தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு ‘ நாவல் பற்றிய ஒரு விமர்சனம்

சமுத்திரன் (1985)

மு. தளையசிங்கத்தின் ஒரு தனிவீடு எனும் நாவல் பற்றிச் சென்னையில் ஒரு இளம் ஈழத்தோழர் குறிப்பிட்டார். 25 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு கடந்தவருடம் பிரசுரிக்கப்பட்டதென்றும், இந்நாவல் 1958 கலவரங்களின் அரசியல் தாக்கத்தை ‘தீர்க்க தரிசனத்துடன்’ படம் பிடிப்பதாகவும் கூறினார். நான் நாவலை வாசிக்க விரும்புவதாகச் சொன்ன போது அவரே அதைத்தந்தும் உதவினார்.

‘ ஒரு தனி வீடு ‘ கதையை சென்னையிலிருந்து பங்களூர் செல்லும் போது ரயிலில் படித்தேன். எனது ஐரோப்பிய நண்பரொருவரும் என்னுடன் கூடப் பயணம் செய்தார். நான் தளையசிங்கத்தின் நாவலைப் படித்துக் கொண்டிருந்த அதேவேளையில் அவர் Irwing Wallace இன் The Prize என்ற நாவலைப் படித்துக் கொண்டிருந்தார். இடையிடையே தளையசிங்கத்தின் சுவையான பகுதிகளை அவருக்கு மொழிபெயர்த்துக் கூறினேன். எனது சமூகமான யாழ்ப்பாணம் பற்றிய சில விடயங்களை நாவலில் வந்த சம்பவங்களை வைத்து அவருக்கு விளக்கிய போது இரசனையுடனும் ஆச்சரியத்துடனும் அவர் கேட்டார். அவரும் Wallace ன் சில சுவையான பகுதிகளை எனக்கு உரத்து வாசித்துக் காட்டினார். இரண்டு கதைகளும் இருவேறு உலகங்கள் பற்றியவை. வேறுபட்ட ஒழுக்கவியல் நியதிகள் விழுமியங்களைக் கொண்ட சமூகங்கள் பற்றியவை. ஆயினும் எனக்கும் எனது நண்பருக்குமிடையே இந்த இரு நாவல்கள் பற்றிய சம்பாசணை கலை இலக்கியம், அரசியல் கலாச்சாரம் பற்றிய ஒரு பொதுவான உரையாடலாக மாறியது. ஈழத்தமிழர் பிரச்சனையில், போரட்டத்தில் மிகவும் அக்கறை கொண்ட அவரிடம் ‘ ஒரு தனி வீடு ‘ பற்றிய எனது கருத்துக்களை இன்றைய நிலைமைகளுடனும் நாவல் அமைந்துள்ள காலப் பகுதியுடனும் தொடர்புபடுத்திக் கூறிய போது ஆர்வத்துடன் கேட்டார். அந்தப் பிரயாணத்தின் கணிசமான பகுதி இலக்கியம் பற்றிய விடயங்களைப் பேசுவதில் கழிந்தது. என் கைவசம் இருந்து சேரனின் ‘ யமன்‘ ‘இரண்டாவது சூரியோதயம் ‘ என்ற கவிதைத் தொகுப்புகள் பற்றியும் நண்பருடன் உரையாடினேன்.

ஒரு தனிவீடு பற்றிய இந்தக் குறிப்பு இந்த உரையாடலின் ஒரு பக்கவிளைவெனலாம். தளையசிங்கத்தின் இந்நாவலின் சமூகப்புலம் தளையசிங்கத்தின் சொந்த ஊரான யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு. அதே நேரத்தில் புங்குடுதீவு சமூக ரீதியில் தனித்து நிற்கும் ஒரு ‘ தீவு ‘ அல்ல. யாழ்ப்பாணத்தில் வேறு ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னால் இந்த நாவலின் பாத்திரங்களை எனது கிராமத்திலும் இனங்கண்டு கொள்ள முடிகிறது.

