
சமுத்திரன் (2017 May 1)
உலகத் தொழிலாளர்தினமாகிய மேதினத்தின் ஆரம்பமும் மரபும் ஒரு மகத்தான போராட்டத்தினால் தூண்டப்பட்டது. 1886ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் தொழிலாளர் அமைப்புக்கள் எட்டு மணித்தியால வேலைநேரக் கோரிக்கையை முன்வைத்து ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தன. அந்தக் காலத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் நீண்ட நேரம் குறைந்த ஊதியத்திற்கு மிகவும் மோசமான தொழிலாற்றும் சூழலில் வேலை செய்தார்கள். நாடு பூராவிலும் பொது வேலைநிறுத்தத்தில் தொழிலளர்கள் பங்குபற்றினர். அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரத்தின் ஆலைத் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். அந்த நகரின் Haymarket Square எனப்படும் இடத்தில் 1886 மே மாதம் நாலாம் திகதி தொழிலாளர்கள் கூடியபோது பொலீசாருக்கும் அவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் பல தொழிலாளர்களும் ஏழு பொலீஸ்காரர்களும் உயிரிழந்தனர். அதற்கு முதல் நாள் பொலீசார் கட்டவிழ்த்துவிட்ட வன்செயலைக் கண்டிக்கும் நோக்கிலேயே Haymarket Squareல் தொழிலாளர் கூடினர். எதுவித ஆதாரமுமின்றி ‘தீவிரவாதிகள்’ என அறியப்பட்ட எட்டுத் தொழிலாளர் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதி மன்றத்தினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டனர். ஏழு பேருக்கு மரண தண்டனை, ஒருவருக்குச் சிறைத்தண்டனை. அந்த ஏழ்வரில் நால்வரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். மற்றைய இருவரும் பின்னர் மாநில ஆளுனரால் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். மறைந்த போராளிகள் தியாகிகளாக தொழிலாளர் இயக்கங்களால் நினைவுகூரப்பட்டனர். மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிராக சிக்காகோவின் தொழிலாளர்கள் சிந்திய இரத்தம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றது.
1889ம் ஆண்டு பாரிஸ் நகரில் கூடிய இரண்டாம் அகிலம் (Second International) மே மாதம் முதலாம் திகதியைச் சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாட வேண்டுமென முடிவெடுத்தது. 1891ல் மேதினம் சர்வதேச கொம்யூனிச, சோஷலிச, அனாக்கிச இயக்கங்களால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த இயக்கங்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இயங்கின. இப்படியாக மேதினத்தின் மரபு பிறந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் எட்டு மணித்தியால வேலைநேரக் கோரிக்கை ஒரு சாதாரண விடயம் அல்ல. 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆரம்பித்த ஆலைத் தொழில் புரட்சி 19ம் நூற்றாண்டிலேயே மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்குச் சென்றது. இந்தக் காலகட்டத்தில் (18-19ம் நூற்றாண்டுகளில்) அந்த நாடுகளில் தொழிலாளர்கள் மிகமோசமாகச் சுரண்டப்பட்டார்கள். சிறுவர்களும் தொழிற்படையின் அங்கமானார்கள். அப்போதிருந்த தொழில் நுட்ப மட்டத்தில் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் உபரிப் பெறுமதியை அதாவது இலாபத்தை மேலும் அதிகரிக்க ஆலைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் பல வழிகளைக் கையாண்டர்கள். முதலாளிகள் தொழிலாளரின் ஊதியத்தைக் குறைப்பதும், வேலை நேரத்தை நீட்டமுடிந்த அளவிற்கு நீட்டுவதும் ஒரு பொதுப்போக்காக இருந்தது. உழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான இந்த வர்க்க முரண்பாட்டில் உழைப்பு சக்தியை விற்கும் தொழிலாளர்கள் வேலை நேரக்குறைப்பு, நியாயமான ஊதியம், அடிப்படைப் பாதுகாப்புள்ள தொழிற் சூழல் போன்ற உரிமைகளுக்காகக் கூட்டாகப் போராடினார்கள். மூலதனச் சொந்தக்காரர்கள் கூட்டு முயற்சிகளுக்கூடாகத் தமது நலன்களைப் பேணுவதில் கண்ணாயிருந்தனர். வேலை நேரத்தின் குறைப்பிற்கான போராட்டம் முதலாளித்துவத்தின் வர்க்க முரண்பாட்டின் அடிப்படைக்கு எடுத்துச்செல்கிறது. இது மனித உழைப்பு உருவாக்கும் உபரிக்கான போராட்டம்.
