2009 ம் ஆண்டில் Michael Moore ´Capitalism a Love Story´ (முதலாளித்துவம் ஒரு காதல் கதை ) எனும் பெயரில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். அவரது மற்றைய தயாரிப்புக்கள் போலவே இந்தப் படமும் அவருக்கே உரிய விமர்சனப்பார்வையுடன் கிண்டலும், நகைச்சுவையும், துன்பியலும் கலந்த ஒரு சிறந்த வெளியீடாக இருந்தது. சமகாலத்தில் (2006-2009 ) இடம் பெற்ற நிதிரீதியான நெருக்கடியின் விளைவுகளால் அமெரிக்க நடுத்தர, தொழிலாள வர்க்கங்களைச் சார்ந்த கோடிக்கணக்கானோர் தமது வீடுகளை இழந்து தொழிலிழந்து, அடிப்படை வாழ் வசதிகளையிழந்து படும் அவலங்களையும் முதலாளித்துவ வர்க்கத்தினதும் அமெரிக்க ஆட்சியாளர்களினதும் மக்கள் விரோத ஜனநாயக விரோத போக்கினையும் உண்மையான சம்பவங்களையும் வைத்து மிக நுட்பமாகப் படம் பிடித்துள்ளார்.
அமெரிக்க அரசியலையும், அரசாங்கத்தையும் பெரு மூலதன நிறுவனங்கள் எப்படிக் கட்டியாளுகின்றன என்பதையும் தோலுரித்துக் காட்டுகிறது இந்தப்படம். Moore தரும் முக்கியமான செய்திகளில் ஒன்று என்னவெனில் இறுதி ஆய்வில் முதலாளித்துவம் ஒரு ஜனநாயக விரோத அமைப்பு. மூலதனத்தின் நலன்கள் பாதிக்கப்படும் போது மக்களின் நலன்களும் உரிமைகளும் – குறிப்பாக உழைப்புச்சக்தியை விற்று ஊதியம் பெறும் வர்க்கத்தின் நலன்களும் ஜனநாயக உரிமைகளும் பலவழிகளில் நசுக்கப்படுவது அனுபவரீதியான உண்மை எனலாம். போராட்டங்களுக்கூடாக நவீன ஜனநாயகம் பரவுவதற்குக் களம் அமைக்க உதவும் முதலாளித்துவம் அதை ஒதுக்கி வைக்கும் சக்திகளையும் கொண்டுள்ளது. இதுவும் அந்த அமைப்பின் முரண்பாடுகளில் ஒன்று எனலாம். சர்வாதிகாரம், பாசிசம், அதிகாரவர்க்கவாதம் போன்றவையும் ஏகாதிபத்தியப் போர்களும் மூலதனத்தின் வரலாற்றுப் போக்கின் அம்சங்கள் என்பது பலரும் அறிந்ததே.
பொருளாதார வளர்ச்சியும் நெருக்கடிகளும் முதலாளித்துவத்தின் விருத்திப்போக்க்கின் தன்மை சார் வெளிப்பாடுகள் என்பதும் இவை மூலதனக் குவியலின் இயக்கப்பாட்டிற்குரிய சுழற்சிப் போக்கின் (Cyclical) விளைவுகள் என்பதும் 19 ம் நூற்றாண்டிலிருந்தே மாக்சின் ஆய்வுக்கூடாக நன்கு அறியப்பட்ட விடயமாகும். ஆயினும் சமீப தசாப்தங்களில் மூலதனத்தின் நெருக்கடிகள் முன்னெப்போதையும் விட அடிக்கடி ஏற்படுவது வழமை ஆகிவிட்டது. 1973 லிருந்து நூற்றுக்கணக்கான நிதி ரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன எனும் தகவலைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் David Harvey (2010) அதற்கு முன்னர் உதராணத்துக்கு இரண்டாம் உலக யுத்ததிற்குப் பின் 1945- 1973 காலகட்டத்தில் இத்தகைய நெருக்கடிகள் மிகவும் குறைவாகவே இருந்தன என்னும் தகவலையும் ஒப்பீட்டிற்காகத் தெரியத் தருகிறார், இன்றைய காலகட்டத்தில் மூலதனம் அனுபவிக்கும் தொடர் நெருக்கடிகளும் அவற்றினால் மக்கள் படும் அல்லல்களும் முதலாளித்துவத்தின் குறிப்பிட்ட உலகமயமாக்கலின் தன்மைகளையும் காட்டுகின்றன.
