ஏ. ஜே – ஒரு விவாதம் தந்த உறவு

சமுத்திரன்

2006

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சர்வதேச அரசு சாரா நிறுவனத்தைச் சார்ந்தவர் தான் யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாகவும் அங்கு மனந்திறந்து கருத்துப் பரிமாறவல்ல சிலரைச் சந்திக்க விரும்புவதாகவும் என்னிடம் கூறி எனக்குத் தெரிந்த அத்தகையோர் யாராவது யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்களா எனக் கேட்டார். அவரிடம் நான் யாழ்ப்பாணத்தில் ஏ.ஜே. கனகரத்தினா என்பவரைச் சந்திக்கும்படி கூறினேன். யாழ் சென்றபோது அவர் ஏ.ஜே யைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பைப் பற்றி என்னிடம் அவர் கூறிய வார்த்தைகளை நான் மறக்கவில்லை. அந்த மனிதர் சுருக்கமாகவும் தெளிவாகவும் தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார் – யாழ்ப்பாணத்தில் அறிவாளர்களின் நிலைமை பற்றிக் கேட்டபோது ‘Intellectuals are an endangered species here.’ (இங்கே அறிவாளர்கள் ஆபத்துக்குள்ளாகிவிட்ட ஒரு வகையினர்) எனக் கூறினார்.

ஏ.ஜேயின் மறைவு ஒரு பாரிய இழப்பாகும். மிகக் குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். இறுதிவரை சுதந்திரமான அறிவாளராக கூர்மைமிகு விமர்சகராக வாழ்ந்தவர் அவர். அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரது நீண்டகால நண்பர்கள் அவருடைய மனிதப் பண்புகள் பற்றி, அவர் தானாகத் தேர்ந்து வாழ்ந்த ‘புறத்தியான்’ வாழ்பாங்கு பற்றி எழுதியுள்ளனர். பேராசிரியர் சிவத்தம்பி, கவிஞர் மு. பொன்னம்பலம் போன்றோர் ஏ.ஜேயுடன் நீண்ட கால உறவு கொண்டோர் என்பதை அவர்களின் சமீபத்திய கட்டுரைகள் காட்டுகின்றன. மு.பொ. வின் கட்டுரையில் ஏ.ஜே யின் நகைச்சுவை பற்றியும் அறியக்கூடிதாகவிருந்தது. ஏ.ஜேயுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. அவருடன் தொடர்பு ஏற்பட்ட சில காலத்தில் நான் வெளிநாடுகள் சென்று வாழ நேர்ந்ததும் இதற்கு ஒரு காரணம். ஆயினும் நம்மிடையே ஒரு பண்புமிகு உறவு இருந்தது என்பேன்.

அந்த உறவுக்கு வழிவகுத்தது கருத்து ரீதியில் காரசாரமாக மாறிய ஒரு விவாதமாகும். 1980 ல் Lanka Guardian (LG) எனும் சஞ்சிகையில் தமிழ் முற்போக்கு இலக்கியம் பற்றி நான் எழுதிய கட்டுரை என்னை ஒரு பெரிய விவாதத்திற்குள் எடுத்துச் செல்லும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தக் கட்டுரையை நான் எழுதியதற்கான காரணம் அரசியல். அப்பொழுது நான் கொழும்பில் வாழ்ந்து வந்தேன். ஒரு தடவை யாழ் சென்றிருந்தபோது பேராசிரியர் கைலாசபதி, எழுத்தாளர்கள் டானியல், இரகுநாதன் போன்ற நண்பர்களுடன் வழமை போன்று உரையாடல்களில் ஈடுபட்டேன். யாழில் இலக்கிய விமர்சனங்கள் சற்று வலுப்பெற்றிருந்தன போல் இருந்தது. அன்றைய பல்கலைக்கழகச் சூழலும் இதற்கு உதவியாக இருந்தது எனலாம். நண்பர்கள் நுஃமான், சித்திரலேகா மௌனகுரு போன்றோருடன் உரையாடியபோதும் இது தெளிவாயிற்று. இந்த விவாதங்கள் பல மட்டங்களில் வேறுபட்ட வடிவங்களில் இடம் பெற்றன. அப்பொழுது ஏ.ஜே உடன் எனக்குத் தொடர்பு இருக்கவில்லை. அவரை ஓரிரு தடவைகள் கண்டிருக்கிறேன். அவருடைய சில கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். ஆனால் அவருடன் ஒரு சம்பாசனையில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

நான் கொழும்பு திரும்பிய பின்னர் யாழில் அறிந்தவற்றைப் பற்றிச் சில நண்பர்களுடன் உரையாடினேன். அந்த நாட்களில் கொழும்பிலும் மலையகத்திலும் ஒத்த கருத்துடைய பல இடதுசாரி நண்பர்களுடன் மார்க்சிசத்தின் சமகால செல்நெறிகள் பற்றி, தமிழ் கலை இலக்கியப் போக்குள் பற்றிக் கலந்துரையாடல்களை நடத்தி வந்தோம். கைலாசபதி கொழும்பு வரும்போது என்னுடன் தொடர்புகொள்வார். நாம் இருவரும் பல பொழுதுகளை பயனுள்ள உரையாடல்களில் கழித்திருக்கிறோம். எனக்கு இடதுசாரி அரசியலிலும், மார்க்சிய அரசியல் பொருளாதாரத்திலும் ஆழமான ஈடுபாடு . கைலாஸ் ஒரு மார்க்சிய அறிஞர். அவருடனான நட்பு எனக்கு அறிவுரீதியில் பயனுள்ளதாக இருந்தது. இவையெல்லாம் நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் LG ல் நான் எழுதிய கட்டுரையின் பின்னணியின் சில அம்சங்களைக் காட்டவே.

நான் எழுதிய கட்டுரை கைலாசின் நிலைப்பாட்டிற்குச் சார்பானதாகவும் அப்போது நான் சுயமாக ஏற்றிருந்த சோசலிச யதார்த்தவாதத்தின் போக்குடன் இணைந்ததாகவும் இருந்தது. கட்டுரையின் பிரதான நோக்கம் உருவவாதத்தை விமர்சிப்பதாக இருந்தது. இடது சாரி அரசியல் போக்குகளுடன் தம்மை இனங்காணாத சில எழுத்தாளர்களும் வெளிப்படையான வலதுசாரிப் போக்குடைய சிலரும் தமிழ் முற்போக்கு இலக்கிய ஆக்கங்களை அழகியல் அற்ற வெறும் அரசியல் சுலோகங்கள் எனும் வகையில் சாடி விமர்சிக்கும் போக்கை மனதில் கொண்டே எனது முதலாவது கட்டுரை எழுதப்பட்டது. ஆயினும் அது பற்றிய விமர்சனம் நான் மேலே குறிப்பிட்ட வட்டங்களிருந்து வரவில்லை. பொதுவாக இடது சாரி அரசியலுக்குச் சார்பான சில இலக்கிய விமர்சகர்களிடமிருந்தே வந்தது.

எனது கட்டுரை பற்றிய ஒரு காரமான விமர்சனத்தை தனக்கே உரிய பாணியில் ஏ.ஜே எழுதியிருந்தார். அவருடைய கட்டுரையுடன் அவரது நெருங்கிய நண்பரும் இலங்கையின் தலைசிறந்த இலக்கிய விமர்சகர்களில் ஒருவருமான றெஜி சிறிவர்த்தன எனது கருத்துக்களை விமர்சித்து விவாதத்திற்கு அழைத்த ஒரு நீண்ட கட்டுரையும் LG ல் பிரசுரமாயின. ஏ.ஜேயின் கட்டுரையில் நான் உருவவாதிகளைத் தாக்கியது பற்றி, ஆக்க இலக்கியத்தின் சமூக உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் பற்றிக் கூறியது பற்றி மட்டுமன்றி மறைமுகமாகக் கைலாசபதியையும் தாக்கி எழுதியிருந்தார். ‘சரிந்து வரும் பிம்பங்களுக்குச் சமுத்திரன் முண்டு கொடுக்கிறார்’ எனக் கிண்டல் பாணியில் அவர் எழுதியது நான் கைலாசை ஆதரித்து எழுதியது பற்றியே என்பது தெளிவாயிற்று. தொடர்ந்த விவாதத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் உள்ளார்ந்த அரசியலினதும் தனி நபர்களுக்கிடையிலான முரண்பாடுகளின் தாக்கங்களும் இருந்திருக்கலாம் என நம்புகிறேன். கைலாசபதியை விமர்சித்த சிலர் அவருடைய கருத்துக்களை மாத்திரமன்றித் தனிப்பட்ட தாக்குதல்களிலும் ஈடுபடுவது அப்போது ஒரு வழக்கமாயிருந்ததைப் பலர் அறிவர்.

றெஜியின் கட்டுரை முழுக்க முழுக்கக் கோட்பாட்டு ரீதியானது. இலக்கியத் துறையில் நீண்டகால அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட றெஜியுடனும் ‘யாழ்ப்பாணத்தின் றெஜி சிறிவர்த்தனா’ எனச் சிலரால் அழைக்கப்பட்ட ஏ.ஜேயுடனும் மோதுவது என்பது எனக்கு ஒரு சவாலாயிற்று. ஆனால் அதிலிருந்து பின்வாங்குவதில்லை என முடிவெடுத்தேன். அதன் பயன் அந்த விவாதம் பலரை ஈர்த்த அதேவேளை எனது அறிவு வளர்ச்சிக்கும் ஒரு உந்தலாக உதவியது. விவாதத்தின் போது கொழும்பு சமூக விஞ்ஞானிகள் சங்கத்தில் நான் தீவிரமாக இயங்கிவந்தேன். அப்போது கலை இலக்கியத் துறையில் மிகவும் ஈடுபாடுள்ள சார்ள்ஸ் அபயசேகராவும் எனது நீண்டகால நண்பனும் தோழனுமாகிய கலாநிதி நியூட்டன் குணசிங்கவும் றெஜிக்கு நான் பதில் கொடுப்பதற்கு உதவிய சில நூல்களையும் கட்டுரைகளையும் தந்துதவினர். சார்ள்ஸ் அபயசேகரா அவர்கள் றெஜியின் சந்ததியினர் மாத்திரமின்றி அவருடைய நிலைப்பாடு சார்ந்தவராகவும் இருந்தார். அதேவேளை எனது கருத்துக்களுக்காக நான் வாதாடுவதை மிகவும் ஊக்குவித்தார். நியூட்டன் எனது நிலைப்பாட்டை ஆதரித்தார். சமவேளையில் அந்த விவாதம் LG ல் நேரடியாக பங்குபற்றாதவர் மத்தியிலும் இடம்பெற்றதெனலாம். சமூகவிஞ்ஞானிகள் சங்கத்தில் இந்த விவாதம் பலதடவைகள் இடம் பெற்றது. ஒரு கட்டத்தில் எனதும் கைலாசினதும் நண்பரான பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க தானும் LG ல் இடம் பெறும் விவாதத்தில் பங்குபற்றப்போவதாக என்னிடம் கூறி ஒரு கட்டுரையையும் எழுதி அதை ‘சாகர’ என்னும் புனைபெயரில் பிரசுரிக்க முடிவுசெய்தார். அந்தப் புனைபெயரில் அவர் எழுதியது அதுதான் முதல் தடவை. சிங்களத்தில் ‘சாகர’ எனும் சொல்லுக்குச் ‘சமுத்திரம்’ எனும் அர்த்தமாகும். மொத்தத்தில் LG விவாதம் ஆக்கபூர்வமாக இருந்தது என்பதே எனது கணிப்பீடாகும். விவாதம் இடம் பெற்ற காலம், அன்றைய அரசியல் பின்புலம், மார்க்சியம் பற்றிய அன்றைய சர்வதேச ரீதியான விவாதங்கள், குறிப்பாக 1960 கள் -1970 களின் செல்நெறிகளை கணக்கில் எடுக்காது நமது அன்றைய நிலைப்பாடுகளையோ LG ல் இடம்பெற்ற கருத்து மோதல்களையோ சரியாகப் புரிந்து கொள்ளமுடியாது.

