சமுத்திரன்[1]
‘மனிதனின் பௌதிக மற்றும் ஆத்மீக வாழ்வு இயற்கையுடன் இணந்துள்ளது என்பதன் தெளிவான அர்த்தம் இயற்கை தன்னுடனே இணைந்துள்ளது என்பதே, ஏனெனில் மனிதன் இயற்கையின் ஒரு அம்சமே.’ Karl Marx,1844, Economic and Philosophic Manuscripts
இயற்கையின் தனியுடைமையாக்கல், மூலதனமயமாக்கல், பண்டமயமாக்கல் மற்றும் சூழலின் சீரழிவாக்கல் உலகரீதியில் மிகவும் தீவிரமாகத் தொடரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருகிறோம். கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலமாக மனித செயற்பாடுகளின் விளைவாக மனித இனத்தினதும் மற்றைய உயிரினங்களதும் வாழிடமான பூகோளத்தில் பல பாதகமான மீட்டெடுக்க முடியாத மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக எச்சரித்துவரும் போதும் இந்தப் போக்குகள் தொடர்கின்றன. சுவீடனின் தலைநகரில் அமைந்துள்ள ஆய்வு நிறுவனமான Stockholm Resilience Centre (SRC) சூழல் தொடர்பான பல்வேறு விஞ்ஞான ஆய்வுகளை நடத்தி வருகிறது. Resilience என்பது அதிர்ச்சியிலிருந்து விடுபடும் ஆற்றலைக் குறிக்கிறது. SRC இயற்கையின் அத்தகைய ஆற்றல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கைகளின்படி சுவாத்திய மாற்றம், உயிரினப் பல்வகைமையின் இழப்பு (biodiversity loss), காடழித்தல் போன்றவற்றால் ஏற்படும் நில வளங்களின் அழிவு, மற்றும் நைட்ரஜன் (வெடியம்), ஃபொஸ்ஃபொரஸ் (phosphorous) சுழற்சிகளின் பாதிப்பு ஆகிய நான்கும் ஏற்கனவே பூகோளத்தின் பாதுகாப்பு எல்லைகளைத் தாண்டிவிட்டன. விஞ்ஞானிகளால் பூகோளரீதியாகப் பாதுகாப்பு எல்லைகள் வகுக்கப்பட்ட ஒன்பது போக்குகளில் (processes) இந்த நான்கும் அடங்கும். மற்றைய ஐந்தும் பின்வருமாறு: மீவளிமண்டல ஓஸோனின் குன்றல் (stratospheric ozone depletion), சமுத்திரங்களின் அமிலமயமாக்கல், தூயநீர் பாவனை, வளிமண்டலத்தில் அழுத்தக் கொள்கலன்களால் வெளிப்படும் நுண்துகள்களின் சுமை (atmospheric aerosol loading), மற்றும் சூழலைப் பாதிக்கும் புதிய வகைகள் (உதாரணமாக கதிரியக்கமுடைய கழிவுப் பொருட்கள், மற்றும் பலவிதமான அதிநுண்துகள்கள்). SRCன் ஒரு பேச்சாளரின் கருத்தில் இந்தக் கோளரீதியான எல்லைகள் மனித சமூகங்கள் எப்படி அபிவிருத்தியடைய வேண்டும் என நிர்ப்பந்திக்கவில்லை ஆனால் மனித இனம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வெளியை வரையறுப்பது பற்றிய முடிவுகளை எடுப்போருக்கு அவை உதவியாயிருக்கும். பூகோளத்தின் சூழலியல்ரீதியான (ecological) எல்லைகள் மதிக்கப்படவேண்டும் என்பதே SRC தரும் பிரதான செய்தியாகும்.
சூழல் மற்றும் அபிவிருத்தி பற்றி இடம்பெறும் விவாதங்களுக்கு SRC போன்ற நிறுவனங்களின் ஆய்வுகள் உதவியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை உலக சூழல் பிரச்சனைகள் பற்றிப் பலவிதமான, பெரும்பாலும் முரண்படுகின்ற, போட்டி போடும் கதையாடல்களைக் காண்கிறோம். இந்தக் கட்டுரையின் நோக்கம் மூலதனத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவு மற்றும் உலக சூழல் பிரச்சனை பற்றி மாக்சீய மரபில் தொடரும் சில செல்நெறிகள் பற்றிச் சுருக்கமான குறிப்புகளைத் தருவதே. இந்த விடயம் தொடர்பாக மாக்சிய பார்வையில் கட்டுரைகளும் நூல்களும் பெருமளவில் வெளிவந்துள்ளன, தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கின்றன. இங்கு இவை பற்றிய ஒரு அறிமுகமாக சில சிந்தனைப் போக்குகள், விவாதங்கள் பற்றியே குறிப்பிட விரும்புகிறேன்.