இங்கிலாந்தில் 1833ல் வந்த ஒரு சட்டத்தின்படி ஒரு ‘சாதாரண வேலை-நாள்’ காலை 05.30 மணியிலிருந்து மாலை 08.30 மணிவரையென வரையறுக்கப்பட்டிருந்தது. இந்தப் பதினைந்து மணித்தியாலங்களுக்குள் சட்டப்படி இளைஞர்களும் (13-18 வயதினர்) 12 மணித்தியாலங்கள் வேலை செய்யலாம். வயது ஒன்பதுக்கும் பதின்மூன்றுக்கும் இடைப்பட்ட குழந்தைகளிடம் எட்டு மணித்தியாலங்களுக்குமேல் வேலை வாங்கக்கூடாது என்றும் இந்தச்சட்டம் சொன்னது. இது பற்றி மாக்ஸ் கூறுகிறார்: ‘முதலாளித்துவ மானிடவியலின்படி, குழந்தைப்பருவம் 10 வயதில், அல்லது அதற்கும் அப்பால் 11 வயதில் முடிவடைகிறது.’[1] இது பத்தொன்பதாம் நூற்றாண்டு நிலைமை. இது பற்றி மாக்ஸ் நிறைய எழுதியுள்ளார். இங்கிலாந்தில்1844-1864 காலகட்டத்தில் வேலை நேரத்தை 10-12 மணித்தியாலங்களுக்குக் குறைக்கும் நோக்கில் பலவிதமான Factory Acts (ஆலைத் தொழிற்சாலைச் சட்டங்கள்) வந்தன. ஆயினும் நடைமுறையில் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்துவது சுலபமாயிருக்கவில்லை என்பதை மாக்சின் மூலதனம் மற்றும் ஆய்வுகளிலிருந்து அறியலாம். பிரான்சில் தொழிலாளர்கள் 1848 February புரட்சியின் பின்பே பன்னிரண்டு மணித்தியால வேலை நேர உரிமையை வென்றெடுத்தனர்.
எட்டு மணித்தியால வேலை-நாள் 20ம் நூற்றாண்டிலேயே பல நாடுகளில் சட்டபூர்வமாக்கப்பட்டது. இதை முதலில் செய்த நாடு சோவியத் யூனியன் ஆகும். 1917 போல்ஷவிக் புரட்சி வெற்றி பெற்றதும் புதிய ஆட்சியால் வெளியிடப்பட்ட தொழிலாளர் ஆணை எட்டு மணித்தியால வேலை-நாள், ஆகக்குறைந்த ஊதியம், தெரிவுசெய்யப்பட்ட தொழிலாளர் செயற்குழுக்களால் தொழிற்சாலைகளின் முகாமை போன்ற முடிவுகளை உள்ளடக்கியது.[2] இதைத் தொடர்ந்து 1919ல் ஐ. நா வின் சர்வதேச தொழில் நிறுவனம் (International Labour Organisation – I.L.O) கொண்டுவந்த ஆலைத் தொழில் தொடர்பான Hours of Work Convention எட்டு மணித்தியால வேலை-நாளையும் வாரத்திற்கு 48 மணித்தியாலங்களுக்கு மேற்படாத மொத்த வேலை நேரத்தையும் வலியுறுத்தியது. 2016 வரையில் 52 நாடுகள் மட்டுமே இதை ஏற்பதாக உறுதி செய்துள்ளன. 2016ல் எல்லாமாக 193 நாடுகள் ஐ. நா வின் அங்கத்தவர்களாயுள்ளன. ஆக 27 வீதமான நாடுகளே I.L.Oன் ஒப்பந்தத்தை இதுவரை சட்டபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளன.
