தேசியக் கொடியும் தேசிய இனப்பிரச்சனையும் – குறியீடுகளும் யதார்த்தங்களும்

 

 

சமுத்திரன்

‘தேசியக்கொடிச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுடன் என்னால் ஒத்துப்போக முடியாது என்பதையிட்டு நான் வருத்தமடைகிறேன். எனது பார்வையில், ஒரு தேசியக்கொடி சகல குழுமங்களுக்கும் ஒரு கௌரவமான இடத்தைக் கொடுப்பதற்கும் அப்பால் தேசிய ஐக்கியத்தின் சின்னமாகவும் இருக்கவேண்டும். ….

… எனது பார்வையில், இந்த வடிவமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது ஒரு  தேசிய ஒற்றுமையின் சின்னமாக இருப்பதைவிட்டு நமது தேசிய ஒற்றுமையின்மையின் சின்னமாகவே இருக்கும்.’

– செனட்டர் S. நடேசன், தேசியக்கொடி செயற்குழுவின் அங்கத்தவர் (1948-1950)

இலங்கை அரசியலில் தேசியக்கொடி, தேசிய கீதம் பற்றிய விவாதங்கள் அடிக்கடி எழுகின்றன. பல தசாப்தங்களாகத் தொடரும் இந்த நிலைமை 1950ல் நடேசன் அவர்கள் முன்கணிப்புக் கூறியதுபோல் நாட்டில் நிலவும் தேசிய ஒருமைப்பாடின்மையையே காட்டுகிறது. தேசியக்கொடியை ஏற்க மறுப்பவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் சிங்களத் தேசியவாதிகளும் கூச்சலிடும் காலமிது. தேசியக்கொடியின் வடிமைப்பின் வரலாறுபற்றிச் சில தகவல்களை நினைவுகூருவது பயன்தரும்.[1] 1948 இரண்டாம் மாதம் இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது 1815ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவத்தால் கைப்பற்றப்பட்ட கண்டி இராஜ்யத்தின் கொடியாய் விளங்கிய சிங்கக்கொடியே முழு இலங்கையின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தப்பட்டது. 1948 மூன்றாம் மாதம் பின்வரும் அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு ‘தேசியக்கொடி செயற்குழு’ நியமிக்கப்பட்டது: S.W.R.D பண்டாரநாயக்க (தலைவர்), சேர் ஜோன் கொத்தலாவல, J.R. ஜயவர்த்தன, T.B. ஜயா, L.A. ராஜபக்ச, G.G. பொன்னம்பலம், S. நடேசன்.

ஒரு இலங்கைத் தேசியக்கொடியை வடிவமைப்பதில் இந்தச் செயற்குழுவிற்குள் முரண்பாடுகள் தோன்றின. நடேசனின் கருத்தில் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக செயற்குழு ஒருமித்த கருத்தை அடையக்கூடிய சாத்தியப்பாடுகள் அற்பமாகவே இருந்தபோதும் இறுதிநேரத்தில் G.G. பொன்னம்பலத்தின் சமரச ஆலோசனையைப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது D.S.சேனாநாயக்க அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பொன்னம்பலம் சிங்கக்கொடியின் ஒரு புறத்தில் தமிழர் மற்றும் முஸ்லிம்களைக் குறிக்கும் சின்னங்களாக முறையே ஒரு மஞ்சள் மற்றும் பச்சைக் கோட்டினை உள்ளடக்கும்படி ஆலோசனை வழங்கினார். இதை நடேசனைத் தவிர மற்றைய அங்கத்தவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். தனது முடிவுக்கான காரணங்களை விளக்கித் தனியான அறிக்கை ஒன்றினை நடேசன் கையளித்தார். அதில் அவர் வலியுறுத்திய முக்கிய கருத்து செயற்குழுவினால் வடிவமைக்கப்பட்ட கொடி நாட்டின் சகல இனங்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்காது பிரிவினையையே வெளிக்காட்டுகிறது என்பதாகும். தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் சின்னங்களாக வரையப்பட்ட இரு கோடுகளும் சிங்கக்கொடியைச் சுற்றியுள்ள தங்கநிற எல்லைக் கோட்டிற்கு வெளியே இருப்பது பிரிவினையையே குறிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த இரு கோடுகளும் தேசியக்கொடியின் பிற்சேர்க்கைகள் போலவே தெரிகின்றன எனவும் கூறினார்.  பிரிவினையைக் குறிப்பதுபோல் அமைந்துள்ள அந்த எல்லைக் கோட்டை நீக்குவதன்மூலம் மூன்று மக்களையும் தொடர்புபடுத்தும் குறியீடாகக் கொடியை மாற்றலாம் எனவும் ஆலோசனை வழங்கினார். ஆனால் அந்த நியாயமான ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  ஆரம்பத்தில் நடேசன் மஞ்சள், சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள், சிவப்பு, பச்சை மூவர்ணங்களைக் கொண்ட ஒரு கொடியை வடிவமைக்கும் ஆலோசனையை முன்வைத்தார். ஆனால் அது சிங்கச் சின்னத்தின் முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பைப் பாதிக்குமென பல அங்கத்தவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். அந்த ஆலோசனையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தேசியக்கொடி நாட்டின் சகல சமூகங்களையும் ஒருங்கிணைக்கும் பரந்த சிந்தனையின் சின்னமாக விளங்கவேண்டும் என்பதே நடேசனின் வாதம். ஆனால் சிங்கள-பௌத்தமெனும் ஒரு இன-மத இணைப்பிற்கே இலங்கைத் தேசியக் கொடியில் மேலாதிக்க அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கொடியில் மையமுக்கியத்துவம் பெறும் வாளேந்திய சிங்கம் சிங்கள சமூகத்தின் வீரத்தையும், நான்கு மூலைகளிலும் காணப்படும் அரச இலைகள் பௌத்தத்தின் நான்கு விழுமியங்களான அன்புடைமை (மைத்ரீ அல்லது மெத்த), கருணை (கருணா), பரிவிரக்கமுடைய ஆனந்தம் (முடித்த), சாந்தம் (உபேக்கா) ஆகியவற்றையும் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏழு தசாப்தங்களுக்கு முன்னிருந்ததையும் விட இன்றைய இலங்கையில் இன, மத ரீதியான பிரிவினைகள் மிகவும் ஆழப்பதிந்துவிட்டன. இந்தக் காலவெளியில் இலங்கையெனும் நாடு ‘பெரும்பான்மை-சிறுபான்மை’ எனப் பிரிந்துவிட்ட இனத்துவ அடையாள அரசியல் போக்குகளின் அசமத்துவம் மிக்க போட்டிக்களமாக உருமாற்றப்பட்டுவிட்டது.  ஆகவே இன்று தேசியக் கொடி தொடர்பான விவாதங்கள் இடம்பெறும் அரசியல் புலத்தின் யதார்த்தங்கள் 1948-1950 காலகட்டத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். 1948ல் பிரிட்டிஷ் காலனித்துவம் தனது ஏகாதிபத்தியத் தேவைக்கென உருவாக்கிய ஒரு அரசை விட்டுச்சென்றது. அந்த அரசை இலங்கை அரசென அழைக்கலாம். ஒரு இலங்கை அரசு இருந்தது ஆனால் ஒரு இலங்கைத் தேசியம் (a Lankan nation) இருந்ததா? இல்லை. அதைக் கற்பிதம் செய்து கண்டுபிடிக்கும் வரலாற்றுச் சவாலிருந்தது. இலங்கை பல்லின, பல்மத சமூகஅடையாளங்களை உள்ளடக்கிய ஒரு சமூக உருவாக்கமெனும் அடிப்படையில் சகல இலங்கையரையும் உள்வாங்கவல்ல ஒரு பரந்த  பொது அடையாளத்தைக் கட்டியெழுப்பும் வரலாற்றுத் தேவையிருந்தது. அந்தத் திட்டத்திற்கேற்ற ஒரு பல்லின, பல்தேசிய அரசை நிர்மாணிக்கும் தேவையிருந்தது. ஆனால் நடந்தது அதுவல்ல. காலனித்துவம் கையளித்த அரசு பல யாப்புரீதியான மாற்றங்களுக்கூடாக ஒரு சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்க அரசாக மீளமைக்கப்பட்டது. நடந்த வரலாறு பற்றி வேறு கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளேன். அவற்றை இதே இணையத்தளத்தில் (samuthran.net) பார்க்கலாம்.[2]