எனது அரசியல் சிந்தனாவிருத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குப் பலமாக இருந்தது. 1980ல் நான் கட்சி அரசியலில் ஈடுபடாத போதிலும் 1960 களில் – 1970 களில் ஒரு மாஓயிஸ்டாக இருந்தேன். கலை இலக்கியம் பற்றிய எனது பார்வையின் உருவாக்கத்தில் போல்ஷவிக் கட்சியின் சோசலிச யதார்த்தக் கொள்கையும் மாஓவின் கருத்துக்களும் முக்கிய பங்கு வகித்தன என்பது உண்மை. ஏ.ஜேயின் நிலைப்பாடோ இந்தப் போக்கின் விமர்சனத்தில், நிராகரிப்பில் வேரூன்றி இருந்தது. அது அன்றைய நிலை. விவாதம் ஓய்ந்தபின் ஏ.ஜேயை நேரில் சந்திக்க விரும்பினேன். நான் 1982 முற்பகுதியில் வெளிநாடு செல்வதற்கு முன் ஒருதடவை யாழ்ப்பாணத்தில் அவரைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் LG விவாதம் பற்றி அவரும் பேசவில்லை. நானும் அதை எமது முதலாவது சந்திப்பிலேயே எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இலங்கை அரசியல் பற்றிப் பேசினோம். அதில் நம்மிடையே கணிசமான ஒருமைப்பாடு இருந்ததை உணர்ந்தேன். அந்தச் சந்திப்புக்குப் பின்னர்தான் அவர் தொகுத்த அலை வெளியீடான ‘மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள்’ என்ற நூலைப் பார்க்க நேரிட்டது. அதை வாசித்தபோது என் மனதில் தோன்றியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் ஏ.ஜேயைச் சந்திக்க முன் அந்த நூலைப் படித்திருந்தால் அநேகமாக நமது LG விவாதம் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்கும். அது எப்படிப் போயிருக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் அது நடைபெறவில்லை. காலம் மாக்சிய அறிவுத்துறையிலும் இடதுசாரி அரசியல் போக்குகளிலும் பலவிதமான மாற்றங்களைக் கண்டது. இன்றைய எனது நோக்கில் அந்த விவாதத்தின் சட்டகமயமாக்கலிலேயே பல மாற்றங்கள் தேவைப்படலாம்.

அடுத்த தடவை நான் ஏ.ஜேயைக் கண்டபோது துரதிஷ்டவசமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். 1989 ல் ஒரு ஐரோப்பிய நிறுவனத்தின் அபிவிருத்தித் திட்டத்தை மதிப்பீடு செய்யும் ஆலோசகராக யாழ் சென்றேன். அப்போ அங்கு நிலைமை மிகவும் மோசமாகவே இருந்தது. இந்திய –இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக வந்த இந்திய அமைதிப் படையுடன் தமிழ் மக்கள் உறவு கொண்டாடிய காலம் போய் யாழ்ப்பாணத்தில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்த காலம் அது. அங்கு எனக்குக் கிடைத்த அனுபவங்களையும் நான் கண்டவற்றையும் ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருந்தேன்.( Seven days in Jaffna : Life under Indian Occupation, Race & Class, 1989) நான் அங்கிருந்த வேளை ஏ.ஜேயைச் சந்திக்க முயன்றேன். அப்போதுதான் அவர் திடீரென நோய்வாய்ப்பட்டாரென அறிந்தேன். நான் கொழும்புக்குத் திரும்பிய அதே விமானத்தில் அவரை அவருடைய சில நண்பர்கள் சிகிச்சைக்காகக் கொழும்புக்குக் கொண்டுசென்றனர். அந்த நண்பர்களில் ஒருவர் குகமூர்த்தியாகும். இவர் பின்னர் கடத்தப்பட்டுக் காணாமல் போய்விட்டார். அவருடைய அன்புகலந்த சிரித்த முகமும் அழகான பல்வரிசையும் சுருண்ட கேசமும் என் மனதில் நன்றாகப் பதிந்துள்ளன. மிகவும் சுகவீனமுற்றிருந்த நிலையிலிருந்த ஏ.ஜேக்கு என்னைச் சரியாக அடையாளம் காணமுடியவில்லை.

1994 க்குப் பின்னர் பலதடவைகள் யாழ் செல்லும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இந்தக் காலத்திலேயே ஏ.ஜேயைக் கண்டு கலந்துரையாடும் வாய்ப்புக்கள் கிடைத்தன. எனக்கு நன்கு அறிமுகமான கிருஷ்ணகுமார் குடும்பத்துடன் ஏ. ஜே வாழ்ந்துவந்தார். என்னை அங்கு முதலில் அழைத்துச் சென்றவர் இன்னொரு நீண்ட கால நண்பரான பேராசிரியர் சிவச்சந்திரனாகும். ஏ.ஜேயைச் சந்தித்தபோதெல்லாம் இலங்கை மற்றும் உலக அரசியல் பற்றிப் பேசினோம். பல வருடங்களாக எனது ஈடுபாடு அரசியல் பொருளாதாரத் துறையிலேயே ஆழமாகப் பதிந்துவிட்டது. இன்றைய மாக்சிய விவாதங்கள் மற்றும் உலகமயமாகல் பற்றிய வியாக்கியானங்களும் நமது உரையாடல்களில் இடம் பெற்றன. காலம் எமக்கிடையில் ஒரு பொதுவான புரிந்துணர்வுள்ள பரப்பினைக் கொடுத்துவிட்டது போலும்.

LG ல் இடம்பெற்ற விவாதம் ஒரு மறக்க முடியாத அனுபவம். இன்று அதை மீள் உருவாக்க முடியாது. அதேவேளை அன்று நான் கொண்டிருந்த நிலைப்பாடு பற்றி நான் வருந்தவுமில்லை.

கடைசியாக நான் ஏ.ஜேயை 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு தடவைகள் சந்தித்தேன். 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி யாழ் பல்கலைக் கழகத்தில் கலாநிதி எம். நித்தியானந்தம் எழுதிய ‘இலங்கையின் பொருளாதார வரலாறு: வடக்குக் கிழக்குப் பரிமாணம்’ எனும் நூலின் வெளியீட்டு விழாவில் நாம் இருவரும் நூல் விமர்சகர்களாகக் கலந்து கொண்டோம். எனக்கு முன்னர் உரையாற்றிய ஏ. ஜே தனது கருத்துக்களை மிகச் சுருக்கமாக ஒரு சில நிமிடங்களில் கூறிவிட்டு அமர்ந்துவிட்டார். ஆனால் அந்தச் சிறிய உரையில் மிகவும் தாக்கமான கருத்துக்களை முன்வைத்தார். எனது உரை சற்று நீண்டதாகவே இருந்தது. விமர்சனத்தைப் பொறுத்தவரை நம்மிடையே சில ஒருமைப்பாடுகளும் வேறுபாடுகளும் இருந்தன. மறுநாள் ஏ.ஜேயைச் சந்தித்தபோது நித்தியின் நூல் பற்றிய எனது மதிப்பீட்டைத் தான் விரும்பிக் கேட்டதாகவும் அதைக் கட்டுரையாக எழுதி கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்துவெளிவரும் ஒரு சஞ்சிகைக்கு அனுப்பினால் என்ன என்று கேட்டார். அதுவே நமது கடைசிச் சந்திப்பு. அதுவரையிலான நமது சந்திப்புக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஏ.ஜேயின் மரணம் பற்றிக் கேள்விப்பட்டபோது அந்தக் கடைசிச் சந்திப்பும் அவரைச் சந்தித்த எனது நண்பரிடம் அவர் யாழ்ப்பாணத்தில் அறிவாளர்களின் நிலை பற்றிக் கூறிய வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. ஏ.ஜேயும் நானும் மீண்டும் சந்தித்தால் நம்மிடையே ஒரு பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெறும். ஒரு விவாதம் கூடத் தொடங்கியிருக்கலாம். அது காரசாரமாகவும் மாறி இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அது நாகரிகமான கருத்து மோதல்களின் வரையறைக்குள்ளேயே இடம் பெற்றிருக்கும். இது கற்பனைதான். ஆனால் நமது சமூகத்தில் சுதந்திரமான திறந்த விவாதங்களுக்கு உதவும் இடம் சுருங்கி மறைந்த துன்பியல் பற்றி அவர் கூறியது கற்பனையல்ல.

புலம்பெயர் தமிழிலக்கியத்தின் எதிர்காலம் பற்றி சில கேள்விகள்

1980 களில் தமிழ் இலக்கியம் ஒரு புதிய முனைப்பை சந்தித்தது. மேற்கத்திய நாடுகளில் புகலிடம் கோரிக்குவிந்த தமிழர்களிடமிருந்து பிறந்தது அந்த முனைப்பு. அது ஒரு புதிய மரபின் வருகையை அறிவித்தது. அந்த மரபை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம் என அழைத்தோம். பின்னோக்கிப் பார்க்கும் போது அதன் ஆரம்ப கால வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. 1989 ல் ஐரோப்பாவில் வாழ்ந்த தமிழ் அரசியல் இலக்கிய ஆர்வலர்களின் உழைப்பின் விளைவாக முப்பதுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. அதே ஆண்டில் ஒஸ்லோவில் சுவடுகள் குழுவினர் “துருவச்சுவடுகள்” எனும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டனர். “சுவடுகள்” அப்போது ஒரு மாத சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. அதே ஆண்டு மார்கழி மாதத்தில் மேற்கு பேர்லின் நகரில் ஆறாவது இலக்கியச் சந்திப்பு கோலாகலமாக இடம்பெற்றது. அந்த இலக்கியச்சந்திப்பில் பங்குபற்றி உரையாற்றும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அந்த மேற்கு பேர்லின் நிகழ்ச்சியை நினைவு கூரும் போதெல்லாம் அங்கு இடம் பெற்ற கலந்துரையாடல்களும் விவாதங்களும் என மனதிற்கு மட்டுமின்றி    ….