விஞ்ஞானிகள் அக்கறையுடன் ஆய்வுக்குட்படுத்தும் கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலம் அதையும்விட நீண்ட முதலாளித்துவத்தின் வரலாற்றின் ஒரு பகுதியே என்பதை மறந்துவிடலாகாது. அந்த வரலாற்றுடன் ஒப்பிடும் போது நடைமுறையிலிருந்த ‘சோஷலிசத்தின்’ வரலாறு சிறியதாயினும் சூழலைப் பொறுத்தவரையில் அதன் ஆவணப்பதிவு மிகவும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. ஆயினும் Foster மற்றும் Magdoff ஆகிய மாக்சிய ஆய்வாளர்கள் 2012ல் எழுதியுள்ளதை நினைவுகூருதல் தகும். 1920களில் சோவியத் யூனியன் சுற்றுச்சூழல் விஞ்ஞானத்துறையில் உலகிலேயே மிகவும் முன்னேற்றமடைந்த நாடாக விளங்கியது. இந்த வளர்ச்சியெல்லாம் ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் அழிக்கப்பட்டுவிட்டதென அவர்களின் ஆய்வு கூறுகிறது.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலுள்ள மேற்கோள் மாக்சின் பிரபல்யம்வாய்ந்த ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. 1844ல் அதை எழுதும் போது மாக்ஸ் இருபத்தி ஆறு வயது இளைஞன். அன்று அவர் மனிதரை இயற்கையின் ஒரு அம்சமாகப் பார்த்த கருத்தினை இறுதிவரையும் கொண்டிருந்தார் என்பதை அவரது பின்னைய கால எழுத்துகளிலிருந்து விசேடமாக அவரின் ‘மூலதனம்’ மற்றும் அந்த நூலுக்கான ஆய்வுகளின் குறிப்புகளைக் கொண்ட நூல்களிலிருந்து அறியலாம். ஆயினும் மாக்சிசம் வரலாற்றை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் வரலாறாகப் பார்க்கும் ஒரு கோட்பாடென்பதால் அது இயற்கையை மனிதத் தேவைக்குப் பயன்படும் ஒரு கருவியாக, மனிதரின் மேலாதிக்கத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே பார்க்கிறது எனும் வாதம் பல சூழல்வாதிகளால் (environmentalists) முன்வைக்கப்பட்டது. தம்மைச் சூழலியல் சோஷலிச வாதிகள் (eco-socialists) எனச் சொல்லிக்கொள்ளும் சில ஆய்வாளர்களும் இந்தக் கருத்தினைக் கொண்டுள்ளனர். இவர்களின் அபிப்பிராயத்தில் இது மாக்சிசத்தின் ஒரு குறைபாடு, ஆகவே அது திருத்தப்படவேண்டும். மாக்சிசத்தில் குறைபாடுகள் உண்டு என்பதை மறுக்க முடியாது ஆனால் இந்த விமர்சனம் மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றி மாக்ஸ் பல இடங்களில் குறிப்பிட்டு விளக்க முற்பட்டுள்ள வற்றைக் கணக்கிலெடுக்கத் தவறிவிட்டது எனப் பல மாக்சிய ஆய்வாளர்கள் ஆதாரபூர்வமாகக் காட்டியுள்ளனர். இது தொடர்பாக மாக்சின் பல கருத்துக்கள் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தபோதும் மிகவும் தெளிவாகவே முன்வைக்கப்பட்டுள்ளன. அவை ஒரு மாக்சிய சூழலியலுக்கான அடிப்படைகளைத் தருகின்றன என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாகும். இன்று இந்த ஆய்வுச் செல்நெறியும் அது தொடர்பான விவாதங்களும் பல படிகள் முன்னேறியிருப்பதைக் காண்கிறோம்.