1948-1950ல் தேசியக்கொடி தொடர்பான செயற்குழுவின் கருத்தாடல் தேசிய இனப்பிரச்சனையைப் பெரும்பாலும் சின்னங்களின் மட்டத்திலேயே அணுகியது. அப்போது ஏற்கனவே மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுவிட்டது. அது தேசிய இனப்பிரச்சனையின் முரண்பாடுகளின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொணர்ந்தது. அது காலனித்துவத்திற்குப் பின்னான இலங்கையில் எழப்போகும் இனத்துவ தேசியவாத அரசியலின் ஆரம்பத்தை அறிவித்தது.  இன்று தேசிய இனப்பிரச்சனை மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ள நிலையில் தேசியக்கொடி பற்றிய சர்ச்சைகள் நம்மைச் சின்னங்களுக்கு அப்பால் நாட்டின் யதார்த்தங்களுக்கூடாகப் பிரச்சனையின் தீர்வுக்கு இழுத்துச் செல்கிறது. சின்னங்களுக்கு எதிரான செயற்பாடுகள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு வேண்டுமெனும் அடிப்படைக் கோரிக்கையின் எதிரொலிகளே. இந்தச் செயற்பாடுகள் தேசிய இனப்பிரச்சனையில் ஏற்பட்டுள்ள தன்மைரீதியான மாற்றங்களை நன்கறிந்து ஜனநாயகரீதியான அரசியல்தீர்வுக்கும் மனித மேம்பாட்டிற்கும்  உதவும் வகையிலான நடைமுறை சார்ந்ததாக இருந்தால் மட்டுமே கூடிய பயன்விளையும்.

2015 ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வகித்த பங்கு உலகறிந்ததே. அந்தத் தேர்தலின் வெற்றியின் பல்லினத்தன்மையை ஒரு ‘வானவில் புரட்சி’ என்றும் இலங்கை ஒரு ‘வானவில் தேசியமாக’ மாறும் என்றும் வெற்றிக் களிப்பிலிருந்த சில அரசியல்வாதிகளும் நல்ல நோக்கினால் உந்தப்பட்ட சில எழுத்தாளர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். ‘வானவில் தேசியம்’ (´rainbow nation´) எனும் உவமை 1994ல் தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சிதோற்கடிக்கப்பட்டு நெல்சன் மண்டேலா ஜனாதிபதியானபின் பேராயர் டெஸ்மொண்ட் டுட்டு (Archbishop Desmond Tutu)வினால் பிரபல்யப்படுத்தப்பட்டது. இந்தச் சுலோகத்திற்கேற்ப தென் ஆபிரிக்காவின் தேசியக்கொடி, தேசிய கீதம் மற்றும் யாப்பு உருவாக்கப்பட்டன. அதேகாலத்தில் ஒரு ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வும் நியமிக்கப்பட்டது. ஆறு நிறங்களைக் கொண்ட தேசியக் கொடி நாட்டின் சகல இனங்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவின் தேசிய கீதம் ஐந்து மொழிகளில் ஒரே பாடலாக இசைக்கப்படுகிறது. அந்த நாட்டின் ஜனநாயக யாப்பு 1996ம் ஆண்டு டிசெம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப்பின் இதுவரை பதினேழு தடவைகள் திருத்தங்களுக்குள்ளானது. நாட்டின் பல்வேறு இனங்களை ஒருங்கிணைத்து ஒரு ‘வானவில் தேசியத்தை’ உருவாக்கும் பயணத்தில் தென் ஆபிரிக்கா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளபோதும் அதன் குறைபாடுகள் பற்றிய விமர்சனங்களும் நிறைய உண்டு. உதாரணமாக அந்த நாட்டின் பிரபல கவிஞரும் அரசியல் சிந்தனையாளரும், கொம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் (African National Congress) அங்கத்தவருமான ஜெரெமி குறொனின் (Jeremy Cronin) அவர்களின் கருத்தில் தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் தலைமையிலான தேசிய நிர்மாணிப்பு உண்மையான நல்லிணக்கத்திற்கு உதவுவதற்குப் பதிலாக இனிப்புமுலாம் பூசப்பட்ட மேலிருந்து கீழாக வழிநடத்தப்படும் போக்காக மாறிவிட்டது. அத்துடன் தென் ஆபிரிக்காவின் நவதாராளப் பொருளாதாரக் கொள்கை ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிப்பதால் நல்லிணக்கமும் தேசியத்தின் நிர்மாணமும் பாதிக்கப்படுகின்றன எனும் விமர்சனத்தையும் அவர் போன்றோர் முன்வைத்துள்ளனர்.