சர்வதேச நிலைமைகளும் பலவிதமான அரசியல் சமூக இயக்கங்களும் விவாதிக்கப்பட்டன. மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மண்டபத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல விதமான கருத்துப்பரிமாறல்கள், அந்த மூன்று நாட்களும் நான் இரவு ஒரு மணிவரை நண்பர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களைப் பெற்றேன். கிழக்கையும் மேற்கையும் பிரித்து வைத்த பேரிலின் சுவர் வீழ்ந்த சில நாட்கள். இந்த நிகழ்ச்சியும் எமது கலந்துரையாடலுக்கு உந்துதலாக அமைந்தது. தமிழரின் விடுதலை, தமிழ் சமூகத்தின் எதிர்காலம் இவையெல்லாம் இலக்கியச்சந்திப்பின் விவாதப்பொருட்களாயின. புலம்பெயர்ந்த தமிழரின் இலக்கியச் செயற்பாடுகளின் புலப்பரப்பின் பாரிய பரிமாணங்கள் பற்றி பேசி வியந்தோம்.

இலக்கியச்சந்திப்புக்கள் ஐரோப்பாவில் தொடர்கின்றன. 2001 யூலையில் 28 வது சந்திப்பு நோர்வேயின் பேர்கன் நகரில் இடம்பெற்றிருந்தது. நான் அப்போது இலங்கை சென்றிருந்ததால் இச்சந்திப்பில் பங்குபற்ற முடியவில்லை. பேரிலினுக்குப் பிறகு நான் பங்கு பற்றிய இரண்டாவது இலக்கியசந்திப்பு பாரிசில் இடம்பெற்ற 27 ஆவது இலக்கியச்சந்திப்பாகும். இதில் கூட துர்அதிஸ்டவசமாக முதல் நாள் மட்டுமே கலந்து கொள்ள கூடியதாக இருந்தது. பாரிஸ் சந்திப்பு நன்றாக இருந்தது.

1989 ல் கண்டு அனுபவித்த உத்வேகத்தையும் அரசியல் விவாதங்களையும் பாரிசில் காணவும் அனுபவிக்கவும் முடியவில்லை, ஆயினும் சிலவிடயங்கள் அலசி ஆராயப்பட்டது நல்ல அறிகுறியாக இருந்தது. இலக்கிய அரசியல் தத்துவார்த்த வட்டங்களில் இன்று முக்கியத்துவம் பெறும் விடயங்கள் அங்கு கிளப்பப் பட்டன. ஐரோப்பாவில் இன்று முனைப்பு பெற்றுள்ள பின் நவீனத்துவம் சார்ந்த சில அம்சங்கள் மேலெழுந்தவாரியாக அலசப்பட்டன. அதேவேளை உலகமயமாக்கல் பற்றி நான் முன்வைத்த விடயங்கள் பற்றி இடதுசாரி நண்பர்கள் பல கேள்விகளை எழுப்பினர். புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் இன்றைய ஐரோப்பிய விவாதங்களில் ஈடுபாடுள்ள அறிவாளர்கள் உருவாகியுள்ளார்கள் என்பதை அறிந்தேன்.

இரண்டு இலக்கியச்சந்திப்புக்களில் மட்டுமே பங்குபற்றிய என்னால் இதுவரை இடம்பெற்ற 28 சந்திப்புக்கள் பற்றிய ஒரு பொதுப்பார்வையை அல்லது தொகுப்பைத் தர முடியாது. இந்த சந்திப்புகள் தொடர்ந்தது நல்ல அறிகுறி என்பதை மறுக்க முடியாது. புலம்பெயர் தமிழரின் இலக்கிய மரபின் போக்குகள் உள்ளடக்கங்களின் தன்மைகள் பற்றி ஆழ அறிந்து கொள்வதற்கு இதுவரை இடம்பெற்ற சந்திப்புக்கள் பற்றிய வரலாற்று ரீதியான ஆய்வு தேவை,  இது இடம்பெறும் காலம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன்.

அதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றிய சில கேள்விகள் என் மனதில் எழுகின்றன. 1990 களின் முற்பகுதியில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் வெளியிடும் சஞ்சிகைகள் அளவு ரீதியில் அருகி வருகின்றன. நீண்ட காலமாக வெளிவந்த ‘சுவடுகள்’ போன்ற சஞ்சிகைகள் நின்றுவிட்டன. இந்த அளவு ரீதியான வீழ்ச்சி தொடர்கிறது. இதன் தன்மை ரீதியான விளைவுகள் எத்தகையவை? இந்தக் கேள்விக்கு ஒரு பொதுப்படையான பதிலைக் கொடுக்க விரும்புகிறேன். முதலாவதாக இந்த அளவு ரீதியான குறைபாடு புலம்பெயர்ந்த இலக்கியத்திற்கு இருந்து வந்த பன்முகத்தன்மைகளைக் குறுக்கியுள்ளது எனலாம். ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளியீடுகள் வந்த காலத்தில் இருந்த புவியியல் சமூகவியல் ரீதியாக பரவிய பன்முகத்தன்மையை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம் இழந்து வருகிறது போல் படுகிறது. அடுத்ததாக இந்த பன்முகப் போக்கிற்கு செழுமையையும் அடையாளங்களையும் கொடுத்த அரசியல் தத்துவார்த்த புலங்களும் இப்போது குறுகிவிட்டது எனலாம்.

மறுபுறம் இப்போது இயங்கிவரும் சஞ்சிகைகள் புலம்பெயர்ந்த சந்ததியினரின் பிரச்சனைகளைப் பற்றி ஆழப்பார்க்கும் போக்கினைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. 1980களில் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இப்போது இரு சந்ததிகளுக்கிடையிலான உறவுகள் ஒரு முக்கிய அம்சமாகிவிட்டன. இந்த உறவுகளின் அன்றாட நடைமுறைகளில், வெளிப்பாடுகளில் முரண்பாடுகள் பல. குடும்பங்களுக்குள்ளே சந்ததிகளுக்கிடையிலான முரண்பாடுகள் கலாச்சாரங்களுக்கிடையிலான முரண்பாடுகளாகி பலவிதமான உளவியல் தாக்கங்களை பிள்ளைகளின் மீதும் பெற்றோர் மீதும் ஏற்படுத்தி வருகின்றன. இது பற்றி வெளிப்படையாகப் பேசும் நிலையில் பலர் இல்லை. ஒரு சில சிறுகதைகளில் நாவல்களில் இந்தப் பிரச்சனையின் சில பரிமாணங்கள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.அது போதுமா? இலக்கியச்சந்திப்புக்கள் இத்தகைய பிரச்சனைகளுக்கு எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன?

சமூக, கலாச்சார உளவியல் பிரச்சனைகளால் அவதிப்படும் பல பெற்றோர் மதத்தின் உதவியை நாடும் போக்கினை காணமுடிகிறது. இது புரிந்து கொள்ளக் கூடியதாயினும் இந்தப் போக்கின் விளைவுகள் என்ன? எனும் கேள்வி பிறக்கிறது. பெற்றோரின் அதீத மத நம்பிக்கை பிள்ளைகளின் சமூகப்பிரச்சனைகளை தனிமனித ஆளுமையை எப்படிப் பாதிக்கின்றது? இத்தகைய கேள்விகள் சமூக ஆய்வுக்கான கேள்விகள்தான். அதேவேளை இவை புலம்பெயர்ந்த தமிழரின் வாழ்நிலையிலிருந்து பிறக்கின்றன என்பதால் ஆக்க இலக்கியத்தில் இவற்றின் பிரதிபலிப்புக்களை நாம் தேட வேண்டும்

புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் பாரிய எழுச்சிக்காலம் போய்விட்டது. அது வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்த ஒரு சந்ததியின் முதலாவது பத்துவருடங்களின் ஏக்கங்களின், தேடல்களின் ஆக்கத்திறன்களின் வெளிப்பாடு எனலாம். அதை நாம் ஒரு பொற்காலமெனக் கருதத் தேவையில்லை. அதன் அரசியல் சமூக சந்தர்ப்பத்தின் தன்மைகளை நாம் மறந்துவிடலாகாது. இப்போது அந்தக் காலகட்டம் இன்னொன்றிற்கு வழிவிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கிய மரபு பரிமாணங்களைத் தேடவேண்டும். இந்தப் பரிமாணங்களின் சில அம்சங்கள் மேலே தொட்டுள்ளேன். நமது ஆக்கத்திறனையும் விமர்சனத்தையும் மேலும் ஆழமாக நமது சமூகத்தின் முன்னே பாய்ச்ச வேண்டும். நமது சமூகத்திற்குள்ளே இருக்கும் சமூகப்போக்குகளை பிரிவாக்கங்களை நன்கு கிரகிக்க வேண்டும். சஞ்சிகைகளின் நூல்களின் வெளியீட்டு வைபவங்கள் அரங்கேற்றங்களாக அமையாது நமது சமூகத்தினை கலாச்சார ரீதியில் மறுமலர்ச்சி பெற உதவும் கற்களாக அமைய வேண்டும்.

இந்தப்பார்வையில் “பறை” எனும் புதிய சஞ்சிகையை நாம் எதிர்காலத்தில் மதிப்பீடு செய்யும் போது அது ஒரு சமூகத் தேவையை பூர்த்தி செய்ய முன்னிற்கும் வெளியீடு என்ற முடிவிற்கு வரவேண்டும் இதுவே பறையிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது. நோர்வேயில் நீண்டகாலமாக ஒரு தரமான சஞ்சிகை இல்லை அந்த வெற்றிடத்தை “பறை” நிரப்பும் என எதிர்பார்க்கிறேன்.