அவரது காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பொருள்முதல்வாத சிந்தனையின் குறைபாடுகளை விமர்சித்த மாக்ஸ் மனித வரலாற்றுக்கு முன்பிருந்த இயற்கை (சமீப காலங்களில் உருவான சில அவுஸ்திரேலிய பவழத் தீவுகளைத் தவிர) இப்போது இல்லை, உண்மையில் நடப்பது என்னவெனில் மனிதர் இயற்கையுடனான பரிமாற்ற உறவுகளுக்கூடாகத் தம்மையும் இயற்கையையும் மாற்றிய வண்ணமிருக்கிறார்கள் எனும் நிலைப்பாட்டிற்கு வந்தார். இந்த ஆரம்பக் கருத்துக்களை அவர் தனது பின்னைய ஆக்கங்களில் மேலும் ஆழமாக ஆய்வதைக் காணலாம். மூலதனம் – இயற்கை உறவுக்கு இயங்கியல் அணுகுமுறைக்கூடான விளக்கத்தைக் கொடுக்கிறார். மூலதனம் எப்படி மனித உழைப்பையும் இயற்கையையும் சுரண்டும் அதே சமயம் மனிதரை மனிதரிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் அந்நியப்படுத்துகிறது என்பதை விளக்குகிறார். Grundrisse மற்றும் ‘மூலதனம்’ (மூன்று பாகங்கள்) ஆகிய நூல்கள் மற்றும் அவைக்கு முன்னர் வந்த அரசியல் பொருளாதார விமர்சனங்கள் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் பிரமிக்கத்தகுந்த அசுர, புறொமிதிய (Promethean) உற்பத்தி ஆற்றலைத் தெளிவுபடுத்தி விளக்கும் அதேவேளை அந்த ஆற்றலின் மறுபகுதியான அழிப்பு சக்திகள் பற்றியும் கூறுகின்றன. உபரிப் பெறுமதியின் அபகரிப்புக்கூடாக மூலதனக் குவியலை உந்தும் உள்ளார்ந்த தர்க்கவியல் (immanent logic) தேசிய எல்லைகளையோ இயற்கைரீதியான எல்லைகளையோ மதிப்பதில்லை. அதன் இயக்கப்போக்கிற்கு இந்த எல்லைகள் அர்த்தமற்றவை. அது மட்டுமன்று தடைகளுக்கும் எல்லைகளுக்கும் இடையிலான வேறுபாட்டினைக் கூட மூலதனத்தின் உள்ளார்ந்த தர்க்கவியல் மதிப்பதில்லை. மூலதனத்தைப் பொறுத்தவரை எல்லைகளும் உடைத்துத்தாண்டப் படவேண்டிய தடைகளே! மூலதனத்திற்கு ‘ஒவ்வொரு எல்லையும் ஒரு தடையாக மட்டுமே இருக்கமுடியும் அல்லாவிடில் அது மூலதனமாக – சுயமாக மீளுற்பத்தியாகும் பணமாக – இருக்கமுடியாது’ என்கிறார் மாக்ஸ்.[2] ஆகவே எல்லைகளைத் தற்காலிகமான தடைகளிலிருந்து வேறுபடுத்தும் ஆற்றலற்ற உற்பத்தி அமைப்பு ஆட்சி செலுத்தும் உலகில் விஞ்ஞானிகள் வகுக்கும் பூகோளரீதியான பாதுகாப்பு எல்லைகள் மீறப்படுவது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல.
ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஏறக்குறைய ஏழு தசாப்தங்களாக உலகின் சூழல் பிரச்சனைகள், மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றிக் கோட்பாட்டுரீதியான மாக்சிய பங்களிப்புக்கள் சிறியளவிலேயே இருந்தன. பின்நோக்கிப் பார்க்கும்போது இது ஆச்சர்யத்தை கொடுக்கலாம். ஏனெனில் அந்தக் காலகட்டத்தில் மாக்சிசம் கோட்பாட்டுரீதியான எழுச்சிகளைக் கண்டது, சோஷலிச மற்றும் தேசிய விடுதலை போராட்ட இயக்கங்களின் தலையாய கருத்தியலாய், ‘இரண்டாம் உலக’ நாடுகளை ஆண்ட கொம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கையாய் விளங்கியது. மாக்சிசம் பற்றிய பலவிதமான வியாக்கியானங்கள், விளக்கங்கள் தோன்றி வளர்ந்தன. அதன் செல்வாக்கிற்குள்ளாகாத சமூக விஞ்ஞானத்துறைகளைக் காண்பது அரிது. ஆயினும் சூழல் பிரச்சனைகள், சூழலியல் தொடர்பான விவாதங்கள் இந்தப் போக்குகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. பிரபல மாக்சிய சிந்தனையாளர் David Harvey (1998) கூறியதுபோல் சூழல் பிரச்சனைகளுக்குரிய முக்கியத்துவத்தை கொடுப்பதற்கு மாக்சியவாதிகள் மிக நீண்ட காலத்தை எடுத்துள்ளனர். 1960-1970களில் மேற்கு நாடுகளில் எழுந்த சூழல் இயக்கங்களின் கருத்தியலாளர்கள் மாக்சிசத்தை ஒரு சூழல் விரோதத் தத்துவமாகச் சித்தரிக்க முயன்றனர். மாக்சிசம் ஒரு ‘உற்பத்திவாத’ (productivist), இயற்கைமீது மனித ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிற சிந்தனைப்போக்கு எனக் காட்ட முற்பட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தனர். இதைப் பல மாக்சிய இடதுசாரிகள் ஒரு சவாலாக ஏற்றுச் சூழல் பிரச்சனைகளை மாக்சியப் பார்வையில் அணுகி ஆராயவிளைந்தனர். மூலதனம்- இயற்கை உறவுகள், சூழல் பிரச்சனைகள் பற்றி மாக்சும் ஏங்கல்சும் எழுதியவற்றைத் தேடித்துருவி ஆராய்ந்தனர். முன்னைய மற்றும் சமகால மாக்சியச் செல்நெறிகளை விமர்சன நோக்கில் மீளாய்வு செய்தனர். 1980களிலிருந்து வளர்ந்துவரும் மாக்சிய சூழலியல் போக்குகளின் வரலாற்றின் கோட்பாட்டுரீதியான பின்னணியை ஆழமாகவும் அறிவூட்டும் வகையிலும் தமது ஆய்வுகளில் தருகிறார்கள் John Bellamy Fosterம் அவரது சக ஆய்வாளர்களும் (Foster, 2000; 2015; Foster, Clark and York, 2010).