தென் ஆபிரிக்காவுடன் இலங்கையை ஒப்பிடுவதில் பிரச்சனைகள் உண்டு. ஆயினும் அந்த நாட்டின் பன்முகரீதியான முன்னெடுப்புகளுடன் ஒப்பிடும் போது இலங்கை இன்னும் முதலாவது அடியைக் கூடத் திடமாக எடுக்க முடியாது தத்தளிக்கும் நிலையிலேயே உள்ளது. ‘வானவில் தேசியம்’ ஒரு அழகான உவமைபோல் படலாம் ஆனால் அதை ஒரு மாயத்தோற்றமாகச் சிருஷ்டிப்பதில் அர்த்தமில்லை. இயற்கையில் வானவில் ஒரு கணநேரக் காட்சியே! புதிய யாப்புத் தொடர்பான செயற்பாடுகளைத் துணிவுடன் முன்னெடுக்கும் ஆற்றல்குன்றிய நிலையிலிருக்கிறது அரசாங்கம். கூட்டு எதிர்க் கட்சி மற்றும் பொதுதுபலசேனா (BBS) போன்ற அமைப்புக்கள் தமது தீவிர சிங்கள-பௌத்த இனவாதப் பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளன. இதற்கு நேர்மையாக முகம் கொடுக்கப் பயப்படும் ஜனாதிபதியும் பிரதமரும் பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதிலேயே அக்கறையாயிருக்கின்றனர். மறுபக்கம் வடக்கு-கிழக்கிலே தீவிர தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைமைக்குத் துரோகப்பட்டம் சுமத்தும் அரசியலில் இறங்கியுள்ளனர். இந்தச் சூழலில் புதிய யாப்பு ஒன்று வருமா என்ற கேள்வி எழுகிறது. அப்படித்தான் வந்தாலும் அது தேசிய இனப்பிரச்சனைக்கு ஜனநாயகரீதியான தீர்வினை உள்ளடக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. பௌத்த மதத்திற்கு விசேட அந்தஸ்து என்பதில் மாற்றமில்லை என்பது தெளிவாகியுள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசை ஒரு மதச்சார்பற்ற அரசாகச் சீர்திருத்துவது சாத்தியமில்லை என்பதும் தெளிவு. தேசியக்கொடியில் மாற்றங்களும் சாத்தியமில்லை. நடேசன் முனெச்சரிக்கை செய்ததுபோல் இன்று அது தேசிய ஒற்றுமையின்மையின் சின்னம்போல் ஆகிவிட்டது. மாகாண மட்டத்திலான அதிகாரப் பகிர்வு பற்றிய முடிவுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது இப்போது ஒரு பிரதான கேள்வியாகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தலையொட்டி வழமையான இனத்துவ அரசியல் காரணங்களுக்காக அரசாங்கத்தின் யாப்புத் தொடர்பான முயற்சிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. யாப்புப் பற்றிய சர்ச்சைகள் நாட்டின் இனரீதியான துருவமயமாக்கலை மேலும் பலப்படுத்தியிருப்பதாகவே படுகிறது. இந்தப் பாதகமான போக்கிற்கு எதிரான சக்திகள் அதையும்விடப் பலமடையும்போதே தேசிய இனப்பிரச்சனைக்கு முழுமையான ஜனநாயகரீதியான தீர்வுக்கான அரசியல் சூழல் உருவாகும். அந்தச் சூழல் தன்னியல்பாகப் பிறக்கப்போவதில்லை. அதை உருவாக்க ஒத்துழைத்துப் போராடுவதே சகல இனங்களையும் சேர்ந்த ஜனநாயக சக்திகளினதும் கடமை. இன்று இப்படியான ஒரு ஆலோசனை நடைமுறைக்கு ஒவ்வாததெனப் பலர் கருதலாம். ஆனால் இன்றைய வரலாற்றுத் தேவை ஒரு மாற்று அரசியலாகும். அதை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய கருத்துப்பரிமாறல்களும் விவாதங்களும் தேவை.

 

[1] இது தொடர்பாக February 2, 2003, Sunday Timesல், C. V. Vivekanandan, How National is the National Flag? எனும் தலைப்பில் ஒரு பயனுள்ள கட்டுரையை எழுதியிருந்தார். நடேசனின் அறிக்கை மற்றும் அவர் செனட்சபையில் ஆற்றிய உரைகள் ஆகிவற்றை இணையத்தில் S. Nadesan எனும்பெயரில் தேடினால் காணலாம்.

[2] Samuthran.net ல் விசேடமாகப் பின்வரும் கட்டுரைகளைப் பார்க்கவும்: i. சிங்களப் பெருந்தேசிய வாதம் – அதன் அடிப்படைகளூம் மேலாதிக்கமும் ii. வடக்குக் கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்

 

கடன் ஏகாதிபத்தியம் – கடன் வாங்கி ஆக்கிரமிப்பு யுத்தங்கள் புரியும் அமெரிக்க வல்லரசு

 

 

சமுத்திரன்

May2017

தனது அணியைச் சேர்ந்த நாடுகளின் செலவில் தனது மேலாதிக்க நலன்களுக்காகச்  சில குறிப்பிட்ட நாடுகள் மீது ஆக்கிரமிப்பு யுத்தங்களைத் தொடுக்கும் ஒரு உபாயத்தைத் திறனுடன் கையாண்டு வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்தத் திட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்காளிகளாயிருக்கும் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுடன், ஜப்பான், தென் கொரியா, தைவான், அவுஸ்திரேலியா மற்றும் குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகளும் அடங்கும். அமெரிக்காவிற்கும் இந்த நாடுகளுக்குமிடையிலான உறவுகளின் ஒரு பரிமாணம் அந்த நாட்டின் அரசாங்கம் இவற்றிடமிருந்து தொடர்ச்சியாகப் பெறும் கடன்களாகும். அமெரிக்க அரசின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடனுக்கும் அதன் இராணுவ மற்றும் போர்ச் செலவுகளுக்கும் நெருங்கிய உறவு இருப்பதை நீண்டகாலப் புள்ளிவிபர ஆதாரங்களுடன் ஆய்வுகள் காட்டியுள்ளன. அமெரிக்கா உலகரீதியில் பாரிய போர் இயந்திரத்தைக் கொண்டுள்ளது. எழுபது நாடுகளில் 800 மேற்பட்ட இராணுவத் தளங்களை வைத்திருக்கிறது. இவற்றின் பராமரிப்பும் அபிவிருத்தியும், ஆக்கிரமிப்பு யுத்தங்களும் பெருஞ் செலவுகளுக்கான காரணங்கள். நீண்ட காலமாக அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை (trade deficit) ஒரு பிரச்சனை. வெளிநாட்டுக் கடனை அமெரிக்க அரசாங்கம் தனது திறைசேரிப் பிணைமுறிப் பத்திரங்களை (US Treasury Bonds ஐ) அமெரிக்க டொலர்களைப் பெருமளவில் வைத்திருக்கும் நாடுகளுக்கு விற்பதன் மூலம் பெறுகிறது. தனது நாட்டுச் செலாவணியிலேயே சுலபமாகக் கடன் பெறுவதும் அதைத் திருப்பிக் கொடுப்பது பற்றி அலட்டிக் கொள்ளாதிருப்பதும் அமெரிக்காவின் வரப்பிரசாதம் போலும். அமெரிக்க டொலரின் உலக நாணய அந்தஸ்து அமெரிக்காவிற்கு மற்ற நாடுகளின் மத்திய வங்கிகள்மீது செல்வாக்குச் செலுத்தும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. சமீப காலங்களில், உலக அரங்கில் அமெரிக்க வல்லரசுடன் போட்டி போடும் எழுந்துவரும் வல்லரசான சீனாவும் பெருமளவில் அமெரிக்க பிணைமுறிப் பத்திரங்களை வாங்கிவருகிறது. ஆனால் சீன-அமெரிக்க உறவு வேறுவகையானது. இது பற்றிப் பின்னர்.