நவம்பர் 2001

ஈழத்தமிழர் போராட்டத்தில் புலம்பெயர் எழுத்தாளரின் பங்கு

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் இன்றைய உலகில் ஒரு சாதாரண சர்வதேச நிகழ்வாகிவிட்டது. அரசியல் அடக்குமுறை, இன ஒதுக்கl காரணிகளால் பல தேசத்தவர்கள் பெருந்தொகையில் வேற்று நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மத்தியிலுள்ள அறிவாளர்களில் சிலர் தாய்நாட்டின் நிலைமைகள் தொடர்பான தமது ஈடுபாட்டையும் தற்போதைய வாழ்நிலை அனுபவங்களையும் கலைப்படைப்புக்களாய், கட்டுரைகளாய் வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் ஆளுமைகள், நினைவுகள், அனுபவங்கள் எல்லாமே தாய்நாடு புகல் நாடு எனும் தொடர்பினால் பாதிக்கப்படுவதால் இவர்களின் ஆக்கங்களுக்கு ஒரு விசேட கலாச்சார பரிமாணமுண்டு.

புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் புதிய கலாச்சாரச் செழுமையுடன் மிளிரும் சாத்தியப்பாடுகள் அதிகம் உண்டு. இச்சாத்தியப்பாடுகள் எவ்வளவு தூரம் வளர்ச்சியாகப் பரிணமிக்கின்றன என்பது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் தன்மைகளிலும் அவர்களுக்கு கிடைக்கும் ஸ்தாபனரீதியான உதவிகள், ஆகர்சங்கள் ஆகியவற்றிலும் தங்கியுள்ளது. இத்தகைய அறிவுரீதியான செயற்பாடுகள் தாய்நாட்டின் சமூக மாற்ற சக்திகளுக்கும் மக்களின் பொதுவான கலாச்சார வளர்ச்சிக்கும் பயன்படலாம்.

கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பாவில் வாழும் ஈழத்தமிழர் மத்தியிலிருந்து பல சஞ்சிகைகள் சில சிறிய குழுக்களின் விடா முயற்சியாலும் அவர்கள் வதியும் நாடுகளின் சில நட்புறவு ஸ்தாபனங்களின் உதவியாலும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. சில சஞ்சிகைகள் (எனக்குத் தெரிந்த உதாரணங்களாக நோர்வேயில் இருந்து வெளி வரும் சுவடுகள் மேற்கு ஜெர்மனியில் இருந்து வெளி வரும் தூண்டில்) தொடர்ச்சியாக வெளிவருவது மட்டுமின்றித் தரத்தாலும் வளர்ச்சி பெற்று வருவதைத் தெளிவாகக் காணலாம்.

இத்தகைய கலாச்சாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் குழுக்கள் தம்மிடையே தொடர்புகளை ஏற்படுத்தி கருத்துப்பரிமாறல்களில் ஈடுபடவும் தொடங்கியுள்ளன. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் மற்றைய புலம்பெயர்ந்த எழுத்தாளரின் ஆக்கங்கள் போன்று தாய்நாட்டு நிலைமைகள் பற்றிய விடயங்களையும் புகல் நாட்டில் தமது வாழ்நிலை அனுபவங்களையும் ஒட்டியே உருப்பெறுகின்றன. ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் இந்தக் கலாச்சாரப்ப போக்கானது பன்முக ரீதியாக வளர்ச்சி பெறக்கூடிய உள்ளாற்றலைக் கொண்டுள்ளதுபோற் தெரிகிறது.

வெளிவந்து கொண்டிருக்கும் சில சஞ்சிகைகளை மேலோட்டமாகப் பார்க்குமிடத்து இது தெளிவாகிறது. பொதுவாகப் பின்வரும் அம்சங்களைப் இனங்கண்டு கொள்ளலாம்.

  • இலங்கையில் குறிப்பாகத் தமிழ் மக்களின் அரசியல் சமூக நிலைமைகள் பற்றிய தகவல்கள், அப்பிப்பிராயங்கள்
  • தமிழீழப் போராட்டப்போக்குகள் பற்றிய விமர்சனங்கள்
  • இன்றைய தமிழ்க் கலை இலக்கியப் போக்குடன் இணைந்த புதிய படைப்புகள் – கவிதைகள் சிறுகதைகள் குறுநாவல்கள் சித்திரங்கள்
  • தாய்நாடு- புகல்நாடு கலாச்சார முரண்பாடுகளைக் கருவாகக் கொண்ட கலைத்துவ ஆக்கங்கள் பிரதானமாக சிறுகதைகள், கேலிச்சித்திரங்கள் வேறு நகைச்சுவை கலந்த ஆக்கங்கள்
  • பெண்நிலைவாதக் கருத்துக்கள்
  • புகல் நாட்டு அரசியல் நிலைமைகள் பற்றிய தகவல்கள், கருத்துக்கள்
  • மூன்றாம் உலக மக்களின் போராட்டங்கள் பற்றிய செய்திகள்
  • வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் கலை, இலக்கியக் குழுக்கள் பற்றிய செய்திகள்

இந்தப் பல்வேறு அம்சங்களின் போக்குகள், தன்மைகள் பல அசமத்துவங்களை கொண்டிருக்கலாம். இவை எல்லாமே ஒரு குறிப்பிட்ட இதழில் இடம்பெறாமல் போகலாம். இவற்றின் கருத்தமைவு நிலைப்பாடுகள் அல்லது ஆக்கவியல் அழகியல் மட்டங்கள் விவாதத்திற்குரியனவாக இருக்கலாம். ஆனால் முக்கியமான உண்மை என்னவெனில் இந்த அம்சங்களையெல்லாம் புலம் பெயர்ந்தோர் சஞ்சிகைகள் உணர்வு பூர்வமாக உள்வாங்க முயற்சித்து வருகின்றன.

இன்று ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒரு புதிய கலாச்சார முனைப்புக்கும், அதன் பன்முக ரீதியான விருத்திக்கும் உதவக்கூடிய அலகுகளாக இவ்வம்சங்களைக் கணிக்கலாம். இவற்றின் வீரியம் மிக்க சுதந்திரமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வழிவகைகள் என்ன என்ற கேள்வியின் முக்கியத்துவதைக் குறைத்து எடை போட முடியாது. இத்தகையதொரு கலாச்சார தலையீட்டிற்கு ஊடாக ஐரோப்பாவில் வாழும் தமிழரும், ஈழத்தில் வாழும் தமிழரும் பயனடைய முடியும் என்றே கருதுகிறேன்.

புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியப் போக்குகளின் தன்மைகளைப் புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல். சமூகவியல் நிலைமைகளுடன் இணைத்துப் பார்த்தல் அவசியம். இங்கு தேசிய (இலங்கை) நிலமைகளும் குடிபுகுந்த நாட்டில் தமிழர் எதிர்கொள்ளும் நிலைமைகளும் அவரவர் அனுபவங்களுக்கூடாகப் பின்னி உறவாடுவதைக் காணலாம். ஐரோப்பாவில் வாழும் தமிழரின் வாழ்நிலைப் பிரச்சனைகள் பலவற்றைக் கலாச்சாரங்களின் – ஆகக் குறைந்தது இருவிதக் கலாச்சாரங்களின் – சிக்கலான மோதல்களாக, இணைவாக, அனுபவ ரீதியான தொகுப்பாகப் பார்க்கலாம். இந்தச் சிக்கல்கள் இங்குள்ள அரசியல் யதார்த்தங்களின் பரிமாணங்களை உள்ளடக்குகின்றன. ஒவ்வொருவரினதும் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் பல கலாச்சாரங்களை ஊடுருவிப் போகின்றன.

நமது தனிப்பட்ட அடிப்படைத் தேவைகளும், அவற்றைப் பூர்த்தி செய்ய நாம் தேடும் வழிவகைகளும், நாம் வாழும் சமூகம் பற்றிய பல தகவல்களை அனுபவ ரீதியாக நமக்குத் தருகின்றன. இந்த அனுபவங்களை நாம் அலசி ஆராய முற்படும் போது நமது கலாச்சார விழுமியங்களும் நமது எதிர்பார்ப்புக்களும் ஏக்கங்களும் தலையிடுகின்றன. உண்மையில் இவை நமது இருப்பு பற்றிய நமது சுய மதிப்பீடுகளையும் பல வகையில் நிர்ணயிக்கின்றன. இதற்கூடாக நாம் ஒவ்வொரு கணமும் நமது தாய் நாட்டிற்குத் திரும்புகிறோம். இந்த அக உலகப் பிரயாணங்கள் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்த அக-புற முரண்பாடுகளின் கணிப்புக்கள் அவரவர் சமூகப்பார்வை, சமூக அந்தஸ்து ஆகியவற்றில் தங்கியிருக்கின்றன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் எல்லோருக்கும் சில பொதுப் பண்புகள் இருக்கின்றன. இவை நாம் ஒரு சமூகத்திலிருந்து குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சில பொதுவான காரணிகளால் ஐரோப்பியநாடுகளில் குடி புகுந்துள்ளோம் என்ற அடிப்படையிலிருந்து எழுகின்றன. அதே நேரத்தில் இங்குள்ள தமிழர்களிடையே பல வேறுபாடுகளும் முரண்பாடுகளும் இருக்கின்றன. இந்த வேற்றுமைகளின் ஒரு பங்கு – தற்போதைய நிலையில் பெரும் பங்கு, நமது நாட்டில் இருந்து நம்மோடு கூடவே வந்தது. மீதிப் பங்கு நாமிங்கு வந்தபின்பு ஏற்பட்ட மாற்றங்களோடு சம்பந்தப்பட்டது,

இந்தச் சமூகவியல் அம்சங்களை மேலும் பரந்தவொரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தோடு இணைத்துப் பார்த்தலும் அவசியம். இன்று புதிய கலாச்சார செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எல்லோரும் ச்மீபகாலங்களில் – கடந்த பத்து வருடங்களுக்குள் – ஐரோப்பாவுக்கு குடிவந்த தமிழ் சமூகங்களைச் சார்ந்தவர்கள். 1960 களில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இவர்களுக்குமிடையே தன்மைரீதியான வேறுபாடுகள் உண்டு.