இந்த நாவல் நகரும் காலம் 1950 – 1960. நாவல் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. இவை இரண்டும் ஒரே காலத்தில் எழுதப்பட்டதா அல்லது இரண்டிற்கு மிடையே ஒரு இடைவெளி இருந்ததா என்பதைச் சரியாகச் சொல்ல முடியாது. இரண்டாவது பகுதி குடும்ப மட்ட பிரச்சனையிலிருந்து பரந்த அரசியல் களத்திற்கு வாசகனை இழுத்துச் செல்கிறது. இறுதியில் தமிழருக்கு தனிநாடு வேண்டுமென்ற செய்தியுடன் முற்றுப் பெறுகிறது. இங்கே நாவலாசிரியரின் சமூகப்பார்வை அரசியலபிப்பிராயங்கள் தப்பபிராயங்கள் ‘கொம்யூனிஸ்டுகள்’ மீதான வெறுப்பு ஈழத்துக்கும் அப்பாற்பட்ட தமிழ் இன ஒருமைப்பாட்டுக் கருத்துக்கள் எல்லாமே புலப்படுகின்றன. தளையசிங்கத்தின் சமூகப் பார்வை பற்றிய விமர்சனம் இங்கு எனது நோக்கமல்ல. அவருடைய இந்த நாவல் நமது சமூகத்தின் ஒரு பகுதியை நமது வரலாற்றின் ஒரு கணத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதைப் பார்ப்பதே எனது நோக்கம். இது அவருடைய தத்துவார்த்த நிலைப்பாடு பற்றிய விமர்சனமாகவும் தவிர்க்க முடியாதபடி அமையலாம்.

தனது சூழல் பற்றிய நுணுக்கமான அறிவும் அதே நேரத்தில் அங்கு வாழும் மனிதர்களின் உணர்ச்சிகளுடன் உணர்வுகளுடன் நெருக்கமான பிணைப்பும் கொண்ட ஒரு இலக்கிய கர்த்தா அவனுடைய சமூகப்பார்வை எப்படி இருப்பினும் சில யதார்த்த நிலைமைகளை படம் பிடிக்கவே செய்கிறான். அவனது கலைத்துவப் பிரதிபலிப்பில் சமூக நிகழ்வுகளின் விவரணம் அவன் உணர்வு பூர்வமாகக் கொண்டிருக்கும் அரசியல் கருத்துக்களை ஏற்காதவர்களுக்கும் பயன் தரக்கூடியது. ஒரு தனி வீட்டில் வரும் நெருங்கிய உறவினர்களாக கந்தையர், பொன்னம்பலத்தார் குடும்பங்களுக்கு இடையிலான உறவு, இந்தக் குடும்பங்களுக்குள்ளே நிலவும் மனித உறவுகள் நமது சமூகம் பற்றிய பல அப்பட்டமான உண்மைகளைத் தனி மனித மட்டங்களில் தெளிவாகப் பிரதி பலிக்கின்றன. சாதியால் இரத்த உறவுகளால் ஒன்றாகப் பிணைந்திருக்கும் இவ்விரு குடும்பங்களுக்குமிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு காலத்தோடு வளர்ந்து சமூக அந்தஸ்தில் வேறுபாடு வளரும் போது ஏற்படும் முரண்பாடுகளின் வெளிப்பாடுகளை நாவலாசிரியர் கையாண்டுள்ள விதம் குறிப்படத்தகுந்தது. இந்த வெளிப்பாடுகள் பலவிதம். இவற்றில் முக்கியமானது சிங்கராசன் – சேதா உறவு பாதிக்கப்படும் விதம். அவர்களின் பால்ய காலத்து கனவு நமது சமூக மரபுகளின் படி ‘நியாயமானது.’ சேதா – சிங்கராசனின் முறைப்பெண் என்பதால் சூழலிலுள்ள பெரியவர்கள் கூட தம் பகிடிகளால் இந்தச் சிறுவர்களின் கனவுகளை வளர்க்க உதவுகிறார்கள். ஆனால் ‘முறைப்பெண்‘ என இயற்கை நியதி போலாகிவிட்ட பழைய மரபினை சமூக நகர்ச்சியும் பணவேறுபாடும் கொண்டுவரும் புதிய மரபுகள் மறுதலிக்கின்றன. ‘வழியடிக்கிற இவரும் தூண்டல் கம்பு காவிற இவற்ற மகனும் இல்லாட்டா எனக்கும் என்ர மகளுக்கும் நட்டந்தான் வந்திரப்போகுது.’ என்ற பொன்னம்பலத்தாரின் வார்த்தைகள் அவருடைய புதிய பணக்காரத் திமிரையும் சிங்கராசனுக்கும் சேதாவுக்குமிடையே அவர்களின் மனோகரமான கனவுகளையும் விட வேகமாக வளர்ந்து விட்ட சமூக அந்தஸ்து வேறுபாட்டையும் பயங்கரமாக வெளிப்படுத்துகின்றன. இந்த அவமதிப்பில் புதிய செல்வந்தரின் அகங்காரமும் வெள்ளாளனின் சாதி வெறியும் இரண்டு வார்த்தைகளிலே அம்மணமாய்த் தெரிகின்றன.

