளுருவாக்க விருத்திக்கும் பரவலுக்கும் தான் ஆற்றிய பங்கினை விவரமாகப் பதிவிடுகிறார். நிலப்பிரபுத்துவ, சாதிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கூத்து மரபினைக் கேள்விக்குள்ளாக்கி  முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வகையில் புதிய உள்ளடக்கங்களைக் கொண்ட கூத்து நாடக மரபின் மீளுருவாக்கத்தின் முன்னணிப் பங்காளிகளில் ஒருவர். மட்டக்களப்பில் ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கும் மௌனகுருவின் கூறுரை (narrative) கிழக்கு, வடக்கு, மலையகம் என விரிந்து, கூத்துக்கூடாக இலங்கைக்குள் கிடைத்த பல்லின உறவுகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் கலைஞர்களுக்கூடாக அவர் ஈழத்தமிழரின் கூத்துக்கலைக்குத் தேடிய சர்வதேசத் தொடர்புகள் பற்றியும் இந்தத் அநுபவத்தொடருக்கூடாக அவருடைய தொடர்ச்சியான கலைத்துவ மற்றும் சமூக அறிவியல்ரீதியான சுயவிருத்தி பற்றியும் கூறுகிறது.

‘மாற்றமே நிரந்தரமானது’ எனும் தலைப்பிட்ட  முன்னுரையில் பாரம்பரியத்தைப் பேணும் நோக்கில் அதன் பழமையைப் பேணிக் காப்பதும் மாற்றத்தை நிராகரிப்பதும் அந்தப் பாரம்பரியத்துக்குச் சமாதி கட்டும் வழியாகும் எனும் செய்தியை உரக்கச் சொல்வதன் காரணத்தை நூலை வாசிக்கும்போது தெரியவருகிறது. ஈழத்து தமிழ் சமூகத்தின் கூத்துக் கலையில் விசேடமாக 1960களிலிருந்து ஏற்பட்டு வரும் மாற்றப் போக்குகள் பற்றிய தகவல்கள், விளக்கங்கள், கருத்து வேறுபாடுகளை நூலாசிரியர் வாயிலாக அறியக் கிடைக்கிறது. மாற்றத்திற்கூடாகவே கூத்து மரபு வாழ்கிறது, வாழமுடியும் அல்லாவிடில் அதற்கு எதிர்காலம் இல்லை எனும் செய்தி பலமாக இந்த நூலில் இழையோடுகிறது.

ஆயினும் மாற்றம் எப்போதும் எல்லோருக்கும் நன்மைபயப்பதெனக் கருதமுடியாது. அது எப்போதும் விமர்சனப் பார்வைக்குள்ளாகவேண்டும். வரலாறு நேர்கோட்டில் நகர்வதில்லை, அது நெழிவு, சுழிவுகளுக்கூடாகப் பயணிக்கிறது. பின்னடைவுகளை சந்திக்கிறது. மாற்றம் சமூகத்தில் யாரின் (வர்க்கம், சாதி, பால் மற்றும் இனம், மதம்)  நலன்களை முன்னிலைப் படுத்துகிறது? அதன் பின்னாலுள்ள அதிகார உறவுகள் எத்தகையவை? அது ஜனநாயகம் மற்றும் சமூகநீதிக்குச் சாதகமானதா இல்லையா?  இந்தப் பொதுவான கேள்விகள் கலைகளுக்கும் பொருந்தும். அதேவேளை கலைகள் தொடர்பாக வேறு சில கேள்விகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.  இந்த விடயம் பற்றி இந்த நூலில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் இது பற்றிய கருத்துப் பகிர்வுக்கும், விவாதத்திற்குமான சந்தர்ப்பத்தையும் திறந்து விடுகிறது.

முதலில் கால ஓட்டத்தில்  இலங்கைத் தமிழ் சமூகத்தில் கூத்துக்கலையின் மாற்றப் போக்குகளுக்கும் மௌனகுருவுக்குமிடையிலான உறவின் சில கட்டங்கள் பற்றிப் பார்ப்போம்.

 1959 ஆம் ஆண்டு 16 வயதில் மௌனகுரு வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் மாணவனாயிருந்தபோது கல்லூரி அதிபரின் பணிப்பில் ‘பாசுபதம்’ கூத்தை அரைமணி நேரக் கூத்தாகச் சுருக்கி எழுதி மேடையேற்றும் பொறுப்பை ஏற்கிறார்.  உள்ளூர் அண்ணாவி ஒருவரை கூத்தாடும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்கிறார். அதுவரை கூத்தாட அநுமதி மறுத்த அவரின் தந்தையார் கல்லூரியில் கூத்தாட அநுமதி கொடுக்கிறார். மௌனகுரு எழுதுகிறார். ‘என் உடலுக்குள் இவ்வளவு காலமாக உறங்கிக் கிடந்த கூத்தாட்டங்கள் உருப்பெற்றன. என் ஆட்டத்தை அண்ணாவியார் வெகுவாக இரசித்தார்.’(33)

கூத்து வெற்றிகரமாக மூன்று தடவைகள் மேடையேறுகிறது.  இந்தக் கூத்துப் பற்றிய விபரத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தில் ஈடுபாடுமிக்க பேராசிரியர்கள் கணபதிபிள்ளை மற்றும் வித்தியானந்தனுக்கு மட்டக்களப்பைச்சார்ந்த இரு கல்வியாளர்கள் தெரியப்படுத்துகிறார்கள். வித்தியானந்தனும் அப்பொழுது இலங்கைப் பாரளுமன்றில் சமகால மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தவரும் நாடகத்துறையில் தீவிர ஈடுபாடுள்ளவருமான சிவத்தம்பியும் பாசுபதம் கூத்தைப் பார்க்க மட்டக்களப்புக்குச் செல்கிறார்கள். கூத்தையும் மௌனகுருவையும் பாராட்டுகிறார்கள். அரைமணிக்குச் சுருக்கப்பட்டு  ஒரு பாடசாலை  மேடையில் இளம் மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட வடமோடிக் கூத்தில் அவர்களின் கலைத்துவத் தேடலுக்கு ஒரு பயனுள்ள நடைமுறை உதாரணத்தைக்  கண்டனர் என நம்புகிறேன். அதுமட்டுமல்ல வித்தியானந்தனும் சிவத்தம்பியும் வந்தாறுமூலையில் மௌனகுருவையும் கண்டுபிடித்தனர். ஆகவே பாசுபதம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி அரங்கில் மேடையேற அழைக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை.

பேராதனையில் இலங்கையின்  கூத்துக்கலைகளின் மறுமலர்ச்சிச் செயற்பாடுகளின் எழுச்சி காலகட்டம் அது.  பேராசிரியர் சரச்சந்திராவின் தலைமையில் சிங்கள கூத்து மரபில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறுகின்றன. இதன் விளைவாக 1950-60 களில் ‘மனமே’, ‘சின்ஹபாஹு’ போன்ற கூத்து நாடகங்கள் மேடையேறுகின்றன. சிங்களக் கூத்து மரபை மீளக்கண்டுபிடித்து அதனோடு ஈழத்துத் தமிழ்க் கூத்து மரபு உட்பட வேறு மரபுகளின் சில அம்சங்களையும் உள்வாங்கி சரச்சந்திரா தனது பங்களிப்பிற்கூடாகச் சிங்கள மக்களின் தேசிய நாடக வடிவமொன்றின் தோற்றத்திற்கு உதவினார். அதே பல்கலைக் கழகத்தில் தமிழ் நாடகக்கலைகளில் விசேடமாகக் கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தில் ஈடுபாடுகொண்ட கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் போன்றோருக்கு இது ஆகர்ஷமாய் விளங்கியது.

அவர் பேராதனையில் மாணவரானபோது வடமோடிக் கூத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவராக, மட்டக்களப்பு கூத்து மரபை அறிந்தவராக மட்டுமன்றி ஒரு கூத்தைச் சமகாலத்தேவைக்கேற்ப சுருக்கி எழுதிய அநுபவமும் உள்ளவராக இருந்தார். உரிய காலத்தில் உரிய இடத்தில் அவர் உரிய ஆசான்களின் மாணவராகிறார். கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் முன்னணி மாணவர்களில் ஒருவராகிறார். அன்றைய பேராதனை வளாகத்தில் செல்வாக்குப்பெற்றிருந்த மாக்சிச அரசியலால் கவரப்பட்டு மாக்சிசச் சிந்தனை வட்டங்களுடன் தொடர்பு கொள்கிறார். அவருடைய உலகப் பார்வை விரிகிறது, விமர்சன நோக்கில் ஆழமாகிறது.  அவருக்குப் பரிச்சயமான கூத்து மரபு மற்றும் அது தொடர்பான இலக்கியம் பற்றி விமர்சனரீதியில் பார்க்க முற்படுகிறார்.

வித்தியானந்தனின் தயாரிப்பில் பேராதனையில் மேடையேறிய நான்கு பிரபல கூத்துக்களில் எழுத்தாளராகவும் நடிகனாகவும் மௌனகுரு முக்கிய பங்கு வகிக்கிறார்.  கர்ணன்போர் (1962), நொண்டி நாடகம் (1963), இராவணேசன் (1964),  வாலிவதை (1966) ஆகிய இந்த நாலில் கர்ணன்போரும் நொண்டி நாடகமும் பழையவை. இவற்றை ஒரு மணித்தியாலத்துக்குள் சுருக்கிப் பிரதியாக்கும் பொறுப்பு மௌனகுருவிடம் விடப்படுகிறது. புதியவையான மற்றைய இரண்டின் பிரதிகளையும் எழுதும் பொறுப்பும் அவருடையதே. இது பற்றிய அவரது கருத்தைப் பின்வருமாறு பதிவிடுகிறார்.  ‘மட்டக்களப்புக் கூத்துகளில் பாத்திர உருவாக்கம் பாத்திர குணாம்ச வளர்ச்சி என்பன இல்லை. கதை கூறும் பண்பே அதில் மிகுதி.பாரம்பரிய கூத்துமுறையில் பாத்திர குணாம்சத்தை கொணருதல் என்பது புதிய முயற்சி. கூத்து நாடகமாகிய விதம் அது.’ (76).

இந்த கூத்து நாடகங்களின் நெறிப்படுத்தலில் வித்தியானந்தனுடன்  சிவத்தம்பி வகித்த முக்கிய பங்கினையும் பதிவிடுகிறார். ‘ஆட்டத்தை நடிப்பாக்கவேண்டும் என்று சிவத்தம்பி அடிக்கடி கூறுவார். ஒவ்வொரு நாடகத்திலும் சிவத்தம்பியின் கற்பனை செயல் புரிந்திருக்கிறது. நாட்டிய சாஸ்திரம் கூறும் நடிப்புமுறைகளை எமக்கு உணர்த்தி கீழைத்தேய நடிப்புமுறை என்ற கருத்துருவை அவர் 1960 களில் கொணர்ந்தார்.’ (78). இராவணேசனை ‘வடமோடி நாடகம்’ எனப் பெயரிட்டவர் சிவத்தம்பிதான் என்பதையும் குறிப்பிடுகிறார். 1960களில் பேராதனையில் நடந்த கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தில் கூத்து ‘கூத்து நாடகமாக’ பரிணமித்தது ஒரு முக்கிய மாற்றமாகும். பல ஆண்டுகளுக்குப்பின் மௌனகுருவின் புதியவார்ப்பில் இராவணேசன்  மறுபிறவிகள் எடுத்துப் பரந்த இரசிகர் கூட்டத்தைக் கண்டதுடன் விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

பேராசிரியர் வித்தியானந்தனின் பிரதான பங்களிப்பை விவரமாகப் பதிவிடுகிறார். சகல சாதி மாணவர்களையும், பல்பிரதேச மாணவர்களையும் கூத்தில் இணைத்தமை; முதல் முதலில் பெண்களைக் கூத்தில் ஆடவைத்தமை;ஐரோப்பிய பண்பாட்டினடியாக எழுந்த பல்கலைக்கழகத்தில் கிராமிய மத்தள ஓசையையும் சலங்கை ஓசையையும் கேட்க வைத்தமை. இந்தப் பின்னணியில் வித்தியானந்தன் கொண்டுவந்த மாற்றங்களின் ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறார். முக்கியமாக நேரச்சுருக்கத்திற்கும் நவீன மேடையமைப்பிற்கும் ஏற்ப கூத்தின் பல்வேறு அம்சங்களையும் சுருக்கிச் சீரமைத்ததையும், கூத்திற்கு வடமோடி, தென்மோடி எனப்பெயர் வைத்ததையும் குறிப்பிடலாம். அவர் கற்றதை அவருடையே வார்த்தைகளிலேயே கேட்போம்.

‘கூத்தைப் படச்சட்டமேடையில் ஆடலாம், சுருக்கிப்போடலாம், செம்மைப்படுத்தலாம், அழகுபடுத்தலாம் , மத்தளம் தவிர்ந்த பிற வாத்தியங்களையும் சேர்க்கலாம், ஒப்பனை உடைகளை மாற்றலாம், ஒளியமைப்பை நிகழ்த்தலாம் போன்ற விடயங்களை நான் அங்கு கற்றுக்கொண்டேன்.’ (173).

பிரித்தானியாவில் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்துப் பேராதனைக்குத் திரும்பிய கைலாசபதியுடன் மௌனகுருவுக்கு நெருக்கமான உறவு கிடைத்தது. ‘எத்தனை நாட்களுக்குப் பழைய கூத்துக்களுக்குள் நிற்கப்போகிறீர், மக்கள் பிரச்சனைகளை கூத்துக்களாக்க இயலாதா?’ எனக் கேட்ட கைலாசபதி, ‘ வங்காளத்தின் மரபுவழி நாடக அரங்கான யாத்ராவை, மக்கள் பிரச்சனை கூறும் நாடகமாக்கிய உத்பால்தத்தையும், மரபுமுறையிலமைந்த சீன ஒப்ராவை சீனக் கம்யூனிச அரங்கும் கலைஞர்களும் மக்கள் போராட்ட நாடக வடிவமாக்கிய செய்திகளையும் கற்பித்தார். கூத்து வேறு திசையில் செல்லவேண்டும் என்பது புலனானது’ (175-176).

பேராதனையில் கிடைத்த அறிவுடனும் செறிவான அநுபவத்துடனும் ‘கூத்து வேறுதிசையில் செல்லவேண்டும்’என்ற சிந்தனையுடனும் பட்டதாரியாக வெளியேறிய மௌனகுருவுக்குத் தனது கூத்துக்கலைப் பயணத்தைத் தொடரும் பாதையைத் தெரிவுசெய்வதில் குழப்பமிருக்கவில்லை என நம்பலாம்.

கிழக்கிலே கல்முனை சாஹிரா கல்லூரியில் ஆசிரியராகவிருந்த காலத்தில் கூத்துப் பழக்குவதிலும் கூத்துகளைத் எழுதித் தயாரித்து மேடையேற்றுவதிலும் ஈடுபடுகிறார். அந்தக் காலத்தில்  (1968 -) யாழ்ப்பாணத்தில் தீண்டாமையை ஒழிக்கும் வெகுஜன இயக்கத்தின் பெரும் போராட்டம் இடம்பெறுகிறது. 1969இல்  கொழும்பில் லும்பினி அரங்கில் இடம்பெற்ற தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மாநாட்டில் மௌனகுரு எழுதி மட்டக்களப்பின் பலசாதிகளையும் சார்ந்த கலஞர்களை வைத்துத் தயாரித்த சாதி எதிர்ப்புக் கூத்தான ‘சங்காரம்’ மேடையேறியது.  ‘சங்காரம்’  மண்டபத்தில் நிரம்பிவழிந்திருந்த பார்வையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.

1960களுக்குப்பின் இடம்பெற்ற கூத்தின் பரிணாமப் போக்கினை விளக்கும் நோக்குடன் 1991இல் மௌனகுரு எழுதிய ‘பழையதும் புதியதும்’  நூலில் ‘பின்னோக்கிய தேடலும் முன்னோக்கிய பாய்ச்சலும்’ எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரையில் கூத்தை எப்படிப் பாதுகாக்கலாம், அதை எப்படி வளர்க்கலாம் என்பன பற்றிக்கூறுகிறார். இந்த வகையில் ‘சங்காரம்’ அவருடைய ‘முன்னோக்கிய பாய்ச்சலின்’ ஒரு ஆரம்பப் பரிசோதனை முயற்சி எனக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன். புரட்சிகர அரசியல் செய்திகளையும் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான வெகுஜன எழுச்சியையும் உள்ளடக்கமாய்க் கொண்டிருந்த அந்த வடமோடிக் கூத்து நாடகம் சில ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டுமன்றி பாரம்பரியத்தின்பேரில் பழமைபேணும் நிலைப்பாட்டிலிருந்தோரின் விமர்சனங்களையும் சந்தித்தது என் நினைவுக்கு வருகிறது. விமர்சனங்களையும் கவனத்தில் எடுத்து சங்காரத்தில் சில மாற்றங்கள் பின்னர் செய்யப்பட்டன. 1970இல் யாழ்ப்பாணத்தில் அம்பலத்தாடிகள் தீண்டாமைக்கு எதிராக காத்தான் கூத்து வடிவத்தில் ‘கந்தன் கருணை’யை மேடையேற்றினர். இதில் மௌனகுரு பிரதான வேடத்தில் நடித்தார். அன்றைய சாதி எதிர்ப்புப் போராட்டச் சூழலில் இந்தக் கூத்தும் வரவேற்பைப் பெற்றது.

இந்த முயற்சிகள் கூத்துக்கலையின் மாற்றங்கள் ஒரு செயல்முறைப் போக்காக உருவெடுப்பதன் அறிகுறிகள் போலமைந்தன. வேறு மரபுகளைச் சார்ந்த நாடகக் கலைஞர்களையும் இது கவர்கிறது. உதாரணமாக 1970களில் கொழும்பில் பிரபல நாடகக் கலஞர்களான சுந்தரலிங்கம் (விழிப்பு, அபசுரம்), தாசீசியஸ் (புதியதொரு வீடு), சுஹைர் ஹமீட் (வேதாளம் சொன்ன கதை) ஆகியோர் தமது தயாரிப்புகளில் கூத்திலிருந்து ஆட்டங்களை பயன்படுத்த முன்வந்தபோது மௌனகுரு உரிய ஆட்டங்களை நடிகர்களுக்குப் பழக்கி உதவினார். கூத்தின் ஆட்டவடிவங்களின் பயன்பாடு பன்முகரீதியில் விரிவடையும் போக்கிற்கு இவை சில உதாரணங்கள். 1960களுக்குப்பின்னான கூத்துக்கலையின் மாற்றப்போக்கு தனியே ஒரு குறிப்பிட்ட மரபிற்குள் மாத்திரம் அடங்கிப்போய்விடவில்லை. அதன் தாக்கம்  பரவுவது காலத்தின் தேவையைக் காட்டியது.

மட்டக்களப்பில், கொழும்பில், யாழ்ப்பாணத்தில் பலருக்குக் கூத்துக் கற்பிப்பதிலும் கூத்துகளை மேடையேற்றுவதிலும்  ஈடுபட்டிருந்த மௌனகுருவின் கூத்த யாத்திரையில் 1978இல் அவர் யாழ் பல்லகலைக்கழகத்தில் பேராசிரியர் கைலாசபதியின் வழிகாட்டலில் ஆரம்பித்த கலாநிதிப்பட்ட ஆய்வு ஒரு முக்கிய கட்டமாகும். மட்டக்களப்பு கூத்துக்களின் சமூக அடித்தளம் பற்றி 1976இல் அவர் சமர்ப்பித்த ஒரு கட்டுரையில் அந்தப் பிரதேசத்தின் கூத்துக்களின் உள்ளடக்கங்கள் அங்கு நிலவும் சாதி அமைப்பையும் அதை நியாயப்படுத்தும் கருத்தியலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது பற்றியும் அவை மாற்றப்படவேண்டியதன் தேவை பற்றியும் வாதிட்டார். இந்த வாதமே அவருடைய கலாநிதிப் பட்ட ஆய்வின் கருதுகோளின் பிரதான அம்சமாயிற்று. கைலாசபதி, ‘விடை கூறமுடியாத பல வினாக்களை எழுப்பினார். திக்குமுக்காடவைத்தார். என் கூத்தாய்வுப் பயணம் இப்படித்தான் ஆரம்பித்தது’ என எழுதுகிறார்.(101). ஆறு வருடங்களாக நடந்த இந்த ஆய்வுத் திட்டம் 1982இல் பேராசிரியர் கைலாசபதியின் மறைவிற்குப்பின் பேராசிரியர் சிவத்தம்பியின் மேற்பார்வையில் தொடர்ந்து முடிவுற்றது. மாக்சிச தத்துவார்த்த அணுகுமுறையில் செய்யப்பட்ட இந்த ஆய்வு 1998இல் ‘மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்’ எனும் தலைப்பில் விரிவான நூலாகவும் வெளியிடப்பட்டது.  ‘சமூக இயக்கப்பாட்டிற்கும் சமூகப் பின்னணிக்கும் நாடகங்களுக்குமிடையே அறாத் தொடர்பு உள்ளது என்பதும், சமயச் சடங்குகளிலில் இருந்து சமூகமாற்றம் காரணமாக நாடகம் பிறந்தது என்பதுமான கோட்பாடுகளை பொது விதிகளாக வைத்து இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது’ என முன்னுரை சொல்கிறது (மௌனகுரு, 1998: 14). மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை ஆழ ஆராய்வதுடன் சிங்கள மற்றும் இந்திய, சர்வதேச மரபுவழி நாடக மரபுகளின் மாற்றப் போக்குகள், உலக மட்டத்தில் அறியப்பட்ட நாடகக் கலைஞர்கள் மற்றும் விமர்சகர்களின் சிந்தனைகள் பற்றியும் முக்கியமான விடயங்களை உள்ளடக்குகிறது.

மட்டக்களப்பின் சடங்குகளும், வரலாறும் சமூக அமைப்பும், முக்கியமாக நிலமானிய அமைப்பும், எப்படி தென்மோடி, வடமோடி நாடகங்களை உருவாக்கின என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.  அவரது ஆய்வின் முடிவுகள் வேறு கூத்து ஆய்வாளர்களின் முடிவுகளிலிருந்து பெரிதும் மாறி இருந்தன என்பதை அறியத்தருகிறார்.  ‘கூத்து நிலமானிய சமூக அமைப்பின் ஓர் கலைவடிவம். அது மக்களை இன்றைக்கும் மகிழ்விக்கும் அதே நேரம் அது மக்களுக்கு இந்த சமூக அமைப்பையும் அதன் விழுமியங்களையும் ஏற்க வைக்கும் ஓர் போதை மருந்துபோலவும் காட்சிதருகிறது… கூத்து தமிழரின் சிறந்த நாடக வடிவம் ஒன்றின் சீணித்த (நலிந்த) வடிவம் என்பதும் புலனாயிற்று’ எனும் முடிவுக்கு வருகிறார் (183-184). இதுவும் இந்த ஆய்வின் மற்றைய முடிவுகளும் ‘கூத்தை இன்னொரு வகையில் மீளுருவாக்கம் செய்யவேண்டும்’ எனும் கருத்தை மேலும் வலுப்படுத்த உதவின. ‘கூத்து ஒரு கொண்டாட்டம்தான் இந்தக் கொண்டாட்டத்துக்குள் இருக்கும் சுரண்டலை நாம் கண்டு கொள்ளவில்லை’ என மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறார். கூத்தை மேலும் வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்லும் மௌனகுருவின் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கு இந்த ஆய்வும் அதனால் கிடைத்த அநுபவமும் ஒரு ஆக்கபூர்வமான உந்தலையும் துணிவையும் கொடுத்துள்ளன எனக் கருதலாம்.

சில சந்தர்ப்பங்களில் ஒரு சில கூத்துகளில் விளிம்புநிலை மக்களின் சார்பில் குரல்கள் ஒலித்தாலும் ஒரு எதிர்ப்பரங்கு மரபு வளரமுடியாதிருந்த நிலையை மாற்றும் காலம் கனிகிறது. 1991இல் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட நுண்கலைத்துறையின் தலைவராக மௌனகுரு நியமனம் பெற்றது ஈழத்துக் கூத்துக்கலையின் விருத்திக்கு  கிழக்கில் பல்கலைக் கழக மட்டத்திலான அங்கீகாரத்தையும் ஆதரவையும் கொடுத்தது.  உள்நாட்டுபோர்ச்சூழலின் பல தடைகளுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் மௌனகுருவும் அவருடன் கடமையாற்ற நியமனம் பெற்ற இளம் விரிவுரையாளர்களும் கூத்துக்கலையில் ஆர்வமுள்ள இளம் சந்ததியை உருவாக்குவதில் ஈடுபட்டார்கள். ஆனால் ‘ஊரூராய்க் கூத்தாடிய மட்டக்களப்பில் கூத்துப் பார்க்காத மாணவர் பரம்பரையே பல்கலைக்கழகத்தில் இருந்தது’ எனும் கசப்பான யதார்த்தை எதிர்கொள்கிறார்கள்.  கூத்துப் பற்றிப் பல மாணவர்களிடம் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. இதனால் சோர்வடையாது முயற்சியைத் தொடர்கிறார்கள். மௌனகுரு குழுவின் கூட்டு முயற்சி பலனளிக்கிறது. மாணவர்களைக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று கலைஞர்களுடன் சந்திப்புகளை ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டார்கள். ஆசிரியர்கள் மற்றும்  கூத்தாட விரும்பும் மாணவர்களுடன் மட்டக்களப்பு அண்ணாவியார்களும் இணைந்து செயற்படுவதைச் சாத்தியமாக்குகிறார்கள். கூத்தைப் பழைய மரபு முறையிலும் புதிய முறையிலும் மாணவர்களுக்குப் பயிற்றுகிறார்கள்.

‘பின்னோக்கிய தேடல், முன்னோக்கிய பாய்ச்சல்’ எனும் வழியில் யாழில் இருந்த காலத்தில் கூத்தின் மீளுருவாக்கம் பற்றிக் கண்ட கனவை நனவாக்க மட்டக்களப்பில் ஒரு நிறுவனத்துடன் துறைசார் விரிவுரையாளர்களும் கிடைக்கிறார்கள். பல சவால்களுக்கு மத்தியில் ‘இராவணேசனை’ மீளுருவாக்கி மேடையேற்றத் தீர்மானிக்கிறார்கள். 2001இல் புதிய முறையில் ‘இராவணேசன்’ வடமோடிக் கூத்து நாடகமாக வெற்றிகரமாக மேடையேறுகிறது. 2005வரை பல மேடைகளை பல்வேறு இடங்களில் காண்கிறது.  இராவணேசன் பல மீளுருவாக்கங்களைக் காண்கிறது. 2009இல் பேராசிரியர் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் அதற்கு வெளியே அரங்க ஆய்வு கூடத்திலும், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திலும்  தொடர்ந்து செயற்படுகிறார்.

2001-2019 காலத்தில் ஐந்து வேறு முறைகளில் ‘இராவணேசன்’ மீளுருவாக்கம் பெற்று மேடையிடப்படுகிறது. இலங்கையின் பல்லின ரசிகர்களின் பாராட்டையும் பெறுகிறது. இவையெல்லாம் இலங்கையின் சமகால அரசியல் நிலைமைளின் போக்கினைக் கூறுகின்றன.  இராவணேசனின் பல்வேறு மீளுருவாக்கங்ளைச் செய்துகாட்டிய அநுபவம் பற்றி அவர் யாவருடனும் விசேடமாக விமர்சகர்களுடனும் நாடகக் கலைஞர்களுடன் ஒரு முக்கிய பாடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ‘ஒரு பிரதி காலம் தோறும் மாறலாம் ஆற்றுகையும் காலம் தோறும் மாறலாம் என்பதற்கு 2001-2019 காலத்தில் மேடையிட்ட இராவணேசனின் வேறுபட்ட கூத்து நாடகங்கள் உதாரணங்களாகின்றன.’ (195). இராவணேசனை மட்டுமன்றி வேறு பல கூத்துக்களையும் புதியமுறையில் மீளுருவாக்கினார்.

2011இல் நோர்வேயில்  ‘இமயத்தை நோக்கி’ எனும்  வடமோடிக்கூத்துக் கலந்த நாடகத்தை பிரளயன் மற்றும் மோகனதாசுடன் இணைந்து வாசுகி ஜெயபாலனின் உதவியுடன் ஒரு பல்லின நடிகர்குழுவுக்குப் பழக்கி ஒஸ்லோ ஒப்ரா மண்டபத்தில் மேடையேற்றிச் சாதனை படைத்தார். பூமி வெப்பமடைவதையும் அதனால் வரும் விளைவுகளையும் பிரதிபலிக்கும் இந்தக் கூத்து நாடகத்தில் நோர்வேயில் வாழும் தமிழ் நடிகர்களுடன் லெபனொன், பாகிஸ்தான், எரிட்டிரியா, அமெரிக்கா, ஸ்கொட்லாண்ட் போன்ற நாடுகளிலிருந்து வந்து நோர்வேயில் வாழும் நடிகர்களும் சேர்ந்து தமிழில் பாடி ஆடினர்.

மௌனகுருவின் கூத்துக்கலை மீளுருவாக்க நடைமுறையை நோக்குமிடத்து அவர் ஒரு திறந்த மனப்பாங்குடன் ஒரு இயங்கியல்ரீதியான கோட்பாட்டின் ஒளியில் செயல்படுவதைக் காணுகிறோம். சமீப காலங்களில் நவீனத்துவத்திற்கு பின்னைய பொதுவாக postmodernist, deconstruction (கட்டுடைப்பு), postcolonial (காலனித்துவத்திற்குப் பின்னைய)  சிந்தனைப் போக்குகளையும் கலைத்துறையில் அவற்றின் செல்வாக்கையும் விமர்சன நோக்கில் ஆராய்ந்து தனது அணுகுமுறையைச் செறிவாக்கியுள்ளார்.

இளைப்பாறிய பின் பல்கலைக்கழகம் அவரைத் தொடர்ந்தும் பயன்படுத்தத் தவறியதும், 2015இன் பின் விபுலானந்த நிலையம் அவருடன் தொடர்பில்லாது போனதும் அவருக்கு மட்டுமன்றி இலங்கையில் நுண்கலைத்துறையின் விருத்தியில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட பலருக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்தபோதும் தனது பணியைத் தொடர்கிறார். அவர் சார்ந்திருக்கும் கூத்துக்கலையின் மீளுருவாக்க வரலாற்றுப் போக்குத் தொடரும்வகையில் இளம் சந்ததிக் கலைஞர்களை உருவாக்குவதில் அவரின் ஈடுபாடு போற்றத்தக்கது.

ஈழத்துத் தமிழ்க் கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தை ஒரு பன்முகத்தன்மை கொண்ட  வரலாற்றுப் போக்காகப் பார்ப்பதே நியாயமானது. கூத்துக்கலையின் மீளுருவாக்கம் எனும்போது அது சமூகத்தேவைகளுக்கேற்ப உள்ளடக்க மற்றும் அழகியல்ரீதியில் சமகாலமயப்படுத்தலைக் குறிக்கிறது. இங்கே இலாபநோக்கில் பொழுதுபோக்குச் சந்தைக்காக நாடகத்தை பண்டமயமாக்கும் போக்கிற்கும் சமூகப் பிரச்சனைகளையும் மனித வாழ்நிலையின் முரண்பாடுகளையும் ஆழ அறிந்து எதிர்காலப்பார்வையில் கலைத்துவச் செயற்பாடுகளில் ஈடுபடும் போக்குகளுக்குமிடையிலான வேறுபாடு முக்கியமானதாகும். பேராசிரியர் மௌனகுருவும் அவருடன் இயங்குவோரும் பின்னைய அணியினர் என்பதை சொல்லத் தேவையில்லை ஆயினும் இந்தவகையில் வேறு கலைஞர்கள் குழுக்களும் தத்தமது நிலைப்பாடுகளிலிருந்து செயற்படுகிறார்கள் என்பதை ‘நந்தவனத்திற்கு அழகு பல்வகைப் பூக்களே’ என நூலின் இறுதி அத்தியாயத்தில் அவர் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது.

இந்த இறுதி அத்தியாயம் கனதியானது. கூத்துப்பற்றிய அவருடைய கருத்துக்கள் மாறிவந்த விதத்தை விவரமாக விளக்குகிறார். இதில் சில முக்கிய அம்சங்களை நான் ஏற்கனவே தொட்டுள்ளேன். வேறொரு முக்கிய அம்சம் கூத்தின் மீளுருவாக்கம் தொடர்பாக 2000 ஆம் ஆண்டிற்குப்பின், விசேடமாகக் கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து எழுந்துள்ள, கோட்பாட்டுரீதியான  எதிர்கருத்தாகும். ‘பின்நவீனத்துவ’, ‘பின்காலனித்துவவாத’,சிந்தனைகளைச் சார்ந்திருக்கும் ஒரு குழுவினர் இதுவரை மௌனகுரு போன்றோர் செய்தது கூத்தின் மீளுருவாக்கம் அல்ல எனும் விமர்சனத்தை முன்வைத்ததுடன் அவர்களின் அணுகுமுறையில் சில மீளுருவாக்கக் கூத்துக்களையும் மேடையேற்றியுள்ளார்கள்.  கோட்பாட்டுரீதியில் இங்கு நாம் காண்பது மாக்சிசத்திற்கும் பின்நவீனத்துவ, பின்காலனித்துவ செல்நெறிகளால் ஆகர்சிக்கப்பட்ட கலாச்சார அடையாள அரசியல் போக்கிற்குமிடையிலான முரண்பாடாகும். விசேடமாகப் பின்காலனித்துவ (postcolonial) வாதம் சார்ந்த ‘விளிம்புநிலை மக்கள் கற்கைகள்’ (subaltern studies) செல்நெறிக்கும் மாக்சிசத்திற்கும் இடையிலான உறவின் பல்வேறு கட்டங்களையும் முரண்பாடுகளையும் ஆராய்வது பயன்தரும்.  இங்கு கோட்பாட்டுரீதியில் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. மாக்சிசமெனும் பொது மரபில்  ஒன்றுக்கு மேற்பட்ட செல்நெறிகள் இயங்குவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பொதுவாகக் கலாச்சார அடையாள அரசியலில் மேலாட்சி செலுத்தும் இனத்துவமையக் கருத்தியல் சமூக அமைப்புப் பற்றிய விமர்சனப் பார்வையைக் குறுக்குகிறது. இதனால் கூத்து மீளுருவாக்கத்தைப் பொறுத்தவரை அடையாளத்தின் பெயரில் பின்னோக்கிய பழமைபேணும் போக்கின் பிடிக்குள்ளாவது சுலபம். இது ஒரு பொதுவான விமர்சனம். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பிரிவினால் மேடையேற்றப்பட்ட மீளுருவாக்கக் கூத்துகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. அவற்றின் பிரதிகளையும் நான் பார்த்ததில்லை. ஆயினும் ஈழத் தமிழரின் கூத்துக்கலையின் மீளுருவாக்கம் பற்றிக் கருத்துவேறுபாடுகள் தோன்றியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. இது கூத்துக்கலையின் மீளுருவாக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் உதவும்வகையில் கேள்விகளை எழுப்புகிறது. மீளுருவாக்கம் என்றால் என்ன, அதற்கு ஒரு பொதுவான வரைவிலக்கணம் உண்டா? 1960களிலிருந்து தொடரும் மீளுருவாக்க வரலாற்றின் பிரதான போக்குகளை எப்படி இனங்காண்பது, எந்த விதிகளின்படி? அவற்றின் கோட்பாட்டுரீதியான, கருத்தியல்ரீதியான செல்நெறிகள் எத்தகையவை?  உலகரீதியான கலாச்சார மாற்றப் போக்குகள் மற்றும் அவை பற்றிய விவாதங்கள்  தமிழ் அரங்கியலின் மாற்றப் போக்குகளில் எந்தவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன? இப்படிப் பல கேள்விகள்.

மௌனகுருவின் கருத்தில் எதிர்மறைகளில் ஒற்றுமையை காண்பது பயன்தரும். மறுபுறம் எதிர்மறைகளின் மோதலில் ஒரு புதியது தோன்றலாம் எனவும் அவர் கருதுகிறார். இவை நல்ல எண்ணங்கள். எனது அபிப்பிராயத்தில் அந்த மோதல் ஒரு திறந்த ஆக்கபூர்வமான விவாதமாக உருவெடுக்கவேண்டும். அதற்கு இந்த நூல் வழி திறக்கிறது.

August 2021

நூல் விபரம்:

சி. மௌனகுரு, கூத்த யாத்திரை நான் கொண்டதும் கொடுத்ததும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, சென்னை 2021.

இந்த நூலின் இறுதி அத்தியாயம் பின்வரும் தலைப்பில் குமரன் புத்தக இல்லத்தால் தனி நூலாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது: சி. மௌனகுரு, கூத்தே உன் பன்மை அழகு, 2021

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘வடமாகாண முதன்மைத் திட்டமொன்றிற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு’ ஆய்வறிக்கை பற்றிய விமர்சனக் கருத்துரை

சமுத்திரன்

மேலேகுறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் பொறுப்புரிமையளிக்கப்பட்டு துறைசார் அறிதிறமும் போருக்குப் பின்னைய வடமாகாண நிலைமைகள் பற்றிய பரிச்சயமும் கொண்ட ஏழுபேர்களைக் கொண்ட குழுவினால் வரையப்பட்டது. போருக்குப் பின்னைய வடமாகாணத்தின் அபிவிருத்தி பற்றிய ஒரு திறந்த கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை இந்த ஆய்வறிக்கை கொடுக்கிறது. போர் முடிவுக்குவந்தபின்னர் அதனால் பாதிக்கப்பட்ட சமூகத்தினால் மிகப்பெரிய ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புக்களுடனும் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது மாகாண சபை (ஒக்டோபர் 2103 – செப்டெம்பர் 2018)அந்த மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம் எதிர்நோக்கும் சவால்களுக்குக் கூட்டுச் செயற்பாட்டுக்கூடாக முகம்கொடுக்க உதவும் ஒரு அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குவது பயனற்றது எனக் கருதியதுபோல் தெரிகிறது. இப்போது போர் முடிவுக்கு வந்து பத்துவருடங்களின்பின், மாகாண சபையின் ஐந்தாண்டுக் கால எல்லை முடிவுற்ற சிறுகாலத்தில், மத்திய அரச நிறுவனமொன்றின் பொறுப்புரிமையளிப்பில் கிடைத்த ஒரு ஆய்வறிக்கை மாகாணத்தின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலுக்கும் விவாதத்திற்கும் வழிதிறந்துள்ளது.