முன்னர் வெளியேறியவரில் பெரும்பாலானோர் ஆங்கிலம் மூலம் கல்வி கற்றோராகவும் குறிப்பிட்ட துறைகளில் விசேட பயிற்சி பெற்றோராகவும் இருந்தனர் அல்லது அவர்கள் குடிபுகுந்த நாடுகளில் தொழில் வாய்ப்புள்ள துறைகளில் கல்வி பெறும் சந்தர்ப்பங்களைச் சுலபமாகப் பெறக்கூடிய நிலையில் இருந்தனர். அத்துடன் அவர்கள் குடியேறிய நாடுகள் ஆங்கிலம் பேசும் நாடுகள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இதனால் இவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே மொழித் தடைகள் இருக்கவில்லை. அதுமட்டுமன்றி 1960 களில் மேற்கத்திய நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதார எழுச்சியின் விளைவாக பல துறைகளில் வேலையாளர் போதாமை இந்நாடுகளின் குடிவரவுக் கொள்கைகளில் சாதகமான மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இலங்கை இங்கிலாந்தின் முன்னை நாள் காலனியாயிருந்ததாலும் Commonwealthல் அங்கத்துவ நாடாக இருந்ததாலும் 1960களில் இலங்கையர் இங்கிலாந்திலோ மற்றய commonwealth நாடுகளிலோ குடியேறுவது சுலபமாயிருந்தது. இந்தச் சாதக நிலைமைகளால் முன்னைய சந்ததியினர் குறுகிய காலத்தில் ஸ்திரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்தது. இவர்களின் குழந்தைகள் அவர்கள் வாழ்ந்த சமூகத்துடன் கலாச்சாரரீதியில் இணைவதிலும் பெரும் பிரச்சனைகள் இருக்கவில்லை எனலாம்.

புலம் பெயர்ந்த முன்னைய சந்ததியினர் பலர் 1956ல் வந்த சிங்களம் மட்டும் சட்டத்தினதும் அதைத்தொடர்ந்து வந்த ஆட்சிகளின் ஆரம்பகால இனப்பாகுபாட்டுப் போக்குகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பது உண்மை. இந்தப் பாதிப்புப் பொதுவாக பதவி உயர்வு புலமைப் பரிசில் போன்ற உரிமை மறுப்புக்களையும் உள்ளடக்கியது.

சமீப காலங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிவந்துள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் தமிழ் மூலம் கல்வி கற்ற இளைஞர்கள். இலங்கை அரசின் தொடர்ச்சியான இனப்பாகுப்பாட்டுக் கொள்கைகளால் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டவர்கள். புலம்பெயர்ந்த முன்னைய சந்ததியனருக்கு இலங்கையில் கிடைத்த உரிமைகள், கல்வி, வேலை வாய்ப்புக்கள் இவர்களுக்கு கிடைக்கவில்லை. இவர்களின் புலப்பெயர்வு மிகவும் அடிப்படையான அரசியல் பொருளாதார தனிமனித பாதுகாப்புக்காரணிகளால் ஏற்பட்டது. இவர்களில் பலர் 1970 களில் இலிருந்து பூதாகாரமாக வளர்ந்த பலாத்காரமான இன ஒதுக்கலைப் பல வகைகளில் அனுபவித்தவர்கள். அரச பயங்கரவாதத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குடும்ப அங்கத்தவரை இழந்தவர்கள். இப்படிப் புலப்பெயந்தோரில் ஒருபகுதியினர் , விடுதலை இயக்கங்களில் ஈடுபட்டிருந்தோர். இயக்கங்களுக்கு இடையிலான குரோதங்களாலும் இயக்கங்களின் மிரட்டல்களினாலும் வெளியேறிய பலரையும் ஐரோப்பாவில் காணலாம். ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் மட்டுமின்றி சகல ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் அகதிகளைக் காணலாம்.

ஆகவே புலம்பெயர்ந்த இந்த இளம் சந்ததியினர் பலர் தமது தாய் நாட்டின் அரசியல் நிலமைகளுடனும் பிரச்சனைகளுடனும் நெருக்கமான பரிச்சயத்தை அனுபவரீதியாக கொண்டுள்ளனர். புலம் பெயர்ந்து குறுகிய காலமாகையால் நாட்டில் உறவினர், நண்பர்களுடன் இன்னமும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் அகதி அந்தஸ்துக் கோரிய பெரும்பான்மையினருக்கு இதுவரை இந்த அந்தஸ்து கிடையாமையும் ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார மந்தத்தின் விளைவான வேலை வசதியின்மையும் இங்கு இப்போது முன்பையும் விட மோசமாகிவிட்ட நிறவாதமும் பலருக்கு இங்கு தமக்கு எத்தகைய எதிர்காலம் உண்டு என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்கால ஸ்திரமின்மை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனம், புதிய வாய்ப்புக்களைத் தேட உதவும் கல்வி பயில முடியாமை போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஐரோப்பிய ஜனநாயகம் தரும் மனித சுதந்திரங்களும் சில அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தும் நம்பிக்கைகளையும் மகிழ்வையும் அதே அமைப்பிடம் இருந்து வெளிவரும் நிறவாதமும், இரட்டை நியமங்களும் குழப்பியடிக்கின்றன. இங்கும் வாழ்க்கை ஒரு போராட்டம் தான் – குறைந்தது முதலாவது சந்ததிக்கு இது ஒரு சவால்தான்.

1983 க்குப் பின் பெருந்திரளாகத் தமிழர் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்ததுடன் ஈழத்தமிழர் போராட்டத்தின் சர்வதேச மயமாக்கல் ஒரு புதிய கட்டத்தையடைந்தது. இலங்கை அரசுக்கு எதிரான பிரச்சாரம் மட்டுமின்றி இயக்கங்களுக்கிடையேயான முரண்பாடுகளும் தமிழர் மத்தியில் பிரதிபலிக்கத்தொடங்கின. முக்கிய இயக்கங்களின் பிரச்சார வேலைகள் ஆரம்பித்தன. இதற்கூடாக பிரச்சார இலக்கியங்கள் பரவின. விருத்தியடைந்த நாடுகளில் கிடைக்க கூடிய தொடர்பு சாதன வசதிகள் இந்த செயற்பாடுகளை நன்கு ஒழுங்கு செய்வதற்கு உதவுகின்றன. இந்த செயற்பாடுகளுக்கூடாக ஒரு புறம் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கிடையே ஸ்தாபனரீதியான தொடர்புகளும் ஒருங்கிணைப்பும் மறுபுறம் இயக்க ரீதியான பிரிவினைகளும் தோன்றின.

இது தாய்நாட்டின் யதார்த்தத்தின் ஒரு பிரதிபலிப்பு. அங்கு இயக்கங்களிடையே குரோதங்கள் இருக்கும்வரை இங்கும் அவற்றின் பிரதிபலிப்புக்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆயினும் வெளிநாடுகளில் வாழும் தமிழரில் ஆழ்ந்த அரசியல் ஈடுபாடுள்ளோர் ஒரு சிறுபான்மையினரே. இயக்கங்களை அடிப்படையாகக் கொண்ட வேறுபாடுகள் மாத்திரமின்றி சாதிப்பிரச்சனைகள், தமிழ் பெண்கள் மீது தமிழ் ஆண்கள் காட்டும் ஆதிக்கம் போன்றவையும் மீள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இத்தகைய விசேட சமூகவியல் நிலமைகளுக்குள் இருந்துதான் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பிறக்கிறது. இந்தச் செழுமை மிகுந்த யதார்த்தங்கள் கலை இலக்கியப்படைப்புக்களும் ஆகர்ஸமாய் அமைகின்றன. ஆயினும் இந்த யதார்த்தங்களின் சிக்கல்களை நியாய- அநியாயங்களை, அழகு- அசிங்கங்களை, வெற்றி- தோல்விகளை, இன்ப- துன்பங்களை எல்லாம் தத்தமது நேரடி அனுபவங்களின் மதிப்பீடுகளுக்கூடாக வெளிப்படுத்த எல்லோராலும் சுலபமாக முடிவதில்லை. முதலில் இந்த யதார்த்தங்களின் இருப்பை அவற்றின் முழுமையை ஏற்கும், எதிர்நோக்கும் துணிவு நமக்கு வேண்டும். இந்த துணிவு நம்மில் பலருக்கு இல்லை. அவ்வாறு இருப்போரில் சிலரே கலை இலக்கியம் படைப்போர். இவர்களின் செயற்பாடுகளே இன்று நாம் காணும் புதிய கலாச்சார முனைப்பான புலம்பெயர்ந்தோர் இலக்கியம். ஐரோப்பாவில் வாழும் இவர்கள் தாய்நாட்டிலுள்ள சகோதர எழுத்தாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள சுதந்திரங்களையும், வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். இது இவர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு உந்து சக்தியாகவுள்ளது. ஆயினும் இங்கும் கூட ஐரோப்பா வழங்கும் எழுத்து, சிந்தனை சுதந்திரங்களையும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் சில இடங்களில் முற்றாகப் பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். இதற்கு காரணம் சில இயக்கங்களின் மிரட்டல்களே.

நாட்டில் நமது மக்களுக்கிடையே கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சில முக்கியமான கேள்விகள் பிறந்துள்ளன. விடுதலை என்றால் என்ன? புரட்சிகர பலாத்காரம் என்றால் என்ன? மனிதத்துவம் மனித நேயம் என்பன என்ன? இப்படி பல முக்கிய கேள்விகள். இவற்றை பகிரங்கமாக விவாதிக்க முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கேள்விகள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்துள்ளன. இவை வெளிநாடுகளில் வசிக்கும் அனைவரும் முகம் கொடுக்க வேண்டிய கேள்விகள் ஆகும். எழுத்தாளர் இந்தக் கேள்விகளுக்கூடாக தமது சமூகம் பற்றிய ஆழ்ந்த விமர்சனங்களை நோக்கித் தமது ஆற்றல்களைத் திருப்ப வேண்டும்.

இன்று இலங்கை முழுவதையும் இறுகப்பற்றியுள்ள கொலைவெறி மிகுந்த நிறுவன ரீதியாக்கப்பட்ட பலாத்காரமானது அரசியல், பொருளாதாரம், மனிதாபிமானம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய மிகவும் பயங்கரமான ஒரு முழுமையைக் கொண்டுள்ளது. இலங்கை அரசும் அதை எதிர்க்கும் சக்திகளும் ஒரே விதமான எதேச்சார வன்செயல்களைக் கட்டவிழ்த்து விடுகின்றன. மக்கள் (சிங்கள, தமிழ், முஸ்லிம் ) மரணபயத்தின் பிடியில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் இன்றைய பிரச்சனை இதுவரை நமது வரலாறு சந்திக்காதவொரு நாகரீகப் பிரச்சனை.

இந்த நிலைமைகளை எதிர்கொண்டு அறிவு ரீதியில் செயலாற்ற முற்படும் போது ஐரோப்பியச் சமூகத்திடமிருந்து நாம் பெறும் அனுபவங்களும் நமக்குத் துணையாக இருக்கலாம். குறிப்பாக வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ சமூகத்தின் நாகரீகம் பற்றிய கணிப்பீடுகளும் இன்று நாம் காணும் நடைமுறை சோசலிசம் பற்றிய விமர்சனங்களும் நமது சமுதாய அமைப்பை பற்றிய, அதன் எதிர்காலம் பற்றிய நமது பார்வைகளுக்கு மிகவும் உறுதுணையாயிருக்கும். முதலாளித்துவத்தையும் சோசலிசத்தையும் ஆழ விமர்சிக்கும் சிந்தனைப் போக்குகளில் நாம் கூடிய அக்கறை காட்டவேண்டும். நமது சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் விமர்சிக்க இந்த அறிவு பயன்படும் என்பதிற் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் வரலாற்று ரீதியான வேறுபாடுகள் பற்றிய தெளிவும் பிறக்கும்.