பொருளாதார பலம் மிக்க கடன் கொடுக்கும் நாடாக இருந்து பின்னர் கடன் வாங்கும் நாடாக மாறியபோதும் பெற்ற கடனைத் திருப்பிக் கொடுப்பதில் அக்கறையின்றித் தொடர்ந்தும் கடன் வாங்கித் தனது ஏகாதிபத்திய அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அமெரிக்க அரசின் போக்கினைக் ‘கடன் ஏகாதிபத்தியம்’ (debt imperialism) என அழைக்கிறார் அந்த நாட்டின் பொருளியலாளர் மைக்கேல் ஹட்சன் (Michael Hudson). அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ‘மாஏகாதிபத்தியம்’ (super imperialism) எனப் பெயர் சூட்டியுள்ளார்.[i] இரண்டாம் உலகப் போருக்குப்பின் இந்தோசீனத்தில், மத்திய கிழக்கில் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் நடத்திய அல்லது நடத்தும் யுத்தங்கள் எல்லாமே அமெரிக்க அரசைக் கடனாளி அரசாக்கியுள்ளன. ஆயினும் நாட்டின் உயர் செல்வந்த அந்தஸ்து, உலகரீதியான இராணுவ அதிகாரம், பல நாடுகளுடன் செய்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள், பல்பக்க நிறுவனங்கள் (உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக ஸ்தாபனம், ஐ. நா. சபை) மீதான ஆதிக்கம், மற்றும் அமெரிக்க டொலரே மிகச் செல்வாக்குமிக்க உலக நாணயம் எனும் அந்தஸ்து ஆகியவற்றால் தனது வல்லரசு ஸ்தானத்தைத் தொடர்ந்தும் பல பிரயத்தனங்களுக் கூடாகத் தக்கவைத்துக் கொள்கிறது அமெரிக்கா.

அமெரிக்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படுதோல்வியைத் தழுவிக்கொண்ட வியட்நாம் யுத்தம் பற்றிப் பலருக்கு – குறிப்பாக எனது சந்ததியினருக்கு – நினைவிருக்கலாம். 1955 பிற்பகுதியிலிருந்து 1975 நாலாம் மாதத்தின் இறுதிவரை தொடர்ந்த இந்தப் போர் வியட்நாமை மட்டுமன்றி அதன் அண்டை நாடுகளான லாஓஸ் மற்றும் கம்போடியாவையும் உள்ளடக்கியது. இந்த நீண்ட இந்தோசீனப் போரின் செலவினால் அமெரிக்க மாவல்லரசு கடனாளியாகியது. அமெரிக்க பொருளாதாரத்தின் சென்மதி நிலுவையில் (balance of paymentல்) பெரிய விழுக்காடு தொடர்ச்சியான ஒரு பிரச்சனையாயிற்று.[ii] அந்த நாட்டின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்கும் நோக்கில் 1971 எட்டாம் மாதம் 15ம் திகதி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் உலகை அதிர்ச்சியிலாழ்த்தும் ஒரு முடிவினை அறிவித்தார். வெளிநாடுகளில் வைப்பிலிருக்கும் அமெரிக்க டொலர்களைத் இனிமேல் தங்கமாகப் பரிமாற்றம் செய்யமுடியாது என்பதுதான் அந்த அறிவிப்பு. அந்த எதிர்பாராத முடிவு 1930 களிலிருந்து சர்வதேச அங்கீகாரத்துடன் நடைமுறையிலிருந்து வந்த அமெரிக்க டொலருக்கும் தங்கத் தராதரத்திற்கும் (Gold Standard) இருந்த இணைப்பைத் துண்டித்தது. இதற்குப் பின்னர் வெளிநாட்டு மத்திய வங்கிகள் தமது டொலர்களை அமெரிக்க திறைசேரிக் கடன் பத்திரங்களுடனேயே பரிமாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டது. சென்மதி நிலுவை விழுக்காடுக்கூடாக இழந்த டொலர்களை அமெரிக்கா மீட்க இது உதவுகிறது. மறுபுறம் ஏற்றுமதியின் வளர்ச்சியால் கிடைக்கும் வர்த்தக உபரியை மற்றைய நாடுகள் (அவற்றின் மத்திய வங்கிகள்) அமெரிக்கத் திறைசேரிப் பிணைமுறிப் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இது அமெரிக்க அரசுக்கும் மற்றய அரசுகளுக்குமிடையிலான நிதிரீதியான பரிவர்த்தனையாகும். மைக்கேல் ஹட்சனின் கருத்தில் இந்த உறவு அமெரிக்க அரசாங்கம் மற்ற அரசாங்கங்களைச் சுரண்டும் உறவாகும். அவர் இந்த ஏகாதிபத்தியத்தை தனியார் கூட்டுத்தாபனங்களுக்கூடான ஏகாதிபத்திய பொருளாதார உறவிலிருந்து வேறுபடுத்துகிறார். இன்றைய ஏகாதிபத்தியம் பற்றி வேறு விளக்கங்களுமுள்ளன.[iii]