போருக்கு முன்பும் அதற்குப் பின்னரும் வடமாகாணத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் பற்றிய பொதுப்படையான பார்வையுடன் ஆரம்பிக்கும் இந்த ஆய்வு மாகாண அபிவிருத்தித் திட்டவரைவொன்றின் உருவாக்கத்திற்கு உதவும் நோக்குடன் ஒரு கட்டமைப்பினை முன்வைக்கிறது. நீண்டகாலப் போர் ஏற்படுத்திய அழிவு, இடம்பெயர்வு மற்றும் சனத்தொகை குறைப்பு ஆகியவற்றையும் அவற்றின் விளைவுகளையும் அழுத்திக் கூறுவதுடன் மாகாணத்தின் அபிவிருத்தி எதிர்நோக்கும் சமூக, பொருளாதார சவால்கள் சிலவற்றையும் இனங்காண்கிறது. அரசாங்கம் இந்தச் சவால்களை கணக்கிலெடுக்கத் தவறியதனால் உத்தியோகபூர்வமான கொள்கை திருப்திகரமான விளைபயன்களைத் தரவில்லை எனும் கருத்தினை முன்வைக்கிறது. பெருமப்பொருளாதாரப் (macroeconomic)பார்வையற்றநிலையில் அரசாங்கத்தின் அணுகுமுறை மாற்றுவினை (reactive) சார்ந்ததாக, தொடர்பறுந்த செயற்திட்டங்கள் அடிப்படையிலானதாகவே இருந்ததெனக் கூறுகிறது. போர் முடிந்தவுடன் விருத்திசெய்யப்பட்ட பாதைத்தொடர்பின் விளைவாக முன்னேற்றமடைந்த உற்பத்தியைக் கொண்ட  பரந்த சந்தையுடன் இணைக்கப்பட்டதால் உள்ளூர் உற்பத்தி ஒரு சந்தை அதிர்ச்சிக்குள்ளாகியது. போரின் தாக்கங்களுக்கு ஆளான குடும்பங்களின் பாதிப்புக்களைக் கணக்கிலெடுக்காது நாட்டின் சந்தையுடன் ஏற்படுத்தப்பட்ட திடீர் ஒருங்கிணைப்பும் கடன்கொடுப்பனவின் வளர்ச்சியும் பரந்தளவில் கடன்பிரச்சனையின் ஆழமாக்கலுக்கும் கிராமிய பொருளாதாரச் சிக்கலுக்கும் வழிகோலின என எடுத்துக்கூறுகிறது.

போருக்குப்பின் வடக்கில் மக்கள் நலனுக்குப் பாதகமான நிதிமயமாக்கல் துரிதமாக இடம்பெற்றது என்பதை மறுக்கமுடியாது. இன்றைய நவதாராள உலகில் வறியவர்களைப் பொறுத்தவரையில் கடன் என்பது சமூகப் பாதுகாப்புவலையின் ஆபத்துமிக்க பிரதியீடாகும் (அதாவது நவதாராளப் பொருளாதாரக் கொள்கையின் விளைவான சமூகப்பாதுகாப்பற்ற நிலைமைகளில்). ஏனெனில் அது வறியோரை மேலும் நலிவுக்குள்ளாக்கும் கடன்பொறிக்குள் இட்டுச் செல்கிறது,  இந்த ஆபத்துப் பலரைத் தற்கொலைக்குத் தள்ளுமளவிற்குப் பயங்கரமானது என்பதையும் கண்டுள்ளோம்.

புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட முதலீடுகள் வரவில்லை. அரசாங்கம் அறிவித்த வரிவிலக்கல் ஊக்கியால் மட்டும் போரால் நிர்மூலமாக்கப்பட்ட ஒரு பிரதேசத்திற்கு முதலீடுகளைக் கவரமுடியாது என்பது தெளிவாகியது. நிறுவனரீதியான மற்றும் மனிதவளரீதியான ஆற்றல்களின் குறைபாடுகள் பற்றிய புரிந்துணர்வில்லாமையுடன் போருக்குப்பின்னான வடக்கின் அரசியல் நிலைமைகள் பற்றிய சரியான கிரகிப்பும் அரசாங்கத்திடமிருக்கவில்லை.

உண்மையில் அரசாங்கத்தின் அணுகுமுறை மேலிருந்து கீழான, இராணுவமயமாக்கப்பட்ட, நிர்வாகரீதியில் மத்தியமயப்படுத்தப்பட்டதாகவிருந்தது. பாதுகாப்புமயமாக்கலும் பாதைத்தொடர்பும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்குடியமர்வு மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றின் முன்னுரிமைகளைப் பின்தள்ளிவிட்டன.  பாதைத்தொடர்புக்கான ஏறக்குறைய முழு முதலீடும்  A9 மற்றும் சில பிரதான வீதிகளின் மீள்விருத்திக்கே சென்றடைந்தது. உள்ளூர் உட்கட்டுமான அபிவிருத்தி கவனிக்கப்படவில்லை. சில விமர்சகர்கள் குறிப்பிட்டதுபோல் அரசாங்கம் மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத்தொடர்ந்தது. இந்தச் சூழலில் அரசாங்கம் தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் தீர்வினைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக ‘அபிவிருத்தி’யைப் பயன்படுத்த முயற்சித்தது. ஆதாரபூர்வமான உண்மையென்னவெனில் வட மாகாணத்தில் மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை இயலுமைப்படுத்தும் சூழல் இருக்கவில்லை. 

மேலும் இந்த ஆய்வறிக்கையின் பேசுபொருட்களை நோக்குமிடத்து நாட்டின் பெருமப் பொருளாதாரம் (macroeconomy)பற்றிய ஒரு விமர்சனரீதியான பார்வையை அது முன்வைத்திருக்கவேண்டும் ஆனால் அதைச்செய்யத் தவறிவிட்டது. இது ஒரு முக்கியமான குறைபாடு. இதனால் அறிக்கையின் போருக்குப்பின்னைய அபிவிருத்தி பற்றிய விமர்சனம் முழுமையற்றதாக இருக்கிறது. இலங்கையின் கீழ்நடுத்தர வருமான தகுநிலைக்கான எழுச்சி பொருள்ரீதியான ஏற்றத்தாழ்வின் வளர்ச்சியுடனும் சமூகபாதுகாப்பு உரித்துடைமைகளின் இழப்புடனும் மட்டுமன்றி சனநாயக சுதந்திரங்களை நசுக்கும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுடனும் இணைந்ததென்பது பொதுவாக அறியப்பட்டதே. போரின் முடிவுக்குப்பின்னைய ஆரம்ப வருடங்களில் இடம்பெற்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உயர்ந்த வளர்ச்சி வீதம் உட்கட்டுமான முதலீட்டினால் முன்னெடுக்கப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டிற்குபின் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அப்போதிருந்தே நாட்டின் பொருளாதாரம் பிரச்சனைக்குள்ளாகிவருகிறது. இன்றைய அரசாங்கம் ஒரு நவதாராள நிகழ்ச்சிநிரலைப் பற்றியவண்ணம் திசையறியாது தடுமாறிக் கொண்டிருப்பதாகவே படுகிறது. நாட்டின் இன்றைய பெருமப்பொருளாதார நிலைமை பற்றி இந்த ஆய்வறிக்கையின் மௌனம் சற்றுப் புதிரூட்டுவதாகவிருக்கிறது.

போருக்குப் பின்னைய அபிவிருத்திப் பாதை பற்றிய முற்றுபெறாத ஒரு விமர்சனத்தினது அடிப்படையிலும் ‘நிலைபெறு அபிவிருத்தி’ (‘sustainable development’) பற்றிய ஒரு தொலைநோக்கின் ஆகர்சிப்பிலும் வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒன்றோடொன்று தொடர்புள்ள ‘உற்பத்தி’, ‘அபிவிருத்திக்கான சமூக அடிப்படைகள்’, ‘இயலுமைப் படுத்தும் சூழல்’ எனப்படும் மூன்று தூண்களைக் கொண்ட ஒரு எண்ணக்கருரீதியான கட்டமைப்பினை ஆய்வறிக்கை முன்வைக்கிறது. ‘உற்பத்தி’ தூணுடன் தொடர்பட்டிருக்கும் மற்றைய இரு தூண்கள் பலமுக்கிய சமூகரீதியான, நிறுவனரீதியான, தொழில்நுட்பவியல் தொடர்பான அம்சங்களை உள்ளடக்குகின்றன. சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு ஆலைத்தொழில்கள் ஆகியவற்றினை அடித்தளமாகக் கொண்ட பங்கீடு மற்றும் தாக்குப்பிடிக்கவல்ல நிலையான வளர்ச்சி ஆகிய நோக்கங்களை அடைய உதவும் மூலோபாயத்தின் தேவையை ஆய்வறிக்கை முன்னிலைப்படுத்துகிறது. இது அபிவிருத்திக்கு ஒரு நியமரீதியான (normative)அணுகுமுறைக்கான முன்மொழிவுரை எனலாம்.

பொருளாதார வளர்ச்சி ஒரு இறுதி இலக்கல்ல அது நிலைபெறும் மனித மேம்பாட்டிற்கும் செழிப்புக்கும் வேண்டிய அபிவிருத்திப் போக்கிற்கான ஒரு வழிமுறையே. அபிவிருத்தியின் வேகம் மிதமானதாக இருக்கலாம் ஆனால் அதையும்விட முக்கியமானதென்னவெனில் அது நகரும் பாதை நலிவடைந்தோரை உள்வாங்குவதாகவும் அவர்களின் ஆற்றலுடைமைகளைத் தொடர்ச்சியாக விரிவாக்கவல்ல இயக்கப்பாடுள்ளதாகவும் இருக்கவேண்டும். 

ஆய்வறிக்கையின் கட்டமைப்பை இத்தகைய ஒரு விமர்சன ஒளியில் நோக்குமிடத்து அதன் மூன்று தூண்களின் ஒருங்கிணைப்பின் உண்மையான சோதனை கொள்கை வகுப்பில், திட்டமிடலில், அமுலாக்கலில் அது பயன்படுத்தபபடுவதிலேயே தங்கியுள்ளது. சுதந்திரமும் தகைமையும் (அதாவது தொலைநோக்கும் ஆற்றலும்)  படைத்த தலைமை மற்றும் அர்த்தமுள்ள மக்கள் பங்குபற்றல் ஆகியன இல்லாதவிடத்து இந்தக் கட்டமைப்பு சுலபமாக ஒரு பூரணமான தொழில்நுட்பவல்லுன (technocratic) முறைமைக்குள் நழுவிப்போய்விடும்.இதுநடக்கும் பட்சத்தில் சமூக, அரசியல் பிரச்சனைகள் பொருளாதார வினைத்திறனின் பெயரால் வல்லுனர்களால் – விசேடமாக நவதாராள அறிவீட்டவியல் சார்ந்தோரால் –   தொழில்நுட்பரீதியான பிரச்சனைகளாகத் தரம்குறைக்கப்படும். உண்மையில் என்ன நடக்கும் என்பது தேசிய மட்டத்திலான மாற்றங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து நல்விளைவுகளைத் தரவல்ல பங்கினை வகிக்கக்கூடிய ஆற்றல்மிகுந்த மாகாணசபை போன்றவற்றில் தங்கியுள்ளது. 

வட மாகாணத்தில் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் தன்மைபற்றியும் வங்கிகளின் வகிபாகம் பற்றியும் நமது கவனத்தை ஈர்க்கும் கருத்துக்களை ஆய்வறிக்கையில் காணக்கிடக்கிறது. இவற்றைப் பார்க்கும்போது வடமாகாண வங்கிகளிலிருக்கும் ‘சேமிப்பு உபரி’ உற்பத்திபூர்வமான முதலீட்டுக்கு பயன்படுவதற்கான வழிவகைகள் பற்றி ஆராயவேண்டிய தேவை எழுகிறது. இத்தகைய பயன்பாட்டிற்கான தடைகள் என்ன அவற்றை எப்படி அகற்றலாம் போன்ற கேள்விகள் எழுகின்றன. மாகாண அபிவிருத்தியில் அரசவுடைமைகளான வங்கிகளின் பங்கு என்ன?இது கொள்கை தொடர்பான ஒரு கேள்வி என்பதில் சந்தேகமில்லை. நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் மாகாண அபிவிருத்தி நிதியம் ஒன்றினை நிறுவுவது பற்றிய யோசனையை நடைமுறைப்படுத்துவது பயன்மிக்கது. ஆயினும் இதற்கு இன்னுமொரு கொள்கை மற்றும் நிறுவனரீதியான தேவை ஒன்றும் பூர்த்திசெய்யப்படவேண்டும். அதாவது உற்பத்தியாளர்கள் தொழில் நிறுவனங்களை விருத்திசெய்வதற்குத் தேவையான வளங்களையும், சந்தர்ப்பங்களையும் பெற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு மேல்நோக்கிய சமூக நகர்ச்சிக்கான வாய்ப்புக்கள் கிடைக்கவும் உதவும் சூழல் உருவாக்கப்படவேண்டும். 

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வழக்கமாக கொள்வனவு செய்வோரினால் உந்தப்படும் பண்டச் சங்கிலியில் மிகவும் அசமத்துவமான உறவின் அடிப்படையில் இணைக்கப்படுகின்றன. இதனால் அந்த நிறுவனங்களின் உற்பத்தியின் பெறுமதியின் பெரும்பங்கினைப் பொருட்களைக் கொள்வனவு செய்து சந்தைப் படுத்துவோரே இலாபமாக கைப்பற்றிக்கொள்கிறார்கள். இந்தத் தொழில்நிறுவனங்கள் கூட்டுறவு அமைப்புக்களுக்கூடாகத் தமது பேரம்பேசும் பலத்தை அணிதிரட்டித் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலைகளைப் பெறக்கூடிய கொள்கைரீதியான ஆதரவை அரசாங்கம் வழங்கவேண்டும். சந்தைப்படுத்தலுக்குச் சமத்துவமான அடிப்படையை உருவாக்குவது இந்த நிறுவனங்களின் பொருளாதார செயல்நிறைவாற்றலுக்கும் எதிர்கால விருத்திக்கும் அவசியம். வடக்கில் விவசாயம், கடற்றொழில், கைத்தொழில், ஆலை உற்பத்தி போன்றவை பற்றியே இங்கு சிந்திக்கிறோம். நலிவுற்றோரின் வாழ்வாதார மீள்விருத்திக்கும் மனித மேம்பாட்டுக்கும் உதவும் நன்கொடை, மானியம், கடன் போன்றவைபற்றி ஆய்வுக்குழு ஆராயத்தவறிவிட்டது. இந்த யோசனை போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டுமெனும் நிலைமாற்று நீதியின் ஒரு அம்சமென்பதை நினைவுகொள்ளல்தகும்.

ஆய்வறிக்கையில் தொழிலாளர் தொடர்பாக இனங்காணப்பட்டுள்ள பிரச்சனைகள் முக்கியமானவை. இளைஞர், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னைநாள் போராளிகள், வலுவிழந்தோர் போன்ற பிரிவினர்களின் பிரச்சனைகள்மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேலைபெறக்கூடிய தகைமை பெறுதல் மற்றும் சுயசார்பினைப் பலமூட்டல் போன்றவற்றிற்கான உதவிவழங்கலைப் பொறுத்தவரை இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய விசேடமான தேவைகள் உண்டு. இது மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் இணைந்து சிவில் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களின் வளங்களையும் அணிதிரட்டிச் செயற்படவேண்டிய ஒரு விடயமாகப் படுகிறது.

தொழிலாளர்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு தொழிற்சங்கங்களும் மற்றைய தொழிலாளர் நிறுவனங்களும் மீள்கட்டியெழுப்பப்படவேண்டுமென ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் இதுசுலபமான காரியமல்ல. நாட்டின் மற்றைய பகுதிகள்போல் வடமாகாணத்திலும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் முறைசாராத் துறைகளிலேயே தற்காலிகமாக வேலைசெய்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் சமூக, பொருளாதார பாதுகாப்பற்ற மிகமோசமான நிலைமைகளிலேயே தொழிலாற்றுகிறார்கள், வாழுகிறார்கள். இந்த நிலைமைகளில் அவதியுறும் தொழிலாள வர்க்கத்தினரைச் சில எழுத்தாளர்கள் ´Precariat´ – அதாவது ‘இடர்பாட்டுநிலைத் தொழிலாள வர்க்கம்’ – என வகைப்படுத்தியுள்ளார்கள். இந்த விவரணம் இலங்கையின் முறைசாராத் துறைகளில் தொழிலுக்குத் தங்கியிருக்கும் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலைமைகளுக்கும் பொருந்தும். இன்னுமொரு முக்கியமான உண்மை என்னவெனில் இலங்கையில் தொழிற்சங்கமயமாக்கப்பட்ட தொழிலாளரின் வீதாசாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்கிறது. இந்த விடயங்கள் கொள்கைமட்டத்தில் அணுகப்படவேண்டியவை.

தொடரும் புலம்பெயர்வு, தொழிலுக்காக வெளிநாடு செல்லும் போக்குகள் பற்றி ஆழமாக அறிந்து கொள்வது அவசியம். பல காரணங்களால் வடக்கின் தமிழ் சமூகத்தவர் புலம்பெயரும் நடத்தைப்போக்கினை அதிகமாகவே வெளிக்காட்டுகின்றனர். அதுமட்டுமன்றி மனித செயல்திறன் விருத்திக்கு அற்பமாகவே முதலீடுசெய்யும் அரசாங்கம் இலங்கையர் தொழிலுக்காக வெளிநாடு செல்வதை பல வருடங்களாகத் தீவிரமாக ஊக்கிவித்தவண்ணமிருக்கிறது. மறுபக்கம் வேலை வாய்ப்புக்களைத் தோற்றுவிக்காது செயல்திறன் மட்டுமே விருத்திசெய்யப்படுவது தொழிலாளரின் புலம்பெயர்வை மேலும் ஊக்கிவிக்கும். இலங்கையின் கடந்தகாலப் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தகுந்தளவில் வேலைவாய்புக்களைத் தரத் தவறிவிட்டது. பல்வேறு ஆய்வுகளின்படி வேலையில்லாமை, குறைமட்டவேலை (underemployment), கடன்பளு, வளங்கள் கிடையாமை ஆகியனவே தொழில்தேடும் புலம்பெயர்வுக்கான பிரதான காரணிகள். சமீப காலங்களில் வேலைபெறக்கூடிய திறனுள்ள ஆனால் வேலையில்லாதிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். இந்தச் சூழலும் வடமாகாணத்திலும் முழு நாட்டிலும் மாற்றமடைந்து செல்லும் சனத்தொகையியல் நிலைமைகளும் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஒரு ஊழியச்செறிவுரீதியான (labour intensive)அணுகுமுறையைப் பின்பற்றுவதற்குச் சவாலாகின்றன. இதுவும் தேசியக் கொள்கைமட்டத்தில் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

நிலம் மற்றும் இயற்கை வளங்களைப் பொறுத்தவரை வடமாகாணத்தின் விவசாய மற்றும் கடற்றொழில் சமூகங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புக்கும் மனிதமேம்பாட்டுக்கும் முக்கியமான விளைவுகளைக் கொண்ட சில விடயங்களை ஆய்வறிக்கை கவனிக்கத் தவறிவிட்டது. வன்னியிலும் யாழ் குடாநாட்டிலும் நிலம் மற்றும் நீர் வளங்களின் பங்கீடு மற்றும் நிலைபெறு பயன்பாடு தொடர்பான பிரச்சனைகளுண்டு. நில அபகரிப்பு (சிறியளவிலும் பெரியளவிலும்), நிலமின்மை, நிலவுரிமை தொடர்பாகத் தீர்க்கப்படாத தகராறுகள், ஊரிலே குடியிராதோரின் (பெரும்பாலும் வெளிநாட்டில் வாழ்வோரின்) நிலச்சொத்துக்கள், அரசநிலங்களைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அல்லது புனித பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தி மூடுவதன் மூலம் காடுகளுக்கும், மேய்ச்சல்நிலங்களுக்கும் மக்களுக்கு மரபுரீதியாக இருந்த தொடர்புகளையும் உரிமைகளையும் மறுத்தல், இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள  தனியாருக்குச் சொந்தமான கணிசமான நிலப்பரப்புக்கள் போன்றன நன்கறியப்பட்ட பிரச்சனைகள். யாழ்ப்பாணத்தில் வளமான விவசாய நிலங்கள் வீட்டுநிலச் சொத்துக்களாக மாற்றப்படும் போக்குத் தொடர்கிறது. இதுவரை இடம்பெற்றதை மீட்க முடியாமலிருக்கலாம் ஆயினும் எஞ்சியிருக்கும் வளமான விவசாய நிலங்களைக் காக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம். குடாநாட்டின் நிலத்தடி நீரின் குறைதலும் தரச்சிதைவும் இன்னுமொரு பாரிய பிரச்சனையாகும்.

பாக்குநீரிணையில் சிறிய அளவில் கீழ்மட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் வடக்கு மீனவர்கள் இந்தியாவிலிருந்து பெருந்தொகையில் உட்புகும் உயர்சக்திவாய்ந்த பெரும்படகு மீன்பிடியாளரின் செயற்பாடுகளினால் ஒரு சர்வதேச எல்லைத் தகாராறில் மாட்டப்படுகின்றனர். இந்தப் பாரிய அசமத்துவமான போட்டியில் வடக்கு மீனவர்கள் நிரந்தர இழப்பாளர்களாகிவிட்டனர். ஒரு அறிக்கையின்படி 2500க்கு மேற்பட்ட இந்தியப் பெரும்படகுகள் இலங்கை நீர்ப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக்கப்பட்ட மீன்பிடிக் கருவிகளையும் வழிமுறைகளையும் பயன்படுத்துகிறார்கள் என்பதும் அறியப்பட்டதே. இதனால் மீன்வளங்களின் இழப்பு மற்றும் தரச்சிதைவு இடம்பெறும் ஆபத்து மிகவும் அதிகமென்பதை மறுக்கமுடியாது. இந்தப் பிரச்சனை நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளபோதும் நடைமுறைப் படுத்தக்கூடிய ஒரு தீர்வு இதுவரை காணப்படவில்லை. முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இலங்கையின் தெற்கிலிருந்துவரும் மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையே தகராறுகள் தோன்றியுள்ளன. 

பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்வாதாரங்களை நிலைபெறுவகையில் மீள்கட்டியெழுப்ப உதவும் விதத்தில் இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும். இவை அதிகாரப்பகிர்வில் அரசநிலத்தின்மீதான (மற்றைய இயற்கை வளங்கள் உட்பட) அந்தஸ்துப் பற்றிய சர்ச்சையுடனும் தொடர்புள்ள பிரச்சனைகள். ஆய்வறிக்கை மாகாணத்தின் விவசாய அபிவிருத்தி தொடர்பாக வீட்டுக்குடும்பத்தின் தாக்குப்பிடிக்கும் ஆற்றல், உணவுப் பாதுகாப்பு (food security),நிலைபெறுசக்தி போன்ற அம்சங்களைச் சிலவகையில் விரிவாகக் கையாண்டுள்ளது. இவை வேண்டியவையே அத்துடன் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களும் பயனுள்ளவை. ஆயினும் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளைத் தவிர்க்கமுடியாது. மேலும் கடற்றொழிலுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறியுள்ளது ஆய்வறிக்கை. 

நிலம் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி மேலும் வெளிப்படையான ஒரு விமர்சன நிலைப்பாட்டை எடுப்பது அவசியம். நிலத்தை (அத்துடன் மற்றைய இயற்கை வளங்களையும்)வெறுமனே ஒரு உற்பத்திச் சாதனமாக மட்டுமே கணிப்பது நிலைபெறு அபிவிருத்தி பற்றிய ஒரு ஆழமான பார்வையுடன் ஒத்திசையக் கூடியதல்ல. ஒரு உற்பத்திச் சாதனமென்றவகையில் நிலத்தைத் துண்டாடவும், தனியுடைமையாக்கவும், ஒரு சந்தைப் பொருளாதாரத்தில், பண்டமயமாக்கவும் முடியும். மறுபுறம், பரந்த அர்த்தத்தில் நிலமெனும்போது பரந்துபட்ட முழுச் சூழலையும் அது குறிக்கிறது. அந்த, அதாவது பரந்துபட்ட சூழலெனும், அர்த்தத்தில் நிலம் துண்டாடப்படமுடியாத, பண்டமயமாக்கப்படமுடியாத ஒரு பொதுப் பொருளாகிறது. இந்த முரண்பாடு ‘தனியார்-சமூக’(private-social)  ‘செலவு-பயன்’ (cost-benefit) பகுப்பாய்வின் நுண்கணிதத்தின் மையத்திலுள்ளது. நடைமுறையில் தனியாரின் செயற்பாடுகளின் விளைவாகவரும் சகல சமூகரீதியான செலவுகளும் சமூகரீதியான பயன்களும் அளக்கப்படக் கூடியவையல்ல, ஆயினும் இந்த முரண்பாடு பற்றிய ஆழமான புரிந்துணர்வு வளங்களின் மற்றும் சூழலின் நிலைபெறு ஆட்சிமைக்கு அடிப்படையானது. உள்ளூர் சமூகங்களை அந்நியப்படுத்தி அரச நிலங்களை ‘காப்பு’ அல்லது ‘புனித’ இடப்பரப்புக்களாக மூடுவது நிலைபெறு அணுகுமுறைக்கு உகந்த வழிமுறையல்ல. அது வளங்கள் தொடர்பான நிரந்தர முரண்பாடுகளுக்கே வழிவகுக்கும். உல்லாசத்துறை விருத்தி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற இடம்பெறும் கடற்கரையோர வளங்களின் தனியுடைமையாக்கலினதும் மூடலினதும் சமூக மற்றும் சூழல்ரீதியான செலவுகள் பற்றிய முழுமையான மதிப்பீடுகளும் இனிமேல்தான் மேற்கொள்ளப்படவேண்டும். நிலைபெறு அபிவிருத்திக்காக வாதிடுவோர் இணை-பரிணாமப்போக்குச் (co-evolutionary) சிந்தனையால் ஒளியூட்டப்படும் ஒரு அணுகுமுறையைப் பயன்படுத்துவது பற்றிச் சிந்திப்பது பொருத்தமானது. சமூகம்-இயற்கை உறவுகளை அறியவும் வெப்பநிலை மாற்றம் மற்றும் இயற்கை அழிவுகள் பொன்ற சூழ்நிலைகளில் தாக்குப்பிடிக்கும் ஆற்றலைக் கட்டியெழுப்பும் மற்றும் மாறும் நிலைமைகளுக்கேற்பத்  தகவமைக்கும் போக்குகளைப் புரிந்து கொள்ளவும் அத்தகைய அணுகுமுறை ஒரு வழியாகிறது. அதிகாரப் பகிர்வு மாகாணத்தின் வள மற்றும் சூழலின் ஆட்சிமையில் மக்கள் அமைப்புக்கள் பங்குபற்றும் உரிமையை உள்ளடக்கவேண்டும்.

கவனிக்கப்படவேண்டிய சில விடயங்களையும் பிரச்சனைகளையும் இந்தக் கட்டுரையில் எழுப்பியுள்ளேன். வேறு பல பிரச்சனைகளும் உண்டென்பதில் சந்தேகமில்லை. மக்களுக்கு நெருக்கமாக எடுத்துச் செல்லும்வகையில் கட்டமைப்புப் பற்றி மேலும் விமர்சனரீதியிலான மறுசீராய்வு தேவைபடலாம். மாகாண அபிவிருத்தித் திட்டமொன்றை நோக்கிய செயற்பாட்டில் மக்களின் பங்குபற்றல் முழுமையான முன்தேவை. இந்தச் செயற்பாட்டுப் போக்கினை மாகாணசபை நியாயபூர்வமாக எப்போது பொறுப்பேற்கப்போகிறது எனும் கேள்வி மிகவும் பொருத்தமானதே. அடுத்துவரும் மாகாணசபையிடம் இதைச்செய்யவல்ல தூரநோக்கும் திடசித்தமும் இருக்குமென நம்புவதை மட்டுமே இன்றைய காலகட்டத்தில் ஒருவரால் செய்யமுடியும். இயலுமைப் படுத்தும் சூழலை உருவாக்கி அதற்கும் அப்பால் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வினை நோக்கி நகரும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டா எனும் கேள்வியும் மிகவும் பொருத்தமானதே.

சமுத்திரனின் குறிப்பு: இந்தக் கட்டுரையை 2019 மார்ச் 22 ஆம் திகதி இலங்கைப் பத்திரிகை தினகரன் எனது பெயருடன் பிரசுரித்தது. ஆனால் அதில் (தமிழில் சேந்தன்) எனும் முற்றிலும் தவறான தகவலும் அடைப்புக் குறிக்குள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரை நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை மூலமாகக் கொண்டு என்னாலேயே முற்றிலும் எழுதப்பட்டது என்பதைத் தெரியத்தருகிறேன்.

 தேசியக் கொடியும் தேசிய இனப்பிரச்சனையும் – குறியீடுகளும் யதார்த்தங்களும்

 

 

சமுத்திரன்

‘தேசியக்கொடிச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுடன் என்னால் ஒத்துப்போக முடியாது என்பதையிட்டு நான் வருத்தமடைகிறேன். எனது பார்வையில், ஒரு தேசியக்கொடி சகல குழுமங்களுக்கும் ஒரு கௌரவமான இடத்தைக் கொடுப்பதற்கும் அப்பால் தேசிய ஐக்கியத்தின் சின்னமாகவும் இருக்கவேண்டும். ….

… எனது பார்வையில், இந்த வடிவமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது ஒரு  தேசிய ஒற்றுமையின் சின்னமாக இருப்பதைவிட்டு நமது தேசிய ஒற்றுமையின்மையின் சின்னமாகவே இருக்கும்.’

– செனட்டர் S. நடேசன், தேசியக்கொடி செயற்குழுவின் அங்கத்தவர் (1948-1950)

இலங்கை அரசியலில் தேசியக்கொடி, தேசிய கீதம் பற்றிய விவாதங்கள் அடிக்கடி எழுகின்றன. பல தசாப்தங்களாகத் தொடரும் இந்த நிலைமை 1950ல் நடேசன் அவர்கள் முன்கணிப்புக் கூறியதுபோல் நாட்டில் நிலவும் தேசிய ஒருமைப்பாடின்மையையே காட்டுகிறது. தேசியக்கொடியை ஏற்க மறுப்பவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் சிங்களத் தேசியவாதிகளும் கூச்சலிடும் காலமிது. தேசியக்கொடியின் வடிமைப்பின் வரலாறுபற்றிச் சில தகவல்களை நினைவுகூருவது பயன்தரும்.[1] 1948 இரண்டாம் மாதம் இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது 1815ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவத்தால் கைப்பற்றப்பட்ட கண்டி இராஜ்யத்தின் கொடியாய் விளங்கிய சிங்கக்கொடியே முழு இலங்கையின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தப்பட்டது. 1948 மூன்றாம் மாதம் பின்வரும் அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு ‘தேசியக்கொடி செயற்குழு’ நியமிக்கப்பட்டது: S.W.R.D பண்டாரநாயக்க (தலைவர்), சேர் ஜோன் கொத்தலாவல, J.R. ஜயவர்த்தன, T.B. ஜயா, L.A. ராஜபக்ச, G.G. பொன்னம்பலம், S. நடேசன்.

ஒரு இலங்கைத் தேசியக்கொடியை வடிவமைப்பதில் இந்தச் செயற்குழுவிற்குள் முரண்பாடுகள் தோன்றின. நடேசனின் கருத்தில் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக செயற்குழு ஒருமித்த கருத்தை அடையக்கூடிய சாத்தியப்பாடுகள் அற்பமாகவே இருந்தபோதும் இறுதிநேரத்தில் G.G. பொன்னம்பலத்தின் சமரச ஆலோசனையைப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது D.S.சேனாநாயக்க அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பொன்னம்பலம் சிங்கக்கொடியின் ஒரு புறத்தில் தமிழர் மற்றும் முஸ்லிம்களைக் குறிக்கும் சின்னங்களாக முறையே ஒரு மஞ்சள் மற்றும் பச்சைக் கோட்டினை உள்ளடக்கும்படி ஆலோசனை வழங்கினார். இதை நடேசனைத் தவிர மற்றைய அங்கத்தவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். தனது முடிவுக்கான காரணங்களை விளக்கித் தனியான அறிக்கை ஒன்றினை நடேசன் கையளித்தார். அதில் அவர் வலியுறுத்திய முக்கிய கருத்து செயற்குழுவினால் வடிவமைக்கப்பட்ட கொடி நாட்டின் சகல இனங்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்காது பிரிவினையையே வெளிக்காட்டுகிறது என்பதாகும். தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் சின்னங்களாக வரையப்பட்ட இரு கோடுகளும் சிங்கக்கொடியைச் சுற்றியுள்ள தங்கநிற எல்லைக் கோட்டிற்கு வெளியே இருப்பது பிரிவினையையே குறிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த இரு கோடுகளும் தேசியக்கொடியின் பிற்சேர்க்கைகள் போலவே தெரிகின்றன எனவும் கூறினார்.  பிரிவினையைக் குறிப்பதுபோல் அமைந்துள்ள அந்த எல்லைக் கோட்டை நீக்குவதன்மூலம் மூன்று மக்களையும் தொடர்புபடுத்தும் குறியீடாகக் கொடியை மாற்றலாம் எனவும் ஆலோசனை வழங்கினார். ஆனால் அந்த நியாயமான ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  ஆரம்பத்தில் நடேசன் மஞ்சள், சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள், சிவப்பு, பச்சை மூவர்ணங்களைக் கொண்ட ஒரு கொடியை வடிவமைக்கும் ஆலோசனையை முன்வைத்தார். ஆனால் அது சிங்கச் சின்னத்தின் முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பைப் பாதிக்குமென பல அங்கத்தவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். அந்த ஆலோசனையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தேசியக்கொடி நாட்டின் சகல சமூகங்களையும் ஒருங்கிணைக்கும் பரந்த சிந்தனையின் சின்னமாக விளங்கவேண்டும் என்பதே நடேசனின் வாதம். ஆனால் சிங்கள-பௌத்தமெனும் ஒரு இன-மத இணைப்பிற்கே இலங்கைத் தேசியக் கொடியில் மேலாதிக்க அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கொடியில் மையமுக்கியத்துவம் பெறும் வாளேந்திய சிங்கம் சிங்கள சமூகத்தின் வீரத்தையும், நான்கு மூலைகளிலும் காணப்படும் அரச இலைகள் பௌத்தத்தின் நான்கு விழுமியங்களான அன்புடைமை (மைத்ரீ அல்லது மெத்த), கருணை (கருணா), பரிவிரக்கமுடைய ஆனந்தம் (முடித்த), சாந்தம் (உபேக்கா) ஆகியவற்றையும் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏழு தசாப்தங்களுக்கு முன்னிருந்ததையும் விட இன்றைய இலங்கையில் இன, மத ரீதியான பிரிவினைகள் மிகவும் ஆழப்பதிந்துவிட்டன. இந்தக் காலவெளியில் இலங்கையெனும் நாடு ‘பெரும்பான்மை-சிறுபான்மை’ எனப் பிரிந்துவிட்ட இனத்துவ அடையாள அரசியல் போக்குகளின் அசமத்துவம் மிக்க போட்டிக்களமாக உருமாற்றப்பட்டுவிட்டது.  ஆகவே இன்று தேசியக் கொடி தொடர்பான விவாதங்கள் இடம்பெறும் அரசியல் புலத்தின் யதார்த்தங்கள் 1948-1950 காலகட்டத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். 1948ல் பிரிட்டிஷ் காலனித்துவம் தனது ஏகாதிபத்தியத் தேவைக்கென உருவாக்கிய ஒரு அரசை விட்டுச்சென்றது. அந்த அரசை இலங்கை அரசென அழைக்கலாம். ஒரு இலங்கை அரசு இருந்தது ஆனால் ஒரு இலங்கைத் தேசியம் (a Lankan nation) இருந்ததா? இல்லை. அதைக் கற்பிதம் செய்து கண்டுபிடிக்கும் வரலாற்றுச் சவாலிருந்தது. இலங்கை பல்லின, பல்மத சமூகஅடையாளங்களை உள்ளடக்கிய ஒரு சமூக உருவாக்கமெனும் அடிப்படையில் சகல இலங்கையரையும் உள்வாங்கவல்ல ஒரு பரந்த  பொது அடையாளத்தைக் கட்டியெழுப்பும் வரலாற்றுத் தேவையிருந்தது. அந்தத் திட்டத்திற்கேற்ற ஒரு பல்லின, பல்தேசிய அரசை நிர்மாணிக்கும் தேவையிருந்தது. ஆனால் நடந்தது அதுவல்ல. காலனித்துவம் கையளித்த அரசு பல யாப்புரீதியான மாற்றங்களுக்கூடாக ஒரு சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்க அரசாக மீளமைக்கப்பட்டது. நடந்த வரலாறு பற்றி வேறு கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளேன். அவற்றை இதே இணையத்தளத்தில் (samuthran.net) பார்க்கலாம்.[2]

1948-1950ல் தேசியக்கொடி தொடர்பான செயற்குழுவின் கருத்தாடல் தேசிய இனப்பிரச்சனையைப் பெரும்பாலும் சின்னங்களின் மட்டத்திலேயே அணுகியது. அப்போது ஏற்கனவே மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுவிட்டது. அது தேசிய இனப்பிரச்சனையின் முரண்பாடுகளின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொணர்ந்தது. அது காலனித்துவத்திற்குப் பின்னான இலங்கையில் எழப்போகும் இனத்துவ தேசியவாத அரசியலின் ஆரம்பத்தை அறிவித்தது.  இன்று தேசிய இனப்பிரச்சனை மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ள நிலையில் தேசியக்கொடி பற்றிய சர்ச்சைகள் நம்மைச் சின்னங்களுக்கு அப்பால் நாட்டின் யதார்த்தங்களுக்கூடாகப் பிரச்சனையின் தீர்வுக்கு இழுத்துச் செல்கிறது. சின்னங்களுக்கு எதிரான செயற்பாடுகள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு வேண்டுமெனும் அடிப்படைக் கோரிக்கையின் எதிரொலிகளே. இந்தச் செயற்பாடுகள் தேசிய இனப்பிரச்சனையில் ஏற்பட்டுள்ள தன்மைரீதியான மாற்றங்களை நன்கறிந்து ஜனநாயகரீதியான அரசியல்தீர்வுக்கும் மனித மேம்பாட்டிற்கும்  உதவும் வகையிலான நடைமுறை சார்ந்ததாக இருந்தால் மட்டுமே கூடிய பயன்விளையும்.