ஆகவே புதிய கலாச்சாரச் செயற்பாடுகளுக்கூடாக புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தாய்நாட்டின் சமூக மாற்றத்திற்கு உதவ முடியும் என்பதிற் சந்தேகமில்லை. இந்தப் பணியை எழுத்தாளர்கள் தமது சமூகப் பொறுப்பாகக் கொண்டு இயக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.

இறுதியாகப் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் நமது தாய்நாட்டைப் போய்ச் சேர வேண்டும் அல்லாவிடில் அதனால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

மார்கழி 1989

தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு ‘ நாவல் பற்றிய ஒரு விமர்சனம்

சமுத்திரன் (1985)

மு. தளையசிங்கத்தின் ஒரு தனிவீடு எனும் நாவல் பற்றிச் சென்னையில் ஒரு இளம் ஈழத்தோழர் குறிப்பிட்டார். 25 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு கடந்தவருடம் பிரசுரிக்கப்பட்டதென்றும், இந்நாவல் 1958 கலவரங்களின் அரசியல் தாக்கத்தை ‘தீர்க்க தரிசனத்துடன்’ படம் பிடிப்பதாகவும் கூறினார். நான் நாவலை வாசிக்க விரும்புவதாகச் சொன்ன போது அவரே அதைத்தந்தும் உதவினார்.

‘ ஒரு தனி வீடு ‘ கதையை சென்னையிலிருந்து பங்களூர் செல்லும் போது ரயிலில் படித்தேன். எனது ஐரோப்பிய நண்பரொருவரும் என்னுடன் கூடப் பயணம் செய்தார். நான் தளையசிங்கத்தின் நாவலைப் படித்துக் கொண்டிருந்த அதேவேளையில் அவர் Irwing Wallace இன் The Prize என்ற நாவலைப் படித்துக் கொண்டிருந்தார். இடையிடையே தளையசிங்கத்தின் சுவையான பகுதிகளை அவருக்கு மொழிபெயர்த்துக் கூறினேன். எனது சமூகமான யாழ்ப்பாணம் பற்றிய சில விடயங்களை நாவலில் வந்த சம்பவங்களை வைத்து அவருக்கு விளக்கிய போது இரசனையுடனும் ஆச்சரியத்துடனும் அவர் கேட்டார். அவரும் Wallace ன் சில சுவையான பகுதிகளை எனக்கு உரத்து வாசித்துக் காட்டினார். இரண்டு கதைகளும் இருவேறு உலகங்கள் பற்றியவை. வேறுபட்ட ஒழுக்கவியல் நியதிகள் விழுமியங்களைக் கொண்ட சமூகங்கள் பற்றியவை. ஆயினும் எனக்கும் எனது நண்பருக்குமிடையே இந்த இரு நாவல்கள் பற்றிய சம்பாசணை கலை இலக்கியம், அரசியல் கலாச்சாரம் பற்றிய ஒரு பொதுவான உரையாடலாக மாறியது. ஈழத்தமிழர் பிரச்சனையில், போரட்டத்தில் மிகவும் அக்கறை கொண்ட அவரிடம் ‘ ஒரு தனி வீடு ‘ பற்றிய எனது கருத்துக்களை இன்றைய நிலைமைகளுடனும் நாவல் அமைந்துள்ள காலப் பகுதியுடனும் தொடர்புபடுத்திக் கூறிய போது ஆர்வத்துடன் கேட்டார். அந்தப் பிரயாணத்தின் கணிசமான பகுதி இலக்கியம் பற்றிய விடயங்களைப் பேசுவதில் கழிந்தது. என் கைவசம் இருந்து சேரனின் ‘ யமன்‘ ‘இரண்டாவது சூரியோதயம் ‘ என்ற கவிதைத் தொகுப்புகள் பற்றியும் நண்பருடன் உரையாடினேன்.

ஒரு தனிவீடு பற்றிய இந்தக் குறிப்பு இந்த உரையாடலின் ஒரு பக்கவிளைவெனலாம். தளையசிங்கத்தின் இந்நாவலின் சமூகப்புலம் தளையசிங்கத்தின் சொந்த ஊரான யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு. அதே நேரத்தில் புங்குடுதீவு சமூக ரீதியில் தனித்து நிற்கும் ஒரு ‘ தீவு ‘ அல்ல. யாழ்ப்பாணத்தில் வேறு ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னால் இந்த நாவலின் பாத்திரங்களை எனது கிராமத்திலும் இனங்கண்டு கொள்ள முடிகிறது.

இந்த நாவல் நகரும் காலம் 1950 – 1960. நாவல் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. இவை இரண்டும் ஒரே காலத்தில் எழுதப்பட்டதா அல்லது இரண்டிற்கு மிடையே ஒரு இடைவெளி இருந்ததா என்பதைச் சரியாகச் சொல்ல முடியாது. இரண்டாவது பகுதி குடும்ப மட்ட பிரச்சனையிலிருந்து பரந்த அரசியல் களத்திற்கு வாசகனை இழுத்துச் செல்கிறது. இறுதியில் தமிழருக்கு தனிநாடு வேண்டுமென்ற செய்தியுடன் முற்றுப் பெறுகிறது. இங்கே நாவலாசிரியரின் சமூகப்பார்வை அரசியலபிப்பிராயங்கள் தப்பபிராயங்கள் ‘கொம்யூனிஸ்டுகள்’ மீதான வெறுப்பு ஈழத்துக்கும் அப்பாற்பட்ட தமிழ் இன ஒருமைப்பாட்டுக் கருத்துக்கள் எல்லாமே புலப்படுகின்றன. தளையசிங்கத்தின் சமூகப் பார்வை பற்றிய விமர்சனம் இங்கு எனது நோக்கமல்ல. அவருடைய இந்த நாவல் நமது சமூகத்தின் ஒரு பகுதியை நமது வரலாற்றின் ஒரு கணத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதைப் பார்ப்பதே எனது நோக்கம். இது அவருடைய தத்துவார்த்த நிலைப்பாடு பற்றிய விமர்சனமாகவும் தவிர்க்க முடியாதபடி அமையலாம்.

தனது சூழல் பற்றிய நுணுக்கமான அறிவும் அதே நேரத்தில் அங்கு வாழும் மனிதர்களின் உணர்ச்சிகளுடன் உணர்வுகளுடன் நெருக்கமான பிணைப்பும் கொண்ட ஒரு இலக்கிய கர்த்தா அவனுடைய சமூகப்பார்வை எப்படி இருப்பினும் சில யதார்த்த நிலைமைகளை படம் பிடிக்கவே செய்கிறான். அவனது கலைத்துவப் பிரதிபலிப்பில் சமூக நிகழ்வுகளின் விவரணம் அவன் உணர்வு பூர்வமாகக் கொண்டிருக்கும் அரசியல் கருத்துக்களை ஏற்காதவர்களுக்கும் பயன் தரக்கூடியது. ஒரு தனி வீட்டில் வரும் நெருங்கிய உறவினர்களாக கந்தையர், பொன்னம்பலத்தார் குடும்பங்களுக்கு இடையிலான உறவு, இந்தக் குடும்பங்களுக்குள்ளே நிலவும் மனித உறவுகள் நமது சமூகம் பற்றிய பல அப்பட்டமான உண்மைகளைத் தனி மனித மட்டங்களில் தெளிவாகப் பிரதி பலிக்கின்றன. சாதியால் இரத்த உறவுகளால் ஒன்றாகப் பிணைந்திருக்கும் இவ்விரு குடும்பங்களுக்குமிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு காலத்தோடு வளர்ந்து சமூக அந்தஸ்தில் வேறுபாடு வளரும் போது ஏற்படும் முரண்பாடுகளின் வெளிப்பாடுகளை நாவலாசிரியர் கையாண்டுள்ள விதம் குறிப்படத்தகுந்தது. இந்த வெளிப்பாடுகள் பலவிதம். இவற்றில் முக்கியமானது சிங்கராசன் – சேதா உறவு பாதிக்கப்படும் விதம். அவர்களின் பால்ய காலத்து கனவு நமது சமூக மரபுகளின் படி ‘நியாயமானது.’ சேதா – சிங்கராசனின் முறைப்பெண் என்பதால் சூழலிலுள்ள பெரியவர்கள் கூட தம் பகிடிகளால் இந்தச் சிறுவர்களின் கனவுகளை வளர்க்க உதவுகிறார்கள். ஆனால் ‘முறைப்பெண்‘ என இயற்கை நியதி போலாகிவிட்ட பழைய மரபினை சமூக நகர்ச்சியும் பணவேறுபாடும் கொண்டுவரும் புதிய மரபுகள் மறுதலிக்கின்றன. ‘வழியடிக்கிற இவரும் தூண்டல் கம்பு காவிற இவற்ற மகனும் இல்லாட்டா எனக்கும் என்ர மகளுக்கும் நட்டந்தான் வந்திரப்போகுது.’ என்ற பொன்னம்பலத்தாரின் வார்த்தைகள் அவருடைய புதிய பணக்காரத் திமிரையும் சிங்கராசனுக்கும் சேதாவுக்குமிடையே அவர்களின் மனோகரமான கனவுகளையும் விட வேகமாக வளர்ந்து விட்ட சமூக அந்தஸ்து வேறுபாட்டையும் பயங்கரமாக வெளிப்படுத்துகின்றன. இந்த அவமதிப்பில் புதிய செல்வந்தரின் அகங்காரமும் வெள்ளாளனின் சாதி வெறியும் இரண்டு வார்த்தைகளிலே அம்மணமாய்த் தெரிகின்றன.

