எழுந்து வரும் நவ லிபரலிச அலைகள் – இவை நிலைகொள்ளுமா ?[1]

சமுத்திரன்

1994

1970 களின் பிற்பகுதியிலிருந்து லிபரலிசப் போக்குகள் பல வடிவங்களில் எழுந்த வண்ணமிருக்கின்றன. சோவியத்அமைப்பின் வீழ்ச்சி, சீனாவின் கொள்கை மாற்றங்கள் பூகோளத்தின் வடக்கிலும் தெற்கிலும் சோஷலிச இயக்கத்தின் தோல்விகள் பின்னடைவுகள் – இவை எல்லாமே லிபரல் அலைகளின் வளர்ச்சிப்போக்குகளுக்கு உதவியுள்ளன. ஆனால் லிபரல் போக்குகளுக்கு வரைவிலக்கணம் கொடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனெனில் லிபரலிசம் என்னும் போது அந்த வார்த்தையைப் பிரயோகிப்பவரையொத்து அதன் கருத்து வேறுபடலாம். உண்மையில் லிபரலிசத்திற்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு பொதுவான கோட்பாட்டு ரீதியான விளக்கத்தைக் கொடுப்பது இன்றைய நிலையில் முடியாது. ஒரு புறம் எழுச்சிபெற்றுவரும் புதியவலதுசாரிப்போக்கின் பிரதிநிதிகள் தம்மை லிபரல்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். மறுபுறம் தனிமனிதரினதும் சமூகத்தினதும் விடுதலைக்குப் புதிய மார்க்கங்களைத் தேடும் இயக்கத்தினரும் லிபரல் மரபில் வந்த அல்லது அதனுடன் தொடர்புள்ள பூர்ஷ்வா புரட்சிகளின் மரபுதந்த சுலோகங்களைத் தம் பதாதைகளில் பதிக்கின்றனர். வலதுசாரிகள் சுயபோட்டிச் சந்தைப் பொருளாதாரம் பற்றிய கனவுகளைப் பொருளாதாரக் கொள்கையாக்கி இன்றைய மேற்கு நாடுகளின், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின், பின்தங்கிய நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளின் தீர்வுகளாய் முன்வைக்கின்றன. புதிய இடதுசாரிகளோ பிரெஞ்சுப்புரட்சியின் அமெரிக்கப் புரட்சியின் உரிமைப்பிரகடனங்களின் மொழியிலே பேசுகின்றனர். சமத்துவத்திற்கும் விடுதலைக்கும் அடிநாதமான புதிய ஜனநாயகமொன்றின் தேடலுக்கு இப்புரட்சிகளிடமிருந்து ஆகர்ஷ்த்தைத் தேடும் இவர்கள் அரசுக்கெதிரான அரசியலுக்கு ஒரு புதிய உள்ளடக்கத்தைக் கொண்ட சுயாதீன சமூகத்திற்கான, சிவில் சமூகத்திற்கான (Civil Society) போராட்டத்திற்கு லிபரல் சிந்தனைமரபுசாரிகளிடமிருந்து கோட்பாடுகளைத் தேடுகின்றார்கள். அவற்றின் உதவியுடன் புதிய சோஷலிச சிந்தனைப்போக்கிற்கு வித்திட முயற்சிக்கின்றனர். தோல்வியடைந்த சோசலிசம் பற்றிய விமர்சனங்களும் புதிய விடுதலைப்பாதைகளின் தேடல்களும் நம்மை மனித வரலாற்றின் பொதுவான விடுதலைப் போக்குகள் பற்றிய தத்துவங்களுக்கும் பிரெஞ்சுப் புரட்சி போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கும் இழுத்துச் செல்கின்றன. இன்றைய போக்குகளை அவதானிப்போர் குழப்பமடையலாம். புதிய நம்பிக்கைகளைப் பெறலாம். விரக்தியடையலாம். ‘மேற்கத்திய‘ சிந்தனைகளுக்கெதிராக மாறி தேசியவாதிகளாக மாறலாம்.

ஆனால் இந்தப் போக்குகளிடமிருந்து ஒரு தெளிவான அடிப்படைப் பாடத்தை நாம் கற்கலாமென நம்புகிறேன். இடதுசாரிகள், சோசலிஷவாதிகள் மட்டுமல்ல சமீபகாலம் வரை மிகவும் தன்நம்பிக்கையுடன் இயங்கிய முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தோரும் நிலைகுலைந்துள்ளனர். இருசாராருமே வேறொரு நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்தவண்ணம் இருக்கின்றனர். சோஷலிசத்தின் வீழ்ச்சி வலதுசாரிகளுக்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் சாதகமான நிலைமைகளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் இது முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கொடுக்கவில்லை. உலக முதலாளித்துவத்தின் பொருளாதார மந்தமும் சிக்கல்களும் அதன் உள்ளார்ந்த இயக்கப்பாடுகளினால் ஏற்பட்டவை. சோஷசலிசத்தின் உலக ரீதியான வீழ்ச்சி முதலாளித்துவத்தின் சிக்கல்களுக்குத் தீர்வாகாது என்பதை இன்றைய வரலாற்றுக்கட்டம் உணர்த்துகின்றது. வலதுசாரிகள் சுயபோட்டித் சந்தைப் பொருளாதார லிபரலிசத்திடம் சரணடைய அவர்களின் பரந்த வலயத்தின் மற்றொரு வலதுசாரிக் கோஷ்டியினர் நிறவாதத்தையும் நவநாற்சிசத்தையும் (Neonazism) கிளறிவிடுகின்றனர். லிபரல்மரபின் அரசியல் உரிமை மனிதசமத்துவம் பற்றிய விழுமியங்களை இவர்கள் (நவநாற்சிஸ்ட்டுகள்) நிராகரிக்கின்றனர். இந்த விழுமியங்களையே புதிய சமூக இயக்கங்கள் உள்வாங்கியுள்ளன.