இருபதாம் நூற்றாண்டில், இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபின் மேற்கு நாடுகளில் தொழிற் சங்கங்கள் போராட்டங்களுக்கூடாகப் பல உரிமைகளை வென்றெடுத்தன. அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் போருக்குப்பின் வந்த ஜனநாயகமயமாக்கலும் இதற்கு உதவின. ‘தொழிற் சங்கங்கள் – தொழில் வழங்குவோர் – அரசாங்கம்’ ஆகிய மூன்று தரப்பின் பிரதிநிதிகள் கூடிப்பேசி உற்பத்தித்திறனின் வளர்ச்சிக்கு ஏற்ப தொழிலாளரின் மெய் ஊதியம் உயர்த்தப்படும் முடிவை எடுக்கும் கொள்கையும் சில நாடுகளில் (உதாரணமாக ஸ்கண்டினேவிய நாடுகளில்) நடைமுறைக்கு வந்தது. ஆகக்குறைந்த ஊதியம், பெண்களுக்குச் சமசம்பளம், பாதுகாப்பான தொழில் செய்யும் சூழல், சமூகப் பாதுகாப்பு போன்ற உரிமைகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெருமளவிற்கு நிறுவனமயமாக்கப்பட்டன. ஸ்கண்டினேவிய நாடுகள் சமூக ஜனநாயக முதலாளித்துவ சீர்திருத்தத்தின் மாதிரிகளாயின. பொதுவாக மேற்கு நாடுகளில் வர்க்கசமரசத்திற்கூடாக ஒரு சமூக ஒப்பந்தம் செயற்பாட்டிற்கு வந்தது எனலாம். இந்தக் காலத்தில் தொழிலாளர்கள் எனப்படுவோர் ஒரு வர்க்கத்தினர் மட்டுமல்ல அவர்களுக்கு பால்ரீதியான அடையாளம் மட்டுமல்லாது நிறமும் (race) உண்டு எனும் வேறுபாடுகள் முக்கிய விவாதப் பொருள்களாயின. அத்துடன் அறிவுரீதியான உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் இடையிலான வேறுபாடும் வர்க்க ஆய்வில் முக்கியத்துவம் பெற்றது.
ஆனால் 1970 களில் வந்த நவதாராளவாதம் மேற்கு நாடுகளில் முதலில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் ஆரம்பித்து தொழிலாளரின் உரிமைகளைத் தாக்கத் தொடங்கியது. இது ஒரு உலகரீதியான போக்காகப் பரந்தது. அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகனும் பிரித்தானிய பிரதமர் மாகிரட் தச்சரும் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின், கருத்தியலின் பிதா-மாதா போல் ஆனார்கள். இந்தக் கொள்கையும் கருத்தியலும் உலக வங்கி, சர்வதேச நாணய நிறுவனம் ஆகியவற்றால் ‘அபிவிருத்தியடையும் நாடுகள்’ மீது திணிக்கப்பட்டன. இதன் விளைவாகத் தொழிலாளர் உரிமைகள் உலகரீதியில் நசுக்கப்பட்டன. செல்வந்த நாடுகளில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்தன. தொழிலாளர்களின் மெய் ஊதியம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. நிதி மூலதனத்தின் கட்டுப்பாடற்ற அபரித வளர்ச்சியைத் தொடர்ந்து வந்த பொருளாதாரச் சிக்கல்கள் பெருந்தொகையான தொழிலாளர் குடும்பங்களைக் கணப் பொழுதில் ஏதிலிகளாக்கின. அமெரிக்காவில் 2006-2008ல் அதுவரை துறைசார் தகைமை மற்றும் வருமானம், வாழ்பாங்கு போன்றவற்றின்படி தம்மை நடுத்தர வர்க்கத்தினராய்த் கருதிய இலட்சக் கணக்கானோருக்கும் இதேகதிதான். முதாளித்துவ அமைப்பைக் காப்பாற்ற அரசு உடனடியாகத் தலையிட்டது. இதற்கு சிவில் சமூகத்தின் ஒரு பகுதி எதிர்ப்புக்காட்டிய போதும் அதன் பலமுள்ள பெரும் பகுதி எதிர்க்கவில்லை. அமைப்பைக் காப்பதன் மூலமே சமூகத்தின் இழப்பினை மீட்கமுடியும் எனும் கருத்தியலே அரசோச்சியது.