குடும்பங்களிடையிலான அந்தஸ்து வேறுபாடுகளின் வெளிப்பாடுகள் விழாக்களாக உருவெடுப்பது நமது சமூகத்தில் நாம் பொதுவாகக் காண்பது. சடங்குகளை தமது டாம்பீகத்தை விளம்பரப்படுத்த நம்மவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த விளம்பரக் கோலாகலங்களில் புதிய பணக்காரர் தமது பெருமையை வெளிக்காட்டும் விதம் அவர்களின் வறிய உறவினர்களிடம் ஒருபுறம் தாழ்வுச்சிக்கலையும் துன்பத்தையும் மறுபுறம் பொறாமையையும் ஏற்படுத்துகிறது. பணக்கார வீடொன்றில் படாடோபத்துடன் கொண்டாடப்படும் சடங்கில் விருந்தினராக வரும் வறிய உறவினர்களின் அக உலகின் போராட்டங்களும் சித்திரவதைகளும் நமது சமூகத்தின் அசமத்துவத்தின் மனிதத்துவம் குன்றிய உறவுகளின் அகநிலை பூர்வமான தாக்கங்களே. இவற்றின் தனிமனித மட்ட தாக்கங்களின் வேறுபாடுகளைக் கந்தையர் குடும்ப அங்கத்தவர்களிடம் காணலாம்.

குடும்பமென்ற நிறுவனத்தின் ‘பரிசுத்த’ தோற்றத்துக்குப் பின்னால் அன்றாட வாழ்வில் பொருளாதார சமூகக் காரணிகளின் தாக்கத்தால் அந்த நிறுவனத்தின் அங்கங்களான மனிதர்களிடையே நடைபெறும் கபடங்கள், கொடுமைகள், பழிவாங்கல்கள், சுயதண்டனைகள் போன்றவற்றை இந்த நாவலின் வாசகர் உணருவர். நமது சமூகத்தில் பேச்சளவில் வெளித்தோற்றத்தில் புனிதப்படுத்தப்படும் ஒழுக்கவியல் நெறிகளுக்கும் யதார்த்தத்துக்குமிடையேயுள்ள முரண்பாட்டைக் காணுவர். இந்த ஒழுக்கவியலின் போலித்தனமும் மனிதரின் வாழ்நிலைப் பிரச்சனைகளை மூடிமறைத்து உள்ளுக்கே வெந்து சாக வைக்கும் சமூக உறவுகள் மட்டுமே நமது சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டுமென்பதற்கு போதுமான நியாயங்களாகின்றன. சீதனக்கொடுமையால் வாழ்வில் நம்பிக்கையிழந்து தற்கொலை செய்யும் பரிமளமும் இந்த முடிவுக்கே நம்மைத் தள்ளுகிறாள். ‘கல்வியில் சிறந்த’ யாழ்ப்பாணத்தின் அநாகரீகத்தின் கலாச்சாரப் பின்னடைவின் வடிவமே செல்லையா வாத்தி. செல்லையாக்களை இலங்கையில் தமிழர் வாழும் பல பிரதேசங்களிலும் குறிப்பாக மலைநாட்டிலும் நாம் சந்திக்கிறோம். நமது சமூக அமைப்பின் பிற்போக்குத்தனத்தை பறை சாற்றும் இந்தப் பிரதிநிதிகளைக் காணும் போதெல்லாம் நமது மக்களின் நாகரீகம் மீட்சி பெற இந்த அமைப்பு அழிக்கப்பட வேண்டுமென்ற செய்தி ஒலிக்கவில்லையா?