சோவியத் யூனியனின் ஆரம்ப காலத்தில் சூழலியல் கற்கைகள் அதிகாரத்துவத் தலையீடுகளின்றி வளர்ந்தன. உதாரணமாக 1926ல் Vladimir Vernadsky ´The Biosphere´ (உயிர்க்கோளம்) எனும் அவரது பிரதான ஆய்வுநூலை வெளியிட்டார். பிரபல மரபணு விஞ்ஞானியான Nikolai I. Vavilov மனிதர் இயற்கையிடமிருந்து தம் பயன்பாட்டிற்குத் தேர்ந்தெடுத்த தாவரங்கள் பற்றிய தனது உலகரீதியான ஆய்வுகளை வெளியிட்டார். இவற்றின் விளைவாக இத்தகைய தாவரங்களின் மையங்கள் Vavilov Centres எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளன. இப்படியாகப் பல சூழலியல்ரீதியான பங்களிப்புக்கள். ஆனால் இத்தகைய ஆய்வுகளின் சுதந்திரமான தொடர்ச்சி துரதிஷ்டவசமாக சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியில் வளர்ந்து வந்த அதிகாரத்துவவாதத் தலையீடுகளால் பாதிக்கப்பட்டது (மேலும் தகவல்களுக்கு: Foster, 2015).
இதே காலகட்டத்தில் சோவியத் யூனியனுக்கு வெளியே மூன்றாம் உலகிலும் மேற்கிலும் மாக்சிசம் பரந்த வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி பன்முகரீதியான தத்துவார்த்த விருத்திகளையும் கண்டது. 1940 களில் சீனப் புரட்சியின் வெற்றியும் மாஓவின் சிந்தனைகளும் பின்னர் வெற்றிபெற்ற கியூபாவின் புரட்சியும் மூன்றாம் உலக நாடுகளின் தேசியவிடுதலைப் போராட்டங்களுக்கு ஆகர்ஷமாய் விளங்கின. 1960களில் இவை மேற்கு நாடுகளின் மாணவ இயக்கங்களையும் கவர்ந்தன. ஆனால் சூழல் பிரச்சனைகள் தொடர்பான கதையாடல்களும் செயற்பாடுகளும் சூழல்வாதிகளின் செல்வாக்கிலிருந்து விடுபடவில்லை. சீனாவில் துரிதமான காடழிப்பு மற்றும் சூழல் பிரச்சனைகள் தோன்றின. காலனித்துவம், ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகின் இயற்கை வளங்களைச் சூறையாடுவது பற்றிய நவமாக்சிய ஆய்வுகள் பல வெளிவந்தபோதும் அப்போது அதன் சூழல் பரிமாணம் ஆழமாகக் கவனிக்கப்படவில்லை.
1920களில் ஐரோப்பாவில் புதிய மாக்சிச செல்நெறி ஒன்று தோன்றி மிகவும் செல்வாக்குப் பெற்றது. இது ‘மேற்கத்திய மாக்சிசம்’ (Western Marxism) என அழைக்கப்பட்டது. இதன் பிரபலமான ஆரம்ப கர்த்தாக்களில் Georg Lukacs, Antonio Gramsci, Karl Korsch, Ernst Bloch ஆகியோர் அடங்குவர். இந்த செல்வாக்குமிக்க போக்கே பின்னர் Frankfurt Schoolன் ஆய்வுகளின் பிரதான ஆகர்ஷமாய், அடிப்படையாய் விளங்கியது. இந்தப் போக்கு மாக்சிசத்தின் கோட்பாட்டுரீதியான முன்னேற்றத்திற்கும் விவாதங்களுக்கும் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. ஆயினும் இயற்கை மற்றும் இயற்கை விஞ்ஞானம் தொடர்பான விடயங்களில் போதியளவு அக்கறை காட்டவில்லை. இந்தப் போக்கிற்கு ´Western Marxism` எனும் பட்டத்தை முதலில் சூட்டியது சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியே. இந்தப் பட்டம் சூட்டல் அதை இழிவுபடுத்தும் நோக்கிலேயே செய்யப்பட்டதாயினும் அதற்கு மாறாக அது பலராலும் வரவேற்கப்பட்டது. மேற்கத்திய மாக்சிசத்தின் குறை நிறைகள் பற்றி ஆழ ஆய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. இங்கு முக்கியமாக இயற்கை பற்றிய மாக்சிச நிலைப்பாடு தொடர்பாக ஆரம்பத்தில் Lukacs கொண்டிருந்த கருத்து மற்றும் அவரின் கருத்தின் செல்வாக்கின்கீழ் Alfred Schmidt (1962) எழுதிய ´The