மூலதனத்தின் தொடர் நெருக்கடிகள் பற்றிய விமர்சன ரீதியான விளக்கங்களைச் சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். இந்த ஆய்வுகள் நவதாராளவாதத்தின் மேலாட்சி, நிதி மூலதனத்தின் அபரிமிதமான எழுச்சியும் நகர்ச்சியும் , அதற்கும் உற்பத்தி மூலதனத்திற்கும் இடையிலான தொடர்பறுபாடு, ஊகத்திற்கூடாக இலாபம் தேடும் சூதாட்டப்போக்கு, உழைப்பின் உற்பத்தித்திறனின் வளரச்சி தொடரும் அதேவேளை தொழிலாளர்களின் மெய் ஊதியம் (Real wage ) பல்லாண்டுகளாக ஸ்தம்பித்திருந்தமை போன்றவற்றிற்கு நியாயமான முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை இவற்றுடன் இணைந்த அரசியல் மற்றும் சூழல்சார் அம்சங்களையும் ஆராய்ந்துள்ளன.
நவதாராள வாதம்
இப்பொழுது மேலாட்சி செலுத்தும் நவதாராளவாதத்தின் ஆரம்ப நிகழ்ச்சி மிகவும் பலாத்காரமான ஜனநாயக ஒழிப்பு நடவடிக்கையாக இருந்தது. அதுதான் 1973 ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் சிலியில் பினொச்செ (Pinochet) தலைமையில் அமெரிக்கவின் CIA மற்றும் அந்நாட்டின் பெரும் மூலதன நிறுவனங்களின் உதவியுடன் இடம் பெற்ற இராணுவச் சதியாகும். இடதுசாரி அரசியல்வாதி சல்வடோர் அயண்டே ( Salvador Allende)1970 ல் ஜனாதிபதியாகத் தெரியப்பட்டு ஒரு இடதுசாரி அரசாங்கத்தை அமைத்தார். அவருடைய அரசியலும் பொருளாதாரக் கொள்கைகளும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்கும் உள்நாட்டு உயர்வர்க்கத்தினருக்கும் சாதகமாக அமையவில்லை. அத்துடன் அயண்டே கியூபாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். சிலியில் இராணுவச் சதி வெற்றி பெற்று பினொச்செயின் சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டதும் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் நவதாராளவாதிகளின் தூய போட்டிச் சந்தைப் பொருளாதாரக் கொள்கையின் அமுலாக்கல் ஆரம்பமாகியது. அதன்பின் சிலியில் நடைபெற்றது வரலாறு என்பதைப் பலர் அறிவர்.
சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெறும் அடுத்த நிகழ்ச்சி 1978 ல் ( Deng Xiaoping) டெங் சியாஒபிங்கின் தலைமையில் சீனாவில் இடம் பெறுகிறது, டெங்கும் அவரது கட்சிக் குழுவினரும் சீனாவுக்கே உரிய முறையில் அந்த நாட்டின் பொருளாதார தாராளமயமாக்கலை ஆரம்பித்தனர். சீன அரசின் முனைப்பான பங்குடன் சீனாவின் பொருளாதாரம் துரிதமாக முதலாளித்துவப்பாதையில் முன்னேறியது. ஆனால் சீனா நவதாராளவாதத்தின் சிற்பியோ அல்லது தலைமை சக்தியோ ஆகவில்லை. சீனாவின் கொள்கை சிக்காக்கோ பல்கலைக்கழகம் வகுத்த நவதாரளவாதமல்ல.