அமெரிக்காவிற்குப் பெருமளவில் கடன் வழங்கிய நாடுகளில் ஜப்பானும் தென் கொரியாவும் அடங்கும். இரண்டாம் உலகப் போருக்குப்பின், பனிப்போர் (அல்லது நிழற்போர்) காலகட்டத்தில், இவ்விரு நாட்டு ஆட்சியாளர்களும் அமெரிக்காவின் அரசியல்-இராணுவரீதியான ஆதிக்கத்தை ஏற்று அந்த மாவல்லரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. ஜப்பான் போரில் தோல்வியடைந்து அமெரிக்காவிடம் சரணடைந்து அந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தனது கொலொனிகளாயிருந்த கொரியா, மற்றும் தைவான், மஞ்சு போன்ற சீனாவின் பகுதிகளை இழந்தது. அத்துடன் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் வரலாறு முடிவுக்கு வந்தது.  உலகப் போரின் முடிவுக்குப்பின் இடம்பெற்ற கொரியப் போர் அந்த நாட்டின் பிரிவினையில் முடிந்தது. வட கொரியா ´சோஷலிச´ முகாமிலும் தென் கொரியா அமெரிக்க முகாமிலும் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக ஜப்பானிலும் கொரியாவிலும் பல பெரிய அமெரிக்க இராணுவத் தளங்கள் இன்றும் உள்ளன. அமெரிக்காவைத் தமது காவலனாக ஏற்று துரித முதலாளித்துவப் பொருளாதார விருத்திக்கூடாக செல்வந்த நாடுகளாகிவிட்ட இவ்விரு நாடுகளும் அந்தநாட்டுக்கு தாம் கொடுத்த கடனைத் தமது இராணுவரீதியான பாதுகாப்பினை மேலும் உறுதி செய்யும் ஒரு உபாயமாகக் கருதக்கூடும். இது உண்மையில் கடனா அல்லது அமெரிக்க வல்லரசு பெற்றுக் கொள்ளும் பாதுகாப்புப் பணமா? மறுபுறம் பொதுமக்களின் எதிர்ப்புக்கும் மத்தியில் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தொடர்ந்தும் இருக்க அனுமதிப்பது இந்த அரசாங்கங்களுக்கு அமெரிக்காவுடன் பேரம்பேசும் பலத்தைக் கொடுக்கிறது. அத்துடன் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் இவை விரும்பமாட்டா. ஏனெனில் அவற்றின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் ஒரு முக்கிய சந்தை அமெரிக்காவாகும். இந்த ஏற்றுமதிகளுக்கூடாக இவற்றின் உபரி டொலர்களும் வளர்ந்துள்ளன. இங்கு ஜப்பான், தென்கொரியா பற்றிக்கூறியது தாய்வானுக்கும் பொருந்தும். சீனப்புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து சியாங்கை ஷேக்கும் அவரது கோமின்டாங்க் கட்சியினரும் தைவான் தீவுக்குத் தப்பியோடி அங்கே அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி அமைத்தனர். ஆகவே ஜப்பான், தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய மூன்றும் அமெரிக்காவின் கொம்யூனிச எதிர்ப்புக் கூட்டின் கிழக்காசிய அரண்களாயின. நிழற்போர் (பனிப்போர்) முடிந்த பின்னரும் இந்த நாடுகள் பாதுகாப்பெனும் பெயரில் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளன. ஒரு வல்லரசாகச் சீனா துரிதமாக எழுச்சிபெறுவது இந்த தங்கிநிற்பினை மேலும் வலுவூட்டியுள்ளது போல் படுகிறது.

இன்று கிழக்காசியாவில் இரு கொரியாக்களுக்கு மிடையைலான முரண்பாட்டையும் அதில் அமெரிக்காவின் பங்கினையும் புரிந்து கொள்ள இந்தப் பின்னணியைப் புரிந்து கொள்ளல் அவசியமாகும். வடகொரிய அரசமைப்பும் அதன் தலைமையும் பிரச்சனைக்குரியவை. அந்த அமைப்பு சோஷலிச அமைப்பல்ல. ஆயினும் அந்தப் பிராந்தியத்தின் சிக்கலுக்கு ஒரு வரலாறுண்டு. இரு கொரியாக்களும் அமைதியான வழியில் தமது பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாதிருப்பதற்கு இந்த வரலாறும் அமெரிக்காவின் ஆதிக்கப்போக்கிலான தலையீடும் பெரும் தடைகளாயுள்ளன. இன்றைய அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு புதிய போர் தேவைப் படலாம் ஆனால் அமெரிக்காவின் துணைநாடுகள் அதற்குத் தயாராயில்லை. அவை அனுபவத்திற்கூடாகச் சில கசப்பான பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளன போல் படுகிறது.

அமெரிக்க அரசு கடனுக்கூடாகப் பெறும் டொலர்கள் அதன் செலவுக்கான பற்றாக்குறையை நிரப்ப உதவும் அதேவேளை அதன் பாதுகாப்பு, மற்றும் நேரடி ஆக்கிரமிப்புத் தொடர்பான செலவுகள் அந்த நாட்டின் தனியார் கூட்டுத்தாபனங்களுக்குப் பெரும் இலாபம் தரும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கின்றன. அத்துடன் அமெரிக்க அரசு தனது பிராந்திய அரசியல் நலன்களுக்கேற்ப வளர்முக நாடுகளுக்குக் கடன் மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குகிறது.

அமெரிக்க டொலரே உலக நாணயமாக அரசோச்சுகிறது. பின்னர் வந்த யூரோ (Euro) வால் இதுவரை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு முன்னேற முடியவில்லை. ஆசியாவிலிருந்தும் இன்னும் டொலருக்கு ஒரு மாற்று நாணயம் சர்வதேசரீதியில் எழவில்லை. ஆனால் அமெரிக்காவின் உலகரீதியான இராணுவ பலமும் அதிகாரமும் வீழ்ச்சியடையும் போது இந்த நிலை மாறும். அப்போது அந்த நாடு பெற்ற கடன்களை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறது எனும் கேள்வியும் எழும். 

கடன் பொறிகளில் சிக்கித்தவிக்கும் நாடுகளும் அமெரிக்காவும்

இன்றைய உலகில் செல்வந்த நாடுகள் சுலபமாகக் கடன் பெறுகின்றன. செல்வந்தருக்குக் கடன் கொடுக்க வங்கிகள் போட்டி போடுவது போல் செல்வந்த நாடுகளுக்குக் கடன் வழங்க நாடுகள், வங்கிகள், செல்வந்தர்களான தனிமனிதர்கள் தயங்குவதில்லை. கிரேக்கமும் அமெரிக்காவும் கடனாளி நாடுகள் ஆனால் முன்னையது பொருளாதார வீழ்ச்சியில், கடன் பொறிக்குள் அவஸ்தைப் படுகிறது, மேலும் கடன் பெறும் ஆற்றலற்ற நாடாகக் கணிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனாலும், சர்வதேச நாணய நிதியத்தாலும் தொடர்ந்து மிரட்டப்படுகிறது. அமெரிக்கா பாரிய பொருளாதாரச் சிக்கலால் பாதிக்கப்பட்டதாயினும் அதற்கு வெளிநாட்டுக் கடன் பெறுவதில் பிரச்சனையில்லை.

தான் பெற்ற கடன்களைத் திருப்பிக் கட்டும் அழுத்தங்களின்றி இருக்கும் அமெரிக்கா சர்வதேசக் கடன் பளுவில் அகப்பட்டுள்ள வளர்முக நாடுகள் தமது கடன்களைத் திருப்பிக் கொடுக்கவேண்டுமெனப் பலவழிகளால் நிர்ப்பந்திகிறது. இது அமெரிக்காவின் வழமையான இரட்டை நியமம். விசேடமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற நிறுவனங்களுக்கூடாக இத்தகைய அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது. இந்த நிறுவனங்கள், விசேடமாக  IMF, கடன் பொறிக்குள் மாட்டிக் கொண்ட வளர்முக நாடுகளுக்கு மிகவும் இறுக்கமான நிபந்தனைகளுடன் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் கொள்கையைக் கொண்டுள்ளன. இந்த நிபந்தனைகள் பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டிருப்பினும் பல பாதகமான சமூக விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இது பல நாடுகளின் அனுபவம்.