Concept of Nature in Marx´ எனும் நூல் தொடர்பான விமர்சனங்கள் உண்டு என்பதைக் குறிப்பிடவேண்டும். Lukacsன் பார்வையில் இயங்கியல் அணுகுமுறை வரலாறு மற்றும் சமூகம் பற்றிய அறிதலுக்கு மட்டுமே பயன்படவல்லது. இந்த நோக்கில் அவர் ஏங்கல்சின் Dialectic of Nature (இயற்கையின் இயங்கியல்) ஆய்வை ஒரு ஹேகலியத் தவறு எனக்கூறியுள்ளார். இயங்கியல் அணுகுமுறை பற்றிய Lukacs ன் கருத்தை கிராம்சி விமர்சித்தார் என்பதைக் குறிப்பிடுதல் தகும். ஆயினும் தனது குறுகிய வாழ்க்கையில் மாக்சிச சிந்தனை மரபின் விருத்திக்குப் பயனுள்ள பங்களிப்பினை செய்தவரான கிராம்சி மூலதனத்திற்கும் இயற்கைக்குமிடையிலான இயங்கியல் உறவு பற்றிக் கவனம் செலுத்தவில்லை. தத்துவார்த்த மட்டத்தில் மாக்சிசம் நேர்மறையாக்கத்தின் (positivismன்) செல்வாக்கிற்குள்ளாவதை எதிர்ப்பதில் அன்றைய மேற்கத்திய மாக்சிஸ்டுகள் ஆர்வமாயிருந்தனர். இது இயற்கை தொடர்பான அவர்களின் கவனமின்மைக்குக் காரணமாயிருந்திருக்கலாம். பொதுவாக ‘சோஷலிச’ (சோவியத் முகாம், சீனா) நாடுகளில் இடம்பெற்ற சூழல் சீரழிவுகள், மேற்கத்திய மாக்சிச செல்நெறி சூழல் பிரச்சனையை நன்கு கையாளத் தவறியமை, மற்றும் மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றிய மாக்சின் கருத்துகளைக் காணத்தவறியமை போன்ற காரணங்களால் மாக்சிசம் சூழலியலுக்கு எதிரானது எனும் கருத்துப் பரவலாக நம்பப்பட்டது.[3]
1960-70களில் சூழல்வாதிகள் மாக்சிசம் பற்றிக் கொண்டிருந்த விமர்சனங்களையும் அவற்றின் விளைவாக 1980-90 களில் பிறந்த சூழலியல் (ecology) சார்ந்த மாக்சிச செல்நெறிகளையும் நோக்கும்போது இந்தப் பின்னணியையும் நினைவுகூர்தல் பயன்தரும். இந்தக் காலகட்டத்தில் சில மாக்சிய ஆய்வாளர்கள் மாக்ஸ் ஆலைத்தொழில் புரட்சியின் மற்றும் அத்துடன் பிறந்து பரந்து வளர்ந்த நவீன நாகரீகத்தின் இயற்கை விரோதத்தன்மை பற்றி ஆழ்ந்த விமர்சனரீதியான கருத்தினைக் கொண்டிருக்கவில்லை எனும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இந்தக் குறையைத் திருத்தவேண்டும் என வாதிட்டுத் தமது கருத்துக்களை முன்வைத்தனர். உதாரணமாக Michael Lowy, Ted Benton, James O´Connor இந்த முகாமைச் சேர்ந்தவர்கள். இன்னொரு சாரார் இதை ஏற்கமறுத்து மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றி நீண்ட காலமாக மாக்சியவாதிகள் கவனிக்காதுவிட்ட மாக்சின் கருத்துக்களை எடுத்துக் கூறி அவை ஒரு மாக்சிய சூழலியலின் கோட்பாட்டுரீதியான விருத்திபோக்கின் அடிப்படைகளாகப் பயன்படவல்லன என வாதிட்டனர். இந்தப் போக்கின் பிரதிநிதிகளாக John Bellamy Foster, Brett Clark, Richard York, Paul Burkett, Fred Magdoff, Kohei Saito போன்றோரைக் கொள்ளலாம். இன்னும் பல மாக்சியவாதிகள் இந்த இரு போக்குகளுக்கும் இடைப்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர் – உதாரணங்களாக David Harvey, Andreas Malm, Jason Moore ஆகியோரைக் குறிப்பிடலாம். இங்கு நான் முக்கிய பங்களிப்புக்களைச் செய்தோரில் ஒரு சிலரின் பெயர்களை மட்டுமே அதுவும் ஆங்கில மொழியில் எழுதுவோர் பற்றியே குறிப்பிடுள்ளேன். சூழல் தொடர்பான மாக்சிச ஆய்வுகள் வரலாற்று நோக்கிலானவை மட்டுமல்லாது அவை பல விஞ்ஞானத் துறைகளை ஒருங்கிணைத்து ஆயும் பண்புடையவை.