உலக ரீதியில் மேலாட்சி செலுத்தும் நவதாராளவாதம் பிரித்தானியாவில் பிரதமராக வெற்றி பெற்ற மார்கரட் தச்சரின் ( 1979) வருகையுடனும் அமெரிக்காவில் ஜனாதிபதியான றோனால்ட் றேகனின் (Ronald Reagan ) (1980 ) வருகையுடனுமே பலமிக்க கருத்தியல் திட்டமாக உருப்பெறுகிறது. இங்கு மேலாட்சி எனும் பதத்தை கிராம்சியின் ( Gramsci) Hegemony எனும் கோட்பாட்டின் அர்த்ததிலேயே நான் பயன்படுத்துகிறேன். இதன்படி மேலாட்சி என்பது கருத்தியல் ரீதியில் அறிவு ரீதியில் மற்றும் ஒழுக்கமுறை கலாச்சாரம் போன்றவற்றிற்கு ஊடாகப் பரந்த செல்வாக்கினைப் பெற்று அதிகாரத்தை நிலைநிறுத்தும் திட்டமாகும். இந்த திட்டத்தில் அதிகாரத்திற்கு உதவும் பலாத்கார இயந்திரம் பின்ணனியிலேயே நிறுத்தப்படுகிறது. செல்வந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளிலும் வளர்முக நாடுகளிலும் இந்த மேலாட்சித்திட்டம் பலவழிகளுக் கூடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தச்சர், றேகன் ஆகியோரின் பார்வையில் 1970 களிலிருந்து மேற்கத்திய பொருளாதாரங்களையும் உலகப் பொருளாதாரத்தையும் பாதித்து வரும் நெருக்கடிகளுக்கான மாற்று வழி அதுவரை இருந்து வரும் கட்டுப்பாடுகளிலிருந்து சந்தைப்பொறிமுறையை விடுவிப்பதிலேயே தங்கியுள்ளது. சமூகப்பாதுகாப்பு, பூரண வேலைவாய்ப்பு போன்ற கெய்னீசிய (Keynesian)க் கொள்கைகளை அகற்றி சந்தைப்புலத்திலே தனிமனிதர்கள் தமது நலன்களை அடையும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாகியது. சுருங்கச் சொல்வதாயின் பலமான தனியுரிமை உடைமைகள், சுய போட்டிச்சந்தை, சுதந்திர வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நிறுவன ரீதியான சட்டகத்தினுள் தனிநபரின் முயற்சி ஆளுகையும் செயற்திறனும் விடுவிக்கப்படுவதன் மூலமே மனித நன்னிலையை மிக நன்றாக முன்னேற்ற முடியும் என்பதே நவதாராளவாதத்தின் தாரக மந்திரம். ஆயினும் இந்த சூத்திர மயமாக்கப்பட்ட கோட்பாட்டின் கொள்கையாக்கலும் நடைமுறைகளும் இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் வேறுபடுகின்றன.எல்லா நாடுகளும் இந்தக் கொள்கையைப் பூரணமாக ஏற்றுக் கொண்டன எனக் சொல்ல முடியாது. ஆயினும் இதன் செல்வாக்கு உலக ரீதியானது எனலாம். பிராசில், சீனா இந்தியா போன்ற நாடுகள் தமக்கே உரிய வழிகளில் உலக மயமாக்கலில் பங்கு பற்றுகின்றன. ஆயினும் இவற்றின் தேசியப் பொருளாதாரங்கள் உலக ரீதியான நெருக்கடிகளிலிருந்து முற்றாக ஒதுங்கியிருக்க முடியாது. நவதாராளவாதத்தின் உலக ரீதியான மேலாட்சி பூரணமானதல்ல- அதன் ‘மிருதுவான அதிகாரம்’ (soft power) செல்லுபடியாகாத சந்தர்ப்பங்களில் வல்லரசுகளின் ‘ வலிய அதிகாரம்’ ( Hard power) பயன் படுத்தப்படலாம்.
எது எப்படியானாலும் நவதாராளவாத மயமாக்கல் நிதிமூலதனத்தின் அபரிமிதமான எழுச்சிக்கு வழிவகுத்தது என்பது முக்கியமான உண்மையாகும். 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நிதி மூலதனம் உற்பத்தி மூலத்தனத்தைக் கீழ்படுத்தும் போக்கு ஆரம்பமாகியது. இந்தப் போக்கு 20 ம் நூற்றாண்டில் துரிதமடைந்தது ஆயினும் இந்தப் போக்குகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நவதாரளவாதம் இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி நிதிமயமாக்கலுக்குப் பூரண சுதந்திரத்தை வழங்கியது.