ஆகவே வரலாற்றின் விபத்தோ என்னவோ சோஷலிசத்தின் வீழ்ச்சியைக் கண்டு முதலாளித்துவம் கொட்டி வரும் வெற்றிப் பேரிகையின் ஒலியையும் விட முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான சிக்கல்களினால் வரும் பெரும்மூச்சுக்களும், ஓலங்களும் பயங்கரமாய் ஒலிக்கின்றன.

மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக வேலையில்லாத்திண்டாட்டம், நிறவாதம், சர்வதேச வர்த்தகமுரண்பாடுகள், பொருளாதாரத் தேசியவாதம் இப்படியே பல தெட்டத்தெளிவாய்த் தெரியும் போது அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான Francis Fukuyama லிபரல் ஜனநாயகமே வரலாற்றின் இறுதிக்கட்டமென அறிவித்துள்ளார். Fukuyama வின் தத்துவார்த்தப் பார்வையில் மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மாற்றி எழுதப்படுகிறது. Fukuyama சொல்கிறார்; ‘கம்யூனிசமல்ல லிபரல் ஜனநாயக முதலாளித்துவமே மானிடத்தின் இறுதி நிலையம். இதுவே மார்க்ஸ் காண விளைந்த வர்க்கமற்ற சமூகம்.’ வாசகர் முகத்தைச் சுழிப்பதைக் காண்கிறேன். என்ன Fukuyama வும் மார்க்சிஸ்டா? அவர் மார்க்சின் சிந்தனையை ‘திருத்தி’த் தன் திட்டத்திற்கேற்ப லிபரல் மொழியில் போடுகிறார். ஆகவே சொற்களுக்கும் அப்பால் சென்று உட்கருத்தைத் தேடுதல் இன்றைய தேவை. புதிய கோட்பாடுகள் தேவை. ஆனால் பழைய சொற்களே உதவிக்கு வருகின்றன. வெறும் சொற்களல்ல விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் எனும் போது வரலாற்றை மாற்ற முனைந்த போராட்டங்களல்லவா முக்கியத்துவம் பெறுகின்றன. அடிப்படைப் பிரச்சனை என்னவெனில் பூர்ஷ்வா ஜனநாயகப்புரட்சியின் இலட்சியங்களை இதுவரை பூரணமாக எந்தச் சமூகமும் அடையவில்லை. இது பிரஞ்சுப்புரட்சியின் அல்லது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பிரச்சனை என நாம் சொல்லி விலகிக்கொள்வதில் நியாயமில்லை. ஐரோப்பிய மையவாதிகள் எப்படி இத்தகைய சர்வலோக ரீதியாயான விழுமியங்களைத் தேசியமயப்படுத்த முயல்கின்றார்களோ அதேபோல் நம்மில் பலர் (தெற்கத்திய நாட்டவர்கள் ) அவ்விழுமியங்களை விதேசமயப்படுத்துவதன் மூலம் நமது நாகரீகப் பின்னடைவுகளை தேக்கத்தன்மைகளை நியாயப்படுத்த முயல்கின்றார்கள். இரண்டையும் நிராகரித்தல் அவசியம்.

சுயபோட்டிச் சந்தை லிபரல்வாதிகளுக்கு ஏற்கனவே வரலாறு பலம்வாய்ந்த பாடத்தைக் கற்பித்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் மூலதனத்திற்கெதிரான வர்க்கப்போராட்டங்கள் சுயபோட்டிச் சந்தையைக் கட்டுப்படுத்தும் போராட்டங்களாக, சமூகநலன்களைப் பேணும் போராட்டங்களாக அமைந்தன. இதன்விளைவுகளால் பிறந்த வர்க்க சமரசமே முதலாளித்துவ சமூகநல அமைப்பெனும் சமூகஉடன்படிக்கை (Social Contract) . இன்று மேற்கின் புதிய வலதுசாரி சக்திகள் இந்த சமூக உடன்படிக்கையை முற்றாக அழிக்க முற்பட்டுள்ளன. அதில் கணிசமானளவு வெற்றியும் கண்டுள்ளன. இதற்கெதிரான போராட்டங்கள் இன்னும் தெளிவான வேலைத்திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் பலவடிவங்களில் அவை தொடர்கின்றன.

தெற்கத்திய நாடுகளில் நவ லிபரலிசம் பூரண பொருளாதாரவாதமாக சர்வதேச மூலதனத்தின் சேவகனாகச் செயல்படுகின்றது. இதை எதிர்ப்பவர்கள் பலர் பின்னோக்கிய தேசியவாதத்தைப் பின்பற்ற முயற்சிக்கின்றார்கள். ஆனால் இது பயன்தராது. இங்கு முக்கியமானது ஜனநாயக உரிமைகளைச் சமூக நலன்களுடன் இணைக்கும் போராட்டமே. அதாவது ஜனநாயகப்புரட்சியின் மீட்சியே வெகுஜன இயக்கங்களின் நோக்கமாய் அமைய வேண்டும்.

வடக்கின் புதியதேடல்கள் சோஷசலித்திற்கான மாற்றுப்பாதைகளைத் திறக்கலாம். அதேபோல் தெற்கின் அடிப்படைத் தேவைகள் உரிமைகள் என்பவற்றிற்கான போராட்டங்கள் மக்கள் ஜனநாயகத்திற்குப் புதிய வழிகளைக் காட்டலாம்.

மெளனம் பெப்- மார்- ஏப் 94

[1] இந்தக் கட்டுரை ‘மௌனம்’ சஞ்சிகையில் 1994ல் பிரசுரிக்கப்பட்டது