இன்னுமொரு முக்கியமான தகவல் என்னவெனில் ஆரம்பத்தில் இருந்ததை விடக் காலப்போக்கில் இந்த எழுத்தாளர்களிடையே பல விடயங்களில் பொதுமைப்பாடு அதிகரித்துள்ளது எனலாம். மாக்சிய சூழலியல் தொடர்பான சர்வதேச ஆய்வுகளைப் பல சஞ்சிகைகள் பல மொழிகளில் பிரசுரிக்கின்றன. ஆங்கில மொழியைப் பொறுத்தவரை விசேடமாக மூன்று மாக்சிச சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்: James O´Connor 1980களில் ஆரம்பித்த Capitalism, Nature, Socialism; தற்போது John Bellamy Fosterஐ ஆசிரியராகக்கொண்ட Monthly Review (இது 1949ம் ஆண்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகை என்பது குறிப்பிடத்தகுந்தது) மற்றும் Susan Watkins ஐ ஆசிரியராகக் கொண்ட New Left Review. சூழல் தொடர்பான மாக்சிச ஆய்வுக் கட்டுரைகள் கருத்துப் பரிமாறல்கள் பல இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன.
வேதியியல்ரீதியான பிளவு (Metabolic Rift): மாக்சின் விளக்கமும் அதன் பயன்பாடும்
முதலாளித்துவ ஆலைத்தொழில் மயமாக்கல், நகர்மயமாக்கல், விவசாயத்தின் நவீனமயமாக்கல், மற்றும் நெடுந்தூர வணிகம் போன்றவை இயற்கை வளங்களின் உபயோகம் மற்றும் சூழல்மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி மாக்ஸ் ஆழ்ந்த அக்கறையுடன் அவதானித்துவந்தார். முதலாளித்துவ உற்பத்தி உறவுகளும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் இயற்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை அன்றைய காலத்தில் கிடைக்கக்கூடிய விஞ்ஞான ஆய்வுகளின் உதவியுடன் புரிந்துகொள்ள விளைந்தார். நகரம் – நாட்டுப்புறம் எனும் பிரிவினை சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையே நிலவும் வேதியியல்ரீதியான பரஸ்பர தங்கிநிற்றலில் (metabolic interdependence ல்) சீர்படுத்தமுடியாத பிளவினை (irreparable rift ஐ) ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டார். தனியுடைமையாளரின் இலாப நோக்கினால் உந்தப்படும் அமைப்பில் இந்தப்பிளவு விரிவடைவது எதிர்பார்க்கப்படக்கூடியது. இந்த நோக்கிலேயே மாக்ஸ் 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவெடுத்த சூழல் பிரச்சனைக்கு ஒரு கோட்பாட்டுரீதியான அடிப்படையைக் கொடுக்க முற்பட்டார். மாக்சின் இந்த அடிப்படைக் கருத்திற்கு metabolic rift (வேதியியல்ரீதியான பிளவு) எனும் பதத்தினை Foster (1999) அறிமுகம் செய்தார். 1867ல் முதல்முதலாக ஜேர்மன் மொழியில் பிரசுரமாகிய ‘மூலதனம்’ முதலாம் பாகத்தில் (Capital, Volume I) பேரளவு ஆலைத்தொழில் மற்றும் விவசாயம் பற்றிய ஆய்வில் மாக்ஸ் விரிவாகக்கூறுவதைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.[4]
முதலாளித்துவ உற்பத்தி மக்களை பெரிய மையஇடங்களில் ஒன்றுசேர்க்கிறது. அது நகர்ப்புற ஜனத்தொகையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குக் காலாயிருக்கிறது. இதனால் இரண்டு விளைவுகள் ஏற்படுகின்றன: ஒரு புறம் அது வரலாற்றுரீதியான இயக்கசக்தியைச் செறிவாக்குகிறது. மறுபுறம் அது மனிதனுக்கும் பூமிக்குமிடையிலான வேதியியல்ரீதியான தொடர்பினைச் சீரறுக்கிறது – அதாவது கிராமத்தின் உற்பத்திகள் (உணவு மற்றும் பலவிதமான உள்ளீடுகள்) நகரத்திற்கு ஏற்றுமதியாவதால் மண்ணிடமிருந்து அவை அகற்றும் கனிமங்கள் போன்றன மீண்டும் மண்ணிடம் போய்ச்சேரும் சுழற்சிப் போக்குத் தடைபடுகிறது. இதனால் நித்தியமாக மண்ணின் வளத்தைப் பராமரிக்கும் இயற்கையான செயற்பாடு, அதாவது மண்வளத்தின் இயற்கையான மீளுருவாக்கம், பாதிக்கப்படுகிறது. இதனால் மண்வளம் சீரழிகிறது. முதலாளித்துவம் உருவாக்கும் ‘நகரம் – நாட்டுப்புறம்’ எனும் பிரிவினைப் போக்கின் விளைவுகளால் நகர்ப்புறத் தொழிலாளியின் உடல்நலமும் நாட்டுப்புறத் தொழிலாளியின் அறிவுசார்வாழ்வும் ஒரேகாலத்தில் அழிக்கப்படுகின்றன.