2015 ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வகித்த பங்கு உலகறிந்ததே. அந்தத் தேர்தலின் வெற்றியின் பல்லினத்தன்மையை ஒரு ‘வானவில் புரட்சி’ என்றும் இலங்கை ஒரு ‘வானவில் தேசியமாக’ மாறும் என்றும் வெற்றிக் களிப்பிலிருந்த சில அரசியல்வாதிகளும் நல்ல நோக்கினால் உந்தப்பட்ட சில எழுத்தாளர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். ‘வானவில் தேசியம்’ (´rainbow nation´) எனும் உவமை 1994ல் தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சிதோற்கடிக்கப்பட்டு நெல்சன் மண்டேலா ஜனாதிபதியானபின் பேராயர் டெஸ்மொண்ட் டுட்டு (Archbishop Desmond Tutu)வினால் பிரபல்யப்படுத்தப்பட்டது. இந்தச் சுலோகத்திற்கேற்ப தென் ஆபிரிக்காவின் தேசியக்கொடி, தேசிய கீதம் மற்றும் யாப்பு உருவாக்கப்பட்டன. அதேகாலத்தில் ஒரு ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வும் நியமிக்கப்பட்டது. ஆறு நிறங்களைக் கொண்ட தேசியக் கொடி நாட்டின் சகல இனங்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவின் தேசிய கீதம் ஐந்து மொழிகளில் ஒரே பாடலாக இசைக்கப்படுகிறது. அந்த நாட்டின் ஜனநாயக யாப்பு 1996ம் ஆண்டு டிசெம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப்பின் இதுவரை பதினேழு தடவைகள் திருத்தங்களுக்குள்ளானது. நாட்டின் பல்வேறு இனங்களை ஒருங்கிணைத்து ஒரு ‘வானவில் தேசியத்தை’ உருவாக்கும் பயணத்தில் தென் ஆபிரிக்கா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளபோதும் அதன் குறைபாடுகள் பற்றிய விமர்சனங்களும் நிறைய உண்டு. உதாரணமாக அந்த நாட்டின் பிரபல கவிஞரும் அரசியல் சிந்தனையாளரும், கொம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் (African National Congress) அங்கத்தவருமான ஜெரெமி குறொனின் (Jeremy Cronin) அவர்களின் கருத்தில் தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் தலைமையிலான தேசிய நிர்மாணிப்பு உண்மையான நல்லிணக்கத்திற்கு உதவுவதற்குப் பதிலாக இனிப்புமுலாம் பூசப்பட்ட மேலிருந்து கீழாக வழிநடத்தப்படும் போக்காக மாறிவிட்டது. அத்துடன் தென் ஆபிரிக்காவின் நவதாராளப் பொருளாதாரக் கொள்கை ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிப்பதால் நல்லிணக்கமும் தேசியத்தின் நிர்மாணமும் பாதிக்கப்படுகின்றன எனும் விமர்சனத்தையும் அவர் போன்றோர் முன்வைத்துள்ளனர்.

தென் ஆபிரிக்காவுடன் இலங்கையை ஒப்பிடுவதில் பிரச்சனைகள் உண்டு. ஆயினும் அந்த நாட்டின் பன்முகரீதியான முன்னெடுப்புகளுடன் ஒப்பிடும் போது இலங்கை இன்னும் முதலாவது அடியைக் கூடத் திடமாக எடுக்க முடியாது தத்தளிக்கும் நிலையிலேயே உள்ளது. ‘வானவில் தேசியம்’ ஒரு அழகான உவமைபோல் படலாம் ஆனால் அதை ஒரு மாயத்தோற்றமாகச் சிருஷ்டிப்பதில் அர்த்தமில்லை. இயற்கையில் வானவில் ஒரு கணநேரக் காட்சியே! புதிய யாப்புத் தொடர்பான செயற்பாடுகளைத் துணிவுடன் முன்னெடுக்கும் ஆற்றல்குன்றிய நிலையிலிருக்கிறது அரசாங்கம். கூட்டு எதிர்க் கட்சி மற்றும் பொதுதுபலசேனா (BBS) போன்ற அமைப்புக்கள் தமது தீவிர சிங்கள-பௌத்த இனவாதப் பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளன. இதற்கு நேர்மையாக முகம் கொடுக்கப் பயப்படும் ஜனாதிபதியும் பிரதமரும் பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதிலேயே அக்கறையாயிருக்கின்றனர். மறுபக்கம் வடக்கு-கிழக்கிலே தீவிர தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைமைக்குத் துரோகப்பட்டம் சுமத்தும் அரசியலில் இறங்கியுள்ளனர். இந்தச் சூழலில் புதிய யாப்பு ஒன்று வருமா என்ற கேள்வி எழுகிறது. அப்படித்தான் வந்தாலும் அது தேசிய இனப்பிரச்சனைக்கு ஜனநாயகரீதியான தீர்வினை உள்ளடக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. பௌத்த மதத்திற்கு விசேட அந்தஸ்து என்பதில் மாற்றமில்லை என்பது தெளிவாகியுள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசை ஒரு மதச்சார்பற்ற அரசாகச் சீர்திருத்துவது சாத்தியமில்லை என்பதும் தெளிவு. தேசியக்கொடியில் மாற்றங்களும் சாத்தியமில்லை. நடேசன் முனெச்சரிக்கை செய்ததுபோல் இன்று அது தேசிய ஒற்றுமையின்மையின் சின்னம்போல் ஆகிவிட்டது. மாகாண மட்டத்திலான அதிகாரப் பகிர்வு பற்றிய முடிவுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது இப்போது ஒரு பிரதான கேள்வியாகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தலையொட்டி வழமையான இனத்துவ அரசியல் காரணங்களுக்காக அரசாங்கத்தின் யாப்புத் தொடர்பான முயற்சிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. யாப்புப் பற்றிய சர்ச்சைகள் நாட்டின் இனரீதியான துருவமயமாக்கலை மேலும் பலப்படுத்தியிருப்பதாகவே படுகிறது. இந்தப் பாதகமான போக்கிற்கு எதிரான சக்திகள் அதையும்விடப் பலமடையும்போதே தேசிய இனப்பிரச்சனைக்கு முழுமையான ஜனநாயகரீதியான தீர்வுக்கான அரசியல் சூழல் உருவாகும். அந்தச் சூழல் தன்னியல்பாகப் பிறக்கப்போவதில்லை. அதை உருவாக்க ஒத்துழைத்துப் போராடுவதே சகல இனங்களையும் சேர்ந்த ஜனநாயக சக்திகளினதும் கடமை. இன்று இப்படியான ஒரு ஆலோசனை நடைமுறைக்கு ஒவ்வாததெனப் பலர் கருதலாம். ஆனால் இன்றைய வரலாற்றுத் தேவை ஒரு மாற்று அரசியலாகும். அதை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய கருத்துப்பரிமாறல்களும் விவாதங்களும் தேவை.

 

[1] இது தொடர்பாக February 2, 2003, Sunday Timesல், C. V. Vivekanandan, How National is the National Flag? எனும் தலைப்பில் ஒரு பயனுள்ள கட்டுரையை எழுதியிருந்தார். நடேசனின் அறிக்கை மற்றும் அவர் செனட்சபையில் ஆற்றிய உரைகள் ஆகிவற்றை இணையத்தில் S. Nadesan எனும்பெயரில் தேடினால் காணலாம்.

[2] Samuthran.net ல் விசேடமாகப் பின்வரும் கட்டுரைகளைப் பார்க்கவும்: i. சிங்களப் பெருந்தேசிய வாதம் – அதன் அடிப்படைகளூம் மேலாதிக்கமும் ii. வடக்குக் கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்

 

இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும்

 

சமுத்திரன்

22 ஜூன் 2017 

I

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார விருத்தி மற்றும் சமூக முன்னேற்றத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு பற்றி நீண்ட காலமாக விவாதங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. தமிழ் சமூகத்தினுள் நடைபெறும் இந்த விவாதங்கள் எல்லாமே எழுத்து வடிவம் பெறுவதில்லை. பொதுவாக வெளிநாடுகளில் இவை கருத்தரங்குகளிலும் ஈழத்தமிழர்கள் கூடும் மற்றைய நிகழ்ச்சிகளிலும் இடம்பெறுவதைக் காணலாம். 2009 ஐந்தாம் மாதம் இராணுவரீதியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின் இந்த விடயம் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்த தமிழரின் பங்கு எனும் வடிவத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்போது ராஜபக்ச அரசாங்கம் அகங்காரத்துடன் தேசிய இனப் பிரச்சனை என ஒன்றில்லை இருந்தது பயங்கரவாதப் பிரச்சனையே அது தீர்க்கப்பட்டுவிட்டது இனிச் செய்யவேண்டியது வடக்கு கிழக்கின் அபிவிருத்தியே எனும் கொள்கையைப் பின் பற்றியது. நடைமுறையில் அந்த அரசாங்கம் போருக்குப்பின் மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத் தொடர்ந்தது. அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமின்றி அபிவிருத்தியை முன்வைத்தது. அரசியல் தீர்வுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கும் நெருங்கிய உறவுண்டு ஆனால் பின்னையது முன்னையதின் பிரதியீடாகாது எனும் கருத்தினை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அத்துடன் ராஜபக்ச ஆட்சி வடக்கு கிழக்கின் ‘அபிவிருத்தி’யை இராணுவ மயப்படுத்தி அடக்குமுறையின் கருவியாகப் பயன்படுத்தியது. இது போருக்குப்பின் அது மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத் தொடரும் கொள்கையின் ஒரு அம்சமாகியது. இது பற்றி ஒரு விரிவான கட்டுரையையும் எழுதியுள்ளேன்.[1] புலிகள் மீண்டும் அணிதிரள முற்படுகிறார்கள் என்றும் அதனால் தேசிய இறைமைக்கு ஆபத்து தொடர்கிறது என்றும் பிரச்சாரங்கள் செய்து இராணுவத்தை வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் நிலைகொள்வதை நியாயப்படுத்தியது அரசாங்கம். ராஜபக்ச ஆட்சியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் திட்டங்களைச் செயற்படுத்துவதற்குப் பலவிதமான கட்டுப் பாடுகளும் தடைகளும் இருந்தன. இதனால் தனிப்பட்ட காசாதார உதவிகளுக்கு அப்பால் திட்டமிட்ட சமூக மேம்பாட்டுக்கு உதவும் செயற்பாடுகள் குறைவாகவே இருந்தன. அடக்குமுறையின் விளைவான பயமும் நிச்சயமின்மையும் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் முன்னெடுப்புக்களுக்குப் பெரும் தடைகளாயின.

2015ல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்குப்பின் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தவர்  மத்தியில் மேலும் அதிகமான முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதைக் காணமுடிகிறது. அரசாங்கம் ‘தமிழ் டயஸ்போறா’வை வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் பங்காளர்களாகும்படி அழைத்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அப்போதைய ஆட்சிக்கு எதிரான சிங்கள மக்களுடன் சேர்ந்து  அவர்கள் வழங்கிய பெரும் ஆதரவின்றி ஆட்சி மாற்றம் இடம் பெற்றிருக்கவே முடியாது. ஆட்சி மாற்றத்தின்பின் சில விடயங்களைப் பொறுத்தவரை சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. விசேடமாகப் பேச்சுச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், இனவாதங்களுக்கு எதிராக மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிவில் சமூக அமைப்புகளின் சுதந்திரம், மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர் இலங்கைக்குப் பிரயாணம் செய்வது, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் திட்டங்களைச் செயற்படுத்துவது போன்றவற்றில் காணக்கூடிய முன்னேற்றங்களைக் குறிப்பிடலாம். அதேபோன்று யாப்பின் 19வது திருத்தமும் வரவேற்கப்படவேண்டியதே. மறுபுறம் பல்வேறு வகையில் ஆட்சிமாற்றம் ஏமாற்றங்களையே கொடுத்துள்ளது. தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வுபற்றிப் பேசப்படுகிறது ஆனால் தெளிவாகத் தென்படும் முன்னேற்றம் இல்லை. புதிய யாப்புத் தொடர்பான செயற்பாடுகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இலங்கை அரசின் அமைப்பில் அடிப்படையான சீர்திருத்தமின்றி தேசிய இனப் பிரச்சனைக்கு ஜனநாயகரீதியான தீர்வினைக் காணமுடியாது. இதைச்செய்யும் அரசியல் திடசித்தம் அரசாங்கத்திற்கு இருக்கிறதா?

இன்னொரு மட்டத்தில் பார்த்தால் இராணுவம் நீண்டகாலமாகக் கைப்பற்றி வைத்திருக்கும் தனியார் நிலங்களைக்கூட இதுவரை அரசாங்கத்தினால் முழுமையாக விடுவிக்க முடியவில்லை. வடக்கு கிழக்கின் இராணுவ மயமாக்கலைப் பொதுமக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் குறைக்கக் கூட முடியவில்லை. தெற்கிலே தலைவிரித்தாடும் பேரினவாத சக்திகளைத் துணிகரமாக எதிர்க்க முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருக்கிறது. போர்க்குற்றம் தொடர்பாக அரசாங்கம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரண்படும் கொள்கையையே நாட்டில் பின்பற்றுகிறது.

ஊழல் தொடர்பாகக் கொடுத்த வாக்குறுதியின் ஒரு அற்ப பகுதியையாயினும் நிறைவேற்றமுடியாமை மட்டுமன்றி தனது ஆட்சிக்குள்ளேயே வளரும் ஊழலைக் கூடத் தடுக்கமுடியாமை ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் பயங்கரமான பலவீனத்தையே வெளிக்காட்டுகின்றது. சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கம் மீதான ஏமாற்றமும் எதிர்ப்பும் வலுவடைந்துள்ளன. ஏறிச்செல்லும் வாழ்க்கைச் செலவினால் சகல இன மக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆட்சிமாற்றத்திற்கு அயராது உழைத்த சிவில் சமூக அமைப்புக்கள் தமது ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் தொடர்ச்சியாகப் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றன. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தெளிவற்றதாக இருக்கும் அதேவேளை நடைமுறையில் பழைய கொள்கையே தொடர்கிறது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து வளர்கின்றன. புவியியல்ரீதியில் பொருளாதார வளர்ச்சி மிகவும் அசமத்துவமான போக்கிலேயே தொடர்கிறது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி (2015) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP ல்) 40 வீதத்திற்கும் மேலான பங்கு மேல்மாகாணத்தில் இடம்பெறுகிறது. மிகுதி எட்டு மாகாணங்களில் தென், மத்திய மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களும் கூட்டாக 30 வீதத்தைப் பெறுகின்றன (தலா 10%) . எஞ்சிய மாகாணங்களில் வடமாகாணம் நாட்டிலேயே ஆகக்குறைந்த மூன்று வீதத்தையும், அதற்கு அடுத்தநிலையில் ஊவா மாகாணம் ஐந்து வீதத்தையும் அடுத்து கிழக்கு மாகாணம் ஆறு வீதத்தையும் பெறுகின்றன.  இந்தப் போக்கு நீண்ட காலமாக இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிடவேண்டும். இன்றைய சூழலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சமூக, பொருளாதாரரீதியில் இலங்கையின் மிகப் பின்தங்கிய மாகாணங்களில் அடங்குகின்றன. அத்துடன் நீண்ட போரின் விளைவாக இந்த மாகாணங்கள் விசேட பிரச்சனைகளைக் கொண்டுள்ளன.[2]

1977ல் UNP ஆட்சி அறிமுகம் செய்த பொருளாதாரக் கொள்கையே பல முரண்பாடுகளுடன் இன்றுவரை தொடர்கிறது. சென்ற நான்கு தசாப்தங்களில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிபெற்று இன்று இலங்கை கீழ்நடுத்தர வருமான நாடெனும் அந்தஸ்தினைப் பெற்றுள்ளது. ஆயினும் இதுவரையிலான பொருளாதார வளர்ச்சி மிக அற்ப தொழில் வாய்ப்புக்களையே கொடுத்துள்ளது. நாட்டின் தொழிற்படையின் 20-25 வீதத்தினர் வெளிநாடுகளிலேயே வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் மத்தியகிழக்கில் தொழில் செய்கிறார்கள். அதில் ஏறக்குறைய அரைவாசியினர் பெண்கள். இவர்களில் 80 வீதத்திற்கும் மேலானோர் வீட்டுப்பணிப் பெண்கள். வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு உதவுவதற்கென்றே ஒரு அமைச்சு இலங்கையில் இயங்குகிறது. வெளிநாடுகளில் தொழில்செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் பணமே நாட்டின் பிரதான அந்நிய செலாவணி வருமானங்களில் ஒன்றாகும். ராஜபக்ச ஆட்சியில் குவிந்த கடன் சுமையைக் கையாள்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கும் இன்றைய அரசாங்கம் நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்துள்ளது. கடன் பொறியிலிருந்து மீளும் நோக்கில் சர்வதேச நிதியத்திடம் சரணடைந்துள்ளது.  மறுபுறம் எதிர்பார்த்த அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை. நிதிமயமாக்கல் (financialization) மேலாட்சி செய்யும் இன்றைய உலகப் பொருளாதாரத்தில் இலங்கை போன்ற ஒரு நாடு உற்பத்தி மூலதனத்தைக் கவருவது சுலபமல்ல. வேறு பல நாடுகளுடன் போட்டி போடும் நிலையிலேயே இலங்கை உள்ளது.

இத்தகைய சூழலில் அரசாங்கம் புலம் பெயர்ந்து மேற்குநாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்களை வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் பங்குதாரர்களாக வரும்படி அழைப்பு விடுத்து அதற்கும் அப்பால் சில செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது. தமிழ் டயஸ்போறாவிடமிருந்து முதலீடுகளையும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பரீதியான பங்களிப்புக்களையும் எதிர்பார்க்கிறது. இந்த அழைப்புப்பற்றிப் பார்க்கமுன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குமிடையிலான தொடர்புகள் பற்றி மற்றும் வடக்கு கிழக்கு நிலைமைகள் பற்றிச் சில விடயங்களை நினைவுகூர்தல் பயன் தருமென நம்புகிறேன்.

II

வெளிநாடுகளில் (விசேடமாக மேற்கு நாடுகளில்) வாழும் புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தவர்க்கும் தாயகத்திலுள்ள அவர்களின் உறவுகளுக்குமிடையே பன்முகத் தன்மை கொண்ட தொடர்புகள் இருப்பதும் காலப்போக்கில் இவை ஒரு நாடுகளைக் கடந்த சமூகத்தின் (transnational community) உருவாக்கத்திற்கு வழிவகுத்ததும் பலரும் அறிந்த விடயமாகும். இலங்கையில் வாழும் வடக்கு கிழக்குத் தமிழ் சமூகத்தில் ஒரு காசாதாரப் பொருளாதாரம் உருவாகியுள்ளதும் யாவரும் அறிந்ததே. போர்க் காலத்தில் நாட்டிலே பாதிக்கப்பட்டோரில் கணிசமான பகுதியினர் வெளிநாட்டிலிருந்து சென்ற பண உதவியால் காப்பாற்றப்பட்டனர். ஆனால் காசாதாரப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வடக்கு கிழக்கின் பொருளாதார விருத்திக்குப் பெருமளவில் உதவவில்லை. வெளிநாட்டிலிருந்து செல்லும் காசாதாரம் சமூக மேம்பாட்டிற்கு உதவும் அபிவிருத்திப் போக்கிற்கு உதவுமா இல்லையா என்பது உள்நாட்டு நிலைமைகளிலேயே தங்கியுள்ளது என பல சர்வதேச ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அத்தகைய அபிவிருத்திக்கு உதவும் கொள்கை மற்றும் நிறுவனரீதியான சூழல் இருக்கவில்லை என்பதே உண்மை. வெளிநாட்டுக் காசாதாரம் அங்கு உற்பத்தி மூலதனத்தின் வளர்ச்சிக்கு உதவியதையும் விடப் பெருமளவில் ஒரு நுகர்வுவாதக் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கே உதவியுள்ளது. மறுபுறம் வெளிநாட்டுக் காசாதாரம் பெருமளவில் கோவில்களைப் புனரமைக்கவும் விஸ்தரிக்கவும் புதிய கோவில்களைக் கட்டவும் பயன்பட்டுள்ளது தொடர்ந்தும் பயன்படுகின்றது.

இன்றைய வட மாகாணத்தின் அரசியல் ஒரு குழம்பிய குட்டைபோல் தெரிகிறது. மூன்றரை வருடங்களுக்கும் மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) ஆட்சியிலிருக்கும் வட மாகாணசபையிடம் மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்பட்ட ஒரு அபிவிருத்தித் திட்டம் இல்லை. அத்தகைய ஒரு திட்டம் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். அதன் அமுலாக்கலில் மத்திய அரசுடன் பிரச்சனைகள் எழுந்திருக்கலாம். அந்தக் கட்டத்தில் அபிவிருத்தித் திட்டத்தை மக்களின் ஜனநாயகப் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டத்தின் கருவியாக்கி இருக்கலாம். அதற்கு நாட்டின் ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்றிருக்கலாம். இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சிந்தனை மாகாண சபையிடம் இருக்கவில்லை.

அதேபோன்று காசாதாரப் பொருளாதாரத்தை மாகாணத்தின் அபிவிருத்திக்கு உதவும் வகையில் மாற்றியமைப்பது பற்றிய கொள்கை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாகாணத்தின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பங்கு பற்றிய கொள்கை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாகாண சபையின் முயற்சியின் விளைவாக மக்களின் – விசேடமாகப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் – சமூக மேம்பாடு தொடர்பாகக் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் ஊழல் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த ஊழலை முதலமைச்சர் இதுவரை காணாமல் இருந்தது அதிசயமே. இதை அவரால் ஏன் முளையிலே கிள்ளிவிட முடியவில்லை? இந்த நிலை உருவானதில் அவருக்கு ஒரு பொறுப்பும் இல்லையா? இதுவரை அவரின் பொறுப்பிலிருக்கும் அமைச்சுகளின் வினைத்திறன் பற்றிய மதிப்பீடு என்ன?

மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரம் போதாது என்பதில் நியாயம் உண்டு. மத்திய அரசுக்கும் மாகாண சபைக்குமிடையிலான உறவு மிதமிஞ்சிய அசமத்துவமாயிருப்பது உண்மை.  கூடுதலான அதிகாரப்பகிர்வுக்காகப் போராடவேண்டும் என்பதிலும் நியாயமுண்டு. ஆனால் இருக்கும் அதிகாரத்தை மக்களின் மனித நன்நிலையை வளர்க்க உதவும் வகையில் பயன்படுத்துவதற்கான திட்டமெதுவுமின்றி மாகாண சபையைக் கைப்பற்றுவதனால் எதைச்சாதித்துள்ளது TNA எனும் கேள்வி நியாயமானதே. இன்று TNAன் சீர்குலைவு ஒரு துன்பியல் கலந்த நகைச்சுவை நாடகமாக அரங்கேறியுள்ளது. அதற்கு மாற்றாகத் தோன்றியிருக்கும் தமிழ் மக்கள் பேரவை (TPC) இந்த நாடகத்தின் ஒரு உப காட்சியாகச் சமாந்திரமாகத் தொடர்கிறது. பேரவை தன்னைக் கூட்டமைப்பையும் விடப் பெரிய தமிழ் தேசிய வாதியாகக் காட்ட முற்படுகிறது. இந்தக் குறுந்தேசியவாதப் போட்டியின் விளைவுகளால் இனவாத அரசியலே மேலும் பலப்பட்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மேலும் தனிமைப்படும். இதனால் வருந்தப் போவது மக்களே.

கிழக்கு மாகாணம் வடக்கைவிட பல்லினமயப்பட்டது. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை மேலும் இனவாதப்போக்கில் அரசியல் மயப்படுத்தித் தேர்தலில் வாக்குப்பெறும் வழிகளையே எல்லாக் கட்சிகளும் பின்பற்றுகின்றன. அதேவேளை மாகாண சபையின் தலைமைக்கும் அரசாங்கத்துக்கு மிடையிலான உறவு வடக்கிலிருந்து வித்தியாசமானது. இன்று கிழக்கில் TNAயே மிகப்பெரிய தமிழ் அரசியல் அமைப்பு. அது மாகாண சபை ஆட்சியில் ஒரு பங்காளி. ஆயினும் இன்றைய தமிழ் அரசியல் (TNA,TPC), தமிழ் டயஸ்போறாவின் பங்களிப்பு மற்றும் மக்களின் மனித நன்நிலையை மையமாகக்கொண்ட அபிவிருத்திக் கொள்கை இல்லாமை பற்றி மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கிழக்கிற்கும் பொருந்தும்.

III

அரசாங்கத்தின் அழைப்பு தமிழ் டயஸ்போறாவில் பலவிதமான கருத்துக்களையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடு ஒரு முனையிலும் முற்றாக நிராகரிக்கும் நிலைப்பாடு மறுமுனையிலும் இருக்க இந்த இரண்டிற்குமிடையே சில போக்குகளையும் காணலாம். முதலாவது நிலைப்பாட்டைக் கொண்டவர்களில் இலாபநோக்குடன் முதலீடுகள் செய்ய விரும்புவோர் அடங்குவர். வடக்கு கிழக்கில் இலாபம்தரும் முதலீடுகளை ஏற்கனவே சில புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்துள்ளார்கள். இந்த முதலீடுகள் விசேடமாக உல்லாசத்துறை சார்ந்தவை. இன்றைய ஆட்சியின் அழைப்பு இத்தகைய முதலீட்டாளர்களை மேலும் ஊக்கிவிக்கும் என எதிர்பார்க்கலாம். இவர்கள் அரசின் முதலீட்டு அதிகார சபையின் (Board of Investment ன்) அனுசரணையுடன் தமது முதலீடுகளைச் செய்யலாம். அரசாங்கத்தின் அழைப்பை முற்றாக நிராகரிப்பவர்கள் பொதுவாகத் தீவிர தமிழ்தேசியவாத உணர்வினால் உந்தப்படுகின்றனர்.

இடைப் போக்குகளில் பரவலாகக் கேட்கும் ஒரு கருத்து இருக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் சமூகமேம்பாட்டிற்கு உதவும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதாகும். போரினாலும் வேறுகாரணிகளாலும் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் நன்நிலையில் அக்கறை கொண்ட டயஸ்போறா தமிழர்களில் பெரும்பான்மையினர் அல்லது கணிசமான தொகையினர் இத்தகைய கருத்துடன் ஒத்துப்போவார்கள் எனக்கருத இடமிருக்கிறது. வாழ்வாதாரவிருத்தி, இளம் சந்ததியினரின் கல்வி, தொழில்பெறும் தகைமைகள் மற்றும் மேல்நோக்கிய சமூக நகர்ச்சி போன்றவற்றிற்கு இவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இத்தகைய கருத்துடையோர் மத்தியில் ஒரு சாரார் அரசியலை முற்றாக ஒதுக்கியே சமூக மேம்பாட்டைப் பார்க்கிறார்கள். மற்றயோர் அரசியல்ரீதியில் சிந்திப்போர். அரசாங்கம் பற்றித் தம் விமர்சனங்களைக் கொண்டுள்ளோர். அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் அல்லது அதைப் பின்தள்ளாத வகையிலயே சமூகமேம்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் எனும் பார்வையைக் கொண்டுள்ளோர். இருசாராரும் அரசுசாரா மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுக்குடாகவே செயற்பட விரும்புகின்றனர். இத்தகைய தொடர்புகளைப் பல குழுக்கள் ஏற்கனவே கொண்டுள்ளன. ஆயினும் நிறுவனங்களின் மற்றும் மனிதர்களின் விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவையும் ஆற்றல்களையும் விருத்தி செய்யும் திட்டங்களைப் பொறுத்தவரை அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவேண்டிய தேவையையும் இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

எனது அபிப்பிராயத்தில் போரினாலும் வேறுகாரணிகளாலும் இடர்பாட்டிற்குள்ளாயிருக்கும் மக்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட விரும்பும் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியதே. அதேவேளை இந்த மக்களை உள்வாங்கியிருக்கும் அதிகார உறவுகளைக் கணக்கில் எடுக்காது அவர்களின் நிலைமைகளைச் சரியாக அறிந்து கொள்ள முடியாது. அவர்களை அந்த உறவுகளிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. அந்த உறவுகளைப் புரிந்து கொள்வது அவர்களின் அன்றாட போராட்டங்களின் தன்மைகளையும் அந்தப் போராட்டங்களின் சமூகரீதியான அரசியல்ரீதியான முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள உதவும். போரினால் பாதிக்கப்பட்டோர் எனும்போது அது ஒரு மிகப்பரந்த வகைப் படுத்தலைக் குறிக்கலாம். இந்த வகையுள் போர்ப் பிரதேசங்களில் வாழும் எல்லோரும் அடங்குவர். ஆனால்  ‘பாதிக்கப்பட்டோர்’ எனும் போது மனித நன்நிலைகுன்றிய, உரித்துடமைகள் இழந்த நிலைமைகளில் வாழ்வோரையே பலரும் மனதில் கொண்டுள்ளார்கள் எனக் கருதுகிறேன். இந்த வகையினர் எப்படி அவர்களின் வாழ்நிலைகளுக்காளானார்கள்? ஏன் அந்த நிலைமைகளில் தொடர்ந்தும் இருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இல்லாமல் அவர்களின் அன்றாட வாழ்வுப் போராட்டங்களைப் புரிந்து கொள்ள முடியாது. அத்தகைய புரிந்துணர்வு அவர்களின் நிலைமைகளைத் தனியே ஒரு மனிதாபிமானப் பிரச்சனையாகப் பார்ப்பதற்கும் அப்பால் அவற்றின் வர்க்க, பால், சாதி, பிரதேச ரீதியான பரிமாணங்களை அறிந்து கொள்ள உதவும். இப்படிப் பார்க்கும்பொழுது மக்களுக்கும் அரசுக்குமிடையிலான நேரடியான முரண்பாடுகளையும் மற்றைய சமூக, பொருளாதார முரண்பாடுகளையும் இனம் காணமுடியும். இந்த உறவுகளெல்லாம் அதிகார உறவுகள் என்பதும் தெளிவாகும். இந்த மக்களின் அன்றாட போராட்டங்களில் வாழிட உரிமை, வாழ்வாதார அபிவிருத்தியும் பாதுகாப்பும், சுரண்டல் மிகுந்த கடன் உறவுகளிலிருந்து விடுபடுதல், இளம் சந்ததியின் உடல் நலன், கல்வி மற்றும் மனித ஆற்றல்களின் விருத்தி, மனித மற்றும் சமூகப் பாதுகாப்பு உரித்துடைமைகள், சூழல் பாதுகாப்பு போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தன. இந்த அன்றாடப் போராட்டங்கள்  பொதுவாகத் தனிமனித, குடும்ப மட்டங்களிலும் சில சமயம் குறிப்பிட்ட கிராமிய அல்லது பிரதேச மட்டத்தில் கூட்டுச் செயற்பாடுகளுக்கூடாகவும் இடம்பெறுகின்றன. உதாரணங்களாக இராணுவம் கைப்பற்றியுள்ள தமது நிலங்களுக்கான மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அணிதிரட்டல்களும் போராட்டங்களும் பாதிக்கப்பட்டொரினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் கூட்டுச் செயற்பாடுகளாகும். துரதிஷ்டவசமாகப் பொதுவான பிரச்சனைகள் உள்ள வேறு பகுதியினரை அணிதிரட்டி அவர்களின் கோரிக்கைகளுக்குக் கூட்டான குரல் கொடுக்கும் அமைப்புக்கள் இல்லை. உதாரணங்களாக வறுமையில் வாடும் பெருந்தொகையான பெண்தலைமைக் குடும்பங்கள் மற்றும் முன்னைநாள் போராளிகளைக் குறிப்பிடலாம். அதேபோன்று கல்வி, சுகாதார, சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத கிராமங்களையும் குறிப்பிடலாம்.

இங்கு சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ள விடயங்கள் ஆழ ஆராயப்படவேண்டியவை. அத்தகைய அறிவின் உதவியுடனேயே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் தமது திட்டங்களை வகுத்து நாட்டில் பங்காளர்களைத் தேட வேண்டும். இனங்களுக்கிடையிலான குரோதங்களை வளர்க்காது அதற்கு மாறாக புரிந்துணர்வையும் சமத்துவத்தையும் வளர்க்கும் அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். செயற்பாடுகளைச் சட்டபூர்வமான வழிகளில் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான சூழலை மத்திய அரசாங்கமும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளும் உருவாக்கவேண்டும். இங்கு அரசியலைத் தவிர்க்கமுடியாது. அரசாங்கத்துடன், மாகாண சபைகளுடன், வேறு அரசியல் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் தேவைப் படலாம் ஆனால் அரசாங்கத்தின் பங்காளராக வேண்டியதில்லை. உண்மையான பங்காளர்கள் வேறு மட்டங்களில் அரசாங்கத்திற்கு வெளியேதான் உள்ளார்கள். அங்கு அன்றாடு போராடிகொண்டிருக்கும் மக்கள் மற்றும் அவர்களின் சுயமுனைப்புகளை ஊக்குவிக்கும் அமைப்புக்கள், நாட்டில் சகல மக்களின் சமூக, அரசியல், பொருளாதார ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள், முற்போக்கு அறிவாளர்களின் அமைப்புக்கள், இனவாதங்களுக்கு எதிரான அமைப்புக்கள் போன்றவைதான் பங்காளிகளாக வேண்டும்.

[1] பார்க்க:  https://samuthran.net/2017/04/24/அபிவிருத்தி-மனித-மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா?

[2] 2015ல் மாகாண GDPன் பொருளாதாரத் துறைரீதியான பங்குகளைப் பொறுத்தவரை கிழக்கில் விவசாயம் 12.1%, ஆலைத்தொழில் (industry) 31.8%, சேவைகள் 48.5%; வடக்கில் விவசாயம் 15%, ஆலைத்தொழில் 17.2%, சேவைகள் 60.6%.

 

நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டுமா? 1989 ஜூனில் யாழ்ப்பாணத்தில் கவிஞர் சேரனுடன் இடம்பெற்ற ஒரு உரையாடல்

 சமுத்திரன்

2017 May

1989 ஆறாம் மாதம். ஒரு ஐரோப்பிய நிறுவனத்தின் அபிவிருத்தித் திட்டம் ஒன்றினை மதிப்பீடு செய்யும் ஆலோசகராக நோர்வேயிலிருந்து எனது பிறந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு செல்கிறேன். 1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) வடக்கு-கிழக்கில் இருந்த காலம். ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி (EPRLF) மாகாண சபை ஆட்சியிலிருந்த காலம். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இலங்கை வான்படை ஒரு விமான சேவையை நடத்திக் கொண்டிருந்த காலம். நான் அதைப் பயன்படுத்தி யாழ் சென்றேன். அந்த விமானப் பயணம் ஒரு மறக்கமுடியாத அனுபவம். விமானத்திலிருந்த ஆசனங்களையும் விட அதிகமான பயணிகள். மூவருக்குரிய ஆசனங்களில் நால்வர் அமர்ந்திருந்தோம். இந்த நிலையில் ஆசனப் பட்டியை யாரும் கட்டமுடியவில்லை. கட்டும் படி பணிக்கப்படவும் இல்லை. அது மட்டுமல்ல. சிலர் நின்றபடி பயணம் செய்தனர். அப்படித்தான் ஏழு வருடங்களின் பின் யாழ் சென்றேன். அங்கு நான் வாழ்ந்த ஏழு நாட்களில் எத்தனையோ அனுபவங்கள்.[i]

கந்தர்மடத்தில் எனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்தேன். பகல் பொழுது முழுவதும் பெரும்பாலும் எனது தொழில் தொடர்பான பிரயாணங்கள், நேர்காணல்கள், கலந்துரையாடல்கள். மாலையில் சந்தர்ப்பம் கிடைத்த போது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சந்திப்புகள். ஆனால் மாலை ஆறுமணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. பொதுவாக இந்தச் சந்திப்புகளை மாலை ஆறு மணிக்கு முன்னரே முடித்து விடுவேன். ஆனால் அன்று மாலை ஒரு வித்தியாசமான ஒழுங்கு. எனது நண்பர்கள் மௌனகுருவும் சித்திராவும் மாலை உணவுக்கு அழைத்திருந்தார்கள். இளம் கவிஞர் சேரனையும் அழைத்திருப்பதாகக் கூறினார்கள். அன்றிரவு அவர்கள் வீட்டில் தங்கி மறுநாள் காலை ஊரடங்குச் சட்டம் முடிந்தபின் நான் சித்தப்பாவீட்டிற்குத் திரும்பலாம் எனும் மௌனகுருவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டேன். நான் சேரனின் கவிதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன் ஆனால் நேரில் சந்தித்துப் பேசியதில்லை. அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதையிட்டு மகிழ்வுற்றேன்.