சமீப காலங்களில் இலங்கை உட்படப் பல வளர்முக நாடுகள் சீனாவிடம் பெருமளவில் கடன் பெறுகின்றன. இதிலும் பல பிரச்சனைகள். மறுபுறம் சீனா தனது பொருளாதாரத்தில் ஏற்றுமதிக்கூடாகக் குவியும் உபரி டொலர்களை மத்திய வங்கிக்கூடாகத் தேசிய நாணயத்தைப் (renminbi ஐப்) பயன்படுத்திக் கொள்வனவு செய்து அமெரிக்க பிணைமுறிப் பத்திரங்களில் பெரிய அளவில் முதலீடு செய்கிறது. இந்த வழிக்கூடாக renminbi ன் பெறுமதி மிதமிஞ்சி ஏறாதவாறு பார்த்துக் கொள்கிறது. அப்படி ஏறவிடுவது சீனாவின் ஏற்றுமதிப் பண்டங்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும். இது சர்வதேச ஏற்றுமதிச் சந்தைப் போட்டியில் சாதகமானதல்ல. சீனாவின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் பிரதான சந்தைகளில் அமெரிக்கா முக்கியமான இடத்தை வகிக்கிறது. எழுந்து வரும் வல்லரசுகளில் ஒன்றான சீனா வளர்முக நாடுகளுக்குக் கடன் வழங்கும் கொள்கையின் அரசியல் வேறாக ஆராயப்படவேண்டிய விடயம்.

[i] இதுபற்றி ஹட்சன் பல நூல்களையும் கட்டுரைகளையும் 1972 லிருந்து இன்றுவரை எழுதிவந்துள்ளார். இந்தக் கட்டுரைக்குப் பின்வரும் நூல் உதவியுள்ளது. Hudson, Michael, 2003, Super Imperialism – The origins and fundamentals of US world dominance, Pluto Press. இந்த நூல் 1972 அவர் எழுதிய நூலின் புதிப்பிக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட பதிப்பு ஆகும். ஹட்சனின் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்த வேறு ஆய்வுகளில் பின்வரும் நூல் அமெரிக்காவின் கடனுக்கும் அதன் சர்வதேச ஆதிக்கத்திற்குமிடையிலான உறவுகள் பற்றிக் கூறுகிறது. David Graeber, 2014, Debt The First 5000 Years, Melville House Publishing. இந்த நூல் கடனின் வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களை மானிடவியல் நோக்கில் அணுகுகிறது.

[ii] இந்தப் பிரச்சனை இரண்டாம் உலகப் போருக்குபின் வந்த கொரியப்போரின் போதே இருந்தது என ஹட்சனின் ஆய்வு காட்டுகிறது (Hudson, 2003)

[iii] உதாரணமாக – David Harveyன் பின்வரும் நூல்கள், 2005, The New Imperialism, Oxford University Press. 2005, A Brief History of Neoliberalism, Oxford University Press. 2010, The Enigma of Capital and the Crises of Capitalism, Profile Books. 2014, Seventeen Contradictions and the End of Capitalism, Oxford University Press.

உள்நாட்டு யுத்தம், சமாதானம், உலகமயமாக்கல்

சமுத்திரன்

(உயிர்மெய் சித்திரை- ஆனி 2006)

இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பின்னர் அரசுகளுக்கிடையிலான யுத்தங்களை விட உள்நாட்டு யுத்தங்களே அதிகரித்துள்ளன. இந்த உள்நாட்டு யுத்தங்கள் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நிழல்யுத்தத்தின்( Cold war) முடிவுக்குப்பின் அதாவது சோவியத்முகாமின் மறைவுக்குப்பின் கிழக்கு ஐரோப்பாவிலும் இடம்பெற்றுவந்துள்ளன அல்லது இடம்பெறுகின்றன. பல ஆய்வுகளின்படி அரசுகளுக்கிடையே ஏற்படும் யுத்தங்களைவிட உள்நாட்டு யுத்தங்கள் பொதுவாக நீண்டகாலம் தொடர்வனவாகவும் சுமூகமான தீர்வைப் பெறுவதில் மிகவும் கடினமானவையாகவும் இருக்கின்றன. உள்நாட்டுயுத்தம் எனும்போது அது ஒருவித வெளிநாட்டுத் தொடர்புமற்ற தனியான நிகழ்வெனக் கொள்ள முடியாது. ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்திற்கும் சர்வதேச தொடர்புகளுண்டு. அதன் தொடர்ச்சிக்கும் சிக்கல்களுக்கும் தீர்வின் தடைகளுக்கும் வெளிவாரிச் சக்திகளின் பொறுப்புகளும் தாக்கங்களும் உண்டு.

உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளும் யுத்தங்களும்

சர்வதேசமயமாக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் யுத்தங்களை அரசியல் ரீதியில் தீர்த்து வைப்பதிலும், சமாதானத்தை உருவாக்குவதிலும் சமூக பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளை வகுப்பதிலும் பல்பக்க நிறுவனங்களும் முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்கியுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் கட்டத்தில் இந்தப் போக்கானது சமீபத்திய காலங்களில் மிகவும் பலம் பெற்றுள்ளது. ஆகவே ஒருபுறம் உள்நாட்டு முரண்பாடுகளும், யுத்தங்களும் சர்வதேசமயமாக்கப்படுகின்றன. மறுபுறம் அவற்றின் தீர்வுகளுக்கான வழிமுறைகளும் செயற்பாடுகளும் சர்வதேச மயமாகின்றன. இந்தக் கட்டுரையில் இந்தப் போக்குகள் பற்றிய சில பொதுப்படையான கருத்துக்களைக் குறிப்பிட்டு உரையாட விரும்புகிறேன்.

  • உள்நாட்டு யுத்தங்களும் ‘சர்வதேச சமூகமும்’

இன்றைய உலகில் மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயக நாடுகள் அமைதியின் உறைவிடமாகவும் அதே உலகின் மற்றைய பகுதி உள்நாட்டுக் கொந்தளிப்புக்கள் மிகுந்ததாகவும் இருப்பதாகச் சில வலதுசாரி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி Bush ன் தத்துவத்தின்படி ஜனநாயகங்களிடையே போர்கள் இடம்பெறுவதில்லை ஏனெனில் அவை நாகரீகமான வழிகளில் தமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்கின்றன. வரலாறு பற்றி Bushன் அறியாமை உலகறிந்தது. ஆனால் ‘ஜனநாயகங்கள் போர் செய்வதில்லை’ என்ற சுலோகம் அறியாமையின்பால் வந்ததல்ல. அது இன்றைய உலகமயமாக்கலின் நடத்துனர்களின் மேலாட்சித்திட்டத்தின் கவர்ச்சிகரமான கொள்கைப் பிரகடனம் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் இன்றைய உலகில் அமைதியின் உறைவிடமெனப்படும் வளர்ச்சிபெற்ற முதலாளித்துவ நாடுகளின் முகாமின் வரலாறு பல தொடர்ச்சியான உள்நாட்டு யுத்தங்களுக்கூடாகவும், இரண்டு உலக யுத்தங்களுக்கூடாகவும் பிறந்தது. இன்றைய ‘அமைதி நாகரீகத்தின்’  வரலாறு வன்செயல்களும் யுத்தங்களும் மிகுந்தது. ஒருவகையில் பார்த்தால் இந்த வரலாறுதான் வேறு வடிவங்களில், போக்குகளில் தொடர்கிறது எனக் கூறலாம். அதுமட்டுமல்ல ‘ அமைதி நாடுகளுக்கும்‘ யுத்தங்கள் இடம்பெறும் மற்றைய பகுதிகளுக்குமிடையிலான உறவுகள் முக்கியமானவை.