செல்வந்த நாடுகளில் குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் மேற்கு ஐரோப்பாவில் நடைமுறைக்கு வந்த சமூக நலக் கொள்கைகள் மற்றும் சொத்து வருமானம் போன்றவற்றின் மீதான வரிகள் சில உற்பத்தித் துறைகளுக்கு பாதுகாப்புகள் போன்றவை மூலதனத்தின் குவியலையும் தனிமனித சுயமுயற்சியையும் பாதிக்கின்றன எனும் அடிப்படையில் அவை எல்லாவற்றையும் அகற்றி மூலதனத்தை அரச கட்டுப்பாடுகளிலிருந்து முற்றாக விடுவிக்கும் திட்டம் அமுலாக்கப்பட்டது. அதேவேளை இந்தக் கொள்கை தொழிலாளர்களின் தொழிற்சங்க செயற்பாடுகளை நசுக்கி அவர்களின் மெய் ஊதியத்தையும் வளரவிடாது செய்ய வழிவகுத்தது.றேகன் காலத்திலிருந்து அமெரிக்க தொழிலாளர்களின் மற்றும் நடுத்தர ஊதிய உழைப்பாளர்களின் மெய் ஊதியம் ஸ்தம்பித்த நிலையிலேயே இருந்தது. அதேவேளை அவர்களின் உற்பத்தித்திறன் வளர்ந்தது. இது சுரண்டல் வீதத்தை அதிகரித்து உபரிப் பெறுமதியைப் பெருக்க உதவியது. இதன் விளைவு சமூக அசமத்துவமும் பிரச்சனைகளும் வளர்ந்த து மட்டுமன்று காலப்போக்கில் மூலதனத்தின் விரிவாக்கப்பட்ட மீள் உற்பத்திக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. இது உலக ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் நடந்தது என்ன?
‘2009 ஆண்டின் மத்திய கோடைகாலக்காலத்தில் அமெரிக்காவின் (USA) மூலதனச்சாதனங்களின் மூன்றில் ஒருபகுதி பயன்படுத்தப்படாத நிலையிலிருந்த அதேவேளை (அந்த நாட்டின்) தொழிற்படையின் 17 வீத த்தினர் வேலையற்றோ அல்லது நிர்ப்பந்தத்தால் பகுதிநேர வேலையாட்களாகவோ ” ஊக்கங்கெடுக்கப்பட்ட ” வேலையாட்களாவோ இருந்தனர். இதை விட பகுத்தறிவற்ற நிலை எதுவாக இருக்க முடியும்’- David Harvey 2010 ( The Enigma of capital and the crises of capitalism)
ஒரு புறம் பயன்படுத்தப்படாத உற்பத்திச்சாலைகளும் உற்பத்திக் கருவிகளும் மறுபுறம் ஒரு வேலையற்றோர் கூட்டம். முதலாளித்துவத்தின் நீண்ட வரலாற்றில் இந்தக் காட்சி இடம் பெறுவது இதுதான் முதற்தடவையல்ல. இதுதான் கடைசித் தடவையுமல்ல. இந்தக் காட்சி மூலதனத்தின் நெருக்கடியின் தத்ரூபமான வெளிப்பாடு.
2006- 2009 காலத்தில் அமெரிக்காவில் தோன்றிய நெருக்கடி ஒரு தொற்றுநோய் போல் உலகமயமானது. 2006 க்குமுன் சர்வதேச நிதி மூலதனம் – குறிப்பாக கிழக்காசிய மற்றும் எண்ணெய்ச் செல்வந்த நாடுகள் மேற்கத்திய நாடுகளிலிருந்து – அமெரிக்காவிற்குள் இலாபம் தேடி நுழைந்தது. அங்கு துரிதமாக ஊதி வந்த வீட்டு சந்தையிலும் கடன் சந்தையிலும் பலவிதமான முதலீடுகள் பெருகின. ஆனால் பருத்து வந்த இந்தச் சந்தைகளோ விரைவில் வெடிக்கப்போகும் குமிழிகள் என்பதை முதலீட்டாளர்கள் கணக்கிலெடுக்கவில்லை.
இந்த நெருக்கடி பற்றிய வர்க்க ரீதியான ஆய்வுகள் சிலவெளிவந்துள்ளன. குறிப்பாக, Resnick, Wolff, Harvey போன்றோரின் வெளியீடுகளைக் குறிப்பிடலாம் இத்தகைய ஆய்வுகளின் உதவியுடனும் வேறுசில கட்டுரைகளிலிருந்து பெறக்கூடிய அடிப்படைத் தகவல்களையும் வைத்து ஒரு சுருக்கமான விளக்கதைத் தர முற்படுகிறேன்.