அன்று மௌனகுரு வீட்டிற்குப் போகுமுன் யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்துறை விரிவுரையாளரான நண்பர் சிறீதரனைச் சந்தித்தேன். அவர் அப்போது மனித உரிமைகளுக்கான யாழ் பலகலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர் என்னை மௌனகுரு வீடுவரை ஆறு மணிக்குமுன் கூட்டிச்சென்று விடைபெற்றார். அங்கே மௌனகுரு, சித்திரா அவர்களின் மகன் சித்தார்த்தன், சேரன் என்னை வரவேற்றனர். சித்தார்த்தன் அப்பொது யாழ் இந்துக் கல்லூரி மாணவன் என நம்புகிறேன். எனது இன்னொரு நெருங்கிய நண்பன் நுஃமானும் அப்போது யாழ் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவர் மௌனகுரு வீட்டில்தான் குடியிருந்தார். ஆனால் அன்று அவர் தனது சொந்த ஊரான கல்முனைக்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன்.

ஆரம்பத்தில் நமது சம்பாசனைகள் பல விடயங்களைத் தொட்டன. ஆயினும் மாலை உணவருந்தும் போதும் அதற்குப் பின்பும் இலங்கையின் அன்றைய அரசியல் நிலைமை, விடுதலைப் போராட்டத்தின் போக்குகள், இந்திய இராணுவத்தின் நடைமுறைகள், மற்றும் வடக்கு – கிழக்கு மாகாண சபையை ஆளும் EPRLFன் நடைமுறைகள் ஆகியவற்றைச் சுற்றியே கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. ஒரு கட்டத்திற்குப்பின் எல்லோரும் பங்குபற்றிக் கொண்டிருந்த கலந்துரையாடல் பிரதானமாக எனக்கும் சேரனுக்குமிடையிலான விவாதமாக உருமாறத் தொடங்கியது. அதேவேளை அது மிகவும் பண்புடனும் நட்புணர்வுடனும் தொடர்ந்தது.  இளம் சித்தார்த்தனும் தன் கருத்துக்களை முன்வைத்தார். முழு இரவுக்கூடாகத் தொடர்ந்த அந்த விவாதத்தில் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் அதி முக்கிய இடத்தைப் பெற்றன. விவாதம் சற்றுச் சூடுபிடித்து நமது குரல்கள் உயரும்போது சித்தார்த்தன் எழுந்து நின்று ‘கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ. அடக்கி வாசியுங்கோ.’ எனக்கூறி வெளியே இந்திய இராணுவத்தினர் அல்லது EPRLFன் படையினர் நடமாடிக் கொண்டிருக்கலாம் என்பதை நினைவூட்டிக் கொள்வார்.

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பது பற்றி நமக்கிடையே பெரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. ஆனால் விவாதம் இலங்கை நிலைமைகளில் அந்த உரிமையை அரசியல்ரீதியில் எப்படிப் பயன் படுத்துவது எத்தகைய தீர்வு நியாயமானது போன்ற கேள்விகளிலேயே நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. சேரன் பிரிந்து போகும் உரிமைக்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். நான் ஒரு நாட்டிற்குள் சமஷ்டி, பிரதேச சுயாட்சி போன்ற தீர்வுக்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தேன். சேரனின் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றை ஏற்கனவே வாசித்திருந்ததால் தேசிய இனப்பிரச்சனை பற்றிய அவருடைய பார்வையை அறிந்திருந்தேன். அவர் தமிழ் குறுந்தேசிய வாதத்தை ஏற்காதவர் என்பதையும் நான் வாசித்த அவருடைய எழுத்துகளிலிருந்து அறிந்திருந்தேன். ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஈழத்துக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புக்குச் சேரன் எழுதிய முன்னுரை பற்றி நான் நோர்வேயில் சில நண்பர்களுடன் உரையாடியுள்ளேன். அதில் அவர் ‘போராட்டத்துள் ஒரு போராட்டம்’ பற்றிக் கூறியது மற்றும் தமிழ் ஈழப் போராட்டம் தென் ஆசியாவிற்கே ஒரு விடுதலைப் பொறியை ஏற்றும் என்ற அவரின் எதிர்பார்ப்பு எல்லாம் நினைவுக்கு வந்தன.

விவாதம் தொடர்கிறது. வடக்கு – கிழக்கில் தமிழ் ஈழத்தின் சாத்தியப்பாடு பற்றி ஆராயும்போது அங்குவாழும் முஸ்லிம் மக்களின் அந்தஸ்து ஒரு பொருளாகியது. அவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. அவர்களின் ஆதரவைப் பெறமுடியும் எனச் சேரன் நம்பியிருக்கலாம். இந்த விடையம்பற்றிப் பேசும் போது நான் சேரனைப் பார்த்து ‘உங்கள் நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டும் தானா?’ எனக் கேட்டேன். நுஃமான் சேரன் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவர். அவரைச் சேரன் மாமா என அழைப்பார். சித்தார்த்தனும் நுஹ்மானை மாமா என்றே அழைப்பார். ஒரு அரசியல் மட்டத்தில் இடம்பெற்ற விவாதத்தில் என்னிடமிருந்து அத்தகைய ஒரு கேள்வியைச் சேரன் எதிர்பார்த்திருக்க மாட்டார் என நம்புகிறேன். அவரின் முகத்தில் ஒரு மாற்றம். ஒரு கண நேரம் பேச்சிழந்த நிலை. அந்த அமைதிக்குப்பின் ‘இப்படி ஒரு பெரிய ஆயுதத்தை பயன்படுத்தி விட்டீர்கள்’ என்றார். சித்தார்த்தனும் எனது கேள்வியால் அதிர்ந்துபோனதுபோல் பட்டது. காலை நாலு மணியாகிவிட்டபோதும் நமது விவாதம் முடிவு பெறாத நிலையில் கொஞ்ச நேரமாயினும் தூங்குவோம் என முடிவெடுத்தோம். இந்த உரையாடலை பதிவு செய்திருக்க வேண்டுமெனச் சித்தார்த்தன் சொன்னார். மறக்கமுடியாத அனுபவம். மறுநாட்காலை எனக்கு வேறு வேலைகளிருந்ததால் காலை உணவை முடித்துக் கொண்டு விடை பெற்றேன். அந்த சந்திப்புக்குப்பின் சேரனுடன் நல்ல தொடர்பிருந்தது. அவர் ‘இனங்களுக்கிடையே நீதி மற்றும் சமத்துவத்துக்கான இயக்கம்’ பிரசுரித்த ‘சரிநிகர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகையை ஒழுங்காக எனக்குக் கிடைக்கும்படி செய்தார்.

1990 பத்தாம் மாதம் 22ம் திகதி விடுதலைப் புலிகள் பாரம்பரியமாக வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை நிர்ப்பந்தமாக வெளியேற்றினர். தமது தாயகத்திலிருந்து அவர்கள் விரட்டப்பட்ட அந்தப் பயங்கர சம்பவத்திற்குப் பின் வான்தபாலில் வந்த ‘சரிநிகர்’ பத்திரிகையை ஆவலுடன் திறக்கிறேன். அதிலிருந்து மடிக்கப்பட்ட ஒரு சிறு கடதாசித் துண்டு கீழே விழுகிறது. அதை எடுத்து விரிக்கிறேன். சேரனிடமிருந்து இரு வரிகள். அந்தச் சிறு கடிதத்தை நான் பலதடவை வாசிக்கிறேன். ‘நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டுமா என அன்று கேட்டீர்கள். இப்போது சொல்கிறேன் அது ஒரு போதும் வேண்டாம்.’ அந்தச் செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. ஆயினும் என் கண்கள் கலங்கின.

 

[i] அந்த அனுபவங்களின் சில அம்சங்கள் பற்றி அப்போதே பின்வரும் கட்டுரையை வரைந்துள்ளேன். N. Shanmugaratnam, Seven Days in Jaffna – Life under Indian occupation, Race & Class, 31(2),1989

சபாலிங்கம் – காலந்தாழ்த்திய ஒரு அஞ்சலி

சமுத்திரன் (1999)

1994 ம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு நாள். இரவு பத்துமணிக்குப்பின் பின்னர் என நம்புகிறேன். எனது தொலைபேசி மணி ஒலித்தது. பாரிஸிருந்து ஒரு நண்பர் பேசினார், தான் சபாலிங்கம் அவர்களின் இல்லத்திலிருந்து பேசுவதாகவும், சபாலிங்கம் என்னுடன் பேச விரும்புவதாகவும் கூறினார். அன்றுதான் முதல்தடவை சபாலிங்கத்துடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரைப் பற்றி நிறைய அறிந்திருந்ததால் அறிமுகம் வேண்டியிருக்கவில்லை. என்னுடன் பேசுகையில் இலக்கியம், அரசியல், சமூகம் பற்றிய ஆக்கங்களை விமர்சனக்கட்டுரைகளை வெளியிடும் திட்டமொன்று பற்றி ஆர்வத்துடன் பேசினார். வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ்எழுத்தாளர்களின் பங்குபற்றியும் சமூகப் பொறுப்புக்கள் பற்றியும் கூறினார். என்னை எழுதும்படி கூறினார். அது ஒரு இனிமையான உரையாடலாயிற்று. அந்த மனிதனைக் காணும் சந்தர்ப்பமொன்றினை விரைவில் ஏற்படுத்த வேண்டுமென விரும்பினேன். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. அதற்கு முன்னர் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தச் செய்தி என்னை மட்டுமல்ல, எனக்குத் தெரிந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நமது சமூகத்தில் நிராயுதபாணிகள் கொல்லப்படுவது புதிய துப்பாக்கிக் கலாச்சாரத்தின் ஒரு நடைமுறை அம்சம் போலாகிவிட்டது. ஆயினும் அத்தகைய ஒவ்வொரு கொலையும் கொலைசெய்யப்பட்டவரைச் சுற்றியுள்ள வட்டத்தினருக்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது. அதுவும் ஒரு ரஜனி திராணகமவோ, சபாலிங்கமோ கொலை செய்யப்படும் போது அது அதிர்ச்சியூட்டுவதாகவே இருக்கிறது. தமிழ்சமூகத்தின் அறிவுரீதியான மேம்பாட்டிற்கும் கலாச்சாரச் செழுமையாக்கலுக்கும் உதவக் கூடிய ஒரு நீண்டகாலப் பணியின் ஆரம்பக் கட்டத்தில் இலட்சியவாத உணர்வுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார் சபாலிங்கம். சிதறடிக்கப்படும் விடுதலை விழுமியங்களினதும் மனிதத்துவத்தினதும் மீட்சிக்காக எழுந்துநின்று குரல்கொடுக்க முற்பட்டார் அவர். இவற்றிற்கான தண்டனை மரணம் போலும்.

ஈழத்தமிழர் போராட்டத்தின் முழுமையான வரலாறு என்றோ எழுதப்படத்தான் போகிறது. அங்கு தமிழ்ப்போராளிகள் தியாகங்கள் பற்றி மட்டுமல்ல இயக்கங்களுக்குள்ளே இடம்பெற்ற கொடூரங்கள், இயக்கங்களுக்கிடையே இடம்பெற்ற அழிவுப்போராட்டங்கள் பற்றியும் அத்தியாயங்கள் எழுதப்படும். இந்த வரலாற்றில் சபாலிங்கம் போன்ற தனிமனிதருக்கும் ஒரு இடம் இருக்கத்தான் போகிறது. விடுதலையின் பேரால் நசுக்கப்பட்ட விடுதலை விழுமியங்களுக்காகவும், மண்ணின் பெயரால் மறுக்கப்பட்ட மனிதநேயத்திற்காகவும், போராட்டத்தின் பெயரால் மறுக்கப்பட்ட சிந்தனைச்சுதந்திரத்திற்காகவும் ஒலித்த குரலாக சபாலிங்கம் நினைவில் நிற்பார். அவரது விமர்சனநிலைப்பாடு தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியத்தின் வழிவந்தது என்பதே வரலாற்றின் தீர்வாக இருக்கும் என நம்பலாம்.

 

தோற்றுத்தான் போவாமா..

01 மே 1999

வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்

வாழ்வாதாரத்துக்கும் அப்பால்:
வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்[1]

சமுத்திரன் (2012)

சமீபகாலங்களில் வடக்கு- கிழக்கில் நில அபகரிப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக எழுந்துள்ளது. அதற்கு எதிராக மக்களுடன் சில அரசியல் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் காண்கிறோம். போருக்குப்பின் வேறு வழிகளுக்கூடாகப் போர் தொடர்கிறது என வடக்கு கிழக்கு நிலமைகளைப் பற்றி அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். அங்கு நிலஅபகரிப்புக்கு எதிராக எழும் குரல்கள் நிலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான உற்பத்திச்சாதனம் மட்டுமல்ல அதற்கும் அப்பால் அது அவர்களின் கூட்டு அடையாளத்தின் பொருள் ரீதியான அடித்தளமாய் அத்துடன் இணைந்த சுலபமாக அளவிடமுடியாத அகரீதியான குறியீட்டு விழுமியங்களின் உறைவிடமாய் விளங்குகிறது எனும் உணர்வையும் எதிரொலிக்கின்றன. அத்துடன் நிலஅபகரிப்பு ஒரு வித மனிதபாதுகாப்புப் பிரச்சனையுமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மனித பாதுகாப்பே மக்களின் சீவனோபாயச் செயற்பாடுகளின் முன்நிபந்தனையாகிறது. இந்த நிலை பல குடும்பங்களின் வாழ்வாதார மற்றும் நீண்டகால தனிமனித விருத்திக்கு உதவும் சந்தர்ப்பங்களைக் கட்டுப்படுத்துகிறது அல்லது மறுக்கிறது. இதுவும் புலப்பெயர்வுக்கு ஒரு காரணமாகலாம்.

உற்பத்திச்சாதனம் என்ற வகையில் நிலம் குறிப்பிட்ட உடைமை உறவுகளுக்குள்ளாகிறது. நிலத்தின் உடைமை உறவுகள் பொதுவாக வர்க்க ரீதியானவை. அதேவேளை இந்த உறவுகள் பால்வேறுபாடு, சாதிவேறுபாடு மற்றும் குறிப்பிட்ட சமூகங்களின் மரபுகள், நிலவளங்களின் பயன்பாடு தொடர்பான சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய உடைமை உறவுகள் அதிகார உறவுகளே. நவீன உலகில் உற்பத்திச்சாதனமாக நிலம் துண்டாடப்பட்டோ அல்லது பெரிய அளவிலோ பண்டமயமாக்கப்படுகிறது, அதாவது குறிப்பிட்ட காணிகளின் உடைமை உரிமைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. தனியுடைமையாக்கல் நிலத்தின் பங்கீட்டில் அசமத்துவங்களை உருவாக்குகிறது.

இலங்கையில் நிலமற்றோரைச் சகல இனங்களிலும் காணலாம். யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பில் சந்ததி சந்ததியாக நிலஉரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளனர். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உலகரீதியில் நடைமுறையிலிருக்கும் நவதாராளவாதக் கொள்கையின் விளைவாக பெருமளவிலான நிலஅபகரிப்புக்களில் தனியார்துறை மற்றும் சீனா, இந்தியா, சில அரபுநாடுகள் போன்றவற்றின் அரசதுறை முதலீட்டு நிறுவனங்கள் மும்முரமாகப் பல ஆபிரிக்க ஆசிய நாடுகளில் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் வடக்கு – கிழக்கு உட்பட பல பகுதிகளில் பெருமுதலீட்டாளர்களினால் நிலஅபகரிப்புக்கள் இலங்கை அரசின் பூரண ஒத்துழைப்புடன் இடம் பெறுகின்றன.

ஆனால் மறுபுறம் குறிப்பிட்ட பிரதேசத்தை வாழிடமாகக் கொண்ட ஒரு மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சாரப் பரிணாமப் போக்குகள் அந்தப்புலத்திடம் தமக்கே உரிய விழுமியங்களைப் பதிக்கின்றன. நிலம் வெறும் சடப்பொருளல்ல. அது உற்பத்திச்சாதனமாக, வாழ்புலமாக, சூழலாகப், பன்முகரீதியான பல சமூகத் தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த வகையில் அது சமூகரீதியாக உருவாக்கப்படுகிறது. காலத்திற்கூடாக மீள்உருவாக்கப்படுகிறது, மாற்றமடைகிறது. சமூகத்தின் வர்க்க, பால், சாதி முரண்பாடுகளை பிரதிபலிக்கும் அதேவேளை அதே சமூகத்தின் இன, மத அடையாளங்களையும் நினைவுகளையும் அந்தப்புலம் உள்ளடக்குகிறது. ஒரு பிரதேசத்தின் கலாச்சார உருவாக்கத்தில் வரலாற்று ரீதியான நினைவுகளுடன் கட்டுக்கதைகளும், நம்பிக்கைகளும் பங்கு வகிக்கின்றன. கலாச்சார ரீதியான, கருத்தியல்ரீதியான வழிகளுக்கூடாகவே யதார்த்தத்தின் அசமத்துவங்களையும் ஊடறுத்துச் செல்லும் இலம்பனரீதியான (மேலிருந்து கீழாக) ஒருமைப்பாடு கட்டமைக்கப்படுகிறது. இதன் வழியே குறிப்பிட்ட குழுக்களின் புலப்பற்று மற்றும் புலம்மீதான உரிமை கொண்டாடல் போன்றவை பரிணமிக்கின்றன. ஆகவே “நிலம்” என்பது கோட்பாடு ரீதியில் ஒரு சிக்கலான விடயமாகும்.

புலப்பற்றும் உரிமை கொண்டாடலும் சிறுகுழுவைக் கொண்ட உள்ளூர் மட்டத்திலிருந்து தொடர்ச்சியான ஒரு பரந்த பிரதேசம் வரை சில பொதுத்தன்மைகளின் அடிப்படையில் பரவலாம். இந்த பொதுத்தன்மைகள் மொழி, மதம், சாதி, பொதுநலன்கள் சார்ந்தவையாக இருக்கலாம். மறுபுறம் மொழி மத வேறுபாடு இருப்பினும் பொதுநலன்கள் காரணமான சமூகப்பொருளாதார உறவுகளுக்கூடாகப் பரஸ்பரப் புரிந்துணர்வு, அங்கீகாரம், மரியாதை போன்ற விழுமியங்களின் அடிப்படையில் ஒரு பல்லினக்குழுவும் கூட்டாக ஒரு பொதுப்புலத்தை உண்டாக்கும் சாத்தியப்பாடுகள் உண்டென்பதை மறுக்க முடியாது. இத்தகைய குழுக்கள் காலப்போக்கில் தமது பன்முகத்தன்மைகளைப் பிரதிபலிக்கும் பொதுக் கலாச்சார செயற்பாடுகளில் ஈடுபடுவதும் சாத்தியமே. அங்கு கலப்புத்திருமணங்கள் இடம் பெறுவது மட்டுமல்ல கலப்பு மொழிவழக்குகள் தோன்றுவதும் இயற்கையே. இவையெல்லாம் புலத்தோற்றத்தின் மாற்றப்போக்கின் உள்ளீடுகளாகின்றன.

இன்னொருபுறம் பல்லின குழுக்கள் வாழும் பிரதேசத்தில் அரசியல் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவிற்குச் சாதகமாகவும் மற்றவற்றிற்குப் பாதகமாகவும் இருக்குமேயானால் அந்தபுலத்தின் அதிகார உறவுகளில் இனத்துவமும் இணைந்து விடுகிறது. இது குழுக்களுக்கிடையிலான அதிகார அசமத்துவத்தை ஆழமாக்கி முரண்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் இனத்துவ, மதத்துவ அடையாளங்கள் பலமடைந்து போட்டியிடும் நிலை உருவாகிறது, ஒரு குழுவின் இனரீதியான அடையாளம் அது பிறிதொரு இனக்குழுவினை நேருக்கு நேர் சந்திக்கும் போதே உருவாக்கம் பெறுகிறது அல்லது ஆழமடைகிறது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

வாழ்புலங்களின் அரசியல் பொருளாதாரத்தையும் புவியியலையும் குறிப்பிட்ட உள்ளூர் மட்டத்தில் மட்டுமே வைத்துப் பூரணமாகப் புரிந்து கொள்ள முடியாது. எந்தவொரு புலமும் ஆட்சிப்பரப்பின் அங்கமாக இருக்கும் அதேவேளை நவீன காலத்தின் உலகமயமாக்கலை உந்தித் தள்ளும் சக்திகளின் செல்வாக்குக்கு உட்படுகிறது. மூலதனம் லாபம் தரக்கூடிய நிலவளங்களைத் தேடி நகர்ந்த வண்ணம் இருக்கிறது. நிலம் மற்றும் இயற்கை வளங்களின் உடைமைகள் கைமாறுவது ஒரு பொதுப்போக்கு. இது நிலத்தோற்றத்தையும் மற்றைய புவியியல் அம்சங்களையும் மாற்றுகிறது. உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார காரணிகளால் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் குழுக்களுக்கும் அவர்கள் விட்டுச் சென்ற உறவினர்களுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கருத்துரீதியான தொடர்புகள் உள்ளூரின் அதிகார உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.இம்மாற்றங்கள் சொத்துடைமை உறவுகளிலும் நிலவளங்களின் உபயோகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்றைய உலகமயமாக்கல் யுகத்தில் இத்தகைய உள்ளூர் வெளிநாட்டுத் தொடர்புகள் முன்பை விட மேலும் வலுவடைகின்றன. ஆகவே புலத்தின் உருவாக்கமும் மீள் உருவாக்கமும் பல மட்டங்களில் இயங்கும் அதிகார மற்றும் சமூகஉறவுகளின் தொடர்பாடலின் தாக்கங்களின் பதிவுகளைக் கொண்டுள்ளன. இங்கு அரசின் சார்பாக மேலாட்சி செலுத்தும் கருத்தியலுக்கும் அதை எதிர்த்து நிற்கும் கருத்தியல்களுக்குமிடையிலான முரண்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலே குறிப்பிட்ட பொதுப்படையான கோட்பாட்டு ரீதியான கருத்துக்கள் இலங்கையின் வடக்கு- கிழக்குக்குப் பொருத்தமாயிருக்கும் அதேவேளை நிலத்திற்கும் தேசிய இனப்பிரச்சனைக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவை நோக்கும் போது இப்பிரதேசத்தின் நிலப்பிரச்சனையில் சில பரிமாணங்கள் விசேட முக்கியத்துவம் பெறுகின்றன. “நிலம் – தேசிய இனப்பிரச்சனை”  யின் சிக்கலான உறவின் அரசியல் பொருளாதாரமும் அதை உள்ளடக்கும் அரசியல் புவியியலும் பிரதான முக்கியத்துவம் உடையன எனக் கருதுகிறேன்.

இலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும் பின்னிப்பிணைந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே. இந்தப்பிணைப்பு அரசினால் தொடர்ச்சியாகப் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இனரீதியான குடியேற்றத்திட்டங்களுடன் தொடர்புடையது என்பதும் பொது அறிவு ஆயினும் இந்த திட்டங்களின் செயல்முறைப் போக்குப் பற்றியும் இவற்றின் விளைவாக கிழக்கிலும் வடக்கிலும் ஏற்பட்டுள்ள இனப்புவியியல் ரீதியான சமூக மாற்றங்கள் மற்றும் தமிழ், முஸ்ஸீம், சிங்கள இனங்களுக்கிடையிலான உறவுகள் பற்றியும் வேறுபட்ட ஒன்றுக்கொன்று முரண்படும் எடுத்துரைப்புக்கள் நிலவுகின்றன. இவை எல்லாவற்றையும் அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதற்குப் பதிலாக நிலம்- தேசிய இனப்பிரச்சனை உறவு பற்றிய ஒரு விமர்சனப் பார்வையை முன்வைக்க விரும்புகிறேன்.

இலங்கையின் முழுநிலமும் 6.56 மில்லியன் ஹெக்டயர்கள் (Ha )ஆகும். இதில் 5.38 மில்லியன் ஹெ (அதாவது 82 சதவீதம் ) அரசுடைமை நிலங்களாகும். இந்த அரச நிலத்தின் 37 வீதம் பலவிதமான மட்டுப்படுத்தப்பட்ட உரிமை ஆவணங்களுக்கூடாக சிறு விவசாயிகளுக்கு கிராமவிஸ்தரிப்பு மற்றும் குடியேற்றத்திட்டங்களில் பங்கிடப்பட்டுள்ளது. மிகுதி அரசகாணிகள் காடுகளாகவும் இயற்கைக்காப்பு வனங்களாகவும், புனிதபிரதேசங்களாகவும், உள்நாட்டு நீர்நிலைகளாகவும் உள்ளன. முழுநிலத்தின் 17 வீதம் தனியார் உடைமையாகக் காணப்படுகிறது.

ஒரு முக்கியமான தகவலை நினைவில் கொள்வது அவசியம். அதாவது இலங்கையின் பெரும்பகுதிநிலம் அரசுடைமையாக இருப்பது மட்டுமின்றி அதன் மீதான அதிகாரம் முழுதாக மத்திய அரசிடம் மையப்படுத்தப்பட்டுள்ளது. 1987ல் இலங்கையின் யாப்பில் ஏற்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்திற்குப் பின்பும் இன்றுவரை மத்திய அரசே அரசிற்குச் சொந்தமான சகல காணிகள் மீதும் பூரணமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. பதின்மூன்றாம் திருத்தம் சொல்லும் அரசகாணிகள் பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப்பகிர்வு கூட இதுவரை (கால் நூற்றாண்டு ) மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை. இதுவரை குடியேற்றம் இடம்பெறாத அரசகாணிகள் பெரும்பாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே இருக்கின்றன. சமீபகாலங்களில் வடக்குகிழக்கில் இடம் பெறும் நிலஅபகரிப்புப் பெருமளவில் தனியாரின் சொத்துக்களான காணிகளையும் அரசினால் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளையும் பாதித்துள்ளது. அதேவேளை எஞ்சியிருக்கும் அரசகாணிகளின் எதிர்காலப் பயன்பாடுகள் பற்றிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசு விட்டுக் கொடுக்கும் அறிகுறிகள் இல்லை.கிழக்குக் கரையோரங்களில் உல்லாசத்துறை விருத்திக்கென நிலங்கள் ஒதுக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மட்டக்களப்பில் பாசிக்குடாவில் மாத்திரம் 14 புதிய உல்லாசவிடுதிகள் உருவாகின்றன. அதே போன்று திருகோணமலையின் உப்புவெளியிலும், அம்பாறையின் அறுகம்குடாவிலும் பல உல்லாசவிடுதிகள் உருவாகின்றன. இந்த திட்டங்கள் தொடர்பாக உள்ளூர் மக்களுக்குப் போதியளவு தகவல்கள் கிடைக்கவில்லை. இவை பற்றிய முடிவுகளில் அவர்களின் பங்குபற்றல்கள் இடம்பெறவுமில்லை. இராணுவ ஆட்சிக்கு கீழேயே இந்த “அபிவிருத்தி” த்திட்டங்கள் இடம் பெறுகின்றன.

இன்றைய நிலைமையைப் புரிந்துகொள்ளப் பின்னோக்கிப் பார்த்தல் அவசியம். சிங்கள பெருந்தேசிய இனமேலாதிக்க அரசஉருவாக்கத்தில் நிலத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதை எதிர்த்த தமிழ்தேசியவாதத்தின் போக்குப்பற்றியும் விமர்சனரீதியில் பார்த்தல் அவசியம். வடக்கு கிழக்கில் அரசகாணிகள் அரசின் இனத்துவ மேலாதிக்கப் புலமயமாக்கலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இது வடகிழக்குத்தமிழர் தாயகம் எனும் கோரிக்கையைப் பலப்படுத்த தூண்டியது. அந்தக் கோரிக்கைக்குப் பதிலடியாக அடுத்தடுத்த வந்த அரசாங்கங்கள் குடியேற்றத்திட்டங்களின் அமுலாக்கலைத் துரிதப்படுத்தின. இது தமிழர் தாயகக்கோரிக்கையின் அடித்தளமான  “அடையாளம்- பிரதேசம்”  எனும் இணைப்பை உடைப்பதற்கு மிகவும் ஏற்ற கருவியாக அரசின் கையிலிருந்தது. தாயகக்கோரிக்கை அரசின் காணிக்கொள்கைக்கு எதிர்விளைவென்றால், அந்த எதிர்விளைவின் எதிர்விளைவுகள் மேலும் மோசமாயின. இது ஒரு சுருள்வட்டம் போல் அதேவேளை அமைப்புரீதியில் அதிகாரரீதியில் அசமத்துவமான போட்டியாகத் தொடர்ந்தது. மறுபுறம் இரண்டு இனத்துவ தேசியவாதங்களுக்குமிடையே ஒப்பிடக்கூடிய அல்லது ஒத்த தன்மைகளும் இருந்தன.

 இனத்துவ மேலாதிக்க அரச உருவாக்கமும் நிலப்பிரச்சனையும்

வடக்கு கிழக்கில் நிலம் தேசியஇனப்பிரச்சனையுடன் பின்னிப்பிணைந்த கதை இலங்கையின் காலனித்துவத்துக்குப் பின்னான அரசஉருவாக்கத்தின் கதையுடனும் அதற்கு அப்பிரதேசத்து தமிழ்பேசும் மக்கள் மத்தியிலிருந்து எழுந்து வந்த எதிர்ப்புக்களின் கதையுடனும் தொடர்புடையது என்றால் மிகையாகாது. அரசியல் மட்டத்தில் இது இரண்டு இனத்துவ தேசியவாதங்களின் நீண்ட அசமத்துவம் மிக்க போட்டியின் கதை என்பதும் உண்மை. இலங்கையின் தேசியஇனப்பிரச்சனையின் நவீனகால பரிணாமத்தின் ஆரம்பங்களை காலனித்துவ ஆட்சிக்காலத்திலேயே தேட வேண்டும். இது பற்றி ஆழமாகப் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

1948ல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் கிடைத்தபோது காலனித்துவம் விட்டுச் சென்ற ஒரு அரசுக்கு இந்த நாட்டவர் வாரிசுகளானார்கள். இலங்கைக்கு ஒரு அரசு இருந்தது. அது சர்வதேச மட்டத்தில் இலங்கைஅரசு என அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் எனது அபிப்பிராயத்தில் மிக முக்கியமான விடயம் என்னவெனில்  “இலங்கைஅரசு”  என ஒன்று இருந்த போதும்  “இலங்கையர்” எனும் தேசியம் இருக்கவில்லை.இந்தத் தீவு கொண்டிருந்த பல்லின, பல்மத சமூகங்களை ஒன்றிணைக்கவல்ல  “இலங்கையர்”  எனும் கூட்டு அடையாளம் ஒன்றினைக் கற்பிதம் செய்து உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் அந்தத் தேவை இருப்பது பற்றியோ அதை எப்படி அடைவது என்பது பற்றியோ விவாதங்கள் பரந்த அளவில் எழவில்லை. அதற்கும் மாறாக நடைபெற்றது என்னவென்றால் பிரித்தானியா விட்டுச் சென்ற குறைபாடுகளைக் கொண்ட தாராள ஜனநாயகக்காலனித்துவ ஒற்றைஆட்சி அரசினைப் படிப்படியாக ஒரு சிங்கள பெளத்த அரசாக மாற்றும் திட்டமேயாகும். ஒரு பல்லின நாட்டின் அரசஉருவாக்கம் ஓரின அதாவது சிங்களதேசியத்தின் உருவாக்கத்துடன் இணைந்தது.1956ல் ஏற்பட்ட  “பண்டாரநாயக்க புரட்சி” இந்த மாற்றப்போக்கின் முக்கியமான திருப்புமுனை எனக் கருதப்படுகிறது. இது உண்மைதான். 1956லிருந்தே அரசின் இனத்துவமயமாக்கல் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்கு முன்பே இலங்கையின் அரசியல் சமூகத்தின் சிங்கள- தமிழ்- முஸ்லீம் என இனரீதியான வகுப்புவாதமயமாக்கல் ஆரம்பித்து விட்டதெனலாம். ஆயினும் வரப்போகும் சிங்களப் பேரினவாதத்தின் தன்மையை அறிவிப்பது போல் அமைந்திருந்தது சுதந்திர இலங்கையின் உதயத்தோடு வந்த பிரசாஉரிமைச்சட்டம். இதன் விளைவாக மலையகத்தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள்.

காலனித்துவத்துக்குப்பின்னான இனத்துவ மேலாதிக்க அரசின் உருவாக்கம் யாப்பு ரீதியாக சட்டபூர்வமாக  “ஜனநாயக ரீதியாக”  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளின் ஆதரவுடன் நடைபெற்றது. சுதந்திரத்துக்கு முன்னர் 1931ல் காலனித்துவ பிரித்தானியா வழங்கியிருந்த சர்வஜனவாக்குரிமையின் சர்வஜனத்தன்மையை இன ரீதியில் குறைக்கும் ஒரு சட்டத்தின் அமுலாக்கலுடன் சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாறு ஆரம்பிக்கிறது. இந்த சட்டத்தையும் 1956ல் வந்த சிங்களமொழியை மட்டும் அரச கரும மொழியாக்கும் சட்டத்தையும் தீவிரமாக எதிர்த்த கட்சிகளில் இலங்கையின் இடதுசாரிக்கட்சிகளான சமசமாஜக்கட்சியும் கம்யூனிஸ்ட்கட்சியும் முக்கிய பங்கினை வகித்தன. ஆனால்  “1956” இலங்கையில் வர்க்க அரசியலினதும் இடதுசாரி இயக்கத்தினதும் வீழ்ச்சியின் ஆரம்பத்தின் அறிவிப்பாகியது. இலங்கை அரசாங்கங்களால் கிழக்கிலும், வடக்கிலும் முன்னெடுக்கப்பட்ட அரச உதவியுடனான குடியேற்றத்திட்டங்கள் இனத்துவ மேலாதிக்கஅரச நிர்மாணத்திற்கு உதவும் செயற்பாடாக இருந்த அதேவேளை அது குறிப்பான சில வர்க்க நலன்களையும் சார்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியம்.அரச உதவியுடனான குடியேற்றத் திட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.இவை காலனித்துவ ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டன.கிராமப்புறங்களில் வளர்ந்துவரும் நிலமின்மையும் வறுமையும் நீண்டகாலத்தில் அரசியல் ரீதியான பிரச்சனையாக உருவெடுக்கலாம் என்பதால் மரபு ரீதியான சிறுபண்ணை விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை 1929ல் காலனித்துவ அரசாங்கம் வெளியிட்டது. இதைச் செயற்படுத்த அப்போதிருந்த நிலச்சொத்து உரிமைகளைப் பாதிக்காத (அதாவது பெருமளவிலான நிலச் சொத்துக்களைக் கொண்ட வர்க்கத்தினரைப் பாதிக்காத) ஒரு வழியைத் தேடினர் ஆட்சியாளர். நிலமற்றோரை இலங்கையின் உலர்ந்த பிரதேசத்திலிருக்கும் அரசநிலத்தில் குடியேற்றும் கொள்கை இதற்கூடாகப் பிறந்தது.இந்தக் கொள்கைக்கு இறுதி வடிவத்தைக் கொடுத்தவர் 1930ல் அரசசபையில் விவசாய மந்திரியாக இருந்த டி.எஸ் .சேனநாயக்க ஆகும். இவரே சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரானார். இவர் தலைமை தாங்கிய ஐக்கியதேசிய கட்சி (UNP) தரகு முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாக்கும் கட்சியாகவே இருந்தது. அதேவேளை டி.எஸ் .சேனநாயக்க தன்னை ஒரு தேசியவாதியாகவும் கருதினார் காட்டிக்கொண்டார். 1935ல் விவசாயமும் தேசபக்தியும் (Agriculture and patriotism) எனும் நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலை நான் 1970 களில் வாசித்தேன். அதில் மரபு ரீதியான சிறிய பண்ணை விவசாயத்திற்கு நவீன முறையில் புத்துயிரளிப்பது பற்றிக் குறிப்பிட்டார். அவரே 1938ல் அரச உதவியுடனான குடியேற்றத்திட்டம் எனும் மசோதாவை அரசசபையில் சமர்ப்பித்தார். அதேசபையில் அங்கத்தவர்களாக இருந்த இடதுசாரிகளான கலாநிதி என்.எம் பெரேராவும், பிலிப் குணவர்த்தனாவும் அந்த மசோதாவை எதிர்த்து வாதாடினர். அவர்களின் கருத்துக்களுக்கு டி.எஸ் சேனநாயக்கவின் மகனும் அரசசபை அங்கத்துவருமான டட்லி சேனநாயக்க கொடுத்த பதில் அந்த மசோதாவின் பின்னிருந்த வர்க்க நலனை வெளிக்காட்டியது. இந்த நாட்டில் வறுமையும் தொழில்வாய்ப்பின்மையும் நிலவுவது  “வர்க்க வெறுப்புணர்வு” வளர்வதற்குச் சாதகமான நிலையை உருவாக்கும். அத்தகைய நிலை உருவாகாது தடுப்பதை றுவான் வெல அங்கத்தவர் (என்.எம். பெரேரா ) விரும்ப மாட்டார் என்பதில் சந்தேகமில்லை எனக் கூறினார் டட்லி (இந்த விவாதத்தில் இடம் பெற்ற உரைகளின் அறிக்கையை ஒரு ஆய்வுக்காக நான் 1980ல் வாசித்தேன் ). அப்போது குடியேற்றத்திட்டங்களுக்கும் இனப்பிரச்சனைக்கும் உள்ள உறவு அங்கு ஒரு விவாதப்பொருளாகவில்லை.