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்திற்கும் அதற்கேயுரிய சர்வதேச தன்மைகள், தொடர்புகள் உண்டு. 1945-1989 காலகட்டத்தில் மூன்றாம் உலகநாடுகளின் விடுதலைப்போராட்டங்கள், புரட்சிகள் பகிரங்கமான சர்வதேச உறவுகளைக் கொண்டிருந்தன. ஒருபுறம் சோவியத்தயூனியன், புரட்சிக்குபின்னான சீனா, கியூபா போன்ற நாடுகள் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தன. மறுபுறம் அமெரிக்க உளவு ஸ்தாபனமாகிய CIA இந்தப் போராட்டங்களுக்கு எதிராக சர்வாதிகார பாசிச அரசுகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. அதுமட்டுமல்ல சோவியத்யூனியன், கியூபா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக சீர்குலைவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. வியட்நாமில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு, நிக்கரகுவாவின் புரட்சிகர அரசுக்கெதிராக உருவாக்கி உதவிய எதிர்ப்புரட்சி இயங்கங்கள், சிலியில் ஜனநாயகரீதியில் ஆட்சிக்குவந்த இடதுசாரி அரசாங்கத்தைப் பாசிச ராணுவச் சதிக்கூடாக கவிழ்த்தது போன்ற அமெரிக்க ஏகாதிபத்தியச் செயற்பாடுகளை மறக்க முடியுமா ?

சரி, நிழற்போருக்குப் பின் நடப்பது என்ன? சோவியத்முகாமின் மறைவிற்குப் பின்  ‘யுத்தங்கள் வரலாறாகிவிட்டன நிரந்தர அமைதிக்கான காலம் தோன்றிவிட்டது’ போன்ற பிரச்சாரங்கள் வெளிவந்தன. ஆனால் உலக யதார்த்தங்களோ வேறாக இருந்தன. கடந்த இருபது வருடங்களாக செல்வந்தநாடுகள் பலவற்றின் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதியும் முன்பை விட அதிகரித்துள்ளன. ஐநாவின் பாதுகாப்புச்சபையின் (Security Council) அங்கத்துவ நாடுகளான  USA , ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய மூன்றும் உலக ஆயுத ஏற்றுமதியின் 80 வீதத்திற்குப் பொறுப்பாயுள்ளன. USA உலக ஆயுத ஏற்றுமதியின் 50 வீதத்தைக் கொண்டுள்ளது. ரஷ்யா அதற்குப் போட்டியாகவுள்ளது. உலக ஆயுதவிற்பனையின் 60 வீதம் வளர்முக  (மூன்றாம் உலக) நாடுகளுக்குச் செல்கிறது. இது சட்டபூர்வமான வர்த்தகம். கறுப்புச்சந்தைக்கூடாக இடம்பெறும் ஆயுதக்கொள்வனவுகளும் பெருமளவில் வளர்முக நாடுகளுக்குத்தான் சென்றடைகின்றது.

சட்டபூர்வமாக வளர்முக நாடுகளுக்குச் செல்லும் ஆயுதங்களின் ஒருபகுதி பல வழிகளினூடாக வேறு நாடுகளுக்கும், ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இயக்கங்களுக்கும், பாதாள உலக குழுக்களுக்கும் விற்கப்படுகிறது. பல ஆயுத விற்பனைத் தரகர்கள் அரசாங்கங்களுக்கும், அவற்றை எதிர்த்துப் போராடும் இயக்கங்களுக்கும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய உதவுகிறார்கள். ஜனநாயகங்கள் போருக்குப் போவதில்லை என்றும் யுத்தம் தேவையற்றது என்றும் கூறும் நாடுகள் ஆயுத உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் ஈடுபட்டிருப்பது அவற்றின் இரட்டை நியமங்களைக் காட்டுகிறது. இதில் ஆச்சரியம் தரும் விடயமென்னவெனில் உலக சமாதானத்தூதுவராக, நடுவராக, அனுசரனையாளராகச் செயற்படும் நோர்வேயும் ஆயுதஉற்பத்தியில் ஈடுபட்டுள்ளதென்பதாகும். நோர்வேயின் ஆயுதஉற்பத்திச்சாலையின் அரைவாசிப் பங்குதாரராக நோர்வே அரசு விளங்குகிறது. இந்தத்துறையில் 5000 பேர் வரை வேலைவாய்ப்புப் பெற்றுள்ளார்கள். நோர்வேயின் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அதாவது தலா ஆயுத ஏற்றுமதியைப் பொறுத்தவரை நோர்வே உலகின் பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாகிறதென அறிக்கைகள் கூறுகின்றன. இது நோர்வேயின் தொழிற்கட்சிக்கோ அல்லது தேசிய தொழிலாளர் அமைப்பிற்கோ ஒரு பிரச்சனையாகப்படவில்லை. இத்தகைய இரட்டை நியமப்போக்கு நோர்வேயின் தனிச்சொத்தல்ல. தனது யாப்பு சமாதானயாப்பு அதன்படி ஆயுதம் விற்பது சட்டவிரோதமானது எனச் சொல்லிக் கொள்ளும் ஜப்பான் பிலிப்பைன்சுக்கும் வேறு சில நாடுகளுக்கும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்துள்ளதென்பதற்கும் ஆதராங்களுண்டு. ஜப்பான் இரகசியமாகச் செய்வதை நோர்வே சட்டபூர்வமாகச் செய்கிறது. ஆனால் இரு நாடுகளும் சமாதானம் பற்றிப் பேசுவதைக் கேட்போருக்கு அவை ஆயுதவிற்பனையில் ஈடுபட்டிருப்பது நல்ல செய்தியாக இருக்க மாட்டாது. ஏனெனில் அவை விற்கும் ஆயுதங்கள் எப்படியோ யுத்த தேவைகளுக்கு உதவக்கூடும்.

ஆயுதம் சமாதானத்தை அடைய உதவமாட்டாது என்பது எனது விவாதமல்ல. ஆயுதப்போராட்டங்கள் எல்லாமே தவறானவை என்பதும் எனது நிலைப்பாடல்ல. நான் இங்கு விமர்சிப்பது யுத்தம் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது எனும் நாடுகளின் நடைமுறையைத்தான். இந்த வகையில் நோர்வேயின் நடைமுறை விசித்திரமானது.

இரட்டை நியமங்களாகத் தெரியும் இந்த சர்வதேசப்போக்கின் உண்மையான அரசியல் என்ன?