1970 கள் வரை அமெரிக்க உழைப்பாளர்களின் மெய் ஊதியம் உற்பத்தித்திறனின் வளர்ச்சிக்கமைய ஓரளவு வளர்ந்து வந்தது.1970 களில் மெய் ஊதியத்தின் வளர்ச்சி ஸ்தம்பிதம் அடைந்தது. முதலாளித்துவ நிறுவனங்களின் முகாமையாளர்கள் தமது வருவாயையும் பங்குதாரர்களின் வருமானத்தையும் அதிகரித்த அதேவேளை தொழிலாளர்களின் அதிகரித்து வரும் ஊதிய உயர்வுக்கோரிக்கைகளை மதிக்கவில்லை. மேற்கு ஐரோப்பிய ஜப்பானிய முதலீட்டாளர்களின் போட்டிக்கு முகம் கொடுக்கும் நோக்கில் புதிய தொழில் நுட்பங்களில் முதலீடு செய்ய முற்பட்டனர். அதேவேளை அப்போதைய அரசாங்கம் விதித்த கொம்பனி வரி, உயர் வருமானம் பெறும் செல்வந்தர் மீதான வரிகள் போன்றவற்றையும் அமெரிக்க முதலாளிவர்க்கத்தினர் எதிர்த்தனர்.
இந்தக் கட்டத்திலேதான் றேகன் ஜனாதிபதியானார். முதலாளிவர்க்கத்தின் விருப்பத்திற்கமைந்த நவதாராளக் கொள்கை அமுலுக்கு வந்தது. மூலதனத்தின் இலாபத்தைக் குறைக்கும் வரிகள் அகற்றப்பட்டன. தொழிலாளர்களின் மெய் ஊதிய வளர்ச்சி மீது மேலும் தடைகள் போடப்பட்டன. தற்காலிக மயமாக்கல் போன்ற வழிகளால் தொழிலாளர்களின் தொழிற்சங்கப்பலம் உடைக்கப்பட்டது. றேகனின் கொள்கைகள் மூலதனக்குவியல் பெருக உதவின. அதேவேளை சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் மோசமாக்கின.
மெய் ஊதியத்தின் வளர்ச்சி நின்றுவிட்டதால் தொழிலாளர்கள் பல பிரச்சனைகளுக்குள்ளானார்கள். அவர்களின் நுகர்வுத் தேவைகள் வளர்ந்தன. பிள்ளைகளின் கல்விச் செலவுகள் மற்றய தேவைகள் அவர்களைப் படிப்படியாக கடனாளிகளாக்கின. அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலையைச் செய்வது போன்ற வழிகளையும் பயன்படுத்தினர். பொருளாதாரப் பிரச்சனைகள் குடும்ப உறவுகளையும் பாதிக்கத் தொடங்கின. வீட்டுக்கடன் வளர்ந்து கொண்டே சென்றது. கடன் பெறுவதற்கு அவர்களிடம் இருந்த ஒரே சொத்து வீடுதான். அதை அடமானம் வைத்தே பலர் கடன் பெற்றனர். அதேவேளை பலர் வீடு வாங்கிய கடனையும் திருப்பிக் கட்ட வேண்டிய நிலையில் இருந்தனர். இதே காலகட்டத்தில் வீடு வாங்குவதற்கான கடனைப் பெறுவதை வங்கிகள் சுலபமாக்கின. கடனைத்திருப்பிக் கட்ட வல்லமை குறைந்தவர்களும் கடன் பெறும் வாய்ப்புக்கள் இருந்தன. இதற்கான காரணத்தை விளக்குமுன் அமெரிக்காவின் வீட்டுக்குடும்பங்களின் மொத்தக் கடன்கள் பற்றிய புள்ளிகளைக் குறிப்பிடுதல் அவசியம். 1975 ல் USA இன் மொத்த வீட்டுக்கடன் 734 பில்லியன் டொலர்களாயிருந்தது. இது 2006 ல் 12.82 trillion (ட்ரில்யன்) களாக ஏறிவிட்டது. 1990 ல் ஒரு அமெரிக்க வீட்டுக்குடும்பத்தின் சராசரிக்கடன் அதன் செலவிடக் கூடிய வருமானத்தின் 77 வீதமாக இருந்தது. இது 2007 ல் 127 வீதமாக உயர்ந்து விட்டது.