நாவலின் முதலாம் பாகத்தை வாசித்த போது இந்த எண்ணங்கள் என் மனதில் எழுந்தன. கொம்யூனிசத்தில் நம்பிக்கையுள்ள வாசகன் நான். தளையசிங்கத்தின் கலைத்துவப் பிரதிபலிப்புக்களைப் பார்த்து இப்படிச் சிந்திக்கிறேன். இன்னொருவர் வேறுவிதமாகச் சிந்திக்கக்கூடும்.

இரண்டாம் பாகத்துக்கு வருகிறோம். பரந்த சமூகத்தளத்துக்குள் பிரவேசிக்கிறோம். அரசியலை நேரடியாக அப்படியே எதிர்கொள்கிறோம். சிங்கராசன் வளர்கிறான். சிறுகடை முதலாளியாகிறான். படிக்கிறான் அரசியல் பேசுகிறான் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தனாகிறான். அவனுடைய ஆரம்ப கால வளர்ச்சிக்கு உதவும் ஒரு கொம்யூனிஸ்ட் மாஸ்டரைச் சந்திக்கிறோம். சிங்களம் மட்டும் வருகிறது. 1958 நடைபெறுகிறது. அதன் தாக்கங்கள் புங்குடுதீவிலும் ஏற்படுகின்றன. டாக்டரை மணந்த சேதா விதவையாகத் திரும்புகிறாள் வியாபாரிகள் அகதிகளாய் வருகின்றனர். சிங்கராசன் சேதாவை மணக்கிறான். அவன் சொல்கிறான் ‘நமக்கு ஒரு நாடும் அரசும் ஒரு கூட்டாட்சியின் கீழ் தரமறுத்தால் ஒரு தனிநாடு அல்லது கடல் கடந்த ஒரு பரந்த தமிழ்நாட்டின் கூட்டாட்சியாவது அமைக்க வேண்டும். அதற்காகவாவது போராடுவோம். இங்கு யார் வராவிட்டாலும் நான் போராடுவேன் மறைமுகமான ஒரு அண்டர் கிரவுண்ட் பயங்கர இயக்கமாவது என் தலைமையில் அமைத்துப் போராடுவேன்’ இதுதான் அந்த இளம் ஈழப்போராளி குறிப்பிட்ட தளையசிங்கத்தின் தீர்க்க தரிசனம் போலும்.