நகர்புறத்தின் சூழல் பிரச்சனைகளும் கிராமப்புறத்தின் இயற்கை வளங்களின் சீரழிவும் இருபதாம் நூற்றாண்டில் அதிக முக்கியத்துவம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவற்றின் தோற்றம் மற்றும் விளைவுகள் பற்றி மாக்ஸ் கூர்மையான பார்வையைக் கொண்டிருந்தார். சமகால ஜேர்மனிய விவசாய இரசயானவியல் விஞ்ஞானியான Justus von Liebigன் ஆய்வுகளை மாக்ஸ் கவனமாகப் படித்தார். நகர்மயமாகிவரும் ஐரோப்பாவில் விவசாய உற்பத்தியின் தீவிரமயமாக்கலும் நீண்டதூர ஏற்றுமதியும் மண்வளத்தின்மீது ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் பற்றிய ஆய்வுகளில் Liebig ஈடுபட்டிருந்தார். இதுபற்றிய அவரது இறுதியான முடிவுகள் நீண்டகாலமெடுத்தன. Liebigன் கருத்துக்களால் மாக்ஸ் கவரப்பட்டார். இயற்கை விஞ்ஞானத்தில் முக்கியமான வேதியியல் (ஆங்கிலத்தில் metabolism ஜேர்மனில் stoffwechsel) எனும் பதத்தினை அவர் Liebig இடமிருந்து பெற்றே அதற்கு ஒரு சமூகவிஞ்ஞான அர்தத்தையும் கொடுத்தார் எனக் கருத இடமுண்டு. இயற்கைக்கும் மனிதருக்குமிடையிலான உறவினை சமூக வேதியியல் (social metabolism) என மாக்ஸ் குறிப்பிடுகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் விவசாய உற்பத்தியின் தீவிரமாக்கலின் விளைவாக மோசமாகத் தலையெடுத்த மண்வளச்சீரழிவினை ஈடுசெய்யத் தென் அமெரிக்காவின் பெரு (Peru) நாட்டில் பல நூற்றாண்டுகளாகக் குவிந்திருந்த கடற்பறவைகளின் எச்சம் (guano) இயற்கை உரமாக இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது இது மிக இலாபம்மிக்க வணிகமாகியது. ஆனால் இதனால் பெருவிற்கு நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம். பிரித்தானிய மற்றும் பிரஞ்சு கொம்பனிகளே பெரியளவில் இலாபங்களைச் சுருட்டிக்கொண்டன. அப்போது பெரு பிரித்தானியாவிடம் பெருமளவு கடன்பட்டிருந்தது. ஸ்பெயினிடமிருந்து விடுதலைபெறும் போராட்டத்திற்காகப் பெரு இந்தக் கடனைப்பெற்றது. இதைத்திருப்பிக் கொடுக்கவே தனது விவசாயத்திற்கு நீண்டகாலம் பயன்படவல்ல இயற்கை உரத்தை ஏற்றுமதி செய்ய முன்வந்தது. நாற்பது வருடங்களாகத் தொடர்ந்த இந்த வியாபாரத்திற்கு பெருவில் தொழிலாளர் போதாமையால் ஆயிரக்கணக்கில் சீனாவிலிருந்து கூலியாளார்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். இந்த guano வணிகத்தினதும் அதன் சூழல் மற்றும் சமூகரீதியான விளைவுகளினதும் அரசியல் பொருளாதாரத்தை ஆராய்ந்த Fosterம் அவரது சகாக்களும் இதை ‘சூழலியல் ஏகாதிபத்தியம்’ (ecological imperialism) என விபரிக்கின்றனர். இன்றைய மாக்சிய கருத்தாடல்களில் ‘சூழலியல் ஏகாதிபத்தியம்’ ஒரு ஆய்வுப்பொருளாகவும் விவாதத்திற்குரிய விடயமாகவும் விளங்குகிறது.
இருபதாம் நூற்றாண்டில் செயற்கையான கனிமஉரவகைகள் (inorganic fertilizers) பெருமளவில் பயன்பாட்டிற்கு வந்தன. அத்துடன் அதிக விளைச்சலைத்தரும் பயிரினங்களும் உருவாக்கப்பட்டன. இது தீவிரமான இரசாயன விவசாய உற்பத்தியின் உலகமயமாக்கலுக்கு உதவியது. இந்த விவசாயவிருத்தியின் சூழல் விளைவுகள் மற்றும் அவற்றின் சமூகரீதியான தாக்கங்கள் பற்றிப் பெருந்தொகையான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இவை மற்றும் ஆலைத்தொழில்மயமாக்கலின் சூழல் தாக்கங்கள் பற்றிய பொது அறிவும் சமூக உணர்வும் இப்போது பரவிவருவதைக் காண்கிறோம்.