உரிமை மறுப்பைப் பொறுத்தவரையில் அபிவிருத்தியடையும் நாடுகளின் தொழிலாளர்கள் முதாளித்துவம் விருத்திபெற்ற நாடுகளின் தொழிலாளர்களையும் விட கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேரடியான வெளிநாட்டு முதலீட்டைக் கவர வறிய நாடுகள் தமக்குள்ளே போட்டி போட்டன. இந்தப் போட்டியில் தொழிலாளரின் உரிமை மறுப்பு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றது. தனியுடைமையாக்கல், சுதந்திர வர்த்தக வலையங்கள், தொழிலின் தற்காலிகமயமாக்கல், தொழிற்சங்க உரிமை மறுப்புக்கள், சமூக பாதுகாப்புக்கு அரச செலவினத்தைக் குறைத்தல், போன்றவை எல்லாமே ஒரு கொள்கைப் பொதிக்குள் அடங்கின. ஆயினும் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் செல்வந்த நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகளுக்கே சென்றன. அடுத்தபடியாகச் சீனா, வியட்னாம் போன்ற ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி பெறும் சக்தியை வெளிப்படுத்திய நாடுகளை நாடின. மிஞ்சிய சந்தர்ப்பங்களுக்காக வறிய நாடுகள் போட்டி போட்டன. பொதுவாக சீனா, இந்தியா, பிராசீல், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் உட்பட ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்காவில் உழைப்பு சக்தியை மூலதனத்திற்கு விற்று வாழும் தொழிலாளரின் தொகை பெருமளவு வளர்ந்துள்ளது. ஆயினும் அவர்களின் ஸ்தாபனரீதியான பலம் மிகவும் குன்றியே உள்ளது. மரபுரீதியான தொழிற்சங்களின் பலம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் போக்கினைக் காணலாம்.
இதற்கு மேலே குறிப்பிட்ட காரணங்களுடன் வேறு காரணங்களும் உண்டு. முதலாளித்துவத்தின் விருத்தியையும் உலகரீதியான பரவலையும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் புரட்சிகளின்றிக் கற்பனை பண்ணமுடியாது. இந்தப் புரட்சிகளின் விளைவாகத் தொழிற்போக்குகளைத் துண்டாடிப் பரவலாக்கமுடிகிறது. இந்தப் பரவலாக்கலின் புவியியல் இன்றைய உலகமயமாக்கலின் ஒரு அம்சமாகும். முன்னைய பெரும் தொழிற்சாலைகள் தொழிலாளர்களை தொழிற்பிரிவின் அடிப்படையில் ஓரிடத்தில் குவித்தன. இது அவர்களின் தொழிற் சங்கமயமாக்கலுக்கும் உதவியது. நவீன தொழில் நுட்பவியலுடன் நவதாராளப் பொருளாதாரக் கொள்கையும் கருத்தியலும், பொதுவாகவே மனித உரிமைகளை மதிக்காத ஆட்சிமுறையுடன் இணையும் போது தொழிலாளர்கள்மீதான சுரண்டலும் அதிகரிக்கிறது. இங்கு தொழில்நுட்பவியலைக் குறைகூறுவதில் பயனில்லை. அது மூலதனத்தின் கருவியே. அதன் பங்கினை மூலதனத்தின் அரசியல் பொருளாதாரத்திலேதான் தேடவேண்டும். அது மட்டுமல்ல. பல