ஆயினும் குடியேற்றத்திட்டங்கள் கிழக்கில் – வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலிருந்தே அங்கிருந்து தமிழ், முஸ்லீம் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களும் எதிர்ப்பும் பிறக்கத் தொடங்கியிருந்தன. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே டி.எஸ் சேனநாயக்கவின் குடியேற்றக் கொள்கைக்கு வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் 1949ல் பிரதமர் சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.(கல்லோயா தமிழில் பட்டிப்பளை ஆறு) இத்திட்டத்தின் நீர்தேக்கத்திற்கு  “சேனநாயக்க சமுத்திரம்”  எனப் பெயர் சூட்டப்பட்டமை வரலாற்றுப் புகழ்மிக்க பராக்கிரமபாகு மன்னரின் பெயரில் பொலனறுவையில் உள்ள அழகுமிக்க பாரக்கிரம சமுத்திரத்தை நினைவூட்டுவது போல அமைந்தது. கல்லோயாத்திட்டம் பற்றியும் அதன் அபிவிருத்திரீதியான இனத்துவரீதியான விளைவுகள் பற்றியும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சில உதாரணங்களாக பின்வருவோரின் ஆய்வுகளைக் குறிப்பிடலாம். B.H. Farmer (1957); M. Moore (1985); P. Peeble (1990); Manogaran (1994). கல்லோயாத்திட்டம் போன்ற ஒன்றின் சாத்தியப்பாடு பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னரே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காரியப்பர் என்பவர் கருத்து வெளியிட்டுள்ளார். இது பற்றியும் கல்லோயாத்திட்டத்தின் இனரீதியான தாக்கங்கள் பற்றியும் எஸ்.எச். எம் ஜெமில் 2008 முதலாம் மாதத்தில் நவமணி பத்திரிகையில் பல தகவல்களைத் தருகிறார்.

விவசாயத்தையும் தேசபக்தியையும் இணைத்த டி.எஸ்.சேனநாயக்க அரச உதவியுடன் உலர்ந்த பிரதேசத்தில் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதற்கு சிங்கள இனத்துவ தேசியவாத கருத்தியல் சார்ந்த நியாயப்பாட்டினையும் விளக்கத்தையும் கொடுத்தார். நாட்டின் வடமத்திய, வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள உலர்ந்த பிரதேசமே புராதன சிங்கள நாகரீகத்தின் தொட்டில் என்றும் அங்கே சிங்கள அரசர்கள் கட்டியெழுப்பிய அந்த நாகரீகம் நீர்ப்பாசனப் பொறியியல் நாகரீகம் என்றும் இந்தச் சிறப்பான சிங்கள பெளத்தநாகரீகம் தென் இந்தியாவிலிருந்து வந்த படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டதென்றும் அந்தத் தாயகத்தில் மீண்டும் நீர்ப்பாசன திட்டங்களை அமைத்து இழந்த நாகரீகத்தையும் அடையாளத்தையும் மீட்டெடுப்பது வரலாற்றுத் தேவையென்றும் சொல்லும் கருத்தியலே குடியேற்றத்திட்டங்களுக்கு அரசியல் ரீதியான முக்கியத்துவத்தைக் கொடுத்தது. டி.எஸ்.சேனநாயக்கவின்  “நீண்டகால நோக்குப்” பற்றியும் குடியேற்றத்திட்டங்களின் இனத்துவ மேலாதிக்க அரசியல் நோக்கம் பற்றியும் பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளார்கள். உலர்வலையக் குடியேற்றத்திட்டங்களை ” மீளக் கைப்பற்றலின் புராணக்கதை” ( Myth of Reconquest) என சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். (உதாரணமாக Donald E. Smith 1979; Mick Moore 1985). அதாவது இழந்த ஒரு ஆள்புலத்தினை மீட்பது போன்ற ஒரு மாயை அதேவேளை இது ஒரு நவீன தேசியத்தின் உருவாக்கலின் யதார்த்தமாகிறது.

1987ல் கலாநிதி செறீனா தென்னக்கூன் அவர்கள் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தில் இடம் பெறும் ”அபிவிருத்திச்சடங்குகள் ” பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரையை அமெரிக்க சஞ்சிகையொன்றில் வெளியிட்டார். இதில் அவர் மகாவலித்திட்டத்தின் அபிவிருத்திக் கதையாடலைக் கட்டுடைக்கிறார். திட்டத்தின் அங்குரார்ப்பணத்தின் சடங்குகள் சிங்கள பெளத்த மரபுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதையும் நவீனமயமாக்கல் திட்டம் ஒன்றில் இந்த கலாச்சார ரீதியான சடங்குகளின் இனத்துவ அரசியல் பணியையும் விளக்கி விமர்சிக்கிறார். இவையெல்லாம் உலர்ந்த பிரதேசத்தின்  “மீள்கைப்பற்றலைக்” குறிக்கின்றன.

மகாவலித்திட்டம் பற்றியும் வடக்கு கிழக்கு குடியேற்றத்திட்டங்களின் அரசியல் நோக்கம் பற்றியும் விடயங்களை அறிய விரும்புவோருக்கு 1988ல் மாலிங்க எச். குணரத்ன எழுதிய  For a Sovereign State (ஒரு இறைமையுடைய அரசுக்காக ) என்ற நூலைச் சிபாரிசு செய்கிறேன். குணரத்ன உணர்ச்சியும் உத்வேகமும் கொண்ட ஒரு தேசியவாதி. மகாவலித்திட்டத்தின் குடியேற்றங்களின் திட்டமிடலில், அமுலாக்கலில், இராணுவமயமாக்கலில் தீவிரமான பங்கினை வகித்தவர். தமிழ்ஈழவாதிகளின் தனி நாட்டுத்திட்டத்தை உடைத்துத் தேசத்தின் இறைமையைக் கட்டிக்காக்க வடக்கு கிழக்கின் அரச நிலங்களில் குடியேற்றங்களை அமைப்பதை விட வேறு வழியில்லை என வெளிப்படையாகவும் எழுதியுள்ளார் குணரத்ன. இதற்கூடாக இந்தப் பிரதேசங்களைப் பல்லினமயமாக்கித் தமிழரின் சனத்தொகைச் செறிவைக் குறைத்து அவர்களின் அரசியல் பலத்தை குறைந்த பட்சமாக்க முடியும் எனும் செயற்கையான திட்டத்திற்கு சார்பான வாதமே இது.

இன்று வடகிழக்கில் இராணுவத்தின் ஆதிக்கத்தின் கீழ் பெளத்த கோவில்கள் கட்டப்படுவது,”சிங்கள பெளத்த” வரலாற்று ஆதாரங்களைத் தேடும் “அகழ்வாராய்ச்சி”, புனித பெளத்த பிரதேசப்பிரகடனங்கள் எல்லாம் “மீளக்கைப்பற்றலைப்” புதிய உத்வேகத்துடன் வலியப்படுத்தியிருப்பதன் வெளிப்பாடுகள் போல் படுகின்றன. இவையெல்லாம் புத்தபிரானின் பெயரால் செய்யப்படுவதுதான் பெருந்துன்பியல்.

சுருங்கக்கூறின் வடக்கு கிழக்கின் குடியேற்றத்திட்டங்கள் நிலமற்ற விவசாயிகளை அரசசெலவில் அரசகாணிகளில் குடியேற்றும் திட்டமானது இனமேலாதிக்க அரசின் ஆள் புலத்தின் இனத்துவமயமாக்கல் கொள்கையின் அமுலாக்கலுக்கு உதவுகிறது. நிலமற்ற விவசாயிகளுக்கு நாட்டின் எந்தப்பகுதியிலும் அரச நிலத்தை வழங்குவது நிலமின்மைக்கு ஒரு தற்காலிகத் தீர்வாகலாம். அந்த வகையில் அது நியாயமானதாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் குடியேற்றத்திட்டங்கள் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இனச்செறிவை மாற்றும் நோக்குடன் பெரும்பான்மை இனத்துவ மேலாதிக்கத்தை உறுதியாக்கும் கருவியாகப் பயன்படுத்தபடுவதே பிரச்சனைக்குரியதாகும்.

ஒவ்வொரு அரசாங்கமும் குடியேற்றத்திட்டங்களை தமது கட்சி அரசியல் நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அதேவேளை குடியேற்றக் கொள்கையின் தொடர்ச்சியான அமுலாக்கல் செயற்திறன் மிக்க நிர்வாக இயந்திரத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. குடியேற்றக்கொள்கையின் அரசியல், கருத்தியல் மற்றும் கலாச்சார நோக்கங்களெல்லாம் இந்த நிர்வாக யந்திரத்தினால் உள்வாங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அரசாங்கம் வடக்கு- கிழக்கின் பிரதேசங்களில் புவியியல் ரீதியான மாற்றங்களையோ பெயர் மாற்றங்களையோ அல்லது நிர்வாக ரீதியான மாற்றங்களையோ ஏற்படுத்த முனையும் போது அதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கும் உரிய தகவல்களையும் ஆற்றல்களையும் இந்த நிர்வாக இயந்திரம் கொண்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த பின்னர் இந்த இயந்திரத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. இவை இரண்டும் ஒத்துழைப்பது அவசியமாயிற்று. ஏற்கனவே குறிப்பிட்டது போல் அரசின் நோக்கம் தமிழ்தேசியவாதத்தின் தாயக கோரிக்கையின் அடிப்படையான “அடையாளம்- பிரதேசம் ” எனும் இணைப்பை உடைப்பதே. இந்த வகையில் மணல்ஆறு வெலிஒயாவாக மாறியது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. வட-கிழக்கு இணைப்பின் இனரீதியான, பிரதேசரீதியான தொடர்ச்சியை மீட்க முடியாதவாறு உடைப்பதில் இந்த நிகழ்ச்சி அரசியல், புவியியல் மற்றும் குறியீட்டுக்காரணங்களால் விசேட முக்கியத்துவம் பெறுகிறது.

ஆள்புலத்தின் இனத்துவமயமாக்கல் என்பது மனித குடியேற்றத்தினதும் நிலப்பாவனையினதும் அரசியல்ரீதியான பொறியியல் (Political engineering ) என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. இந்தப் போக்கானது இனத்துவ மேலாத்திக்க ஆட்சியின் உருவாக்கத்தின் ஒரு முக்கிய கருவி என்பதை இஸ்ரேலிய ஆய்வாளரான Oren Yiftachel (2006) இனத்துவ மேலாதிக்க ஆட்சி (Ethnocracy ) பற்றிய தனது நூலில் குறிப்பிடுகிறார். இஸ்ரேலியஅரசு பாலஸ்தீன பிரதேசங்களை யூத மயப்படுத்தி வரும் கொள்கைகள் நடைமுறைகள் பற்றிய அவரது ஆய்வில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் (West Bank) 1976 ல் 3.7 வீதமாக மட்டுமே இருந்த யூதர்கள் 2002 ல் 23.3 வீதமாகப் பெருகிய கதையை விளக்குவதற்கு Ethnocracy எனும் கோட்பாட்டைப் பயன்படுத்துகிறார். Oren Yiftachel யூத இனத்தைச் சார்ந்த முற்போக்கு ஆய்வாளர் என்பதைக் குறிப்பிட வேண்டும். அவருடைய கருத்தில் இஸ்ரேலுடன் ஒப்பிடும் போது வரலாற்றுரீதியில் பலவிதமான வேறுபாடுகள் இருப்பினும் இலங்கை, மலேசியா, எஸ்டோனியா, லத்வியா, சேர்பியா போன்ற நாடுகளும் 19ம் நூற்றாண்டின் அவுஸ்திரேலியாவும் இனத்துவ மேலாத்திக்க ஆட்சிகளைக் கொண்ட நாடுகளாகும்.

இங்கு குறிப்பிட்ட பல்லின நாடுகளில் குறிப்பிட்ட ஒரு இனத்தின் அந்தஸ்தை இன ரீதியில் மற்றைய இனங்களுக்கு மேலாக உயர்த்தி நிறுவனமயமாக்கல் அந்தந்த நாட்டின் சட்டங்களின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளில் தோற்றப்பாட்டில் நவீன முதலாளித்துவ ஜனநாயகப் பொறிமுறைகள் இயங்குவதைக் காணலாம். ஏன் சம்பிரதாயபூர்வமாக மனித உரிமைகளுக்குப் பொறுப்பான நிறுவனங்களைக்கூடக் காணலாம். பத்திரிகைச்சுதந்திரம், பல்அரசியல் கட்சிகளைக் கொண்ட பாராளுமன்றம் போன்றன இருக்கலாம். ஆனால் அதேவேளை பாராளுமன்றத்துக்கூடாக மேலாதிக்கஆட்சி நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிச் சொல்வது வர்க்கஉறவுகள், வர்க்கநலன்கள் முக்கியமற்றுப் போய்விட்டன என்பதாகாது. யதார்த்தத்தில் வர்க்க உறவுகள் இனத்துவமயமாக்கலின் ஆதிக்கத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை. இனத்துவமயமாக்கலை உயர் வர்க்கங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன.

ஒரு இனத்தின் நடுத்தர சமூக மட்டங்களை உள்ளடக்கும் குட்டிபூர்ஷ்வா கூட்டத்தின் ஆதரவைப் பெற இனத்துவமயமாக்கல் ஒரு குறுக்கு வழியாகிறது. சமூக பொருளாதார அசமத்துவங்களுக்கான காரணிகளை இனத்துவமயப்படுத்துவது அந்த இனத்தின் உயர்வர்க்கத்தின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் அதேவேளை அதை இனவாதக் கருத்தியலில் தங்கி நிற்க வைக்கிறது. அரசியலின் இனத்துவமயமாக்கல் ஒரு தொற்று நோய் போல் ஒரு இனத்திடம் இருந்து அதேநாட்டில் வாழும் மற்ற இனங்களையும் பீடிக்கிறது. இந்த வியாதி எந்த இனத்தில் ஆரம்பித்தது என்பது முக்கியமாயிருக்கலாம். ஆனால் அதையும் விட முக்கியமானது அரசஅதிகாரம் எந்த இனத்தைச் சார்ந்தோரிடம் என்பதேயாகும். இத்தகைய சமூகங்களில் இனத்துவத்தின் மேலாட்சித்தன்மைகளை ஒதுக்கி வர்க்க உறவுகளை மட்டும் வைத்து யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாது – குறிப்பாக அரசியல் அதிகாரத்தின் தன்மைகளை, அரச மற்றும் தனியார் முதலீடுகளின் போக்குகளை விளங்கிக் கொள்ள முடியாது.

1990களில் நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளில் இலங்கை அரசின் இனத்துவ மயமாக்கல் (ethnicisation, communalisation) மதச்சார்பின்மையை அழித்தல் (Desecularisation) போன்ற கோட்பாடுகளைப் பயன்படுத்தினேன், Yiftachel இன் சமீபத்திய ஆய்வுகளைப் பார்த்த பின் அவர் பயன்படுத்தும் Ethnocracy எனும் கோட்பாடு எனது கருத்துக்களுக்கும் ஏற்புடையதெனக் கருதுகிறேன். அத்துடன் அந்தக் கோட்பாடு இலங்கை அரசு போன்ற அரசுகளின் உருவாக்கத்தை ஆய்ந்தறியவும் பயன்பட வல்லது.

தமிழ்தேசியவாதமும் தாயகக்கோரிக்கையும்

தமிழர்களும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம்களும் செறிந்து வாழும் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மை இனத்துவ மேலாதிக்கப்புலமயமாக்கலை நோக்காகக் கொண்ட குடியேற்றத்திட்டங்கள் இடம்பெறுவதை அப்பிரதேச மக்கள் எதிர்ப்பது நியாயமானதே. ஆரம்பத்தில் இந்த எதிர்ப்பு தமிழ், முஸ்லீம் மக்களின் அடையாளங்கள் அவர்களின் அரசியல்ரீதியான பிரதிநிதித்துவம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. தெற்கிலே நிலமற்ற விவசாயிகள் தொகை அதிகரித்த வண்ணமாக இருந்ததும் அங்குள்ள நிலமற்றோர் அரச உதவியுடன் உலர்ந்த பிரதேசத்தில் குடியேற பெருமளவில் முன்வரக் காரணமாயிருந்தது. இது ஆளும் கட்சியினால் அரசியல் மயப்படுத்தப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் குடியேற்றத்தின் பின்னால் இருந்த அரசியல் கருத்தியல் குடியேறும் சிங்கள மக்களுக்கும் உள்ளூர் தமிழ் முஸ்லீம் மக்களுக்குமிடையே நல்லுறவை வளர்ப்பதற்கு உதவவில்லை. அத்துடன் கல்லோயா போன்ற குடியேற்றத்திட்டங்களில் தமிழ் முஸ்லீம் விவசாயிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களும் நிரப்பப்படவில்லை எனும் விமர்சனங்களும் எழுந்தன. இதற்குக் காரணம் தமிழரும் முஸ்லீம்களும் எதிர்பார்த்த அளவுக்கு குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்காமையே என அரசாங்க அதிகாரிகள் கூறினர்.

காலப்போக்கில் தமிழ் – முஸ்லிம் அரசியல் வேறுபாடுகள் தலைமை மட்டத்தில் விரிசலை ஏற்படுத்தி இரு இனங்களின் அரசியல் தலைமைகள் வெவ்வேறு திசைகளில் நகர்ந்தன. தமிழ்த்தேசியவாதிகளின் தாயகக்கோரிக்கை தமிழ்மக்களை இனத்துவரீதியில் மையப்படுத்தியே உருவானது. இறுதியில் தனிநாட்டுக்கோரிக்கை பிறந்த பொழுது குறுகிய இனத்துவ தேசியவாதமே அதன் அடிப்படையாயிற்று. இந்த அடிப்படையில் எழுந்த சுயநிர்ணயஉரிமைக் கோரிக்கைக்கு இலங்கைக்குள்ளேயே மற்றைய தமிழ் பேசும் சமூகங்களின் மற்றும் முற்போக்கான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அத்தகைய ஆதரவின் அவசியத்தையும் தமிழ்த்தலைமைகள் உணரவில்லை.

உலர்ந்த பிரதேசத்தில் அரச உதவியுடனான குடியேற்றத்திட்டங்கள் ஒரு சிங்கள பெளத்த இராச்சியத்தின் “மீளக்கைப்பற்றல்” எனும் புராணக்கதையின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றிக் கண்டோம். இதனை எதிர்த்து எழுந்த தமிழ் இனத்துவ தேசியவாதமும் தனக்கேயுரிய புராணக்கதைகளைக் கண்டுபிடித்தது.தமது கருத்தியலை உற்பத்தி செய்வதில் தமிழ்த்தேசியவாதிகள் சிங்களத் தேசியவாதிகளின் அணுகுமுறையைப் பின்பற்றினார்கள் எனத் தோன்றுகிறது.ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியல், சமூக அபிலாஷைகளுக்குத் தமிழ்த்தேசியவாதம் கொடுத்த கருத்தியல்ரீதியான வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது அதன் பிரபல்யமான சுலோகம் “ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன குறை”.

தென்னிந்தியத் தமிழ் படையெடுப்பாளர்களே வடக்குக் கிழக்கில் செழித்தோங்கிய சிங்கள பெளத்த நாகரீகத்தை அழித்தவர்கள் என்றார்கள் சிங்களத்தேசியவாதிகள். தமிழ்த்தேசியவாதிகளின் சுலோகமோ “ஆம் அந்த ஆண்டோரின் பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு” என்பது போல் அமைந்தது. அந்த சுலோகத்திற் கூடாகத் தமிழ்த்தேசியவாதம் சொல்ல முற்பட்ட சேதி வேறு என வாதிடலாம். ஆனால் நடைமுறையில் அதன் அர்த்தம் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்கோஷம் போல் படவில்லை. இந்த சுலோகத்தை அப்போதே தமிழ் இடதுசாரிகள் விமர்சித்தனர் என்பதையும் நினைவுகூர்தல் தகும்.

“ஆண்டபரம்பரை”ச் சுலோகத்தைச் சிங்களத் தேசியவாதிகள் சோழப்பேரரசின் காலகட்டத்துடன் தொடர்பு படுத்தினர். இந்த தொடர்பை வெளிப்படையாக்குவது போல் அமைந்தது விடுதலைப்புலிகள் சோழப்பேரரசின் சின்னத்தையே தாம் நடத்தும் ஈழத்தமிழரின் விடுதலைப்போரின் சின்னமாக்கியமை. வடக்கு கிழக்குத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையின் வரலாற்றுரீதியான நியாப்பாட்டிற்கான அடிப்படையைத் தமிழ்த்தேசியவாதம் விளக்க முற்பட்ட விதம் அதைச் சிங்களத் தேசியவாதத்தின் ஒரு மாற்று வடிவம் போல் காட்டியது. சிங்களத்தேசியவாதம் முன்வைத்த வரலாற்றுக்கதையாடலை மறுதலிக்கத் தமிழ்த்தேசியவாதம் தனது வரலாற்றுக்கதையாடலை மீள் உருவாக்கியது. இந்தப் போட்டி இருசாராரையும் தொடர்ச்சியான பின்னோக்கிய கற்பனார்த்தம் கலந்த வரலாற்றுப்பயணங்களுக்கு இட்டுச் சென்றது. இதில் ஒரு முக்கியமான பொதுத்தன்மை என்னவெனில் வரலாற்று கதையாடலின் உருவாக்கலுக்கு பேரினவாதம் வகுத்த வழிமுறையையே தமிழ்த்தேசியவாதமும் கையாண்டது. ஒன்றின் வரலாற்றுரீதியான உரிமை கொண்டாடலை மறுப்பதற்கு மற்றது தனக்குச் சாதகமான ஆதாரத்தைத் தேடியது. இந்த விவாதத்திற்கு இருசாராரும் வரலாற்றியலாளர்களையும், அகழ்வாராய்ச்சியாளர்களையும் உதவிக்கழைத்தனர். சுயநிர்ணயக் கோரிக்கைக்கான நவீன காரணங்களை மூடிமறைக்கப் பேரினவாதம் கையாண்ட பொறிக்குள் தமிழ்த்தேசியவாதம் மாட்டிக் கொண்டது போலத்தென்படுகிறது. ஆனால் இந்தப் போட்டியோ யதார்த்தத்தில் அமைப்புரீதியான அசமத்துவத்தைக் கொண்டிருந்தது. சிங்களத்தேசியவாதிகளிடம் அரசஅதிகாரம் மட்டுமல்ல அந்த அரசுக்கு சர்வதேச ரீதியான அங்கீகாரமும், ஆதரவும் இருந்தது. உள்நாட்டில் இந்த அசமத்துவமான போட்டிகளின் விளைவுகளை அரசகுடியேற்றத்திட்டங்களிலும் நில அபகரிப்புக்களிலும் காண்கிறோம். தாயகக்கோரிக்கையின் பிரதேசரீதியான அடிப்படை மிகப் பெருமளவில் அரசஉடைமையான நிலமாக இருப்பது பற்றி ஏற்கனவே அறிந்துள்ளோம். அரசாங்கம் இதை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. இது அதிகாரப்பிரிவின் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.

1970 களில் சில தமிழ்அமைப்புகள் வடக்குக் கிழக்கில் அரசின் சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக தமிழ்க்குடியேற்றங்களை உருவாக்கின. இனக்கலவரங்களால் இடம்பெயர்ந்து தவித்த மலையகத்தமிழ்க் குடும்பங்களை இந்த அமைப்புக்கள் குடியேற்றின. இதற்கு ஏற்கனவே சிலரால் 99 வருட குத்தகையில் எடுக்கப்பட்ட அரச காணிகளைப் பயன்படுத்தினர். வடக்கிலும் கிழக்கிலும் இப்படியாகவும் வேறு வழிகளுக்கூடாகவும் குடியேறி இடம்பெயர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் கிராமியக் கூலி உழைப்பாளர்களாகவும், சிறு விவசாயிகளாகவும் தமது வாழ்வாதாரத்தைத் தேடினர்.

இடம்பெயர்ந்த மலையகத்தமிழர்களை வடக்கில் கிழக்கில் குடியேற்றுவதில் தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பங்கு உண்டென உயர்மட்ட சிங்கள நிர்வாக மற்றும் இராணுவஅதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சந்தேகித்தனர். நடைபெறுவது ஒரு “தமிழ் ஈழவாத ஆக்கிரமிப்பு” எனக் கருதினர். இது குணரத்னவின் நூலில் வெளிப்படுகிறது. 1980களில் போரின் வருகையுடனும் மகாவலித்திட்டத்தின் அமுலாக்கலுடனும் 99 வருட குத்தகைக்குப் பெற்ற அரசகாணிகளில் அமைக்கப்பட்ட குடியேற்றங்கள் இராணுவத்தால் அகற்றப்பட்டன. அந்தக் காணிகளுக்கு வழங்கப்பட்ட குத்தகைஉரிமைகளும் இரத்துச் செய்யப்பட்டன.குத்தகைக்கு வழங்கப்பட்ட காரணத்திற்கு மாறாகப் பயன்படுத்தியது சட்டவிரோதம் எனும் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

போரின் விளைவாக வடக்கில் கிழக்கில் பாரிய இடப்பெயர்வுகள் தொடர்ந்தன. இடம்பெயர்ந்தோரில் பெரும்பான்மையினர் தமிழர், அடுத்து முஸ்லீம்களும், சிங்களவர்களும். போர்க்கால இடப்பெயர்வுகளெல்லாம் போரின் எதிர்பாராத விளைவுகள் அல்ல. அரசஇராணுவமும், விடுதலைப்புலிகளும் தமது நோக்கங்களுக்காக வேண்டுமென்றே பொதுமக்களின் இடப்பெயர்வுகளையும் உண்டாக்கினர். இருசாராரும் நடத்திய இடப்பெயர்வுகள் பலரும் அறிந்ததே எனினும் ஒருசில விடயங்களைக் குறிப்பிடுதல் பயன்தரும். வடக்கிலும் கிழக்கிலும் அரசு பொதுமக்களை வெளியேற்றிப் பல உயர்பாதுகாப்பு வலையங்களை உருவாக்கியது. இந்த வலையங்கள் பெருமளவில் இன்னும் தொடர்கின்றன. 1984ல் விடுதலைப்புலிகள் மகாவலித்திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களவர்களைத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலாக அரசாங்கம் குடியேற்றவாசிகளுக்கு ஆயுதங்களும், ஆயுதப்பயிற்சியும் வழங்கியது. 1990 பத்தாம் மாதம் விடுதலைப்புலிகள் வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லீம்மக்களை வெளியேற்றியதும் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் காத்தான்குடியில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களைச் சுட்டுக் கொன்றதும் தமிழ் தேசியவாதத்தின் குறுகிய இனவாதத்தையும் இராணுவவாதத்தையும் காட்டும் சம்பவங்களாயின.

உள்நாட்டுப்போரின் விளைவால் வடகிழக்கின் சனத்தொகையில் பெரும்மாற்றங்கள் ஏற்பட்டன. தமிழர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் இனரீதியில் முக்கியமான புவியியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குடியேற்றத்திட்டங்களினாலும் நிரந்தர இடம்பெயர்வுகளினாலும் தமிழர்தாயகம் எனப்படும் பிரதேசம் மீள முடியாத மாற்றங்களைக் கண்டுள்ளது. வெளிநாடுகளை நோக்கிய நகர்ச்சி ஒரு பெரிய புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்தை உருவாக்கியுள்ளது. Tamil Diaspora என அழைக்கப்படும் இச்சமூகத்தை தமிழ் சிதறுகைச்சமூகம் எனத் தமிழில் குறிப்பிடலாம் என்பது பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தாகும். இந்த சர்வதேசப்புலப்பெயர்வின் உள்ளூர்தாக்கங்கள் எல்லாமே நல்லவை எனக்கொள்ள முடியாது. நன்மைகள் தீமைகள் இரண்டையும் கொண்ட ஒரு கலப்பு எனலாம். இவை பற்றி ஆழப்பார்ப்பது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. சர்வதேச புலப்பெயர்வினால் வந்த “காசாதாரப் பொருளாதாரம்” ( Remittance economy) போர்க்காலத்திலும் அதற்குப்பின்னரும் பலருக்கு பயனளித்துள்ளது. கணிசமான தொகையினர் வடக்கிலிருந்து நிரந்தரமாக தெற்கில் குடியேறவும் இது உதவியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் தங்கியிருக்கும் குடும்பங்கள் பலவற்றில் நுகர்வுவாதம் தலைதூக்கியுள்ளதையும் உழைப்பின் பெறுமதி பற்றிய போதிய உணர்வின்மையின் அறிகுறிகளையும் காணலாம். மறுபுறம் போருக்குப் பின்பும் மாற்றுவழிகளால் போர் தொடரும் நிலையும் வெளிநாட்டுத் தொடர்புகளும் சர்வதேச நகர்ச்சியில் ஆழமான விருப்பினையும் நம்பிக்கையையும் தமிழர் மத்தியில் பதித்துள்ளன. இந்தப் போக்கிற்கும் தாயக்கோரிக்கைக்கும் முரண்பாடு இல்லையா?

இன்றைய வடக்கும் கிழக்கும் முன்பைவிட பல்லினமயமாகி வருகிறது. இலங்கையின் தெற்கும் – குறிப்பாக மேல் மாகாணம் – முன்பைவிடப் பல்லினமயமாகியுள்ளது. வடக்கு கிழக்கு இப்போதும் தமிழ் பேசுவோர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாக இருப்பினும் அங்கு ஏற்பட்டுள்ள புவியியல் ரீதியான மாற்றங்களையும் அவற்றின் எதிர்காலப்போக்குகளையும் கருத்தில் எடுத்தல் அவசியம். தமிழர் ஆரம்பத்தில் கோரிய தாயகத்தின் இன்றைய நிலை என்ன? நிலத்திற்கும் தேசிய இனப்பிரச்சனைக்குமிடையிலான உறவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையே வடக்குக்கிழக்கின் அரசியல் புவியியலும் அங்கு இராணுவ அதிகாரத்தின் கீழ் இடம்பெறும் நிலஅபகரிப்புக்களும் அபிவிருத்தி, தேசியபாதுகாப்பு எனும் காரணங்களால் ஏற்படும் இடப்பெயர்வுகளும் காட்டுகின்றன.

போருக்குப் பின்னரும் முன்புபோல் வடக்குக்கிழக்கில் இராணுவம் தனக்குத்தேவையான நிலத்தைச் சுவீகரித்துத் தன் விருப்பப்படி பயன்படுத்தி வருகிறது. அரசகாணிகளைப் பொறுத்தவரை அரசாங்கம் அவற்றை வழமைபோல் குடியேற்றத்திட்டங்களுக்கு ஒதுக்க முடியும். அதைவிட இப்போது நடைமுறையிலிருக்கும் நவதாராள பொருளாதாரக் கொள்கைப்படி பயன்பாடுமிக்க நிலவளங்களை தனியார்துறைக்குக் கையளிக்க முடியும். இவை இரண்டுமே நடைமுறையிலிருக்கும் கொள்கைகள். இன்னொருபுறம் அரசாங்கம் சில காணிகளை பெளத்த புனிதபிரதேசங்களாகப் பிரகடனமப்படுத்தியுள்ளது. இந்தப் போக்குகள் வடக்கு கிழக்கின் இனப்புவியியலில் நிலத்தின் உடைமை உறவுகளில், நிலத்தின்பாவனையில், நிலத்தோற்றத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றன. இவை மக்களின் பாதுகாப்பில், வாழ்வாதாரங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன? அவற்றின் நன்மை தீமைகள் என்ன? எனும் கேள்விகள் முக்கியத்துவம் பெறும் அதேவேளை இன்னொருமட்டத்தில் இந்தப் போக்குகள் தேசியஇனப்பிரச்சனையின் உள்ளடக்கங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன எனும் கேள்விக்கும் அரசியல்ரீதியில் முகம்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. வடக்கு கிழக்கு முன்பை விடப் பல்லினமயமாகியுள்ளதன் மறுபக்கம் அங்கு இனங்களுக்கிடையிலான உறவுகள் மேலும் விரிசலடைந்துள்ளமையாகும். நிலம் மற்றும் கரையோர வளங்கள் கடற்றொழில் தொடர்பான பிரச்சனைகள் மூன்று இனங்களுக்குமிடையிலான சிக்கலான முரண்பாடாகிவிட்டது. இது கிழக்கில் மிகவும் ஆழமடைந்துள்ளது. நிலவளங்கள் தொடர்பான பிரச்சனைகளை இனத்துவமயமாக்கிய அதே அரசு இனங்களுக்கிடையிலான நிலப்பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகவும் செயற்படுகிறது. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பரஸ்பர மரியாதை போன்றவை அருகிக் கொண்டு போவதற்கு நிலம் மற்றும் கரையோரக் கடல்வளங்கள் தொடர்பான உரிமைப் பிரச்சனைகள் ஒரு பிரதான காரணமாகும். தேசியஇனப்பிரச்சனையும், வடக்குக் கிழக்கு மக்களின் சீவனோபாயப் பிரச்சனையும் மேலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து விட்டன.

ஏற்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார, இனப்புவியியல் மாற்றங்களை நோக்குமிடத்து தேசிய இனப்பிரச்சனையின் இன்றைய நிலை பற்றிய மீள் சிந்திப்பு அவசியமாகிறது. நியாயமான அரசியல் தீர்வை நோக்கிய வகையில் தேசிய இனப்பிரச்சனையின் மீள்சட்டகமயமாக்கல் அவசியம் என்பதும் எனது கருத்தாகும். இது பற்றிய திறந்த கருத்துப்பரிமாற்றங்கள், விவாதங்கள் தேவை. இதை மனதில் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய சில பொதுவான கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

ஒரு திறந்த விவாதத்தை நோக்கி

இலங்கையின் தேசியஇனப்பிரச்சனையின் இன்றைய வடிவமும் உள்ளார்ந்த தன்மைகளும் என்ன? வடக்குக்கிழக்கு மக்களின் சுயநிர்ணயஉரிமையை ஒரு கோரிக்கையாக முன்வைத்த காலத்தின் நிலைமைகளுடன் ஒப்பிடும் போது இன்றைய நிலைமைகளை எப்படி விளங்கிக் கொள்ளலாம்? இலங்கையில் தேசியஇனப்பிரச்சனை வடக்குக்கிழக்குத் தமிழ்மக்களின், முஸ்லீம்மக்களின் உரிமைகளைப் பற்றிய பிரச்சனை மட்டுமின்றி அதற்கும் அப்பால் மலையகத் தமிழ்மக்களினதும், தெற்கிலே பரந்து வாழும் தமிழ்பேசும் மக்களினதும், உரிமைகளையும் பற்றியது என்பதை மறந்து வடக்குக்கிழக்கில் வாழும் மக்களின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசமுடியுமா? இனரீதியில் இனத்துவ மேலாதிக்க அரசினால் இரண்டாம்தர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சமூகங்களின் கோரிக்கைகளை இணைத்து அரசியல்ரீதியில் சிந்திப்பது இன்றைய தேவை இல்லையா? இலங்கையில் தேசியஇனப்பிரச்சனை என ஒன்றில்லை இருந்தது பயங்கரவாதப்பிரச்சனையே, அது தீர்க்கப்பட்டு விட்டது எனும் கருத்தும், உணர்வும் ஆழப்பதிந்திருக்கும் சிங்களமக்களுக்கு வடக்கு கிழக்கின் உண்மையான நிலவரங்களையும், இனரீதியில் தமிழ்பேசும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் எடுத்து விளக்குவது அவசியமில்லையா? இது ஒரு பெரும் சவால் மிக்கது. அதேவேளை அவசியமானது என்பதே எனது கருத்து.

வடக்குக்கிழக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் குறிப்பாக இனப்புவியியல் ரீதியான மாற்றங்களைப் பார்க்கும் போது முன்னைய நிலமைகளுக்கு ஒருபோதும் திரும்பிப் போக முடியாது எனும் உண்மை தெளிவாகிறது. இன்றைய உடனடித் தேவைகளில் ஒன்று தொடர்ந்தும் இனத்துவ மேலாதிக்க நோக்கில் அரச உதவியுடனான குடியேற்றத்திட்டங்களும் அரசநிலத்தின் உபயோகம், உரிமை பற்றிய ஒருதலைபட்சமான பிரகடனங்களும், மக்களின் சம்மதமின்றி நில வளங்களைப் பெருமூலதனத்திடம் கையளிக்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். இதை ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மற்றைய தமிழ்பேசும் இனங்களின் சிங்களமக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு அரசியல் சக்திகளின் ஆதரவைப் பெறும் வகையில் முன்வைப்பது உடனடித் தேவையாகும். இராணுவமயமாக்கல் அத்துடன் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதும் இத்தகைய ஒரு ஜனநாயக உரிமைக் கோரிக்கையே.

இன்றைய இலங்கைஅரசு ஒரு ஒற்றைஆட்சிஅரசு மட்டுமல்ல அது ஒரு இனத்துவ மேலாதிக்க மயப்படுத்தப்பட்ட, இராணுவமயப்படுத்தப்பட்ட, சகல மக்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்கும் அரசாக மாற்றம் கண்டுள்ளது. ஜனநாயகத் தோற்றங்களை வெளிஉலகிற்கு காட்டிக் கொண்டு அதிகாரவாத அரசாக மாறியுள்ளது. இன்றைய ஆட்சியில் நீதித்துறை, நிர்வாகத்துறை, உயர்கல்வித்துறை நிறுவனங்களின் முகாமை அனைத்துமே மோசமாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.அரசாங்கத்தின் பொருளாதாரக்கொள்கை பெருமூலதனத்திற்கும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கும் நாட்டின் வளங்களை அபகரிக்கும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கும் அதேவேளை உழைக்கும் வர்க்கங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பெரும் சுமைகளைப் போட்டுள்ளது.