குடும்பங்களிடையிலான அந்தஸ்து வேறுபாடுகளின் வெளிப்பாடுகள் விழாக்களாக உருவெடுப்பது நமது சமூகத்தில் நாம் பொதுவாகக் காண்பது. சடங்குகளை தமது டாம்பீகத்தை விளம்பரப்படுத்த நம்மவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த விளம்பரக் கோலாகலங்களில் புதிய பணக்காரர் தமது பெருமையை வெளிக்காட்டும் விதம் அவர்களின் வறிய உறவினர்களிடம் ஒருபுறம் தாழ்வுச்சிக்கலையும் துன்பத்தையும் மறுபுறம் பொறாமையையும் ஏற்படுத்துகிறது. பணக்கார வீடொன்றில் படாடோபத்துடன் கொண்டாடப்படும் சடங்கில் விருந்தினராக வரும் வறிய உறவினர்களின் அக உலகின் போராட்டங்களும் சித்திரவதைகளும் நமது சமூகத்தின் அசமத்துவத்தின் மனிதத்துவம் குன்றிய உறவுகளின் அகநிலை பூர்வமான தாக்கங்களே. இவற்றின் தனிமனித மட்ட தாக்கங்களின் வேறுபாடுகளைக் கந்தையர் குடும்ப அங்கத்தவர்களிடம் காணலாம்.

குடும்பமென்ற நிறுவனத்தின் ‘பரிசுத்த’ தோற்றத்துக்குப் பின்னால் அன்றாட வாழ்வில் பொருளாதார சமூகக் காரணிகளின் தாக்கத்தால் அந்த நிறுவனத்தின் அங்கங்களான மனிதர்களிடையே நடைபெறும் கபடங்கள், கொடுமைகள், பழிவாங்கல்கள், சுயதண்டனைகள் போன்றவற்றை இந்த நாவலின் வாசகர் உணருவர். நமது சமூகத்தில் பேச்சளவில் வெளித்தோற்றத்தில் புனிதப்படுத்தப்படும் ஒழுக்கவியல் நெறிகளுக்கும் யதார்த்தத்துக்குமிடையேயுள்ள முரண்பாட்டைக் காணுவர். இந்த ஒழுக்கவியலின் போலித்தனமும் மனிதரின் வாழ்நிலைப் பிரச்சனைகளை மூடிமறைத்து உள்ளுக்கே வெந்து சாக வைக்கும் சமூக உறவுகள் மட்டுமே நமது சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டுமென்பதற்கு போதுமான நியாயங்களாகின்றன. சீதனக்கொடுமையால் வாழ்வில் நம்பிக்கையிழந்து தற்கொலை செய்யும் பரிமளமும் இந்த முடிவுக்கே நம்மைத் தள்ளுகிறாள். ‘கல்வியில் சிறந்த’ யாழ்ப்பாணத்தின் அநாகரீகத்தின் கலாச்சாரப் பின்னடைவின் வடிவமே செல்லையா வாத்தி. செல்லையாக்களை இலங்கையில் தமிழர் வாழும் பல பிரதேசங்களிலும் குறிப்பாக மலைநாட்டிலும் நாம் சந்திக்கிறோம். நமது சமூக அமைப்பின் பிற்போக்குத்தனத்தை பறை சாற்றும் இந்தப் பிரதிநிதிகளைக் காணும் போதெல்லாம் நமது மக்களின் நாகரீகம் மீட்சி பெற இந்த அமைப்பு அழிக்கப்பட வேண்டுமென்ற செய்தி ஒலிக்கவில்லையா?

நாவலின் முதலாம் பாகத்தை வாசித்த போது இந்த எண்ணங்கள் என் மனதில் எழுந்தன. கொம்யூனிசத்தில் நம்பிக்கையுள்ள வாசகன் நான். தளையசிங்கத்தின் கலைத்துவப் பிரதிபலிப்புக்களைப் பார்த்து இப்படிச் சிந்திக்கிறேன். இன்னொருவர் வேறுவிதமாகச் சிந்திக்கக்கூடும்.

இரண்டாம் பாகத்துக்கு வருகிறோம். பரந்த சமூகத்தளத்துக்குள் பிரவேசிக்கிறோம். அரசியலை நேரடியாக அப்படியே எதிர்கொள்கிறோம். சிங்கராசன் வளர்கிறான். சிறுகடை முதலாளியாகிறான். படிக்கிறான் அரசியல் பேசுகிறான் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தனாகிறான். அவனுடைய ஆரம்ப கால வளர்ச்சிக்கு உதவும் ஒரு கொம்யூனிஸ்ட் மாஸ்டரைச் சந்திக்கிறோம். சிங்களம் மட்டும் வருகிறது. 1958 நடைபெறுகிறது. அதன் தாக்கங்கள் புங்குடுதீவிலும் ஏற்படுகின்றன. டாக்டரை மணந்த சேதா விதவையாகத் திரும்புகிறாள் வியாபாரிகள் அகதிகளாய் வருகின்றனர். சிங்கராசன் சேதாவை மணக்கிறான். அவன் சொல்கிறான் ‘நமக்கு ஒரு நாடும் அரசும் ஒரு கூட்டாட்சியின் கீழ் தரமறுத்தால் ஒரு தனிநாடு அல்லது கடல் கடந்த ஒரு பரந்த தமிழ்நாட்டின் கூட்டாட்சியாவது அமைக்க வேண்டும். அதற்காகவாவது போராடுவோம். இங்கு யார் வராவிட்டாலும் நான் போராடுவேன் மறைமுகமான ஒரு அண்டர் கிரவுண்ட் பயங்கர இயக்கமாவது என் தலைமையில் அமைத்துப் போராடுவேன்’ இதுதான் அந்த இளம் ஈழப்போராளி குறிப்பிட்ட தளையசிங்கத்தின் தீர்க்க தரிசனம் போலும்.

இரண்டாம் பாகத்தில் நாவலாசிரியரின் பாத்திரவார்ப்பில் அவருடைய அரசியல் பார்வையின் நேரடி ஆதிக்கத்தை காணமுடிகிறது. சிங்கராசன் தான் ஆசிரியரின் இலட்சியப் பாத்திரமாக வளர்த்தெடுக்கப்படுகிறான். கொம்யூனிஸ்ட் மாஸ்டர் கொம்யூனிஸ்ட் கட்சியினதும் ‘கொம்யூனிஸ்ட்டுகளினதும்’ குறைபாடுகளின் வடிவமாகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளார். தமிழர் உரிமைப் போராட்டத்தை கொம்யூனிஸ்ட்டுக்கள் முன்னெடுக்கத் தவறியமை விமர்சிக்கப்பட வேண்டியது. அது இடதுசாரி இயக்கத்தின் மாபெரும் குறைபாடு. ஆனால் கொம்யூனிஸ்ட் மாஸ்டரையும் அவரது கட்சியையும் விமர்சிக்கும் சிங்கராசன் எனும் இலட்சியவாதி எந்த இலட்சியங்களைத் தேர்ந்தெடுக்கிறான் ? எந்தக் கட்சியுடன் சேர்கிறான்? கொம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு அப்பால் போக விரும்பும் அவனை ஆகர்ஷித்த கட்சி தமிழரசுக்கட்சி ! இதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

தமிழரசுக் கட்சி சமஷ்டி கோருவதால் தான் பிற்போக்குக் கட்சியென இடதுசாரிகள் கூறினார்களாம். சிங்கராசன் சந்தித்த கொம்யூனிஸ்ட் மாஸ்டர் உண்மையிலேயே சரியில்லைத்தான். ஏனென்றால் அவர் அவனுக்கு தமிழரசுக்கட்சியை இடதுசாரிகள் ஏன் பிற்போக்கானதெனக் கொண்டார்கள் என்பதைக் கூட சரியாக விளக்க முடியாத ஒரு கொம்யூனிஸ்ட். தளையசிங்கத்தால் அப்படி ஒரு கொம்யூனிஸ்டைத்தான் பார்க்க முடிந்திருக்கிறது. தன் சூழலை மிக நுணுக்கமாகவும் கலைத்துவத்துடனும் விவரிக்கும் தளையசிங்கத்துக்குத் தமிழரசுக்கட்சி ஏன் பிற்போக்குக் கட்சியென தமிழ் இடதுசாரிகள் கருதினார்கள் என்பதை மட்டும் ஏன் தான் நேர்மையாக விவரிக்க முடியவில்லையோ தெரியாது. கொம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் குறைபாடுகள் தனிப்பட்ட குறைபாடுகளைத் தெரிந்த அளவிற்கு அவருக்கு இந்த விஷயம் மட்டும் எப்படியோ தெரியாது போய்விட்டது. உண்மை என்ன?

தமிழரசுக் கட்சியினர் பிற்போக்குவாதிகள் தான். காரணம் அவர்கள் தமிழ் சமூகத்துக்குள்ளேயிருந்த பிற்போக்கு சாதிக் கொடுமைகளைப் பேணிக்காத்தனர் அல்லது மூடி மறைத்தனர். போலிச் சமபந்திப் போசனங்களால் தம் மாற்றம் விரும்பா மனப்பாங்கினை மூடி மறைக்க முயன்றனர். தமிழரசுக் கட்சியின் மொழியுரிமைப் பிரச்சாரம் தமிழ் இனவாத அடிப்படையிலேயே அமைந்தது. ‘நாய்க்குணம் படைத்த நந்தசேனாக்களையும் பேய்க்குணம் படைத்த புஞ்சி நோனாக்களையும்’ பற்றிப் பேசினார்கள். ஆண்ட பரம்பரை பற்றிக் கத்தினார்கள். இது பிற்போக்கில்லாமல் நற்போக்கா ?

‘தந்தை’ செல்வா திருகோணமலை பிரிட்டிஷ் தளம் தேசிய மயமாக்கப்பட்ட போது மகாராணிக்குத் தந்தியடித்து எதிர்ப்புத் தெரிவித்தது பிற்போக்கில்லையா ? நெற்காணி மசோதா போன்ற சாதாரண சீர்திருத்தத்தைக் கூட எதிர்த்த சமஷ்டிக் கட்சியினரை எப்படி அழைப்பது ? பள்ளிக்கூடங்கள் தேசிய மயமாக்கப்பட்டதை எதிர்த்த கட்சியை ஏக்கராவரி (acreage tax) கொண்டு வரப்பட்ட போது எதிர்த்த கட்சியை கொம்யூனிஸ்ட் கட்சியையும் விட முற்போக்கான கட்சி என அழைப்பவர்கள் வலதுசாரிப் பிற்போக்குவாதிகளைத் தவிர யாராக இருக்க முடியும். 1965 இல் சமஷ்டியைக் காற்றிலே பறக்கவிட்டு U.N.P யுடன் ‘ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்’ புனித கைங்கரியத்துக்காக இணைந்த கட்சியை எப்படி அழைப்பது?

இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். இவையெல்லாம் தளையசிங்கத்துக்குத் தெரிந்த விடயங்கள் தான். தமிழரசுக்கட்சியின் அரசியல் கனவான்களை இந்த நாவலில் நாம் காணவில்லை. அந்தக் கட்சியைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். அதில் சிங்கராசன் என்னும் இலட்சிய புருஷன் சேர்கிறான்..