இரண்டாம் பாகத்தில் நாவலாசிரியரின் பாத்திரவார்ப்பில் அவருடைய அரசியல் பார்வையின் நேரடி ஆதிக்கத்தை காணமுடிகிறது. சிங்கராசன் தான் ஆசிரியரின் இலட்சியப் பாத்திரமாக வளர்த்தெடுக்கப்படுகிறான். கொம்யூனிஸ்ட் மாஸ்டர் கொம்யூனிஸ்ட் கட்சியினதும் ‘கொம்யூனிஸ்ட்டுகளினதும்’ குறைபாடுகளின் வடிவமாகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளார். தமிழர் உரிமைப் போராட்டத்தை கொம்யூனிஸ்ட்டுக்கள் முன்னெடுக்கத் தவறியமை விமர்சிக்கப்பட வேண்டியது. அது இடதுசாரி இயக்கத்தின் மாபெரும் குறைபாடு. ஆனால் கொம்யூனிஸ்ட் மாஸ்டரையும் அவரது கட்சியையும் விமர்சிக்கும் சிங்கராசன் எனும் இலட்சியவாதி எந்த இலட்சியங்களைத் தேர்ந்தெடுக்கிறான் ? எந்தக் கட்சியுடன் சேர்கிறான்? கொம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு அப்பால் போக விரும்பும் அவனை ஆகர்ஷித்த கட்சி தமிழரசுக்கட்சி ! இதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

தமிழரசுக் கட்சி சமஷ்டி கோருவதால் தான் பிற்போக்குக் கட்சியென இடதுசாரிகள் கூறினார்களாம். சிங்கராசன் சந்தித்த கொம்யூனிஸ்ட் மாஸ்டர் உண்மையிலேயே சரியில்லைத்தான். ஏனென்றால் அவர் அவனுக்கு தமிழரசுக்கட்சியை இடதுசாரிகள் ஏன் பிற்போக்கானதெனக் கொண்டார்கள் என்பதைக் கூட சரியாக விளக்க முடியாத ஒரு கொம்யூனிஸ்ட். தளையசிங்கத்தால் அப்படி ஒரு கொம்யூனிஸ்டைத்தான் பார்க்க முடிந்திருக்கிறது. தன் சூழலை மிக நுணுக்கமாகவும் கலைத்துவத்துடனும் விவரிக்கும் தளையசிங்கத்துக்குத் தமிழரசுக்கட்சி ஏன் பிற்போக்குக் கட்சியென தமிழ் இடதுசாரிகள் கருதினார்கள் என்பதை மட்டும் ஏன் தான் நேர்மையாக விவரிக்க முடியவில்லையோ தெரியாது. கொம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் குறைபாடுகள் தனிப்பட்ட குறைபாடுகளைத் தெரிந்த அளவிற்கு அவருக்கு இந்த விஷயம் மட்டும் எப்படியோ தெரியாது போய்விட்டது. உண்மை என்ன?

தமிழரசுக் கட்சியினர் பிற்போக்குவாதிகள் தான். காரணம் அவர்கள் தமிழ் சமூகத்துக்குள்ளேயிருந்த பிற்போக்கு சாதிக் கொடுமைகளைப் பேணிக்காத்தனர் அல்லது மூடி மறைத்தனர். போலிச் சமபந்திப் போசனங்களால் தம் மாற்றம் விரும்பா மனப்பாங்கினை மூடி மறைக்க முயன்றனர். தமிழரசுக் கட்சியின் மொழியுரிமைப் பிரச்சாரம் தமிழ் இனவாத அடிப்படையிலேயே அமைந்தது. ‘நாய்க்குணம் படைத்த நந்தசேனாக்களையும் பேய்க்குணம் படைத்த புஞ்சி நோனாக்களையும்’ பற்றிப் பேசினார்கள். ஆண்ட பரம்பரை பற்றிக் கத்தினார்கள். இது பிற்போக்கில்லாமல் நற்போக்கா ?

‘தந்தை’ செல்வா திருகோணமலை பிரிட்டிஷ் தளம் தேசிய மயமாக்கப்பட்ட போது மகாராணிக்குத் தந்தியடித்து எதிர்ப்புத் தெரிவித்தது பிற்போக்கில்லையா ? நெற்காணி மசோதா போன்ற சாதாரண சீர்திருத்தத்தைக் கூட எதிர்த்த சமஷ்டிக் கட்சியினரை எப்படி அழைப்பது ? பள்ளிக்கூடங்கள் தேசிய மயமாக்கப்பட்டதை எதிர்த்த கட்சியை ஏக்கராவரி (acreage tax) கொண்டு வரப்பட்ட போது எதிர்த்த கட்சியை கொம்யூனிஸ்ட் கட்சியையும் விட முற்போக்கான கட்சி என அழைப்பவர்கள் வலதுசாரிப் பிற்போக்குவாதிகளைத் தவிர யாராக இருக்க முடியும். 1965 இல் சமஷ்டியைக் காற்றிலே பறக்கவிட்டு U.N.P யுடன் ‘ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்’ புனித கைங்கரியத்துக்காக இணைந்த கட்சியை எப்படி அழைப்பது?

இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். இவையெல்லாம் தளையசிங்கத்துக்குத் தெரிந்த விடயங்கள் தான். தமிழரசுக்கட்சியின் அரசியல் கனவான்களை இந்த நாவலில் நாம் காணவில்லை. அந்தக் கட்சியைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். அதில் சிங்கராசன் என்னும் இலட்சிய புருஷன் சேர்கிறான்..

இத்தனைக்கும் மார்க்சீயவாதிகள் பற்றி நியாயமான கேள்விகளே எழுப்பப்படுகின்றன. கொம்யூனிஸ்ட் கட்சியின் பார்வையில் தமிழர்கள் கேட்கும் உரிமைகள் நியாயமானது என்பதை ஏன் இவர்கள் அடித்து ஆணித்தரமாகச் சொல்லக்கூடாது? ‘லெனின் அகராதியில் எல்லா சிறுபான்மை இனமும் பெரும்பான்மை இனம் அனுபவிக்கும் சகல விதமான உரிமைகளையும் பெற்றிருக்க வேண்டும் என்றுதானே கூறுகிறது?’

‘உள்ளூர் சாதிப்பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களை உயர் சாதிக்கெதிராகப் போராடத் தூண்டுவதில் முழுமூச்சாக நிற்கும் இவர்கள் ஏன் சிங்களவரால் தமிழரின் நிலம், மொழி, கலாச்சாரம் யாவற்றையும் சூறையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் ?’

ஆயினும் இந்தக் கேள்விகள் சிங்கராசனைக் கொம்யூனிஸ்டுக்களையும் விட புரட்சிகரமான ஒரு அணியைப் போய்ச் சேர உதவவில்லை. இந்தக் கேள்விகளை கொம்யூனிஸ்ட் கட்சியின் தவறுகளைப் புட்டுக்காட்ட நல்லசிவம் பயன்படுத்தினார். இவற்றிற் கூடாக சிங்கராசன் சுலபமாகக் கொம்யூனிஸ்ட் கட்சியை உதறித்தள்ளி விடுகிறான். அதையும் விட சுலபமாக தமிழரசுக்கட்சியுடன் இணைந்து விடுகிறான். இந்த இலட்சியப் பாத்திரம் மிகச் சாதாரணமான தொன்றையே செய்கிறான். அந்தக் காலத்திய அலையுடன் விமர்சனமின்றி ஒன்றி விடுகிறான்.