இனமேலாதிக்க மயப்படுத்தப்பட்ட ஒற்றைஆட்சி அரசின் மீள்அமைப்பின்றி தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணமுடியாது. இது ஜனநாயகத்தை அர்த்தமுள்ள வகையில் நிலைநாட்டுவதற்கும் இனங்களிடையே சமத்துவத்தின் அடிப்படையில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் அமைதியைக் கட்டி எழுப்பவும் இன்றி அமையாததாகும்.அதேவேளை மேற்குறிப்பிட்ட நிலைமைகளின் விளைவுகள் இன,மத எல்லைகளையும் தாண்டி சகல இன மக்களையும் பாதித்துள்ளன. இவையெல்லாம் இன்று ஒரு பரந்த ஜனநாயக அணியை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தைத் தந்துள்ளன. இத்தகைய ஒரு அணியின் உருவாக்கத்துடனேயே தேசியஇனப்பிரச்சனையின் அரசியல் தீர்வுக்கான போராட்டமும் இணைய வேண்டும்.இத்தகைய ஒரு அணுகுமுறை சாத்தியமில்லை எனச் சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் அதை எப்படிச் சாத்தியமாக்குவது என்பதே ஆக்கபூர்வமான கேள்வியாகும். மரபுரீதியான எதிர்க்கட்சிகளால் மாற்றத்திற்கான போராட்டங்களை எடுத்துச் செல்ல முடியாது என்பது தெளிவான உண்மை. இன்று ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் மாற்று அமைப்புகளுக்கூடாக வளர்க்ககூடிய சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன. இப்போது நடைபெறும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களின் வேலைநிறுத்தமும் மாணவர்களின் போராட்டமும் பரந்துபட்ட முறையில் பொதுமக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளன. நீண்ட காலத்திற்குப் பின் இது ஒரு நல்ல அறிகுறி. நிலஅபகரிப்புக்கெதிரான போராட்டங்கள், காணாமல்போனோர் பற்றிய தகவல்களைத் தேடும் இயக்கங்கள், வெள்ளைவான் கடத்தல்களை எதிர்க்கும் போக்குகள் போன்றவை பல்லினங்களையும் சார்ந்தவை. இந்தச் சூழ்நிலை தமிழ்பேசும்மக்களின் உரிமைகள் பற்றி நியாயமான அரசியல்தீர்வு பற்றிய கருத்துப்பரிமாறல்களுக்குச் சாதகமானதெனும் நம்பிக்கை பிறக்கிறது. இதற்கான அறிகுறிகள் இருக்கவே செய்கின்றன. ஒரு அரசியல் திட்டத்தை முன்வைப்பது எனது நோக்கமல்ல. அது எனது ஆற்றலுக்கு அப்பாற்பட்டதென்பதை நான் அறிவேன். கடந்த காலத்தையும், இன்றைய நிலமைகளையும் விமர்சன ரீதியில் – சுய விமர்சன ரீதியில் – ஆராய்ந்து அரசியல் ரீதியில் முன்னே செல்லும் வழிகளுக்கான தேடலைப் பற்றிய ஒரு திறந்த விவாதத்தின் தேவையை எடுத்துக் கூறுவதே எனது நோக்கம். 

[1] இந்தக்கட்டுரை சமகாலம் 2012 October 01-15 இதழில் பிரசுரிக்கப்பட்டது

அபிவிருத்தி – மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா?

 சமுத்திரன்

I

2009 ஆண்டு ஐந்தாம் மாதம் விடுதலைப்புலிகளை இராணுவரீதியில் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் “அபிவிருத்தியே” இன்றைய உடனடித்தேவை என ஆட்சியாளர் பிரகடனப்படுத்தினர். இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையை ஒரு “மனிதாபிமான” நடவடிக்கை எனக் குறிப்பிட்ட அரசாங்கம் மக்கள் வேண்டி நிற்பது அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளின் பூர்த்தியையே எனக்கூறியபடி “மீள்குடியேற்றம்” “அபிவிருத்தி” எனும் பதாகைகளுடன் திட்டங்களை ஆரம்பித்தது. இத்திட்டங்கள் வெளிநாட்டு நன்கொடை உதவியுடனும் கடனாகப்பெற்ற பெருமளவு நிதியுடனும் அமுலாக்கப்பட்டன, படுகின்றன. இவ்வாறு பெறப்பட்ட பெருமளவு நிதிவளங்களில் பெரும்பகுதியினை பெளதீக உட்கட்டுமானத் திட்டங்களே உறிஞ்சுகின்றன.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரங்களை மீள்நிர்மாணித்தல் ஒரு அவசிய தேவை என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதேபோன்று அழிவுக்குள்ளான அவர்களின் உட்கட்டுமானங்களின் புனரமைப்பும் விருத்தியும் அவசியம் என்பதையும் மறுப்பதற்கில்லை. வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் போரினால் மட்டுமன்றி சுனாமியினாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் எண்ணிலடங்கா.

ஆனால் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமாக இருந்த தேசியப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வின் அவசியத்தை ஒதுக்கிவிட்டு “அபிவிருத்தியை” முன்வைப்பதும் அதையே அரசியல் தீர்விற்கு பிரதியீடாக காட்ட முயற்சிப்பதாகும். அபிவிருத்திக்கும் அரசியல் தீர்வுக்கும் இடையே நெருக்கமான உறவுண்டு ஆனால் முன்னையது பின்னையதின் பிரதியீடாக இருக்கமுடியாது. அரசியல் தீர்வின் தவிர்க்க முடியாத அவசியத்தினையும் அவசரத்தினையும் ஏற்க மறுக்கும் ஒரு அரசாங்கத்தினால் மக்களின் தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கு உதவும் ஒரு அபிவிருத்திப் போக்கினை ஏற்படுத்த முடியுமா எனும் கேள்வி நியாயமானதே.

இது இரண்டாவது விடயத்திற்கு இட்டுச் செல்கிறது. அரசாங்கமும் அதன் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிவாளர்களும் பிரச்சாரகர்களும் மிகைப்படக் கூறும் “அபிவிருத்தி” என்பதன் உள்ளடக்கம் தான் என்ன? வடக்கு கிழக்கில் இடம் பெறும் “அபிவிருத்தி” மக்கள் விரோதப் போக்குகளுடன் பின்னிப்பிணைந்திருப்பதால் அது பெரும்பாலானோரின் நீடித்த மனித மேம்பாட்டிற்கு உதவவல்லதா என்ற கேள்வி எழுகிறது. இப்படிச் சொல்வது இலங்கையின் மற்றய பகுதிகளில் பெரும்பாலானமக்களின் நலன்சார்ந்த அபிவிருத்தி ஏற்படுகிறது என்பதாகாது. வடக்கு கிழக்கில் அமுலில் இருக்கும் அபிவிருத்திக் கொள்கையை முழு நாட்டிலிருந்து முற்றிலும் தனிமைப்பட்ட ஒன்றெனக் கொள்ளமுடியாது. அதேவேளை பலகாரணங்களால் வடக்குக் கிழக்கு அபிவிருத்திக்குச் சில குறிப்பான சவால்களும் தன்மைகளும் உண்டு. இவை முழு நாட்டையும் பாதிக்கவல்லன என்பதும் உண்மை.

1977 லிருந்து இலங்கையில் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கை நடைமுறையிலிருக்கிறது. 1970 களிலிருந்து பல நாடுகள் மீது திணிக்கப்பட்ட இந்த கொள்கை மக்கள் நலன் சார்ந்ததல்ல எனப் பல ஆய்வுகள் தெளிவாக காட்டியுள்ளன. அதேவேளை இலங்கையில் இந்தக் கொள்கையின் நடைமுறையும் நாட்டின் பொருளாதாரமும் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஒரு குடும்பத்தின் செல்வாக்குக்கும் ஆதிக்கத்துக்கும் உள்ளாகியிருப்பதும் உலகறிந்ததே. ஆளும் கூட்டினர் நவதாராளவாதவிதிகளை தமது நலன்களுக்கேற்ப மாற்றிக் கொள்வதையும் மீறுவதையும் காண்கிறோம். இதன் விளைவான “அபிவிருத்திப் போக்கு” தீர்வு காணப்படாத தேசிய இனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல், பேரினத்துவ மேலாதிக்கம், அதிகாரவாதமயமாக்கல், பெருமளவிலான நாடளாவிய மனிதஉரிமை மீறல்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. இந்தச் சிக்கலான’பின்னிப்பிணைப்புடன் உள்நாட்டுப் போரினதும் உலகமயமாக்கலினதும் விளைவான காசாதாரப் பொருளாதாரத்தின் (remittance economy) நல்ல தீய தாக்கங்களும் இணைகின்றன.

அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை நிராகரிக்கப் பயன்படுத்தப்படும் இந்த அபிவிருத்தியின் அரசியல் பொருளாதாரத்தை ஆழப்பார்த்தல் அவசியம். இது வடக்குக் கிழக்கில் சில குறிப்பான அடக்குமுறைத் தன்மைகளைக் கொண்டிருக்கும் அதேவேளை முழு இலங்கையையும் பாதிக்கும் ஒன்றாகும். பொருளாதாரக் கொள்கையின் நடைமுறை, ஒரு குடும்பத்தை மையமாக கொண்ட அதிகாரக்குழுவின் போக்கு, எதேச்சாதிகார இராணுவ மயமாக்கல், பேரினவாதக் கருத்தியலின் பயன்பாடு ஆகியன எப்படி அடக்குமுறைக்கு உதவும் வகையில் இணைக்கப்பட்டு “அபிவிருத்தி” “தேசிய இறைமை” எனும் போர்வைகளால் நியாயப்படுத்தப் படுகின்றன என்பதைப் பார்த்தல் அவசியம். இவற்றைப் பார்ப்பதற்கு முன் அபிவிருத்திக்கும் மனித மேம்பாட்டிற்கும் இடையிலான தொடர்பு பற்றி ஒரு குறிப்பு பயன்தரும்.

மனிதமேம்பாடு பற்றி

மனிதமேம்பாடு எனும் போது ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் வாழும் மனிதரின் ஆற்றல்களின் விருத்தியையே குறிக்கும். பொதுவாக மனிதரின் உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, உழைப்பாற்றல், பாதுகாப்பு மற்றும் ஒருவர் பெறுமதிமிக்கதெனக் கருதும் வாழ்முறையைத் தேடும் சுதந்திரம் போன்றவை மனித மேம்பாட்டின் வரைவிலக்கணத்தின் அம்சங்களாக கருதப்படுகின்றன. வாழ்முறையைத் தேடும் சுதந்திரம் என்பது சிந்தனை, பேச்சு, எழுத்து சுதந்திரங்களையும் உள்ளடக்குகிறது. இந்த வகையில் மனித மேம்பாட்டை நோக்குமிடத்து அது மனித நன்னிலையின் தன்மைகளைக் குறிக்கிறது. அபிவிருத்தியை மனித சுதந்திரங்களின் விரிவடைதலுடன் இணைக்கும் சிந்தனைப்போக்கு ஒன்று உண்டு. இன்றைய காலத்தில் இந்த அணுகுமுறையைப் பிரபல்யப்படுத்தியவர் அமர்த்தியா சென் அவர்கள் ஆகும். அபிவிருத்தியை மனித ஆற்றலுடைமைகளின் (capabilities) வளர்ச்சியின் படிமுறைப் போக்காக பார்க்கலாம் என சென் கூறுகிறார். ஆற்றலுடமை மனிதரின் இருப்புக்களையும், (beings)செயற்பாடுகளையும் (doings)உள்ளடக்குகிறது. இது ஒருவர் பசி, பிணி, எழுத்தறியாமை போன்றவற்றிலிருந்து விடுபடும் அடிப்படை இருப்புகளிலிருந்து அவர் தனக்குப் பெறுமதி வாய்ந்ததெனப் பகுத்தறிவு பூர்வமாகக் கருதும் இருப்புக்கள் செயற்பாடுகளை அனுபவிக்கும் ஆற்றல்களைச் சுதந்திரங்களைக் குறிக்கும், நீண்டகாலமாக இந்தக் கோட்பாட்டை பல ஆய்வுகளுக்கூடாக விளக்கிய சென் தனது முழுமையான கருத்துக்களை 1999ல் Development As Freedom எனும் நூலில் தருகிறார். சென்னுடைய கருத்து 18ம் நூற்றாண்டின் ஐரோப்பிய அறிவொளிக்காலத்தில் (The Enlightenment period) வெளிவந்த மனித விடுதலை பற்றிய சிந்தனையினால் ஆகர்ஷிக்கப்பட்டது. அவரது நிலைப்பாடு தாராளவாத தத்துவத்தில் வேரூன்றியுள்ளது. குறிப்பாக அடம் ஸ்மித்தின் தாராளவாதத்தில் என்று அவரே கூறியுள்ளார். இன்று அபிவிருத்தி கற்கைகள் துறையிலும் UNDP இன் மனித அபிவிருத்தி (Human development) அறிக்கைகளிலும் சென்னுடைய கோட்பாட்டின் செல்வாக்கைக் காணலாம். முதலாளித்துவ அமைப்புக்குள் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப அபிவிருத்திப் போக்குகளை மதிப்பிடவும் விமர்சிக்கவும் சென்னுடைய ஆற்றலுடைமைக் கோட்பாட்டைப் பயன்படுத்தலாம். அதேவேளை அவருடைய தாராளவாத நிலைப்பாடும் உரிமைகளுக்கான மக்கள் போராட்டங்களைப் பற்றி அவர் கணக்கிலெடுக்கத் தவறியதும் விமர்சிக்கப்பட வேண்டும். அதே போன்று முதலாளித்துவம் பற்றிய அவரது விளக்கங்களும் சர்ச்சைக்குரியவை. இந்த அம்சங்கள் பற்றி நான் 2001 ல் ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளேன். (Shanmugaratnam 2001). அபிவிருத்திச் சிந்தனைகள் பற்றி பிறிதொரு விரிவான கட்டுரையை எழுத வேண்டிய தேவை இருப்பதாகவும் கருதுகிறேன்.

இங்கு அழுத்திக் கூறவேண்டிய விடயம் என்னவெனில் மனிதமேம்பாட்டையோ நன்னிலையையோ பிரதான நோக்கமாக கொண்டு இயங்கும் சமூக அமைப்பில் நாம் வாழவில்லை. முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் மனித உழைப்பாற்றலின் வளர்ச்சி இன்றியமையாதது. இந்த அமைப்பில் மனித மேம்பாடு என்பது மூலதனத்தின் பொருளாதார, சமூக, அரசியல் தேவைகளுடன் நெருக்கமான உறவினைக் கொண்டுள்ளது. ஆகவே மனிதமேம்பாட்டை நாம் வாழும் சமூக அமைப்பின் தன்மைகளிலிருந்து பிரித்துப் புரிந்து கொள்ளவோ விளக்கவோ முடியாது. முதலாளித்துவதற்கு அடிப்படையான உலகளாவிய தன்மைகள் இருக்கும் அதேவேளை அது நிறுவன ரீதியில் பல்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு இராணுவ சர்வாதிகாரம் மற்றும் பாசிசம் போன்ற அடக்குமுறை மிகுந்த ஆட்சியமைப்புகளிலிருந்து பூர்சுவா சுதந்திரங்கள் மனித உரிமைகளைக் கொண்ட தாராளவாத மற்றும் சமூக ஜனநாயக ஆட்சி அமைப்புக்கள் வரை முதலாளித்துவத்தின் அரசியல் மாதிரிகளை நடைமுறையில் காணலாம். இத்தகைய அமைப்பு ரீதியான வேறுபாடுகளுக்களுக்கும் மனிதமேம்பாட்டின் விருத்தியின் மட்டங்களுக்குமிடையே நெருக்கமான உறவு இருப்பதைக் காணலாம். உதாரணமாக உணவு, உறைவிடம், உடை போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கும் ஒரு சமூகத்தில் மற்றய அடிப்படைச் சுதந்திரங்கள் மறுக்கப்படலாம். இந்தத் தடைகள் மனித மேம்பாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். பொதுவாக ஒரு நாட்டில் காணப்படும் ஜனநாயக சுதந்திரங்கள் சமூகப்பாதுகாப்பு போன்றவை மக்களின் போராட்டங்களின் விளைவுகள் என்பதை மறந்துவிடலாகாது. இப்போராட்டங்கள் வர்க்க ரீதியாகவும் பரந்த வெகுஜன ரீதியாகவும் இடம் பெறுகின்றன. இவற்றில் தொழிலாளவர்க்க மற்றும் பெண்ணுரிமை, சூழல்பாதுகாப்புஇயக்கங்கள் முக்கிய பங்குகளை வகித்துள்ளதைக் காணலாம். மறுபுறம் ஒரு முதலாளித்துவ அமைப்பின் அரசியல்ரீதியான சமூகரீதியான நியாயப்பாட்டிற்கு ஜனநாயக உரிமைகளும் சமூகப்பாதுகாப்பும் அவசியமாகின்றன. அடிப்படை உரிமைகளை மறுக்கும் அரசு அடக்குமுறைக் கருவிகளிலேயே தங்கியிருக்கும். அத்தகைய அரசில் மனித மேம்பாட்டின் போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது.

முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளே குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அதன் வரையறைக்குள்ளே சாத்தியமான ஜனநாயக சுதந்திரங்களுக்கு வழிவகுக்கின்றன. அத்தகைய சுதந்திரங்கள் பல சமூக மட்டங்களில் உள்ள மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தவும் அவற்றிற்காகப் போராடவும் உதவுகின்றன. இத்தகைய ஒரு நிலை வரும்போது சமூகபொருளாதார சந்தர்ப்பங்கள், அரசியல் அதிகாரம் போன்றவற்றின் பங்கீடு ஒரு முக்கிய கேள்வியாகிறது. இது ஆளும் வர்க்கத்திற்கு ஒரு பெரும் பிரச்சனையாகிறது. ஆகக்குறைந்த ஊதியம், சமூகப்பாதுகாப்பு, பால்சமத்துவம், சூழலின்பாதுகாப்பு, இன, மத, சாதிரீதியான பாகுபாட்டினை ஒழித்தல் போன்ற அடிப்படை விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றை விரும்பாத ஆட்சியாளர் ஜனநாயக உரிமைகளையே நசுக்க முடிவெடுப்பார்கள். இது அடக்குமுறை ஆட்சிக்கு இட்டுச்செல்லுமா இல்லையா என்பது அரசியல் சக்திகளின் ஒப்பீட்டு ரீதியான பலத்தினைப் பொறுத்தது. இன்று இலங்கையில் அடக்குமுறை சக்திகளின் கைகளே ஒங்கியிருப்பதைக் காண்கிறோம்.

இன்றைய நவதாராளவாத யுகத்தில் ஒவ்வொருவரும் சுயாதீனமான தனிநபராக தன்னியல்பான போட்டிச்சந்தையில் பங்குபற்றுவதன் மூலம் தனது சுயநலன்களைப் பூர்த்தி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. மனித மேம்பாட்டிற்கு இதுவே வழி என்பதே அந்த அபிவிருத்தி மாதிரியின் எடுகோளாகிறது. இது ஒருவித சந்தை அடிப்படைவாதம் என்றால் மிகையாகாது. தொழிற்சங்க சுதந்திரத்தையும் தொழிலாளரின் கூட்டு நடவடிக்கைகளையும் நசுக்குவதற்கு இந்தவாதம் பயன்படுகிறது. நடைமுறையில் இது தொழிலாளவர்க்க அமைப்புக்கள், வெகுஜன அமைப்புக்கள் மீதான  அடக்குமுறைக்கு உதவுகிறது. தனிமனித சுதந்திரம் என்பது சந்தையில் பங்குபற்றும் சுதந்திரமாக மட்டுப்படுத்தப்படுகிறது. இது மனிதமேம்பாட்டின் விருத்திக்குப் பொருளாதார ரீதியான அரசியல் ரீதியான தடைகளைப் போடுகிறது.

நவதாராளவாதக் கொள்கையின் அமுலாக்கம் நாட்டுக்கு நாடு காலத்துக்கு காலம் வேறுபடுகிறது. எந்த ஒரு அரசாங்கமும் இத்தகைய ஒரு கொள்கையைத் தனது அரசியல் நலன்களுக்கு ஏற்ற வகையிலேயே செயற்படுத்தும். முதலாளித்துவ அபிவிருத்திப்போக்கு சமூகரீதியிலும் புவியியல்ரீதியிலும் முரண்பாடுகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஊடாகவே நகர்கிறது, இதன் விளைவாக வரும் எதிர்பார்ப்புக்கள் மற்றும் கோரிக்கைகளை அரசாங்கம் எப்படிக் கையாள்கிறது என்பதும் முக்கியமான கேள்வி. இது ஒரு அரசியல் கேள்வியாகும். குறிப்பிட்ட பிரதேசத்தவரின் அல்லது குறிப்பிட்ட இன அல்லது மதக்குழுவினரின் ஆதரவைப் பெறும் நோக்கில் அரசின் நிதிவளங்கள் ஒதுக்கீடு செய்யப்படலாம். குறிப்பிட்ட பிரதேசங்களுக்குத் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசாங்கம் உட்கட்டுமான முதலீடுகளைச் செய்வதுடன் வேறு சலுகைகளையும் வழங்கலாம். இப்படியாக நவதாராளவாத பொருளாதாரக் கொள்கை வலியுறுத்தும் பண்டமயமாக்கலும் தனியுடைமைமயமாக்கலும் அரசியல் ரீதியில் கையாளப்படலாம். ஆகவே தூய நவதாராளக் கொள்கை என்று ஒன்று நடைமுறையில் இல்லை. அரசியலை ஒதுக்கிப் பொருளாதாரத்தைப் பார்ப்பதில் அர்த்தமில்லை.

இலங்கையில் நடப்பதென்ன?

முழுமையாக தொகுத்து நோக்குமிடத்து இலங்கையின் தற்போதைய நிலைமை மிகவும் சிக்கலானதும் முரண்பாடுகள் நிறைந்ததாகவும் உள்ளது. நவதாராள கொள்கையை ஏற்றுள்ள அரசாங்கம் அதேவேளை பொருளாதாரத்தில் பெருமளவிலான தலையீடுகளை தொடர்ச்சியாக  மேற்கொள்வதோடு, நிறுவனமயமாக்கப்பட்ட சிங்கள பெளத்த பேரினவாதம், அரசியல், பொதுநிர்வாகம், கல்விசார் நிறுவனங்கள் அனைத்தின் மீதான இராணுவமயமாக்கல், ஆட்சியின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கூண்டோடு கைப்பற்றுவதில் முழுநேரமும் கண்ணாயிருக்கும் முதலாவது குடும்பம், இதற்கு அடிபணிந்து செயல்படும் புல்லுருவி அரசியல்வாதிகள் உயர்அதிகாரிகள் மற்றும் ஊடகத்துறையினர், சட்டமும் ஒழுங்கும் நிலைகுலைந்த நிலையில் நசுக்கப்படும் சிவில்சமூகம் இவற்றுடன் சகல மட்டங்களிலும் ஊழல், இவை எல்லாம் ஒன்றுகூடும் இடமாகி விட்டது இலங்கைத்தீவு. முரண்பாடுகள் மிக்க இந்த நிலைமை வெளிப்படுத்தும் ஒழுங்கற்ற சமூகச்சூழலுக்குப் பின்னே ஒரு தர்க்க ரீதியான போக்கு உண்டு. அதைப் புரிந்து கொள்ள அரசியல் அதிகாரம் எப்படி இலங்கை அரச அமைப்பில் பண்புரீதியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்தப்போக்கு இலங்கையின் முதலாளித்துவ அபிவிருத்திப் போக்கை எப்படி வழி நடத்த முயல்கிறது என்பதையும் அவற்றின் சமூகரீதியான விளைவுகளையும் பார்த்தல் அவசியம்.

இலங்கை அரசின் நிர்மாணம் ஒரு தொடர்ச்சியான போக்கு. காலனித்துவம் கையளித்த அரசினை சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த அரசாங்கங்கள் யாப்புக்களை மாற்றுவதற் கூடாகவும் தனிப்பட்ட சட்டங்களுக்கூடாகவும் மாற்றியமைத்து வந்தன. உள்நாட்டில் பெருந்தேசிய இனவாதத்தின் எழுச்சி வர்க்க முரண்பாடுகளை மழுங்கடித்த அதேவேளை முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்போக்கின் மீதும் ஆதிக்கம் செலுத்தியது. இதனைப் பின்நோக்கிப் பார்க்கும் போது பேரினவாதத்தின் குட்டிப்பூர்சுவா கருத்தியலின் இனத்துவ மேல் நிர்ணய அதிகாரம் மேலும் தெளிவாகிறது. குறிப்பாக 1956 க்குப் பின்னர் பொருளாதாரத்தின் அரசுடமையாக்கலை இந்தக் கருத்தியலே வழி நடத்தியது. அரச கூட்டுத்தாபனங்களின் வளர்ச்சி ஒரு அபிவிருத்தி அரசினால் வழிநடத்தப் படவில்லை. மறுபுறம் 1956ற்கு பின்னரான காலகட்டம் இடதுசாரி இயக்கத்தின் வீழ்ச்சியையும் தொழிலாள வர்க்கம் இனத்துவ அரசியலால் உள்வாங்கப் படுவதையும் கண்டது. 1977 இல் UNP அரசாங்கம் ஏற்றுக் கொண்ட நவதாராள திறந்த பொருளாதாரக் கொள்கை அரசில் நிறுவனரீதியான சில மாற்றங்களுக்கு வழிவகுத்தது. சுதந்திரவர்த்தகம், சுயபோட்டிச்சந்தை, தனியுடைமையாக்கல் போன்ற அடிப்படை அம்சங்களைக் கொண்ட இந்தக் கொள்கை முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றாலும் மனித மேம்பாட்டைப் பொறுத்தவரை 1977க்கு முன்னர் இருந்த சமூகநலஉதவிகள், மானியங்கள் படிப்படியாக அகற்றப்பட்டன. இன்றுவரை இந்தப் போக்கில் மாற்றமில்லை. அதேபோன்று தொழிலாளர் உரிமைமறுப்புப்போக்கு முன்பை விட மோசமாகத் தொடர்கிறது. 1977க்குப் பின்னர் அரசின் சிங்கள பெளத்தமயமாக்கல் மேலும் ஆழமாகத் தொடர்ந்தது. 1977-1983 காலகட்டத்தில் தமிழ்மக்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்தன. தேசியஇனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல் துரிதமடைந்தது.ஒரு இனத்துவ மேலாதிக்க அரசான(Ethnocratic State) – இலங்கை அரசு இராணுவ ரீதியில் மேலும் பலமடைந்தது. இது பற்றி முன்னைய கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன் (உதாரணமாக சமகாலம் ஒக்டோபர் 1-15/2012 ல் “நிலமும் தேசியபிரச்சனையும்” எனும் தலைப்பிலான கட்டுரை).
நவதாராள பொருளாதாரக் கொள்கைக்கும் பேரினவாத அரசியலுக்குமிடையே முரண்பாடு உண்டு. முன்னையது மூலதனத்தின் வளர்ச்சியைப் மையமாகக் கொண்டது. அதைப்பொறுத்தவரை மூலதனத்தின் இலாபத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கும் அரசியல் அர்த்தமற்றது ஆபத்தானது. ஆனால் இலங்கையின் யதார்த்தம் இதனுடன் முரண்படுகிறது. 1983 கலவரத்தை ஆளும் கட்சியினரே நடத்தி வைத்தனர். அதில் தமிழருக்குச் சொந்தமான மூலதனம் பெருமளவில் அழிக்கப்பட்டது. தமது ஆட்சிக்காலத்தில் குவிந்த மூலதனத்தின் ஒரு கணிசமான பகுதியை அழிப்பதற்கு அதே ஆட்சியாளர்கள் உதவியாக இருந்தார்கள். இது இனத்துவ மேலாதிக்க அரசியலுக்கும் மூலதனத்தின் குவியல் சார்ந்த பொருளியலுக்குமிடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடு. இத்தகைய உள்நாட்டுச்சூழலில் மூலதனத்திற்கும் இனத்துவத்திற்குமிடையிலான உறவையும் கணக்கிலெடுத்தல் வேண்டும்.

போருக்குப் பின்னர் ஆட்சியாளர் அரசில் ஏற்படுத்தி வரும் மாற்றங்களை அவதானிக்கும் போது பல முக்கிய போக்குகளைக் காணலாம். ஒருபுறம் இவை அரசின் இனத்துவ மேலாதிக்கத் தன்மையை மேலும் ஆழமாக்கி சிங்கள பெளத்தத்தைச் சாராத இனங்களைக் குறிப்பாக தமிழ்பேசும் மக்களை மேலும் உரிமை மறுக்கப்பட்ட குடிமக்களாக்குகின்றன. மறுபுறம் இந்தப் போக்குகள் நாட்டின் சகல மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் நசுக்குகின்றன. முதன்முதலாக “தேசியஇறைமை” எனும் பெயரால் அரசின் பாதுகாப்பு மேலும் இராணுவரீதியில் பலப்படுத்தப் படுகிறது. இந்த பாதுகாப்புமயமாக்கல் (Securitisation) குடிமக்களின் மனித பாதுகாப்பை அரசின் பாதுகாப்புக்கு கீழ்படுத்தியுள்ளது. இதன் உச்சக்கட்டத்தை வடக்குக் கிழக்கில் தமிழ்மக்கள் மீது விதிக்கப்படும் இராணுவ ரீதியான அடக்குமுறையில் காண்கிறோம்.
அடுத்து, போருக்குப் பின்னான புனரமைப்புத்திட்டங்கள், நகர் அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவை இராணுவ மயமாக்கப்படுவது மட்டுமின்றி வடக்குக் கிழக்கில் இராணுவத்தினர் விவசாயம், வாணிபம், கடற்றொழில், உல்லாசத்துறை போன்ற துறைகளிலும் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமின்றி ஒழுக்கமுறைப்பயிற்சி, தலைமைத்துவப்பயிற்சி எனும் போர்வையில் கல்வித்துறையினுள்; இராணுவமயமாக்கல் ஊடுருவியுள்ளது. இவையெல்லாம் மனித சுதந்திரங்களையும் வாழ்வாதாரங்களையும் பலவிதமாகப் பாதித்து மனித மேம்பாட்டிற்கு தடைகளைப் போடுகின்றன. இவை இராணுவ மயமாக்கலின் சில முக்கியமான மக்கள் விரோத விளைவுகள்.
அரசின் பாதுகாப்புமயமாக்கலை ஆட்சியாளர் நியாயப்படுத்தப் பயன்படுத்தும் “தேசியஇறைமை” “பிரிவினைவாத ஆபத்து” போன்ற கருத்தியல் ரீதியான திரைகளுக்குப் பின்னால் உள்ள யதார்த்தங்களைப் பார்ப்பது அவசியம். அரசின் பாதுகாப்பு மயமாக்கல் (தேசியபாதுகாப்பு அரசு) என்பது சிவில்சமூகத்தை அரசின் பலாத்கார கருவிகளால் கட்டுப்படுத்துவது அல்லது நசுக்குவதாகும். இந்தக் கடும்போக்கு வடக்கு கிழக்கில் மட்டுமின்றி சிங்களமக்கள் பெரும்பான்மையாக வாழும் தெற்கிலும் பலப்பட்டுவருதைக் காணலாம். அங்கே தொழிலாளர்களின் மற்றும் நடுத்தர வர்க்க ஊழிய உழைப்பாளர்களின் வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கான தொழிற்சங்க ரீதியான கூட்டுச்செயற்பாடுகளை முறியடிப்பதற்கு ஆட்சியாளர் அரசின் பலாத்காரக் கருவிகளை மட்டுமல்ல அரசியல்வாதிகளின் பாதாளஉலக(underworld) பயங்கரவாதத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவும் நீண்ட காலமாக ஸ்தம்பித்து இருக்கும் மெய்ஊதியமும் (real income)சகல இனங்களையும் சார்ந்த உழைக்கும் வர்க்கங்களின் மனித நன்னிலையை மோசமாகப் பாதித்திருக்கும் நிலையில் தொழிற்சங்க உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

பெரும்பான்மை இனத்தைப் பொறுத்தவரை சிவில்சமூகம் அரச பலாத்காரத்தின் அடக்குமுறைக்குப் பலியாக்கப்படும் நிலை ஒரு முக்கிய செய்தியைச் சொல்லுகிறது. அதாவது பெரும்பான்மை இன மக்களை சிங்களபெளத்தபேரினவாத கருத்தியலின் மேலாட்சியால் (Hegemony)மட்டும் வழமைபோல் கட்டியாள்வது கடினமாகிவிட்டது. சிவில்சமூகத்தில் கருத்தியலின் மேலாட்சி எனும் மிருதுவான அதிகாரசக்தியினால் (soft power) சிங்கள மக்களின் பெரும்பான்மையோரின் சம்மதத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் இன்றைய அரசாங்கத்தினால் பெறுவது சுலபமல்ல. இதனால் அரசின் வன்மையான அதிகாரத்தில் (hard power) ஆட்சியாளர் கூடுதலாகத் தங்கி நிற்கும் நிலையைக் காண்கிறோம். அதேவேளை சிங்கள மக்கள் மீதான கருத்தியல் ரீதியான மேலாட்சியினை தக்கவைக்க ஜாதிக ஹெல உறுமய(JHU), பொதுபலசேனா(BBS), வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி (NFF) போன்ற அமைப்புக்களையும் தமக்கு ஆதரவான ஊடகங்களையும் ஆட்சியாளர் பயன்படுத்துகின்றனர்.
நீண்ட காலமாக ஆளும் கட்சியினர் பெரும்பான்மை இனத்தின் பரந்த சமூகப்பிரிவினரான குட்டிப்பூர்சுவாப் பின்னணியைக் கொண்ட நடுத்தர, கீழ்நடுத்தர மட்டங்களின் அரசியல் ஆதரவையும் விசுவாசத்தையும் தக்கவைப்பதற்கு அரச நிறுவனங்களுக்கூடாகவும் அரச வளங்களைப் பயன்படுத்தியும் சலுகைகளை அவர்களுக்கு வழங்கி வந்தனர். குறிப்பாக அரச நிறுவனங்களிலும் அரசினால் அமுல் படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலும் வேலைவாய்ப்புக்கள் குடியேற்றத்திட்டங்களில் நிலப்பங்கீடுகள் போன்றவை. அரசியல் மயப்படுத்தப்பட்ட இத்தகைய சலுகைகள் தமிழ்பேசும் சமூகங்களின் சில பகுதிகளுக்கும் கிடைத்தது உண்மையெனினும் அவற்றின் கொள்கை ரீதியான நடைமுறை பெருந்தேசியவாத அரசநிர்மாணத்துக்கு உதவுவதையே நோக்காக கொண்டிருந்தது. அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் முஸ்லீம் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பையும் பங்குபற்றலையும் பெறுவதற்கு இந்த சலுகைகளை ஐக்கியதேசியகட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினதும், தலைமைகள் மாறி மாறி பயன்படுத்துவதும் வழக்கமாகி விட்டது.
1977 ல் ஐக்கிய தேசியகட்சியின் ஆட்சியில் நவதாராளவாதக் கொள்கை அமுலுக்கு வந்த போதும் பல அரச கூட்டுத்தாபனங்கள் பாரியளவிலான நட்டம் நிதியிழப்பு ஆகியவற்றுக்கு தொடர்ச்சியாக உள்ளாகியும் இன்றுவரை தனியுடைமையாக்கப்படாதிருப்பதை இந்தப் பின்னணியிலேயே பார்க்க வேண்டும்.

II

இலங்கை அரசு ஒரு அபிவிருத்தி அரசா?

தோற்றங்களும் உள்ளடக்கங்களும்

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இலங்கைஅரசு ஒரு அபிவிருத்திசார் அரசாக (developmental state) மாறி வருவதாகச் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இந்தக் கருத்தை நான் சில கருத்தரங்களிலும் கேட்டுள்ளேன். ஆட்சியாளரும் இலங்கை “ஆசியாவின் அதிசயம்” (Miracle of Asia) எனும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக நாட்டின் பல பாகங்களிலும் நடைபெறும் பாரிய உட்கட்டுமான திட்டங்களையும் மத்தியவங்கி வெளியிடும் பொருளாதார வளர்ச்சி வீதப்புள்ளி விபரங்களையும் பலர் காட்டுகிறார்கள். உட்கட்டுமானத்திட்டங்கள் பலவற்றை நாம் நேரடியாகப் பார்க்கிறோம். புதிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறோம். உண்மைதான். மத்தியவங்கியின் புள்ளிவிபரங்கள் கேள்விக்கிடமானவை என விபரம் அறிந்தவர்கள் கருதும்போதும் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதென்பதும் உண்மைதான். முன்பை விட ராஜபக்ச ஆட்சியில் அரசின் பொருளாதார ரீதியிலான ஈடுபாடுகள் அதிகம் என்பதும் உண்மைதான். இவற்றை மட்டும் வைத்து இலங்கைஅரசு ஒரு அபிவிருத்திஅரசு என்ற முடிவுக்கு வருவது அவசர முடிவென்பதே எனது கருத்து.

சமீபத்திய தசாப்தங்களில் “அபிவிருத்திஅரசு” எனும் கோட்பாடு 1960 களிலிருந்து துரித முதலாளித்துவ அபிவிருத்தியைப் பெற்ற கிழக்காசிய நாடுகளின் (குறிப்பாக தென்கொரியா, தைவான், ஹொங்கொங், சிங்கப்பூர்) அரசு பற்றியதாகும். ஜப்பானின் அபிவிருத்தி வரலாற்றின் மாதிரியைத் தொடர்ந்து இந்த கிழக்காசிய நாடுகளின் நவீனமயமாக்கலில் அரசு ஒரு பாரிய தலைமைத்துவப் பங்கினை வகித்தது. கிழக்காசிய “அபிவிருத்திஅரசு” பற்றி பெருந்தொகையான ஆழ்ந்த ஆய்வுகள் வெளிவந்துள்ளன. பிரசுரிக்கப்பட்ட பல பிரபல்யமான ஆய்வுகளின்( உதாரணமாக Chalmers Johnson, Alice Amsden, Robert Wade, Manuell Castells, Shinohara, Appelbaum and Henderson போன்றவர்களின் ஆய்வுகளின்) உதவியுடன் கிழக்காசிய அபிவிருத்தி அரசு பற்றியும் மற்றய நாடுகளுக்கு அந்த மாதிரியின் பயன்பாடு பற்றியும் நான் எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரை 1995ல் ஒரு சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது. அந்தக் கட்டுரையின் உதவியுடன் கிழக்காசிய அபிவிருத்தி அரசின் அடிப்படைத் தன்மைகளைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.