இத்தனைக்கும் மார்க்சீயவாதிகள் பற்றி நியாயமான கேள்விகளே எழுப்பப்படுகின்றன. கொம்யூனிஸ்ட் கட்சியின் பார்வையில் தமிழர்கள் கேட்கும் உரிமைகள் நியாயமானது என்பதை ஏன் இவர்கள் அடித்து ஆணித்தரமாகச் சொல்லக்கூடாது? ‘லெனின் அகராதியில் எல்லா சிறுபான்மை இனமும் பெரும்பான்மை இனம் அனுபவிக்கும் சகல விதமான உரிமைகளையும் பெற்றிருக்க வேண்டும் என்றுதானே கூறுகிறது?’

‘உள்ளூர் சாதிப்பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களை உயர் சாதிக்கெதிராகப் போராடத் தூண்டுவதில் முழுமூச்சாக நிற்கும் இவர்கள் ஏன் சிங்களவரால் தமிழரின் நிலம், மொழி, கலாச்சாரம் யாவற்றையும் சூறையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் ?’

ஆயினும் இந்தக் கேள்விகள் சிங்கராசனைக் கொம்யூனிஸ்டுக்களையும் விட புரட்சிகரமான ஒரு அணியைப் போய்ச் சேர உதவவில்லை. இந்தக் கேள்விகளை கொம்யூனிஸ்ட் கட்சியின் தவறுகளைப் புட்டுக்காட்ட நல்லசிவம் பயன்படுத்தினார். இவற்றிற் கூடாக சிங்கராசன் சுலபமாகக் கொம்யூனிஸ்ட் கட்சியை உதறித்தள்ளி விடுகிறான். அதையும் விட சுலபமாக தமிழரசுக்கட்சியுடன் இணைந்து விடுகிறான். இந்த இலட்சியப் பாத்திரம் மிகச் சாதாரணமான தொன்றையே செய்கிறான். அந்தக் காலத்திய அலையுடன் விமர்சனமின்றி ஒன்றி விடுகிறான்.

அப்போதெல்லாம் தமிழரசுக் கட்சியின் தமிழ் இனவாதம் மிகுந்த தேசியவாதக் கருத்துக்களையும் கொம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களையும் மகாத்மா காந்தியையும் ஈழத்துக்காந்தியையும் பற்றிப் பேசுவதுதான் விலைபோகும் அரசியல். உள்ளூர் அரசியல்வாதிக்குரிய இலட்சணங்களையெல்லாம் பெற்றுக் கொண்ட – அடிப்படைக் கல்வி, சிறு கடை முதலாளி பேச்சுவன்மை etc. Etc. – சிங்கராசன் தமிழரசுக் கட்சியின் அக்காலத்திய. கிராமிய மட்டத்து அசல் தலைமைப் பிரதிநிதி. சிங்கராசன் சொல்கிறான் ‘அறிஞர்களையும் அவர்களின் தத்துவங்களையும் பொறுத்தவரை என் மனதைக் காந்தியால் தொட முடிந்ததே ஒழிய மார்க்ஸாலோ ஸ்டாலினாலோ தொட முடியவில்லை.’ இது அக்கலாத்தில் நாம் காது புளிக்கக் கேட்ட மேடைப் பேச்சு. இந்த வகையில் சிங்காரசன் யதார்த்த பூர்வமான பாத்திரம். குட்டி வியாபாரியாகிவிட்ட சிங்கராசன் தன் சமூக நகர்ச்சிக்கூடாகத் தன் ‘வெள்ளாள’ வாழ்நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டான். ‘அவனுடைய தூண்டல் காம்புகாவின’ காலத்து நினைவுகள் பரந்த அடிப்படையான புரட்சிகர மாற்றத்தை வலியுறுத்தும் கொள்கைவாதியாக அவனை மாற்றவில்லை. அந்த நினைவுகள் அவனுக்கு வரவில்லை. பொன்னம்பலத்தார் வீட்டில் திருமணம் செய்து தன் பால்ய கனவை நனவாக்கும் அந்தஸ்தையும் அவன் பெற்றுவிட்டான். முன்பு முறைப்பெண்ணான சேதாவையும் அவனையும் ‘வர்க்கம்’பிரித்தது. இப்போ அந்த வேறுபாடு இல்லை. அவனுடைய அரசியலும் அவனுடைய வாழ்நிலைக்கு உகந்த அரசியல். இந்த வகையிலும் சிங்கராசன் நமது சமூகத்தின் ஒரு வயதுப்போக்கின் பிரதிநிதியாகிறான். யதார்த்தப் படைப்பு.

ஆனால் காந்தியைப் பற்றிப் பேசும் சிங்கராசன் அண்டர் கிரவுண்ட் இயக்கம் பற்றியும் பேசுகிறான். அதேநேரத்தில் அவனுடைய தமிழ் தேசியவாதம் இலங்கைத் தமிழரும், இந்தியத்தமிழரும் இணைந்த ஒரு தனி நாடு வரை செல்கிறது. இங்கும் சிங்கராசன் ஒரு புதுமைப் பிறவியில்லை. இந்தியாவின் தமிழ் நாட்டுடனோ அல்லது முழு இந்தியாவுடனோ இணைவதைப் பல நடுத்தர வர்க்க தமிழர்கள் மானசீகமாக விரும்பினார்கள். இன்றும் பலர் விரும்புகிறார்கள்! சிங்கராசனின் உலகம் சிறியது. அவன் புங்குடுதீவுக்குமப்பால் போகாதது இதற்கு காரணம் எனக் கூறுவதையும் விட அவனுடைய சமூகப்பார்வை குறுகிய தமிழ் தேசியவாதத்தால் சிறை வைக்கப்பட்டுள்ளதே காரணமெனலாம். ஆகவே மார்க்சீயத்தை விமர்சித்த சிங்கராசன் அந்தத் தத்துவத்தையும் தாண்டி முன்னேறவில்லை. அவன் வாழ்ந்த காலத்து அலையில் அகப்பட்டு மார்க்சீயத்துக்கு எதிரான போக்குடனே இணைகிறான். இந்தப் போக்கே நூலாசிரியரையும் பலமாகப் பற்றிக் கொண்டுள்ளது. இதைப் புரிந்து கொள்ள முதலாம் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்குமிடையேயுள்ள அடிப்படை வேறுபாடுகள் உதவுகின்றன.

முதலாம் பாகத்தில் குடும்ப மட்ட மனித நிலைமைகளை, அல்லல்களை, குமுறல்களை மிக நுணுக்கமாகப் படம் பிடிக்கும் நாவலாசிரியர் சில அடிப்படையான சமூக முரண்பாடுகளை வெளிக்கொணர்கிறார். இது அவர் விரும்பியோ விரும்பாமலோ நடைபெறுகிறது. இரண்டாம் பாகத்தில் இந்த முரண்பாடுகளையெல்லாம் தமிழ் தேசியவாத அரசியல் ஒரு மூலைக்குள் ஒதுக்கி விடுகிறது. அத்துடன் சிங்கராசனின் வாழ்நிலை மாற்றத்துடன் அவனைத் தொடரும் நாவலாசிரியர் முதலாம் பாகத்தின் பிரச்சனைகளையும் விட்டுவிடுகிறார். தர்க்க ரீதியில் பார்க்குமிடத்து முதலாம் பாகத்தில் நாம் படிக்கும் வரிகளுக்குப் பின்னே இருக்கும் விமர்சன ஆற்றல் மிகுந்த நாவலாசிரியரின் மனம் இரண்டாம் பாகத்தில் அந்த ஆற்றலை இழந்து விடுகிறது. இந்த முறிவு மிகவும் தெளிவாகவே தெரிகிறது. எழுந்து வரும் தேசியவாத அலையை அவர் விமர்சன ரீதியில் ஏன் அணுகவில்லை? இந்தக் கேள்விக்குப் பதில் காண நாம் தளையசிங்கத்தின் தத்துவார்த்தப் பார்வையை ஆராய வேண்டும். அதைச் செய்ய இதுவல்ல இடம். ஆனால் இங்கு எழுப்பப்பட்ட கேள்விகள் அடுத்த கட்டமாக நம்மை அத்தகைய ஒரு விவாதத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே என் கருத்து.

இன்று சிங்கராசனுக்கு 25 வருடங்களுக்குப் பின் தமிழ் தேசியவாதமும் ஈழவிடுதலைப்போரும் எங்கு போய்க் கொண்டிருக்கின்றன? அல்லது எங்கு போக முயற்சிக்கின்றன? கடந்த பல வருடங்களின் நடைமுறைகள் காந்தியத்தை மட்டும் பயனற்ற ஒரு கருத்தமைவாகக் காட்டவில்லை. ‘ஈழத்துக் காந்தி’ யின் பின்னாலிருந்த வர்க்க நலன்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளன.

சிங்கராசன் சார்ந்திருந்த இயக்கத்தின் வர்க்கத் தன்மைகளை அறிந்த இன்றைய புரட்சிகர தேசியவாதிகள் பழைய தலைமையை நிராகரித்து விட்டார்கள். அதுமட்டுமல்ல அவர்களின் புரட்சிகரத் தேடல் தமிழ் சமுதாயத்தையே அடிப்படையில் மாற்றவல்ல தத்துவத்தை நோக்கியதாய் அமைந்து விட்டது. அவர்கள் மாக்சியமே தமக்கு வழி காட்டவல்லது என்ற நிலைப்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இன்று அவர்களுக்கு ‘கொம்யூனிஸ்ட் மாஸ்டர்கள்’ தேவையில்லை. அவர்களாகவே நடைமுறைக்கூடாகச் சிந்தித்து படித்து மார்க்சீயத்தை அணுகமுற்படுகிறார்கள். தமிழ் தேசியவாதம் இனிமேல்தான் நமது சமுதாயத்தை மாற்றவல்ல முற்போக்கு அலையாக மாறப் போகிறது.

பிற்குறிப்பு (April 2017)

1985ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் இறுதிவசனங்கள் அப்போதைய எனது எதிர்பார்ப்பின் ஒலிகள் தான். அன்று சில இயக்கங்களிடம் தென்பட்ட இடதுசாரிப் போக்கின் எதிர்காலம் பற்றிய எனது கணிப்பீடு அதீதமானதென்பதைப் பின்னர் ஏற்றுக்கொண்டேன். இந்தப் போக்குத் தமிழ் குறுந்தேசிய வாத, இனவாதப் போக்கை எதிர்த்து ஒரு மாற்றுப் பாதையைத் தேடுவதில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது எனப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. இது பற்றி பின்னர் எழுதிய கட்டுரைகளில் எனது கருத்துக்களை கூறியுள்ளேன்.