அப்போதெல்லாம் தமிழரசுக் கட்சியின் தமிழ் இனவாதம் மிகுந்த தேசியவாதக் கருத்துக்களையும் கொம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களையும் மகாத்மா காந்தியையும் ஈழத்துக்காந்தியையும் பற்றிப் பேசுவதுதான் விலைபோகும் அரசியல். உள்ளூர் அரசியல்வாதிக்குரிய இலட்சணங்களையெல்லாம் பெற்றுக் கொண்ட – அடிப்படைக் கல்வி, சிறு கடை முதலாளி பேச்சுவன்மை etc. Etc. – சிங்கராசன் தமிழரசுக் கட்சியின் அக்காலத்திய. கிராமிய மட்டத்து அசல் தலைமைப் பிரதிநிதி. சிங்கராசன் சொல்கிறான் ‘அறிஞர்களையும் அவர்களின் தத்துவங்களையும் பொறுத்தவரை என் மனதைக் காந்தியால் தொட முடிந்ததே ஒழிய மார்க்ஸாலோ ஸ்டாலினாலோ தொட முடியவில்லை.’ இது அக்கலாத்தில் நாம் காது புளிக்கக் கேட்ட மேடைப் பேச்சு. இந்த வகையில் சிங்காரசன் யதார்த்த பூர்வமான பாத்திரம். குட்டி வியாபாரியாகிவிட்ட சிங்கராசன் தன் சமூக நகர்ச்சிக்கூடாகத் தன் ‘வெள்ளாள’ வாழ்நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டான். ‘அவனுடைய தூண்டல் காம்புகாவின’ காலத்து நினைவுகள் பரந்த அடிப்படையான புரட்சிகர மாற்றத்தை வலியுறுத்தும் கொள்கைவாதியாக அவனை மாற்றவில்லை. அந்த நினைவுகள் அவனுக்கு வரவில்லை. பொன்னம்பலத்தார் வீட்டில் திருமணம் செய்து தன் பால்ய கனவை நனவாக்கும் அந்தஸ்தையும் அவன் பெற்றுவிட்டான். முன்பு முறைப்பெண்ணான சேதாவையும் அவனையும் ‘வர்க்கம்’பிரித்தது. இப்போ அந்த வேறுபாடு இல்லை. அவனுடைய அரசியலும் அவனுடைய வாழ்நிலைக்கு உகந்த அரசியல். இந்த வகையிலும் சிங்கராசன் நமது சமூகத்தின் ஒரு வயதுப்போக்கின் பிரதிநிதியாகிறான். யதார்த்தப் படைப்பு.

ஆனால் காந்தியைப் பற்றிப் பேசும் சிங்கராசன் அண்டர் கிரவுண்ட் இயக்கம் பற்றியும் பேசுகிறான். அதேநேரத்தில் அவனுடைய தமிழ் தேசியவாதம் இலங்கைத் தமிழரும், இந்தியத்தமிழரும் இணைந்த ஒரு தனி நாடு வரை செல்கிறது. இங்கும் சிங்கராசன் ஒரு புதுமைப் பிறவியில்லை. இந்தியாவின் தமிழ் நாட்டுடனோ அல்லது முழு இந்தியாவுடனோ இணைவதைப் பல நடுத்தர வர்க்க தமிழர்கள் மானசீகமாக விரும்பினார்கள். இன்றும் பலர் விரும்புகிறார்கள்! சிங்கராசனின் உலகம் சிறியது. அவன் புங்குடுதீவுக்குமப்பால் போகாதது இதற்கு காரணம் எனக் கூறுவதையும் விட அவனுடைய சமூகப்பார்வை குறுகிய தமிழ் தேசியவாதத்தால் சிறை வைக்கப்பட்டுள்ளதே காரணமெனலாம். ஆகவே மார்க்சீயத்தை விமர்சித்த சிங்கராசன் அந்தத் தத்துவத்தையும் தாண்டி முன்னேறவில்லை. அவன் வாழ்ந்த காலத்து அலையில் அகப்பட்டு மார்க்சீயத்துக்கு எதிரான போக்குடனே இணைகிறான். இந்தப் போக்கே நூலாசிரியரையும் பலமாகப் பற்றிக் கொண்டுள்ளது. இதைப் புரிந்து கொள்ள முதலாம் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்குமிடையேயுள்ள அடிப்படை வேறுபாடுகள் உதவுகின்றன.