மறுபுறம் மூலதன உடைமையாளர்களின் உபரி அதாவது இலாபம் பெருகியது. கிடைத்த இலாபத்தை மீண்டும் முதலீடு செய்து இலாபம் பெறும் வாய்ப்புக்களை அவர்கள் தேடினர். உபரியை மீண்டும் முதலீடு செய்யாவிட்டால் மூலதனம் மேலும் குவிய மாட்டாது. ஆகவே இவர்களின் உபரியின் ஒரு பகுதி வங்கிகளுக்கூடாக கடன் வழங்கவென ஒதுக்கப்பட்டது. இன்னொரு பகுதி குறுகிய காலத்தில் அதிக இலாபம் தரக்கூடிய பங்கு சந்தை மற்றய ஊகத்துறைகளில் முதலீடு செய்யப்பட்டது. பிறிதொரு பகுதி முதலாளிகளின் நிறுவனங்களின் முகாமையாளர்களின் பங்குதாரர்களின் வருமானங்களை அதிகரிக்கப் பயன்பட்டது.
இங்கு கவனத்தில் எடுக்கவேண்டிய ஒன்று கடன் வழங்கும் முறைகளில் ஏற்பட்ட சில மாற்றங்களாகும். முன்னர் கடன் பெற விரும்பும் ஒருவர் நேரடியாக வங்கியுடன் தொடர்பு கொள்வதே வழக்கம். ஆனால் இந்தக் காலகட்டத்தில் வங்கிகளுக்கும் கடன் பெறுவோருக்கும் இடையே தரகு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றின் ஊடாகவே கடன்கள் செலுத்தப்பட்டன. இந்தத் தரகுத்துறை ஒரு பெரிய இலாபத்துறையாக உருவெடுத்தது. வீடு வாங்கும் கடன் வசதிகள் இலகுவாக்கப்பட்டதால் குறைந்த வருமானம் பெறுவோரும் வீட்டுக்கடனைப் பெறமுடிந்தது. அவர்கள் வாங்கும் வீடுகளே அடைமானங்களாயின. இந்த அடைமானங்களை வைத்து அடைமான ஆவணச்சந்தையையும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உருவாக்கின. இவையெல்லாம் நிதி மூலதனத்தின் வளர்ச்சியையும் ஊகத்துறையின் வளர்ச்சியையும் காட்டின.
இந்தப் போக்கின் விளைவாக வீட்டுச்சந்தையும் கடன் சந்தையும் விரைவாக வளர்ந்தன. எல்லா வீடுகளின் சந்தைப் பெறுமதியும் ஏறிக் கொண்டே இருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்த துறைகளில் பங்கு பற்றினர். மெய் ஊதியம் வளராத போதும் வீட்டின் பெறுமதி உயர்ந்து சென்றதால் தொழிலாளர் குடும்பங்களுக்கும் தமது வீடுகளை மீண்டும் அடைமானம் வைத்துக் கடன் பெறும் வாய்ப்புக் கிடைத்து. தரகு நிறுவனங்கள் இவர்களைக் கடன் பெறும் வகையில் ஊக்கினர். கடன் பெறுவது முன்னெப்போதையும் விட சுலபமாகியது. ஆனால் கடனின் வட்டி அதிகரிக்கப்பட்டது. கடன்களின் வட்டி மாற்றப்படலாம் என்ற நிபந்தனை ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்ததால் வட்டி வீதம் உயர்த்தப்படுவதை கடன் பெற்றோரால் எதிர்க்க முடியவில்லை.