• நாட்டின் முதலாளித்துவ மாற்றம் பற்றிய திடமான பார்வையையும் ஆலைத்தொழில் மூலதனத்தின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் நிலைப்பாட்டையும் கொண்ட ஒரு ஆளும் கூட்டு அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
• நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளைக் குறிப்பிட்ட தனியாரின் நலன் சார்ந்த தலையீடுகளின்றி துறைசார் நிபுணர்களின் உதவியுடன் வகுக்கும் சுதந்திரத்தைக் கொண்ட அரசு.
• உள்நாட்டு வெளிநாட்டு மூலதனத்தின் போக்குகளை நெறிப்படுத்தும் ஆற்றல் கொண்ட அரசு. ஏற்றுமதியை வளர்க்கவும் நாட்டிற்குள் உற்பத்தியைப் பெருக்கி மூலதனக்குவியலை அதிகரிக்கவும் உதவும் வகையில் சந்தையை நெறிப்படுத்தி ஆளும் அறிவுத்திறனையும் நிறுவனங்களையும் கொண்ட அரசு.
• உற்பத்தித்திறனைத் தொடர்ச்சியாக விருத்தி செய்யும் நோக்கில் தொழில் நுட்பத்தினை உள்வாங்குதல் மற்றும் மனிதமூலதனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு.
• தொழிலாளவர்க்கத்தின் கூட்டுச் செயற்பாடுகளையும் ஐனநாயக சுதந்திரங்களுக்கான அமைப்புக்களையும் நசுக்கும் அதேவேளை தொழிலாளரின் உற்பத்தித்திறன் வளர்ச்சிக்கேற்ப மெய்ஊதியத்தைச் சகல துறைகளிலும் உ.யர்த்தும் கொள்கையை அமுலாக்கவல்ல அரசு.
• நீண்டகாலகடன் மற்றும் விசேட மானியங்கள் போன்றவற்றை வழங்கி உள்நாட்டு முதலாளி வர்க்கத்தின் உருவாக்கத்திற்கு உதவும் வகையிலான அரச பொருளாதார முதலீடுகள். உதாரணத்திற்கு நீண்டகால போக்கில் அதிக இலாபம் தரக்கூடிய பாரிய ஆலைத்தொழில் உற்பத்தியில் அரசு முதலீடு செய்து அது இலாபம் தரத்தொடங்கும் போது தனியுடைமையாளருக்கு விற்றல்.
பொருளாதாரத்திட்டமிடல் ஜப்பானிலிருந்து தென்கொரியா தைவான் வரை கிழக்காசிய அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாயிருந்தது. முதலாளித்துவத்தின் விருத்திக்குத் திட்டமிடல் அவசியமில்லை எனும் சந்தை அடிப்படைவாதக் கருத்தினை மறுதலிக்கும் நடைமுறையாக இது இருக்கிறது. இந்தக் கிழக்காசிய நாடுகளில் நீண்ட காலமாக ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டன அல்லது கட்டுப்படுத்தப்பட்டன. அதேவேளை உற்பத்தி சக்திகள் தொடர்ச்சியாக முன்னேறின. தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அறிவாளர்கள் ஜனநாயகஉரிமைகள் கோரிப் போராட்டங்கள் நடத்தினர். இந்தப் போக்குகள் தென்கொரியாவில் மிகவும் பலமடைந்தன. இன்று அங்கே காணப்படும் ஜனநாயக உரிமைகள் இத்தகைய போராட்டங்களினதும் ஆளும் வர்க்கம் எதிர்கொண்ட அரசியல் நிர்ப்பந்தங்களினதும் விளைவுகளாகும். சீனாவின் துரிதமான முதலாளித்துவப் பயணத்தை கிழக்காசிய மரபிலே புரிந்து கொள்ளல் முக்கியம். சீனாவின் அரசு ஒரு அபிவிருத்திஅரசு எனலாம் ஆனால் சீனாவின் நெருங்கிய நட்பை பெற்றிருப்பதாலோ அல்லது தொடர்ச்சியாகச் சீனாவிடம் பெரும் கடன்களைச் சுலபமாகப் பெறக்கூடிய நிலையில் இருப்பதாலோ மகிந்த ராஜபக்ச குடும்பத்தினால் கட்டுப்படுத்தப்படும் இலங்கை அரசு அபிவிருத்தி அரசு ஆகிவிடாது.
மேற்கூறியவற்றில் இலங்கை அரசிடம் இருக்கும் ஒரு பண்பு தொழிலாள வர்க்கத்தையும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்குவதாகும்.இது அடக்குமுறைத்தன்மை கொண்ட எல்லா அரசுகளுக்கும் பொதுவான பண்பு. இன்றைய நவதாராள உலக சூழ்நிலையில் ஒரு அரசை அபிவிருத்தி அரசாக சீரமைப்பது சுலபமல்ல. அதேவேளை இலங்கையின் உள்நாட்டு நிலைமைகளைப் பார்க்கும் போது அரசின் நடத்தை அபிவிருத்தி அரசின் தன்மைகளுக்கு மாறான போக்குகளையே காட்டுகிறது. இதை விளக்கச் சில உதாரணங்களை காட்ட விரும்புகிறேன்.

குறுகிய அரசியல் மயப்படுத்தப்பட்ட ஊழலும் நட்டமும் மிகுந்த அரச கூட்டுத்தாபனங்கள்

நவதாராளவாதக் கொள்கையின் வருகைக்குப் பின்னரும் பல அரச கூட்டுத்தாபனங்கள் தனியுடைமையாக்கப்படாமைக்கான அரசியல் காரணம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். இந்த நிறுவனங்கள் அரசினால் இலாபகரமாகவும் தனியார் துறையுடன் போட்டி போடும் வகையிலும் கூட்டுத்தாபனங்களை நடத்த முடியும் எனும் முதலாளித்துவ அபிவிருத்தி நோக்கில் அரசுடமைகளாக தொடர்ந்தும் இயங்குவன அல்ல. ராஜபக்ச ஆட்சியில் அரச கூட்டுத்தாபனங்களின் பொருளாதார ரீதியிலான வினைஆற்றல் எந்த நிலையில் உள்ளது? இது ஒரு நியாயமான கேள்வி. இதற்கான பதிலைச் சமீபத்தில் (2013) வெளிவந்த இலங்கைத் திறைசேரியின் 2012 ஆம் வருட அறிக்கையில் காணலாம். இந்த அறிக்கையின் படி இலங்கையில் உள்ள 55 (ஐம்பத்தி ஐந்து) கூட்டுத்தாபனங்களும் 2005 ம் ஆண்டில் கூட்டு மொத்தமாக 32.3 பில்லியன் ரூபாய்கள்(32.3bn) இலாபத்தைக் கொடுத்தன. ஆனால் 2012 ல் – அதாவது ராஜபக்சவின் ஆறுவருட ஆட்சியில் இவற்றின் கூட்டு மொத்த நட்டம் 107.1 பில்லியன் (107.1bn) ரூபாய்கள் ஆகும். பெருநட்டத்தில் ஓடும் அரச கூட்டுத்தாபனங்களுள் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், சிறிலங்கா விமானசேவை, CTB போன்றவை அடங்கும். இலாபத்தில் இயங்குவன பொதுவாக அரசுக்கு சொந்தமான வங்கிகளும் காப்புறுதிக் கூட்டுத்தாபனமுமாகும். இங்கும் அரசாங்கம் வங்கிகளிடமிருந்து பெருந்தொகையான கடனைப் பெற்றுக் கொள்வதால் இவ்வங்கிகளால் தனியார்துறையினருக்கு கடன்வழங்கும் ஆற்றல் பாதிக்கப்படுகிறது.

அரச கூட்டுத்தாபனங்களில் ஊழல் மற்றும் முகாமைத்திறனின்மை போன்ற குறைபாடுகள் பற்றி இப்போ சில உயர்மட்ட அரச அதிகாரிகளும் அமைச்சர்களும் வெளிப்படையாகப் பேச முற்பட்டுள்ளனர். உதாரணமாக திறைசேரிச் செயலாளர் கலாநிதி P.B.ஜயசுந்தர அரச கூட்டுத்தாபனங்களில் தகைமையற்றோர் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு எதிராக தனது கருத்தை The Island (04.06.13) பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். சுருங்ககூறின் ராஜபக்ச ஆட்சியில் அரச கூட்டுத்தாபனங்களின் கூட்டு மொத்தமான இயங்குதிறன் படுமோசம் படுதோல்வி எனலாம். இந்த ஆட்சியில் அரச கூட்டுத்தாபனங்கள் ஒரு சிலவற்றைத் தவிர முன்பை விட மோசமாகச் சீரழிந்து நாட்டின் பொருளாதாரத்தின் மீது பெரும் சுமைகளாவிட்டன. அரசுடைமைகளாக இருக்கும் பொருளாதார நிறுவனங்களைத் தேசிய பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் பயன்தரவல்லனவாக நிர்வாகிக்க முடியாத நிலையில் இருக்கும் நாட்டின் அரசை அபிவிருத்தி அரசு எனச் சொல்லமுடியுமா?

அரசவருமானத்தின் விகிதாசார வீழ்ச்சி

இலங்கை அரசின் அபிவிருத்திப்பணியின் இன்னொரு முக்கிய தோல்வி நேரடி வருமானவரித்திரட்டலின் வீழ்ச்சியாகும். 1978 ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product) 24 வீதத்தை இலங்கை அரசு வருமானமாகப் பல வரிகளுக்கூடாக வசூலித்தது. தற்போது இது 12-13 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது நேரடிவரியையும் மறைமுகவரியையும் உள்ளடக்குகிறது. தனியார்துறையினர், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் பெருமளவு வரி கட்டுவதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். அரசின் வருமானவரித்துறைத் திணைக்களத்தின் இயலாமையை இது காட்டுகிறது. ஆனால் இதற்கான அடிப்படைக் காரணம் ஊழலும் அரசியல் செல்வாக்குமாகும். இந்நிலை ராஜபக்ச ஆட்சியில் மோசமடைந்துள்ளது. நேரடியாகவரியை விதித்து வருமான வரியைத் திரட்ட முடியாத நிலையில் சகல பொருட்களின் மீதும் வரிகளை அதிகரிக்கும் வழியையே அரசாங்கம் வருடந்தோறும் பின்பற்றி வருகிறது. இதனால் பண்டங்களின் விலை ஏறுகிறது. இதன் விளைவாகப் பொதுமக்கள் மீதான பொருளாதாரச்சுமைகள் ஏறிக் கொண்டே போகின்றன. அவர்களின் வாழ்வாதாரமும் இளம்சந்ததியின் எதிர்கால மனிதவிருத்தியும் பாதிக்கப்படுகின்றன. வரித்திரட்டலில் அரசின் தோல்வியை அமைச்சர் DEW குணசேகர வெளிப்படையாக ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி இந்தப் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் பின்தள்ளப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் (The Sunday Island 05.05.13). அமைச்சர் குணசேகர நேரடிவரி இப்போது இருப்பதையும் விட இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அது நடைமுறைப்படுத்தப்பட்டால் மறைமுகவரி குறைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்குமெனவும் கூறியுள்ளார். தற்போதைய அரசவருமானத்தில் 80 வீதம் மறைமுக வரிகளுக்கூடாகவே பெறப்படுகிறது. பெருமுதலாளிகளும் ஊழலுக்கூடாகச் செல்வந்தராவோரும் வரி கொடாது செல்வாக்கு மிகு உயர் வர்க்கத்தினராக வாழ்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபடுவோரும் அரசாங்கத்தினால் சட்டபூர்வமாக வரிசெலுத்துவதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அடங்குவர்.
கிடைக்கும் அரசவருமானத்தின் பெரும்பகுதி அரசஊழியர்களின் ஊதியம் மற்றும் இளைப்பாறியோரின் ஓய்வூதியம், அரசாங்கம் பெற்றுள்ள கடன்களின் வட்டி போன்ற செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் மற்றய அரசாங்கச் செலவுகளுக்கு மீண்டும் கடன் பெறும் நிலையிலேயே இன்றைய ஆட்சி உள்ளது. பொதுவாகப் பொருளாதார நோக்கில் கடன்பெறுவது தவறானதல்ல. முதலீட்டுக்கூடாக கடன் பொருளாதார விருத்திக்கு உதவல்லது. ஆனால் கடன் எதற்காகப் பெறப்படுகிறது, எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமாகும். இந்த வகையில் இந்த அரசாங்கத்தின் போக்கினை கடன்வாங்கிக் கோலாகலமாகக் கலியாணம் நடத்திய பின்னர் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வழிதெரியாது திக்குமுக்காடும் மனிதரின் நிலைக்கு ஒப்பிட்டுள்ளார் ஒரு பொருளியலாளர்.

பயன்தர மறுக்கும் பாரிய அரச மூதலீடுகளும் ஏறும் கடன்பளுவும்

வெளிநாட்டில் கடன்பெற்று – விசேடமாக சீனாவிடமிருந்து – பாரிய திட்டங்களை உருவாக்கி அவற்றைக் கவர்ச்சிமிகும் காட்சிப்பொருட்களாகப் பிரச்சாரம் செய்வது இன்றைய ஆட்சியாளர்களின் கைவந்த கலைகளில் ஒன்று. இந்த வரிசையில் அம்பாந்தோட்ட மகும்புர மகிந்த ராஜபக்ச துறைமுகமும் மத்தல மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையமும் பெரும் முதலீடுகளாகும்.இவை இரண்டுமே சீனாவின் கடனில் சீனநிறுவனங்களின் நேரடிப் பங்குபற்றலுடன் அமுல் நடத்தப்பட்டன. துறைமுகத்திற்கு 1.4 bn (பில்லியன்)அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியதுடன் ஏறக்குறைய 7000 சீனப் பணியாளர்களையும் சீனா அனுப்பியது. துறைமுகம் கோலாகலமாகத் திறக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இதுவரை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கப்பல்களே அங்கு நங்கூரம் பாய்ச்சியுள்ளன. உண்மையில் கொழும்புத்துறைமுகத்திற்குச் சென்ற கப்பல்கள் சிலவற்றை துறைமுக அதிகாரநிறுவனம் அம்பாந்தோட்டைக்குச் செல்லும்படி செய்ததாகச் செய்திகள் சொல்லுகின்றன. இலங்கையின் மிகப் பெரிய புத்தம் புதிய துறைமுகம் பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கும் அதேவேளை சீனாவிடம் இருந்து பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதற்குக் கொழும்புத்துறைமுகத்தின் வருமானத்திலேயே அரசு தற்போது தங்கியுள்ளது.

கொழும்புத்துறை முகத்தையும் விஸ்தரிக்கும் திட்டத்திற்கும் சீனா கடன் வழங்கியுள்ளது. இந்த நிர்மாணத்தினால் கொழும்புத்துறைமுகத்தின் வசதிகள் மேலும் விருத்தி பெற்றுள்ளன. அம்பாந்தோட்டையில் ஒரு பாரிய துறைமுகம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவைப்பட்டதா என்ற கேள்வி ஆரம்பத்திலேயே பலரால் எழுப்பபட்டது. இது ராஜபக்சக்களின் பேராசையேயின்றி நாட்டின் முன்னுரிமையல்ல. இதைப் போன்றதே மத்தல ராஜபக்ச விமான நிலையமும். ஆனால் இந்தப் போக்குத் தொடர்கிறது. இது தொடர்வதற்கு சீனா வழமை போல் கடன் வழங்கத்தயாராவுள்ளது. 2012 இறுதிவரை சீனாவிடமிருந்து 8.6 bn (பில்லியன்) அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது. 2013 ல் ஜனாதிபதி சீனாவுக்குச் சென்றிருந்த போது மேலும் 2.2bn அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்க சீனா முன்வந்துள்ளது. சீனாவின் கடன் சர்வதேச நாணயநிதி மற்றும் உலகவங்கி வழங்கும் கடன்களை விட அதிக வட்டி வீதத்தைக் கொண்டது. அத்துடன் சீனா கொடுக்கும் கடனின் கணிசமான பகுதி பல வழிகளுக்கூடாக சீனாவின் கொம்பனிகளுக்கு மீளப்போகிறது. இத்தகைய கடனைத் திருப்பிக் கொடுக்குமளவிற்கு அது வழங்கப்பட்டுள்ள திட்டங்களால் நாட்டுக்கு வருமானம் கிட்டவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒரு சிலர் பயனடைந்துள்ளனர். இன்று இலங்கையின் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP இன்) 80 வீதமாகும். இது குறையும் சாத்தியப்பாடுகளில்லை. தொடர்ந்தும் கடன் பெறும் நிலையிலேயே இலங்கை உள்ளது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின்மை

இலங்கை தற்போது ஒரு கீழ் மத்திய வருமான நாடாக உயர்த்தப்பட்டுள்ளது பற்றியும் நாட்டின் சராசரி தலா வருமானத்தின் வளர்ச்சி பற்றியும் நிறையக் கேள்விப்படுகிறோம். உண்மைதான். அதேவேளை சமூகரீதியான பிரதேசரீதியான ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்துள்ளன என்பதும் உண்மை. இலங்கையின் பொருளாதாரத்தின் இன்னொரு முக்கிய பிரச்சனை பற்றி நாம் அதிகம் கேள்விப்படுவதில்லை அதுதான் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிப் போதாமை. உலக ரீதியில் பார்க்கும் போது இது மேலும் முக்கியத்துவம் அடைகிறது. இதுவரையிலான பொருளாதார வளர்ச்சி – குறிப்பாக ஆலைத்தொழில் துறையின் வளர்ச்சி – சர்வதேச மட்டத்தில் பார்க்கும் போது ஆலைத்தொழில் மயமாக்கலின் ஆரம்பக்கட்டத்திலேயே தங்கியுள்ளது. இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பண்டங்கள், உடுபுடவை, தேயிலை, இறப்பர் பொருட்கள், இரத்தினக்கற்கள் மற்றும் தென்னம் பொருட்கள். இவற்றுள் உடுபுடவை உற்பத்தித்துறை 1977 க்குப் பின்னர் விருத்தி பெற்றுள்ளது. இந்த துறைகளின் தொழில்நுட்ப மட்டங்கள் இலங்கை போன்ற கட்டத்திலிருக்கும் மற்றய நாடுகளின் நிலைமைகளுடன் ஒப்பிடக் கூடியவையே. எதிர்கால நோக்கில் பொதுவாக மற்றய துறைகளிலும் இலங்கையின் தொழில்நுட்ப மட்டமும் உற்பத்தித்திறனும் சர்வதேச ரீதியில் போட்டித்திறன் குன்றிய நிலையிலேயே உள்ளன. இது அடுத்த கட்டங்களை நோக்கிய நகர்ச்சிக்குத்தடையாக அமையலாம்.
பல ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் எழுத்தறிவு மட்டம் உயர்வாக உள்ள போதும் நாட்டின் உற்பத்தி சக்திகளை வளர்க்கும் நோக்குடன் தொழில் நுட்பத்திறனைப் பரவலாக்கும் விஞ்ஞான தொழில்நுட்ப உட்கட்டுமானமும் அத்துடன் இணைந்துள்ள நாடளாவிய நிறுவனங்களும் குறைவிருத்தி நிலையிலேயே உள்ளன. 1970-1990 களின் கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இது தெளிவாகிறது. பயன்தராப் பாரிய திட்டங்களில் செலவிடும் வெளிநாட்டுக்கடனை மனிதமூலதனத்தின் விருத்திக்குப் பயன்படுத்தியிருக்கலாம். அது உற்பத்திசக்தி வளர்ச்சிக்கு உதவியிருக்கும். ஆனால் ஆட்சியாளரின் – குறிப்பாக சர்வஅதிகாரத்தையும் கொண்ட ஜனாதிபதியின் – முன்னுரிமைகளோ வேறு.

போருக்குப் பின்னரும் “பாதுகாப்புமயமாக்கல்” முன்னுரிமை பெறுவதால் இராணுவமயமாக்கலுக்கு வருடம் தோறும் பெருமளவு பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் ஒதுக்கப்படும் வீதம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் போக்கு மோசமடைந்துள்ளது. இதன் விளைவு மனிதவளத்தின் குறைவிருத்தி என்பது கண்கூடு. தென்ஆசியாவிலே அதி உயர்ந்த எழுத்தறிவு வீதம் மற்றும் எதிர்பார்க்கும் ஆயுட்காலம் போன்றவற்றைக் கொண்ட நாடாக இருப்பினும் உற்பத்திசக்தியின் விருத்திக்கு உதவும் வகையிலான வசதிகளின் போதாமையைக் கவனிக்கத் தவறிவிட்டன இதுவரையிலான ஆட்சிகள். உண்மையில் இலங்கையின் எழுத்தறிவு வீதம் எதிர்பார்க்கும் ஆயுட்காலம் ஆகியன முன்னைய சமூகநலக் கொள்கைகளின் விளைவானவை என்பதை மறத்தலாகாது. 1977 க்குப் பின்னர் தனியுடைமையாக்கல் போக்குகளினால் கல்வியும் மனித சுகாதாரமும் தனிமனித ரீதியில் அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப வேறுபடுகின்றன.

மறுபுறம் பெரும்பாலான குறிப்பாகக் கிராமப்புற அரச பாடசாலைகளின் வசதிகளில் தராதரங்களில் போதியளவு முன்னேற்றமில்லை. பல பாடசாலைகள் ஆசிரியர் பற்றாக்குறையாலும் குறிப்பாகத் தகைமை வாய்ந்த இயற்கை விஞ்ஞான, கணித, சமூகவிஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்களின் போதாமையாலும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளன. இதன் காரணமாக இலங்கையின் தேசிய எழுத்தறிவு வீதம் 96 எனப்படும் போதும் அதன் தன்மை ரீதியான மட்டம் கேள்விக் குறியாகிறது. இன்றைய உலகில் ஒரு நாட்டின் உற்பத்தி சக்திகளின் விருத்திக்குப் பலமான கல்வி அடித்தளம் இன்றியமையாதது. எழுத்தறிவு வீதம் எனும் எண்ணை மட்டும் வைத்து இதை அளவிட முடியாது என்பதை இலங்கை நிலமை காட்டுகிறது. இது பற்றி சமீப காலங்களில் பல அறிக்கைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் வேலைவாய்ப்பற்ற பொருளாதார வளர்ச்சி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிப்போக்கு சமூகரீதியிலும் பிரதேசரீதியிலும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது என்பதை மத்தியவங்கி, உலகவங்கி போன்றவற்றின் அறிக்கைகளும் வேறு ஆய்வுகளும் காட்டுகின்றன. இந்தப் பொருளாதார வளர்ச்சியின் வீதத்திற்கேற்ப வேலை வாய்ப்புக்கள் வளரவில்லை. உதாரணத்திற்கு 2006க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் GDP(மொத்த உள்நாட்டு உற்பத்தி) 40 வீதம் வளர்ந்துள்ளது. ஆனால் இதே காலத்தில் வேலைவாய்ப்பு ஒரு வீதம் மட்டுமே வளர்ந்துள்ளது எனVerite Research (2013)ன் ஆய்வறிக்கை கூறுகிறது. (குறிப்பு: இத்தகைய ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் புள்ளிவிபரங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்குவதில்லை). இன்று இலங்கையில் உழைப்பில் ஈடுபட்டுள்ளோரில் 60 வீதத்திற்கும் மேலானோர் முறைசாரா(informal) பொருளாதாரத்திலேயே தங்கியுள்ளனர். முறைசார் பொருளாதாரத்தில் (formal economy)பங்குபற்றும் உழைப்பாளர்களுக்கே உரிமைகள் மறுக்கப்படும் இந்நாட்டில் முறைசாராப் பொருளாதாரத்தில் தங்கியிருப்போரின் நிலை மேலும் இடர்பாடானதென்பதைச் சொல்லத்தேவையில்லை. உண்மையில் ஏறக்குறைய 80 வீதமான பலவிதமான உழைப்பாளர்களுக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு இல்லை எனலாம். உள்நாட்டில் வேலைவாய்ப்பின்மையைத் தீர்க்கும் ஒரு வழியாக அரசாங்கம் வெளிநாடுகளில் வேலே தேடுவதை ஊக்குவிப்பதை ஒரு கொள்கையாக்கி அதற்கென ஒரு அமைச்சரையும் நியமித்துள்ளது. இலங்கையின் தொழிற்படையின் அங்கத்தவர்களில் இருபது இலட்சத்தினர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். 2010ம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி இந்தத் தொகை நாட்டின் தொழிற்படையின் 23.8 வீதமாகும். இவர்களில் 90 வீதத்தினர் மத்திய கிழக்கு நாடுகளில் கடமையாற்றுகிறார்கள். இதில் 80 வீதத்தினர் துறைசார்பயிற்சித் திறனற்ற(unskilled) ஊழியர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 60 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். இந்தப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாகப் பலவித இன்னல்களுக்கு மத்தியில் சேவையாற்றுகிறார்கள். இந்த வெளிநாட்டு உழைப்பாளர்களே இலங்கையின் வெளிநாட்டுச்செலாவணியின் மிகப் பெரும் பகுதியை உழைத்துக் கொடுக்கிறார்கள். மத்தியகிழக்கு நாடுகளில் வீட்டுப்பணியாளர்களாக உழைக்கும் இலங்கைப்பெண்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாவது பற்றி நிறைய செய்திகளும் ஆய்வறிக்கைகளும் வெளிவந்துள்ளன. மறுபுறம் இத்தகைய நகர்ச்சியால் உள்நாட்டில் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றியும் பல செய்திகளும் ஆய்வுக்கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
உள்நாட்டில் ஊழிய உறவுகள் பெருமளவு தற்காலிகமயப்படுதல் மற்றும் தொழில் தேடி வெளிநாட்டுக்குப் பயணித்தல் போன்ற போக்குகள் தொடர்ச்சியாக பெண்பால் மயமாக்கப்பட்டு (Feminisation) வருவதைக் காண்கிறோம்.வர்க்க ரீதியான சுரண்டலின் பால்ரீதியான பரிமாணத்தையும் உழைப்பின் சுரண்டலை அதிகரிக்க ஆணாதிக்க அடக்குமுறை பயன்படுத்தப்படுவதையும் காணத்தவறக்கூடாது. இத்தகைய போக்கு கிழக்குஆசியாவிலும் இருந்தது. ஆனால் அங்கு பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தியதுடன் உற்பத்தி சக்திகளின் விருத்திக்கான வசதிகளும் இருந்தன. இப்படிச் சொல்வது பெண்கள் மீதான சுரண்டலையோ அடக்குமுறையையோ நியாயப்படுத்துவதெனக் கொள்ளக்கூடாது. நான் சொல்ல விரும்புவதென்னவெனில் உழைப்பை மேலும் திறமையாகச் சுரண்டுவதற்கு விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் மூலதனம் கண்ணாயிருக்கும் இடத்திலேயே முதலாளித்துவத்தின் அபிவிருத்தியும் ஏற்படுகிறது.

III

வடக்கில் நடப்பதென்ன?

அழகெனப்படுவது அவரவர் பார்வையைப் பொறுத்தது என்பார்கள். இது அபிவிருத்திக்கும் பொருந்தும். ஒருவர் அபிவிருத்தி என்பதை இன்னொருவர் மறுக்கலாம். வடக்குக் கிழக்கில் போருக்குப் பின்னான அபிவிருத்தி பற்றி அரசாங்கத்தின் பிரச்சாரம் ஓய்வின்றித் தொடர்கிறது. ‘கிழக்கின் உதயம்’ ‘வடக்கின் வசந்தம்’ அழகான வார்த்தைகள். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. தமது பிரச்சாரத்திற்குத் துணையாகப் பல செயற்பாடுகளை ஆட்சியாளர் காட்டுகிறார்கள். உட்கட்டுமானத்திட்டங்கள், உல்லாசவிடுதிகள், மீள்குடியேற்ற செயற்பாடுகள், புதிய கட்டிடங்களின் திறப்பு விழாக்கள் போன்றவை பிரச்சாரத்தின் காட்சிப் பொருட்கள். புதுப்பிக்கப்பட்ட A9 பாதை வடக்கின் வசந்தத்தின் பாதைப் போல் படுகிறது. ஆனால் “உதயத்திற்கும்” “வசந்தத்திற்கும்” மறுபக்கங்கள் உண்டு.

சமீபத்தில் நானும் A9 பாதையில் யாழ்வரை சென்று வந்தேன். குடாநாட்டிலும் வன்னியிலும் பலவற்றைக் கண்டேன். பலருடன் கலந்துரையாடினேன். நடைபெறும் ‘அபிவிருத்தியின்’ அரசியல் பற்றிக் கருத்துப்பரிமாறினேன். அரசியல் தீர்வை நிராகரிக்கும் ஆட்சியில் அபிவிருத்தி அடக்குமுறையின் கருவியாக்கப்பட்டுள்ளது என்பதே எனது முடிவு. இந்தக் கருத்தினை 15.04.2013 ல் நான் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தேன். அங்கே மாற்றங்கள் இடம்பெறவில்லை என்பதல்ல. அங்கு முதலீடுகள் இல்லை என நான் சொல்லவில்லை. பொருளாதார வளர்ச்சி இல்லை என்பதுமல்ல. ஆனால் இவை அனைத்தும் அடிப்படை மனித சுதந்திரங்களை தமக்குப் பெறுமதிமிக்கதெனக் கருதும் இருப்புக்களையும் செயற்பாடுகளையும் தேடி அனுபவிக்கும் சுதந்திரத்தை உரிமைகளுக்காகக் கூட்டு முயற்சி எடுக்கும் சுதந்திரத்தை எல்லாம் மறுக்கும் இராணுவ மயமாக்கப்பட்ட ஆட்சிமுறைக்குள்ளே இடம் பெறுகின்றன.

‘அரசாங்கம் சொல்லும் அபிவிருத்தி A9 தெருவோரங்களுக்கப்பால் செல்லவில்லை’ என வன்னியில் நான் சந்தித்த ஆசிரியர் ஒருவர் சொன்னார். வன்னிக்கு உள்ளே செல்பவர்கள் குறைவிருத்தியின் மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களின் நிலத்தோற்றத்தைக் காண்பார்கள். வசந்தத்தின் வருகைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. தமது வாழ்வை மீட்டெடுக்கத்தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அடிப்படைத் தேவைக்களுக்கான போராட்டம்.போர்காலத்தில் புலிகளின் இராணுவ ஆட்சியில் வாழ்ந்த இம்மக்கள் இப்போ “அமைதி” காலத்தில் இலங்கை அரசின் இராணுவ ஆட்சியில் வாழ்கிறார்கள்.

வடக்குக்கிழக்கின் போருக்குப்பின்னான அமைதி ஒரு எதிர்மறை அமைதி (Negative Peace) அங்கே முன்பு போல் யுத்தமும் இல்லை. போர்காலத்து சோதனை நிலையங்கள் பொதுவாக மூடப்பட்டுள்ளன. ஆனால் இராணுவமயமாக்கல் தொடர்கிறது. நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. மனிதபாதுகாப்பு அரசின் பாதுகாப்புக்குக் கீழ்படுத்தப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்தை முற்றாக அழித்த ஒரே நாடு’ என அரசாங்கம் மார்தட்டி உலகுக்கு அறிவித்துக் கொள்ளும் அதேவேளை மீண்டும் பயங்கரவாதம் தலையெடுக்கும் ஆபத்து உள்ளது என்றும் தேசத்தின் இறைமையே எல்லாவற்றையும் விட முதலானது என்றும் பாதுகாப்புமயமாக்கலை (Securitisation) நியாயப்படுத்துகிறது. இந்த நிலைமைகள் “அரசியல் என்பது உண்மையில் வேறு வழிகளுக்கூடான போரின் தொடர்ச்சியே” எனும் Foucault (1976) ன் வாசகத்தை நினைவூட்டுகின்றன. இது Clausewitz (1832) ன் பிரபல்யமான வாசகமான “போர் என்பது மாற்றுவழிக்களுக் ஊடான அரசியலின் தொடர்ச்சியே” என்பதை தலைகீழாக்குகிறது.

வடக்கின் வசந்தம்: மத்தியமயப்படுத்தப்பட்ட செயலணி

2009 ஐந்தாம் மாதம் போர் முடிவுக்கு வந்தபின்னர் வடக்கின் அபிவிருத்திக்குப் பொறுப்பாக திரு பசில் ராஜபக்சவின் தலைமையில் ஜனாதிபதி செயலணி (Presidential Task Force – PTF) உருவாக்கப்பட்டது. இதற்கு 19 அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் மத்திய அரசாங்கத்தின் உயர்மட்ட நிர்வாகிகளும் ஆவர்.இந்த PTF ல் வடக்கு சமூகத்தைச் சார்ந்த ஒருவர்கூட இல்லை.வடக்கின் அபிவிருத்தியை இராணுவத்தினதும் மத்திய அரச நிர்வாகத்தினதும் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வழி நடத்தும் திட்டமிட்ட நோக்கிலேயே இந்தச் செலயலணி உருவாக்கப்பட்டதென்பது அதன் அமைப்பிலும் உள்ளடக்கத்திலுமிருந்து வெளிப்படையாகிறது. எதுவிதமான பிரதேச ரீதியான அற்ப அதிகராப்பகிர்வுக்குக் கூட இடமளிக்காத வகையிலே வடக்கின் போருக்குப்பின்னரான அபிவிருத்தியின் நிர்வாக ரீதியான சட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்குடன் ஒப்பிடும் போது நடைமுறையிலிருந்து பெருமளவு வேறுபடாவிட்டாலும் நிறுவன ரீதியில் PTF ன் அதிகாரம் விசேட முக்கியத்துவம் கொண்டதென்பதைக் சுட்டிக்காட்டத்தேவையில்லை.
மாகாணசபை கூட இல்லாத நிலையில் இராணுவஆட்சியின் கீழ் பாதுகாப்பைக் காரணம் காட்டி நிலஅபகரிப்புக்களை செய்வது சுலபமாகிவிட்டது. அதேபோன்று பாதுகாப்பின் பெயரால் சிவில்சமூகத்தையும் அரசுசாரா நிறுவனங்களையும் கட்டுப்படுத்துவதும் சுலபமாகி விட்டது. வடக்கில் மாகாணசபை உருவாவதை முடிந்தவரை தவிர்க்கும் நோக்குடனேயே அபிவிருத்தி எனும் போர்வைக்குள் இராணுவமயமாக்கலும் நிர்வாகத்தின் மத்தியமயமாக்கலும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன என்பது தெளிவாகிறது.

அபிவிருத்திப் பிரச்சனைகளும் மனித மேம்பாட்டுத்தடைகளும்

வடக்கிலும் கிழக்கிலும் பல அபிவிருத்திப்பிரச்சனைகள் உண்டு. இவை மனித மேம்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவை. பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களின் பலவீனங்களும் ஸ்திரமின்மையும் அவர்களின் மனித மேம்பாட்டின் விருத்தியைப் பாதிக்கின்றன. மறுபுறம் மனித ஆற்றலின் குறைவிருத்தி அவர்களின் வாழ்வாதாரங்களின் விருத்தியைப் பாதிக்கின்றது. இத்தகைய பிரச்சனைகளைத் தனிமனித மட்டத்திலோ குடும்பமட்டத்திலோ முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. அவற்றைப் பரந்த அரசியல் பொருளாதார மட்டத்தில் இனங்காணல் அவசியம், போரினதும் சுனாமியினதும் விளைவுகளுடன் போருக்குப் பின்னர் நடைபெறும் மாற்றங்களும் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.
நிலம் மற்றும் கரையோரவளங்கள் மீதான கட்டுப்பாடுகள், உடைமை மாற்றங்கள் பலரின் வாழ்வாதாரங்களைப் பாதித்துள்ளன. மூன்று தசாப்தங்களாகப் போர் வடக்கு கிழக்கின் அரசியல் பொருளாதாரத்தைக் கரையோரக் கடல்வளங்கள் போன்றவற்றை கைக்கொள்ளும் சூழலையும் சாத்தியப்பாடுகளையும் தொடர்ச்சியாகப் பாதித்தது. இடம்பெயர்வுகள் எப்போதும் ஆயுதப்போரின் தவிர்க்கமுடியாத விளைவுகள் அல்ல. வடக்குக்கிழக்கில் பெருமளவிலான இடப்பெயர்வுகள் இலங்கை இராணுவத்தினதும் விடுதலைப்புலிகளினதும் திட்டமிட்ட நடவடிக்கைகள் ஆகும். உயர்பாதுகாப்பு வலயங்கள், இராணுவத்தளங்கள், பாதுகாப்புஅரண்கள் போன்றவற்றினால் மக்களின் வாழ்வும் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டன. மக்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரங்களும் இருசாராரின் இராணுவ அரசியல் முன்னுரிமைகளுக்குக் கீழ்படுத்தப்பட்டன. ஆகவே திட்டமிட்ட இடப்பெயர்வுகளும் இனச்சுத்திகரிப்பும் இரு கட்சிகளினதும் பொதுப்பண்பாக இருந்தது. இடப்பெயர்வு, வாழ்வாதாரங்களின் இழப்பு, உழைப்பாற்றல் கொண்ட குடும்ப அங்கத்தவர்களின் இழப்பு, சுகாதார கல்வி வசதிகளின் சீரழிவும் இழப்பும் எல்லாம் தற்காலிக மனிதாபிமான பிரச்சனைகளாக மட்டுமே இனங்காணப்பட்டு இவற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிறுவனங்கள் உதவிகளை வழங்கினர்.இந்த மனிதாபிமானப்பிரச்சனைகள் எதிர்பார்த்ததையும் விட நீண்டகாலப் பிரச்சனைகளாயின. நிவாரண நிறுவனங்களின் மனிதாபிமானப்பங்கு பாரட்டப்பட வேண்டியதே. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட சந்ததியினருக்குப் பயனுள்ள சுகாதார கல்வி மற்றய தொழிற்பயிற்சி வசதிகளும் வாய்ப்புக்களும் கிட்டவில்லை. இவற்றின் விளைவுகள் மனித அபிவிருத்திக்கு குறிப்பாக இளம் சந்ததியினரின் முன்னேற்றத்திற்குத் தடைகளாயின. இதனால் ஏற்பட்ட மனித ஆற்றலின் குறைவிருத்தி தனிமனிதரினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்தும் தடையாக இருக்கிறது.