எனது அபிப்பிராயத்தில் சமாதானம் நாகரீகமானது, ஜனநாயகம் சார்ந்தது, யுத்தம் அநாகரீகமானது, ஜனநாயகத்திற்கு மாறானது எனும் பிரச்சாரம் ஒரு கருத்தியில் ரீதியான பொய்ப்பிரச்சாரம். இங்கு அடிப்படையான விடயம் என்னவெனில் பலாத்கார இயந்திரமும், கருவிகளும் தேசிய மட்டத்திலும் சர்வதேசமட்டத்திலும் தமக்குச் சார்பான, தமது அணியிலுள்ள அரசுகளின் தனியாதிக்கத்தில் இருக்க வேண்டும் என்பதே USA ன் தலைமையிலுள்ள உலக அதிகாரக் கூட்டணியின் நோக்கமும் திட்டமுமாகும். அத்தகைய அரசுகளைப் பலப்படுத்துவதே இந்தக் கூட்டணியின் கொள்கை நிலைப்பாடு. ஆயினும் இதற்குப் பல சவால்கள் கிளம்பியுள்ளன. உள்நாட்டு யுத்தங்களைப் இந்த நோக்கிலேயே உலக அதிகார சக்திகள் அணுகுகின்றன. இதனால்தான்  ‘பயங்கரவாதத்திற்கு எதிராக ‘ யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படிச் சொல்வது வல்லரசு முகமாமின் முழுத்திட்டமும் ராணுவ ரீதியானது என்பதல்ல. முதலாளித்துவ அரசின் பலாத்காரத் தனியாதிக்கம் உறுதி செய்யப்படுவது ஒரு முக்கிய தேவையாக இருக்கும் அதேவேளை அரசினதும் ஆள்பரப்பின் அரசியற் பொருளாதார அமைப்புகளினதும் நியாயப்பாட்டை உறுதிசெய்யும் மேலாட்சித்திட்டமும் (Hegemony) முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மேலாட்சி சிந்தனைரீதியானது, கலாச்சார ரீதியானது. தனியுடமை, தனிமனிதசுதந்திரம் போன்ற விழுமியங்களை உள்ளடக்கிய ஒரு மேலாட்சித்திட்டம் இது. இது சமாதானம் – ஜனநாயகம் அபிவிருத்தி என்னும் இணைப்பாக முன்வைக்கப்படுகிறது. இதன் தோற்றம் நியாயமானதாகவே படுகிறது. இந்த நோக்கங்களை யார் எதிர்ப்பார்கள்?  இவை உலக மயமாக்கலின் நல்ல விளைவுகளாகுமென்றால் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும்? இவை நியாயமான கேள்விகளே.

பிரச்சனை இந்த திட்டத்தின் அடிப்படைகளிலும் நடைமுறைகளிலும்தான்.

  • சந்தை ஜனநாயகத்தின் அடிப்படையில் சமாதானமும் அபிவிருத்தியும்

உள்நாட்டு யுத்தங்களின் தீர்வும் அதைத் தொடர்ந்து சமாதானத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதையும் சர்வதேசமயமாக்கும் திட்டம் கடந்த பத்தாண்டுகளின்போதே முழுமையான ஒரு பொதியாக உருவாக்கம் பெற்றது. தற்போது பாதுகாப்பும் அபிவிருத்தியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு செப். 11 க்குப்பின் (9/11) மிகவும் முன்னுரிமை பெற்று சர்வதேசக் கொள்கையாகிவிட்டது. USA ன் தலைமையிலான OECD நாடுகள் இந்தக் கொள்கையைப் பல வழிகளில் அமுல் நடத்துகின்றன. இதற்கு அவை ஐ. நா, உலகவங்கி போன்ற பல்பக்க நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றன. உலக வல்லரசு முகாமின் நலன்களுக்கமைய உருவாக்கப்பட்ட இந்தப் பொதியின்படி சமாதானம் என்பது  ‘பயங்கரவாதம்‘ முற்றாக அகற்றப்பட்டு சுய போட்டிச்சந்தைப் பொருளாதாரத்துக்கு வேண்டிய நிறுவனரீதியான சீர்திருத்தங்களின் அடிப்படையில் ‘ஜனநாயக’ ரீதியில் கட்டியெழுப்பப்பட வேண்டியதாகும். தூய சந்தைப் போட்டி உறவுகளுக்கு அடிப்படை முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த அணுகுமுறையை ‘சந்தை ஜனநாயகம்’ என ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர். நீண்ட காலமாக உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் சமாதானத்தையும், மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு இது உகந்த ஒரு கொள்கையா என்ற கேள்வி எழுவது இயற்கையே. வரலாற்று அனுபவங்களை நோக்கும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் புனர்நிர்மாணத்தில் அரசு முக்கிய பங்கினை வகித்திருப்பதைக் காணலாம். குறிப்பாக சமூக பொருளாதார சந்தர்ப்பங்கள் வருமானம் போன்றவற்றின் அசமத்துவங்கள் மோசமாகத வகையில் நிர்வகிக்கும் பொறுப்பினை அரசு கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இத்தகைய ஒரு சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்திப்போக்கு உள்நாட்டில் நிலைபெறும் அமைதியைக் கட்டியெழுப்ப உதவும் என்பது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கத்தைய நாடுகளினதும், ஜப்பானினதும் அனுபவம். சந்தை ஜனநாயக அணுகுமுறை இதற்கு உதவமாட்டாது என்பதை சமீபத்திய அனுபவங்கள் காட்டுகின்றன. இந்த வழியைப் பின்பற்றி சமாதானத்தையும், சமூகத்தையும் கட்டியெழுப்ப முற்பட்ட கம்போடியா, எல்சல்வடோர், நிக்கராகுவா, மொசாம்பிக், அங்கோலா, ருவாண்டா, பொஸ்னியா போன்ற நாடுகள் பல பிரச்சனைகளுக்குள்ளாகி இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஆய்வுகளின்படி இந்நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி மந்தமாகவும், ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகமாகவும் உள்ளன. அத்துடன் இவையும் வேறு காரணிகளும் ஜனநாயக மயமாக்கலைப் பாதித்துள்ளன. இந்தப் போக்குகள் தொடர்ந்தால் சமூக அமைதி பாழடையும் சமானதானத்துக்கும், மக்கள் நலன்களுக்கும் உதவக்கூடிய முதலாளித்துவ அமைப்பு, சந்தை ஜனநாயகமா சமூக ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறது. இவை இரண்டும் முதலாளித்துவத்துக்குள்ளான மாற்று வழிகள். ஆயினும் இன்றைய உலகமயமாக்கலை வழிநடத்தும் வல்லரசு முகாம் சந்தை ஜனநாயகப் பொதியையே யுத்தத்தாலும் வேறு காரணிகளாலும் பலவீனமடைந்துள்ள நாடுகள் மீது திணிக்கிறது.

உயிர்மெய் சித்திரை- ஆனி 2006