தனியாரின் இலாபநோக்கினால் உந்தப்படும் உற்பத்தி அமைப்பில் தனியுடைமையாளர் தனியார்செலவினங்களை முடிந்தவரை தொழிலாளர், சூழல் மற்றும் நுகர்வாளர் மீது வெளிவாரிப்படுத்துகிறார்கள். நுகர்வாளர்களும் கழிவுப்பொருட்களைச் சுலபமாக சூழலில் வெளிவாரிப்படுத்தும் போக்கினைக் காணலாம். நகர்ப்புறங்களில் கழிவுப்பொருட்களின் முகாமை பெரும் பிரச்சனையாகியுள்ளது. இயற்கை வளங்களை அகழ்ந்தெடுப்பதிலிருந்து, உற்பத்தி, போக்குவரவு மற்றும் நுகர்வுவரை வெளியேறும் கழிவுகளை உள்வாங்கி உறிஞ்சி அவற்றை மீள்சுழற்சிசெய்யும் சூழலின் இயற்கையான சக்திக்கும் அப்பால் அதன்மீது கழிவுகள் சுமத்தப்படுகின்றன. இந்தப்போக்கு உலகமயமாக்கப்படுகிறது. இதன் விளைவாக வேதியியல்ரீதியான பிளவும் உலகமயமாக்கப்படுகிறது. இதுவே இன்றைய யதார்த்தம். ஆனால் இந்தச் சிக்கலையும் இலாபம் தேடும் ஒரு சந்தர்ப்பமாக மூலதனம் மாற்றியுள்ளது. இன்று சூழல் சீரழிவைச் சீர்படுத்தும் அல்லது குறைக்கும் தொழில்நுட்ப உற்பத்தி ஒரு பாரிய முதலீட்டுத்துறையாகிவிட்டது. தான் உருவாக்கும் பிரச்சனையைக் கூட இலாபம்தரும் ஒரு சந்தர்ப்பமாக்கும் ஆற்றல் மூலதனத்திற்கு உண்டு. அது மூலதனத்தின் விசேடபண்பு. ஆனால் உண்மையில் மூலதனம் செய்வது பிரச்சனயின் தீர்வல்ல அதைத் தற்காலிகமாக வேறொரு பக்கத்திற்கு அகற்றி விடுவதே. தனியுடைமை அடிப்படையிலான மூலதனக் குவியலின் தேவைகளுக்கும் இந்தப்பூமியில் வாழும் மனித மற்றும் மற்றைய உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கு இன்றி அமையாத பொதுச் சொத்துக்களை (commons) உள்ளடக்கும் சூழலின் பாதுகாப்பின் தேவைகளுக்குமிடையிலான முரண்பாடு உச்சமடைந்த வண்ணமிருக்கிறது. மூலதனம் தனக்கே உரிய வகையில் இந்த முரண்பாட்டைக் கையாள்கிறது. இவை பற்றி மேலும் அடுத்த பாகத்தில்.
தொடரும்
[1] இந்தக் கட்டுரை 2015ல் நான் ஆங்கிலத்தில் எழுதிய பின்வரும் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. N. Shanmugaratnam, Marxism and Ecology – Notes on some theoretical developments, http://ssalanka.org/marxism-and-ecology-notes-on-some-theoretical-developments/ published November 2015.
[2] Karl Marx (1857-1858), Grundrisse, English translation by Martin Nicolaus, 1974:334. இந்த நூல் 1857-58ல் மாக்ஸ் ஜேர்மன் மொழியில் எழுதிய ஏழு குறிப்புப் புத்தகங்களை உள்ளடக்குகிறது. இந்தக்குறிப்புக்கள் மாக்சின் ‘மூலதனம்’ நூலுக்கான ஆய்வுகளின் ஒரு பகுதியாகும். நீண்ட காலமாகத் தவறிப் போயிருந்த இந்தக் குறிப்புக்கள் 1953ம் ஆண்டிலேயே அவை மூலமுதலாக எழுதப்பட்ட ஜெர்மன் மொழியில் முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டன. ஆங்கில மொழிபெயர்ப்பு 1974ல் வெளிவந்தது. இந்தக் குறிபுக்களைப் பிரசுரிக்கும் நோக்கில் மாக்ஸ் எழுதவில்லை. பொருளியல் மற்றும் பல விடயங்கள் பற்றிய தன் சுயதெளிவாக்கலுக்காகவே இவைபோன்ற வேறு (உதாரணமாக Theories of surplus value) குறிப்புக்களையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரின் சிந்தனைப் போக்கினை ஆழ அறிந்துகொள்ள இந்தக் குறிப்புக்கள் மிகவும் பயன் தருவன.
[3] இதுபற்றி மேலும் அறிய: Foster (2000); Foster et al (2010)
[4] Karl Marx, Capital (Vol. I) English Edition, Penguin Classics, 1999