முதலாம் பாகத்தில் குடும்ப மட்ட மனித நிலைமைகளை, அல்லல்களை, குமுறல்களை மிக நுணுக்கமாகப் படம் பிடிக்கும் நாவலாசிரியர் சில அடிப்படையான சமூக முரண்பாடுகளை வெளிக்கொணர்கிறார். இது அவர் விரும்பியோ விரும்பாமலோ நடைபெறுகிறது. இரண்டாம் பாகத்தில் இந்த முரண்பாடுகளையெல்லாம் தமிழ் தேசியவாத அரசியல் ஒரு மூலைக்குள் ஒதுக்கி விடுகிறது. அத்துடன் சிங்கராசனின் வாழ்நிலை மாற்றத்துடன் அவனைத் தொடரும் நாவலாசிரியர் முதலாம் பாகத்தின் பிரச்சனைகளையும் விட்டுவிடுகிறார். தர்க்க ரீதியில் பார்க்குமிடத்து முதலாம் பாகத்தில் நாம் படிக்கும் வரிகளுக்குப் பின்னே இருக்கும் விமர்சன ஆற்றல் மிகுந்த நாவலாசிரியரின் மனம் இரண்டாம் பாகத்தில் அந்த ஆற்றலை இழந்து விடுகிறது. இந்த முறிவு மிகவும் தெளிவாகவே தெரிகிறது. எழுந்து வரும் தேசியவாத அலையை அவர் விமர்சன ரீதியில் ஏன் அணுகவில்லை? இந்தக் கேள்விக்குப் பதில் காண நாம் தளையசிங்கத்தின் தத்துவார்த்தப் பார்வையை ஆராய வேண்டும். அதைச் செய்ய இதுவல்ல இடம். ஆனால் இங்கு எழுப்பப்பட்ட கேள்விகள் அடுத்த கட்டமாக நம்மை அத்தகைய ஒரு விவாதத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே என் கருத்து.

இன்று சிங்கராசனுக்கு 25 வருடங்களுக்குப் பின் தமிழ் தேசியவாதமும் ஈழவிடுதலைப்போரும் எங்கு போய்க் கொண்டிருக்கின்றன? அல்லது எங்கு போக முயற்சிக்கின்றன? கடந்த பல வருடங்களின் நடைமுறைகள் காந்தியத்தை மட்டும் பயனற்ற ஒரு கருத்தமைவாகக் காட்டவில்லை. ‘ஈழத்துக் காந்தி’ யின் பின்னாலிருந்த வர்க்க நலன்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளன.

சிங்கராசன் சார்ந்திருந்த இயக்கத்தின் வர்க்கத் தன்மைகளை அறிந்த இன்றைய புரட்சிகர தேசியவாதிகள் பழைய தலைமையை நிராகரித்து விட்டார்கள். அதுமட்டுமல்ல அவர்களின் புரட்சிகரத் தேடல் தமிழ் சமுதாயத்தையே அடிப்படையில் மாற்றவல்ல தத்துவத்தை நோக்கியதாய் அமைந்து விட்டது. அவர்கள் மாக்சியமே தமக்கு வழி காட்டவல்லது என்ற நிலைப்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இன்று அவர்களுக்கு ‘கொம்யூனிஸ்ட் மாஸ்டர்கள்’ தேவையில்லை. அவர்களாகவே நடைமுறைக்கூடாகச் சிந்தித்து படித்து மார்க்சீயத்தை அணுகமுற்படுகிறார்கள். தமிழ் தேசியவாதம் இனிமேல்தான் நமது சமுதாயத்தை மாற்றவல்ல முற்போக்கு அலையாக மாறப் போகிறது.

பிற்குறிப்பு (April 2017)

1985ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் இறுதிவசனங்கள் அப்போதைய எனது எதிர்பார்ப்பின் ஒலிகள் தான். அன்று சில இயக்கங்களிடம் தென்பட்ட இடதுசாரிப் போக்கின் எதிர்காலம் பற்றிய எனது கணிப்பீடு அதீதமானதென்பதைப் பின்னர் ஏற்றுக்கொண்டேன். இந்தப் போக்குத் தமிழ் குறுந்தேசிய வாத, இனவாதப் போக்கை எதிர்த்து ஒரு மாற்றுப் பாதையைத் தேடுவதில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது எனப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. இது பற்றி பின்னர் எழுதிய கட்டுரைகளில் எனது கருத்துக்களை கூறியுள்ளேன்.