ஆனால் நிதி மூலத்தனத்தின் இந்தக் களியாட்டம் நீண்ட காலம் தொடரவில்லை. கடன் பட்ட பலரால் கடனைத் திருப்பிக் கட்ட முடியவில்லை. கடனைப் பெறுவது சுலபமாக இருந்தது. ஆனால் ஏறிச் செல்லும் செலவுகள் வருமானத்தை விட மிஞ்சியதால் கடனைத் திருப்பிக் கட்ட முடியவில்லை. இந்த நிலையில் இவர்கள் வீடுகளை இழந்தனர். இப்படி சுவீகரிக்கப்பட்ட வீடுகள் மீண்டும் வீட்டுச் சந்தைக்கு வந்தன. சந்தையில் வீடுகளின் நிரம்பல் அதிகரித்தது ஆனால் கேள்வி வளரவில்லை. வீடுகளின் சந்தைப் பெறுமதி துரிதமாக சரியத் தொடங்கியது. ஒருபுறம் வீடுகளை இழந்த குடும்பங்களின் தொகை அதிகரித்தது. 2009 ல் 30 இலட்சத்திற்கு மேலான வீடுகள் சுவீகரிக்கப்பட்டன. மறுபுறம் வீட்டுச்சந்தையிலும் கடன் சந்தையிலும் செய்த முதலீடுகள் நட்டத்திற்குள்ளாகும் போக்கும் அதிகரித்தது. இது உலக பங்குச் சந்தையையும் பாதித்தது. ஒரு தொடர் சங்கிலியாக நிதி மூலதனத்தின் நெருக்கடிகள் வளர்ந்தன. நுகர்வோரின் கேள்வி வளராமல் நிரம்பல் கூடுவது கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்தில் இடம்பெறுவது சாத்தியமே. வீட்டுச்சந்தை மாத்திரமல்ல வீடுகளை இழந்தோர் மற்றும் வருமானம் குறைந்தோரின் வாங்கும் சக்தியின் வீழ்ச்சியின் விளைவால் மற்றய சந்தைகளும் பாதிப்படைந்தன. இதன் தொடர்ச்சி பெரும் உற்பத்தித்துறைகளையும்- உதாரணமாக மோட்டார் வாகன உற்பத்தி – பாதித்தது. பெருந்தொகையானோர் வேலையிழந்தனர்.
தரகு நிறுவனங்கள் குறுகிய கால இலாபத்திற்காகப் போதிய வருமானம் இல்லாதோருக்கும் கடன் வழங்கும் வசதியைக் கொடுத்தது தவறெனும் விமர்சனங்கள் எழுந்தன. வங்கிகளும் காப்புறுதி நிறுவனங்களும் நொடிந்து வீழ்ந்தன. அடைமான ஆவணங்களில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்களில் வங்கிகளும் பலவித மான நிதியங்களும் அடங்கும். இந்த விளையாட்டில் பங்கு பற்றிய எல்லோரும் சொத்துக்களின் விலைகள் தொடர்ந்து ஏறிக் கொண்டேயிருக்கும் என ஏன் நம்பினர்கள்? அதனால் அவர்கள் எல்லோருமே அவ்வளவு விபரம் தெரியாதவர்களா என எண்ணத்தோன்றும். ஆனால் அதுதான் இந்த விளையாட்டின் தன்மை. நடைபெற்றதோ ஊக ரீதியான எதிர்பார்ப்பின் எதிர்மறையாக இருந்தது. Trillion கணக்கில் நிதி மூலதனம் கணப் பொழுதில் மாயமானது. நெருக்கடி மோசமான பின்னர்தான் விளக்கங்களைத் தேடுகின்றனர்.
சர்வதேச மட்டத்தில் நிதிமூலதனத்தின் பெரும் ஆதிக்கத்திற்குள்ளான பொருளாதாரங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. உதாரணமாக ஐஸ்லாந்தின் வங்கிகள் தமது பணத்தை ஊகத்துறையில் முதலீடு செய்ததின் விளைவாக முழுக்க முழுக்க வங்குரோத்து நிலை அடைந்தன. ஐஸ்லாந்தின் பொருளாதாரம் சுலபமாக உச்சத்துக்குச் சென்ற வேகத்தையும் விடத் துரிதமாக வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வீழ்ச்சியடைந்த பல நிறுவனங்கள் நவதாராளவாதத்தின் விதிகளுக்கு மாறாக தேசிய மயமாக்கப்பட்டன. மேலும் அதே விதிகளுக்கு மாறாக தோல்வியடைந்த வங்கிகளுக்கு பில்லியன் கணக்கில் டொலர்களாக வழங்கி அரசு மீள் உயிர்கொடுத்தது. ஆனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் அத்தகைய பாதுகாப்பைப் பெறவில்லை. அரசு விதிகளை மாற்றி முதலாளித்துவ அமைப்பைப் பேணிக் காத்தது. அமைப்பு ரீதியான நெருக்கடி வரும் போது அமைப்பினை பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை என்பதை இது மீண்டும் படிப்பினையாகத் தந்துள்ளது.