வடக்கு கிழக்கில் நிலமும் கரையோர வளங்களும் மக்களின் வாழ்வாதாரச்சாதனங்கள் அல்லது தனியார் துறையின் முதலீட்டுக்கான பொருளாதார வளங்கள் மட்டுமல்ல இவை அங்கு வாழும் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களின் கூட்டு அடையாளங்களுடனும் கலாச்சாரவாழ்க்கையுடனும் நெருங்கிய தொடர்புடையன. இது ஆழமான முரண்பாடுகளாகிப் பெரிய அரசியல் பிரச்சனையாகிவிட்டது. குறிப்பாக தமிழ்மக்களின் தாயகக் கோரிக்கையும் அரசகாணிகளில் குடியேற்றங்களுக்கும் நில அபகரிப்புக்கும் எதிராக இவ்விரு சமூகத்தினரும் தெரிவிக்கும் எதிர்ப்பும் போருக்குப் பின்னர் முக்கிய பிரச்சனைகளாகிவிட்டன. தாயகக் கோரிக்கையை நிராகரித்து இராணுவரீதியான வெற்றிக்கூடாக முழுப்பிரதேசத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள அரசு அந்தப் பிரதேசம் மீதான பூரண கட்டுப்பாட்டை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காத வகையிலே அதன் வளங்களின் உடைமை உறவுகளை மீளமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதுபற்றி ஏற்கனவே விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன் (பார்க்க- சமகாலம் ஒக்ரோபர் 1-15/2012.).

போருக்குப்பின்னர் தொடரும் உயர்பாதுகாப்பு வலயங்கள் இவற்றை நிரந்தரமாக இராணுவமுகாம்களாவும் குடியிருப்புக்களாகவும் மாற்றும் திட்டங்கள், விசேட பொருளாதார வலயங்களின் பிரகடனங்கள், பெளத்த புனித பிரதேசப் பிரகடனங்கள், இனரீதியில் ஜனத்தொகை விகிதாசாரத்தை மாற்றும் நோக்கில் குறிப்பிட்ட பிரதேசங்களை முன்பு தொடர்பற்ற பிரதேசங்களுடன் நிர்வாக ரீதியில் இணைத்தல் போன்ற மாற்றங்கள் புதிய இடப்பெயர்வுகளை ஏற்படுத்துவதுடன் நிலம், கரையோரவளங்களில் தங்கியிருப்போரின் மீள்குடியிருப்பு வாழ்வாதாரங்களின் மீள் நிர்மாணிப்பு போன்றவற்றை மேலும் உறுதியற்ற நிலைக்குத்தள்ளி அவர்களை இடர்பாட்டுக்குள்ளாக்குகின்றன. யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கில் இராணுவப்பிரதேசமாக இருந்த பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 6381 ஏக்கர் (25.8 சதுர கிலோ மீட்டர்கள்) நிலப்பரப்பைப் பாதுகாப்புப்படையின் தலைமையகத்திற்காக எடுத்துக் கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 20 வருடங்களுக்கு மேலாக இடம் பெயர்ந்து வாழும் இந்த நிலங்களின் உரிமையாளர்களும் ஆதரவாளர்களும் இராணுவத்தின் நிலஅபகரிப்புக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய நிலஅபகரிப்பு ஒரு ஒற்றையான நிகழ்ச்சி அல்ல. அரசின் பாதுகாப்பு, இறைமை எனும் காரணங்களைக் காட்டி இத்தகைய நில அபகரிப்புத் தொடரலாம்.அத்துடன் “பழைமை வாய்ந்த” புனித இடங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்படலாம். மறுபுறம் அபிவிருத்தியின் பெயரால் உயர்பெறுமதி உள்ள வளங்களை பெருமுதலீட்டாளர்கள் கைப்பற்றலாம். இவை எல்லாம் சுமூகமாக நடைபெற வேண்டுமானால் ஜனநாயக மயமாக்கல், அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு போன்றவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். நாட்டில் இனப்பிரச்சனை என ஒன்றில்லை. இருந்தது, ஒரு பயங்கரவாதப்பிரச்சனை மட்டுமே. அது தீர்ந்து விட்டது. இப்போது இந்த நாடு எல்லா இலங்கையருக்கும் சொந்தம் என்கிறார் ஜனாதிபதி ஆனால் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்ற பொதுபலசேனா(BBS) அப்படியல்ல இது சிங்கள பெளத்த நாடென்கிறது

மீள்குடியேற்றம் இன்னும் முடிவு பெறாத ஒரு கதையாகத் தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை. இவர்களில் பலர் தமது சொந்த இடங்களை நிரந்தரமாக இழந்துள்ளனர். தற்போது இடம்பெயர்ந்துள்ளோரின் சரியான தொகையை அறிவது கடினம். அரசாங்கத்தைப் பொறுத்தவரை மீள்குடியேற்றம் வெற்றிகரமாக முடிவேறிவிட்டது. ஆனால் International Displacement Monitoring Centre ( IDMC)ன் 2012 ம் ஆண்டு ஒன்பதாம் மாத அறிக்கையின் படி 115.000 மேற்பட்ட இடம்பெயர்ந்தோர் உள்ளனர். இவர்களில் ஒருபகுதியினர் முகாம்களிலும் பெரும்பகுதியினர் வேறு குடும்பங்களுடனும் தங்கியுள்ளனர்.
வேறு சமீபத்திய அறிக்கைகள் பல்லாயிரக்கணக்கான விதவைகளின் அல்லது பெண்களைத் தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களின் இடர்பாடுகள் பற்றி அறியத்தருகின்றன. ஐநாவின் சேவைநிறுவனமான IRIN மற்றும் உள்நாட்டில் இயங்கும் சில அரசுசாரா நிறுவனங்கள் இந்தப் பெண்களின் தற்போதைய நிலமை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளன.
வடக்கில் இடம்பெறும் உட்கட்டுமான மற்றும் கட்டிட நிர்மாணத்திட்டங்களில் ஆண்களைவிடப் பெண்களுக்கான வேலைவாய்ப்புக்கள் குறைவு. நடைமுறையில் இரு பாலாரும் எதிர்கொள்ளும் தொழிற்திறமையின்மையினால் இருக்கின்ற வேலைவாய்ப்புக்களினையும் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது தற்காலிக நாளாந்தக்கூலி வேலைவாய்ப்புக்கள் அன்றாட உயிர்வாழலுக்கு உதவமுடியும். ஆனால் இவை குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு ஸ்திரமான நீண்ட கால அடித்தளத்தைக் கட்ட உதவ மாட்டா. இது ஆண்தொழிலாளர்களுக்கும் பொருந்தும் ஆயினும் பெண்கள் மிக்க குறிப்பாக விதவைகள் வாழ்வாதார விருத்திச் சந்தர்ப்பங்களின்றி அவலங்களுக்குள்ளாகுவதற்கு தமிழ் சமூகத்தின் பிற்போக்கான ஆணாதிக்க விழுமியங்களும் அதிகார உறவுகளும் முக்கிய காரணங்களாகும். போருக்குப்பின்னரான அபிவிருத்தி ஜனநாயக உரிமை மறுப்பு இராணுவமயமாக்கலில் ஆழமாகப் படிந்துள்ள ஆணாதிக்கப்போக்கு போன்றவை பெண்கள் மீதான பழைய ஒடுக்குமுறை அதிகார உறவுகளை மேலும் பலப்படுத்தி அவர்களின் அடிப்படையான பாதுகாப்பையும் இருப்புச்சுதந்திரத்தையும் சீரழித்துள்ளதை நாம் நேரிலே காண்கிறோம். இன்று பல்லாயிரக்கணக்கில் பால்ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு மனிதப்பாதுகாப்பற்றவர்களாகப்பட்டுள்ள நிலையிலுள்ள விதவைகள் மற்றும் முன்னை நாள் பெண் போராளிகளின் குழந்தைகளின் எதிர்காலமும் இருள் மயமாகவே உள்ளது. இந்தப்பிரச்சனை பற்றிச் சில பெண்கள் அமைப்புக்கள் குரலெழுப்பும் போதும் இதுவரை அது ஒரு சமூகப்பிரச்சனையாகப் பரந்த மட்டத்தில் உணரப்படவில்லைப் போலத் தெரிகிறது. இதை ஒரு சமூக – பொருளாதார – அரசியல் பிரச்சனையாக எழுப்புவது அவசியம். தமிழ்மக்களின் உரிமைகள் பற்றிப் பேசும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிநிரலில் இந்தப்பிரச்சனை இடம் பெற வேண்டும்.

சிறிய உற்பத்தியாளர்களாகவுள்ள விவசாயிகளின் மீனவர்களின் வாழ்வாதாரங்களின் ஸ்திரப்பாடு வளங்களைக் கைக்கொள்வதற்குமப்பால் வேறுவழிகளாலும் பாதிக்கப்படுகிறது. இவர்களின் வெளியீடுகளின் சந்தைப்டுத்தல் இவர்களையும் விட அதிகாரபலம் கொண்ட தரகர்களிலேயே தங்கியுள்ளது. வாங்குவோரால் ஓட்டப்படும் பண்டச்சங்கிலித்தொடரில் (Buyer- Driven commodity chain) இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். இந்த உறவில் பொதுவாக மொத்தமாகக் கொள்வனவு செய்வோரே (வாங்குவோரே) சிறிய உற்பத்திப்பண்டங்களின் விலையை நிர்ணயிக்கின்றனர். இவர்கள் நிறுவனரீதி பலமுள்ளவர்கள் அதுமட்டுமின்றி நகர்ப்புறம் மற்றும் ஏற்றுமதிச்சந்தைகள் பற்றிச் சிறு உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்காத தகவல்களையும் நன்கு அறிந்தவர்கள். ஸ்தாபன பலமற்ற நிலையிலுள்ள சிறு உற்பத்தியாளர்கள் வாங்குவோர் சொல்லும் விலையை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாட்டின் மறுபாகங்களிலும் காணப்படும் ஒரு உலக ரீதியான பிரச்சனை. ஆனால் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை போர்காலத்தின் குறைவிருத்தி தொழில்நுட்ப ரீதியான ஸ்தாபன ரீதியான பின்னடைவுகள் மனித வளத்தின் குறைபாடுகள் உற்பத்தி மூலதனச் சொத்துக்களின் அழிவு போன்ற காரணங்களால் இன்றைய உற்பத்தியாளர்கள் ஆழமான அசமத்துவமான அதிகார உறவுகளில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இந்த உறவுகள் தனியே பொருளாதார உறவுகள் மட்டுமல்ல. இங்கும் இராணுவமயமாக்கல் பொருளாதார உறவுகளுடன் கலக்கின்றன. வடக்கில் சிறு உற்பத்தியாளர் ஒரு புறம் தரகர்களிடம் கடனாளிகிறார்கள் மறுபுறம் விவசாயத்திலும் மீன்பிடித்துறையிலும் இராணுவத்தினர் ஈடுபடுவதால் மேலும் ஒரு அசமத்துவ உறவுக்குள்ளாக்கப்படுகிறார்கள். வடக்கு மீனவர்கள் தம்மை விட மிகப்பலம் வாய்ந்த இந்திய மற்றும் தென்னிலங்கை மீன்பிடியாளர்களுடன் போட்டி போட முடியாத நிலையில் உள்ளனர்.
இத்தகைய சந்தை உறவுகளின் விளைவாக சிறு உற்பத்தியாளரினால் சந்தைப்படுத்தக் கூடிய உற்பத்தியை போதியளவு அதிகரித்து லாபம் பெறக்கூடிய விலைக்கு விற்பது சுலபமல்ல. பலரைப் பொறுத்தவரை முடியாத காரியம். பலர் சந்தைத் தரகர்களிடம் கடனாளிகளாகிறார்கள். இது வறுமையின் மீள் உற்பத்திக்கு உதவுகிறது.

சமீபகாலத்தில் வடக்கில் பலர் வங்கிகளிடம் பெற்ற கடனைத் திருப்பிக் கட்டமுடியாத நிலையில் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகளுக்கு உழவு மற்றும் அறுவடை இயந்திரங்களை வாங்குவதற்கும் வீடு கட்டுவதற்கும் மற்றும் தொழில் செய்ய வாகனம் தேவைப்படுவோருக்கு இலகுவாக கடன் வழங்க வங்கிகள் முன்வந்தன.பெரும் கடனைப்பெறுவது முன்பைவிடச் சுலபமாகவிருந்தது. ஆனால் அதை வட்டியுடன் திருப்பிக்கட்டமுடியாததால் பலர் முன்பைவிடவும் துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுவரை இத்தகைய நெருக்கடிநிலை காரணமாக 19 தொழில்முனைவோர் தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகிறது.
உழவு மற்றும் அறுவடை இயந்திரங்கள் வாங்கப்பெற்ற கடனை திருப்பிக் கட்டமுடியாது வாங்கிய இயந்திரங்களினை கடன் வழங்கிய நிறுவனங்களிடம் இழந்தோர் பற்றிய கதைகளை கிளிநொச்சியில் கேள்விப்பட்டேன். இத்தகைய இயந்திரங்களினையும் மற்றும் வாகனங்களினையும் வாங்க கடன் பெறவிரும்புவோருக்குப் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கும் வசதிகள் இல்லாமையும் ஒரு குறைபாடாகும். நான் அறிந்த தகவலின்படி ஒரு உழவு இயந்திரத்தின் விலை 12 இலட்சம் ரூபாய்கள் என்றால் அதில் 75 வீதத்தினைக் கடனாக பெறமுடியும். மிகுதி 25 வீதத்தினை கடன் பெறுவோர் செலுத்த வேண்டும். ஆனால் பலரிடம் மூன்று இலட்சம் ரூபாய்கள் சேமிப்பாக இல்லை. இவர்கள் இந்தப்பணத்தையும் தனிநபர்களிடமிருந்து கடனாகப் பெற்றே கட்டியுள்ளனர். இத்தகையோர் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில், விசேடமாக குடாநாட்டில் வாழும் கணிசமான குடும்பங்களுக்கு வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் பணம் அனுப்புவதால் அவர்களின் வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது. இதன் விளைவாக வெளிநாட்டு நுகர்பொருட்களுக்கான கேள்வி உயர்வதால் வடக்கில் வாணிபம் வளர்ந்துள்ளது.அத்துடன் அங்கு ஒரு நுகர்வுவாத அலையும் எழுந்துள்ளது. வங்கிகளில் சேமிப்பும் அதிகரித்துள்ளது. ஆயினும் இந்தச் சேமிப்பு உபரி உள்ளூரிலேயே உற்பத்தி மூலதனமாக மாற்றப்படும் வாய்ப்புக்கள் வடக்கில் இன்னமும் அரிதாகவே உள்ளது. புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியினால் உருவாக்கப்படும் நுகர்வுக்கலாச்சாரம் எந்நேரமும் உடைந்து போகக்கூடிய குமிழிப்பொருளாதாரம். இதன் பாதகமான சமூகப் பொருளாதார விளைவுகள் பற்றிய உணர்வு குன்றிய நிலையிலேயே தமிழ்சமூகம் உள்ளது போல் தெரிகின்றது.
போரினால் அழிவுக்குள்ளான பிரதேசங்களின் அபிவிருத்திக்குப் பல சவால்கள் உள்ள அதேவேளை பல புதிய சந்தர்ப்பங்களும் உண்டு. இந்தச் சந்தர்ப்பங்களை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விமோசனத்தை மையமாகக் கொண்டு அவர்கள் தமது கால்களில் எழுந்து நின்று முன்னேற்ற உதவும் வகையில் பயன்படும் கொள்கைத்திட்டங்கள் அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தவல்ல நிறுவனங்கள் அற்ற நிலையில் ஏற்கனவே போதிய மூலதனபலமும், அனுபவமும், அரசியல் செல்வாக்குமுடையோரே அவற்றினால் பயனடைவர். போருக்குப்பின்னான வடபகுதியின் அபிவிருத்தியை ஆளும் நிறுவன ரீதியான சட்டகம் இதற்குத்தான் உதவியுள்ளது.

இந்தநிலை தானாக மாறப்போவதில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் இன்றைய சிக்கலான நிலைமையினை மேலும் பலப்படுத்தும் போக்கினையே கொண்டுள்ளனர். வடக்கு மக்களுக்கு மாகாணசபை கிடைப்பதனை தவிர்ப்பதற்காக 25 வருடங்களுக்கு மேலாக நடைமுறையிலிருக்கும் சட்டத்தினையே நீக்க முயற்சிக்கும் ஆட்சியாளர்களிடமிருந்து நீதியான மாற்றத்தை எதிர்பார்ப்பது அறிவிலித்தனமாகும். அரசியல் தீர்வுக்கும் ஜனநாயகமாக்கலுக்கும் சாதகமான ஆட்சிமாற்றத்திலேயே இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது. இந்த வகையில் தமிழ் மக்களினதும் சிங்கள முஸ்ஸீம் மக்களினதும் எதிர்காலம் பின்னிப் பிணைந்துள்ளது. இதனை நோக்கிய போராட்டமே இன்று முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டமாகும்.

(இந்தக் கட்டுரை 2013 ஆம் ஆண்டு எழுதப்பட்டு ‘சமகாலம்’ சஞ்சிகையில்     பிரசுரிக்கப்பட்டது )

தோழர் விசுவானந்ததேவன் – ஓர் அரசியல் உறவு பற்றிய மீள்சிந்திப்பு

1983 யூலை வன்செயல்கள் இலங்கைத்தீவை உலுக்கிய போது நான் ஜப்பானில் வாழ்ந்து வந்தேன். அந்த நாட்களில் ஒரு ஜப்பானியக் கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். தாய் நாட்டிலிருந்து வந்த செய்திகளினால் மிகவும் தாக்கப்பட்டிருந்தேன். என் கள ஆய்வினைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு இலங்கையின் அரசியல் நிலை மற்றும் தேசிய இனப்பிரச்சனை பற்றி சிந்திக்க முற்பட்டேன். ஒரு நீண்ட கட்டுரை அதன் விளைவாகியது. அது சிங்களப் பெருந்தேசியவாதம் பற்றியது. கட்டுரையை எழுதிய பின்னர் சென்னைக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அங்கே இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர் ஒருவரை சந்தித்தபோது அன்று அவரது கட்சியின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டிக்கும் பேரணி ஒன்று இடம் பெறுவதாக கூறி என்னையும் அதில் பங்குபற்றும் படி அழைத்தார். அதனை ஏற்றுக் கொண்டு நான் அவருடன் அந்த பேரணியில் பங்குபற்றினேன். கட்சியின் செங்கொடிகளுடனும் பதாகைகளுடனும் பேரணி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளானோர் பங்கு பற்றினர்.

பேரணி முடிந்த பின்னர் பலர் சமீபத்தில் உள்ள பூந்தோட்டத்தில் ஓய்வெடுக்கச் சென்றனர். நானும் எனது இந்திய தோழருடன் அங்கு சென்றேன். அங்கே தான் நீண்ட காலத்திற்கு பின் விசுவாவுடன் எனது எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. நீண்டு வளர்ந்து விட்ட தலைமுடியும் தாடியுமாக அவர் காட்சி தந்தார். அந்தச் சந்திப்பு நம்மிருவருக்குமிடையிலான உறவைப் புதுப்பிக்கும் நிகழ்வாகியது.

நான் சென்னையில் தங்கியிருந்த நாட்களில் நம்மிடையே நீண்ட உரையாடல்கள் இடம் பெற்றன. நான் எழுதிய கட்டுரையை வாசித்து அதுபற்றி அவரது அபிப்பிராயத்தைக் கூறும்படி கேட்டேன். அவர் சம்மதித்தார். மறுநாள் அவரை சந்தித்தபோது கட்டுரையை தான் வாசித்ததாகவும் அது கூடியவிரைவில் பிரசுரிக்கப்படவேண்டும் எனவும் கூறினார். பிரசுரிப்பதற்கு வேண்டிய உதவிகளையும் செய்வதாகக் கூறினார். கட்டுரையைக் காவ்யா பதிப்பகத்தினர் நூல் வடிவில் வெளியிட்டனர். எனது நூல் பற்றி கிரிதர் எனும் புனைபெயரில் விசுவா ‘புதுசு’ எனும் சஞ்சிகையில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

ஆனால் விசுவாவுடன் ஏற்பட்ட தொடர்பு முக்கியமாக அவர் தலைமையில் உருவாகிக் கொண்டிருந்த N.L.F.T இயக்கம் பற்றியது என்பதைக் குறிப்பிட வேண்டும். இதுபற்றி நிறைய கலந்துரையாடினோம். அவர் இலங்கையின் அரசியல் போக்குகள், தேசிய இனப்பிரச்சனையின் தன்மைகள் மற்றும் பிராந்திய அரசியல் நிலைமை, இந்தியாவில் அப்போது இடம்பெற்ற போராட்டங்கள் போன்ற விடயங்களை ஆழ ஆராய்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். நமது சம்பாசனைகளில் இந்த விடயங்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் இலங்கைப் புரட்சிக்குமிடையிலான உறவு சிங்கள முற்போக்கு சக்திகளுடன் தொடர்புகளை வளர்ப்பது பற்றி, மற்றும் இந்திய அரசின் நேரடியான மறைமுகமான உதவிகளுடன் தமிழ்நாட்டில் முகாமிட்டிருக்கும் தமிழீழ விடுதலை இயக்கங்களின் அரசியல் பற்றி நிறைய பேசினோம். அன்றைய சூழலில் ‘ஒரு மாக்சிச-லெனினிச’ அமைப்பினை இந்திய அரசும், ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டு ஆளும் மற்றும் பிரதான திராவிடக் கட்சிகளும் எப்படிப் பார்ப்பார்கள்? அத்தகைய ஒரு வெளிநாட்டு அமைப்பு இந்தியாவில் இயங்க முடியுமா? இந்தக் கேள்விகள் எழுந்தன. இவைபற்றி கொள்கை ரீதியில் விசுவா தெளிவாகவே இருந்தார். ஆனால் நடைமுறை ரீதியான பிரச்சனைகளைக் கையாளுவது பற்றி அவருக்கும் சந்தேகங்கள் குழப்பங்கள் இருந்திருக்கலாம்.

இந்தவிடயங்கள் பற்றி வேறுபல இடதுசாரிக் குழுக்களுடனும் தனிநபர்களுடனும் அவர் கலந்துரையாடியிருப்பார் என்று நம்புகிறேன். அந்த சந்திப்பினைத் தொடர்ந்து நம்மிருவருக்குமிடையே கடிதப் போக்குவரத்து இருந்தது.

மேற்குறிப்பிட்ட கேள்விகளும் அவற்றுடன் தொடர்புடைய வேறு பல கேள்விகளும் அந்தக் காலகட்டத்தில் முக்கியத்துவம் மிக்கவையாக விளங்கின. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஒரு வரலாற்று ரீதியான சந்தியில் நின்றது. அது எந்தத் திசையில் நகரும்? இந்திய வல்லரசின் கொள்கைகளும் உபாயங்களும் இயக்கங்களையும் போராட்டத்தின் அரசியல் போக்கையும் எப்படி பாதிக்கும்? இப்படிப் பல கேள்விகள்.

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை அதுவரை மேலாட்சி நிலைபெற்றுள்ள குறுகிய தேசியவாதத்திலிருந்து விடுவித்து மக்கள் ஜனநாயகப்புரட்சியின் பாதையில் முழு இலங்கையின் சமூக மாற்றத்திற்கு உதவக் கூடிய வகையில் முன்னெடுக்க கூடிய அரசியல் கொள்கையுடைய இயக்கம் ஒன்று தேவைப்பட்டது. இந்த தேவையை விசுவா நன்கு கிரகித்திருந்தார் என நான் நம்பினேன் நம்புகிறேன்.

ஆயினும் பின்நோக்கிப் பார்க்கும் போது ஆரம்பக் கட்டத்திலிருக்கும் N.L.F.T போன்ற ஓர் இயக்கம் ஏற்கனவே மேலும் பலம் பெற்று வருகின்ற குறுந்தேசியவாத அலைக்கும் அதைத் தன்னாட்சிக்குக் கீழ்ப்படுத்திக் கருத்தியல் கருவியாக்கிக் கொண்ட சுத்த இராணுவ வாதத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் இந்த எதிர்நீச்சலில் N.L.F.T தன் உள்ளார்ந்த முரண்பாடுகளால் துன்பகரமாக உடைந்து போயிற்று. இயக்கத்தின் இலட்சியத்தைப் பாதுகாத்து முன்னெடுக்கும் நோக்கில் விசுவா P.L.F.Tஐ உருவாக்கினார். N.L.F.T விரைவில் செயலிழந்து தன்னைத்தானே அழித்துக் கொண்டது. P.L.F.T அளவுரீதியல் ஒரு சிறிய அமைப்பாகவே இருந்தது. ஆனால் விசுவாவையும் அவருடன் பயணித்த தோழர்களையும் அழிக்க வேண்டுமென முடிவெடுத்து திட்டமிட்டு செயற்பட்ட சக்திகள் அவர் கொண்டிருந்த அரசியல் பார்வையையும் அதன் அடிப்படையில் அவர் கட்டியெழுப்ப எடுத்த செயற்பாடுகளையும் கண்டு பயந்தனர் என்பது தெளிவு. விசுவாவின் அறிவாற்றலும் திட சித்தமும் அவர்களை கலங்க வைத்தன.

விசுவாவின் நிலைப்பாட்டினால் நானும் ஆகர்சிக்கப்பட்டேன். அவர் கேட்டுக்கொண்டபடி N.L.F.T இன் (பிளவிற்குமுன்) வேலைத்திட்டம் பற்றி ஒரு ஆக்கபூர்வமான விமர்சனத்தை முன்வைத்தேன். இதுபற்றி ‘புரட்சிகர அரசியல் முதன்மை பெற’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து புதிய ஜனநாயகப் புரட்சி பற்றியும் எழுதினேன். இந்தக் கட்டுரைகள் ஏற்கனவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆட்கொண்டிருந்த குறுந்தேசியவாதம் மற்றும் இராணுவ வாதம் ஆகியவற்றை எதிர்க்கும் அறிவுரீதியான பங்களிப்புகளாக வரையப்பட்டன. இவற்றில் நான் கூறிய கருத்துக்களையும் வாதங்களையும் விசுவா ஏற்றுக் கொண்டார்.

அப்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய எனது பார்வையும் அது பின்னர் மாற்றம் அடைந்தது பற்றியும் ஒரு சிறு குறிப்பு அவசியமாகிறது. நீண்டகாலமாக நான் வடக்கு கிழக்கின் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற கருத்தினை நிராகரித்து வந்தேன். முழு இலங்கையும் சார்ந்த அடிப்படையான சமூக, அரசியல் மாற்றத்திலேயே அந்நாட்டில் வாழும் சகல இனங்களின் விமோசனமும் தங்கியுள்ளது என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தேன். 1977க்கு பின்னர் தேசிய இனப்பிரச்சனை பற்றிய வாதங்கள் இடதுசாரிகள் மத்தியில் வலுப் பெற்றன. அதற்கு முக்கிய காரணமாக இருந்த வடக்கில் எழுந்து வரும் இளைஞர் குழுக்களின் போக்குகளை அவதானிக்க தொடங்கினேன். சில இளைஞர் குழுக்கள் இடதுசாரிக் கருத்துக்கள் பற்றியும் மற்றய நாடுகளில் இடம் பெற்ற அல்லது இடம்பெற்று வரும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் ஆர்வம் காட்டின. மாக்சியத் தத்துவம் பற்றியும் தேசிய இனப்பிரச்சனை பற்றி மாக்சின், லெனினின் கருத்துக்களையும் அறிய விரும்பின. இந்தக் குழுக்கள் பழைய தேசியவாதத் தலைமையை விமர்சித்தன நிராகரித்தன. இந்தப் போக்குகள் பற்றி அப்போது ஆங்கிலத்தில் சில கட்டுரைகளை எழுதியிருந்தேன். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய எனது நிலைப்பாட்டினை மீள் பரிசீலனைக்குள்ளாக்கினேன். அவர்கள் ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்பட்டுள்ள ஓர் இனம் என்பதை முன்பிருந்தே ஏற்றிருந்தேன். ஆனால் தமிழ் தேசியவாதிகளின் தேசிய இனக் கோட்பாட்டை நான் ஏற்கவில்லை. அவர்களின் ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன குறை’ என்ற கோசம் மிகவும் பிற்போக்குத் தனமானது என்பதே அன்றும் இன்றும் எனது நிலைப்பாடு.

ஆனால் வடக்குக் கிழக்கில் தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு லெனினிசப் பார்வையில் நியாயம் உண்டு என்ற நிலைப்பாட்டிற்கு படிப்படியாக வந்தேன். ஜரிஷ் பிரச்சனை பற்றி மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளும் எனது சிந்தனைக்கு உதவின. 1983 ல் வெளிவந்த Benedict Anderson எழுதிய Imagined Communities என்ற நூலும் என்னைக் கவர்ந்தது.

அன்றைய காலகட்டத்தில் தேசிய இனப்பிரச்சனை பற்றி நான் விசுவாவின் கருத்துகளுடன் பெருமளவில் ஒத்துப் போனதைப் புரிந்து கொள்ள இந்தப் பின்னணி உதவியாயிருக்கும் என நம்புகிறேன். ஆனால் இந்தக் கருத்து ரீதியான நிலைப்பாட்டிற்கும் மேலாதிக்க நிலை பெற்றுவரும் போராட்ட போக்கிற்குமிடையே ஒரு வெளி தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது எனும் யதார்த்தத்தை மறந்துவிடலாகாது.

ஆரம்ப கட்டத்திலேயே பிளவுபட்ட ஒரு சிறிய அமைப்பின் ஒரு பகுதியை அதாவது P..L.F.T ஐ வளர்த்தெடுக்க விசுவா தீவிரமாக செயற்பட்டார். மற்ற அமைப்புகளுக்கு பெருமளவில் பொருளாதார ரீதியான மற்றும் இராணுவ ரீதியான உதவிகள் கிடைத்தன. அளவு ரீதியிலும் இராணுவ பலத்திலும் அவை பெரிய நிறுவனங்களாகி விட்டன. அவை இந்திய அரசுடனும் தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளுடனும் தமது உறவுகளை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. விசுவாவின் அணுகுமுறையோ முற்றிலும் வேறானது. அவர் இந்தியாவிலுள்ள புரட்சிகர அமைப்புகள் மற்றும் விடுதலை இயக்கங்கள் மீது அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தார். அவற்றுடன் உறவுகளைத் தேடுவது அவருடைய அரசியல் கொள்கைக்கு உகந்ததாக இருந்தது. இந்த வேறுபாடு மிகவும் அடிப்படையானது. இதே போன்று தென்னிலங்கையின் அரசியல் போக்குகள் பற்றியும் அவர் ஆழமாக அறிந்திருந்தது மட்டுமன்றி அங்குள்ள முற்போக்கு சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது பற்றியும் ஆவலாயிருந்தார். மேலாட்சிச் செல்வாக்கு பெற்றிருந்த தமிழ் தேசியவாதத்திற்கும் விசுவாவின் அரசியல் நிலைப்பாட்டிற்குமிடையே இணைத்து வைக்க முடியாத முரண்பாடு இருந்தது. இதுவே தேசியவிடுதலை பற்றிய அவருடைய நிலைப்பாட்டினை நெறிப்படுத்தியது என்பதே எனது கணிப்பு.

ஆகவே இலங்கை அரசு, இந்திய அரசு மட்டுமல்லாது விடுதலைப்புலிகள் மற்றும் மற்றைய அமைப்புகளாலும் அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார் என்பதைப் புரிந்து கொள்வதில் பிரச்சனை எழ இடமில்லை. அவருக்கும் அவர் தலைமை தாங்கிய ஆரம்பகட்டத்திலிருந்த அமைப்புக்கும் பாரதூரமான தீங்கினை விளைவிப்பதில் பல்வேறு சக்திகள் ஈடுபட்டிருந்தன என நம்பலாம். 1986 ல் விசுவா கொலை செய்யப்பட்டதுடன் அவர் முன்னெடுத்த முயற்சிகள் எல்லாம் ஸ்தம்பிதமாயின. பின்நோக்கிப் பார்க்கும் போது விசுவாவின், அவருடைய P.L.F.T ன், சகல முயற்சிகளும் ஆரம்பக் கட்டங்களுக்கப்பால் தொடரமுடியாத ஒரு முடிவைப் பெற்றன எனலாம். விசுவாவின் அரசியல் வாழ்க்கை நீளமானது. அவர் மாணவப் பராயத்திலிருந்தே இயக்க அரசியலில் ஈடுபட்டவர். ஆனால் அவரது கொலை ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்ப அவர் எடுத்த முயற்சிக்கு ஒரு சில வருடங்களுக்கு அப்பால் தொடரமுடியாது முற்றுப்புள்ளி வைத்தது. அவர் பயங்கர பிற்போக்கு அலைகளுக்கெதிராக நீச்சல் செய்யத் துணிந்தார். அவரின் முடிவு ஈழத்தமிழரின் போராட்டம் மீளமுடியாதபடி திசைமாறி விட்டது எனும் பயங்கரமான உண்மையின் குறியீடு போல் அமைந்தது.

இந்தக் குறுகிய வரலாற்றினைப் பலர் மறந்திருக்கலாம். இன்னும் பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம் ஆனால் தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தின் வரலாறு ஒரு திசைமாறிய போராட்டத்தின் வரலாறாகியதன் விளைவுகளை இலங்கைத் தமிழ் மக்கள் இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளைவுகளின் தாக்கங்கள் பற்றி ஆழப்பார்த்தல் அவசியம். ஆயினும் அதை இந்தக் கட்டுரையில் செய்ய முடியாது. அதன் சில முக்கிய அம்சங்கள் பற்றி குறிப்பாக நிலப்பிரச்சனை, அரசியல் குடியேற்றத்திட்டங்கள், சர்வதேச மட்டும் உள்நாட்டு புலம்பெயர்வு, காசாதாரப் பொருளாதாரத்தின் விளைவுகள் இவையெல்லாம் ‘தாயகம்’ என வடக்குக் கிழக்கு தமிழர்கள் கோரிய ஆள்பரப்பில் ஏற்படுத்தியுள்ள புவியியல் ரீதியலான மாற்றங்கள் போன்றவை பற்றி நான் வேறு விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளேன். இங்கே சில விடயங்களை மட்டும் சுருக்கிக் கூற விரும்புகிறேன்

இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக ஆட்சி செலுத்திய அரசாங்கங்களின் கொள்கைகளினால் மற்றும் நீண்ட காலப் போரினதும் விடுதலைப்புலிகளின் இராணுவ மயமாக்கப்பட்ட கொள்கைகளின், நடைமுறைகளின் விளைவுகளாலும் தேசிய இனப்பிரச்சனை தன்மை ரீதியான மாற்றங்களை கண்டுள்ளது. ‘தேசம்’ ‘அடையாளம்’ எனும் போர்வைகள் வடக்குக் கிழக்கு தமிழர்களை குறுந்தேசியவாத சிந்தனைக்குள் சிறை வைத்தன. இதனால் இலங்கையிலுள்ள மற்றைய இனங்களான முஸ்லீம்களை மற்றும் மலையகத் தமிழர்களை இந்த ‘விடுதலைப் போராட்டத்தினால்’ ஆகர்சிக்க முடியவில்லை. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கான சக்திகளுடன் ஆக்கபூர்வமான உறவுகளை வளர்க்க முடியவில்லை. ஆரம்பக் கட்டங்களில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் நியாயப்பாட்டினை ஏற்றுக் கொண்ட இடதுசாரி சிங்களவர்களைக்கூட வென்றெடுக்க முடியாத அந்த ஆயுதப் போராட்டம் மறுபுறம் ‘தேசிய அடையாளம்’ எனும் கருத்தியல் போர்வையினால் தமிழர் சமூகத்திற்குள்ளே இருக்கும் வர்க்க, சாதி, பால் ரீதியான வேறுபாடுகளை மறைப்பதில் அதிகார நிலை பெற்றுவிட்ட சக்திகள் கண்ணாயிருந்தன. சர்வதேசரீதியிலும் போராட்டம் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டது.

ஆகவே மாற்றமடைந்து விட்ட உள்நாட்டு நிலைமைகளையும் சர்வதேச நிலைமைகளையும் நன்கு கிரகித்து இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையையும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும் மீள் சட்டகப்படுத்தும் (reframe செய்யும்) தேவை உள்ளது என வாதிட்டு வந்துள்ளேன். இன்றைய நிலைமைகளில் விசுவா 1986 ல் கொண்டிருந்த கருத்துக்களும் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்பது கண்கூடு. அவர் கொலை செய்யப்படாதிருந்தால் தொடர்ந்து உயிர் வாழ்ந்திருந்தால் தனது பணியை தொடர்ந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த எதிர்நீச்சலில் அவரும் அவரது இயக்கமும் எவ்வளவு தூரம் முன்னேறியிருப்பார்கள் என்ற கேள்வி நியாயமானதே. எனது அபிப்பிராயத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே இருந்தன. ஆனால் தனது நீண்டகாலப் பார்வையில் அவர் நம்பிக்கை வைத்திருந்த மக்கள் ஜனநாயகமும் சோசலிசமும் இன்னும் முக்கியமானவை என்பது உண்மை. அவையும் மீள்சட்டகமாக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ‘மாக்சிசம்-லெனினிசம்’ எனும் பெயரில் சர்வதேச ரீதியில் உருவாக்கப்பட்ட கருத்தியலின் உள்ளடக்கங்கள் பற்றி ஆழ விமர்சிக்கும் தேவையை வலியுறுத்த வேண்டும். மாக்சிசத்தின் மற்றும் சோசலிச சிந்தனைகளின் சமகால செல்நெறிகள் மற்றும் அவை பற்றிய விவாதங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு. இத்தகைய விடயங்களில் விசுவா ஆர்வம் காட்டியிருப்பார் எனவும் நம்புகிறேன். எனது இந்தக் கருத்துக்களையும் இலங்கை தேசிய இனப்பிரச்சனையின் இன்றைய நிலை பற்றிய எனது பார்வையையும் விசுவா ஏற்றுக் கொண்டிருப்பார் என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினமாயிருக்கலாம். ஆனால் இவை பற்றி விவாதிக்க முன்வந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

07-05-2016