நாடுகளில் நவீன தொழில்நுட்பமின்றி பழைய உற்பத்திமுறைகளையும் சமூக அடக்குமுறைகளையும் பயன்படுத்தி இலாபமடையும் நிறுவனங்கள் கணக்கில் அடங்கா. இந்த வேலைத்தளங்களில் பெண்களும் சிறுவர்களும் மோசமாகச் சுரண்டப் படுகிறார்கள். இவை முறைசாராப் (informal) பொருளாதாரத்தைச் சர்ந்தவை. இதேபோன்று, மேலும் சிறுபண்ணை விவாசாய மற்றும் பலவிதமான சிறு தொழில் துறைகளில் பெருந்தொகையானோர் தற்காலிக கூலியாளர்களாக வேலைசெய்கிறார்கள். இந்தத் துறைகளில் பெண்களுக்கு ஆண்களைவிட ஊதியம் குறைவு. இன்று அரபு நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாகப் பெருந்தொகையான வெளிநாட்டுப் பெண்கள் அடிமைகள் போல் அற்ப ஊதியத்திற்கு வேலைசெய்கிறார்கள். இன்று உலகரீதியில் தொழிலுக்காகப் புலம் பெயர்வோர் தொகை அதிகரித்திருக்கும் அதேவேளை அவர்களின் அடிப்படைப் பாதுகாப்பும் உரிமைகளும் பெரும் பிரச்சனைகளாகிவிட்டன.
I.L.O வின் அறிக்கை ஒன்றின்படி அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் விவசாயம் தவிர்ந்த (non-agricultural) துறைகளில் கூலியாளர்களாயிருப்போரில் 50-75 வீதத்தினர் முறைசாராப் (informal) பொருளாதாரத்திலேயே தங்கி உள்ளனர். இவர்கள் பொதுவாகக் குறைந்த ஊதியம் பெறுவோராகவும் எதுவித சட்டரீதியான பாதுகாப்பற்றோர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் சமூகத்தின் வறிய ஜனத்தொகையில் அடங்குவர். இந்தியாவில் ஏறக்குறைய 487 மில்லியன் தொழிலாளர்கள் இருப்பதாகவும் இவர்களில் 94 வீதத்தினர் முறைசாராப் பொருளாதாரத்திலேயே பணியாற்றுகின்றனர் என அறிக்கைகள் கூறுகின்றன. இந்தப் பொருளாதாரத்தின் உற்பத்தி உறவுகளில் வர்க்கம், சாதி, பால் ஆகிய மூன்றும் பின்னிப் பிணைந்திருகின்றன. ‘உலகின் ஆகப்பெரிய ஜனநாயகம்’ எனப்படும் நாட்டில் 94 வீதமான தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் இதுவரை ஏன் இல்லை என்பது இருபத்திஓராம் நூற்றாண்டின் பெரிய கேள்வியாகும்.
இதுவரை குறிப்பிட்டுள்ள விடயங்கள் புலப்படுத்தும் உண்மை என்னவெனில் இன்றைய உலகின், விசேடமாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின், தொழிலாளர் உரிமைகளைப் பொறுத்தவரை மரபுரீதியான தொழிற்சங்கங்களுக்கு மாற்று அமைப்புக்கள் தேவை. இது ஒரு அரசியல்ரீதியான, அமைப்புரீதியான சவாலாகும். இந்த வருடம் மேதினத்தை வரவேற்கும் போது இதையும் நினைவில் கொள்வோமாக.
[1] Karl Marx, (1867) 1954, Capital Vol. I, page 266, Lawrence & Wishart London
[2] பின்னர் சோவியத் யூனியன் என்னவாயிற்று என்பதைப் பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.