நெருக்கடிகளுக்கு ஊடாக வாழும் முதலாளித்துவம்
நெருக்கடிகள் முதலாளித்துவத்தின் மரணத்தின் அறிவிப்புகள் அல்ல என்பதே இதுவரையிலான வரலாற்று அனுபவம். 1990 களில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடிகளிலிருந்து முதலாளித்துவத்தின் முகாமையாளர்கள் எவரும் எதையும் படிக்கவில்லை எனக்கருதுவோர் உண்டு. அது மட்டுமல்ல ஆசிய நிதி நெருக்கடியையோ இந்தக் கட்டுரையின் பொருளான சமீபத்திய நெருக்கடியையோ உலகப் புகழ்பெற்ற பிரதான நீரோட்ட பொருளிலாளர்களால் முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியவில்லை என்பதும் பலராலும் விமர்சிக்கப்படும் விடயமாகும். இந்த விமர்சனம் நியாயமானதே. ஆனால் முதலாளித்துவத்தின் நெருக்கடிகளின் கையாள்கை அரசியல் ரீதியானது. தேசிய, சர்வதேச அதிகார உறவுகளைப் பற்றியது. அடிப்படையில் வர்க்க நலன் சார்ந்தது என்பது ஒரு முக்கிய வரலாற்றுப்பாடமாகும். ஒடிந்து விழும் அமெரிக்க ஐரோப்பிய மூலதன நிறுவனங்களைப் தூக்கிவிட அந்தந்த அரசுகள் மட்டுமல்ல நெருக்கடிக்களுக்காளான முதலாளித்துவ அரசுகளுக்கு உதவ இன்றைய எழுந்து வரும் வல்லரசான சீனாவும் முன்வந்தது. கடந்த நிதி நெருக்கடிகளால் பெரிதும் சீனா பாதிக்கப்படவில்லை. இதற்கு காரணம் சீனா பின் பற்றிய பொருளாதாரக் கொள்கை. அதேவேளை அமெரிக்காவில் இடம்பெற்றுப் பரந்த நெருக்கடிகளில் இருந்து சீனா முற்றாக தப்பிக் கொள்ளவும் முடியாது. வட அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் சீனாவின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் முக்கிய சந்தைகளாகும். அத்துடன் அமெரிக்க அரசிற்கு சீனா பெருந்தொகையான கடனை வழங்கியுள்ளது. பெருங்கடனைக் கொடுத்தவர் அதைப் பெற்றவரை விட மனக்கலக்கமுறுவது இயல்பானதே. ஆகவே அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமல்ல ஐரோப்பிய பொருளாதாரங்களையும் முதலாளித்துவ நெருக்கடிகளிலிருந்து காப்பாற்ற சீனா முன்னிற்பது சீனாவின் தேசிய நலன்கள் உலக முதலாளித்துவத்தின் ஆரோக்கியத்துடன் இணைந்திருப்பதையே காட்டுகிறது.
முதலாளித்துவ சந்தை என்பது தனியே ஒரு பொருளாதாரப் புலம் மட்டுமல்ல அது ஒரு அரசியல் புலமும்தான். அங்கு வெறுமனே தெரிவுச் சுதந்திரம் மட்டுமல்ல வற்புறுத்தல் மிகு மேலாதிக்கம் மேலாட்சியுடன் கூடவே நிலவுகின்றது. மேற்கத்தய அனுபவத்தைப் பார்க்கும் போது முதலாளித்துவம் அனுமதிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தை அதன் குறுகிய எல்லைகளுக்கு அப்பால் செல்ல விடுவது என்பது அந்த அமைப்பிற்கே மாபெரும் சவாலாகும். இந்த மாற்றப்போக்கு தானாக வரப்போவதில்லை.இதற்கு மூலதனத்தின் அதிகார உறவுகள் போட்டுள்ள தடையை உணர்வு பூர்வமான அரசியல் கூட்டு செயற்பாடுகளுக் கூடாகவே அகற்ற முடியும். அத்தகைய போராட்டமே மாற்று சமூதாயத்திற்கான ஆரம்பம். இந்த வழியிலேயே எதிர்காலம் பற்றிய, சோசலிசம் பற்றிய மீள்கற்பிதம் இடம் பெற வேண்டும்.
ந. சண்முகரத்தினம்
[1] இந்தக்கட்டுரை சமகாலம் 2012 July 06-19 இதழில் பிரசுரிக்கப்பட்டது